என்னைப் பற்றி

எழுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 05, 2012

புது இடம்


நேரம் 4.49. ஜனவரி 5, 2012.

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு ஜனவரி மாதம் 5ம் தேதிதான் பிறந்திருக்கிறேன். பிறந்த கிழமை புதன் கிழமை என்று சொல்லக் கேட்ட நினைவு. 40 ஆண்டுகள் ஓட்டமாக ஓடி விட்டிருக்கின்றன. 41வது வயதில் அடி எடுத்து வைக்கிறேன்.

இது வரை சாதித்தது என்ன, பெற்றது என்ன, கற்றது என்ன? இனிமேல் எப்படி வாழ வேண்டும்? அப்படி பெரிய தத்துவ விசாரங்கள் எல்லாம் இல்லாமல், நேற்றைய நிகழ்வுகளை பதிவு செய்யலாம்.

காலையில் நாட்குறிப்பு எழுதிய பிறகு பல் தேய்த்து விட்டு எழுத முயற்சித்தேன்.

காலை உணவுக்கு உப்புமா செய்தேன். ரவையை முந்தைய நாளே வெயிலில் காய வைத்து வண்டுகளை இல்லாமல் செய்திருந்தேன். வண்டுகள் செத்துக் கிடந்தனவா, அல்லது ஓடி விட்டனவா என்று தெரியவில்லை. ஒரு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டே சட்டியில் ரவையை வறுக்கப் போட்டேன். வறுத்து தாளில் கொட்டி விட்டு எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்து வெங்காயத்தையும் சேர்த்து வதக்கினேன். வதங்கிய பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தேன். உப்பும் சேர்த்து விட்டேன். கொதித்த பிறகு ரவையைச் சேர்த்துக் கிண்டி இறக்கினேன்.

இணையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பற்றி சந்தோஷூடன் விவாதம். சுற்றிச் சுற்றி விவாதம் போவதாகத் தோன்றியது. அவருக்குச் சொல்ல வேண்டியவை:

1. சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லோரும் வழிப்பறிக் கொள்ளை செய்கிறார்கள் என்று கடைசிப் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறீர்கள். இதைத்தான், மேட்டுக்குடி மக்களின் திமிரான பேச்சு என்று குறிப்பிட்டேன். மெசையா என்பதற்காக சொல்லவில்லை. தனக்குப் புரியாத, தன்னை விட பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் இருப்பவர்களை அயோக்கியர்கள் என்று ஒட்டு மொத்தமாக முத்திரை குத்துவதைப் பற்றிச் சுட்டிக் காட்டினால், நான் மெசையாவாக உங்களுக்குத் தெரிந்தால் மிக்க மகிழ்ச்சி.

2. இரண்டாவதாக, வழிப்பறிக் கொள்ளை என்று சொல்வதை கடுமையா கண்டிக்கிறேன். அவர்கள் கேட்கும் கட்டணம் ('புடுங்குவது' இல்லை), உங்களுக்கு அதிமாக தோன்றுகிறது. மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாகத் தோன்றுகிறது. உங்கள் தேவையைப் பயன்படுத்தி சம்பாதிக்க முயல்வதாகத் தோன்றுகிறது. அதை வழிப்பறி என்று சொன்னால், நானும் ஒரு உதாரணம் சொல்கிறேன். (இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, ஒப்பீட்டுக்காக மட்டும் சொல்கிறேன்).
========
'காலையில எழுந்து டீக்கா டிரெஸ் போட்டுக்கிட்டு வாராம். 8 மணி நேரம் 10 மணி நேரம் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் தட்டுறான். இதே போல ஜாவா புரோகிராமிங் செய்யும் ஆளுக்கு திருநெல்வேலில மாதச் சம்பளம் 7000 ரூபாய்தான். இவன் மட்டும் ஏதோ பெரிசா புடுங்கி விட்டது போல மாசச் சம்பளம் 60,000 ரூபாய் வாங்குவதோடு மட்டுமில்லாமல் அடுத்த வருஷத்தில் 20% hikeம் கேட்கிறான். பகல் கொள்ளையாக அல்லவா இருக்கு.

திருநெல்வேலியில் எல்லாம் கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் பட்டினி கிடந்தா சாகிறார்கள். இவனுங்களுக்கு மட்டும் ஏன் இந்த திமிரு'

இப்படி ஐடி துறையில் வேலை கொடுக்கும் முதலாளிகள் நினைத்தால் என்ன சொல்வீர்கள்?

அவர்களுக்கு புரோகிராமர்களை வைத்து வேலை வாங்குவதால் லாபம் கிடைக்கிறது, அதனால் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் காரணம் சொல்கிறீர்கள். அவசரமாக காலையில் அலுவலகத்துக்குப் போவதன் மூலம் ஐடி ஊழியருக்கும் 3,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது, அதை வைத்து ஆட்டோ ஓட்டுனருக்கு 300 ரூபாய் கொடுக்க ஏன் கசக்கிறது.

அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய கடிதம் எழுதித் தரச் சொன்னார். கணினியில் தட்டச்சு செய்து முடித்தேன். கீழே போய் வீட்டு உரிமையாளரிடமும் காட்டிக் கருத்துக் கேட்டேன். எதிர் வீட்டைக் கழுவி சுத்தம் செய்ததற்கு இந்த அம்மா 300 ரூபாய் கேட்டதற்கு பதிலாக அவர் இப்படி ஒரு பிட்டைப் போட்டிருக்கலாம் அதை நான் கெடுத்து விட்டேன் என்று பின்னால் தோன்றியது. அதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது. அரசுத் துறையில் பணி புரியும் அனுபவத்தில் அவர் நல்ல மாற்றங்களைச் சொன்னார். அதையும் செய்து விட்டேன்.

11 மணி வாக்கில் அதையும், நகல் எடுத்து வைத்திருந்து புத்தகப் பக்கங்களையும் பொருள் வாங்க பையும் எடுத்துக் கொண்டு வெளியில் போனேன். நெட்ஜோன் இணைய மையத்தில் போய் அச்செடுத்துக் கொண்டேன்.  திரையில் பார்ப்பதற்கு சொதப்பலாகத் தெரிந்தாலும் அச்சில் நனகு கொட்டை கொட்டையாக வந்தது. இன்னொரு கடிதத்தையும் நகல் எடுத்துக் கொண்டேன். மொத்தம் 5 ரூபாய். அங்கேயே அச்சகம் எங்காவது இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டேன். ஓடைப் பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் போகும் ஸ்டேட் பேங்க் காம்ப்க்ளெக்ஸ் இருக்கும் ரோட்டில் என்று தகவல் சொன்னார்.

நடந்து வந்து அந்த ரோட்டில் பார்த்துக் கொண்டே வந்தால், ஸ்டூடண்ட் ஜெராக்ஸ் என்று இருந்தது, அதைத் தாண்டி ஒரு அச்சுக் கூடம். இது போன்று சென்டர் பின் போட்டுத் தர முடியுமா என்று கேட்டால் முடியாது என்று சொல்லி விட்டார்கள். சாலையைக் கடந்து எதிர்புறத்து பத்திரிகைக் கடையில் ஜூனியர் விகடன் வாங்கினேன். 1.50 காசு சில்லறை இல்லை. அதனால் டெக்கான் குரோனிக்கிள் வாங்க முடியவில்லை. டீ குடிக்கும் மனநிலையும் இல்லை. அப்படியே திரும்பி நடந்து கோபாலபுரம் முனையில் இருக்கும் கடையில் உருளைக் கிழங்கு வாங்கினேன். தயிர் இல்லை.

வீட்டுக்கு வந்து பார்த்தால் வந்தார். கடிதத்தில் கைநாட்டு வைத்து விட்டு வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டும். கைநாட்டு வைக்க இங்க் பேட், அதில் ஊற்ற இங்க் என்று தேடிப் பார்த்தேன். கிடைத்தன. அதைத் தொடர்ந்து சமையல். குக்கரில், உருளைக்கிழங்குகள், அரிசி வைத்து விட்டு, வெங்காயமும் தக்காளியும் வெட்டி வைத்தேன். இடையிடையே எழுத்து வேலை தொடர்ந்தது. இணையம் இணைவதும் வெட்டுவதுமாக தலைவலி கொடுத்தது. சீக்கிரமாக பிஎஸ்என்எல்லை பாராட்டி விட்டோமோ?

துணி தேய்க்க வேண்டிய விபரத்தைப் பார்த்தால் தேய்த்த சட்டைகள் இரண்டு, பேன்டு ஒன்று இருந்தன. அதனால் தேய்ப்பதற்கு காத்திருக்காமல் புறப்பட்டு விடலாம். தொலைபேசி கோட் அனுப்புவது பற்றிக் கேட்டான். அந்த விபரத்தைப் பார்த்துச் சொல்லி விட்டு, மாலையில் அவனிடம் பணம் வேண்டுமானால் கொடுத்து விடலாம் என்றும் போட்டு வைத்தேன்.

அழைத்தால் பிசி என்றே வந்தது. அவரே திரும்ப அழைத்தார். 9 மணி வாக்கில் வந்து சேருவதாகவும் கையில் சாவி இல்லை, அவர் அதற்குள் அறைக்கு வந்து விடுவாரா என்றும் கேட்டுக் கொண்டேன். கிண்டி ஐஐடி போவதாகவும், அதற்குள் திரும்பி வந்து விடுவேன் என்றும் சொன்னார். பையில் துணி, குடைகள்,  தண்ணீர் பாட்டில், மடிக்கணினி பையில் கோப்பு தாள்கள் என்று எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். வேலூரில் குளிர் வெகுவாக குறைந்து போயிருக்கிறது.

வழியில் அப்பா அம்மாவுக்குத் தொலைபேசி பேசினேன். கேஸ் வந்த கதை, குளிர் கதை, பேசிய கதை என்று  போனது. சாலைக்குப் போய் பகிர்வூர்தி நிறுத்தவே பேச்சையும் வெட்டி விட்டு ஏறினேன்.

புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாகவே பாலத்தில் போகும் போதே ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி விட்டேன், இறங்கும் விபரத்தை. 10 ரூபாய் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்கவே இல்லை. நாளிதழ் கடையில் 2 ரூபாய் கொடுத்து டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக்  கொண்டேன். 50 காசுக்கு ஹால்ஸ் கொடுத்தார்.

சென்னை பேருந்துகள் நிற்குமிடத்தில் குளிர்சாதன பேருந்து, அதற்கு அப்பால் 102B விரைவு வண்டி நகர ஆரம்பித்திருந்தது. நடத்துனரைப் பார்த்து விட்டு ஓடிப் போக ஆரம்பித்தேன். விசில் அடித்து நிறுத்தினார். இருக்கைகள் காலியாக இருந்தன. மூவர் இருக்கை ஒன்றில் உட்கார்ந்து கொண்டேன். அதன் உள்ளே பேருந்தில் சக்கரம் இருக்கும் பகுதி. யாரும் உட்காரவில்லை.

இடது புற இரண்டு பேர் இருக்கையில் ஒரு பெண், ஸ்டைலாக உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நேரம் பேப்பர் வாசிப்பு, அதற்கு பிறகு வெளியில் வெறிப்பு, அதற்குப் பிறகு தூக்கம் என்று போனது. இடது இருக்கை பெண் இரண்டாக மடிந்து முன் இருக்கையில் தலையை இடுக்கிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். சில பெண்களுக்குத்தான் இப்படி ரப்பர் போல வளையும் உடம்பு இருக்கிறது.

பூந்தமல்லி வரும் போது தூக்கம் முழுவதுமாக தெளிந்திருக்கவில்லை. எழுந்து பைகளை எடுத்துக் கொண்டு இறங்கினேன். பேருந்து நிலையத்திலிருந்து 49A ஒன்று போனது. பின்னாலேயே 25G வெட்டு சேவை வந்தது. வடபழனி வரை. ஐஸ்ஹவுஸ் போகிறவர்கள் இதில் ஏறி சண்டை போடுவது வழக்கமானது. நடத்துனர் சலித்துப் போய் விட்டார். பின்னாலேயே ஒரு முழு சேவை 25Gயும் வந்து கொண்டிருந்தது. இதில் ஏறி வடபழனியில் இறங்கி அதில் ஏறுபவர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கட்டணம் ஆகி விடும்.

இடது புற இருக்கையில் ஒரு ஏழெட்டு வயது பெண் உட்கார்ந்திருந்தாள். பட்டுப் பாவாடை, பட்டுச் சட்டை. இருக்கை நுனியில் உட்கார்ந்தாள். ஒரு சர்ச்சைக் கடக்கும் போது அருகில் இருந்த அம்மா சிலுவை இட்டுக் கொண்டதும் இந்தப் பெண்ணும் இட்டுக் கொண்டு சுற்றுமுற்றும்  பார்த்தாள். நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்ததும் வெட்கச் சிரிப்பு. அதன் பிறகு நன்கு தள்ளி சாய்ந்து உட்காருமாறு சைகை காட்டினேன். முதலில் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் ஓரிரு நிமிடங்களில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

கேசவர்த்தினியில் இறங்கி ஹாட்சிப்சுக்குப் போனேன். தின்பண்டங்கள், இனிப்புகள் வைத்திருக்கும் பெட்டிக்கு அருகில் இருந்த இருக்கையில் பைகளை வைத்து விட்டு பில் போடப் போனேன். 4 இட்லி, 1 பால். முன்னதாக பில் போட்டுக் கொண்டிருந்தவரும் பெண்ணும் நான் பை வைத்திருந்த இருக்கைக்கு அருகில் போய் நின்றார்கள். பொதிக்கு காத்திருக்கிறார்கள், அந்தப் பெண் மேசையின் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார். நான் இட்லி வாங்கிக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் வாசலுக்கு நேராக இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். எதிரில் இன்னொரு நடுத்தர வயதினர்.

மீசையில் நரைத்த முடிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. ஆனால் மனதளவில் இன்னமும் வயதாகவில்லை. நடுத்தர வயது பெண்களைப் பார்த்தால் அம்மா போல தோன்றுகிறது, ஆண்களைப் பார்த்தால் மரியாதை பயம் ஏற்படுகிறது.

சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தேன். பக்கத்துச் சந்துக்குள் போய் கணினியை இயக்கி இணையம் இணைத்துப் பார்த்தேன்.

நடந்து வரும் வழியில் ஒரு அச்சகத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அவரிடமும் பின் போடக் கேட்டேன். வசதி இல்லையாம். அப்படியே நடந்து மளிகைக் கடையில் மெடிமிக்ஸ் வாங்கிக்  கொண்டு புதிய வீட்டுக்கு வந்தேன். முதல் முறை வீட்டைத் தவற விட்டு தெருவின் மறுமுனை திருவள்ளுவர் சாலை வரை போய் விட்டேன். திரும்பி வந்து சேர்ந்தேன். மேலே பார்த்தால் பூட்டியிருந்தது. கீழே வீட்டுக்கார  அம்மா தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவு தாழிடாமல் இருக்க தொலைக்காட்சி ஓடிக் கொண்டு இருக்க நல்ல உறக்கம். இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தும் சத்தம் இல்லை.

தொலைபேசினால் அப்போதுதான் புறப்படுகிறாராம். புறப்பட்டு வந்து விடுவதாகச் சொன்னார்.  1 மணி நேரமாவது ஆகும். மேலே போய் எதிர் அறைகளுக்கு வெளியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். கணினியை இயக்கி இணையம் முயற்சித்தேன். வேலை செய்யவில்லை. கட்டுரைகளை முடித்து வடிவம் கொடுத்தேன். முதல் வீட்டு அம்மா தூங்கப் போய் விட்டார்கள். இரண்டாவது வீடு பூட்டியிருந்தது. சிறிது நேரத்தில் அந்த அம்மாவும் வந்தார்கள். குழாயில் முகம் கழுவி விட்டு சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் ஏதோ கடவுள் பாடல் சொல்லிக் கொண்டிருந்தார். என்னை விசாரித்து விட்டுத் தூங்கப்போனார். கணினியில் மின்னூட்டம் தீரவும் வரவும் சரியாக இருந்தது.

அறைக்குள் போய் பொருட்களை எடுத்து ஒதுங்க வைத்து, தூத்து வாரினேன். அவருடன் ஒரு நண்பர் வந்திருந்தார். விட வந்திருக்கிறாராம். கோடம்பாக்கத்துக்கு தனியாக போக பயப்படுவாராம். இவரும் போகிறார். அன்றைக்கு கூட்டத்தில் கேள்விகள் நிறைய கேட்டவர்தான். பள்ளி வகுப்பு போல இருந்ததாக ஒரு நக்கல் விட்டார்.

தனது வேலை முயற்சிகளைப் பற்றிச் சொன்னார். போர்ட்டிரஸ்டில் கூப்பிட்டிருக்காங்க, அய்யப்பன் தாங்கலுக்குப் போகணும் என்றெல்லாம் சொன்னார். அதையும் கூட வந்தவர் நக்கல் அடித்தார்.

இணையம் நன்றாகவே இணைந்தது. புறப்பட்டுப் போன பிறகு உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். கொசுக்கள் படையாக சுற்றிக் கொண்டிருந்தன. மின்விசிறியும் கிடையாது. போர்த்திக் கொண்டும் தூங்க முடியாது. தூக்கம் அம்போதான் ஆகும்.

11.30க்கு மேல் வெளியில் போய்ப் பார்த்தால் கடை திறந்திருந்தது. 75 ரூபாய்க்கு குட்நைட் அட்வான்ஸ்ட் வாங்கிக் கொண்டு வந்து மாட்டினே. அதுதான் கொசுக்களை விரட்டி அடித்து தூங்க விட்டது. இது போல கொசுவர்த்தி அல்லது மின்விசிறி யார் தருவார்கள்?

செவ்வாய், நவம்பர் 15, 2011

நாகர்கோவில்


நவம்பர் 15, 2011. காலை 4.30 மணி.

வீட்டுக்கு வருவதும் அப்பா அம்மாவைப் பார்ப்பதும்தான் என்னை நானே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போன்ற பரிசீலனைக்கு வழி. ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் நான் செய்து வரும் பணிகளின், கடைப்பிடிக்கும் கொள்கைகளின் சரி தவறுகளை உரசிப் பார்த்த விமரிசனங்கள் அவர்களது முகத்திலும், கருத்துக்களிலும் மறைமுகமாக தெரிந்து விடும்.

இந்த தடவை உடல்நிலை பற்றி "முகம் கறுத்து விட்டது" என்ற விமர்சனம் மட்டும்தான். தொப்பை அதிகமாகி விட்டதோ, தூங்கும் போது நல்ல குறட்டை என்று  கமென்ட். இரண்டின் உள்ளடங்கிய விமர்சனம், உடல் பருத்து வருகிறது, பழக்க வழக்கங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறட்டை வருவதற்கு எண்ணங்களின் கட்டுப்பாடும், உடல் நிலை கட்டுப்பாடும் போதாமை ஒரு காரணம். நன்கு ஆழ்ந்த தூக்கத்தில் குறட்டை வருவதில்லைதானே!

யாரோ ஒருவர் காலனி பிள்ளையார் கோவிலுக்கு 2 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தாராம். நந்திக்கு வெள்ளியில் ஒரு போர்வை போர்த்துவதற்கு. "அவரது நிறுவனத்தில் யாருக்கும் காசு கொடுப்பதற்கு கரிக்குமா, சம்பளம் கொடுக்கும் போது தூக்கித்தான் எறிவாராம். அப்படிப்பட்டவர் எப்படி இவ்வளவு ரூபாய் கொடுக்க மனம் வந்தது" என்று காலையில் பேச்சு நடந்திருந்தது. உபரியாக பணம் வைத்திருப்பவன், கோயிலுக்குக் கொட்டிக் கொடுப்பவன் அடிப்படையில் அயோக்கியன்.

அப்பா, அம்மா இரண்டு பேருக்குமே இருக்கும் அடிப்படை நேர்மை அரிதாகவே காணக் கிடைப்பது. அவர்களுக்குத் தெரிந்த, அறிமுகமான ஆன்மீக வழியிலேயே வாழ்ந்து விட்டாலும்,  நேர்மையும், சக மனிதரை மதிக்கும் இயல்பும் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்.

நேற்றுக் காலையில் சரியாக 5 மணிக்கு வடசேரி தனியார் பேருந்து நிறுத்தத்தில் கொண்டு இறக்கி விட்டான். நாகர்கோவில் இறங்குங்க என்று குரல் கேட்டதும், அரை உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நான் எழுந்து பைகளை எடுத்துக் கொண்டேன். இறங்கியவுடன் பேருந்துக்கு பின்பாகவே ஒரு ஆட்டோ. இடம் சொல்லிக் கேட்டதுமே 80 ரூபாய் என்று சரியான கட்டணத்தைச் சொல்லி விட்டார். பின்பு அதுதான் சரி என்று உறுதியும் செய்தார்கள். பேரம் பேசாமல் ஏறிக் கொண்டேன். ஆட்டோவில் ஏறியதும்  போன். முந்தைய நாள் பேருந்தில் ஏறியதுமே தகவல் சொல்லியிருந்தேன். எங்கு வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள போன்.

சாலைகள் சிறப்பாக போடப்பட்டிருந்தன. காலனிக்கு வெளியில் ஒட்டிப் போகும் சாலையில் நான்கடுக்கு தார் போத்து, வெள்ளை கோடு எல்லாம் போட்டு ஜம்மென்றிருந்தது. ஆச்சரியமாக இருந்தது, ஆட்டோக் காரரிடம் பேசி எப்போது போடப்பட்டது என்று தெரிந்து கொண்டேன். வீட்டில்  இரண்டு பேருமே எழுந்து விட்டிருந்தார்கள். அம்மா பல் தேய்த்து விளக்கு ஏற்றி தொலைக்காட்சியில் பக்தி பாடல் ஓட விட்டிருந்தார்கள். பைகளை வைத்து விட்டு வாங்கி வந்திருந்த மைசூர் பாகு- முறுக்கு பொதியை வெளியில் வைத்து விட்டு காலைக் கடன்களை முடிக்கப் போனேன்.

"துணிகள் எல்லாம் அழுக்காகத்தான் கொண்டு வந்திருக்கிறேன்" என்று சலவை எந்திரத்தில் போட்டு விடலாமா என்ற கேட்டேன். "சட்டைகளை மெஷினில் போடுவதில்லை. அழுக்கு சரியாக போகாது. கையால்தான் துவைப்பேன். அதுவுமில்லாமல் 6 பணிக்கு கரென்ட் போனால் 9 மணிக்குத்தான் திரும்ப வரும்" என்று ஒரு தயக்கம். வாளியில் அனைத்தையும் ஊற வைத்து, சர்ப் பொடி போட்டு வைத்தேன். ஒரு மணி நேரம் கழித்து துவைக்கலாம்.

கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன் தீபாவளி மலர் கிடந்தவற்றை புரட்டினேன். கதைத்தல்கள் இடையிடையே தொடர்ந்தன. காலை உணவுக்கு சப்பாத்தி. தொட்டுக் கொள்ள பருப்பும் தக்காளியும் வேக வைத்த கூட்டு. கரென்ட் போய் விட்டதால், தேங்காய் அரைத்து குருமா எல்லாம் வைப்பது கஷ்டம். வெங்காயம் நான் வெட்டிக் கொடுத்தேன். கூடவே, பச்சை மிளகாயும். சப்பாத்தி மாவு பிசைந்து வைத்து விட்டு வெளியில் நடைப் பயிற்சிக்குப் போய் விட்டார்கள். மூன்று சட்டைகளையும் சேர்த்து துணிகளை துவைக்கப் போனேன்.

கட்டுரை எழுத வேண்டும். அதன் கோர்வையை மனதில் அசை போட்டபடியே துணி துவைப்பு நடந்தது. வீட்டுக்கு பின் வாசலுக்கு வெளியில் தென்னை மரத்துக்கு அருகில் ஒரு துணி துவைக்கும் கல் பதித்திருக்கிறார்கள். நின்று கொண்டே துவைக்க வேண்டும் என்பது மட்டும்தான் தொல்லை. நின்று கொண்டிருப்பதை தவிர்ப்பது முடியாது.

துணி துவைத்து காயப் போடும்போது திரும்பி வந்து விட்டிருந்தார்கள். அடுத்தது சப்பாத்தி போடும் படலம். நான் உருட்டி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி மாவை சப்பாத்திகளாக போட  சுட்டு எடுத்தார்கள்.

சப்பாத்தியும் பருப்புக் கூட்டும் நன்றாக இருந்தன. சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் கழித்து கட்டிலில் படுத்து ஒரு குட்டித் தூக்கம். அந்த நேர அவதானம்தான் குறட்டை விடுவது பற்றிய தகவல் கிடைப்பதில் முடிந்தது. எழுந்திருக்கும்போது 11 மணி. அடுத்த தடவை கரெண்ட் போய் விடுவதற்கு முன்பு மதிய உணவுக்குத் தேவையான அரைப்புகள் தயாரித்துக் கொள்ள இறங்கியிருந்தார்கள். மோர்க் குழம்பும், பீன்ஸ் துவரனும் வைக்க வேண்டும். நேற்று வைத்திருந்த பாகற்காய் தீயலும், துவையலும் இருந்தன.

பீன்ஸ் வெட்ட ஆரம்பித்தேன். முதலில் காம்பு உரித்து விட்டு வெட்டினால் பெரிய துண்டுகளாக வந்து விட்டது. கத்தி மாற்றி வெட்டி முடித்தேன். தொடர்ந்து வெள்ளரிக்காயின் தோல் செதுக்கி விட்டு துண்டுகளாக மோர்க்குழம்பில் போடுவதற்கு வெட்டல்.

வாங்கி வந்திருந்த மைசூர் பாகு, முறுக்குகள் என் வயிற்றுக்குள்ளும் போய்க் கொண்டிருந்தன. நன்றாகவே இருந்தன.  இதை முடித்து விட்டு இணையத்தில் மின்னஞ்சல் பார்க்க கணினியை இயக்கினேன். மேசைக் கணினியை இயக்கி டயலரை இயக்கினால்தான் இணைய இணைப்பு ஏற்படும். மடிக்கணினியில் பெறுவது சிரமம். PPPoE ஆக மாற்ற மாலையில் முயற்சித்தால் அதற்கான கடவுச் சொல் கேட்டது. விட்டு விட்டேன்.

மின்னஞ்சல், கூகுள் பஸ் பார்த்து விட்டு தொடர்ந்து கட்டுரைகளை படித்து குறிப்பு எடுத்தேன். கட்டுரையின் வடிவமும் உருவாகிக் கொண்டிருந்தது. தொடர்ந்து மதிய சாப்பாடு, மீண்டும் கணினியில் எழுத்து. மாலையில் தண்ணீர் வரும் போது குடி தண்ணீர் பிடித்து வைக்க  உதவி செய்தேன். குளித்து விட்டு துணிகளை மடித்து வைத்தேன்.

தொடர்ந்து ஒரு மணி நேரம் உட்கார்ந்து முந்தைய நாள் நாட்குறிப்பை எழுதி முடித்தேன்.

தினமும் எழுதுவது கடமை. அனுபவித்த வசதிகள், எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு பகுதியளவு கைமாறாக எழுதுவதை தவறாமல் செய்ய வேண்டும். உடல்நிலையை சரியாக பேணுவதையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டுக்குமே அதிகாலையில் 1 மணி நேரம் நாட்குறிப்பு எழுதுவதும், 20 நிமிடங்கள் நடைப்பயிற்சிக்குப் போய் வருவதும் இன்றியமையாதவை.

'ஜெயமோகன் பிற்போக்குவாதி என்று குறை சொல்லும் போது, எழுதுவதில் அவருக்கு இருக்கும் உழைப்பை நாம் பார்க்க வேண்டும்."

ஜெயமோகன் ஒரு நாளைக்கு 3 கட்டுரைகள் எழுதும் அளவுக்கு உழைக்கும் போது குறைந்தது 4 பேர் ஆளுக்கு 2 கட்டுரைகள் என்று எழுதி வெளியிடுவதுதான் சரியான எதிர்வினையாக இருக்கும்.

காலையில் செய்த சப்பாத்திகளே மீதியிருந்ததால், அவற்றை சாப்பிட்டு மாலை உணவு முடிந்தது. வந்து பேசிக் கொண்டிருந்தார். சேவல் கொடி என்ற படம்தான் எடுக்கும் படம்.

மதியம் ஏதோ உள்ளூர் கேபிள் சேனலில் டும்டும் படம் போட்டிருந்தார்கள். மாதவனும், ஜோதிகாவும் கல்யாணத்தை நிறுத்துவதற்கு செய்யும் திட்டங்கள், எதிர்பாராத விதமாக  கல்யாணம் வேறு காரணத்துக்காக நின்று போவது என்று போகும் படம். ஏதோ தொலைக்காட்சி சேனலில் நானும் பார்த்து விட்டிருந்தேன்.

கட்டுரைக்கு வந்தேன். 9 மணிக்குப் பிறகு தியானம் செய்து விட்டு படுத்து விட்டேன்.

இப்போது மணி 5.15, இன்னமும் 18 நிமிடங்கள் எழுதுவதற்கு மீதி உள்ளது. இதை முடித்து விட்டு 5.40க்கு நடப்பதற்கு புறப்பட்டால், 6 மணி வரை ஆகும். 6 மணிக்குத் திரும்பி வந்து துணிகளை தேய்க்க வேண்டும்.

தேங்காய் தொலிப்பது, உடைத்து துருவுவதைச் செய்ய வேண்டும். அதன் பிறகு கட்டுரையை முடித்து என்னென்ன புள்ளி விபரங்களை தர வேண்டும் என்பதையும் முடிவு செய்து விட வேண்டும். அது 8 மணி முதல் 9  மணி வரை. புள்ளி விபரங்களை இணையத்தில் தேடிப் பார்த்து நிரப்பலாம்.

நேற்று மாலையில் கட்டுரைகளை படித்தேன்.  பரமக்குடி கலவரம் பற்றிய காணொளி சுட்டிகளை அனுப்பி வைத்தேன். சிஎம் செல் தொடர்பு மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் வேண்டும் என்று தொலைபேசியவருக்கு இணையத்தில் தேடி அனுப்பி வைத்தேன்.

சீன மொழிப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.  தொலைபேசி வெள்ளிக் கிழமை பணியை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

நேற்று 1 மணி நேர நாட்குறிப்புகளாக 1700 சொற்கள் எழுதியிருக்கிறேன். இன்று இதுவரை 1506 சொற்கள்தான் ஆகியிருக்கின்றன. இன்னமும் 8 நிமிடங்கள் இருக்கின்றன. 30 சொற்கள் சராசரி வைத்துக் கொண்டால் 240 சொற்கள் வரும் 1700 தொட்டு விடலாம்.

வெளியில் எங்கோ ஒலிபெருக்கி வைத்து பாட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிருஸ்தவ பிரச்சார உரையும் பாடல்களும். நடைப்பயிற்சிக்குப் போவதற்கு முன்பு தேங்காய் தொலித்து திருவிக் கொடுத்து விட வேண்டும். 6 மணிக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு முன்பு அரைக்க வேண்டிய வேலைகளை முடிக்க வேண்டியிருக்கும்.

சென்னையிலும் சரி வேலூரிலும் சரி, மின்கட்டணம் செலுத்த வேண்டும். சென்னையில் வை்பை இணைப்பை ஏற்படுத்த வேண்டும். வேலூரில் மின்கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம். அதைப் பார்க்க வேண்டும்.

செவ்வாய், ஜூன் 07, 2011

சும்மா...


ஜூன் 7ம் தேதி, 2011ம் ஆண்டு.

3 மணிக்கு சரியாக மின்சாரம் தடைப்பட்டு விட்டது. 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை வேலை செய்து டிரேட்புரோ முடித்து விடுவதாக நினைத்திருந்தேன். இப்போது பார்க்கப் போனால், 6 மணிக்குத்தான் மின்சாரம் இணைப்பு வரும்.

1. முதலில் தியான் தரவுத்தளத்தை மீண்டும் அழித்து மேலேற்றிக் கொள்ள வேண்டும்.
2. கடந்த நான்கு நாட்களில் உருவாக்கி வைத்திருக்கும் தரவுத் தள மாறுபாடுகளை இயக்கிப் பார்க்க வேண்டும். என்னென்ன கோப்புகள், எல்லாவற்றிலும் இரண்டு நிறுவனங்களுக்கும் எழுதியாச்சா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. தொடர்ந்து இன்வாய்ஸ் உள்ளிடும் போது சரியாக மதிப்புகள், அளவுகள் சேமிக்கப்படுகின்றனவா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
4. அடுத்ததாக இன்வாய்ஸ் அச்செடுத்தல், DC அச்செடுத்தல், பேக்கிங் லிஸ்ட அச்செடுத்தல்.
5. தொடர்ந்து டெஸ்பாட்ச் அறிக்கை, இன்வாய்ஸ் அறிக்கை, ஷிப்மென்ட் காஸ்டிங் அறிக்கை சரி பார்க்க வேண்டும்.

6. இன்வாய்ஸ் டேக்ஸ் உள்ளிடும் போது ஒரு குறிப்புரை விபரத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும். அது அச்சிடும் போது காட்டப்பட வேண்டும்.

7. இதன் பிறகு விற்பனை பணம் வருவதை உள்ளிடும் பக்கம், அதற்கான அறிக்கையை செயல்படுத்த வேண்டும்.
8. தொடர்ந்து வாங்கியதற்கு பணம் கொடுப்பதை உள்ளிடும் பக்கம், அதற்கான அறிக்கையை செயல்படுத்த வேண்டும்.
9. மூன்றாவதாக உற்பத்தி பில் உள்ளிடுவது மற்றும் பணம் கொடுப்பதை உள்ளிடும் பக்கங்களையும் அவற்றுக்கான அறிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும்.
10. கடைசியாக பொதுவான கணக்கு செயல்பாடுகள் உள்ளிடும் பக்கமும், மொத்தத்தில் எல்லாவற்றுக்கான அறிக்கையும் உருவாக்க வேண்டும்.

11. hide_side trackingக்கு excess entry பக்கத்தில் side என்று சேமித்துக் கொள்ள வேண்டும். உற்பத்திக்கு வழங்குதல், வெளியில் அனுப்புதல்/திரும்பப் பெறுதல், தரம் பிரித்தல் பக்கங்களில் hide/side சரியாக சரக்குக்குப் போகிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

12. உற்பத்திக்கு அனுப்பும், திரும்பப் பெறும் எண்களை தனித்தனியாக்கிக் கொள்ள வேண்டும்.

வெளியில் காகங்கள் கரைகின்றன, நாய் ஒன்று குரைக்கிறது. காற்றில் சன்னலில் வெயிலைத் தடுக்கக் கட்டிய பெட்ஷீட், பறந்து உள்ளே வருகிறது. மேசையின் மீது இரண்டு பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக் குடிக்க வைத்திருக்கிறேன். கெட்டிலில் கொதிக்க வைத்தது கொதித்திருக்கும் என்று நினைக்கிறேன். 3 மணிக்குத்தான் மின்சாரம் தடைப்பட்டது. இரண்டரை மணிக்கு முன்பே கொதிக்க வைத்து விட்டிருந்தேன்.

சனி, ஞாயிறு, திங்கள்  மூன்று நாட்களும் மின்சாரம் தடைப்படவே இல்லை. இன்று மறுபடியும் போய் விட்டது. பக்கத்து வீட்டில் அல்லது பின் வீட்டில் யாரோ பேசும் சத்தம். பின் வீடு என்று எதுவும் இல்லை. ஏதோ கடையில் ஷட்டர் மூடும் சத்தம். குருவி ஒன்று சத்தம் போடுகிறது.

இன்னும் வெயில் குறையவில்லை. மின்கலத்தில் 79% இன்னும் இருக்கிறது. 40 நிமிடங்களில் 20% குறைந்திருக்கிறது. அப்படியானால் மொத்தம் 200 நிமிடங்கள் நிற்க வேண்டும். தாரளமாக 6 மணி வரை நிற்கலாம். தரவுத் தள ஓட்டங்கள் நடக்கும் போது மின்சாரம் அதிகமாக செலவாகுமாக இருக்கும். சும்மா உரைக்கோப்பில் எழுதிக் கொண்டிருப்பதில் அவ்வளவு செலவாகாது. கூடிப் போனால் ஐந்தரை மணி வரை வரும்.

கன்சோல் திறந்து போஸ்ட்கிரெஸ் இயக்கி விட்டு, பென்டிரைவில் இருந்து கடைசியாக எடுத்த தரவுத்தள நகலை ஏற்ற வேண்டும். இதற்கிடையில் கேட் திறந்து எஸ்கியூஎல் கோப்புகளை வரிசைப் படுத்தி ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்ள வேண்டும். இன்னொரு கோப்பில் இந்த நான்கு நாட்களில் செய்த மாற்றங்களின் பட்டியலை எடுத்துக் கொள்ள வேண்டும். தரவுத் தளம் ஏறிய பிறகு ஒரு முறை vacuum analyze ஓட்டி விட்டுத் தொடர்ந்து தரவுத் தள மாற்றக் கோப்புகளை இயக்க வேண்டும். இயக்கியவற்றை ஒரு முறை தரவு உள்ளிட்டுச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். என்னென்ன கோப்புகள் மாறியிருக்கின்றனவோ அது தொடர்பான பக்கங்களை இயக்கிப் பார்த்துச் சரி பார்க்க வேண்டும். இதை தியானில் செய்யலாம்.

அதைத் தொடர்ந்து இன்வாய்ஸ் உள்ளிடும் பக்கத்தைச் சீர் செய்ய வேண்டும். அதில் செலவினங்களுக்கு குறிப்பு எழுதும் தரவையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். shipment பக்கத்திலிருந்து இன்வாய்ஸ், பேக்கிங் பக்கங்கள்,இ ன்வாய்ஸ் பக்கத்திலிருந்து shipment பக்கம் போகும் இணைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பொருத்தமான அறிக்கைகளையும் மெனுவில் சேர்க்க வேண்டும். இது சீக்கிரமாகவே முடித்து விடலாம் என்று இப்போது தோன்றுகிறது.

இதை அடுத்து அக்கவுண்ட்ஸ் உள்ளிடும் பக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து விற்பனை பணம் வருகை, வாங்குதல் பணம் கொடுத்தல், உற்பத்தி பில் வருகை, உற்பத்தி  பணக் கொடுத்தல் பக்கங்கள், அறிக்கைகள் செய்ய வேண்டும். இதற்கு 2 மணி நேரம் பிடிக்க வேண்டும். அதன் பிறகு எல்லாவற்றையும் சரி பார்க்க வேண்டும். hide side சேமிப்பதற்கான வசதியையும் செய்து விட வேண்டும்.

இது எல்லாவற்றையும் 9 மணிக்குள் முடித்து விடலாம் என்று தோன்றுகிறது. அதன் பிறகு தியானம் செய்து விட்டுத் தூங்கி விட வேண்டும். நாளைக்கு அடுத்த பணிகளைப் பார்த்துக் கொள்ளலாம்.

இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. இதுவரை 3239 சொற்கள் எழுதியிருக்கிறேன். அதாவது ஒன்றரை மணி நேரத்தில் 3239, ஒரு மணி நேரத்தில் 2,000த்துக்கும் மேல் எழுதியிருக்கிறேன். இவ்வளவு வேகமாக இவ்வளவு சரளமாக எழுதியது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். 3239/3 என்றால் 1080 சொற்கள். அதாவது அரை மணி நேரத்தில் 1080 சொற்கள், ஒரு மணி நேரத்தில் 2160 சொற்கள். ஒரு நிமிடத்தில் 36 சொற்கள். கிட்டத்தட்ட தட்டச்சில் உயர் சான்றிதழ் வேகத்துக்கு அருகில் வந்திருக்கிறது. 45 சொற்கள் உயர் தகுதிக்கான வேகம்.

ஒரு வேளை நேரத்தைத் தவறாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்று சரிபார்த்தும் விட்டேன். இல்லை சரியாகத்தான ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரம் தியானம் செய்து விட்டு எழுத உட்கார்ந்தால் எழுத்துத் துள்ளித் துள்ளித்தான் போகும். விரல்கள் பிறள்வதே இல்லாமல் பின் நோக்கு விசையை அழுத்தாமலேயே எழுதினால் இவ்ளவு வேகம் தாராளமாக வந்து விடும். மனதில் நினைப்பது விரல்களுக்குப் போய் சரியான விசையை அழுத்திக் கொண்டிருந்தால் அழிக்க வேண்டிய தேவை இருக்காது.அ தற்கு மனம் தெளிவாக இருக்க வேண்டும். கை திடமாக இருக்க வேண்டும். எந்தக் குழப்பமும் சோர்வும் மனதில் இருக்கக் கூடாது.

வெளியில் பார்வைக்குக் கூட எதுவும் தென்படவில்லை. தெருவில் வாகனங்கள் எதுவும் இல்லை. காகம் ஒன்று கரைகிறது முன்பே சொன்னது போல. முன்னால் தலையை அசைக்கும் செடிகள். இன்னும் பச்சை குறையாமல் நிற்கின்றன. யாரோ தினமும் அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வாரத்துக்கு முன்பு செடியை வெட்டும் போது வீட்டுக்காரருக்குச் சொன்னால், அவருக்கும் குற்ற உணர்வு இருந்திருக்கிறது

கீழே இருந்து ஒரு இரு சக்கர வண்டி கிளம்பி போகிறது. ஒரு மாருதி கார் தெருவில் நகர்கிறது. ஒரு அம்மா கையில் கூடையுடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்கோ சரக்கு வண்டி ஓடும் சத்தம் கேட்கிறது. மூன்று சக்கர சரக்கு வண்டி, டுக் டுக் என்று இந்தூரில் அழைக்கப்படும் வண்டி. நாய்கள் கூட்டாகக் குரைக்கின்றன. தெருக் கோடியில் இருக்கும் வீட்டின் மாடியில் ஒரு பையன் போனான்.

இரு சக்கர வண்டியில் வந்து இறங்கிய ஒரு பள்ளி சீரூடை அணிந்த பையன் அந்த வீட்டு கேட்டைத் தட்டுகிறான். கிருத்தவ கோடைப் பள்ளிக் கூடம் நடந்த வீடு. இவன் எதற்காக வந்திருக்கிறான் என்று தெரியவில்லை. எதையோ கொடுத்து விட்டுக் கிளம்புகிறான். பையில் இருந்து வெளியில் எடுத்தது. இப்போது பையை தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்குள் நுழைகிறான். ஏதோ சேவை அளிக்க வந்த நிறுவன ஊழியர் போலத் தெரிகிறது பள்ளிச் சிறுவன் போன்ற தோற்ற்ம, சீருடையும் வெள்ளை சட்டையுடன் இருந்ததால் தெரிகிறது.

அந்த வீட்டின் முன்பும் பச்சைப் பசேல் என்று மரம் அதில் தொங்கிக் கொண்டிருக்கும் காக்கா ஒன்று. அம்மா/மகள் பேசும் சத்தம் தெருவில். பள்ளியிலிருந்து திரும்பி வருகிறார்களாயிருக்கும். நாய்களுக்கு இந்த வெயில் நாளிலும் ஓய்வில்லை. விடாமல் குரைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

நேற்று முழுவதும் வெளியில் போகவே இல்லை. இன்றைக்கு காலையில் போய் நாளிதழ் வாங்கிக் கொண்டு காலை உணவு சாப்பிட்டதும் உள்ளே வந்து விட்டேன். குடி தண்ணீர் பிடிக்கப் போனால் ஒரு குடத்தில் சிறிதளவு மட்டும் வந்தது. சனிக்கிழமையே பிடித்துக் கொள்ளச் சொன்னார். நான்தான் இருக்கிறது என்று மறுத்து விட்டேன். இப்போது தண்ணீர் இல்லாத நிலைமை. ஒரு குடத்தைக் கொடுத்து வரும் போது பிடித்து வைத்திருக்கச் சொன்னேன்.

மணி சரியாக 4. இன்னும் 17 நிமிடங்கள் இருக்கின்றன. 3660 சொற்கள் ஆகியிருக்கின்றன. kcalcல் கணக்குப் போட்டுப் பார்க்கலாம். சராசரி வேகம் 35.5 சொற்கள் நிமிடத்துக்கு என்றுதான் வருகிறது. இன்னும் 17 நிமிடங்களில் இதே வேகத்தில் இன்னும் 600 சொற்கள் எழுதலாம். 4200 சொற்கள் வந்து விடும்.

நமச்சிவாய வாழ்க என்ற பாடல் யாருடைய தொலைபேசியிலோ ஒலிக்கிறது. வண்டி ஓட்டுனராக இருக்க வேண்டும். யாருடனோ ஆங்கிலத்தில் பேசுகிறார். பட்லர் ஆங்கிலத்தில். அப்பா சொல்வது போல. வண்டி ஒன்று கிளம்பி உர் என்ற சத்தத்துடன் விரைகிறது. ஸ்கூட்டி போன்ற வண்டியில் போய் விட்டார் ஒருவர். வேறு எதுவும் தெருவில் தென்படவில்லை.

எங்கேயோ தேய்க்கும் சத்தம். ஒரு பள்ளி மாணவன் இன்னொரு இரு சக்கர வண்டியில், ஆட்டோ ஒன்று வேகமாக வருகிறது. குழந்தையைக் கூட்டிக் கொண்டு ஒரு அம்மா நடந்து போகிறார்கள். நேற்று வெளியிலிருந்து கடைக்குப் போய் விட்டு வரும் போது காலில் செருப்பு இல்லாமல் ஒரு சின்னப் பையன் ஐஸ்கிரீம் வண்டியிலிருந்து நடந்து போகிறான்.

இன்னொரு இரு சக்கர வண்டி புறப்பட்டுப் போக பின்னாலேயே இன்னோரு ஆட்டோ. இன்னோரு இரு சக்கர வண்டி இந்தப் பக்கத்திலிருந்து வந்து போகிறது. இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் எத்தனை வண்டிகள் போய் விட்டன.

காகம் ஒன்று கரைந்தபடியே பறந்து போகிறது. கையில் பிளாஸ்டிக் பையுடன் ஒருவர் நடந்து வருகிறார். மளிகைப் பொருட்கள் வாங்கும் கடைக்காரர் இந்த வழியாகத்தான் வருகிறார் என்று தோன்றுகிறது. அவர்கள் மிகவும் செல்வச் செழிப்புடையவர்களாகவே இருக்க வேண்டும். அவர் அவரது மனைவி, இன்னொரு இளைஞர், காலை வேளைகளில் ஒரு வயதானவர் கடையைப் பார்த்துக் கொள்கிறார்கள்.

இன்னும் சரியாக 10 நிமிடங்கள் இருக்கின்றன. வேகம் குறைந்து கொண்டேதான் வருகிறது. கை விரல்கள் சிக்க ஆரம்பிக்கின்றன. ஒரு அம்மா இரு சக்கர வண்டியில் சீறிக் கொண்டு போகிறார். ஒரு குழந்தைக் குரலும் பின்னணியில் கேட்டது. ஜன்னலில் திரையை எடுத்து விட்டதால் உள்ளே வெக்கை வரத்தான் செய்கிறது. என்ன செய்வது. காகம் கரைவதும் சூட்டைத் தாங்காமல்தானோ என்னவோ? சென்னையில் நேற்று மழை பெய்ததாம். இங்குதான் எதற்கும் வழியில்லாமல் இருக்கிறது.

3940 சொற்கள் ஆகி விட்டன. 4000 சொற்கள் ஆனதும் நிறுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

காற்று நன்கு அடிக்கிறது. இலைகள் தலையை அசைக்கின்றன. ஆனால் வெக்கை குறைவதற்கு வழியில்லை. பக்கத்தில் கடலா இருக்கிறது. குளிர்ச்சியான காற்றைக் கொண்டு வருவதற்கு.

திங்கள், ஏப்ரல் 11, 2011

தேர்தல், பணிகள்


இப்படி நாட்குறிப்பு  எழுத ஆரம்பித்தது 2006ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து. அடுத்த 3 ஆண்டுகளுக்கு 2009ம் ஆண்டு வரை தொடர்ந்து இடையில் சிறு இடைவெளிகளுடன் எழுதிக் கொண்டிருந்தேன். வலைப்பதிவில் வெளியிடாத நாட்களில் கூட கணினியில் எழுதி சேமித்து வைத்திருந்தேன்.

மார்ச் 2009ல் அந்தப் பழக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி அல்லது இடைவெளி கொடுக்கலாம் என்று தோன்றியது. ஒரு நீண்ட இடைவெளியாகவே போய் விட்டிருந்தது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு எழுதுவதற்கான மனநிலை வரவில்லை. இடையிடையே ஓரிரு நாட்கள் முயற்சித்து விட்டிருந்தேன். மீண்டும் 2011 மார்ச் மாதம் ஆரம்பித்திருக்கிறது.

2009ல் நிறுத்துவதற்கான ஒரு காரணம், 'பழகி விட்டது என்பதற்காக ஒன்றை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கக் கூடாது. அதை விட சிறந்த பழக்கம் அதை நிறுத்தினால்தான் கிடைக்கும்' என்று நினைத்தது. அதை விடச் சிறந்ததாக எதுவும் கிடைத்து விடவில்லை. இனிமேல் நிறுத்துவதற்கான நோக்கங்கள் கிடைக்காது என்றுதான் நினைக்கிறேன்.

தியானம் செய்வது அதன் பின்னரும் பல மாதங்கள் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அதற்கும் ஒரு இடைவெளி போட்டேன். இப்போது அதையும் ஆரம்பித்தாச்சு.

நாட்குறிப்பு எழுதுவது வாழ்க்கையின் பலகட்டங்களில் நடந்திருக்கிறது. முக்கியமாக, நெருக்கடியான கட்டங்களில் என்ன செய்வது என்று தெரியாத கட்டங்களில் எழுதியிருக்கிறேன். நிறைய தெளிவுகள் கிடைத்திருக்கின்றன.

முதலில் தினமும் விபரமாக எழுதியது கல்லூரியில் மூன்றாமாண்டு, இறுதி ஆண்டு படிக்கும் போது. வேலைக்குப் போன பிறகு எழுதுவதைக் குறைத்து விட்டேன். திருமணமாகி சாங்காயில் வசிக்கும் போது மீண்டும் எழுத ஆரம்பித்தேன். முதல் முறை உயரமான தடிமனான நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டாவது முறை A4 தாளில் எழுதியது. முதல் முறை எழுதிய நோட்டு புத்தகங்கள் எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை. இரண்டாம் முறையின் கோப்பு இருக்கிறது.

மூன்றாவது முறைதான் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது. கணினி மற்றும் இணையத்தின் அதிசயம். எழுதி சேமிப்பதும், பகிர்ந்து கொள்வதும் சாத்தியம் என்று ஆகும் போது எழுதுவதற்கும், அதைப்பற்றி அலசுவதற்கும் வாய்ப்புகள், ஊக்கங்கள் அதிகம் கிடைக்கின்றன.

எழுதுவதன் முதல் நோக்கம், நமது செயல்களை எண்ணங்களை நெறிப்படுத்தி அலசிக் கொள்வது. காலையில் எழுதும் போது முந்தைய நாளின் நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. நாள் முழுவதும் நாளைக்கு இதை எப்படி எழுதப் போகிறோம் என்ற கேள்வி கேட்டால் மூன்றாவது மனிதனாக நிகழ்வுகளை அவதானிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

இரண்டாவதாக வலைப்பதிவில் வெளியிடுவதன் மூலம் யாராவது படிக்க நேர்ந்தால், அவர்கள் நமது பழக்கங்களையும் தவறுகளையும் அறிந்து கற்றுக் கொள்ளவோ, திருத்தவோ முடியும்.

மூன்றாவதாக, அப்படிப் படித்தவர்கள் பின்னூட்டங்களாகவோ, தொலைபேசியிலோ தமது கருத்துக்களை சொல்ல முடிந்தால், நமது செயல்பாடுகளுக்கு வெளிநபர் ஒருவரின் விமர்சனம் கிடைக்கிறது.

நான்காவதாக, ஆரம்பத்தில் எழுதிய போது தமிழ்மணத்தில் இணைத்து நிறைய பேர் படித்தார்கள். அப்படிப் படித்தவர்கள், நேரில் சந்திக்கும் போது என்னுடன் பல நாள் பழகியவர்கள் போன்ற உணர்வு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் 'நாட்குறிப்பை படிப்பதன் மூலம் எனது செயல்பாடுகளுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்' என்பது தெரியாவிட்டாலும், அவர்களின் உணர்வு எனக்கும் புரிந்தது.

நேற்று எழுதியது போல, காலையில் திட்டமான நேரத்துக்கு (4 மணி) எழுந்து காலைக்கடன்களை முடித்த பிறகு நாட்குறிப்பு எழுதுவது. 5.30 ஆகியிருந்தது. உலாவப் போனது காந்திநகர் கிழக்குச் சாலை வழியாக நடந்து பிரதான சாலைக்கு முன்பே அனுக்ரஹா அருகில் இடது புறம் திரும்பி, டான்போஸ்கோ பின் வாசல் சாலையில் திரும்பி, மீண்டும் பிரதான சாலையைத் தவிர்க்கத் திரும்பிய தெருவில்தான் துரைமுருகனின் வீடு இருந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல அலுவலகமும் பார்க்க முடிந்தது.

துரை முருகனின் வீட்டிலிருந்து இந்த மண்டல அலுவலகம் 2 நிமிட நடையில் இருக்கிறது. அதிலிருந்து 5 நிமிட நடையில் நலிவுற்ற மற்றும் வாராக் கடன்கள் கிளை. துரை முருகன் வீட்டிலிருந்து 5 நிமிடங்கள் எதிர்த்திசையில் நடந்தால் தனிநபர் வங்கிக் கிளை. அங்கிருந்து இன்னொரு 5 நிமிட நடைத் தூரத்தில் சிறுதொழில் கிளை. இப்படி ஒரே வங்கியின் அலுவலகங்கள் நான்கு ஒரே வளாகத்துக்குள் இருக்கின்றன. மகளிர் சுய உதவிக்குழு கிளை என்று இந்தியன் வங்கியின் கிளை ஒன்றும் இருக்கிறது.

இந்தக் கட்டிடங்களை எல்லாம் கட்டி வாடகைக்கு விட்டிருப்பவருக்கு நல்ல வருமானம்தான். இந்தக் கிளைகளை எல்லாம் இந்த இடத்தில் கொண்டு வருவதற்கும் ஏதாவது சிறப்பு அதிகாரம் தேவைப்பட்டிருக்கும். துரைமுருகனுக்கு இரண்டும் பொருந்துகிறது. உண்மை நிலவரம் என்ன என்று தெரியவில்லை.

துரைமுருகன் வீடு பெரிய மாளிகை - காந்திநகரின் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் இரட்டை கிரவுண்ட் மனையில் கட்டப்பட்டது. வீட்டின் முன்பு தேர்தல் வாகனங்கள், வீடு விளக்குகளால் ஜொலித்தது. அந்தத் தெருவின் கடைசியில் வலது புறம் திரும்பினால் குட்லெதர் குடும்பத்தின் வீடு. முதல் முறையாக வீட்டின் முன்புறமாக பார்க்கிறேன். வழக்கமாக பிரதான சாலையில் வண்டியில் போகும் போது அல்லது நடக்கும் போது பக்கவாட்டில் பார்த்திருக்கிறேன்.

பிரதான சாலையில் இருந்த தேநீர்க் கடையில் நல்ல கூட்டம். சாலையைக் கடந்து ஓடைப்பிள்ளையார் கோவில் அருகில் வந்தால் கிடையில் நாளிதழ்கள் வந்து விட்டிருந்தன. டெக்கான் குரோனிக்கிளும், தினத்தந்தியும் வாங்கிக் கொண்டேன். வீட்டுக்கு வந்து சிறிது நேரம் நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 'நாளை பிரச்சாரம் ஓய்கிறது' என்பது தினத்தந்தியில் முதல் பக்கத் தலைப்புச் செய்தி. 'இன்னமும் ராமேஸ்வரம் மீனவர்களின் இறப்பு இவர்களுக்கு செய்தியாகத் தெரியவில்லை' என்று சோர்வுதான் ஏற்பட்டது.

டெக்கான் குரோனிக்கிளில் மன்மோகன் சிங்கின் பேச்சு தலைப்புச் செய்தி. ஜெயலலிதா மன்மோகன் சிங்கைத் தாக்கியதும் முக்கிய செய்தி.

தொடர்ந்து வீட்டைத் தூய்மை செய்து, பாத்திரங்கள் கழுவி விட்டுத் தரை துடைப்பு. குளித்து விட்டுக் காலையிலேயே ஊற வைத்திருந்த அரிசி+உளுந்து+கடலைப் பருப்புக் கலவையை உலர் அரவையில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொண்டேன். அரைக்கும் போது எதையும் சேர்க்கவில்லை. இரண்டாவது தவணையில் நல்லமிளகு மட்டும் போட்டு அரைத்துக் கொண்டேன். அரைந்து கொண்டிருக்கும் போதே வெங்காயம் நறுக்கி அரைத்த மாவில் சேர்த்தேன். உப்பு, சீரகம், மிளகாய்ப்பொடி இவற்றை எல்லாம் அரைத்த மாவில் சேர்த்தேன். முந்தைய நாள் வாங்கிய தேங்காயில் மீதி இருந்த முறியில் பாதியை வெட்டி அரவை சின்ன பாத்திரத்தில் பொடியாக்கி சேர்த்து வைத்தேன்.

சன்னல் வழியாக தெரியும் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் அம்மாவும் மகனுமாக வத்தல் போட ஆரம்பித்திருந்தார்கள். வெயிலை வீணாக்காமல் அரிசி வற்றல், கூழ் வற்றல், வடகம் என்று போட்டு வைத்துக் கொள்ளும் நம்ம ஊர் பழக்கம் சீனாவின் ஊறுகாய் போடும் பழக்கத்துக்கு இணையானது என்று சொல்லலாம்.

தியானம். இணையம். 9 மணிக்கு மின்சாரத் தடைக்கு முன்பு இணையத்தில் செய்ய வேண்டியதைச் செய்து விடலாம். டுவிட்டரில் மீதி இருந்த தொகுதிகளைக் குறிப்பிட்டு காங்கிரசைத் தோற்கடிக்கும் செய்திகளை வெளியிட்டேன். நாட்குறிப்பு வலைப்பதிவில். இதை எல்லாம் செய்து முடித்து விட்டு நிமிரும்போது சரியா மின்சாரம் தடைப்பட்டது. மடிக்கணினியில் மின்கலன் மூலம் 2 மணி நேரம் வேலை செய்யலாம்.

அச்செடுத்து அனுப்ப வேண்டிய இன்வாய்சை பென்டிரைவில் நகல் செய்து கொண்டேன். அத்தோடு கணினியையும் அணைத்து விட்டு சாப்பிடப் போனேன். சாப்பிட்டு விட்டு உடை மாற்றி, இன்வாய்ஸ் அனுப்ப வேண்டிய உறையில் முகவரியை எழுதிக் கொண்டு அச்செடுப்பதற்கான தாள், வங்கி கணக்கு அட்டை கோப்பில் எடுத்துக் கொண்டேன்.

உலர் அரவையில் சிறிய அரவைப் பாத்திரத்தில் கைப்பிடி உடைந்து ஒரு ஓட்டை இருக்கிறது. அதை விரல்களால் பொத்திக் கொண்டுதான் இயக்க வேண்டும். இல்லை என்றால் வெளியில் சிதறும். சென்ற முறை மாற்றிய அரைக்கும் பகுதி அரைகுறையாக சரிசெய்யப்பட்டிருந்தது. இதை கொடுத்து விட்டு புதிது வாங்கிக் கொள்ளலாம் என்று அதைக் கையில் எடுத்துக் கொண்டேன்.

உயர் அழுத்தக் கலனில் உள்ளே வைத்து சமைக்க அடுக்குப் பாத்திரங்கள் வாங்க வேண்டும். ஒன்றே ஒன்றுதான் இருந்தது. அதையும் மாதிரிக்கு எடுத்துக் கொண்டேன்.

முதலில் அச்செடுக்கும் இடம். 'வெள்ளைத்தாளில் அச்செடுத்து விட்டு அதன் பிறகு நான் கொண்டு போன தாளில் அச்செடுக்க வேண்டும்' என்று சொன்னேன். வெள்ளைத்தாளில் எடுத்து விட்டார். இந்தத் தாளை வைத்து எடுப்பதில் என்ன சுணக்கமோ, சிறிது நேரம் அங்குமிங்கும் முயற்சித்து விட்டு முடியவில்லை என்று மறுத்து விட்டார். இன்னொரு மையத்தில் அச்செடுப்பதே செயல்படவில்லையாம்.

வழியில் தேர்தல் முடிவுக் கணிப்பு வெளியிட்டுள்ள ஜூனியர் விகடன் வாங்கிக் கொண்டேன். அவர்கள் ஆசிரியர் குழுவினர் மற்றும் நிருபர்கள் கூடிப்பேசி கூட்டுக் கணிப்பாக தொகுதிவாரியாக யார் வெற்றி பெறுவார்கள் என்று எழுதியிருக்கிறார்கள். பல தொகுதிகளில் நேரில் போகாமலேயே, முந்தைய தேர்தல் வாக்கு எண்ணிக்கை, வேட்பாளரின் புகழ் என்று கணித்திருந்தார்கள். இது அவர்கள் பத்திரிகை சில நூறு அதிகம் விற்க உதவுவதைத் தவிர வேறு எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை.

அவர்களின் கணிப்புகளின் படி அதிமுக 105, திமுக 65, தேமுதிக 17, காங்கிரசு 15, மார்க்சிஸ்டு - 12, இந்திய கம்யூனிஸ்டு - 7, பாமக - 7, விசி - 2. பாமக, விசி மீது கொஞ்சம் வெறுப்பு அதிகமாக இருப்பது போலத் தெரிந்தது. போட்டியிட்டதில் நான்கில் ஒரு பங்குதான் வெற்றி பெறுகிறார்கள். மார்க்சிஸ்டு மீது அபிமானம் அதிகம். தேமுதிக அதிகம் வெற்றி பெற்று விடக் கூடாது என்ற ஆசையும், திமுக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கமும், அதிமுக முன்னணி கட்சியாக வர வேண்டும் என்ற விருப்பமும்தான் வெளிப்பட்டன.

பிற்பகலில் படித்த சவுக்கு எழுதிய கட்டுரையில் விகடன் குழுமத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மாறன் சகோதரர்கள்தான் என்று ஊகித்திருந்தார். அதைப் பொருத்திப் பார்த்தால் மேலே சொன்ன விருப்பங்கள் அவர்களுக்கு இருப்பது பொருத்தமாகத்தான் படுகிறது.

ஸ்டாலின், அழகிரி என்று கருணாநிதியின் குடும்பம் வீழ்த்தப்பட வேண்டும்,
திமுக தங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும்,
ஜெயலலிதாவுடன் ஏதாவது ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.
பாமக/விடுதலைச் சிறுத்தை போன்ற போராளிக் கட்சிகள் தலையெடுத்து விடக் கூடாது,
விஜயகாந்த் வடிவில் உறுதியான எதிர்க்கட்சி ஏற்பட்டு விடக் கூடாது.

இதில் பல எதிர்மறையாக நடக்க வேண்டும்.

மார்சிஸ்டு - 12
இந்திய கம்யூனிஸ்டு - 11
விடுதலைச் சிறுத்தைகள் - 7
தேமுதிக - 35
திமுக - 80
அதிமுக - 80
பாமக - 5
மற்ற கட்சிகள் மீதி 4 இடங்கள்.

காங்கிரசுக்கு இடமே இருக்கக் கூடாது என்பது சாத்தியமில்லை என்று புரிந்தாலும் இது விருப்பம்தான்.

வங்கிக்கிளையில் போனால் நினைத்தது போலவே இயங்கிக் கொண்டிருந்தது. காத்திருத்தல் வரிசை முறை எப்படி என்று புரிபடவில்லை. வருகிறவர்கள் காலியாக இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டால் அடுத்தது அவர்களை கவனிக்கிறார்கள். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. ஏற்கனவே காத்திருக்கும் இருக்கையில் இருப்பவர்களை முந்திக் கொண்டு நாம் எப்படி பணி இருக்கைக்குப் போவது? கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு போன முறை பணம் எடுத்த சாளரத்திற்குப் போனேன்.

பணத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டு, பண அட்டைக்கான விண்ணப்பத்தையும் கேட்டேன். அதற்கு ஒரு வெள்ளைத்தாளில் முந்தைய கிளையில் அட்டை வைத்திருக்கவில்லை என்று எழுதிக் கேட்டார், கொடுத்ததும் கணினியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து விட்டார். வீட்டுக்கே வந்து விடுமாம்.

வெளியில் வந்து பேருந்து நிறுத்தத்தில் பழைய பேருந்து நிலையம் போகும் பேருந்து. ஜூனியர் விகடனின் தொகுதி கணிப்புகளை மேய்ந்து கொண்டே போனேன், ஏதாவது விதத்தில் அறிமுகமான தொகுதிகள், கைச்சின்னம் போட்ட தொகுதிகளை மட்டும் படிப்பது என்று புரட்டினால் கடைசி தொகுதிகளாக கன்னியாகுமரி தொகுதிகள். நாகர்கோவிலில் திமுக, கன்னியாகுமரியில் அதிமுக, குளச்சலில் காங்கிரசு, பத்மநாபபுரத்தில் தேமுதிகவின் ஆஸ்டின், கிள்ளியூரில் காங்கிரசு, விளவங்கோடில் மார்க்சிஸ்டு என்று கணித்திருந்தார்கள். குளச்சலும், கிள்ளியூரும் மாறினால் சரியாக இருக்கும். கன்னியாகுமரியில் சொத்துச் சேர்த்து சாதி பலத்தில் நிற்கும் திமுக அமைச்சர் தோற்பது நல்லது. நாகர்கோவிலில் திமுக / அதிமுக இரண்டில் எது வெற்றி பெற்றாலும் சரியாக இருக்கும், திமுகவாகவே இருக்கட்டும்.

வேலூரில் ஞானசேகரன், மயிலாப்பூரில் தங்கபாலு, ஈரோட்டில் யுவராஜா தோற்பார்களாம். திருநாவுக்கரசர், வசந்தகுமார், யசோதா வெற்றி பெற்று விடுவார்களாம். துரைமுருகன், காந்தி வெற்றி பெறுகிறார்கள்.

பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி சந்தைத் தெருவுக்குள் போனேன். முதலில் தெரிந்த பாத்திரக் கடைக்குள் போகவில்லை. இது போன்ற சந்தைகளில் முதலில் தெரியும் கடையிலேயே வாங்கி விடக் கூடாது என்று பல முறை பட்டுத் தெரிந்தது. மண்டி வீதியைக் கடந்து உள்ளே போன தெருவில் இருந்த பாத்திரக் கடையில் குக்கர் பாத்திரங்களும் இல்லை, மிக்சி பாத்திரமும் இல்லை. 'இங்கே எல்லாம் கிடைக்காது' என்று ஊக்குவிக்கவும் செய்தார்கள்.

இன்னும் இரண்டு தெருக்கள் திரும்பி நடந்தால் குக்கர், மிக்சி பாகங்கள் என்றே ஒரு கடை இருந்தது. உலர் அரவைப் பாத்திரம் 75 ரூபாயில் ஆரம்பித்து 110, 165 என்று காட்டினார் விற்பனை உதவியாளர். 'வேணும்னா பிரீதி ஒரிஜினல் கூட இருக்கு' என்று அதை எடுக்கச் சொன்னார். 350 ரூபாய். உறுதியான அடிப்பாகமும், மேம்பட்ட வடிவமைப்பும் தெரிந்தது. அதையே வாங்கிக் கொண்டேன். பழைய பாத்திரத்தில் இருந்த ரப்பர் பகுதிகளையும் கைப்பிடியையும் தவிர்த்திருந்தார்கள். மூடிய உட்புறமாக மூடுவது. அதனால் வெளியில் தெறிக்காது.

உயர் அழுத்தக் கலன் உள் பாத்திரங்கள் பாத்திரக் கடையில் கிடைக்கும் என்றார்கள். அப்படியே சுற்றி வந்து பிரதான மண்டி வீதியில் மறுபக்கத்திலிருந்து நுழைந்தால், பழைய பொருட்களை விற்கும் சந்தை. ஆணி முதல் கணினி பாகங்கள் வரை கடை பரப்பியிருந்தார்கள். எல்லாமே பயன்படுத்திய பொருட்கள். நல்ல கூட்டம். அந்தப் பகுதியைக் கடந்து பிரதான வீதியில் பழ வியாபாரிகளின் பின்புறமாக ஒரு பாத்திரக் கடை.

கல்லாவில் தடித்த தங்கச் சங்கிலி சட்டை வழியாக வெளியில் தெரியும் முதலாளி. தரை பெருக்கிக் கொண்டு ஒரு சிறுமி, தூசி தட்டிக் கொண்டு இன்னொரு சிறுமி, தூசி தட்டிக் கொண்டு கொஞ்சம் வயதான ஆண். சிறுமிகள் என்று சொன்னாலும், அனுமதிக்கப்பட்ட பணியாளர் வயதைத் தாண்டியவர்களாகவே இருப்பார்கள். மேல்நிலைப்பள்ளியில் படிக்கலாம்.

கொண்டு போயிருந்த மாதிரி பாத்திரத்தின் அளவில் மூன்று அடுக்கு பாத்திரத்தைத் தேடி எடுத்தார் அந்த வேலைக்குப் பணிக்கப்பட்ட ஒரு சிறுமி. அதை அளவு சரி பார்த்துக்கொண்டேன். இதே போல ஒற்றை பாத்திரமாக இருக்குமா என்றதும் மீண்டும் மேசைக்கு அடியில் காணாமல் போனாள். சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் எடுத்த பாத்திரம் கொஞ்சம் பெரிதாக பொருந்தாமல் இருக்குமோ என்று தோன்றியது. அந்தப் பாத்திரத்தின் மூடியில் 5 லிட்டர் என்று போட்டிருந்தது. அடிப்புறத்தில் 7.5 லிட்டர்.

'கொஞ்சம் பெரிதாக இருக்கிறதே' என்று சொன்னதும் அந்தச் சிறுமிக்கு ஒரு மிரட்டல் நிரம்பிய திட்டு விழுந்தது

'அவர் என்ன சைசுன்ன காட்டி கேட்கிறார், நீ இப்படி எடுத்துக் கொடுக்கிறாயே!'

எனக்கு வருத்தமாக இருந்தது. எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை. அந்தச் சிறுமி எதுவும் பேசாமல் மீண்டும் மேசைக்கடியில் மறைந்தாள். பல நிமிடங்கள் தேடுதலுக்குப் பிறகு பாத்திரத்துடன் வெளியில் வந்தார்.

இதற்கிடையில் உலர் அரவை எந்திரம் வாங்க ஒரு கறுப்பு பர்தா போட்ட இசுலாமிய பெண்மணி குழந்தையுடன் வந்தார். 'கம்பெனி வேணுமா, லோக்கல் வேணுமா. லோக்கல்னா 750, 1000, 1200 ஆகும் கம்பெனின்னா 2200 ஆகும்' 'லோக்கல் போதும்'

ஒரு சீட்டில் எழுதி ஆண் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினார். அதன் பிறகு எனக்கான விலைப்பட்டியலை ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்தார். அடுக்குப் பாத்திரங்களுக்கு 350, ஒற்றை பாத்திரத்துக்கு 160. விலை குறையாதாம்.

வந்த வேலை முடிந்து விட அதற்கடுத்த குறுக்குச் சந்தில் புகுந்தால் அங்குதான் நியூ செஞ்சுரி புக் ஹவுசின் நுழைவாயில். அங்கு போனால் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

'என்ன வேணும்' என்று மிரட்டல் தொனியில் பார்த்தவரிடம் பதில் சொல்லாமல் உள்ளே போக,
'சரி பாருங்க' என்று அவர் வேலையைத் தொடர்ந்தார்.

'தோல்' புத்தகத்தைக் கேட்டு எடுத்துக் கொண்டு உடனேயே கிளம்பி விட்டேன். மறுபக்கம் புத்தகம் குறித்தும் விசாரித்துக் கொண்டேன். அதுவும் இருந்தது. இரண்டுமே 375 ரூபாய் விலை. இந்த மாதம் தோல் அடுத்த மாதம் பொன்னீலனின் மறுபக்கம்.

தோல் பதனிடும் தொழிலுடன் தொடர்புள்ளதால் அது தொடர்பான இலக்கியம் படிப்பது ஒரு கடமை என்று கூடச் சொல்லலாம். தோல் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழல்களை புரிந்து கொள்ள உதவும். பொன்னீலனின் மறுபக்கம் கன்னியாகுமரி மாவட்ட மதக்கலவரங்களை சார்ந்து எழுதப்பட்டதாம்.

சாலையைக்கடந்து கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து. வீட்டுக்கு வந்து பார்த்தால் வாங்கியிருந்த பொருட்கள் எல்லாம் பொருத்தமாக இருந்தன. தயிர் வாங்கி வந்திருந்தேன். அழுத்தக்கலனில் சோறு, மீதியிருந்த தேங்காயில் துவையல், பருப்புப்பொடி, புளியோதரை பொடிகள், ஊறுகாய் என்று மதிய உணவு.

மதியத்துக்கு மேல் இறுதியாண்டு திட்டப்பணி தொடர்பாக பார்க்க வந்திருந்த மாணவர் 3 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்குத் தேவைப்பட்ட வழிகாட்டல்களைக் கொடுத்து விட்டு, அதன் பிறகு பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

அவர் போன பிறகு சிறிது இளைப்பாறல், 7 மணிக்கு மேல் டுவிட்டரில் சில தகவல்கள், அடுத்த மின்தடை ஏற்படும் வரை ஆQ மொழிபெயர்ப்பு என்று நேரம் போனது. தூங்க தயாராகி தியானத்தில் இருக்கும் போது நாகர்கோவிலில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசி அரசியல் சூழலை எல்லாம் அலசி பேசினார். நானும் எனது கருத்துக்களையும் சொல்லி அரை மணி நேரம் பேசியிருந்திருப்போம். 10 மணிக்குப் பிறகுதான் தூக்கம்.

ஞாயிறு, ஜூன் 20, 2010

எறும்புகள்

வீட்டில் ஒரு குளியலறையில் கதவு நிலை ஓரமாக எறும்புகள் புற்று மண் குவித்துக் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பே இது ஆரம்பித்து விட்டிருந்தது. ஒரு சில நாட்களுக்கு ஒரு முறை மணலை அள்ளி வெளியில் கொண்டு போட்டு விடுவேன். மணலை அள்ளிப் போடுவதும் கொஞ்சம் சிக்கலான வேலைதான், கைகளில் கால்களில் ஏறி கடித்த்த்து விடும் போர் எறும்புகள். மணலோடு வெளியில் போன எறும்புகள் தவிர மிஞ்சியவற்றைத் தண்ணீரோடு தள்ளி விட்டு விடுவேன்.

இரண்டு மூன்று நாட்கள் எதுவும் தெரியாது, மீண்டும் தம் முயற்சியில் மனம் தளராமல் மீண்டும் மண் குவிய ஆரம்பித்திருக்கும். 'ஏதாவது மருந்து வாங்கிப் போட வேண்டும்' என்று பரிந்துரைகள் வந்தாலும், அது போன்று வேதி மருந்துகளை தேவையில்லாமல் பயன்படுத்த வேண்டாம், தேவையில்லாமல் எறும்புகளைக் கொன்று குவிக்கவும் வேண்டாம் என்று அள்ளி வெளியில் போடும் முறையிலேயே தொடர்ந்து கொண்டிருந்தேன்.

கடைக்குப் போகும் போது மனதில் நினைவிருக்கும் அளவுக்குப் பொறுமை மீறிய பிறகு எறும்புப் பொடி வாங்கி வந்தேன். ஒரு குளியலறையை கிட்டத்தட்ட தமது ஆதிக்கத்தில் எடுத்துக் கொண்டது போல நடந்து கொண்டிருந்த எறும்புகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டிய நாள் வந்தாச்சு.

6 ரூபாய்க்கு QUEENS ANT POWDER என்று எறும்புப் பொடி, 100 கிராம் - 100% சுத்தமான கமாக்சைன் (Gamaxine) பொடி என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். பொத்தூர் கிராமம், சென்னை - 62ல் இருந்து சேர்மா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்கும் பொதி.

சின்ன வயதில் எறும்புப் பொடிக்கு மசியாத எறும்புகள் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். "பொடி போட்டால் அதையும் தின்று விட்டு தமது வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள்" என்று சலித்துக் கொள்வார்கள். இந்தப் பொடியும் அது போலவா அல்லது உண்மையிலேயே வேலையைக் காட்டி விடுமா?

உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தோடு, ஒரு பிளாஸ்டிக் பையில் குவிந்திருந்த மணலை எறும்புகளோடு அள்ளினேன். பரபரவென்று சிதறி இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன. துடைப்பத்தால் கூட்டிக் கூட்டி மணலை எல்லாம் அள்ளி விட்டேன். இதற்குள் அள்ளும் முறம் வழியாகவும், பையிலிருந்தும் கைகளிலும், தரையிலிருந்து கால்களிலும் தாக்குதல் ஆரம்பித்திருந்தது. கடைசியாக சிதறியிருந்த எறும்புகளை ஒரு கூட்டு கூட்டி பையில் தள்ளினேன். இருந்தும் சில நூறு இன்னும் ஓடிக் கொண்டிருந்தன.

பையை வெளியில் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு (குப்பைகளில் கொஞ்சம் தளைக்கட்டும்), திரும்பி வந்து பொடிபொதியை வெட்டித் திறந்து எறும்புகள் துளை செய்திருந்த இடுக்குகளில் தூவினேன். எனது வளமை போல தேவைக்கு அதிகமாகவே தூவினேன்.

கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் ஹிட் போல அடித்தது செத்து விழுவது போல இல்லை. எறும்புகள் பொடிக்குள்ளும் தமது ஓட்டங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தன. (கரப்பான் பூச்சிகளை ஒரு அடி அடித்து வீட்டுக்கு வெளியில் கொண்டு விடுவதுதான் வழக்கமாகி விட்டிருக்கிறது.) அப்படியே கையோடு, குளியலறை சுவர்களையும், தரையையும் தேய்த்துக் கழுவி விட்டு விட்டு, விடாப்பிடியாக இருந்த கறைகளை கழுவும் அமிலத்தால் கரைத்துத் தள்ளி விட்டு வெளியில் வந்தேன்.

ஒரு மணி நேரம் கழிந்து போய்ப் பார்த்தால், தூவிய பொடியின் நடுவில் அதைச் சுற்றி கும்பல் கும்பலாக எறும்பு உடல்கள். வருத்தமாகத்தான் இருந்தது.

எறும்புகளின் குடியிருப்பை வைத்து இரண்டு திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று போட்டியாக ஓரிரு மாத இடைவெளியில் வெளியான சித்திரப் படங்கள்.

ANTZ என்ற படத்தில் வேலைக்கார எறும்புகள், போர் எறும்புகள், ராணி, இளவரசி, சூழ்ச்சி செய்யும் அடாவடி தளபதி என்று கொண்டு போய் Z என்ற வேலைக்கார எறும்பு தளபதியின் சூழ்ச்சியை முறியடித்து இளவரசியின் காதலைப்பெற்று கைப்பிடிக்கும் கதை. எறும்புக் கூட்டுக்குள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பெரிதாக சிந்தித்து நுணுக்கமாக படம் எடுத்திருந்தார்கள். எல்லாமே வரையப்பட்ட சித்திரங்கள், பாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தது மட்டும் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள்.

A Bugs Life என்ற படத்தின் கதை பெரும்பாலும் திறந்த வெளியில் நடைபெறுகிறது. இதுவும் வரை ஒளிப்படம்தான். எறும்புகளை மிரட்டி தமக்கு உணவு சேர்த்துத் தரும்படி அடாவடி செய்யும் வெட்டுக் கிளிகளை முறியடிக்க flik என்ற எறும்பு முன் முயற்சி எடுத்து, பல குளறுபடிகளுக்குப் பிறகு இறுதியில் எறும்புகள் வெட்டுக் கிளிகளை துரத்தி அடித்து flik இளவரசியைக் கைப்பிடிக்கிறது. வெளிப்புறக் காட்சிகள் அங்குலம் அங்குலமாக செதுக்கி அசத்திய படம்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்த பிறகு, எறும்புகள்தானே என்று தேய்த்து விட்டு அல்லது மருந்து போட்டு படுகொலை செய்து விட்டு போக முடிகிறதில்லை. 'எறும்புக் குழுமத்தில் என்னென்ன உள் நிகழ்வுகள் இருக்கும், எவ்வளவு உழைப்பில் தமது புற்றை உருவாக்குகின்றன, அவற்றை குலைக்கும் போது எப்படி உணர்கின்றன' என்று மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது.

இன்றைக்கு குறைந்தது ஒரு நூறு எறும்புகளின் உயிரற்ற உடல்களைப் பார்க்க வேண்டிய செயலை செய்து விட்டு அதை பதிவும் செய்தாகி விட்டது.

தமிழ் டாட் நெட், சிட்னி பாலா இணையத் தமிழ் இளைஞர்களை ஒன்று சேர்த்து சாதிப்பதற்கு ஆரம்பித்த மடற்குழுவின் பெயரும் எறும்புகள்தான். எறும்புகள் போல சுறுசுறுப்பாக கூடு கட்டி, கடைசியில் யாரோ வந்து காலால் உதைத்துப் போட்டு விட்டுப் போவது, அல்லது பாம்பு ஒன்று எறும்புகளைத் தின்று விட்டு தான் குடியேறி விடுவது மனித சமூகங்களிலும் நடக்காமலா இருக்கிறது!

ஞாயிறு, மே 17, 2009

கூடுதல் எழுத்து

போன தடவை எழுதிய போது மிகவும் அழுத்தத்தில் , பல நாட்கள் ஒழுங்குகள் பிறழ்ந்திருந்த சோர்வில் எழுதினேன். எழுதி முடித்ததும் பள்ளத்திலிருந்து கஷ்டப்பட்டு ஏறி மேலேறி விட்ட உணர்வு. அந்த நல்லுணர்வும் தாக்கமும் ஒரு வாரம் நன்றாகவே தெரிந்தது. ஒரு வாரத்தில் பெரிதாக கலக்கமோ, சோர்வோ இல்லாமல் ஓடி விட்டது. நேற்றைக்கு ஒரு நாள் தேவையில்லாத பொழுது கழித்தது நடந்தாலும் அதிகம் சேதமில்லாமல் நகர்ந்து விட்டேன்.

இன்றைக்குக் காலையில் நாலரை மணிக்கு எழுந்து விட்டேன். எழுதிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டது. எழுதியதில் ஒரு பகுதி சேமிக்காமலேயே போய் விட்டது. மடிக்கணினியில் மின்கலன் செயலிழந்திருப்பதால் மின்சாரம் தடைப்பட்டால் எல்லாம் மறைந்து போய் விடுகிறது. பேசாமல் அலுவலகத்திலிருக்கும் ஒரு மின்வழங்கியை எடுத்துக் கொண்டு வைத்துக் கொள்ளலாம். நாளைக்கு அதைச் செய்து விட வேண்டும்.

படுக்கையை மடித்து வைத்து விட்டு துவைத்த துணிகளை எடுத்து வைத்தல். காயப்போடும் கம்பிகளையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துக் கொண்டேன். நேற்று வாங்கியிருந்த டெக்கான் குரோனிக்கிள், எகனாமிக் டைம்ஸ் போக வேண்டிய இடத்தில் போயின. இன்னும் மின்சாரம் வரவில்லை. அடுக்களையில் அழுக்காகியிருக்கும் தாள்களை மாற்றி பொருட்கள் வைக்கும் தட்டுகளை தூய்மை செய்யலாம். கிட்டத்தட்ட ஓரிரு மாதங்கள் இருக்கும் கடைசியாக மாற்றி.

மேல் தட்டிலிருந்து ஆரம்பித்தேன். டப்பாக்களை சமையலறை மேடையில் மாற்றி விட்டு விரித்திருந்த எகனாமிக் டைம்ஸ் தாள்களைச் சுருட்டி குப்பைக்கூடைக்கு அனுப்பினேன். இரண்டு துணிகள். முதலாவது உலர்ந்தது, இரண்டாவது நனைத்தது. டப்பா மூடிகளையும் பாட்டில் வெளிப்புறங்களையும் துடைத்து மேலே எடுத்து வைத்தேன். எது எங்கே இருக்க வேண்டும் என்பதையும் ஓரளவு மாற்றிக் கொண்டேன். அடுக்கி முடிக்கும் போது தடைப்பட்டிருந்த மின்சாரம் வந்தது. மீண்டும் எழுத வேண்டும் என்றுதான் உந்துதல். தரை தூத்து துடைத்து, பாத்திரம் கழுவி, குளித்து விட்டுப் பார்க்கலாம். தூக்க ஆரம்பித்தேன். அடுக்களையில் தட்டிய தூசிகள் எல்லாம் கிடந்தன. ஊத்து வாரிப் போட்டு விட்டு குப்பைப் பையை வெளியில் எறிந்து விட்டு குடி தண்ணீர் பிடிக்க வேண்டும். குடிதண்ணீருக்கும் வாளியை நன்றாகக் கழுவி, மூடியையும் தேய்த்துக் கழுவிக் கொண்டேன்.

உள்ளே வந்திருக்கும் குழாயில் தண்ணீர் நிரம்புவதற்கு கொஞ்ச நேரம் பிடிக்கிறது. இரண்டு குழாய்களிலிருந்து தண்ணீர் விழும்படி வைத்து விட்டு வாசலருகில் வேடிக்கை பார்க்கப் போனேன். வானத்தில் பிறைநிலா, தேய்பிறை. 9ம் தேதி முழுநிலா நாளிலிருந்து 7 நாள் தேய்ந்த பிறை. காலையில் 7 மணிக்கும் தெரிந்து கொண்டிருக்கிறது. கடந்து போனவரின் முகம் பரிச்சயமானதாகத் தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் அடையாளம் தெரிந்து விட்டது. போன வாரம் முடி வெட்டப் போன போது அந்தக் கடையில் எனக்கு முடி வெட்டியவர். உடனேயே அடையாளம் தெரிந்திருந்தால் ஒரு வணக்கம் சொல்லியிருக்கலாம். அவரைத் தொடர்ந்து ஒரு பெண், வேலைக்குப் போகிறார்.

அதற்குள் வாளி நிறைந்து விட்டது. அதை எடுத்து உள்ளே வைத்து விட்டு பாத்திரம் கழுவ ஆரம்பித்தேன். பாத்திரம் கழுவி விட்டு சாப்பிடுவதற்கு தோசை மாவு தயாரிக்க வேண்டும். ரவை, கோதுமை மாவு, பொரிகடலை உடைத்து, வெங்காயம், சீரகம், நல்லமிளகு போட்டுக் கரைத்துக் கொள்ளலாம். பாத்திரம் கழுவி முடித்து ஏதோ நினைவில் பாதியில் நிறுத்தியிருந்த எழுத்தைத் தொடர ஆரம்பித்திருந்தேன். சில நிமிடங்களில் நினைவு வந்து தோசை மாவு தயாரித்துக் கொண்டேன். அரை உழக்கு ரவை, மீதிக்கு கோதுமை மாவு இருப்பதை எல்லாம் கொட்டி விட்டேன். தண்ணீர் சேர்த்து பிசைந்து கொண்டே அரைக்கரண்டி சீரகம், கால் கரண்டி நல்லமிளகு, பாதி கரண்டி உப்பு போட்டு வைத்து கை கழுவி விட்டேன்.

தொடர்ந்து எழுத்து ஆரம்பித்தது. அலுவலகத்திற்கு போனதிலிருந்து ஆரம்பித்து நாள் கழிந்து விபரங்கள், அரசியல் நிலவரங்கள், மாலையில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எழுதி விட்டு ஒன்பது மணிக்கு முடித்து விட்டேன். இப்போது குளித்து விட்டு தியானம் செய்து விட்டு கடைக்குப் போய் பொருட்கள் வாங்கி வர வேண்டும்.

வெளியில் வந்தால் கையில் செருப்புகளை எடுத்துக் கொண்டு வெளியில் குரல் கொடுத்தாள். அவளது மிதிவண்டி உடைந்து விட்டதாம். இவள் வண்டியில் இரண்டு பேராக ஏற்றிக் கொண்டு வண்டி ஓட்டினாளாம். உடைந்து விட்டதாம். அதைப் பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்தோம். முதலில் அவளது செருப்பு மாட்ட வேண்டும். செருப்பை மாட்டிக் கொண்டாயிற்று, வாரைப் போடுவதற்கு உதவி வேண்டும். முதலில் கால் மாற்றிப் போட்டு விட அதைக் கழற்றி சரியான பாதத்தில் போடச் சொல்லி விட்டு அவர்கள் வீட்டுக்கு முன்பு நிறுத்தியிருந்த மிதிவண்டி அருகில் போனோம். எனக்கு முன்பு போய் விட்ட அவள் திறந்திருந்த அவர்கள் வீட்டுக் கதவை மூடி விட்டாள்.

மிதிவண்டியில் துணை சக்கரங்களில் ஒரு பக்கச் சக்கரம் மாட்டியிருந்த கம்பி வளைந்திருந்தது. இரண்டு பேராக ஓட்டும் போது சரிந்து பளு தாங்காமல் வளைந்திருக்கும். வேறு எந்த கோளாறும் இல்லை. வண்டியை வெளியில் இழுத்து மேலே ஏறச் சொன்னேன். ஏறி ஜம்மென்று உட்கார்ந்து விட்டாள். ஓட்டத் தொடங்கினால் அழகாக ஓடியது. வண்டி இவளது உயரத்துக்குக் கொஞ்சம் பெரியது. அதனால் மிதித்து ஓட்டிக் கொண்டிருப்பது சிரமமாகத்தான் இருக்கும்.

புதன், ஜனவரி 21, 2009

கருத்துக்களின் படைவகுப்பு

நேரம் அதிகாலை மூன்று மணி முப்பது நிமிடங்கள். ஜனவரி மாதம் 21ம் தேதி, புதன்கிழமை.

ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலை மட்டும் பார்ப்பது என்று ஆரம்பித்த பிறகு மிகவும் லேசாகி விட்டது. காலையில் நாளிதழ் வருவதற்கு தாமதமாகி விட்டாலோ, வராமல் போய் விட்டாலோ, கை லேசாக நடுங்க ஆரம்பிக்கும் அபாயம் நின்று போனது. சாப்பிடும் போது படிப்பதற்காக கண்ட கண்ட புத்தகங்களை வாங்கிப் படித்து மனதை குப்பை ஆக்கிக் கொள்ளும் பழக்கம் விடுபட்டு போனது. காலையிலும் மாலையிலும் தியானம் என்று 20 நிமிடங்கள் உட்கார வேண்டிய கட்டாயம் உதிர்ந்து போனது.

நாளின் ஒவ்வொரு நாளும் தியானமாக கழிய வேண்டும் என்று முயற்சிக்க முடிகிறது. மூன்று கிலோமீட்டர் தூரத்தை காலையிலும் மாலையிலும் சோர்வோ, அலுப்போ இல்லாமல் நடந்து கடக்க முடிகிறது. அலுவலகத்தில் பல வேலைகளை எதிர்பார்த்த தரத்துடன் எதிர்பார்த்த துல்லியத்துடன் செய்து முடிக்க முடிகிறது.

'நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் போல எப்போது நடந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்' என்று கேட்ட கேள்விக்கு இப்போது தீர்வு கிடைக்க ஆரம்பித்து விட்டது. நிர்வாக இயக்குனர் என்ற பெயரில் வேலைகள் சொல்வதையும் செய்ய ஆரம்பித்து விட்டேன். நிர்வாக இயக்குனர் என்ற பொறுப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மட்டும் எண்ணிப் பார்த்து செயல்படும்படி மற்ற பணிகளை பிறரிடம் பகிர்ந்து கொடுத்து விடுவதையும் செய்து விட்டேன்.

ஈழத் தமிழர் வாழ்க்கைக்காக உண்ணாவிரதம் இருந்த திருமாவளவன், சத்தியம் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு குளறுபடிகளில் எவ்வளவு பொறுப்பு என்ற விவாதம். அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொண்டிருக்கும் பராக் ஒபாமா எப்படி செயல்பட வேண்டும் என்று வாரி வழங்கப்படும் அறிவுரைகள், சாதி என்ற பேதியில் போக வேண்டிய கோட்பாட்டை வைத்துக் கொண்டு அதை நவீன பயன்பாட்டுக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் குருமூர்த்தி போன்றவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை கொச்சைப் படுத்தும் சோ போன்றவர்கள் என்று நிறைய எழுத வேண்டும். அதற்கு ஒரு ஆவேசம் வர வேண்டும்.

சோ எவற்றையெல்லாம் ஆதரிக்கிறார், எதை எல்லாம் எதிர்க்கிறார் என்று பார்த்தால் தெரியும் ஒழுங்கு ஆச்சரியமாக இருக்கிறது. 'எதுவுமே தானாக நடந்து விடுவதில்லை. ஏதோ ஒரு ஒழுங்கின்படிதான் நடக்கின்றது' என்று பவுண்டன்ஹெட் எல்ஸ்வெர்த் தூஹி சொல்வார்.
ஆதரிப்பது - இசுரேல்
நகையாடுவது - பாலஸ்தீனியர்களை
ஆதரிப்பது - சிங்கள அரசை
நகையாடுவது - ஈழத் தமிழர்களை
ஆதரிப்பது - அமெரிக்க ஆதிக்கத்தை
நகையாடுவது - தொழிலாளர் போராட்டங்களை
ஆதரிப்பது - இந்துத்துவா சக்திகளை
நகையாடுவது - மதச் சார்பற்ற அரசியலை
ஆதரிப்பது - செயலலிதாவின் ஆணவ அரசியலை
எதிர்ப்பது - முற்போக்குக் கொள்கைகளை

குருமூர்த்தி சாதி கட்டமைப்பை எப்படி பொருளாதார முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்து நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தாதார். முதலில் அவர் மலம் அள்ளும் சாதியினராக சாதி மாற்றம் செய்து கொள்ளட்டும். அந்த சாதி அடையாளத்தை வைத்துக் கொண்டு 'பொருளாதார முன்னேற்றத்துக்கு மலம் அள்ளும் தொழிலில் அவரும் குடும்பத்தினரும் எப்படி பங்களிக்கலாம்' என்று ஆராய்ச்சி செய்யட்டும்.

இவர்கள் போன்றவர்களுக்கு சீனாவின் கலாச்சாரப் புரட்சி போல முரட்டுக் கும்பல்கள் கையில் கத்தியோடு குடுமிகளை அறுத்தெரிவதுதான் சரியான மருந்தாக இருக்கும். தின்று கொழுத்து சுகவாழ்வு வாழும் போது எதை எதை நியாயப்படுத்துவது என்பதற்கு வரம்பு இல்லாமல் போய் விடுகிறது.

இதை முடித்து விட்டு துணி துவைக்கப் போக வேண்டும். அதற்கு முன்பு ஊற வைத்த சிறுபயறை அவிக்கப் போட வேண்டும். துணி துவைத்து முகம் மழித்துக்குளித்து முடிக்கும் போது ஐந்தரை மணி ஆகியிருக்கும். சிறுபயறு வேக வைத்ததில் தேங்காய் போட்டு வைத்து விட்டு ஓட்சு காய்ச்சிக் கொள்ள வேண்டும். ஆறு மணிக்கு சாப்பிட ஆரம்பித்தால் ஆறரைக்குள் முடித்து விடலாம். அதன் பிறகு நாளிதழ் படிக்கலாம். ஏழு மணிக்குள் புறப்பட்டு அலுவலகம் போய் விடலாம்.

அலுவலகத்தில் பேசத் தேவையான விபரங்களை ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும். வலைப்பதிவில் பதிய வேண்டும். sample management software உருவாக்குவதைக் குறித்து பேசி விட வேண்டும். பெங்களூரில் போய் நிறையக் கற்றுக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நேற்றைக்கு அனுப்பியிருக்க வேண்டிய மின்னஞ்சல் வந்து சேரவில்லை. அதைத் தட்டிக் கேட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்

திரும்பி வந்து இணையத் தளத்தை மேம்படுத்தும் பணிகளைத் தொடர வேண்டும். தாள் பயன்பாட்டை ஆராய்ந்து மாற்றிப் பார்க்கச் சொல்ல வேண்டும். நாளைக்கு வியாழக்கிழமை.

பிப்ரவரி மாதம் தோல் கண்காட்சி முடிந்ததும் ரயிலில் சீட்டு பதிவு செய்து நாகர் கோவில் போய் வர வேண்டும். புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை என்று சொன்னபிறகு தொடர்பே இல்லை.

இந்த வாரத்தில் நினைத்தபடி வேலைகளை முடித்து விடலாம். அடுத்த வாரத்தில் தோல் கண்காட்சிக்கான தயாரிப்புகள். பிப்ரவரி மாதத்தில் 2009-10க்கான திட்டமிடல். மார்ச்சு மாதத்தில் வாடிக்கையாளர்கள் குறித்த ஆராய்தல். கைகளை வேக வேகமாக மாற்றி மேலே ஏறிக் கொண்டே போக வேண்டியதுதான்.

அமெரிக்க பொருளாதாரச் சிக்கல்கள் குறித்த உரையாடல் என்ற பதிவில் டாலர் செல்வன், கல்வெட்டு இரண்டு பேரும் சின்னதொரு விவாதம் ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் மேற்கோள் காட்டிய பத்திகளைப் படிக்கும் போது ஆழமும் செறிவும் நிறைந்திருந்தன. டிவிட்டரில் எழுதப் பழகியது வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போதும் அதே போல சொல்ல வேண்டியதை சொற்சிக்கனத்தோடு சொல்வதற்கான திறனை கொடுத்திருக்கிறது என்று பிரகாஷ் சொன்னார்.

அலுவலகத்தில் டிவிட்டர் பயன்பாட்டை நிறுவி குழுவினருக்குக் கொடுக்கலாமா என்று பார்க்க வேண்டும். லெதர்லிங்க் சமூகத்துக்கும் கொடுக்கலாம். எவ்வளவு பேர் பயன்படுத்துவார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி.

புதன், ஜனவரி 14, 2009

எழுதுவதற்கு என்னென்ன தயாரிப்புகள்?

கணினியை வலைஇணைப்பில் இணைத்துக் கொள்ளவில்லை. குடிப்பதற்கு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொண்டேன். நான் அலுவலகத்துக்கு வரும் போது ஒரு கணினியில் பாடலை ஓட விட்டு இன்னொரு கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நான் வந்த பிறகு பாடலை நிறுத்தப் போனார். தொடர்ந்து ஓட விடச் சொன்னேன். இந்திப் பாடல்கள் ஓடும் சூழல். மூன்று பக்கமும் குழல் விளக்கு வெளிச்சம். மேலே மின்விசிறியின் காற்று ஓட்டம்.

வலது கை பக்கம் நாட்குறிப்பும் அதன் மேல் எழுதுகோலும். இடது பக்கம் தண்ணீர் பாட்டிலும், கைத் தொலைபேசியும். கைத் தொலைபேசியில் writing என்று நேரக் கணிப்பான் அமைத்து 1 மணி நேரத்தில் மணி அடிக்க வைத்திருக்கிறேன். மணி அடித்ததும் மீண்டும் ஆரம்பிக்கும் பொத்தானை அழுத்தி விட்டுத் தொடரலாம்.

வீட்டிலிருந்து கிளம்பும் போது ஒரு கையில் கணினிப் பை, இன்னொரு கையில் தேய்க்கக் கொடுக்க வேண்டிய துணிகளின் பை. இரண்டும் நல்ல கனமாகத்தான் இருந்தன. அலுவலகம் வரும் வரை நிற்கவோ கைகளை மாற்றிக் கொள்ளவோ செய்யாமல் ஒரே மூச்சாக நடந்து வந்து விட்டேன்.

வழியில் தெருக்களில் வாகன ஓட்டமே இல்லை. பொங்கல் விடுமுறையில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆழ்ந்திருக்கலாம். எதிரில் புத்தாடை அணிந்த குழந்தைகள் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு கடை மட்டும் திறந்திருந்தது. பொங்கல் கொண்டாடாத மதக் கடையா என்று பார்த்தால் முருகன் ஸ்டோர்ஸ் என்றுதான் பலகை போட்டிருந்தார்கள். வாடிக்கையாளர் யாரும் இல்லாமல் கடைக்காரர் சிந்தனை தோய்ந்த முகத்தோடு வெளியில் நின்றிருந்தார்.

இன்று இரவு இதை எழுதி முடித்தவுடன் மின்னஞ்சல் அனுப்பி விட வேண்டும். அவரிடம் பணிவாகவே இந்தப் பணியை எங்களுக்குக் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வேண்டும். ஒழுங்காக பணம் கொடுத்து, வேலை வாங்கிய அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை உண்டு. நாளைக்கு மதியம் தொலைபேசி இது குறித்து அவரது கருத்தைக் கேட்க வேண்டும். 23ம் தேதி சந்திப்புக்கு முன்பு அவரது ஆர்வத்தை முழுவதும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மரியாதைக்குரிய இன்னொரு வாடிக்கையாளர். அவரும் வாங்கும் வேலைக்கு நியாயமான கட்டணத்தைக் கொடுத்து வந்திருக்கிறார். என்னதான் அழுது அடித்தாலும், கடைசியில் பணம் தவறாமல் கொடுத்து விடுகிறார். 'கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டாம். நியாயமாக நமக்கு வருவது வந்தால் போதும்' என்று கொள்கையில் தொழில் செய்பவர். அவரை மறக்காமல் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நிறுவனத்துக்கு கூடுதல் சேவைகளை அளிக்க பேசி ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறிது நேரத்துக்கு முன்பு தொலைபேசி அழைப்பு. பங்குச் சந்தையில் வியாபாரம் செய்யும் நண்பர். வளர் தொழில் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் தமிழர் தொழில் வணிக மாநாடு என்று ஏற்பாடு செய்த ஒரு நாள் மாநாட்டில் இக்கால தொழில் துறை குறித்த அமர்வை வளர்தொழில் ஆசிரியர் நடத்தினார். அதில் பேசுவதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள. அப்போது சந்தித்திருந்தேன்.

அப்போதே திரும்பும் போது ரயில் வண்டியில் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தாக்கத்தினால் பங்கு விலைகள் கன்னாபின்னாவென்று ஏறி நிற்பதைக் குறித்து ஆவேசமாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தோம். கோபப்படாமல் அமைதியாக பதில் சொல்ல முயன்றார். கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் தொழிலில் பெறும் சுணக்கமாக இருக்கும். இன்னும் ஆறு மாதங்களில் நிலைமை திரும்ப ஆரம்பித்து டிசம்பர் 2009ல் மேல்நோக்கம் வரலாம் என்று சொல்கிறார்.

விவேக் நகைச்சுவை காட்சியில் செய்தி வாசிக்கும் போது ஊஊஊசல் என்று படிப்பது போல ஊசலாக இருக்கிறது என்றார். 'பங்குச் சந்தையாவது பரவாயில்லை. டாலர் ரூபாய் மதிப்பு ஆடும் ஆட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் எல்லாம் வயிறு கலங்கிப் போய் இருக்கிறார்கள்' என்றேன். 'பொங்கல் நாளன்று தமிழ் உணர்வுள்ள நண்பர்களை எல்லாம் அழைத்து வாழ்த்து சொல்லலாம் என்று உங்களையும் அழைத்தேன்' என்றார். 'மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி'.

வீட்டிலிருந்து நடந்து வந்து கொண்டிருக்கும் போது அலுவலகம் வந்ததும் தடையில்லாத மின்வழங்கியை இயக்காமலேயே வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதாவது இணைய இணைப்பு தேவையில்லை. மடிக்கணினிக்குத் தேவையான மின்னிணைப்பு நேரடி வழங்கலிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். கிட்டத்தட்ட வீட்டிலிருந்து எழுதுவது போலத்தான் இருக்க வேண்டும், இணைய இணைப்பு இல்லாமலிருப்பதைப் பொறுத்த வரை. வீட்டிலிருந்து எழுதும் போது வசதியான இருக்கை கிடையாது. படுத்துக் கொள்ளத் தோன்றும். அலுவலகத்தில் வசதியான இருக்கையில் உட்கார்ந்து எழுத ஏதுவான மேசையில் கணினியை வைத்து எழுதிக் கொண்டிருக்கலாம். அதற்கு மட்டும்தான் அலுவலகத்துக்கு வந்தது என்று நினைத்திருந்தேன்.

ஏற்கனவே மின்வழங்கியை இயக்கியிருந்தார். அதனால் மடிக்கணினிக்கு கணினி வலையமைப்பு இணைப்பு கொடுக்காமல் எழுத ஆரம்பித்தேன். கிளம்பி விட்டார் ஒரு தமிழ்ப் பாடலை எனக்காக இயக்கி விட்டு விட்டு. பல பாடல்களை தொடர்ந்து ஒலிக்கச் செய்யும் உத்தி அவருக்குத் தெரியாது போலிருக்கிறது. ஒவ்வொரு பாடலாகத்தான் இயக்கிக் கொண்டிருந்தார்.

இணையக் கருவி தொடர்ந்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. இரண்டு கணினிகளும் இயங்கிக் கொண்டிருந்தன. எழுந்து கணினிகளை அணைத்து விட்டு மின்வழங்கியையும் அணைத்து விட்டேன். மடிக்கணிக்கு நேரடி மின்னிணைப்பு கொடுத்து எழுத்து தொடர்கிறது.

எழுத வேண்டியதெல்லாம் எழுதி முடித்து விட்டது போலத் தோன்றுகிறது. கேள்விகள் எல்லாவற்றையும் முதலில் பட்டியிட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நடந்து வரும் போது என்னென்ன எழுத வேண்டும், எப்படி ஆரம்பிக்க வேண்டும், எதை எதை கொட்ட வேண்டும் என்றெல்லாம் திட்டம் ஓடிக் கொண்டிருந்தது. அவை எல்லாம் ஒவ்வொன்றாக வெளியில் வந்துதானே தீரும்.

தியானம் செய்ய வேண்டுமா என்று ஒரு எண்ணம் முளைத்தது.

காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் உட்கார்ந்து எழுந்திருப்பதுதாம் தியானமா? வாழ்க்கையையே தியானமாக நடத்த முடியாதா? ஒரு செயலைச் செய்யும் போது அதில் முழுமையாக மூழ்கி மனதையும், உடலையும் குவித்துக் கொள்வதுதானே தியானம்? கழிவறையிலும், சாப்பிடும் போது படித்துக் கொண்டே சாப்பிடுவது, பேருந்தில் போகும் போது புத்தகம் படிப்பது, யாரிடமாவது பேசும் போது முழுக் கவனம் செலுத்தாமல் இருப்பது, ஒரு வேலை செய்யும் போது அதை இடையூறு செய்யும் பல கதவுகளை திறந்து விட்டிருப்பது என்று தியானத்துக்கு எதிரான வாழ்க்கை நடத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டும் தியானப் பயிற்சி செய்வதால் என்ன பலன்?

புத்தகம் படிப்பதற்கு என்று தனி நேரம் ஒதுக்கி விட வேண்டும். அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் புத்தகம் படிப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். படிக்கும் போது வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. நாளிதழ்கள் பத்திரிகைகள் படிப்பதற்கு அதே நெறியை பின்பற்ற வேண்டும்.

பல் தேய்க்கும் போதும் கழிவறையிலும் கூட தனியாக இருக்க முடியவில்லை. ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. வீட்டுக்குள் வந்த உடன் தொலைக்காட்சியை இயக்கிக் கொள்வதற்கும் ஒரு நிமிடம் தனியனாக இருக்கும் வாய்ப்புக் கிடைத்தாலும் புத்தகம் அல்லது நாளிதழ் அல்லது பத்திரிகையில் புதைந்து கொள்வதற்கும் என்று வேறுபாடு?

20 நிமிட தியானப் பயிற்சியில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து விட்டதாக உணரும் போது தினமும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிவறையில் கழிப்பது, ஓரிரு மணி நேரங்கள் சாப்பாடு, பேருந்தில் பயணிக்கும் போது கிடைக்கும் மணி நேரங்களிலும் எண்ணங்களில் புகுந்து வெளி வந்தால் வாழ்க்கை எவ்வளவு மேம்பட்டு விடும்?

நடந்து கொண்டிருக்கும் போது தெளிவுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மூளைக்குள் திணித்துக் கொண்டிருப்பது நின்று போய் மனம் மூச்சு விடுவதற்கு கொஞ்சம் இடைவெளி கிடைப்பதுதான். வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது அதே ஓய்வு கிடைக்கிறது. அப்போதும் வாயில் ஏதாவது பாட்டு முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன். எண்ணங்களை ஆற்றுப் படுத்துவதற்கு பாடல் உச்சரிப்புகள் உதவுகின்றன என்பதால் அது தேவைதான். ஆனால் சும்மா படித்துக் கொண்டே இருப்பது தியான வாழ்கைக்கு ஊறு விளைவிப்பதுதான்.

இடையில் சில முறை முயற்சித்தும் அதை கை விட முடியவில்லை. அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்று அரை மனதாக விட்டு விட முயற்சித்தது. இப்போது காரண காரியம் புரிந்து விட்டதால் விட்டு விடாமல் இருக்கக் காரணமே இல்லை.

'காரணகாரியம் தெரிந்தால்தான் எதையும் ஏற்றுக் கொள்கிறான், உன்னையே மாதிரி' என்று சொல்வாள். எதையும் யாராவது சொல்கிறார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்வது முடியாமல்தான் இருக்கிறது. ஏன், எதற்கு என்று பதில் கிடைத்து விட்டால் அதன் பிறகுதான் மாற்றம் வருகிறது. 'நான் 5 ஆண்டுகளுக்கு முன்பே உனக்குச் சொன்னேன். உனக்கு இப்போதுதான் உறைத்திருக்கிறது' என்று யாராவது குறை சொன்னால், 'அது என் தப்பில்லை. எனக்கு உறைக்கும்படி காரண காரியம் விளக்க உனக்குத் தெரியவில்லை' என்று பதில் சொல்லலாம்.

நான் எழுதும் தமிழ் உரைநடையில் சந்திப் பிழை மலிந்திருக்கும் என்று அம்மா சொல்லும் போது எனக்குக் கோபம் வரும். 'என்னைப் போல குறையற்றவர் யார்' என்று எப்போதும் ஒரு இறுமாப்பு உண்டு எனக்கு. எப்போதுமே என்னை உயர்ந்தவனாக நினைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பேன். அடுத்தவர்களிடம் பணிவுக்காக தாழ்த்தி பேசிக் கொண்டாலும் எனது உயர்ச்சியில் பெரிய கர்வம் உள்ளுக்குள் உண்டு. டேவிட் காப்பர்ஃபீல்டில் உரியா ஹீப் போல 'நான் மிகவும் அம்பிள்' என்று சொல்லிக் கொண்டே திட்டமிட்டுக் கொண்டிருக்கும் குணம் எனக்கு. அதை விட்டு விட வேண்டும். தேவையில்லாத பணிவை விட்டு விட வேண்டும். நமது குறைகளை ஒத்துக் கொள்ளும் போக்கோடு நிறைகளை பெருமையுடன் சொல்லும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

சாப்பிட்ட சாம்பார் சோறின் நெஞ்சுக் கரிப்பு ஆரம்பித்திருக்கிறது. இந்த எழுத்து மாரத்தான் இல்லாமலிருந்தால் நள்ளிரவில் தூக்கத்தை குலைத்துக் கொண்டிருப்பேன். கழிவறையிலும் சாப்பிடும் போதும் பயணத்தின் போதும் புத்தகம் படிப்பதை நிறுத்தி விட்டாலும் எண்ணங்களை தியானத்தின் போது தொடர்வது போல ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். தியானத்தின் போது எண்ணங்களை அலைய விடாமல் ஒரு நேர்க்கோட்டில் பிடிக்க முயல்வது போலப் பழகிக் கொள்ள வேண்டும்.

காலையில் பேசிக் கொண்டிருக்கும் போது நடப்பது குறித்து பேச்சு வந்தது. அதிகாலையில் உடற்பயிற்சிக்காக நடப்பதற்கும் மற்ற நேரங்களில் நடப்பதற்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் மனதில். காலையில் நடக்கும் போது ஒரு இடத்தை அடைவதற்காக இல்லாமல், நடப்பதற்காக மட்டும் நடக்கிறோம். அலுவலகம் போகும் போது அலுவலகத்துக்கு நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மனப் பதற்றம் நடப்பதில் கிடைக்கும் இளைப்பாறுதலை அடித்து போட்டு விடுகிறது. எந்த நேரத்திலும் நடக்கும் போது உடற்பயிற்சிக்காக என்று நெறிப்படுத்திக் கொண்டால் காலையில் நடக்கும் அதே பலன்களைப் பெறலாம்.

அதே போல தியானமாக நெறிப்படுத்திக் கொண்டு தனிமையில் மன ஓட்டங்களை ஆற்றுப் படுத்த வேண்டும். அப்போதுதான் தியானத்தின் பலன் கிடைக்கும். நாளை முதல் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்குத் தியானத்துக்காக செலவிடுவதை விடுத்து, காலைக் கடன்கள் செய்யும் போதும், மாலை கடன்கள் செய்யும் போதும் சாப்பிடும் நேரங்களிலும் முனைந்து தியான வழியில் மனதை செலவழிக்க வேண்டும். வாழ்க்கையே தியானமாகி விட வேண்டும்.

வியாழன், மார்ச் 06, 2008

முதல் கோணல்

மூன்று நாட்களாக கண்டதையும் தின்று வளமை குலைந்து போனது. ஞாயிற்றுக் கிழமை மதியம், ஆழிப் பதிப்பகத்தின் நிகழ்ச்சிக்குப் பிறகு மதிய உணவு, மூன்று சப்பாத்திகள் - பருப்பு. மாலையில் சாப்பிடாமல் விட்டு விட்டேன். திங்கள் கிழமை காலையில் டாடா உடுப்பி ஓட்டலில் பொங்கல், பூரி, காபி. மதியம் அலுவலகத்தில் சாப்பாடு, மாலையில் சரவணபவனில் பிரியாணி, ரொட்டி, ஐஸ்கிரீம்.

செவ்வாய்க் கிழமை காலையில் கஞ்சி, மதியம் பழையது அலுவலகத்தில், மாலையில் மதியச் சாப்பாடு, இரவில் மீதியிருந்த கஞ்சி. செரிக்காத மக்குகள் சேர்ந்து கொண்டே போவதாக உணர்வு. நேற்றுக் காலையில் சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். உண்மையில் 10 மணி வரை பசிக்கவே இல்லை.

காலையில் எழுந்திருக்கவும் ஆறு மணி தாண்டி விட்டது. தரை தூத்து, பொருட்களை ஒதுங்க வைத்துத் துடைத்து முடித்தேன். துவைத்த துணிகளை பையில் அடைத்து தேய்க்க எடுத்துப் போக நினைத்திருந்து மறந்து விட்டு விட்டுப் போயிருந்தேன்.

புறப்பட்டுக் கிளம்பும் போது எதிர் வீட்டில் மாடியில் இருக்கும் சின்னப் பையனும் அவங்க அம்மாவும் கீழே வந்தார்கள். முன்பு ஒரு நாள் இப்படித்தான் என்னைப் பார்த்ததும், ஓடோடி வந்து என்னைத் தூக்கச் சொன்னான். அப்படியே தோளில் தலை சாய்த்துத் தூங்க முயற்சித்தான். அவன் அம்மாவுக்கு சங்கடமாகப் போய் விட்டது. 'இறங்குடா என்று அதட்டி இறக்கி விடச் சொன்னார்கள். அது வரை பார்த்ததே கிடையாது.

நேற்றும் என்னைப் பார்த்ததும் கை அசைத்து சிரிக்க ஆரம்பித்து விட்டான். பலமாக கையாட்டி விட்டு வண்டியை மெதுவாக நகர்த்தி வெளியே வந்து விட்டேன்.

அலுவலகத்துக்குப் போய் தகவல் பரிமாற்றங்களிலேயே நேரம் போய்க் கொண்டிருந்தது. தேடித் தேடிப் பார்த்து வாடிக்கையாளர்களுக்கு சேவை நேர்த்தியை சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

'இன்றைக்கு நாம் செய்து கொண்டிருக்கும் வேலை ஆறு மாதங்களுக்கு அப்புறம் மற்றொருவருக்குக் கற்றுக் கொடுத்து நாம் நகர்ந்து விட வேண்டும்.' இதுதான் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வழிகாட்டல்.

அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி திட்டத்தை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து மின்னஞ்சலில் அனுப்பி விட்டேன். இது போன்ற சின்னச் சின்ன செய்கைகள் குழுவின் ஒருங்கிணைப்புக்கும் ஒரு முகத்தன்மைக்கும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். சரியான முடிவுகளின் ஆக்கபூர்வமான பாதிப்புகளும், தவறான திரும்பல்களின் அழிவுபூர்வமான பாதிப்புகளும் பார்க்கக் கிடைத்து விடுகிறது.

எழுதுவதில் ஒரு சுணக்கம். எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டுக் கொஞ்ச நேரம் படுத்துக் கண்களை மூடிக் கொள்ளலாமா என்று ஒரு யோசனை. சிந்திக்க நிறைய இருக்கிறது. கை கால்களில் சோர்வு வழிகிறது. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தால் சரியாகத்தான் இருக்கும் என்று படுகிறது. கால் நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கலாம். 7 மணிக்கு எழுந்து புறப்பட்டு சாப்பிட்டு விட்டுக் கிளம்பினால் எட்டரை மணிக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.

வெள்ளி, பிப்ரவரி 22, 2008

குறிப்புகள்

"மாற்றத்தின் கதவுகள் உட்புறமாகத்தான் தாழிடப்பட்டிருக்கின்றன. உலகில் பார்க்க விரும்பும் மாற்றமாக நீ இரு " என்றெல்லாம் படித்ததற்கு வலுவான நடைமுறை நிகழ்வுகள்.

நேற்றுக் காலையில் நான்கரை மணிக்கு எழுப்பி விடப்பட்டேன். திரைப்படத்துக்கு பாடல் காட்சி எடுப்பதாக கனவு. இது என்ன அர்த்தமில்லாத கனவு என்று தோன்றியது.

எகனாமின் டைம்சில் வரும் ஏதாவது செய்தி, கட்டுரை, தலையங்கத்தைத் தழுவி தினமும் ஒரு சின்ன இடுகை பொருள் செய்ய விரும்பு பதிவில் எழுதலாம் என்று தோன்றியிருந்தது. அதற்கு ஏதாவது மாட்டுகிறதா என்று நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எழுத ஆரம்பிக்கத்தான் மனம் விளையவில்லை. பல் தேய்ப்பதற்கு கையில் பிரஷ்ஷூடன் வெளியே கதவைத் திறந்து பார்த்தால் கும்மிருட்டு, ஆள் அரவமே இல்லை. வானத்தில் விண்மீன்கள் தெரியத்தான் செய்கின்றன.

பல் தேய்த்து விட்டு அலமாரிகளை தூசி தட்டும் வேலை செய்யலாம் என்று உத்தேசம். தட்டுகளில் பழைய நாளிதழ்களை விரித்துப் போட்டு அதற்கு மேல் பொருட்களை வைத்திருந்தாலும், சில வாரங்களில் தூசி படிந்து தாள் கசங்கி அலங்கோலமாகி விடுகிறது. அதற்கென்று திட்டமிட்டுக் கொள்ளாமல், இது போல திடீரென்று தோன்றினால் விடிவு காலம் பிறக்கும். முதலில் தூங்கும் அறையில். துணிகள், வைப்பதற்கு, தலையணை, போர்வை வைப்பதற்கு, சில புத்தகங்கள் வைப்பதற்கு என்று தட்டுகள். நான்கு நான்கு அடுக்குகளா இரண்டு பிரிவுகள்.

ஏற்கனவே விரித்திருந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ், இப்போது இளம் சிவப்பு நிறத்தில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் தாள்கள். இரட்டைத் தாளை இரண்டாகக் கிழித்து, அலமாரியின் படிகளின் அகலத்துக்கு அளவு பார்த்து மடித்து அப்படியே போட்டுக் கொண்டேன். பழைய தாள்களை சேகரிக்க ஒரு பிளாஸ்டிக் பை, தூசிகளை தட்ட ஒரு துணி.

அப்படியே நகர்ந்து கண்ணாடி, சீப்பு, வைத்திருக்கும் மாடத்தில். அதுவும் முடிந்த பிறகு சோம்பல் புகுந்து கொண்டது. இன்றைக்கு இவ்வளவு போதும், சமையலறை, வழிபாட்டு அறை, இன்னொரு மாடம் மூன்றையும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் தூத்து வாரி பையில் போட்டு இரண்டு பைகளையும் முடிந்து வெளியே வைத்து விட்டேன். நானும் வெளியே வைத்து விடுகிறேன். எங்கு எடுத்துப் போடுகிறார்களோ!

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு கூடைகளை வைத்து, காலையில் குப்பை வாங்க வரும் வண்டிக்காரரிடம் கொடுக்க வேண்டும். செய்வதற்கு அவலமான வேலைகளை வேலை வாய்ப்பு என்று செய்ய வைப்பது ஒரு சமூகத்துக்கு அழகாகாது. மனித கௌரவத்துக்கு இடம் கொடுக்காத குப்பை அள்ளுதல், சாக்கடை தூய்மை செய்தல் போன்ற வேலைகளை இயந்திரங்களால் செய்ய வைப்பது தேவை. அதை செய்பவர்களுக்கு உடனடியாக மாற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து விட வேண்டும்.

பாத்திரங்களைக் கழுவி விட்டு காலை உணவுக்கும் ஏற்பாடு. அரிசி ஒரு கப், இருக்கும் பருப்பு வகைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி. உளுந்து, கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, சிறுபயத்தம் பருப்பு எடுத்து ஊற வைத்து விட்டேன். துவைக்கத் துணிகள் ஊறிக் கொண்டிருந்தன. முதலில் அவற்றை முடித்து விட்டு நடக்கப் போகலாம்.

சட்டைகள், உள்ளாடைகள், ஒரு அரைக்கால் சட்டை தோய்த்து வெளியே கொடியில் போடும் போது, அவ்வளவு சீக்கிரமாகவே ஒருவர் வேலைக்குப் புறப்பட்டிருந்தார், பைக்கை நகர்த்திக் கொண்டிருந்தார்.

ஐந்து ஐம்பதுக்கு நடக்கக் கிளம்பினேன். டிஷர்ட்டின் பையில் செல்பேசியையும் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் அமைத்துக் கொண்டேன். முந்தைய நாள் சீக்கிரமாகப் போனதால் அதிக நடமாட்டம் ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நேரத்தில் நிறைய பேர் நடக்க, ஓட ஆரம்பித்திருப்பார்கள். வீடு இருக்கும் தெருவை நீளமாகக் கடந்து குறுக்குத் தெருவுக்குள் போனால், புலரும் பொழுதின் அரை வெளிச்சத்தில் ஒரு வீட்டின் முன்பு சின்ன பையன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவனருகில் மூன்று நான்கு பசுக்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றுடன் ஏதோ மொழியில் பேசிக் கொண்டிருந்தான். பால்காரர் வீட்டுப் பையன் போலிருக்கிறது.

கட்டிட வேலைகளுக்கு அருகில் போடப்பட்டிருக்கும் குடிசைகளிலிருந்து பண்பலை ஒலிபரப்புகள் கேட்கும். நிர்மலா கான்வென்ட் தாண்டி வலது புறம் திரும்பி மேடேறும் போது அசைந்து அசைந்து யாரோ வருவது போல பட்டது. கிட்டப்பார்வைக் குறைக்கான கண்ணாடி போடாமல் போவதால், தூரத்தில் வருபவர்களைப் பார்த்து இனம் காண்பதற்கு நீண்ட நேரம் வெறிக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு என்ன இப்படி முறைக்கிறான் என்று தோன்றி விடலாம்.

மேடேறியதும் கிழக்கு வானில் பெரிய வட்ட நிலா, மஞ்சளாக. முழு நிலவு இரவுக்குப் பிறகான மறையும் நிலா. முந்தைய நாள் அறையில் கிழக்கு நோக்கி உட்கார்ந்திருக்கும் போது ஜன்னலின் கீழ் விளிம்பில் சூரியனும் இப்படித்தான் வட்டமாக எட்டிப் பார்த்திருந்தது. கிழக்கு நோக்கி நீளமாக நடக்க வேண்டும். நிலவைப் பார்த்துக் கொண்டே கொஞ்ச தூரம் போக முடிந்தது.

வீட்டுக்கு வரும் போது நண்பரும் எழுந்து விட்டிருந்தார். ஊற வைத்திருந்த அரிசி பருப்பு ஊறி விட்டிருந்தன. இரண்டு நாட்கள் முன்பு வாங்கியிருந்த தேங்காயில் அரை முறி நன்றாகவே இருந்தது. அதை உடைத்து கீறல்கள். இரண்டு பச்சை மிளகாய்கள், சீரகம், நல்லமிளகு, பெருங்காயம் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டேன். மிக்சர் பாத்திரத்தில் அவற்றை முதலில் போட்டு விட்டு, தண்ணீரைக் களைந்து அரிசி, பருப்புக் கலவையையும் சேர்த்து அரைத்துக் கொண்டேன். இடையிடையே தண்ணீர், தேவையான உப்பு. ஒரு அரை மணி நேரம் இருந்தால் நன்கு ஊறி விடும்.

20/20 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கோடிகளில் ஏலம் எடுத்திருக்கிறார்கள் என்று நாளிதழ்கள் அலறிக் கொண்டிருந்தன. பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள், அதன் விளைவுகள் குறித்த செய்திகள் இரண்டாம் நிலைக்குப் போய் விட்டன. ஒபாமா இன்னும் இரண்டு மாநிலங்களில் அதிக வாக்குகளைப் பெற்று விட்டாராம். ஒபாமா குடியரசுத் தலைவரானால், இந்தியாவுக்குக் குறிப்பான சிலவற்றில் பாதகங்கள் ஏற்பட்டாலும், அமெரிக்காவுக்கும், ஒட்டு மொத்த உலகுக்கும் அது நல்லதாக இருக்கும் என்று பத்ரி தனது பதிவில் எழுதியிருந்தார்.

குளித்து விட்டு தியானம். நாட்களின் நிகழ்வுகளை வருடிப் பார்க்கும் பழக்கம் நின்று போயிருந்தது. அதனால் ஞாபகக் குறைவு ஏற்படுவதாகவும், கவனக் குறைவால் தவறுகள் ஏற்படுவதாகவும் தோன்றியது. ஒரு வாரம் முன்பு சந்தித்தவர் தொலைபேசி, தன் பேரைச் சொன்ன பிறகும் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. மின்னஞ்சல்களில் சின்ன பிழைகள் தெரிகின்றன.

மாலை, காலையில் 20 நிமிடங்கள், எழுதுவதில் 1 மணி நேரம் என்று ஒரு நாளின் நிகழ்வுகளை மறு நினைவுபடுத்திப் பார்ப்பது போன்ற சக்தி வாய்ந்த உத்தி வேறு எதுவும் கிடைத்து விடப் போவதில்லைதான்.

சரியாக ஆளுக்கு நாலரை அடைகள் வீதம் வந்தது. நாளிதழ் படித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தோம். காரம் அதிகமில்லாமல், சுவையாக வந்திருந்தது. சாப்பிட்டு விட்டு அலுவலகம். அப்படியே திருப்பெரும்புதூர் அருகில் இருக்கும் வாடிக்கையாளர் தொழிற்சாலை போக வேண்டும்.

அலுவலகத்துக்குப் போகும் வழியிலேயே தொலைபேசி அழைப்பு, அது குறித்தான வேலைகளை வேறு கைகளில் ஒப்படைத்து விட்டு நெடும் பயணம் தொடங்கினேன். முதலில் வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக வங்கி பண இயந்திரத்தில் பணம் எடுக்க வேண்டும். போரூர் சாலை நிறுத்தம் அருகில் ஆச்சரியகரமாக வாகன வரிசை குறைவாகவே இருந்தது.

அதற்கு கொஞ்சம் முன்னால் இருந்த தானியங்கி பணம் வழங்கும் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு, வண்டியை நகர்த்தி காத்திருக்கும் வாகனங்களுடன் சேர்ந்து கொண்டேன். வலது புறம் திரும்ப வேண்டும். இடது புறம் வந்து விட்டோமோ! இருப்பதே உழக்கு அளவு சாலை. அதில் எல்லாம் ஒரே புறம்தான். சிரமமில்லாமல் திரும்பிக் கொண்டேன்.

ஐயப்பன்தாங்கல் தாண்டி இருக்கும் பெட்ரோல் பங்கில் நுழைந்தால் முதலில் தேர்ந்தெடுத்த பம்பில் ஆள் இல்லை. காத்திருக்கும் போது இன்னும் இரண்டு வண்டிகள். இன்னொரு பம்பில் பிறகு வந்தவர்கள் எல்லாம் வேலையை முடித்து நகர்ந்து விட்டார்கள். நானும் அந்த பம்புக்குப் போய் நிரப்பிக் கொண்டு வெளியே வந்தேன்.

குமணன் சாவடி அருகில் வலது புறம் திரும்பி புறவழிச் சாலை நோக்கி. காலை வேளையில் நிறைய வண்டிகள். புறவழிச் சாலையில் நெரிசல் குறைவுதான். 60 கிலோமீட்டர் வேகத்தில் போகலாம். வண்டிக்கும் வயதாகி விட்டது. அதிக வேகத்தில் போனால் கொஞ்சம் ஆடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தடவைகள் வேகமாகப் போகும் போது டியூப் பஞ்சராகி கீழே விழ நேரிட்ட பிறகு 80, 85 என்று விரட்டுவது நின்று விட்டது. தலைக்கவசம் அணிய ஆரம்பித்த பிறகு வேகமாகப் போவதான் ஏற்படும் அயற்சி வெகுவாகக் குறைந்திருக்கிறது.

பூந்தமல்லி தாண்டி வேலூர் போகும் சாலை. சூடாக ஏதாவது குடிக்க வேண்டும். மோட்டல் ஹைவே அருகில் தயங்கி நகர்ந்து விட்டேன். நெடுஞ்சாலையில் போக வேண்டிய தூரம் கடந்த பிறகு வலது புறம் திரும்பி மேவளூர் குப்பம். அங்கு சாலையோர டீக்கடையில் 3 ரூபாய்க்கு தேநீர்.

பேரம்பாக்கம் என்று ஊர் நோக்கிப் போகும் சாலை. திருவள்ளூர், அரக்கோணம் போகும் வழி. இன்னொரு புறம் திரும்பினால் திருப்பெரும்புதூர். சாலை பரப்பு சில பகுதிகளில் உடைந்து கிடக்கும். அந்த சோதனைகளைத் தாண்டி விட்டால், அற்புதமான காட்டுப் பகுதி. பாதுகாக்கப்பட்ட காடு என்று புரிதல். நடுவில் சாலை. நாற்சந்தியைக் கடந்தால் இரண்டு பக்கமும் ஆலமரங்கள். மாந்தோப்புகள். தொழிற்சாலை இருப்பதும் ஒரு முன்னாள் மாந்தோப்புதான். பல மரங்களை விட்டு வைத்திருந்தார்கள். பெரிய வெளிக் கதவு. உள்ளே சாலைகள், நவீன முறையிலான கூடம், அலுவலகங்கள் என்று உயர்தரமான தொழிற்சாலை.

நுழையும் முன் தொலைபேசியில் அழைப்பு. புதன்கிழமை நேர்முகத்துக்கு வந்திருந்த பெண். சம்பள விபரங்களைப் பற்றி சந்தேகம். 'ஆரம்ப 2 மாதங்களில் சரி, அதன் பிறகு என்னவாக இருக்கும்?' அது உங்க திறமையை, செயல்பாட்டைப் பொறுத்ததுதான். மாலைக்குள் உறுதி செய்து விட்டிருந்தார்.

வெளியில் காவலர் அறையில் சில நிமிடங்கள் காத்திருத்தல். அதற்குள் ஓரிரு தொலைபேசி அழைப்புகள் முடிந்து விட்டன. நேராக பொது மேலாளர் அறைக்கு. கொஞ்சம் வருத்தமாக இருந்தார். அவர் போக விரும்பும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். அவருக்கு எல்லாவற்றையும் கணினி மயமாக்கி விட வேண்டும் என்று ஆர்வம்.

ஒரு மணி நேரம் வரை பேசி விபரங்களை முடிவு செய்து கொண்டு அந்தந்த பிரிவு மேலாளர்களைப் பார்த்து அவர்களுக்கான பணிகள். வாடிக்கையாளர் தொழிற்சாலைக்குப் போகும் ஒவ்வொருவரும் முன் கூட்டியே பணி விபரங்களை ஒரு ஆவணத்தில் எழுதிக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் என்ன செய்யப் போகிறோம் என்று போகின்றவருக்கும், குழுவில் மற்றவர்களுக்கும், வாடிக்கையாளருக்கும் தெளிவாக இருக்கும். வேலை முடிந்த பிறகு பில் அனுப்பும் போது கூடவே அனுப்பவும் அந்த ஆவணம் உதவும்.

பலனுள்ளதாகத்தான் இருந்தது. நாள் முழுவதும் செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாலும் 1 மணி வாக்கில் நினைத்த பணிகள் எல்லாம் முடிந்து விட்டன. அங்கு பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தவர் வீடு அருகிலேயே இருந்தது. மதிய உணவுக்கு அங்கு அழைத்துப் போய் விட்டார். அருமையான வீட்டுச் சாப்பாடு. சாப்பிட்டு விட்டுக் கிளம்பி வண்டி ஓட்டும் போது தூக்கக் கலக்கம். மதியம் சாப்பிட்ட உடன் ஏன் கண்களைச் சுழற்றுகிறது.

வேகமாக இரண்டாவது தடத்தில் போய்க் கொண்டிருக்கும் போது வண்டி அணைந்து விட்டது. ஏதோ சத்தம் வேறு, சின்னதாக. கிளட்ச் பிரச்சனை என்று ஓரமாக ஒதுங்கி நிறுத்தி திரும்ப உதைத்தால் கிளம்பி விட்டது. பராமரிப்பு சேவைக்கு அனுப்ப வேண்டும். அதற்குப் பிறகு வேகமாக கிளட்ச் விட்டால் அணைந்து கொண்டிருந்தது. வேகத்தை இன்னும் குறைத்துக் கொண்டு நான்கு மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விட்டேன். காலையில் சொல்லிப் போயிருந்த வேலைகள் இன்னும் வாடிக்கையாளருக்குப் போயிருக்கவில்லை. அவர் தொலைபேசி விபரம் கேட்டார். இணைய இணைப்பு வேகம் குறைவாக இருந்தது.

இணையக் கணினியில் பதிவுகோப்புகளின் அளவு பெரிதாகி விட்டிருந்தது. அவற்றை நகர்த்தி புதிய கோப்புகள் உருவாக்கி விட்டு மீள ஆரம்பித்தேன். இணைய இணைப்பியையும் ஒரு முறை அணைத்து விட்டுப் போட்டால் வேகம் சரியாகி விட்டது. பணி தொடர்பாக சுணக்கம் காட்டிக் கொண்டிருந்த ஒருவரை அழைத்துக் கடித்து விட்டு அடுத்த வேலைகளில் இறங்கினேன். ஆறரை மணி வாக்கில் உலகத் தாய்மொழி நாள் முன்னிட்டு ஆழிப் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் பற்றி நினைவு வந்தது.

சனி, ஜனவரி 26, 2008

ஆறு மனமே ஆறு

குடியரசு தினம் விடுமுறை. 'விடுமுறை என்றால் நல்ல பழக்கங்களுக்கும் விடுமுறை கொடுத்து விட வேண்டும்' என்று இல்லாமல் எழுந்து உட்கார்ந்து விட்டேன். மணி காலை ஆறு மணி.

இரவு தலையை சாய்க்கும் போது சரியாக நள்ளிரவு 12 மணி. மேற்கத்திய நேரப்படி புது நாள் ஆரம்பித்த நேரம். காலை ஆறு மணி என்பது இந்திய கணக்குப்படி புதிய நாள் ஆரம்பிக்கும் நேரம். ஆறு மணி என்று குறிப்பாக இல்லாமல் சூரியன் உதிக்கும் நேரம் என்று இருக்குமோ!

பல நாட்களுக்குப் பிறகு காலை நான்கே முக்காலுக்கு எழுந்து ஐந்தே காலுக்கு எழுத உட்கார்ந்தேன். ஐந்து நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பை எழுதி முடிக்கும் போது ஆறே கால். வாரா வாரம் சனிக்கிழமை நடக்கும் விவாதம் இன்றைக்கு இல்லாமல் போனதற்கு மாற்றாக நேற்று காலையிலேயே எனக்கு வாரத்தின் மறு ஓட்டம் கிடைத்து விட்டது.

உலாவி வரப் போவதற்கு சட்டை போட்டுக் கிளம்பினால், வெளியே அடர்த்தியாக பனி, இன்னும் இருட்டு விலகியிருக்கவில்லை. சளி திரும்பப் பிடித்து விடுமோ என்று பயந்தாலும், பின்வாங்கவில்லை. மனதெங்கும் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க திரும்பினேன். சளித் தொல்லை இருப்பதால் கஞ்சி வைப்பதை வேண்டாம் என்று முடிவு செய்தேன். முந்தைய நாள், நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேரளா பாணியில் பயறு கஞ்சி சாப்பிடுவதாகச் சொல்லியிருந்த நினைவின் தாக்கத்தில் கஞ்சியை மனம் கேட்டிருக்கலாம்.

சமையலறை மேடையைத் துடைத்து, குப்பைக் கூடையின் பையை முடி போட்டு வெளியே வைத்து விட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு தரை தூத்து வாரினேன். இன்று துடைக்க வேண்டாம் என்று முடிவு. தண்ணீரிடமிருந்து கூடிய வரை விலகி இருப்போம். துவைத்த துணிகள் பைகளுக்குள். கட்டிலின் காலிலிருந்து உடைந்து ஓடும் உறையின் மாதிரிகளாக அதே பையில் போட்டுக் கொண்டேன். வேறு வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

துணி துவைக்கும் போது 2 சட்டைகள், 5 பனியன்கள். 5 பனியன்கள் எப்போது அழுக்காக்கினோம் என்று புரியவில்லை. இந்த பனியன்களோடு அடையாளம் காண முடியாத தொல்லை. கழுத்துக்கு அருகில் இணைக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பட்டியைப் பார்த்தால் வெவ்வேறாக இருக்கின்றன. துணிகளை வெளியில் போடும் முன்பு, பாத்திரங்களைக் கழுவுதல். பொங்கல் அன்று பொங்கல் சாப்பிட தாராள மனதோடு கொடுத்த தட்டுகளைக் கழுவி திரும்பக் கொடுத்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. அவற்றை இன்னொரு முறை கழுவி வைத்து விட்டுக் குளியல்.

அதற்கிடையில் நாளிதழ் வருகிறது. கிரிக்கெட் ஆட்டத்தின் நிலவரங்கள் கைபேசியில் தேடுகிறது. சச்சின் டெண்டுல்கருக்கு புகழ் மாலைகள். அவரது முடிவுரையை எழுதியவர்கள், கரித்துக் கொட்டியவர்கள் எல்லாம் வெட்கத்துடன் நெளியும் அளவுக்கு விளையாடியிருக்கிறார். அவரது ரத்தத்தில் கிரிக்கெட் ஓடுகிறது. கிரிக்கெட் தவிர பிற விஷயங்களை பொருட்படுத்தவே மாட்டார். முழு நேரம் விளையாடுவதை நிறுத்துவதை அவரேதான் முடிவு செய்ய முடியும். நிறுத்திய பிறகு என்ன செய்வார்?

ஆஸ்திரேலியாவில் அவருக்கு பிராட்மேனுக்கு ஒத்த மரியாதையாம். நேற்று அவரை அவுட் ஆக்கிய லீ தலைக்கவசத்தை அன்பாகத் தட்டிக் கொடுக்கிறார்.

குளித்துப் புறப்பட்டு நண்பரோடு கிளம்பும் போது எட்டு மணிக்கே இரவு உடையுடன் ஒரு குட்டிப் பெண் தன் குட்டி மிதிவண்டியில் முன்னும் பின்னும் ஓட்ட ஆரம்பித்திருந்தாள். 'பள்ளி விடுமுறையா அல்லது பள்ளிக்குப் போகும் முன் ஒரு சின்ன விளையாட்டு நேரமா' என்று கேட்டுக் கொண்டே, 'காலையில் உடற்பயிற்சியோ, வண்டி ரிவர்சில் போகுமோ' என்றெல்லாம் கேட்ட விடைகளுக்கு கண்கள் மலர இதழோரம் சின்ன முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தத் தேவதை.

நாட்காட்டி ஒன்று மாட்டி விட்டிருந்தான் தம்பி, முன்னறையில். ஒரு குழந்தையின் படம். இனம் புரியாத நேசத்தை உருவாக்கும் முகம். அப்போதுதான் தூங்கி எழுந்த மெலிதான சோகத்துடன், சிரிக்கத் தயாராகும், கண்களுடன், பிங்க நிற சட்டை போடப்பட்டு, கலைந்து கிடக்கும் தலைமுடி, ஒட்ட வெட்டப்பட்டது அல்லது இது வரை வெட்டவே படாத நீளம். இந்திய நிறம்.

அந்த முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் சலிக்காத அழகு முகம். எல்லா குழந்தை முகங்களும் மகிழ்ச்சியைத் தரும். இந்த நாட்காட்டி குழந்தைக்கு ஏதோ சிறப்பு ஈர்ப்பு.

அப்படியே லட்சுமி பவனுக்குப் போய் இரண்டு இட்லி, தோசை, சர்க்கரை குறைவா லைட்டா ஒரு காபி சாப்பிட்டு விட்டு அடுத்த பாதை. அந்தக் கடையில் இன்னும் சிறுவர்களை வேலைக்கு வைப்பது நிற்கவில்லை. பழைய சிறுவர்கள் போய் இப்போது இன்னொரு குழந்தை. என்ன நியாயத்தில் இப்படி செய்கிறார்கள் என்று புரியத்தான் இல்லை. நேற்று உடனேயே உலுக்காமல் விட்டிருக்கிறேன். இப்போது கேட்டால் இன்னும் அதிகமாக தாக்கம் இருக்கும். இன்று.

அலுவலகத்திற்கு எட்டரைக்கெல்லாம் வந்து முதலில் நாளுக்கான திட்டமிடல். வாரம் முடிந்து போக அடுத்த வாரத்துக்கான விரிதாளையும் உருவாக்கி ஏற்கனவே முடிவு செய்திருந்தது போல ஒவ்வொரு நாளும் சந்திப்புகள் வேலைக்கான திட்டமிடலை ஆரம்பித்தேன். ஆறு நாட்களுக்கும் இரண்டிரண்டு மணி நேர வேலைகள் திட்டமாகி விட்டன. அது தொடர்பான மின்னஞ்சல்களை அனுப்பி விட்டு, பதில் அளிக்காமல் இருந்த மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதல் ஆரம்பித்தேன்.

இடையில் தினசரி காலை சந்திப்பு. அதில் முந்தைய நாள் நிகழ்வுகளை விளக்கி விட்டு, மற்றவர்களின் விபரங்களையும் கேட்டுக் கொண்டு மீண்டும் கணினியில் தொடர்ந்தேன். எகனாமிக் டைம்ஸ் நிறுத்தி விட்டு மீண்டு இந்து ஆரம்பித்து விட்டார்கள். வீட்டிலாவது எகனாமிக் டைம்சும் போடச் சொல்லி விட வேண்டும்.

பதினொரு மணிக்கு பயிற்சி வகுப்புகள். முதலில் மென்பொருள் உருவாக்கப் பணி மேம்படுத்துவது பற்றிய விவாதம். அழகாக தயாரித்து புதிய திட்டங்களுடன் நான் முற்றிலும் ஒத்துப் போகும் கொள்கை முழக்கங்களுடன் விளக்கினார் ஒருவர். நிறுவனத்தில் நான் பேச நினைப்பதெல்லாம் தான் பேசி விடுபவர்கள் இரண்டு மூன்று பேர். வாயைத் திறக்கும் முன்னே அவர்கள் தலை ஆட ஆரம்பித்திருக்கும். சும்மா ஆமாம் சாமி போடும் முட்டாள்தனமான தலையாட்டல் இல்லாமல் ஆழமாகப் புரிந்து கொண்ட தலையாட்டல்.

மீண்டும் மீண்டும் ஒழுங்கும், விதித்த நடைமுறைகளை தவறாமல் பின்பற்றுவதும்தான் வந்து நிற்கின்றன. மாற்றங்களை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று அடுத்தவர் பேசினார். தலைமைப் பொறுப்பில் 3 பேர் கொண்ட ஒரு குழு என்று அடக்கத்துடன் குறிப்பிடுகிறார். சில நிமிடங்களில் மூன்று பேரில் ஒருவர் விலகிக் கொண்டார். குழு தலைமை எல்லாம் வேண்டாம். ஒருவரின் தலைமை மற்ற எல்லோரும் உதவி செய்கிறோம் என்று கொஞ்சம் அவசரப்பட்டுதான் சொன்னதாகப் பட்டது.

தொடர்ந்து இந்தி பாட வகுப்பு. கற்றுக் கொடுப்பது என்பது ஒரு திறமைதான். அதுவும் ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொடுப்பது அவ்வளவு எளிதானது இல்லை. முதலில் ஆங்கிலம் கற்றுக் கொண்டது இளவயதிலேயே வளமையாகப் போனது. நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் இந்தி, கல்லூரி நாட்களில் ஜெர்மன், சீனாவில் சீன மொழி கற்றுக் கொண்டது. உணர்வுடன் அலசி ஆராய்ந்து கற்றுக் கொண்டது. அறிவியல் பூர்வமாக பாடங்கள் தயாரித்து கற்றுக் கொடுத்தது ஜெர்மனின் மேக்ஸ் முல்லர் பவனில் மட்டும்தான்.

அந்த அனுபவங்களையும் இந்தி வகுப்பில் புகுத்தினால்தான் விறுவிறுப்பாக போனது. விதவிதமாக இருக்கட்டுமே என்று உருது பேசும் நண்பர்களையும் ஒவ்வொரு வகுப்புகள் எடுக்கச் சொன்னால், கொழுக்கவில்லை.

ஒன்றரை மணிக்கு மேல் வந்து விடுமாறு தகவல். அவசரமாக போக வேண்டாம் என்று தனியாக சாப்பிட்டு விட்டு பெரிய மேடு. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டாம். இப்போ இந்தக் களைப்பில் இவரிடம் போய்ப் பேச்சு கொடுத்தால் என்ன ஆகும் என்று தயங்கிக் கொண்டே போனால், உடனே பார்க்கவும் கிடைக்கவில்லை. காத்திருக்கும் நேரத்தில் இன்னோரு நிறுவனத்துக்குப் போய் வேலையை முடித்துக் கொண்டேன். எகனாமிக் டைம்சின் அலசல்களை புரட்டிப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டேன். ஈடி மெட்ராஸ் பிளஸ் என்ற இணைப்பையும் படித்துக் கொண்டேன். கார்பரோட் டோசியர் என்ற பகுதியும் துணைக்கு வந்தது.

கோபம் கோபமாக வந்தது, 'என்ன மனிதர் இவர், தன் நேரத்தை சரியாக பயன்படுத்தத் தெரியாமல் அடுத்தவர்களையும் துன்புறுத்துகிறாரே' என்று. இருபது இருபது நிமிடங்களாக முதலில் ஒரு முறை தூக்கக் கலக்கத்தை விரட்ட, அடுத்து ஒரு முறை மனதை அமைதிப் படுத்த என்றும் உட்கார்ந்த பிறகு, தொலைபேசியில் பேச வேண்டியவர்களை அழைத்து பேசி முடித்து விட்ட பிறகு மற்றவர்கள் எல்லாம் முடித்து விட்டு உள்ளே போக முடிந்தது.

களைத்துப் போய் இருந்தார். 'என்ன என்று தெரியவில்லை. உடம்பெல்லாம் களைத்துப் போகிறது' என்று ஆரம்பித்தார். அதிகமாக வளரவில்லை அந்தத் திசையில். மகளின் திருமண நிச்சயம் செய்யும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் கொண்டு கொடுத்தார் உதவியாளர். அதைப் புரட்ட ஆரம்பித்தார். புகைப்படங்களின் தரம், எடுப்பவரின் திறமைக்கும் புகைப்படத்தின் நேர்த்திக்கும் உள்ள உறவு என்று பேச ஆரம்பித்து தனது செல்பேசியில் எடுத்த புகைப்படங்களை காட்டி நுணுக்கங்களை விளக்க ஆரம்பித்தார். சில முகங்கள் புகைப்படத்துக்குப் பொருத்தமானவை என்று ஆரம்பித்து அந்தத் திசையில் கொஞ்ச நேரம்.

பிரான்சில் இருந்து பச்சைத் தோல் விற்பனையாளர்கள் குழு ஒன்று வரும் போது சந்திக்கப் போகிறவர்களில் இவரையும் சேர்த்திருக்கிறார்கள். அது தொடர்பான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து பச்சைத் தோல் வாங்கும் நுணுக்கங்கள், எப்படி ஒரு ரூபாய் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது என்று பேசினார்.

'20 டன் எடையுள்ள பொருள் வாங்கினால் 5% வரை கூடுதல் குறைவு ஏற்றுக் கொள்வோம். ஆனால் எப்பவுமே 5% குறைவாகவே அனுப்பினால் எப்படி' என்றவரிடம், 'பதப்படுத்தப்பட்ட தோல் ஏற்றுமதி செய்யும் நம்ம ஊர் ஆட்கள் 4% பரப்பு கூடுதல் குறைவு இருக்கலாம் என்று புரிதலைப் பயன்படுத்தி வேண்டும் என்றே 4% கூட்டிப் போடுபவர்கள் சிலர் உண்டு' என்றதும், 'சிலர் என்ன, எல்லோரும்தான் செய்றாங்க, நான் கூடத்தான் போடறேன்' என்று ஒப்புக் கொண்டார்.

விற்பவரிடம் வாங்குபவரிடம் ஒவ்வொரு வகையிலும் தனக்கு என்ன ஆதாயம் பெற்று விட முடியும் என்று அலசி ஆராய்ந்து செயல்பட்டால்தான் தாக்குப் பிடிக்க முடியும். ஒரு முறை சிவப்பு, வெள்ளை நிற தோல்கள் வேண்டும் என்று கேட்டிருந்தாராம். கருப்பு வெள்ளை நிறத் தோல்களை அனுப்பி விட்டாராம்.

பதப்படுத்தி எடுத்த பிறகு, ஆரம்பத்தில் இருந்த நிறத்தினால் எந்த மாறுபாடும் கிடையாது என்பது எனக்குப் புரிந்தது. தரமும் குறைவில்லை என்று அவரே சொன்னார்.

'நான் சிவப்பு நிற தோலைக் கேட்டிருந்தேன். ஒன்று, நீ அதை மதிக்காமல் தப்பாக அனுப்பியிருக்கிறாய், அல்லது பார்க்கவே இல்லை. இப்படிப்பட்ட நீ சொல்வதை நான் எப்படி நம்ப முடியும். உன் தவறுக்கு நீதானே தண்டம் கொடுக்க வேண்டும்' என்று 1000 பவுண்டு குறைக்கச் சொல்லியிருக்கிறார். அவர் தவறுக்கு பரிகாரமாக 300 பவுண்டு குறைத்திருக்கிறார். '300 பவுண்டுன்னா 25,000 ரூபாய், வாங்கிய தோலில் 60000 சதுர அடி வரும், சதுர அடிக்கு 40 பைசா குறைகிறது. ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும். நாம் கேட்கா விட்டால் போச்சு'

தொழில் வளர்ச்சியை எப்படித் திட்டமிடுகிறீர்கள் என்று அறிவுரை கேட்டேன். அவரது பாணியில் முதலீடு, பணம் திரட்டுதல், திருப்பிக் கொடுத்தல் என்று அடிப்படைகளை விளக்கினார்.

'என்னதான் நடக்குதுன்னு சொல்லுங்க' என்று ஆரம்பித்தார். போன தடவைகள் பேசியது எல்லாம் மறந்து விட்டது போல திரும்ப ஒவ்வொன்றாக கிளப்ப முயன்றார். அவ்வளவு நேரம் கேட்ட பாடம் மறக்குமா. நம்மிடமும் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு முயற்சிக்கிறார் என்று தெரிந்து விட்டது. 'நாங்கள் செய்த தாமதங்களுக்கான இழப்புகளை நாங்கள்தான் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆகக் குறைந்த கட்டணம்தான் உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறோம்' என்று ஆரம்பித்த ஒவ்வொரு கேள்விக்கு உறுதியான பதில்களைக் கொடுத்தேன். பல இடங்களில் அவருக்கும் என் மன ஓட்டம் பிடிபட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.

'அப்படி என்ன பரிவு அவருக்கு உன் மேல்' என்றான் நண்பன் பின்மாலையில். 'என்னால் அவருக்கு நல்ல வேலை ஆக வேண்டும். அதனால் எனக்கு உதவுகிறார். அவருக்குத் தெரியாத ஒரு நுட்பம், அவருக்கு உதவியாக இருக்கும் என்று அவர் நினைக்கும் நுட்பத்தை நான் கொண்டு தருகிறேன். அதை நான் சரி வர செய்ய எனக்குக் கற்றுக் கொடுத்தால் அவருக்கும் ஆதாயம்தானே'

ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்காமல் பேசி நாள் வரை நிலுவையில் இருந்த முழுத் தொகையையும் கையில் வாங்கிக் கொண்டு, அடுத்தடுத்த பணிகளுக்கான கட்டணங்களையும் உறுதி செய்து கொண்டு கிளம்பினேன்.

வெளியில் வந்து பார்த்தால், பணம் தராமல் இழுத்தடிக்கும் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை என்று உறைத்தது. இந்த வாரம் முழுவதும் பண வரவு உச்சக் கட்டத்தில். குறைவான தொகை மட்டும் வர வேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் இந்த மாதப் பணிகளுக்கான பில்கள் போட்டு வர வேண்டியதை மேலே கொண்டு போக வேண்டும்.

நண்பன் எட்டரைக்குத்தான் வேலை முடியும் என்று சொல்லியிருந்தான். ஒரு மணி நேரத்தை எங்கு கொல்வது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, இடது புறம் திரும்பி எழும்பூர். வசந்தபவனில் இரண்டு இட்லிகள், தோசை, இனிப்பு குறைவாக ஒரு லைட் காபி. காலையிலும் அதேதானே சாப்பிட்டோம் என்று இப்போ உறைக்கிறது. படிக்க ஆனந்த விகடன்.

மல்லி தொடர்கதை என்னவாகப் போகிறது! பல கட்டங்களில் எளிமையான சொற்களில், அலங்காரம் இல்லாத வாக்கியங்களில் அழ வைத்து விடுகிறார் சரசுவதி.

மெதுவாக நகர்ந்து சேத்துப்பட்டில் ஷாப்பர்ஸ் ஷாப்பர் கட்டிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நிறுத்துமிடத்திலேயே நண்பனுக்கு காத்திருப்பு. 'உள்ளே வந்து வரவேற்பறையில் வசதியாக உட்கார்ந்து கொள்ளேன்' என்று தொலைபேசியவனிடம், உட்கார்ந்திருந்த இடத்தின் அருமையை விளக்கினேன். அதிகம் வாகன சத்தங்கள் இல்லாத, மரங்கள் நிறைந்த, உறுத்தாத வெளிச்சம் போடப்பட்ட, தூய்மையாக வைக்கப்பட்ட தரையுடன் கனவுலகம் போல இருந்தது அந்த இடம். ஒரு அறையின் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு விகடனையும் கடந்து செல்பவர்களையும் துணைக்குக் கொண்டு காத்திருந்தேன்.

நண்பன் வந்த பிறகு, கண்ணில் போடும் கண்ணாடியைப் பார்த்து கடிந்து கொண்டான். 'உடனே புதுசு வாங்கணும்' என்று கடை தேடல். 'இப்பதானே பணக்காரன் ஆகியிருக்கேன். தேவைப்படுபவற்றை ஒவ்வொண்ணா வாங்கிடுவேன்' என்று பாதி விளையாட்டாக கூறினேன். வழியில் கடை எதுவும் கிடைக்கவில்லை. அவன் தங்கியிருந்த விடுதி அறைக்குப் போய் உட்கார்ந்தோம்.

அடுத்தடுத்து நான் செய்ய வேண்டியவை, இது வரை செய்யத் தவறியிருப்பவை என்று ஆரம்பித்து விட்டான். ஒன்றை முடித்து விட்டு அடுத்தது என்பது சரிப்படாது, ஒரே நேரத்தில் பல பந்துகளை போட்டுப் பிடிக்க வேண்டியிருக்கும். பத்தரை மணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டு, இடையில் அவனது உணவில் இரண்டு சுட்ட சப்பாத்திகளையும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். அலுவலகத்துக்கு 11 மணிக்கு, பதினொன்றரைக்கு வீடு நோக்கி. 12 மணிக்குத் தூக்கம்.

கனவுகளான கனவுகள். முடிய விரும்பாத கனவுகள். தூங்கித் தூங்கி விழித்து மணி பார்க்கும் போது காலை ஐந்தே முக்கால். இன்றைய நாள் கொஞ்சம் நீளம்தான்.

நேற்று ஒரு மணி நேரத்தில் எழுதியது 1425 சொற்கள். இன்றைக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கும் போதே 1440 ஆகி விட்டது. தன்னிச்சையாக எழுதுவதற்கு நிமிடத்துக்கு 24 சொற்களை தனி முயற்சியில்லாமல் தொட முடிகிறது. இன்னும் மாதாமாதம் இது அதிகரித்துக் கொண்டே போகும் என்று எண்ண இடமிருக்கிறது. 30 சொற்களை எப்போது தொடலாம்.

இதற்குப் பிறகு உலாவல். வீடு தரை துடைத்தல். 11 மணி சந்திப்பு. எழுதும் பணிகள். மாலையில் ஒரு நண்பர். 1492 சொற்கள்.

ஞாயிறு, ஜனவரி 13, 2008

செதுக்கல்

பதின்மூன்றாம் தேதி. ஜனவரி 13, ஜூலை 13, ஆகஸ்டு 13 என்று பதின்மூன்றில் பிறந்தவர்கள் மூன்று பேர் தெரியும். அப்படி பிறந்த தேதியை வைத்து நியூமராலஜி என்று அதியமான் சொல்லுவார்.

'நான் சூப்பர் மேன், நான் சொல்வதுதான் வேத வாக்கு' என்று ஹீரோ வழிபாடு உடைந்து எல்லோரும் முடிவுகளைக் கேள்வி கேட்பதுடன் தத்தமது எண்ணங்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்று பட்டது. என்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கண்களில் அது தெரிந்தது. அப்படி ஒரு 6 முதல் 8 பேர் செயல்பட ஆரம்பிப்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

இன்றைக்கு இருப்பவர்களில் சிலர் ஒரு மையக் கருவாக உருவெடுக்கலாம். சிலருக்கு அந்த பொறுப்பேற்கும் பண்பும் போதாது. எதற்கும் இயலாமல் அழ ஆரம்பித்து விடும் குழந்தை மனம்.

'சார் சொல்லிட்டார்' என்ற வெறுக்கக் கூடியதான வழிபாடு இல்லாமல், ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள், பரிமாற்றங்களுடன் பணியாற்றினால்தான் வளர்ந்து தளைக்க முடியும்.

நேற்றுக் காலையில் நான் ஆறு மணி தாண்டியும் தூங்கி எழுந்தேன். வேறு வேலை எதுவும் செய்யாமல் பல் தேய்த்து குளித்து தயாராகிப் பார்த்தால் நண்பர் இன்னும் கிளம்பியிருக்கவில்லை. கடைக்குப் போய் ஆளுக்கு 4 இட்லிகள், பொங்கல் பொட்டலமும், காய்ச்சிக் குடிக்க ஒரு பாக்கட் பாலும் வாங்கி வந்தேன். எகனாமிக் டைம்ஸ் 5 ரூபாய், ஆனந்த விகடன் 10 ரூபாய்கள்.

அவற்றைப் படித்துக் கொண்டே காத்திருந்து அலுவலகம். அலுவலகத்தில் வேலைகள் செய்து கொண்டே சில வாடிக்கையாளர் விவாதங்கள். 11 மணிக்கு மேல் வாராந்தர வட்ட மாநாடு. அது முடிந்ததும் வாடிக்கையாளர் அலுவலகத்துக்குத் தொலைபேசினால் உரிமையாளர் வந்து விட்டார் என்று தெரிய வந்தது. உடனேயே கிளம்பி விட்டேன். வெளியில் அவரது வண்டி நின்றிருந்தது. மேலே போய்ப் பார்த்தால், அவர் சொந்த வேலையில் மூழ்கி இருக்கிறார், இன்றைக்குப் பார்ப்பது கஷ்டம் என்றார்கள். திங்கள் கிழமை வரச் சொல்லி விட்டார்கள்.

அங்கிருந்து கிளம்பும் போது அப்படியே புத்தகக் கண்காட்சிக்குப் போய் காஷ்மீர் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு. வண்டியை நிறுத்தி விட்டுச் சுற்றிச் சுற்றி வந்தாலும் கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. இடையில் நான்கைந்து புத்தகங்களும் வாங்கிக் கொண்டேன். நியூசெஞ்சுரி பதிப்பகத்தில் 10 ரூபாய்க்கு ஒன்று என்று சோவியத் புத்தகங்கள், அறிஞர் அண்ணா குறித்து ஒரு புத்தகம். உணவகத்தில் போய் தக்காளி சாதமும் இமாச்சல் ஆப்பிள் ஜூசும் குடித்து விட்டு மீண்டும் தேடியும் K13 கிடைக்கவில்லை. நண்பருக்குத் தொலைபேசி இடம் விசாரித்துப் போய்ச் சேர்ந்தேன்.

பார்த்தால் புத்தக விலை 195 ரூபாயாம். ஏதோ நினைவில் 100 ரூபாய்கள் என்று அவ்வளவுதான் மிச்சப்படுத்தி வைத்திருந்தேன். செந்தில் நாதனே அங்கிருந்ததால் மீதிப் பணத்தை ஞாயிறன்று போகும் போது தருவதாக புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.

'உங்க புத்தகம்தான் வரலை, அடுத்த வெளியீட்டில் கொண்டு வந்து விடுவோம்' என்றார் அவர். அவரிடமும் '3 ஆண்டுகள் புத்தகமாக வெளியிடப் போவதில்லை' என்ற முடிவைச் சொன்னேன். கொஞ்ச நேரம் விவாதித்துப் பார்த்து விட்டு விட்டார்.

ஞாயிறு, டிசம்பர் 02, 2007

திறக்கும் கதவுகள்

21 நாட்கள் ஒரு பழக்கத்தைத் தொடர்ந்தால் அது நிலைபெற்று விடுமாம். அதே போல 21 நாட்களுக்கு ஒரு பழக்கத்தை நிறுத்திக் கொண்டால் அது விடைபெற்று விடுமாம். தினமும் எழுதிக் கொண்டிருக்கும் நேரங்களில் ஞாயிற்றுக் கிழமை எழுதாமல், அல்லது தாமதமாக எழுதினாலும், அடுத்த நாள் காலையில் சரியாக விழிப்பு வந்து ஒரு மணி நேரம் எழுத்து வாய்த்து வந்தது. இப்போது காலையில் எழுந்திருக்கும் பழக்கமும் உடனேயே ஒரு மணி நேரம் எழுதும் பழக்கமும் அறுந்து விட்டது. 21 நாட்களுக்கு அதிகமாகவே இடைவெளி வந்து விட்டிருந்தது.

இப்போது மூன்று நாட்களாகத்தான் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. இடையில் ஒரு ஞாயிற்றுக் கிழமையோ, பயண நாளோ, தாமதமாகத் தூங்கிய நாளோ குறுக்கிட்டால், பழக்கமின்மையில் கட்டாயமின்மைதான் இருக்கும். இந்தப் பழக்க வளர்ப்புத் தொடர்ச்சி அறுந்து போகும்.

அதுதான் இன்று விடாப்பிடியாக உட்கார்ந்து விட்டேன். ஆறு மணிக்குப் பிறகும் புரண்டு கொண்டிருக்க மனம் வரவில்லை. பல் தேய்த்து விட்டு நான்கைந்து முறை நாளிதழ் வந்து விட்டதா என்று கதவருகே போய்ப் பார்த்துக் கொண்டு வந்து விட்டேன். புலன்கள் கூரியதாகவே இருக்கின்றன. நான்கு பேர் முன்னறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கூட, குழாயில் தண்ணீர் வழியும் சத்தம் கேட்டுப் போய் அடைத்து விட்டு வர முடிகிறது.

நாளிதழ் போடும் பையனின் மிதிவண்டி நிறுத்தும் சத்தமும், நாளிதழ் தரையைத் தொடும் ஓசையும் கேட்டு விடுகிறது. அதனால் போய்ப் பார்க்கும் சுகமும், வரவில்லை என்று தெரிந்ததும் ஏற்படும் ஏமாற்றமும் தவிர்க்கப்பட்டு விடுகின்றன.

தினசரி பலன்களைப் படிக்கும் பழக்கம் பயம் கொடுத்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பீட்டர் விடால் என்பவர் எழுதும் நான்கு வரி பலன்கள், இணையத்தில் டாரட் டாட் காம் என்று தளத்திலிருந்து வரும் ஏழெட்டு வரி பலன்கள், இந்த இரண்டுமே நாளைத் தொடங்குவதற்கு முன்னுரையாக மாற ஆரம்பித்திருந்தன. இவற்றைத் தவிர டெக்கான் குரோனிக்கிள் வாங்கினால் அதில் வரும் பலன்கள் என்று அழுக்குப் படிந்து கொண்டே போகும்.

நான்கு நாட்களாக அதற்கும் முழுக்கு. கூகிள் முகப்புப் பக்கத்திலிருந்து டாரட் பலன்களை நீக்கி விட்டு, இந்தியன் எக்ஸ்பிரசிலும் ராசி பலன் பகுதியை உறுதியாகத் தவிர்த்து கேப்ரிகார்னுக்கு என்ன நேரப் போகிறது என்று தெரியாமலேயே நான்கு நாட்கள் ஓடி விட்டன.

இந்து நாளிதழ் ஈழத் தமிழருக்கு எதிராக எழுதுகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வாங்க ஆரம்பித்தால் அவர்கள் இன்னும் மோசம். அல்லது அதே அளவு மோசம். மலேசியாவில் இந்து என்று அமைப்புக்குப் பெயர் கொடுத்து அங்கத்திய தமிழர்கள் போராடுகின்றார்களாம். அதே அடிப்படையில்தான் இந்துத்துவா இயக்கங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பார்களாம்.

இந்திய விடுதலைக்காக ஜெர்மனியின் நாசிகளையோ, இத்தாலியின் பாசிஸ்டுகளையோ உதவி அணுகிய சுபாஷ் சந்திர போஸின் நடவடிக்கைகளைப் போல ஈழப் போராட்ட வீரர்களும் நரேந்திர மோடியையோ, பால் தாக்கரேயையோ கேட்க ஆரம்பித்தால் என்னவாகும்!

ஈழத்தில் அகிம்சை வழிப் போராட்டம் சாத்தியமாகுமா என்று தியாகு கேட்டிருந்தார். 'அடுத்தவரின் கருத்து பிடிக்கா விட்டால் அவரைக் கொல்ல உனக்கு என்ன உரிமை. பத்மநாபாவின் வழி சரியில்லை என்று உனக்குத் தோன்றுகிறது, அதனால் அவரைக் கொன்று விட்டாய். இரண்டு பேரில் ஒருவர்தான் இருக்க வேண்டும் என்றால் நீ செத்திருக்க வேண்டியதுதானே. "இதுதாம்பா எனது கனவு. ஆனால் நமது வழிகள் மாறுபடுகின்றன. இரண்டு பேரும் செயல்பட்டால் இயக்கம் பிளவு பட்டு விடும். நான் செத்து விடுகிறேன். தமிழீழம் அமைந்த பிறகு எனது கனவுகளையும் நிறைவேற்றி விடு" என்று சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டியதுதானே'

'ஒரு குறிப்பிட்ட வழியில் நடத்திக் கொண்டிருக்கிறார் தலைவர். அந்த வழி பலிக்கவில்லை என்றால் மாற்றுத் திட்டம் ஒன்று இருக்க வேண்டும். அது இல்லாமல் பிடித்த பிடியை விடாமல், தொடர்ந்து அதே வழியில் போய்க் கொண்டிருப்பது என்ன நியாயம்' என்று கேள்விகள் போட்டார் நண்பர்.

'இப்போதிருக்கும் சூழலில் ஏதாவது எழுதினால் முத்திரை குத்தி விடுவார்கள். நீ அங்கு போய்ப் பார்த்திருந்தால்தான் தெரியும், அனுபவித்திருந்தால்தான் தெரியும்.' என்று நமக்குக் கருத்துச் சொல்லும் தகுதியையே பறித்துக் கொள்வார்கள்.

தமிழ் வலைப்பதிவு சூழலில் அதுதான் நடந்து விட்டது. ஈழத் தமிழர் குறித்து, இந்துத்துவா குறித்து, பார்ப்பனீயத்தைக் குறித்து ஒத்த கருத்துடையவர்களே மாறி மாறி சொறிந்து கொள்வதுதான் நடக்கிறது. இந்த பிரச்சனைகளில் பொதுக் கருத்துக்கு மாறாக யாராவது எழுதி விட்டால் அவரை படை எடுத்து அடி அடி என்று அடித்து நசுக்க முயல்கிறார்கள். அந்த வகையில் டோண்டு சார் விடாப்பிடியாக பார்ப்பனீயத்தைக் குறித்த தனது நிலைப்பாடை சொல்லிக் கொண்டே இருப்பது தனித்து தெரிகிறது. அதற்குக் காரணம் அவரது தனிப்பட்ட பிடிவாதமே தவிர நிலவும் சூழலின் சிறப்பு இல்லை என்பது வருத்தமான நிலை.

'நான் சொல்வதை நீ எதித்துப் பேசலாம். ஆனால் அப்படிப் பேசுவதற்கு உனக்கு இருக்கும் உரிமையை உயிரைக் கொடுத்தாவது நான் காப்பாற்றுவேன்' என்று பேச்சுரிமை குறித்த புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று. அந்த சகிப்புத் தன்மையும், அடுத்தவரும் மனிதர்தான் என்ற புரிதலும் இல்லாத விவாதங்கள்தான் அதிகம்.

ஜேஜே குறிப்புகளில் எழுதியிருப்பது போல விவாதங்களின் நோக்கம் முடிச்சுகளை சுருக்குகளாக மாற்றி விடுவிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் விவாதங்களில் இன்னும் சில முடிச்சுகளைப் போட்டு விட்டு இரு தரப்பாரும் இரு முனைகளைப் பற்றி இழுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். முடிச்சு இறுகுவதுதான் நடக்கிறது.

என்னுடைய விவாதப் பாணி அப்படித்தான் இருக்கிறது. ஏதாவது யாரிடமாவது பேச ஆரம்பிக்கும் போது அவரது கருத்து என்ன என்று தெரிந்து கொள்ளும் எண்ணமே இல்லாமல்தான் ஆரம்பிக்கிறேன். ஆரம்ப நோக்கம், நாம் நினைப்பதை அவருக்குப் புரிய வைத்து விட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

அவர் மாற்றுக் கருத்து சொன்னதும் உடனேயே வருவது மறுப்பு அல்லது தற்காப்பு. அந்தத் தடைகளை உடைத்து விட்டு பேசும் திடம் அவரிடம் இருந்தால்தான் ஓரளவு நிதானித்து அவர் வருவதை உள் வாங்குவதே நடக்கிறது.

விவாதம் என்று போட்டு விட்டு 'நான் சொல்வதுதான் சரி, அதை ஏற்றுக் கொள்ள விரும்புபவர்கள் வந்து அதில் இருக்கும் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்' என்பது ஒரு கருத்தியல் வன்முறை. அதைத்தான் அசுரன் சொல்கிறார். அதை மாற்றிக் கொள்ள வேண்டும். வெளியில் பேச ஆரம்பிக்கும் போது முன்முடிவுகளை ஒதுக்கி விட்டு மாற்றுக் கருத்துக்களை புரிந்து கொள்ளும் நோக்கத்தோடு பேச ஆரம்பிக்க வேண்டும். தகவல்களாகவோ, மற்றவர்களின் புரிதல்களாகவோ வரும் கருத்துக்களையும் சேர்த்து நம்முடைய புரிதலை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கம் இருக்க வேண்டும்.

அதனால்தான் வேறு இரண்டு பேர் செய்யும் விவாதத்தில் கற்றுக் கொள்வது போல நாமே விவாதிக்கும் இடங்களில் முடியாமல் போய் விடுகிறது. இந்திய அணி விளையாடாத போட்டிகளில், இரண்டு அணிகளில் எந்த ஒன்றையும் தீவிரமாக ஆதரிக்காத போட்டிகளில் ஆட்டத்தின் அழகை அல்லது குறையை புரிந்து கொண்டு ரசிக்க முடியும். நாம் உணர்வு பூர்வமாக பார்க்கும் போது உண்மை விடைபெற்றுக் கொள்கிறது.

அதனால்தான் விவாதங்களில் இறங்குவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது. எத்தனை விவாதங்களில் ஈடுபட்டால் என்ன, நான் நினைப்பதை நிலை நாட்ட வேண்டும் என்று உணர்வு தீவிரம் இல்லாமல் விவாதித்தால் விவாதத்துக்கு தேவைப்படும் மன ஆற்றல் குறைவாகவே இருக்கும்.

இப்படி எங்கேயோ பிடித்து எங்கேயோ இழுத்துக் கொண்டு புதிய கதவுகளைத் திறந்து விட்டு விடுகிறது இந்த எழுத்துக்கள். ஒவ்வொரு கதவு திறக்க புதிய வெளிச்சம். சுகமான இடத்துக்கு வந்து விட்டோம் என்று தேங்கி விடாமல் அடுத்தடுத்து கதவுகளை அல்லது சுவர் போலத் தெரியும் இடங்களை தட்டிக் கொண்டிருந்தால் இன்னொரு கதவும் திறந்து விடுகிறது.

சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று இல்லாமல், இன்றைக்கு நாம் இருக்கும் இடமே சிறந்தது என்று சோம்பி விடாமல் முயன்று கொண்டே இருப்பது மேன்மையைத் தரும்.

இடையில் நாளிதழ் வந்து விழும் சத்தத்தைத் தொடர்ந்து போய் எடுத்தும் வந்தாச்சு. இந்தியா அணி டெஸ்ட் போட்டியில் 616 ஓட்டங்கள் குவித்திருக்கிறதாம். வாசிம் ஜாபர் 200க்கும் மேல், கங்குலியும் லட்சுமணனும் தலா 100க்கும் மேல், திராவிட், டெண்டூல்கர், தோனி மூன்று பேரும் தலா 50க்கு மேல் எடுத்து விட்டார்கள். இன்றைக்கு கும்ப்ளேயின் முறை, நேற்றே ஒரு விக்கெட் என்று ஆரம்பித்த கணக்கை ஏழெட்டாக நீட்டித்துக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு.

மற்ற பந்து வீச்சாளர்களுக்கு எந்த விதமான உதவியும் தராத ஆடுகளம். கும்ப்ளே இது போன்ற ஆடுகளத்தில் மட்டையாளர்களை தவறு செய்ய வைத்து ஆட்டமிழக்க வைக்கும் பந்து வீச்சுக்கு உரியவர். அக்தர் உடல் நிலை முற்றிலுமாக தேறாத நிலையிலும் போட்டியில் கலந்து கொண்டதைக் குறித்து விவாதங்கள்.

'அவர் இல்லாவிட்டால் வேறு யார் விளையாடுவார்கள். அப்போதுதான் விமானத்தில் வந்து இறங்கிய வீரரை விளையாட வைப்பதா, காய்ச்சலிலிருந்து மருந்து சாப்பிட்டு தேறி வரும் அக்தரை விளையாடச் சொல்வதா என்ற கேள்வி வந்த போது எங்களுக்கு சிறந்ததாகப் பட்ட முடிவே எடுத்தோம். வெளியிலிருந்து கொண்டு குறை சொல்பவர்களுக்கு என்ன!' என்ற பாணியில் பாகிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி கொடுத்திருந்தது நியாயமாகத்தான் பட்டது.

இன்று இதை முடித்து விட்டு சாப்பிட்டு விட்டு வர வேண்டும். தொடர்ந்து ஊற வைத்திருக்கும் போர்வை, தலையணை உறை, சாரத்தை அலசிப் போட்டு விட்டு, இன்னும் ஒரு மணி நேரம் எழுதலாம். அலுவலகத்துக்குப் போய் கணக்கு விபரங்களை அனுப்ப வேண்டும். பயணச்சீட்டு பதிவு செய்து கொடுக்க வேண்டும். மாலை விவாதத்துக்கு விபர அறிக்கை தயாரித்து எல்லோருக்கும் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.