என்னைப் பற்றி

வியாழன், ஜூலை 31, 2008

பயணங்கள் முடிவதில்லை

இன்னொரு மாதம் முடியப் போகிறது. ஜூலை முடிந்து ஆகஸ்டு ஆரம்பிக்கப் போகிறது. வேலையில் சுவாரசியம் குறைந்து விட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு பழி வாங்குவது போல போன இரண்டு நாட்களும்.

நேற்றுக் காலையில் மூன்றரை மணிக்கு எழுந்து விட்டேன். 2 மணிக்கு எழுந்து புறப்படும் போது கணக்குப் போட்டு வைத்திருந்தேன். ஐந்தரை மணிக்கு அலுவலகத்துக்குப் போய் விட வேண்டும். 5.10க்கு புறப்பட வேண்டும். 4.40க்கு தியானம். 4.15க்குக் குளியல். இரண்டரை மணிக்கு எழுத்து. மூன்றரை முதல் துணி துவைத்தல். எழுந்திருக்கும் போதே ஒன்றரை மணி நேரம் போய் விட்டது. படுத்ததும் இரவு 11 மணிக்குத்தான்.

மூன்றரை மணியிலிருந்து புறப்பட்டு அலுவலகத்துக்குப் போகும் போது ஆறு மணி தாண்டி விட்டது. பல் தேய்த்து விட்டு எழுத்தை தியாகம் செய்து விட்டேன். துணிகளை மடித்து வைத்து விட்டு கணினி மேசையை ஒதுங்க வைத்துத் துடைக்க ஆரம்பித்தேன். பழைய நாளிதழ்களை வெளியில் எடுத்துப் போட்டேன். குப்பைத் தொட்டியிலிருந்து பைகளை முடிச்சு போட்டு வெளியில் வைத்து விட்டேன். தரை தூத்து விட்டு, துடைக்க நேரம் இல்லாமல் துணி துவைத்தல். சட்டைகள், டி சட்டைகள், பனியன்கள் - 3, ஜட்டிகள் -3.

கந்த சஷ்டி கவசம் முதல் முறை சொல்லி முடித்தது எப்படி என்று தெரியாமலேயே ஓடி விட்டிருந்தது. அடுத்தது சிவபுராணம். மீண்டும் கந்த சஷ்டி கவசம். தெளிவுகள் மலர்ந்து கொண்டே இருந்தன. துணி துவைத்து விட்டுக் குளியல், தியானம். இடையில் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டேன். தண்ணீர் ஞாயிற்றுக் கிழமை எடுத்து வைத்தது என்று பட்டது. செவ்வாய்க் கிழமை தவற விட்டு விட்டேன். இன்றைக்கு எடுக்க வேண்டும்.

காலுறையை பையில் எடுத்துக் கொண்டு ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டேன். ஆற்காடு சாலை வழியாகப் போய் வங்கி தானியங்கி எந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டு வண்டியில் பெட்ரோல் போட்டு விட்டு அலுவலகம் போக வேண்டும். பணம் எடுக்கும் எந்திரத்தில் வழக்கம் போல சேவை இல்லை. புன்னகைக்கும் பெண் முகங்களின் தரிசனம். இன்றைக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் தவித்து விட்டு நல்ல முடிவாகப் பார்ப்போம் என்று தோன்றியது.

தேநீர்க் கடை முன்பு பல வண்டிகள். வண்டியை பக்கத்து உணவு விடுதி - மூடியிருந்தது - முன்பு நிறுத்தி விட்டு உள்ளே போனேன். ஒருவர் கூகுள், யாஹூ என்று அடித்துப் பேசிக் கொண்டிருந்தார். சர்க்கரை குறைவாக லைட்டாக தேநீர் சொல்லி விட்டு, நமது வழக்கமான தின்பண்டம் காணாமல் தவித்தேன். அப்போதுதான் எண்ணையில் போட்டு எடுத்துக் கொண்டிருந்தார் மீசைக் காரர். சிறுபயறுடன் இனிப்பும் தேங்காயும் போட்டு மைதாமாவில் தோய்த்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்கிறார். சுடச் சுட எண்ணைய் தழும்ப ஒன்றை எடுத்துக் கொண்டேன்.

அதன் பெயர் சுசியம். சாப்பிட்டு விட்டு தேநீர் குடித்து விட்டு பணம் கொடுக்கப் போனால், சாப்பிடுவதற்கு நாளிதழ் துண்டு ஒன்றை எடுத்துத் தருகிறார் பணம் வாங்குபவர். சாப்பிட்டாச்சு என்று சொல்லி காசைக் கொடுத்துக் கிளம்பினேன்.

அலுவலகத்தில் கதவைத் தட்டினால் திறந்தார். அவரை மீண்டும் தூங்கச் சொல்லி விட்டு கணினியை இணைத்து மின்தொடர்பை இயக்கினேன். தேவையான கோப்புகள், ஆவணங்கள், அச்செடுப்புகள் தயாரித்துக் கொண்டேன்.

ஆறரை மணி வரை வண்டி வரவில்லை. தொலைபேசினால் முந்தைய நாளே சொல்லி விட்டதாகச் சொன்னார். கடைப்பெண்ணுக்கு அழைத்தால், வந்து விடும் என்றார். அப்போதுதான் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. ஏழே கால் மணி வாக்கில் வந்து சேர்ந்தார். அதற்குள் இரண்டு முறை அழைத்து விட்டிருந்தேன். டெக்கான் குரோனிக்கிள் எடுத்துக் கொண்டு கழிவறைக்கும் ஒரு முறை.

போரூரில் நிறுத்திப் பணம் எடுக்க வேண்டும். மசூதிக்கு முன்பிருந்தே வாகன வரிசை. வண்டியை நிறுத்திக் காத்திருந்த நேரத்தில் இறங்கிப் போய் நடந்து போய் பணம் எடுத்துக் கொண்டேன். வண்டி நகர்ந்து இன்னொரு காத்திருப்பு, கணினியை திறந்து எழுத ஆரம்பித்தேன். வண்டி ஓடும் போது வயிறு தொந்தரவு செய்தது. 10 நிமிடத்தில் எழுத வேண்டியதை எழுதி மூடி வைத்து விட்டேன்.

வயிற்றுக்குப் பதில் சொல்ல பூந்தமல்லி தாண்டி திருமழிசையிலேயே சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று சொன்னேன். மோட்டல் ஹைவே ஒட்டி இருக்கும் சங்கீதா. இரண்டுக்கும் இடையே போட்டி போட வெளியிலிருந்து காரை அழைப்பவர்கள். அந்த விடுதியில் அழைத்து வரும் ஓட்டுனருக்கு இலவச உணவாம். ராணிப்பேட்டை, பெங்களூர் போகும் எல்லோருக்கும் கட்டாய நிறுத்தம் போல அந்த வேளையிலும் கூட்டம் நிரம்பியிருந்தது.

பொங்கல், வடை. லச்சுமணன் தோசை. பரிமாறுபவருக்கு பார்த்து இளக்காரம். ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வெட்டி வெட்டிப் பேசினார். கடைசியில் அவருக்கு சேவை அன்பளிப்பு தரவில்லை. உறைப்பது போலச் சொல்லி விட்டு தராமல் இருந்திருக்க வேண்டும். பக்கத்து மேசையில் இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும். அந்தப் பெண் தனியாக பணி புரிபவர் என்று தெரிந்தது. தனது விற்பனையாளர்களுடன் போகும் போதும் இப்படித்தான் உட்கார்ந்திருக்க வேண்டும். ஆண்கள் இரண்டு பேரும் அருகருகில், எதிரில் இவர் தொலைபேசியில் கதைத்துக் கொண்டு. கொண்டு வந்த இட்லி தட்டில் வடையைத் திருப்பி அனுப்பி விட்டார்.

உண்ட மயக்கம் தூக்கம் கண்களைச் சுழற்றியது. சுங்கச் சாவடி அருகில் வந்ததும் விழித்துப் பணம் கொடுத்தேன். இன்னும் சில நிமிடங்கள் கண் மூடி உட்கார்ந்து விட்டுத் தொலைபேசி அழைப்புகளை ஆரம்பித்தேன். பேசினால் பிடிகொடுக்கவில்லை. அலுவலகத்தில் பேசினேன். குறுஞ்செய்திகள் அனுப்பினேன். மதியத்துக்கு மேல் வரும்படி சொன்னார்.

மடிக்கணினியை இணைத்து அறிக்கைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். நான் என்னென்ன அறிக்கைகளைப் பார்க்கிறேன் என்பதைத் தொகுத்து ஒரு அறிக்கையாக தயாரித்து அளிக்கலாம். மின்னஞ்சல் அனுப்பும் வசதி கொடுத்து விட்டதாகச் சொல்லியிருந்தார்கள். திறந்து பார்த்தால் எந்த அடையாளத்தையும் காணவில்லை. கேட்டிருந்த அறிக்கை கிடைக்கவில்லை. அதற்கான வழி முறையை விளக்கினேன். தாமதமாகப் போகும் தோல்களுக்கு காரணத்தை உள்ளிடும் முறையில் ஒரு குறை இருந்தது. அதையும் ஒரு இஷ்யூ ஆக போட்டுக் கொண்டேன்.

பையை மூடி வைத்து விட்டு மேலே போய் விட்டுத் திரும்பினால் அழைத்தாராம். பேரம் எதுவும் பேசவில்லையா என்று கேட்கிறார். மழுப்பி விட்டு உட்கார்ந்தால் அதட்டலாக வேலை பற்றிக் கேட்கலானார். கெமிக்கல் சரக்கு, காஸ்டிங் அறிக்கை, உள்ளே விரட்டி வேலை வாங்குதல் என்று ஒவ்வொன்றுக்கும் நம் மீதே முழுப் பொறுப்பும் கொடுக்கிறார். மாலையில் போயிருக்கும் போதும் அதைச் சொன்னாராம். 'காசு வாங்குகிறீங்க இல்லையா, பொறுப்பும் உங்களுக்குத்தான்.' நியாயம்தான்.

அவர் சொன்னபடி போய் விபரம் கொடுக்கும்படிக் கேட்டேன். தினமும் என்ன நடக்கிறது என்று பார்த்து பேசி வர வேண்டும். கையில் விட்டு விட்டு வாளாவிருக்கக் கூடாது. காலையில் குழுவினரிடம் நேரம் செலவழித்தால், மதியத்துக்கு மேல் வாடிக்கையாளர்களுக்குச் செலவிட வேண்டும்.

11.45க்குக் கிளம்பினேன். வெளியில் நிறுத்தி விட்டார்கள். அங்கு உட்கார்ந்து கொண்டு தொலைபேசி 'மென்பொருளுக்குப் பயிற்சி வழங்குவது எங்கள் பொறுப்பதான். அதற்காக தனியாக காசு வாங்குவது நியாயம் கிடையாதுதான்' என்று ஒத்துக் கொண்டு, அவர்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரை தேவையான பயிற்சிகளை எப்போதும் இலவசமாகவே வழங்குவோம் என்றும் மென்பொருள் உருவாக்கத்துக்கு மட்டும்தான் காசு வாங்குவோம் என்று சொன்னேன். சரி என்று சொல்லி வைத்தார்.

12 மணிக்குக் கூட்டம் என்று சொல்லி 12.45 வரை இழுத்தடித்தார்கள். அடுக்கில் பொருத்திப் பயன்படுத்த வேண்டிய கணினியை வாங்கி விட்டிருந்தார்கள். தாமதமாகி விடக் கூடாது என்று வாங்கியிருக்கிறார். ஓடுவது என்னவோ நன்றாகத்தான் இருந்தது. கொஞ்ச நேரம் மென்பொருளை மேய்ந்து பார்த்தேன். கூட்டத்தில் நான்தான் தலைமை தாங்க வேண்டியிருந்தது. என்னையே தொலைபேசி அனுமதி வாங்கும்படி சொன்னார்கள். அவர் திட்ட ஆரம்பித்தால் டேனரியே அதிரும் என்று காரணம் சொன்னார்.

வெளியில் கிளம்பும் முன் அவருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டேன். கூட்டம் முடித்து கணினியில் போட்டிருந்த மாற்றங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். எல்லா மாற்றங்களும் வந்து சேர்ந்தனவா என்று பார்க்க வேண்டும். இன்றைக்கு பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இது போன்று மாற்றங்களை வாடிக்கையாளருக்குக் கொண்டு சேர்த்தல், மதிப்பு அலசுதல், வாடிக்கையாளர் தகவல் பரிமாற்றம் என்று எல்லா பொறுப்புகளையும் தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

மதியச் சாப்பாட்டுக்கு காய்கறி பிரியாணி, கத்தரிக்காய் கறி, தயிரில் போட்ட வெங்காயம். தொடர்ந்து சோறும் ரசமும். நான்கு பேர் உட்காரும் மேசையில் உட்கார விடப்பட்டோம். இன்னொரு ஆறு பேர் மேசையில் உட்கார்ந்தார்கள். தன் பையன் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் நிகழ்வுகளைச் சொன்னார். முந்தைய நாள் மாலையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் பற்றிக் கற்றிக் கொடுப்பதில் இருந்த சிரமங்களைப் பற்றிச் சொன்னார்.

சின்ன வயதில் நாமெல்லாம் ஒத்தையா, ரெட்டையா, பரட்டையா விளையாடுவதைக் குறிப்பிட்டேன். இரண்டு எண்களைக் கூட்டுவதில் எனக்கு ஏற்பட்ட மனத் தடுப்பைக் குறிப்பிட்டேன். சாப்பிட்டு விட்டு இரண்டரை மணி வரை மென்பொருளை இன்னொரு முறை பார்த்து விட்டுக் கிளம்பினேன். சாப்பாடு கிடைத்திருக்கவில்லை. என்னை விட்டு விட்டுப் போய்ச் சாப்பிட்டு விட்டு வரும்படி சொன்னேன்.

நேராக அறை. கோப்புகளை வாடிக்கையாளர் பதிப்பில் கொண்டு சேர்ப்பதில் பெரிய சுணக்கங்கள். ஒவ்வொரு பிரிவினராக வந்து தத்தமது குறைகளைச் சொல்வார்கள் என்றார்கள். குறைகள் எல்லாம் குழம்பில் கறிவேப்பிலை குறைவு என்பது போன்றவைதான். பேசிக் கொண்டிருக்கும் போதே அழைத்தார்கள். இயக்குனரைப் பார்க்க வேண்டும்.

புதிதாகக் கட்டப்பட்டிருந்த அலுவலகக் கட்டிடத்தில் சந்திப்பு. காகிதங்கள் புடைசூழ உட்கார்ந்திருந்தார். எந்த அறிக்கையும் வருவதில்லை என்று ஆரம்பித்தார். ஏழு மாதம் ஆகியும் ஏன் இந்த நிலைமை என்றார். 'எங்களைப் பொறுத்தவரை எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிறோம். என்ன குறை என்று புரியவில்லை' என்று பதிலளித்தேன். எல்லா பிரிவினரிடமும் பேசி விட்டு வரும்படி சொன்னார்.

இருவரையும் பார்க்கப் போனேன். உப்புச் சப்பில்லாதவையாகக் குறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். பழியை ஏற்றுக் கொண்டு அவர்கள் பிறளர்களையும் சுட்டிக் காட்டினேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. அவர்கள் சொன்னத் தேவைகளில் பல புரிதல் குறைவால் வந்தவைதான். ஞாயிற்றுக் கிழமை போய் அவற்றை விளக்குவதாகச் சொன்னேன்.

இருட்டி விட்டதாக ஒரு உணர்வு. வெளியில் எட்டிப் பார்த்தால் இன்னும் வெளிச்சம் இருந்தது. மணி ஆறு தாண்டியிருக்கவில்லை. வழக்கம் போல தமது பிரிவின் தேவைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அவரிடம் கோபமாகவே பேச ஆரம்பித்தேன். 'எங்களிடம் வேலை வாங்கிக் கொண்டே இருங்கள். உங்கள் தரப்பில் இருக்கும் ஒருங்கிணைப்புக் குறைபாட்டையும் எங்கள் தலையில் போடுவது என்ன நியாயம்' என்று முறையிட்டேன். அவர்கள் இயக்குனரை சந்தித்து நிலைமையை என் தரப்பில் விளக்க வேண்டும் என்று சொன்னேன். அவரிடம் கோர்வையாக என்ன நடக்கிறது என்று சொல்லி விட்டு வெளியில் வந்தோம்.

அதற்குள் நம்ம ஆட்கள் சொதப்பியிருந்தவற்றை சரி செய்தவற்றை கணினி அறையில் போய நிவர்த்தி அளித்து விட்டு புலம்பல்கள். அதை முடித்து விட்டுக் கிளம்பும் போது ஆறே முக்கால். விடுதிக்குப் போய் பெட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கற்பகத்தில் சாப்பிட முடிவு. ரவை தோசையும், அதன் பிறகு ஒரு கல் தோசையும், காபியும்.

ஒன்பதரைக்கெல்லாம் தூங்கும் வழக்கமாம். தாமதமாகும் என்றால் நாளைக்குப் பார்க்கலாம். ஒத்துக் கொண்டேன். இன்றைக்குப் போவது நடக்கப் போவதில்லை. தொலைபேசி சொல்லி விட வேண்டும். அடுத்த பத்து நாளைக்கு வேலை அதிகம்தான். நேரம் கிடைக்காதுதான்.

இன்று கிளம்பி நாளை வந்து சேருகிறார்கள். ஒரு வாரம் இங்கிருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகள் இருக்க வேண்டும். ஓட்டுனரிடம் பேசி கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டேன். அதிகாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம். ஒரு நாளைக்கு 100 ரூபாய். அலுவலகத்தில் காலணியை விட்டு விட்டு ஸ்கூட்டியில் வீடு. அதிகாலையில் கார் எடுக்க வசதி செய்யும் படி மேல் வீட்டு வண்டியை நகர்த்தச் சொன்னால், காலையில் நகர்த்துவதாகச் சொன்னார்கள். தொலைபேசி எண்ணும் இருக்கிறது.

தூங்கும் போது மணி 11. இரண்டரை மணியிலிருந்தே விழிப்பு கொடுத்தது. மூன்று மணிக்கு முன்பு எழுந்து விட்டேன். குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்று பாட விட்டுக் கொண்டு எழுத்து. இதை முடித்ததும் வீட்டில் கொஞ்சம் ஒதுங்க வைத்தல். தரை துடைக்க மனமுமில்லை. உடம்பில் தெம்பும் இல்லை. 10 நிமிடங்கள் படுத்து எழுந்து விட்டு வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். 1304 சொற்கள். இப்போதெல்லாம் வேகம் குறைந்து போனதா என்ன? ஒரு மணி நேரத்தில் 1500 தொடுவது கூட முக்கலாக இருக்கிறது!

புதன், ஜூலை 30, 2008

மாற்றங்களின் மடியில்.

மனதில் உழப்பிக் கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கண்டு விட்ட பிறகுதான் நிம்மதியாக மற்ற வேலைகளை செய்து திறமையாக செயல்பட முடியும்.
நான் என் சுயத்தை விட்டுக் கொடுத்து விடாமல் அவளது சுயத்தை விட்டுக் கொடுக்கும்படி கேட்காமல் முறை செய்து கொள்ள வேண்டும்.

மூன்று வழிகள் இருக்கின்றன:

1. இப்போதைய வாழ்க்கை முறைக்குள் நான் நுழைந்து கொள்வது. அவள் எப்படி வாழ்கிறாளோ அதில் எந்த வேறுபாடும் எதிர்பார்க்கக் கூடாது. நடவடிக்கைகளால் ஏற்படும் சலனங்களை செரித்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். எது என்னால் முடியும், எது முடியாது என்று முன்னமேயே தெளிவாக்கி விட வேண்டும்.

படுக்க பாய், என் துணிகளை நானே துவைத்துக் கொள்வது, திறந்த வெளியில் தூங்குவது என்று எதையும் பார்த்து அவள் எரிச்சல் அடையக் கூடாது. மாற்ற முயற்சிக்கக் கூடாது. அவளது வழியில் என்னையும் இழுக்க, அவளது நடவடிக்கைகளுக்கு என்னுடைய துணை தேட முயற்சிக்கக் கூடாது. அவளுக்கு ஏதாவது விருந்து நடத்த வேண்டுமானால், நானும் அதில் விருப்பத்துடன் முழுப் பங்கு வகிப்பேன் என்று எதிர்பார்க்காமல், தேவைப்பட்டால் என்னை வெளியில் தங்கிக் கொள்ளச் சொல்லி விட வேண்டும்.

புதிய வீட்டுக்குப் போக வேண்டும் என்று விரும்பினால் அதற்கான முயற்சிகளில் அவளே ஈடுபட வேண்டும். அவள் ஏதாவது சொல்லும் போது சண்டையைத் தவிர்க்கத் தலையை ஆட்டி விட்டு பின்னால் புழுங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

2. என்னுடைய இப்போதைய வாழ்க்கை முறைக்குள்

குழந்தைகளை ஆறாம் வகுப்பு முதல் அருகில் இருக்கும் நிர்மலா கான்வென்டில் சேர்த்து விடலாம். வீட்டில் சேர்த்து வைத்திருக்கும் பெரும்பாலான பொருட்களை வெளியில் கொடுத்து விட வேண்டும். சொத்து சேர்க்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பது வாழ்க்கையின் குறிக்கோளாக இல்லாமல், சாதிக்க வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும்.

இது நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவுதான்.

3. புதிய வீடு ஒன்று பார்த்து இரண்டு பேரும் அதில் குடிபுகுவது. 2 மாதங்கள் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்டோபர் 1ம் தேதி வீடு மாறுவதாகத் திட்டம் வைத்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டு மாதங்களிலும் இரண்டு பேரும் மனம் விட்டுப் பேசி வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் பற்றி புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். என்னுடைய விவகாரங்களை முழுமையாகத் திறந்து காட்டி விட வேண்டும். நிலைமையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். என்ன செய்தாலும் இரண்டு பேரும் கூடிப் பேசி முடிவெடுத்த பிறகுதான் செய்வோம் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் குறித்துப் பேச எண்ணம் இன்று காலையில் தோன்றியது. ராணிப்பேட்டையிலிருந்து திரும்பிய பிறகு அதைச் செய்யலாம்.

செவ்வாய், ஜூலை 29, 2008

இருப்பவர்களும் போனவர்களும்

காலை மணி ஐந்து இருபது. நேற்று சாப்பாடு கொஞ்சம் அளவுக்கு அதிகமாகப் போனது.

காலையில் எழுந்து உலாவி விட்டு வந்து, தூத்து ஒதுக்கிக் குளித்து விட்டு அவல் தாளித்தேன். சாப்பிடுவான் என்று செய்தது, அவன் கிளம்பிப் போய் விட்டான். கூடவே மேகி நூடுல்சும் செய்திருந்தேன். அதற்கு முன்பு குட்டே பிஸ்கட்டுகளை சாப்பிட ஆரம்பித்திருந்தேன்.

பிஸ்கட்டுகள் மூன்று நான்கு, அவல் ஒரு தட்டு முடித்த பிறகு இன்னும் பாதி தட்டு, முழுவதையும் முடிக்க நினைக்காமல் கொஞ்சத்தை விட்டு வைத்தேன். அதன் பிறகு அவல். அவலில் தேங்காய் நிறைய, வெங்காயம் போட்டு செறிவான உணவு. சாப்பிட்டு முடித்து பார்த்தால் நல்ல கிறக்கம். 10 நிமிடங்கள் ஒய்வெடுத்து விட்டு எட்டரை மணிக்குக் கிளம்பி அலுவலகம்.

நான் போய்த்தான் அலுவலகத்தைத் திறந்தேன். குடிப்பதற்கு காபி போட்டுக் கொண்டேன். மதியம் வரை நேரம் வேகமாகவே ஓடியது. முதலில் கணினிகளை சீர் செய்ய புதிய கணினிகளை வாங்கும் ஏற்பாடுகள் செய்ய முன்முயற்சிகள். அடுத்த கட்ட நிரல் உருவாக்கம் பற்றிப் பேச்சுக்கள். 11 மணிக்குப் பிறகு மாமாவும் வந்தார்கள். அவர்களுடன் 1 மணி வரை பேசிக் கொண்டிருந்தேன். சேர்ந்து நிரல் எழுதும் முறையை முயற்சிக்கும்படி சொன்னோம். உற்சாகமாக ஆரம்பித்து விட்டார்கள்.

மதியத்துக்கு மேல் 2.45க்கு நிறுவனத்தை விட்டு விலகியது குறித்துப் பேசுவதற்கு கூட்டம் என்று ஏற்பாடு. யாரும் அதிகமாகப் பேசவில்லை. நான் மட்டும் விளக்கம் அளித்தேன். வழக்கம் போல தனது எண்ணங்களை வெளிப்படையாகச் சொன்னார். மற்றவர்கள் அமைதி காத்தார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்றி உணர்வு பீரிடத்தான் செய்கிறது. காலையிலேயே என்ன ஆச்சு என்று விசாரித்தார். நம்முடைய பின்னூட்டத்தின் விளைவாக நடந்திருக்கிறது என்பது புரியத்தான் செய்கிறது. கொஞ்ச நேரம் பேசி விட்டுப் போனார். நாம் சொன்ன புகார்களும் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்பது அவரும் புரிந்து கொண்டிருக்கிறார். புதிதாக உருவாக்கிக் காட்டப் போகிறேன் என்று சொல்கிறார். மனதுக்குள் ஒரு நிம்மதி தோன்றியிருக்கும். எல்லோருமே இந்த முடிவின் சாதகங்களை உணரத்தான் செய்கிறார்கள். பேச்சோடு நின்று விடாது மிதமிஞ்சி போனால் கடிக்கவும் செய்யும் என்ற உணர்வும் தேவைதான்.

சோதனை செய்வதற்கான குழுவினரிடம் பேசிக் கொண்டிருந்தோம். முதலீடு செய்வது குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். இன்றைக்கு ஒரு நினைவூட்டல் அனுப்ப வேண்டும். இல்லை என்றாலும் அங்கு திங்கள் கிழமை முடிவதற்கு முன்னால் சொல்லி விடுவார்.

நாளைக்கு ராணிப்பேட்டை போக வேண்டும். இந்த மாதம் செய்த வேலைகளின் விபரங்களை எடுத்துக் கொண்டு போக வேண்டும். பணிகள் ஓரளவு வடிவுக்கு வந்திருக்கின்றன. அதை சரிவரக் காட்டி அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். அப்போதுதான் 5ம் தேதிக்கு முன்பு பணம் கைக்கு வரும்.

மாலையில் தொலைபேசி, நாலரை மணி வாக்கில். ஆறு மணிக்குப் பிறகு வருவதாகச் சொன்னான். ஆறரை மணிக்கு அழைப்பு, வளசரவாக்கம் வந்து விட்டானாம். மிகவும் கணக்குப் பார்க்கிறான். அலுவலகத்துக்கு வந்து பேசிக் கொண்டிருந்தான். விற்பனை பொதியலை எப்படி மேம்படுத்தலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நிறைய விபரங்கள் கிடைத்தன. அவன் கிளம்பும் போது கூடவே போய் ராமாபுரத்தில் இறங்கிக் கொள்ளலாம், இன்றைக்குப் போகும் போது ஸ்கூட்டியில் போகலாம் என்று திட்டமிட்டுக் கிளம்பினேன். சுப்ரபா விடுதியில் சாப்பிட்டோம். 30 ரூபாய்க்கு 5 சப்பாத்திகள், பருப்பு, குருமா, தயிர் கிச்சடி. ஆளுக்கு ஒரு தட்டு வாங்கிக் கொண்டு சாப்பிட்டோம். எனக்கு சாப்பிட முடியாமல் 1 சப்பாத்தியை அவனிடம் கொடுத்தேன். அதற்கு மேல் ஒரு பாவ்பாஜியும் வாங்கிக் கொண்டான்.

நான் ஐந்து மணி வாக்கில் டாட்டா உடுப்பிக்குப் போய் 2 இட்லி, பூரி, தேநீர் குடித்து விட்டு வந்திருந்தேன். அதனால் வயிற்றில் இடமில்லை. 80 ரூபாய்கள்தான் கட்டணம் வந்தது. நல்ல வேளையாக பையில் பணமும் இருந்தது. வீட்டுக்கு வந்து பார்த்தால் காலையில் செய்து வைத்திருந்த அவல் மீந்திருந்தது. தேங்காய் நிறைய போட்டிருந்ததால் கொஞ்சம் ஊச ஆரம்பித்திருந்தது. ஓரிரு கரண்டிகள்தான் இருக்கும். வாயில் போட்டுக் கொண்டேன். கைகால்கள் கழுவி விட்டு தியானத்தில் உட்கார்ந்தேன். வயிறு திம்மென்றிருந்தது. 20 நிமிடங்கள் உட்கார்ந்து மணி அடித்த பிறகு படுத்துக் கொண்டேன்.

திருநெல்வேலியில் தொலைதூர உணர்ந்தறிதல் துறையில் மேற்படிப்பு தேர்ந்தெடுத்திருக்கிறானாம். அண்ணா பல்கலைக் கழக வளாகத்திலேயே ஏதாவது கிடைத்தால் போவேன் என்று சொல்லியிருந்தான். இதை எடுத்து 2 ஆண்டுகள் படிக்கும் போது வருமானம் இருக்காது, படிப்புக்குச் செலவழிக்க வேண்டியிருக்கும். எப்படி சமாளிப்பான் என்று தெரியவில்லை. வீட்டிலிருந்துதான் வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். மாதம் வருமான இழப்பு 10000, செலவுகள் குறைந்தது 10000 என்று மாதா மாதம் 20000 ரூபாய்கள் சுமை. இரண்டு ஆண்டுகளில் 5 லட்ச ரூபாய் செலவாகும். அது கட்டுப்படியாகுமா என்று யோசிக்கவில்லை. இன்னும் குழந்தைத்தனம் மாறவில்லை அவ்வளவுதான்.

பகலிலேயே குறுஞ்செய்தி அனுப்பி விட்டான். எனக்கு ஒப்புதல் இருக்காது என்று அவனுக்குத் தெரியும். இரவில் வீட்டுக்கு வந்ததும், 'சரியான முடிவுதான் எடுத்திருக்கிறோமா என்று தெரியவில்லை' என்று ஆரம்பித்தான். 'இப்போது யாருக்கும் தெரியாது. சில ஆண்டுகள் கழித்துதான் தெரியும்' என்று முடித்துக் கொண்டேன். கையில் இருக்கும் பொறுப்பை நிறைவேற்றிக் காட்டாமல் தட்டிக் கழித்து விட்டு ஓடுவது என்ன நெறி என்று புரியவில்லை.

மாலையில் அடைத்த உணவுப் பொருட்கள் எல்லாம் சேர்ந்து இரவு 2 மணி வாக்கில் எழுப்பி விட்டன. விடாப்பிடியாக உறக்கத்தைத் தொடர்ந்தேன். 4 மணிக்குப் பிறகு விழிப்பு வந்தது. நாலே முக்காலுக்குப் பிறகு எழுந்திருந்தேன். அதற்குள் பாத்திரங்களைக் கழுவி வைக்கும் வேலையை ஆரம்பித்திருந்தான். எச்சில் பாத்திரங்களைப் போட்டு விட்டு இரவில் தூங்கக் கூடாது என்று சண்டையே போட்டிருக்கிறேன். அது தெரிந்தோ, அல்லது தானாக கற்றுக் கொண்டோ, இரவில் எவ்வளவு நேரமானாலும் பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டுத்தான் தூங்குவாள்.

எனது கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுத்துவதில் அவளுக்கு நிகர் அவளேதான். பேதி வருவதற்கு சிரமமாக இருக்கும் போது இந்திய முறை கழிவறையில் உட்கார்ந்தால் நல்லது என்று முதலில் நான் சொன்னதும் அதை உடனேயே எதிர்த்துப் பேசி மேற்கத்திய முறை கழிவறையிலேயே உட்கார வைத்தாள். போன வாரம், 'இந்த கழிவறையில் போனால்தான் சரியாக வரும்' என்கிறாள். சொல்லிக் கொடுத்துதானே வந்திருக்கிறது.

போன ஞாயிற்றுக் கிழமைக்குப் பிறகு பேசவில்லை. இந்த சனிக்கிழமை மாலை பேசினேன். நான்தான் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று இருப்பாள். அவள் வீட்டில் அவளது பாணியில் என்னால் வாழ முடியாது என்று தெளிவாகியிருக்கும். எளிய வாழ்க்கையின் சிறப்பை உள்வாங்கிக் கொள்ள சில ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு நாள் அதுவும் அவளுக்குப் புரிந்திருக்கும். என்னுடைய பிடிவாதமும் விடாமுயற்சியும் அவ்வளவு எளிதில் விட்டு விடுவதில்லையே!

பயணச்சீட்டு உறுதியாகி விட்டதா என்று பார்க்க வேண்டும். மற்ற பணிகளையும் விரிதாளில் குறித்துக் கொண்டு விட்டேன். பேசுவதே பெரிய பாடாக இருக்கிறது. இன்றைக்கு காலையில் 8 மணிக்கு பேசுவது என்று சொல்லி விட்டேன். இன்றைக்குப் பேச வேண்டும். ஒவ்வொருவராகப் பேச வேண்டும்.

திருவிழாவை முடித்து 1ம் தேதிதான் திரும்புகிறார். உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துள்ளார். காசு கொடுக்கச் சொல்லி விட்டேன். அலுவலகப் பணம் வந்த பிறகு அவர்களிடமிருந்து திரும்பி வாங்கிக் கொள்ளலாம். வாங்கி முதலீடாகப் போட வேண்டும். முதலீடாக வரும் பணத்தை எல்லாம் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் போடச் சொல்லலாம். ஜிபிஎஸ்சிலிருந்து எந்த நடவடிக்கையும் நேற்று காணோம். பேசாமல் சுப்ரீம் கம்பியூட்டர்ஸ் நிறுவனத்தில் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

மணி 5.50. 8 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 7.45க்குக் கிளம்பி விட வேண்டும். 7.20க்கு தியானம். 7 மணிக்குக் குளியல். ஆறரைக்கு முகம் மழிக்க வேண்டும். ஆறு மணிக்கு உலாவி விட்டு வரலாம். எழுதுவதற்கான நேரம் இன்னும் இருபத்தைந்து நிமிடங்கள் இருக்கின்றன. அதிலேயே 6.20 ஆகி விடும். அத்தோடு வீட்டை ஒதுங்க வைத்துக் குளித்தால்தான் நேரம் சரியாக இருக்கும். இல்லை என்றால் எழுத்தை இத்தோடு நிறுத்தி விட்டு நடக்கப் போகலாம். கண்ணிமைகள் கனமாகத்தான் இருக்கின்றன. அளவுக்கதிகமான தூக்கத்தால் என்று தோன்றுகிறது. இந்த ஜிஎடிட் பயன்பாட்டில் ஒவ்வொரு எழுத்தால் அடிக்க அதன் நெடுவரிசை எண் கூடிக் கொண்டே போகிறது. வரி மடிந்து அடுத்த வரியில் தொடர்ந்தாலும் எண்ணிக்கை தொடர்கிறது.

என்டர் அடித்து அடுத்த வரிக்குப் போகும் போது வரி எண் ஒன்று அதிகமாக நெடுவரிசை எண் ஒன்றிலிருந்து மீண்டும் தொடங்குகிறது. ஒரு வரியில் 130 நெடுவரிசைகள் என்று காட்டுகிறது. அதற்கான கட்டமைப்புத் தேர்வு ஒன்று இருக்கும் என்று தோன்றுகிறது. போய்ப் பார்த்தால் தெரியும்.

கட்டமைப்புத் தேர்வுக்குப் போய் தேடியது கிடைக்காவிட்டாலும் வேறு பல மாற்றங்களைச் செய்து கொண்டேன். வரி எண்ணைக் காட்டுதல், எழுத்துருவை மாற்றிக் கொள்ளுதல். தற்போதைய வரியை மாற்று நிறத்தில் காட்டுதல், வலது ஓர எல்லையை கோடு போட்டுக் காட்டுதல், கோப்பை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை தானாக சேமித்தல் என்று தேர்வுகளை செயல்படுத்திக் கொண்டேன். இந்த வரியில் 300 எழுத்துக்களுக்கு மேல் ஆகி விட்டது.

கிளம்பி விட்டான். 'அவரிடம் சொல்லி விடலாம் அல்லவா' என்று கேட்டு உறுதி செய்து கொள்கிறான். எடுத்த முடிவில் அவ்வளவு நம்பிக்கை. நன்றாகப் படித்து முன்னுக்கு வந்தால் சரிதான். எப்படியோ நம்முடைய பொறுப்பிலிருந்து போய் விடுகிறான். படித்து அரசுப் பணியில் சேர்ந்து கொள்வான் என்று தோன்றுகிறது. நன்றாக இருக்கட்டும் ஜூலை மாதம் என்பது எல்லோரும் விட்டுப் போகும் மாதம். போன ஆண்டும் ஒரு கூட்டமே போனது. வேறு யாராவது சேரத்தான் செய்கிறார்கள். அடுத்த ஆண்டு கவனமாக இருக்க வேண்டும்.

ஆறு மணிக்கான சங்கு ஊதி விட்டது. 5 நிமிடங்களுக்கு முன்பு ஒரு சங்கு ஊதியிருந்தது. அது 6 மணிக்கு இது ஆறு ஐந்து என்று கூட இருக்கலாம்.

ஞாயிறு, ஜூலை 27, 2008

கசப்பான முடிவுகள்

காலை மணி ஆறு பத்து. ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல வேலை நாளாக எழுந்து விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இவ்வளவு நேரமாகி விட்டிருக்கிறது.

நேற்று இரவு தூங்கப் போகும் முன்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து தியானத்தில் உட்கார்ந்தேன். 20 நிமிடங்களில் கொதித்து இருக்கும், எழுந்து அணைத்து விட்டுத் தூங்கலாம். காலையில் ஐந்தே முக்காலுக்கு எழுந்து அடுக்களைக்குப் போகும் போது அடுப்பு எரிந்து கொண்டே இருந்தது. தண்ணீர் எல்லாம் வற்றிப் போய் பாத்திரத்தில் வெள்ளையாக உறைந்து போயிருந்தது.

சமையல் வாயு வீணானது ஒரு புறமிருக்கு கொஞ்சம் மெலிதான பாத்திரமாக இருந்திருந்தால் உருகி வழிந்து பெரிய விபத்துக்கு வழி வகுத்திருக்கலாம். கவனக் குறைவு பெரிய எமனாக முளைத்திருக்கிறது. தியானத்தில் உட்கார்ந்து ஓரிரு நிமிடங்களில் தொலைபேசி விவகாரத்துக்கு அறிவுரை கேட்டேன். அதில் எண்ண ஓட்டம் முற்றிலும் வேறு திசையில் திரும்பி விட்டிருந்திருக்கிறது. அது எல்லாம் ஒரு சாக்காகச் சொன்னாலும் மனதின் விழிப்புணர்வு குறைந்துதான் போயிருக்கிறது.

தொலைபேசி விசாரிக்க வேண்டும் என்று மாலையில் தோன்றியது. வீட்டுக்கு வந்து தூங்கி விட்டேன். தூக்கத்திலிருந்து அவரது தொலைபேசி அழைப்புதான் எழுப்பியது. 'வேலைப்பளு அதிகமாக இருக்கிறது, குழுவில் ஒத்துழைப்பு சரியில்லை. வேலையை திடீரென்று விட்டுப் போய் விடாமல், பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறேன்' என்கிறார்.

இதை முடித்ததும் ஏழேகால். சமையல் மேடையை ஒதுங்க வைத்து, தரை தூத்து பாத்திரங்களைக் கழுவி முடிக்க 8 மணி ஆகி விடும். குடிப்பதற்கு வெந்நீரும், கஞ்சி வேக வைக்கவும் அடுப்பில் ஏற்றி விட்டு உலாவப் போய் விட்டு வரலாம். 8.30 மணி. துணி துவைத்துக் குளித்து முடிக்க 9.30 மணி. தியானம் 10 மணி. சாப்பிட்டு விட்டுக் கிளம்பினால். 11 மணிக்கு அலுவலகம் போய் விடலாம்.

இதை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும். குறித்து வச்சாச்சு.

இந்த வாரம் உருப்படியாக நிறைய வேலை பார்த்து விடவில்லை. வியாழக் கிழமை 11 மணிக்குக் கிளம்பிப் போய் மாலை வரை காத்திருப்பதில் போனது. வெள்ளிக் கிழமை 9 மணிக்குக் கிளம்பிப் போய் மாலை வரை அதற்குப் பிறகு அடையாறு போய் சிஎல்ஆர்ஐ போய் அங்கு கல்லூரி சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றது, திரும்பி வந்து அலுவலகத்தில் கணிசமாக நேரம் செலவிட்டேன். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது பலனுள்ளதாக இருந்தது.

நேற்றுக் காலையில் 4 மணிக்கு எழுந்து ஐந்தரை வரை எழுத்து. தொலைபேசி. ஆறரை மணிக்கு அலுவலகத்துக்கு வந்து விடுவேன் என்று தகவல். பேருந்தில் ஏறி விட்டானாம். மற்ற வேலைகளை எல்லாம் நிறுத்தி விட்டுக் குளித்து தியானம் செய்து முடிக்கும் போது மணி ஆறு பத்து. மீதி இருந்த இட்லிகளை சாப்பிட்டு விட்டுக் கூடவே மூன்று தோசைகளும் ஊற்றிக் கொண்டேன்.

ஆறரை மணிக்குக் கிளம்பி அலுவலகம். டாட்டா உடுப்பி ஓட்டலில் சாப்பிட்டு விட்டுக் காத்திருப்பதாகச் சொல்லியிருந்தான். அந்த அதிகாலை வேளையில் டாட்டா உடுப்பியில் சேவை ஆரம்பித்திருக்காது. பசியோடு அலுவலகத்துக்கே வந்திருந்தான். அவனையும் அழைத்துக் கொண்டு தேநீர் கடைக்குத் திரும்பி வந்தேன். சுசியம், தேநீர் சாப்பிட்டு விட்டுத் திரும்பினோம். 7 மணி சந்திப்பு, தொடர்ந்து 8 மணி எல்கலம் குறித்த விவாதம். ஒன்பது மணிக்குத்தான் அவன் சாப்பிட முனைந்து முடியாமல் போனது நினைவுக்கு வந்தது. இவ்வளவுதானா ஆட்கள் மீதான கரிசனம்!

வினையூக்கியும் எட்டு மணி சந்திப்புக்கு வந்து விட்டார். ஒன்பதேகாலுக்கு ஆலோசனைக் கூட்டம். வழக்கம் போல திறமையாக கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தினார்.

ஒன்பதரை மணிக்கு மின்னஞ்சல்கள் எழுத ஆரம்பித்தேன். மூன்று நிறுவனங்களுக்கு செய்தி அனுப்பினேன். எதுவும் நடவடிக்கை இல்லை. வாராந்திர சந்திப்பு எத்தனை மணிக்கு வைத்துக் கொள்ளலாம். எல்லோரும் மதியமும் இருப்பதானால் 2 மணிக்கு வைத்துக் கொள்ளலாம் இல்லை என்றால் காலையில் 11 மணிக்கு. 11 மணிக்கு என்று முடிவு செய்தார்கள்.

11 மணிக்கு சில பணிகள் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்ததால் 11.30க்கு என்று தள்ளிப் போடப் பட்டது. 11.30க்கு ஆரம்பித்தோம். முதலில் அறிமுகம். அவன் சொல்லும் சில வாக்கியங்கள். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் புகார் சொல்லுவதை ஊக்கப்படுத்துவது எப்படி என்று விவாதம். சென்ற வாரம் சொல்லப்பட்ட புகார்களைக் குறித்து விவாதம்.

ஒவ்வொருவராகப் பேசுவது. கொடுத்துப் போன குறிப்புகளுடன் நான் ஆரம்பித்தேன். தொடர்ந்து என்னுடைய பணி விபரங்களைப் பகிர்ந்து கொண்டேன்.

எல்லோரும் சோதனை கிளையில் வேலையை முடித்து சோதனைக்கு என்று அனுப்பும் போது பயன்படுத்தப்படும் கிளையின் பிரதியில் இணைத்து சோதனை செய்து அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். அதை செயல்படுத்துவதாக ஒப்புக் கொண்டார்.

தொடந்து ஒருங்கிணைந்த சோதனை, நிரல் சரிபார்த்தல் விபரங்களையும் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று பேசினோம். வாடிக்கையாளருக்கு எவ்வளவு மதிப்புக் கொடுக்கலாம் என்று அலசும் முறை குறித்து அறிமுகம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து என்னுடைய விளக்கத்தையும் அளித்தேன். அதை ஏன் நம் சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்று ஒரு கேள்வி எழுந்தது. அப்படி இணைத்தால்தான் வாடிக்கையாளர்கள் நம்முடைய நலன்களைப் பார்த்துக் கொள்வார்கள்.

கூட்டம் நடக்கும் போதே, தொலைபேசி அழைப்புகள் வந்தன. சரியான பசி. உடனடியாக மதிய உணவை முன்னறைக்குக் கொண்டு வந்து சாப்பிட ஆரம்பித்தோம். கூட்டு போட்டு ஒரு முறை, கீரை போட்டு ஒரு முறை, குழம்பு, ரசம் என்று தொடராமல் மோர் போட்டுக் கொண்டு குழம்பைத் தொட்டுக் கொண்டு முடித்து விட்டேன்.

மதியத்துக்கு மேல் சிறப்பாக எதுவும் ஓடவில்லை. உட்கார்ந்து ஒரு தொழிற்சாலையிலிருந்து இன்னொன்றுக்கு உற்பத்திப் பொருட்களை அனுப்பும் முறை குறித்து விளக்கினேன். கொஞ்ச நேரம் குட்டித் தூக்கம். பயனர் கையேடு. கொஞ்சம் சாப்பிட்டு விடலாம் என்றும் தோன்றியது. அடக்கிக் கொண்டேன். தண்ணீரைச் சுட வைத்து காபி போட்டுக் கொண்டேன்.

புறப்பட ஆயத்தமாகவே அவனைக் கொண்டு விட்டு விடுவதாகத் தாமதப்படுத்தினேன். ஸ்கைப் அழைப்பு, தரவுத் தள வடிவமைப்பில் தனது கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தான். மாஸ்டர் டேபிள்களை எல்லாம் ஒரே டேபிளாக வைத்துக் கொள்ளலாமே என்று ஒரு ஆலோசனை, ஓரிரு மதிப்புகள் மட்டும் வரும் டேபிள்களைச் சேர்த்துப் போடலாமே என்று ஒரு ஆலோசனை. ஒரு அணுகுமுறை எல்லா இடத்துக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது அல்லவா!

கிளம்பி போரூரில் இறக்கி விட்டு விட்டு சாலை வழியாக ராமாபுரம். கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும், பைக்கில் உடைந்து தொங்கும் தலை விளக்கை மாற்ற வேண்டும். மின்கலனை மாற்ற வேண்டும். அப்பா பைக்கை விற்று விடச் சொல்கிறார்கள். மடிக்கணினி வாங்குதல், புதிய அலுவலகத்துக்கு இடம் பார்த்தல் போன்ற பணிகளை முடுக்கி விட வேண்டும்.

நிறுவனத் தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தல், சொன்ன ஆலோசனைகளை செயல்படுத்துதல் என்று ஏராளமானவை செய்ய வேண்டி இருக்கின்றன.

வீட்டுக்கு வந்து காலையில் படிக்காமல் விட்டு விட்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்ஸ் எல்லாம் மேய்ந்து கொண்டே தூங்கி விட்டேன். பாத்திரத்தை உருக வைத்து விட்டுத் தூங்கிப் போயிருந்தேன்.

இன்னும் 22 நிமிடங்கள் இருக்கின்றன. மூன்றில் இரண்டு பங்குதான் முடிந்திருக்கிறது. 750 சொற்கள் எழுதியிருக்கிறோம். மூன்றில் ஒரு பங்கு 375. அதை மூன்றால் பெருக்கினால் 1125தான் வருகிறது. நிமிடத்துக்கு 20 சொற்கள் கூட வராது. உண்மையில் 930 சொற்கள் முடிந்திருக்கின்றன. கோப்பை சேமிக்காமல் எண்ணியிருக்கிறேன். 20 நிமிடங்களில் 415, ஒரு மணி நேரத்தில் 1245. கிட்டத்தட்ட நிமிடத்துக்கு 21 சொற்கள். இடையில் விரிதாளில் நிரப்பல் செய்யப் போனதால் குறைந்திருக்கிறது.

முரளிதரனும் மெண்டிசும் இந்திய கிரிக்கெட் அணியைச் சுருட்டி கையிடுக்கில் எடுத்துக் கொண்டு விட்டிருக்கிறார்கள். இலங்கை எடுத்த 600 ஓட்டங்களுக்குப் பதிலாக முதல் வாய்ப்பில் 223 ஓட்டங்கள், இரண்டாவது வாய்ப்பில் 138 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார்கள். பொதுவாக இது போல தோற்கும் போது மொத்த அணியும் சொதப்பி ஒருவர் மட்டும் அரை சதம் அல்லது சதம் அடித்திருப்பார். இங்கு எல்லோரும் துண்டு துண்டாக விளையாடியிருக்கிறார்கள். நிறைய பேர் இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையை எட்டி ஆட்டமிழந்திருக்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால், ஆட்டக் களமோ பந்து வீச்சோ விளையாட முடியாத அளவுக்கு மோசமாக இல்லை. மொத்த குழுவின் ஒருங்கிணைப்பும் மனநிலையும் நிலைத்து நின்று ஆடுவதற்கான வழியில் போகவில்லை என்பதுதான்.

அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்து 29 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். வெள்ளிக் கிழமை பெங்களூருவில் வெடித்த குண்டுகளைத் தொடர்ந்து சனிக்கிழமை அகமதாபாத்தில். வெள்ளிக் கிழமை காமராசரைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது குணடு வெடிப்புச் செய்தியைச் சொன்னார். அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

'வெற்றி பெறுவதற்கான துடிப்பு வேண்டும். மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கான தாகம் வேண்டும்' என்று பேசிக் கொண்டிருந்தோம். என்னிடம் அது குறைவு. கையில் போதுமான அளவு காசு வந்து விட்டால், வேலைகள் ஓரளவு சுமுகமாக நடக்க ஆரம்பித்து விட்டால், என்னிடம் துடிப்பு குறைந்து விடும். அப்படி இல்லாமல், மேலே மேலே போவதற்கு விடாமுயற்சியில் ஈடுபட வேண்டும்.

அடுத்த வாரப் பணி அட்டவணைக்கான கோப்பைத் தயார் செய்து கொண்டேன். 1122 சொற்கள் ஆகியிருக்கின்றன. இன்னும் 7 நிமிடங்கள் இருக்கின்றன.

வாய்ப்பை விட்டு விட்டு நாளைக்கு மேற்படிப்புக்கான ஆலோசனை அமர்வுக்குப் போகிறான். எனக்கு வருத்தம்தான். இப்படி ஒரு இடத்தில் நிலைத்து வேலை பார்க்க முயற்சிக்காமல் ஓடுவது எப்படி சரியாகும். தன் வாழ்க்கை, தன் சுகம் என்று மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது சரியில்லை.

காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து தனது வேலையைப் பார்த்து விட்டு வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? இதையும் சொல்லிப் பார்க்க வேண்டும்.

சனி, ஜூலை 26, 2008

விட்டுப் போக வேண்டும் கடிதம்

அன்புள்ள ,

நீங்கள் நம் குழுவிற்குள் சரிவர பொருந்தி வருவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை பேசும் போதும் எப்படியாவது என்னை திருப்திப் படுத்தி விட வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டு வந்து நான் கேட்கும் கேள்விகளுக்கு நான் என்ன பதில் எதிர்பார்ப்பேன் என்று திட்டம் போட்டு பேசி தப்பித்துக் கொள்வது போலத் தோன்றுவதுண்டு. நீங்கள் இன்னும் பணியில் நீடித்தால் மற்றவர்களுக்கு தீங்கு நேரும் என்று கவலை வந்து விட்டது.

போன மாதமே பேசும் போது தொழில் நுட்ப அறிவு, மற்றவர்களுடன் இணைந்து பணி செய்தல், வேலையில் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் இந்த மூன்றிலுமே உங்களது தரம் ஆகக் குறைந்த அளவில்தான் இருக்கின்றது. தொழில் நுட்ப அறிவு இல்லா விட்டாலும் பரவாயில்லை, குழுவில் சுமுகமாக நடந்து கொள்ளுதல், பொறுப்பேற்று பணி செய்தல் இந்த அடிப்படை தகுதிகள் இல்லாமல் நீங்கள் நிறுவனத்தில் நீடிக்க முடியாது என்று சொல்லியிருந்தேன்.

ஒரு மாதம் ஆகப் போகிறது. இரண்டு வகையிலும் உங்களிடம் பெரிய மாற்றம் எதுவும் தென்படவில்லை. நீங்கள் வேறு இடங்களில் முயன்றால் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வேலை செய்தது வரை நன்கு சாதித்தே காட்டினீர்கள். ஸ்ரீபெரும்புதூரில் நன்கு வாடிக்கையாளர் சேவை அளித்தீர்கள். இப்போது பொறுப்பு ஏற்றுக் கொண்டு செய்ய முயற்சிக்கிறீர்கள். இதை எல்லாம் பாராட்டும் இதே சமயத்தில் குழுவிற்குள் உங்கள் நடவடிக்கைகளால் ஏற்படும் சேதங்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

உங்கள் திறமை, உங்கள் குணத்துக்கு ஏற்ற வேலை, ஏற்ற நிறுவனத்தில் நல்ல பணியில் அமர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு ஆண்டு முடித்துள்ள நீங்கள், 15 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வர வேண்டிய சம்பளப் பணத்தோடு உங்களை வெளியில் அனுப்பி விடுகிறோம். இடையில் வேறு இடத்தில் வேலை தேடுவதற்கும் உதவி வேண்டுமானால் செய்கிறோம். ஆனால் இங்கு உங்கள் தேவை, பயன் இத்தோடு முடிந்து விட்டது என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு முடிந்த அளவு வாய்ப்பு கொடுத்து பார்த்து விட்டோம். நமது குழுவின் இயல்புகளுடன் உங்கள் இயல்புகள் பொருந்துவதாகத் தெரியவில்லை. அதனால் இத்துடன் பிரிவது நமக்கு நல்லதாக இருக்கும்.

நீங்களாக வேலையை விட்டுப் போவதாகவும் வைத்துக் கொள்ளலாம். அல்லது நிறுவனம் உங்களை வேலையிலிருந்து நிறுத்தியதாகவும் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படி வைத்துக் கொள்ளலாம். நாளையிலிருந்து நீங்கள் வர வேண்டாம் என்று நினைக்கிறேன்.

என் மீது ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள். நிறுவனத்தில் ஏதாவது மாற்றங்கள் மேம்பாடுகள் செய்ய வாய்ப்பிருந்தால் அவற்றையும் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறோம். இன்னும் ஓரிரு ஆண்டுகள் கழித்து வேறு ஏதாவது நிலையில் நீங்கள் சேருவதற்கு முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.

இப்படி ஒருவரை அனுப்ப வேண்டியிருக்கிறதே என்ற வருத்தம் எனக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், என்னை மட்டும் பொறுத்தது இல்லை இந்த நிறுவனம். முதலீடு செய்திருப்பவர்கள், தமது வாழ்க்கையை செலவழித்து உழைக்கும் குழுவினர், நமக்கெல்லாம் படி அளக்கும் வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் சரியான வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தால்தான் அவர்களின் நம்பிக்கையையும் தேவைகளையும் சரிவர நிறைவேற்றுவதாக அமையும்.

நாம் நண்பர்களாகவே பிரிவோம். எல்லோருக்கும் எல்லா இடத்திலும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே சொன்னது போல வேறு ஒரு நிறுவனத்தில் உங்களைப் போல போட்டி போடும் மனப்பான்மை உடைய குழுவில் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று தோன்றுகிறது. அந்த வாய்ப்பை ஏன் விட்டு விட வேண்டும். அதை நோக்கிப் போவது நல்லது என்பது என்னுடைய கருத்து.

உங்கள் வீட்டில் வந்து சாப்பிடவும், அப்பா அம்மாவைச் சந்திக்கவும் கூட செய்தேன். எனக்கு நீங்கள் மிகவும் நல்லவராகவே நடந்து கொண்டீர்கள். ஆனால் வாழ்க்கையில் நாம் விரும்பும் எல்லாம் நடந்து விடுவதில்லை. சில நேரங்களில் கசப்பு மருந்துகளையும் சாப்பிட வேண்டியிருக்கிறது. இதை அப்படி ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு நகருங்கள்.

உங்கள் அறிவுத் திறன், போட்டி போடும் இயல்பு, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற தீவிரம் எல்லாமே பல இடங்களில் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். குறிப்பாக விற்பனை இலக்கு அமைத்து அதைச் செய்து முடிக்கும் அமைப்புகளில் நீங்கள் நன்கு செயல்படலாம். அந்த மாதிரி நிறுவனம் ஒன்றில் நீங்கள் சேர்ந்து கொண்டால் மிகவும் திறமையாக செயல்படுவீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

எனக்குத் தனிப்பட்ட முறையில் யாருடனும் உறவு கிடையாது. ஒவ்வொருவரும் நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் மூலம் வந்து சேர்ந்தவர்கள்தான். உங்கள் திறமை, பங்களிப்பு, நல்வாழ்வு இவைதான் எனக்கு நோக்கம். இவற்றில் ஏதாவது ஒன்று சரிவர அமையா விட்டாலும் சூழ்நிலையை மாற்றிக் கொள்வதுதான் விவேகம். இப்போது அதை நீங்கள் செய்வது அறிவுடமை என்று நினைக்கிறேன்.

நாளையிலிருந்து நீங்கள் அலுவலகத்துக்கு வர வேண்டாம். உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. சில நேரங்களில் அறுவை சிகிச்சைதான் சரியான முடிவைத் தரும் என்றால் அதையும் செய்யத்தான் வேண்டும். அதுதான் இப்போது நடக்கிறது.

ஊற்றுக்கண்

நேற்றைக்குக் காலையில் நான்கு மணிக்கு முன்பே எழுந்திருந்தேன். முந்தைய இரவு சீக்கிரமாகத் தூங்கியதால் எழுந்திருக்க முடிந்தது. மதியம் அலுவலகத்தில் சாப்பிட்டு விட்டுப் போன பிறகு எதுவும் சாப்பிடாததால் வயிறும் லேசாக இருந்தது.

நான்கு மணியிலிருந்து 5 மணி வரை எழுத்து. குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்று எம் எஸ் பாடும் ராஜாஜியின் அமர வரிகளை ஓட விட்டுக் கொள்வது பழக்கமாகி விட்டிருந்தது. இப்போது ஒலி வர மாட்டேன் என்கிறது. சீக்கிரமாகக் கிளம்பி அலுவலகத்துக்குப் போய் விடலாம் என்று திட்டம் இருந்தது.

தரை தூத்துத் துடைக்க வேண்டும் என்று தோன்றியது. அதைச் செய்யாமல் தப்பி விடலாம் என்றும் தோன்றியது. வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. இப்படி பொறுப்புகளிலிருந்து தப்பி ஓட முயற்சிப்பது ஆக்க வழியில் செலுத்தாது. தூத்து முடித்ததும் துடைக்க ஆரம்பித்தேன். முகம் மழிக்காமல் குளித்து விட்டு, அப்போதும் நாளிதழ் வந்திருக்கவில்லை. வெளியில் வெளிச்சம் வரவில்லை. மேகமூட்டமும் மழைத்தூறலுமாக இருந்தது.

தியானம் முடித்து எழுந்துதான் நாளிதழ் கண்ணில் பட்டது. வழக்கம் போல தான் எடுத்த நிலையை நியாயப் படுத்துவதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகளையும், கட்டுரைகளையும் தேர்ந்தெடுத்து போடுகிறது. அதற்கு எதிர்மாறான நிலை எடுத்திருந்த எகனாமிக் டைம்சில் அதற்கு நேர் மாறான கருத்துக்கள். ஒரே நாளிதழை படித்தால் மூளைச் சலவைதான் நடந்து விடும்.

சாப்பிடத் தேவையில்லை. தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டேன். நாளிதழுடன் கழிவறையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அலுவலகம் நோக்கிப் புறப்படும் போது ஆற்காடு சாலை வழியாகப் போனேன். டாட்டா உடுப்பி விடுதியின் அருகில் இருக்கும் தேநீர் கடையில் சுசியனும் தேநீரும் குடித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம். 100 ரூபாய் நோட்டை மாற்றி சில்லறை வாங்கிக் கொண்டேன். 6 ரூபாய் செலவு. மீதி 94 ரூபாய் கொடுத்து விட்டார்.

இந்த 94 ரூபாய் நாள் முடிவதற்குள் முடிந்து போயிருந்தது. பெரியமேட்டுக்குப் புறப்படுவதற்கு முன்னால் கடைக்குப் போய் எலுமிச்சம்பழம் வாங்கினேன். இரண்டு பழங்கள் 3 ரூபாய். பையைத் தூக்கிக் கொண்டு பேருந்தைப் பிடிக்க முடிவு. பேருந்துகள் எல்லாம் கூட்டம் நெரிசலுடன் வந்தன. காத்திருந்து பார்த்து விட்டுக் கடைசியில் ஒரு பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். வடபழனி நிலையத்துக்கு அருகில் இறங்கிக் கொண்டு அவருக்கு 10 ரூபாய் கட்டணம்.

பேருந்து நிலையத்திலிருந்து 15F வண்டி. அது திரும்ப ஆற்காடு சாலையில் பயணித்து, சின்மயா நகர் வழியாக கோயம் பேடு பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து திரும்பி கோயம்பேடு ரவுண்டானா வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையைப் பிடிக்கும். அதில் கட்டணம் 5.50 காசுகள் ஏதோ வாங்கினார்கள். அதன் பிறகு செலவில்லை. நேராக போக வேண்டிய அலுவலகத்துக்கு அருகில் இறங்கி நடந்து போய் விட்டேன்.

போகும் போது மணி 11.30. காத்திருத்தல் ஆரம்பமானது. எகனாமிக் டைம்சில் எல்லா செய்திகள் கட்டுரைகளையும் அலச ஆரம்பித்தேன். திரும்பத் திரும்பப் படித்து எதையும் விட்டுப் போகாமல் படித்து விட்டேன். 12 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கான மின்வெட்டு. ஜன்னல்களைத் திறந்து வைத்தார்கள். வெட்புளூ கொடுக்கும் ஒருவர் உள்ளே போயிருந்தார். நிறைய பேர் வந்து காசோலைகளை வாங்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். தூக்கம் தூக்கமாக வரா விட்டாலும் நேரம் மெதுவாகவே நகர்ந்தது. நாம் ஏன் இப்படி உட்கார வேண்டும் என்று 12.10க்கு நேரம் அமைத்துக் கொண்டு நாளிதழ், மற்ற பொழுது போக்கு இல்லாமல் மன எண்ண அலைகளில் நீந்த ஆரம்பித்தேன்.

ஹேனிபல் லெக்டர் தன் மன அறைகளில் எண்ணங்களைச் சேமித்து வைத்திருப்பார் என்று எழுதியிருப்பார்கள் அந்தக் கதையில். சந்தித்ததில் ஆரம்பித்து வரிசையான நினைவுகளை முன் கொண்டு வர முயற்சித்தேன். ஆரம்பத்திலும், கொஞ்சம் அவமானமான இடங்களிலும் மனம் தப்பிக்கப் பார்த்தாலும் விடாப்பிடியாக தொடர்ந்து கொண்டிருந்தேன். நல்ல நேரம் போனது. உள்ளே பேசிக் கொண்டிருந்தவர் வந்து விட்டார். சில நிமிடங்களில் என்னையும் அழைத்து விட்டார்கள்.

உள்ளே அவரது மகனும் இருந்தார். திருமண வரவேற்பைக் குறித்து பேச்செடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று தோன்றினாலும் அதை நானாக தொடங்க மனம் வரவில்லை. 'தொலைபேசியில் வந்தவர்களுக்கு நன்றி சொல்லும் போது அவர்கள் ஏற்பாடுகளைப் புகழ்ந்து சொல்ல வேண்டும் என்று ஈகோ சொல்கிறது' என்றார். அந்த ஈகோவுக்கான வழி, என்னிடம் கேட்ட கேள்வி.

'என்ன சிவா, உங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதா, பேச்சுலரா? ஏதோ டைவர்ஸ் ஆகியிருக்கிறது, பிரிந்து இருக்கீங்க அப்படீன்னு சொன்னாங்களே' என்று ஆரம்பித்தார்.

'கல்யாணம் ஆகி விட்டது சார். இரண்டு குழந்தைகள். மன வேறுபாடு காரணமாக கொஞ்சம் பிரிந்து இருக்கிறோம். சட்டப்படி கணவன் மனைவிதான், இரண்டு பேருக்கும் கொஞ்சம் ஈகோ அதிகம். அதுதான் பிரச்சனை.'

'அவங்க ஏதோ தோல் வேணும் என்று கொடுத்தாங்க அந்த சமயம் புதுசா யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிட்டேன். அவர்தான் சொன்னாரு.... அவருக்கும் அவங்க சொல்லவில்லை, வேறு யாரோ சொல்லியிருக்காங்க...'

'பீகாரில் பிடெக் படிச்சவங்க. நாங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மற்றவர்களிடம் சொல்வதே இல்லை. எனக்கு அது எளிதான காரியம். என்னை யாரும் மனைவி பற்றி சீக்கிரம் கேட்டு விடுவதில்லை. ஒரு பெண் வேலைக்குப் போகும் போது முதல் சந்திப்பிலேயே கணவரைப் பற்றிக் கேட்டு விடுகிறார்கள். அவங்களுக்குத்தான் என்னை விட சிரமம்' என்றேன்.

இங்கு வேலை பார்க்கும் போதே என்னைப் பற்றிய விபரங்களைச் சொல்லியிருப்பார் என்று தெரியும். அவருக்கு இப்படி கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது, கேட்டு விட்டுப் போகட்டும். திடீரென்று என்ன அக்கறை, ஏன் கேட்கிறார் என்று மட்டும் கடைசி வரை தெரியவில்லை. சீனாவிலிருந்து தோல் ஆர்டர்கள் குறைவதால் மூலமாக முயற்சிக்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ. இல்லை, என் மனைவிக்கு தோல் தர மாட்டேன் என்று சொன்னால், நான் வருத்தப் பட்டிருப்பேனோ என்று நினைக்கலாம். தெரியவில்லை.

அல்மா மேட்டர் என்ற நிறுவனத்தின் சார்பில் நடந்த மேலாண்மை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிறாராம். Frozen Matter என்ற பத்திரிகை வெளியிடும் நிறுவனம். 'அவர் சொல்லும் நெறிமுறைகளை எல்லாம் தவறாமல் கடைப்பிடித்துதான் வருகிறேன். இப்படிச் சொல்லிக் கேட்கும் போது அதற்கு ஒரு உருவம் கிடைத்து சின்னச் சின்ன விட்டுப் போனவற்றைப் பிடித்துக் கொள்ள முடிகிறது. இப்படி நடைமுறையில் தெரியாதவர்களுக்குக் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கலாம்.'

ஒன்றேகால் மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். சந்திப்பதற்கு மூன்று நான்கு பேர் வந்து விட்டிருந்தார்கள். என்னை வெளியில் அனுப்பி அப்புறம் கூப்பிடுவதாகச் சொன்னார். கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தேன். உள்ளே போனவர்களை நிற்க வைத்தே பேசிக் கொண்டிருந்தார். உட்காரும் அளவுக்கு இருக்கைகளும் போதாது, நிறைய பேர் உள்ளே போய் விட்டார்கள்.

போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று கோல்டன் டவர்ஸ் விடுதிக்குப் போனேன். சுவர்களில் எல்லாம் 30 ரூபாய்களுக்கு மினிமீல்ஸ் என்று எழுதிப் போட்டிருந்தார்கள். அதை முயற்சிக்கலாம் என்று கேட்டேன். சிறிது நேரம் பொறுத்து வந்து சேர்ந்தது. பாயாசம், தயிர் சாதம் இரண்டையும் விட்டு விட்டு மீதி அனைத்தையும் சாப்பிட்டேன். குட்டி குட்டியாக இரண்டு பூரிகள், மிகக் குட்டியாக. பருப்பில் மூழ்கிய வடை ஒன்று, சுண்டல், பச்சையாக ஒரு கலந்த சோறு, சாம்பார் கலந்து சோறு, குருமா, உருளைக்கிழங்கு வத்தல். 3 ரூபாய் சேவை அன்பளிப்பு. 33 ரூபாய் தீர்ந்தது. 57.50 ரூபாய்கள் தீர்ந்து விட்டிருந்தன.

திரும்பிப் போய்ப் பார்த்தால் சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. பேச வேண்டும். அவர் கொஞ்ச நேரம் காக்க வைத்து விட்டுக் கூப்பிட்டார். விபரங்களை விளக்கினேன். உள்ளே போய் அனுமதி வாங்கி விட்டார். தொடக்கத்திலேயே வேலை குறித்து பேசி விட்டோம். அதற்கான தனது முடிவையும் சொல்லி விட்டார்.

வேலைக்குக் கிடைக்கும் ஆட்களின் தரம் குறைந்து விட்டதைக் குறித்துப் பேச ஆரம்பித்தார். வீட்டு வேலைக்கு 200 ரூபாய் சம்பளத்தில் 15 ஆண்டுகள் முன்பு ஒருவர் வேலை செய்தார். அப்போது இருந்த தரம் இப்போது மூன்று பேருக்கு 3000 கொடுத்தும் கிடைப்பதில்லை என்று ஆரம்பித்து எங்கெங்கோ போனது. இடையில் நேரம் பார்த்து கழன்று கொண்டு விட்டார்.

தர வேண்டிய பணத்திலும் பாதி வந்து விட்டது. காசோலை போடச் சொன்னார். அதன் பிறகும் விட மனதில்லை. அவர் முகத்தைப் பார்த்து விடை கேட்டால் பேச்சைத் தொடர்ந்தார். திருமண வரவேற்பு குறித்துக் கேட்டார். எனது கருத்தைச் சொன்னேன். திமுக தலைவர்கள் படம் வைத்திருந்ததைக் குறிப்பிட்டு கட்சி பற்றி கேட்டேன். அடிப்படையில் அவரது அப்பா காங்கிரசு காரர் என்று ஆரம்பித்து பெரிய தலைவர்கள் அவரது வீட்டிற்கு வந்து சாப்பிட்டுப் போனதைக் குறித்து சொன்னார். காமராசரைக் குறிப்பிட்டதும், அவரிடம் உண்மையிலேயே ஏதாவது சிறப்பாக இருந்ததா என்று கேட்டேன். 'அவருக்கு என் கையால் சாப்பாடு பரிமாறியிருக்கிறேன். இன்றைக்கும் அவரைப் பின்பற்றுபவனாகத்தான் இருக்க விரும்புகிறேன்'

'அவர் செய்தது போல வேறு எந்தத் தலைவரும் இந்த மக்களுக்குச் செய்தது இல்லை. அந்த நன்றியறிதல் இல்லை. இன்றைக்கு பீமாராவ் அம்பேத்கார் என்று அலைகிறார்கள்' என்று இடித்துக் கொண்டார்.

காமராசர் குறித்துத் தான் புத்தகத்தில் படித்தது, திரைப்படத்தில் பார்த்தது என்று சொன்னார். அமெரிக்காவிலிருந்து கோதுமை உதவி வருவதை எதிர்த்து, ரூபாயின் மதிப்பு குறைவதை எதிர்த்து, தரையடி சாலை போடுவதற்கு மாற்றுக் கருத்து சொன்ன மத்திய அமைச்சரிடம் சொன்னது என்று கேள்விப்பட்ட காமராசரின் இயல்பை சித்தரிக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்ல ஆரம்பித்தார். காமராசரின் அரசியல் வாழ்க்கைப் பயணம் குறித்தும் பேசினார். எனக்கு நாலரை மணிக்கு ஆல்பா செயற்குழு சந்திப்பு. மணி மூன்றரை தாண்டி விட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் பேசி விட்டுத்தான் விடை கொடுத்தார்.

வெளியில் வரும் போது நான்கு மணி தாண்டியிருந்தது. தொலைபேசினால் வேறு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். காத்திருந்து சந்தித்தேன். இன்றைக்கு வாணியம்பாடி போகச் சொல்லியிருந்தார். அதைத் திரும்பவும் வலியுறுத்தினார். காசு எதுவும் கேட்காதீர்கள் என்று அவரே சொல்ல முயன்றார். அதுவும் கேட்க வேண்டும் என்று சொன்னேன்.

தொழிலில் இருக்கும் சிரமங்கள், பண நெருக்கடிகள் என்று பாடினார். செழிப்பைப் பார்த்து விட்டு இங்கு வந்து இப்படி பஞ்ச நிலையைப் பார்க்க மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. இன்றைக்குக் காலையில் நினைவாக வாணியம்பாடி போகச் சொல்ல வேண்டும். அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் வரும் போது நேரம் சரியாக 4.30 மணி. சாருக்குத் தொலைபேசி தாமதமாகும் என்று தகவல் சொன்னதும், நீ வந்து விடு என்றார்.

அடையார் போக பேருந்து பிடிக்க பொது மருத்துவமனைக்கு முன்பு போக வேண்டும். நடையைப் போட்டேன். மத்திய ரயில் நிலையத்தின் புறநகர் ரயில் பகுதியில் போய் தரமணி போகும் ரயில் இங்கு வருகிறதா என்று பார்க்க முயன்றேன். எதுவும் தெரியவில்லை. மீண்டும் சாலைக்கு வந்து தரையடிப் பாதை வழியாகக் கடந்து மருத்துவமனை எதிரில் நின்று கொண்டேன். போரூர் தாண்டி போகும் சொகுசுப் பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டேன். சைதாப்பேட்டைக்குச் சீட்டு. 8 ரூபாய் என்று நினைவு. 65.50 ரூபாய்கள் தீர்ந்தாச்சு.

சைதாப்பேட்டையில் இறங்கி 23C பேருந்து. 5.20 ஆகியிருந்தது. பையிலிருந்த காசு ஆட்டோ ஏதாவது பிடித்துப் போவதற்கு போதுமானதாகவும் இல்லை. அந்த பேருந்து சீட்டிற்கு 2 ரூபாய்கள். 67.50 ரூபாய் ஆச்சு. மொத்தம் 35 ரூபாய்கள் பையில் இருந்தன. 2 பத்து ரூபாய் நோட்டுகள், மூன்று 5 ரூபாய் நாணயங்கள்.

கூட்டத்தில் பஃப், இனிப்பு, மிரிண்டா கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்டு விட்டு, கையெழுத்துகளைப் போட்டு விட்டு வந்ததற்கு ஒரு சில கருத்துகளையும் சொல்லி விட்டு ஆறரை மணிக்குக் கிளம்பினேன். எதிரில் சந்திரா தேநீர் கடையில் 6 ரூபாய்க்கு தேநீர்.

ஐஐடி எதிரில் பேருந்துகள் நெருக்கடியில் நுழையாமல் பகிர்வூர்தி. அதில் முதலில் 7 ரூபாய் என்று சொல்லி, அப்புறம் 10 ரூபாய் வாங்கிக் கொண்டார்
கிண்டியில் பார்க்கும் போது 9 ரூபாய்கள்தான் மிஞ்சியிருந்தன. சொகுசுப் பேருந்து ஒன்றில் 7 ரூபாய்க்கு போரூரில் இறக்கி விட்டார்கள். 2 ரூபாய் காசுடன் வளசரவாக்கம் போகும் வண்டியில் ஏறினால் கட்டணம் 2.50 நடத்துனரிடம் யாசகம் பெற்றுக் கொண்டேன். இடையில் 15 ரூபாய்கள் எங்கு போயின என்று கணக்கு இல்லை.

அலுவலகத்தில் முழு வீச்சில் வேலை போய்க் கொண்டிருந்தது. செய்த வேலையின் மதிப்புக் கணக்கிடக் கேட்டார். வரைவோலை வந்திருந்தது.

கொஞ்சம் அழுத்தத்தில் இருப்பதாகப் பட்டது. பேசி கொஞ்ச நாட்கள் ஆகி விட்டது. போய்ப் பார்த்து அவர் செய்த ஒரு வேலையில் குறை கண்டுபிடிக்கும்படி ஆனதுதான் மிச்சம். அதில் இன்னும் காயப்பட்டிருப்பார். பேச ஆரம்பித்ததும் தனது சிரமங்களை எல்லாம் கொட்ட ஆரம்பித்தார். சரியான நேரத்தில் ஒருவரிடம் பேச வைத்து விடும் ஆண்டவன் அருளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். முதலில் அவரது குழப்பங்களை எல்லாம் கேட்டுக் கொண்டு, மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சித்தேன். சின்ன ஒரு கணக்குச் சொல்லி விடை கண்டுபிடிக்கச் சொன்னால் தவித்து நிற்கிறார். கொஞ்சம் கோபப்படவும் செய்தார்.

கடைசியில் அவர் செய்து வரும் வேலையைப் பாராட்டி, இதை. இன்னும் சிறப்பாக செய்து மேம்படுத்தி அடுத்தவரிடம் கையளிக்க வேண்டும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள் என்று சொன்னேன். அதற்குள் ஒன்பதரை மணி ஆகி விட்டது. மற்றவர்கள் எல்லோரும் போய் விட்டிருந்தார்கள். 'வேலையை விட்டுப் போனதின் தாக்கம் தெரியாமல் சமாளித்து விட்டது மிகவும் பெருமையாக இருக்கிறது' என்று அவரே சொன்னார். எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. ஒருவரின் இடைவெளி விழுந்து விடாமல் சமாளித்து மூடிக் கொண்டு விட்டோம்.

நாளைக்கு ஊருக்குப் போவதை முன்னிட்டு இன்றைக்கு அலுவலகத்தில் இருக்கத் திட்டமிட்டிருப்பது போலத் தெரிந்தது. அவர்கள் தங்கும் விடுதிக்கு அருகில் கொண்டு விடுவதாகச் சொல்லி விட்டு விட்டேன். வீட்டுக்கு வரும் வழியில் பசுமைக் கடையில் இட்லி மாவு, கத்தரிக்காய் தொக்கு வாங்கி விட்டு. வீட்டுக்குள் நுழையும் போது மணி 10. இட்லி ஊற்றி எடுத்து சாப்பிட்டு விட்டுக் கை கழுவும் போது 10.20தான் ஆகியிருந்தது.

10.30க்கு தியானம். ஏதோ மறந்து போய் உட்கார்ந்திருந்து மணி அடித்த பிறகு எழுந்து தூங்க ஆரம்பித்தேன். தொலைபேசி. 6.30க்கு சந்திக்கலாமா என்று கேட்கிறான். கலாமே. இதை முடித்து விட்டுக் குளித்து, தியானம் செய்து விட்டுக் கிளம்பினால். அவனையும் போய் அழைத்து வந்து விடலாம்.

வெள்ளி, ஜூலை 25, 2008

பொருளும் பொருளற்றதும்

நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் எழுத்து. இப்படி விட்டுப் போவதைக் குறிப்பிடுவது கூட பொருளற்றதாகி வருகிறது. ஒரு நாள் எழுதினால் நான்கு நாட்கள் தவறுவது வளமையாகி வருகிறது.

சனிக்கிழமை அலுவலகத்தில் வேலைகள் விவாதங்கள் முடிந்த பிறகு நண்பர் வீட்டுக்குப் போய் குழந்தைகளை அழைத்துக் கொள்ளக் கிளம்பினேன். முன்னறிவிப்பாக எதுவும் சொல்லியிருக்கவில்லை. போகும் போது விளையாடிக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சியில் ஜெட்டிக்ஸ் போட்டு உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் தயிர் சோறு மட்டும் சாப்பிட்டிருந்தார்களாம்.

வீட்டுக்கு வந்ததும் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். தொலைபேசி. 'நாலரை மணி வாக்கில் வருகிறேன். குழந்தைகளை ஸ்கேட்டிங் அழைத்துப் போய் விட்டு மாலையில் திரும்ப உன் வீட்டிற்கு வருகிறேன். காரை மதுரவாயலில் விட்டு விட்டு உன்னுடன் பைக்கில் வந்து தங்கி விட்டு ஞாயிறு அன்று திரும்பி விடுகிறேன்.'

'மாலையில் ஏழு மணிக்கு ஒரு திருமண வரவேற்பு இருக்கிறது. அதற்குப் போய் விட்டு நான் வருகிறேன். வீட்டின் சாவியை உன்னிடம் கொடுத்து வைக்கிறேன்.' இந்தத் திருமண வரவேற்புக்கு அவளும் வருவாளா என்று கேட்க ஒரு திட்டம் இருந்தது.

'நீ உன் திருமண வரவேற்பையே கட்டிக் கொள். நாங்க இன்றைக்கு மாலையே திரும்பி விடுகிறோம்'

மனம் சலித்துப் போனது. குழந்தைகளிடம் அவங்க அம்மா வந்து அழைத்துப் போகிறார் என்று சொல்லி விட்டு கடைக்குப் போய் பால் வாங்கி வருதல் முதலான வேலைகளை ஆரம்பித்தேன். என் மனநிலையும் முகமும் இருண்டு விட்டதை இரண்டு பேரும் உணர்ந்து விட்டார்கள். ஏதேதோ திட்டம் போட ஆரம்பிப்பவர்கள், ஞாயிற்றுக் கிழமை இங்கு இருக்க மாட்டோமே என்று நிறுத்திக் கொண்டார்கள். சொல்லிக் கொண்டிருந்த கதையை முடித்து விட்டேன். கடைக்குப் போகும் போது 'அடிக்கடி இங்கு வருவாயா' என்று கேட்டால் 'முடியாது 'என்றாள். 'மம்மி வர விட மாட்டாள்.'

'மம்மி திட்டும் போது உன்னைக் குறித்துச் சொன்னால் நினைவுக்கு வரும். மற்றபடி உன்னை நினைத்ததே கிடையாது'

அவர்கள் பால் குடித்து விட்டு விளையாடப் போக, சின்னத் துணிகளை அலசிப் போட்டேன். நாலரைக்கு வர வேண்டியவர் இன்னும் வரவில்லை. நானும் வெளியில் குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தேன். பூப்பந்தாட்ட மட்டையைப் பயன்படுத்தி கிரிக்கெட். முதலில் மட்டை பிடிக்க பந்து போட்டான். அவள் 12 ஓட்டங்கள் எடுத்து விட்டாள். அதன் பிறகு மட்டையடி. நான் அதற்குள் தீவிரமாக பந்து தடுப்பாளனாக இறங்கியிருக்க இரண்டு முறை அவனது பந்தடிகளைப் பிடித்து ஆட்டமிழக்கச் செய்து விட்டேன்.

'அப்பா, நீ விளையாடும் போது முழுமையா பந்து தடுக்க வரவில்லை. நான் விளையாடும் போது அப்பா பந்து பிடித்துதான் நீ வெற்றி பெற்றாய்' இது சரியான விளக்கம்.

அடுத்தது என்னை விளையாடச் சொன்னார்கள். இரண்டாவது முறை அவுட்டானால் ஆட்டம் இழந்து விடுவோம். அதற்குள் எத்தனை ஓட்டங்கள் எடுக்கிறேன் என்று பார்க்க வேண்டும்.

நான் அடித்து விட்டு ஓடாமல் இருந்தால் ஓடச் சொல்கிறார்கள். என்னை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று இரண்டு பேருக்கும் துடிப்பு. நான் அடித்த அடி எல்லைக் கோட்டைத் தாண்டிப் போனால் இரண்டு பேருக்கும் துள்ளல். எப்படியாவது எனது மனதுக்குக் களிப்பூட்ட ஆர்வமாக இருந்தார்கள்.

சீக்கிரமாகவே 15 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று விட்டேன். அடுத்தது பந்தைப் போட்டுப் பிடிக்கலாம் என்று சொல்ல, அடுத்த கிரிக்கெட் ஆட்டம். ஆளுக்கு 6 பந்துகள் மட்டும் என்று கிரிக்கெட் ஆட்டம்.

முதலில் 6 பந்துகள். கடைசியாக நான். இதிலும் நான் வெற்றி பெற்று விட்டேன். உள்ளே போய் ஏதோ செய்து கொண்டிருக்கும் போது, 'மம்மி வந்தாச்சு' என்று குரல்கள். 'நான் வரேன்னு சொல்லியிருந்தேன் இல்லையா, ஏன் இன்னும் பைகள் எதுவும் தயாராகவில்லை. போகணுமா வேண்டாமா' என்று ஒரு அதட்டல். 'அவனை என்ன பார்க்கிறாய். அவன் என்ன செய்து விடுவான்' என் பக்கம் பார்வையைத் திருப்பிய ஒரு குழந்தைக்குக் கடிவாளம். யாரும் கட்டுப்படுத்த முடியாதாம்.

நான் திரும்பியே பார்க்கவில்லை. குழந்தைகள் அமைதியாக பைகளை எடுத்துக் கொண்டு வண்டியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். நான் வெளியில் போகவில்லை. குமுறிக் கொண்டு வந்தது. கூடவே இந்த இரண்டு நாட்களில் குழந்தைகளுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கும். குழந்தைகளுக்கு டாட்டா சொல்லப் போனால் அழுது விடுவேன் என்று தோன்றியது.

எல்லாம் தயாரான பிறகு, உள்ளே வந்து, விடை பெற்றுக் கொண்டு போனாள். உண்மையான ஒரு அடாவடி பேர்வழி. பன்னாட்டு அவதாரம் என்று அப்பா சொல்வது சரியாகத்தான் இருக்கிறது.

வரவேற்புக்குப் போக தயாராகி அலுவலகத்துக்கு வந்து விட்டேன். பசிக்கு சாப்பிடலாம் என்று டாடா உடுப்பி ஓட்டல். போகும் வழியில் தொலைபேசி, 'ஏன், எங்களுக்கு வழியனுப்பக் கூட வெளியில் வரவில்லை' 'ஒன்றுமில்லை. பிரிதல் என்றால் வருத்தம்தானே' என்று சொல்லி வைத்து விட்டேன். ஆறரை மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பலாம் என்று திட்டமிட்டிருந்து 7 மணிக்குத்தான் கிளம்பினோம். அதுவரை காலணி எல்லாம் போட்டுக் கொண்டு காத்திருந்தேன்.

குறுஞ்செய்தி. '8 மணிக்கு எங்களை வந்து அழைத்துக் கொள்'. தொலைபேசி எட்டேகால், எட்டரை மணிக்குத்தான் வர முடியும் என்று சொன்னேன். திருமண மண்டபத்தில் போய் உட்கார்ந்திருந்தோம். இன்னொரு நண்பரும் வந்த பிறகு சேர்ந்து வாழ்த்துச் சொல்லி விட்டுச் சாப்பிட்டு விட்டுக் கிளம்ப வேண்டும். வாழ்த்துச் சொல்ல நீண்ட வரிசை. மணி ஏழரை ஆகி விட்டது.

'நான் வருவதற்கு தாமதமாகும். ஒன்பது மணிக்கு மேலாகி விடலாம். குழந்தைகள் களைப்பாக, தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள். இங்கிருந்து கிளம்பும் போது தொலைபேசுகிறேன்'

கிளம்பும் போது எனக்கும் தூக்கக் கலக்கம். தொலைபேசினால். ஒன்று தூங்கி விட்டது என்றாள். 'நானும் வீட்டுக்குப் போகிறேன், நாளைக்குக் காலையில் வாங்களேன்' என்றேன். மறுத்து விட்டாள். வீட்டுக்கு வந்து நல்ல தூக்கம். காலையில் 7 மணிக்குத்தான் எழுந்திருந்தேன். பல் தேய்த்து விட்டு நாளிதழ்களை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். ராணிப்பேட்டையிலிருந்து வந்து கதவைத் தட்டிய பிறகுதான் எழுந்தேன்.

வீடு தூத்துத் துடைத்து உதவியுடன் உப்புமா செய்து சாப்பிட்டுக் கொண்டோம். துணிகளை ஊற வைத்திருந்தவற்றை தன் துணிகளைத் துவைத்து முடித்த பிறகு துவைத்து முடித்தேன். மதியம் சாப்பிட, உப்புமா செய்த பிறகு மீந்திருந்த தேங்காயையும் பயன்படுத்தி பயறு கஞ்சி வைத்துக் கொள்ளலாம். கடையில் பயறு வாங்கிக் கொண்டேன்.

பாத்திரத்தில் வேக வைத்து விட்டுக் குளியல், தியானம் எல்லாம் நடந்தது. நன்கு குழைந்து தேங்காய் சேர்த்து வந்திருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து முடித்து விட்டோம். 'எங்களை மதிய உணவுக்கு வெளியில் அழைத்துப் போக முடியுமா' தொலைபேசி அழைப்பு.

சரி என்று கிளம்பி விட்டேன். அலுவலகத்திற்குப் போனால் வேலை செய்து கொண்டிருந்தார். கணினிப் பையை வைத்து விட்டுச் சட்டையை மாற்றிக் கொள்ளாமலேயே கிளம்பினேன். மதுர வாயலுக்குப் போனால் இன்னும் தயாராகியிருக்கவில்லை. தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளிடம் குறிப்பேட்டை வாங்கிக் கேள்விகள் கேட்டால் ஒன்றும் சுகமில்லை. குத்துமதிப்பாகத் தெரிந்து வைத்திருந்தான். பல கேள்விகள் தெரியவே இல்லை.

அவள் காரை ஓட்ட நான் முன்னிருக்கையிலும் குழந்தைகள் பின்னிருக்கையிலும் உட்கார்ந்து கொண்டோம். ஸ்ரீதேவி குப்பம் சாலை வழியாக வந்து ஆற்காடு சாலை முனையில் நிறுத்தி விட்டு நடந்து போக முடிவு செய்தோம். வெயிலும் கடுமையாக இருக்க ஒரு ஆட்டோவில் ஏறி 20 ரூபாய் கொடுத்து ஹாட் சிப்ஸ். 225 ரூபாய்க்குக் கட்டணம்.

எனக்கு வித விதமான சாதங்கள், நான், தயிர் சாதம், காய்கறி பிரியாணி. சாப்பிடும் போது கதை சொல்ல ஆரம்பித்தாள். அவன் அம்மா அருகில் அனுப்பி விட்டு அருகில் நான் உட்கார்ந்து கொண்டேன். நல்ல கற்பனை வளம் கொண்ட கதைகள். கடைசியில் சாகுந்தலம் கதையும் சொல்ல ஆரம்பித்தாள். துஷ்யந்தன் என்ற பெயர் மட்டும் அவளுக்கு நினைவுக்கு வரவில்லை. நல்ல முகபாவங்களோடு சின்னச் சின்ன நுணுக்கங்களையும் விட்டு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் அம்மா கிண்டலாக, எரிச்சலாக அவள் வாயை மூட முயன்றாள்.

சாப்பிட்டு விட்டுக் கீழே இறங்கும் போது இனிப்புப் பெட்டியைப் பார்த்து நின்று விட்டான். ஆளுக்கு இரண்டு குலாப் ஜாமூன்கள். எனக்கு ஒப்புதலில்லை. ஏற்கனவே சதை போட்டு ஒரு குட்டி யானை போல ஆகி விட்டிருக்கிறான். நடந்தே கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தோம். நடக்கும் போது மனதில் ஓடும் எண்ணத்துக்கு ஒரு ரூபாய் என்று சொல்லி ஒரு ரூபாய் கொடுத்தேன்.

காரில் போய் இறங்கியதும் நான் வீட்டுக்குள் போகாமலேயே கிளம்பி விட்டேன். என்னுடன் அனுப்பி பால் வாங்கிக் கொடுக்கச் சொன்னாள். கடையில் பால் வாங்கி விட்டுத் திரும்பி வீட்டில் விட்டு விட்டு அலுவலகத்துக்கு நான் போனேன். மாலையில் இணைய வழி உரையாடல்.

விவாதம் 10 மணி வரை போனது அதன் பிறகு உட்கார்ந்து விவாத விபரங்களைத் தொகுத்துக் கொண்டிருந்தேன். முழுதும் முடிக்காமல் கிளம்பி விட்டேன். திங்கள் கிழமை அதிகாலையில் எழுந்து விட்டேன், ஆனால் எழுதவில்லை. ராணிப்பேட்டைக்குக் கிளம்ப நான் அவனுக்கும் சேர்த்து சப்பாத்தி போட்டேன். தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், உருளைக் கிழங்கு பயன்படுத்த ஒரு குருமாவும். அவன் சாப்பிடாமலேயே கிளம்பி விட்டான். 10 சப்பாத்திகளையும் தனியாகச் சாப்பிட்டேன். அதுவோ என்னவோ நாள் முழுதும் டல்லாக இருந்தது. வராமலிருக்கும் முதல் பணி நாள் கூட.

பகலில் அலுவலகப் பணிகள் சலனம் நிறைந்த மனதுடனேயே போய்க் கொண்டிருந்தன. பிற்பகலில் தொலைபேசி. ஏதோ புதிய வீடு வாடகைக்குப் பார்த்திருக்கிறாளாம். மேலே ஒரு பகுதி, கீழ்த் தளத்தில் ஒரு பிரிவு. மேல் தளத்தில் நாங்கள் இருந்து கொள்கிறோம். கீழ்த்தளத்தில் நீ இருந்து கொள். முதலில் எடுத்துக் கொள்ளச் சொல்லலாம் என்று நினைத்தேன். அதன் பிறகு நீயே வந்து விட்டால் குழந்தைகளுக்கு அப்பாவும் கிடைத்து விடும். நமக்குள் பிரச்சனை இல்லாமலேயே அதைச் செய்து விடலாம்' என்று சொன்னாள். இரண்டு நாள் யோசித்துச் சொல்கிறேன் என்று வைத்தேன்.

சிறிது நேரம் கழித்து தொலைபேசி. வீட்டு விபரம் அவனிடமும் சொல்லி என்னை இடிக்கச் சொல்லியிருக்கிறாள். அவனிடம் அந்த விபரங்களில் விவாதிக்க இறங்காமல் அவன் தேர்வு குறித்துப் பேச்சைத் திருப்பினேன். அப்பா அம்மாவின் விவகாரங்களில் குழந்தைகள் தீர்மானிப்பவர்களாக மாறினால். குழந்தைகளின் எதிர்காலம் குலைந்து போய் விடும்.

செவ்வாய்க் கிழமை ராணிப்பேட்டை. நிதானமாகவே எழுந்து எழுதாமலேயே நகர்ந்தேன். 6 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டு தேநீர் கடையில் சுசியனும் தேநீரும். ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த சேர்ந்து கொண்டான். அவனிடம் நீளமாகப் பேச முடிந்தது. நான்கு நிறுவனங்களுக்கும் போய் வந்தோம். அவனுக்கு மிக நிறைவு. திரும்பி வரும் வழியில் அண்ணனின் விவகாரங்களும் வெளியில் வந்தன.

மாலையில் அப்பாவிடம் பேசி விட்டு, அண்ணனிடமும் என் கருத்தைச் சொன்னேன். 'எனக்கு வரவிருக்கிற பணத்தில் உனக்கு நான் தர வேண்டியதைக் கொடுத்து விடுகிறேன். ஆனால் இப்போதைய நிலவரம் மிகவும் கலக்கம் அளிப்பதாக இருக்கிறது' என்று சொன்னால் அவன் ஒத்துக் கொள்ளவில்லை.

புதன் கிழமை அலுவலகத்துக்கு வந்திருந்தான். காலையில் நன்கு தூங்கி தாமதமாக எழுந்து வீட்டில் எழுதாமல் சமைக்காமல், தேநீர் கடையில் சுசியன் சாப்பிட்டு விட்டு வேலைகள் ஆரம்பித்திருந்தேன். பயனர் கையேடு எழுதுதல், மின்னஞ்சல்கள், ஆவணங்கள். தொழில் நுட்ப மேம்பாடுகள் என்று நேரம் சுறுசுறுப்பாகவே போனது. இடையில் டாடா உடுப்பி ஓட்டலில் பொங்கல், தோசை காபி.

நேற்றும் சோம்பேறியாகவே தூங்கிக் கொண்டிருந்தேன். அலுவலகம் போகும் வழியில் ஹாட்சிப்சில் வயிற்றையும் நிரப்பிக் கொண்டேன். அதன் விளைவு சந்திக்கும் போது தெரியத்தான் செய்தது. மதியம் புறப்படும் முன்பு, வந்து சேர்ந்திருந்த மதிய உணவையும் சாப்பிட்டுக் கொண்டேன். அதன் பிறகு பேருந்தில், துக்ளக் வாங்கிக் கொண்டு. காலையில் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை படித்திருந்தேன். சுஜாதாவின் எழுத்துக்கள், துக்ளக் இவை எல்லாம் மன சமநிலையைக் குலைத்துப் போட்டு விடும் படைப்புகள். தெரிந்தே செய்த பிறளல்கள்.

அலுவலத்துக்குத் திரும்பும் போது 6 மணி தாண்டி விட்டது. புதிய முன்முயற்சிகள் எல்லோருக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. குறிப்பாக மனநிலை குழுவினரின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது என்று பட்டது. ஒரு நாள் விரதம் இருக்கலாம் என்று முடிவு. அலுவலகத்தில் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை.

மதியம் 1 மணிக்குச் சாப்பிட்டது. இன்றைக்கு 1 மணி வரை சாப்பிடாமல் இருக்கலாம்.

ஞாயிறு, ஜூலை 20, 2008

குழந்தையும் தெய்வமும்

மூன்று நாட்களுக்கு விடுமுறை. என்ன ஒரு விடுமுறை!

புதன் கிழமை, 16ம் தேதி ராணிப்பேட்டை போக வேண்டாம் என்று முடிவு செய்து ஏற்பாடு ஆகியிருந்தது. பகலில் செய்ய வேண்டிய வேலைகளை முடித்து, பேச வேண்டியவர்களிடம் பேசி, விவாதிக்க வேண்டியதை விவாதித்து ஒரு ஏழரை மணி வாக்கில் வெறுமையான மாலைப் பொழுதை நிரப்ப என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டிய நேரத்தில் தொலைபேசி அழைப்பு.

'வந்து உன் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போ. இவ்வளவு நாள் நான் பார்த்துக் கொண்டேன். நானே சுமையை சுமக்கணும்னு தலையெழுத்தா என்ன?'

'ஏன் திடீர்னு என்னாச்சு?'

'போதும், மூணரை வருஷம் நான் பார்த்துக்கிட்டாச்சு. நீ அப்பாதானே. நீயும் வந்து பொறுப்பை ஏத்துக்கோ. குழந்தைகளைப் பார்த்துக்க வேலையாள் இல்லை என்று ஒன்றரை மாதத்துக்கு முன்பே சொன்னேன். எதுவும் இதுவரை செய்யவில்லை. வந்து இதுங்களை கூட்டிக்கிட்டு போ'

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சில நிமிடங்கள் சென்று நான் அழைத்தேன். 'ஏன், திடீர்னு என்னாச்சு?'

'நான் உன்கிட்ட பேசத் தயாரா இல்லை. உன்னோடு என் உறவே அத்துப் போச்சு. உன் மூலமா கிடைச்ச இந்தக் குழந்தைகளும் வேண்டாம். நான் எப்படியாவது வாழ்ந்துக்கிறேன். நீங்க என் வாழ்க்கையிலிருந்து தொலைந்து போங்க. இப்போ வந்து இரண்டையும் கூப்பிட்டுக் கிட்டு போ!'

'சரி, நான் வரேன். குழந்தைகளைக் கூப்பிட்டுப் போக இல்லை. என்ன என்று பேசுவதற்கு' இணைப்பைத் துண்டித்தேன்.

நண்பரிடம் தகவல் சொல்லி விட்டு இரு சக்கர வண்டியில் கிளம்பினேன். அழைப்பு மணியை அழுத்தினால் வந்து கதவைத் திறந்தாள். 'சாவியை எடுத்துக்கிட்டு வா!' தொங்கிய முகத்துடன் வந்து அளிக் கதவில் போட்டிருந்து பூட்டைத் திறந்தான்.

மேலே போகும் போது, 'என்ன ஆச்சு?' என்று தாழ்ந்த குரலில் கேட்டேன். 'வேலைக்காரி நின்று விட்டாள்'.

'வரச் சொன்னேன். வந்தாச்சு. நீங்க இரண்டு பேரும் கிளம்பிப் போங்க'

அதே உதடுகள் பிரியாமல் நடுக் கன்னம் வரை நீளும் வெட்கப் புன்னகை. தொலைக்காட்சி அறையில் சொகுசு இருக்கையில். பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி மூடப்பட்டது.

இப்போது சத்தம் போடுவது எல்லாம் தனது கஷ்டங்களை உரக்கச் சொல்வதற்குத்தான் என்று புரிந்தது. ஆனாலும் அப்படி குதறலான சொற்கள் காயப்படுத்துவது குறைந்து போய் விடுவதில்லைதானே!

கொஞ்ச நேரம் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். 'ஏன் நிற்கிறாய்? போய் அதுங்களைக் கூட்டிக்கிட்டு புறப்படு'

குழந்தைகளையும் நாலு அதட்டல் போட்டு பள்ளிப் பை, பள்ளிக்குப் போட்டுப் போக வேண்டிய சீருடை எல்லாம் எடுத்துக் கொள்ள வைத்தாள்.
'இந்த பகுதியில வேலைக்கு ஆள் கிடைக்கவே மாட்டேன் என்கிறது. நான் தனியா எல்லா வேலையும் பார்த்தா செத்தே போய் விடுவேன். வேறு வீடு பார்க்கவும் செய்தேன். கிடைக்கவில்லை. உனக்கே தெரியும். இப்போ நீங்க போங்க, அப்புறமா ஏற்பாடுகள் செய்து விட்டுக் கூப்பிட்டுக் கொள்கிறேன்'

'குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு வேலை செய்து பாரு, எவ்வளவு கஷ்டம் என்று புரியும். தொலைபேசி ஏதோ நிறுவனத்தில் நடப்பதை எனக்கு விரிவுரை கொடுப்பது எல்லாம் வேண்டாம். யார் வீணாப் போறாங்க என்று பார்ப்போம். உன்னை விட பெரிய நிறுவனம் உருவாக்கிக் காட்டுகிறேன்.'

'எப்பவும் இது மாதிரி கரடுமுரடுதானா? செய்வதை கொஞ்சம் நிதானமாக அடுத்தவங்களை காயப்படுத்தாம செய்தால் என்ன?' குழந்தைகள் இதற்குள் அழ ஆரம்பித்திருந்தன. 'என்ன செய்வது நான் செய்த பாவம் நானும், குழந்தைகளும், நீயும் இப்படிப் படுகிறோம்'

'என்ன! அப்போ எல்லாத்துக்கும் காரணம் நான் என்று சொல்றீயா?'

'ஆமா!'

'போ போய்த் தொலைங்க. பசங்களா, உங்களை நான் திரும்பக் கூப்பிட்டுக் கொள்ளவும் போவதில்லை. எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று சொல்கிறார் இல்லையா, அவனே வளர்க்கட்டும். பார்க்கலாம்' என்று கோபத்தோடு உட்கார்ந்து கொண்டாள். அழுகை பொத்துக் கொண்டது.

'என்னால முடியல. இப்போ போங்க! இன்னைக்கு இங்க இருந்தீங்கன்னா, வேலை செய்து நான் செத்துப் போனாலும் போய் விடுவேன். அப்புறம் நீங்க இவனிடம்தானே போக வேண்டும். வேற யாரு பார்த்துப்பாங்க. அதுக்கு இப்பவே போங்க. நான் பிழைச்சுக் கிடந்தா ஏதாவது செய்து கொள்கிறேன்'

விடுவிடுவென்று கீழே இறங்கிப் போய் விட்டாள். மாடிப்படியின் மேலிருந்து தள்ளப்பட்ட நினைவு இருந்திருக்கும். கொஞ்சம் தயங்கி அம்மாவிடம் பேசி விட்டுக் கீழே வந்தான். பைக்கில் பைகளை மாட்டி முன் பக்கம் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு பின் இருக்கையில் இரண்டு பேரையும் உட்காரச் சொல்லி விட்டுக் கிளம்பினோம். கீழே வரை வந்து அனுப்பினாள். கீழ் வீட்டில் இருப்பவர்கள் பேச்சுக் கொடுக்கக் கூட முயற்சிக்கவில்லை.

வழியில் குழந்தைகளிடம் அதிகம் பேசவில்லை. வீட்டுக்கு வந்ததும் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால், மேகி சாப்பிட ஒத்துக் கொண்டான். மன ஓட்டங்கள் எல்லாம் என்னைப் போலவே. அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுத்து விடக் கூடாது. நாம் அடுத்தவர்களுக்குத் தொல்லையாக இருந்து விடக் கூடாது என்று அக்கறை.

கடைக்குப் போய் மேகி வாங்கிக் கொண்டு வந்து, (கூடவே வாழைப்பழமும்), காலையில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் கொதிக்க வைத்துச் சாப்பிடக் கொடுத்தேன். குடிக்கவும் தண்ணீர் கொதிக்க வைத்துக் கொண்டேன். முன்னறையில் படுத்துக் கொள்ளத் தேர்வு செய்தாள். தரை தூத்து பாய் விரித்து அதன் மேல் ஒரு விரிப்பு போட்டு படுத்துக் கொண்டாள். கொசு கடித்து விடக் கூடாது என்று அதற்கான மருந்தையும் பொருத்தி விட்டேன்.

மேகி சாப்பிடும் போது 'நீ சாப்பிட்டாச்சா' என்று கேட்டுக் கொண்டாள். அதற்காகவே காத்திருந்தது போல மீதியிருந்ததை நான் ஒரு தட்டில் போட்டுக் கொண்டேன். இரண்டு பேரும் மீதி வைத்த சிறிதளவையும் சாப்பிட்டுக் கொண்டேன்.

இன்னொரு பாயை அனுபவ் படுத்தான். சிறிது நேரத்தில் இரண்டு பேரும் தூங்கிப் போனார்கள். இரண்டு பாய்களுக்கும் நடுவில் நல்ல இடைவெளி. பாயை மின்விசிறிக்கு அருகில் இருக்குமாறு இழுத்து இரண்டையும் சேர்த்துப் போட்டு நடுவில் கிடைத்த இடத்தில் நான் படுத்துக் கொண்டேன்.

இப்படித் திடீரென்று தூக்கிப் போடுவதுதான் பாணி. என்ன செய்வது எப்படி பாலிப்பது என்று மனம் ஓடிக் கொண்டிருந்தது. நண்பனின் காரை எடுத்துக் கொண்டு வந்து விடலாம். ஓட்டுனர் ஒருவரை பணிக்கு வைத்துக் கொண்டு இவர்களை பள்ளிக்கு கொண்டு விட்டு அழைத்து வர ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஓரிரு மாதங்களில் அந்தப் பகுதியில் ஒரு வீடு பார்த்துக் கொள்ளலாம். காலையிலும் மாலையிலும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆயாவை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

தூங்கிப் போய் விட்டேன். நல்ல களைப்பு. ஆனால் தூக்கம் நிம்மதியாக இல்லை. இரண்டு குழந்தைகளும் நன்கு தூங்குகிறார்களா. கொசு, எறும்பு கடிக்காமல் இருக்கிறதா, தரையில் உருண்டு போய் விடாமல் இருக்கிறார்களா என்று விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையில் ஆறே காலுக்குக் கண் விழித்து விட்டாள். எழுந்து பல் தேய்க்கவும் ஆரம்பித்தாள். கொஞ்சம் தூண்டி எழுப்பி விட்டேன். இரண்டு பேரும் தத்தமது காலைக்கடன்களை முடித்துத் தயாராகி விட்டார்கள்.

காலையில் சாப்பிட இட்லி, தோசை, மதியம் சம்புடத்தில் பிரெட் துண்டுகள், இடைவேளையில் சாப்பிட சீட்டோஸ், குடிப்பதற்கு அப்பி ஆப்பிள் சாறு என்று தயாரித்துக் கொண்டிருந்தேன். தயிர் சோறு வேண்டும், அதற்கு தயிர் வாங்கியிருந்தாலும் அரிசி தீர்ந்து விட்டிருந்தது. அடம் பிடிக்காமல் சமர்த்தாக சாப்பிட்டார்கள். பால், கலக்குவதற்கு பூஸ்ட் சேர்த்து சரியான சூட்டில் கொடுத்தையும் குடித்து விட்டார்கள்.

பாலைக் காய்ச்சி காய்ச்சிய பாத்திரத்திலேயே வெதுவெதுப்பான சூடாவது வரை விட்டு வைத்தேன். அதன் பிறகு இரண்டு டம்ளர்களில் பாலை ஊற்றி சர்க்கரை, பூஸ்ட் போட்டு நன்கு கலக்கி விட்டு. இன்னொரு டம்ளரில் மூன்று நான்கு முறை ஆற்றி ஊற்றி வைத்து விட்டால் சூடு இனிப்பு, ஆடை படராமல் இருப்பது எல்லாமே சரிவர அமைந்து விட்டிருந்தது.

8 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். இரண்டு புத்தகப் பைகளும் முன்பக்கத்தில், இரண்டு குழந்தைகளும் பின் இருக்கையில். சாப்பாட்டுப் பை, தண்ணீர் கலம், இல்லாததால் கிடைத்த பையில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மில்டன் கொள்கலன், பிளாஸ்டிக் பாட்டில். எதற்கும் குறை சொல்லாமல் முரண்டு பிடிக்காமலேயே ஒத்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அவ்வளவு தூரம் பைக்கில் போவது களைப்படைய வைப்பதாகத்தான் இருக்கும். எட்டரை மணிக்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று விரட்டி 8.20க்குப் போய் விட்டோம். பள்ளியில் யாரும் இல்லை. குழந்தைகளுக்கு உற்சாகம். மாலையிலும் நான் வந்து அழைத்துக் கொள்வேன் என்று உறுதி செய்து கொண்டார்கள்.

மதுரவாயலில் வீட்டுக்குப் போய்ப் பேச முயற்சி செய்தேன். இன்னும் கொஞ்சம் முரண்டாக, சவாலாகப் பேசுவதாக சாடல்களைக் கேட்டு விட்டு புறப்பட்டேன்.

அலுவலகத்துக்குப் போய் நண்பகலில் வந்து காரை எடுத்துக் கொள்வதாக நண்பனுக்குத் தகவல். தொலைபேசி குழந்தைகளின் பொருட்களை கொண்டு வருவதாகச் சொல்லி வீட்டில் கொடுத்து விட்டுப் போனாள். காரை எடுக்கப் போன நண்பர் வீட்டிலேயே சாப்பாடும் கிடைத்தது. அதே காரில் பள்ளிக்குப் போய் குழந்தைகளை அழைத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட முழு நாளும் வேலை செய்யாமலேயே ஓடி விட்டது. மாலையில் நிறுவனத்தை விட்டுப் போகும் பிரிவுபசார விருந்து. குழந்தைகளை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தண்ணீர் எல்லாம் குடித்து விட்டுக் கிளம்ப வேண்டும்.

அதற்குள் சூடு தணிந்து தொலைபேசினாள். குழந்தைகளை வந்து பார்ப்பதாகச் சொன்னாள். 'அலுவலகத்துக்கு வர வேண்டாம், வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறேன்.'

வீட்டில் கிடந்த டென்னிஸ் பந்துகளை கைப்பற்றியிருந்தான். அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் பைக் நின்று போனது. அதை அங்கேயே ஒரு கடை முன்பு நிறுத்தி விட்டு நடந்து ஆட்டோ தேடி வரும் போது ஒரு சிறுமி பள்ளிச் சீருடையுடன் காலில் செருப்பு கூட இல்லாம்ல வேடிக்கை பார்த்தாள். அவன் கையிலிருந்த பந்துகளில் ஒன்றை அவளுக்குக் கொடுத்து விடலாமே என்று சொன்னதும். இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு போய் ஒரு பந்தைக் கொடுத்து விட்டார்கள்.

ஆட்டோ ஒன்றில் ஏறிக் கொண்டோம். அவர்கள் அம்மா பற்றி, என் மீதான குற்றச் சாட்டுகள் எல்லாவற்றுக்கும் அந்த 5 நிமிட ஆட்டோ பயணத்திலேயே விடை சொல்லி முடித்து விட்டேன். 'இரண்டு கைகளும் தட்டினால்தான் சத்தம் வரும்'

வீட்டுக்கு வந்து சேர்ந்த சில நிமிடங்களில் வந்து விட்டாள். மாலை உணவுக்கு அவல் தாளிக்க முயற்சிகள் ஆரம்பித்திருந்தேன். 'இது அவங்க சாப்பிட மாட்டாங்க. பசியாகத்தான் இருப்பாங்க' என்று தடுக்க முயற்சி செய்தாள். 'விடேன். பார்க்கிறேன்' என்று ஒதுக்கி விட்டு வேலையைப் பார்த்தேன். போய் பால் வாங்கி வரச் சொன்னால். கூட அவளது ஓட்டுனரையும் அனுப்பினாள்.

ஆறு மணிக்கு யாரையோ பார்க்க வருவதாகத் தொலைபேசினாள். 'இப்போ தெரியுதா! குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு அலுவலக வேலையையும் பார்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று'

'திடீரென்று ஒரு நாள் இப்படி வந்து குதித்ததால்தான் கொஞ்சம் சிரமம். சரியாகத் திட்டம் போட்டுக் கொண்டால் எந்த சிரமும் கிடையாது' என்று முடித்துக் கொண்டேன்.

சாப்பிடும் போது கதை சொல்லிச் சாப்பிடச் சொல்லலாம் என்று பார்த்தால், வினாடி வினா கேட்டாள். ஒருவர் அடுத்தவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். சரியான விடை சொல்லி விட்டால் கேள்வி கேட்டவர் ஒரு கரண்டி சாப்பிட வேண்டும், விடை தெரியாவிட்டால் அல்லது தவறாகச் சொல்லி விட்டால் விடை சொல்பவர் ஒரு கரண்டி சாப்பிட வேண்டும். மூன்று பேர் விளையாட்டு.

ஏற்கனவே சாப்பிட ஆரம்பித்திருந்தாள். விளையாட்டு விதிப்படி சாப்பிடத் தொடங்கினான். 'இதை எல்லாம் சாப்பிட்டா எனக்கு வாந்தி வந்து விடும்' என்று மிரட்டியிருந்தவன், ஒரு சின்னத் தட்டு நிறைய சாப்பிட்டு முடித்து பாலையும் குடித்து விட்டு விளையாட ஓடி விட்டான்.

வெளியில் குழந்தைகள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்கள். பந்து வைத்திருந்த டென்னிஸ் பந்து. ஒரு பந்தை வேகமாக அடிக்க அது பக்கத்து வீட்டுக்குள் போய் விட்டது. அந்த வீட்டு அம்மா பந்து உள்ளே விழுந்தால் கொடுக்க மாட்டாங்களாம். 'மொத்தம் மூன்று பந்துகள் இருந்தன. ஒன்றை அந்தப் பொண்ணுக்குக் கொடுத்தோம். ஒன்று பக்கத்து வீட்டுக்குள் விழுந்து விட்டது. இப்போ ஒன்றுதான் நமக்கு இருக்கு. சரிதானே?' என்று அப்புறமாகக் கேட்டாள். 'மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக இருந்தால் எனக்கு எப்போதுமே சரிதான், பெருமைதான்'

பந்து விளையாட்டை நிறுத்தி விட்டுப் பக்கத்து வீட்டுக்கு முன்பு கல்லெறிந்து விளையாட ஆரம்பித்தார்கள் குழந்தைகள். தடுப்பதற்குள் ஓரிரு கற்கள் பக்கத்து வீட்டுக்கு உள்ளேயும் போய் விட்டன. உடனேயே எல்லோரும் சிதறி ஓடி விட்டார்கள். அந்த அம்மா வெளியில் வந்து சத்தம் போட ஆரம்பித்தார். 'பக்கத்து வீட்டுக் காரங்க என்றால் மரியாதையா இருக்கணும். பந்தை அடித்து பொருட்களை உடைக்குதுங்க. இப்போ கல்லடிக்குதுங்க. நாயை அவிழ்த்து விட்டா தெரியும்.' என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அமைதியாக அவர்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கக் கொஞ்ச நேரத்தில் உள்ளே போய் விட்டார்கள்.

இரவு உணவுக்கு விருந்துக்குப் போக வேண்டும். நண்பர் காரை எடுத்துக் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லியிருந்தார். விருகம்பாக்கத்தில் ஒரு உணவு விடுதி. என்னுடன் முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். மாடியில் தாபா என்று பெயர் போட்ட ஒரு இடம். நீண்ட மேசையின் உள் பக்கத்தில் தலை இருக்கையில் நான் உட்கார்ந்து கொள்ள இரண்டு புறமும் உட்கார்ந்து கொண்டார்கள்.

மிகவும் பெருமை. இவ்வளவு பேர் சேர்ந்து இருப்பதில் மகிழ்ச்சி. சூப், கோழிக் கறி, ரொட்டி என்று சாப்பிட்டுக் கொண்டார்கள். தூங்க ஆரம்பிக்கவே ஒன்பதரைக்கெல்லாம் கிளம்பி வந்து விட்டோம். வரும் போது இருசக்கர வண்டியை எடுத்துக் கொண்டோம்.

வீட்டுப் பாடம் முடிக்க 10 மணிக்கு மேல் முடியாமல் தூங்கப் போனோம். காலையில் பார்த்துக் கொள்ளலாம்.

காலையில் 2 மணிக்கு எழுந்தால் எதுவுமே நேராக இல்லை. பைக் நடுவழியில் நிற்கிறது. பொருட்கள் எல்லாம் முன்னறையில் இறைந்து கிடக்கின்றன. எழுப்பிப் புறப்பட வைத்து பள்ளியில் கொண்டு விட வேண்டும். காருக்கு ஓட்டுனர் ஒருவரைப் பார்க்க வேண்டும். வீட்டில் ஆள் வேண்டும்.

போய் பைக்கைப் பார்க்கலாம் என்று நினைத்தால் அதன் சாவியைக் காணவில்லை. சரி அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று உள்ளறையை ஒதுங்க வைக்க ஆரம்பித்தேன். கீழே இறக்கி வைத்திருந்த பெட்டிகளை எல்லாம் திறந்து பார்த்து மேலே ஏற்றி விட்டு, தூசி தட்டி, அலமாரியை ஒதுங்க வைத்து துடைத்து புத்தகங்கள், உடைகள், பைகளை அங்கு அமைத்தேன். முன்னறையும் சீரடைந்தது.

முந்தைய நாள் போட்டுப் போயிருந்த உடைகளைத் துவைத்துப் போட்டு விட்டுப் பார்த்தால் பைக் சாவி கிடைத்து விட்டது. இப்போது கிளம்பிப் போக முடியாது என்று குளித்துத் தயாராக முடிவு செய்தேன். எழுந்து விடும் முன்னால் நான் என் வேலைகளை முடித்துக் கொள்ளலாம்.

முகம் மழித்து குளித்து தியானமும் முடித்துக் கொண்டேன். காலையில் சாப்பிட சப்பாத்தி மாவு பிசைந்து போட்டு வைத்துக் கொண்டேன். மதியச் சாப்பாட்டுக்கு தயிர் சோறும். உருளைக் கிழங்கு வறுவலும், நொறுக்குத்தீனியாக பிஸ்கட்டுகள். நேற்றைக்கு வாங்கி வைத்திருந்த தயிர் இன்னும் நன்றாகவே இருந்தது. அதைத் தாளித்துக் கொண்டேன்.

கடையில் அரிசி வாங்குவது மட்டும் முடியாமல் போனது. ஏழு மணிக்கு மேல் பைக்கில் போய் மெயின் சாலையில் கடையில் அரிசி.

எழுந்திருக்க 7 மணி வரை ஆகி விட்டது. அதற்குப் பிறகும் சோம்பிக் கிடந்தார்கள். அப்படி என்றால் உங்களை வீட்டில் விட்டு விட்டு நான் போகப் போகிறேன். என்று மிரட்டியதும் எழுந்து கொண்டார்கள்.

சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டே வீட்டுப் பாடமும் செய்தான். போட்டு வைத்து வெகு நேரம் கழித்துச் சுட்டதால் கொஞ்சம் மாறுபட்டு இருந்தது. சுவையாகத்தான் இருந்தது.

கிளம்பும் போது எட்டு மணி தாண்டி விட்டிருந்தது. வெள்ளிக் கிழமை, காலைக் கூட்டம் உண்டு. எட்டரைக்கு ஆரம்பித்து விடும். தாமதமாகி விடுமே என்று பதற்றம். ஒன்பது மணிக்கு திருமணமும் நடக்கவிருந்தது. வழியில் 'மன்னிச்சுக்கோங்க பசங்களா. பள்ளிக்குத் தாமதமாகப் போகிறது' என்றேன். பாதி வழியிலேயே எட்டரை தாண்டி விட்டிருந்தது.

'என்னாலதானே அப்படி ஆச்சு அப்பா, நான்தான் எழுந்திருக்காமல் தாமதப்படுத்தினேன்' என்று சொன்னதும் சிலிர்த்தது. 'ஏன் என்னை 6 மணிக்கு எழுப்பவில்லை, அப்பா' என்று குற்றம் சாட்டும் குரலில் ஆரம்பிக்க, 'அடுத்தவங்க மீது குறை சொல்லுவதை விட்டு நம்மை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று பார்க்க ஆரம்பி. நீ கண் விழித்த பிறகு உடனேயே எழுந்து தயாராகியிருக்கலாம் அல்லவா' என்று கொஞ்சம் கடுமையாகச் சொன்னதும் மௌனமாகி விட்டான்.

பள்ளியில் போய்ப் பார்த்தால் எதுவும் ஆரம்பித்திருக்கவில்லை. வண்டியை நிறுத்தி விட்டுத் தொலைபேசி ராணிப்பேட்டைக்கு வரவில்லை என்று சொன்னேன். பாலபாரதிக்குத் தொலைபேசி கொஞ்சம் தாமதமாகி விடலாம் என்றும் சொல்லி விட்டுக் கிளம்பினேன். தலைக்கவசம் இல்லை. அலுவலகத்துக்குப் போய் எடுத்து விட்டு விடுமுறையும் சொல்லி விடலாம் என்று நினைத்தேன்.

அலுவலகத்துக்குப் போனால் செய்ய வேண்டிய வேலைகளை விவாதிப்பதில் சில நிமிடங்கள் போனது. வருகைப் பதிவில் விடுப்பு போட்டு விட்டுக் கிளம்பி திநகர் வந்து சேரும் போது 10 மணி. ஹபிபுல்லா சாலை இடம் தெரியாமல் சுற்றிச் சுற்றி நேரம் வீணாக்கியிருந்தேன். பாலாவுக்குத் தொலைபேசினால் நிகழ்ச்சி முடிந்து பதிவு அலுவலகத்துக்குக் கிளம்பி விட்டதாகச் சொன்னார்.

அலுவலகத்துக்குத் திரும்பும் வழியில் கோடம்பாக்கம் சந்திராபவனில் பொங்கல், வடை, காபி. சாப்பிடும் போது தொலைபேசி 'என்ன திட்டம், நான் வீட்டில் ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று கேட்டேன். 'ஞாயிற்றுக் கிழமை குழந்தைகளை அழைத்துக் கொள்கிறேன். சனிக்கிழமை மதியத்துக்கு மேல் நானும் உன் வீட்டுக்கு வந்து தங்கி விட்டு ஞாயிற்றுக் கிழமை எல்லோரும் திரும்பி விடுகிறேன்.'

அலுவலகத்துக்கு வந்தால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. என் மடிக்கணினியையும் வீட்டில் விட்டு வந்திருந்தேன். வீட்டுக்குப் போய் அதை எடுத்துக் கொண்டு வீட்டு மின்சார இணைப்பு அட்டையையும் வெளியில் பாதுகாவலரிடம் கொடுத்து விட்டு வந்தேன். கேட்டு கார் ஓட்டக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அலுவலகத்துக்கு முன்பாகவே கொஞ்ச நேரம் சுற்றி வர முயற்சித்தோம். மைதானத்துக்குப் போனால்தான் சரிப்படும். சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

நந்தம்பாக்கம் தாண்டி மிலிடரி மருத்துவமனைக்கு பின்பு இருந்த ஒரு மைதானத்தில் 3 மணி வரை கார் ஓட்டப் பழகிக் கொண்டிருந்தேன். திரும்பி அலுவலகத்துக்கு வந்து நான் பைக் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினோம். வெள்ளிக் கிழமை நாலேகாலுக்குத்தான் பள்ளி முடியும். நான்கு மணிக்கு வந்து விட்டேன்.

முதலில் மகள் வந்தாள். அவளது தோழி கொரியப் பெண். கூடவே இரண்டு ஐரோப்பியக் குழந்தைகளும் சேர்ந்து கொண்டார்கள். மிகவும் பண்புடன் தேவையில்லாமல் யாரையும் ஆதிக்கம் செலுத்தாமல், அதிகம் பணிந்தும் போகாமல் பழகிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது முறை அவளது பண்பாட்டில் மனம் நெகிழ்ந்தது.

தொலைபேசி அழைப்புகள் ஓரிரண்டுக்குப் பிறகு பள்ளி மணியும் அடித்தது. உள்ளே விளையாடிக் கொண்டிருந்தவனை் என்னைப் பார்க்காத போது அவதானித்துக் கொண்டிருந்தேன். மேலே இருப்பதாகவும் போய் அழைத்து வருவதாகவும் சொன்னவனை வெளியில் இருப்பதைத் தெரிவித்துக் கூட்டி வந்தேன்.

'போகலாமா' என்று உடனேயே தயாராகி தோழியரிடம் விடை பெற்று வெளியில் வந்து விட்டாள் குழந்தை. நேராக வீட்டுக்கு. மதிய உணவில் மீதி வைத்திருந்தார்கள். உணவை வீணாக்கக் கூடாது என்று இரண்டு பேரையும் உட்கார வைத்துச் சாப்பிடச் சொன்னதும் முடித்து விட்டார்கள்.

வீட்டை ஒதுங்க வைக்க உதவுங்கள் என்று கேட்டதும் உடனேயே ஒருத்தர் தூசி தட்ட ஒருத்தர் தரை தூக்க தூசி தட்டியவர் தரை துடைக்க என்று நான் பாத்திரம் தேய்த்து, மாலைச் சிற்றுண்டி செய்து முடிப்பதற்குள் அறையை ஒழுங்குபடுத்தி விட்டார்கள். ரவை உப்புமாவில் உப்பு கொஞ்சம் குறைவாக இருந்து விட்டது.

ஆளுக்குப் பாதிப் பாதி சாப்பிட்டு விட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு அலுவலகத்துக்குப் போய் விடலாம் என்று சொல்லியிருந்தேன். அடுத்த நாள் போடுவதற்குத் தேவையான உள்ளாடைகளையும் தோய்த்துப் போட்டு விட்டுக் கிளம்பி விட்டோம்.

'கணினியில் நீங்களாகவே என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும். அங்குமிங்கும் ஓடி யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது' என்று இரண்டு வேண்டுகோள்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள்.

அலுவலகத்தில் நான் மின்னஞ்சல்களுக்குப் பதில் போட்டு ஞாயிற்றுக் கிழமை கூட்டத்துக்கான விவாதப் பட்டியலையும் அனுப்பி வைத்தேன். இணையத்தில் கார்ட்டூன் நெட்வொர்க்கில் ஏதோ விளையாட்டும் பென்குயின் விளையாட்டும் விளையாட ஆரம்பித்தார்கள். இணையத்தில் நீண்ட நேரம் விளையாடக் கூடாது என்று நான்கைந்து தடவை சொன்னதும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மைசை விளையாட்டு ஒன்றினைத் திறந்து கொண்டாள்.

நண்பரின் மனைவி தொலைபேசி வீட்டுக்கு வரும்படி அழைக்கவே எட்டரை மணிக்குக் கிளம்பி விட்டோம். சனிக்கிழமை இரண்டு பேரையும் அங்குதான் விட்டு விட்டு அலுவலகத்துக்குப் போக வேண்டும். இட்லி, தோசை சாப்பிட்டு விட்டு நேரமாகவே விளையாட்டுக்களை நாளைக் காலையில் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டு விட்டோம்.

'உன் பண்பட்ட பேச்சு, நடவடிக்கைகளில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அடுத்தவர்களிடம் எப்படிப் பழகுவது, அடுத்தவர்கள் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது, உன் குறைகளை ஒத்துக் கொண்டு சரி செய்து கொள்ள முயற்சிப்பது எல்லாமே மிகவும் அரிதான இயல்புகள். நான் மிகவும் பெருமைப்படுகிறேன்' என்று வண்டியில் வரும் போது சொன்னேன். அவள் முன்பக்கம் உட்கார்ந்திருந்தாள்.

எதிர்வினை இயல்பாக இருந்தது. 'முன்பெல்லாம் நான் அடாவடியாகப் பேசுவேன். என் தோழி ஒருத்தியுடன் அதனால் நட்பு முறிந்து போனது. நான் பண்புடன் பழகாவிட்டால் யாரும் என்னிடம் நட்பாக இருக்க மாட்டார்கள் என்று புரிந்தது. அதுதான் நான் என் மனதை மாற்றிக் கொண்டேன். எல்லோரிடமும் நட்பாகப் பழகுகிறேன்'

இன்னும் மழலை மாறாத குரல். சில சொற்களில் மழலை வந்து விழுந்து அதைச் சுட்டிக் காட்டினால் அவசர அவசரமாகத் திருத்திக் கொள்வாள். அவளுக்கு நான் வீட்டில் கொதிக்க வைத்துக் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கப் பிடிக்கவில்லை. அலுவலகத்திலிருந்து பிடித்து வந்து விடலாமா என்று கேட்கிறாள்.

நடைமுறை சார்ந்த பையன். செல்லத்தில் சதை போட்டு 10 வயதிலேயே நாற்பது கிலோ எடையைத் தாண்டி விட்டான். 'நான் இதை வெறுக்கிறேன்' என்று ஒரு முறை சொன்னதும், 'சாப்பிடும் பொருள் எதையும் வெறுக்கிறேன் என்று பழிக்காதே. சாப்பிட்டுப் பார்த்தால் தெரிந்து விடும்' என்று சொன்னதும் அது சுத்தமாக நின்று போனது. கொடுத்ததை சாப்பிட்டு விடுகிறான்.

வீடு கொஞ்சம் சீராகத் தெரிந்தது. தூக்கம் வந்து விட்டது. புத்தகம் படிக்க ஆரம்பித்தான். கதை வேண்டும். மந்திரக் கம்பளம் சொல்ல ஆரம்பித்தேன். கண்களில் தூக்கம் சொக்கியும் தூங்க மனதில்லை. கதையும் நீண்டு கொண்டே போனது. பாதியில் படிப்பை விட்டு விட்டுக் கதையில் ஈடுபட ஆரம்பித்தான்.

பத்து மணிக்குத் தூங்கும் நேரம். தூங்கி விட்டார்கள்.

சனிக்கிழமை காலையில் 5 மணிக்கு எழுந்து எனது வேலைகளை முடித்துக் கொண்டேன். மேகி நூடுலை வேக வைத்து காய்கறிகள் போட்டுக் கொடுத்து விடலாம். குடிக்க பால். 8 மணிக்குக் கிளம்பி நண்பர் வீட்டில் எட்டரைக்கு விட்டு விடுவதாக ஏற்பாடு. புறப்பட்டு சாப்பிட்டுக் கிளம்புவதற்கு எட்டரை ஆகி விட்டது. அலுவலகத்துக்கு 9 மணி.

புதன், ஜூலை 16, 2008

புல் வளரும் இடம்

இன்றைக்கு மாதத்தில் பாதி நாட்கள் கடந்து விட்டன. இரண்டு நாட்களாக இரவில் தூங்கும் முன் தியானம் செய்வதில்லை. நிக்க ஹாலவே என்ற நாயகனால் சொல்லப்படுவதாக வரும் கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் என்ற ஆங்கில நாவலைப் படிப்பதில் நேரம் ஓடி விடுகிறது. அதைப் படித்துக் கொண்டே கண்கள் சொக்கிப் போக விளக்குகளைக் கூட அணைக்காமல் தூங்கி விடுகிறேன். எறும்புகள் ஊறக் கொசுக்கள் கடிக்க நிம்மதியில்லாத தூக்கம். பாதியில் எழுந்திருக்கும் போது மின்விசிறியையும் அணைத்து விடுகிறேன்.

நேற்றுக் காலையில் நான்கே முக்காலுக்கு எழுந்து விட்டேன். எழுந்திருக்கும் போதே சரியாகத் தூங்காததன் விளைவுகள் தெரிந்தன. மாலை வரை எந்த தாக்கமும் இருக்கவில்லைதான். பல் தேய்த்து விட்டு நாற்காலியையும் கால் நீட்டுவதற்கு முக்காலியையும் வெளியில் போட்டுக் கொண்டேன். வீட்டு வாசல் முன்பு நின்றிருந்த மிதிவண்டி, என்னுடைய பைக் இரண்டையும் நகர்த்தி இடம் செய்து கொண்டேன்.

எழுத ஆரம்பித்து முடிக்கும் போது ஆறு மணி ஆகி விட்டிருந்தது. என்னவெல்லாம் செய்ய வேண்டும். வீடு ஒதுங்க வைக்க வேண்டும். (சொல்லி வைத்தது போல 5 மணிக்கு எதிர் வீட்டு மாடியில் விளக்கு போட்டு விட்டார். அவசர அவசரமாகக் கிளம்பி பணிக்குப் போவார் என்று தோன்றுகிறது.) திங்கள் கிழமை காலையில் செய்த சட்டினி அவ்வளவு கெட்டுப் போனதாகத் தெரியவில்லை. குளித்துத் தயாரான பிறகு நேரம் இருந்தால் கோதுமை தோசை சுட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். இடையில் இடியாப்பம் என்று விற்கும் சத்தம். வெளியில் போய்ப் பார்த்தால் ஆளைக் காணவில்லை.

வீட்டுக்குத் திரும்பி தரை தூத்து முடித்து முகம் மழித்துக் கொண்டிருக்கும் போது வளாகத்துக்குள்ளேயே குரல் கேட்டது. வெளியில் தட்டோடு போய் அவருக்குக் குரல் கொடுத்து விட்டு காசையும் எடுத்து வைத்தேன். 10 ரூபாய்க்கு 10 இடியாப்பம். சட்டினியோடு சில, பால் சேர்த்து சில சாப்பிட்டுக் கொள்ளலாம். தொண்டை வறண்டு போய் காய்ந்த உணர்வு இருந்தது. அடுப்பில் குடிக்க வெந்நீர் கொதிப்பதற்காக ஒரு பானையில் வைத்தேன். அதை குறைந்து தழலில் வைத்து விட்டுக் கடைக்குப் போய் ஆப்பிள் ஜூஸ், பால் பொதி வாங்கிக் கொண்டேன். 'வேறு ஏதாவது வேண்டுமா' என்று கேட்டவரிடம், 'மூன்று பொருட்கள் வாங்கியாச்சே' என்று பதில் சொன்னேன். 'வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்பது தப்பா?' என்று பதில். 'தப்பில்லையே!'

காலை உணவுக்கு மொத்தம் 40 ரூபாய்கள். இரண்டு பொதி ஆப்பிள் சாறையும் தியானத்துக்கு முன்பு குடித்துக் கொண்டேன். தியானம் முடிக்கும் போது ஏழு இருபது. கொஞ்சமாக ஊசத் தொடங்கியிருந்த சட்டினியில் முழுகடித்து நான்கைந்து, கொதிக்க வைத்திருந்த பாலை ஊற்றி சீனி போட்டு மீதி என்று சாப்பிட்டேன். எஞ்சிய பாலைக் குடித்து விடலாம் என்று தோன்றிய எண்ணத்தை விட்டு மூடி வைத்து விட்டுப் புறப்பட்டேன். எட்டு மணிக்கு அலுவலகத்தில் சந்திக்க வேண்டும். 7.55க்கு எல்லாம் அலுவலகம் வந்து சேர்ந்தேன். வெளியில் பூட்டு போட்டிருந்தது. யாரும் இல்லை.

திறந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். தாமதமாகத்தான் வருவார் என்று புரிந்தது. கணினியில் நான்கு நாட்களாகப் பதியாமல் வைத்திருந்த நாட்குறிப்புகளை வலைப்பதிவில் போட ஆரம்பித்தேன். 10,11,12,13ம் தேதிகள் முடித்து 14ஐத் தொகுத்துக் கொண்டிருக்கும் போது வந்து விட்டார். அவருக்கு அதிகமாக மாற்றுச் சிந்தனைகள் இருப்பது போலத் தெரியவில்லை. தர மேம்பாட்டுக் குழு ஒன்றை அமைத்து அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ள முடியுமா என்று பேசிக் கொண்டிருந்தோம். அவரது பணத் தேவைகள், அவரது குறைபாடுகள் என்று ஒவ்வொன்றாக வெளியில் வந்தது. அதிகம் பேச வேண்டியிருக்கவில்லை.

அவருக்கு எந்த மாதிரி கூடுதல் ஊதியத்துக்கு வழி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். மொத்த பில்லிங் தொகையில் 2.5% அவர்கள் கையில் கொடுத்து அவர்களுக்குள் பகிர்ந்து எடுத்துக் கொள்ளச் சொல்லலாம். நான்கு பேர் கொண்ட குழுவாக இயங்கினார்கள் என்றால் சரியாக இருக்கும். அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்று கொண்டிருக்கும் போது வந்தார். திருப்பதி போய் வந்த விபரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். காலையில் 6 மணிக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்து 2 மணிக்குத்தான் காத்திருக்கும் மண்டபத்துக்குள் போனார்களாம். இரவு 10 மணிக்குத்தான் சாமி தரிசனம் முடிந்து வந்திருக்கிறார்கள்.

டாடா உடுப்பி ஓட்டலின் பொங்கல் சாப்பிட வேண்டும் என்று உந்துதல். டெக்கான் குரோனிக்கிள் எடுத்துக் கொண்டு நடந்தால் எதிரில் வந்தார்கள். புன்னகையில் களை இல்லை. மற்றவர்கள் எல்லாம் அவரை வேண்டுமென்றே ஒதுக்குவது போலப் பட்டது.

டாடா உடுப்பியில் பொங்கல் சாப்பிட்டு விட்டுச் சர்க்கரை குறைவாக கடுப்பம் குறைவாக ஒரு காப்பியும். அலுவலகத்துக்கு வந்தால் கலகலப்பு நிரம்ப ஆரம்பித்திருந்தது. ஒருவர் மட்டும் வெளியில் போயிருந்தார். மீதி எல்லோரும் அலுவலகத்தில்.

இடையில் பணியில் தொழில் நுட்ப வடிவமைப்புக் குறித்த விவாதம், பயிற்சி முடித்துப் போயிருந்த மாணவிகள் வந்து அவர்களுடன் பேச்சு. அறையில் வரைபடம் தயாரிப்பதில் இறங்கியிருந்தார்கள். 'நீங்கள் எல்லாம் இல்லாத நாட்களில் நான் மட்டும் ஒரு அறையில் இருப்பேன். வேறு யாரும் என்னிடம் பேசக் கூட மாட்டார்கள்' என்று சொல்லியிருந்தார். 'டிசிஎஸ்சில் சேராமல் தவற விட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது' என்று கூடக் குறைபட்டுக் கொண்டார்.

மதிய உணவை எடுத்து வைப்பதில் முனைப்பாக இருப்பார். கொஞ்சம் ரசம், வாழைக்காய் துவரன். கத்தரிக்காய் கறி சாப்பிட்டு எழுந்தேன். பின்பு வந்தவர்கள் வழியை மறித்துக் கொண்டதால் எழுந்து போவதற்கு சிரமமாகத்தான் இருந்தது. தான் தொடர முடியாது என்று தகவல் அனுப்பியிருந்தார். அவருடன் முகம் கொடுத்துப் பேச மனம் வரவில்லை.

சரியாக 2 ஆண்டுகள் மட்டும் இருந்து விட்டு 2 ஆண்டுகள் அனுபவம் என்று சொல்ல முடிந்ததும் கம்பி நீட்டுவது என்ன விதமான நியாயம் என்று புரியவில்லை. இனிமேல் நாமும் கவனமாக கொஞ்சம் சுயநலத்தோடு இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகைகளை உடனுக்குடன் கொடுத்து விடாமல் இந்த காலாண்டின் ஊக்கத் தொகையை அடுத்த காலாண்டின் இறுதியில் கொடுக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும். விட்டு விட்டுப் போனால் அந்தப் பணத்தை மறந்து விட வேண்டியதுதான்.

ஏதோ உடம்புக்குச் சரியில்லையோ என்னவோ, இரண்டு நாட்களாக தோழியரிடம் குசுகுசுவென்று ரகசியம் பேசி விட்டு சீக்கிரம் கிளம்பிப் போய் விடுகிறார். இப்படி மற்றவர்கள் நடந்து கொள்வதை பெரிய விஷயமாகக் கருதி வருத்தப்பட வேண்டாம் என்றும், அப்படியே மனதை உறுத்தினாலும் அதிலிருந்து தப்பி ஓட முயற்சிக்காமல், துணிச்சலுடன் எதிர் கொண்டு எப்படிக் கையாளுவது என்று பார்க்கலாம் என்றும் பேச வேண்டும். அவருக்குக் கொடுத்திருந்த பொறுப்பை நிறைவேற்ற முழுக் குழுவின் ஒத்துழைப்பையும் பெறுவது எப்படி என்று ஒரு அறிவுரை அனுப்பலாம்.

ஒரு மின்னஞ்சல் அனுப்பி விட வேண்டும். கூடிய விரைவில் பேச வேண்டும். இவ்வளவு வருத்தத்தையும் காயத்தையும் வைத்துக் கொண்டு எப்படி செயல்பட முடிகிறது அவரால்!

தொலைபேசி அழைப்பு. நிறுவனத்தில் நடப்பதை, சவால்களை விளக்கினேன். சொந்த வாழ்க்கை பற்றியும் கேட்டான். 'ஏதோ இரண்டு மாதத் தனிமைக்கு மருந்தாக என்னைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் கடாசி விட்டாள்' என்று உணர்வதாகச் சொல்லி வைத்து விட்டேன். ஜூன் 8ம் தேதி அவர்களை அழைத்திருக்க வேண்டும். அலுவலக நண்பர்கள் என்று ஏமாந்ததற்குப் பதிலாக இவர்களையாவது கூட்டி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அன்றைக்கு மாலையும் வினையூக்கி சொன்னது போல நேராக அங்கு போய் அவர்களுடன் பேசியிருக்க வேண்டும். கிட்டத்தட்ட நிரப்ப முடியாத பள்ளம் போலத் தோன்றுகிறது. எதற்கு மேலும் மேலும் மனதை வருத்திக் கொள்கிறோம். அவளுக்கே தோன்றி மாறிக் கொள்ளட்டும்.

பணத்துக்காக பேசினேன். இன்றைக்குக் கண்டிப்பாக வந்து விடும் என்றார்.

நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியுமா என்று கேட்கப் போய் இதைப் பேசுவதிலேயே கழிந்தது. தொலைபேசினால், போன இரண்டு மாதங்களில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது என்று பாராட்டினார். புதிய வாடிக்கையாளர் குறித்துப் பெருமைப் பட்டுக் கொண்டதற்கு, அந்த ஆள் ஒரு மாதிரியான குணமுடையவர் என்று சொன்னதாக மறுமொழி சொன்னார். எனக்கும் கலக்கம் ஏற்பட்டு விட்டது. பாதியில் நின்று போனால் என்ன செய்வது. இவ்வளவு சிறப்பாக தொழில் செய்து சாதித்துக் காட்டியிருப்பவர் அப்படி இருக்க மாட்டார் என்ற நம்பிக்கைதான்.

மூன்று இடங்களிலும் காசை பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். இந்த மாதம் முடிக்க வேண்டிய வேலை விபரங்களைப் பார்வை இட்டோம். இருக்கும் மனக் குறையை போக்குவதற்கு வழி செய்ய வேண்டும். நல்ல வேளை, இந்த அறையிலிருந்து வெளியில் போக மறுத்து விட்டார். இப்போது நான் எனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்வது நல்ல பலன் கொடுக்கும் என்று தோன்றுகிறது. முன்பு உட்கார்ந்திருந்த இடத்துக்கு நான் போய் விடுகிறேன்.

போன இரண்டு வாரங்களில் பணம் வந்திருக்கிறது. இன்றைக்கு வந்தால் 16 நாட்களில் நான்கு நிறுவனங்களிலிருந்து காசோலை. கூடவே தள்ளிப் பார்க்க வேண்டும் இன்று.

மாலையிலும் டாடா உடுப்பி ஓட்டல். இரண்டு இட்லிகள். மாதுளை சாறு. 40 ரூபாய்கள் ஆனது. திரும்பி வந்து பார்த்தால் மாதாந்திரக் கூட்டம் ஆரம்பித்திருந்தது. நல்லதொரு முன் முயற்சி.

நான் இடத்தை மாற்றுவது மிகவும் உதவியாக இருக்கும்.

வேலையில் சேர வந்திருக்கும் மாணவியரை சரியாக நேர்முகம் செய்துதான் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். புதியவர்களை எடுப்பது கன பாடாகத்தான் இருக்கிறது. இரண்டு பேரிடமும் பேசினேன். இடையில் காய்கறி உருளை, இனிப்பு பணியாரம் என்று கொண்டு கொடுத்தார். மாதாந்திர சந்திப்புக்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பேசி முடிக்கும் நேரத்தில் பதில் அழைப்பு. அப்போது வசதிகளை மேம்படுத்துவது குறித்துப் பேச ஆரம்பித்ததும் சுதாரித்துக் கொண்டார்.

10 லட்ச ரூபாய்கள் எளிதாகத் திரட்டிக் கொள்ளலாம். பிருந்தாவிடமும் பேசி விட்டுக் கிளம்பினேன். இன்றைக்கு ராணிப்பேட்டை போவதை ஒப்படைத்துக் கொண்டேன். ஒரு கார் எடுத்துப் போங்க என்று சொன்னதும் அவருக்குப் பூரித்து விட்டது. காரை பாவித்துக் கொள்ளத் தயாரா என்றும் காலையில் கேட்டிருந்தேன். காலையில் அவரது கல்லூரியில் வேலை பார்க்கும் நண்பர் வந்து கல்லூரிக்கும் நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்துப் பேசி விட்டுப் போனார். அடுத்த வாரம் சனி, ஞாயிறு மாயவரம் போவதாக ஒத்துக் கொண்டோம்.

இனி வரும் நாட்கள் மிக பரபரப்பாகப் போக வேண்டியிருக்கும். 6 லட்சம், 7 லட்சம், 10 லட்சம் என்று பேசினால் அதற்கான பொறுப்புகளும் கூடத்தானே செய்யும். பேசி நிர்வாகப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று கேட்க வேண்டும். வங்கிக் கணக்கு, அரசு நடைமுறைகள், வாடிக்கையாளருக்கு பில் செய்வது வரும் பணத்தை செலவழிக்கும் திட்டங்கள், வங்கிக் காசோலையில் கையெழுத்திடுவது என்று எல்லா பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டால் நான் வாடிக்கையாளர்களிடம், குழு உறுப்பினர்களிடம் அதிக நேரம் செலவழிக்கலாம். நேரத்தை தாழ்த்தாமல் இன்று பேசி பொறுப்பு கொடுத்து விடலாம்.

இதை முடித்ததும், வீட்டை ஒதுங்க வைத்துத் தூக்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். வெளியில் தண்ணீர் பிடிக்க வேண்டும். குளித்து தியானம் செய்து விட்டுக் கிளம்பினால்தான் சரியாக இருக்கும். வண்டி இல்லை. நடந்துதான் போக வேண்டியிருக்கும். மணி 5.45 தாண்டி விட்டது. இன்னும் 8 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டுகிறது. விளையாட்டு இறகுப் பந்து மட்டையுடன் வந்து மேலே வீட்டு மணி அடித்து விட்டுக் கீழே வருகிறான். அப்படியே மற்ற வீட்டு மணிகளுக்கும் வேலை கொடுப்பான்.

52 நிமிடங்களில் 1350 சொற்கள். 27 சொற்களுக்கு மேல் போக மாட்டேன் என்கிறதுதான். ஏழரைக்குக் கிளம்ப வேண்டுமானால். 7க்கு தியானம். 6.40க்குக் குளியல், ஆறே காலுக்கு துணி துவைப்பு. நேரம் சரியாக இருக்கும்.

8 முதல் ஒன்பது வரை பேச்சு. ஒன்பது மணிக்கு இடத்தை மாற்றிக் கொண்டு மின்னஞ்சல்.

எப்படியெல்லாம் மனித மனம் ஒடுகிறது. இன்னும் போகப் போக அதிகமான தவ வலிமையும் புரிந்துணர்வும் வளர வேண்டும். இல்லை என்றால் கண்ணெதிரே எல்லாம் இடிந்து போகும் ஆபத்து இருக்கிறது. ஒவ்வொருவரையும் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளுக்கேற்ப ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இன்னும் 3 நிமிடங்கள். நிமிடத்துக்கு 25 சொற்கள் எழுதினாலும் 75 சொற்கள். 90 சொற்கள் எழுதினால் ஒரு மணி நேரத்துக்கு 1.5 சொற்கள் நிமிடத்துக்கு என்ற கூடுதல் கிடைக்கும். இது வரை 1478 சொற்கள். 25ல் தான் நிற்கிறது. இன்றைக்கு அப்படி என்ன திக்கித் திக்கி எழுதி விட்டோம் என்று புரியவில்லை!

நான் போய் ஆக்கிரமிக்கும் இடத்தில் புல் முளைக்காமல் போய் விடுகிறது. வழக்கம் போல நடுநாயகமான இடத்துக்கு நகர்ந்து விடலாம்.

செவ்வாய், ஜூலை 15, 2008

குழம்பல்

ஜூலை 15. மடிக்கணினிக்கும் செல்பேசிக்கும் இடையில் நேரம் காட்டுவதில் மாறுபாடு. மடிக்கணினி இரண்டு நிமிடங்கள் வேகமாகப் போகிறது. இதுதான் சரியான நேரம் என்றால் செல்பேசியைப் பார்த்து பணிகளை நேரப்படுத்திக் கொள்வதில் இரண்டு நிமிடங்கள் தாமதமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறோம். அதைச் சரி செய்து கொள்ளலாம். கணினியில் நேரத்தை இணையம் மூலம் சரிப்படுத்திக் கொள்ளும்படி அமைத்துக் கொள்ளலாம்.

நேற்றுக் காலையில் முந்தைய நாள் இரவு அவித்து வைத்திருந்த இட்லிகளில் மீதியிருந்த 4 இட்லிகள், மீதியிருந்த மாவில் மெல்லிசாக ஊற்றி இரண்டு தோசைகள். எறும்பு அரித்துக் கொண்டிருந்த தேங்காய் முறிகளில் ஒன்றை உடைத்து துவையல் அரைத்து கொஞ்சம் நீட்டமாக சட்டினி தாளித்து சாப்பிட்டுக் கொண்டேன். அலுவலகத்துக்குப் போய் எலுமிச்சை கிடைக்காமல் கடுந் தேநீர் மட்டும். மதியச் சாப்பாட்டு வேளையில் திருப்பதியிலிருந்து திரும்பி வந்த பிரபு கொடுத்த லட்டு, தொடர்ந்து வெளியில் போய் நந்தினி கடையில் மாதுளம் பழச் சாறு. சாப்பாட்டில் கேரட் துவரன், உருளைக்கிழங்கு+பட்டாணி கறி, ரசம், மோர், பப்படம்.

மாலையில் கொஞ்சம் கடுப்பமாகவே ஒரு கடுங்காபி. அது இரவில் தூக்கத்தை பாழ் செய்து விட்டது.

காலை 8 மணிக்கு சந்திப்பு. தானும் மனம் வெறுத்துப் போயிருப்பதாகச் சொன்னார். டிசிஎஸ் போகமால் இருந்தது தவறோ என்று தோன்றுகிறது என்றார். எல்லாமே டமால் டமால் என்று மணி அடித்து எழுப்பி விடும் மனப் போக்குகள். வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருப்பது நிம்மதியாக இருந்தது. அடுத்த மூன்று மாதங்கள். அடுத்து வரும் ஒரு ஆண்டு, இன்னும் 10 ஆண்டுகள் என்று அவருக்கு வாழ்க்கைத் தொடர்ச்சியை விளக்கினேன். முந்தைய நாள் எழுதிப் பார்த்திருந்தது போல வாடிக்கையாளர்களுக்கு நமது சேவை வசதிகளின் மதிப்பை உணர்த்தும் நடவடிக்கைகளும் பொறுப்பும் அவருக்கு.

பேசி முடிக்க ஒன்பது மணி தாண்டி ஒன்பதே கால் ஆகி விட்டது. குழுவினரின் நடவடிக்கையிலிருந்து இந்தப் பெண்களை பாதுகாக்க வேண்டும். இவர்கள் வெளிப்படையாகச் சொன்னாலும், மற்றவர்கள் மனதுக்குள் வைத்திருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான எதிர்வினை. அதனால் என்னிடம் நெருக்கம் காட்டுவதற்கு தயக்கம் உண்டு. கொடுக்க வைத்திருந்த புத்தகத்தைக் கொடுக்க மறந்திருந்தேன்.

காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தொலைபேசி வந்தது. அப்போது அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்ததால், காலையில் பத்தேகாலுக்குப் பிறகு அழைப்பதாகச் சொன்னேன். பத்து பத்துக்கு அவனே அழைத்து விட்டான். பணம் எங்காவது கிடைக்குமா? நேற்றைக்கே பேசியிருந்ததில் தான் வைத்திருக்கும் பணத்தை கொடுத்து விட அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அது நியாயமும் கூட. நாங்கள் இரண்டு பேரும் மனம் போன போக்கில் பணத்தை சரிவரக் கையாளாமல் இருந்தால் அவன் அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும்.

'வீட்டில் இருப்பவர்களிடம் வேலை விபரங்களை தொடர்ந்து சொல்லி வந்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும்' என்றான். 'நான் அப்படித்தான். தினமும் மாலையில் அலுவலக நடப்புகள் தவறாமல் சொல்லி விடுவேன். அவள் கவனித்துக் கேட்கிறாளோ இல்லையோ, வாய் விட்டுச் சொல்லும் போது நமக்கும் பல தெளிவுகள் கிடைக்கும்.' நான் எழுதுவது போலத்தான் இது. கூடவே தினமும் இல்லா விட்டாலும், ஒரு நாள் காது கொடுத்துக் கேட்டு தனக்குப் பட்டதை சொல்லும் போது இரண்டாவது மூளையின் பங்களிப்பும் கிடைத்து விடுகிறது, நமது முடிவுகளுக்கு உறுதுணையாக.

நானும் சரி, இந்த விஷயத்தில் மிகவும் பலவீனம். எனக்கோ, அடாவடிப் பேச்சுக்கள் மீது வெறுப்பு. அவளிடம் சொல்லும் விபரங்களை எல்லாம் என்னை கையாளுவதற்குப் பயன்படுத்துவதாகப் பட்ட போது மெல்ல மெல்ல மனம் சுருங்கி அடைத்துப் போனது. இது போல ஏதாவது நடந்திருக்கலாம். இன்றைக்குத் தொலைபேசி என்ன விபரம் என்று கேட்க வேண்டும். ஆறரை மணிக்கு அழைக்க வேண்டும்.

போராடி முடித்ததும் மதிய உணவு வேளையில். 2 லட்ச ரூபாய்கள் கடனாகக் கொடுத்து விடுகிறோம். அதைத் திருப்பி அடைக்கும் வகையில் சம்பளத்தில் உயர்வு கொடுக்கிறோம். மாதா மாதம் சரியான தேதியில் சம்பளம் கொடுத்து விடும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். பணியில் எந்த விதமான பொறுப்பு எந்த விதமான செயல்பாடுகள் என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பல நிவாரணங்கள் சொல்லி மாலையில் பேசலாம் என்று நிறுத்தி விட்டார். மாலையில் மீண்டும் சந்தித்துப் பேசும் போது மதியம் இருந்த அளவுக்கு சுமுகம் இல்லை. நான் சொன்ன வழிமுறைகள் எதுவும் அவர் மனதுக்கு சாந்தி அளிக்கவில்லை. ஆங்கிலத்தில் பேசுவது, தொழில் நுட்ப வளர்ச்சி, பணி முறைகள், குழுவில் மற்றவர்கள் ஒத்துழைப்பது, சமீப காலத்தில் அவர் சரிவரப் பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு. இவற்றுக்கெல்லாம் முழுமையான சமாதானம் கொடுக்க முடியவில்லை.

அன்றைக்கு அவரிடம் பேசியது தவறாகப் போய் விட்டது என்று பட்டது. காலையில் அவரே தொலைபேசி விபரங்கள் கேட்ட பிறகு, பேச வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும். சரி, போனது போகட்டும். எல்லாவற்றையும் பேசி விட்டு, ஒரு நாள் இரவு நன்கு தூங்கி நாளைக் காலையில் முடிவைச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தேன். இன்றைக்கு என்ன சொன்னாலும் சரி. எப்படி முடிவு இருந்தாலும் அடுத்த கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். இப்படி ஒருவரை நம்பி நம்முடைய பணிகளை நடத்திக் கொண்டிருக்கக் கூடாது.

மூன்று பேர் கொண்டு ஒரு குழுவுக்கு தரவுத்தள வடிவமைப்பு, நிரல்களை சரிவர எழுதுவது குறித்து தீவிர பயிற்சி அளிக்க வேண்டும். தினமும் காலையில் 9 மணி முதல் 10 மணி வரை என்று வகுத்துக் கொள்ள வேண்டும். மூன்று பேருமே அந்த நேரத்தில் வந்து விடக் கூடியவர்கள்தான். அந்த ஒரு மணி நேரமும் நான் அவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும். அவர்கள் தாம் கற்றுக் கொண்டதை குறிப்புகளாக எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்காகவும் ஆவணப் படுத்த வேண்டும்.

ஆரம்பித்து வைத்த மேம்பாடுகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, விட்டுப் போயிருக்கின்ற பணிகளை ஒவ்வொன்றாக அலசிப் பார்த்து, புதிய மேம்பாடுகள் என்னென்ன செய்யலாம் என்றும் விவாதிக்கலாம். இந்த மேம்பாடுகள் செய்து கொடுப்படை இந்தக் குழுவின் பொறுப்பாகக் கொடுத்து விடலாம். இவர்களுக்கு என்ன ஊக்கத் தொகை என்று பார்க்க வேண்டும்.

சரியான பணி வடிவமைப்புக் கொடுத்து இனிமேல் மாதா மாதம் பேசி சிறு சிறு மாற்றங்களை தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம். இவர்கள் மூவருக்கும் ஒரு திட்டம் போட்டுக் கொடுத்து விட்டால் தலைமை அடுக்கு சரியாக அமைந்து விடும். இவர்களைத் தொடர்ந்து

காலையில் முதல் வேலையாக தேவைகளைப் பட்டியலிட்டேன். வாடிக்கையாளர் தேவைகளுக்குத் திட்டமிடல் பற்றி இரண்டு பிரிவுகள். ஒரு பிரிவில் உற்பத்தித் திறன் திட்டமிடல், இன்னொரு பிரிவில் தோல்கள் இருப்பதைத் திட்டமிடல். கூடவே அவர்களின் சின்னத் தேவைகளான பராமரிப்புச் சேவை குறித்த குறிப்புகள். எல்லாம் சேர்த்து ஒன்றரை லட்சத்துக்குக் குறைவாகத்தான் வந்தது. இதைக் காண்பித்து அவரைச் சம்மதிக்க வைத்து விடலாம். இது வரை சொன்ன காசைக் குறைத்துச் சொல்லாமல் அதிக வேலை வாங்குவதை மட்டும் செய்து கொள்கிறார்கள்.

அடுத்ததாக வார இறுதியில் நடக்க இருக்கும் முதலீட்டாளர்கள் கூட்டத்துக்கான தயாரிப்பு. போன ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் வரவு ஒப்பீடு, சம்பளச் செலவு ஒப்பீடு, அலுவலக வசதிகளை மேம்படுத்துவது, அதற்குத் தேவையான மூலதனம் பற்றிய விபரங்கள் என்று எழுதிக் கொண்டேன். விபரங்களை பேசிக் கொண்டேன்.

மாலையில் பேசிய பிறகு வேறு வேலை ஓடவில்லை. அலுவலகமே டல்லாக இருந்தது. காலையில் திட்டம் போட்டுக் கொள்ளாமல் இருந்திருந்தால், நேற்றோடு நிறுவனமே கலகலத்துப் போயிருக்கலாம்.

எல்லோரும் இன்றைக்கு வந்து கலகலப்பாக ஆகி விட்டால்தான் நிம்மதி. போவதில் உறுதியாக இருந்தால் அவரையும் வைத்துக் கொண்டே புதிய குழுவை அமைத்துப் பேசி விட வேண்டும். போகவில்லை என்று சொன்னாலும் அதையே செய்து விட வேண்டும். அவர் போகவில்லை என்று சொன்னால் எனக்கு முழுநேர உதவியாளராக அவரை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னறையில் இருக்கைகள் போட்டு இரண்டு பேரும் உட்கார்ந்து கொள்வதாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். நான் போகும் வாடிக்கையாளர் சந்திப்புகளுக்கெல்லாம் அவரும் வர வேண்டும். நான் செய்யும் பணிகளை எல்லாம் அவரும் பின்பற்ற வேண்டும். நான் எடுக்கும் முடிவுகளை எல்லாம் அவருக்கும் விளக்க வேண்டும்.

பொன் போன்ற வாய்ப்பு அவருக்கு. அது இல்லை என்றால் இந்த நான்கு நாட்களும் தொழில் நுட்ப குழுவுக்கு பயிற்சி அளிக்கும்படி கேட்டுக் கொண்டு, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி வாங்கிக் கொண்டு விடை கொடுத்து விட வேண்டும். தேவைப்படும் போது அவருக்குத் தொலைபேசி விபரங்கள் கேட்டுக் கொள்ளலாம்.

இரண்டு நிகழ்வுக்கும் தயாராகிக் கொள்ளலாம். அவர் தொடருவதாகச் சொன்னால் நம்முடைய மன ஒழுங்குக்கும் தூய்மைக்கும் கிடைத்த பாராட்டு என்று வைத்துக் கொள்ளலாம். நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பில் முக்கியமான ஒருவரை தவற விட்டு விடாமல் பார்த்துக் கொள்ளலாம். என்னுடனேயே அவரை வைத்துக் கொண்டு வளர்த்துக் கொண்டு வரலாம்.

இன்னும் 2 வாரங்களுக்குள் அவருக்குக் கொடுப்பதற்கு 2 லட்சம் தயார் செய்ய வேண்டும். அது மட்டும்தான் எதிர்மறை விளைவு.

அவர் விட்டுப் போவதாகச் சொன்னால் அந்த 2 லட்சம் கைவசம் வைத்துக் கொண்டு விடலாம். மற்றவர்களுக்கு வளர்வதற்கு ஒரு வாய்ப்பு என்று எல்லோரையும் ஒன்று கூட்டி பிணைப்பை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் போது துர்காபவனில் இட்லிகள். முதலில் நான்கு இட்லிகள், தொடர்ந்து இரண்டு பரோட்டாக்கள் சாப்பிடலாம் என்று தோன்றினாலும் பரோட்டா தீர்ந்து போயிருந்ததால் இன்னும் இரண்டு இட்லிகள் வாங்கிக் கொண்டேன். வீட்டுக்கு வந்து இருந்த வாழைப்பழத்தை உரித்துச் சாப்பிடும் போது கையெல்லாம் எறும்புகள். வாழைப்பழத்தின் கீழ்ப் பகுதி முழுவதும் மொய்த்திருந்தன. அவசர அவசரமாகக் கீழ்ப்பகுதியை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு சாப்பிட்டு முடித்தேன்.

வேறு எதுவும் வேலை ஓடாமல் புத்தகம் ஒன்றைப் பிரித்து வைத்து பாயில் படுத்திருந்தேன். முதலில் தொலைபேசி அழைப்பு. என்ன அவசரத்துக்குக் கேட்கிறானோ. கொடுத்து விடுவோம் என்று கருத்து சொன்னார்கள். இந்த வயதில் அவர்களுக்கு இந்த பதற்றம் கொடுப்பது அநியாயமாகப் படுகிறது. தொடர்ந்து பேசினேன். வண்டி வாங்க வைத்திருந்த தொகையைத் தொடப் போவதில்லை. வேறு தொகை கையில் இருப்பதை வேண்டுமானால் கொடுத்து விடலாம் என்றான்.

அடிப்படைத் தேவைகளுக்கு என்றால் கொடுக்கலாம். ஆடம்பர வாழ்க்கைக்கும் வீண் பிடிவாதத்துக்கும் குருவி போலச் சேர்த்து வைத்திருப்பவரிடமிருந்து வாங்கி பயன்படுத்துவது அடாவடி இல்லையா. அடுத்தவரிடம் கடன் வாங்க ஆரம்பித்த நாளிலிருந்து செலவுகளை வெகுவாகச் சுருக்கிக் கொண்டேன். அண்ணா நகர் 9வது தெருவிலிருந்து வீடு மாறிய பிறகு ஆடம்பரச் செலவுகள் செய்வதில்லை என்றுதான் என்னிடம் சண்டை.

ஊரில் நிலம், சென்னையில் வீடு, கார் என்று வைத்திருப்பவர் தெவங்கித் தெவங்கி ரூபாய்க்கு பிச்சை எடுப்பதும் கந்து வட்டிக் கடன்காரர்களிடம் மாட்டிக்கொண்டிருப்பதும் இரக்கம் ஏற்படுத்துவதாகப் படவில்லை. தொலைபேசினேன். வண்டி ஓட்டிக் கொண்டே பேசினான் போலிருக்கிறது. சமீபத்தில்தான் வீடு வாங்க பணம் கொடுத்திருந்ததால் இப்போது கடன் கொடுக்க இயலாது. அவனது பணி விபரங்கள், குறித்துப் பேசிக் கொண்டே வெள்ளிக் கிழமை காலையில் அவன் அலுவலகத்துக்கு வருவது என்று ஏற்பாடு செய்து கொண்டோம். சாரிடமும் பேசி வருவதற்கு ஒரு நாளும் நேரமும் குறித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தரை தூக்காமல், தியானம் செய்யாமல் படுத்துத் தூங்க முயற்சி செய்தேன். எறும்புக் கடியில் எழுந்து பாயையும், விரிப்பையும் உதறி தரை தூத்து விட்டு மீண்டும் போட்டேன். விளக்கை அணைக்காமல், மின்விசிறியைப் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தேன். நிம்மதியான தூக்கமாக இல்லை. நள்ளிரவு தாண்டி விழிப்பு வந்ததும் எழுந்து போர்வையைத் தேடினால் வெளியில் கிடந்தது. போர்வைக்குள்ளும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. மூடிக் கொண்டு படுத்து ஓரிரு நிமிடங்களில் கடிக்க ஆரம்பித்து விட்டன. அந்தப் போர்வையையே வீசி எறிந்து விட்டு இன்னொரு அறையில் மடித்து வைத்திருந்த பச்சை நிறப் போர்வையை எடுத்துக் கொண்டு விட்டேன்.

நேற்றுக் காலையில் நாளிதழுக்கு 170 ரூபாய்கள், மதியம் பழச்சாறு குடிக்க 45 ரூபாய்கள் என்று பணம் செலவாகிக் கொண்டிருந்தது.

இப்போது மணி 5.47. இன்னும் 10 நிமிடங்கள் இருக்கின்றன. நாலரை மணி தாண்டி விழிப்பு வந்து அதிகம் புரண்டு கொண்டிருக்காமல் எழுந்து விட்டேன். வீட்டுக்கு வெளியில் நிறுத்தியிருந்த மிதிவண்டி, பைக்கை தள்ளி விட்டு விட்டு அங்கு நாற்காலி உட்கார முக்காலி கால் வைக்கப் போட்டு விட்டு கணினியையும் எடுத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

எதிர் கட்டிடத்தில் மாடியில் குடும்பத்தலைவர் ஐந்தேகாலுக்கெல்லாம் கிளம்பிப் போனார். அவர் மாறி வரும் பணி நேரத்தில் வேலை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவரது பையன் சத்தம் போட ஆரம்பித்திருந்தான். அப்பா மீது மிகவும் பாசம். அலறலாக சத்தம் போட்டுக் கொண்டே இருப்பான். அப்பா என்று நினைத்து ஒரு நாள் என்னிடம் தாவி விட்டான். அவர் அவ்வளவு உயர்ந்த மனிதராக இருக்க வேண்டும். குழந்தையின் தாய்க்கு உன்னதமான கணவனாக இருந்து அவளது அன்பையும் காதலையும் பெற்றிருக்க வேண்டும். அதுதான் குழந்தையிடமும் பாசமாக வெளிப்படுகிறது.

சோகப்பட்டுக் கொள்வதற்கோ குறைப்பட்டுக் கொள்வதற்கோ நேரமில்லை என்று தோன்றியது. இருபது பேருக்கும் சரியாக வழி காட்டு, 10 வாடிக்கையாளருக்கு சரியான திட்டங்கள் போட்டு எல்லாவற்றையும் சரிவர நடத்திச் செல்வதற்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் போதாது. பணம் கையாளுதல், அலுவலக மேலாண்மை, என்ற பொறுப்புகளை ஒப்படைத்து விடலாம். அவரையும் இயக்குனர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளலாம்.

56 நிமிடங்கள் ஓடி விட்டன. செல்பேசியின் நேரப்படி மணி 5.50. மடிக்கணினியில் 5.53. மூன்று நிமிடங்கள் வேறுபாடு. இன்னும் நான்கு நிமிடங்கள் இருக்கின்றன, இது வரை எத்தனை சொற்கள் என்று பார்த்தால் நேரம் போய் விடும். 1578 சொற்கள் ஆகியிருக்கின்றன. நிமிடத்துக்கு 26 சொற்கள். இன்னும் இரண்டு நிமிடங்களுக்கு வேகமாக எழுதினால் 27 தொட்டு விட முடியலாம். தொடா விட்டாலும் எதுவும் முழுகிப் போய் விடாது.

பையனுக்கு அம்மாவின் அதட்டல், அடம் பிடிப்பு அதிகமாயிருக்கிறது. எங்கிருந்தோ குளியல் சத்தம். வெளியில் உட்கார்ந்திருந்தால் எல்லா வீடுகளிலும் என்ன நடக்கிறது என்று கேட்டு விடும் போலிருக்கிறது. இரவுத் தூக்கம் முழுமையாக இல்லாமல் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கப் போகிறது. தேவையில்லாமல் சாப்பிடுவதைக் கட்டுப் படுத்திக் கொண்டால் அதை மாற்றிக் கொள்ளலாம். பார்க்கலாம் நாள் எப்படிப் போகிறது என்று. 27 சொற்கள் தாண்டி 28க்குள் நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏன் இன்னும் மணி அடிக்கவில்லை. அடித்து விட்டது.