என்னைப் பற்றி

படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 19, 2012

உண்பதூம் உறங்குவதூம்


ஏப்ரல் 19, 2012.

நாட்குறிப்பு எழுதி ஒரு வாரம் தாண்டி விட்டிருக்கிறது. போன வாரம் புதன் கிழமை எழுதியது. வியாழக்கிழமை காலையில் எழுந்து சென்னைக்குப் புறப்பட்டதால் எழுதவில்லை. வியாழக்கிழமை இரவே சென்னையிலிருந்து திரும்பி வெள்ளியன்று தாமதமாக எழுந்தது. சனிக்கிழமை மீண்டும் காலையில் எழுந்து சென்னைக்கு. ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் புறப்பட எழுதவில்லை. திங்கள் கிழமை ஞாயிற்றுக் கிழமை களைப்பை போக்க தாமதமாக எழுந்திருந்தேன். திங்களன்று ராணிப்பேட்டை போய் விட்டு வந்த களைப்பு செவ்வாய் கிழமை காலையை சோம்பலாக்கியது. புதன் கிழமை, அதாவது நேற்றும் சோர்வான காலையாக ஆரம்பித்தது. இன்று சரியாக எழுந்து உட்கார்ந்து விட்டிருக்கிறேன்.

நேற்று காலையில் எழுந்திருக்கும் போது 6 மணி. திராட்சை பழங்களில் மீதியிருந்தவற்றை உதிர்த்து கிண்ணத்தில் எடுத்துக் கொண்டேன். தண்ணீரை கொதிக்க வைத்து காப்பித் தூளைப் போட்டு, சர்க்கரையும் சேர்த்துக் கொண்டேன். நிறைய வேலைகள் மீதியிருந்தன. முதலில் மொழிபயர்ப்புகளை திருத்த ஆரம்பித்தேன். அனுப்பிய கட்டுரையையும் தரவிறக்கி திருத்த ஆரம்பித்தேன். இந்த வேலைகளிலேயே நேரம் போனது. 8 மணிக்கெல்லாம் வந்து பாத்திரங்கள் கழுவ ஆரம்பிக்க, அவருடன் பேசிக் கொண்டே உணவுக்கான தயாரிப்புகள் செய்ய ஆரம்பித்தேன்.

முந்தைய நாளின் பழையது இருந்தது. நல்ல வேளையாக சாம்பார், மாங்காய் ஊறுகாய் எல்லாம் தீர்ந்து விட்டிருந்தன. ஓட்ஸ் பொதியுடன் கிடைத்த சமையல் பக்குவங்களுக்கான புத்தகத்தை புரட்டினால் ஓட்ஸ் பட்டாணி தோசை என்று போட்டிருந்தது. ஓட்சையும் உளுந்தையும் பொடித்து கலந்து, உப்பு சேர்த்து கரைத்துக் கொண்டு தோசை. பட்டாணியை வேக வைத்து வாசனை பொருட்களுடன் தோசையில் மடித்து பட்டாணி தோசை. முதல் பகுதியை மட்டும் செய்ய முடிவு செய்தேன். உளுந்தை கழுவி மிக்சியில் அரைக்கப் போட்டால் ஈரப் பதத்தில் பக்கத்தில் ஒட்டிக் கொண்டது. இப்படி உளுந்தை ஊற வைக்காமல், அல்லது வறுக்காமல் பொடித்து பயன்படுத்துவது செரிமான கோளாறை உருவாக்கும், உருவாக்கியது.

அதனுடனேயே ஒரு கப் ஓட்சை போட்டு பொடித்தேன். ஓட்ஸ் நல்ல மாவாக ஆனது. மூசிலியில் பயன்படுத்தப்படும் ஓட்ஸ் பெரியதாக துகள்களாக இல்லாமல் இருக்கிறது. திங்கள் கிழமை ஓட்சில், பழங்கள் சேர்த்து பால் ஊற்றி, சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் என்று சிறிதளவு வறுத்தால் பொடிப்பொடியாக கரிந்து போக ஆரம்பித்தது.

ஓட்சுடன் சேர்ந்து உளுந்தும் பொடிந்து விட்டது. கொஞ்சம் குருணையாக இருந்தது. மொத்தத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி, உப்பு சேர்த்து கரைத்தேன். கொஞ்சம் சீரகமும்.

'என்ன புதுசு புதுசா செய்கிறேயே' என்று ஆச்சரியப்பட்டார். 'கொடுத்து வைக்கல, இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சு செய்பவனோட' என்று அலுத்துக் கொண்டாள். 'இதையெல்லாம் மனுசன், மனுசி திம்பானா' என்று பாதி நகைச்சுவையாக சொன்னேன்.

டெக்கான் குரோனிக்கிளில் ஒரு 11 வயது சிறுமியைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆப்கனில் தற்கொலை தாக்குதலில் மாட்டிக் கொண்ட அந்த சிறுமியின் குடும்பத்தில் பலர் இறந்து விட்டிருக்கின்றன. அந்த பெண்ணின் வயதுதான். ஒரு நாளில் பல முறை அவர்களை நினைக்க வேண்டிய வந்து விடுகிறது. இன்னும் வயதாக வயதாக தேடுதல் அதிகமாகுமோ என்னவோ.

தோசை சுடுவதற்கு தோசை கல்லையும் அகப்பையும் கழுவி நீட்ட, அதை விட்டு விட்டு மூடி வைத்தேன். இப்போதைக்கு பழையது குடித்து விட்டு, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கழித்து நன்கு ஊறிய பிறகு தோசை சுட்டுக் கொள்வேன். எப்படி வருகிறது என்று பார்க்க ஆர்வமாக இருந்திருக்கலாம். அவர் போன பிறகு பழையது அனைத்தையும் தட்டில் ஊற்றி உப்பு போட்டு, தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி வைத்துக் கொண்டேன். நன்றாகவே இருந்தது. மோரோ எந்த ஒரு குழம்போ சேர்க்காமல் கூட அரிசிச் சோற்றுக்கான மணத்தோடு தண்ணீர் ஊற்றி வைத்த பழையதின் ருசி தனிதான். இதை சாப்பிட்டால் இதையெல்லாம் தின்பதா என்று சிலருக்கு உண்டு. அது என்னால் தாங்கிக் கொள்ள முடியாதது.

சாப்பிட்டு விட்டு முடி வெட்டப் போனேன். ஒவ்வொரு வேலை செய்து முடித்த பிறகும் சில நிமிடங்கள் இணையத்தில் இணைந்து மேய்தல். இதற்குள் மொழிபெயர்த்த இரண்டு கட்டுரைகளையும், சரி பார்த்த கட்டுரையையும் அனுப்பி விட்டேன். இன்னும் மீதி  இரண்டையும் இன்று முடித்து விட முடியுமா என்று கேட்டால், மனிதன் நினைத்தால் முடியாதது எதவும் இல்லை என்று தத்துவம் சொன்னார்.

இறுக்கமான பேன்டையும் பிங்க் கோடு போட்ட டி-சட்டையையும் போட்டுக் கொண்டு போனேன். முடி வெட்டும் கடைக்கு அருகில் போனால் அங்கு கரண்ட் இல்லை, கடைக்காரர் சாப்பிட்டுக் கொண்டிருக்க, நாற்காலியில் ஒருவர் காத்திருந்தார். பக்கத்து பத்திரிகை கடைக்குப் போய் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். விலையை 2 ரூபாய் ஆக்கி விட்டிருக்கிறார்கள். சென்னையை போல செய்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.

கடைக்குள் புழுக்கம், வேர்வை ஆறாக கொட்டியது. எனக்குத்தான் அதிகமாக வேர்த்தது. பழையது குடித்து விட்டு வந்ததால் அந்த ஈரம் எல்லாம் வெளியில் போக முடிகிறது போலிருக்கிறது.

உதவிக்கு வந்த பையன் ஷேவிங் மட்டும்தான் செய்வான் போலிருக்கிறது. எனக்குப் பிறகு வந்தவரை இன்னொரு நாற்காலியில் உட்கார வைத்து ஷேவ் செய்ய ஆரம்பித்தான். முதலில் முடி வெட்ட ஆரம்பித்தவரை சீக்கிரம் முடித்து விட்டு என்னை கூப்பிட்டார். வெயிலும், மின் வெட்டும் இரு முனை தாக்குதல்களாக வாட்டி எடுக்கிறது. 'தேவை அதிகமாகிக் கொண்டே போகிறது, உற்பத்தி அதே நிலையில் வைத்திருந்தார்கள், அதுதான் மின் வெட்டுக்கு காரணம்' என்று விளக்கினார் முடி வெட்டுபவர். அவருக்கும் வேர்த்து ஊற்றிக் கொண்டிருந்ததை பார்த்து கொஞ்சம் சமாதானம். தலை, கழுத்து எல்லாம் வேர்த்து வடியும் போது முடி வெட்டுவது கூடுதல் சிரமமாக இருக்கும்.

ஒரு வயதான, சிகப்பான ஒருவர் வந்து உட்கார்ந்தார். ஷேவிங் எவ்வளவு என்று கேட்டார். 20 ரூபாய் என்று சொன்னதும், 10 ரூபாய் இல்லையா என்றார். அவரிடம் கொஞ்ச நேரம் வாக்குவாதம் செய்து விட்டு, 'இந்த இந்தி காரனுங்களே இப்படித்தான், அவங்க ஊரில் இருப்பது போலவே இங்கேயும் எதிர்பார்க்கிறான்' என்று அலுத்துக் கொண்டார் கடைக்காரர். 'பேசாம கடையை மூடி விட்டு வாட்ச் மேன் வேலைக்கு போகலாமான்னு நினைக்கிறேன். எங்க அப்பா அப்படித்தான் போகிறார், மாதம் 12,000 ரூபாய் கிடைக்கிறது. மெட்ராசில, குடும்பத்தோட மெட்ராசுக்குப் போய் விட்டா நல்ல காசு' என்றார்.

'இது உங்க சொந்த தொழில், உழைச்சு மதிப்பா சம்பாதிக்கிறீங்க, மெட்ராசுக்குப் போய் யாருக்கோ கும்பிடு போட்டு வாழ்வது இதற்கு ஈடாகுமா. அது உங்க மனதுக்கு திருப்தியை தராது, பணம் வேணும்ணா கூடுதல் இருக்கலாம்' என்றேன். அவர் மனதில் சந்தோஷ புன்னகை. 'ஆமாமா' என்று ஒத்துக் கொண்டார்.

இப்போது, காலையில் சரியாக 4 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. அதற்குள் துணியை ஊற வைத்து விட்டு, பல் தேய்க்க எடுத்திருந்தேன். கரண்ட் கட்டானதும் நாற்காலியை வெளியில் போட்டு, ஸ்டூல் ஒன்றையும் வெளியில் எடுத்து மடிக்கணினியை இயக்கினேன். கையில் எடுத்திருந்த பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்து பல் தேய்த்து முடித்து விட்டு வெளியில் வந்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் கொசு பட்டாளம் படை எடுக்கிறது. சட்டை போடாமல் உட்கார்ந்திருந்ததால் உடம்பையும் தோளையும் மொய்க்கின்றன. போய் சட்டையை, முழுக்கைச் சட்டையை போட்டுக் கொண்டேன்.

2 ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சத்துவாச்சாரியில் ஒரு கடையில் வாங்கிய சட்டை. சென்னையிலிருந்து வந்து மாற்றுச் சட்டை இல்லாததால் வாங்கிய சட்டை. வெள்ளை பருத்தி சட்டை. முஸ்லீம் திருமணத்தின் போது மாப்பிள்ளை போட்டுக் கொள்ளும் சட்டையாம். எனக்கு இடுப்பை சிறிதளவுதான் தொடும் அளவுக்குத்தான் நீளம். இப்போது கொசு. வெளியில் தெரியும் காலின் பாதங்கள், சாரத்தின் ஊடாக தொடை என்று கடிக்கின்றன. பேன்ட் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் அதையும் கொஞ்சம் தவிர்க்கலாம். எப்படியும் பாதங்கள்,  கழுத்து, முகம் திறந்துதான் இருக்கும். ஓடோமாஸ் போன்று கொசு எதிர்ப்பு களிம்பு வாங்கி பூசிக் கொள்ளலாம்.

வெளியில் மாடிப்பகுதியில் எதோ கருப்பாக தெரிகிறதே என்று வெளிச்சம் அடித்துப் பார்த்தால் தலையோடு மூடிக் கொண்டு யாரோ தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து அறையில் தங்கியிருக்கும் ஒருவராயிருக்கலாம்.

மீண்டும் நேற்றைய நிகழ்வுகளுக்கு. அவ்வளவு புழுக்கம், வேர்வைக்கு மத்தியிலும் முடி வெட்டும் முறையில் எதையும் குறைத்துக் கொள்ள வில்லை. கத்திரி வைத்து வெட்டுவது, பக்க வாட்டில் வெட்டுவது, கத்தியால் ஓரங்களை சரி செய்வது என்று முழுவதும் செய்து முடித்தார். ஷேவிங் வேண்டாம் என்று சொல்லி விட்டதில் அவருக்கு ஒவ்வொரு முறையையும் போலவே வருத்தம்தான். 40 ரூபாய் வாங்கிக் கொண்டார். தொலைபேசியையும், பேனாவையும், வீட்டிலேயே விட்டு விட்டு வந்திருந்தேன்.

வீட்டுக்கு வந்து குளிக்க வேண்டும். குளித்து விட்டு தோசை சுட்டேன். நன்றாகவே வந்திருந்தது. உளுந்து அடை போல வந்தது. சீனியுடன் சாப்பிட்டேன்.

அதன் பிறகு வழக்கம் போல இணையம். ஜாவாஸ்கிரிப்டு பைபிள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருந்தேன். அறிமுகம், பயிற்சி, மொழி விபரங்கள் முடிந்து இப்போது ஒவ்வொரு பொருளாக விளக்கும் பகுதி வந்திருக்கிறது. அதுவும் நாள் முழுவதும் ஓடியது. நேற்று ஜேகொரி பற்றிய புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்திருந்தேன். ஜாவா ஸ்கிரிப்டை கற்றுக் கொண்டு அதன் பிறகு ஜேகோரியை பயன்படுத்த ஆரம்பித்தால் உதவியாக இருக்கும்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சட்டை, பேன்ட் மாட்டி விட்டு புறப்பட்டேன். பிஎஸ்என்எல் டேட்டா கார்டுக்கான எண் குறிக்கப்பட்ட நாளேடு எடுத்துக் கொண்டு அதனுள், காசோலைகளை சொருகிக் கொண்டேன். வாலாஜாவில் டெப்பாசிட் செய்த காசோலை இன்னும் கணக்கில் சேர்ந்திருக்கவில்லை. இன்று போய் பார்க்க வேண்டும். முதலில் ரீசார்ஜ் செய்யும் கடை. கடைப்பெண் தொலைபேசியில் பேசிக் கொண்டே எண்ணை குறித்துக் கொண்டாள். சில நொடிகளில் தகவல் வந்து விட்டது. 750 ரூபாய் ரீசார்ஜ் ஆகியிருந்தது. 5 GB பயன்பாடு அடுத்த 18ம் தேதி வரையில். முன்பே மீதியிருந்த 50 MBயையும் சேர்த்து காட்டியது.

சாலையைக் கடந்து வங்கிக்கு போனேன். நிறைய பேர் உட்கார்ந்திருந்தார்கள். முதல் டெல்லரிடம் படிவம் வாங்கிக் கொண்டு அவர் முன்பிருந்த நாற்காலியிலேயே உட்கார்ந்து கொண்டேன். சில நிமிடங்களில் படிவங்களை நிரப்பி கொடுத்து விட்டேன்.

அப்படியே கடைக்குப் போய் பொருட்கள் வாங்கி வரலாம் என்று நினைத்திருந்தேன். வெயிலில் போக மனம் வரவில்லை. வீட்டுக்குத் திரும்பி விட்டேன்.

தொலைபேசியவரிடம் நிலைமையைச் சொன்னால் வெள்ளிக் கிழமை மதியத்துக்குள் முடித்து விட்டால் கூட போதும் என்றார். கொஞ்சம் கண்ணயர்ந்து எழுந்து கடைக்குப் போனேன். ஒரு மேகி நூடுல் பொதியும், 1 ரூபாய் காபி பொடி 5 பொதிகளும் வாங்கிக் கொண்டேன். கடைப் பையனோடு இன்னொருவர் உட்கார்ந்திருந்தார், அவர்தான் உரிமையாளர் என்று தோன்றியது.

தொலைபேசி வெள்ளிக்கிழமை, அதாவது நாளை மாலை உரைக்கு புரஜெக்டர் தயார் செய்து விடுவதாகச் சொன்னார். இணையம் பற்றி பேசும் போது காட்சியாக காட்டினால்தான் புரியும் என்பதால் ஏற்பாடு செய்து விட்டார்களாம். இணையத்தில் தேடி பழங்கால வாடிக்கையாளர் உதவி பற்றிய வீடியோவை எடுத்துக் கொண்டேன். மெடிவல் சப்போர்ட் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை படிப்பதற்கு உதவி கேட்கும் காட்சி. அந்தக் காட்சி நமக்கு சிரிப்பாக தோன்றினாலும் அப்படித்தான் நடந்திருக்க முடியும். இன்றும் ஒரு சிறு குழந்தை புத்தகத்தை புரட்டவும், படிக்கவும் கற்றுக் கொள்வது அது போன்ற தடுமாற்றத்துக்குப் பிறகுதான். என்ன, பெரியவர்கள் படிப்பதை பார்த்து தெரிந்து கொள்வதும், பெரியவர்கள் இயல்பாக கற்றுக் கொடுப்பதும் நடந்து விடுகிறது.

அதே போல மின்னணு படிப்பான்களும் இப்போதைக்கு புதுமையாக தெரிந்தாலும் இன்னும் சில தலைமுறைகளில் இயல்பான படிக்கும் கருவிகளாக மாறியிருக்கும். காகிதங்கள் செய்ய மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரே சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளலாம், புத்தக தொகுப்புக்கு ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளலாம். கருவிக்கு மின்ஊட்டம் தேவைப்படுவது, அச்சிட்ட எழுத்துக்கு இணையான துல்லியம் இல்லாமல் இருப்பது இரண்டும்தான் இப்போதைய குறைபாடுகள். இரண்டுமே எதிர்கால தொழில் நுட்ப வளர்ச்சியில் சரிசெய்யப்படக் கூடியவைதான்.

கூடவே, வணிக நோக்கில் போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் பெரிய தொல்லையாக இருக்கின்றன. கிண்டில், நூக், ஆப்பிள் ஐ-பேட், டேப்லட் கணினிகள், பெரிய திரை தொலைபேசிகள் என்று படிப்பதற்கு பல கருவிகள் இருக்கின்றன. படிப்பதற்கான புத்தகங்கள் மொபி வடிவத்தில் கிடைக்கின்றன. பிடிஎப் வடிவமும் அனைத்து  கருவிகளிலும் படிக்க முடியும். இதுதான் இன்றைய நிலைமை. இன்னும் சில ஆண்டுகளில்
1. ஒரு பேப்பர் பேக் அளவில், கனத்தில் கருவி
2. சூரிய ஒளியிலிருந்து ரீசார்ஜ் செய்யும் மின்கலன்
3. உயர் துல்லிய எழுத்துக்கள்
4. திறந்த வகை  வடிவங்கள்.

இப்படி வந்து விட்டால் படைப்புகள் வாசகர்களை வேகமாக நேரடியாக போய்ச் சேர்ந்து விட முடியும். இப்போதும், படைப்புகளை மின் புத்தகங்களாக மாற்றித் தரும் இணைய தளங்கள் இயங்குகின்றன.

அடுத்த சில நிமிடங்களில் அழைத்தார். அவர் வேறு ஒரு டேனரியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாராம். அவர்களுக்கு மென்பொருள் வேண்டுமாம். வந்து பேச முடியுமா என்று கேட்டார். இன்று போக வேண்டும். 11 மணிக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறேன்.


மாலையில் அழைத்து அடுத்த மாதம் ஒரு பயிற்சி வகுப்பு நடக்க இருப்பதாகச் சொன்னார். மலை ஏற்றம், வகுப்பு நடக்குமாம்.


மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு விட்டு காபியும் குடித்துக் கொண்டிருந்தேன். 8 மணிக்கு மின்சாரம் தடைப்பட்ட போது வெளியில் வந்து உட்கார்ந்து ஜாவாஸ்கிரிப்டு பைபிள் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகும் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்து விட்டு தியானம். 10 மணிக்கு தூங்கப் போகும் போது மின்சாரம் தடைப்பட்டது. அறைக்கதவை மூடி விட்டு, கொசு விரட்டியை பொருத்திக் கொண்டு, மின்விசிறியை வேகமாக ஓட விட்டிருந்ததால் மின்சாரம் தடைப்பட்டும் கொசு கடிக்காமல் தூங்கி விட்டேன். அடுத்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மின்சாரம் வந்தது என்று நினைக்கிறேன்.

காலையில் 6 முதல் 9 வரை, மதியம் 12 முதல் 3 மணி வரை. இரவு 8 முதல் 9 வரை மீண்டும் நள்ளிரவு 1 மணி நேரம், அதிகாலை 1 மணி நேரம் என்று 9 மணி நேரம் மின்சாரத்தை வெட்டி விடுகிறார்கள். சொல்வது போல பாதிக்குப் பாதி நேரம்தான் மின்சாரம் வருகிறது. இரவு போவது 1 மணி நேரத்துக்கா ஒன்றரை மணி நேரத்துக்கா என்று பார்க்க வேண்டும். 4 மணிக்கு போனது இன்னும் வரவில்லை.

மின்சாரம் வந்து விட்டது. இதை முடிக்கும் போது 5.05 ஆகியிருக்கும். அதன் பிறகு கட்டுரையை தொடர 1 மணி நேரம். 6 மணிக்கு அது முடித்து விட்டு வீட்டை கொஞ்சம் ஒதுங்க வைக்க வேண்டும்.
ஆறரை மணிக்கு உலாவப் போய் பால், நாளிதழ் வாங்கி வர வேண்டும். காலை உணவுக்கு ஓட்ஸ் காய்ச்சி பால் சேர்த்து குடித்துக் கொள்ள வேண்டியதுதான். பிரெட் கிடைத்தால் வாங்க வேண்டும்.

திரும்பி வந்து துணி துவைத்து, முகம் மழித்து, குளியல். இன்று, நாளை, சனிக்கிழமை போட வேண்டிய உடைகளை தேய்த்து கொள்ள வேண்டும், 9 மணிக்கு. 10 மணிக்கு ராணிப்பேட்டை புறப்பட வேண்டும். 11 மணிக்கு சந்தித்து விட்டு அப்படியே வங்கிக்குப் போய் கேட்டு விட்டு திரும்பி வர வேண்டும்.

அதன் பிறகு நாளைய உரைக்கான தயாரிப்பு. நாளைக்கு உரைக்கான தயாரிப்பு, மொழி பெயர்ப்பு முடித்து, மதியம் 12 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டும். 4 மணிக்கு கூட்டம், 7 மணிக்கு  கூட்டம். சனிக்கிழமை கல்லூரி. சனி மாலை திரும்பி விட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை இங்கு ஜாவாஸ்கிரிப்டு தொடரலாம். இன்னும் 1 நிமிடம் இருக்கிறது. எத்தனை சொற்கள் என்று பார்த்துக் கொள்ளலாம். 1824 சொற்கள்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

万岁


நேரம் காலை 5.50, டிசம்பர் 25, 2011.

இன்று கிருஸ்துமஸ் நாள், இயேசு பிறந்த நாள். வெளியில் எங்கோ வானொலியில் கேளுங்கள் தரப்படும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நேற்று எம்ஜிஆர் நினைவு நாள். டிசம்பரும், ஜனவரியும் சுறுசுறுப்பான மாதங்கள்தான். சென்னையின் கருநாடக இசை விழா, புத்தகக் கண்காட்சி, கிருஸ்துமஸ், புத்தாண்டு நாள், பொங்கல், தீவுத் திடலில் வர்த்தகப் பொருட்காட்சி என்று தொடர்ந்த நிகழ்ச்சிகள். தமிழ்நாட்டின் வசந்த காலம் மார்கழி-தை மாதம் என்று சொல்லலாம்.

நேற்று காலையில் 5.30க்கு எழுந்திருந்தேன். முந்தைய நாளே வர மாட்டேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதற்கு பதில் அனுப்பினேன். காலையில் ஆறரை மணிக்கு வேலைக்குப் புறப்பட்டுப் போய் விடுவேன். மாலையில் சந்திக்கலாம் என்று.

பல் தேய்த்து, புத்தகங்களை அடுக்கி வைத்தேன். படிப்பதற்கு அதிகாலையின் அமைதியில் புத்தகத்தை பையில் எடுத்துக் கொண்டேன். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குப் பரிசாகக் கொடுக்க வாங்கிய நாட்குறிப்பும் பேனாவும் எடுத்துக் கொண்டேன்.

ஆறரை மணிக்குப் புறப்பட்டு விட்டேன். இந்து நாளிதழ் வாங்கிக் கொண்டேன். சொகுசு அல்லாத பேருந்து, அதனால் 8 ரூபாய் சீட்டில் வடபழனி கோவில் நிறுத்தக் கட்டணம். நூறடி சாலையைக் கடக்க வேண்டிய சாலை நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டேன். ஆற்காடு சாலையைக் கடந்து நூறடி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வந்தேன்.

569C வந்தது. அதற்கு பின்னாலேயே 119B கல்பாக்கம் வந்தது. அதில் பழைய மகாபலிபுரம் சாலையா என்று கேட்டுக் கொண்டு ஏறினேன். மூன்று பேர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.

மின்னஞ்சல் பார்க்க கணினியை விரிக்கவில்லை. இந்து நாளிதழ் கொஞ்ச நேரம், அதன் பிறகு அதிகாலையின் அமைதியில் படைப்பு. பரீஸ் பொலவோய் எழுதிய உண்மை மனிதனின் கதையைப் போல மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடப் போகிறது என்று காலையில் நினைத்திருக்கவிலை. நாள் முடிவதற்குள் இரண்டு முறை படித்து முடித்து விட்டிருந்தேன். கதையில் 5 பெண்களும் கொல்லப்பட்டு விடுகிறார்கள். பொதுவாக இது போல துயர சம்பவங்கள் நிறைந்த கதைகளைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றுவதில்லை. இது விலக்காக இருக்கிறது டால்ஸ்டாயின் அன்னா கரனீனா இன்னொரு விதிவிலக்கு.

சிறுசேரி முன்பு இறங்கினேன். சரியாக ராஜஸ்தான் டாபா முன்பு நிறுத்தியிருந்தார்கள். சாலையைக் கடந்து நாச்சியார் மெஸ் என்று பலகை வைத்திருந்த தெருவுக்குள் போனேன். சின்ன ஓரைக் கூரைக் கடை. இட்லி+வடை. 4 இட்லி, 2 வடை. ஒவ்வொன்றும் 4 ரூபாய். மொத்தம் 24 ரூபாய். புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருந்தேன்.

வெளியில் வந்து சாலையின் வலது புறமாகவே நடந்து தொழிற்பேட்டைக்குள் வலது புறமாகவே நடக்க ஆரம்பித்தேன். தயாராக புறப்பட்டு எந்த ஆட்டோவும் நின்றிருக்கவில்லை. நேரமும் 8தான் ஆகியிருந்தது.

முதல் கரத்தில் நடக்கும் போது சாரை சாரையாக மஞ்சள் சீருடை அணிந்து தலையில் பாதுகாப்பு கவசம் அணிந்த கட்டிடத் தொழிலாளர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் தலைக்கவசத்தைக் கையிடுக்கில் வைத்திருந்தார்.

தான் உழைத்த வயலின் விளைபொருள் தனக்கு சொந்தமில்லை. தான் கட்டிய கட்டிடத்தில் தனக்கு உரிமையில்லை, தான் செய்யும் பொருள் தனக்குப் பயன்படுத்த முடியாது என்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல். மெட்ரோபோலிஸ் படத்தில் காண்பிப்பது போன்று பட்டாளமாக மனிதர்கள் நுகத்தடியில் மாட்டப்பட்டு அவர்களின் உழைப்பில் வெளிப்பாடுதான் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும். அதைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாது உலகத்தில். சக மனிதனை சுரண்டுவது மிகக் கீழ்த்தரமான மனித மனநிலை.

வாசலில் காவலர்கள் சல்யூட் அடித்தார்கள். நானும் திரும்பி வணக்கம் வைத்தேன். அவர்களை  மனிதர்களாக பார்ப்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்று தோன்றியது.

ஆசிரியர் அறைக்குள்  போய் கணினியை இயக்கினேன். இணையம் வேலை செய்யவில்லை. மின்னஞ்சல் பார்த்து விட்டு 9.30க்கு புறப்பட்டேன். வருகைப் பதிவு கோப்புகளை எடுத்துக் கொண்டு வகுப்புக்குப்போனேன். உடனேயே கேள்வித்தாளை வினியோகித்தேன்.

தொடர்ந்து பலகையில் சீன எழுத்துக்களை எழுதிப் பார்க்கும் படி போட்டி. 万岁 எழுத்துக்களை எழுதி ஒவ்வொருவரையும் ஒரு கட்டத்துக்குள் முயற்சிக்கச் சொன்னேன். கடைசியில் பெயர்களைப் பார்க்காமல் நான் எனது மனதுக்குத் தோன்றிய மதிப்பெண்களை கொடுத்தேன்.

முதல் மதிப்பெண் கிடைத்தது. மூன்று பேருக்கு இரண்டாம் மதிப்பெண். பரிசைக் கொடுத்து விட்டு ஒவ்வொருவராக அழைத்து மதிப்பெண்களை விளக்கினேன். 30க்குக் குறைவாக இருப்பவர்களுக்கு பிசினஸ் சைனீஸ் முதல் அத்தியாயத்தை இரண்டு முறை எழுதிக் காட்டும்படியும் அதற்கு மதிப்பெண் கொடுப்பதாகவும் சொன்னேன்.

முடித்து விட்டுக் கீழே வந்தால் முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒட்டு மொத்தமாக கட் அடித்து விட்டார்களாம். வகுப்பு இல்லை. இரண்டாம் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு போய்  அனுப்ப வேண்டிய கடிதத்தை எழுதி முடித்தேன்.

சாப்பிடுவதற்கு ரொட்டி வேண்டாம், 2 கிண்ணம் பாயாசம், சின்னக் கிண்ணங்கள்தான், தயிர் சோறு, காய் வாங்கிக் கொண்டேன்.

2 மணிக்குப் பிறகு புறப்பட்டேன். வெளியில் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. வெயில் அடிக்கவில்லை, படிக்க புத்தகமும் இருந்தது. ஒரு மேஜிக் வண்டி வந்து 10 ரூபாயில் வெளியில் வந்து விட்டேன். 19B குளிர்பதன பேருந்தில் ஏறி சைதாப்பேட்டை. வழியில் இருக்கைகள் நிரம்பி நிற்கும் அளவுக்கு கூட்டம் ஏறி விட்டது. புத்தகம் படித்துக் கொண்டே இருந்தேன். சைதாப்பேட்டையில் இறங்கி, பனகல் மாளிகை முன்பு இறங்கி, சென்ட்ரல் போகும் பேருந்துகள் நிற்கும் இடம் வரை நடந்து பேருந்து பிடித்தேன்.

கணிசமான நேரம் காத்திருந்த பிறகு B18 வந்தது. இருக்க இடம் இல்லை. ஆனால் புதிய பேருந்து, நிற்க கூட்டமில்லாமல் இருந்தது. ஏறிக் கொண்டேன். சென்ட்ரல் போக 13 ரூபாய் சீட்டு. டிவிஎஸ் வந்ததும் உட்கார இடம் கிடைத்தது. சென்ட்ரல் பாலத்தில் நிற்கும் போது இறங்கி நடந்தேன்.

பெரியமேடு போக வேண்டிய இடத்துக்கு அருகில் சாலையைக் கடந்தேன். அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தேநீர் கடைக்கு வந்தேன். ஒரு பால், சொல்லி விட்டு உட்கார்ந்தால் பிரெட் ஆம்லெட் கண்ணில் பட்டது. போடுபவர் ஒரு வட இந்திய இளைஞர். நன்றாக இருந்தது. பாலும் அதுவும் சேர்த்து 20 ரூபாய்.

உட்கார்ந்து கணினியைஇயக்கி இணையத்தில் நுழைய முயற்சித்தேன் சிரம்பபட்டுத்தான் நுழைந்தது. ஸ்வைத்திருக்கும் பிஎஸ்என்எல் இணைப்பு நன்றாக இருக்கிறதாம். அவர் ஐபேட் பயன்படுத்துகிறார். ஒரு தேநீர் கொடுத்தார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு வந்து அழைத்தார். ஒரு காபி கிடைத்தது. செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலைப் படித்தார். சரவணன் எழுதி அனுப்பியது. எதுவும் பெரிய தவறாகக் கிடையாது. ஒவ்வொன்றுக்காக விளக்கம் கொடுத்தேன். பணம் அனுப்புவதற்கான கோரிக்கையையும் வைத்து விட்டேன். நாளை பணிப் பட்டியலையும் பணப் பட்டியலையும் இணைத்து மின்னஞ்சல் அனுப்பி விட வேண்டும்.

அதன் பிறகு டாடா குறித்துக் கேட்டார்.  பெயர்களைச் சொல்லியே பேசிக் கொண்டிருந்தேன். பெரு நிறுவனம் என்பது இருதயம் இல்லாததது. அதில் பணி புரிபவர்கள் அதிகாரம் செலுத்துபவர்கள், முடிவு எடுப்பவர்கள் மனிதத் தன்மை உதிர்க்கப்பட்டவர்கள் என்று வேகமாவே பேசினேன்.

முடித்து விட்டு எழுந்து வெளியில் வந்தால் ஒரு ஆட்டோ டிரைவர் கூப்பிட. பொது மருத்துவமனை  எதிரில் விட 40 ரூபாய் கேட்டார். 30 ரூபாய் என்று சொல்லி உட்கார்ந்தால் சாலையின் இந்தப் பக்கமே விட்டு விட்டார். இறங்கி சாலையைக் கடந்து நடந்து வந்து சேர்ந்தேன். கேகேநகர், அய்யப்பன்தாங்கல் பேருந்துகள் நிற்கும் இடம். கோயம்பேடு போகும் பேருந்தை நிறுத்த முயன்றவர்களிடம் விபரம் சொல்லி அந்தப் பக்கம் அனுப்பினேன்.

காலியாக இருந்த இருக்கையில் உட்கார தயங்கிய கைக்குழந்தையுடன் நின்றிருந்த பெண் நான் உட்கார்ந்ததும் மறுமுனையில் உட்கார்ந்து கொண்டார். 11Gயில் ஏற்றி விடும்படி கேட்டார் ஒரு பெண். ஏற்றி விடப்பட வேண்டியவர் கண் பார்வை சரியில்லாதவர். இவர் வேறு எங்கோ போக வேண்டும். சிறிது விவாதத்துக்குப் பிறகு நானே ஏற்றி விட்டுப் போகிறேன் என்று முடிவு செய்து விட்டார்.

நானும் அதே பேருந்தில் ஏறிக் கொண்டேன். நெசப்பாக்கத்தில் இறங்கிக் கொள்ளலாம். கூட்டம் அதிகமில்லை. உயரமான இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். அதிகாலையின் அமைதியில் படித்துக் கொண்டிருந்தேன்.

இறங்கி எதிரில் இருந்தா பனாமா கிச்சன் என்ற உணவு விடுதிக்குள் போனேன். மங்கோலிய முகத்தோற்றத்துடன் நான்கு பெண்கள், சிறு பெண்களும் உண்டு. ஒரு ஆண் அவர்களின் கங்காணியாக இருக்க வேண்டும்.

சாப்பிட்டு முடித்து வெளியில் வந்து நடந்து வீடு வந்து சேர்ந்தேன். பகவத்கீதை புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மீண்டும் அதிகாலையின் அமைதியில். படிக்கப் படிக்கத் திகட்டாத படைப்பு. இதுதான் உண்மையான கலைப்படைப்பு. காடு போன்ற அரை போர்னோ கதைகள் இல்லை.

இதை முடித்து விட்டு உலாவப் போக வேண்டும். திரும்பி வந்து துணிகளை எடுத்து வைத்து விட்டு வீட்டை ஒதுக்கிக் குளிக்க வேண்டும். காலை உணவு. மதிய வாக்கில் வேலூர் புறப்பட்டு விடலாம்.

புதன், ஜூன் 30, 2010

கற்றதும் கற்பித்தலும்

ஜூன் மாதம் 30ம் தேதி, காலை 5.10. நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தது, 45 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. 3 மணிக்கு விழிப்பு வந்தது. திரும்பப் படுத்து அடுத்த முறை விழிப்பு வந்த போது எழுந்து பார்த்தால் 4.45 ஆகியிருந்தது. கண்கள் எரிச்சல், கால்கள் உளைச்சல். திரும்பவும் படுக்கைக்கு அனுப்பும் அறிகுறிகள். பழக்கத்தை உடைக்கவும் சரி, உருவாக்கவும் சரி நிறைய மன உறுதி தேவையாக இருக்கிறது.

நேற்றைக்கு கிட்டத்தட்ட வெற்றிகரமாகவே கழிந்தது. காலையில் 4 மணிக்கு எழுந்து கொண்டேன். பல் தேய்த்து தயாராவதற்கு 4.35 ஆகி விட்டிருந்தது. அடுத்த 1 மணி நேரம் எழுத்து. அதைத் தொடர்ந்து வீட்டை ஒதுங்க வைக்க ஆரம்பித்தேன். துவைத்த துணிகள், படித்த நாளிதழ் பக்கங்கள், பயன்படுத்திய பாத்திரங்கள் எல்லாவற்றையும் மடித்து, ஒதுங்க வைத்து அதனதன் இடங்களில் வைத்தேன். சமையலறை பொருட்கள் வைக்கும் தட்டுகளில் தாள் விரிப்புகளை மாற்ற வேண்டும். ஒவ்வொரு டப்பாவாக பாட்டிலாக எடுத்து கீழே வைத்து விரித்திருந்த செய்தித்தாளை அகற்றி, தூசி தட்டி, வேறு தாளை விரித்து, டப்பாக்களை துடைத்து வரிசையாக அடுக்கி வைத்தேன்.

ஒரு பிளாஸ்டில் அடுக்கில் கரண்டிகள் ஒரு தட்டில், சமையல் கருவிகள் இன்னொரு தட்டில், உருளைக்கிழங்கு, வெங்காயம் மூன்றாவது தட்டில் வைப்பது வழக்கம். இரண்டு நாட்கள் முன்பு வாங்கி வந்திருந்த கீரையை அதிலேயே வைத்து அது அழுகிப் போயிருந்தது. அதையும், பல மாதங்களுக்கு முன்பு வாங்கிய வெல்லத்தையும், ஆர்லிக்சு பாட்டிலில் இருந்த சர்க்கரையையும் குப்பையில் கொட்டினேன். பிளாஸ்டிக் அடுக்கிலும் நாளிதழ் விரிப்புகளை மாற்றி காய்கறிகளை கீழ்த் தட்டுக்கும் கருவிகளை மேல் தட்டுக்கும், நடுவில் உள்ள தட்டில் அகப்பைகளையும் போட்டு வைத்தேன். சமையல் மேடையையும் துடைத்துக் கீழே தள்ளி விட்டு தரை பெருக்க ஆரம்பித்தேன்.

தினமும் பெருக்கினாலும் கணிசமான அளவு குப்பையும் தூசியும் சேர்ந்துதான் விடுகின்றன. இவ்வளவுக்கும் ஒரே ஒரு ஆள் புழங்கும் நாட்கள்தான். வெளியிலிருந்து காற்றில் அடிக்கப்பட்டு வரும் தூசி. சுவர்கள், மற்ற பொருட்களை தூசி தட்டும் போது கீழே விழும் தும்புகள் என்று சேர்கின்றன. சமையலறையில் கொஞ்சம் உணவுப் பொடிகள் இருக்கலாம். குப்பைத் தொட்டியில் விரிப்பதற்கு பிளாஸ்டிக் பைகள் இல்லை. கடைக்குப் போகும் போதெல்லாம் கையில் ஒரு பையையும் எடுத்துப் போய், பிளாஸ்டிக் பைகளை மறுதலித்து விடுவதால் பிளாஸ்டிக் பைகள் அதிகம் சேர்வது இல்லை.

சன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த கொசு வலைகளில் தூசி படிந்து போயிருந்தது. சன்னலை மூடி வைத்த பகுதியில் வெளிர் மஞ்சள் நிறத்திலும், திறந்து வைத்த பகுதியில் கறுப்பாகவும் மாறி விட்டிருந்தன. அவற்றை பிடுங்கி குளியலறைக்குள் போட்டேன். தண்ணீரில் அலசி காய வைத்து மறுபடி மாட்ட வேண்டும். இதெல்லாம் செய்வதற்குள் நேரம் ஓஓடி விட்டிருந்தது. 1 மணி நேரத்துக்குள் வீட்டை தூய்மை செய்வதை முடித்து விட்டு உலாவப் போக வேண்டும் என்பது நடக்கவில்லை. தொடர்ந்து கொசு வலைகளை கழுவி வெளியில் மாட்டி விட்டு தரை துடைக்க ஆரம்பித்தேன்.

தரை துடைக்க ஃபினாயில் 5 மூடிகள் ஊற்றி ஒரு வாளியில் இரண்டு மக் தண்ணீரில் துடைக்கும் நீர்மத்தை வைத்துக் கொண்டு இன்னொரு வாளியில் நிரம்பும் வரை தண்ணீர் பிடித்து துடைத்த துணியை அலசும் பாத்திரமாக பயன்படுத்துவது சரியாக இருக்கிறது. முந்தைய நாள் வந்த குழந்தைகளில் யாரோ காலையில் நாளிதழ் வாங்கும் போது கிடைத்திருந்த கேண்டிமேன் மிட்டாயைத் தின்று பாதியில் துப்பி, தரையெல்லாம் அப்பியிருந்தது. துடைக்கும் போது போய் விடுமா அல்லது கரையாக படிந்து விடுமா என்று சந்தேகம். துடைத்ததும் போய் விட்டது.

மேசையின் மீது வைத்திருந்த காசு 9 ரூபாய்கள் மட்டும் இருந்தன. திங்கள் கிழமை காலையில் 100 ரூபாயை பகிர்வூர்தி காரரிடம் கொடுத்து மாற்றியதில் எட்டு 10 ரூபாய் நோட்டுகளும், 3 ரூபாய் சில்லறையும் இருந்தன. ரயில் சீட்டு வாங்க ஒரு பத்து ரூபாய் நோட்டை மாற்றி, 5 ரூபாய் சில்லறை கிடைத்தது. கிண்டியில் நாளிதழ் வாங்க 3 ரூபாய் சில்லறை தீர்ந்தது. பேருந்தில் சீட்டு வாங்க 5 ரூபாயைக் கொடுத்து 2 ரூபாய் சில்லறை கிடைத்தது.

மாவு வாங்க 22 ரூபாய் - இரண்டு 10 ரூபாய்களும், 2 ரூபாய் சில்லறையும் சரியாக இருந்தது. இப்போது 50 ரூபாய் கையில் இருக்க வேண்டும். பால் வாங்கப் போகும் போது 10 ரூபாய் நோட்டுகளை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு போனேன். வழியில் எண்ணி எண்ணிப் பார்த்ததில் 5 நோட்டுகள் இருந்தன. கடைக்குப் போய் 11 ரூபாய் பாலுக்கு இரண்டு 10 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து சில்லறை வாங்கிக் கொண்டேன், 9 ரூபாய் சில்லறை. அந்த சில்லறை மட்டும் இருக்கிறது. 30 ரூபாய்க்கான மூன்று 10 ரூபாய்களைக் காணவில்லை. கடையில் பால் வாங்கும் போது மேசையில் வைத்து விட்டு வந்து விட்டேனோ? சாத்தியம் மிகவும் குறைவு, எனது கையும், கண்ணும் ஏமாற்றியிருந்தாலும், கடைக்காரர் கூப்பிட்டுக் கொடுத்திருக்கலாம். வீட்டில் மேசையிலிருந்து யாராவது எடுத்திருப்பார்களோ? யாரைப் போய் கேட்க?

இப்படி இரண்டு நாட்களில் மூன்று இடங்களில் 240 ரூபாய் ஏமாந்திருக்கிறேன்.

முதலில் செல்பேசி சரி செய்யும் கடையில் கொண்டு கொடுத்தால் '1 மணி நேரத்தில் சரி செய்கிறேன், அதை மாற்ற வேண்டியிருக்கும், இதை மாற்ற வேண்டியிருக்கும்' என்று சொல்லி 200 ரூபாய் வாங்கிக் கொண்டார். அதன் பிறகும் செல்பேசியைப் பயன்படுத்த முடியவில்லை. வேறு ஏதோ imei எண் போய் விட்டது அதை அமைக்க இன்னும் 150 ரூபாய் வேண்டும் என்று கேட்டதும் கொஞ்சம் வாக்குவாதம் செய்து விட்டு கருவியை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். 200 ரூபாய் கூட சும்மா வைத்துக் கொண்டிருந்து விட்டுத் தண்ணீரைத் துடைத்துக் கொடுத்து விட்டதாகத் தோன்றியது. அப்படிச் செய்யும் போது imei எண்ணையும் நீக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறானோ அந்தப் பையன். மிகப் பெரிய ஏமாற்றமாக உணர்ந்த நிகழ்வு.

யாரையும் கண்மூடித்தனமாக நம்ப முடியாது. 1 மணி நேரத்தில் சரி செய்கிறேன் என்று சொல்லியிருந்தால் உட்கார்ந்து பார்த்து வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக திங்கள் கிழமை காலை தாம்பரத்தில் பகிர்வூர்தி ஓட்டுனர் சில்லறை கொடுக்கும் சாக்கில் 20 ரூபாய் வசூலித்துக் கொண்டது. இதுவாவது நான் உணர்ந்து என் அறிவில் நடந்தது. சூழ்நிலைக்கு ஏற்றபடி தயாரிப்புடன் எதையும் செய்ய வேண்டும். கையில் சில்லறை இல்லாத நிலைமையைத்தானே அவர் பயன்படுத்திக் கொண்டார். இனிமேல் அத்தகையை நிலைகளில் நிற்கக் கூடாது.

மூன்றாவதாக 30 ரூபாய் தொலைந்தது. இது எனது கவனக் குறைவால், போயிருக்கிறது. பணத்தை மிகவும் கவனமாக ஒரே இடத்தில் வைத்து எடுக்க வேண்டும். பயன்படுத்த வேண்டும். பொதுவான இடங்களில் வைத்து தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

உலாவப் போவதை மட்டும் ரத்து செய்து கொண்டேன். குளித்து விட்டு கடைக்குப் போய் வந்தேன். திருவள்ளுவர் சாலைக்கே சென்று விட்டேன். டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ், ஆவின் பால் அரை லிட்டர், புளி 100 கிராம், பூண்டு 50 கிராம், புளியோதரைப் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி 50 கிராம் பொதிகள். 2+11+5+6+10+10=44 ரூபாய்கள். நூறு ரூபாய் தாளை மாற்றி மீதியைக் கொடுத்து விட்டார்.

வீட்டிற்குள் வரும் போது வெளியில் குழாயில் குடிக்கும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை காலையில் வராமல் மாலையில்தான் விட்டார்கள். அதனால் இன்றைக்குக் காலையில் வருமா அல்லது அடுத்த நாள்தானா என்று ஒரு நிச்சயமற்ற நிலைமை. இன்றைக்கே விட்டிருந்தார்கள். எதிர்வீட்டு அம்மா குடத்தில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். காவலர் வீட்டின் முன்பிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். என்னைக் கூப்பிடப் போயிருந்திருப்பார். ஞாயிற்றுக் கிழமை பிடித்த தண்ணீரே வாளியிலும் குடத்திலும் இருந்தது.

வீட்டுக்குள் போய் வாங்கி வந்திருந்த பொருட்களை டப்பாக்களில் தட்டி விட்டு, வாளித் தண்ணீரை கொதிக்க வைக்கும் பாத்திரங்களில் ஊற்றி விட்டு போய் ஒரு வாளி நிரப்பிக் கொண்டு வந்தேன். காலை உணவுக்கு உப்புமா செய்வதாக முடிவு செய்து அரை வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் வெட்டி வைத்துக் கொண்டேன். பாலை அடுப்பில் வைத்து குறைந்த அனலில் அமைத்து விட்டு தியானம் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டும் போயிருந்திருக்கும், எழுந்து விட்டிருந்தேன்.

பாலை இறக்கி குடிக்க எடுத்து விட்டு, ரவை வறுக்க ஆரம்பித்தேன். தேங்காயும் கீறி வைத்திருந்தேன். ரவையை வறுக்க சின்ன சட்டி, உப்புமா செய்ய பெரிய சட்டி. வறுத்து கீழே இறக்கிய பிறகு பெரிய சட்டியை வைத்து எண்ணைய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து அவை எண்ணையில் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய்த் துண்டுகளைப் போட்டு வதக்கி, எடுத்திருந்த 2 உழக்கு ரவை வேகுவதற்கு மூன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன். ஒரு கரண்டி உப்பும் சேர்த்துக் கொதிக்க விட்டேன். கொதித்த பிறகு ரவையைச் சேர்த்து கிண்டினால் உப்புமா தயார்.

பாலைக் குடித்துக் கொண்டே முறுக்குகளில் ஒன்றிரண்டை உள்ளே தள்ளினேன். டெக்கான் குரோனிக்கிளில் கால்பந்து விளையாட்டுச் செய்திகள், நடுப்பக்கத்தில் காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவின் பேட்டி, மூன்றாவது பொருளாதார முடக்கம் (third great depression) என்ற பால் குரூக்மேனில் பத்தி, ஜயதி கோஷ் என்பவரின் எரிபொருள் விலை உயர்வு குறித்த கட்டுரை என்று நிறையவே படிக்க ஆர்வமான கட்டுரைகள்.

சாப்பிட்டு விட்டுக் கணினியை இயக்கினேன். ஜாவாஸ்கிரிப்டு, Jquery படித்து அதை செயல்படுத்த வேண்டும்.

முதலில் எழுதி வைத்து பதியாமல் இருந்த பதிவுகளை எல்லாம் ஒரு மூச்சாக சேர்த்து விட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அதில் ஓடியது.

அதன் பிறகு இணையத்தில் தேடி jquery பற்றிய கற்பித்தல் படக்காட்சி அல்லது இலவச புத்தகங்களை கண்டு கொள்ள முயற்சித்தேன். படக்காட்சியில் 12 வயதான ஒரு சிறுவன் கூகுள் நுட்ப உரையில் பேசியது கிடைத்தது. அது கொஞ்ச நேரம் பார்த்து விட்டு மூடி விட்டேன். தேடித் தேடி jqueryஐ விளக்கும் புத்தகத்தின் பிடிஎஃப் கோப்பை கோப்பு பகிர்ந்து கொள்ளும் தளம் ஒன்றில் பிடித்தேன். கடையில் வாங்கினால் 500 ரூபாயிலிருந்து செலவாகலாம். இப்போது அந்தக் கோப்பை தகவிறக்கி படிக்க ஆரம்பித்தேன்.

நாள் முழுவதும் அந்தப் புத்தகத்தைப் படித்து எப்படி jquery மூலம் வலைஉலாவியில் பயன்பாடுகளை எளிதாக உருவாக்கலாம் என்று தெரிந்து கொண்டேன். இடையிடையே மடல்கள், கூகுள் பஸ்சில் செய்திகள் எட்டிப் பார்த்துக் கொண்டேன். பெரும்பாலும் நேரத்தில் படிப்பதிலிருந்து விலகவில்லை.

மதிய உணவுக்கு சோறு அழுத்தக் கலனில் வைத்து விட்டு, வாங்கி குளிர் பெட்டியில் வைத்திருந்த பாகற்காயை வெட்டி, காலையில் வைத்திருந்த அரை வெங்காயத்தையும் வெட்டி பொரியல் செய்ய தயாரித்துக் கொண்டேன். 'பொரியல் செய்கிறேன் பேர்வழி என்று காய்களை சட்டியில் கருக வைத்து சாப்பிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது' என்று அண்ணன் சொல்லியிருக்கிறான். முறுகலான உணவுகளில் சத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடுகிறது என்பது அதிலிருந்துதான் பதிந்தது.

போதுமான அளவு எண்ணெய் சேர்த்து, தீயை தாழ் நிலையில் வைத்து சட்டியில் கிளறிக் கொண்டே இருந்தால் கரிந்து விடாமல் பொரியல் தயாராகி விட்டது. சனிக் கிழமை கத்தரிக்காய் பொரியல் இப்படி செய்ய முடிந்தது, இப்போது பாகற்காய் பொரியலும்.

ஊற்றிக் கொள்வதற்கு ரசம் அல்லது சாம்பார் வைக்கவில்லை. புளியோதரைப் பொடி, தயிர் என்று சாப்பிட்டுக் கொண்டேன். தயிரும் பாலில் உறை ஊத்தியது உறைந்திருக்கவில்லை. உறைக்காக வாங்கிய தயிர் டப்பாவில் மீந்திருந்ததை ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டேன். மதியத்துக்கு மேலும் jquery விபரங்கள் தொடர்ந்தன. சோறு வடித்த கஞ்சி மாலையில் குடிப்பதற்கு. அதிகமாக செய்து வைத்திருந்த பாகற்காய் பொரியலுடன் இரவு உணவுக்கு சப்பாத்தி செய்து கொள்ளலாம் என்று முடிவு.

மாலையில், இரவு உணவுக்காக சப்பாத்தி மாவு பிசைந்து வைத்து விட்டுக் கணினியில் வேலையைத் தொடர்ந்தேன். போய் சப்பாத்திகளாக விரித்து விட்டு, 5 சப்பாத்திகள் போக மீதிமாவை குளிர் பெட்டியில் வைத்து விட்டு உட்கார்ந்தேன். ஏழரை தாண்டி விட்டிருந்தது.

சட்டையை மாட்டி விட்டு வெளியில் 20 நிமிடம் உலாவி விட்டுத் திரும்பும் போது வீட்டில் மின் தடை ஏற்பட்டிருந்தது. மின் அலுவலகம் அருகில் போகும் போது ஏதோ பெரிய சத்தமும் ஒரு வெளிச்ச மின்னலும் கேட்டது. அது நம்ம வீட்டுப் பக்க இணைப்புகளைத்தான் தூக்கிப் போட்டிருக்கிறது என்று புரிந்தது.

இணையக் கருவியை அணைத்து எனது கணினியையும் அணைத்து வைத்தேன். அவரது கணினி மின் வெட்டில் அணைந்து போயிருந்தது. மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, எதிர்பார்த்திருந்தால் மின்சாரம் இணைக்கப்பட்டது. புத்தகம் ஒன்றுடன் வெளியில் நாற்காலி கொண்டு போய் உட்கார்ந்தேன்.

ஞாயிறு, பிப்ரவரி 22, 2009

ஊற்றுக்கண்

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. ஏதேதோ காரணங்களால் எழுதுவது நின்று போயிருக்கிறது. முக்கியமாக தொற்றிக் கொண்டு விட்ட சோம்பலும், தூக்கக் கோளாறுகளும்தான்.

போன ஒரு மாதத்தில் படித்த புத்தகங்கள், நேருவின் Glimpses of World History, அயன் ராண்டின் The Fountainhead, இர்விங் வாலசின் The Chapman Report, தாமஸ் கெனீலியின் Schinler's list. எண்ணக் குவியல்களை ஒரு கலக்கு கலக்கி புரட்டிப் போட்டு விட்ட படைப்புகள்.

நேருவின் வரலாற்றுப் புத்தகத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்திருந்தும் படிக்க முயற்சித்து விட்டு விட்டிருந்தேன். அதுவும் பல இடங்களுக்கு பயணித்து பெங்களூரில் போய்ச் சேர்ந்திருந்தது. இப்போதைய புதிய பார்வையில் படிக்க முடியலாம் என்று படிக்க முடிந்தது.

அயன் ராண்டின் கதையை படிப்பது எத்தனையாவது முறை என்ற கணக்கு தொலைந்து போய் விட்டிருக்கிறது. முதல் முதலில் சென்னை அமெரிக்க நூலகத்தில் படித்தது - கல்லூரியில் படிக்கும் போது. அதன் பிறகு வேலையில் சேர்ந்து சொந்தமாக வாங்கிய புத்தகம், இந்தூரில் ரூபயானா புத்தகக் கடையில் வாங்கியது என்று நினைவு. அதுவும் அங்கிருந்து இந்தூர், சென்னை, திருப்பத்தூர், சாங்காய், தில்லி, திரும்பவும் சென்னையில் பல வீடு மாற்றங்களை தாக்குப்பிடித்து கடைசியாக எல்லா புத்தகங்களையும் அலுவலகத்துக்குக் கொண்டு போகும் முயற்சியில் அலுவகத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ரோர்க் குறித்து பேசும் போது அதை மறுபடியும் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல். மாலையில் வீட்டுக்கு வந்தால் செய்வதற்கு ஒரு வேலை கிடைத்திருந்தது. ஹோவார்டு ரோர்கும், டொமினிக்கும், தூஹியும் புதைந்து கவனத்திலிருந்து விலகிப் போயிருந்த பல உணர்வுகளை, கருத்துக்களை உயிர் பெற வைத்தார்கள்.

அதற்கிடையில் ஏதோ நேரத்தில் இர்விங் வாலசின் கதை. அவரது தகுதியும் தொழிலும் அப்படியா என்று தெரியவில்லை. அவரது எல்லா கதைகளிலும் ஆண் பெண் உறவின் உடலியல் பற்றி நுணுக்கமான விபரங்கள் ஊடுருவி நிற்கும். இதுவும் விதி விலக்கில்லை. சொரிந்து சொரிந்து சுகம் காணும் சிரங்கு பிடித்தவனின் அரிப்பைப் போல ஆண் பெண் உறவின் கோணல்களை தேடிக் கண்டுபிடித்து வெளிச்சம் போடும் போக்கு அவரது.

Schindler's list ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் திரைப்படமாக ஆஸ்கர் விருது பெற்ற ஆண்டில் வாங்கியது. அதன் முதல் அத்தியாயத்தைத் தாண்டி படிக்க முடியாமல் மெல்ல விலகி விட்டிருந்தேன்.

இந்த 10 நாட்களிலும் மற்ற எல்லா ஒழுக்கங்களையும் தள்ளி வைத்து விட்டிருந்தேன். எப்போது தூங்கினேன், எப்போது சாப்பிட்டேன், எப்போது குளித்தேன், எப்படி வாழ்ந்தேன் எல்லாமே வெளி தாக்கங்களுக்கு உட்பட்டுப் போய்க் கொண்டிருந்தது. என்னுடைய உந்து சக்தி இந்தப் புத்தகங்கள் இழுத்த இழுப்புக்குப் போய்க் கொண்டிருந்தது.

இன்று இதோ Schindler's List படித்து முடித்தாகி விட்டது. இதற்கு முன்பும் ஹோலகாஸ்டு தழுவிய கதைகளைப் படித்திருக்கிறேன். முகாம்களில் குவிக்கப்பட்டு வதைபடுவது, விலங்குகள் போல நடத்தப்படுவது, கூட்டம் கூட்டமாக கொல்லப்படுவது என்று நம்ப முடியாத கதைகள் போல படித்துப் போயிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் முதல் முறையாக நடந்ததைப் பார்த்த அனுபவித்த சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். நாவலின் எந்த நிகழ்ச்சியும் கற்பனை இல்லை என்று ஆசிரியர் சொல்கிறார். கதை சொல்லிப் போகும் போது இடையிடையே எவ்வளவு உண்மையில் நடந்திருக்கும் என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளையும் அலச முற்படுகிறார்.

கடந்த 100 ஆண்டுகளுக்குள் மனித வரலாற்றில் இப்படி ஒன்று நடந்திருக்கிறது என்பதை நம்மில் பலர் தெரியாமலேயே இருந்திருக்கலாம். நமது பள்ளியில் வரலாற்றுப் பாடத்தில் கூட இரண்டாவது உலகப் போரின் போது செருமனியின் ஆதிக்கத்தில் யூதர்கள் கொன்றொழிக்கப்பட்டதைக் குறித்து கற்றுக் கொடுக்கவே இல்லை. நாமாக புத்தகங்களில் படித்து வெளிநாட்டு வரலாற்று ஏடுகளில் தெரிந்து கொண்டவைதான்.

அதனால்தால் பாசிச முறைகள் நமக்கு கோபத்தையும் கண்டனத்தையும் போதுமான அளவு ஏற்படுத்தி விடுவதில்லை. திமுகவின் அழகிரியில் ஆரம்பித்து, அதிமுகவின் ஊருக்கு ஊர் இருக்கும் குண்டர்கள், சிங்களர்களின் ஆதிக்கம், தாம் அனுபவித்த துன்பத்தை மற்றவர்கள் மீதும் சுமத்த முயலும் இன்றைய இசுரேலிய யூத அரசாங்கம், அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ் ஆட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகள் என்று நமது ஞாபக சக்தி குறைந்த காலத்துக்குத்தான் நீடிக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

இன்றைக்குக் காலையில் ஏழே கால் மணிக்கு அப்பாவும் அம்மாவும் ரயிலில் பெங்களூருக்குப் புறப்பட்டார்கள். ஐந்தரை மணிக்கு வண்டி வரச் சொல்லியிருந்தோம். ஆறே காலுக்கெல்லாம் நிலையம் போய்ச் சேர்ந்து விட்டோம். இரவுக் கட்டணம் என்று 310 ரூபாய் ஆகியிருந்தது. ஆற்காடு சாலைப் பகுதியில் சாலைகளைத் தோண்டிப் போட்டிருக்கிறார்கள் என்று காரணம் சொல்லி கிண்டி வழியாக சுற்றி வேறு அழைத்துப் போனார். காலை வேளையில் காரில் போவது நன்றாகத்தான் இருந்தது.

அவர்களை ரயிலில் ஏற்றி விட்டு விட்டு சரவணபவனில் ஒரு மினி டிபனும், ஒரு மினி காபியும். மினி டிபன் 50 ரூபாய்கள் - குட்டி இட்லிகள் சாம்பாரில் மிதந்த படி, குட்டியாக உருளைக்கிழங்கு வைத்த தோசை ஒன்று, ஒரு சின்ன கரண்டி அளவு பொங்கல், ஒரு சின்னக் கரண்டி அளவு கேசரி. அதில் காபியும் உண்டா என்று கேட்காமல் காசைக் கொடுத்து கீழே வந்து காபி குடித்துக் கொண்டேன்.

சாலையைக் கடந்து பொது மருத்துவமனைக்கு முன்பு பேருந்து பிடித்து போரூர். பேருந்து சாலை நிறுத்தத்தைத் தாண்டி பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டார்கள். அங்கிருந்து அலுவகம். இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

பதினொன்றரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து இருந்த பிஸ்கெட்டுகளையும், உருளைக்கிழங்கு வறுவலையும் சாப்பிட்டு விட்டு எகனாமிக் டைம்ஸ், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படித்துக் கொண்டும் தூங்கிக் கொண்டும் நாள் ஓடியது. மதிய உணவுக்கு வெளியில் போகவோ, எதுவும் சமைக்கவோ தோன்றவில்லை. களைப்பு தீர நன்கு தூங்கி எழுந்து குளித்து விட்டு எழுத உட்கார்ந்து விட்டேன்.

நேற்று இரவு 2 மணிக்கு விழிப்பு வந்தது. காலையில் 6 மணிக்கெல்லாம் முந்தைய இரவு செய்து மீந்திருந்த சப்பாத்தி, கொஞ்சம் ஓட்சு காய்ச்சியது என்று சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்குப் போனேன். தாமதமாக ஆறரை மணி தாண்டிதான் போய்ச் சேர்ந்தேன். 8 மணி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கேரளா விடுதிக்குப் போய் 3 பூரிகள் சாப்பிட்டு விட்டு வந்தோம். 10 மணி வரை கூட்டம் நடந்தது. அதன் பிறகு கல்லூரி பயிற்சி மாணவர்களின் பணியை சரி பார்த்து அடுத்தக் கட்ட திட்டங்களை சொன்னேன். மதியம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பி கேகே நகர். அப்பாவும் அம்மாவும் சித்தப்பா வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார்கள்.

நீலகிரீஸ் கடையில் கேக்குகள் வாங்கிக் கொண்டு 11Hல் கே கே நகரில் இறங்கினேன். மதிய தூக்கக் கலக்கத்தில் இருந்தார்கள், ஆத்தாவும், சித்தப்பாவும், சித்தியும். கேட்டு ஒரு கலக்குக் கலக்கினார்கள், அதைத் தொடர்ந்து மாமியார் மருமகள் விவாதங்கள், என்று போய் புத்தகம் படிக்கும் பழக்கம் குறித்து விவரணை முடிந்து சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அத்தை வீட்டுக்குப் போன அம்மா அப்பாவும் திரும்பினார்கள்.

சாப்பிடுவதற்கு நான் வாங்கிப் போயிருந்த கேக்கு, ஒரு சோன்பப்டி துண்டு, ஒரு பஃப்ஸ், தொடர்ந்து ஒரு டம்ளர் தேநீர். கிளம்பும் போது ஆத்தா கூப்பிட்டு ஆசீர்வதித்து அனுப்பினாள். பிள்ளையார் கோவில் அருகில் பேருந்து பிடித்து லிபர்டி நிறுத்தத்தில் இறங்கினோம். மாமாவும் அத்தையும் வீட்டில் இல்லையாம், காத்திருந்து அரை மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் வீடு. அங்கு ஒரு தேநீர்.

வெளியில் இறங்கி 100 ரூபாய்க்கு ஒரு ஆட்டோ பிடித்து ராமாபுரம். அரிசி, பிஸ்கட்டு கடையில் வாங்கிக் கொண்டு வந்து பயறு சேர்த்த கஞ்சிக்கு வைத்து விட்டு வெளியில் குழந்தைகளுடன் விளையாட்டு. கஞ்சிக்குத் தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு வறுவல் வேண்டும் என்று கடைக்குப் போய் வாங்கி வந்தேன். வீட்டில் இருந்த முறுக்குகள், பிஸ்கட்டுகள், கஞ்சி, உருளைக் கிழங்கு வறுவல் என்று நிறையச் சாப்பிட்டதன் விளைவாக இரவில் தூக்கம் தடைப்பட்டு எழுந்து படித்துக் கொண்டிருந்தேன்.

வெள்ளிக் கிழமை அலுவலகத்தில். மதியத்துக்கு மேல் அப்பாவும் அம்மாவும் தாம்பரத்திலிருந்து வந்து விட 4 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். புதன் கிழமை ராணிப்பேட்டைக்குப் போய் பார்க்க முடியாமல், வாய்ப்பு கிடைக்காமல் வேறு எங்கும் போக முடியாமல் கடைசியில் போய்ப் பார்த்தேன். அவருடன் காரில் சென்னை திரும்பி விட்டேன். பூந்தமல்லியில் பேருந்து பிடித்து அலுவலகம் திரும்பி விட்டேன்.

இதை முடித்து விட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.

நாளைக்கு ராணிப்பேட்டைக்குப் போகலாம் என்று திட்டமிட்டிருக்கிறார். பல வாய்ப்புகளை பின்பற்றிப் போக வேண்டும்.

கொஞ்சம் ஒழுங்குகளை திட்டமிட்டுக் கொள்ளலாம். தினமும் காலையில் 6 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 4 மணிக்கு எழுந்து விட வேண்டும். காலைக்கடன்களை முடித்து விட்டு, முகம் மழித்து, குளித்து விட்டு ஐந்தே காலுக்கும் ஐந்தரைக்கும் இடையில் வீட்டிலிருந்து கிளம்பி விட வேண்டும். ஆறு மணிக்கு முன்பு அலுவலகத்தைத் திறந்து மின்னஞ்சல்கள், இணைய வேலைகளை ஆரம்பித்து நாளுக்கான பணிகளை செய்ய வேண்டும்.

எட்டரை மணிக்குக் காலை உணவு. ஒன்பது மணிக்கு வேலைக்குத் திரும்ப வேண்டும். பதினொரு மணிக்கு காலை தேநீர், பதினொன்றரைக்குத் திரும்பி விட வேண்டும். ஒரு மணிக்கு மதிய உணவு. ஒன்றரை மணிக்கு பணி ஆரம்பித்து விட வேண்டும். 4 மணி வரை வேலை செய்து விட்டு வீட்டுக்குப் புறப்பட வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும், தரை தூத்து, பாத்திரங்கள் கழுவி, தரை துடைக்க வேண்டும். துணி துவைக்க சேர்ந்திருந்தால் துவைக்க வேண்டும், இல்லை என்றால் ஒரு அறையை ஒதுங்க வைக்க வேண்டும். இதற்கெல்லாம் சேர்த்து ஒரு மணி நேரம் ஆகி விடும். குளித்து முடிக்க ஒன்றரை மணி நேரம். 6 மணிக்கு இந்த வேலைகளை முடித்து விட்டு மாலை உணவு தயாரிக்க வேண்டும். சாப்பிட்டு விட்டு 7 மணி முதல் 8 மணி வரை எழுத்து, 8 மணி முதல் 10 மணி வரை புத்தகப் படிப்பு. 10 மணிக்குத் தூங்கப் போய் விட வேண்டும்.

அலுவலக நேரம் மாறியதால் நமது வாழ்க்கை நெறிகள் எல்லாமே குலைந்து போய் விடுவது எப்படி நியாயமாகும்? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வீட்டில் படிந்திருக்கும் தூசியைப் பார்த்து நொந்து போய் விட்டது. தரையை மட்டும் எப்படியோ தூத்து துடைத்து விடுகிறேன். பாத்திரங்கள் மீதும் மற்ற பொருட்கள் மீதும் படிந்திருக்கும் அழுக்கும் தூசியும் பொறுக்க முடியாமல்தான் இருக்கின்றன.

வெளியில் குழந்தைகளின் விளையாட்டு. ஏதோ அங்கிளைச் சேர்த்துக் கொண்டு கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆறு மணி தாண்டி விட்டிருக்கிறது. அயன் ராண்டின் fountainhead போல தமிழில் எழுத வேண்டும் என்று ஒரு திட்டம். திட்டங்கள் பல போடப்படுகின்றன.

ரோர்க் என்ற ஆதர்ச மனிதனைச் சுற்றி வருதைப் போல மணி மொழி என்ற ஆதர்ச பெண் நாயகியாக இருக்க வேண்டும். இன்றைய தொலைக்காட்சித் தொடர்களின் பாணியில் பெண்களின் உலகம்தான் பொருத்தமாக இருக்கும்.

தகவல் தொழில் நுட்பத் துறை - கட்டிடக் கலை
ஹோவார்டு ரோர்க் - மணிமொழி
பீட்டர் கீட்டிங் - கவிதா
எல்ஸ்வொர்த் டூஹி - ரீட்டா
கய் பிராங்கன் - பிரமீளா
டொமினிக் - வேணுகோபால்
வைனான்ட் - வசந்தா

ஸ்டான்டன் இன்ஸ்டிடுயூட் ஆஃப் டெக்னாலஜி - திருநெல்வேலி பொறியியல் கல்லூரி
நியூயார்க் - சென்னை
கனாட்டிகட் - தருமபுரி

புதன், ஜனவரி 07, 2009

சுவடுகள்

மாய உலகம் போல இருக்கும். மார்கழி மாதக் காலையில். பல நாட்களுக்குப் பிறகு வானத்தை மேக மூட்டம் மறைத்திருக்கிறது. எட்டு மணி ஆகியும் அதிகாலை ஆறு மணி போன்ற சூழல். வாலாஜா போவதற்கு ஆரணி பேருந்தில். இந்த கால நிலையில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கூட குறைவாகத்தான் இருக்கிறது. காற்றில் மழை பெய்வதற்கான வாடையே தெரியவில்லை. பேருந்தில் பாதி இருக்கைகள் நிரம்பியிருக்கின்றன.

சரக்கு போக்குவரத்து வண்டிகளின் வேலை நிறுத்தத்தால் சாலையில் போக்குவரத்தும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. பேருந்துக்குள் திரைப்படப்பாடல்கள். ரஜினிகாந்த் திரைப்படப் பாடல்கள் தொகுப்பு போலிருக்கிறது.

காலையில் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தேன். நான்கு மணி தாண்டி நாலேகால் எழுந்திருந்தேன். எழுதுவதை கை விட வேண்டும். நேருவின் உலக வரலாறு குறித்த கடிதங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு நான்கைந்து முறை படிக்க ஆரம்பித்து, ஆரம்பப் பக்கங்களைத் தாண்டி உள்ளே போகாமல் நிறுத்தி விட்டிருந்தேன். இந்த முறையும் அதே போல ஆர்வத்தை அணைத்துப் போட முயன்றது ஆரம்ப கடிதங்கள். வரிசையாக படிக்க வேண்டும் என்பதை விடுத்து திறக்கும் பக்கத்தில் படிப்பது என்று படித்துக் கொண்டிருக்கிறேன்.

20ம் நூற்றாண்டில் இத்தாலியில் முசோலினியின் பாசிச கட்சியின் வளர்ச்சியும் ஆட்சியும், 19ம் நூற்றாண்டில் செருமனியில் பிசுமார்க் நடத்திய இரும்பு ஆட்சி, சோவியத் புரட்சிக்குப் பிறகான ஐரோப்பிய அரசியல்கள், விக்டோரியன் பிரிட்டன், பிலிப்பைன்சு எஸ்பானிய ஆட்சியைத் தொடர்ந்து அமெரிக்க காலனியாதிக்கத்தில் விழுந்தது, சீனாவில் டாக்டர் சன்யாட்சென் மறைவுக்குப் பிறகான உள்நாட்டு சண்டைகள், சப்பான் 19ம் நூற்றாண்டில் கதவுகளை இழுத்து மூடிக் கொண்டது, சப்பான் - கொரியா, சீனாவை ஆக்கிரமித்தது என்று அங்குமிங்குமாக மேய்வது நன்றாகத்தான் இருக்கிறது.

காரல் மார்க்சின் பொருள் முதல் வாதத்தை எனக்கு புரியும் படி விளக்கியிருக்கிறார். இது வரை பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதத்தை புரிய முயன்று கொண்டது நடக்கவேவில்லை. மனித வரலாறு என்பது உற்பத்தியின் காரணிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வர்க்கத்துக்கும், அந்த வர்க்கத்தினரால் ஏய்க்கப்படும் வர்க்கத்தினருக்குமான போராட்டங்களின் கதைதான். வெளிப்புற மாற்றங்களால் பொருளாதார உற்பத்தி அமைப்புகள் மாறும் போது ஆதிக்க வர்க்கம், ஏய்க்கப்படும் வர்க்கம் இவற்றின் இயல்பு மாறலாம். இந்த வர்க்கப் போராட்டங்களின் கடைசிக் கட்டம்தான் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கிடையேயான போராட்டம். இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் வெற்றி பெற்றதும் வர்க்கப் போராட்டம் முடிவு பெற்று எல்லா மனிதரும் ஒரே வர்க்கமாக வாழுவார்கள்.

உலக வரலாற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து மனித சமூக இயல்புகளை ஆழ்ந்து உணர்ந்து கிட்டத்தட்ட எல்லா நிகழ்வுகளையும் பொருத்திக் கொள்ளும்படியான தத்துவமாக இது இருக்கிறது.

மார்க்சிச பொதுவுடமை கொள்கைகள், அரசுகள் மீது நேருவுக்கு பெரிதளவு பரிவு இருந்திருக்கிறது. இத்தாலியின் பாசிச கட்சியின் நடவக்கைகளுக்கும் இன்றைய பாரதீய சனதா கட்சியின் நடவடிக்கைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. நேருவின் பார்வையில், அவரது கூரிய அலசலில் அதன் பலவீனங்களும் தப்பவில்லை. நாடாளுமன்ற மக்களாட்சி முறையில் அவருக்கு இருந்த நம்பிக்கை, மார்க்சிய பொருளாதார அலசலில் இருந்த தெளிதல்கள், உலக வரலாற்றை உள் ஏற்று புரிந்து கொண்ட புரிதல்கள் இவைதான் புதிய இந்தியாவை செதுக்கும் போது உறுதியான கட்டமைப்பையும், நிறுவனங்களையும் ஏற்படுத்திச் சென்ற தொலைநோக்குக்கு ஆதாரமாக இருந்திருக்கின்றன.

சிறையில் இருக்கும் போது மகள் இந்திராவை சந்திக்க முடியாத தனிமையில் அவருக்கு எழுதுவது போல உலக வரலாற்றை கடிதங்களாக எழுதியிருக்கிறார். சிறை விதிகளுக்கு உட்பட்டு குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்புகளில் மகளை பார்ப்பது அவரது பற்றுகோல்களாக இருந்திருக்கிறது. இடையில் தனிமையை நிரப்ப கடிதங்களை நிரப்பியிருக்கிறார். 'இப்படி இட்டுக் கட்டிய நம்பிக்கையில் எழுதிக் கொள்வதும் சில நேரம் சோர்வடையச் செய்கிறது. நான் எழுதும் இந்தக் கடிதங்களை வெளியில் அனுப்பக் கூட முடியவில்லை என்பதை நினைவு படுத்திக் கொள்ளும் போது மனம் தளர்ந்து விடுகிறது'

அம்மாவுக்கு நேருவின் மீது நிறைய அபிமானம். 'காந்தியை விட அதிகமான ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நேரு' என்று சொல்வார்கள். பெண் குழந்தைகள் எல்லோருக்கும் நேருவின் வரலாற்றைப் படித்தால் அவர் மீது பாசம் ததும்பும் என்றே நினைக்கிறேன். தனது மகள் மீது அவ்வளவு பாசமும் அக்கறையும் வைத்து தனது அறிவு, திறமை, எதிர்பார்ப்புகளின் முழு சுமையையும் மகளிடம் கொடுத்து உயர்த்தியிருக்கிறார்.

பதின்ம வயதில் மகளைப் பார்க்க முடியாமல் பிரிக்கப்பட்டு சிறையில் வாடியது பெரிய தியாகம்தான். பிரிட்டன் ஆட்சி இந்தியாவை விட்டு விலகி காங்கிரசு ஆட்சி ஏற்பட்ட பிறகு அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக நேரு 15 ஆண்டுகள் இருந்திருப்பாரா? மகளுக்கு திருமணம் ஆனபிறகு அவருக்கு மனதளவில் ஆதரவாக மகள்தான் இருந்திருக்கிறார். அந்த பெரு மரத்தின் கன்றாக வளர்ந்த இந்திரா நேருவுக்குப் பிந்தைய அரசியலில் 15 ஆண்டுகள் தனது முத்திரையை பதித்துச் சென்றிருக்கிறார்.

அவரது வழி வந்த ராஜீவ் காந்தியிடமும் நேருவின் சிந்தனைகளும் கருத்துக்களும் பதிந்திருக்கும். சின்னக் குழந்தையாக நேருவின் மடியில் தவழ்ந்திருப்பார். சஞ்சய் காந்தி எப்படி திசை மாறிப் போனார் என்று புரியவில்லை. இத்தாலியில் பிறந்த சோனியா ராஜீவ் காந்தியுடன் கொண்ட நட்பால் 100 கோடி மக்களை வழி நடத்தும் அரசுக்கு ஆதாரமாக விளங்கும் தகுதியையும் பெற்றிருக்கிறார்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே. நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே. என்ற மூதுரையின்படி நல்லவர்களுடன் பழகும் போது அவர்களது மேன்மை குணங்கள் நம் மீதும் ஒட்டிக் கொள்கின்றன

'தீயோரைக் காண்பதுவும் தீதே'

மணி 8.20. காஞ்சிபுரம் பாலம் தாண்டி வேலூர் மாவட்டத்துக்குள் நுழைந்து விட்டது பேருந்து. வானத்தில் மேக மூட்டத்தில் சின்ன இடைவெளி கூடத் தெரியவில்லை. தொடுவானம் வரை வெள்ளையும் நீலமும் கலந்த வெளிர் நீல மூட்டம். இடது புறம் பயிர் நிலங்கள். வலது புறம் வேலி அமைத்த நிலங்கள்.

இன்னும் 20 நிமிடங்கள் எழுதுவதற்கு அமைத்துக் கொண்டே நேரம். அதற்குள் மடிக்கணினியின் மின்கலனில் மின்னூட்டம் தீர்ந்து விடும். இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் கூட மின்னூட்டம் தாக்குப் பிடிப்பதில்லை. ஒன்பது மணிக்குள் வாலாசா வந்து விடும். எதுவும் சாப்பிடவில்லை என்றால் பதினொரு மணிக்கெல்லாம் பசி எடுத்து விட ஆரம்பிக்கும். ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போகலாம்.

வியாழன், டிசம்பர் 18, 2008

பயணங்கள் தொடருகின்றன

பெங்களூரு செல்லும் ரயில் வண்டியில். காலை மணி எட்டு. ஒரு மணி நேரம் எழுதிப் பார்க்க அவகாசம். ஆறு மணி நேரப் பயணம் முடிந்து மதியத்துக்கு மேல்தான் போய்ச் சேரும்.

ஒரு வாரம் பெங்களூரில் தங்கி பணி புரியலாம் என்று திட்டம். இனி வரும் ஆண்டுக்கான திட்டங்களை வகுக்கவும், இது வரை போன காலத்தின் பலன்களை அலசவும் ஓய்வும், இடைவெளியும், தூரமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நிறுவனத்தின் தினசரி மேலாண்மை பொறுப்புகளை ஒப்படைத்து விட முடிவு செய்தேன்.

போன வாரம் நாகர்கோவில் போய் வந்தது, அங்கு எடுத்த முடிவுகள் திடமான பலன்களைத் தர ஆரம்பித்திருக்கின்றன.

போன வெள்ளிக் கிழமை ராணிப்பேட்டையில் குட்லெதரில் இருக்கும் போது ஒரு அழைப்பு.

'வேலையெல்லாம் முடிச்சாச்சா?',
'என்ன வேலை?'
'ராணிப்பேட்டையில்தானே இருக்கிறாய்? எப்போ பணிகள் முடிந்து புறப்படுவாய்?'
'நானா, ஆறு ஆறரை மணி தாண்டி விடும்'
சரி என்று அழைப்பைத் துண்டித்துக் கொண்டேன்.

என் பேச்சில் இருந்த விடுபட்ட தன்மை புரிந்திருக்கும். உரையாடலின் ஆரம்பத்தில் குரலில் இருந்த துள்ளல் சில விநாடிகளில் முடியும் போது வடிந்து போயிருந்தது. அத்தோடு நேற்றைக்கு மீண்டும் ஒரு முறை அழைப்பு. எண்ணை சேமித்து வைத்திருந்த பெயரை நீக்கியிருந்தேன். அழைப்பு வந்தால் பெயர் எதுவும் இல்லாமல் எண்ணாகத்தான் தெரிகிறது.

குரலில் கொஞ்சம் கொஞ்சல், ஏதாவது காயப்படுத்தும்படி சொல்லி விடுவேனோ என்ற அச்சம்.

'பக்கத்து வீட்டுப் பையன் வந்திருக்கிறான், உன்னிடம் பேச வேண்டுமாம்'
'கொடு'

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலைகளுக்குப் போய் வேலை செய்ய விருப்பம் இல்லாமல், இரவில் பணி புரியும் பிபிஓ நிறுவனத்தில் சேர்ந்த பையன்.

'உங்க நிறுவனத்தில் ஏதாவது வேலை இருக்குமா? பிபிஓவில் போகிறேன். இரவில் போக வேண்டியிருக்கிறது. ஏதாவது மென்பொருள் துறையில் கிடைத்தால் நன்றாக இருக்கும்'

'எங்க அலுவகத்தில் எதுவும் வேலை இருக்காது. வேண்டுமானால், தொழிற்சாலைகளில் பொறுப்பு எடுத்து செய்யும்படி பார்க்கலாம்.'

'தொழிற்சாலை என்றால் எங்கே?'

'வேலூர் மாவட்டத்தில். ஒரு வாரம் நான் ஊரில் இல்லை. அடுத்த வாரம் தொலைபேசி விட்டு அலுவலகத்துக்கு வாங்க. பேசலாம்'

காலங்கள் மாறி வருகின்றன.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு.

'உனக்கு ஒண்ணுமில்லையே!'

'நல்லாதான் இருக்கேன். ஏன்?'

'இல்ல, காலையில் மூணரை மணிக்கு என்னை ஏன் எழுப்பி விட்டாய். திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். என்னை நினைத்தாயா?'

சமாதானப்படுத்தும், அணுகும் முயற்சி.

'அப்படியா! நான் நல்ல்ல்லாத்தான் இருக்கேன். நீயும் நல்லா இருக்கே அல்லவா, பார்த்துக்கோ'

உரையாடலை முடித்துக் கொண்டேன்.

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதை எல்லாம் நம்பாதே என்று இருவர் திரைப்படத்தில் ஒரு பாட்டு வரும். நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டே இருப்பவர்களிடம், திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பரிவு காட்டத் தெரியாதவர்களிடம் கேட்டு வாங்க வேண்டும், அல்லது கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும், இனிமேலும் கிடைக்காது என்று தெரிவித்து விட வேண்டும்.

அப்படி கேட்க, நிறுத்தி விட, தெரிவித்து விட ஆரம்பித்ததும் எதிர்வினைகள் பொங்கி வருகின்றன. வாடிக்கையாளர்களிடம் காசு கேட்கப் படித்து விட்டேன். 'இன்ன வேலை செய்திருக்கிறேன், அதனால் உங்களுக்கு இன்ன பலன் கிடைத்திருக்கிறது, எங்களுக்கு இத்தனை பணம் வேண்டும்' என்று கண்களைப் பார்த்துக் கேட்கப் படித்துக் கொண்டேன்.

உணர்ச்சிகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, நம்மை மருட்டி, அதட்டி, பயமுறுத்தி, அல்லது திசை திருப்பி தம் வேலையை சாதித்துக் கொள்ள முயற்சிக்கும் நேரங்களில் உணர்ச்சிகளை வடிகட்டி விட்டு சொல்லப்படும் பொருளை மட்டும் கருத்தில் எடுத்து பொருத்தமான விடை கொடுத்து வேலையை சாதித்துக் கொள்ள முடிகிறது.

திங்கள் கிழமை நாள் முழுவதும் ஒரு வாடிக்கையாளருடன் சந்தித்து விவாதம். காலையில் ஆரம்பித்து உணவு இடைவேளை வரை போன சந்திப்பு மதியத்துக்கு மேலும் தொடர்ந்தது. நாம் தயாரித்துக் கொண்டு போன விபரங்கள், சொல்ல விரும்பிய கருத்துக்களை எல்லாம் அவர் மனதில் பதியும் படி வெளிப்படுத்தி விட முடிந்தது. அதற்கான எதிர்வினையாக நமக்குத் தேவையான, நமக்கு சாதகமான விளைவுகளையும் உருவாக்கிக் கொள்ள முடிந்தது.

செவ்வாய்க்கிழமை மதியத்துக்கு மேல் ஒரு சந்திப்பு. அங்கு நிலைமை கொஞ்சம் நோஞ்சானாக இருந்தது. எடுத்துக் கொண்ட வேலையின் அளவுக்கு ஏற்ற வருமானம் இல்லாத நிலைமை. அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், நமது முயற்சிகளுக்கும் பெரிய இடைவெளி உண்டு. அங்கும் உணர்வுகளை எல்லாம் உறிஞ்சிக் கொண்டு உண்மைகளை மனதில் உறைக்கும்படி பேசி விட்டுப் புறப்பட முடிந்தது.

நேற்றைக்கு இன்னொரு நிறுவன உரிமையாளருடன் சந்திப்பு. இது வரை செய்த பணிகளிலேயே மிகச் சிறப்பாக மிகப் பலனுள்ளதாக முடிந்து வரும் இடம். நிறுவனத் தலைவரின் உறுதி, வழிகாட்டல், திட்டப்பணித் தலைவரின் ஆர்வம், கடும் உழைப்பு, கடுமை ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் மேலாளர்களின் ஒத்துழைப்பு, நமது குழுவினரின் திறமையான உழைப்பு இவை அனைத்தும் சேர்ந்து ஐந்து மாதங்களில் முழுமையான செயல்பாடு வந்து விட்டது.

ஒரு பிரிவின் சுணக்கத்தால் தலைவர் எதிர்பார்த்த விளைவுகள் ஆரம்பிக்கவில்லை. அதை வைத்து நம்மைக் குறை சொல்லி ஆரம்பித்தார். அதற்கான விளக்கங்களை திடமாக எடுத்து வைக்கவும், தாமதத்துக்குப் பொறுப்பு பாதி அவர்கள், பாதி நாங்கள் என்று அவரே ஒத்துக் கொண்டார். இப்போது எஞ்சியிருக்கும் பணிகளை முடித்து விட்டால் மீதிப் பணத்தை முழுவதுமாக வாங்கிக் கொள்வதோடு, இன்னொரு நிறுவனத்துக்கான பணிகளையும் ஜனவரியிலிருந்து ஆரம்பித்து விடலாம் என்ற உறுதிமொழியை கொடுத்து விட்டார்.

இன்னொரு மாற்றம் அரிசியைத் தவிர்ப்பது. வெளியில் போகும் போது முழுமையாகத் தவிர்ப்பது நடக்காமல் இருக்கிறது. போன வெள்ளிக் கிழமை ராணிப்பேட்டைக்குப் போயிருக்கும் போது வாடிக்கையாளர் உணவுக் கூடத்தில் சிறிதளவு சோறு சாப்பிட வேண்டியிருந்தது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை எதுவும் சோதனை இல்லை. திங்கள் கிழமை ராணிப்பேட்டை போகும் போது காலையில் மூர்த்தீஸ் கபேயில் பொங்கல், மதியம் வாடிக்கையாளர் உணவுக் கூடத்தில் சிறிதளவு சோறு. செவ்வாய்க் கிழமை எதுவும் பிரச்சனையில்லை.

நேற்றைக்கு மீண்டும் வாடிக்கையாளருடன் உணவு உண்ண சோறு.

மொத்தத்தில், நானாக சமைத்தோ, நாடிச் சென்றோ அரிசி உணவு சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொண்டு விட்டேன். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், தட்டை, சீடை, முறுக்கு எல்லாம் நின்று போய் விட்டன. தவிர்க்க முடியாத நேரங்களில் சோறு மட்டும் மற்றவர்களை சங்கடத்துக்குள்ளாக்க வேண்டாம் என்று சாப்பிட்டுக் கொள்கிறேன்.

சோறு சாப்பிடாததால் மனதளவில் சோர்வு ஏற்படுவதை உணர முடிகிறது. அதற்கு ஈடாக மற்றப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும் நடந்து விடுகிறது. குறிப்பாக பரோட்டா, பூரி, வடை போன்றவை மீண்டும் உணவில் நுழைந்திருக்கின்றன. இந்த மூன்றையும் தவிர்த்து விடுவது நன்றாகத்தான் இருக்கும். பழங்கள் காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

உணவுப் பழக்க மாற்றத்தினால் மட்டும் என்று உறுதியாகச் சொல்ல முடியா விட்டாலும், அரிசியை தவிர்க்க ஆரம்பித்த பிறகு செய்யும் பணிகளில் இருக்கும் உணர்வு பூர்வமான பிடிப்பு தளர்ந்து, வேலைக்கான ஆர்வம் மட்டும் எஞ்சியிருக்கிறது.

ஆசையே துன்பத்துக்கு காரணம். ஆசையை ஒழித்து விட்டால், துன்பத்தை தொலைத்து விடலாம் என்று புத்தரின் போதனை.

1980ல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரசு கூட்டணி தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று விட, அதிமுக - ஜனதா கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து மாநில சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்தது இந்திரா காந்தியின் தலைமையிலான மத்திய அரசு.

காங்கிரசும் திமுகவும் பாதிக்குப் பாதி தொகுதிகளில் போட்டியிட்டன. கூட்டணி வெற்றி பெற்றால், கருணாநிதிதான் முதலமைச்சர் என்றும் அறிவித்திருந்தார்கள்.

'நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டே இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். சட்ட மன்றத் தேர்தலிலும் எமது கூட்டணி பெரு வெற்றி பெற்று நான் ஆட்சி அமைப்பேன்.' என்று இறுமாந்து, தேர்தல் முடியும் முன்னரே யாருக்கு என்ன துறை என்று அமைச்சர் பதவிகளைக் கூட தீர்மானித்து வைத்திருந்தாராம் கருணாநிதி.

'உங்களை நம்பி அரசியலுக்கு வந்தேன். வெற்றி பெற்றால் ஆட்சியமைப்பேன். இல்லை என்றால் அரசியலை விட்டு திரைப்படத் துறைக்குத் திரும்பி விடுவேன்' என்று எதிரணியில் நின்றாராம் எம்ஜிஆர்.

அப்படி பற்றற்று போட்டியிடும் போது நமது சொல்லும் செயலும் நடவடிக்கைகளும் மற்றவர்களை சாதகமாக பாதித்து நமக்கு சாதகமான விளைவுகள் கிடைத்து விடும். மேலே சொன்ன தேர்தலிலும் அதுதான் நடந்தது. அதிமுக தனிக்கட்சியாகவே பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

காசு கேட்டால் வாடிக்கையாளர்கள் நம்மை விட்டுப் போய் விடுவார்களோ என்று பயந்து பணியாற்றினால், அவர்களும் அந்தப் பயத்தைத் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். எங்கள் பணியால் உங்களுக்குக் கிடைக்கும் நலன்களில் எமக்கு உரிய பங்கை தாருங்கள் என்று உரிமையுடன் கேட்க ஆரம்பித்தால், அதைக் கொடுத்து பணி ஏவ ஆரம்பித்து விடுகிறார்கள்.

கொடுக்கல் வாங்கலின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் பார்த்து விட முடியாதுதான். நம்முடைய வழிகாட்டி என்றும் மாறி விடாத நன்னெறிகளாக வைத்துக் கொள்ளலாம்.

நேர்மை, இருபக்கத்துக்கும் நியாயமான பரிமாற்றம், தனிமனித உரிமைகள், பன்முகத்தன்மையை ஊக்குவித்தல், எல்லோருக்கும் சம வாய்ப்புகள் என்ற காரணிகள் என்றைக்கும் சமூக அமைப்புக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள். அவற்றை மட்டும் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த ஒரு வாரம் பெங்களூருவில். அலுவலகப்பணிகளின் சின்னச்சின்ன விபரங்களில் நம்மைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் என்ன நடந்து கொண்டிருக்கிறது. குழுவினர் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள 2 மணி நேரம் ஒரு நாளைக்குச் செலவழிக்கலாம்.

அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள் வகுப்பதில் 2 மணி நேரம். வாடிக்கையாளர்கள், குழுவினர், முதலீட்டாளர்களுடன் தகவல் தொடர்பு கொள்ள 1 மணி நேரம்.

மென்பொருள் உருவாக்கப் பணிகளில் 4 மணி நேரம். வாடிக்கையாளர் சேவைப் பணிகளில் 2 மணி நேரம். 1 மணி நேரம். 2 மணி நேரம். தன் முன்னேற்ற, நாட்குறிப்பு, எழுதுதல், உலாவி வருதல், போன்றவற்றில் 4 மணி நேரம். தூக்க்ம 6 மணி நேரம். சரியாக 24 மணி நேரங்கள் கணக்கு கிடைத்து விட்டது.

இதை முடித்ததும் கணினியை மூடி வைத்து விடலாம். இந்து நாளிதழ், எகனாமிக் டைம்சு நாளிதழ், பிசினஃச் இந்தியா பத்திரிகை படிப்பதில் 2 மணி நேரம் செலவிடலாம். பசித்தால் பசித்த பிறகு வாங்கி பையில் வைத்திருக்கும் ரொட்டி வகைகளைச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

மதியம் 2 மணிக்கு பெங்களூரு போய்ச் சேரும் என்று நினைவு. வீட்டுக்குப் போய் முதலில் பேசிக் கொண்டிருக்க வேண்டும். முடிந்த வரை வெளியில் போவதைத் தவிர்த்து பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜெயமோகனின் மத்தகம் என்று குறுநாவலை ஞாயிற்றுக் கிழமை இரவு படித்தேன். சர்க்கரைப் பாகில் விழுந்த ஈயைப் போல உள்ளேயே கட்டுண்டு போனது போலிருந்தது. மாயச்சுழலாக, கதைக்களத்தை கண் முன்னே கொண்டு வந்து, அந்த நாளைய வாழ்க்கையை படம் பிடித்துக் காண்பிக்கிறார். ஊமைச் செந்நாய் கதையைப் போலவே இதிலும், வன்செயல்கள், பாலியல் ஆதிக்கம் மையம் கொண்டிருந்தன. மனிதனின் அடிப்படை இயல்புகளை ஊதிப் பெரிதாக்கி நாடகமாகக் காட்டும் வித்தகர்கள்தான் கதை சொல்லுவதில் வெற்றி பெறுகிறார்கள். இவரும் அதே பாணியில்தான் போகிறார்.

சுஜதாவின் எழுத்துக்களிலும் பாலில் வெண்ணெய் போல பாலியல் திரண்டு கொண்டே இருக்கும். பாலகுமாரனின் எழுத்துக்களில் அதற்கு சற்று மேற்பட்ட உணர்வுகள்.

கல்கி மனித காரணிகளை உதிர்த்து விட்டு எழுதுகிறார். அவரது கதை மாந்தர்கள், சாப்பிடுவதோ, தூங்குவதோ அரிதாகவே இடம் பெறும். தும்முவது, மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது, உடலுறவு கொள்வது போன்றவற்றை அவர்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதே முடியாது. குந்தவையும் வந்தியத் தேவரும் குடும்பம் நடத்திக் குழந்தை பெற்றுக் கொள்வதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா!

டால்ஸ்டாய், சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துக்களிலும் இதே அடிப்படை பண்புகளை கருத்தில் எடுத்துக் கொள்ளாத போக்கு தென்படும். அன்னா கரனீனாவில் முறைக்கு வெளியான பாலியல் தொடர்பைக் கதைக்களமாகக் கொண்டிருந்தாலும். எந்த ஒரு கட்டத்திலும் வாசகரைத் தூண்டி விடாமல் எழுதியிருப்பார். நேனோ தொழில் நுட்பம் குறித்து எழுதும் போது கூட 'கிளின்டன் மோனிகா லுவின்சுகியை மோப்பம் பிடிப்பதை' எடுத்துக்காட்டாக எழுதுவார் சுஜாதா.

செவ்வாய், ஜனவரி 15, 2008

தனித்திரு விழித்திரு பசித்திரு

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்றாராம் வள்ளலார்.

தனித்திருப்பது என்றால் வேறு எந்த மனிதத் தொடர்பும் இல்லாமல் இருப்பது. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ, பாடல்கள் மூலமாகவோ பிற மனிதர்களின் எண்ணங்கள் குறுக்கிடாமல் இருந்தால் தனிமையை உணரலாம். நம் மனதின் எண்ண அலைகள் மட்டும் துணைக்கு இருக்க வேண்டும்.

விழித்திருப்பது அதன் இரண்டாவது பகுதி. தனியாக இருக்கும் சூழலை ஏற்படுத்திக் கொண்டு தூங்கி விட்டால், அல்லது அரைக்கனவு கண்டு கொண்டிருந்தால் போதாது. உண்மையில் முழு விழிப்புடன், வெளியிலும் உள்ளேயும் என்ன நடக்கறது என்று கவனிக்க முடிய வேண்டும்.

இந்த இரண்டையும் அமிழ்த்தி விடக் கூடியது உணவு. வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அல்லது நொறுக்குத் தீனி கொறித்துக் கொண்டே இருந்தாலும் தனித்து, விழித்திருப்பதின் விளைவு மங்கி விடும். அரை வயிறு சாப்பிட்டு விட்டு பசியுடன் இருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் என்ன நடக்கும்? இருந்து பார்த்தால்தான் தெரியும். பெரும்பாலும் ஒரு நிமிடம் கூட தாங்காது. ஒரு புத்தகத்தைத் தேடி, அல்லது தொலைக்காட்சி ஓடையைத் துளாவி, ஒன்றும் கிடைக்காவிட்டால், சாப்பிடச் சொல்லி மனம் உந்தித் தள்ள ஆரம்பிக்கும். அதைத் தாக்குப் பிடித்து ஒரு மணி நேரம் தனித்து, விழிப்புடன், பசியுடன் இருப்பது நீராவிக் குளியல் போல ஆகி விடும். உள்ளத்தின் இடுக்குகளில் இருக்குல் தூசுகள் எல்லாம் கழுவப்பட்டு புத்துணர்வுடன் தொடர முடியும்.

நேற்றுக் காலையில் எழுந்திருக்க மணி 7 ஆகி விட்டது. முந்தைய நாள் ஞாயிற்றுக் கிழமை புத்தகக் கண்காட்சியில் வலைப்பதிவு நண்பர்களுடன் சந்திப்பு. 'திரு ஊரிலிருந்து திரும்பி விட்டார், ஒத்தக் கருத்துடைய நண்பர்களை சந்திக்கலாம் என்று கேட்டிருக்கிறார். ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்தரை மணிக்கு புத்தகக் காட்சியில் பார்க்கலாம்' என்று பாலா இரண்டு நாட்கள் முன்பு தொலைபேசியிருந்தார்.

ஞாயிற்றுக் கிழமை கொஞ்சம் எழுதி விட்டு அலுவலகம் போய் விட்டேன். இசுலாமிய கொள்கைகளை அறியத் தருவதாக peace என்ற ஆண்டு தோறும் நடக்கும் கண்காட்சி/மாநாட்டுக்கும் போகலாம் என்று திட்டம். மாலை 4.15க்கு ஆரம்பித்து இரவு 10.30 வரை நடக்கும் என்று அலுவலக நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி, கோயம்பேடு அருகில் பீஸ் கண்காட்சிக்குப் போய் விட்டு அப்படியே ஐந்தரைக்கு பச்சையப்பா கல்லூரி எதிரில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம் என்று நினைத்திருந்தேன். நேரம் நெருக்கடியாகப் போய் விடலாம்.

நண்பர் ஒருவர் தொலைபேசி 3 மணிக்கு வருவதாகச் சொல்லவே பீஸ் கண்காட்சிக்குப் போவதை தள்ளிப் போட்டு விட்டு நேரடியாக புத்தகக் கண்காட்சிக்குப் போவதாக முடிவானது. நண்பருடன் பேசிக் கொண்டிருந்து, அவரது வலைப்பதிவில் தேவையான வேலைகளை செய்து விட்டு அவரது வண்டியிலேயே கிளம்பினோம்.

ஐந்து மணிக்கெல்லாம் புத்தகக் கண்காட்சி வந்து சேர்ந்து விட்டோம். சின்ன வயதில் தான் படித்த கதைப் புத்தகங்கள் கிடைக்குமா என்று பார்க்க விரும்பினார் நண்பர். முதல் வேலையாக ஆழிப் பதிப்பகத்தில் கொடுக்க வேண்டிய 75 ரூபாய் மீதிப் பணத்தைக் கொடுத்து விட்டேன். சுற்றி வந்து கொண்டிருக்கும் போது ஐந்தரை தாண்டி ஐந்தே முக்கால் ஆகி விட்டதே என்று பாலபாரதிக்கு குரல் கொடுத்தால், லக்கிலுக் எடுத்து, வந்து விட்டதாகச் சொன்னார்.

நாங்களும் வெளியில் வந்து கலைஞர் காட்சியகத்தின் அருகில் போனோம். பாலபாரதி, லக்கிலுக், திரு, சோமி, அகிலன், சரவணன், சுகுணா திவாகர், அவரது நண்பர் சுந்தர், முரளிக்கண்ணன் இன்னும் இரண்டு பேர் கூடினோம். அப்படியே கேன்டீனுக்குள் நுழைந்து ஆளுக்கொரு தேநீர். போண்டா, பஜ்ஜி எதுவும் கிடைக்கவில்லை.

வெளியில் வந்து பேசிக் கொண்டிருக்கும் போது புளியமரம் தங்கவேலுவும் வந்தார். சிலர் விடை பெற்றுச் சென்று விட, ஏழெட்டு பேர் புத்தகக் காட்சிக்குள் போனோம்.

ஆரம்பத்திலிருந்தே தொடங்கி ஒவ்வொரு வரிசையாக பார்ப்போம் என்று பாலபாரதியின் தலைமையில் அணிவகுத்து நடந்தோம். லக்கிலுக், மர்மக் கதைகளில் வருவது போல மிகப்பெரிய பை ஒன்றை கொண்டு வந்திருந்தார், வாங்கும் புத்தகங்களை எடுத்துச் செல்லவாம். யார் புத்தகம் வாங்கினாலும் அதில் போட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேர் இரண்டு பக்க வாரைப் பிடித்து சுமக்க வேண்டியிருந்தது.

எனி இந்தியன் கடையின் முன்பு ஹரன் பிரசன்னாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். காட்சியை விட்டு வெளியே வந்த பிறகு வலைப்பதிவுகள் குறித்து அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை முரளிக் கண்ணன் வாங்கியிருந்த உயிர்மை இதழ் ஒன்றில் பார்த்தேன்.

நடந்து கொண்டே சூடான விவாதங்களும் ஆரம்பித்தன. பெரியார், இந்துத்துவா, சாதி, தமிழக அரசியல் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. இடையிடையே கடைகளுக்குள் புகுந்து பையை நிரப்ப ஆரம்பித்திருந்தார். நண்பர்களுக்காக என்று கனமான பொன்னியின் செல்வன் வாங்கினார்.

குட்டிப் புத்தகங்களாக நிறைய வாங்கியதாக காண்பித்தார். பலவிதமான பொருட்களில் வாங்கியிருந்தார்.

மற்றபடி கூட்டம் நிரம்பி வழிந்தது. 'போன வருடம் போல இல்லை' என்று பதிப்பாளர் நண்பர் ஒருவர் சொன்னாலும், வெளியில் நுழைவாயிலிலிருந்தே புழுதி கிளப்பும் அளவுக்கு மக்கள் வெள்ளம். உள்ளேயும் பல அரங்குகள் நிரம்பி வழிந்தன. 'விகடன் அரங்குக்குள் போக முடியவில்லை' என்று மறுகிக் கொண்டிருந்த லக்கி அதனுள்ளும் போய் விட்டு வந்தார். 'எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய துணையெழுத்து இருந்தால் வாங்கிக்கோ' என்று வேண்டுகோளோடு.

மனித உரிமை/தொழிலாளர் உரிமை போன்ற துறைகளில் பணியாற்றும் திருவை ஆழிப் பதிப்பகத்துக்கு அழைத்துச் சென்று காஷ்மீர் புத்தகம் பார்க்கச் சொன்னேன். அங்கு சந்திரனும் இருந்தார். இருவரும் பேச ஆரம்பித்து நீண்டு கொண்டு போனதை மட்டுறுத்துனர் இடை மறித்து காட்சி உலாவைத் தொடர வைத்தார்.

'முடியும் நேரம் ஆகி விட்டதே' என்று எட்டரை மணி வாக்கில் உறைத்த போது, 'ஆமாமா, சீட்டு கொடுப்பது நிறுத்தியிருப்பாங்க, இன்னும் அரை மணி நேரத்தில் எல்லாரையும் வெளியே போகச் சொல்லுவாங்க' என்றார்கள்.

'போகச் சொல்லுவதற்கு முன்னால் நாமா போயிடுவோம்' என்று மீதியிருந்த இரண்டு வரிசைகளையும் சுற்றி விட்டு வெளியே வந்து விட்டோம். கால் வலிக்கு கொஞ்ச நேரம் உட்காரலாம் என்று கலைஞர் காட்சி அரங்கம் முன்பு நாற்காலிகளை இழுத்துப் போட்டு உட்கார்ந்தோம். ஒன்பது மணி அடித்து கூட்டம் கூட்டமாக மக்களும் வெளியேறினார்கள். நாங்கள் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து இன்னும் சிலரும் தனித்தனி வட்டங்களாக உட்கார்ந்தார்கள்.

'நாளை கண்காட்சி 11 மணிக்கு ஆரம்பிக்கும். பதிப்பக நண்பர்கள் 10 மணிக்கெல்லாம் வந்து, தம்முடைய கடைகளை தயார் செய்து கொள்ளலாம்' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள். இந்த 13, 14, 15, 16, 17ம் தேதிகள்தான் காட்சி சூடு பிடிக்கும் என்று சொன்னார்கள்.

'என்னங்க, கடை ஒன்று போட பதினாலாயிரம் ரூபாய்தானாமே, பபாசி உறுப்பினர்களுக்கு 8000, அதிலும் குறைவாக வேண்டும் என்பவர்களுக்கு சின்னதாக புத்தகம் அடுக்க தட்டு மட்டும் கொடுத்து 5000 செலவுதான். வலைப்பதிவர்களுக்கான கடைக்கு ஏன் 20000 கேட்டார்கள்'

'நாம குறுந்தகடுகள் விற்கப் போவதால் விலை அதிகம்'

'நான் டிவில வருவதை பார்க்க விடாம சதி செய்துட்டீங்களே' என்று ஒன்பதரைக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் வரவிருந்த நிகழ்ச்சியைத் தவற விட்டதைக் குறிப்பிட்டால், அதை பதிவு செய்ய ஏற்பாடு செய்து விட்டதாக ஆறுதல் கூறினார்.

கிளம்பி வெளியே வந்து சேரும் முன்பு 3 தொலைபேசி அழைப்புகள். 'யார் என்று சொல்லுங்க பார்ப்போம், சமீபத்தில் நெருங்கிய நண்பரானவன் நான்' என்று ஒருவர் முதலில். உண்மையிலேயே யார் என்று தெரியவில்லை. வங்கிக் கிளை மேலாளர். அவர்கள் மீது ஒரு புகார் கொடுத்ததால் கடந்த வாரம் அறிமுகமானவர். தற்செயலாக சன் நியூஸ் பார்த்திருக்கிறார். 'கவலைப்படாதீங்க, மறு ஒளிபரப்பில் பார்த்துக் கொள்ளுங்க' என்று ஒரு உதவிக் குறிப்பும் கொடுத்தார்.

நாகர்கோவிலிலிருந்து உங்கள் நண்பன், கோவையிலிருந்து ஓசை செல்லா, கூடவே அலுவலக நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு தவறும் அழைப்பு. வெளியில் ஒவ்வொருவராக தத்தமது வண்டிகளுக்க நகர்ந்து விட, சரவணனும் திருவும் நானும் சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தோம்.

முதலில் வந்த ஆட்டோவில் 140 ரூபாய்கள் கேட்டார். அவரை போக விட்டு அடுத்த இரண்டு வண்டிகளால் மறுக்கப்பட்டு பின்னர் வந்தவரிடம் கேட்டால் 100 ரூபாய் கேட்டார். பூந்தமல்லி போகிறாராம். அதனால் நியாயமான கட்டணத்தில் ஏற்றிக் கொண்டார். சரவணன் போரூர் போகிறார் என்று நினைத்திருந்தால், அவர் கேகே நகர் போக வேண்டுமாம். திரு ஆழ்வார் திருநகர் அருகில் இறங்கிக் கொள்ள நான் வளசரவாக்கம். அலுவலகத்துக்கு வந்து சேரும் போது பத்தரை தாண்டி விட்டிருந்தது.

வீட்டுக்கு வந்து சேரும் போது வெளிக் கதைவை பூட்டி விட்டிருந்தாலும், உள்ளே கொத்தாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். பொங்கல் அன்று பொதுப் பொங்கல் விடப் போவதாகச் சொல்லி என்னையும் வரச் சொன்னார்கள். வீட்டைக் கட்டிக் கொடுத்த குறைபாடுகளைப் பற்றி கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தூங்கப் போகும் போது நள்ளிரவு தாண்டி விட்டது.

அதுதான் திங்கள் காலையில் காலதாமதம். துணி துவைப்பு, குளியல், தியானம், ஓட்ஸ் கஞ்சி என்று புறப்படும் போது 9.10. அலுவலகத்துக்குப் போய் சந்திக்கப் போக வேண்டியிருந்த வாடிக்கையாளர் விபரங்களை தயாரிப்பதில் இறங்கினோம். எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இது போன்ற விபரமான அறிக்கைகளாக அளிக்க வேண்டும் என்று திட்டம்.

1 மணிக்கு வரச் சொன்னார். பன்னிரண்டேகாலுக்குக் கிளம்பி ஆற்காடு சாலை வள்ளுவர் கோட்டம் வரை, அங்கு திரும்பி சேத்துப்பட்டு, எழும்பூர் வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை. 10 நிமிடங்கள் தாமதம். மேலே போய் உட்கார்ந்தால், அவர் கீழே இருப்பாரே என்றார்கள். கீழே கேட்டால் இப்பதான் கிளம்பினார் என்று சொல்கிறார்கள். அவரது கைத்தொலைபேசிக்கு அழைத்துக் கேட்டால் 5-10 நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொன்னார். கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்குப் பிறகுதான் வந்தார்.

சந்திப்பு நல்லபடியாக போனது. கடந்த 10 நாட்களாக செய்த வேலையின் விளைவுகளை அவரும் உணர்ந்திருந்தார். அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளவும் முடிந்தது. கடும் பசிக்கு இடையில் நான்கு மணி வரை வேலைகள் நீண்டன. 'அலுவலகத்தில் உங்களுக்கும் சேர்த்துதான் சாப்பாடு சொல்லியிருக்காங்க' என்று வேறு எங்கும் சாப்பிட விடாமல் அனுப்பி வைத்து விட்டார் நண்பர்.

அவரை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் இறக்கி விட்டு விட்டு, வேகமாக அலுவலகம். பருப்பு, பீட்ரூட், மோர், ஊறுகாய் என்று சாப்பிட்ட பிறகுதான் தெம்பே வந்தது. அதற்கிடையில் வெளியே போனவர்கள் 'பொங்கல் வந்து விட்டது' என்று கரும்புத் துண்டுகளை வாங்கி வந்தார்கள். பல்லின் வலிமையை சோதனை செய்வதா என்று தயக்கத்தோடு ஆரம்பித்து சேதம் ஏதுமில்லாமல், தோலை உரித்து, கடித்து சாப்பிட முடிந்தது. ஆறரை மணிக்கெல்லாம் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

எதிர்வீட்டுப் பையன் அழுதுக் கொண்டே வீட்டுக்குள் போனான். ஏதோ விளையாட்டில் தகராறாம். அவனை சமாதானப்படுத்தியதன் எதிர் விளைவாக பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டுக் குடித்து விட்டுப் போனான்.

காஷ்மீர் புத்தகம் படிக்கலாம் என்று எடுத்து ஆரம்பித்ததோடு தூக்கம் கண்களைச் சுழற்ற தூங்கி விட்டேன். எட்டே முக்காலுக்கு நண்பர் ஒருவரின் தொலைபேசி அழைப்பில் எழுந்து பேசி விட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தேன். சரியான பாய் படுக்கை விரித்து படிப்பதாக ஆரம்பித்தாலும் தூக்கம்தான் வந்தது. மின்விளக்கை அணைக்கக் கூட எழுந்திருக்க சோம்பல் பட்டு காலை வரை அப்படியே தூங்கியிருந்தேன். ஆறு மணிக்கு இதற்கு மேல் வேண்டாம் என்று எழுந்து கொண்டு விட்டேன்.

வளர் தொழில் பத்திரிகைக்காக ஒரு கட்டுரை எழுத வேண்டும். தமிழ்நெட்99 குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். பணம் குறித்த கட்டுரையை தொடர வேண்டும்.

இப்போது மணி 7.30. இதை முடித்து விட்டுக் குளிக்கப் போகலாம். எட்டரை மணிக்கு பொங்கல் ஏதாவது முடித்து விட்டு 9.30 முதல் 10.30 வரை தமிழ்நெட்99, 11 முதல் 12 வரை வளர் தொழிலுக்காக வணிக கட்டுரை. 12 மணிக்கு சமையல், சாப்பிட்டு விட்டு, காஷ்மீர் புத்தகம் படிக்க ஒரு மணி நேரம்.

4 மணி முதல் 5 மணி வரை நிறுவன மேலாண்மை குறித்து எழுதலாம். அத்துடன் நிறுத்தி விட்டு ஆறு மணிக்கு மேல் வெளியே போய், ஒன்பது மணி வரை சுற்றலாம்.

நாளைக்கும் பாதி பேர்தான் அலுவலகத்துக்கு வருவார்கள். வியாழக்கிழமை பல நிறுவனங்கள் விடுமுறை. வெள்ளிக் கிழமைதான் வளமை திரும்பும். சேர்த்து விடுமுறை எடுத்த பலர் இல்லாமல் அடுத்த திங்கள் அன்றுதான் இயல்பு நிலை திரும்பும் என்று தோன்றுகிறது.

வியாழன், செப்டம்பர் 13, 2007

ஜே ஜே சில குறிப்புகள்

ஜேஜே சில குறிப்புகள் என்ற நாவலை 202ம் பக்கம் வரை முடித்து விட்டேன். அதன் இறுதியில் கொடுக்கப்பட்டிருந்த மதிப்புரையைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான் இது ஒரு நாவல் என்று உணர முடிந்தது. ஆரம்பத்திலேயே சிறிது சந்தேகம் இருந்தாலும் படிக்கப் படிக்க சுந்தர ராமசாமி, தான் அறிந்த மலையாள எழுத்தாளரைப் பற்றி எழுதும் புத்தகம் என்றே உறுதிப் பட ஆரம்பித்தது. கடைசியில் பின்னொட்டாக ஜேஜேயின் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நாவல்கள் என்று கொடுக்கும் பட்டியல் வரை கற்பனை என்றே சொல்லி விட முடியாத படைப்பு.

குறைந்தது இன்னும் ஒரு முறையாவது படித்தால்தான் சரியான புரிதல் கிடைக்கும். இது ஒரு மனிதனின் ஆழ்மனதிலிருந்து வந்தது. அடுத்தவரின் அனுபவத்தைக் கேட்டு, அல்லது பக்கத்தில் இருப்பவரின் வாழ்க்கையை அவதானித்துப் புனையப்பட்டதாக இருக்க முடியாது. ஜே ஜே குறித்து கதை சொல்லி பாலு சொல்லும் கருத்துக்கள், ஜேஜே எழுதியதாக மொழிபெயர்த்ததாக கொடுத்திருக்கும் நாட்குறிப்புகள் எவ்வளவு நுணுக்கமான, எவ்வளவு ஆழமான மனதிருந்தால் இப்படி ஒரு புனைவு / நாவல் எழுதியிருக்க முடியும்.

புளிய மரத்தின் கதையிலும் இதை கதைதான். கதை என்று சொல்லி விட முடியாமல் நடந்ததையும் கற்பனைக் கிடமில்லாது ஒருவரது சொந்த அனுபவங்களையும் கலந்து எழுதியிருக்கும் அற்புதம் இரண்டிலும் வெளிப்படுகிறது. எங்க ஊரில் இருக்கும் வேப்பமூடு சந்திப்பைத்தான் புளியமரமாகச் சொல்லுகிறார் என்று நான் நம்ப ஆரம்பித்து விட்டேன். அதில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும் என்னைப் பொறுத்த வரை அந்த மண்ணில் நடமாடியவர்கள்தான். ஆனால் சம்பவங்களில் எவ்வளவு நடந்திருக்கும், எவ்வளவு படைப்பாளியின் கைச்சரக்கு என்று தெரியவில்லை.

நாகர்கோவில் கிளம்ப 10 நாட்களுக்குள் இரண்டு சுந்தர ராமசாமியின் படைப்புகள் படிக்க வாய்த்து விட்டிருக்கிறது. சில சமயங்களில் ஏதோ பெரிய கணினியால் இயக்கப்படும் பொம்மைகள்தான் என்று தோன்றுகிறது. கணினி விளையாட்டுக்கள் போல ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம். விளையாட்டை எழுதும் மென்பொருள் வல்லுநர், இவன் இப்படிப் படித்து, இன்னின்ன செய்து ஊருக்குப் போய் இந்த அனுபவத்தைப் பெறுவான் என்று விதித்து விட நாம் அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

'தன்னிச்சை என்பது எங்கிருந்து வருகிறது? கணினிகள் எப்போது புத்திசாலிகளாக உருவெடுக்கும்' என்று பேசிக் கொண்டிருந்தோம். நான் செயல்படுவது மற்றவர்களுக்குப் புரியாமல் இருக்கும் வரை, எனக்கே திட்டமாகச் சொல்ல முடியாமல் இருக்கும் போது நான் தன்னிச்சை உள்ளவனாகிறேன். அப்படிச் சில நூறு கோடி பேர் ஒரு கோளினுள் அகப்பட்டுக் கொண்டால் விளைவுகள் சுவையாகப் போகின்றன. நம்மைச் சுற்றிப் பார்க்கும் போது தெரிபவற்றை ஆராய்ந்து பார்க்க ஒரு இயற்பியல் ஆராய்ச்சியாளர், அதைப் போற்றித் தூற்றிப் பாட ஒரு கவிஞர், எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று ஆருடம் சொல்ல ஒருவர் என்று எல்லாமே ஒரு புத்திசாலியான மென்பொருள் வல்லுனரின் கற்பனைகள்தான் என்றால்! அப்படி என்றால் அந்த மென்பொருள் எங்கு இயங்குகிறது.

ஹிட்ச் ஹைக்கர்ஸ் கைட் டு த காலக்ஸி என்ற படைப்பில் இந்த பூமியே ஒரு கணினி மாயைதான் என்று சொல்லி விடுகிறார். மேட்ரிக்ஸ் திரைப்படமும் கிட்டத்தட்ட அதை போன்ற கருத்துதான். பரிணாம கோட்பாட்டுக்கும் படைப்பு நம்பிக்கைக்கும் இடையே நிறைய இழுபறிகள். படைப்பு என்றது எல்லாம் வல்ல ஆண்டவன் என்று நம்புவர்களுக்கும் பரிணாம கோட்பாட்டுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். பரிணாம கோட்பாட்டில் நாம் அவதானிக்கும் சூழலுக்கு வெளியே எதுவும் இல்லை என்று உருவகம். உலகை இறைவன் படைத்தான் என்று நம்புவர்கள் நாம் பார்க்கும் உலகுக்கு அப்பால் ஏதோ இருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.

இரண்டும் பேசியோ விவாதித்தோ தீர்த்துக் கொள்ள முடியாத இணை கோடுகள். கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும், தொட்டு உணர்வதும் மட்டுமே உண்மை, மனதில் ஏதோதோ நினைத்துக் கொள்வதால் உண்மையாகி விடாது. அப்படி ஆரம்பித்து விட்டால் யார் உருவகிப்பதை ஏற்றுக் கொள்வது என்று குழப்பம் வந்து விடும். கேல்வினும் ஹாப்சும் விளையாடும் போது ஒரு விதி, எந்த நிமிடத்திலும் யார் வேண்டுமானாலும் புதிய விதியை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது. விளையாட்டு எப்படி நடக்க முடியும்.

அதனால், நமது புலன்களுக்கு அப்பாற் பட்டதை அறுவைக் கத்தியால் வெட்டி விட்டு நடந்து கொண்டிருப்பதை மட்டும் பார்ப்போம். ஒன்றுடன் ஒன்றை இணைத்து இது இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படுகிறது என்று அறிவியலை வளர்ப்போம் என்பது முதல் கட்சி. அது அவ்வளவு அசைக்க முடியாத முறையாக இருந்தால் இன்றும் உலகில் பல நூறு கோடி மக்கள் நமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களைப் பற்றி ஏன் நம்பி கொண்டிருக்கிறார்கள்?

ஏனென்றால் அப்படி இருக்கும்படித்தான் நம்மை இயக்கும் மென்பொருளின் வடிவமைப்பு! கடவுள் இந்த உலகைப் படைத்தார் என்றால் ஏன் அதைச் செய்தார்? ஏன் இவ்வளவு துன்பங்கள்? என்றெல்லாம் கேள்விகள் வரும் போது கடவுள் என்பவர் கருணையே வடிவான தந்தை உருவம் என்பதை ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்து விட்டு, மென்பொருள் எழுதி கணினியை இயக்க வல்ல 16 வயது சிறுவன் என்று உருவகித்துக் கொண்டால் எல்லாக் கேள்விகளும் நின்று விடும்.

அப்படி என்றால், அந்தச் சிறுவன் எங்கு வசிக்கிறான். பூமியைச் செலுத்தும் பெருங்கணினியை உருவாக்கியது யார், அது எங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது, அந்த உலகம் எங்கு இருக்கிறது. முடிவில்லாக் கேள்விகள்.

'மாலை வேளைகளில் மூளைக்கு வேலை கொடுக்கும் புத்தகங்களைப் படிப்பதில்லை, அதற்கு காலைப் பொழுதுதான்' என்று நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். நாம் படிப்பதும், நினைப்பதும் நம் உடலையும் பாதித்து விடுகின்றன.

முந்தா நேத்து பழைய விவாதங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் குறித்த தியாகுவின் பின்னூட்டத்தைப் பார்க்க நேர்ந்தது. பொருள் முதல் வாதத்தின் படி வெளி உலகுக்கு மனம் வேலையாள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதோ அதற்கு எதிர்வினை புரிவதுதான் மனிதனுக்கு இருக்கும் தேர்வு. கருத்து முதல் வாதத்தில் மனம், மனிதன் கையில் எல்லாமே இருக்கிறது. தனது மனதின் ஆற்றலால் எதையும் சாதித்து விடலாம்.

இப்படி நான் உருவகித்துக் கொள்கிறேன். உண்மையில் என்ன வேறுபாடு என்று படித்துப் பார்க்க வேண்டும். பொருள் முதல் வாதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த புறக்காரணிகளை மாற்ற வேண்டும். மனிதன் தானாக மாறி விடுவான். கருத்து முதல் வாதத்தில் மனம்தான் எல்லாவற்றுக்கும் தோற்றுவாய்.

மேலே சொன்ன படைப்பு, பரிணாம வளர்ச்சி போன்று இதுவும் சந்திக்க முடியாத இணைகோடுகளின் விவாதம். இரண்டு பக்கமுமே கடுப்பாக இதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்களே என்று எதிர்த்தரப்பைக் குறித்த கோபம் வருத்தம் ஆத்திரம் ஆதங்கம். தீவிரவாதி என்று சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று ஒரு தரப்பும், சைபீரியாவுக்கு நாடு கடத்தி விடுவார்கள் என்று இன்னொரு தரப்பும் சந்தேகக் கண்ணுடனேயே அடுத்தத் தரப்பைப் பார்க்கிறார்கள். அதில் நம்பிக்கையின்மை இன்னும் அதிகமாகிப் போய் விடுகிறது. இது எந்நாளும் உள்ள கதைதான்.

நேற்று ராணிப் பேட்டை பயணம். நான்கரைக்கு எழுந்து ஒவ்வொரு வேலையாக முடித்துக் கிளம்பும் போது ஏழு மணி. ஏழரை மணி பேருந்து ஒன்று கிடைத்து விட்டது. அதுவும் சரி, வரும்போது ஏறியதும் சரி, வேகமாக ஓட்டும் ஓட்டுனர், ஒத்துழைக்கும் வண்டி என்று ஒரு பத்து நிமிடங்கள் குறைவான நேரத்திலேயே பயணம் முடிக்க உதவி. இந்தப் பத்து நிமிட சேமிப்பில் ஒரு நிறைவு. வாலாஜாவிலிருந்து பூந்தமல்லிக்கு சுமாராக ஓட்டினால் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். வேகமாக ஓட்டினால் ஒரு மணி இருபது நிமிடங்கள்.

போரூர் நாற்சந்தியில் நெருக்கடியில் சிக்கிக் கொண்டால் இருபது நிமிடங்கள் தொலைந்து விடும். இருந்தாலும் வேகமாக வந்து மிச்சப்படுத்தக் கூடிய பத்து நிமிடத்துக்கு மதிப்பு அதிகம்தான். பேருந்தில் உட்கார்ந்து கொண்டிருப்பது பலனற்ற நேரம் என்று நினைப்பதால்தான் அப்படி. அந்த நேரத்திலும் நாம் உருப்படியானது என்று நினைக்கும் ஒன்றை செய்து கொண்டிருந்தால் பொறுமை இழப்பது இல்லாமல் போய் விடும். புத்தகம் படிப்பது ஒரு வழி. ஆனாலும் புத்தகம் படிக்க வேண்டிய கட்டாயம் கொல்கிறது. நினைத்தால் புத்தகத்தை மூடி வைத்து விட்டு எழுந்து போய் வேறு வேலை பார்க்கும் தன்னிச்சை இல்லாமல் படிப்பதும் பலனற்றதாகப் படுகிறது.

அதுவும் இல்லாமல் குறுகலான இடைவெளிகளில் இருக்கைகள், நெருக்கிக் கொண்டு உட்கார வேண்டிய கட்டாயம். எல்லாப் பேருந்துகளிலுமே இப்போது இருக்கும் 2 பேர் இருக்கையில் ஒருவரும், மூன்று பேர் இருக்கையில் ஒருவரும் உட்கார்ந்தால் போதும் என்று ஏற்பட்டு விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். சொகுசுப் பேருந்துகளில் அப்படிப்பட்ட முறையதான். ஒரு வரிசைக்கு மூன்றே பேர்தான்.

இந்த சில மணி நேரப் பயண வண்டிகளில் ஒரு வரிசையில் 5 பேர். 5 பேருக்குமே நிறைவின்மை. ஏதோ தன் இடத்தை அடுத்தவர்கள் பிடித்துக் கொள்வது போல.

ஒரு வாரமாக தினசரி நிரல் வேலைகளில் ஆழ்த்திக் கொள்கிறேன். இரண்டு ஆண்டுகளாக துருப்பிடித்துக் கிடந்த தோல் துறை தொடர்பான மன்றத்தைத் தூசி தட்டிப் போட்டேன். நானே உருவாக்கி வளர்த்த எளிமையான மென்பொருள் பயன்பாடு. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இயக்கத்தில் இருந்தது. ஏதோ குளறுபடி வர அதில் நேரம் செலவழிக்காமல் கிடப்பில் போட்டு விட்டேன். அதன் பிறகு ஒரு இலவச நிரலியை நிறுவிப் பார்த்தேன்.

முந்தா நேற்று மீண்டும் முயன்றதில் குளறுபடி அவிழ்ந்து பழைய தரவுகள் எல்லாம் சேதமில்லாமல் கிடைத்து மீண்டும் அரங்கேற்றியாச்சு. ஒரு கால கட்டத்தில் என்னுடைய ஆங்கில வலைப்பதிவாக எழுதியவையும் இருக்கின்றன. நிறைய பெயர்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். அதிலேயே பொதுவில் படிக்கக் கொடுக்கலாமா , தனிப் பதிவா என்று ஒரு தேர்வும் கொடுத்திருந்தேன். எல்லா பதிவுகளையும் தனிப் பதிவுகளாக மாற்றி விட வேண்டும்.

கொசுக்கள் இரண்டு கால்களையும் அடையாக அப்பிக் கொண்டுள்ளன. வியட்நாம் காட்டில் பிடிபட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க போர்க்கைதி எழுதிய புத்தகத்தில், மாலையில் கொசு வலையைப் பிடுங்கி வைத்துக் கொள்வது ஒரு பெரும் தண்டனை முறையாகக் குறிப்பிட்டிருந்தார்.
படுத்தால் உடலெங்கும் அப்பிக் கொள்ளும் கொசுக் கூட்டம் கொடுக்கும் மன நெருக்கடியை வேறு எந்த சித்திரவதை கொடுத்து விட முடியும்? அப்படிச் சித்திரவதைக்குட்பட்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இனிமேலும் வெளியே உட்கார்ந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்ற அளவுக்குக் கொசுக் கடி. அறைக்குள் மின்விசிறி பேய் வேகத்தில் ஓட உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான்.

கூவம் நதிக்கரையில் குடிசை போட்டு வாழும் மக்கள் என்ன செய்கிறார்கள்? கொசுவர்த்திக்கெல்லாம் மசிகிற கொசுக்களா இவை? குப்பைக் குவியல்கள், தேங்கும் தண்ணீர்க் குட்டைகள். குளிரூட்டப்பட்ட காரின் கண்ணாடியை இறக்கி விட்டு குப்பையை சாலையில் போடுகிறார்கள். வீட்டைச் சுத்தமாகத் தூத்து வாரி, பக்கத்துக் காலி மனையில் விட்டெறிகிறோம். ஊரெங்கும் குப்பை அள்ளி கல்லூரிக்கு அடுத்த காலி இடத்தில் குவித்து வைக்கிறார்கள். இவ்வளவுதான் நமது புத்திசாலித்தனம். அமெரிக்க வங்கிகளையும் ஐரோப்பிய விமான நிறுவனங்களையும் மேலாண்மை செய்யும் சேவை அளித்து பில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுக்கும் இன்போசிஸ்சை விட நமது தெருக்களையும் சுற்றுப் புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளத் திட்டம் போட்டு நடைமுறைப்படுத்த உதவும் ஒரு நிறுவனம் அதிக பலனுடையது.