என்னைப் பற்றி

கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 21, 2012

படித்தல்


ஏப்ரல் 21, 2012 காலை மணி 4.

நேற்று காலையிலும் சீக்கிரமே எழுந்து விட்டேன். இரண்டரை மணி என்று நினைவு. ஆனால் எழுதுவதற்கோ மிச்சம் வைத்திருந்த வேலைகளை செய்வதற்கோ மனம் வரவில்லை. முதலில் ஜாவாஸ்கிரிப்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் விழும் கட்டைகள் என்ற விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டேன். மிக எளிமையான வடிவமைப்புதான். இறங்கி விட்டால் பல மணி நேரம் சாப்பிட்டு விடும். 4 கணுக்களைக் கொண்ட கட்டைகள் வெவ்வேறு வடிவத்தில் இருப்பவை கீழ் நோக்கி விழும் அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்தி உட்கார வைக்க வேண்டும். ஒரு வரிசை முழுவதும் இடைவெளி இல்லாமல் பொருத்தி விட்டால் அது மறைந்து விடும், அதற்கான புள்ளிகள் கிடைக்கும். 4 வரிசைகளை ஒரு சேர மறைய வைத்தால் அதிக புள்ளிகள், ஒற்றை வரிசை மறைந்தால் குறைந்த பட்ச புள்ளிகள். நான்கு கணுக்களும் தலை/அடியாக இணைந்த கட்டை, 3+1 என்று இணைந்த வலது புற/இடது புற திருப்பமுடைய வகைகள் 2, 2+2 என்று இணைந்த வலது புற இடது புற திருப்பமுடைய 2 என்று மொத்தம் 5 வகை கட்டைகள். கட்டைகளை செங்குத்தாக கோணம் திருப்ப வசதிகள் உண்டு.

சரியாக 5 மணிக்கு திட்டமிட்ட வேலையை ஆரம்பித்தேன். எழுதி வைத்த கட்டுரைக்கு சரியான வடிவம் கொடுத்தேன். மொழிபெயர்த்த கட்டுரையின் உரையை உரைக்கோப்பில் எடுத்து பிழை திருத்தி அனுப்ப தயார் செய்தேன். 6 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டு விட்டது. அதற்கு முன்பு கட்டுரையை அனுப்பி விட்டிருந்தேன். அடுத்த மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டது. அடுத்ததாக மாலை தமிழ் ஊடகப் பேரவையில் பேச வேண்டியதற்கான குறிப்புகளை எழுத வேண்டும். குறைந்த பட்சம் 1 மணி நேரத்துக்கு குறிப்பு எழுதிக் கொண்டால் சுமார் 20 நிமிடங்கள் பேச முடியும் என்று திட்டமிட்டிருந்தேன்.

பசிக்கவே, பல் தேய்த்து விட்டு முந்தைய நாள் தண்ணீர் ஊற்றி வைத்திருந்த சோற்றை சாப்பிட போனேன். மாங்காய் ஊறுகாய் வாங்கியதில் உப்பு அதிகம், கூடவே காரக் குழம்பு மிச்சமும் இருந்தது. சாப்பிட்டு விட்டு தூக்கம் வராமலிருக்க உறுதி செய்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து ஒரு கப் கடும் காபி. 1 ரூபாய்க்கு கிடைக்கும் ப்ரூ பொதியை ஒரு கப்பில் கொட்டி, 2 கரண்டி சீனி, கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்தால் காபி தயார்.

பால் சேர்த்து தயாரிப்பதை விட இந்த கருப்பு காபிதான் மிகவும் விருப்பமானது. சிறு வயதில் வெறும் வயிற்றில் முட்டை உடைத்து குடித்தால் உடம்புக்கு நல்லது என்று கொடுப்பார்கள். அப்போது முட்டை வாடை தெரியாமல் இருக்கு இது போன்ற கடும் காப்பி கிடைக்கும். இந்த கடும் காப்பிக்காகவே முட்டை குடிக்க வாய்ப்பு தேடுவேன். அதன் பிறகு, வளர்ந்த பிறகு உடல் நிலை சரியில்லா விட்டால் இந்த கடும் காபிதான் மருந்து. இங்கிலாந்துக்கு போயிருந்த போது அங்கிருந்தவர்கள், காபியில் பார் சேர்த்து சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவார்கள். நான் காபியில் சர்க்கரை சேர்த்து பால் சேர்க்காமல் சாப்பிடுவேன்.

இதை செய்வதற்கு பாட்டிலில் காபிப் பொடி வாங்கி வைத்தால் சில நாட்களில் கெட்டித்துப் போய் வீணாகி விடுகிறது. அதனால் வாங்காமலேயே வைத்திருந்தேன். இப்போது 1 ரூபாய் பாக்கெட்டை பார்த்ததும் வழி தெரிந்து விட்டது. இரண்டு வாரம் முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வாங்கியது, தொடர்ந்து பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு கப்புக்கு மேல் போவதில்லை. அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அளவையும், தடவைகளையும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்திக் கொண்டால் பக்க விளைவுகள் பெரிதாக ஏற்பட்டு விடாது என்றுதான் நம்பிக்கை.

காபி குடித்து விட்டு பேச்சுக்கான தயாரிப்பு. மின் புத்தக படிப்பான்களை பற்றி என்று நினைத்து வைத்திருந்து கிண்டில் தொடர்பான வீடியோக்களை தரவிறக்கியிருந்தேன். கூடவே சொல்லியிருந்த 15ம் நூற்றாண்டு வாடிக்கையாளர் சேவை வீடியோ, கார்னிங் கிளாஸ் நிறுவனம் தயாரித்த எதிர்கால தொழில் நுட்ப சாத்தியங்கள் வீடியோ என்று வரிசைப்படுத்தி இவற்றை மையப்படுத்தி பேசலாம் என்று  முடிவு செய்திருந்தேன். இடையில் தொலைபேசி அழைப்புகள், குளியல், தியானம் எல்லாம் முடித்து எழுத ஆரம்பிக்கும் போது 11 மணி ஆகி விட்டது. ஓரளவு நிறைவாகவே வந்தது. இணைய இதழ்களின் தொழில் நுட்ப சாத்தியங்கள், எதிர்கால சாத்தியங்கள் என்னென்ன, இடையூறுகள் என்னென்ன போன்ற விபரங்களை  சேகரித்துக் கொண்டேன்.

12 மணிக்கு துணிகளை பைக்குள் எடுத்து வைத்து, மடிக்கணினி எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். குடங்களை காலி செய்து கீழே கொண்டு வைத்தேன். தண்ணீர் வந்தால் பிடித்து வைப்பார்கள். காலி செய்த தண்ணீரை கொட்டி விடவில்லை. தண்ணீர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டேன்.

படிப்பதற்கு கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். எப்போதோ வாங்கியது, சீனாவில் வெளியிடப்பட்ட பதிப்பு, சீன மொழியில் முன்னுரையுடன் இருந்தது. அமெரிக்க கல்லூரிகளில் பயிற்றுவிப்பதற்கான பாட புத்தகம். இப்போதைய ஆர்வத்திற்கு பொருத்தமான வாசிப்பு. பைக்கு கொஞ்சம் கனம் அதிகம் என்ற சிக்கல் மட்டும்தான்.

கோபால புரம் வந்து சாலையைக் கடக்கும் போது பகிர்வூர்தி நிறுத்தி ஏற்றிக் கொண்டார். புதிய பேருந்து நிலையத்துக்கு முன் இறங்கி டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு சென்னை பேருந்து நிற்கும் பகுதிக்கு வந்தால் ஒரு குளிர் சாதன அரசு விரைவுப் பேருந்து நின்றது. எந்த ஊரிலிருந்து வருகிறது என்று பார்க்காமலேயே ஏறிக் கொண்டேன். பெங்களூர் அல்லது திருப்பதியாக இருக்க வேண்டும். வழியில் சாப்பிட நிறுத்தும்போது பார்த்தால் 911 திருப்பதி வண்டிதான். உள்ளே அதிகம் கூட்டமில்லை. யாரும் உட்காராத இருவர் இருக்கையின் பின், உட்கார்ந்து கொண்டேன். இருக்கையை சாய்த்து தொல்லை கொடுக்க மாட்டார்கள். மொத்தமே 10-15 பேர்தான் இருந்தார்கள். பூந்தமல்லிக்கு 110 ரூபாய் சீட்டு.

தூக்கம் வரவில்லை, தூங்கவும் இல்லை. முதலில் நாளிதழ், தொடர்ந்து கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் படித்துக் கொண்டிருந்தேன். திருப்பெரும்புதூர் தாண்டி கட்டண சாவடி தாண்டிய பிறகு சில நிமிடங்கள் கண்ணயர்ந்திருப்பேன். அதற்கு முன்பு காஞ்சிபுரம் மேம்பாலம் இறங்கியதும் இடது புறம் இருக்கும் (வெள்ள கேட் பகுதி) விடுதியில் சாப்பிட நிறுத்த ஒரு தயிர் சாதம் சாப்பிட்டுக்  கொண்டேன். 25 ரூபாய். 3 மணிக்கு பூவிருந்தவல்லி வந்து சேர்ந்தது.

54Fல் ஏறினால் நேராக போய் விடலாம். 54 போய்க் கொண்டிருந்தது. அவற்றில் ஏறாமல் பேருந்து நிலையத்துக்கு உள்ளே போனேன். 54L வேளச்சேரி பேருந்து பயணிகள் யாரும் உட்காரமல் நகர்ந்து கொண்டிருந்தது ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

இந்த பேருந்திலும் கூட்டம் மிக மிகக் குறைவு இருக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. சின்னமலை சீட்டு வாங்கிக் கொண்டேன். 11 ரூபாய். சின்ன மலையில் இறங்கினால் சைதாப்பேட்டையிலிருந்து வரும் பேருந்துகளையும் பிடிக்கலாம். நேரம் ஆகி விட்டால் ஆட்டோ பிடிக்கும் தூரம் கூட. வண்டி எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று வந்து ராமாபுரம் சாலை நிறுத்தத்தில் நின்று விட்டது. எஞ்சின் தொடங்க மறுத்தது. இறங்கி அடுத்த பேருந்தை பிடிக்க வேண்டுமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் புறப்பட்டு விட்டது. கிண்டி தாண்டி 3.45க்கு சின்னமலையில் இறக்கி விட்டார்கள். இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வரும் முன்பு கடந்து போன ஆட்டோவை கை காட்டி ஏறிக் கொண்டேன்.

ஆட்டோ உள்ளே போகுமானால் உள்ளேயே விட்டு விடச் சொன்னேன். உள்ளே அனுமதித்தார்கள். வாசலில் பதிவு செய்து கொண்டு போய் கூட்டம் நடக்கும் கட்டிடத்துக்கு முன்பே இறங்கிக் கொண்டேன்.

கூட்டம் முடிந்து  அடையாறு, கிரீன்வேஸ் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, போயஸ் கார்டன் வழியாக கதீட்ரல் சாலை வந்தது. ராணி மேரிக் கல்லூரி எதிரில் சாலை நிறுத்தத்தில் இறங்கிக்  கொண்டேன். வந்து ஆவணத்தை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். தேநீர் கடையில் ஒரு கோப்பை தேநீர் ஒரு சமோசா சாப்பிட்டு விட்டு அருகிலேயே இருந்த நகலகத்தில் கடவுச்சீட்டுக்கான நகலை எடுத்துக் கொண்டேன். முதல் பக்கம் மட்டும் போதும் என்று அதைக் கிழித்து கையெழுத்து போட்டு வைத்துக் கொண்டேன். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். சொன்னபடியே அரை மணி நேரத்தில் வந்து விட்டார். இப்போது நேரம் 6 ஆகியிருந்தது. கூட்டம் 6.30 என்று சொல்லியிருந்தார்கள்.

அவரது வண்டியிலேயே வைட்ஸ் சாலையில் விட்டு விடுவதாகச் சொன்னார். கோபால புரம் வழியாக திரும்பி ராயப்பேட்டை வந்து மணிக்கூண்டு, எக்ஸ்பிரஸ் அவன்யூ தாண்டி வலது பக்கம் கட்டிடம் தென்பட்டது. இடது பக்கம் இறங்கி சாலையைக் கடப்பது பெரிய விஷயம்தான். பாதசாரிகள் சாலை கடப்பதற்கான வெள்ளை பட்டிகளும் போட்டிருக்கத்தான் செய்தார்கள். அது வரை நடந்து சென்று கடந்தேன்.

முதல் தளத்திலிருந்து கைகாட்ட ஏறி போனேன். குளிரூட்டப்பட்ட அறை. புரஜெக்டர், திரை என்று அமர்க்களமாக இருந்தது. கணினியை இணைத்து சரி பார்த்து விட்டு அணைத்து வைக்கச் சொன்னேன். ஆறரை மணிக்கு சிலர் வந்திருந்தனர். காபி, வடை கொடுத்தார்கள். நன்றாக இருந்தது. வடை பெட்டியை திறந்ததும் நல்ல மணம் வந்தது. 7 மணிக்குப் பிறகு கூட்டம் ஆரம்பித்தது.  முதலில் பேச ஆரம்பித்தேன்.

பேச்சு நன்றாகவே போனது, குறிப்பாக காணொளிகளை காட்டியது மிகவும் வரவேற்பை பெற்றது. யாரும் போரடித்து போயிருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. முடிந்ததும் கேள்வி பதில்களும் சுவாரஸ்யமாக போயின. அதைத் தொடர்ந்து அய்யநாதன் பேசினார். வெப்துனியாவிலிருந்து வெளி வந்து விட்டார் என்று பின்னர்தான் தெரிந்தது.

இளைய தலைமுறையினர் தம்மை மேம்படுத்திக் கொள்ள, பிறருடன் தொடர்பு கொள்ள, ஆய்வு செய்து விபரம் தெரிந்து கொள்ள, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இணையத்தை நாடுகிறார்கள். பொழுதுபோக்கு என்பது 5வது காரணியாகத்தான் இருக்கிறது. முதல் நான்கு நோக்கங்களுக்கு சரியான தீனி போட்டால் தவறான பொழுது போக்கு அம்சங்களை நாடி போக மாட்டார்கள் என்று பேசினார். அதற்கான புள்ளி விபரங்களை வெளியிட்டார். இந்தியாவில் 12 வயது முதல் 17 வயது வரையிலான இளம் இளைஞர்கள். 18 வயது முதல் 29 வயது வரையிலான முதிய இளைஞர்களில் 80 சதவீதத்துக்கு மேல் இணையத்தை நாடுகிறார்கள் என்று புள்ளி விபரம் சொன்னார். எந்த அடிப்படையிலான புள்ளி விபரம் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பெரிதும் பொருந்தும் என்றே தோன்றியது.

அவர் பேசி முடித்த பிறகும் விவாதங்கள் தொடர்ந்தன. 9 மணிக்குப் புறப்பட்டோம்.

மீண்டும் சாலையைக் கடந்து வந்து ஆட்டோதான் பிடித்தேன். தாம்பரம் போகும் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடக் கேட்டுக் கொண்டேன். டிஎம்எஸ்சில் விட்டு விட்டு 50 ரூபாய் வாங்கிக் கொண்டார். 1B வந்தது. 17  ரூபாய் சீட்டு. பூந்தமல்லி - சின்னமலை = 11 ரூபாய், இப்போது 17 ரூபாய் - மொத்தம் 28 ரூபாய்தான் ஆகியிருக்கிறது. 50 ரூபாய் சீட்டு வாங்காதது நல்லதுதான். பேருந்தில் அருகில் இருந்த பெரியவர் வைத்திருந்த சிறுவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவனது பாட்டியும் அம்மாவும் பெண்கள் பகுதியில் உட்கார்ந்திருந்ததை பிறகுதான் பார்த்தேன். அம்மா கூப்பிட்ட போதுதான் இவன் முகத்தில் மலர்ச்சியே வந்தது.

அதன் பிறகு அருகில் உட்கார்ந்தவர் பேருந்து கட்டண உயர்வைப் பற்றி புகார் சொல்ல அவரிடம் பேசிக் கொண்டே தாம்பரம் வந்து விட்டது.

புதன், நவம்பர் 23, 2011

சேவையில் சிறந்தது தனியாரா, அரசுத் துறையா?


நேற்று காலை நாட்குறிப்பு எழுதி முடித்த பிறகு காலை நடைபயிற்சிக்குப் போனேன். கோபாலபுரம் வழியாக காட்பாடி ரோடு வந்து சில்க்மில் வரை. டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு திரும்பினேன். துணி துவைக்க சோப்பு வாங்க வேண்டும், வழியில் எந்த கடையும் தென்படவில்லை. அர்ச்சனா மருத்துவமனை மருந்தகத்தில் கேட்கலாம் என்று தோன்றினாலும் சாலையைக் கடந்து போகவில்லை. பிள்ளையார் கோவில் அருகில் சாலையைக் கடந்து நாளிதழ் கடையில் பார்த்தேன், டிடர்ஜன்ட் சோப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே நடந்து சுசீ மோட்டார்ஸ் அருகில் திரும்பினேன்.

கல்யாண மண்டபத்துக்கு அருகில் இருக்கும் மருந்துக் கடையில் கேட்டால், சோப்பு தூள்தான் இருக்கிறது என்றார். தூள் என்னிடமும் இருந்தது. கட்டிதான் வாங்க வேண்டும். வழக்கமாக பொருட்கள் வாங்கும் மளிகைக்கடைக்குப் போனேன். கடை உரிமையாளர் இல்லை. காலை வேளையில் காய் வாங்க சந்தைக்குப் போயிருப்பார். மதிய வேளையில் அவரது மனைவி இருப்பார். இப்போது இன்னொருவர், அவரும் உறவினர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். காய் பகுதியில் ஒரு வயதானவரும் நிற்பார், அப்பா?.

கொஞ்ச நேரம் காத்திருந்து சோப்பு கேட்டேன். என்ன இருக்கிறது? முன்பு ஒரு நாள் கேட்ட போது ரின் மட்டும்தான் இருந்தது. இப்போது அரசன் இருக்கிறது. அரசன் வாங்கிக் கொண்டேன். 13 ரூபாய் பெரிய கட்டி.

வீட்டுக்கு வந்து போட்டிருந்த பேன்ட், உடுத்திருந்த சாரம் இரண்டையும் சேர்த்து சோப்பு போட ஆரம்பித்தேன். நிறைய துணிகள்.  வாரத்துக்கு ஒரு முறை துவைத்தால் இப்படித்தான் ஆகும். பேசாமல் துணி துவைப்பையும் மொபைல் ஆக மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

நேற்று மாலை உணவு சமைக்கும் போது கேஸ் தீர்ந்து விட்டது. புதிய சிலிண்டர் வாங்கினால் அதை கொண்டு போவதும் சிரமம். வேலூரை விட்டு நகர்ந்து விடு என்ற முடிவுக்கான தூண்டுதல்கள்.

குடிக்கத் தண்ணீர் 10 நாட்களுக்கு முன்பு எடுத்ததுதான் இருந்தது. அதை குடித்தாலோ, சமைக்கப் பயன்படுத்தினாலோ வயிறு கெட்டு விடும். தண்ணீர் வருகிறதா என்று பார்க்க குடம் எடுத்துச் சென்ற காவலர் இல்லை என்று சொல்லி விட்டார். அவரிடமே காசு கொடுத்து பாட்டில் தண்ணீர் எடுத்து வரச் சொன்னேன். 25 ரூபாய். அதை குடத்தில் ஊற்றி விட்டு பாட்டிலை திருப்பி எடுத்துப் போனார். பழைய தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இன்றைக்கு வெளியில் போகும் போது இரண்டு குடங்களையும் கொடுத்து தண்ணீர் எடுத்துத் தரச் சொல்ல வேண்டியதுதான்.

துணிகளை சோப்பு போட்டு வைத்து விட்டு முகம் மழித்தேன். அதன் பிறகு துணி அலசல். துணிகள் தொங்கிக் கொண்டிருக்க குளிக்க ஆரம்பித்தேன். இதற்கிடையில் காலை உணவுக்காக ஓட்ஸ் காய்ச்சிக் கொண்டேன். உப்புமா செய்வதற்கு இருந்த வெங்காயத்தை வெட்டி வைத்தேன். குளித்து விட்டு தியானம்.

ரவையை சிறிதளவு வறுத்து விட்டு, வெட்டி வைத்திருந்த பாதி வெங்காயத் துண்டுகளை, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு தாளிப்புடன் வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டேன். இதற்கிடையில் போக வேண்டிய இடங்களுக்கு தொலைபேசி முடிவு செய்து கொண்டேன். இணையத்தில் இணைந்து மின்னஞ்சல்கள் பார்த்தேன். சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் பிஎஸ்என்எல் கட்டணம் செலுத்துவது, காசோலையை வங்கியில் போடுவது. வங்கி கணக்கு அட்டை, பிஎஸ்என்எல் பில் துண்டுச் சீட்டு, கட்டணத்துக்கான காசோலை என்று எடுத்துக் கொண்டேன். அவற்றை கோப்பு அட்டைக்குள் வைத்து, பையில் எடுத்தேன். முதலில் வங்கி. வங்கிக்குள் கூட்டம் இல்லை. ஆனால், 'கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை, ஒன்றும் ஆகாது' என்று உட்கார்ந்திருந்த அம்மா அறிவித்தார்கள். 'பரவாயில்லை, எழுதிக் கொடுத்து விட்டுப் போகிறேன். பிறகு கம்ப்யூட்டர் வேலை செய்த பிறகு கணக்கில் சேர்த்து விடுங்கள்' என்று படிவம் வாங்கி நிரப்பினேன். 'கணக்கு இங்கு இருப்பதுதானே' என்று உறுதி செய்து கொண்டார்கள். படிவத்தின் இணைபகுதியை திருப்பி வாங்கிக் கொண்டு கீழே வந்தேன்.

வாணியம்பாடி போவதற்கான திட்டத்தை உறுதிப் படுத்திக் கொள்ள அவர்களை அழைத்தேன். இன்னும் கணினி சரியாகியிருக்கவில்லையாம். போய் பலனில்லை. அது ரத்தானது.

அடுத்தது பிஎஸ்என்எல் கட்டணம் செலுத்துதல். அங்கும் கூட்டம் இல்லை. 2 பேர் வரிசையில் நின்றிருக்க நான் மூன்றாவது. காசோலையையும் பில் சீட்டையும் கொடுத்தால் கணினியில் உள்ளிட்டு ரசீது அச்செடுத்துக் கொடுத்து விட்டார்.

3G டேடா கார்டு பற்றி வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் கேட்டேன். ஒரு தொலைபேசி எண் தருகிறேன் என்று மொபைல் எண் சொன்னார். அவர் பெயர் கிருபாகரன் என்றும் குறித்துக் கொள்ளச் சொன்னார்.

வெளியில் வந்ததும் எண்ணை அழைத்தேன். இளமையான ஒரு குரல் பதில் சொன்னது.

'3G டேடா கார்டு வாங்க வேண்டும். அது பற்றின விபரங்கள் வேண்டும். என்ன செலவாகும்? மாதாந்திர கட்டணம் எவ்வளவு? வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?'

'2,900 ரூபாய் ஆகும் சார், அதிலேயே 1 GB யூசேஜ் சேர்த்து கொடுத்து விடுவோம். கருவியில் விலை 2,100 ரூபாய், ஆக்டிவேசன் சார்ஜ் 110 ரூபாய்' என்று பட்டியலிட்டார். '7.2 mbps வேகத்திலான மோடம் தருவோம். 1 GBக்கு 423 ரூபாய் ஆகும். இந்தியா முழுவதும் ரோமிங் பிரீ'

'எந்தெந்த ஊரில் பயன்படுத்தலாம். எல்லா ஊரிலும் வருகிறதா?'

'நீங்க எந்தெந்த ஊர்களில் பயன்படுத்துவீர்கள்? இந்தியா முழுவதும் எல்லா இடத்திலும் சேவை உண்டு'

'மெயினா வேலூரிலும் சென்னையிலும் வேண்டும்'

'சென்னையில் எந்தெந்த இடங்கள்?'

'வளசரவாக்கம், போரூர், சோழிங்கநல்லூர். இன்னொரு விஷயம். நான் பயன்படுத்துவது லினக்ஸ் கணினி. அதில் இந்தக் கருவி வேலை செய்யுமா என்று பார்க்க வேண்டும். என்ன மாடல் என்று சொன்னால் தேடிப் பார்ப்பேன்'

'7.2 mbps மோடம், நீங்க லேப்டாப்பை கொண்டு வாங்க, செட் செய்து விடலாம். நீங்க மதியம் 2 மணிக்கு மேல் வாங்க, இப்போ நான் வெளியில் ஒரு பயிற்சியில் இருக்கிறேன். மதியத்துக்கு மேல் வாங்க'

'பணம் செக்காக கொடுக்கலாமா, கேஷ்தான் தர வேண்டுமா?, என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?'

'கேஷ்தான் சார், உங்க ஐடி புரூப், ஒரு போட்டோ அவ்வளவுதான். அதில் இருக்கும் முகவரியையே எடுத்துக் கொள்ளலாம். தலைமை தபால் நிலையம் அருகில் வந்து விடுங்க, பழைய பேருந்து நிலையம் தாண்டி ஊரிஸ் காலேஜ் எல்லாம் போகும் வழியில்'

நினைத்ததை விட வேகமாக நடக்கிறதே என்று வீடு வந்து சேர்ந்தேன். மதிய உணவுக்கு சோறு ஒரு பாத்திரத்திலும், சிறுபயறு இன்னொரு பாத்திரத்திலும் வைத்தேன். வெட்டி வைத்திருந்த இன்னொரு பாதி வெங்காயத்தையும் போட்டு பருப்பை தாளித்துக் கொள்ளலாம்.

அது வெந்து கொண்டிருக்கும் போது இணையத்தில் பிஎஸ்என்எல் 3G அட்டை பற்றி தேடினேன். லினக்சில் எப்படி பயன்படுகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை வட்டத்தில் ஒருவர் ஒரு பக்க வழிகாட்டி இணையத்தில் போட்டிருந்தார், பிஎஸ்என்எல் அதிகாரிதான். கர்நாடகா வட்டத்தில் ஒரு பெரிய கையேடு பிடிஎப் ஆகி வெளியிட்டிருக்கிறார்கள்.

இவற்றைத் தவிர இந்தியா பிராட்பேண்ட் பாரம், இன்னொரு வலைப்பதிவில் விபரங்கள் கிடைத்தன. இணைப்பு வேகம் எல்லோருக்கும் நன்றாக கிடைக்கிறது. லினக்சில் இயக்குவதற்கான வழிகளும் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தன. wvdial நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த விபரங்களை கணினியில் சேமித்துக் கொண்டேன். மதியம் போகும் போது பயன்படலாம்.

வீட்டை தூத்து துடைக்க அம்மா வந்தார்கள். அவர்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தொலைக்காட்சியில் வரும் தொடர்களைப் பற்றிச் சொல்லி விஜய் டிவி தொடர் ஒன்றை வைத்து பார்க்க ஆரம்பித்தார்கள். 'போன வாரம் இப்படித்தான் டிராமா பார்க்கலாம் என்று பார்த்தால், கரண்ட் இல்லை. அப்பதான் கீழே கேட்டேன். 'கட்டணம் கட்டாததால் கரண்ட் கட்டாகி விட்டது. என்னிடம் தருவதாகச் சொன்னார், எனக்கு நேரம் இல்லை என்று செக்யூரிட்டி சொன்னார்.' நான் கட்டியிருப்பேன் அல்லவா, இனிமேல் இப்படி ஏதாவது செய்யணும் என்றால் என்னிடம் சொல்லு' என்றார்.

வயிறு இன்னமும் சமாதானம் ஆகியிருக்கவில்லை. மதிய உணவு சாப்பிட்டு விட்டு உட்காரும் போது 2 மணி. 2 மணிக்கு மேல் வரச் சொல்லியிருக்கிறார் என்று உடனேயே புறப்பட்டு விடவில்லை. 2.30க்கு அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்து விட்டது.

'என்ன சார், வருவதாகச் சொன்னீங்களே, இன்னும் வரவில்லையே'. ஆச்சரியமாயிருந்தது, இவ்வளவு வாடிக்கையாளர் சேவையா!

உடனேயே புறப்பட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பினேன். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு. 'உங்க ஐடி புரூபில் இருக்கும் முகவரியை சொல்லுங்க சார்' என்று குறித்துக் கொண்டார். 'நீங்க எப்படி வருவீங்க பைக்கிலா' என்று கேட்டு பேருந்து என்று சொன்னதும், 'ராஜா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கிக்கோங்க, அங்கிருந்து அழைத்தால் நானே வந்து அழைத்துப் போகிறேன்'. இவர் உண்மையிலேயே பிஎஸ்என்எல் ஊழியர்தானா அல்லது வேறு ஏதாவது முகவரா என்று சந்தேகமே வந்து விட்டது.

போவதற்கு முன்பு wvdial நிறுவிக் கொள்வது என்று நிறுவிக் கொண்டேன். மடிக்கணினி, அதற்கான வயர், போட்டோ, காசோலை ஒன்றும் கூட எடுத்துக் கொண்டேன். ஓட்டுனர் உரிமம் நகல் எடுப்பதற்கு வழியில் முடியவில்லை.

பேருந்து நிறுத்தத்தை நெருங்கும் போது 3 பேருந்துகள் நின்று கிளம்பி போயின. கொஞ்ச நேரம் காத்திருந்து தனியார் பேருந்தில் ஏறிக் கொண்டேன். கூட்டம் குறைவான நேரம் எல்லா இடத்திலும் நின்று நின்று ஆள் ஏற்றிப் போனார்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி விட்டது.

ராஜா தியேட்டர் கட்டணம் 4 ரூபாய். ஓடைப் பிள்ளையார் கோவிலில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்கும் 4 ரூபாய் பழைய பேருந்து நிலையம் தாண்டியும் 4 ரூபாயா என்று நினைத்துக் கொண்டேன். ஊரிஸ் கல்லூரி தாண்டி இறங்க வேண்டும் என்று எண்ணம்.

பழைய பேருந்து நிலையம் தாண்டிய பிறகு அருகில் வந்த நடத்துனரிடம் ராஜா தியேட்டர் நிறுத்தம் வந்தால் சொல்லும்படி கேட்டால், அடுத்த நிறுத்தம்தான் என்றார். 'ஊரிஸ் கல்லூரி அருகில் என்று சொன்னாங்களே' என்று தெளிவு படுத்திக் கொண்டு இறங்கி, தொலைபேசினால் சரியான இடம்தான்.

எதிரிலேயே பாரத ஸ்டேட் வங்கி, தலைமை தபால் நிலையம் இருந்தன. சாலையைக் கடந்து தபால் நிலையம் வரச் சொன்னார். தபால் நிலையம் அருகில் வந்து திரும்பவும் அழைத்தேன் அவரை எங்கு தேடுவது. தபால் நிலையத்துக்கு பின்புறம் பிஎஸ்என்எல் ஆபீஸ் இருக்கிறது.

கொஞ்சம் பூசியது போன்ற உடல்வாகுடன், உருண்டையான முகத்துடன் சுமார் 40+ வயதுள்ளவர் வந்தார். நேர்த்தியான சீருடை அணிந்திருந்தார். மகிழ்ச்சியாக கை குலுக்கினார். வாடிக்கையாளர் மையத்துக்குப் போய் பதிவு செய்ய வேண்டும், கொஞ்சம் காத்திருங்கள் என்று சொன்னார். அருகிலேயே இருந்த ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு, அடையாள அட்டை நகலுக்கு நகலகத்துக்குப் போய் வந்தேன். காத்திருக்கச் சொன்ன இடத்துக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன். அவரது அலுவலகம் அங்குதானாம்.

அந்த இடத்தில் நிறைய குரங்குகள் உலாவிக் கொண்டிருந்தன. 5-10 நிமிடங்களில் வந்தார். 'என்ன சார், இங்கேயே உட்கார்ந்துட்டீங்க' என்று அங்கலாய்த்துக் கொண்டே உள்ளே அழைத்துப் போனார். பெரிய, பழைய கால அலுவலக கட்டிடம். ஒரு அறையை சாவி கொண்டு திறந்தார். உயரமான கூரையுடன் அறை. நடுவில் மேசை, ஒரு தொலைபேசி. சுவர்களில் பிஎஸ்என்எல் போஸ்டர்கள். இப்போது சந்தேகமாக இருந்தது, இவர் உண்மையில் பிஎஸ்என்எல் ஊழியர்தானா?

அவரது நட்பான அணுகுமுறையும் பேச்சும் பிஎஸ்என்எல் பாணியில் இல்லா விட்டாலும், உடை, முகபாவம், அறையின் எளிமை தனியார் நிறுவனமாக இருப்பதை ரூல் அவுட் செய்தது. ஒரு சின்ன அட்டை கவரில் இருந்து கருவியை எடுத்தார். விண்ணப்ப படிவத்தை நிரப்பச் சொன்னார். எனது தொலைபேசியை வாங்கி அதில் சிம்மைப் போட்டு ஆக்டிவேசன் செய்ய ஆரம்பித்தார்.

இந்த சிம்மை தொலைபேசி கருவியில் போட்டு பேசவும் பயன்படுத்தலாம், 3G கருவியில் போட்டு 3G எண்ணாகவும் பயன்படுத்தலாம், கணினியில் டேடா கார்டை போட்ட பிறகு மென்பொருளை பயன்படுத்தி தொலைபேசுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றவையும் செய்யலாமாம்.

விண்ணப்ப படிவத்தை நிரப்பி முடிப்பதற்குள் சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் நிலவரத்தை குறுஞ்செய்தியாகக் காட்டினார். அதன் பிறகு சிம் அட்டையை எடுத்து கருவியில் போட்டு மடிக்கணினியில் இணைக்கச் சொன்னார். நான் கொண்டு போயிருந்த வழிகாட்டி கோப்புகளின் படி wvdial.conf கோப்பை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தேன். 'அதெல்லாம் வேண்டாம் சார், தானாகவே செட் ஆகி விடும்' என்று சொன்னார்.

'லினக்சுக்கும் அப்படி மென்பொருள் செய்து விட்டார்களா என்ன, பரவாயில்லையே!' என்று சொல்லிக் கொண்டே கருவியை வாங்கி சொருகிறேன். ஓரிரு நிமிடங்களில் நெட்வொர்க் மேனேஜரில் அடையாளம் காணப்பட்டு சின்னம் காட்டியது. அதன் மீது கிளிக்கினால், enable mobile broadband இருந்தது, அதை கிளிக் செய்து விட்டு wvdial ஓட விட்டால் டிவைஸ் இல்லை என்று வந்தது. டிவைஸ் பெயரை மாற்ற வேண்டும்.

ACM என்று டிவைஸ் செட் ஆகியிருந்தது. நெட்வொர் மேனேஜரில் அதைப் பார்த்து wvdial.confல் மாற்றி இயக்கினால் இணைந்து விட்டது.

அருகில் கிருபாகரன் காத்திருந்தார். 'ஒண்ணும் செய்யாதீங்க சார், காத்திருங்க, அதுவே வரும். நான் விளக்கமாகச் சொல்கிறேன்'  என்றார். நான் கூகுள் குரோமை இயக்கி இணையத்தில் இணைத்துக் காட்டியதும் நம்பவே முடியவில்லை. 'எப்படி சார், சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகாம கனெக்ட் ஆகவே செய்யாதே, இது என்னெவென்று புரியவில்லையே' என்றார்.

'அதுதான் நான் முதலிலேயே சொன்னேன். இதில் இருக்கும் சாப்ட்வேர் விண்டோசுக்கு எழுதியிருப்பார்கள், லினக்சின் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று நான் இணையத்தில் இருந்து எடுத்து வந்த முறையைப் பயன்படுத்தி இணைத்துக் கொண்டேன்' என்று விளக்கினேன்.

'அந்த சாப்ட்வேர் இல்லை என்றால், குறுஞ்செய்தி அனுப்புவது, கணக்கில் மீதி விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?' கர்நாடகா பிஎஸ்என்எல் கொடுத்திருந்த கையேட்டில் லினக்சில் சாப்ட்வேர் நிறுவுவதற்கான வழி கொடுக்கப்பட்டிருந்தது. நான் நிறுவிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.

'சிம் கணக்கில் குறைந்த பட்சம் 50 ரூபாய் இருக்க வேண்டும். அதை டாப் அப் செய்து கொள்ள வேண்டும். பிரவுசிங்குக்கு ரீசார்ஜ் செய்யலாம். 1GB - 403 ரூபாய், 0.5 GB - 202 ரூபாய், 25 MB - 101 ரூபாய், 5GB - 751 ரூபாய், 2GB - 716 ரூபாய் எல்லாமே 1 மாத வேலிடிட்டிதான். 5GB கட்டணம் டிசம்பர் 31 வரை ஆபர்தான். அதற்கு பிறகு வேறு ஆபர் வரலாம். சிம் எண 9445040622. ஆரம்ப ஆக்டிவேஷனில் 200 MB பயன்பாடு உள்ளடங்கியிருக்கிறது. அதன் பிறகு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.'

'வெளிப்படையாக சொல்லப்போனால், மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. காலையில் உங்களிடம் பேசினேன். இப்போ இணையத்தில் இணைந்தாகி விட்டது. பிஎஸ்என்எல்லில் இப்படி ஒருவரை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி.' முகத்தில் உணர்ச்சிகளை அதிகம் காட்டாத மனிதர். கேட்டுக் கொண்டார்.

'எங்களை எப்படியாவது அழித்து விடணும் என்று மேலிடத்தில் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் சார். தனியார் நிறுவனத்துக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். எங்களுக்கு நார்ம்ஸ் என்று அதே வசதியை மறுக்கிறார்கள். ஐடியா செல்லுலர் காரன் மைக்ரோவேவ் பயன்படுத்தி இணைப்பு தருகிறான். நாங்கள் அப்படி செய்ய நார்ம்ஸ் அனுமதிக்காது, அது மனித உடலுக்குக் கெடுதியாம். ஆனால் தனியார் செய்தால் கெடுதியை யாரும் கண்டு கொள்வதில்லை. உங்களை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு சப்போர்ட் செய்யணும் சார்'

'நிச்சயம் செய்கிறோம் சார். நானும் நான்கு நண்பர்களுக்கு நிச்சயம் இது பற்றி சொல்வேன்'

அவரது விசிட்டிங் கார்டு தந்தார். 'எப்பொழுது வேண்டுமானாலும் கூப்பிடுங்க சார், கார்டு கொடுத்தாச்சு என்று நாங்கள் பேசாம இருக்க மாட்டோம். ஏதாவது சந்தேகம் இருந்தால் பேசுங்க. உங்களை மாதிரி பெங்களூரில் வேலை பார்க்கும் ஒருத்தர் வாங்ககிக் கிட்டு போனார். நாட்றாம்பள்ளி வரை காரில் இணைப்பு தொடர்ந்து இருந்ததாம். பெங்களூர் போய் பேசினார்' என்று விபரங்கள் சொன்னார்.

புறப்படும் போது 'டீ குடிக்கலாமா' என்று கேட்டார். சரி என்று வெளியில் வந்தால், அந்த வளாகத்திலேயே இருந்த ஒரு டீக்கடையில் 2 டீ சொன்னார். நன்றாக இருந்தது. என்னை காசு கொடுக்க மறுத்து விட்டார். 'அவர் வாங்க மாட்டாரே' என்று தானே கொடுத்து விட்டார். இவ்வளவு நல்லவராக இருப்பது உண்மைதானா என்று சந்தேகம்தான் ஏற்படுகிறது. விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

ராஜா தியேட்டர் நிறுத்தத்தில் பேருந்தில் ஏறி சிஎம்சி தாண்டி உட்கார இடம் கிடைத்தது. ஓடை பிள்ளையார் கோவில் நிறுத்தத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்தேன். மின்னிணைப்பு இல்லை. டேடா கார்டை இணைத்தால் வேலை செய்தது. இருட்டிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வினவு கருப்பு பண கட்டுரையில் அதியமானுக்கு பதில் போட்டுக் கொண்டிருந்தேன். ஏற்றுமதி வருமானத்துக்கு வருமான வரி கிடையாது என்பது தவறான தகவல் என்று சுவாமி கட்டுரையில் இருந்தது.

தொலைபேசி கேட்டால் அந்த 80 HHC பிரிவை 8 ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்து விட்டார்கள் என்று சொன்னார். 'நாம் எவ்வளவு லாபம் காட்டுகிறோமோ, அதில் 33% கட்ட வேண்டியதுதான்' என்றார். 'என்ன சார், பேசி ரொம்ப நாளாச்சு, இங்கதான் இருக்கீங்களா? அல்லது வெளிநாடு ஏதாவது போய் விட்டீங்களா' என்று கேட்டார். 'அடுத்த வேலை சொல்லுங்க சார்' என்று சுமுகமாக முடித்தேன். இன்னொரு டேனரி கட்டியிருக்கிறார்களாம்.

6.15 ஆகியிருந்தது. வேலாயுதம் படம் பார்க்கப் போகலாம் என்று கிளம்பினேன். பாலாஜி தியேட்டரில் ஈ ஆடியது. சீட்டு வாங்குமிடத்தில் படம் எப்போது ஆரம்பித்தது என்று கேட்டால் அந்த நேரத்தையே சொன்னார். நுழை வாசலில் 10 நிமிடம் ஆச்சு என்றார்கள்.

ஜெனிலியாவை துரத்தி முரடர்கள் கொல்லும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. துக்கடாக்களால் இணைக்கப்பட்ட திரைப்படம். முதலில் அந்த பயங்கர காட்சி. தொடர்ந்து கிராமத்தில் விஜய், அவரது தங்கைக்கு இடையிலான உறவைப் பற்றிய துண்டுக் காட்சிகள், அதன் பிறகு சென்னைக்கு வந்து வில்லன்களைப் பற்றிய துண்டுகள் என்று எந்த லாஜிக்குகளுக்கும் உட்படாத மொக்கையான படம். கொடுமைப் படுத்தாமல், சகிக்கும்படியாக எடுத்திருப்பதுதான் ஒரே வெற்றி. முஸ்லீம் தீவிரவாதிகள், மந்தை போல பெண்களை அடைத்து கொடுமை செய்வது, கள்ள நோட்டு என்று சுபா கதை போல ஓடியது. சுபாதான் கதை வசனம் என்று நினைக்கிறேன்.

கிராமத்துக்கு திரும்பி வந்து மாமா மகளை கைப்பிடித்து நடனம் ஆடும் போது இதற்கு மேல் தாங்காது என்று எழுந்து வந்து விட்டேன். வழியில் கடையில் ஹார்லிக்ஸ் நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தால் கரண்ட் இல்லை. இருட்டில் நூடுல்ஸ் வைத்து விட்டு உட்கார்ந்து இணையத்தில் பார்த்தால் திரும்ப இணைப்பு வந்தது. இதற்கிடையில் கேஸ் தீர்ந்து விட, இரவு உணவுக்கு விழுந்தது மண். ஆரஞ்சு உரித்துச் சாப்பிட்டுக் கொண்டேன். 10 மணிக்கு தியானம், பிறகு தூக்கம். காலையில் 6 மணிக்கு மேல் எழுந்திருத்தல்.

செவ்வாய், மார்ச் 29, 2011

பணி முறைகள்


இன்றைக்கு ஆம்பூர் போக வேண்டும், அதற்கு முன்பு கொஞ்சம் வேலைகளையும் முடித்து விட வேண்டும். ஒரு மணி நேர வேலை இருக்கும். ஆம்பூருக்குச் சீக்கிரமாகப் போய், 12 மணிக்கெல்லாம் புறப்பட்டு விட வேண்டும்.

நேற்று இரவு தூங்கும் போது தாமதமாகி விட்டது. சீன மொழி பெயர்ப்பு கடைசியாகச் செய்தது 4 ஆண்டுகளுக்கு முன்பு. இடைப்பட்ட காலத்தில் இணையத்தில் கிடைக்கும் வசதிகள் பெருகியிருக்கின்றன. சீன மொழி கற்ற பிறகு ஒரு சீன மொழி புத்தகத்தை வாசிப்பது ஐரோப்பிய அல்லது இந்திய மொழிகளைப் படிப்பது போல 3 மடங்கு சிரமமானது.

ஆங்கிலம் கற்கும் போது 26 எழுத்துக்களையும் அவற்றின் உச்சரிப்பையும் தெரிந்து கொண்டால், புத்தகத்தில் பார்க்கும் எந்த சொல்லையும், அகராதியில் தேடி பொருள் தெரிந்து கொள்ளலாம். ஒரு வாக்கியத்தில் மூன்று நான்கு சொற்கள் புதிதாக இருந்தால், ஒவ்வொன்றுக்கும் அகர வரிசை அகராதியில் தேடி பொருள் பார்த்து புரிந்து கொள்வதற்குள் படிப்பதற்கான ஆர்வம் வடிந்து விடும். இது எல்லோருக்கும் பழக்கமான ஒன்று.

இதை விட 3 மடங்கு சிரமத்தைப் பெருக்கிக் கொண்டால் சீன மொழி புத்தகம் வாசிப்பதன் சிக்கல்கள் புரியும். சீன மொழியில் மேற்கத்திய, இந்திய மொழிகளைப் போல ஒலி வடிவ எழுத்துக்கள் கிடையாது. எழுத்துருவங்கள்தான் (சித்திர எழுத்துக்கள்) .

ஒவ்வொரு எழுத்துருவத்துக்கும் ஒரு பொருள் உண்டு. அதன் வடிவம் பொருளை மட்டும் அல்லது பொருளுடன் அதன் உச்சரிப்பையும் குறிப்பதாக இருக்கும். இதற்கு முன்பு பார்த்திராத ஒரு எழுத்துருவத்தின் உச்சரிப்பை ஓரளவு ஊகிக்க மட்டும்தான் முடியும். சரியான உச்சரிப்பு யாராலும் உறுதிபட சொல்ல முடியாது.

அன்றாட புழக்கத்தில் இப்படி 2000-3000 எழுத்துருவங்கள்  இருக்கின்றன. கொஞ்சம் பழைய இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் 40,000 எழுத்துருவங்கள் வரை சந்திக்கலாம்.

புதிய சொல்லின் பொருள் தெரிந்து கொள்ளும் முறை:

1. முதலில் எழுத்துருவத்தில் பகுதிகளை பிரித்து அடிப்படை பகுதியை அடையாளம் காண வேண்டும், அதில் எத்தனை கோடுகள் இருக்கின்றன என்று எண்ணி, அந்த கோடுகளின் எண்ணிக்கையில் வரிசைப் படுத்தப்பட்ட அடிப்படைஎழுத்துருவ அட்டவணையில் தேட வேண்டும்.

ஒவ்வொரு அடிப்படை எழுத்துருவமும் நான்கைந்து முதல் நூற்றுக்கணக்கான கூட்டு எழுத்துருக்களை உருவாக்கலாம்.

கூட்டு எழுத்துருவங்களை, அடிப்படை எழுத்துருவங்களின் வரிசையில் பிரித்து இரண்டாவது (பெரிய) அட்டவணை கொடுத்திருப்பார்கள்.  அடிப்படை எழுத்துருவ அட்டவணையில் (முதல் அட்டவணை), தேடும் அடிப்படை எழுத்துருவத்தால் உருவாக்கப்படும் கூட்டு எழுத்துருவங்கள், கூட்டு எழுத்துருவங்களின் அட்டவணையில் (இரண்டாவது அட்டவணை) எந்த இடத்தில் இருக்கின்றன என்று எண் கிடைக்கும்.

2. வரிசை எண்ணை வைத்து அதன் கீழ், அடிப்படை எழுத்துருவத்தைத் தவிர்த்து எத்தனை கோடுகள் இருக்கின்றனவோ அந்த எண்ணிக்கையின் கீழ் குறிப்பிட்ட கூட்டுஎழுத்துருவத்தைத் தேட வேண்டும் (சில நூறு கூட்டுஎழுத்துருவங்கள் வரை இருக்கலாம்). அப்படி தேடிப் பிடித்தால் குறிப்பிட்ட கூட்டு எழுத்துருவத்தின் பக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

3. இதற்குப் பிறகு ஆங்கில அகராதியில் இருப்பது போக ஆங்கில உச்சரிப்பின் (பின்யீன் முறை) அகர வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும் அகராதி பக்கங்களில் 2ல் கிடைத்த பக்க எண்ணுக்குப் போய் குறிப்பிட்ட கூட்டு எழுத்துருவின் பொருளை தெரிந்து கொள்ளலாம்.

படிக்கும் புத்தகம் ஒரு புறம், பொருள் தேட அகராதி இன்னொரு கையில் என்று படிப்பது மலையேறி எலி பிடிப்பது போலத்தான். இங்கு ஒரு ஆசிரியரின் உதவி மிக பலனுள்ளதாக இருக்கும்.

இணையத்தில் நாம் படிக்கும் புத்தகத்தின் மென்பதிப்பு சீன எழுத்துருவங்களில் கிடைத்து விட்டால், அந்த உரையை பின்யீன் உச்சரிப்பாக மாற்றிக் கொடுக்கும் கருவிகள் வந்திருக்கின்றன. கூடவே எழுத்துருவங்களின் பொருளையும் காட்டும் வசதியும் இருக்கின்றது.

உரையை ஒத்தி ஒட்டி annotate என்று பொத்தானை அழுத்தினால், சீன எழுத்துருவம் ஒவ்வொன்றுக்கும் மேல் பின்யீன் உச்சரிப்பு, எழுத்துருவத்தின் மேல் சுட்டியைக் கொண்டு போனால், அதன் அகராதி பொருள் என்று பல மணி நேரங்கள் பிடிக்கக் கூடிய வேலை சில நிமிடங்களில் தயாராகி விடுகிறது.

ஆQவின் கதையை மொழிபெயர்க்கும் முயற்சியில் இணையத்தைப் பயன்படுத்தாமல் உழன்று கொண்டிருந்து விட்டு நேற்று இணையத்தில் தேடியதில் இந்தக் கருவிகள் கிடைத்தன.

1. கதை முழுவதும் சீன எழுத்துருவத்தில் உரையாக கிடைத்ததை சேமித்து வைத்துக் கொண்டேன்.
2. முதல் அத்தியாயத்தை பெட்டியில் இட்டு பின்யீன் மேற்குறிப்புகளை உருவாக்கி சேமித்துக் கொண்டேன்.
3. முதல் அத்தியாயத்தின் பொருளுடன் கூடிய மேற்குறிப்புகளையும் சேமித்துக் கொண்டேன்.

இப்போது ஆங்கில அல்லது தமிழ் புத்தகம் படிப்பது போல முழு உரையையும் சரளமாக படித்துச் செல்ல முடிந்தது. பொருள் தெரியாத இடத்தில் சுட்டியை எழுத்துருவத்தின் மீது அசைத்தால் பொருளும் தெரிந்து விடுகிறது.

பல்வேறு கருவிகளை முயற்சித்து எதைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து மேற்குறிப்புகளை உருவாக்கி, உருவாக்கிய பக்கங்களைப் படித்துப் பார்ப்பதில் இரவு ஒன்பதரை மணி ஆகி விட்டிருந்தது. இதன் பிறகு தூங்குவதற்கு 10 அடித்து விட்டது.

நேற்றுக் காலையில் நான்கு மணிக்கு முன்னதாகவே எழுந்திருந்தேன். சாப்பிட்ட ஏதோ ஒன்று வயிற்றுக்கு சங்கடத்தைக் கொடுத்தது. எனது சந்தேகம், திங்கள் கிழமை மதியம் ஆர்யா உணவு விடுதியில் சாப்பிட்டதுதான். நாட்குறிப்பு எழுதுவது கொஞ்சம் திக்கித் திக்கித்தான் ஓடியது. 10 நிமிடங்கள் முன்னதாகவே நிறுத்தி விட்டு, நடைக்குக் கிளம்பினேன்.

காட்பாடி நோக்கி போகலாம் என்று நினைத்திருந்ததை மாற்றி அதே மதிநகர் சாலை திசையில் போய் காட்பாடி சாலை வந்ததும், சாலையைக் கடந்து காந்திநகர் கிழக்கு பிராதான சாலையில் நடக்கலானேன். அனுக்ரஹா தாண்டி பேருந்து போகும் சாலை வரை போய் இடது புறம் திரும்பினேன். அந்த சாலையில் கொஞ்ச தூரத்திலேயே மணி அடித்து விட, அடுத்து வந்த இடது சாலையில் திரும்பி விட்டேன். கல்யாண மண்டபம் நிறுத்தத்துக்கு முந்தைய திருப்பம்.

இங்கும் கடைசி வரை நடந்து பேருந்து ஓடும் சாலைக்கு வராமல் முந்தைய இடத்திலேயே திரும்பிக் கொண்டேன். இவ்வளவு குறைத்தும் கோபாலபுரம் முனை திரும்பும் போது மணி அடித்து விட்டிருந்தது.

திட்டமிட்டிருந்தபடி, துவைக்க வேண்டிய துணிகளை காலையிலேயே சோப்புத் தண்ணீரில் ஊற வைத்திருந்தேன். அரைப்பதற்கு அரிசி/உளுந்தும் அடுக்களையில். வீட்டை சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவி, சமையல் மேடை, அடுப்பைத் துடைத்து விட்டு துணி துவைக்க இறங்கினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு துவைப்பதால் நிறைய சேர்ந்து விடவில்லை. 10-15 நிமிடங்களில் முடிந்து விட்டது. முகம் மழித்து குளித்து விட்டு மாவு அரைப்பு, தொடர்ந்து தியானம். அதன் பிறகு துணிகளை மாடியில் கொண்டு போய் காயப்போட்டு விட்டு, கணினியை இயக்கினேன். இன்னும் 8 மணி ஆகியிருக்கவில்லை.

8 மணிக்கு சாப்பிடலாம் என்று இணையத்தில் போனால், சில நிமிடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. சாப்பிடப் போய் விட்ட பிறகு கொஞ்ச நேரத்தில் மீண்டும் வந்தது. defeatcongress என்ற டுவிட்டர் பரப்புரை இரவில் சூடு பிடித்து இந்திய அளவிலான டிரெண்டிங்கில் வந்து விட்டிருந்தது. அதைப் பற்றிய ஓரிரு செய்திகளைச் சேர்த்து விட்டு, மின்னஞ்சல்கள், செய்திகள், கூகுள் பஸ் என்று மேய்ந்து கொண்டிருந்தேன்.

கூகுள் பஸ்சில் நேரடியாகத் தெரிந்தவர்கள், அல்லது பஸ்சுக்கு வெளியில் மின்னஞ்சல் மூலம் இணையத் தொடர்பு வைத்திருந்தவர்கள் கூடவே, படிக்க விரும்பும்படி எழுதும் சிலர் தவிர மற்றவர்களை பின்தொடர்வதை நிறுத்த ஆரம்பித்தேன். அதனால் பஸ்சில் வரும் இடுகைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து மனதில் சேரும் தகவல்களின் அளவும் குறைய ஆரம்பித்தது.

நாகப்பட்டினத்தில் பதிவு செய்த காணொளிகளில் ஒன்றை யூடியூபில் சேர்த்தேன். பிற்பகலில் இன்னும் இரண்டைச் சேர்க்க முடிந்தது. சாப்பிட்டு முடித்து விட்டு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பித்தேன்.

முதலில் பணிவிபரங்களை விரிதாளில் தொகுத்து மின்னஞ்சல் அனுப்பினேன். முடித்து பயன்பாட்டு பதிப்பில் சேர்த்து விட்டவை, சரிபார்க்கும் தொகுப்பில் ஒப்புதலுக்காக காத்திருப்பவை, சரிபார்க்கும் தொகுப்பில் சோதனையில் இருப்பவை, இன்னும் பணி ஆரம்பிக்காதவை என்று குறிப்பிட்டு அனுப்பியதும் பெருமளவு தெளிவும் ஏற்பட்டது.

தொடர்ந்து பயன்பாட்டு பதிப்பில் கேட்டிருந்த அறிக்கைகளை வடிவமைக்க ஆரம்பித்தேன். வடிவமைக்கும் போது இன்னும் சில கணக்கீடுகளைச் சேர்க்க வேண்டியிருக்க, அவற்றைச் சேர்த்து அறிக்கைகளை வடிவமைத்து, அவற்றை பயனரின் முதல் பக்கத்தில் சேர்ப்பதில் காலை நேரம் முழுவதும் போனது. பதினொன்றரைக்கெல்லாம் அதை முடித்து மூடி வைத்து விட்டு, வங்கிக்குப் போகலாம் என்று தயாரானேன்.

ஞாயிற்றுக் கிழமை கடைக்குப் போகும் வழியில் இந்த வங்கிக் கிளையின் கதவு திறந்திருப்பதையும் வாடிக்கையாளர்கள் போய் வருவதையும் கவனித்திருந்தேன். சென்ற வாரம் வேலை நாள் ஒன்றில் கதவு மூடப்பட்டிருந்ததும் நினைவில் இருந்தது. 'ஒரு வேளை ஞாயிற்றுக் கிழமை பணி செய்து, திங்கள் கிழமை ஓய்வு எடுக்கும் முறை இருக்குமோ' என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் கோப்புப்பட்டியில் தேவையான முகவரிச் சான்று, அடையாள சான்று ஆவணங்களை எடுத்துக் கொண்டு, வங்கி கணக்கு அட்டையையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். நகலகத்தில் அவற்றுக்கான நகல்களை எடுத்துக் கொண்டு வங்கியை நோக்கி.

HDFC வங்கி, இந்தியன் வங்கி கிளைகள், ஐசிஐசிஐ வங்கி, ஆந்திர வங்கி பணம் எடுக்கும் மையங்கள் என்று பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று கிளைகளுடன் என்று எண்ணிக் கொண்டு நடந்தேன். போக வேண்டிய பாரதவங்கிக் கிளையின் கதவு மூடப்பட்டுத்தான் இருந்தது. நாளைக்குத்தான் பார்க்க வேண்டும்.

திரும்பி வரும் வழியில் ஆம்பூர் வாடிக்கையாளருக்கு தொலைபேசி இன்று அங்கு போகவிருப்பதன் திட்டத்தையும் செய்ய வேண்டிய பணிகளையும் குறித்துப் பேசினேன். எதுவும் சிக்கல்கள் இல்லாமல் பயன்படுத்துகிறார்கள். அவர்களது நிர்வாக இயக்குநரும் அறிக்கைகளைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறாராம். வங்கி வேலையை முற்பகலில் முடித்து விட்டு மதியம் 2 மணிக்கு போகலாம் என்று திட்டமிட்டு அவரிடம் தகவல் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து அவர் அழைத்து மதியம் பொது மேலாளர் வெளியூருக்குப் புறப்படுகிறாராம். காலையில் வந்தால் சந்திக்க வசதியாக இருக்கும் என்றார். அப்படியே செய்தவாகச் சொன்னதன் விளைவு, இன்றைக்கு 8 மணிக்கெல்லாம் புறப்பட்டு 9 மணிக்குள் அங்கு போய் வேலை ஆரம்பித்து 12 மணிக்குப் புறப்பட்டு விட வேண்டும்.

நேற்று வைத்த சாம்பார் நிறையவே மீதி இருந்தது. அது கெட்டுப் போய் விடாமல் இருக்க தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் அந்த பாத்திரத்தைக் காலையில் வைத்திருந்தேன். 11 மணிக்கெல்லாம் சூடு படுத்தி விட்டு, உயர் அழுத்தக் கலனில் சோறும் செய்து விட்டிருந்தேன். வங்கியிலிருந்து வந்ததும் மீதியிருந்த வெண்டைக்காய்கள், கூடவே உருளைக்கிழங்கும் வெட்டி பொரியல் செய்து கொண்டேன். இப்போது மின்இணைப்புக் கிடையாதுதான்.

சாப்பிட்டு விட்டு சிறிது நேர இளைப்பாறல். நாளிதழும் பத்திரிகைகளும் படிப்பதற்கு இல்லாததால், செழியனின் அரசியல் கட்டுரைத் தொகுப்பு அல்லது சிவப்பு மாளிகைகளின் கனவு அல்லது 1919 முதல் 1949 வரை சீன வரலாறு என்ற புத்தகங்கள் படிக்கும் பட்டியலில். அந்த மதிய வேளையில் செழியனின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முடியப் போகிறது. சேர்த்து வைத்து அவ்வப்போது பல முறை படிக்க வேண்டிய புத்தகம்.

2 மணிக்கு மின்னிணைப்பு வந்து விட்டது. 3 மணிக்கு மென்பொருள் வேலை என்று திட்டம். அது வரை இணையத்தில் slashdot, தமிழ் செய்திகள், டுவிட்டர் என்று கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். 3 மணிக்கு வேலை ஆரம்பித்து ஏற்கனவே செய்து வைத்திருந்த ஒரு அறிக்கையை சோதனை பதிப்பில் சரி பார்த்து பயன்பாட்டு பதிப்பில் சேர்த்து தேவையான வடிவத்தில் அறிக்கைகள் உருவாக்கி வைத்தேன்.

இன்னொரு பணியை சரி பார்க்க ஆரம்பித்தால், சிக்கல் வந்தது. ஏற்கனவே இருக்கும் ஒரு அறிக்கையில் கூடுதல் விபரங்கள் சேர்ப்பதாக செய்திருந்தது அது. ஆனால், புதிய தகவல்களை சேர்த்ததால், அந்த அறிக்கை தரவுத்தளத்திலிருந்து வெளி வருவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரம் வெவ்வேறு வழிகளை முயற்சித்து விட்டு அந்த அறிக்கையை கெடுக்க வேண்டாம் என்று தனியாக அறிக்கை உருவாக்க முடிவு செய்தேன்.

முன்பு குழுவாக பணி புரியும் போது,

  • வாடிக்கையாளரின் தேவையை அலசி அதை மென்பொருள் மொழியில் மாற்றிச் சொல்லும் analysis என்ற தேவை அலசல், 
  • அந்தத் தேவையை எப்படி மென்பொருளில் செயல்படுத்த வேண்டும் என்ற design - நுட்ப வடிவமைப்பு, 
  • அந்த வடிவமைப்பை நிரலில் செயல்படுத்துவது - coding என்ற நிரலாக்கம், 
  • தொடர்ந்து நுட்ப சோதனை - technical testing, 
  • பயன்பாட்டு சோதனை - functional testing,
  • பயனர் ஆவணம் - user documentation 

என்று பிரித்துக் கொண்டு செயல்பட்டோம்.

ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொருத்தர் செய்வார்கள்.

தேவை அலசல், மென்பொருளில் அதிகத் தேர்ச்சி இல்லாத ஆனால் வாடிக்கையாளரின் தேவையை சிறப்பாகப் புரிந்து கொண்ட ஒருவரின் பொறுப்பு, அவரே இறுதியில் பயன்பாட்டு சோதனையும் செய்ய முடியும். பயனர் ஆவணம் எழுதலை இவர் செய்யலாம்.

நுட்ப வடிவமைப்பு, தேவை அலசலைப் புரிந்து கொண்டு, மென்பொருள் கட்டமைப்பில் தேர்ந்த ஒருவர் எழுத வேண்டும், நுட்ப சோதனை அவர் செய்ய முடியும். நுட்ப ஆவணம் எழுதலையும் இவர் செய்ய வேண்டும்.

இந்த இரண்டையும் படித்துப் பார்த்து புரிந்து நிரல் எழுதுவது இன்னொருவரின் பணி

அதன் பிறகு நுட்பச் சோதனை, பயன்பாட்டுச் சோதனை, பயனர் ஆவணமாக்கம், முடித்து வாடிக்கையாளர் பயன்பாட்டு பதிப்புக்கு கொண்டு சேர்க்கும் கட்டம் வரும்.

கொண்டு சேர்க்கும் பொதியாக மாற்றி, பயன்பாட்டு பதிப்பில் இயக்குவது இன்னொருவரின் பணி. இதில் நுட்ப அறிவு தேவைப்படும்.

பயன்பாட்டு பதிப்பில் இயக்கிய பிறகு இடைமுகத்தில் தேவையான வடிவமைப்புகள் செய்து கொடுப்பது மீண்டும் வாடிக்கையாளர் தேவை உணர்ந்தவரின் பணி.

இப்படி 9 கட்டங்களில், சில சமயங்களில் வெவ்வேறு 9 பேர் வேலைகளைச் செய்வோம். ஒருங்கிணைப்பதற்கு ஒரு மென்பொருள் பயன்பாடும் உண்டு.

இதில் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால் (இப்போது தெரிகிறது), ஒரு கட்டத்தை ஒருவர் முடித்து அடுத்தக் கட்டத்துக்கு அடுத்தவரிடம் கொடுத்த பிறகு ஏதாவது மாறுதல்களுக்காக திருப்பிக் கொடுப்பதற்கும் அப்படிக் கொடுத்தால் அதை வாங்குவதற்கும் பெரிய அளவு மனத்தடையும் நடைமுறைத் தடையும் இருந்தன.

எடுத்துக்காட்டாக, நுட்ப வடிவமைப்பு முடித்து நிரலாக்கத்துக்கு அனுப்பிய பிறகு, நிரல் எழுதுபவர் வடிவமைப்பில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று திரும்பி வரும் போது வடிவமைப்பு செய்தவர் அடுத்த பணியை ஆரம்பித்திருக்கலாம். அவர் மீண்டும் இந்த பணிக்குள் வருவதற்கு காத்திருக்க வேண்டும்.

அதே போல சோதனையிலிருந்து நிரலாக்கம், பயனர் ஆவணமாக்கத்திலிருந்து நிரலாக்கம் என்று பின் கட்டங்களில் தோன்றும் மேம்பாடுகளை செயல்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.

எல்லா கட்டங்களையும் ஒருவரே செய்யும் போது, செய்ய முடியும் போது இந்தச் சிக்கல் இல்லாமல் போகிறது. நிரல் எழுதும் போது, தேவை அலசலில் மாற்றம் வேண்டும் என்று உணர்ந்தால் உடனேயே போய் செய்து, நுட்ப வடிவமைப்பையும் ஏற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால், எல்லா கட்டங்களையும் செய்ய
- வாடிக்கையாளர் தேவை புரிந்து கொள்ளும் வல்லமை
- மென்பொருள் கட்டமைப்பைப் பற்றிய ஆழமான அறிவு
- நிரலாக்கத் திறன்
- சோதனை செய்து வழு கண்டு பிடிக்கும் ஆற்றல்,
- ஆவணம் எழுதும் திறன்
என்றும் எல்லாம் ஒருவரிடம் இருக்க வேண்டும்.

அதனால்தான் மிகச்சிறந்த மென்பொருட்கள், அல்லது எந்த ஒரு மிகச்சிறந்த படைப்பும் ஒரு குழுவால் உருவாக்க முடியாது. அப்படி குழுவால் செய்யப்படும் பணியிலும் கூறுகளான சிறுபகுதிகன் தனிநபரால்தான் உருவாக்கப்பட்டிருக்கும். பெரு நிறுவனங்களின் மென்பொருள் உருவாக்கத்தில் இப்படி செயல் திறன் அடிப்படையில் (assembly line) போல பணிகளைப் பிரிக்காமல், பன்முகத் திறன் கொண்டவர்களை மட்டும் குழுவில் வைத்திருந்து, ஒவ்வொரு பயன்பாட்டையும் ஒருவரே செய்வது போல திட்டமிட்டுக் கொள்வதுதான் பலன் தரும்.

ஆறு மாதங்களாக எல்லா கட்டங்களையும் செய்யும் போது தெளிவாக புரிந்தது இது. இப்போது செய்யும் பணிகளையும் நேர அளவையும் பதிவு செய்ய மட்டும் மேலாண்மை கருவியைப் பயன்படுத்துகிறேன்.

இப்படி முடித்து விட்டதாக நினைத்திருந்த ஒரு பணி மீண்டும் வரைவுபலகைக்குப் போய் விட, அந்த வேலையை ஆரம்பித்து பாதி முடித்தேன். நிரல் எழுதுவது ஒரு கட்டத்தில் சலித்து விட நிறுத்தி விட்டு மூடினேன்.

நாகர்கோவில் போகும் திட்டத்தை ஃபேஸ்புக்கிலும், கூகுள் குழுமத்தில் பகிர்ந்து கொண்டேன் ஃபேஸ்புக்கில் கருத்துப் பரிமாற்றம் வேகமாக நடப்பது போலத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 200 பேர் defeatcongress பக்கத்தை விரும்பியிருந்தார்கள். சாந்தப்பன் ஒரு பிளாக்ஸ்பாட் தளத்தையும் உருவாக்கி விட்டிருந்தார். அதற்கான வடிவமைப்பும் புதுமையாக தனியாக வடிவமைத்தது போல இருந்தது.

திங்கள், ஜூன் 08, 2009

கணிதம்

நேரம் 3.45

ஒரு மணிக்கு விழிப்பு வந்தது. எழுந்திருக்கவில்லை. மூன்றரை மணிக்கு எழுந்து கொண்டேன். எத்தனை ஆண்டுகள் கடைபிடித்தாலும் பழக்கமாகி விடாத ஒன்று அதிகாலையில் எழுந்திருப்பது. ஒவ்வொரு நாளும் எழுந்திருக்கும் போதும் இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று தோன்றுவதைத் தவிர்க்கவே முடிந்ததேயில்லை. அதைத் தாண்டி எழுந்திருக்க வலுவான காரணம் ஒன்று இருக்க வேண்டும். முதல் நாளில் ஏதோ உந்துதலில் எழுந்து விடுவோம். இரண்டாவது நாள் மிகவும் கடினமான கட்டம். காலையில் உடற்பயிற்சி செய்ய எழுந்திருப்பதிலும் அப்படித்தான். மூன்றாவது ஆளில் இரண்டாவது நாளை விடக் கொஞ்சம் குறைவான சுணக்கம் இருக்கும். அதைத் தாண்டி விட்டால் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஓரிரு வாரங்களுக்குப் பிறகு மனதளவிலான சுணக்கம் ஆரம்பிக்கும். இதை செய்யத்தான் வேண்டுமா, செய்வதால் என்னென்ன எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன என்று அலசி, பழக்கத்துக்கு முட்டுக்கட்டை போட முயற்சிகள் ஆரம்பிக்கும்.

பள்ளியில் படிக்கும் போது காலையில் எழுந்து ஓட ஆரம்பித்தோம். பக்கத்து வீட்டு நண்பனும் நானும். வீட்டில் ஆரம்பித்து ஆசாரி பள்ளம் சாலை போய் ராணித் தோட்டம் வரை எல்லாம் ஓடுவோம். இன்னொரு கட்டத்தில் பாலிடெக்னிக் மைதானத்தில் 10 சுற்று ஓடுவது என்று செய்து கொண்டிருந்தோம். வேகமாக ஓடுவது கிடையாது. கிட்டத்தட்ட வேகமாக நடக்கும் கதியில்தான் ஓட்டம் இருக்கும். ஆனால் உடலெல்லாம் வேர்த்து தொப்பலாக நனைந்து போய் விடும்.

கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை பேருந்தைப் பிடிக்க அண்ணா சாலையில் சில நூறு அடிகள் ஓட வேண்டியிருந்தது. பேருந்தில் ஏறியதும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி, அடைத்தது. 'என்ன இது இதைக் கூட செய்வதற்கு தவிப்பாக இருக்கிறது' என்று உறைக்க, அடுத்த நாளிலிருந்து வீட்டிற்கு எதிரிலிருந்து வற்றிய ஏரி மைதானத்தில் ஓடி உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அதுவும் பல நாட்கள் போய்க் கொண்டிருந்தது.

இந்தூரில் காலையில் எழுந்ததும், ஆறரை மணிக்கு தொழிற்சாலை போகும் பேருந்தைப் பிடிப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்கப் போவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். அதிகாலையில் எழுந்து செயல்பட ஆரம்பிப்பது ஒரு குணமாக எப்போதுமே இருந்திருக்கிறது. சாங்காயிலும் சில நாட்கள் அதிகாலையில் எழுந்து யுவேசீ யுவானைச் சுற்றி ஓடி வருவதைச் செய்திருக்கிறேன்.

நேற்றைக்கு எழுதி முடித்த பிறகு அலமாரிகளில் விரித்திருக்கும் தாள்களை மாற்றுதல், முதலில் தூங்கும் அறையில் துணிகளை வைத்திருந்த தட்டுகள். துணிகளையும் அடுக்கி இடங்களை சீர்படுத்தினேன். செய்தித் தாள் பக்கங்கள் கொஞ்சம் மொடமொடப்பாக இருப்பதாகப் பட்டது. முன்னறையில் இருக்கும் மாடங்கள் அடுத்தது. பொருட்களை தூசி தட்டாவிட்டாலும், தாளை மாற்றி அவற்றை திருப்பி வைத்ததும் ஒரு புத்துணர்வு உருவாகத்தான் செய்தது. தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி இவற்றின் மேலும் தூசி தட்டிக் கொண்டேன். செய்தித் தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் வைக்கும் தட்டையும் சீர்படுத்தி விட்டு அதற்கு மேல் இருந்த சாமி படங்கள், வழிபாட்டு பொருட்கள் இருந்ததையும் அடுக்கி வைத்தேன். அடுக்களையையும், உள்ளறையையும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று அடுத்த வேலை.

தரை தூத்து வாரி விட்டு, பாத்திரங்கள். கழுவுவதற்கு நிறைய பாத்திரங்கள் இல்லை. சாப்பிடுவதற்கு தோசை மாவு வாங்கி பாத்திரத்தில் ஊற்றி உப்பு போட்டு வைத்திருந்தேன். கடைசியாக எஞ்சியிருந்த தேங்காய்த் துண்டுகளைக் கீறி, பொரிகடலை, மிளகாய்ப் பொடி, உப்பு, புளி போட்டு அரைத்து வைத்துக் கொண்டேன். குளித்து விட்டு தியானம் செய்ய உட்காரும் போது மணி ஐந்தே முக்கால். அப்போதுதான் வெளிச்சம் வர ஆரம்பித்திருந்த நேரம். கண்கள் எரிவது போலத் தோன்றியது.

ஆறு மணிக்கு செய்தித்தாள் வந்திருக்கவில்லை. நல்ல பசி எடுத்து விட்டிருந்தது. முந்தைய நாள் செய்திகளுடன் சாப்பிட்டு விட்டுப் பார்த்தால் இன்னமும் இன்றைய செய்தித்தாள் வந்திருக்கவில்லை. இவ்வளவு சீக்கிரம் அலுவலகத்துக்குப் போனால் தொந்தரவாக இருக்கும் என்று ஏழு மணிக்குப் பிறகு கிளம்ப முடிவு செய்தேன். சோஃபாவில் படுத்து சில நிமிடங்கள் கண்ணயர்வு. ஆறு 55க்கு எழுந்து நாளிதழை சிறிது நேரம் புரட்டி விட்டுப் புறப்பட்டேன்.

கதவைப் பூட்டி விட்டு வெளியில் வந்த பிறகு சட்டைப்பையில் செல்பேசி இல்லை என்பதை உணர்ந்தேன். திரும்பவும் உள்ளே போய்ப் பார்த்தால் வழக்கமான இடங்களில் அதைக் காணவில்லை. ஏழு மணி ஆகி விட்டது என்று நேரம் பார்த்து விட்டு எழுந்து உடுப்புகளை மாட்டி விட்டுக் கிளம்பியதுதான். அதற்கான இடங்களில் போய் பார்த்தேன். இல்லை. சோஃபாவின் அருகிலும் இல்லை. சோஃபாவின் மேல் இருக்கைகளை நீக்கி விட்டுப் பார்த்தால், இல்லை. யாரையாவது தொலைபேசச் சொல்ல வேண்டுமானால் எப்படி சொல்வது. கொஞ்சம் அமைதியாக யோசித்து, மீண்டும் சோஃபா மேல் இருக்கைகளை நீக்கிப் பார்த்தால் அந்த இடுக்கில் கிடந்தது.

அலுவலகம் வந்தால் உட்கார்ந்து முதல் வேலையாக வலைப்பதிவில் எழுதியதை பதிந்தேன். 8 மணிக்கு சந்திப்பு என்று பேசியிருந்தேன். உட்கார்ந்து அவரது வேலைகளைக் குறித்தும், விற்பனை முயற்சிகளைக் குறித்தும் இணைய வழி சேவை வழங்கும் முறைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அரை மணி நேரம் கூட பேசியிருக்க மாட்டோம். வழியில் ஏதோ கோயில் திருவிழா என்று அரை மணி நேரம் நிறுத்தி விட்டார்களாம்.

உருப்படியான வேலை எதுவும் ஓடவில்லை. முந்தைய நாள் கொடுத்து போயிருந்த குறுந்தகடை மடிக்கணினியில் போட்டால் அது இயங்கியது. அடர்தகடுதான் படிக்க முடியவில்லை, குறுந்தகடு படிக்கிறது. உபுண்டு நிறுவிப் பார்க்கலாம் என்று குறுந்தகடிலிருந்து கணினியை இயக்கினேன்.

கணினியில் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஓப்பன் சூசே ஒரு பகிர்வில், இல்ல அடைவுக்காக தனியாக ஒரு பகிர்வு, கணினி துவங்க தேவைப்படும் கோப்புகளுக்கு ஒரு பகிர்வு இருந்தன. கூடவே பல மாதங்களுக்கு முன்பு நிறுவிப் பார்த்து பயன்படுத்தாமலே வைத்திருக்கும் பெடோரா கோர் இயங்குதளம் இன்னொரு பகிர்வில் இருந்தது. fedora coreஐத் தூக்கி விட்டு அந்த இடத்தில் உபுண்டு நிறுவிப் பார்க்கலாம். சேமிப்பு இடம் போதவில்லை, என்று சில வாரங்களாக நெருக்கடியில் இயங்கிக் கொண்டிருந்தேன்.

உபுண்டு நிறுவும் பயன்பாடு இயங்க ஆரம்பித்து சேமிப்புத் தகடு பகிர்வு தேர்வு செய்யும் திரை காண்பிக்கும் போது 4 GB சும்மா இருப்பதும் தெரிந்தது. தேவையான பகிர்வுகளைத் தவிர மற்றவற்றை அழித்து விடலாம். அது எவை என்று தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளலாம் என்று இன்னொரு முறை ஓப்பன் சூசே உள்ளே போய் பகிர்வு பெயர்களை குறித்துக் கொண்டு மீண்டும் நிறுவலை ஆரம்பித்தேன். பெடோரா பகிர்வையும், swap பகிர்வையும் அழித்ததும் இரண்டும் சேர்ந்து 25 GBக்கும் அதிகமாக காலி இடம் கிடைத்தது. அதில் 15GB உபுண்டுவுக்காக மீதி கோப்புகளை சேமிக்கப் பயன்படுத்தலாம்.

இப்படி வடிவமைத்து விட்டு நிறுவலைத் தொடர விட்டேன். பகிர்வுகள் மறுவடிவமைக்கப்பட்டு கோப்புகள் நிரப்பப் படும் போது கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு பிழை வந்தது. வட்டு அணுகும் கருவியில் இருக்கும் பிரச்சனையால் நிறுவல் பாதியிலேயே நின்று போனது. கணினியை இயக்கியதும் இயங்குதளத்தை தேர்ந்தெடுப்பதற்கான பயன்பாடு பெடோரா கோர் பகிர்வில் இருந்தது. இந்த நிறுவல் முழுமையாக முடிந்திருந்தால் அந்த பயன்பாட்டை உபுண்டு மாற்றி அமைத்து வழக்கமாக உபுண்டு அல்லது ஓப்பன் சூசே தேர்ந்தெடுப்பதாக வந்து விடும். இப்படி பாதியில் நின்ற பிறகு கணினியை மீண்டும் இயக்கினால், grubன் முனைய இடைமுகம்தான் வந்தது.

எப்படி சூசேக்குள் போவது என்று புரியவில்லை. கொஞ்ச நேரம் முயற்சி செய்து பார்த்தேன். ஓரிரு கட்டளைகள் கொடுத்தால் உள்ளே போய் விடலாம். அந்த கட்டளைகள் என்ன எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை. மீண்டும் உபுண்டுவுக்குள் போய் grub மறு நிறுவல் செய்ய முயற்சித்தேன். அதிலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அருகிலிருந்த கணினிக்குப் போய் இணையத்தில் grub command line என்று தேடியதில் தெளிவாக விளக்கியிருந்த ஒரு பக்கம் கிடைத்தது. முதலில் root பகிர்வை குறிப்பிட வேண்டும். அதைத் தொடர்ந்து kernel கோப்பைக் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு boot என்று சொன்னால் உள்ளே போய் விடலாம்.

சில முறை முயற்சித்து உள்ளே போய் விட்டேன். root பகிர்வை குறிப்பிடுவதற்கு grubன் இலக்கணம் கொஞ்சம் மாறுபட்டு இருந்தது. அங்கிருந்தே grub புதிதாக நிறுவி கணினியை இயக்கியதில் சூசே ஆரம்பித்து விட்டது. இதற்குள் மணி 10 தாண்டி விட்டிருந்தது.

இது போல புதிய மென்பொருள் பயன்பாடுகளை முயற்சித்துப் பார்த்து பல மாதங்கள் ஏன் ஆண்டுகள் ஆகியிருக்கும். ஓப்பன் ஆபிஸ் அடுத்த பதிவு வந்திருக்கிறது என்று ஒரு தகடு கொடுத்திருந்தார். ஆனால் அதில் இருந்தது டெபியனுக்கான பொதிகள். இந்த மாதம் இதுவரை எவ்வளவு தகவிறக்கம் ஆகியிருக்கிறது என்று பார்த்து விட்டு ஓப்பன் ஆபிசை தகவிறக்கிக் கொள்வது என்று முடிவு செய்தேன். கிட்டத்தட்ட 170 MB. ஆறு நிமிடங்களில் தகவிறக்கம் முடிந்து விடும் என்று ஃபயர்ஃபாக்சின் கணக்கீடு. அது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க காலையில் செய்து முயற்சிகளால் கிடைத்திருந்த 25 GB இடத்தைப் பயன்படுத்துவதில் இறங்கினேன். இல்ல அடைவில் இடத்தை நிரப்பிக் கொண்டிருந்த பெரிய அடைவுகளை /storage என்று 10 GB பகிர்வுக்கு நகர்த்தினேன். postgresqlன் பல்வேறு பதிப்புகளை நிறுவி வைத்திருந்த அடைவுகளை /data என்ற 15 GB பகிர்வுக்கு நகர்த்திக் கொண்டேன்.

இப்போது எல்லா அடைவுகளிலும் பாதிக்கு மேலும் கீழுமாக இடம் நிரம்பியிருந்தது. ஏதாவது செய்தால் திடீரென்று இடம் போதாமல் போய் விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. இதற்கிடையில் ஓப்பன் ஆபிசு தகவிறக்கம் முடிந்திருக்க அதை இல்ல அடைவுக்கு நகர்த்தி கோப்பை பிரித்து நிறுவிப் பார்த்தேன். ஏற்கனவே இருந்த பயன்பாட்டை பாதிக்காமல் தனியாக /opt அடைவில் நிறுவி முடிந்தது. இயக்கி பார்த்தால் முதல் முறை ஆரம்பிப்பதற்கு நீண்ட நேரம் பிடித்தது. என்ன மேம்பட்டிருக்கிறது என்று புரியவில்லை. ஒரு வாரம் பயன்படுத்திப் பார்த்து விட்டு வசதியாக இருந்தால் பழைய பதிப்பை நீக்கி விட்டு இதை மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

மாலை ஐந்தரைக்கு நம்முடைய அறிக்கை உருவாக்கும் அமைப்பு குறித்து விளக்குவதாக ஏற்றுக் கொண்டிருந்தேன். அதற்கான தயாரிப்புகளை ஆரம்பித்தேன். என்னென்ன தரவுத்தள tableகள் இருக்கின்றன என்று பட்டியலிடுதல் முதலில். இதை ஆவணப்படுத்துவது விக்கி பயன்பாட்டில் செய்ய வேண்டும். அதற்காக விக்கியில் சில மாற்றங்கள் செய்து கொண்டேன். ஓரிரு பக்கங்களில் யாரோ குப்பைகளை நிரப்பியிருப்பதைப் பார்த்து பதிவு செய்யாத பயனர்கள் உள்ளடக்கத்தை மாற்றும் வசதியை ரத்து செய்தேன். அதற்கும் இணையத்தில் தேடி வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அந்தக் குறிப்புகளையும் பதிந்து கொண்டேன்.

psqlல் html வடிவில் வெளியீடு வரும்படி அமைத்துக் கொண்டு அதை நகல் செய்து ஒட்டி மாற்றிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு அட்டவணைக்கும் ஒரு தலைப்பு என்று போட்டுக் கொண்டே வந்ததில் விக்கி பயன்பாடை அவற்றின் சுருக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டது. வரிசையாக 10க்கும் அதிகமான அட்டவைணைகள். அவற்றையும் இனவாரியாகப் பிரித்துக் கொண்டேன். ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறு குறிப்பு.

அதை முடித்த பிறகு என்னென்ன செயல்படு கோப்புகள் இருக்கின்றன என்ற பட்டியல். அதில் பட்டியல் மட்டும்தான் ஏற்படுத்த முடிந்தது. ஓரளவு முழுமையான ஆவணமாக்கல் வந்து விட்டது என்று தெரிந்ததும் நிறுத்தி விட்டு எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். ஐந்தரைக்கு இதைக் குறித்து விவாதத்துக்குப் பிறகு 6 மணிக்கு வாராந்திர ஆய்வுக் கூட்டம். திங்கள் கிழமை மதியம் 12 மணிக்கு வாரத் திட்டமிடலை ஆரம்பித்தால் மற்ற வேலைகள் சுணங்கி விடுகின்றன என்று வெள்ளிக் கிழமை கடைசி நிகழ்வாக இதை வைத்துக் கொள்ளலாம் என்று பேசியிருந்தோம்.

எல்லோரும் இந்த வார பணி விபரங்களையும், அடுத்த வார திட்டமிடுதலையும் பணி பதிவுக் கருவியில் நிரப்பி அதிலிருந்துதான் பேச வேண்டும் என்று காலையிலேயே ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட்டிருந்தேன். மதியத்துக்கு மேல் கிட்டத்தட்ட எல்லோருமே அந்தப் பணி பதிவைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் இப்படி இருந்தாலும் நாளடைவில் உடனுக்குடன் பதியும் பழக்கம் வந்து விடும். தினமும் மாலையில் அறிக்கையைப் பார்த்தால் என்ன வேலை நடந்தது, எத்தனை மணி நேரம் வேலை முடிந்திருக்கிறது என்று தெரிந்து விடும்.

செய்யும் வேலையை துல்லியமாக பதிவு செய்து கொள்வது பல வகைகளில் உதவும். நாம் நிவதி நிறுவிக் கொடுக்கும் நிறுவனங்களுக்குச் சொல்வது போல, தினசரி பணியின் மேற்பார்வை, பணிகளை அலசிப் பார்ப்பது, முடிவுகள் எடுக்க உதவுது, வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுப்பது என்று பல நிலைகளில் உதவியாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்க ஆரம்பித்த இந்த கருவி நன்றாகவே வளர்ந்து விட்டிருக்கிறது. அன்றாட வரவு செலவு கணக்குகள், ஆதாய அறிக்கை, வருகைப்பதிவு, சம்பளச் சீட்டு உருவாக்கல், வேலைப்பதிவுகள், வேலைத் திட்டமிடல் என்று நிறுவனத்தின் செயல்பாடுகளை அனைத்தையும் பதிந்து கொள்ளும் கருவியாக உருவெடுத்து விட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாற்றத்தையும் செயல்படுத்த எவ்வளவு முயற்சிகள் தேவைப்படுகின்றன. இவ்வளவு பின்னடைவுகள், சிரமங்கள், வேலைக் குறைவு ஏற்பட்ட நிலையில்தான் இந்த முக்கியமான அடி எடுக்க முடிந்திருக்கிறது. எந்த பின்னடைவிலும் ஒரு முன்னேற்றத்தை பார்த்து விடுவது சாத்தியம்தான்.

5 மணிக்கு வெளியில் போய் தேநீர் குடித்து விட்டு வரலாம் என்று புறப்பட்டோம். ஈழத் தமிழர்களை மீள் குடி அமர்த்துவதைக் குறித்து பேச ஆரம்பித்தார்கள். 'ஒன்றும் நடக்காது, யாருக்கு அக்கறை இருக்கிறது' என்று விரக்தியாக என்னுடைய கருத்தைச் சொன்னேன். 'இந்திய அரசாங்கம்,வைகோ போன்ற அரசியல்வாதிகள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் யாரும் அதற்காக எதையும் செய்து விட முடியாது' என்று பேசிக் கொண்டிருந்தேன். அவர்களின் விவாதம் தொடர்ந்தது தேநீர் கடைக்கு வந்ததும்,

'இரண்டு நாட்களுக்குள் காலணி மென்பொருளில் மதிப்பு கணக்கிடுதல், தோல் பதனிடும் மென்பொருளில் மதிப்பு சரிபார்த்தல் இரண்டையும் முடித்து விட வேண்டும்' என்று தொடர்பில்லாமல் சொன்னேன்.

'என்ன இது, தேநீர் குடிக்க வந்தும் இதைப் பற்றிப் பேசினால் எப்படி'

'வேறு என்ன பேசுவது. ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையை வாழ்வா சாவா என்ற போராட்டத்தை இது போல பொழுதுபோக்குக்குப் பேசுவதால் என்ன பலன்? வேண்டுமென்றால் ரஜினி காந்த், கமல ஹாசன் பற்றி பேசுவோம். கருணாநிதி, ஜெயலலிதா குறித்து பேசுவோம். பொழுதுபோக்காக பேசிப் பேசித்தான் இவ்வளவு அழிவுக்கும் உயிரிழப்புக்கும் காரணமாக இருந்தோம்'

'நாம பேசி என்ன ஆகிறது என்று இருந்து விட முடியுமா. நாம் ஒருத்தர் மட்டும் வாக்களித்தால் என்ன மாறி விடப் போகிறது என்று விரக்தியில் வாக்களிக்காமல் இருப்பது போல ஆகி விடுகிறது'

'அதேதான் நானும் சொல்வது. வாக்களிக்கப் போகாத ஒருவர் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்வது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு போர்க்களத்தில் இறங்க தயாராக இல்லாத நாம் சண்டையையும் வன்முறையையும் குறித்துப் பேசுவது. ஒவ்வொரு மனிதரின் செயல்களும் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதை நான் மிக உறுதியாக நம்புகிறேன். ஆனால் அப்படிப் பேசுவதில் தெளிவு இருக்க வேண்டும். அடுத்த மனிதர்களின் உயிரை பணயம் வைக்கும் விஷயங்களில் நாம் விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கக் கூடாது'

'அப்படி இல்லீங்க! இப்போ நான் இருக்கிறேன். எனக்கு அவ்வளவு வெறுத்து விட்டது. இந்தத் தெருமுனைக்குப் போனால் கொல்லப்பட்டு விடுவேன் என்று தெரிந்தும் போகப் போகிறேன். அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்து விட முடியும். எனது ஆவேசம் விரக்தியினால் வெறுப்பினால் வந்தது'

'அப்படி முடிவெடுத்து தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு உங்களை நான் எதுவும் சொல்ல மாட்டேன். அப்படிப் போக கிளம்பி நிற்கும் உங்களிடம் - கையில் கத்தியோடுதான் போகிறாயா, கொஞ்சம் இரு உனது கோரிக்கைக்கு நானும் ஆதரவு தெரிவிக்க விரும்புகிறேன். என்னிடம் காசு இருக்கிறது. வெடிகுண்டுகள் வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டு போ - என்று நான் உதவி செய்தால் அதை மன்னிக்க முடியாது. உங்கள் கோரிக்கையில் அவ்வளவு நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றினால் - வாங்க சார், நாம் இரண்டு பேரும் இந்த வெடிகுண்டுகளை மடியில் கட்டிக் கொண்டு போய் வெடித்துச் சிதறுவோம் - என்று உங்களுடன் வர வேண்டும். உங்களை மரணத்துக்கு அனுப்பி விட்டு நான் மேலே போய் என்னுடைய வழக்கமான வேலைகளைப் பார்ப்பது நியாயம் கிடையாது.

இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்கு ஆயுத உதவி செய்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்காக நான் என்ன செய்து விட்டேன். இன்றைக்குக் காலையில் யோசித்துக் கொண்டிருந்தேன். இந்திய அரசின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு காட்டும் முகமாக எனது கடவுச் சீட்டை எரிப்பதாக அறிவித்து, அதை எரித்து அதன் விளைவுகளை எதிர் கொள்ள தயாராக இருக்கிறேனா! தமது வாழ்வையும் உயிரையும் இழந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இதைக் கூடச் செய்யத் தயாராக இல்லாத நான் வெறுமனே பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

வலைப்பதிவர் பட்டறையில் மாலன் பேசும் போது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இலங்கை அரசு கொடுத்த கடவுச் சீட்டில்தானே பயணிக்கிறார்கள் என்று சொன்னபோது பெரிய கண்டனங்கள் எழுந்தன. அந்தக் கடவுச் சீட்டை தூக்கி எறிந்து விட்ட பல ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். அப்படி எறியாமல் குடியேறிய நாட்டில் தமது நலன்களை பாதுகாத்துக் கொள்ள வைத்திருப்பவர்களும் இருப்பார்கள். அதை அவரவர் முடிவெடுத்து செய்ய வேண்டியது. நான் எனது கடவுச் சீட்டை தூக்கி எறிய தயாராக இல்லாதது வரை அப்படி ஒரு நடவடிக்கைக்கு மற்றவர்களை தூண்டுவது சரியில்லை என்று நினைக்கிறேன்.

அலுவலகத்துக்கு வந்து சந்திப்பு ஆரம்பித்தது. முதலில் அறிக்கை உருவாக்குவது குறித்த விளக்கம். தயாரிப்பு செய்திருந்ததால், எதிர்பார்த்திருந்ததை விட மிகச் சிறப்பாக போனது. திட்டமிட்டிருந்த அரை மணி நேரம் தாண்டி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விவாதித்துக் கொண்டிருந்தோம்.

தொடர்ந்து வாராந்திர ஆய்வு. மடிக்கணினியை வைத்து அதிலேயே அறிக்கையைப் பார்த்து ஒவ்வொருவரும் பேச வேண்டும். இப்படித் தயாரித்துக் கொண்டு வரும் போது எல்லோருக்குமே விளக்கமாக பேச முடிகிறது. தூங்கி வழிந்து கொண்டு ஓரிரு வாக்கியங்களை முணுமுணுத்து விடும் வளமையாக இல்லாமல் ஒவ்வொருவரும் விரிவாகப் பேசினோம். அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் தெளிவாக விளக்கமாக பதிய வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தேன்.

புதிய திட்டப்பணி கிடைத்து விடும் கட்டம். வேலை மிகவும் நன்றாக போனதாம். எல்லா அறிக்கைகளையும் காண்பிக்க முடிந்ததாம். எல்லோருக்குமே ஓரிரு இஞ்சுகள் வளர்த்தி கிடைத்து விட்டது.

திங்கள், மே 26, 2008

விழுப்புரத்தில் பள்ளியில் லினக்சு கணினி

நேரம் காலையில் ஐந்து மணி பன்னிரண்டு நிமிடங்கள். திங்கள்கிழமை.

நேற்றுக் காலையில் மூன்றரை மணிக்கு எழுந்திருந்தேன். முன்னறையில் தூங்கிக் கொண்டிருந்தான். கழிவறைக்குப் போய் விட்டு முகம் கழுவும் தொட்டி இருக்கும் குளியலறைக்குள் பல் தேய்க்கும் பசையையும், பிரஷ்ஷையும் எடுத்துக் கொண்டு தேய்த்து முடித்தேன். 5 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி விட வேண்டும். ஆறு மணிக்குள் பேருந்தைப் பிடித்து விட வேண்டும் என்று திட்டம்.

எழுத வேண்டாம் என்று தீர்மானம். இடுப்பில் துவர்த்தை மட்டும் சுற்றிக் கொண்டு, மேல் சட்டை இல்லாமல் வெளியில் போகப் பார்த்தால் முன் கேட் பூட்டியிருந்தது. சாவியை எடுத்துப் போய் திறந்து விட்டு, சாவியை துவர்த்தில் சொருகிக் கொண்டு, எதிர் மனையில் இருக்கும் வேப்ப மரத்தில் தளிர் இலைகளுடன் கூடிய ஒரு இளம் கொப்பை ஒடித்துக் கொண்டேன்.

அடுக்களையில் பாத்திரங்களை ஒழித்து போட்டு கழுவுதல், நாளிதழ்களை சீர்படுத்தி வைத்தல், துவைத்துப் போட்டிருந்த துணிகளை மடித்து வைத்தல் என்று ஒவ்வொன்றாக முடித்து, வேப்ப இலைகளை நன்கு கழுவி விட்டு கொதிக்க வைத்தேன். நேற்று செய்த தண்ணீர் கொஞ்சம் சிவப்பு நிறமாக இருந்ததாக நினைவு. சரியாக கழுவாததால் தூசிகளும் சேர்ந்து மிதந்திருக்கும். இன்றைக்கு நல்ல பச்சை நிறமாக வந்தது.

இன்னொரு அடுப்பில் குக்கர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, இட்லி அவித்தல். இட்லி மாவு சரியாகத்தான் இருந்தது. 12 இட்லிகள் மூன்று அடுக்கில், அதையும் ஏற்றி வைத்து விட்டு கழிவறைக்குள் போய் உட்கார்ந்து பார்த்தேன். வயிற்றில் எல்லாம் காலியாகியிருக்கவில்லை.

இட்லியையும் வேப்ப இலை நீரையும் இறக்கி வைத்து விட்டுக் குளிக்கக் கிளம்பினேன். குளித்து விட்டு வந்து தியானத்துக்கு முன்பு வேப்ப இலை நீரை வெதுவெதுப்பான சூட்டில் குடித்துக் கொண்டேன். ஒரு பெரிய டம்ளர் நிறைய இருந்தது. தியானம் முடித்து விட்டு வந்து இட்லியை எடுத்து பச்சை நிற சம்படத்தில் வைத்துக் கொண்டேன். மீதி இருந்த மூன்றரை சப்பாத்திகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் கொண்டேன். குடிக்க தண்ணீர் எடுத்துப் போக ஒரு பிளாஸ்டிக் பாட்டிலும் எடுத்துக் கொண்டேன். இந்த மூன்றையும் ஒரு பிளாஸ்டிக் பையில் கோட்டு எடுத்துக் கொண்டேன்.

அரைக்கை போட்ட அழுக்கான சட்டை மட்டும், பனியன் போடாமல். இருள் இன்னும் விலக ஆரம்பித்திருக்கவில்லை. நேராக அலுவலகம் வந்தேன். அலுவலகத்தில் குறுந்தகடுகள் அடங்கிய பொதி, வலைப்பின்னல் கம்பி, பென்டிரைவ், விசைப்பலகை ஒட்டிகள், கணிச்சுவடி நூல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். செல்பேசியில் மின்னேற்றம் இல்லாமல் இருப்பதால் அதையும் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

எல்லாம் செய்து விட்டதாக நினைத்து கிளம்ப நினைத்தால் மின்னேற்றம் செய்ய மறந்திருப்பது தெரிய வந்தது. சரி, கொண்டு வந்திருந்த இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருப்போம் என்று மின்னேற்றியை தேடி செல்பேசியை மின்னேற்றத்துக்கு அமைத்து விட்டு இட்லியை மிளகாய்ப் பொடி தொட்டுக் கொண்டு மென்று கொண்டிருந்தேன். வீட்டுக் கார அம்மா கீழே வந்து மோட்டர் போட்டு விட்டு அரை மணி நேரத்தில் அணைத்து விடச் சொல்லி விட்டுப் போனார்கள்.

இட்லிகள் ஆறையும் முடித்த பிறகு, சப்பாத்தி. கொஞ்சம் சவைக்கச் சிரமமாக இருந்தாலும் அலகு கடுக்கும் வரை சாப்பிட்டு முடித்தேன். கொத்தமல்லி தொக்கு இருந்த பையில் கடைசியில் கணிசமான அளவு ஒட்டிக் கொண்டிருந்தது. ஆறு அடிக்க 5 நிமிடங்கள் இருக்கும் போது மோட்டரை அணைத்து விட்டு, செல்பேசியை எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன்.

நன்கு விடிந்து விட்டிருந்தது. ஒரு தேநீர் குடிக்கலாம் என்று தோன்றியது. தெரு முனை கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். தேநீர் குடிப்பதை மறந்து விட்டு சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம். 11H ஒன்று கே கே நகர் வழியாகப் போவது. அதைத் தொடர்ந்து வடபழனி போகும் பேருந்து. ஏறி, வடபழனி என்று கேட்டால், 'பேருந்து நிலையமா, கோவிலா' என்று கேள்வி. கோவில் என்று 4 ரூபாய் சீட்டு வாங்கிக் கொண்டேன். வெளியூர் பேருந்து பிடிக்க சாலை சந்திப்பில் அல்லது அதைத் தவற விட்டால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து கொள்ளலாம்.

சரியாக சாலை சந்திப்பில் வண்டி நிற்க வேண்டியிருந்தது. இறங்க வேண்டியவர்கள் இறங்கியதும் சொல்லி வைத்தது போல பச்சை விளக்கு ஒளிர்ந்தது. விளக்கை கவனிக்காமல் வண்டி கவனித்து சாலையைக் கடந்தேன். அதற்குள் விளக்கு மாறி குறுக்கு திசையில் வண்டிகள் நகர ஆரம்பித்தன. எதிர்பக்கத்தில்தான் பேருந்து பிடிக்க வேண்டும். இப்போதும் வாகன ஓட்டம் குறைந்தது வேகமாக சாலையைக் கடந்து பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு வந்தேன்.

ஏதாவது அதிசொகுசு பேருந்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். கும்பகோணம் போக்குவரத்து கழகத்தின் திருச்சி போகும் சேவை. ஓரிரண்டு பேர்தான் உள்ளே உட்கார்ந்திருந்தார்கள். விழுப்புரம் என்று மகிழ்ச்சியாக ஏற்றிக் கொண்டார்கள். முன் இருக்கையில் வலது புறம் உட்கார்ந்து கொண்டேன். காலை வசதியாக நீட்டிக் கொள்ளலாம்.

கண்களை மூடித் தூக்கக் கலக்கத்தில் ஆழ்ந்தேன். அசோக் நகர், கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என்று ஆள் ஏற்றி ஏற்றி நகர்ந்து கொண்டிருந்தது. ஏறுபவர்கள் எல்லாம் என்னுடைய பார்வைக்கு உட்பட்டுதான் உள்ளே போக முடிந்தது. தாம்பரத்தில் கையில் குழந்தையுடன் கூட ஒரு சின்ன பெண்ணுடன் ஏறிய அம்மா, என்னை மாறி உட்கார சொன்னார். கால் வலிக்கும் என்று சாக்கு சொல்லி அசையவில்லை. நல்ல வேளையாக இடது பக்க இருக்கையில் உட்கார ஒருவர் வந்து விட்டார். இனிமேல் மாறி உட்கார யாரும் சொல்ல மாட்டார்கள்.

நடத்துனர் நீல நிற சட்டை போட்டவர். ஒழுங்காக முகம் மழித்து நறுக்கு மீசையுடன் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஓட்டுனர் காக்கி சட்டையுடன் உப்பிப் போன சிரிப்பற்ற முகம். இரண்டு பேருக்கும் முழுவதும் ஒத்துப் போய் விடவில்லை. யார் பெரியவர் என்ற மெலிதான போட்டி தெரிந்தது. வண்டியை வேகமாகவே ஓட்டினார். ஊர்களுக்குள் எதுவும் போகவில்லை. சாலையோர ஊர்களில் மட்டும் நிறுத்தி ஆள் ஏற்றி இறக்கிக் கொண்டார்கள்.

குறுகிய இடத்தில், பாலத்தில் முந்துவதை முரட்டுத் தனமாக செய்து கொண்டிருந்தார் ஓட்டுனர். தேவை இல்லாமல் ஒலிப்பானை அடிப்பதும் பழக்கமாக இருந்தது.

எனக்கு வலது புறத்தில் ஓட்டுனருக்கு பின்பக்க இருக்கையில் இரண்டு பெண் குழந்தைகள் - அக்கா, தங்கை, கூட ஒரு மனிதர். அப்பாவாக இருக்கலாம் அல்லது மாமா. நடைபாதை அருகில் இருந்தது மூத்த பெண். நீளமான முகத்துடன் துறுதுறுவென்று இருந்தாள். சன்னலோரத்தில் சின்ன பெண், கொஞ்சம் கர்வத்துடன் உருண்டை முகம். தினத்தந்தி நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார்கள். அருகில் நின்றிருந்த ஒருவர் மூத்த பெண்ணை நாளிதழ் படிக்கத் தூண்டினார்.

நான் பார்த்தும் பார்க்காமலும் அரைத் தூக்கத்திலும் எண்ணங்களிலும், டெக்கான் குரோனிக்கிளை கரைத்துக் குடித்து விடுவது போலவும் நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். தாம்பரம் தாண்டியதும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டேன். அவர் திண்டிவனம் தாண்டி கொஞ்ச தூரத்தில் அழைத்து கேட்டார். திண்டிவனம் தாண்டும் போது 9 மணி. வழியில் சாப்பிட நிறுத்தி விழுப்புரம் போய்ச் சேரும் போது 10 மணி ஆகி விட்டிருந்தது.

திண்டிவனத்தில் (மேல்மருவத்தூரிலோ!) ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்களுக்கு மூன்று தோசைகள் என்று ஒருவர் கூவி விற்றுக் கொண்டிருந்தார். தாம்பரத்தில் என்று நினைவு வருகிறது.

விழுப்புரத்துக்கு 13 கிலோமீட்டர் என்ற பலகை தாண்டி பத்து நிமிடங்களில் உணவு விடுதி ஒன்றில் நிறுத்தி விட்டார்கள். உள்ளே போய் எதுவும் சாப்பிடும் மன நிலை இல்லை. லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட்டுகள் வாங்கி சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்கலாம் என்று ஒரு திட்டம். 10 ரூபாய் பொதி 13 ரூபாய் என்றார்கள். வாங்காமல் வந்து விட்டேன். தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டேன். பை வைத்திருந்த இடத்துக்கு கீழ் இருக்கையில் ஒரு இசுலாமிய பெண், ஜன்னலருகில் ஒரு கிருத்துவ சீருடை தரித்த மத சேவகி.

'நாளிதழ் எங்கே வாங்கினீங்க என்று ஏக்கத்துடன் கேட்டபடி வந்த பெரியவரிடம் படித்து முடித்திருந்த டெக்கான் குரோனிக்கிளைக் கொடுத்து விட்டேன். புத்தக விமரிசனங்கள் எழுதியிருந்த பகுதியை மட்டும் கையில் வைத்துக் கொண்டேன். ரஷ்யாவில் 18ம் நூற்றாண்டில், பண்ணையாரை மணந்த பண்ணையாள் பெண் பற்றிய ஒரு புத்தகம் முதல் பக்கத்தில்.

விழுப்புரத்துக்குள் நுழைந்து இரண்டு மூன்று நிறுத்தங்கள். 10.10க்கு பேருந்து நிலையத்துக்குள் புகுந்தார்கள். உள்ளே போய் தண்ணீர் தேங்கியிருந்த இடத்தில் ஓட்டி சுற்றி திருப்பி நிறுத்தினார்கள். இறங்கியதும் தொலைபேசினால், இப்போதுதான் கொஞ்சம் தள்ளிப் போனேன். எதிரில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் காத்திருக்க சொன்னார்.

பெரிய உணவு மற்றும் தங்கும் விடுதி. வெளியில் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே போய்ப் பார்த்தால் எல்லா மேசைகளிலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதாவது சாப்பிடலாம் என்று நினைத்திருந்ததை மறந்து வெளியில் வந்தேன். வாசலுக்கு அருகில் வந்து விட்டார். அவரும் சாப்பிட்டிருக்கவில்லை என்று சொல்லி குளிரூட்டப்பட்ட அறைக்குள் அழைத்துப் போனார்.

முதலில் தோசை. நான்கு பேர் உட்காரும் மேசையில் உட்கார்ந்து கொண்டோம். எதிர் இரண்டு இருக்கைகள் காலியாக இருந்தன. உட்கார்ந்து என்ன வேண்டும் என்று சொன்னதும். நான்கு பேர் குழு ஒன்று வந்தது. முதலில் இரண்டு பெண்கள், அம்மாவும் பெண்ணும். அவர்கள் மறு பக்கத்தில் இருந்த இரட்டை இருக்கையில் உட்கார்ந்து கொள்ள அவர்களுக்குப் பின்னால் வந்த இரண்டு ஆண்களும் இந்த மேசையில் எங்களுக்கு எதிரில் உட்கார்ந்தார்கள். ஒரு ஆண் அந்த பெண்களுக்கு உறவு. கணவன், தகப்பன். நடுத்தர வயது, பெரிய நிறுவனத்தில் பணி புரியும் தோரணை. இன்னொருவர் கொஞ்சம் இயல்பானவராக தெரிந்தார். வண்டி ஓட்டுபவர்?

'மூன்று பொங்கல், ஒரு தோசை' என்று ஆர்டர் செய்கிறார். மனைவி தன் கைப்பையை கணவனிடம் பத்திரமாக ஒப்படைத்து விட்டு மகளுடன் போயிருந்தார். பொங்கல் வந்த உடனேயே ஒரு ரவை தோசை ஆர்டர் செய்து விடுகிறார் கணவர். வண்டி ஓட்டுபவர் வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். 'காலையில்தான் நன்கு சாப்பிட வேண்டும். காலையில் அரசன் போல, மதியம் பணக்காரன் போல, இரவில் பிச்சைக்காரன் போல சாப்பிட வேண்டும்' என்று தத்துவத்தை அவிழ்த்து விட்டார். 'ஓட்டுனர் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் காலையில் சாப்பிடுவதில்லை. மதியச் சாப்பாடுதான் முக்கியம்' என்று பதில்.

இதற்கிடையில் நான் ஒரு தேநீர் கேட்டால், செந்தில் ஆளுக்கொரு பூரி சொல்லி விட்டார். அதை மறுக்காமல் அசட்டு சிரிப்புடன் ஏற்றுக் கொண்டேன். கிழங்கும் சட்னியுமாக, மைதா மாவில் செய்த பூரி நன்றாகவே இருந்தது.

'மதியம் இந்தச் சின்னக் கிண்ணத்துக்கு இரண்டு கிண்ணம் சோறு, சப்பாத்தி அவ்வளவுதான்' என்று எதிரில் பேச்சு தொடர்ந்தது. அந்தப் பெண்களுக்குச் சொல்லி வந்து சேர்ந்திருந்த பொங்கல் ஆறி விடுமே என்று எனக்குக் கவலை. அவர்கள் அடுத்த சுற்றுக்கு பூரி, தோசை சொல்லி வந்து விட்டன. இவரது ரவை தோசை வந்தபாடில்லை. 'ஓட்டலில் சாப்பிடும் போது நேரம் வீணாகாமல் அடுத்தடுத்து சொல்லி விட்டால்தான் காத்திருக்க நேராது' என்று ஏற்கனவே அறிவை அவிழ்த்து விட்டிருந்தார். 'உங்களுக்காக மாவு கலக்கிக் கொண்டிருந்திருப்பார்கள், அதுதான் தாமதமாகிறது' என்று ஓட்டுனர் சொல்கிறார்.

எனக்கு சர்க்கரை குறைவாக தேநீர் சொன்னார். அவருக்கு பானம் எதுவும் சொல்லவில்லை. 89 ரூபாய்களுக்கு பில் வந்தது என்று பட்டது. நூறு ரூபாய்கள் வைத்து விட்டு சில்லறை வாங்காமலேயே கிளம்பி விட்டார். நல்ல வசதியானவர்தான் போலிருக்கிறது.

இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி, வலது புறமாக கொஞ்ச தூரம் போனோம். மற்ற பள்ளி ஆசிரியர்களையும் அழைப்பதாகச் சொல்லி தொலைபேசினால் வேறு யாரும் வருவதாகத் தெரியவில்லை. சாலையைக் கடந்து இடது புறத்தைப் பிடித்து சென்னை திசையிலேயே அழைத்துப் போனார். போன தடவை கல்லூரிக்குப் போகத் திரும்பிய பாண்டிச் சேரி சாலையில் திரும்பி பிரதான சாலையிலேயே சென்று இடது புறம் திரும்பி அவரது பள்ளி அருகில் நிறுத்தினார். கும்பகோணம் தீ விபத்து நடந்த பள்ளி எப்படி இருக்கும் என்று புரிந்தது. ஓலைக் கூரை மட்டும் இல்லை. மற்றபடி ஏதாவது நேர்ந்தால் இறங்கி விட முடியாதபடி குறுகிய மாடிப்படிகள், நடை பாதைகள்.

இதன் பெயர் மெட்ரிகுலேஷன் பள்ளி. தமிழ் வழிக் கல்விக்கு பள்ளி அங்கே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டார். ஆனால் அவர்களுக்காக வாங்கப்பட்டிருந்த கொடுக்கப்பட்டிருந்த கணினி இந்தப் பள்ளியின் அறையில்தான் இருக்கிறது. அவர்களும் இங்கு வந்து கணினி கற்றுக் கொள்வார்கள். அரசாங்கம் கொடுத்த கணினி வேலை செய்யாமல் இருப்பதால் மெட்ரிகுலேஷன் பள்ளியின் கணினியிலேயே அவர்களுக்கும் கணினி சொல்லித் தருவதாகச் சொன்னார்.

பள்ளிக்கு இடது பக்கத்திலேயே அவரது வீடு. போய் பள்ளி திறவுகோலை எடுத்து வந்தார். குறுகலான தெருதான். சிமெண்டு போடப்பட்ட தரை. பள்ளி போலவே தெரியவில்லை. விளையாடுவதற்கு திடல் என்று கேட்டால், பக்கத்தில் ஏதோ இன்னொரு பள்ளி என்று மழுப்பினார். முதல் தளத்தில் ஒரு முனையில் கணினி அறை. அங்கிருந்து வரிசையாக வகுப்பறைகள், சின்னச் சின்ன அறைகள். இரும்பால் செய்யப்பட்ட மேசைகள், பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. மறு முனையில் இருந்த கழிவறைக்கு மாலையில்தான் போனேன். 1000 குழந்தைகள் பயன்படுத்தினால் நாறிப் போய் விடும் அளவில்தான் கழிவறை இருந்தது.

வகுப்பறைகளில் கரும்பலகைகளில் நிறமூட்டப்பட்டிருந்தது. தரை தூய்மை செய்யப்பட்டிருக்கப்படவில்லை. மேசைகளும் பெஞ்சுகளும் தாறுமாறாக கிடந்தன.

கணினி அறையும் அப்படித்தான் இருந்தது. ஒரு புறம் 5 கணினிகள். அவைதான் மெட்ரிகுலேஷன் பள்ளியின் கணினிகளாம். எதிர் புறத்தில் ஒரு மேசையில் இரண்டு லெனோவோ கணினிகள். அகலத் திரை - 17 அங்குல அகலமும், உயரம் அதற்கு ஏற்றவாறு இல்லாத திரைகள். தட்டைத் திரைகள்.

காகிதங்கள், புத்தகங்கள் எல்லாம் இறைந்து கிடந்தன. ஒரு வழியாக எல்லாவற்றையும் ஒதுக்கி சரி செய்து விட்டு கதவோரமாக இருந்த கணினியை போட்டால், சூசே 10.1 வந்தது. 'ஆன் பண்ணினால் ஆரம்பித்து திரை வரவே நிறைய நேரம் ஆகிறது' என்று முதல் புகார். தேவையில்லாத சேவைகளை நிறுத்தி வைத்து விடலாம் என்று சொன்னேன். மென்பொருள் தகடுகள் இருக்கிறதா என்று கேட்டால், திரைக்கான குறுந்தகடுகளை முதலில் கொடுத்தார். அதன் பிறகு நாவல் 10 மேசைக் கணினி மென்பொருளுக்கான அடர்வட்டைக் கொடுத்தார். அதற்கும் கணினியில் நிறுவியிருக்கும் 10.1 பதிப்புக்கும் தொடர்பு இல்லை. அந்த அடர்வட்டிலிருந்து யாஸ்ட் மூலம் எதையும் நிறுவ முடியவில்லை.

கையோடு கொண்டு போயிருந்த சூசே 10.1 அடர்வட்டு சரியாக வேலை செய்தது.

குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க இருக்கும் குறுந்தகடுகளை இயக்க முடியவில்லை. வீடியோ தகடுகளைக் கூடப் பயன்படுத்த முடியவில்லை என்று அடுத்த புகார்.

ஓப்பன் ஆபிஸ் பயன்பாடுகளைத் திறந்து காண்பித்தேன். கிளிக் செய்து பல நிமிடங்களுக்குப் பிறகுதான் பயன்பாடு பயன்பாட்டுக்கு வருகிறது.

வீடியோ தகடுகளில் dat ஃபார்மாட்டில் இருக்கும் கோப்புகளை இயக்க என்ன வழி என்று கூகுளில் தேட வேண்டும். இணைய இணைப்புக்காக கணினியை உள்ளுறை வலையமைப்பில் இணைத்து விட்டார். பிஎஸ்என்எல்லின் அகலப்பட்டை இணைப்பு இருந்தது. தானாகவே அதற்கான வடிவமைப்புகள் ஏற்பட்டு, இணையத்தை பயன்படுத்த முடிந்தது

பிஎஸ்என்எல் மோடத்தில் இருக்கும் DHCP வழங்கியிலிருந்து எண்களைப் பெற்று தகவமைத்துக் கொண்டது என்று பட்டது.

dat கோப்புகளைக் கொண்ட குறுந்தகடுகளை இயக்க mplayer vcd://1 என்று பயன்படுத்த வேண்டும் என்று ஒரு இடத்தில் தகவல் கிடைத்ததும். அதைச் செய்ததும் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக அவர் வைத்திருந்த குறுந்தகடு இயங்க ஆரம்பித்து விட்டது.

பிரேம்ஜி அறக்கட்டளை கொடுத்திருந்த பாடங்கள் கற்கும் தமிழ் குறுந்தகடுகள் flash கோப்புகளை, exe கோப்பு ஒன்றின் மூலம் ஓட்டிக் காட்டுபவை. பாரதிக்கு தொலைபேசி கேட்டால், கோப்புகளை அப்படி நகல் செய்து flash கோப்புகளை ஒவ்வொன்றாக இயக்கிக் கொள்ளலாம் என்றார். ஆனால் தொடர்ச்சியாக மாணவர்கள் பயன்படுத்துவது நடக்காமல் போய் விடும்.

wine நிறுவிக் கொள்ளலாம் என்று அதற்கு பல இடங்களில் தேடினேன். யாஸ்ட் மூலம் நிறுவுவதற்கு மூலக் கிடங்குகளைக் குறிப்பிட்டு முயற்சித்தேன். அதற்கு முன் தேவையில்லாத சேவைகள் என்று zmd மென்பொருள் மேலாண்மை கருவியை நீக்கி விட்டிருந்ததால் அது தோல்வியுற்றது என்று பட்டது.

நேரடியாக rpm கோப்பை தகவிறக்கி நிறுவினேன். கட்டளை முனையத்தில் wine exe கோப்பு பேரை கொடுத்ததும் இயங்க ஆரம்பித்து விட்டது.

சனி, ஜூலை 28, 2007

திறவூற்று

ஏதோ ஒன்று விரட்டியது. அந்த நேரத்துக்கு வாகன நெரிசலில் ஆற்காடு சாலையைக் கடந்து அண்ணா சாலை வரைப் போய்ச் சேர போதுமான ஊக்குவிப்பு இல்லாத அழைப்புதான். இருந்தாலும் நண்பரையும் அழைத்துக் கொண்டு போனேன். பல மாதங்களாகவே அவ்வப்போது ஒரு அழைப்பிதழ் வரும். சில நாட்களில் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான், வந்து சேரும் அல்லது நான் கவனிப்பேன். நேற்றைக்கு காலையில் அலுவலகத்துக்குப் போகும் போதே மேசையில் கண்ணில் பட்டது. மாலை ஆறரைக்கு அண்ணா சாலையில் ஒரு உணவகத்தின் தரையடி அரங்கில் கூட்டம்.

போய்ச் சேரும் போது தாமதமாகி விட்டது. நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டிய சுவடே தெரியாமல் பல பேர் காத்திருந்தார்கள். தெரிந்த முகமாக யாரும் இல்லை, அழைத்திருந்த பத்திரிகை நண்பரைத் தவிர. சிறிது நேரத்தில் சிற்றுண்டி. ஊடகத் துறையினருக்கான ஒரு சங்கம் அது. மாதா மாதம் இது போன்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஏழரை மணி வாக்கில் நிகழ்ச்சி தொடங்கியது. மேடைத் தமிழில் நிகழ்ச்சியின் தலைவர் அறிமுகம் செய்தார். சிறப்புப் பேச்சாளர் ஒரு தனியார் தொலைக் காட்சியின் உரிமையாளர், நிர்வாக இயக்குனர். தொலைக் காட்சித் துறையில் அரசியல் நெருக்கடிகள் என்று தலைப்பு. மடை திறந்த வெள்ளம் போலப் பேசா விட்டாலும் பல குறிப்புகளைத் தயாரித்து அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விட்டார்.

சிறிது நேரத்தில் உரைநடைத் தமிழில் இறங்கினார். தொழில் அடிப்படையில் அவர் சந்தித்த, சந்திக்கும் தொல்லைகள், அரசு கொள்கை மாற்றங்கள், ஊடகத் துறையை ஒழுங்குபடுத்துவதாக சொல்லிக் கொண்டு பண முதலைகளுக்கு மட்டும் சாதகம் செய்வதாக மாற்றியது, உரிமம் வழங்குவதில் இருக்கும் அரசியல், உள்ளூரில் வினியோகத்தில் இருக்கும் அடாவடிகள், முழுகிப் போய் விடாமல் இருக்க அவர் செய்த முயற்சிகள் என்று சில இடங்களில் உணர்ச்சியில் குரல் தடுமாறப் பேசினார். அரசியல் கட்சி சார்பு, சாதித் தொடர்புகள், குறிப்பிட்ட சாதியினரைக் கவர நிகழ்ச்சிகள், பணக் கைமாற்றங்கள், அடுத்தத் திட்டங்கள் என்று திரைப்படங்களில் பார்த்து பழகிப் போய் விட்ட காட்சிகளைப் போலச் சொல்லிக் கொண்டே போனார்.

அவரது வாழ்க்கையிலேயே வெளிப்படையாகப் பேசிய கட்டங்களில் இதுவும் ஒன்று என்று பட்டது. பல கட்டங்களில் மனதைத் தொட்ட பேச்சு. பேச்சு முடிந்ததும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஆரம்பித்தார். கேள்விகள், அவர் சொன்ன நிகழ்ச்சிகளின் கூடுதல் விபரங்களைக் கேட்பதாக இருந்தன. எனக்கு பல நாட்களுக்குப் பிறகு ரத்தம் கொதிக்கும் சூழ்நிலை. பல பேர் கேள்வி கேட்ட பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து என் கருத்தைச் சொன்னேன்.

'அவர் இவ்வளவு துணிச்சலாக நடைமுறையை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படித்தான் எல்லா இடங்களிலும் இருக்கிறது என்று பேசிக் கொள்கிறோம். ஊடகத் துறையினர் இவ்வளவு பேர் கூடியிருக்கும் இடத்தில் இதை எல்லாம் கேட்டும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அடைந்ததாக தெரியவில்லை. மற்ற தொழில்களில் ஊழல், வணிக நோக்கம் என்று இருப்பதை கவனிக்கா விட்டாலும், மக்களாட்சியின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகத்துறையில் இப்படி ஒரு நிலைமை இருப்பதைக் குறித்து நீங்கள் எல்லாம் எதுவுமே பேசாதது ஆச்சரியமாயிருக்கிறது '

என்று ஆரம்பித்ததும் இன்னொருவர் எழுந்து 'நம்ம ஊரில் மத்திய அமைச்சராக இருப்பவர்களின், மாநில அரசை ஆளுபவர்களின் சார்புத் தன்மை என்றுதானே சொல்ல வரீங்க' என்று படபடப்பாக ஆரம்பிக்க உடனடியாக அவசர அவசரமாகக் கூட்டத்தை முடித்து விட்டார்கள்.

'காலையில் நாலு மனிதக் கால்களைச் சாப்பிட்டேன்' என்று ஒருவர் பேசி முடித்த பிறகு சட்டினியுடனா, சாம்பாருடனா, முறுகலாகவா என்று கேட்பது போல போனது கூட்டம். யாருக்கும் எந்த அதிர்ச்சியும் இல்லை. இதுதான் இயல்பு என்பது போல நடந்து கொண்டதுதான் ஆத்திரத்தைத் தந்தது.

படி ஏறும் போது, பின்னாலிருந்து வலைப்பதிவு செல்லப் பெயரைச் சொல்லி அழைப்பு. பழைய நண்பர் ஒருவர். 'உங்க வலைப்பதிவுகளைப் படிக்கிறேன்' என்று பிடித்தார். நான் பார்த்து வியக்கும் ஒரு நண்பர் அவர். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது, அப்போதே ஒரு திறவூற்று மென்பொருள் பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். இப்போது முழு நேரமாக அதில் இறங்கி விட்டாராம். அவரிடம் லினக்சின் வெற்றித் திருநடையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டோம்.

ராணிப்பேட்டையில் வாடிக்கையாளர் ஒருவரைப் பார்த்த போது, 'இப்போ எல்லாம் லினக்சுதான் எல்லாரும் பயன்படுத்துறாங்களாம். இந்தியாவில குறைவா இருந்தாலும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலுப் லினக்சுதானாம்' என்று ஆரம்பித்து அவர்களது சகோதர நிறுவனத்திலும் ஏற்கனவே பயனில் இருக்கும் மென்பொருள் பயன்பாட்டை மாற்றி எங்களது மென்பொருளை பயன்படுத்த நினைத்திருப்பதாகச் சொன்னார். 7ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவுக்கு நேரடி பலன் தெரிய ஆரம்பித்துள்ளது.

அடுத்த நாளே அந்த நிறுவனத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு. அவர்கள் தென்னிந்தியாவிலேயே பெரிய தோல் நிறுவனம். 15 ஆண்டுகளாக பல் வேறு மென்பொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அடித்துப் பிடித்துக் கொண்டு அன்று மாலையிலேயே போய்ச் சேர்ந்தோம். கணினி பிரிவு மேலாளர், நிறுவன இயக்குனரின் உதவியாளர் இருவரையும் சந்தித்து எங்கள் சேவை விபரங்களை விளக்கினோம். அவர்கள் தற்போது பயன்படுத்தும் மென்பொருளைப் பற்றியும் சுருக்கமாக விளக்கினார்கள்.

பல லட்ச ரூபாய்கள் செலவழித்து, பல ஆண்டுகளாக உருவாக்கியிருந்த அந்தப் பயன்பாட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும். அதன் பின்னணி வடிவமைப்பும், தரவுத் தள அமைப்பும் கத்துக்குட்டி அளவிலேயே இருப்பதை உணர முடிந்தது. ஓரளவு அதை எதிர்பார்த்திருந்தாலும் இந்த அளவு நேர்மை இன்றி மென்பொருள் செய்து கொடுத்திருந்த முந்தைய விற்பனையாளரை நினைத்து கடுப்பானது. நாளைக்கு நமது பயன்பாட்டைப் பார்த்து வேறு யார் இப்படித் திட்டப் போகிறார்களோ என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அடிப்படைகளில் கோட்டை விடவில்லை என்றே நம்பிக்கை.

1999ல் முதல் முதலில் ரெட்ஹாட் 7.0 குறுவட்டுகளை சாங்காய் நகர ரயில் பிடிக்கப் போகும் வழியில் நடைபாதையில் விற்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் வாங்கினேன். பொதுவாக சட்ட விரோதமாக நகல் செய்த திரைப்படங்கள், மென்பொருட்கள் விற்கும் தொழில் செய்யும் அவரிடம், சட்டப்படி நகல் செய்த குறுவட்டு இது ஒன்றாகத்தான் இருந்திருக்கும்.

அதன் பிறகு புதிதாக மதம் மாறியவர்களின் வெறியுடன் ஒவ்வொரு படியாக விண்டோசை ஒதுக்கி விட்டு லினக்சுக்கு மாறுதலை செய்து முடித்தேன். 2001ல் நிறுவனம் ஆரம்பிக்கும் போது திறவூற்று மென்பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு மறு எண்ணமே தோன்றாமல் இருந்தது. வளசரவாக்கத்தில் இருந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப உருவாக்கத்தைச் செய்யலாம் என்று சேர்ந்து செயல்பட ஆரம்பித்தால், அவர்கள் விபி, எஸ்QL சர்வரில்தான் செய்ய முடியும் என்று சொல்லி வேலை காட்ட ஆரம்பித்தார்கள்.

சென்னைப் பல்கலைத் தமிழ்த் துறைப் பேராசிரியர் மூலமாக, வேளச்சேரியில் ஒரு நிறுவனத்தைப் பிடித்து 17000 ரூபாய் கொடுத்து ஆரம்பப் பயன்பாட்டை உருவாக்கிக் கொண்டோம். அவர்கள் சொன்னபடி, நாங்கள் எதிர்பார்த்தபடி வேகமாக மென்பொருள் தயாராகாமல், நிரலை வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினேன்.

அடுத்த 3-4 மாதங்களுக்கு சித்தப்பா பையன் ஒருவனும், நண்பனின் தம்பி ஒருவனும் சேர்ந்து உதவ ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போய் விட, வேளச் சேரி நிறுவனத்தில் எங்கள் வேலையில் ஈடுபட்டு அதன் பிறகு வேலையை விட்டு விட்டவர் மூலமாக இரண்டு புத்தம் புது பட்டதாரிகளை வேலைக்கு வைத்துக் கொண்டேன். ஒருவரைத்தான் எடுப்பதாகத் திட்டம். மாதம் 5000 சம்பளம் என்று சொன்னதும், கொடுப்பதை இரண்டாகப் பிரித்து இரண்டு பேரையும் வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் ஒரு மனதாக சொல்லி விட ஒன்றின் விலையில் இரண்டு பேர் சேர்ந்தார்கள்.

அப்போதே சம்பளத்தை 5000 என்று ஆரம்பித்திருந்தால் போன பாதை வேறாக இருந்திருக்கலாம். சேர்ந்த இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் ஆதரவாக வேலையைக் கவனித்தனர். நானும் சில அடிப்படைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு பூமிப் பந்தைப் புரட்டிப் போடப் போகும் அடுத்த பயன்பாட்டை எழுதுவதாக நம்பிக் கொண்டு மாதங்களை ஓட்டிக் கொண்டிருந்தோம்.

அண்ணாநகர் வீட்டின் ஒரு அறையில் சுவரில் மேசை பொருத்தி இரண்டு பேரும், எனது மேசையில் நானும் உட்கார்ந்திருப்போம். 2 ஆண்டுகளுக்கு அந்த இரண்டு பேரும் வளமான வாய்ப்புகளைத் தேடிப் போகும் போது மென்பொருள் ஒரு வடிவத்தை அடைந்திருந்தது. வணிக ரீதியாக அப்போதும் சொதப்பிக் கொண்டிருந்தோம்

நேற்றுக் காலையில் சந்தித்த நண்பர், நிறுவனத்தின் வெற்றி, கிடைக்கும் லாப அளவும் வேலை செய்பவர்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னார். அதுதானே அடிப்படை. இந்த நிறுனத்தில் வேண்டிய வசதிகள் கிடைக்கும். செய்யும் வேலைக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையான ஒன்று. அதிலிருந்துதான் எல்லாமே பாய்கிறது.

பழைய நண்பர்களில் பலர் கடந்த ஒரு வாரத்தில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பல மாதங்களாக பேசியிராத ஒருவர் அழைத்து அவர்கள் நிறுவனத்துக்குத் தேவையான மென்பொருள் பயன்பாட்டைச் செய்து தரக் கேட்டார். பொதுவாக தோல் துறையைச் சாராத இது போன்ற வாய்ப்புகளை உடனடியாக மறுத்து விடுவது வழக்கம். இன்னொரு நண்பர் அவரது துணைவியின் மென்பொருள் திட்டம் ஒன்றை பெரிய செருமானிய மருந்து நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாக்க பணி செய்வது பற்றிப் பேசினார். கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டால் நூற்றுக் கணக்கான வாய்ப்புகள்.

கடவுச் சீட்டு வர பல மாதங்கள் தாமதமானதும், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு மனு போட்ட 4வது நாள் கடவுச் சீட்டு மாயமாக வந்து சேர்ந்ததாம். மாலையில் பேசிய தொலைக்காட்சி நிறுவனத் தலைவரும் அதே சட்டத்தின் கீழ் மாநில அரசு வெளியிட்ட விளம்பரங்களைக் குறித்துக் கேட்டதும், அது வரை கிடைக்காமல் இருந்த அரசு விளம்பரங்கள் அவரது தொலைக் காட்சிகு வந்து சேர்ந்தது என்று குறிப்பிட்டார்.

சின்னதாக போராடும் குணம் இருந்து விட்டால் வேலைகளை நடத்திக் கொள்ளும் அமைப்பு இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்காவில் சொர்க்கமாக இருக்கிறது தொழில் செய்ய, வாழ்க்கை நடத்த என்று சொன்னால், அந்த சொர்க்கத்தை செங்கல் செங்கல்லாகக் கட்டியவர்கள் இன்றைய நமது சூழலைப் போன்றே வாழ்ந்த மனிதர்கள்தாம். ஏதோ மந்திரத்தால் இரவோடு இரவாக ஒரு கனவு நாடு உருவாகி விட்டிருக்கவில்லை. நகரில் சாக்கடை அமைப்பதிலிருந்து, தீயணைப்பு சேவை, நூலகம், பணம் அச்சிடுதல், பாதுகாப்பு என்று ஒவ்வொரு துறையாக குறிப்பிடுவார் பெஞ்சமின் பிராங்கிளினின் வாழ்க்கைக் கதையில்.

அது போன்று ஆயிரக் கணக்கான குடிமக்களை உழைத்து உருவானது அமெரிக்கா.

வெள்ளி, ஜூன் 29, 2007

மேலே மேலே போக...

நேற்றைக்கு படு வேகமாக 750க்கும் மேற்பட்ட சொற்கள் முடித்திருந்தேன். நிறைய எண்கள் இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அந்தக் கணக்கில் பார்த்தால் நிமிடத்துக்கு 12 சொற்களுக்கு மேல் முடிந்திருக்கிறது. ஆனாலும் மாலையில் பின்னூட்டங்கள் எழுதும் போது கடுப்பாகத்தான் இருந்தது. திரையில் வரும் எழுத்துக்களைப் பார்த்தபடியேதான் அடிக்க முடிந்தது.

ரவிசங்கர் அனுப்பியிருந்த தமிழ் விசை 99க்கான விளம்பரப் படத்தை எனது பதிவில் நேர்மையாக இணைத்துக் கொள்ள முடிந்தது. இப்போதெல்லாம் 100% தமிழ் 99 விசைதான் பயன்படுகிறது.

SCIMல் தமிழ் விசை 99 பலகையும் இருக்கிறது. சூசேயில் இல்லா விட்டாலும் பெடோராவில் தெரிந்தது. தேடிப் பிடித்து மடிக்கணினியிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நேற்றைக்குக் காலையில் நிறுவன வேலைகள் குறித்துப் பேசியது பகலில் நல்ல வழி காட்டியது. மென்பொருள் உருவாக்கப் பணிகளில் ஆழமாக மூழ்குவது என்று முடிவு செய்து கொண்டேன். பல வெட்கமூட்டும் புரிதல்கள். பயன்பாட்டில் கேவலமான குறைபாடுகள். இதை வைத்துக் கொண்டு எப்படி என்ற விரக்தி கூட ஏற்பட்டது. நான் சட்டைக் கையை மடித்து விட்டுக் கொண்டு இறங்கியதும் பசங்களுக்கும் ஒரு உற்சாகம் ஏற்பட்டு விட்டது.

நேற்றுக் காலையில் அதிகாலையில் தாம்பரம். மூன்றரையிலிருந்து பூஜையாம். போய்ச்சேரும் போது ஆறே முக்கால் ஆகி விட்டது. வந்த இடத்தில் சும்மா இருக்காமல் வருகை தந்த டாக்டரிடம் என் சமூக அக்கறை பிரச்சாரத்தை நடத்த கடுப்பாக இருந்ததாகப் பட்டது.

தாம்பரம் நம்ம வீடு வசந்த பவனில் இட்லி, தோசை, காபி சாப்பிட்டு விட்டு பல்லாவரத்தில் தொழிற்சாலைக்குப் போகாமலேயே வந்து விட்டேன். முந்தைய நாள் காட்டியிருந்த வழியாக வாகன நெரிசலைத் தவிர்த்து பத்து மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து சேர்ந்து விட்டிருந்தேன்.

பணிகளை நெருக்கமாக மேற்பார்வை இட்டேன். மதிய வேளையில் செலவுக் கணக்குப் போடும் அறிக்கையின் விபரங்களைக் கேட்டறிந்தேன். பெடோரா நிறுவும் வேலை முடிந்தது. திருப் பெரும் புதூர் போவதை இன்றைக்குத் தள்ளிப் போட்டு விட்டு இரண்டு திட்டங்களின் பராமரிப்பு விபரங்களைக் கேட்டறிந்தேன். மென்பொருளின் தரத்தில் சமரசமே செய்து கொள்ளக் கூடாது.

குளிர்விக்கப்பட்ட பானம் குடிப்பது நேற்றும் தொடர்ந்தது. மா என்ற பெயருடன் ஆப்பிள் சாறு குப்பியில். ரத்தத்தில் சர்க்கரை சத்து குறைந்து விடுவதாக ஒரு உணர்வு வருவதால் அந்த இனிப்பு பானத்தை உள்ளே தள்ள ஆரம்பித்திருந்தேன். பழ வகைகள் சாப்பிடுவது முற்றிலும் நின்று போனது ஒரு காரணமாக இருக்கலாம். இனிமேல் தினமும் ஒரு பழமாவது சாப்பிடும் வழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மதியம் மோர்க்குழம்புடன் ஒரு சாப்பாடு, மாலை வெளியே போய் ஒரு டீ. அப்புறம் இரவு 10 மணி வரை பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள். விவசாயம் பற்றிய பதிவில் உயர் தரமான விவாதம். பத்து மணிக்குக் கிளம்பும் போது எஞ்சியிருந்த சோற்றை வீணாக்க மனமில்லாமல் தட்டு நிறைய வெட்டினேன்.

மாலையில் பயிர் பணிகளை ஆரம்பித்தேன். தரவுத் தள நிரலை எழுதிக் கொண்டேன். அதை சப்வெர்ஷன் மூலமாக கூகிள் கோட் தளத்திலும் ஏற்றிக் கொண்டேன்.

நந்தா தனி மடலில் தனது இடுகைகளைப் பற்றிக் கேட்டிருந்தார். அங்கும் போய்ப் படித்துப் பின்னூட்டம் போட்டேன். அங்கு குணம் என்னும் குன்றேறி நின்றார் வெளி வந்து விட்டது. டால்ஸ்டாய் மனித உறவுகளைக் கையாளுவதை புல்ஸ் ஐ சாப்பிடுவதற்கு ஒப்பிட ஆசை. இப்படி எங்கோ ஆரம்பித்து அழகாக எடுத்துக் கொண்ட பொருளுக்கு வந்து சேரும் இந்து நாளிதழின் நிர்மல் சேகர் விம்பிள்டன் போட்டிக்குப் போயிருக்கிறார். அவரது அறிக்கைகளைப் படிக்கவே இந்துவின் தினசரிக் கவர்ச்சி இன்னும் கூடியிருக்கும் அடுத்த 10 நாட்களுக்கு.

இன்றைக்கு நாகர்கோவில் போவதா இல்லையா என்று இரு மனம். நிறுவன வேலைகள் அதிகம், சீட்டு இன்னும் உறுதியாகவில்லை, சளி பிடித்துக் கொண்டிருக்கிறது என்று பல காரணங்கள். மதியம் வரை நேரம் இருக்கிறது தீர்மானிக்க. கல்யாண நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்றில் கலந்து கொள்வதும் தேவைப்படலாம்.

'சாதிப் பெயரைப் போட்ட, ஆடம்பரமாக நடக்கும் திருமணங்களுக்கு நான் வர மாட்டேன்' என்று வர வேண்டும்.

சுரதா தமிழ்மணம் பூங்கா வாசிப்பில் போன வார விவசாயி பதிவைக் குறிப்பிட்டிருந்தார். பூங்காவிலும் அந்தப் பதிவு இடம் பெற்றிருந்தது. பல நாட்களுக்குப் பின் ஸ்னாப் ஜட்ஜில் மென் பொருள் தொடங்கிய அனுபவங்கள் குறித்தப் பதிவுகளைக் குறிப்பிட்டிருந்தார் பாலா. அவ்வளவு மோசமாகவே இவ்வளவு நாளும் எழுதிக் கொண்டிருக்கிறேன்!

திங்கள், ஜூன் 25, 2007

தமிழ்விசையுடன் மல்லுக்கட்டு

இன்றைக்கு மாலையில் ஏழரை மணிக்கு அப்புறமாக எழுத உட்கார்ந்திருக்கிறேன். காலையில் எழுந்திருக்க அவ்வளவு நேரமாகியிருக்கவில்லை என்றாலும், ஆறு மணிக்குப் பிறகு எழுந்து துணி துவைத்து, தரை துடைத்து முடுத்ததும் முடி வெட்ட எண்ணம் தோன்றியது. அங்கு அரை மணி நேரத்துக்கு ஆகி விட, கடையில் டெக்கான் குரோனிக்கிள், மளிகைக் கடையில், தோசை மாவும், தக்காளியும், தலைக்குத் தேய்க்க சாம்பூவும் வாங்கிக் கொண்டேன்.

வீட்டுக்கு வந்து உள்ளி உரித்து வெட்டி, பூண்டும் வெட்டிய பிறகு, தக்காளி வெட்டிக் கொண்டேன். எண்ணெய் ஊற்றித் தாளித்து, பெருஞ்சீரகம் சேர்த்து, வெட்டி வைத்தவற்றையும் சேர்த்தேன். அதன் பிறகு தியானம். குளித்து சாப்பிட்டு முடிக்கும் போது ஒன்பது மணி. உடனேயே கிளம்பி விட்டேன். அலுவலகத்தில் வேலைகள் ஏராளம்.

இப்போது தமிழ்நெட்99 தட்டச்சு முறையில் பழகிக் கொண்டிருக்கிறேன். சரியான ததிங்கணத்தோமாக இருக்கிறது. ஒரு நன்மை ஷிப்டு விசை அதிகம் பயன்படுத்தத் தேவையில்லை. அ இ உ a s d யிலும், ஆஈஊ q w e யிலும், புள்ளி f இலும், ஐ r இலும், எ g யிலும், ஏ t யிலும், ஐ r இலும் ஒ, ஓ, ஔ c x z இலும் வருகின்றன. வலது பக்கம் மெய்யெழுத்துகள். மெய்யும் உயிரும் சேர்ந்தால், உயிர் மெய். அருமையான ஏற்பாடு.

க ப ம த ந ய வலது நடு வரிசையில். (h j k l ;). மேல் வரிசையில் ள ற ன ட ண ச ஞ எழுத்துக்கள் y u i o p [ ] விசைகளில் வருகின்றன. வ vயில், ங bயிலும், ல nஇலும், ர இலும் வருகின்றன. ழ /ல் வருவது கொஞ்சம் சிரமம்தான். பின்னூட்டங்களில் மேற்கோளிடுவது கடினம்.

இன்னும் எட்டு நிமிடங்கள் இருக்கின்றன. மொத்தம் நான்கு பத்திகள்தான் முடிந்திருக்கின்றன. இந்தப் பத்தியோடு முடிந்து விடலாம். அடுத்தது ஸ்டீபன் ஆக்கின்ஸ் நேரத்தின் கதை எழுதத் திட்டம். பத்திகளும் சின்னதாகிக் கொண்டே போகின்றன. நேரம் முடிந்து போனது.

(மே 23, 2007)

இது 89வது பகுதி. தமிழ் நெட்99ல் முறையில் சரளமாக எழுத வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் வேகம் பிடித்து விடலாம் போலத் தோன்றுகிறது. எண்ணிப்பார்த்ததில் நேற்றும், முந்தா நேற்றும் அரையாகக் கணக்கு வருகிறது. இன்று வியாழக்கிழமை, நாளையும் எழுதி விட்டு சனி அன்று மேளத்தை ஆரம்பித்து விடலாம்.

முகுந்தின் தாக்கத்தினால் மோகன்தாஸ் ஏற்கனவே ஃபயர்ஃபாக்சுக்கு மாறி விட்டிருக்கிறார். நானும் தட்டச்சு முறையை மாற்றிக் கொண்டால் அவர் கோவை வந்ததற்கு பலன் கிடைத்து விட்டது.

நேற்று ஒரு மணி நேரத்தில் மூன்று பத்திகள், இன்று அரை மணி நேரத்திலேயே 3 பத்திகள் முடிந்து விட்டன. முகுந்த் சொன்னது போல ஒரு வாரத்தில் பழகி விடும் போலத் தோன்றுகிறது.

எவ்வளவுக்களவு முன் பயிற்சி இருக்கிறதோ, மாறுவது அவ்வளவுக்களவு கடினம். அந்த வகையில் அதிகமாக எழுதுவதால் எனக்கு மாறும் தடை அதிகம்தான். இது பழக்கமான பிறகு மூன்று வரிசைகளிலேயே வேகமாக அடிக்க முடிவது, சுகமாக இருக்கும்தான். இடையில் அஞ்சலுக்கு மாறாமலேயே நாட்களை கடத்த வேண்டும் என்று முடிவு. இன்னும் அஞ்சல் விசைத் தொடுப்புகள் அனிச்சையாக வருகின்றன.

மிகைப் படுத்திச் சொல்லுதல், சொல்வதைச் செய்யத்தவறுதல் என்ற இரண்டு மோசமான பழக்கங்கள் கைவசம் இருக்கின்றன. எனக்கு முக்கியமில்லை என்று தோன்றுவதை செய்யாமல் இருக்கிறேன். ஆனால், அதைக் கேட்டவர்களுக்கு அது முக்கியமாக இருக்கலாம். வங்கிக் கணக்கு விபரங்களை அனுப்புவதாக ஏற்றுக் கொண்டு இவ்வளவு நாளாகியும் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறேன். இன்னொரு சுணங்கியிருக்கும் பணி.

நேற்றைக்கு பேசிய நேரத்தைக் கழித்து விட்டாலும், இந்தப் பத்தியோடு இரு மடங்கு ஆகியே விடும். கோப்பின் அளவைப் பார்த்தால் ஒன்றரை மடங்குதான் தெரிகிறது. இதை முடித்ததும் துணி துவைக்க வேண்டும்.

மே 24, 2007

வியாழன், பிப்ரவரி 15, 2007

உள்ளுவதெல்லாம்..

காலையில் எழுதிக் கொண்டிருக்கும் போது அரை மணி நேரத்திலேயே மடிக் கணினி மின்கலன் மின்னேற்றம் தீரப் போவதாக எச்சரிக்கை வந்தது. குறைந்தது இரண்டு மணி நேரம் வர வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே மின் இணைப்பு இழையை இணைத்துப் பார்த்தால் புரிந்தது. சில நாட்களாகவே இழை பிரிந்து கொண்டிருந்த பகுதியில் பொறிகள் வந்தன. அந்த புள்ளிக்குப் பிறகு மின்சாரம் நகரவில்லை.

எழுதி வைத்ததை மாற்றுக் கணினிக்கு நகல் செய்து விட்டு மடிக்கணினியை மூடி விட்டேன். மடிக்கணினியின் எந்த பாகத்தையும் மாற்றுவதற்கோ, பழுது பார்ப்பதற்கோ ஆயிரக் கணக்கில் தீட்டி விடுவார்கள். நல்ல விடியல் என்று நினைத்துக் கொண்டு சிறிது நேரம் இணையத்தில் மேய்ந்தேன்.

கூகிள் டாக்கில் வந்த சிறில் அலெக்ஸ், சாகரன் நினைவாக வந்த பதிவுகளை செய்திகளை, இனியும் வரவிருப்பதை ஒரே இடத்தில் திரட்டி அச்சு வடிவில் எடுக்கலாமா என்று சொல்லியிருந்தார். குளித்து விட்டு வடபழனி முருகன் கோயில் போக வேண்டும் என்று ஒரு திடீர்த் திட்டம். ஏழே முக்காலுக்கெல்லாம் வெளியே வந்து பேருந்துக்குக் காத்திருந்தேன்.

வடபழனி - சுங்குவார்ச்சத்திரம் என்று புதிதாக விடப்பட்டிருந்த விரைவு சொகுசுப் பேருந்து வந்தது. 5 ரூபாய்க்கு கூட்ட நெரிசல் இல்லாத வசதியான இருக்கையில் வடபழனியில் இறக்கி விட்டார்கள். புத்தம் புதிய பேருந்து. அங்கிருந்து நூறடி சாலையில் திரும்பி வாகன ஒரு வழிப்பாதை வழியாகக் கோயில் வந்தேன். செருப்பு போடும் இடத்துக்கு முன்னேயே பூ விற்றுக் கொண்டிருந்த ஒருவர் தன்னருகே செருப்பை விடக் கேட்டுக் கொண்டார். திரும்பும் போது காசும் கேட்டு வாங்கிக் கொண்டார்.

உள்ளே நுழைந்ததும் பிள்ளையார் சந்நிதிக்கு பின்னால் இருக்கும் மண்டபத்தில் தூணருகே ஒரு பெண் முகம் பொத்தி கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அதீத சோகம். தலையிடுவானேன் என்று சுற்றி வரப் போனேன். எந்த சந்நிதியிலும் பூசாரிகள் பிரசாதம் தர முன்வரவில்லை. நானும் வலியக் கேட்கவில்லை. மூலவரின் முன்னும் நான்கைந்து பேர் மும்முரமாக ஏதேதோ செய்து கொண்டிருந்தார்களே தவிர வந்தவர்களுக்கு மண்டையில் பூச திருநீறு கூடத் தர முன்வரவில்லை.

கொடிமரத்தை சுற்றி வந்து 4 ரூபாய்க்கு ஒரு புளியோதரை பொட்டலம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டேன். 'ஏன் கோயில்கள் இப்படி இருக்க வேண்டும். சைவ உணவு சாப்பிட்டு, அசுத்தம் என்று சொல்லப்படுபவற்றைத் தவிர்த்து வாழ்பவர்கள் மட்டும் புழங்கினால்தான் கடவுளின் அருள் தங்கியிருக்கும் என்று ஏன் வைத்தார்கள். செத்த பசுத்தோலை உரிப்பவர்களும், செருப்பு தைப்பவர்களும், வயலில் உழுபவர்களும், பிணத்தைக் கையாளுபவர்களும், துணி வெளுப்பவர்களும் ஏன் தூய்மைக் குறைவானவர்கள்? ஆண்டவன் அனைத்தையும் கடந்தவன் அல்லவா? கருவாடு சாப்பிட்ட வாய் திருவாசகம் பாடினால் ஏன் கருவறை மாசு அடைந்து விடும்? தயிர் சாதம் சாப்பிட்ட வயிற்றிலிருந்து வரும் வேதச் சொற்கள் மட்டும்தான் கடவுளுக்கு உகந்ததா?'

'இப்போது இருக்கும் பூசாரிகளும் இருக்கட்டும். குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் மற்றவர்களை நிறுத்தி வைப்பது, குறிப்பிட்ட நியமங்களைப் பின்பற்றுபவர்கள் மட்டும்தான் பூசாரி ஆகலாம் என்பதை தவிர்த்து எல்லோரும் இயல்பாக வழிபாட்டை நடத்தும் முறை ஏன் வரக் கூடாது? மருத்துவப் பணி போலவோ, பொறியியல் பணி போலவோ திட்டம் வகுத்து துல்லியமாக நிகழ்த்தப்பட வேண்டிய பணி இல்லை இறைவனை வழிபடும் முறை. அதில் ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள்?'

சின்ன வயதிலிருந்தே பக்தி ஊட்டி வளர்க்கப்பட்டாலும் இந்தக் கேள்விகளுக்கு தூண்டுதல் சுகுணாதிவாகரின் முந்தைய நாள் பதிவு. மலம் அள்ளுபவன் செய்வதும் ஒரு தொழில்தானே. அவன் அருகில் வந்தால் கடவுள் சிலைக்கு புனிதம் எந்த வகையில் குறைந்து போகும்?

செருப்பை மாட்டிக் கொண்டு சரவண பவனில் சாப்பிட்டு விட்டு, எதிர்த் திசையில் பேருந்துக்கு நடந்தேன். அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக மடிக்கணினி மின்இணைப்பு இழையை என்ன செய்வது என்று கவலை. 'நாள் முழுவதும் மடிக்கணினி செயலற்று போய் விடும். மாற்றவோ, சரி செய்யவோ நேரமும் பணச்செலவும். ஏதோ மின் ஓட்டக் கோளாறுதானே, அருகிலேயே இருக்கும் மின்கருவி பணியாளரின் கடையில் போய்க் கேட்டுப் பார்க்கலாம்' என்று எடுத்துப் போனேன்.

'இதெல்லாம் நமக்குத் தெரியாது சார்' என்று சொல்லிக் கொண்டே வாங்கிப் பார்த்தவர், நடுவில் இருக்கும் மின்மாற்றியின் மேலுறையைக் கழற்றி நோட்டம் விட்டார். பிரிந்து போன பகுதியை வெட்டிச் சேர்க்க வேண்டியிருக்கும், பரவாயில்லையா' என்று ஒரு நம்பிக்கை கொடுத்து வேலையில் இறங்கி விட்டார். அடுத்த இருபது நிமிடங்களில் சரி செய்யப்பட்டு 10 ரூபாய் செலவில் மடிக்கணினி மின்னூட்டம் ஆரம்பித்து விட்டது.

ஒரு வாடிக்கையாளர் கணினி வன்தகடு பழுதடைந்திருந்தது. மென்பொருளை இயக்க சாதாரண ரிச்சி தெருவில் வாங்கிய கணினியைப் பயன்படுத்தினார்கள். எந்த நேரத்தில் எது காலை வாரும் என்று உத்தரவாதம் கிடையாது. அப்படி பிரச்சனை வந்தால் உள்ளிட்ட தரவுத் தளத்தை நகல் செய்து வைத்துக் கொள்ளும் வசதியையும் தொட்டே பார்த்திருக்கவில்லை. கடைசியாக நான் போயிருந்த போது டிசம்பரில் எடுத்த நகல் மட்டும் என் மடிக்கணினியிலும், அலுவலகத்திலும் இருந்து. ஜனவரி இறுதியில் பிரச்சனை வரும் வரை உள்ளிடப்பட்ட ஏராளமான தரவின் மீது கேள்விக் குறி.

அவர்கள் இடத்திலேயே முயன்று பார்த்து முடியாமல் வன்தகட்டைக் கையோடு எடுத்துக் கொண்டு வந்தேன். மொத்தம் ஐந்து பகுதிகளைப் பிரித்து நிறுவியிருந்தோம். மூன்று பகுப்புகள் முற்றிலும் சிதைந்திருந்தன. இரண்டை அணுக முடிந்தது. அங்கு முயலும் போது கோப்பை நகல் செய்ய முடியவில்லை. இது போன்று பழுதடைந்த வன்தகட்டிலிருந்து கோப்புகளை பிழைப்பித்துக் கொடுக்கும் சேவை என்று அனுப்பி வைத்தோம்.

இரண்டு மூன்று நாட்களாக இழுத்தடித்து கடைசியில் முடியாது என்று திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இன்னொரு முறை அலுவலகத்தில் முயற்சி செய்வதாக வாடிக்கையாளருக்குச் சொல்லியிருந்தேன். ஒரு மாத வேலையையும் திரும்பச் செய்ய வேண்டி வருமோ என்று அவர்களுக்குக் கலக்கம்.

முந்தைய நாள் புதிதாக இயங்குதளம் நிறுவப்பட்ட இன்னும் திறந்தே இருந்த கணினியில் இந்த தட்டை இணைத்து பகுப்புகளை அணுக முயன்றேன். முதல் தடவை சரியான கருவி அடையாளம் தெரியாமல் போயே போச்சு என்று மூட ஆரம்பித்தேன். கணினி ஒவ்வொன்றாக மூடி வரும் போது திரையில் தெரிந்த தகவலில் பொறி தட்டி, மீண்டும் ஆரம்பித்தேன். /dev/hdh என்ற அடையாளத்தில் இணைக்கப்பட்ட வன்தகடு உயிர் பெற்றது. ஐந்தில் உருப்படியாக இருந்த இரண்டு பகுப்புகளை அணுக முடிந்தது. கோப்புகளை நகல் செய்ய ஆரம்பித்தால், சரசரவென்று அதுவும் நடக்க ஆரம்பித்தது. மனமெங்கும் மகிழ்ச்சி பரவியது.

வாடிக்கையாளருக்கும் தொலைபேசி நல்ல சேதியைச் சொல்லி விட்டு இன்னொரு சிக்கல் விடுக்கப் புறப்பட்டேன். புதிதாக மென்பொருள் பயன்படுத்தல் ஆரம்பித்து வைத்திருந்த இடத்தில் கொஞ்சம் சுணக்கம். பன்னிரண்டு மணிக்கெல்லாம் அங்கு போய்ச் சேர்ந்து, மெலிதான கோபத்துடன் சுணக்கத்துக்கான காரணங்களைப் பேச ஆரம்பித்தோம். ஏதாவது புது மாற்றம் வரும்போது அதற்கு தடையாக ஆயிரம் காரணங்கள். பயன்படுத்துபவர்களுக்கு வழக்கமான வேலையுடன் புதிய பொறுப்பும் வருகிறதே என்று பரபரப்பு. அதைப் புரிந்து கொண்டு சுமையைக் குறைக்கச் சொன்ன முறைகளில் சிலவற்றை நம்ம ஆட்களும் செய்திருக்கவில்லை.

ஒவ்வொரு பிரிவாகப் போய் தொடர்புடைய மேலாளரிடம் பேசி அவர்கள் குறைகளைக் கேட்டு சரி செய்யும் முறைகளை வகுத்து, 'பேசிய படி செய்திருந்தால், இந்தத் தொல்லை வந்திருக்காதே' என்று கூட வேலைபார்ப்பவரிடமும் பேசி விட்டு திரும்பினேன். அப்படியே வங்கிக்குப் போய் விட்டு வந்து விடலாம் என்று எடுத்துப் போயிருந்தாலும், பசி வேளை வந்து விடவே அலுவலகமே வந்து விட்டேன்.

திட்டப் பணி செய்யும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன. அதற்கு கேக்குகள் கேட்க, வாங்கி வந்திருந்தார் ஒருவர். ஒரு பெரிய அளவு கேக்கும் உள்ளே போனது. பெங்களூருக்குப் போவதற்கான ஆயத்தங்களை தொடங்கிச் செய்து முடித்தேன்.

இரண்டு நாளாகவே கைமாற்றாக நிறுனத்துக்கு நண்பரிடமிருந்து வாங்கிய கணிசமான தொகையைத் திருப்பிக் கொடுப்பது பற்றிய குளறுபடி. கணக்கு வைத்திருப்பவர், ஏற்கனவே கொடுத்தாச்சு என்று சொல்ல எனக்கு இன்னும் கொடுக்கவில்லை என்று நினைவு. அவரது புத்தகத்தில் வாங்கிய நாளையும் கொடுத்த நாளையும் எடுத்துக் காட்டினார். நேற்று மாலை வேறு விபரங்களுக்கு அந்த புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கும் போது, வாங்கியதற்கும் திருப்பிக் கொடுத்ததற்கும் ஒரு சுழி வேறுபாடு இருந்தது தெரிந்தது.

அவர் தானாக கேட்கக் கூடியவர் இல்லை. நாமே இப்படி அசட்டையாக இருந்தால் எப்படி என்று மீண்டும் கணக்கு வழக்குகள் பற்றிக் கவலை வந்தது. யாராவது நல்ல திறமையான கணக்காளரை பார்க்க வேண்டும் என்று நூறாவது முறையாக முடிவு செய்து கொண்டேன்.

ஒன்பதரை ரயிலைப் பிடிக்க ஏழரைக்கெல்லாம் பை நிரப்பி விட்டேன். வேளச்சேரி போகும் ஒருவரது வண்டியில் தொத்திக் கொண்டு கிண்டி மின்வண்டி நிலையத்துக்கு அருகில் இறங்கி அங்கிருந்து பூங்கா போய் விடலாம் என்று கிளம்பினேன். போரூர் - கிண்டி சாலையில் இந்த வேளைகளில் வாகன நெரிசல் அதிகம். 'சில சமயம் முக்கால் மணி நேரம் கூட ஆகும், இரண்டு கிலோமீட்டரைக் கடக்க ' என்று நானும் அனுபவத்திருந்த பிரச்சனையை தினமும் இந்த வழியில் போய் வரும் அவர் சொல்லிக் கொண்டு வந்தார்.

ஏதோ நல்ல வேளை, எந்த வித காத்திருப்பும் இல்லாமல் கத்திப்பாரா வரை வந்து விட்டோம். அங்கு கூட நிறுத்தப்படாமல் கிளம்பிய அரை மணி நேரத்துக்குள் கிண்டி ரயில் நிலையம்.

சீட்டு வாங்க நீண்ட வரிசை. ஒரு ஐந்து நிமிடம் பிடித்தது முறை வர. சீட்டுக் கொடுப்பவரை அணுகும் போது அப்போதுதான் வந்திருந்த ஒரு இளைஞர் காசை நீட்டி 'சைதாப்பேட்டை வாங்கிக் கொடுங்க' என்று கேட்டார். நல்ல திடமான மனிதர். 'ஏன், க்யூவில் வர வேண்டாமா? உங்களுக்கு என்ன குறை' என்று ஏற இறங்கப் பார்த்தேன். பாவம், ஓடியே போய் விட்டார் வரிசையின் கடைசிக்கு.

அரை மணி நேரம் முன்னதாகவே வந்து சேர்ந்து கேட்டு பதிவு செய்திருந்த மேல் தட்டில் ஏறித் தூங்கும் பணியை மேற்கொண்டேன். ஒன்பதரைக்கு ரயில் கிளம்பியதும் ஒரு குழந்தை அழுகைச் சத்தத்தில் விழிப்பு. அப்புறம், பத்து மணிக்கு பயணச் சீட்டு பரிசோதகருக்கு ஒரு முறை. இந்தப் பெட்டியில் பெரும்பாலானோர் இணையத்தில் பதிவு செய்து, அச்சிட்ட தாளையும் அடையாள அட்டையையும் காட்டுபவர்கள்தாம், என்னைப் போலவே.

முன்னெச்சரிக்கையாக எடுத்து வைத்திருந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கி விட்டேன். அதிகாலை நான்கரைக்கு பெங்களூர் போய் விடும். சீக்கிரமாக எழுந்து கொஞ்சம் வேலைகளைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தது. பன்னிரண்டரை மணியிலிருந்தே எழுப்பிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக 2 மணிக்கு எழுந்து மடிக் கணினியில் எழுத ஆரம்பித்தேன்.

புதன், டிசம்பர் 20, 2006

ஒரு சளி பிடிப்பின் கதை

சனிக்கிழமை கடலில் குளித்து விட்டு தலையைத் துவட்டாமல் போட்டிருந்த துணிகள் அனைத்தும் தண்ணீரில் ஊறியவை முற்றிலும் காயும் வரை வெயிலில் காயும் போது நன்றாகத்தான் இருந்தது. சின்ன வயதில் கோகுலம் படிக்கும் போது கேள்வி பதில் பகுதியில் ஒரு குழந்தை அனுப்பியிருந்த கேள்விக்குப் பொறுமையாகப் பதில் எழுதியிருந்தார்கள்:

"குளித்து விட்டுத் தலை துவட்டாவிட்டால் என்ன ஆகும்?"

"உடலின் மீதான ஈரம் காற்றில் தானாகவே காய்ந்து போகும். தலையைத் துவட்டாமல் விட்டு விட்டால் சளி பிடிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு."

குழந்தையின் கேள்விதானே என்று 'மரியாதையாக நன்கு துவட்டி விடு, இல்லையென்றால் சளி பிடித்து விடும்' என்று மிரட்டாமல் பொறுமையாகப் பதிலளித்த விதம் பிடித்திருந்தது.

அதே நாள் மாலையில், வேர்க்கும் வரை விளையாட்டுக்களிலும் ஓடி விட்டு வர எல்லாம் சேர்ந்து கொண்டு ஞாயிற்றுக் கிழமை காலையில் எழுந்திருக்கும் போதே தலை கனமாகிப் போயிருந்தது. அன்று முடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்த வேலைகள் எல்லாவற்றையும் கிடப்பில் போட்டு விட்டு மிகத் தேவையானவற்றை மட்டும் செய்து கொண்டேன்.

மதியம் சாப்பிட்ட பிறகு ஓய்வெடுக்கும் தூக்கம். வலைப்பதிவர் சந்திப்புக்குக் கிளம்பும் போது திரும்பி வரும் போது குளிருமோ என்று நினைத்து பைக்குள் கூடுதலாக ஒரு சட்டையை வைத்துக் கொண்டேன். காலிலும் உறை அணிந்து மூடிய காலணி அணிந்து கொண்டேன். திரும்பி வரும் போது வழியில் போட்டிருந்த டி சட்டைக்கு மேலாக இன்னொரு அடுக்கைச் சேர்த்துக் கொண்டேன்.

அதே கோலத்தில் அடுத்த நாள் போட்டுச் செல்ல வேண்டிய சட்டை ஒன்றை தேய்க்கக் கொடுக்கப் போனால் 'ஏன் சார், ரெண்டு சட்டை போட்டிருக்கீங்க, குளிருதுண்ணா காதில் பஞ்சு வச்சுக்கோங்க' என்று துணிக்கு பெட்டி போடுபவர் அறிவுரை கூறினார். 'இவர் ஆறு மணிக்கு மேல் சாப்பாட்டு கடையை எல்லாம் கட்டி விடுவார்' என்று ஜெய் சொல்லியிருந்தற்கேற்ப, கூட்டத்தில் கொடுத்த இனிப்புத் துண்டுக்குப் பிறகு எதுவும் சாப்பிடாமல் தூங்கி விட்டேன்.

திங்கள் அன்று புதுச்சேரிக்கு விற்பனைப் பயணம் ஒன்று. அதற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும், ஆறு மணிக்கு வடபழனியில் பேருந்து பிடித்து விட வேண்டும் என்று நான்கு மணிக்கே எழுந்து அவசர அவசரமாக தயாரிப்புகளை மடிக்கணினியில் முடித்து விட்டு, ஆறு மணிக்கு வடபழனி. காது மூடுவது பற்றிய அறிவுரையை நினைவு கூர்ந்து திரும்பும் போது பயன்படுத்த துண்டு ஒன்றும் பையில் திணித்துக் கொண்டேன்.

கூட வருபவரும் சரியாக வந்து சேர்ந்து விட்டிருந்தார். கிழக்குக் கடற்கரைச் சாலை வழியான விரைவு வண்டி ஒன்றில் ஏறி, வாசலுக்கு எதிரான இருக்கையில் உட்கார்ந்து கொண்டோம். காற்றை மறைத்து கூட வருபவர் ஓரத்து இருக்கையில் இருந்து கொண்டாலும் அதையும் தாண்டி அடித்த குளிர் காற்று வருத்திக் கொண்டே இருக்க கண்களை மூடிக் கொண்டு அரைத்தூக்கமாக புதுச்சேரி.

'சளி பிடித்தால் நிறைய ஊட்டு, காய்ச்சலடித்தால் காயப் போடு' என்று ஒரு ஆங்கிலப் பழமொழியைப் பிடித்துக் கொண்டு இது போல சளி பிடிக்கும் போதெல்லாம் மூக்கு முட்டச் சாப்பிடுவது வழக்கமாக வைத்திருந்தேன். இன்றைக்கு வயிற்றைக் காயப் போட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது. புதுச்சேரியில் இறங்கி காலை உணவுக்குப் போனதும், இரண்டு இட்லிகளோடு நிறுத்திக் கொண்டேன். மதியம், போன நிறுவனத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சோலையாகப் பராமரிக்கப் பட்டு வரும் அவர்களது உணவுக் கூடத்தில் சிறிதளவு சோறு.

மாலையில் பேருந்து நிலையத்துக்கு அவசரமாக வந்து காத்திருந்த பேருந்தில் ஏறி விடச் சாப்பிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. காலுறைக்குள், பேன்டுக்குள் தகிக்கும் கனலை உணர முடிந்தது. உட்கார இடம் கிடைத்தது, கடைசி நீளமான இருக்கையில்தான். ஓரத்தில் இருந்த நடத்துனர் காலதரை மூடவே இல்லை. கூடவே வாசல் வழியாகக் குளிர் காற்று.

'நமது நோவு நமக்கு' என்று பையில் இருந்த துண்டை எடுத்து நீள வாக்கில் மடித்துத் தலையைச் சுற்றிக் காதை மறைத்துக் கழுத்தில் முடிந்து கொண்டேன். உண்மையிலேயே, பொதிந்து கொண்ட வெதுவெதுப்பு இருந்தது. பேருந்து ஓடிய மூன்று மணி நேரம் நல்ல தூக்கம். வடபழனியில் இறங்கும் போது, தலையில் துண்டு போட்ட கோலத்தில் நகர் வலம் வேண்டாம் என்ற நினைப்பில் துண்டை அவிழ்த்து விட்டு பகிர்வூர்தியைப் பிடித்தேன். வழியில் விரல்களால் காதை மூடிக் கொள்ளத் தயங்கவில்லை.

சோர்வில் தள்ளாடிய உடலுக்கு செவி சாய்த்து வேறு வேலைகளை எல்லாம் தள்ளிப் போட்டு உடனடியாகத் தூங்கப் போய் விட்டேன். செவ்வாய்க் கிழமை காலையில் எழுந்திருக்கும் போது, தலையிலிருந்து சளி இறங்கி மூக்கும் தொண்டையும் திறந்து விட்டிருந்தன. உற்சாகமாக வேலைகளில் இறங்க முடிந்தது.

ஆரம்ப நாட்களில் முழு ஓய்வெடுக்காமல் வெளியூர்ப் பயணம் போய் விட்டு வந்தால் காய்ச்சல் ஏறி மூன்று நான்கு நாட்கள் படுக்கையில் செலவளிக்க வேண்டியதுதான் இது வரை அனுபவம். அப்படிப் படுக்கவேண்டி வந்தால் பகலில் படுக்க சொகுசும், மனம் போல நோவு ஆற்ற வசதிகளும் இல்லை என்ற புரிதலில் தானே சரியாகிப் போனது போலப் போயே போயிற்று.

நேற்றுக் காலையில் அவித்த உணவு ஏதாவது மசாலாக்கள் சேர்க்காமல் சாப்பிடலாம் என்று போய் இட்லி சாப்பிட்டு விட்டு, உலர்ந்த உணவுக்கு சப்பாத்தி கிடைக்காமல், மருந்தாக பூரி. அதன் விளைவு இரவு தூங்கும் போதே தெரிந்து விட்டது. பால் பொருட்களைச் சாப்பிடும் நாட்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடும் நாட்களில் உடல் எப்படி எதிர்வினை பெறுகிறது என்பது ஓரளவு அனுபவம் சார்ந்து புரிய ஆரம்பித்து விட்டது.

நேற்றைக்குச் சந்திப்புக்குப் போன வாடிக்கையாளர் அறையில் அறைக் குளிர்ச்சியூட்டும் கருவி கோளாறால் இரண்டு மூன்று பேருக்கு சளித் தொல்லை. அன்றுதான் சரி செய்து போயிருக்கிறார்கள் என்று உறுதி சொன்னார்கள். ஆனாலும் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டேதான் இருந்தது.

மாலையில் சாப்பிட்டு விட்டு, வலைப்பதிவுகளில் பல நாட்களுக்குப் பிறகு ஓரிரு மணி நேரம் செலவளிக்க முடிந்தது. போஸ்டன் பாலாவின் பட்டியலில் இருந்து, மதியின் பட்டியலிலிருந்து வருகைகள் ஏராளம். நானும் என்னைப் பாதித்த வலைப்பதிவுகளுக்கான ஒரு பட்டியலை 2006க்கு என்று எழுத வேண்டும்.

புதிதாக வந்து சேர்ந்திருந்த கணினிகளில் ஒவ்வொன்றாக இயங்குதள நிறுவல். ஒரே கணினியில் இயங்கு தளக் கோப்புகளை அமைத்து மற்றவற்றை கணினிவலை மூலமாகவே ஆரம்பம் செய்து நிறுவிக் கொள்ளும் வசதிகளைப் படித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாலும், கடைசியில் ஒவ்வொன்றாகக் கழற்றி அடர்வட்டு இயக்கியைப் பொறுத்தி சூசே 10.1 நிறுவிக் கொண்டோம். வழங்கிகள் மட்டும் இன்னும் மீதி.

பெரிய நிறுவனங்களில் நூற்றுக் கணக்கான கணினிகளை பராமரிக்க வேண்டியிருக்கும் போது தனிக் கணினிகளில் தேவையில்லாத குறுவட்டு/அடர்வட்டு இயக்கி, நெகிழ்வட்டு இயக்கிகளைத் தவிர்த்து விட்டு வலைஇணைப்பு மூலமாகவே மென்பொருள் நிறுவல், சரிசெய்தல் போன்ற பணிகளை ஒரே இடத்திலிருந்து செய்யும் வசதிகள் லினக்சு சூழலில் உண்டு.

கூகிளின் தேடல் சேவைகளை இயக்கும் கணினி அமைப்பு, ஆயிரக் கணக்கான லினக்சு மேசைக் கணினிகளின் கூட்டு அமைப்புதான் என்று படித்திருக்கிறேன். ஏதாவது ஒன்று பழுதடைந்தாலும், தேன்கூடு போன்ற இந்த அமைப்பு தொடர்ந்து இயங்கும், தேவைப் படும்போது கூடுதாலகக் கணினிகளை இணைத்துக் கொள்வார்களாம். பழுது பட்ட கணினியைக் கூட்டத்திலிருந்து நீக்குவது கூட இல்லையாம். அதற்கு ஆகும், நேரம், சேவைத் தடைப்படல் கணினியின் விலையை விட மதிப்பு அதிகமாக இருப்பதால் அடுத்த முறை பராமரிப்பு சுழற்சி வரும் வரை தூரத்திலிருந்தே சரி செய்ய முடியா கணினிகளை அப்படியே விட்டு வைத்திருப்பார்களாம்.