என்னைப் பற்றி

சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 17, 2012

சகடம்


நேரம் காலை 5 மணி 18 நிமிடங்கள். ஜூன் 17, 2012.

நேற்று காலையில் புரண்டு புரண்டு படுத்து 7 மணி வரை தூங்கினேன். வேலை எதையும் திட்டமிட்டிருக்கவில்லை. நாட்குறிப்பு எழுதுவது, நாளுக்கான வேலைகளை திட்டமிடுவது, எழுத்து அல்லது மொழிபெயர்ப்பு அல்லது தொழில்நுட்ப பணிகள் எதையும் திட்டமிட்டிருக்கவில்லை. காலைக் கடன்களை முடித்து விட்டு கணினியை இயக்கி இணையத்தில் இணைந்தேன்.

அதன் பிறகு குளித்து, தியானம் செய்து விட்டு புறப்பட வேண்டியதுதான். பசிக்கு வாங்கி வைத்திருந்த குட்டே பிஸ்கட்டை காலி செய்தேன். ஒரு பாக்கெட். முந்தா நேற்றே பெரிய பாக்கெட் வாங்கியிருந்தால் இன்றைக்கும் உதவியிருந்திருக்கும். செய்யவில்லை. இப்போது பசிக்கத்தான் செய்கிறது. நேற்று இரவு  சாப்பிடாமல் புறப்பட்டு வந்திருந்தேன். ஒரு டம்ளர் மோர் மட்டும் கொடுத்தார்கள்.

குளித்து தியானம் முடித்து விட்டு 1 மணி நேரம் வேலை செய்யத் திட்டமிட்டிருந்தேன். புறப்பட்டு வீட்டைப் பூட்டி மேலே சாவியைக் கொடுக்கப் போனேன். வீட்டுக் காரர் குளித்து விட்டு துண்டுடன் உலாவிக் கொண்டிருந்தார். வீட்டு அம்மா வந்து சாவியை வாங்கிக் கொண்டார்கள்.

கீழே இறங்கி மெயின் ரோடு நோக்கி நடையைப் போட்டேன். வழியில் காயத்ரி உணவகத்தில் காலை உணவு. ஒரு செட் பூரி, இரண்டு கல் தோசை, ஒரு டீ. மொத்தம் 21 ரூபாய். பூரி ஒரு செட் 15 ரூபாய், கல் தோசை ஒரு செட் 20  ரூபாய், டீ- 6 ரூபாய். வெளியில் வந்து நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். கூடவே ஜூனியர் விகடனும். நித்யானந்தா பச்சை உடை உடுத்து அட்டையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து கவரப்பட்டு.

பஸ் டெப்போவுக்கு போகாமல் சாலையின் இந்தப் பக்கமே நின்று கொண்டேன். ஒரு பகிர்வு ஊர்தி வந்தது.  ஏற்கனவே முன் இருக்கையில் ஒரு வயதான அம்மாவும், பின் பக்கம் மூன்று பெண்கள் ஒரு புறம், இரண்டு ஆண்கள், ஒரு பெண் மறுபுறம் உட்கார்ந்திருந்தார்கள். அந்த பெண் மற்ற பெண்களுடன் சேர்ந்து கொள்ள, நான் ஏறி உட்கார்ந்தேன். சிறிது தூரத்திலேயே ஆண்களிலும் நான்காவதாக ஒருவர் ஏறிக் கொண்டார்.

போரூர் ஸ்டேட் பேங்க் எதிரில் நிறுத்தச் சொல்லி இறங்கினேன். 15 ரூபாய் வாங்கினார். வங்கிக்குள் போய் பணம் செலுத்தும் படிவத்தை எடுத்து நிரப்பி காசோலையை உள்ளே போட்டேன். வங்கி செயல்பாடுகளுக்கான மேலாளர் முன்பு பார்த்த அதே பெண்மணிதான். வெளியில் வந்து சாலையைக் கடந்து நின்றால் பகிர்வூர்தி ஒன்று இருக்கைகள் நிரம்பி போனது. அதற்கு பின்பு வந்த வண்டியில் ஏறிக் கொண்டேன். பின்புறம் இரண்டு அடுக்காக உட்காரும் வசதி. மேல் அடுக்கில் உட்கார்ந்து கொண்டேன். அருகிலேயே இன்னொரு அம்மா சிறுமியுடன் ஏறினார்கள். அந்தக்குழந்தை கையில் பை, தண்ணீர் பாட்டில் என்று சுழன்று கொண்டிருந்தது. நவநாகரீகமான ஒரு இளம் பெண் ஏறினாள். கொஞ்ச தூரத்துக்குப் பிறகு செல்பேசியில் இந்தி அல்லது ஏதோ வட இந்திய மொழியில் பேச ஆரம்பித்தாள்.

ராமாபுரம் பாலத்துக்கு முன்பு நந்தம்பாக்கம் கிளைக்கு முன்பு இறங்கிக் கொண்டேன். போரூர் கிளை 9 மணியிலிருந்தே செயல்படுகிறது. இவர்கள் 10 மணி என்று நினைக்கிறேன். பார்க்கவில்லை. உள்ளே போய் காசோலையை, படிவத்துடன் இணைத்து பெட்டியில் போட்டேன். அதற்குள் ஒரு வங்கி உதவியாளர் வந்து உட்கார அவரிடம் கேட்டு முன்பு செலுத்திய படிவத்துக்கான துணைத்தாளை எடுத்துக் கொண்டேன்.

இப்போது பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன். சாலை நிறுத்தத்திலேயே நின்ற பேருந்தில் ஏறி கிண்டி சீட்டு எடுத்தேன். 5 ரூபாய் என்று நினைவு. கிண்டியில் இறங்கி நடக்கும் போது அழைத்தேன்.  ஒரு நாள் வேலூருக்கு வரும்படி அழைத்தேன். ஜூலையில் வருவதாகச் சொன்னார்.

தரையடிப் பாதை வழியாக சாலையைக் கடந்து ரயில் நிலையத்துக்கு வந்தேன். நீண்ட வரிசை நின்றிருந்தது. நடுவில் இருந்த வரிசையில் நின்றேன். உயரமான ஒரு பெண், தனது கணவனுடன் வந்து பக்கத்து வரிசையில் நின்றாள். அந்த வரிசைதான் வேகமாக நகர்ந்து போனது. சில நிமிடங்களுக்குப் பிறகு நான் நின்ற வரிசை தேங்கி நிற்பதாகத் தோன்றேன். வரிசை மாற்றிக் கொண்டேன். சீட்டு கொடுக்கும் ஜன்னலை அணுகும் போது தானியங்கி எந்திரத்தில் ஏதோ கோளாறு என்று ஒருவர் முறையிட உள்ளே இருந்த பெண் வெளியில் வந்தார். கிண்டியிலும் சரி, மாலையில் சென்ட்ரலிலும் சரி டிக்கெட் கொடுப்பதற்கு  பெண்கள். புதிதாக எடுக்கப்பட்டவர்களா அல்லது தற்காலிக ஊழியர்களா என்று தெரியவில்லை. நிச்சயமாக தன்னம்பிக்கையும், உறுதியும் தெரிந்தது, அதனால் நிரந்தர ஊழியர்களாகத்தான் இருக்க வேண்டும்.

தாம்பரம் வந்து இறங்கி சாலையைக் கடந்து, ஸ்ரீராம் கடையில் ஒரு கவர் வாங்கிக் கொண்டேன். அப்படியே நடந்து வசந்த பவன் உள்ளே போனேன். பூக்கடை பாதையைக் கடந்து போனேன்.

அங்கிருந்து நடந்தே திரும்பி வந்தேன். சரியான இடத்தில் வலது புறம் திரும்பி வீடு இருக்கும் தெருவுக்கு வந்து சேர்ந்தேன். எப்போது போனாலும் முகம் மலர வரவேற்பது அவங்கதான். கொஞ்ச நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். 

பருப்பு வறுபட்டு, அரைத்து, சிறுபயறு துவையல் அரைத்து விட்டார், வத்தல் வறுத்தாகி விட்டது. அண்ணன் வரும் போதும் வழக்கம் போல பல விஷயங்களை பேசினோம். மாம்பழத்தை வெட்டி சாப்பிட்டோம். சாப்பிட உட்கார்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டோம். கறுப்பன், புலியன் என்று இரண்டு பூனைகள், புலியன் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

தொலைபேசி மாலை திட்டத்தை உறுதி செய்து கொண்டேன். சிறிது நேரத்துக்குப் பிறகு விடை பெற்றுப் புறப்பட்டேன். நடந்து மெயின் ரோடுக்கு வந்தேன். பேருந்து எதுவும் வாகாக கிடைக்கவில்லை. ஆட்டோ ஒன்று நிறுத்தி அண்ணா நகர் போகும் பேருந்து நிலையத்தில் விடச் சொன்னேன். 70 ரூபாய் கேட்டார். 

இந்த 70 ரூபாய், ரத்னா கபேயிலிருந்துர கடற்கரைக்கு 40 ரூபாய், கடற்கரையிலிருந்து சென்ட்ரலுக்கு 70 ரூபாய், பழவந்தாங்கலில் இருந்து 30 ரூபாய், பழவந்தாங்கலிலிருந்து பட் ரோடுக்கு 80 ரூபாய் என்று 290 ரூபாய்கள் ஆட்டோவிற்கு செலவாகின. காலையில் பகிர்வூர்திகளில் 25 ரூபாய்.

114 தடத்தில் ஏறிக் கொண்டேன். விரைவுப் பேருந்து, திருமங்கலம் சீட்டு எடுத்துக் கொண்டேன். 1 மணி நேரத்துக்குக் குறையாமல் ஆகிறது. தாம்பரத்திலிருந்து திருமங்கலம் வருவதற்கு. இறங்கி சாலையைக் கடந்து 13ம் மெயின் ரோடு அருகில் வந்தேன்.

கொஞ்ச நேரம் காத்திருந்து பேருந்தில் ஏறினோம். அண்ணா சதுக்கம் போகும் பேருந்து. நிறையவே பேசிக் கொண்டே போனோம்.

திருவல்லிக்கேணி சங்கீதா அருகில் இறங்கி நடந்து ரத்னா கபே வந்தோம். ஆளுக்கொரு பிளேட் சாம்பார் இட்லி, அதைத் தொடர்ந்து ரவா தோசை. சாப்பிட்டு விட்டு ஆட்டோ பிடித்தோம். கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம்.

இருட்டவும் ஆரம்பித்திருந்தது. தொலைபேசி 1 மணி நேரத்தில் வருவதாகச் சொன்னேன். கொஞ்ச தூரம் நடந்து பார்த்து விட்டு ஆட்டோ பிடித்து பார்க் ஸ்டேஷன் வந்தோம். நான் ரயில் நிலையத்துக்குள் போனேன். ரயிலில் நிறைய இருக்கைகள் இருந்தாலும், ஏறுவதும் நிறைய பேர் இருந்தார்கள். நின்று கொண்டுதான் போக வேண்டியிருந்தது. 

8 மணிக்கு பழவந்தாங்கல் போய் விட்டேன். கீழேயே வந்து காத்திருந்தார்கள். பேசிக் கொண்டே போனேன். சரளமாக பேசினாள். 9 மணிக்கு புறப்பட்டேன். என்னை ரயில் நிலையத்துக்கு அருகில் விட்டான். 

அடுத்த நிறுத்தம் ராமாபுரம், அடுத்தது முகலிவாக்கம், அடுத்தது போரூர். எங்கும் தாமதமில்லாமல் வந்து விட்டார். அய்யப்பன்தாங்கலில் ஆட்டோ பார்த்தால் எதுவும் இல்லை. விறு விறுவென்று நடையைப் போட்டு 10 மணிக்கு வந்து விட்டேன். கீழே இருந்து மணியை அடித்தால் யார் என்று கேட்டு மேலேயிருந்து பையில் சாவியை கீழே இறக்கினார்கள். சாவியை எடுத்து திறந்து கொண்டு போய் விட்டேன்.

ஏதோ சுமை தாங்காமல் மின்சாரம் தடைபட்டது. 20 நிமிடங்கள் தியானத்துக்குப் பிறகு தூங்கினேன். மின்சாரம் வந்து மின்விசிறி ஓட ஆரம்பித்து விட்டது. 

4 மணிக்கு விழிப்பு வந்தாலும் 5 மணிக்குத்தான் எழுந்திருந்தேன். இப்போது எழுத்து இதை முடிக்கும் போது 6.20 ஆகியிருக்கும். முகம் மழித்து, குளிப்பதற்கு 6.45. புறப்பட்டு விட வேண்டியதுதான்.  7 மணிக்கு அய்யப்பன்தாங்கல். பேருந்தில் ஏறி கோடம்பாக்கம். 7.30க்குப் போய்ச் சேர்ந்தால் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம்.

திங்கள், ஜூன் 11, 2012

திரைப்படங்கள்


நேரம் ஆறு மணி ஐந்து நிமிடங்கள். ஜூன் மாதம் 11ம் தேதி, 2012ம் ஆண்டு.

நாட்குறிப்பு எழுதியும் சில நாட்கள் ஆகி விட்டிருக்கின்றன. சனிக் கிழமை காலையில் புறப்பட்டு சென்னைக்குப் போக வேண்டும். ஆறரை மணிக்கு தாம்பரத்தில் இருக்க வேண்டும். ஆனால் போய்ச் சேர்ந்தது 7 மணிக்குத்தான். காலையில் 2 மணிக்கு எழுந்து விட்டேன்.இரவில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். டெஸ்டிங் பிரிவை முற்றிலுமாக நீக்க முடியவில்லை என்றும் நான் எழுந்ததும் அதை செய்து விட வேண்டும் என்றும். அதை செய்து முடித்து விட்டு கொஞ்ச நேரம் இணையத்திலும் மேய்ந்து கொண்டிருந்தேன். அதை தவிர்த்திருக்கலாம்.

முகம் மழித்து குளித்து விட்டு பையில் ஒரு நாளைக்கான மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். கணினியை எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் நல்லதாகவே போனது. நாள் மிக மிக நீண்ட நாளாக இருந்தது. 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் வீடு திரும்பி வந்து சேர்ந்தேன்.

பகிர்வூர்தியில் பேருந்து நிலையம். முதலில் காஞ்சிபுரம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் பார்த்தால் அரசு பேருந்துகள் எதையும் பார்க்க முடியவில்லை. ஒரு தனியார் பேருந்து நின்றது. இந்த பக்கம் சென்னை பேருந்துகள் பகுதிக்கு வந்தால் ஒரு சேலம் பேருந்து நின்றிருந்தது. ஏறி உட்கார்ந்து கொண்டேன். இது இன்னொரு சொதப்பலான முடிவு. ஓட்டுனர் ஒரு வாய்ச் சொல் வீரர் மட்டும்தான். பேருந்து 3.50க்கு பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தது. 5.30க்கு பூந்தமல்லி போய் விட வேண்டும் என்று திட்டம். 5.45க்காவது போய் விட முடியுமா என்று பார்க்க வேண்டும்.

வண்டி இழுத்து இழுத்து ஓடிக் கொண்டிருந்தது. 6 மணி ஆகி விடும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, பூந்தமல்லியை நெருங்கும் போது ஒரு சில கிலோமீட்டருக்கு முன்பிருந்தே ஏதோ எரியும் வாசனை வந்தது. வெளியிலிருந்து வருகிறது என்று நினைத்துக் கொண்டேன். பேருந்து ஓடும் போது தொடர்ந்து இந்த வாசனை வந்தால் பேருந்துக்குள்தான் ஏதோ நடக்கிறது. யாராவது புகைபிடிக்கிறார்களா என்று பார்த்தால், புகை பிடிப்பது போன்ற வாசனை அல்ல, துணி எரிவது போன்ற வாசனை. அரை தூக்க மயக்கத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை. சிறிது நேரத்தில் ஓட்டுனர் பேருந்தை ஓரம் கட்டினார். முன்பக்கம் எஞ்சின் மூடியைத் திறந்து பார்த்தார். அதற்கு மேல் நிறைய பைகள் வைக்கப்பட்டிருந்தன. முதல் வரிசை இருக்கையில் ஒரு பெண் கைக் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தார்.

உள்ளே ஏதோ எரிந்து கொண்டிருந்தது. மேலே அழுத்தம், உள்ளே வெப்பம் என்று தீப்பிடித்து விட்டிருக்கிறது. தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டாம் என்றார் ஓட்டுனர். அப்படியே குச்சியால் தள்ளி விட்டு அணைத்தார்கள்.  பாதி பேர் பேருந்திலிருந்து இறங்கி விட்டார்கள். ஓட்டுனரும் நடத்துனரும் நகரவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டது பேருந்து.

பூந்தமல்லியில் வந்து பார்த்தால் பேருந்துகளின் வருகை அடையாளமே தெரியவில்லை. இந்து நாளிதழ் வாங்கிக் கொண்டேன். முன்பே வேலூரில் ஆனந்த விகடன் வாங்கியிருந்தேன். 66 சாதாரண பேருந்து வந்தது. அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். தாம்பரத்துக்கு 8 ரூபாய் சீட்டு. எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று மெதுவாக போய்க் கொண்டிருந்தது.

குன்றத்தூர் அருகில் வந்தால் பேருந்தில் ஏதோ கழன்று விட்டது என்று ஓட்டுனர் நடத்துனர் இறங்கி சுற்றி வர ஆரம்பித்தனர்.  இறங்கி பின்னால் வந்து சொகுசு விரைவுப் பேருந்தில் ஏறினேன். அதில் 13 ரூபாய் சீட்டு. அதுவும் வண்டலூர் போகும் வண்டி. ரயில் நிலையம் தாண்டி கொண்டு விட்டார்கள்.

வீட்டுக்கு நாளைக்கு போய்க் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆட்டோவில் ஏறி மெப்ஸ் அருகில் இறங்கிறோம். நான் வாசலில் காத்திருக்க அவர் இன்னொரு ஆட்டோவில் உள்ளே போனார். திரும்பி வருவதற்கு அரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. முதலில் இறங்கிய பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சாலையைக் கடந்து இந்த பக்கம் உட்கார்ந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு பாதுகாவலர் வந்து எழுப்பி விட்டார். 

3 மணிக்கு முன்பு புறப்பட்டேன். சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு போகிறேன் என்று சொன்னவரை மறுத்து ஆணியில் தொங்க விட்டுப் போகச் சொன்னேன். அதுதான் வினையாக முடிந்தது. 


நடக்கும் போது வந்த ஆட்டோவில் ஏறி. 30 ரூபாய் வாங்கிக் கொண்டார். 37Gல் ஏறி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி சீட்டு எடுத்தேன். ஆனால், நேரத்தையும் வேகத்தையும் பார்த்து வடபழனியில் இறங்கி பகிர்வூர்தியில் கோயம்பேடு போக ஏறினேன். ஓட்டுனருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன். கோயம்பேடு கல்யாண மண்டபம் அருகில் இறங்கி 15Fல் ஏறினேன். அமைந்தகரை சீட்டு எடுத்துக் கொண்டு அண்ணா ஆர்ச் தாண்டி நெல்சன் மாணிக்கம் சாலை போகும் நாலை நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். 

நல்ல தண்ணீர் தாகம், சாலையைக் கடந்து அம்பா ஸ்கைவாக் அருகில் வந்தேன். முன்பக்கம் இருந்த திறந்தவெளிப் பூங்கா பாழடைந்து கிடந்தது. உள்ளே நுழைந்து நகரும் படிக்கட்டுகளில் நகர்ந்து மேல் மாடிக்குப் போய்ச் சேர்ந்தேன். திரைப்பட அரங்கின் வாசலிலேயே காத்திருந்தார். ஏற்கனவே சீட்டு வாங்கி விட்டிருந்தார். அரங்குக்குள் போவதற்கு முன்பு ஒரு லிட்டர் தண்ணீர், அரை லிட்டர் ஏதோ எலுமிச்சம் பழ சாறு வாங்கிக் கொண்டோம். திரைப்படத்துக்குப் போக நல்ல கூட்டம், அரங்கு நிறைந்திருந்தது.

வழக்கமான மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களைப் போல வசதியான இருக்கை, பெரிய திரை, குளிரூட்டப்பட்ட அரங்கம். சத்யம் அரங்குக்கு ஒரு முறை போனேன். எக்ஸ்பிரஸ் அவன்யூவிற்கு கஹானி படம் பார்க்கப் போனேன். இப்போது வழக்கு எண் 18/9 பார்க்க அம்பா ஸ்கை வாக்.

இதற்கிடையில் தென்மேற்கு பருவக் காற்று படம் உதயம் தியேட்டரிலும், சேவற் கொடி படம் சாந்தி காம்ப்ளெக்சிலும் பார்த்தேன்.

நிறைய விளம்பரங்கள், பட முன்னோட்டங்கள். முக்கிய காட்சி ஆரம்பம் என்று திரையில் செய்தி சொன்ன பிறகு விஸ்வரூபம் டிரைலர் போட்டார்கள். அதைத் தொடர்ந்து வழக்கு எண் 18/9.

வாழ்க்கையில் நடக்காத எதையும் காட்டாமல், நடக்கும் ஒவ்வொன்றையும் காட்டுவதுதான் படத்தின் கடைசி 20 நிமிடங்கள் வரையிலான காட்சிகள். ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு போகிறோம், பொருட்களை வைக்கும் இடத்தில் சீருடை அணிந்த ஒரு பாதுகாவலர். அவரை கடந்து போய் விடுகிறோம். அவரிடம் பேசினால் அவருக்குப் பின்னால் பொய்த்துப் போன விவசாயம், கவனிக்காத குழந்தைகள் என்ற சோக பின் வரலாறு இருக்கும். அவருடன் ஒரு நாள் முழுவதும் இருந்து பார்த்தால் அவர் சாப்பிடுவதும், தூங்குவதும், வேலை செய்வதும் துயரக் காட்சிகளாக விரியும்.

அதைத்தான் நடைபாதை உணவுக் கடைக்கார பையனை பற்றி காட்டுகிறார்கள் படத்தில். கடன் வசூலிக்க வரும் கந்து வட்டி தலைவர்களின் வெள்ளுடை கிராமத்து வறுமையின் மத்தியில் கார்ட்டூன் படத்தின் நடுவில் வரும் ரியல் கேரக்டர் போல தெரிவதும், முறுக்கு கம்பெனியில் பையன் வேலைக்குப் போவது, அப்பா அம்மா இறந்து வேலையை விட்டு ஓடி சென்னைக்கு வருவது, சென்னையில் மயங்கி கிடப்பவனை தண்ணீர் தெளித்து எழுப்பி இட்லி வாங்கி கொடுக்கும் ரோஸி அக்கா, சாப்பாட்டு மூட்டைகளுடன் மதிய உணவை பற்றி கவலைப் பட்டுக் கொண்டே பசியில் மயங்கிக் கிடப்பவனை புறக்கணித்து தள்ளி போகின்றவர்கள், அவனை சாப்பாட்டுக் கடைக்காரரிடம் வேலைக்கு சேர்த்து விடும் ரோசி அக்கா, சாப்பாட்டுக் கடைக்காரர் என்று ஒவ்வொருவரும் சென்னையின் தெருக்களில் நாம் தினமும் சந்திப்பவர்கள்தான்.

அருகிலுள்ள குடிசைப் பகுதியிலிருந்து அடுக்கு மாடி உயர் நடுத்தர வர்க்க குடியிருப்பு வீட்டில் வேலைக்கு வரும் ஜோதி. அவளுடன் உரசல்களில் மாட்டும் இந்த சோத்துக் கடைபையன். ஜோதியின் அம்மா வசவுகளையே தனக்கும் தனது பெண்ணுக்கும் கவசமாக வைத்திருப்பது, ஜூனியராக வேலைக்குச் சேரும் சின்னச் சாமி என்று கதை ஜெட் வேகத்தில் சூடு பிடிக்கிறது. இவர்களில் ஒருவர் கூட நாம் பார்க்காத நபர் என்று சொல்ல யாராலும் முடியாது. இதற்கு ஊடாக ஜோதி வேலை பார்க்கும் வீட்டின் பள்ளியில் படிக்கும் சிறுமியின் முகம் வந்து போகிறது. இன்னும் சில சந்திப்புகளுக்குப் பிறகு வேலு இன்ஸ்பெக்டரிடம் சொல்வதான விபரங்கள் முடிந்து இடைவேளை.

வேலுவுக்கு வரும் காதல் வேலை செய்யும் ஜோதி மீதுதான். அதே பாதையில் தினமும் சைக்கிளில் கடந்து செல்லும் ஆர்த்தி மீது அவனுக்கு கவனமே திரும்புவதில்லை. அவள் சைக்கிளில் வேகமாக போவது ஒரு நடைமுறை இடைவெளியாக இருந்தாலும் இருவருடைய வர்க்க வேறுபாடுதான் முதன்மையானது.

இடைவேளைக்குப் பிறகு இன்ஸ்பெக்டரிடம் கதை சொல்ல வருகிறார் ஆர்த்தி. ஜோதி மீது அமிலம் வீசியதற்கு வேலுவை விசாரித்தது போலவே இன்னொரு பையனையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி நடந்த விபரங்களை சொல்கிறார். அந்த பையன் வீட்டுக்கு வந்து பாடம் சந்தேகம் கேட்பதாக சொல்லி பழக ஆரம்பித்தது, சைக்கிளில் தானும் வந்து நெருங்க முயற்சித்தது, பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தது, அதற்கு போக முடியாமல் ஒரு நாள் வெளியில் போக சம்மதித்து கிழக்கு கடற்கரை சாலைக்கு உணவு விடுதிக்குப் போனது, கடலில் விளையாடி உடை எல்லாம் நனைந்து அறையில் உடை மாற்றி விட்டு திரும்புப் போது, அவன் மீது நல்லெண்ணம் நிறைந்திருந்தது, காரில் அவனது மொபைலில் அவன் இவளை எடுத்து வைத்திருந்த காணொளிகளைப் பார்த்து அவனது உள் நோக்கம் புரிந்து உறவை துண்டித்துக் கொண்டது, அதன் பிறகு அவன் இவளை பழி வாங்க காரால் இடிக்க வந்தது என்று சொல்லி அவன்தான் தன் மீது ஊற்ற வந்த அமிலத்தை ஜோதி மீது ஊற்றியிருக்க வேண்டும் என்கிறாள்.

இன்ஸ்பெக்டர் குமாரவேல் இப்போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார். மிதுன் வீட்டுக்கு தொலைபேசினால் அவனது அம்மா எடுத்து பேசிக் கொண்டிருக்கும் போதே துண்டித்து விடுகிறார். அதன் பிறகு போனை எடுக்கவில்லை. கடுப்பான அவர் இரண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் செய்கிறார். வந்தவுடன் அடாவடியாக பேசி, மிரட்டி, பையன் மீது கொலை முயற்சி, தாக்குதல், ஆபாச படங்களை உலாவ விடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விடுகிறார்.

அதன் பிறகு அமைச்சன் மூலமாக ஜெயலட்சுமியுடன் பேரம் பேசி 10 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மிதுனை போக விட்டு விட்டு வேலுவை கொண்டு வந்து அடித்து, நயவஞ்சகமாக பேசி குற்றத்தை ஏற்றுக் கொள்ள வைக்கிறார். அதற்கு மாறாக, ஜோதியின் முகத்தை சரி செய்து விட பணம் ஏற்பாடு செய்தவாக சொல்கிறார். அவனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு பணத்தை தான் எடுத்துக் கொள்கிறார்.

சின்னச் சாமி மூலமாக எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்ட ஜோதி அதே கோர்ட் வாசலில் இன்ஸ்பெக்டர் குமார வேல் முகத்தில் ஆசிட் ஊற்றி விட்டு பிடிபட்டு சிறைக்குப் போகிறார்.

கடைசி அரை மணி நேர படம் மிகவும் நாடகத்தனமானது. இந்திய கோர்ட்டுகளில் இவ்வளவு விரைவாக வழக்கு நடப்பதும் தீர்ப்பு வருவதும், தவறான தீர்ப்பு திருத்தப்படுவதும் நடைமுறைக்கு முரணானது. வேலு சிறைக்குப் போவதும், குமார வேல் அமைச்சருடன் பேசுவது, ஜோதி வேலுவை கொண்டு போகும் வேனை தொடர்ந்து போவதும் இத்தோடு வாழ்க்கை முடிந்து விடுகிறது. அதன் பிறகு சினிமா ஆரம்பித்து விடுகிறது.

படம் விடாமல் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தது. சாப்பாட்டுக் கடை ஊழியர்களையும், மெட்ரோ ரயில் தொழிலாளர்களையும், பாலியல் தொழிலாளர்களையும் விளிம்பு நிலை மனிதர்கள் என்று சொல்ல தப்பித்து விடுகிறார்கள் இலக்கிய வாதிகள். இவர்கள்தான் 80% இருக்கிறார்கள் சமூகத்தில். அவர்கள் மொழியில் பார்த்தால் விளிம்புகளே 80%, 20% மையம் தடித்துப் போய் கிடக்கிறது.

ஒரு சமூகத்தின் குறுக்கு வெட்டை படம் பிடித்து, கண்ணாடியில் பிரதிபலித்துக் காட்டுவதுதான் சிறந்த கலை. அத்தகைய கலைஞராக, உழைப்பாளியாக பாலாஜி சக்திவேல் நிமிர்ந்து நிற்கிறார்.

படம் பார்த்து விட்டு கோயம்பேடு வந்து வடபழனி வந்து ஆட்டோவில் வந்தேன். சாப்பிட்டு விட்டு அய்யப்பன்தாங்கலில் கொண்டு விட்டான். கேட்டுகள் பூட்டியிருந்தன. கிளம்பி அய்யப்பன் தாங்கல், பூந்தமல்லி, கோயம்பேடு என்று வேலூர் திரும்பினேன். 3 மணிக்கு வேலூர். 4 மணி வரை வழக்கு எண் 18/9 படத்தின் விமர்சனங்கள், விபரங்களை படித்துக் கொண்டிருந்தேன். நேற்று பல வீடியோக்களை பார்த்தேன். நேற்று முழுவதும் தூக்கம்.

மாலையில் Salt of the Earth  என்ற படத்தைப் பார்த்தேன். 1950களில் எடுக்கப்பட்ட படம். பெண் உரிமைகளைப் பற்றிய படம். இதைத் தாங்க முடியாமல் தணிக்கை, அடக்கு முறை, ஒதுக்கி வைத்தல் என்று செய்திருக்கிறது, பேச்சுரிமையும், கருத்துரிமையும் நிறைந்திருந்த அமெரிக்க முதலாளித்துவ சமூகம். கருப்பு வெள்ளையில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் அந்த சுரங்க நகரின் கஷ்டங்களை கண் முன் கொண்டு வந்தார்கள். பிக்கெட்டிங் என்றால் என்ன என்று முதல் முதலாக தெரிந்து கொண்டேன். வேலை நிறுத்தம் என்றால் பந்தல் போட்டு முன்னால் உட்கார்ந்து கொள்வதில்லை. தொழிற்சாலையின் முன்பு வட்டமாக சுற்றி நடந்து கொண்டே இருக்கிறார்கள். யாரும் கடந்து போகக் கூடாது, முடியாது.

மோர் கடைக்குப் போய் பொருட்கள் வாங்கி வந்தேன். ஜூஸ் குடித்து முடித்து விட்டேன். இரவில் தயிர் வைத்து பொங்கியிருந்த சோற்றை முடித்துக் கட்டினேன்.

சனி, ஏப்ரல் 21, 2012

படித்தல்


ஏப்ரல் 21, 2012 காலை மணி 4.

நேற்று காலையிலும் சீக்கிரமே எழுந்து விட்டேன். இரண்டரை மணி என்று நினைவு. ஆனால் எழுதுவதற்கோ மிச்சம் வைத்திருந்த வேலைகளை செய்வதற்கோ மனம் வரவில்லை. முதலில் ஜாவாஸ்கிரிப்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் விழும் கட்டைகள் என்ற விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டேன். மிக எளிமையான வடிவமைப்புதான். இறங்கி விட்டால் பல மணி நேரம் சாப்பிட்டு விடும். 4 கணுக்களைக் கொண்ட கட்டைகள் வெவ்வேறு வடிவத்தில் இருப்பவை கீழ் நோக்கி விழும் அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்தி உட்கார வைக்க வேண்டும். ஒரு வரிசை முழுவதும் இடைவெளி இல்லாமல் பொருத்தி விட்டால் அது மறைந்து விடும், அதற்கான புள்ளிகள் கிடைக்கும். 4 வரிசைகளை ஒரு சேர மறைய வைத்தால் அதிக புள்ளிகள், ஒற்றை வரிசை மறைந்தால் குறைந்த பட்ச புள்ளிகள். நான்கு கணுக்களும் தலை/அடியாக இணைந்த கட்டை, 3+1 என்று இணைந்த வலது புற/இடது புற திருப்பமுடைய வகைகள் 2, 2+2 என்று இணைந்த வலது புற இடது புற திருப்பமுடைய 2 என்று மொத்தம் 5 வகை கட்டைகள். கட்டைகளை செங்குத்தாக கோணம் திருப்ப வசதிகள் உண்டு.

சரியாக 5 மணிக்கு திட்டமிட்ட வேலையை ஆரம்பித்தேன். எழுதி வைத்த கட்டுரைக்கு சரியான வடிவம் கொடுத்தேன். மொழிபெயர்த்த கட்டுரையின் உரையை உரைக்கோப்பில் எடுத்து பிழை திருத்தி அனுப்ப தயார் செய்தேன். 6 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டு விட்டது. அதற்கு முன்பு கட்டுரையை அனுப்பி விட்டிருந்தேன். அடுத்த மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டது. அடுத்ததாக மாலை தமிழ் ஊடகப் பேரவையில் பேச வேண்டியதற்கான குறிப்புகளை எழுத வேண்டும். குறைந்த பட்சம் 1 மணி நேரத்துக்கு குறிப்பு எழுதிக் கொண்டால் சுமார் 20 நிமிடங்கள் பேச முடியும் என்று திட்டமிட்டிருந்தேன்.

பசிக்கவே, பல் தேய்த்து விட்டு முந்தைய நாள் தண்ணீர் ஊற்றி வைத்திருந்த சோற்றை சாப்பிட போனேன். மாங்காய் ஊறுகாய் வாங்கியதில் உப்பு அதிகம், கூடவே காரக் குழம்பு மிச்சமும் இருந்தது. சாப்பிட்டு விட்டு தூக்கம் வராமலிருக்க உறுதி செய்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து ஒரு கப் கடும் காபி. 1 ரூபாய்க்கு கிடைக்கும் ப்ரூ பொதியை ஒரு கப்பில் கொட்டி, 2 கரண்டி சீனி, கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்தால் காபி தயார்.

பால் சேர்த்து தயாரிப்பதை விட இந்த கருப்பு காபிதான் மிகவும் விருப்பமானது. சிறு வயதில் வெறும் வயிற்றில் முட்டை உடைத்து குடித்தால் உடம்புக்கு நல்லது என்று கொடுப்பார்கள். அப்போது முட்டை வாடை தெரியாமல் இருக்கு இது போன்ற கடும் காப்பி கிடைக்கும். இந்த கடும் காப்பிக்காகவே முட்டை குடிக்க வாய்ப்பு தேடுவேன். அதன் பிறகு, வளர்ந்த பிறகு உடல் நிலை சரியில்லா விட்டால் இந்த கடும் காபிதான் மருந்து. இங்கிலாந்துக்கு போயிருந்த போது அங்கிருந்தவர்கள், காபியில் பார் சேர்த்து சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவார்கள். நான் காபியில் சர்க்கரை சேர்த்து பால் சேர்க்காமல் சாப்பிடுவேன்.

இதை செய்வதற்கு பாட்டிலில் காபிப் பொடி வாங்கி வைத்தால் சில நாட்களில் கெட்டித்துப் போய் வீணாகி விடுகிறது. அதனால் வாங்காமலேயே வைத்திருந்தேன். இப்போது 1 ரூபாய் பாக்கெட்டை பார்த்ததும் வழி தெரிந்து விட்டது. இரண்டு வாரம் முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வாங்கியது, தொடர்ந்து பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு கப்புக்கு மேல் போவதில்லை. அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அளவையும், தடவைகளையும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்திக் கொண்டால் பக்க விளைவுகள் பெரிதாக ஏற்பட்டு விடாது என்றுதான் நம்பிக்கை.

காபி குடித்து விட்டு பேச்சுக்கான தயாரிப்பு. மின் புத்தக படிப்பான்களை பற்றி என்று நினைத்து வைத்திருந்து கிண்டில் தொடர்பான வீடியோக்களை தரவிறக்கியிருந்தேன். கூடவே சொல்லியிருந்த 15ம் நூற்றாண்டு வாடிக்கையாளர் சேவை வீடியோ, கார்னிங் கிளாஸ் நிறுவனம் தயாரித்த எதிர்கால தொழில் நுட்ப சாத்தியங்கள் வீடியோ என்று வரிசைப்படுத்தி இவற்றை மையப்படுத்தி பேசலாம் என்று  முடிவு செய்திருந்தேன். இடையில் தொலைபேசி அழைப்புகள், குளியல், தியானம் எல்லாம் முடித்து எழுத ஆரம்பிக்கும் போது 11 மணி ஆகி விட்டது. ஓரளவு நிறைவாகவே வந்தது. இணைய இதழ்களின் தொழில் நுட்ப சாத்தியங்கள், எதிர்கால சாத்தியங்கள் என்னென்ன, இடையூறுகள் என்னென்ன போன்ற விபரங்களை  சேகரித்துக் கொண்டேன்.

12 மணிக்கு துணிகளை பைக்குள் எடுத்து வைத்து, மடிக்கணினி எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். குடங்களை காலி செய்து கீழே கொண்டு வைத்தேன். தண்ணீர் வந்தால் பிடித்து வைப்பார்கள். காலி செய்த தண்ணீரை கொட்டி விடவில்லை. தண்ணீர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டேன்.

படிப்பதற்கு கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். எப்போதோ வாங்கியது, சீனாவில் வெளியிடப்பட்ட பதிப்பு, சீன மொழியில் முன்னுரையுடன் இருந்தது. அமெரிக்க கல்லூரிகளில் பயிற்றுவிப்பதற்கான பாட புத்தகம். இப்போதைய ஆர்வத்திற்கு பொருத்தமான வாசிப்பு. பைக்கு கொஞ்சம் கனம் அதிகம் என்ற சிக்கல் மட்டும்தான்.

கோபால புரம் வந்து சாலையைக் கடக்கும் போது பகிர்வூர்தி நிறுத்தி ஏற்றிக் கொண்டார். புதிய பேருந்து நிலையத்துக்கு முன் இறங்கி டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு சென்னை பேருந்து நிற்கும் பகுதிக்கு வந்தால் ஒரு குளிர் சாதன அரசு விரைவுப் பேருந்து நின்றது. எந்த ஊரிலிருந்து வருகிறது என்று பார்க்காமலேயே ஏறிக் கொண்டேன். பெங்களூர் அல்லது திருப்பதியாக இருக்க வேண்டும். வழியில் சாப்பிட நிறுத்தும்போது பார்த்தால் 911 திருப்பதி வண்டிதான். உள்ளே அதிகம் கூட்டமில்லை. யாரும் உட்காராத இருவர் இருக்கையின் பின், உட்கார்ந்து கொண்டேன். இருக்கையை சாய்த்து தொல்லை கொடுக்க மாட்டார்கள். மொத்தமே 10-15 பேர்தான் இருந்தார்கள். பூந்தமல்லிக்கு 110 ரூபாய் சீட்டு.

தூக்கம் வரவில்லை, தூங்கவும் இல்லை. முதலில் நாளிதழ், தொடர்ந்து கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் படித்துக் கொண்டிருந்தேன். திருப்பெரும்புதூர் தாண்டி கட்டண சாவடி தாண்டிய பிறகு சில நிமிடங்கள் கண்ணயர்ந்திருப்பேன். அதற்கு முன்பு காஞ்சிபுரம் மேம்பாலம் இறங்கியதும் இடது புறம் இருக்கும் (வெள்ள கேட் பகுதி) விடுதியில் சாப்பிட நிறுத்த ஒரு தயிர் சாதம் சாப்பிட்டுக்  கொண்டேன். 25 ரூபாய். 3 மணிக்கு பூவிருந்தவல்லி வந்து சேர்ந்தது.

54Fல் ஏறினால் நேராக போய் விடலாம். 54 போய்க் கொண்டிருந்தது. அவற்றில் ஏறாமல் பேருந்து நிலையத்துக்கு உள்ளே போனேன். 54L வேளச்சேரி பேருந்து பயணிகள் யாரும் உட்காரமல் நகர்ந்து கொண்டிருந்தது ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

இந்த பேருந்திலும் கூட்டம் மிக மிகக் குறைவு இருக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. சின்னமலை சீட்டு வாங்கிக் கொண்டேன். 11 ரூபாய். சின்ன மலையில் இறங்கினால் சைதாப்பேட்டையிலிருந்து வரும் பேருந்துகளையும் பிடிக்கலாம். நேரம் ஆகி விட்டால் ஆட்டோ பிடிக்கும் தூரம் கூட. வண்டி எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று வந்து ராமாபுரம் சாலை நிறுத்தத்தில் நின்று விட்டது. எஞ்சின் தொடங்க மறுத்தது. இறங்கி அடுத்த பேருந்தை பிடிக்க வேண்டுமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் புறப்பட்டு விட்டது. கிண்டி தாண்டி 3.45க்கு சின்னமலையில் இறக்கி விட்டார்கள். இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வரும் முன்பு கடந்து போன ஆட்டோவை கை காட்டி ஏறிக் கொண்டேன்.

ஆட்டோ உள்ளே போகுமானால் உள்ளேயே விட்டு விடச் சொன்னேன். உள்ளே அனுமதித்தார்கள். வாசலில் பதிவு செய்து கொண்டு போய் கூட்டம் நடக்கும் கட்டிடத்துக்கு முன்பே இறங்கிக் கொண்டேன்.

கூட்டம் முடிந்து  அடையாறு, கிரீன்வேஸ் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, போயஸ் கார்டன் வழியாக கதீட்ரல் சாலை வந்தது. ராணி மேரிக் கல்லூரி எதிரில் சாலை நிறுத்தத்தில் இறங்கிக்  கொண்டேன். வந்து ஆவணத்தை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். தேநீர் கடையில் ஒரு கோப்பை தேநீர் ஒரு சமோசா சாப்பிட்டு விட்டு அருகிலேயே இருந்த நகலகத்தில் கடவுச்சீட்டுக்கான நகலை எடுத்துக் கொண்டேன். முதல் பக்கம் மட்டும் போதும் என்று அதைக் கிழித்து கையெழுத்து போட்டு வைத்துக் கொண்டேன். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். சொன்னபடியே அரை மணி நேரத்தில் வந்து விட்டார். இப்போது நேரம் 6 ஆகியிருந்தது. கூட்டம் 6.30 என்று சொல்லியிருந்தார்கள்.

அவரது வண்டியிலேயே வைட்ஸ் சாலையில் விட்டு விடுவதாகச் சொன்னார். கோபால புரம் வழியாக திரும்பி ராயப்பேட்டை வந்து மணிக்கூண்டு, எக்ஸ்பிரஸ் அவன்யூ தாண்டி வலது பக்கம் கட்டிடம் தென்பட்டது. இடது பக்கம் இறங்கி சாலையைக் கடப்பது பெரிய விஷயம்தான். பாதசாரிகள் சாலை கடப்பதற்கான வெள்ளை பட்டிகளும் போட்டிருக்கத்தான் செய்தார்கள். அது வரை நடந்து சென்று கடந்தேன்.

முதல் தளத்திலிருந்து கைகாட்ட ஏறி போனேன். குளிரூட்டப்பட்ட அறை. புரஜெக்டர், திரை என்று அமர்க்களமாக இருந்தது. கணினியை இணைத்து சரி பார்த்து விட்டு அணைத்து வைக்கச் சொன்னேன். ஆறரை மணிக்கு சிலர் வந்திருந்தனர். காபி, வடை கொடுத்தார்கள். நன்றாக இருந்தது. வடை பெட்டியை திறந்ததும் நல்ல மணம் வந்தது. 7 மணிக்குப் பிறகு கூட்டம் ஆரம்பித்தது.  முதலில் பேச ஆரம்பித்தேன்.

பேச்சு நன்றாகவே போனது, குறிப்பாக காணொளிகளை காட்டியது மிகவும் வரவேற்பை பெற்றது. யாரும் போரடித்து போயிருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. முடிந்ததும் கேள்வி பதில்களும் சுவாரஸ்யமாக போயின. அதைத் தொடர்ந்து அய்யநாதன் பேசினார். வெப்துனியாவிலிருந்து வெளி வந்து விட்டார் என்று பின்னர்தான் தெரிந்தது.

இளைய தலைமுறையினர் தம்மை மேம்படுத்திக் கொள்ள, பிறருடன் தொடர்பு கொள்ள, ஆய்வு செய்து விபரம் தெரிந்து கொள்ள, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இணையத்தை நாடுகிறார்கள். பொழுதுபோக்கு என்பது 5வது காரணியாகத்தான் இருக்கிறது. முதல் நான்கு நோக்கங்களுக்கு சரியான தீனி போட்டால் தவறான பொழுது போக்கு அம்சங்களை நாடி போக மாட்டார்கள் என்று பேசினார். அதற்கான புள்ளி விபரங்களை வெளியிட்டார். இந்தியாவில் 12 வயது முதல் 17 வயது வரையிலான இளம் இளைஞர்கள். 18 வயது முதல் 29 வயது வரையிலான முதிய இளைஞர்களில் 80 சதவீதத்துக்கு மேல் இணையத்தை நாடுகிறார்கள் என்று புள்ளி விபரம் சொன்னார். எந்த அடிப்படையிலான புள்ளி விபரம் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பெரிதும் பொருந்தும் என்றே தோன்றியது.

அவர் பேசி முடித்த பிறகும் விவாதங்கள் தொடர்ந்தன. 9 மணிக்குப் புறப்பட்டோம்.

மீண்டும் சாலையைக் கடந்து வந்து ஆட்டோதான் பிடித்தேன். தாம்பரம் போகும் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடக் கேட்டுக் கொண்டேன். டிஎம்எஸ்சில் விட்டு விட்டு 50 ரூபாய் வாங்கிக் கொண்டார். 1B வந்தது. 17  ரூபாய் சீட்டு. பூந்தமல்லி - சின்னமலை = 11 ரூபாய், இப்போது 17 ரூபாய் - மொத்தம் 28 ரூபாய்தான் ஆகியிருக்கிறது. 50 ரூபாய் சீட்டு வாங்காதது நல்லதுதான். பேருந்தில் அருகில் இருந்த பெரியவர் வைத்திருந்த சிறுவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவனது பாட்டியும் அம்மாவும் பெண்கள் பகுதியில் உட்கார்ந்திருந்ததை பிறகுதான் பார்த்தேன். அம்மா கூப்பிட்ட போதுதான் இவன் முகத்தில் மலர்ச்சியே வந்தது.

அதன் பிறகு அருகில் உட்கார்ந்தவர் பேருந்து கட்டண உயர்வைப் பற்றி புகார் சொல்ல அவரிடம் பேசிக் கொண்டே தாம்பரம் வந்து விட்டது.

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

திரைப்பட வாழ்க்கை


ஏப்ரல் 10, 2012 - நேரம் 4.24.

ஞாயிற்றுக் கிழமை காலையில் 2 மணிக்கு எழுந்து எழுத ஆரம்பித்தேன். எழுதி முடித்து விட்டு இரண்டு வகுப்புகளுக்கும் இன்டெர்னல் மதிப்பெண்களை சரி பார்த்து இறுதி செய்தேன். இன்னும் சில மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களுக்காக கூடுதல் வேலை கொடுக்க வேண்டியிருக்கலாம். அதன் பிறகு கொடுத்திருந்த வீட்டு பணியை சரி பார்த்து மதிப்பெண் கொடுத்தேன். சோர்வாக இருக்கவே படுத்து தூங்கினேன். இப்படி அதிகாலையில் எழுந்து விட்டு அதன் பிறகு தூங்குவதை உறுதியாக நிறுத்த வேண்டும். பகலில் தூங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தொலைபேசி அழைப்பில் எழுந்திருந்தேன். என்னுடைய கடவுச் சீட்டு எண் வேண்டுமாம். 'என்னிடம் கைவசம் இல்லை, நான் வெளியில் இருக்கிறேன்' என்று சொன்னேன். 'என்ன காலையில் ஆறரை மணிக்கு வெளியிலா' என்று கடிந்து சொல்ல, நான் வேலூரில் வசிப்பதையும் இப்போது சென்னையில் இருப்பதையும் சொன்னேன். 'அப்போ உன் சகோதரியின் வீட்டில் இல்லையா' என்று கேட்டதும் விபரம் சொன்னேன். அத்தோடு எழுந்து வெளியில் போனேன்.

இந்தப் பக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் கேட்டால் அதில் ஞாயிறு இணைப்பு மட்டும்தான் இருந்தது. செய்தி பகுதிக்குப் பதிலாகவும் இணைப்பு. அதை சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டு சாலையைக் கடந்து எதிர் புறம் போனேன். அங்கு டெக்கான் வாங்கி விட்டுத் திரும்பி வந்தேன். அறைக்கு வந்து துணிகளை அடுக்கி வைத்து விட்டு குளிக்க, முகம் மழிக்க போனேன். இன்னொரு முறை அழைப்பு. எடுத்தால் குரல். 'மாம்மியின் பிளட் குரூப்' என்ன என்று கேட்டாள். 'எனக்கு நினைவில்லை, மறந்து விட்டது, ஏதோ ஆர்எச் பாசிட்டிவ்' என்று மட்டும் நினைவிருக்கிறது. அதற்குப் பிறகும் பல முறை எடுத்திருப்பாளே' என்று அவளிடம் கொடுக்கச் சொன்னேன்.

அவளுக்கும் நினைவில்லையாம். 'ஆர்எச் +வ் என்று எழுதவா' என்று கேட்டாள். '+வ் தான் என்று உறுதியாகத் தெரியுமா' என்றாள். 'ஆமாமா, நீ எப்போதுமே பாசிட்டிவ்தான்' என்றேன். 'பேசாமல் ஏதாவது சோதனை லேபுக்குப் போனால் 5 நிமிடங்களில் பிளட் குரூப் சொல்லி விடுவார்கள்' என்றால், 'ஒண்ணும் வேண்டாம்' என்று சொல்லி விட்டு வைத்தாள். இரண்டு நிமிடங்களில் மீண்டும் அழைத்து  'உன் எண்ணைக் கொடுத்திருக்கிறேன். அழைத்து ஏன் வரவில்லை என்று கேட்டால், வெளியூரில் வேலையாக போயிருப்பதாகவும் இன்னொரு சமயம் வருவதாகவும்' சொல்லச் சொன்னாள். இப்போது குரலில் சங்கடம். ஒருவனிடம் போய் உதவி கேட்கிறோமே என்று சங்கடம்.

குளித்து விட்டு தியானம். அதன் பிறகு எதிரில் போய் சரவணபவனில் காலை உணவு. சிரித்த முகத்துடன் ஒருவர் ஆர்டர் எடுக்க வந்தார். 4 இட்லிகள் சொன்னேன். அடுத்தது அப்புறம். 4 இட்லி ஒரே பிளேட்டில் வந்தன. அதைத் தொடர்ந்து பூரி சொன்னேன். பிறகு காபி, சர்க்கரை போடாமல். சுகர் ப்ரீ வேண்டுமா என்று கேட்க, இனிப்பே வேண்டாம் என்று சொன்னேன். சர்வர் சுகர் ப்ரீ பாக்கெட்டுகளை எடுத்து வந்திருந்தார். திருப்பிக் கொடுத்து விட்டேன். காபியில் இனிப்பில்லாமல் குடிக்க வேண்டும் போலிருந்தது, அவ்வளவுதான்.

அறைக்கு வந்து பார்த்தால் 8 மணி ஆகி விட்டிருந்து. எந்த வேலையையும் ஆரம்பிக்க போவதில்லை என்று முடிவு செய்து விட்டு கிளம்பினேன். பைகளை அறையிலேயே வைத்து பூட்டிச் செல்லுமாறு சொன்னார். பூட்டி விட்டு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து கிண்டி போகும் பேருந்தில் ஏறினேன். ஓட்டுனர் நடத்துனர் மட்டும்தான் இருந்தார்கள். 8 ரூபாய் சீட்டு. சில பேருந்துகளை போக விட்டு ஒரு 88 தடத்தில் ஏறினேன்.

சின்னமலை அருகில் ஏதோ கூட்டம். ஹால்டியா சந்திப்பிலிருந்தே வண்டிகள் வரிசை கட்டியிருந்தன. அந்த இடத்தைத் தாண்டும் வரை ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து அதன் பிறகு இயல்பு நிலை இருந்தது. பெரிய கூட்டம், ஏதோ திருவிழா போல. நிறைய பெண்களும். கிருத்துவ அமைப்பு ஒன்றின் கூட்டம் போல் தோன்றியது. எக்ஸ்பிரஸ் அவென்யூ போவதற்கு டிவிஎஸ் என்று சீட்டு கொடுத்திருந்தார்.

தொலைபேசி அழைப்பு வந்தது. இடிந்தகரை போயிருந்தாராம். இப்போது காவல் துறை குவிப்பை நீக்கி விட்டாலும், ஊர் மக்கள் ஆள் பார்த்துதான் அனுமதிக்கிறார்களாம். கூடி இருக்கும் மக்கள் கடைசி வரை போராடுவதாக உறுதியாக இருக்கிறார்களாம். அவர் குறும்பனை போய் சந்திக்கப் போவதாகச் சொன்னார். அதற்கு உடன் வர அழைத்திருக்கிறார். நான் ஊரில் இல்லை, சென்னையில் என்று சொன்னேன். அவர் சென்னை வந்த பிறகு சந்திக்கலாம் என்று பேசிக் கொண்டோம்.

இதற்குள் டிவிஎஸ் நிறுத்தத்தை தவற விட்டு எல்ஐசியில் இறங்கினேன். அது வரை ஒரு வழிப்பாதை. சாலையைக் கடந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த காவல் துறை குடிநீர் பந்தலில் தண்ணீர் குடித்துக் கொண்டேன். அருகில் நின்ற காவலருக்கு நன்றி சொல்லி விட்டு நடந்தேன். பேருந்து நிறுத்தம் அருகில் விசாரிக்க நேராக நடக்கச் சொன்னார்கள்.  நடந்தே வந்து சேர்ந்து விட்டேன்.

பெரிய கடைத்தெரு கட்டிடம். கார்கள் நிறுத்த பெரிய வளாகம். பல அடுக்க மாடிகள். உள்ளே நுழைந்து நகரும் படிக்கட்டுகள் மூலமாக ஒவ்வொரு மாடியாக ஏறினேன். கடைசி தளத்தில்தான் திரைப்பட அரங்கு இருக்க வேண்டும். துடைத்துக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் கேட்டு போய்ச் சேர்ந்தேன். உள்ளே டிக்கெட் கொடுக்க கவுண்டர், தானாகவே டிக்கெட் அச்செடுத்துக் கொள்ள திரைகள், சாப்பாட்டுக் கடைகள் பளபளக்கும் விளக்குகளுடன் உயரமான கூரையினுள் இருந்தன. போய் சுற்றிப் பார்த்துக் கொண்டே அடுத்த வாசல் அருகில் வந்தேன்.

தொலைபேசி அடித்தது. வெளியில் போக முயற்சித்து கதவில் முட்டிக் கொண்டேன். வெளியில் போனால் தொலைபேசி நின்று விட்டது. திரும்ப அழைத்தால் பிசி என்று வந்தது. உள்ளேயே நின்று கொண்டிருக்கிறார். எஸ்கேப் என்று பெயர். பெரிய அரங்குதான். அகலமான இருக்கைகள், அகலமான கைப்பிடிகள். முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்டிருந்தது. திரைக்கு அருகிலான இருக்கைகள்.

உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். திரைப்படம் ஆரம்பிக்கும் வரை பேச்சு. திரைப்படம் கஹானி என்ற இந்தி திரைப்படம். சோதனைச் சாலையில் எலிகள் இருக்கும் கூண்டினுள் சிறு கண்ணாடி குமிழ்களை உள்ளே போட்டு உடைக்க, அதிலிருந்து வெளிப்படும் திரவம் ஆவியாகி எலிகள் இறக்கின்றன. அடுத்த காட்சியில் கொல்கத்தா மெட்ரோவில் பால் புட்டியில் இருந்து திரவம் வெளி வந்து நூற்றுக் கணக்கான பேர் இறந்து போகிறார்கள்.

கொல்கத்தா விமான நிலையத்தில் ஏழெட்டு மாத கர்ப்பிணியாக வித்யா பாட்சி வந்து இறங்குகிறார். டாக்சியில் ஏறி பார்க் ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேசன் போகிறார். தனது கணவரை காணவில்லை புகார் கொடுக்கிறார். கணவர் பெயர் அர்னாப். கொல்கத்தாவுக்கு புராஜெக்டுக்காக வந்தவர் திடீரென்று காணவில்லை. அவர் தங்கியிருந்த ஹோட்டலிலும், வேலை பார்த்த இடத்திலும் விசாரித்தால் அப்படி யாரும் இல்லை என்கிறார்கள் என்று சொல்கிறார். புகார் பதிவு செய்து கொள்கிறார்கள். அவரை கொண்டு விட நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டர், கணினியில் வேலை செய்பவர், ராணா என்பவர் வருகிறார். ஒரு கெஸ்ட் ஹவுசுக்குப் போகிறார்கள். அங்கு தனது கணவர் தங்கிய பதிவேடுகளை கேட்டால் அதில் அவர் பெயர் இல்லை.

தான் அங்குதான் தங்கப் போவதாகச் சொல்லி விட்டு தங்குகிறார். அடுத்த நாள் நகரத்தின் பிணவறையில் பிணம் அடையாளம் காட்ட அழைத்துப் போகிறார்கள். அர்னாபின் உறவினர்கள் என்று ஏதோ ஒரு இடத்துக்குப் போகிறார்கள். அர்னாப் படித்த பள்ளிக்குப் போய் விசாரித்தால் அங்கும் தகவல் இல்லை. நிறுவனத்துக்குப் போய்க் கேட்டால் மனித வள மேலாளர் அப்படி யாருமே வேலை செய்யவில்லை என்கிறார். ஆனால் மாலையில் அழைத்து அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்த ஒரு ஊழியரைப் போல இருக்கிறது என்று சொல்லி சந்திக்க அழைக்கிறார்.

அந்த மனித வள மேலாளர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அடுத்து ஒரு போலீஸ் தகவல் சொல்பவரை சந்திக்கிறார்கள். அவர் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி சொல்கிறார். அதில் 2 பேர் கொல்லப்பட்டார்கள், மூன்றாமவர் காயமடைந்தார், காயமடைந்தவருக்கு குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிறார். அங்கு போய் விசாரித்தால் அந்த மருத்துவர் அடுத்த நாள் வரச் சொல்கிறார். அந்த மருத்துவரும் சுட்டுக் கொல்லப்படுகிறார். டில்லியில் ஐபி அலுவலகத்தில் இதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஒரு அதிகாரி இதை கையாள கொல்கத்தா வருகிறார்.

இடைவேளையின் போது வித்யாவை மெட்ரோ ரயில் முன்பு தள்ளிக் கொலை செய்யப் பார்க்கிறார் முந்தைய கொலைகளை செய்த அதே கொலையாளி.

இடைவேளையின் போது வெளியில் போய் இரண்டு பாட்டில் தண்ணீர் வாங்கி வந்தேன். ஒன்று 20 ரூபாய். அதற்குள் புதிய ஜனநாயகம் படித்திருக்கிறார். அதில் வந்திருந்த மின்சாரம் கட்டுரை பற்றி கேட்டார். அதை விளக்கிக் கொண்டிருக்கும் போது திரைப்படம் மீண்டும் ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் வித்யாவையும் கொல்லும்படி உத்தரவு வருகிறது. கொலையாளி வித்யாவை துரத்த, அவரை ராணா துரத்த, ஒரு கட்டத்தில் கை கலப்பு ஏற்பட, துப்பாக்கி வித்யா கையில் வர, ஆளைச் சுட்டுக் கொன்று விடுகிறார். கொலையாளியின் தொலைபேசியில் இருக்கும் குறுஞ்செய்திகளைப் பார்த்து அவை எங்கிருந்து வருகின்றன என்று கண்டுபிடிக்கிறார். அது அந்த ஐடி நிறுவனத்தின் பாதுகாவலர் கணினியிலிருந்து வருகின்றது. அங்கு போய் கணினியிலிருந்து தகவல்களை நோண்டுகிறார். அவற்றை எடுத்துக் கொண்டு தப்பி ஓடுகிறார்கள்.

இப்போது ஐபியும் ராணாவும் ஒன்றாக வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. இன்னும் ஒரு முறை கணினியை அணுகி விபரங்களை தேடச் சொல்கிறார்கள். ஒரு தொலைபேசி எண் கிடைக்கிறது. அதை அழைத்தால் ஐபியின் தலைவருக்கு போகிறது. தலைவரை அழைத்து தான் கணினியை நோண்டியதையும் இன்னும் பல தகவல்கள் கிடைத்ததாகவும் சொல்கிறாள். உள்ளூர் அலுவலரை அனுப்புவதாக சொல்கிறார். அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்ட இடத்தில் கோப்புகளைக் கொண்டு வரும்படி உத்தரவு வருகிறது.

அங்கு போகும் போது துர்கா பூஜையின் 10ம் நாள் உற்சவம். வெள்ளை/சிவப்பு உடை உடுத்து போகிறாள். கொலையாளியை சந்தித்து அவன் சுட முயற்சிக்கும் போது வயிற்றிலிருந்து தோல் பொம்மையை உருவி அவனை அடிக்கிறாள். அவனுடன் சண்டை போட்டு வீழ்த்துகிறாள். சுட்டு கொன்று விடுகிறாள். ஐபி அதிகாரியும் ராணாவும் வந்ததும் அவர்களை சந்திக்காமல் தப்பி ஓடி விடுகிறாள்.

தனது கணவனை கொன்றவனை பழி வாங்க முன்னாள் ஐபி அதிகாரியுடன் இப்படி வேடம் போட்டுக் கொண்டு வந்தார் என்று தெரிகிறது. அமிதாப் பச்சன் இறுதியில் மா, அசுரர்கள், வதம் என்று புராணம் சொல்லி முடிக்கிறார். படம் முடிந்து பெயர்கள் முடிவது வரை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். வெளியில் வந்து அருங்காட்சியகம் போகலாம் என்று முடிவு.

படிகளில் இறங்குவதால் பாதிக்கப்படுகிறார் என்பதும், அருங்காட்சியகம் போகலாம் என்று சொல்லியிருந்ததும் மறந்து போயிருந்தது. அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எழும்பூரில் போய் காரை அருங்காட்சியகத்தில் நிறுத்தி விட்டு இந்தப் பக்கம் வந்தால் எதிர் பக்கம் ஒரு அசைவ ஹோட்டல், மேசைக்குப் போனால் ஈ மொய்த்துக் கொண்டிருந்த ஒரு பாத்திரம் இருந்தது. வெளியில் வரும் போது முறைத்தார்கள். பக்கவாட்டு சாலையில் போய் ஹாட்பிரட்ஸ் பார்த்தோம், இந்தப் பக்கம் ஒரு அசைவ உணவகம், அதன் அருகில் சென்னை ராவுத்தர் பிரியாணி.

அங்கு போய் மீன் பிரியாணி, பிரியாணியில் முட்டை வறுத்து போட்டு, மீன் வறுத்ததை வைத்திருப்பார்களாம். கடைசியில் சாத்துக்குடி ஜூஸ் சொல்லியிருந்தேன். அதையும் மறந்து விட்டிருந்தேன்.

சாப்பிடும் போதும் பேசிக் கொண்டே இருந்தார். சாப்பிட்ட பிறகு மியூசியம் போய் ஓவியங்களை பார்க்கப் போனோம். நவீன கலைக் கூடத்தில் மூன்றாவது மாடியில். ரவிவர்மா ஓவியங்கள் பற்றி குறிப்பாக சொல்லியிருந்தார். ஓவியங்களை பார்ப்பதற்கான கலைக்கண்களை பெற வேண்டும். இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று சொன்னேன். சரியாக முடித்து விட்டு வெளியில் வந்து உட்கார்ந்தோம். பேச்சு தொடர்ந்தது. காரிலும் தொடர்ந்தது. ஸ்டெர்லிங் சாலை, ஆற்காடு சாலை வழியாக, அசோக் பில்லர் வந்து சரவண பவனில் காபி சாப்பிடப் போனோம். அதே சிரித்த முக ஆர்டர் எடுப்பவர். பேச்சு தொடர்ந்தது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்கப் போய் விட்டு தவறான நடைபாதையில் வேலூர் பேருந்துகளை தேடிக் கொண்டிருந்தேன். நாளின் இன்னொரு பெரிய சொதப்பல். காலையில் மீண்டும் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

கடைசியில் 102B non-stop திருப்பத்தூர் பேருந்து. மூவர் இருக்கையில் நடைபாதை ஓர இருக்கையில் உட்கார்ந்தேன். பூந்தமல்லியில் மூன்றாமவரும் வந்து நடுவில் உட்கார்ந்து கொண்டார். நீண்ட வார இறுதி முடிந்து வரும் மாணவர்கள் நிறைய பேர். தூங்கிக் கொண்டே வந்தேன். 12 மணிக்கு வேலூர். வெளியில் வந்து பகிர்வூர்தி. குறுஞ்செய்தி வந்திருந்தது. அதற்கு பதில் போட்டு விட்டு வீட்டுக்கு வந்து பாஸ்போர்ட் விபரங்களை அனுப்பி விட்டு தூங்கினேன்.

நேற்றுக் காலையில் எழுந்திருக்கவில்லை. 7 மணி வரை தூங்கிக் கொண்டேன். எழுந்து பார்த்தால் தண்ணீர் இல்லை. பல் தேய்த்து சட்டை மாட்டிக் கொண்டு கீழே தண்ணீர் பிடிக்கப் போனால் 2 நாட்களுக்குப் பிறகுதான் வருமாம். முன்பு ஒரு நாள் எப்போது வேண்டுமானாலும் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று போன வாரம் சொல்லியிருந்தார்கள். கரண்ட் கூட இல்லை என்பதையும் கவனிக்கவில்லை. குடத்தை வைத்து விட்டால் வரும் போது பிடித்து வைப்பதாகச் சொன்னார்.

வைத்து விட்டு மேலை வந்தேன். தண்ணீர் இல்லாமல் வேலை ஆகாது என்று உணர்ந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு நடந்தேன். கடையில் வாங்க வேண்டும். வீட்டுக் காரர் கனிவமுது கல்யாண மண்டபத்தில் போய் பிடித்தால் 10 ரூபாய் என்று சொன்னார். அங்கு போய் காவல்காரரை கேட்டால் பக்கவாட்டில் போய் பிடிக்கச் சொன்னார். வெளிப்புற குழாயில் பிடித்து வந்தால் அது இல்லையாம். அதைக் கொட்டி விட்டு மண்டபத்தின் உள்ளே அறையில் பிடித்துக் கொடுத்தார்.

தோளில் சுமந்து கொண்டு வந்து சேர்த்தேன். திரும்பவும் கடைக்குப் போய், சாம்பார் பொடி, உளுந்து, துவரம் பருப்பு, ரவை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், தயிர், ஓட்ஸ் வாங்கினேன். வீட்டுக்கு வந்து ஓட்ஸ் காய்ச்சி வைத்து விட்டு குடிக்கும் போது போய் பால் வாங்கி வந்து காய்ச்சி சேர்த்துக் கொண்டேன். மீதிப் பாலை டம்ளரில் ஊற்றி வைத்தேன்.

கொஞ்சம் கண்ணயர படுத்தால் தொலைபேசி அழைப்பு. 2 மணி நேரத்தில் வருகிறார். இணைய வியாபாரத்துக்கு என்ன செலவாகும் என்பது குறித்து விசாரித்தார். தகவல்களைச் சொன்னேன். அதன் பிறகு துணி துவைப்பதும் சமையலும். தக்காளி ரசம், மோர் தாளிப்பு, கத்திரிக்காய் பொரியல், மாங்காய் ஊறுகாய் என்று திட்டம். குக்கரில் சோறு வைத்து விட்டு துணிக்கு சோப்பு போட்டேன். துணி துவைத்துப் போட்டு விட்டு குக்கரை இறக்கி ரசம், மோர் தாளிப்பு, பொரியல். இடையில் உப்பு தீர்ந்திருக்க போய் வாங்கி வந்தேன். இனிமேல் சிறுபயறு, அரிசி, கோதுமை மாவு வாங்க வேண்டும். துணி துவைக்கும் பிரஷ், காபி குடிக்கும் பீங்கான் மக் வாங்க வேண்டும்.

சமைத்து விட்டுக் குளியல், தியானம். அதன் பிறகு சாப்பாடு.  சொன்னது போல 1.45க்கு வந்தார். ஓடைப் பிள்ளையார் கோவில் அருகில் இறங்கி நின்றதாக அழைத்தவரை வழி சொல்லி வரச் சொன்னேன். இடையில் திசை திரும்பி விட கீழே இறங்கிப் போய் அழைத்து வந்தேன். மே 6ம் தேதி அவருக்குத் திருமணம். ஞாயிற்றுக் கிழமை. ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. அங்கிருந்து திரும்பி வருவதாகச் சொன்னேன். அப்படித் திட்டமிட்டுக் கொள்வேன். பார்க்கலாம். வெள்ளிக் கிழமை ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மே 4ம் தேதி திருமணம் முடிந்த உடன் ரயிலை பிடிப்பதாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நாகர் கோவில் விரைவு வண்டி, காட்பாடியில் இறங்கிக் கொள்ளலாம்.

மீதி மதிய உணவை முடித்துக் கொண்டு அவருக்கு சேர வேண்டிய காசோலையை கொடுத்தேன்.

அவர் போன பிறகு கரண்ட் வந்த பிறகு தோசை மாவு அரைத்தேன். மீதி இருந்த சோற்றை சாப்பிட்டு விட்டு தூங்கப் படுத்தவன் 8 மணிக்கு  அழைத்த போதுதான் எழுந்தேன். அவருக்கு செய்ய வேண்டிய பணியின் விபரங்களை விளக்கினார். ஓடெஸ்கில் 12 மணி வரை உட்கார்ந்திருந்தேன். அதன் பிறகு தியானம். தொலைபேசி நிலைமையை விளக்கி விட்டுத் தூங்கினேன்.

காலையில் 2 மணிக்கு ஒரு முறை விழிப்பு, மின்சாரம் தடைப்பட்டிருந்தது, 4 மணிக்கு எழுந்து விட்டேன். இதை முடிக்கும் போது 5.25 ஆகியிருக்கும்.

தேங்காய் திருவி துவையல் அரைத்துக் கொள்ள வேண்டும். 6 மணிக்கு கரென்ட் போவதற்கு முன்னால் அதைச் செய்ய வேண்டும். அதன் பிறகு ஓடெஸ்க் ஜாவாஸ்கிரிப்ட் டெஸ்ட் எடுக்க வேண்டும். 7 மணி. அதன் பிறகு குளித்து காலை உணவு. காபி போட்டுக் கொள்ளலாம் ஓடெஸ்க் டெஸ்டுக்கு முன்பாகவே.

12 மணிக்கு கடைக்குப் போய் அரிசி, பயறு வாங்கிக் கொள்ள வேண்டும். சமையல். 1 மணிக்கு சாப்பாடு.

தொலைபேசி காசு பற்றிக் கேட்க வேண்டும். அது உறுதி செய்தால் மட்டும்தான் நாளைக்குப் போக வேண்டும். html, css, javscript, php5 படிக்க வேண்டும்.

சனி, மார்ச் 31, 2012

நிறைக்கும் நடவடிக்கைகள்


மார்ச் 31ம் தேதி, 2012. காலை மணி 3.

இன்று நிதியாண்டின் கடைசி நாள். நாளை முதல் மத்திய மாநில அரசுகளின் அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டம் அமலுக்கு வரும். வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பார்கள். அதற்காக ஏப்ரல் 2ம் தேதி விடுமுறை என்று விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. இன்று வங்கிகளின் வேலை நேரம் அதிகமாக்கப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக அரசாங்க பரிமாற்றங்களை செய்யும் வங்கிகளின் வேலை நேரம் அவற்றை முடிக்கும் வரை நீடிக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறதாம்.

நேற்று காலையில் 1.30க்கு எழுந்து விட்டேன். அறைக்குப் போகாமல் நேராக கல்லூரிக்குப் போய் விடுவதாக எண்ணம் புகுந்து விட்டிருந்தது. எழுந்த பிறகு சேவை வரி கட்டுவதற்கான படிவத்தை நிரப்பினேன். காசோலைகளை தயாரித்தேன். வங்கி கணக்கிலும் கையிருப்பு விபரங்களை பார்த்து புத்தகத்தில் எழுதிக் கொண்டேன். மின்னஞ்சல்கள் படித்துக் கொண்டேன். அதன் பிறகு துணிகளை எடுத்து வைத்து விட்டு குளித்து தயாராக நேரம் 3.30 ஆகியிருந்தது. 20 நிமிட தியானத்துக்குப் பிறகு புறப்பட்டேன்.

கல்லூரிக்கான உடை அணிந்து, காலில் காலணி மாட்டி புறப்பட்டிருந்தேன். துணிகளை மடிக்கணினி பையிலேயே பக்கவாட்டு அறையில் திணித்திருந்தேன். ஒரு சட்டை, ஜட்டி, சாரம், பல் தேய்க்கும் பிரஷ், பேஸ்ட்.

அவ்வளவுதான். இன்னும் கொஞ்சம் அடக்கமான பை ஒன்றை தயாரித்துக் கொண்டால்
- சட்டை, பனியன், ஜட்டி, சாக்ஸ், டவல்
- பேஸ்ட், பிரஸ், முகம் மழிக்கும் சாதனங்கள், சீப்பு
- செருப்பு, தண்ணீர் பாட்டில்
இவ்வளவும் வைக்கும் படி அடக்கமான ஒரு பை தயாரித்துக் கொண்டால் மடிக்கணினி பையோடு அதையும் எடுத்துக் கொண்டு ஊர்கோலம் கிளம்பி விடலாம். குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்து செயல்பட வேண்டியிருக்காது. தங்குவதற்கு இடமும், காலையில் குளித்து தயாராவதற்கு வசதியும் கிடைத்து விட்டால் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். இதை இன்று செயல்படுத்தலாம்.

கோபாலபுரம் வழியாக வந்து பேருந்து நிறுத்தத்தில் சில நிமிடங்களுக்குப் பிறகே பகிர்வூர்தி வந்தது. 4 மணிக்கே 2ம் தட தனியார் பேருந்து ஊட ஆரம்பித்திருந்தது. பேருந்து நிறைய ஆட்களும் இருந்தனர். பகிர்வூர்தியில் வேலூர் பேருந்து நிலையம் போய்ச் சேர்ந்து கொஞ்ச நேரத்தில் அது திரும்பவும் வந்து விட்டது. பகிர்வூர்தியை சிக்னல் அருகில் விடச் சொன்னேன். இன்று பேருந்துகளில் அதிகம் கூட்டம் இருக்காது என்ற நம்பிக்கை. இங்கு காத்திருந்து ஏறி விடலாம்.

இங்கும் கணிசமான நேரம் பிடித்தது. காஞ்சிபுரம், பெங்களூர் பேருந்துகள்  போயின. கடைசியில் பெங்களூருவிலிருந்து சென்னை போகும் அதிசொகுசு பேருந்து வந்தது. பேருந்தின் வெளியில் மாறுதலான வண்ணம் அடித்து, உள்ளே வெள்ளை நிற விளக்குகள் ஒளிர விட்டிருந்தனர். பேருந்தினுள் தளம் உயரமாக அமைக்கப்பட்டிருந்தது. உட்கார இடம் கிடைத்தது. இன்னமும் பல இருக்கைகள் காலியாக இருந்தன. கொஞ்ச நேரம் படிக்க முயற்சி செய்தேன். இந்திய பொருளாதாரம் என்ற நூல்.

சோவியத் புத்தகங்களில் மொழிபெயர்ப்புகளை கவனிக்க வேண்டும். பேராசிரியர் தர்மராஜனின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது. அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் அவரால் எழுதப்பட்டது. அதன் பிறகு புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் இன்னும் பல 'என்றால் என்ன' வரிசைகள் அவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்திய பொருளாதாரம் புத்தகமும் அவரது மொழிபெயர்ப்பு. அவரது மொழிபெயர்ப்பில் மொழி இலக்கணத்துக்கான நேர்மையும் படிப்பவரின் வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது தெளிவாக தெரிகின்றது.

5.30 தாண்டும் போது விழிப்பு வந்தது. அப்போதுதான் btp தாண்டி போனது பேருந்து. இன்று தாமதமாகி விடுமோ என்று நினைத்துக் கொண்டேன். ஆறரை மணிக்கு முன்பாக பூந்தமல்லி வந்து விட்டால், வடபழனி போய் விடலாம் அல்லது கிண்டி போக வேண்டும் என்று திட்டம். கிண்டிதான் போக வேண்டும். 6.30க்கெல்லாம் பூந்தமல்லி வந்து விட்டது. வேகமாகத்தான் ஓட்டுகிறார். இடையில் எங்கோ தேங்கி விட்டார் என்று நினைக்கிறேன்.

எதிர்த் திசைக்குப் போய் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கி விட்டு பேருந்து வரும் திசைக்கு வந்தேன். 54 M வந்தது. கிண்டிக்குப் போக 6 ரூபாய்தான் சீட்டு. 10 ரூபாய் கொடுத்தால் 1 ரூபாய் சில்லறை கேட்டார். பேப்பர் கடையில் அப்போதுதான் கொடுத்திருந்தேன். எல்லோருக்கும் நான்கு நாலு ரூபாயாக கொடுத்து விட்டால் சில்லறை எதுவும் மிஞ்சாது என்று நடத்துனர் அலுத்துக் கொண்டார். 7.20க்கெல்லாம் கிண்டியில் வந்து விட்டேன்.

இறங்கி சுரங்க நடைபாதை அருகில் வந்தால் இன்னும் வந்திருக்கவில்லை. தொலைபேசினால் அவர் இன்று கல்லூரி வரவில்லையாம். விடுமுறை எடுத்திருக்கிறார். அந்த நேரம் வந்து விட்டார். வேறு யாருடைய தொலைபேசி எண்ணையாவது வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். பேசுவதற்கான பொருள் தீர்ந்து போய் அமைதியானோம். 7.35க்கெல்லாம் பேருந்து வந்தது. இருவரும் ஏறிக் கொண்டோம். சைதாப்பேட்டை, மத்ய கைலாஷ், பெருங்குடி என்று வழக்கமான மக்கள் ஏறினர். கொஞ்ச நேரம் கண்ணயரவும் செய்தேன் என்று நினைவு. புத்தகம் வாசிப்பு, ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த பாடல்களை கேட்பது என்று நேரம் போனது. பாடல்கள் இளையராஜா ஹிட்டுகளை ஏதோ ஆர்கெஸ்ட்ரா பாடியதை பதிவு செய்து வைத்திருந்தது போலத் தோன்றின.

கல்லூரியின் இடது புறத்தில் பேருந்தை நிறுத்தினார்கள். இறங்கி உள்ளே வந்து கணினியை இயக்கினால் வழக்கம் போல இணையம் வந்திருக்கவில்லை. சாப்பிட போனோம் - காலை உணவுக்கு பூரிகள். தொட்டுக் கொள்ள பட்டாணி கறி. நன்றாகவே இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் தேநீரும் குடித்துக் கொண்டேன்.

பூஸ்ட் கவர் 5 ரூபாய்க்கு ஒருவர் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். 'டீக்கடையில் இந்த பாக்கெட்டில் பாதியைக் கலந்து பூஸ்டு தயாரித்து தருகிறார்கள். 15 ரூபாய் வாங்கி விடுகிறார்கள்' என்று புகார் சொன்னார் மற்றவர்.

'இதை பாலில் கலந்துதானே விற்கிறார்கள். அரை லிட்டர் பால் 14 ரூபாய், அதை 5 பூஸ்ட் செய்ய பயன்படுத்துவதாக வைத்துக் கொண்டாலும் பால் செலவு ரூ 2.80, அதனுடன் இந்த பூஸ்ட் செலவு ரூ 2.50ஐ சேருங்கள், கூடவே சீனி விலை. மொத்தம் பொருள் செலவு ரூ 5.50 வரை இருக்கலாம். இதற்கு மேல் கடை வாடகை, மின்சார கட்டணம், சம்பள செலவுகள், வரிகள் என்று சேர்த்தால் மொத்த செலவு 10 ரூபாய் இருக்கலாம். 5 ரூபாய் லாபம் இல்லாமல் எப்படி தொழில் நடத்த முடியும்?'

இப்படி சொன்னதும் புரிந்து கொண்டார்கள்.

'ஆமாமா, நான் 1000 ரூபாய்க்கு ஒரு பொருள் செய்தால் அதன் விற்பனை விலை குறைந்தது 3,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பேன்' என்று அவரே சொன்னார்.

9.15க்கு B பிரிவுக்குப் போனேன். எல்லோருக்கும் ஆச்சரியம். இன்று விடுமுறை எடுத்திருப்பதால் அந்த இரண்டு வகுப்புகளையும் நான் எடுக்கப் போவதாக அறிவித்தேன். ஹேக்கிங் பற்றி கேள்வி கேட்பதிலிருந்து வகுப்பு ஆரம்பித்து. அங்கிருந்து இணைய வலையிணைப்பு, இணைய முறைமை பற்றிய விளக்கம், டிஎன்எஸ், டொமைன் பெயர்கள், ஐபி முகவரிகள் என்று விளக்கினேன். தளர்வில்லாமல்தான் போகிறது.

சில சமயம் எனது ஆங்கில பேச்சு சரளமாக வருவதில்லை, ஏதோ பட்லர் ஆங்கிலம் போல வருகிறது. ஆங்கில பேச்சை முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு போகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் உரை தயாரிப்பு என்று 1 மணி நேரம் செலவழிக்க வேண்டும். 1 மணி நேரம் குறிப்புகள் தயாரிப்பது போக 1.30 மணி நேர வகுப்புக்கு குறைந்தது 2 மணி நேர தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்த வகுப்பை ஐபி போக வேண்டும் என்று விடாப்பிடியாக வாங்கிக் கொண்டேன். சீன மொழி தேர்வு விடைத்தாள்களை திருத்த ஆரம்பித்தேன். என்னை ஏமாற்றி விடக் கூடாது என்ற உணர்வோடு இருக்கிறாள். மதிப்பெண் குறைந்து விட்டது என்று தெரிந்ததும் அதிகமாகவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். கொஞ்சம் சிறப்பாக செய்திருந்தார்கள். இருந்தும் மட்டும்தான் அதிக மதிப்பெண்.

முதல் தேர்வு மதிப்பெண்ணுக்கும் இந்த தேர்வு மதிப்பெண்ணுக்கும் சராசரி எடுத்து 20 மதிப்பெண்ணுக்கு மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். மாற்றியதில் 19 மதிப்பெண்கள் கிடைக்கின்றன. 15க்கு குறைவாக எடுத்தவர்களுக்கு மாற்று பணி கொடுக்க வேண்டும். அதை வியாழக்கிழமை முடிவு செய்து கொள்ளலாம். அப்படியே வகுப்பில் பங்கு பெறுவதற்கான மதிப்பெண்களையும் கொடுத்து விட்டேன் இப்போது.

மதிய உணவுக்குப் பிறகு முதல் வகுப்பு மீண்டும் B பிரிவு. ஹேக்கிங் பற்றி பேசுபவரின் வீடியோ ஓட விட்டேன். அந்த ஆள் பேசிக் கொண்டேதான் இருக்கிறான். இடையிடையே குறுக்கிட்டு சில கோட்பாடுகளை விளக்கினேன். கடைசியில் இணைய தளம் ஒன்றை இயக்குவதற்கான வழிமுறைகளை சொன்னேன்.

முடித்த பிறகு அவர்களது வகுப்பு வீடியோ காட்டினார்கள். மிகவும் திறமையாக படைப்பாக்கத்துடன் உருவாக்கப்பட்ட காணொளி. ஒவ்வொரு மாணவருக்கும் பொருத்தமான பட்டப் பெயரை சூட்டி, புகைப்படங்களையும், காணொளிகளையும் ரசனையுடன் இணைத்து செய்திருந்தார்கள். மனமார பாராட்டினேன்.

அதன் பிறகு மறு தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை திருத்த போனேன். உலகளாவிய நிறுவனத்துக்கான தகவல் தொழில் நுட்பம் என்ற பாடத்தில் சிறு குழந்தைகளுக்கு கேட்பது போல கேள்விகள் கேட்டிருந்தார்கள். தலையில் அடித்துக் கொண்டேன். அதையும் ஒழுங்காக எழுதி தேர்ச்சி பெறும் மதிப்பெண் வாங்க முடியவில்லை ஒரு பையனுக்கு. ஏதோ கூடுதல் போட்டு தேத்தி விட்டேன்.

சீன மொழி தாளில் எல்லோரும் தேர்ச்சி பெறும் மதிப்பெண் பெற்று விட்டார்கள். 40க்கும் அதிகமான மதிப்பெண்கள், 42 மதிப்பெண் பெற்றான். வெளியில் வந்ததும் அதை அவனுக்கு தெரிவித்தேன்.

அறைக்கு வந்ததும், எம்ஐஎஸ் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரிபார்க்க நினைத்தேன். நூலகத்துக்குப் போய் பையில் இருந்த குறுந்தகட்டை திரும்பிக் கொடுத்து விட்டேன். அங்கு உட்கார்ந்து திருத்தலாம் என்று நினைத்திருந்தாலும் போகும் போது தாள்களை கையில் எடுத்து போயிருக்கவில்லை. திரும்பி கீழே வந்து 2 மதிப்பெண் கேள்விகளை மட்டும் திருத்தி வைத்தேன். 15 கேள்விகளுக்கு 30 மதிப்பெண்கள். இது போக இரண்டு கேள்விகளுக்கு 5 மதிப்பெண்கள் வீதம். மொத்தம் 40 மதிப்பெண்களுக்கு, பாதி எடுத்தால் தேர்வுக்கான மதிப்பெண் கிடைத்து விடும்.

தேர்வுக்கு வராதவர்கள்  மொத்தம் 5 பேர். முன்கூட்டியே தகவல் சொல்லியிருந்தான். அடுத்த வகுப்பில் ஒரு பிரசன்டேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அதன் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்கலாம்.

4 மணிக்கு வெளியில் வந்து பேருந்தில் ஏறினேன். ஐபி, B பிரிவு மாணவர்கள் வெளியில் அலைந்து கொண்டிருந்தார்கள். பேருந்து 4.20க்குத்தான் புறப்பட்டது. வலது புற இருக்கையிலேயே உட்கார்ந்து கொண்டேன். அடிக்கும் வெயிலிலும் சில நிமிடங்கள்  கண்ணயர்ந்தேன். பின் இருக்கையில் உட்கார்ந்திருந்தார். கிண்டியில் இறங்கி வீட்டுக்குப் போவதாக சொல்லியிருந்தேன். கிண்டியில் ரேஸ் கோர்ஸ் வழியாக பேருந்தை திருப்பி விட்டார்கள். அந்த பக்கம் இறங்கி பகிர்வூர்தியில் ஏறினேன். தகவல் சொல்லி விட்டேன். அவன் வந்து சிக்னலுக்கு முன்னதாகவே காத்திருப்பதாகச் சொன்னான். வழியில் வாகன நெருக்கடிகள் தாண்டி தாமதமாகவே போய்ச் சேர்ந்தது.

பேக்கரியில் சாக்லேட் பேஸ்ட்ரிகள் வாங்கிக் கொண்டேன். போகும் வழியில் பேசிக் கொண்டே போனோம். வீட்டுக்குப் போனதும் பேஸ்ட்ரி, தேநீர், சேவ், தண்ணீர்.

சிறிது நேரத்தில் வந்து விட்டார். உடற்பயிற்சி செய்வதற்கான சீருடை அணிந்திருந்தார். அறைக்குள் போய் குளித்து விட்டு கிளினிக் போகும் உடை மாற்றி வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதற்கு முன்பே கிளினிக்கிற்கு இடம் தேடுவது குறித்த பேசிக் கொண்டிருந்தேன். அவரது பணிச்சுமை, தினசரி நேர நெருக்கடி என்று பேசினேன். மருத்துவராக பணி செய்வது மற்ற எதனுடனும் ஒப்பிட முடியாததுதான். பணி என்பது சுமையாக இருக்க வேண்டியதில்லை. 24 மணி நேரமும் ஓடிக் கொண்டே இருந்தாலும் மனம் சோர்வடையவோ தளர்ந்து விடவோ செய்யாது. மற்ற துறைகளில் இதே அளவு வேலை செய்தால் சீக்கிரம் உடலும் மனமும் சோர்ந்து போய் விடும்.

பொறியாளர்களை பற்றி பேசினோம். டாடா பற்றி பேச்சு ஆரம்பித்து லைசன்ஸ் கோட்டா அமைப்பு பற்றி விமர்சிக்க, அதன் பின்னணியில் இருந்த பொருளாதார அடிப்படையை நான் எடுத்து வைத்தேன். ஆண்டுக்கு இத்தனை கார்கள்தான் உற்பத்தி செய்ய வேண்டும், இத்தனை தொலைபேசிகள்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தடுக்கும் போதுதான் சமூகத்தின் வளங்கள் தேவையான வீடுகள், சாலைகள், பாலங்கள் என்று போய்ச் சேரும். சந்தை போட்டி அடிப்படையில் தீர்மானிக்கப்படும் பொருட்கள்  மக்களுக்கு தேவையில்லாதவையாகவும், சுற்றுச் சூழலிலும் பொருளாதாரத்திலும் பெரும் சுமையை சுமத்துபவையாகவும் இருக்கலாம். உதாரணமாக, இந்தியாவில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை முறையான கழிவறை வசதி உள்ளவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இதுதான் சந்தை பொருளாதாரத்தின் சாதனை.

இதை எதிர்த்து உடனேயே சொல்லத் தெரியா விட்டாலும் மனதுக்குள் பெருமளவு உறுத்தியிருக்க வேண்டும். முன்னாள் கம்யூனிஸ்டான அவனது அப்பாவும் ஆர்வமாக இதை ஏற்றுக் கொண்டு என் பக்கம் வாதிட ஆரம்பித்தார். 8.15 தாண்டிய பிறகு சாப்பிட போனோம். முதலில் நாங்கள் ஆரம்பிக்க அதன் பிறகு குழந்தைகள் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

ரொட்டி, ராஜ்மா, சீனிஅவரைக்காய் பொரியல் சாப்பிட்டுக் கொண்டேன். அதன் பிறகு சோறு. கடைசியில் ஒரு ரவாலாடு. சாப்பிட்டு முடிக்கும் போது 9 மணி. காரிலேயே கொண்டு குன்றத்தூர் சாலையில் விட்டு விட்டான். நான் தியானம் பற்றி சொல்ல வந்ததை விமர்சன புள்ளியாக பிடித்துக் கொண்டான்.

குன்றத்தூர் சாலையில் இறங்கி பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். போரூர் வரை 7 ரூபாய். மாலை வீட்டுக்குப் போய் விட்டு இப்போது திரும்ப ஓட்ட வருகிறாராம். கொஞ்ச நேரம் ஓட்டுவாராம். ஆட்டோ நிறுத்தத்தில் இறங்கி புறப்படத் தயாராக இருந்த வண்டியில் ஏறிக் கொண்டேன். ஒரு பெண் தொலைபேசியில் தனது காதலனுடன் சச்சரவு செய்து கொண்டே வந்தார். மற்றவர்கள் கேட்கிறார்களே என்று தயக்கமே இல்லை. ஏதோ பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறார் என்று தோன்றியது.

இரண்டு பேரும் இன்று வெளியில் போவதாக திட்டம். இவள் பகலில் மூன்று முறை தொலைபேசி அவன் 'உண்மையிலேயே வெளியில் போக விரும்புகிறானா' என்று கேட்டிருக்கிறாள். 'என்னை சோதிக்கிறாயா?' என்று அவனுக்கு கடுப்பு, திட்டித் தீர்த்திருக்கிறான். 'என் மீது எப்போதுமே எரிந்துதான் விழுகிறாய்' என்று இவளுக்கு கோபம், 'நாளைக்கு வேலை அதிகம் வர முடியாது' என்கிறாள். ஆனால் இவளுக்கு வெளியில் போக வேண்டும் என்று ஆர்வமும் ஆசையும் இருக்கிறது, அவனை தன் மீதான முழு அக்கறையுடன் வர வைப்பதற்கான நாட்டியம் நடந்து கொண்டிருந்தது.

பின் இருக்கையில் நான்கு பேர் பக்கவாட்டு பலகையில் ஒருவர். நான் கடைசியாக ஏறியவன். இந்த பெண்ணின் அருகில் விளிம்பில் ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். வேறு யாரும் நெருக்கிக் கொண்டு எனக்கு இடம் தரத் தயாராக இல்லை. அந்தப் பெண் வளசரவாக்கத்தில் இறங்கி விட அடுத்து கேசவர்த்தினி வருவதற்குள் ஏறவும் இறங்கவும் நான்கு இடங்களில் நிறுத்தினார். ஒரு இளைஞன் ஒரு பெண்ணை ஏற்றி விட்டான். அவள் ஏறியதும் தொலைபேசியில் பேச ஆரம்பித்து விட்டாள். ஓட்டுனர் சலித்துக் கொண்டார்.

சரியாக அறைக்குப் போகும் சாலைக்கு அருகில் இறங்கிக் கொண்டேன். நடந்து போகும் போது தொலைபேசினால் எடுக்கவில்லை. சாலை முனையில் இருப்பதாக அப்புறம் தொலைபேசி சொன்னார். அறைக்கு வந்து அறையை ஒதுங்க வைத்து, தூத்து, தூசி அள்ளி வெளியில் போட்டேன். அதன் பிறகு தியானம். தியானத்தில் வேர்வை அனைத்தும் வெளியேறியது. அதன் பிறகு தூங்கி விட்டேன்.

காலையில் 1.30க்கு விழிப்பு வந்து விட, எழுந்தது 2.30க்கு. இப்போது மணி 3.50. முடிக்கும் போது 4 மணி என்று வைத்துக் கொள்வோம்.

4 முதல் 5 மணி வரை - எழுத்து
5 மணி முதல் 6 மணி வரை - வாசிப்பு
6 மணி முதல் 6.30 மணி வரை - கட்டுரை சரி பார்த்தல்
6.30 மணி முதல் 7.00 மணி வரை - உலாவல், நாளிதழ் வாங்குதல்
7.00 மணி முதல் 8.00 மணி வரை - புத்தகங்களை கட்டி வைத்தல்
8.00 மணி முதல் 9.00 மணி வரை - குளியல், தியானம், காலை உணவு.
9.00 மணிக்கு வடபழனி
10.30 மணிக்கு வடபழனியிலிருந்து போரூர், போரூரிலிருந்து நந்தம்பாக்கம்.
11 மணி முதல் 12 மணி வரை வங்கியில் சேவை வரி செலுத்துதல்

ஞாயிறு, ஜனவரி 15, 2012

சென்னை மக்கள்


வெள்ளிக் கிழமை காலையில் வழக்கமான காலைக்கடன்கள், 8.30 மணிக்கு இட்லிக் கடையில் காலை உணவு முடித்த பிறகு வாசிப்பு, கணினி, இணையம் என்று நேரம் போன பிறகு 11.30க்குப் புறப்பட்டேன். தொலைபேசி, இப்போதுதான் புறப்படுகிறேன் என்று தகவல் சொன்னேன். அவரும் அப்போதுதான் புறப்படுகிறார். வடபழனி கோயில் வரை சீட்டு, ஆற்காடு சாலை படு மோசமாக ஆகி விட்டிருக்கிறது. பேருந்து ஓட்டுபவர்கள் நிச்சயம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

570 அல்லது 70 வசதியாக கிடைக்காமல், கிண்டி வரை போகும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். கிண்டியில் இறங்கி M49 திருவான்மியூர் பேருந்தில் ஏறிக் கொண்டு தொலைபேசினேன். அவர் சேர்ந்து விட்டாராம், சாப்பிடுவதற்கு சங்கீதா போய் விடலாம் என்று சொன்னார். நான் மத்ய கைலாஷ் என்றுதான் சீட்டு எடுத்திருந்தேன். பேருந்து நிறுத்தமே அங்குதான் போலிருக்கிறது. நடத்துனரிடம் போய் மத்திய கைலாஷ் சீட்டு எடுத்திருக்கிறேன், அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாமா, சீட்டு தனியாக வாங்க வேண்டுமா என்று கேட்டால், தேவையில்லை என்று சொல்லி விட்டார்.

நான் அப்படியே புத்தகக் கண்காட்சி போக வேண்டும். ஆட்டோவில் கேட்டோம். கழுத்தில் பட்டி அணிந்திருந்தார் ஆட்டோ ஓட்டுனர். 60 ரூபாய் கேட்டு 50 ரூபாய் ஒத்துக் கொண்டார். முதுகில் வலி வந்ததாம் என்ன காரணம் என்றே தெரியவில்லை நியூரோ சர்ஜனிடம் போய் மாத்திரை சாப்பிடுகிறார். மாத்திரை ஒரு பட்டி 315 ரூபாய் ஆகிறது. டாக்டருக்கு பீஸ் 800 ரூபாய், இந்த டாக்டர் நல்லவர் 200 ரூபாய்தான் வாங்குகிறார், குமரேசன் என்று பெயர். 20000 ரூபாய் செலவாகி விட்டது. 2 மாசமா ஆட்டோவே எடுக்காமல் வீட்டில் இருந்தார். அப்படியே உட்கார்ந்திருக்க முடியாது என்று வந்து ஓட்டுகிறார். தலையைத் திருப்ப முடியாது. முதுகில் குடைச்சல் போன்ற வலி மட்டும் குறைந்திருக்கிறது.

நான் 47க்குக் காத்திருந்தேன். 47A அல்லது A47ல் ஏறியிருக்க வேண்டும். வெறும் 47ல் ஏறினேன். ஏறிய பிறகு பார்த்தால் 100 ரூபாய் நோட்டுகள்தான் இருந்தன. நடத்துனரிடம் நோட்டை நீட்டியதும் முறைத்துப் பார்த்தார், பச்சையப்பா கல்லூரி என்று சொன்னதும், போகாது  இறங்கிக்கோ என்று ஐஐடி அருகில் இறக்கி விட்டார்.

அங்கிருந்து நடந்து அண்ணா பல்கலை நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தேன். வழியில் கேன்சர் மருத்துவமனை வாசலில் கழுத்தில் பட்டை போட்ட அதே ஆட்டோ ஓட்டுனர் நின்று இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

பேருந்துகள் கூட்டமாகவே போயின. கோயம்பேடு போய் அங்கிருந்து 15B பிடிக்கலாம் என்று உத்தேசம். கோயம்பேடு போவதற்கு 570 அல்லது வெளியூர் பேருந்துகள் வர வேண்டும். கிண்டி, தாம்பரம், வில்லிவாக்கம் பேருந்துகள் வரிசையாக போயின. வந்து நின்ற பாண்டிச்சேரி வண்டி விரைவுப் பேருந்தில் ஏறினேன். 20 ரூபாய் சீட்டு. கூட ஏறினவர்கள் எல்லோரும் 10 ரூபாய் நோட்டுகள், 20 ரூபாய் நோட்டுகள் என்று கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு முன் இருக்கையில் உட்கார்ந்த பெண் 100 ரூபாய் நோட்டு நீட்டினார். சில்லறை வேண்டும் என்று நடத்துனர் சொன்ன பிறகு தேடி எடுத்து சில்லறை காசுகளைக் கொடுத்தார். என்னிடம் சில்லறை சுத்தமாகவே இல்லை. 80 ரூபாய் திரும்பிக் கொடுத்து விட்டார்.

ஜவஹர்லால் சாலை குறுகலாக பேருந்துகள் போவதற்கு சித்திரவதையாகத்தான் இருக்கிறது. ஒரு வழியாக முக்கி முனகிக் கொண்டு சேர்த்தார். நகர ஆரம்பித்திருந்த 15Bல் ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். புத்தகக் கண்காட்சி போய் விட்டு வெளியில் வந்து பேருந்துக்கு. 15B கொஞ்ச நேரம் கழித்து கூட்டமாக வந்தது. 27ம் எண்ணில் ஏறினேன். நின்று கொண்டேதான் போக வேண்டியிருந்தது. எல்லா பேருந்துகளிலும் பொங்கலுக்கு ஊருக்குப் போகும் பைகளுடன் மக்கள் கூட்டம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி 570 குளிர்சாதன பேருந்தில் ஏறிக் கொண்டேன். இன்னொரு முறை இணையம் பார்க்க முடிந்தது இந்த பேருந்துக்குள். நல்ல சாலை நெருக்கடி. கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி விட்டது.

காசி தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வந்து சேர்ந்தேன். வாசலிலேயே வண்டியில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

விஷ்ணுபுரம் நாவல் படிக்கிறாராம். அது வெளி வந்த காலத்தில் பெருத்த அலையை உருவாக்கியதாம். பலருக்குப் புரியவில்லையாம், பலர் அதை இந்துத்துவ பிரச்சார நாவல் என்று  விமர்சனம் செய்தார்களாம். இன்னொரு நண்பர் இரண்டு நாட்கள் முன்புதான் அதைப்பற்றிச் சொல்லியிருந்தார். விவாதத்தின் மூலம் ஒரு அரசு அதிகாரத்தை தீர்மானிக்கும் முறை, அதன் வழியாக இந்து ஞான மரபுகளை விளக்கும் நாவல். வாங்கிப் படிக்க வேண்டியதில்லை என்று சொல்லியிருந்தார்.

ஜெயமோகனை நேரில் பார்த்து பழகியிருக்கிறாராம். அவரது மனைவி அருண்மொழி தபால்நிலையத்தில் வேலை செய்பவரையும் தெரியுமாம். ஒரே இரவில் 250 புல்ஸ்கேப் தாள் எழுதிக் குவித்து விடுவாராம் ஜெயமோகன். தூங்காமல் எழுதுவாராம்.

'அவரது அப்பா, கம்யூனிச தொழிற்சங்கத்தில் இருந்தவர். அவரது அம்மா வாசிப்பு மிகுந்தவர், இலக்கிய விவாதங்கள் நிறைந்த வீட்டுச் சூழல். சுந்தரராமசாமியைப் பார்த்து அவர் மனதில் தோன்றுவதை எழுத்தில் வடித்து விடும்படி அறிவுரை சொல்ல அப்படித்தான் எழுத்தில் இறங்கினாராம்.'

சாப்பிட்டு விட்டு ஆட்டோ பிடித்தேன். 'நீங்களே சொல்லுங்கள்' என்றார் ஆட்டோ காரர். ஏதோ கம்பெனியில் வேலை செய்கிறாராம். காலையிலும் மாலையிலும் ஆட்டோ ஓட்டுவாராம். 40 ரூபாய் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் வாங்கினாராம். வங்கியில் வேலை செய்தவர்கள் தெரிந்தவர்களாம், 10000 ரூபாய் இவர் போட வேண்டும், மீதி லோன், அரசு மானியமும் உண்டு.

வாடகைக்கு பகலில் ஓட்ட விட்டால் காசும் வராது, செலவும் அதிகம். அதனால் இவரே காலையிலும் மாலையிலும் ஓட்டுகிறார். இப்படி ஏதாவது சம்பாதிச்சால்தான் உண்டு என்றார். வண்டியை எடுத்துக் கொண்டு போய் சவாரியே கிடைக்கவில்லை. அதுதான் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பி வருகிறேன். வீடு ராமாபுரம்தான். டாஸ்மாக் கடை அருகில் இறக்கி விட்டு விட்டுப் போனார்.

காலையில் 3 மணியிலிருந்தே கொட்டு அடித்துக் கொண்டு போகி பண்டிகை ஆரம்பித்து விட்டது. சத்தத்தில் சரியாக தூங்க முடியவில்லை.

உரக்க ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அந்த அம்மாவின் மகன் போலிருந்தது. 'நான் சொல்வதைக் கேளு அப்பதான் நீ நல்லா இருக்க முடியும். நீ சாகப் போகும் போது நான்தான் முதலில் வருவேன் அவங்க எல்லாம் அப்புறம்தான் வருவாங்க' என்று அலட்டிக் கொண்டிருந்தார். 'இப்படி எல்லாம் நடந்து கொள்வதால்தான் நான் நல்லா இருக்கேன்' என்று சொன்னார். பல் தேய்க்கப் போகும் போது எட்டிப் பார்த்தால் நல்ல பளபள சட்டை போட்டு உட்கார்ந்திருந்தார்.

பல் தேய்த்து விட்டு அறைக்கு வந்த பிறகு சிறிது நேரத்தில் கீழே இருந்து குரல். 'ஒரு 20 ரூபாய் இருந்தா கொடும்மா' என்று அம்மாவிடம் கடன் கேட்கிறார். 'பெட்ரோல் போடணும், 500 ரூபாயாத்தான் இருக்கு' 'என்னிடமும் 500 ரூபாயாத்தான் இருக்கு, சில்லறையா 7 ரூபாய்தான் இருக்கும்' என்கிறார் இவர். 'எதுக்கு 20 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறாய், 500 ரூபாயை மாத்தி போட்டுக்கோ' என்று அனுப்பி விடுகிறார். சினிமாவில் டிரைவராக இருக்கிறாராம் இவர்.

மாலையில் புத்தகக் கண்காட்சியிலிருந்து திரும்பும் போது கோயம்பேடு பாலத்தில் நெருக்கடி அதிகமாக இருக்கவே, இடது புறம் எடுத்து அரும்பாக்கம் திசையில் பாலத்தில் ஏறினார்கள். நான் இறங்கி நடந்து கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி ஆட்டோ பிடித்தேன். 80ல் ஆரம்பித்து 130ல் முடித்தார். அவர் பேசும்போதே சாராய நெடி அடித்தது.

'பார்த்து ஓட்டுங்க'
'பொங்கலுக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க வேண்டும் அதுக்குத்தான் ராத்திரி ஓட்டுகிறேன் எப்போதும் குடிப்பதில்லை, இது ஒரு நண்பன் வாங்கிக் கொடுத்தது'

டாஸ்மாக்கில் விற்பனையாளராக வேலை செய்கிறாராம். பணி நிரந்தரம் செய்வதாக வாக்களித்தார் ஜெயலலிதா செய்யவில்லை. 3000 ரூபாய் சம்பளம், விற்பனைக்கேற்ப இன்சென்டிவ். இன்சென்டிவ் கிடைக்கும் என்று இருந்திருக்கிறார். கிடைக்கவில்லை, வீட்டுக்குப் போனால் மனைவி குழந்தைகளுக்குத் துணி எடுக்க காசு கேட்கிறார். பக்கத்து வீட்டுக் காரரிடம் ஆட்டோ வாங்கி கேஸ் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார். இது வரை 240 ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.

'காலையில் 10 மணி முதல் இரவு 10 மணி வரை டுயூட்டி. இரண்டிரண்டு பேராக 2 ஷிப்டு, கணக்கு ஒப்படைக்க குழப்பம் வரும் என்று ஒரே குழு நாள் முழுவதும் பார்த்து விட்டு அடுத்த நாள் ஆப் எடுத்துக் கொள்வார்கள்' என்றார்.

'குடிக்க வருபவர்களைப் பற்றி பரிதாப்படுவதில்லை. விற்பதற்குத்தான் எனக்குச் சம்பளம், நிறைய விற்றால் இன்சென்டிவ். அவனைப் பேசித் திருத்துவது என் வேலை இல்லை' என்று தெளிவாகப் பேசினார்.

வீட்டருகில் இறங்கிய பிறகு பார்த்தால் என்னிடம் 115 ரூபாய்தான் சில்லறை, அவரிடம் 40 ரூபாய்தான் சில்லறை. 15 ரூபாய் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் மனமில்லை. நல்ல வேளையாக மளிகைக்கடைக்காரர் திறந்திருந்தார். 100 ரூபாய்க்கு மாற்றிக் கொண்டேன். இரண்டு 50 கேட்டும் 50ம் 10களுமாக கொடுத்தார்.

பணத்தைக் கொடுத்து விட்டு நடக்கும் போது கோலம் போடும் சிறு பெண், எதிரில் இருக்கும் பழைய பேப்பர் கடை பையனிடம், 'நாளைக்கு தமிழ்ப் புத்தாண்டா' என்று சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இன்னொருவரிடம் கேட்டு ஆமாம் என்று சொன்னார்.

சனி, ஜனவரி 07, 2012

திசைகளை நோக்கி


நேற்றுக் காலையில் எழுதி முடித்தவுடன் அறையை ஒதுங்க வைத்து விட்டுக் குளிக்கப் புறப்பட்டேன். துணிகளை எல்லாம் உள் அறைக்குள் கொண்டு போய் விட்டு, புத்தகங்கள் அடுக்கிக் கொண்டு வந்திருந்த அட்டைப் பெட்டிகளை பொருட்களை வைக்கும் மேல் பரணில் போட்டேன். இருக்கும் இடத்தில் இருக்கும் பொருட்களை சீர்படுத்தி வைப்பதில் ஒரு இடத்தைப் பெரியதாகவோ சின்னதாகவோ ஆக்கி விட முடியும். எல்லாவற்றையும் குவித்துக் குழப்பமாகப் போட்டால் பெரிய இடம் கூட மூச்சு முட்டுமளவுக்கு நெருக்கடியாகத் தோன்றும். அதனதன் இடத்தில் அதனதனை வைத்தால் சின்ன அறையைக் கூட வசதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதன் பிறகு உலாவப் போனேன். கீழே வீட்டுக் கார அம்மாவும், மேல் வீட்டில் இருக்கும் அம்மாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாளிதழ் கடை வரை போய்த் திரும்ப வேண்டும். கடையில் என்னைப் பார்த்ததுமே நாளிதழை எடுத்துக் கொடுத்து விட்டார். 5 ரூபாய் நாணயத்துக்கு 2 ரூபாய் போக மீதி 3 ரூபாயும். திரும்பி வரும் போதும் கீழேதான் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு வணக்கம் வைத்தேன்.

தூங்கிக் கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்து விடாமல் வெளியில் போய் உள்ளே வந்து நடமாடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பழக்கமாகி விட்டதால் எந்தத் தயக்கமும் இல்லாமல் கீழே குளியலறையில் போய்க் குளித்து விட்டு வந்தேன். உடை மாற்றிக் கொண்டு உட்கார்ந்து இணையத்தில் பின்னூட்டத்தைப் போட்டு விட்டு கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு 8 மணிக்குப் புறப்பட்டேன்.

சாப்பிடுவதற்கு இட்லி அம்மா கடைக்கே போய் விட்டேன். வழக்கமான உணவு, வழக்கமான சக வாடிக்கையாளர்கள். அண்ணன், தம்பி, தங்கை மூன்று பேரும் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். தினமும் வருவார்களா, அல்லது வெள்ளிக்கிழமை மட்டுமா என்று தெரியவில்லை. தங்கைக்கு இரண்டு இட்லிகள், தக்காளி சட்டினி மட்டும். ஒன்றை சாப்பிட்ட பிறகு இன்னொன்றுக்கு தேங்காய் சட்டினி என்று வளைந்து நெளிந்து கொண்டே கேட்டு வாங்கிக் கொண்டாள். எந்த குளறுபடியும் இல்லாமல் சமத்தாக சாப்பிட்டு எழுந்து விடுகிறாள். காசு கொடுத்த மூத்த அண்ணன் மீதிக் காசு 2 ரூபாயை தம்பியிடம் கொடுத்து விடச் சொன்னான். கொஞ்ச நேரத்தில் சில்லறை வந்ததும் இவள் கேட்டு வாங்கிக் கொண்டாள். 'நீ போடா' என்று கடைக்கார அம்மா துரத்த, தங்கச்சிக்கு ஒரு சின்ன அடி கொடுத்து விட்டு ஓடினான். 'இது வீட்டில கொண்டு கொடுக்கும், அவன்னா பாக்கெட்டில போட்டுக்குவான்' என்று விளக்கம்.

எதிர்ப்புறம் சாலையைக் கடந்து வந்த பகிர்வூர்தியில் ஏறினேன். நல்ல மெரூன் நிறத்தில் இருக்கைகள் போட்டு, திரைச்சீலைகள் தொங்க விட்டு, பாட்டு போட்டு வைத்திருந்த டீலக்ஸ் டாடா மேஜிக் வண்டி. இது போன்று கவனமாக சீரமைக்கப்பட்ட ஒரு வண்டி எவ்வளவு புத்துணர்வைத் தந்து விடுகிறது. சாலை முனை தாண்டுவதற்குள் பின் இருக்கைக்  நிரம்பி விட்டன. இரண்டு பள்ளிச் சிறுமிகள் ஏறினார்கள். கொஞ்ச தூரத்தில் இன்னும் 3 சிறுமிகள். இரண்டு பேர் பின்பக்க இருக்கைகளில் உட்கார்ந்து கொள்ள ஒருத்தி முன் பக்கம் நெருக்கத்தில் சேர்ந்து கொண்டாள். ஆட்கள் ஏறி இறங்கி நான் அசோக்  பில்லர் அருகில் இறங்கினேன். 7 ரூபாய்தான் வாங்கினார். பேருந்தில் இதை விட அதிகம் ஆகும்.

சாலையைக் கடந்து பல்லாவரம் போகும் பேருந்துகள் நிற்கும் இடம். நிறையக் கூட்டம், பேருந்துகள் எதுவும் வரும் அறிகுறி தெரியவில்லை. நேரம் 8.40 ஆகி விட்டிருந்தது. இங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து பல்லாவரத்தில் இறங்கி, பாண்ட்ஸ் வரை இன்னொரு பேருந்து, ஆட்டோ அல்லது பல்லாவரத்திலிருந்து ஆட்டோ. நெருக்கடியாக இருக்கிறது என்று ஏசி வோல்வோவில் ஏறினால் 50 ரூபாய் வரை கட்டணம் இருக்கலாம். ஆட்டோவுக்கு 70 ரூபாய் - 100 ரூபாய் ஆகி விடும். இங்கிருந்தே ஆட்டோவில் போனால் என்ன, உட்கார்ந்து கொண்டு போய் விடலாம், நேரத்துக்கும் போய் விடலாம். ஆட்டோக் காரர் ஒருவரை நெருங்கிக் கேட்டால் 200 ரூபாய் சொன்னார்.

சில நொடிகள் தயங்கி, முகத்தில் பேரம் பேசும் சுளிப்பைக் காட்ட, அவரே கட்டணத்தை நியாயப்படுத்தினார். ஏறிக் கொண்டேன். நூறடி சாலையில் கத்திப்பாரா வரையில் நெருக்கடிதான்.

ஆட்டோக் காரர் வாயில் ஏதோ புகையிலை அல்லது பான் போட்டுக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்கு ஒரு முறை துப்பிக் கொண்டே இருந்தார். வழியில் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்டேட் வங்கியாக இருந்தால் நல்லது. கடைசியில் நங்கநல்லூர் பெட்ரோல் நிலையத்தினுள் இருந்த எச்டிஎப்சிக்கு அருகில் நிறுத்தினார். நான் பணம் எடுக்கப் போய் விட்டு வந்தால் ஆட்டோவைக் காணவில்லை. அவர் உள்ளே போய் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். சரியாக 9.30க்கு பாண்ட்ஸ் அருகில் வந்து விட்டோம். ரொம்ப தூரமா என்று கேட்டுக் கொண்டே திருநீர்மலை சாலையில் விட்டார். சந்துக்குள் போகாமல் ரோட்டிலேயே இறங்கிக் கொண்டேன். 'கொஞ்சம் போட்டுக் கொடுங்க சார், குறைவாத்தான் கேட்டிருக்கேன்' என்றார். 'நான் 150 ரூபாய்தான் நினைத்தேன், 200க்கு பேரம் பேசவில்லை' என்று சொல்லிக் கொண்டே 20 ரூபாய் அதிகம் கொடுத்தேன்.

அலுவலகத்தில் வந்து விட்டிருந்தார்கள். முதல் வேலையாக புதிதாக இயங்கு தளம் மாற்றிய கணினியில் மென்பொருளை இணைத்துக் காட்டினேன். தொடர்ந்து விலை மாற்றும் போது ஹைட், சைட் மாறி விடுவதைச் சரி செய்தேன். அதில் ஏற்பட்ட சிறு வழுவையும் சரி செய்து கொடுத்தேன். அடுத்ததாக பேக்கிங் லிஸ்டில் 10ன் மடங்குகளான எண்ணிக்கையில் வரும் போது மொத்தக் கூட்டல் தனிப்பக்கத்துக்குப் போய் விடுவதைச் சரி செய்தேன். போன முறை முயன்று வெகு நேரம் கழித்து விட்டு விட்டேன். கடைசி வரிக்கு வரும் போது புதுப் பக்கம் போக வேண்டுமா என்று செயலியை அழைப்பதற்கு முன்பு மொத்த இனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு வரி எழுதியதும் சரியாகி விட்டது.

அடுத்ததாக விற்பனை அறிக்கையில் வரி+செலவுகளையும் சேர்த்து மொத்த மதிப்பையும் காட்ட வேண்டும் என்ற தேவை. முதலில் மடிக்கணினியில் செய்து சரி பார்த்து விட்டு அதன் பிறகு சர்வரில் இயக்கினேன். அவர்கள் கேட்டது போல செய்து கொடுத்து விட்டேன்.

ஆவணப்படத்தை தகவிறக்கித் தரும்படி கேட்டதைச் செய்து விட்டார். இப்போது முதல் ஆண்டு இலவச பராமரிப்புக் கட்டம். இதையாவது கட்டணமாக வாங்கிக் கொள்ளலாம். 220 ரூபாய் ஆட்டோக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். புறப்படும் முன்பு அதையும் கொடுத்து விட்டார். அவர்களுக்கு அன்லிமிடெட் இணைய இணைப்பு ஆனதால் கூடுதல் செலவு கிடையாதுதான். போகும் போது அவர்கள் ஊழியர் ஒருவரை பல்லாவரத்தில் கொண்டு விடச் சொல்லி விட்டார் பங்குதாரர்.

கடந்த 2 மாதங்களாக வியாபாரம் மிகவும் குறைவாக இருக்கிறதாம். அதனால் அவர் தினமும் வருவதில்லையாம். பல்லாவரம் பகுதி முழுமையுமே அப்படித்தான் இருக்கிறது என்றார்கள். பல்லாவரத்திலிருந்து போவதற்கு ஒரு பேருந்து தடம் இருக்கிறதாம். ஆனால் எந்த நேரம் என்று தெரியவில்லை.

பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இறங்கி கிண்டி வண்டியில் ஏறிக் கொண்டேன். விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த திநகர் போகும் பேருந்து. கிண்டியில் இறங்கும் போது 12 மணிதான்.ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முதல் இரண்டு கடைகளில் பார்த்தால், பிரியாணி, புரோட்டாதான். அடுத்து ஒரு சின்னக் கடையில் எலுமிச்சை சாதம். 15 ரூபாய். 100 ரூபாய்க்கு சில்லறை கொடுத்து விட்டார். நான் உட்கார்ந்த மேசையில் மூன்று பெண்கள் உட்கார்ந்தார்கள்.ஒரு பெண் கைக்குழந்தையுடன். ஒரு லெமன், ஒரு தக்காளி, ஒரு சாம்பார் என்று ஆளுக்கு ஒரு வகை. வாங்கி வந்த பெண் ஒரு வடையும் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து பாதி வடையை எடுத்துக் கொண்டார் கைக்குழந்தை பெண்.

குழந்தை தவளும் வயதுதான். மேசையில் உட்கார்த்தி வைத்ததும் இரண்டு பேரிடமும் மாறி மாறிப் போய் வாயில் சோறு வாங்கிக் கொண்டான். சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்த பெண்ணுக்கு தொலைபேசி வந்தது, அவரிடமிருந்து வாங்கி, 'நீங்க யாரு, தெரியலையே, நான் இன்னார்' என்று எதிர்முனைக் காரரை கலாய்த்தார் குழந்தையின் அம்மா. தொடர்ந்து நீங்க கேட்பவரின் 'உங்க அக்காவின் பிரெண்டு நான், உங்ககிட்ட பேச மாட்டாங்களாம்' என்று இன்னும் ஒரு அடி அடித்து விட்டுக் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு உரியவரிடம் பேசக் கொடுத்தார். 'நான் அப்படி எல்லாம் சொல்லவேயில்லையே, கடைக்குப் போயிருந்தேன்' என்று அவர் புராணத்தைத் தொடர நான் எழுந்து அடுத்த வேலையைப் பார்க்கப் போனேன்.

தபால் நிலையத்துக்குப் போய் கனிம வள நிறுவனத்துக்கான மனுவை அனுப்ப வேண்டும். 2 நாட்களாக பையில் இருக்கிறது. இதைத் தவற விட்டால் எங்கு தபால் நிலையம் தேடுவது! இரண்டு கவுண்டர்கள், இரண்டின் முன்பும் தலா 3-4 பேர். அப்பால் இருக்கும் 3 கவுண்டர்களில் மற்ற திட்டங்களுக்கான சேவை போலிருக்கிறது. ஆற அமர, தொலைபேசியில் பேசிய படி, தங்களுக்குள் பேசியபடி கணினியில் தகவல் உள்ளிட்டு தபால்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள், இரண்டு நடுத்தர வயது பெண்மணிகளும். எனது முறை வந்து கவரைக் கொடுத்ததும், உள்ளிருந்து இன்னொரு பெண் வந்து இரண்டு பேருக்கும் 121 ரூபாய் கொடுத்தார். ஏதோ ஊக்கத் தொகையாம். கொடுத்ததற்கு ஒப்புதல் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். அவர் இவர்களுக்கு பல ஆண்டுகள் ஜூனியர், நின்று இவர்களின் விசாரிப்புகளுக்குப் பதில் சொல்லி விட்டு நகர்ந்தார். மிகவும் அமைதியான பதட்டமில்லாத முகம், அக்கவுண்ட்சில் இருப்பவர்களின் நிதானம் தெரிந்தது.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகி விட்டது. வெளியில் வந்தால் குளிர்சாதன பேருந்து போனது. அதைத் துரத்திப் பிடிக்காமல் காத்திருந்தால்  பேருந்து வர அதில் உட்காரவும் இருக்கை கிடைத்தது. 12.45க்குப் போய் இறக்கி விட்டார்கள். அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீயும், இனிப்பான ஒரு டீக்கடை பண்டத்தையும் (பெயர் தெரியவில்லை) சாப்பிட்டுக் கொண்டேன். 10 ரூபாய் கொடுத்தால் 1 ரூபாய் திரும்பக் கொடுத்து விட்டார். டீ அநியாயத்துக்கு இனிப்பாக இருந்தது.

இப்போதுதான்  வந்து கொண்டிருப்பதாகவும்,  அருகில் இறங்கி ஆட்டோ பிடித்து வந்து விடுவதாகவும் அரை மணி நேரம் தாமதமாகி விடும் என்றும் சொன்னார்.

காத்திருந்து அவரும் வந்த பிறகு போகலாம் என்று முடிவு செய்தோம். அவர் சாப்பிட்டிருக்கவில்லை. கொஞ்ச தூரத்திலிருந்து கடைக்குப் போனோம். அவர் சாப்பாடு, எனக்கு பரோட்டா. அவர்களுக்கு அலுவலகத்தில் மதிய உணவு வருமாம். எங்கோ மவுண்ட்ரோடிலிருக்கும் செந்தூர் விடுதியிலிருந்து. இன்று டிராபிக் சிக்கலால் தாமதமாக வருகிறதாம். ஏன் அவ்வளவு தூரத்திலிருந்து சாப்பாடு வருகிறது என்று புரியவில்லை.

சாப்பிட்டு முடித்துத் திரும்பி வந்து  தொலைபேசினால், வந்து விட்டேன், ஆட்டோ பிடித்து விட்டேன், வந்து விடுகிறேன் என்றார். ஆனாலும் இன்னும் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் அவருடன் ஆட்டோ கண்ணில் பட்டது. சாலை ஓரமாக நின்றிருந்தோம்.

நேரம் 2.45 ஆகி விட்டிருந்தது. புறப்பட்டு விட்டோம்.  நெடுஞ்சாலைக்கு வந்து பேருந்து நிழற்குடை அருகில் நின்றால் எந்த பேருந்தும் நிற்கவில்லை. காலியாக வந்த ஆட்டோவை விட்டு விடக் கேட்டால் 30 ரூபாய் சொன்னார். மகிழ்ச்சியாக ஏறிக் கொண்டோம்.  அருகில் இறங்கி பேருந்து பிடித்து விட நான் குட்டிச் சுவரில் உட்கார்ந்து மின்னஞ்சல் பார்த்தேன். அதை முடித்து விட்டு இடது புறமாகவே நடந்து ஜூஸ் கடைக்குள் போனேன். 1 கேரட் ஜூஸ் என்று கேட்டேன், ஐஸ் போடாமல் என்று சொன்னது அந்த வெளி மாநில சிறுவனுக்குப் புரியவில்லை. அதை அப்படியே ஒலி மாறாமல் போய்ச் சொன்னான். இப்படி கலவையாக சாப்பிட்டதுதான் இரவில் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.

வெளியில் வந்து நடந்து சாலையைக் கடந்து போனேன். வாசலில் பதிவுக்குக் கூடக் கேட்கவில்லை. நேராக கட்டிடத்துக்கு வந்து முதல் மாடிக்குப் போனேன். வழியில் பார்த்து வணக்கம் சொன்னேன். அவரும் 4 மணிக்கு வந்து விடுவார். 3.30தான் ஆகியிருந்தது.

மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். உள்ளே போய் கணினியை இயக்கிக் கொண்டேன். நாற்காலிகளை ஒழுங்காகப் போட்டு விட்டு ஒவ்வொருவராக புறப்பட்டுப் போய் விட்டார்கள். இடையில் ஏசி போட்டு விட ஒருவர், தூய்மை செய்ய ஒருவர் என்று வந்து போனார்கள்.

தொடர்ந்து விவாதம் பல திசைகளில் போனது. ஆராய்ச்சிக்கு இண்டஸ்ட்ரீ பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தார். அரசு  நிதி உதவி செய்ய மறுக்கிறது. ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து பணம் சம்பாதிக்கச் சொல்கிறது என்று ஆரம்பித்து விவாதம் வளர்ந்தது. இது மிக மிக மோசமான முடிவு, பெரு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்று உறுதியாக பேசினேன்.

வெளியில் வந்தும் பேசிக் கொண்டிருந்தோம்.  அடிப்படை ஆராய்ச்சிக்கு பணம் கிடையாது, தொழில் துறையில் இருப்பவர்கள் 6  மாதக் கண்ணோட்டத்தில்தான் தேவைகளைச் சொல்ல முடிகிறது நிறைய பின்னணி தகவல்கள் தெரிந்தன.

லிபர்டி அருகில் இறங்கி பேருந்து 25G பிடித்தேன்.  பவர் ஹவுஸ் அருகில் உட்காரவும் இடம் கிடைத்து. போக்குவரத்து நெரிசலில் நீந்தி வந்து சேர்ந்தது. கேசவர்த்தினி நிறுத்தம் வரை போகாமல் போக வேண்டிய சாலை அருகில் பேருந்து மெதுவானதும் இறங்கினேன். பின்னாலேயே இன்னொரு பெண் என் மீது விழுந்து இறங்கினார். அவரை முந்தி நடந்து விட்டேன்.

வீட்டுக்கு வந்து கை கால் கழுவி விட்டு சிறிது நேரம் கணினி இயக்கி விட்டு கடைக்குப் போய் சாப்பாடு. 1 தோசை, 2 கல் தோசை. இரண்டு பெண்கள் பார்சல் வாங்க நின்றிருந்தார்கள். கூடவே இரண்டு குழந்தைகள். சுமார் 4 வயது ஒரு பெண், திருத்தமாக முகம், இரட்டைக் குடுமி தலை வாரல், குட்டை கவுன் என்று அப்படியே அழகு சொட்டியது. அவள் தம்பி கொஞ்சம் தூங்கி வழிந்த முகத்தோடு அமைதியாக இருந்தான். சிறுமி அடம் பிடித்து 'பார்சல் வேண்டாம், இங்கேயே சாப்பிடணும்' என்று தொடர்ந்து வற்புறுத்த நான் உட்கார்ந்திருந்த மேசையிலேயே எதிரில் உட்கார வைத்தார் கூட்டி வந்த பெண். ஒரு பரோட்டா, தம்பியும் சாப்பிடுகிறாயா என்று அவருக்கு எனக்கு இடது பக்கம் நாற்காலி போட்டு 1 இட்லி. இட்லி பார்த்ததும் அவளுக்கும் இட்லி வேண்டும். 1 இட்லி. இட்லி சாப்பிடும் போதே சப்பாத்தி நினைவு வந்து விட்டது குட்டி பையனுக்கு.  இரண்டு பேரும் சமர்த்தாக சாப்பிட்டு எழுந்தார்கள். குழந்தைகளின் உலகம் அற்புதமானதுதான்.

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

கற்பதும் கற்பிப்பதும்


நேரம் 6.04, டிசம்பர் 4, 2011.

நாளைக்கு சாரு நிவேதிதாவின் நூல் வெளியீட்டு விழா. 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு நாள். அந்த நாளை ஒட்டி அரசியல் போராட்டங்களை முஸ்லீம் அமைப்புகள் அறிவித்திருக்கிறார்கள்.

நேற்று காலையில் நாட்குறிப்பு முடித்தவுடன் பல் தேய்த்து, குளிக்க தயாரானேன். புத்தகங்களை அடுக்கி வைத்தல், தின்பண்டங்களை டப்பாவில் போட்டு வைத்தல், கல்லூரிக்கு எடுத்துப் போக வேண்டியவற்றை பையில் அடுக்கி வைத்தல் என்று வேலைகளை முடித்து விட்டுக் குளித்து முடித்தேன். மடிக்கணினிக்கு மின்னூட்டம் ஏற்ற வைத்திருந்ததால் அது கடைசியாகத்தான் பையினுள் வைக்கப்பட முடிந்தது. மீதமிருந்து 1 பிஸ்கட்டை சாப்பிட்டுக் கொண்டேன். வெளியில் மழை பெய்கிறதா, அல்லது மழை பெய்யும் அறிகுறி இருக்கிறதா என்று பார்த்து குடை எடுத்துக் கொள்ளவில்லை.

நடக்க ஆரம்பிக்கும் போது ஆட்டோ ஒன்றில்  ஒற்றை ஆள் போனால், நம்மையும் ஏற்றிக் கொண்டு போகலாமே என்று தோன்றியது. வேறு ஆட்டோ எதுவும் வரவில்லை. நடந்தே போய்ச் சேர்ந்து விட்டேன். வீட்டிலிருந்து புறப்படும் போது 6.40, இங்கு வரும் போது 6.50. தேநீர் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு பேருந்து நிறுத்தம் வந்தேன். பல பேருந்துகள் கூட்டமாக போய்க் கொண்டிருந்தன. இன்றைக்கு கதை கந்தல்தானோ என்று தோன்றியது. அசோக் நகர் வழியாக போகும் பேருந்தை விட்டு விட்டு உட்கார்ந்திருந்தால், கூட்டம் இல்லாமல் உட்கார இருக்கையுடன் பேருந்து ஒன்று வந்தது. ஏறி உட்கார்ந்து வடபழனி கோவில் டிக்கெட் எடுத்தேன். 11 ரூபாய்.

சிக்னலில் சரியாக முனையில் நிறுத்த வேண்டியாகி விட்டது. எல்லோரும் அங்கேயே இறங்கினார்கள். ஓட்டுனர் எஞ்சினை அணைத்து போட்டு விட்டார். சாலையைக் கடந்து அந்தப் பக்கம் போவது வரை காத்திருக்க வேண்டாம் என்று நானும் இறங்கிக் கொண்டேன். ஆற்காடு சாலையைக் கடந்து காவல் நிலையம் பக்கத்தில் 100 அடி சாலையைக் கடக்க காத்திருந்தேன். சிக்னல் மாறியதும் அதைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். மணி சரியாக 7. தாம்பரம் போகும் வண்டிகள், தெற்கத்திய ஊர்களுக்குப் போகும் வண்டிகள் வந்து கொண்டிருந்தன. வியாழக்கிழமை போல மாமல்லபுரம் போகும் வெளியூர் பேருந்து வந்தால் வசதி, செலவு குறைவு, வேகமாக போய் விடும். சொல்லி வைத்தது போல அந்த பேருந்து வந்தது. 119B திருப்போரூர் என்று நினைவு. சிப்காட், சிறுசேரி போகுமா என்று கேட்டு விட்டு ஏறி உட்கார்ந்தேன். இன்றைக்கு கூட்டம் மிகவும் குறைவு.

பல அலுவலகங்கள், கல்லூரிகள் சனிக்கிழமை வேலை செய்வதில்லை ஆதலால், பேருந்துகளிலும் சரி, சாலையிலும் சரி நெரிசல் குறைவுதான். மதியத்துக்கு மேல் கெஸ்ட் உரைக்குப் போக வேண்டும். அதற்கு இன்னும் தயாரித்துக் கொண்டிருக்கவில்லை. சீக்கிரம் அலுவலக அறைக்குப் போய் விட்டால் 1 மணி நேரத்தில் அதை செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டேன். 8 மணிக்கு சிறுசேரி சிப்காட் முன்பு இறக்கி விட்டார்கள். சாலையைக் கடந்து முனைக்கு வந்தால் சரியாக 4 பேருடன் ஆட்டோ ஒன்று காத்திருந்தது. 5வது நபராக முன் இருக்கையில் ஒட்டுனர் அருகில் நான் உட்கார்ந்து கொண்டேன். 2 பேர் டிசிஎஸ் அருகில் இறங்கி விட, ஒருவர் பத்னி போக வேண்டும், அந்தப் பக்கம் அவரை விட்டு விட்டு நான். 20 ரூபாய் கட்டணம்.

உள்ளே போய் கணினியை இயக்கி மதியத்துக்கா பிரசன்டேசன் தயாரிக்க ஆரம்பித்தால் ஏதேதோ தடைகள், இடையூறுகள். 8.45க்கு சாப்பிடப் போனேன். உணவகத்தில் கூட்டம், வரிசை. இருக்கையில் உட்கார்ந்தேன். வந்து பேச்சு கொடுத்தாள். அவள்தான் மிகச்சிறந்த மாணவி என்று மேடம் சொன்னார்கள் என்று சொன்னதும், அப்படி எல்லாம் இல்லை என்று சொன்னாள். சீன மொழி வகுப்பில் அப்படி இல்லையே என்று கேட்டேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நகர்ந்தாள்.

4 வடைகள், பொங்கல் 2 கரண்டி, சாம்பார், சட்னி. கார்ன் சேவை என்று கொண்டு வந்திருந்ததை பங்கு போட்டுக் கொண்டேன். நன்றாகவே இருந்தது. சாப்பிட்டு விட்டு அறைக்குப் போய் இணையத்தில் மின்னஞ்சல் பார்த்தேன்.

9.20க்குப் புறப்பட்டு அலுவலக அறைக்குப் போய் வருகைப்பதிவு கோப்புகளை எடுத்துக் கொண்டு, என்னுடைய வருகைப்பதிவு ஏட்டில் கையெழுத்து போட்டு விட்டு இரண்டாம் ஆண்டு வகுப்புக்குப் போனேன். பெரும்பான்மையினர் வந்து விட்டிருந்தார்கள். பாடத்தை பயிற்சி செய்ய வேண்டும், சீன எழுத்துக்களை எழுத வைக்க வேண்டும் என்று திட்டம். இரண்டு குழுக்களாக பிரித்து படிக்கவும், எழுதவும் சொன்னேன். இந்த ஆண்டு மாணவர்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள்தான். இவர்களிடம் கற்றுக் கொள்ளும் பாடங்களை பயன்படுத்தி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பாக சொல்லித் தர முடிகிறது. மடிக்கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க கொஞ்சம் வெளியில் இழுத்து வந்தேன். வகுப்பு முடிந்ததும் பாதி நேரம் வேறு எங்கேயோ இருந்தாய் என்று சொல்லவும் செய்தேன். பாதி நேரம் இல்லையாம், குறைவுதானாம். நேர்மை பரவலாக இருக்கிறது. பொய் சொல்ல வருவதில்லை.

அப்படியே கீழே போய் அலுவலகத்தில் இவர்கள் பதிவேட்டை வைத்து விட்டு முதலாம் ஆண்டு மாணவர் பதிவேட்டை எடுத்துக் கொண்டேன். தேநீர் குடிக்க உட்கார்ந்ததில் தாமதமானது. குடிக்க 5 நிமிடங்கள் ஆகி விட்டது. 11.15க்குத்தான் புறப்பட்டேன். முதலாம் ஆண்டு வகுப்பில் பலர் உட்கார்ந்திருந்தார்கள். ஆரம்பத்திலேயே 3 குழுக்களாக பிரிந்து கொள்ளச் சொன்னேன். குவிஸ் நிகழ்ச்சி. முதலில் சீன எழுத்துக்களை எழுதுவது. மூன்று பேரும் ஒரே அணியில் சேர்ந்திருந்தார்கள். அந்த அணிதான் முன்னிலை வகுப்பது முதலிலேயே உறுதியானது. அதைத் தொடர்ந்து உரையாடல்களை வாசிக்கும் போட்டி, கடைசியில் மொழி பெயர்க்கும் போட்டி.

அதை முடித்த பிறகு வீட்டுப் பாடம், பயிற்சிப் பாடங்களை முடித்தவர்கள் காண்பிக்க எடுத்து வந்தார்கள். அவற்றைப் பார்த்து முடித்து வருகைப் பதிவு செய்து விட்டு எழுந்தேன். 12.30க்கு வகுப்பு முடிந்த பிறகும் 15 நிமிடங்கள் இந்த வேலை. பயிற்சிப் பாடங்களை கையில் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். கார் ஓட்டுனர் 2 முறை அழைத்து விட்டிருந்தார். ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். அவருக்குத் தொலைபேசி சாப்பிட்டு விட்டு வந்து விடுவதாகச் சொன்னேன். சாப்பிடப் போய் வரிசையில் நிற்காமல், இடையில் புகுந்து 2 ரொட்டி, புலாவ் சோறு, சாம்பார், கூட்டு என்று வாங்கி சாப்பிட்டு முடித்து விட்டு கிளம்பினேன்.

பையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். வாசல் கதவை பூட்டியிருந்தார்கள். காவலர் வந்து திறந்து விட்டார். வெளியில் கார் காத்திருந்தது. பெரிய மீசையுடன் காத்திருந்தார். ஏறிக் கொள்ளப் புறப்பட்டது. வழுதாவூர் என்ற ஊரில் இருக்கிறதாம். கேளம்பாக்கம் தாண்டி, திருப்போரூர் தாண்டி, ஜெயலலிதாவின் மாளிகை இருக்கும் சிறுதாவூர் தாண்டி இருக்கிறது. மாமல்லபுரத்துக்கு அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரமே இருக்கும். காரில் மடிக்கணினியை இயக்க முயற்சித்தால், மின்கலன் மின்னூட்டம் இறங்கிப் போயிருந்தது. அதை மூடி வைத்தேன். சுமார் அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு வந்து சேர்ந்தோம். நகரத்திலிருந்து வெகுதூரம். தினமும் வந்து போவது ஒரு புனித பயணமாகத்தான் இருக்கும்.

கல்லூரியின் பின்பகுதியில் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மேலாண்மை துறை. உட்கார்ந்து கணினியை மின்சார இணைப்பு கொடுத்து பிரசன்டேசன் தயாரிக்க ஆரம்பித்தேன். அரை மணி நேரத்தில் ஒரு வடிவம் வந்து விட்டது. காரில் வரும் போது குறித்துக் கொண்ட குறிப்புகளை வைத்து எழுதி முடித்தேன்.  தேடிப்பார்த்து தோல் துறை பற்றிய வரை படங்களையும் எடுத்து சேர்த்துக் கொண்டேன். 2 மணிக்கு வகுப்புக்குப் போனோம்.

சாதாரண வகுப்புதான், அதில் ஒரு புரஜக்டர் பொருத்தியிருந்தார்கள். மடிக்கணினியை இணைத்தால் திரைக்கு வலப்பக்கம் என்று சொல்வது சரியாக வரவில்லை. முயற்சித்து அதை சரி செய்ய வேண்டும். இரண்டும் ஒரே மாதிரி என்று அமைத்தால் சரியாக இருக்கும். பொருத்தி சிறிது நேரத்திலேயே மின்சாரம் தடைப்பட்டது. மாணவர்களுடன் பேச ஆரம்பித்தேன். அகலமான வரிசையாக மூன்று வரிசையில் சுமார் 50 மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் என்னை அறிமுகம் செய்து பேச அடுத்து நான் ஆரம்பித்தேன்.

திக்கல்கள் இல்லாமல் போனது, மாணவர்களின் ஈடுபாட்டைக் கொண்டு வருவதுதான் நடக்கவில்லை. உதாரணங்கள், வரலாற்றுப் பின்னணி, மாற்றங்கள், விபரங்கள், நடைமுறை செயல்பாடுகள் என்று பேசிக் கொண்டே போனேன். ஓரிருவருக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது. 2.50க்கு முடிந்து விட்டது. 45 நிமிடங்களுக்குத்தான் நடந்திருக்கிறது. ஒன்றரை மணி நேர லெக்சர் என்று திட்டமிட்டிருக்க வேண்டும். மாணவர்கள் கேள்விகள் கேட்டாலோ, அல்லது இன்னும் விபரமாக பேசியிருந்தாலோ நேரம் அதிகம் ஆகியிருக்கலாம்.

முடிந்த பிறகு டீன் அறைக்கு வந்தோம். பேசிக் கொண்டிருந்தேன். ஒரு காபி, பிஸ்கட்டுகள், பின்னூட்ட படிவம் ஒன்றைக் கொடுத்தார். அதே காரில் ஏற்றி அனுப்பி விட்டார்கள். பழைய மாமல்ல புர சாலையிலேயே போகலாம் என்று சொல்லி கேளம்பாக்கத்திலிருந்து தொடர்ந்தார். கட்டண சாவடியில் என்னிடமிருந்து 20 ரூபாய் வாங்கிக் கொண்டார். அதற்குத்தான் அனுமதி கேட்டிருக்க வேண்டும். அதிக வாகன நெரிசல் இல்லாமல் போனது. முன் இருக்கையில் உட்கார்ந்திருந்ததால் தூங்கி விடக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் உட்கார்ந்திருந்தேன். அவ்வப்போது சொக்கியது. தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு அவ்வப்போது குடித்துக கொண்டேன்.

மத்திய கைலாஷ் வழியாக, அண்ணா யூனிவர்சிட்டி, கிண்டி வந்து, ஒலிம்பியாட் தாண்டி காசி தியேட்டர் அருகில் இறங்கிக் கொண்டேன்.  சரவண பவனில் 4 இட்லி, ஒரு காபி குடித்து விட்டு சாலையைக் கடந்து நடந்து போய்ச் சேர்ந்தேன்.

8.45க்குப் புறப்பட்டு பேருந்து நிறுத்தம் வந்து வடபழனி பேருந்து நிலையம் போகும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.  இறங்கி நடந்து வடபழனி பேருந்து நிறுத்தம் வந்தால் பேருந்துகளில் எதுவும் உட்கார இடம் இல்லை.

அடையாறு ஆனந்தபவனில் சாப்பிட உட்கார இடமில்லை. நடந்தே வந்தேன், கடந்து போன ஆட்டோ நிறுத்த ஏறிக் கொண்டேன். சிறிது தூரம் நகர்ந்த பிறகு கட்டணம் பேசி முடிவானது. 'நீங்க ஏறி உட்கார்ந்துட்டீங்க, அதுதான் அழைத்துக் கொண்டு போகிறேன்' என்று அவர் சொன்னதும் எனக்கு கோபம் வந்து விட்டது. கொஞ்சம் கடுமையாக பேசி விட்டேன். அதன் பிறகு சமாதானம் ஆகி, இறங்கும் போது அவர் கேட்ட கட்டணத்தைக் கொடுத்து விட்டேன். அந்த முனைக்கடையில் 3 பரோட்டா, ஒரு ஆம்லெட் சாப்பிட்டேன். நடந்து வீடு வந்து சேரும் போது 10 மணி.

பல் தேய்த்து தியானம் செய்து விட்டு தூக்கம். நல்ல தூக்கம். ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு 6 மணி வரை எழுந்திருக்கவில்லை. இதை முடிக்கும் போது 7 மணி ஆகியிருக்கும். அதன் பிறகு பல் தேய்த்து விட்டு உலாவப் போதல், நாளிதழ் வாங்கிக் கொண்டு வந்து வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும். விபரங்களை நாளிதழில் இருந்து குறித்துக் கொள்ள வேண்டும்.

திங்கள், நவம்பர் 28, 2011

சென்னையில் மழை நாள்


நவம்பர் 28, 2011. காலை 4.54

இதை முடிக்கும் போது 5.54 ஆகியிருக்கும். பெட்டியில் துணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட வேண்டியதுதான். 6.30க்கு பேருந்து ஏறினாலும் 10 மணிக்கு வேலூர் போய் சேர்ந்து விடலாம். 24 மணி நேரமும்  கடமைகளைச் செய்வதற்கான களம். அதை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

நேற்று காலையில் நாட்குறிப்பு முடித்த பிறகு புறப்பட வேண்டும். தொலைபேசி 8 மணிக்கு வந்து விடுவதாகச் சொன்னார். மழை பெய்து கொண்டிருக்கிறதே, கூட்டம் இருக்குமா என்று சந்தேகம். தொலைபேசி கேட்டு விடுவதாகச் சொன்னார். கூட்டம் ரத்து இல்லை என்றால் 8 மணிக்கு வந்து விடுவார். நாளிதழ் வாங்கி வரப் புறப்பட்டேன். வெளியில் வந்தால் மழை தூறிக் கொண்டுதான் இருந்தது. திரும்பவும் உள்ளே வந்து குடை எடுத்துக் கொண்டு நடந்தேன். தலையும் சட்டையும் நனையாமல் இருக்கிறதே!

3 ரூபாய் டெக்கான் குரோனிக்கிளுக்கு 10 ரூபாய் கொடுத்து சில்லறை வாங்கிக் கொண்டேன். அந்தக் கடைக்காரர் கொஞ்சம் வாடிக்கையாக என்னைப் பார்க்க ஆரம்பித்து விட்டிருக்கிறார். நானும் வழியில் இருக்கும் மற்ற கடைகளை விட்டு விட்டு அவரிடம்தான் போய் வாங்குகிறேன். என்னுடைய காலை நடைப்பயிற்சிக்கும் அதுதான் சரியாக இருக்கிறது.

நாளிதழுடன் திரும்பி வந்து, குளித்து, தியானம் செய்து நேரம் 8 மணி அடிக்கப் போனது. நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். சாப்பிடப் போக வேண்டும். பூரி அப்போதுதான் சுடச்சுட போட்டு வந்தது, இரண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு செட் பூரி சொன்னோம். நான் அடுத்ததும் பூரி. வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. பலர் உட்கார்ந்து சாப்பிட நாற்காலிகள் நிரம்பியிருந்தன.

பார்சலுக்குச் சொல்லி விட்டு சாப்பிடுவதைத் தொடர்ந்தோம். சாப்பிட்டு முடித்து எழுந்த பிறகுதான் பார்சல் கட்டச் சொன்னார். மொத்தம் 9 இட்லி, 3 வடை, 4 செட் பூரி என்று கணக்கு போட்டு 68 ரூபாய். கடைக்கார அம்மா பார்சலுக்கு 26 ரூபாய் என்று சொன்னார்.  சாப்பிடுவதற்கு தனிக்கணக்கு. ஆறு 10 ரூபாய் நோட்டுகளும் 8 ரூபாய் சில்லறையுமாக கொடுத்து விட்டேன்.

தேநீர் குடிக்கப் போனோம். அந்த துரித உணவுக் கடையை தாண்டி டாஸ்மாக்குக்கு நேர் எதிரில் இருக்கும் தேநீர் கடைக்குப் போனோம். அய்யப்பன் மாலை போட்டிருப்பவர் கடைக்காரர்.

அவுட்லுக் பத்திரிகையின் அட்டைப்படத்தில் 'ஏன் எல்லோரும் ஊடகங்களை வெறுக்கிறார்கள்' என்று அட்டைப்படக் கட்டுரை. அட்டையிலேயே ஒரு விளம்பர துண்டுச் சீட்டு, உள் அட்டைகளில் அந்த விளம்பரதாரரின் இரண்டு பக்க விளம்பரம். என்ன ஒரு irony!

தெரு முனையில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. சாலை பற்றி பேசினோம். குடையை கையில் எடுத்துக் கொண்டேன். பைக்கில் போகும் போது பிடித்துக் கொண்டே போகலாம், மழை பெய்தால்.

கிண்டி நோக்கிப் போகும் பாதையில் வாகனங்கள் நிறைந்திருந்தன. நல்ல வேளையாக இந்த வளைவு வரை அடைத்து விட்டிருக்கவில்லை. ஜிஎஸ்டி சாலைக்கு வந்து வழக்கமான தில்லை கங்கா நகர் தரையடி பாதைக்கு வந்தோம். அதன் கீழ் தண்ணீர் நிரம்பி வாகனங்கள் போக முடியாமல் ரிப்பன் கட்டியிருந்தார்கள். திருப்பிக் கொண்டு டிரைடன்ட் அருகில் இருக்கும் பழவந்தாங்கல் தரையடிப் பாதை வழியாக போகலாம் என்று முடிவு செய்தோம். இன்னொரு வழி, பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக போவது.

பழவந்தாங்கல் சப்வேயில் தண்ணீர் இறைத்து விடப்பட்டிருந்தது. இருப்பினும் மேலிருந்து தண்ணீர் உள்ளே பாய்வதும் நடந்து கொண்டிருந்தது. மேலே ஏறி இடது புறம் திரும்பி வழி விசாரித்துக் கொண்டே ஓட்டினோம். அருகில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்த நின்றோம்.

மாலை 8.30 ஆகி விட்டது. கால் டாக்சி யாரும் வரத் தயாராக இல்லை. இரு சக்கர வண்டியில் தேநீர் கடை  அருகில் விட்டார்கள். தேநீருக்கு 20 ரூபாய். அங்கு அருகில் இருந்த உணவு விடுதியில் சப்பாத்தி, மீன் கறி, முட்டை சாப்பிட்டோம். 163 ரூபாய்.

சாப்பிட்டு விட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து D 70 ஏறினோம். வடபழனியில் இறங்கி 12B யில் பேருந்து நிலையம் வந்து, பகிர்வூர்தியில் கேசவர்த்தினி அருகில் இறங்கிக் கொண்டேன்.

நடந்து வீட்டுக்கு வந்து கைகால் கழுவி விட்டு தியானத்தில் உட்கார்ந்தால் நேரம் வெகு வேகமாக ஓடியது. நிறைய எண்ணங்கள் பதிவாகியிருக்கின்றன. தூங்கி விட்டு நாலரைக்கு எழுந்து விட்டேன்.

இன்னும் 20 நிமிடங்கள் இருக்கின்றன. இதை முடித்ததும் கட்டி வைத்த துணிகளை பெட்டியில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். சட்டையும் பேன்டும் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட வேண்டியதுதான். புதிய செய்திகளைப் பற்றிக் குறிப்பெடுப்பது ஏற்கனவே ஏற்றுக் கொண்ட கட்டுரைகளை முடித்த பிறகுதான் செய்ய வேண்டும்.

சனி, நவம்பர் 26, 2011

tyrants

நேரம் 6.10, நவம்பர் 26, 2011.

நேற்று மாலை மக்கள் கலை இலக்கிய கழகத்தின் ஒலிப்பேழை பாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு பாடலிலும் இருக்கும் கருத்துச் செறிவும், பாடுபவர்களின் உணர்வுபூர்வமான ஈடுபாடும் ஈடு இணையற்றவை. பல ஆயிரம் பக்கங்கள் புத்தகங்களின் மூலம் பதிய வைக்கக் கூடியதை ஒரு பாடல் செய்து விடுகிறது. பேசும் போது, சிந்திக்கும் போதும், எழுதும் போதும் அந்த நியாயங்கள் நமது எண்ணங்களில் இயல்பாக எழுகின்றன.

காலையில் நாட்குறிப்பு முடித்த பிறகு உலாவப் போனேன். நாளிதழ் வாங்கும் கடையில் வெளியில் பால் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆவினின் பச்சை கவர் பால் அல்லது நாலரை பால் அல்லது ஆரோக்கியா பால் 17 ரூபாய் என்று விலை கேட்டு தெரிந்து கொண்டேன். நீல கவர் பால் 15 ரூபாயாம். முன்பு 11 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அரை லிட்டருக்கு 4 ரூபாய் ஏற்றி விட்டார்கள். கார்டு வைத்திருப்பவர்களுக்கு முன்பு 8.75லிருந்து இப்போது 12 ஆக மாறியிருக்கிறது.

வீட்டுக்கு வந்து நல்ல தண்ணீர் ஏற்றுவதற்கான மோட்டரைப் போடப் போனேன். அதற்காக குழாயைப் பொருத்திக் கொண்டிருக்கும் போது மேல் வீட்டு அம்மா கூடவே உப்புத் தண்ணீர் மோட்டாரையும் போட்டு விடச் சொன்னார்கள். இரண்டையும் போட்டு விட்டு நாளிதழைப் படிக்க ஆரம்பித்தேன். முதல் மாடியில் எதிர் வீட்டு அம்மா வந்து நீங்க பிடிச்ச பிறகு ஒரு குரல் கொடுங்க நான் பிடிக்க வேண்டும் என்று சொல்லி போனார். உப்பு தண்ணீர் மோட்டார் 1 மணி நேரம் ஓடலாமாம், முடிந்த பிறகு நானே அணைத்து விடுகிறேன் என்று சொன்னேன். பிளாஸ்டிக் தொட்டி அரைப் பகுதி வரை நிரம்பிய பிறகு அவர்களிடம் பிடித்துக் கொள்ளச் சொன்னேன்.

குளித்து விட்டு தியானம். 8 மணிக்குச் சாப்பிடப் போனேன். சீக்கிரம் போனால் பூரி கிடைப்பதில்லை. இட்லிகளும் வடைகளும் சாப்பிட்டு 18 ரூபாய் செலவு. வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து செய்தி விபரங்களை மேய்ந்து கொண்டிருந்தேன். கடைசியாக வாங்கியிருந்த த வீக், அவுட்லுக் இரண்டையும் இன்னமும் நிறைய படித்திருக்கவில்லை என்று தெரிய பையில் வைத்துக் கொண்டேன். காலையில் பல்லாவரம் போய் விட்டு வர வேண்டும். வங்கிக்குப் போக வேண்டும்.

அவுட்லுக் வினோத் மேத்தாவின் புத்தகம் கேடு கட்ட மஞ்சள் பத்திரிகை வடிவத்தில் இருக்கிறது. அதிலிருந்து எடுத்து வெளியிடப்பட்ட பகுதிகள்,  யார் யாருடன் உறவு வைத்திருந்தார்கள் என்ற விபரங்களையும், அவரது பத்திரிகை வாழ்க்கையில் சந்தித்த அவலங்களையும் மட்டும் பேசுகிறது. இப்படிப்பட்ட ஒரு ____ எடிட் செய்யும் பத்திரிகையை படிப்பது நமது தலையெழுத்துதான். இவர்தான் நாட்டில் நடக்கும் மோசடிகளை வெளிச்சப் போட்டுக் காட்டுகிறாராம். முன்பு ஒரு முறை அட்டைப் படத்தில் விதர்பா விவசாயிகள் தற்கொலை பற்றி படம் போட்டு அது தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டிருந்தார்கள். கடைசிப் பக்கத்தில் வினோத் மேத்தாவின் பத்தியில், அவர் குடிக்கும் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி பற்றிய புலம்பல், இவ்வளவு மோசமான இரட்டை வேடதாரி என்று அப்போது வாய் கசந்தது.

9 மணிக்குப் புறப்பட்டேன். கேசவர்த்தினி வரை போக வேண்டும். மழை பெய்து சாலை எங்கும் நீர் தேங்கியிருக்கிறது. பெரும்பாலும் வண்டிகள் வேகத்தைக் குறைத்து தண்ணீரை சிதற அடிக்காமல் ஓட்டுகிறார்கள். அவ்வப்போது ஓரிருவர் தண்ணீரை நடந்து கொண்டிருப்பவர்களின் அடித்து விடுகிறார்கள். அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சாலையின் இரு முனைகளையும் தொட்டு தண்ணீர் தேங்கியிருக்கும் இடத்தில் சாலையின் ஓடத்தில் தெரியும் விளிம்பில் கால் வைத்துப் போக வேண்டும். ஒரு இடத்தில் அதுதான் குப்பை போடும் இடம். வேறு வழியில்லை.

ஆற்காடு சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வந்தால், பேருந்து நிறுத்தம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிரம்பியிருந்தது. காத்திருப்பவர்கள் அனைவரும் அடுத்த கடை வளாகத்தின் முன்பு நின்றிருந்தார்கள். பேருந்து நிறுத்தத்தின் முன்பு ஒரு வண்டி கடப்பது அளவிலான சாலை மட்டும் முழுகாமல் இருந்தது. எல்லா பேருந்துகளும் கூட்டமாகவே போயின. வடபழனி வரை போகும் பேருந்தில் ஏறி அங்கு இறங்கி G70 அல்லது 18M பிடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அது கூட வரவில்லை. 10 நிமிட காத்திருப்புக்குப் பிறகு 501 ஒன்று வந்தது ஸ்ரீபெரும்புதூர் பேருந்து. வடபழனி வரை மட்டும் போவதால் கூட்டம் குறைவாக இருக்கும், இருக்கை கிடைக்கும் என்று நினைத்தது தவறாகிப் போனது.

கல்லூரி மாணவியர் கூட்டமாக பின் வாசல் அருகே நின்றிருந்தனர். 12 பேராம். வில்லிவாக்கம் போக வேண்டுமாம். எங்கு இறங்க வேண்டும் எப்படிப் போக வேண்டும் என்று தொடர்ந்து விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஆழ்வார் திருநகரில் இறங்கி ஆட்டோ பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டார்கள். வடபழனி வரை போய் விடலாம் என்று சொன்னதை கேட்டு வடபழனி பேருந்து நிலையத்தில்தான் இறங்கினார்கள், ஆட்டோ 3 எண்ணிக்கையாவது பிடிக்க வேண்டியிருந்திருக்கும்.

வடபழனி பேருந்து நிலையத்துக்குள்ளும் தண்ணீர் நிரம்பியிருந்தது. G70, 18M நிற்கும் இடத்தில் முழங்கால் வரை தண்ணீர், அதில் நீந்திச் சென்றுதான் பேருந்தில் ஏற முடியும். மோட்டர் போட்டிருக்கிறார்கள். வடிந்து விடும் என்று ஒரு பேருந்து ஓட்டுனர் சொன்னார். மாலை வரை அப்படியேதான் இருந்தது. நூறடி சாலைக்குப் போய் விடுவது என்று நடக்க ஆரம்பித்தேன். 170C என்று கோயம்பேடு வணிக வளாகம் - தாம்பரம் பேருந்து வந்தது. கூட்டமே இல்லாமல் பல இருக்கைகள் காலியாக வந்தது. மழை தூற ஆரம்பித்திருந்தது. கையை நீட்டி அவசரமாக ஏறிக் கொண்டேன். நடத்துனர் இளைப்பாறலாக உட்கார்ந்திருந்தார்.

பல்லாவரம், பாண்ட்ஸ் என்று கேட்டால் பல்லாவரமா, பாண்ட்சா என்று சொல்லுங்கள் அதற்கு 9 ரூபாய் இதற்கு 11 ரூபாய் என்றார், 10 ரூபாய் கொடுத்து பின்பு 2 ரூபாய் நாணயம் கொடுத்தேன். உட்கார்ந்த இருக்கையில் இன்னொரு காக்கி சீருடை அணிந்த போக்குவரத்துத் தொழிலாளர். அவரிடம் பேச்சுக் கொடுத்து ஓட்டுனர், நடத்துனருக்குக் கொடுக்கும் ஊக்கத் தொகையை 1000க்கு 25லிருந்து 19ஆக குறைத்து விட்டதாக உறுதிப் படுத்திக் கொண்டேன். 'மக்கள் வயிறெரிந்து போறாங்க' என்று சொல்லி விட்டு நிறுத்திக் கொண்டார். பொதுவாக பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் அதிகமாக பேச்சுக் கொடுப்பதைத் தவிர்த்து விடுகிறார்கள். குறிப்பாக நடத்துனர்களுக்கு மனித உரையாடல்கள் மீது ஒரு விடுப்பு வந்திருக்கும்.

பெண்கள் இருக்கை ஒன்றில் ஒரு வயதான, முகம் சுருங்கிய அம்மா இரண்டு பைகளில் செவ்வந்தி பூக்களை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தார். பல்லாவரத்தில் இறங்கும் போது மாலை நீளமாக வளர்ந்திருந்தது. கோயம்பேடு போய் விட்டு வருவதற்கு 45 ரூபாய் ஆகி விட்டது என்று அங்கலாய்த்துக் கொண்டார், இடையில் ஏறிய பெரியவரிடம். உதிரி பூக்களை கோயம்பேடு போய் வாங்கி வந்து, மாலையாக் கட்டி பல்லாவரத்தில் விற்பது அவரது தொழிலாக இருக்கலாம். தினமும் 100 ரூபாய் வருமானம் என்று வைத்துக் கொண்டால், இந்த பேருந்து கட்டண உயர்வால் செலவு சுமார் 20 ரூபாய் அதிகரித்திருக்கிறது. எப்படி ஈடுகட்ட முடியும்? பூ விலையை உயர்த்தவா முடியும்? பேசாமல் ஒரு நாளைக்கு குடிக்கும் தேநீரில் ஒன்றை குறைத்துக் கொள்ள வேண்டியதுதான். தேநீரும் 1 ரூபாய் ஏற்றி விட்டார்கள். மக்களுக்கு துறவறத்தைக் கற்பிப்பதில் இந்த அரசுகளுக்கு என்ன ஆர்வம்!

பாண்ட்ஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடந்து எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடித்தேன். 30 ரூபாய் கேட்டார்கள். புறப்படும் போது இன்னும் இரண்டு பேர் ஏற வர ஏற்றிக் கொள்ளும்படி சொன்னேன்.

அன்வர் உணவு விடுதி அருகில் இறங்கி அலுவலகத்துக்குப் போனேன். இங்கு பிஎஸ்என்எல் 3G நன்கு வேலை செய்தது, அதியமான் கருப்பு பண பதிவில் பின்னூட்டங்களுக்கு பதில் போட்டிருந்தார். மதியத்துக்குள் அவருக்கு எனது மறுமொழியை எழுதி விட்டேன். நாட்குறிப்பையும் பதிவு செய்து விட்டேன்.

சரக்கு விலை மாற்றுவதற்கான வசதியை செய்ய வேண்டும். சரக்கு விலை, மதிப்பு அறிக்கையில் சரியாக காண்பிக்கப்பட வேண்டும். இரண்டையும் முடிக்க மதியம் ஆகி விட்டது. மதிய உணவுக்கு பாலாஜி பவன் போகிறேன் என்று  காரில் ஏறிக் கொண்டேன். பாலாஜி பவனில் சாப்பாடு 60 ரூபாய், அவ்வளவு விலைக்கு சிறப்பாக ஒன்றுமில்லை. ஒரு தட்டில் சோறு, சாம்பார், ரசம், காரக் குழம்பு, குருமா, ஒரு பொரியல், கூட்டு, இனிப்பு என்று கிண்ணங்களிலும் ஒரு பப்படமும், தயிரும் தருகிறார்கள். அவ்வளவுதான்.

சாப்பிட்டு விட்டு  தொலைபேசி அடையாறு ஆனந்த பவன் அருகில் நின்று கொண்டேன். அவருடன் திரும்பி வந்து சேர்ந்தேன். அங்கு உட்கார்ந்திருந்தவர் பொருளாதாரம் படித்தவராம்.  ஜெயலலிதாவை தாக்கிப் பேசினேன். சரத்பவாரை அடித்தது போல ஜெயலலிதாவை நடு ரோட்டில் விட்டு செருப்பால் அடிக்கும் போதுதான் நமக்கு விடிவு காலம் வரும். தங்கம் வாங்குவதில் செய்யப்படும் மோசடி, சீட்டு கட்டுவதில், வங்கிக் கணக்கில் என்று பண விவகாரத்தை பேசிக் கொண்டிருந்தோம்.

அடுத்தடுத்து இன்னும் சில பணிகளை முடித்து விட்டு, மாதாந்திர கணக்கியல் ஸ்கிரிப்டு இயக்குவதைக் கற்றுக் கொடுத்து விட்டுப் புறப்பட்டேன். பாண்ட்ஸ் அருகில் கொண்டு விட்டார்.

தொலைபேசினால் எண் இப்போது இணைக்க முடியவில்லை என்று வந்தது. திரும்பி விட முடிவு செய்தேன். வரிசையாக பேருந்துகள் கடந்து போனாலும் நிற்கவில்லை. 18A திரிசூலம் வரை பேருந்து வந்தது. அதில் ஏறி பல்லாவரம் சீட்டு - 3 ரூபாய்தான். பல்லாவரத்தில் காத்திருந்து திருவேற்காடு போகும் பேருந்து காலியாக வந்ததில் ஏறிக் கொண்டேன். அது சொகுசு பேருந்தாம். வடபழனி வரை 15 ரூபாய் சீட்டு. வடபழனியில் இறங்கி கோயில் தெரு முனையில் நின்றேன். 25G, 37G எல்லாம் கூட்டமாகவே போக, 25G வடபழனி வரை பேருந்தில் ஏறி பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். இப்போதும் மழைத் தண்ணீர் வடிந்திருக்கவில்லை.

நம்ம வீடு வசந்தபவனில் பூரியும் பாலும் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தால் 17G வந்தது. முகலிவாக்கம் போவது, நம்ம வீட்டைத் தொட்டு போவது, வீட்டின் முன்பாகவே இறங்கிக் கொள்ளலாம். ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். பேருந்தின் முன்பக்கத்தைத் தொட்டு ஏற வேண்டியிருந்தது. 4 ரூபாய் சீட்டு

மெட்ரோபோலிஸ் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன், நல்ல தூக்கமும் சோர்வும் அழுத்தின. தூங்க ஆரம்பித்தேன்.  அழைத்து அடுத்த நாள் திட்டத்தைப் பேசினான். ஏழரை மணிக்கு கண் விழித்து கணினியில் உட்கார்ந்தேன். இணைய இணைப்பு கிடைக்கவில்லை. மக்கள் கலை இலக்கிய பாடல்கள் ஒலிக்க விட்டேன்.

ஒரு உண்மை மனிதனின் கதை உரைக் கோப்பை எடுத்துப் படிக்கவும் ஒழுங்கு செய்யவும் ஆரம்பித்தேன். வரிகளை இணைத்தல், எழுத்துப் பிழைகளை திருத்துதல் என்று மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அலுக்காத, மனதைத் தொடும் கதை.

திங்கள், நவம்பர் 14, 2011

ஒரு காலை


நேரம் மாலை 4.10 மணி. இடம் நாகர்கோவில், சைமன் நகர் வீட்டில். நாள் நவம்பர் 14, 2011. ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் என்று  காலையிலேயே ஞாபகமாக சொல்லியிருந்தார்கள்.

நேற்று காலை 7.30 மணிக்கு தாம்பரம் போக வேண்டும் என்று திட்டம். 6 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டு விட வேண்டும் என்று பேசியிருந்தோம். இரவு படுக்கும் முன்பு பல் தேய்த்து விட்டுப் படுத்திருந்ததால் தூங்கி எழுந்திருந்த கனம் இல்லாமல்தான் இருந்தது.

மணி ஐந்தரை ஆகியிருக்கவில்லை. வெளியில் வந்து வலது புறம் போய் பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் இருக்கும் தெருவுக்குள் நடந்து கடைசி வரை போய் பார்த்தோம், எந்த டீக்கடையும் திறந்திருக்கவில்லை. திரும்பி வரும் போது, வேலை நடந்து கொண்டிருந்த தையல் கடையில்  டீக்கடை விபரம் கேட்டார். உதவி வேலை செய்து கொண்டிருந்த பையன் ஏதோ இடைக்கால நிவாரணம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்வமாக வெளியில் வந்து டாஸ்மாக் கடை அருகில் டீக்கடை திறந்திருக்கும் என்று சொல்லிப் போனான்.

வீடு தாண்டி டாஸ்மாக் கடைக்கு எதிரில் இருக்கும் திறந்திருந்த டீக்கடைக்குப் போனோம். டீ கிடைத்தது, ஷாம்பூ கிடைக்கவில்லை. இரண்டு விக்ஸ் மாத்திரைகளும் வாங்கிக் கொண்டோம். தொண்டை கரகரப்புக்கு நிவாரணம்

திரும்பி வந்த பிறகு முதலில் நான் போய் குளித்து தயாராகி உடை மாட்டினேன். சரியாக 6 மணிக்கு வீட்டுக்கு வெளியில் வந்து விட்டோம். நடந்து கேசவர்த்தினி நிறுத்தம் வந்து சேர்ந்து வடபழனி போகும் பேருந்தில் ஏறினோம் 17M என்று நினைவு.

சாலை நிறுத்தத்திலேயே இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தால், G70யே வந்தது. உட்கார இருக்கையும் இருந்தது. ஏறிக் கொண்டோம். கேகே நகர் உள்ளே சுற்றிப் போகும் என்று ஒரே குறைபாடுதான். 7 மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்து விட்டோம்.

திரும்பவும் வளசரவாக்கம் வர வேண்டும்.  மீண்டும் ஒரு முறை பதிவு எழுதுவதை வலியுறுத்தினார்.  நான் எழுதுவது அவசியம் என்பது அவர் கருத்து. நானும் அதை ஏற்றுக் கொண்டேன். டிசம்பர் முதல் எழுதுவதான தீர்மானத்தைச் சொன்னேன்.