என்னைப் பற்றி

சுயமுன்னேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயமுன்னேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 02, 2019

ஈகோ

1. நாள் நன்றாகத்தான் போனது, படுத்து தூங்கவே இல்லை.

2. மதியம் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். நான் யோசித்து திட்டமிட்டு வைத்திருந்ததை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாத போது, நான் நினைத்தபடி விஷயங்கள் போகாத போது டென்ஷன் ஆகி விடுகிறேன். இதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த உணர்ச்சிவசப்படுதலின் தாக்கம் இப்போது வரை தொடர்கிறது. பயணத்தின் போது ஜான் ஸ்மித் விவாதம் படிக்கும் போதும், தி.வி.க கூட்டத்தில் இருந்த போதும், திரும்பி வரும் போதும், தூங்கும் போதும் உடல்நிலை பிரச்சனையாக இருந்தது. மூளை கவனத்தை எடுத்துக் கொண்ட பொருளில் குவிப்பதை செய்து விட்டாலும், உடலை பருண்மையாக அது பாதிக்கிறது. இதை கவனமாக பரிசீலித்து மாற்றிக் கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படவே கூடாது.

ஈகோ இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், எல்லா விஷயங்களிலும் தனிப்பட்ட நலனை துடைத்து விட்டதாக சொன்னாலும், நான் சொன்னதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதுவும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும், மாற்று கருத்து எதுவும் சொல்லக் கூடாது என்ற ஈகோ, அகங்காரம் இருக்கிறது. நாம்தான் நிறைய வேலை செய்கிறோம், எனவே நமக்குத்தான் தெரியும் என்ற ஈகோ.

அதைக் கைவிட வேண்டும். என்ன ஆனாலும், உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக புறநிலையாக விஷயங்களை அணுக வேண்டும். நமது ஈகோ, நாம் எடுத்த முடிவு, நாம் யோசித்த நடைமுறைகள் எல்லாவற்றையும் முன் வைக்க வேண்டும். அதற்கான வெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படாமல் இருந்திருந்தால், போலி ஈகோ பார்க்காமல் இருந்திருந்தால் நிறைய செய்திருக்கலாம். கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது என்ற நோக்கத்திலிருந்துதான் எதையும் செய்ய வேண்டும். நம்முடைய ஈகோவை முன்னிறுத்தி சொதப்புவது தேவையில்லாத ஒன்று. 

நமது விருப்பத்துக்கு மாறாக, முடிவுக்கு மாறாக, நாம் சரி என்று கருதுவதற்கு மாறாக ஒரு விஷயம் நடக்கும் போது என்ன செய்ய வேண்டும்? நிதானமாக என்ன விஷயங்கள் அதில் அடங்கியிருக்கின்றன என்று பரிசீலிக்க வேண்டும்.

பலர் எப்படி நிதானமாக விளக்கி பேசுகிறார்கள். எந்த பதட்டமும் இல்லாமல் சொல்ல வருவதை கேட்பவர் பிணிக்கும் வகையில் சொல்கிறார்கள். இதை பயில வேண்டும்.
அதே போல எழுதும் போதும் எழுத்தில், வார்த்தையில் கவனம் இல்லாமல் விட்டு விடக் கூடாது. மார்க்ஸ் குறிப்பு எடுக்கும் போது கூட அலட்சியமாக வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்று ஜான் ஸ்மித் சொல்வதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வியாழன், ஜனவரி 24, 2019

ஒழுங்கு ஒழுங்காக வந்து விடுமா என்ன?

நேற்று கொஞ்சம் சோதனை ஆரம்பிக்கத்தான் செய்தது. காலையில் உடற்பயிற்சிக்கு முன்பாகவே காஃபி குடித்தேன். அதிகாலையில் சீக்கிரம் எழுந்து அதிகாலையிலேயே உடற்பயிற்சியும் செய்து விட்டு 7.30 மணிக்கு மறுபடியும் தூங்கினேன். தூங்கி எழுந்து இணைய இணைப்பு கோளாறு செய்ததால் மடிக்கணினியையும் எடுத்துக் கொண்டு வெளியில் போனேன். பேருந்து நிறுத்தத்திலும் பின்னர் பூங்காவிலும் உட்கார்ந்து கொண்டே தயாரித்து வெளியிட்டு விட்டேன்.

காலை உணவுக்குப் பிறகும், மதிய உணவுக்குப் பிறகும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே தூக்கம் கண்களை சொக்கியது. மூன்று முறை இணையத்தில் மேய்வது நடந்தது.
ஒரு குப்பைக் கதை படத்தை வேறு வழியில்லாமல் பார்த்தேன். முதலில் Star Wars படத்தை அரை மணி நேரத்துக்கு மேல் பார்த்தேன். அதன் பிறகுதான் ஒரு குப்பைக் கதை படம்.

மாலை உணவு பிரச்சனை செய்ய ஆரம்பித்ததும் வெளியில் நடைப் பயிற்சிக்குப் போய் தண்ணீர் போதுமான அளவுக்குக் குடித்து இன்னும் 1 – 1.30 மணி நேரம் விழித்திருந்து அதை சரி செய்து கொண்டேன்.

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

வாழும் வழி


'மனிதன் தனது வாழ்க்கையை தானே சமைத்துக் கொள்ள முடியும்' என்பதுதான் உண்மை.

'இறைவன் எழுதி வைத்த தலைவிதி அல்லது முன்ஜன்மத்து கர்மா அல்லது உலகில் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நடைமுறைகள் எதுவும் மனிதரைக் கட்டுப்படுத்தாது. உலகில் இருக்கும் பொருட்களை மாற்றுவதன் மூலம் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். பொருட்களில் உயிர் வாழும் விலங்குகள், தாவரங்கள், மனிதர்களும் அடங்கும். உயிர் என்பது குறிப்பிட்ட பொருளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிதான்.'

மனச் சோர்வோ, எதுவும் செய்ய முடியாது என்ற துக்கமோ, நமக்கு ஏன் இவ்வளவு துயரங்கள் என்ற விரக்தியோ நம்பிக்கைகளின் வெளிப்பாடுகள்தான். என்ன நடந்தாலும், நிலைமை எப்படி இருந்தாலும் அதைக் கையாளுவதற்கு அறிவியல் அணுகுமுறையும், பல ஆயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கும் நமது மூளையின் சிந்தனைத் திறனும் போதும்.

இன்று வேறு எந்த வேலையையும் அமைத்துக் கொள்ளவில்லை. செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

1. எம்ஐஎஸ் பாடப் புத்தகத்தைப் படித்து எந்தெந்த அத்தியாயங்களில் எந்தெந்த பக்கங்களைப் படிக்க வேண்டும் என்று குறிக்க வேண்டும் - 2 மணி நேரம்
2. சீன மொழி பாடத்துக்கான பாடங்களை தயாரித்து முடிக்க வேண்டும் - 2 மணி நேரம் (மொத்தம் 4 மணி நேரம்)
3. கடிதத்துக்கு பதில் போட வேண்டும் - 30 நிமிடங்கள் (மொத்தம் 4.30 மணி நேரம்)
4. பதில் போட வேண்டும் - 10 நிமிடங்கள் (மொத்தம் 4.40 மணி நேரம்)
5. இரண்டு பேரோடும் தொலைபேச வேண்டும் - 20 நிமிடங்கள் (மொத்தம் 5 மணி நேரம்)

6. பெல்ட்டும், காலணியும் வாங்க வேண்டும் - 1 மணி நேரம் (மொத்தம் 6 மணி நேரம்)
7. கட்டுரைகள் எழுத வேண்டும் - ஒரு கட்டுரைக்கு 1 மணி நேரம் வீதம் 4 கட்டுரைகளுக்கு 4 மணி நேரம் (மொத்தம் 10 மணி நேரம்)
8. நாளைக்கு கூட்டத்துக்கு தொலைபேசியில் நினைவுபடுத்த வேண்டும் - 1 மணி நேரம் (மொத்தம் 11 மணி நேரம்)

9. இரண்டு பேருக்கும் பணம் கேட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் - 30 நிமிடங்கள் (11.30 மணி நேரம் மொத்தம்)
10. போவதற்கான ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் - 30 நிமிடங்கள் (12 மணி நேரம் மொத்தம்)

இன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் 12 மணி நேரம் வேண்டுகின்றன. நாள் முழுவதும் வேலை செய்யலாம். இவற்றைத் தவிர நடக்கப் போதல் (1 மணி நேரம்), குளித்தல்(20 நிமிடங்கள்), சாப்பிடுதல் (20+20+20=1 மணி நேரம்) என்ற பிற பணிகள் இருக்கின்றன. இவற்றையும் சேர்த்தால் 14.20 மணி நேரத்துக்கு வேலை இருக்கிறது.

11. தொலைபேசி சனிக்கிழமை சந்திப்பு, ஞாயிற்றுக் கிழமை பணி பற்றி பேச வேண்டும்.

இவற்றுக்கு மேல் படிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன:

1. சாதி குறித்து கொடுத்துள்ள அம்பேத்கர் புத்தகங்கள்
2. கீதை பற்றிய வரலாற்றுப் புத்தகம், எஸ் வி ராஜதுரை புத்தகம், கி வீரமணி புத்தகம்
3. பொருளாதாரம் பற்றிய அம்பேத்கரின் புத்தகம், history of capitalism, அரசியல் பொருளாதாரத்தின் அறிமுகம், industrial state

இந்தப் புத்தகங்களை முறையாகப் படித்துக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று பொருட்களைப் பற்றிய வாசிப்பை பிப்ரவரி 29க்குள் முடித்து விட வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம். இன்று பிப்ரவரி 10, இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன. வருகின்ற வாரம் ராணிப்பேட்டை போவது, என்று நாள் நகர்ந்து விடும். 20ம் தேதிக்குப் பிறகுதான் வாசிப்பை முறைப்படுத்த வேண்டும்.

நாளைக்கு காலையில் இரண்டு வகுப்புகள் - சீன மொழி, எம்ஐஎஸ். சீன மொழிக்கு ஏற்கனவே ஆரம்பித்து விட்ட 3 பாடங்களை மீண்டும் விவாதிக்க வேண்டும். எம்ஐஎஸ்சில் அறிமுக குறிப்புகளையும், வீட்டுப் பாடத்தைப் படித்து விவாதிப்பதையும், பாடப் புத்தகத்தில் படிக்க வேண்டிய அத்தியாயங்களைப் பற்றியும் பேச வேண்டும்.

அடுத்த வாரம் வகுப்புக்கு வர முடியாது என்று தகவல் சொல்லி விட்டு மாற்று வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எம்ஐஎஸ் பற்றிய பாடத் திட்டத்தை பேசிக் கொள்ள வேண்டும்.

மதியத்துக்கு மேல் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து விட்டு, 2.30க்கெல்லாம் புறப்பட்டு விட வேண்டும். ஞாயிறு மாலையில் புறப்பட்டு வேலூர் போய் விட வேண்டும்.

திங்கள் கிழமை போக வேண்டும். பணம் தர ஒத்துக் கொண்டால் போய் அவர்கள் பணியையும் முடித்து விட வேண்டும்.  தகவலை சொல்லியாகி விட்டது. செவ்வாய்க் கிழமை பணம் வந்திருந்தால் வாணியம்பாடி இல்லை என்றால் பாண்டிச்சேரி போய் வேலை முடிக்க வேண்டும். பெரும்பாலும் புதுச்சேரி போவதாகவே வைத்துக் கொள்ளவேண்டும்.

புதன் கிழமை காலையில் புறப்பட்டு சென்னைக்கு வந்து விட வேண்டும். மதியத்துக்கு மேல் புறப்பட்ட மாலையில் கிளம்ப தயாராகிக் கொள்ள வேண்டும்.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு பயணத்தில் கழியும். ஞாயிற்றுக் கிழமை திரும்பி வந்ததும் நேராக வேலூர் போய் விட வேண்டியதுதான். 20ம் தேதிக்குப் பிறகு வாசிப்புதான் நிறைய செய்ய வேண்டும்.

அவரவர் வாழ்க்கை முறைகளை மாற்ற முயற்சிக்காமல், அப்படியே ஏற்றுக் கொண்டு உறவைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என்றால் அதை இரண்டு பேரும் ஏற்றுக் கொண்டால் உரையாட முடியும். அவற்றை நோக்கியதாகவே உரையாடல் இருக்கட்டும்.

நிச்சயமாக அத்தகைய வாழ்க்கை நிரந்தரமானதில்லை. பொருளாதார சுனாமிகள் எப்போது தாக்கும் என்ற நிச்சயம் எந்த துறையிலும் கிடையாது. எது எப்படித் தாக்கினாலும் அதற்கான தயாரிப்புகளை செய்து கொண்டு தற்காத்துக் கொள்ளும் திறமை உண்டு. மாறி விட்ட சூழலிலும் எப்படி பிழைக்க வேண்டும் என்று தகவமைத்துக் கொள்ளும் இயல்பும் நிறையவே உண்டு. ஆனால் அது முழுமையாக இருக்காது. அவர்களது நேர்மையும், உண்மையும் பல கேள்விகளை மனதில் எழுப்பும். அறிவியல் அணுகுமுறை மதங்களையும் கண்மூடித்தனமான பக்தியையும் நிராகரிக்க வைக்கும். அந்த நேரத்தில் அவர்களின் தேடல் ஆரம்பிக்கும்.

மூடிய மனத்துடன் நிச்சயமாக வாழ்க்கையை கழித்து விட மாட்டார்கள். அதற்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி தேடல் ஆரம்பித்த பிறகும் பேச வேண்டும் என்று தோன்றாமல் போகலாம். அந்தத் தேடலை திசை திருப்பி அழிவு பழக்கங்களிலோ அல்லது சமரச வழிகளிலோ திருப்பி விடுவதற்கான செல்லுபடியாகாது என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னால் இந்த சமூகத்தில் மன நிறைவுடன் வசதிகளை அனுபவித்துக் கொண்டு வாழ முடியாது. சுயநலப் பணி என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நமது வரலாற்றுப் பின்னணி, சமூக நிலை இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது சமூக மாற்றத்துக்காக உழைக்கும் பணிகளைத் தவிர வேறு எதுவுமே போலித்தனமானதாகவும் நேர்மையற்றதாகவுமே இருக்க முடியும்.

கட்டுரைகள் எழுதுவது, படிப்பது என்று பல வேலைகள் இருக்கின்றன. இவற்றை முழு மூச்சுடன் முழு நேர்மையுடன் செய்வதுதான் எனக்குகந்த சரியான வழி. இடையிடையே கல்லூரி வகுப்புகள், கூப்பிடும் நிறுவனங்களுக்குப் போய் பணி செய்வது என்று அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதை முடிக்கும் போது 5.50 ஆகியிருக்கும். அதன் பிறகு உலாவப் போனால் 6 மணி முதல் 7 மணி வரை ஆகும். 7 மணிக்குத் திரும்பி வந்து

7.00 முதல் 8.00  வரை - mails
8.00 முதல் 9.00 வரை - குளியல், காலை உணவு
9.00 முதல் 10.00 வரை - சீனமொழி பாட தயாரிப்பு
10.00 முதல் 11.00 வரை - நாளைக்கு கூட்டத்துக்கான தொலைபேசி அழைப்புகள்
11.00 முதல் 12.00 வரை - எம்ஐஎஸ் பாடப் புத்தகத் தயாரிப்பு
12.00 முதல் 1.00 வரை - கட்டுரை
1.00 முதல் 2.30 வரை - மதிய உணவு +பெல்ட்/காலணி வாங்குதல்
2.30 முதல் 3.00 வரை - இரண்டு பேரிடமும் தொலைபேசி
3.00 முதல் 4.00 வரை - எம்ஐஎஸ் பாடப் புத்தகத்தைப் படித்து
4.00 முதல் 5.00 வரை - கட்டுரை
5.00 முதல் 6.00 வரை - சீன மொழி பாடத் தயாரிப்பு
6.00 முதல் 7.00 வரை - கட்டுரை
7.00 முதல் 8.00 வரை - மாலை உணவு
8.00 முதல் 9.00 வரை - கட்டுரை
9.00 முதல் 10.00 வரை - தொலைபேசி+கட்டுரை

செவ்வாய், ஜனவரி 10, 2012

புத்தாண்டு!!!


ஜனவரி 10, 2012 காலை மணி 6.28

நேற்று முழுக்க முழுக்க சுயமாக திட்டமிட்டுக் கொண்டு வேலை செய்த நாள்.  காலையில் சோர்வு தீர தாமதமாக தூங்கி எழுந்து, நாட்குறிப்பு எழுதிமுடித்த பிறகு காலை உணவுக்குத் தயாரிப்பு. எழுந்த உடனேயே கலக்கி வைத்திருந்த ரவை+கோதுமை மாவு+சீரகம்+வெங்காயம்+உப்பு தோசை, மிளகாய்ப் பொடியுடன். ஆம்பூருக்குப் போக வேண்டும் என்று போன வாரம் சொல்லியிருந்தேன். துணி துவைக்க வேண்டியிருந்தது, துவைத்துப் போடப்பட்டிருந்து துணிகளை தேய்க்க வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் போக முடியும்.

கீழே போய் கொடுத்து வைத்திருந்த குடங்களில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தேன். தேங்காயை உடைப்பதற்கு பையில் போட்டு எடுத்துப் போய் மறந்து வைத்து விட்டு வந்திருந்தேன். பின்னால் மதியம் போய் எடுத்துக் கொண்டேன்.

இணையத்தில் இணைந்து கூகுள் ரீடரிலோ, +லோ ஹரன் பிரசன்னாவின் கட்டுரை கண்ணில் பட்டது. அரவிந்தன் நீலகண்டனின் புத்தக பரிந்துரை. விமர்சனம் போல இல்லாமல் fanboy புல்லரிப்பாக எழுதியிருந்தார். 'கம்யூனிசம் தோற்று விட்டது, உலகமெங்கும் கம்யூனிசம் இல்லாமல் போய் விட்டது, மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் கூட கம்யூனிஸ்டுகள் தோற்று விட்டார்கள்' என்று பிரச்சாரம் செய்யும் இந்துத்துவாக்களின் பிரதிநிதி அரவிந்தன் நீலகண்டனுக்கு இப்படி ஒரு சிரமம் ஏன் என்று தெரியவில்லை. 'பாரத தர்மத்தைக் கட்டி அமைக்க' ஆக்க பூர்வமான வேலைகளில் ஈடுபடுவதை விட்டு இல்லாத ஒரு அச்சுறுத்தலை எதிர்த்து ஏன் புலம்புகிறார்? +2 படிக்கும் மாணவர்களைக் கூட கம்யூனிசம் ஈர்த்து விடக் கூடாது என்று ஏன் முயற்சியோ!

மார்க்சிசத்தின் அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம், அதைத் தவிர்த்த மற்ற தத்துவங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் கருத்து முதல்வாதமாக போய் விடுகின்றன. அவற்றில் இயக்க மறுப்பு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். அறிவியல் அணுகுமுறையின் அத்தனை கூறுகளையும் கம்யூனிச இயக்கங்கள் பின்பற்றுகின்றன. தரவுகளைத் திரட்டி, ஆய்வு செய்து அதிலிருந்து முடிவு செய்வது, விமர்சனம்/சுயவிமர்சனம் (peer review, review) போன்றவை.

அறிவியல் அணுகுமுறையின் அடிப்படை புரிதல், உண்மைகள் எல்லாமே பொருட்களை ஆராய்வதன் மூலம்தான் தெரிய வர முடியும். மனதில் எவ்வளவு போட்டு சிந்தித்தாலும் புதிய உதித்தல்கள் சாத்தியம் கிடையாது, அப்படியே உதித்தல்கள் ஏற்பட்டதாக நினைத்தாலும், அதன் உண்மை நடைமுறையில் நிரூபிக்கப்பட வேண்டும்.

உலகைப் பற்றிய நமது புரிதல் ஒரு மேல் நோக்கிப் போகும் சுழல் வட்டமாக இயங்குகின்றன. ஒரு பொருளில் அல்லது கருத்தில் எதிர்மறையான இரண்டு தன்மைகளின் சமநிலை எப்போதும் இருக்கிறது.

இப்படி அறிவியல் சார்ந்தவர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் வழியில் மார்க்சியமும் அதன் அடிப்படையிலான கம்யூனிச நடைமுறைகளும் இருக்கின்றன. இதைக் குறை சொல்வதற்கு, 'விஷ்ணுவின் தொப்புளிலிருந்து பிரம்மா தோன்றினார், பிரம்மா உலகைப் படைத்தார்' என்று கற்பனையான கருத்து முதல் வாதங்களை முன் வைக்கும் இந்துத்துவா பணியாளருக்கு எப்படி தகுதி இருக்க முடியும்?

இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் செயல்முறைகளை விமர்சனம் செய்வதற்கு, முறையாகப் படிக்காமல் நாட்டுப் புறத்தில் மருத்துவம் செய்யும் சித்த மருத்துவருக்கு  என்ன தகுதி இருக்க முடியும்?

இதை ஒரு சிறப்பான, முக்கியமான பணியாக அவர் எழுத, அதை கிழக்கு பதிப்பகம் ஆர்வமாக பதிப்பித்து வெளியிட, இணையத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் விற்பனைக்கு விளம்பரங்கள் செய்ய, இதன் மூலம் பெரும் விவாதம் தமிழ்நாட்டில் உருவாகும் என்று நாக்கைச் சப்பிக் கொண்டு இருக்கிறார்கள். மார்க்சியம் படித்து கடைப்பிடித்து வரும் அறிஞர்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தரம் கூட இது போன்ற புத்தகங்களில் இருக்க முடியாது.

பத்ரியின் பதிவிலிருந்து வாசகங்களை எடுத்து கம்யூனிசம் என்பதை அறிவியல் என்று மாற்றி இடுகை செய்தது போல, ஹரன் பிரசன்னாவின் இடுகையையும் போட்டேன்.  உடனேயே கூகுள் பிளஸ்சில் வெளியாகி விட்டது. பாரதியும், அகிலனும் உடனேயே எதிர்வினை செய்தார்கள். 'அறிவியல் பேரழிவை ஏற்படுத்துகிறது என்றால், பேசாமல் சோதிடம், மூட நம்பிக்கைகள் என்று மக்கள் போகலாமா' என்று அகிலனின் கேள்வி  நச்சென்று அமைந்தது. அதைத் தொடர்ந்து விளக்கம் அளித்தேன். அங்கிருந்தும், தமிழ்மணத்திலிருந்தும் கணிசமான பேர் வந்து படித்திருக்கிறார்கள்.

முதலில் இந்த கிண்டல் பதிவைப் படித்து விட்டு ஒரிஜினலைப் படித்தால் அவர்கள் எழுதுவதன் அபத்தம் தெரியும். தேவைப்பட்டால், முடிந்தால் முழு நூலுக்கும் இது போன்று ஒரு spoof செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு முயற்சி தேவையா என்று யோசிக்க வேண்டும். கூடுதல் மதிப்பு அளிப்பதாக போய் விடக் கூடாது.

வெள்ளிமலருக்கு கட்டுரை எழுத வேண்டும். திங்கள் கிழமை அனுப்புவதாக ஏற்பாடு, எழுத ஆரம்பித்து முடிக்க முடியவில்லை.

துணிகளை துவைப்பதற்கு ஊற வைத்து விட்டிருந்தேன். 10 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது.  அதன் பிறகும் படிப்பது, எழுதுவது என்று நேரம் நகர்ந்தது. துணி துவைத்து காயப் போட்டு விட்டு, முடி வெட்டப் போகலாமா என்று யோசித்தேன். மதிய உணவுக்கு சோறு, உருளைக் கிழங்கு வேக வைத்திருந்தேன். முடி வெட்டப் போனால் ஆம்பூர் போக முடியாது என்று முடிவு செய்து குளித்து, சட்டை, பேன்ட் தேய்த்து விட்டு கடைக்குப் போய் தயிர் வாங்கி வந்தேன். தயிரை கலக்கி உப்பு போட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து அடுத்ததாக உருளைக்கிழங்கை பொடியாக்கி, வெங்காயத்துடன் வதக்கி, கடைசியில் தேங்காய் துருவிச் சேர்த்துக் கொண்டேன். வாங்கி வந்திருந்த முட்டைகளை உடைத்து வெங்காயம் சேர்த்து ஆம்லெட்.

அப்போது ராணிப்பேட்டையிலிருந்து பேசினார். 'இன்றைக்கு என்ன திட்டம், ராணிப்பேட்டை வர முடியுமா' என்று கூப்பிட்டார். 1.30 ஆகியிருந்தது. ஆம்பூர் போனால் மாலை தாமதமாகி விடும், அதை ரத்து செய்து விட்டு ராணிப்பேட்டை போக முடிவு செய்தேன். சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டு 4.30 போல வருவதாகச் சொன்னேன். சாப்பிடும் போது வந்தார். அவரிடம் தபால் அலுவலக ரசீதைக் கொடுத்தேன். பாத்திரங்களை எல்லாம் கழுவி, மீன் குழம்பு செய்வது பற்றி விளக்கினார். சாப்பிட்டு விட்டு மீதி இருந்த சோறு, தாளித்த மோர், உருளைக் கிழங்கை இரவுக்காக எடுத்து மூடி வைத்தார். அவரை சாப்பிடச் சொன்னால் சாப்பிட வில்லை.

'இந்த வீட்டில் முன்பு இருந்த பையன் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான்' என்று தகவல் சொன்னார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம், வீட்டுக்கு அழைத்துப் போனவர்கள் மீண்டும் படிக்க போகச் சொன்னதை மறுத்து இரண்டு நாட்கள் முன்பு தற்கொலை செய்து கொண்டதாக பக்கத்து வீட்டு பையன்கள் சொன்னார்களாம். இது போன்று தனியார் கல்லூரிகளில் எத்தனை தற்கொலைகள்!

3 மணிக்குப் புறப்பட்டேன். வேலூர் பேருந்து நிலையம் போய் வாலாஜா இறங்கி, முத்துக் கடை வந்து, சிப்காட் போவதற்கு பதிலாக,  10ம் எண் பேருந்து பிடித்து நேராக சிப்காட் போய் விடலாமா என்று திட்டம் போட்டு சாலையின் இந்தப் பக்கமாகவே நின்றேன். நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். கடைசி பிரதி போலிருந்தது. விசேஷமாக செய்திகள் எதுவும் இல்லை.

3.15 வரை காத்திருந்து பார்த்து விட்டு, நகரப் பேருந்து ஏறி சித்தூர் பேருந்து நிலையத்துக்குப் போய் அங்கிருந்து வேறு தடங்களும் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று போனால் சாலை சந்திப்பில் பெரிய கூட்டம். நல்ல வெயில்.  3.30 வரை காத்திருந்து பார்த்து விட்டு மீண்டும் நகரப் பேருந்து ஏறி புதிய பேருந்து நிலையத்துக்கு சீட்டு எடுத்துக் கொண்டேன். புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கி நெடுஞ்சாலை பாலத்தின் அருகில் இருக்கும் போலீஸ் குடைக்கு அருகில் வந்து சேர்ந்தேன். நல்ல வெயிலில் காய்வு. நிற்க நிழல் கூட இல்லை. 102B இடைநில்லா பேருந்து, வாலாஜா போகாது. அரக்கோணம் போகும் தனியார் பேருந்து, ஆற்காட்டில் நிறுத்தி வைத்து கடுப்பேற்றுவார்கள், திருத்தணி போகும் அரசுப் பேருந்து நிறுத்தாமல் சாலையில் நடுவில் போனார்கள், கடைசியில் தலங்கை பேருந்து வந்தது. ஆற்காடு, ராணிப்பேட்டை, முத்துக் கடை, வாலாஜா போய் போகும்.

முத்துக் கடையில் இறங்கிக் கொள்ளலாம். மூன்று பேர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். ஊருக்கு வெளியில் வெகுதூரம் வந்த பிறகுதான் சீட்டு கொடுக்க வந்தார் நடத்துனர். 14 ரூபாய் முத்துக்கடைக்கு, வாலாஜாவுக்கும் அதுதானா? ஆற்காடு அருகில் நிறைய பள்ளிச் சிறுவர்கள் ஏறி மூன்று பேர் இந்த இருக்கைக்குள் நெருக்கிக் கொண்டார்கள். இன்னொரு பையன் நின்று கொண்டிருந்தான். பின் இருக்கையில் உட்கார்ந்தவர்களின் ஒருவன் 'அங்கிள், ஜன்னலைத் திறந்து விடுங்க என்று சொல்ல கண்ணாடி ஜன்னலை கஷ்டப்பட்டு ஏற்றி விட்டேன். இந்த இருக்கையில் இருந்தவர்களுக்கிடையே 'அங்கிள் என்றால் என்ன பொருள்' என்று விவாதம்.

முத்துக் கடையில் இறங்கியதும் தனியார் மினி பேருந்து நின்றது. உட்கார இருக்கைகளும் காலியாக இருந்தன. ஏறி எத்தனை மணிக்குப் புறப்படும் என்று கேட்டால் 4.45 என்றார்கள், 4.35 ஆகியிருந்தது. ஆட்டோ பிடிப்பதற்கு இதிலேயே காத்திருந்து போகலாம். 4.45க்கு எடுத்து விட்டார்கள். பாரதி நகர் அருகில் வரும் போது தொலைபேசி 5 நிமிடங்களில் வந்து விடுவேன் என்று சொன்னேன். வண்டி எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். முடியா விட்டால் நடந்தே வந்து விடுவதாகச் சொன்னேன்.

இறங்கி சாலையைக் கடந்து, ரவுண்டானா தாண்டி அந்த சாலையிலும் பாதி தூரம் போன பிறகு எதிரில் வந்தார். ஏறி அவர்கள் அலுவலகத்துக்குப் போனோம். முதலில் பதிவுகள், அரசியல் என்று பேச்சு, அதன் பிறகு ராணிப்பேட்டை அல்லது வேலூரில் பிடெக் பகுதி நேரப் படிப்பு ஆரம்பிப்பது குறித்து எனது கருத்து கேட்டார். குடிப்பதற்கு இத்தாலிய தேநீர் ஒன்று தயாரித்துக் கொடுத்தார். கெமிக்கல்ஸ் பற்றியும் பேச வேண்டும் என்றார். அவரது பங்குதாரரும் வந்த பிறகு பேச வேண்டும். 6 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. வெளியில் போகலாம் என்று புறப்பட்டு, காரிலேயே உட்கார்ந்து பேசலாம் என்று ஏசி போட்டு உட்கார்ந்தோம்.

அவர்கள் வணிகத்துக்கு வாடிக்கையாளர் பிடித்துக் கொடுக்க முடியுமா என்று புரபோசல் வைக்கிறார்கள். அமைதியாக அவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு, எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டேன். 'மென்பொருள் சேவை அளிக்கும் வேலை ஆரம்பித்த பிறகு தோல் துறையில் வணிக ரீதியாக எந்த வேலையும் செய்யப் போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பதாகவும் அதை மாற்ற முடியாது. மாற்றுவது அதை நம்பி சேவை வாங்கிய, வாங்கிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது போலாகும் என்று சொல்லி விட்டேன். வேண்டுமென்றால் நட்பு ரீதியாக அறிமுகம் செய்யலாம், எந்த பண பரிமாற்றமும் இருக்கக் கூடாது.'

போகும் வழியில் விட்டு விடுவதாகச் சொன்னார்.  திருவலம் வழியாக வேலூர் போகும் சாலைக்கு வந்தோம். அவரது காலணியை வேலூரில் ரிப்பேர் செய்யக் கொடுக்க வேண்டுமாம். பேசிக் கொண்டே வந்தோம். அவரது மகனுக்குத் தொலைபேசி படிப்பு பற்றி உத்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். படிப்பு என்பது வியாபாரம் ஆகிப் போய் விட்டது என்று சலித்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து சிஎல்ஆர்ஐ பற்றிப் பேச்சு வந்தது, சிஎல்ஆர்ஐயினால் துறைக்கு எந்த பலனும் இல்லை என்று வாதிட ஆரம்பித்தார். அதை எதிர்த்து உறுதியாக, கடுமையாக கருத்து சொன்னேன்.

கடைக்குப் போய் விட்டு திரும்பி காட்பாடி சாலை வழியாக வரும் போது கோபாலபுரம் அருகில் இறங்கிக் கொண்டேன். போவதற்கு செலவழித்த 25 ரூபாய் மட்டும்தான் செலவு. வீட்டுக்கு வந்து சோறு சாப்பிட்டு விட்டு இணையத்தை மேய்ந்தேன். களைப்பாகவே இருக்கவே சிறிது நேரத்தில் தூங்கப் போய் விட்டேன். கட்டுரைகள் எழுத வேண்டும். இன்று ஆம்பூர் போக வேண்டும்.

இதை முடித்து விட்டு காலை உணவு தயாரித்துக் கொள்ள வேண்டும் (7.45). தொடர்ந்து சட்டைகளை தேய்க்க வேண்டும் (8.30). கட்டுரையை முடிக்க வேண்டும் (9.30). அடுத்து ஊற வைத்திருக்கும் நான்கு துணிகளை  அலசிப் போட்டு விட்டுக் குளித்துப் புறப்பட வேண்டும் (10.30). வங்கியில் காசோலையை போட வேண்டும். ஆம்பூருக்குப் போய்ச் சேரும் போது 12 மணி ஆகி விடும். ஆம்பூரில் வேலைகளை முடித்து விட்டு 4 மணி வாக்கில் புறப்பட்டுத் திரும்பி விடலாம்.

காசு கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு பதில் போட்டு விட்டேன். நேரில் வந்தால்தான் கொடுக்க முடியும். வந்ததும் கொஞ்சம் கேள்விகள் கேட்க வேண்டும்.

வெள்ளி, ஜனவரி 06, 2012

தேள்கள்


நேரம் 5.12. ஜனவரி 6, 2012.

நேற்றுக் காலையில் எழுந்து ஒழுங்காக நாட்குறிப்பு எழுதினேன். எழுதி முடித்து விட்டு முன் அறையை ஒதுங்க வைத்தேன். புத்தகங்களை நிற்க வைத்து அடுக்குதல், துணிகளையும், துணிப்பைகளையும் உள் அறைக்கு மாற்றுதல், செய்து முடித்தேன். இன்று இன்னும் 10 நிமிடம் வேலை செய்தால் எல்லாம் ஓரளவு வடிவுக்கு வந்து விடும்.

கழிவறை பயன்படுத்த வரிசையில் நின்று விடக் கூடாது என்பது அதிகாலையிலேயே எழுந்ததற்கு இன்னொரு காரணம். ஆனால், அவ்வளவு பேர் இல்லை. மொத்தமே நான்கு பேருக்கு ஒரு கழிவறை, எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டும் இருப்பது தெரிந்தது.

முகம் மழிப்பதற்கு தண்ணீர் பிடிக்கப் போனால், தண்ணீர் இல்லை, கீழே மோட்டர் போட வேண்டும் என்று முதல் வீட்டு அம்மா சொன்னார்கள். படியில் கீழே போய் கீழே இருக்கும் கழிவறைக்குள் சுவிட்சு இருந்ததைப் போட்டேன். உடனேயே தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. முகம் மழிப்பதற்கு சோப்பு நுரை பரப்பும் பிரஷ் எடுத்து வந்திருக்கவில்லை. கையாலேயே தேய்த்துக் கொண்டேன். அதன் பிறகு குளிக்கப் போக வேண்டும்.

குளியலறை, கீழே மாடிப்படிக்குக் கீழே, இருட்டாக இருந்தது. இன்னும் விடிந்திருக்கவில்லை. முதலில் அதைத் தாண்டிப் போய் இரண்டு வீட்டுக் கதவுகள் பக்கம் போய் விட்டேன். ஒரு கால் கிரவுண்டு நிலத்தில் எத்தனை குடியிருப்புகள்! வாசல் கழுவி கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் லைட் இல்லையா என்று கேட்டதும், கழிவறை விளக்கைப் போட்டுக் கொள்ளச் சொன்னார். அது இரண்டு அறைக்கும் பொதுவான விளக்கு. குளியலறையின் கூரை உயரம் குறைவு, கொஞ்சம் குனிந்து நின்று கொள்ள வேண்டும். மற்றபடி வசதியாக இருந்தது. அழுக்கு, தூசி, சிலந்தி வலை என்று எதுவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது.

குளித்து விட்டு மேலே வந்தேன். இன்னும் ஆறரை ஆகியிருக்கவில்லை. வீட்டுக்கார அம்மா கீழே உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் முன்பணம் கொடுத்திருக்கவில்லை. உடை மாட்டிக் கொண்டு கீழே வந்து பார்த்தால் உள்ளே போயிருந்தார். மீண்டும் போய் பையை எடுத்துக் கொண்டு வரும் போது உட்கார்ந்திருந்தார். வணக்கம் சொல்லி விட்டு பணத்தை எண்ணிக் கொடுத்தேன். சாவியைத் திரும்ப வாங்கிக் கொண்டேன். முதலில் கொடுத்திருந்த 100 ரூபாயைத் திரும்பத் தர வேண்டுமே என்று ஆரம்பித்தார். அப்புறமாக தரும்படி சொன்னேன்.

ஆற்காடு சாலைக்கு வருவதும் தூரம் குறைவாக தோன்றுகிறது. ஒரே சாலையில் நேராக நடந்தால் போதும். நடப்பவர்களில் பலரை முந்திப் போக முடிகிறது. நீளமான கால்களின் ஆதாயம் அது. பத்திரிகைக் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கும் போது பார்த்தால் ஆனந்த விகடனும் வந்திருந்தது. திட்டினாலும், ஒவ்வொரு வாரமும் வாங்கி விடவும் தவறுவதில்லை. பேருந்து நிறுத்ததுக்கு வந்து ஜெமினி வரை போகும் 25Gல் ஏறினேன். முதலில் உட்கார இடம் கிடைக்கவில்லை. வடபழனி பேருந்து நிலையத்தில்தான் பெண்கள் இருக்கைகள் காலி ஆன பிறகு முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். சாலை நிறுத்தத்தில் இறங்கி ஆற்காடு சாலை கடந்து, 100 அடி சாலை கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன்.

காத்திருப்பதற்கு வசதியான இடம். ஆனால் பேருந்துகள்  நிற்பதற்குத்தான் வசதி குறைவு. காத்திருப்பதற்கு வரிசையான உள்ளடங்கிய கடைகளின் முன்பகுதிகள். ஒரு கடை கட்டிடத்தின் முன்பு நான்கைந்து கல்லூரில் மாணவிகளும் மாணவர்களும் நின்றிருந்தார்கள். அடுத்த கடைக் கட்டிடத்திலிருந்து நீட்டிக் கொண்டிருந்த திண்ணையில் நான்கைந்து இன்னொரு கல்லூரி மாணவர்கள். இந்த மாணவர்கள் நிறைய குரங்கு சேட்டை செய்து கொண்டிருந்தார்கள். மாணவிகளுக்காக என்று எல்லோருக்கும் தெரிந்தது. விஐடி பேருந்து வந்து மாணவிகள் ஏறும் போது யார் யார் அழகாக இருக்கிறார்கள் என்று அவர்கள் தீர்ப்பு எழுதிக் கொண்டிருந்தது கேட்டது. 119 பேருந்து வர அதில் போய் ஏறிக் கொண்டேன்.

சோழிங்க நல்லூர் என்று சீட்டு எடுத்துக் கொண்டேன். இன்னும் 7 மணி கூட ஆகியிருக்கவில்லை. இறங்கி சாப்பிட்டு விட்டுப் போகலாம். மூன்று பேர் உட்காரும் இருக்கை. இடையில் ஒருவர் உட்கார்ந்து அவர் டைடல் பார்க்கில் இறங்க இன்னொருவர் உட்கார்ந்தார். அவர் நடு இருக்கையில் உட்காருவது போல நெருக்கி உட்கார்ந்தார். அந்தப் பக்கம் உட்கார யாரும் இல்லை, கொஞ்சம் தள்ளி வசதியாக உட்காருங்களேன் என்று சொன்னது ரசிக்கவில்லை. கணிசமான நேரம் கழித்துதான் புரிந்து தள்ளி உட்கார்ந்தார்.

சோழிங்க நல்லூரில் இறங்கி தாம்பரம் நோக்கிப் போகும் சாலையில் இருக்கும் உணவு விடுதியில் பொங்கல் வடை, வெளியில் வந்து தேநீர். காலையில் 7 மணிக்கே கடை ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது. நிறைய பேர் சாப்பிடவும் வந்து விடுகிறார்கள். சாப்பிட்டு விட்டு மீண்டும் சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம். சிப்காட்டுக்குப் புறப்பட்டு நின்றிருந்த பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். பின்னிருக்கையில் இருக்கையின் கால் பகுதியில் போட்ட பலகையில். இருக்கைகளில் பெண்கள். முன்னால் ஓட்டுனர் அருகில் இன்னொருவர் உட்கார புறப்பட்டார். தூரம் கணிசமாகவே இருக்கும். தொழிற்பேட்டைக்கு உள்ளேயே போய் எல்லோரையும் இறக்கி விட்டார்.

கட்டுரைகளை ஒரு முறை சரி பார்த்து விட்டு கான்டீனுக்குப் போய் 2 குட்டி ஊத்தப்பங்களும், தேநீரும் சாப்பிட்டு விட்டு வந்தேன். முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு இல்லை, அதனால் கல்லூரியே வெறிச்சோடி கிடந்தது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மட்டும்தான். திரும்பி வந்து இணையத்தில் பார்த்தால் பேஸ்புக்கில் நிறைய பேர் சுவரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். பேஸ்புக்கில் அதிகபட்ச செயல்பாடு நேற்றுதான் இருக்க வேண்டும்.

9.30க்கு போய் முதல் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு விடைத்தாளை திருத்தக் கேட்டேன். எடுத்துக் கொடுத்து விட்டார். 11.15க்குதான் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு. மொத்த விடைத்தாளையும் என்னையே சரி பார்க்கச் சொல்லி விட்டார். ஒரு கேள்வியில் தன்னைப் பற்றி எழுத வேண்டியிருந்ததால் எல்லா பேப்பர்களிலும் பெயர் தெரிந்து விட்டது. முதலில் 1 மதிப்பெண் பேப்பர். அதில் இரண்டு மூன்று பேர் முழு மதிப்பெண்கள் வாங்கியிருந்தார்கள். மொத்தத்தில் 4 பேருக்கு முழு மதிப்பெண்ணுக்கு ஓரிரண்டு குறைவு. மூன்று பெண்கள், ஒரு பையன். இரண்டு மூன்று பேருக்கு 90%க்கு அருகில். இரண்டு பேருக்கு 60 %க்கும் குறைவு. மற்றவர்கள் இடையில்.

முழு விடைத்தாளையும் திருத்தி, மதிப்பெண்களை கூட்டிப் போட்டு, சம்மரி அறிக்கையும் தயாரித்துக் கொடுத்து விட்டேன். ஒருங்கிணைப்பாளருக்கு மகிழ்ச்சி. அவரது வேலையிலும் பெரும்பகுதியை நானே செய்து விட்டேன். அவர் தனி ஆளாக எல்லா தேர்வு பணிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். வகுப்புகளை ஒருங்கிணைப்பவர், அடுத்த பருவத்தில் mis நடத்த முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். செய்யலாம் என்று சொல்லி விட்டேன். முதலாண்டு மாணவர்களுக்கு சீன மொழி பாடம் ஒரு வகுப்பு ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும். கூடவே ஒவ்வொரு மேலாண்மை பாடமும்.

11.15க்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புக்கு வந்தேன். அடிப்படை சீனம் என்ற சுற்றுலா பயணிகளுக்கான புத்தகத்திலிருந்து வாக்கியங்களையும், சொற்களையும் சொல்லி பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தேன். உற்சாகமாக பங்கேற்றார்கள். வருகைப் பதிவு போதாமல் 5 பேரை முதலாண்டு மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தேர்வு குறித்துக் கேட்டால் எங்களில் எத்தனை பேரை எழுத அனுமதிப்பார்களோ என்று ஒரு பெண் சோர்வாக சொன்னார். இவர்களில் அவ்வளவு மோசமான வருகைப் பதிவு யாருக்கும் இல்லை. அதைச் சொல்லி தைரியப்படுத்தினேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, என்னுடைய பிறந்த நாள் எப்போது என்று கேட்டார் ஒரு பெண். அதைத் தொடர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

படிப்பில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தவர்களை இரண்டு முறை எழுதிக் காண்பிக்கச் சொல்லியிருந்தேன். அவர்களில் ஒருவரை அந்தப் பாடத்தை வாசிக்கச் சொல்லி மற்றவர்கள் கேட்கச் சொன்னால், அவர் மிகக் கேவலமாக வாசித்தார். உள்ளே இருந்த தேள் விழித்துக் கொண்டது. 'எருமை மாடு மழையில் நனைந்தாலும் மேலே தண்ணீர் ஒட்டாதது போல, இரண்டு முறை எழுதிப் பார்த்தும் எதுவுமே ஒட்டவில்லையே' என்று சொன்னேன். மிகவும் மோசமான விமர்சனம். எல்லோருக்குமே எதிர்மறை உணர்வுகளை உருவாக்கக் கூடியது. அவரைத் தனியாக அழைத்து சொல்லியிருக்கலாம். பொதுவில் இப்படிப் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

15 நிமிடங்கள் முன்னதாகவே வகுப்பை முடித்துக் கொண்டேன். அவரது கணினியையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். மடிக்கணினி ஒன்று கொண்டு வந்திருந்தார். அதில் விண்டோஸ் எக்ஸ்பி அரைகுறை நிறுவலில் நின்று டிவிடி கேட்டுக் கொண்டிருந்தது. உபுண்டு நிறுவித் தருவதாகச் சொன்னேன். சாப்பிடப் போனோம். ரொட்டி வேண்டாம். சோறு கொஞ்சம் போதும், ரசம், காலி பிளவர் கூட்டு, மோர் ஒரு டம்ளரில் வாங்கிக் கொண்டேன். அறைக்கு வந்த பிறகு பென்டிரைவில் உபுண்டுவை எழுதிக் கொண்டு அவரது மடிக்கணினியில் நிறுவப் போட்டால் 10 நிமிடத்தில் முடிந்து விட்டது.

அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன். சனிக்கிழமை வகுப்புகள் இல்லை, தேர்வு மேற்பார்வை வேலை இருக்கும், வழக்கமான நேரத்துக்கு வந்து விடுங்கள் என்று சொன்னார்கள். காலை, மாலை இரண்டு வேளையும் இருக்குமாம். வெளியில் வரும் போது 3 மாணவர்களும் வெளியில் வந்தார்கள். ஒரு தனியார் ஆட்டோ வர அதில் ஏறிக் கொண்டோம். வாசலில் கொண்டு விட 20 ரூபாய் கட்டணம். ஒரு மாணவர்தான் போக வேண்டும். மற்ற இரண்டு பேரும் அருகிலேயே வேறு எங்கோ போகிறார்கள்.

சிறுசேரியிலிருந்து சோழிங்கநல்லூர் வரை போவதற்கு வேன் ஒன்றில் ஏறிக் கொண்டேன். 15 ரூபாய் என்று சொன்னவர்கள் 10 ரூபாய் என்று குறைத்துக் கொண்டார்கள். வழியில் நின்று நின்று போனார்கள். வங்கியில் பணம் எடுத்து செல்பேசி பில் கட்ட வேண்டும். வடபழனி அல்லது போரூரில் வோடபோன் கடைகள் இருக்கின்றன. சோழிங்கநல்லூரில் ஆந்திர வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் 19B பிடித்தேன். உட்கார இடம் கிடைத்தது. சத்யபாமாவில் மூன்று பெண்கள் உரக்கப் பேசிக் கொண்டே ஏறினார்கள். ஒரு பெண் தன் கைபேசியில் பாடல் ஒலிக்க விட்டுக் கொண்டார். முன் இருக்கையில் உட்கார்ந்திருந்தவர் திரும்பி பேசிக் கொண்டே இருந்தார். நடத்துனர் நடந்து நடந்து டிக்கெட் கொடுத்தார்.

அண்ணா பல்கலை அருகில் இறங்க வேண்டும். 21G அங்கு நிற்குமா என்று கேட்டவரிடம் தூக்கக் கலக்கத்தில் எதிர் புறம் போக வேண்டும் என்றார் நடத்துனர். அவரைத் திருத்தி விட்டு இறங்கினோம். மர நிழலில் நிற்கும் போது வெளியூர் பேருந்து ஒன்று வந்து நின்றது. ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். 15 ரூபாய் கட்டணம். அருகில் பெரிய பையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த இளைஞர் பையை மடியில் வைத்துக் கொண்டு இடம் கொடுத்தார். உட்கார்ந்து கொண்டேன். அவர் ஆழ்ந்த உறக்கத்த்துக்குப் போய் விட்டார்.

வடபழனியில் பேருந்து நிறுத்தம் தாண்டி நிறுத்தினார். அதே திசையில் நடந்து காவல் நிலையத்துக்கு பின் பக்க சந்தில் திரும்பினேன். நிறைய சிறுவர்கள் சத்தம். அங்கு ஒரு ஆரம்ப பள்ளி, எம்ஜிஆர் ஆரம்பப் பள்ளி என்று இருந்தது. பகிர்வூர்திகள் போகும் தெரு வழியாக வந்தேன். ஒரு அச்சகம் இருந்தது, புத்தகப் பிரதிகளை கைவசம் வைத்திருந்தால் பின் போடச் சொல்லிக் கேட்டிருக்கலாம் என்று தோன்றியது. சூர்யா மருத்துவமனை அருகில் போக வேண்டும். கொஞ்சம் தூரம்தான். இடது புறமாக நடந்தே போனேன். வழியில் தி வீக் பத்திரிகை வாங்கிக் கொண்டேன். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சோழிங்கநல்லூரிலிருந்தே இடம் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு கடை வளாகத்துக்குள் போய் தேடினால் எதுவும் கிடைக்கவில்லை. வடபழனி பேருந்து நிலையத்துக்குள் ஒரு பெண் வெளியில் காசு வாங்க உட்கார்ந்திருக்க ஒரு மறைப்புடன் கழிவறை வைத்திருந்தார்கள். 2 ரூபாய்.

வலது புறமாக நடந்து சூரியா மருத்துவமனை சாலை நிறுத்தம் தாண்டி வோடபோன் கடை. நுழைவாசலிலேயே ஒரு கியோஸ்க் இருந்தது. அதில் பணம் செலுத்தும் வசதியும் இருந்தது. முதலில் தொலைபேசி எண், அதைத் தொடர்ந்து பில் செலுத்த வேண்டும் என்ற தேர்வு. செலுத்த வேண்டிய தொகையைக் காட்டியது, அதன் பிறகு பணமாகவா, காசோலையாகவா என்று கேள்வி. ஒவ்வொரு பண மதிப்புக்கும் படம் போட்டு எண்ணிக்கை 0 என்று வந்தது. நோட்டை செலுத்த செலுத்த எண்ணிக்கை கூடியது. முடித்ததும் ஒரு ரசீது வந்தது. வேலை முடிந்தது. இவ்வளவு உயர் தொழில் நுட்பம்!

அடுத்த 10 நிமிடங்களுக்குள் பண வரவு வைக்கப்பட்டாத குறுஞ்செய்தி, அழைக்கும் வசதி திரும்பக் கொடுத்திருந்தார்கள். ஆவிச்சி பள்ளிக்கு அருகில் இருக்கும் சாலை சந்திப்பில் சாலிகிராம சாலை முனையில் இருக்கும் கடைக்குப் போக வேண்டும் என்று ஒரு ஆவல். அது ஒரு பேக்கரி என்று நேற்றுதான் தெரிந்தது. எப்போதுமே கூட்டமாக பரபரப்பாக இருப்பதை சாலையிலிருந்து பார்த்திருக்கிறேன். உள்ளே போனேன். ப ்ப்ஸ் அல்லது சமோசா சாப்பிடத் தோன்றவில்லை. பருப்புப் பொடி ஒரு பேக்கட், முறுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். விலை அதிகம்தான்.

ஆற்காடு சாலையைக் கடந்து ஆவிச்சி பேருந்து நிறுத்ததுக்கு முன்னதாகவே பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். பின் இருக்கையில் பெண்கள், முன் இருக்கையில் ஓட்டுனருடன் ஒரு ஆண், நான் ஓட்டுனரின் வலது புறம் உட்கார்ந்து கொண்டேன். இடையில் இன்னொருவரையும் ஏற்றி பின் இருக்கையின் பக்கவாட்டில் போட்டிருந்த பலகையில் உட்காரச் சொல்லி விட்டார். தெருமுனையில் இறங்கி நடந்து வந்து சேர்ந்தேன்.

இணையம் மிக வசதியாக இணைந்தது. வேகம் குறைவாக இருந்தாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் கூகுள்+, மற்ற தளங்களை மேய முடிந்தது. 6 மணி வரை அதைச் செய்து கொண்டிருந்தேன். காலையில் கொடுத்து விட்டுப் போயிருந்த பாட்டிலில் குடிதண்ணீர் பிடித்து வைத்திருந்தார்கள். அதனால் குடிப்பதற்கு தண்ணீரும் பிரச்சனை இல்லை.

அப்படியே ஹாட்சிப்ஸ் அருகில் போய் தேநீர் குடித்தோம். பத்திரிகைகள், பதிப்புத் துறை, புத்தகக் கண்காட்சி என்று பேசி விட்டுத் திரும்பினோம். வீட்டுக்கு அருகில் இருக்கும் உணவு விடுதியில் 4 இட்லி, ஒரு தோசை சாப்பிட்டேன். நன்றாகவே இருந்தது. மொத்தம் 31 ரூபாய். திரும்பி அறைக்கு வந்து தொலைபேசி எப்போது வருவார் என்று கேட்டு விட்டுத் தூங்கி விட்டேன். கொசுக்களை விரட்ட வத்தி பொருத்திக் கொண்டேன்.

நல்ல தூக்கம்தான், ஆனால் கண்கள் சிவந்து உறுத்துகின்றன. குறிப்பாக இடது கண்.

புதன், டிசம்பர் 28, 2011

இடைக் குழப்பம்


டிசம்பர் 28, 2011. நேரம் காலை 6.16.

25ம் தேதி காலையில் சென்னையில் நாட்குறிப்பு எழுதியது. திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் இழு இழு என்று இழுத்து நகர்ந்தன. பல தொடர்புகள், பல நிகழ்வுகள். ஆனால் தினசரி வாழ்க்கையில் தேக்கம்.

செய்ய வேண்டிய வேலைகள் எல்லாமே முடங்கிப் போயிருந்தன. செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. நேரம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். அதை இப்படி வீணாக்கக் கூடாது.  தேவையற்ற மனச் சோர்வுகளிலும் குழப்பங்களிலும் உழன்று கொண்டிருக்கக் கூடாது. நாம் செய்யும் செயல்கள்தான் மாற்றத்தைக் கொண்டு வரும். சோம்பி இருக்கும் நேரங்கள் அல்ல.

வீட்டுக்குச் செய்ய வேண்டியது.
1. கேபிள் இணைப்பு வாங்குவது
2. கேஸ் சிலிண்டர் வாங்குவது
3. நிறுவன கோப்புகளை அடுக்கி வைப்பது

இதை முடிக்கும் போது 7.15 ஆகியிருக்கும். 20 நிமிடங்களுக்கு உலாவப் போக வேண்டும். நாளிதழும் வாங்கிக் கொண்டு சாப்பிட்டு விட்டு வர வேண்டும். தண்ணீர் வந்தால் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு 8.30 மணி என்று வைத்துக் கொள்வோம்.

3 மணிக்குப் புறப்பட்டால், 8 மணி வாக்கில் சென்னை போய்ச் சேர்ந்து விடலாம். மதிய உணவை போகும் வழியில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த இடம் 2வது மாடியில் இருக்கிறது. முதல் மாடியில் வீடு இருக்கும் போது அக்கம் பக்கத்து கட்டிடங்கள் ஒலிகளை உறிஞ்சி அமைதி அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் வெகு தூரத்திலிருந்து கூட சத்தங்கள் கேட்கின்றன. தடுப்பதற்கு இடையில் தடுப்பு இல்லை.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், எப்படி பார்ப்பார்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லை. நாம் தில்லுமுல்லு செய்து சம்பாதிப்பதைக் குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று  கவலைப்படுகிறார்களா? அவரவர் அளவில் தமக்குச் சரி என்று படும் நியாயங்களைச் செய்கிறார்கள். மற்றவர்களிடம் அதை நியாயப்படுத்தி தன்னை சரி என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.

செவ்வாய், டிசம்பர் 20, 2011

மாற்றங்கள்



டிசம்பர் 20, 2011, காலை 5.20

நேற்றுக் காலையில் சீக்கிரம் எழுந்து நாட்குறிப்பு எழுதி விட்டு பொருட்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திட்டம். தூக்கம் நீண்டு விட்டது. 6 மணிக்குப் பிறகுதான் எழுந்திருந்தேன். வீடு மாற்ற வேண்டும். கொஞ்ச நேரம் கடைசியாக இணையத்தில் இணைந்து மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டேன். அப்படியே முன்னறையிலிருந்து புத்தகங்களை எடுத்து அட்டைப்பெட்டிகளுக்குள் வைக்க ஆரம்பித்தேன். தொலைக்காட்சியில் புதிய தலைமுறை ஓட விட்டிருந்தேன்.

கதவு தட்டும் சத்தம். வீட்டுக் காரர் வந்து சேர்ந்தார். அவரிடம் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் போய் சிமென்டு கடை அருகில் ஆட்களை கூட்டிக் கொண்டு வருவதாகவும் சொன்னேன். 'ஏன், நம்ம வாட்ச்மேன் செய்வாரே' என்று அவரை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.

'ஆமா, லட்சுமி கூடச் சொன்னாங்க, அவரால தூக்கிக் கொண்டு போக முடியுமா என்று சந்தேகத்தில்தான் சொல்லவில்லை' என்று சொன்னேன்.

அவரது பையனும் வருவான், முடித்து விடுவதாக அவர் ஏற்றுக் கொண்டார்.

வீட்டுக் காரர் மேட்ரிமோனி பார்ப்பதற்காக எனது கணினியில் உட்கார்ந்தார். தமிழ் மேட்ரிமோனி டாட் காம் உள்ளே போனால் அது பாரத் மேட்ரிமோனியின் ஒரு பகுதிதான் போலிருக்கிறது. அப்படியே தெலுங்கு மேட்ரிமோனிக்குப் போய் விட்டது. அவரது பையனுக்குப் பெண் பார்க்கிறார். பையனின் புரொபைலில் அவருடன் உட்கார்ந்து சில பெண்களின் விபரங்களைப் பார்த்தேன். 8 மணிக்கு மின்சாரம் தடைப்படும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்.

இரண்டு நாட்கள் முன்பு இது போல மேட்ரிமோனி தளத்தில் பெயரைப் போட்டு ஜல்லியடித்துக் கொண்டிருந்த ஒரு ஆன்மீகவாதியைப் பற்றிப் பேசினோம்.

முன்னறையில் இருந்த புத்தகங்கள், கட்டில், 3 புத்தக அலமாரிகள், 2 மேசைகள், சமையலறை பொருட்கள், புத்தகங்கள், கோப்புகள் என்று காட்டி 'எவ்வளவு கேட்பீர்கள்' என்று கேட்டேன்.

'600 ரூபாய்' என்றார்.

'என்னப்பா இவ்வளவு சொல்றே' என்று அதட்டினார்.

'நீங்க எவ்வளவு சொல்றீங்களோ அதைக் கொடுத்து விடுகிறேன் சார்' என்றேன்.

அவர் '400 ரூபாய்' என்றார்.

'500ஆவது கொடுங்க சார்' என்று கேட்டார்.

'அதெல்லாம் முடியாது.'

நான் கண்ணைக் காட்டி வேலையை ஆரம்பிக்கச் சொன்னேன். அப்படியே மேலும் அட்டைப்பெட்டிகளை எடுத்து உள் அறையில் இருந்த அலுவலகப் பொருட்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தேன். ஏழரை மணிக்கு ஆரம்பித்தது சுமார் 11.30 வரை போனது. ஒரு மணி நேர வேலைதான் இருக்கும் என்று நான் சொன்னது மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டு என்னை மிரட்ட ஆரம்பித்திருப்பார்கள் வெளியிலிருந்து அழைத்து வந்திருந்தால்.

ஒரு 8.15 போல தேநீர் போட்டுக் கொடுத்ததாக வாட்ச்மேன் கொண்டு வந்தார். வீட்டுக்கார அம்மா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதைக் குடிக்கும் போது வாட்ச்மேன் தனது கதையைச் சொன்னார்.

பெங்களூரில் சொந்த பிசினஸ் பண்ணிக் கொண்டிருந்தேன். எல்லாம் நஷ்டமாகவே இங்கே வந்தேன். இங்கு செக்யூரிட்டியாக இருப்பவர்தான் என்னை நைட் டியூட்டிக்கு வரச் சொன்னார். 6,000 ரூபாய் தராங்க, அதில என்ன செய்ய முடியும் சொல்லுங்க. பஸ்ஸூக்கே தினமும் 30 ரூபாய் ஆகி விடுகிறது, ஒரு டீ குடிச்சா 10 ரூபா. இப்படி தினமும் 50  ரூபா, ஒன்னரை ஆயிரம் அதுக்கே போய் விடுகிறது. மீதியை எடுத்துக் கிட்டுப் போய் சரியா குடும்பம் நடத்தத்தான் முடியுது.

எங்க அப்பா விட்டுட்டுப் போன இடத்தில் அண்ணனுங்க எல்லாம் வீடு கட்டிகிட்டாங்க, போன வருஷம்தான் நான் வீடு கட்டினேன். அது வரை ஒரு கொட்டாய் போட்டுத்தான் இருந்தோம். கலைஞர் வீடு கட்டும் திட்டம் வந்தது அல்லவா. 50,000 கொடுத்தாங்க. மொத்தம் 2 லட்சம் செலவாச்சு. மீதி ஒன்றரை லட்சம் நான்தான் புரட்டிப் போட்டேன். வேறு சொத்து எதுவும் கிடையாதுங்க. நான் வேலை செய்துதான் 4 பேர் குடும்பத்தைக் காப்பாற்றணும். பையன் +2 படிக்கிறான். பொண்ணு 9ம் வகுப்பு படிக்குது.

இந்த பையனை ராணுவத்துக்கு அனுப்பிடலாம் என்று தேர்வு எழுதுகிறான். எக்சாமில் பாஸ் ஆவதற்கு 1.25 லட்சம் செலவாகுமாம். ஒரு புரோக்கருக்குக் கொடுக்கணும். அதுக்கும் ஏற்பாடு செய்து கிட்டு இருக்கேன். ஒரு அண்ணன் தரேன்னு சொல்லியிருக்கிறார். கொஞ்ச வட்டி போட்டுக் கொடுக்கணும்.

அதனால் இந்த டியூட்டி முடிஞ்ச பிறகு கார்பென்டர் வேலைக்குப் போவேன். வீடு கட்டும் போது ஒரு வருஷமா அதுக்கும் போகல. இப்பத்தான் ஒரு மாசமா போக ஆரம்பிச்சிருக்கேன். இன்னைக்குப் போக முடியாது சார். அதான் வேலைக்குப் போன கிடைக்கக்கூடிய கூலியைக் கேட்டேன் என்றார்.

இன்னும் சில சாமான்களை எடுத்து வைத்து விட்டு ஒரு இடைவேளை விட்டுக் கொள்ளலாம். காலை உணவை சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு தொடரலாம் என்று பேசிக் கொண்டோம். மாறும் வீட்டில் முதலில் ஒரு வரவேற்பறை, அதிலிருந்தே இரண்டு அறைகளுக்கான கதவு, வலது புறமாக. வரவேற்பறையை கடந்து போனால் சமையலறை, அதிலிருந்து வெளியில் போனால் ஒரு நடைபாடை, தாண்டி குளியலறை+கழிவறை. பெரிதாக இருந்தது.

வாசலிலிருந்து பார்த்தால் தெருவின் பல வீடுகளும், மூன்று தெருக்களும் தெரியும் பறவைப்பார்வை. இரண்டாவது அறையிலிருந்துப் பார்த்தால், நடைபாதையில் திறக்கும் ஜன்னல் வழியாக பக்கவாட்டுத் தெருவையும் வீடுகளையும் பார்க்கலாம். நல்ல இடம்தான். முதல் அறையில் ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது, இரண்டாவது அறையில் ஜன்னலே போட்டிருக்கவில்லை. சமையலறையிலும் குளியலறையிலும் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கவில்லை. இவற்றைச்  சொல்லி சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் குளிர் காலத்தில் விறைத்துப் போய் விடும்.

முன்னறையில் இருக்கும் அலமாரியில் படிக்கக் கூடிய புத்தகங்களை எல்லாம் அடுக்கி விட வேண்டும். இரண்டாவது அறையில் தொழில் நுட்ப புத்தகங்கள், பயன்படுத்தும் கோப்புகள், காகிதங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். முதலாவது அறையில் மற்ற புத்தகங்கள், கோப்புகள் வைக்க வேண்டும்.

அறையை நிலைப் பூட்டால் பூட்டி விட்டு வெளியில் வந்தேன். இந்த வீட்டைப் பூட்டவில்லை. மதிநகர் சாலை வழியாக நடந்து சாலைக்கு வந்து, எச்டிஎப்சி வங்கி பண எந்திரத்தில் பணம் எடுத்தேன். அதற்கு முன்பே பெட்ரோல் நிலையத்தில் 500 ரூபாயை 100களாக மாற்றிக் கொண்டேன்.

டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு அறுசுவை உணவகத்தை எட்டிப்பார்த்தால் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. கோபால புரம் வழியாக நடந்து மெஸ்சுக்கு வந்தேன். வெளியில் வாசலில் சிமென்ட் பூசியிருந்தார்கள். அதை மிதிக்காமல் பக்கவாட்டில் நடந்து உள்ளே வந்தேன். மெஸ்காரர் வெளியில் நின்றிருந்தார். 'நீங்க வந்திருக்கீங்க என்பதையே மறந்துட்டேன்' பாருங்க என்று உள்ளே வந்தார். 'வயதாகி விட்டது என்பதன் அறிகுறி' என்று சொல்லி விட்டேன். அவருக்கு மனதில் தைத்திருக்க வேண்டும். என்னதான் வயதானாலும் வயதானதை ஏற்றுக் கொள்ள முடியாததுதான் மனித இயல்பு. நம்மைப் போல எல்லோரும் இருக்க மாட்டார்களே.

சாப்பிட்டு விட்டு 100 ரூபாய் கொடுத்தால் சில்லறை இல்லை, ஐந்து 10 ரூபாய் தாள்களை கொடுத்தேன். இனிமேல் 100 ரூபாய்களும், 500ருபாய்களும் சில நாணயங்களும்தான் உண்டு. திரும்ப வீட்டுக்கு வந்தேன். வாட்ச்மேனும் அவரது மகனும் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தார்கள்.

கதவைத் திறந்து விட்டு தொடர்ந்து பொதிதலை ஆரம்பித்தேன். மடிக்கணினியையும் பொதிந்து, தொலைபேசி இணைப்பை அறுத்துக் கொண்டேன். தொலைபேசி கருவி, இணைப்புக் கருவி, பிரிக்கும் பெட்டி மூன்றையும் எடுத்துக் கொண்டேன். அவர்கள் தந்திருந்த படிவத்தையும் நிரப்பினேன்.

இந்த வீட்டுக்கு வந்து கணினியில் பிஎஸ்என்எல் 3G கருவியை இயக்கிப் பார்த்தால் வேகமாகவே செயல்பட்டது. அது ஒரு திருப்தி. சிக்கல் எதுவும் வரக் கூடாது என்றுதான் ஊகம். இரண்டாவது மாடியில் கீழே இருப்பதை விட சிறப்பாகத்தான் கிடைக்க வேண்டும். அப்படியே தொலைபேசி என்ன சிக்கல் என்று கேட்டேன். ஐபி வாங்கி நிரலை இயக்கி விட்டுக் கொண்டேன். அவரே இயக்குவதற்கான வழிமுறையை மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டார். அனுப்பவில்லை. தொடர்ந்து வேலை இருக்கிறதே. அப்போது மணி 9.

அதன் பிறகு 3 புத்தக அலமாரிகளையும் கொண்டு வந்தார்கள். அவற்றை முதல் அறைக்குள் போட்ட பிறகு, முன்னறையில் வைத்திருந்த புத்தக பெட்டிகளை எடுத்து இடம் மாற்றச் சொன்னேன். கணினிகளையும் மேலே வைத்து விட்டோம். இரண்டாவது அறையை ஒழித்து விட்டு மேசைகளை அங்கு போடச் சொன்னேன். கணினிகளை இரண்டாவது அறையில் மேல் பரணில் நிற்க வைத்தோம். முன்னறையில் தொலைக்காட்சி. கட்டிலை எங்கு போடுவது என்றுதான் குழப்பம். கட்டிலின் மீதே ஒரு ஸ்டூலைப் போட்டு தொலைக்காட்சியை வைத்து விடச் சொன்னேன். நன்றாகவே இருந்தது. கேபிளையும் வாங்கிக் கொள்ளலாம்.

பேட்டரிகள், இன்வெர்டர் வீட்டுக்கு வெளியில் வைத்து விட்டார்கள். 500 ரூபாய் கொடுத்ததும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். 'ஏதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்க சார், காசு எதுவும் கேட்க மாட்டேன். வந்து செய்து தருகிறேன்' என்றார்.

தொலைபேசி மதியம் 2 மணிக்கு மேல் வருவதாகச் சொல்லி விட்டிருந்தேன்.

அவர்கள் போன பிறகு கணினியில் சிறிது நேரம் செலவழித்தேன். குளிக்க வேண்டிய வாளி, கோப்பைகள், சோப்பு, துவர்த்து எடுத்துக் குளித்து உடை மாட்டிப் புறப்பட்டேன். அப்படியே தொலைபேசி கருவி வைத்திருந்த பையை ஒரு முறை மறந்து மறு முறை வந்து எடுத்துக் கொண்டேன். மீனாட்சி பவனில் சாப்பிட்டு விட்டு பிஎஸ்என்எல் போகலாம் என்று நினைத்து அப்படிச் செய்யாமல் கோபாலபுரம் வழியாக மெயின்ரோடுக்கு வந்து பிஎஸ்என்எல் போனேன். கட்டணம் கட்ட காசோலை எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைவுக்கு வந்தது. ரொக்கமாக கட்ட வேண்டியதுதான். 1000 ரூபாய் கட்டினேன்.

இணைப்பைத் துண்டிக்க விண்ணப்பம் கொடுத்தால் 'சாப்பாட்டு நேரத்தில் வந்திருக்கீங்களே' என்று சொல்கிறார். 'ஒரு இரண்டரை மணிக்கு வருகிறீர்களா' என்று ஒரு பிட்டைப் போடுகிறார். அங்கேயே ஒப்படைத்து விட்டு வெளியில் வந்தேன். வாங்கி வைத்தவர் வெங்கடேஷ் என்பவராம்.

வெளியில் வந்து இணை சாலையில் நடந்து அழகர் வந்தேன். வழியில் சௌந்தரராஜன் இருசக்கர வண்டியில் எதிரில் வந்தார். கையை அசைத்து விட்டு நடந்தேன். 30 ரூபாய்தான் சாப்பாடு. 100 ரூபாய் நோட்டுக்கு 70 ரூபாய் சில்லறை கொடுத்தார்.

பொரியல், 2 கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், காரக் குழம்பு. மீனாட்சி பவனை விட கறி எண்ணிக்கை ஒன்று அதிகம். ஆனால் இங்கு ஒரு மாதிரி ஹோட்டல் வாடை வருகிறது. அங்கு வீட்டு மணம் இருக்கிறது. எதிரில் ஒருவர் நெற்றி நிறைய திருநீறு அணிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாதி சோற்றை விட்டு விட்டு எழுந்தார். இலை எடுக்க வந்த அம்மா என்னை முறைத்தார்கள். நான் சுத்தமாக சாப்பிட்டு முடித்து விட்டுதான் எழுந்தேன். கடைசியில் மோர் வாங்கிக் கொள்ளவில்லை. ரசத்திலேயே அதற்கு வைத்திருந்த சோற்றையும் சேர்த்து சாப்பிட்டு விட்டேன்.

வெளியில் வந்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தால், அரசுப் பேருந்து. மாணவிகளை நிரப்பிக் கொண்டு வந்தது. நடத்துனர் நீந்தி வந்து சீட்டு கொடுத்தார். நான் 3 ரூபாய் கொடுத்தால் இன்னும் 1 ரூபாய் கேட்டார். சில்க்மில்லில் ஏறினால் 3 ரூபாய், மண்டபத்திலிருந்து 4 ரூபாய். சொல்லி 3 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டேன்.

புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி உள்ளே போகாமல் போக்குவரத்துக் காவலர் கூண்டுக்கு அருகில் வந்தேன். ஏதாவது குடிக்க வேண்டும். வாலாஜா போய் பார்த்துக் கொள்ளலாம். போலீஸ் கூண்டின் நிழலில் நின்று கொண்டேன்.

காஞ்சிபுரம் பேருந்து ஒன்று வந்தது. நடுவில் இருந்த இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தவர் ஜன்னல் ஓரம் இருக்க நான் இந்த முனையில் உட்கார்ந்து கொண்டேன். 18 ரூபாய் சீட்டு. காஞ்சிபுரத்துக்கு 41 ரூபாய். முன் இருக்கையில் கணவன், மனைவி, கைக் குழந்தை மாமியார். 3 சீட்டுக்கு 500 ரூபாய் தாளைக் கொடுத்தார்கள், முதலில் 3 ரூபாய் சில்லறை கேட்டார். தொடர்ந்து 20 ரூபாய் இருக்குமா என்று கேட்டார். 3 ரூபாய் தேடிக் கொடுத்து விட்டார்கள். 20 ரூபாய் என்ன ஆச்சு என்று கவனிக்கவில்லை.


பேருந்து கட்டணத்தை உயர்த்தினவர்கள், இது போன்று நிலைகளை ரவுண்ட் செய்து சில்லறை பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். சென்னையில் 11 ரூபாய், 13 ரூபாய் சீட்டுகள்தான் அதிகம்.


அருகில் இருந்தவர், தனது கைபேசியில் ஒவ்வொருவராக அழைத்து, 'விஷயம் தெரியுமா, மன்னார்குடி கும்பலை கட்சியிலிருந்து நீக்கிட்டாங்களாம். எனக்கு காலையில் பத்தரைக்கே தெரியும், அதிகாரபூர்வமாக வந்த பிறகு சொல்லலாம் என்று இருந்தேன். இப்போ பஸ்சில இருக்கேன் ஊருக்குப் போன பிறகு பேசுகிறேன்' என்று 10-12 பேருக்குச் சொல்லியிருப்பார். இவர் பெரிய அப்பாடக்கர் போல காட்டிக் கொள்வதன் கட்டாயம் தெரிந்தது.

கொஞ்ச நேரம் கண்ணயர்ந்து கொண்டேன். வாலாஜாவில் இறங்கி ஜூஸ் கடையில் ஆரஞ்சு ஜூஸ் கேட்டேன். கடைக்கார அம்மா இருந்தார்கள். தொலைக்காட்சியில் சன் மியூசிக் ஓடியது. நன்றாக இருந்தது, 35 ரூபாய். அதற்கு 50 ரூபாய் கொடுத்து மீதி பெற்றேன். அருகில் இருந்த மொபைல் கடையில் வேலை செய்வதாக அறிமுகமானவர் இருந்தார், கவனிக்கவில்லை, அல்லது கண்டு கொள்ளவில்லை. முடித்து விட்டு இறங்கினேன்.

அப்போதுதான் வந்து நின்ற ஆட்டோவில் ஏறி சொன்னதும் தயங்கி நின்றார். 'என்ன சாப்பிடப் போகும் நேரமா' என்று கேட்டால், 'இல்ல, இப்பதான் கொண்டு நிறுத்தினேன்' என்றார். மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.

இறங்கி 100 ரூபாய் தாளைக் கொடுத்தால் 10 ரூபாய்களாக 50 ரூபாய் திருப்பிக் கொடுத்து விட்டார். நுழைவாயிலில் சொல்லி விட்டு உள்ளே போனேன். முதலில் லாக் கோப்புகளை நகர்த்துவது. அதற்கான படிகளை காட்டி விட்டேன். அதன் பிறகு தோல் சரக்கு சரிசெய்வது குறித்த சந்தேங்களை கேட்டார்கள். தோல் வாங்கும் விபரங்களை மாற்றும் பக்கத்தில் பிழை. அது அப்கிரேட் செய்ததில் வந்த பிழை. அதை சரி செய்தேன். 3 வாங்கல்களில் உள்ளூர் என்பதை இறக்குமதி என்று மாற்றினேன். 0 என்று மாற்றியிருந்து ஒரு சரக்கை நீக்கினேன். சரக்கு சரி செய்யும் முறையை விளக்கினேன்.

லினக்சு கற்றுக் கொள்வதற்கான பாடங்களை கணினியில் சேமித்துக் கொள்ளச் சொன்னேன். அதன் பிறகு கை கட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

அறைக்குள் காணவில்லை. உள்ளே உற்பத்தித் தளத்தில் எட்டிப்பார்த்தால் அங்கும் காணவில்லை. எண் வாங்கி பேச முயற்சித்தேன். இரண்டு எண்களும் வேலை செய்யவில்லை. எண் கொடுத்தார். அவர் எடுக்கவேவில்லை. 15 நிமிடங்கள் காத்திருக்கலாம் என்று இருந்தால், மணி அடிக்கவும் அவர் வரவும் சரியாக இருந்தது. அவரிடம் சொல்லி விட்டு கொண்டு விடச் சொன்னேன். வழியில் நன்கு திட்டித் தீர்த்தேன்.

கற்பகம் ஓட்டலின் பெயரை ஆர்ய பவன் என்று மாற்றியிருந்தார்கள். அங்கு போய் ஒரு ரவா தோசை, ஒரு பால் சாப்பிட்டேன். 37 ரூபாய்கள், 3 ரூபாய் சேவைக் கட்டணம். முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நின்றால், நிறைய தனியார் பேருந்துகள் போயின. எல்லாம் ஆற்காடு போய் நிறுத்தி விடுவார்கள்.

அரசு பேருந்து வந்ததும் எல்லோரும் ஏறினார்கள்.  ராணிப்பேட்டை நிறுத்தத்தில் நாலைந்து கல்லூரி சீருடை அணிந்த பெண்கள், ஒரு பெண் படியில் நின்று கொண்டே வந்தார். பர்தா அணிந்த குண்டான பெண். என்னை கொஞ்சம் கவலையாக பார்த்தார்கள். 14 ரூபாய் சீட்டு.

ஆற்காடு வந்தும் உட்கார இடம் கிடைக்கவில்லை. வேலை பார்க்கும் ஒருவர் நின்றிருந்தார். அவர் ்பினிஷிங்கில் வேலை செய்கிறாராம். அவருடன் பேசி விபரம் தெரிந்து கொண்டேன். பழைய விபி மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறார்களாம். கடந்த 1 மாதமாக  தீவிரமாக கண்காணிப்பில் இறங்கியிருக்கிறாராம். புகைப்பட கருவி பொருத்தி கண்காணிக்கப் போகிறாராம். வேறு யாரோ மென்பொருள் செய்ய வந்திருக்கிறார்களாம். மெட்டீரியல்ஸ் ஸ்டோரில் இருக்கிறார்களாம்.

'டேனரியைப் பொறுத்த வரை எங்கள் சாப்ட்வேர்தான் சிறந்தது' என்று சொன்னேன். அவர் விஷாரத்தில் இறங்க, அங்கு மருத்துவமனையிலிருந்து சிலர் ஏறினார்கள். ஒரு சிறுபெண்ணும்.

தலைமை அலுவலகம் வரும் போது உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து கொண்டேன். புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியில் நிற்கும் போது வள்ளிமலை போகும் பேருந்து வந்தது. நேராக காட்பாடி போகும் பேருந்து. ஏறி 4 ரூபாய் சீட்டு.

வீட்டுக்கு வந்து பழைய வீட்டுச் சாவி எடுத்துப் போய் வாரியல், துடைக்கும் கட்டை, மற்றும் கொடி கட்டும் கயிறு எடுத்து வந்தேன். இன்னும் மிதியடிகளும், மின்விசிறியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உட்கார்ந்து இணைய செய்திகள் படித்தேன். மருதையன் சிதம்பரம் போராட்டம்பற்றி மக்கள் தொலைக்காட்சியில் பேசியதைக் கேட்டேன். தொடர்ந்து மகஇக பாடல்கள். ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா என்ற தொகுப்பு மனதை பெரிதும் பாதித்தது. 9 மணிக்கு மூடி வைத்து விட்டு கை கால் கழுவி தியானம். தரையில் பாய், இரண்டு விரிப்புகள் விரித்து அதன் மேல் தலைக்கு சால்வை முக்காடு, மூடுவதற்கு ஒரு போர்வை என்று போட்டுக் கொண்டேன்.

தூங்கி 12 மணிக்கு விழிப்பு, சிறுநீர் கழிக்க 2 முறை போக வேண்டியிருந்தது. குளிருக்குத் தடுப்பே இல்லாமல் இருப்பதுதான் சிக்கல். காலையில் 5 மணிக்கு எழுந்து விட்டேன்.

இதை முடித்து விட்டு, கதவுகளைத் திறந்து விட்டு விடலாம். முதலில் துணிகளை அடுக்கி வைக்க வேண்டும். பல் தேய்க்கும் பிரஷ்சைக் கண்டுபிடிக்க வேண்டும். பல் தேய்த்து விட்டு கீழே போய் சாவியைக் கொடுத்து விட வேண்டும்.

1. மிதியடிகளை எடுத்தல்
2. பிஎஸ்என்எல்
3. எலக்ட்ரீஷியன் - மின்விசிறி மாற்றல்
4. மின்கலன் - விற்க ஏற்பாடு செய்தல்

இன்றும் நாளையும் வெளியில் எங்கும் போக ஒத்துக் கொள்ளக் கூடாது. நாளை மதியத்துக்கு மேல் சென்னை புறப்பட வேண்டும். வியாழக் கிழமை வகுப்பு, வெள்ளிக் கிழமை, சேவை வரி கட்டுதல். சனிக்கிழமை வகுப்பு முடித்த பிறகு வேறு வேலை எதுவும்இல்லை. திரும்பி வந்து விடலாம்.

இன்னும் 2 நிமிடங்கள் இருக்கின்றன. 1869 சொற்கள் ஆகி விட்டிருக்கின்றன. 32 சொற்களை விட அதிக வேகத்தில்தான் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

திங்கள், டிசம்பர் 12, 2011

வாழும் முறை


டிசம்பர் 12, 2011. நேரம் காலை 4.40.

நேற்று காலையில் 2.30க்கு எழுந்து கொண்டேன்.

நூலைப் படித்துக் குறிப்பெடுக்க வேண்டும். ஏற்கனவே ஆரம்பித்திருந்தது போல ஒரு விரிதாளில் ஆண்டு, தலைப்பு என்று குறித்துக் கொண்டு நெடுகட்டங்களில் ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான குறிப்புகளை எழுதிக் கொண்டு வந்தேன். இந்தக் குறிப்பு எடுத்தலை சனிக்கிழமை காலையில்தான் ஆரம்பித்திருந்தேன்.

வேலையை ஆரம்பிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது, இடையில் சில நாட்கள் வேறு வேலைகளும் செய்யாமல் சோம்பிக் கழித்தது. தினமும் ஒரு அத்தியாயத்தைப் படித்து குறிப்பெடுத்து, தொடர்பான தகவல்களை சேகரித்து வந்திருந்தால் இப்படி கடைசி நேர நெருக்கடி இல்லாமல் வேலையை முடித்து நேற்றைய பரபரப்பை தவிர்த்திருக்கலாம்.

புழுக்கமும் மன பரபரப்பும் அதிகமாக இருக்க வெளியில் போய் உலாவி விட்டு வந்தேன். கொஞ்சம் தெளிவு கிடைத்து. குளிக்கப் போக ஆயத்தமானேன். குளித்து விட்டு வரும் போது 5.30 ஆகியிருந்தது. 20 நிமிடங்கள் தியானம். எனது தியானம் என்பது முந்தைய நாளில் நடந்த நிகழ்வுகளை அசை போடுவது, கூடவே அடுத்த நாளுக்கான திட்டங்களை நினைத்துப் பார்ப்பது. இதற்குத்தான் பயன்படுத்துகிறேன்.

5.50க்கு எழுந்து மடிக்கணினியை பையில் எடுத்து வைத்து விட்டு 2  புத்தகம் இவற்றையும் வைத்துக் கொண்டேன்.  சரியாக 6 மணிக்கு வெளியில் வந்து விட்டேன்.

கேசவர்த்தினி அருகில் ஆற்காடு சாலை பிடித்து சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வந்தோம். வடபழனி போகும் பேருந்து, கோவில் நிறுத்தத்துக்கு 6 ரூபாய்தான் வாங்கினார். சிக்னலிலேயே இறங்கினோம். இறங்கும் போது முதலில் இறங்க விடாமல் நான் இறங்கியது சரி இல்லை. பேருந்து நகர்ந்து விட்டிருந்தால் சிக்கலாகி விட்டிருக்கும்.

தனித்தனி இருக்கைகளில் உட்கார்ந்ததால் பேசிக் கொள்ள முடியவில்லை. எனக்கு வயிறு சங்கடமாக இருந்தது. சாப்பிட வேண்டும். அப்போதுதான் தெம்பு இருக்கும். புறப்பட்டோம்.

வெளியில் வந்து பேருந்து நிலையம் அருகில் நின்றிருந்த ஆட்டோவைப் பார்த்து அதில் ஏறி பேசினோம். போலீஸ்காரர்கள் ஆட்டோ காரர்களை விரட்டியது பற்றி  பேசிக்  கொண்டு வந்தார். அதைக் கேட்டு ஆட்டோ ஓட்டுனர் பேச ஆரம்பித்தார்.  ஆட்டோ நிறுத்தத்தை போலீஸ் காரர்கள் கலைத்து விட்டார்களாம். டாடா மேஜிக் வண்டி ஓட்டுபவர்களிடம் ஒரு வண்டிக்கு ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அவர்களை நிறுத்த அனுமதித்திருக்கிறார்கள். 100 வண்டிகள், ஒரு மாதத்துக்கு 1 லட்ச ரூபாய் வருமானம். எங்களிடம் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டார்கள், நாங்க எதுவும் கொடுக்க மறுத்து விட்டோம். அதனால் விரட்டி விட்டார்கள்.

1993ல் டாடவுக்கு வேலைக்குச் சேர்ந்த புதிதில் இருந்த வாழ்க்கைப் பிடிப்பு, துடிப்பு, சிக்கனம் இவற்றை நினைவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். நிறுவன பணிகளையும் ஊக்கமாக செய்ய வேண்டும்.

வேலைகளை கடைசி நிமிடம் வரை தள்ளி போடுவது, அக்கறை இல்லாமல் இருப்பது போன்ற போக்கைக் கை விட வேண்டும். எந்த வேலையையும் ஆகக் கூடிய சீக்கிரத்தில் முடித்து விடும் இயல்பை கைக் கொள்ள வேண்டும்.

புதன், நவம்பர் 30, 2011

பொருள்தான் அடிப்படை


காலை 4.49

நேற்று மாலை சீக்கிரமாகவே தூங்கி விட்டேன். 7.30க்கு தியானம். 8 மணிக்குள் தூங்கி விட்டதால் காலையில் 2 மணிக்கே விழிப்பு வந்து விட்டது. மீண்டும் புரண்டு படுத்து தூங்கி எழுந்திருக்கும் போது நேரம் 4.30.

நேற்று காலையில் நாட்குறிப்பு எழுதிய பிறகு இணையம். மின்னஞ்சல்கள், பதிவுகள், செய்திகள், கூகுள் பஸ் விவாதங்கள்,  கட்டுரைகளுக்கான பின்னூட்டங்கள் என்று ஒரு மணி நேரம் ஆனது. 8.30க்கு உலாவப் போய் விட்டு காலை உணவும் சாப்பிட்டு விட்டு வரலாம் என்று திட்டம்.

அழகர் விடுதிக்குப் போகும் முன்பு நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள். 50 காசுக்கு ஹால்ஸ் மிட்டாய் தருகிறார். 1.50 என்று விலை மாற்றியதால் இதுதான் தொல்லை. பேசாமல் 2 ரூபாய் என்று சொல்லியிருக்கலாம். மாதச்சந்தா கொடுப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். 4 இட்லி+1 தோசை+ 1 காபி. வடை வேண்டாம், பூரியும் வேண்டாம். காலையிலேயே நிறைய பேர் வருகிறார்கள். ஆபிசர்ஸ் லைனிலும் அழகர் என்று ஒரு உணவு விடுதி இருக்கிறது. இந்த ஊரில் பல தொழில் நிறுவனங்கள் ஏதோ பெருந்தலைக்குச் சொந்தமாகவே இருக்கின்றன என்று தோன்றியது.

சாப்பிட்ட பிறகு திரும்பி நடந்து கொண்டிருக்கும் போது  தொலைபேசி. காசோலையை சென்னையிலிருந்து ராணிப்பேட்டைக்கு அனுப்பி விட்டார்களாம். திருப்பி அனுப்பி விடவா என்று கேட்டார். அனுப்பி விடச் சொல்லி, சென்னைக்குப் போய் வாங்கிக் கொள்வதாகச் சொன்னேன். உடனேயே மீண்டும் தொலைபேசி, நேரில் வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டேன். அவரது காசோலையை நேரில் தந்து விடுவதாகச் சொன்னேன். வீட்டுக்கு வந்து குளித்து விட்டுப் புறப்பட வேண்டும். 9.15க்கு இன்னும் 1 மணி நேரத்தில் புறப்படுவேன் என்று சொல்லியிருந்தேன்

வீட்டுக்கு வந்து குளித்து விட்டு உடை மாட்டி 20 நிமிடம் தியானம். அதன் பிறகு கறுப்பு பேன்ட் போட்டுக் கொண்டு பையில் டாடா புத்தகம், தண்ணீர், ஆவணங்கள் வைக்கும் கோப்பு, குடை எடுத்துக் கொண்டேன். மழை இல்லை. ஆனால் மழை பெய்து தெருவெல்லாம் நாஸ்தியாகியிருந்தது. காட்பாடி ரோடுக்கு வந்து ராணிப்பேட்டையிலிருந்து வரும் 10ம் தட பேருந்தில் ஏறிக் கொண்டேன். சில்க்மில்லிலிருந்து 3 ரூபாய் இங்கிருந்து 4 ரூபாய் என்று நடத்துனர் விளக்கினார். ராஜா தியேட்டர் வரை, அதைத் தாண்டியும் 4 ரூபாய்தான் வாங்குகிறார்கள். என்ன கணக்கு என்று புரியவில்லை. சில்க்மில் வரை ஒரு பாய்ண்ட் என்று வைத்திருக்கலாம். முன்பு புதிய பேருந்து நிலையத்துக்கு 2 ரூபாய், பழைய பேருந்து நிலையத்துக்கு 3 ரூபாய் என்று வாங்கினார்கள். இப்போது இரண்டுக்குமே 4 ரூபாய்தான்.

பேருந்து நிலையத்துக்கு உள்ளே போகாமல், நெடுஞ்சாலை பாலத்துக்கு பக்கவாட்டில் போக்குவரத்து காவலர் நிற்கும் இடத்துக்கு வந்தேன். அப்போதுதான் வந்த ஒரு பேருந்துக்கு கை காட்டி ஓடிப் போய் ஏறினேன். வாலாஜாவுக்கு 18 ரூபாய் கட்டணம். 20 ரூபாய் நோட்டு கொடுத்தால் அவர்தான் 2 ரூபாய் சில்லறை தர வேண்டும். டாடா புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கலானேன். மேல்விஷாரம் தாண்டும் போது மூடி வைத்து விட்டு இறங்கத் தயாரானேன். வழியில் எங்கும் இறங்குவதற்கு வேகம் குறையாமல் வாலாஜா பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டேன். சென்னை போகும் பேருந்துதான் இது. எதிரில் வந்தால் நகரப் பேருந்தில் ஏறலாம். திமிரி போகும் பேருந்தில் ஏறி வி சி மோட்டூரில் இறங்கிக் கொண்டேன். இதற்கு 3 ரூபாய்.

அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். சும்மா காசோலை வாங்கத்தான் போகிறோம், இதற்காக ஆட்டோவில் போய் 60 ரூபாய் செலவழிக்க முடியுமா? தொலைபேசி சொன்னேன். டேவிட் ஷூ அருகில் வருகிறேன் என்று சொல்லி விட்டுப் பார்த்தால் வெளியில் வந்திருந்தார். காசோலையைக் கொடுத்து விட்டு, இன்னும் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டேன்.மற்றவர்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்த நம்மால் முடியாது. நமது கடன் என்று சொல்லப்படுவதைக் கொடுப்பது மட்டும் செய்யலாம்.

அதைத் தொடர்ந்து தாய்த்தமிழ் பள்ளி பற்றி பேசினோம். அடுத்த வாரம் போகத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னேன். ஆனால், மதியத்துக்கு மேல்  தொலைபேசி கூடங்குளம் திட்டம் ரத்தாகி விடலாம் என்று சொன்னார். பாதி எதிர்பார்த்துதான். 4ம் தேதி கூடங்குளம் போக வேண்டாம் என்றால், 3ஆம் தேதி கல்லூரி வேலை முடிந்ததும், அறைக்கு வந்து பையை எடுத்துக் கொண்டு, கோயம்பேடு போய் வேலூர் வந்து விட வேண்டும். 4ஆம் தேதி வாடகை கொடுப்பது, சம்பளம் கொடுப்பது போன்ற கடமைகளை முடித்து விட்டு அன்று மாலை திருச்சி போகும் பேருந்தை பிடிக்கலாம்.

அங்கிருந்து மதுரை போய் திருமணத்தில் 5ஆம் தேதி கலந்து கொண்டு,   கொடுத்து விட்டு, அங்கிருந்தே ராமநாதபுரம் வந்து கோட்டைபட்டினம் 6ம் தேதி வர வேண்டும். அன்று மதியம் வேதாரண்யம் வந்து பேசி விட்டு இரவு பேருந்து பிடித்து வேலூர் வந்து விட வேண்டும். தொடர்ந்து 7ம் தேதி வகுப்புக்கு சென்னை போகலாம்.

அப்படியே நடந்து போனேன். வாசலில் பார்க்க வேண்டும் என்று சொல்லி என் பெயரையும் சொல்ல வேண்டியிருந்தது. iso 14001-2004 certified company என்று வெளியில் பொறித்திருந்தார்கள். உள்ளே வேலை செய்பவர்கள் எல்லாம் நேர்த்தியான சீருடையில் தெரிந்தார்கள்.

சீருடையில் உட்கார்ந்திருந்தார். அவரது அறையில் போய் உட்கார்ந்தேன். தேநீருக்குச் சொல்ல முயற்சித்தார். அறையில் இருந்தார். எட்டிப் பார்க்க முயற்சி செய்தேன். திரும்பி வந்து காசோலையை வாங்கிக் கொண்டேன். அவர்கள் சொன்னது போலவே பணம் கொடுத்திருந்தார்கள். கடுப்பானது. போகும் போதே 'அப்படி குறைத்துக் கொடுத்திருந்தால் அவர்கள் இன்னும் பெரிய நிறுவனமாக வளர்வதற்கான அறிகுறி, சரியான தொகையைக் கொடுத்திருந்தால் சீக்கிரத்தில் ஊத்தி மூடி விடுவார்கள்' என்று நினைத்திருந்தேன். முன்னதுதான் சரியாகிப் போனது, இன்னும் பெரிதாக வளர்வார்கள்.

அறைக்குள் போய் வணக்கம் சொன்னால், சிறுத்துப் போன முகத்துடன் எல்லாம் நல்லா இருக்கிறதா என்று பேசி முகத்தை வேறு வேலைக்குத் திருப்பிக் கொண்டார். பேச மனம் வரவில்லை. அவ்வளவு பயம், காசு கேட்டு விடுவோமோ என்று. வெளியில் வந்தேன்.

அறைக்குள் உட்கார்ந்து அவரிடம் கருத்துக்களைச் சொன்னேன். தமது வசதிக்கேற்றபடி காரணங்களைச் சொல்லி தமக்கு ஆதாயம் தரும் வழியில் நடப்பதுதான் வெற்றிக்கு ஒரே வழி என்று சொல்ல முயற்சித்தேன். அவருக்கு எவ்வளவு புரிந்ததோ தெரியவில்லை, மீண்டும் விளக்கம் சொல்ல முயற்சித்தார்.

இப்படி நம்மிடமும் நம்மைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்களிடமும் அடிக்கும் பணத்தைத்தான் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும். நான் புத்திசாலியாக இருந்தால், என்னிடம் வேலை பார்ப்பவர்களை சுரண்ட கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

காசோலையை பையில் வைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். எப்படிப் போவீர்கள் என்று கேட்க நல்ல காலநிலைதான் நடந்தே போய் விடுகிறேன் என்று புறப்பட்டேன். சொல்லி வைத்தது போல மழை ஆரம்பித்தது. குடையை விரித்துக் கொண்டேன். அதற்கும் வேலை கொடுக்க வேண்டுமல்லவா.

பாதி வழியில் வண்டியில் வந்து ஏற்றிக் கொண்டார். அவரையும் இன்றைக்கு நேர்முகத்துக்கு வரச் சொல்லியிருந்திருக்கிறார்கள். அவர் காத்திருந்தார். வேறு வேலையில் பிஸியாக இருந்ததால் இவரை சந்திக்க முடியவில்லை. காத்திருந்து விட்டுப் புறப்படுகிறார்.

அவர்கள்தான் சரியாக செயல்படுகிறார்கள். நாம் தர்மம், நியாயம், என்றெல்லாம் போனால் எந்த விளைவும் இருக்காது.

வி சி மோட்டூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். எந்த திசையில் பேருந்து வருகிறதோ அந்த திசையில் போவதாக முடிவு. முத்துக் கடை போனால் பிரியாணி சாப்பிடலாம், வாலாஜா போனால் ஆரிய பவனில் சாப்பிடலாம். முத்துக் கடை திசையில் நின்று கொண்டேன். முதலில் வந்தது வாலாஜா போகும் வண்டிதான். முன் பக்கமாக ஏறினால் நிறைய கூட்டம். ஏதோ பள்ளி அல்லது கல்லூரி மாணவியர் நிறைந்திருந்தார்கள். நடத்துனர் பின் பக்கம் நின்றிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பின்னால் ஏறி சீட்டு வாங்கலாம் என்று நினைத்திருந்தார் அவரே முன்பக்கம் வந்தார். 3 ரூபாய் சீட்டு.

பேருந்து நிலையத்துக்கு வெளியிலேயே இறங்கி ஆரிய பவன் போனேன். இருட்டாக இருந்தது. கரண்ட் இல்லை என்று காரணம் சொன்னார்கள். தயிர் சாதம் இல்லை, தக்காளி சாதம் கொடுத்தார்கள். கூடவே ஒரு பொரியலும், வடை கறியும். இந்த வடைகறியை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எப்போது செய்த வடையை எப்போது உடைத்து செய்ததோ என்று. இது பரவாயில்லாமல் இருந்தது, கொண்டைக் கடலை எல்லாம் தென்பட்டது. 20 ரூபாய் விலை.

சாப்பிட்டு விட்டு பேருந்து நிறுத்தம் வந்தால், சென்னையிலிருந்து வந்த பேருந்தே கிடைத்தது. கடைசி இருக்கையில் மீதியிருந்து ஒரு இருக்கையில் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் படிக்க முடிந்தது. பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கி நகரப் பேருந்து. தனியார் பேருந்துதான். அதிலும் கல்லூரி மாணவியர் கூட்டம். ஆக்சிலியம் கல்லூரியில் இறங்குபவர்கள். ஆக்சிலியம் வந்ததும் பேருந்தே காலியாகி விட்டது. சில்க் மில் அருகில் உட்காரவும் இடம் கிடைத்தது. நல்ல பாடல்கள்  போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வீட்டுக்கு வந்து பார்த்தால் 1.30 ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் பத்ரி, பாஜகவின் வானதி, திமுகவின் ஒரு பிரமுகர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அரசியலில் தனிமனிதர் துதியைப் பற்றிப் பேச வேண்டும். கலைஞர் துதி பாடப்படுவதை இவர்கள் குறிப்பிட்டால், பீஷ்மர், இரும்பு மனிதர் என்று வாஜ்பாயி, அத்வானி சொல்லப்படுவதைத் திருப்பிச் சொன்னார் திமுக காரர். 'அப்படி தனி நபரை தூக்கிப் பிடிப்பது தவறு' என்று பத்ரி சொல்ல முயற்சித்தார். கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து யாராவது கலந்து கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் வெளிச்சமாயிருக்கும். மார்க்ஸ், லெனின், மாவோ என்று துதி பாடுகிறீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

கருப்பு பணம் பதிவில் அதியமானுடன் விவாதம். சொல்லும் பதில்களுக்கு பொருத்தமான விடை தர முடியாமல், என்னைப் பற்றி அவருக்குத் தெரிந்த தனிப்பட்ட விபரங்களைச் சொல்லி பேச ஆரம்பித்தார். அதில் நானும் இறங்கிப் போய் விட்டேன். தவிர்த்திருக்கலாம். ஆனாலும், சொல்ல வந்த பொருளை ஒட்டியே பேசியதாகத் தோன்றியது. ஊழல் பற்றியோ, சீனா பற்றியோ, நாடுகளின் வளர்ச்சி பற்றியோ அவர் சொன்ன கருத்துக்கு சொன்ன பதில்களை புறக்கணித்துக் கொண்டே போய் விட்டார். மூடிய மனதுடன் விவாதம் புரிபவரிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாதுதான்.

இதை முடிக்கும் போது 5.50 ஆகியிருக்கும். உடனேயே getmewell ஆவணம் எழுத வேண்டும். 7 மணிக்குள் அதை முடித்து விட்டு மின்னஞ்சலில் அனுப்பி விட வேண்டும். 7 மணிக்கு fசொன்ன தேவைகளை அலசி குறிப்புகள் எழுதிக் கொள்ள வேண்டும். அது 7.45 வரை. 8 மணிக்கு சீன மொழி கற்றுக் கொள்வதற்கான உரையாடல். ஸ்கைப்பில் இணைந்து பேச வேண்டும். அது 8.30 - 9.00 வரை போகலாம். அதன் பிறகு முகம் மழித்து, குளித்து தயாராக வேண்டும். 20 நிமிடங்கள்  தியானம். 10 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும்.

11.30க்கு ஆம்பூர். 1 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டால், மதியம் அங்கு சாப்பிட்டு விட்டு 3.30 அல்லது 4 மணிக்கு வீட்டுக்கு வந்து விடலாம். மின்சாரம் இருந்தால் துணி தேய்க்க வேண்டும். இல்லை என்றால் எழுத வேண்டும். 4 மணி முதல் 6 மணி வரை இந்த பணிகளை முடித்து விட்டு பெட்டி கட்டி புறப்பட்டு விட வேண்டும்.  7 மணிக்கு சென்னை பேருந்து பிடித்தால் 9.30க்குள் பூந்தமல்லி, 10 மணிக்கு வளசரவாக்கம், தியானம் செய்து விட்டு படுத்து தூங்கி விட வேண்டும்.

நாளைக்குக் காலையில் எழுந்து கல்லூரிக்குப் போக வேண்டும். மதியம் 3.30க்குப் புறப்பட்டு வீடு திரும்ப வேண்டும்

வெள்ளிக் கிழமை, வங்கிக்குப் போய் பிரைம் காசோலை போட்டு விட்டு,  கூரியர் அனுப்பி விட வேண்டும்.  சனிக்கிழமை கல்லூரிக்குப் போய் விட்டு வந்து வேலூர் திரும்ப வேண்டும். ஞாயிற்றுக் கிழமை காலையில் வாடகை வகையறா கொடுத்து விட்டு அடுத்த திட்டம் இடலாம்.

என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாம் இடையில் புகுந்து ஆலோசனைகளோ கூடுதல் தகவல்களோ சொல்ல வேண்டாம். அவர்களுக்குப் புரிந்தபடி பேசி, விபரம் சேகரித்து வரட்டும். அவர்களுக்கு எப்படிப் படுகிறது என்று பார்க்கலாம்.

கல்லூரியில் கற்றுக் கொடுப்பதும் மாதா மாதம் தொடரும் என்று உறுதி கிடையாது. டிசம்பர், ஜனவரிக்கு உறுதி இருக்கிறது. அதன் பிறகு அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

வேலூரில் வாடகை 3,500+வீடு 1,000+தண்ணீர் எடுக்க 100+கேபிள் 100+தொலைபேசி 1,000=5,700 செலவாகிறது.
சென்னையில் வாடகை 2,000+1,000+200=3,200 செலவாகிறது. கூடவே மின்கட்டணம்.

9,000 ரூபாய் வரை மாதா மாதம் செலவு. இதை எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியும்? வாடகைக்கு 5,500 ஆவதை 3,000 என்று குறைக்க வேண்டும். இணையத்துக்கு 1,000 செலவாவதை குறைப்பது தேவையில்லை. தண்ணீர் எடுக்க, வீடு ஆகும் செலவுகளை நிறுத்த வேண்டும், மொத்தம் 5,000 என்று அமைத்துக் கொள்ள வேண்டும்.  இதற்கு மேல் சாப்பாடு, பயணம் என்று செலவுகள்.

வியாழன், ஜூன் 02, 2011

போகும் திசை தெரிந்தால்.


மாலை 6.50, ஜூன் 2, 2011

நேற்று காலையில் சீக்கிரம் எழுந்து மென்பொருள் பணிகளை முடித்து விட்டு சென்னைக்குப் புறப்பட வேண்டும். சீக்கிரம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று திட்டம். ஆனால், காலைஉணவு செய்து சாப்பிட்டு விட்டுப் புறப்படுவதற்கு ஏழரை மணி ஆகி விட்டது. வெளியில் இறங்கும் போது சரியாக 7.30 என்று நேரம் காட்டியது செல்பேசி.

சாலைக்கு வந்து கடந்து போகவிருந்த பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். வேறு யாரும் ஏறாமலே ஒரு ஆளாகவே புது பேருந்து நிலையம் வரை கொண்டு விட்டார். நாளிதழ், பத்திரிகை வாங்கி விட்டு பேருந்து நிற்கும் இடம் வந்தால் 84 விரைவு பேருந்து ஒன்று நின்றது. அதன் பின்பு இன்னொரு எண் இல்லாமல் பேருந்து வந்து, 'non stop மெட்ராஸ், பூந்தமல்லி, கோயம்பேடு மட்டும் ஏறுங்க' என்று விளித்துக் கொண்டிருந்தார் நடத்துனர். அதில் ஏறப் போகும் போது குளிர்சாதனப் பேருந்து ஒன்று வந்து நின்றது. மூன்று மடங்கு கொடுக்க வேண்டும் என்று நேர்ந்து விட்டிருக்கிறது இப்போதெல்லாம்.

அதில் போய் ஏறி கடைசி வரிசையில் கால் இடிக்காமல் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். 8 மணிக்குப் புறப்படும் என்று சொன்னார் நடத்துனர். அதற்குள் அந்த இரண்டு பேருந்துகளும் போய் விட்டிருந்தன. விரைவுப் பேருந்து கழக சொகுசுப் பேருந்து ஒன்றும் போனது. பேருந்தில் எல்லா இருக்கைகளும் நிரம்பி விட, வேகமாக போக ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்திலேயே நெடுஞ்சாலையில் ஏறி ஓடியது வண்டி.

தூங்குவதற்கு நல்ல வாய்ப்பு. காலையில் தவற விட்டத் தூக்கத்தைப் பிடித்துக் கொண்டு எழுந்து பார்க்கும் போது சென்னை நெருங்கியிருந்தது (காஞ்சிபுரம் தாண்டியிருந்தது). அடுத்த முக்கால் மணி நேரத்தில் பூந்தமல்லி என்று நினைத்து உட்கார்ந்திருந்தால் மஸ்கட் பேக்கரி என்ற நிறுவனம் இருக்கும் இடத்துக்கு அருகில் பேருந்து நின்று விட்டது.

ஏற்கனவே சாலையின் வலது புறத்தில் ஏறி வந்திருக்கிறார் ஓட்டுனர். இடது புறம் இரண்டு தடங்களும் வண்டிகளால் நிரம்பியிருந்தன. வலது புறத்திலும் ஒரு தடம் நிரம்பி விட்டது. எதிர் புறத்திலிருந்து ஒரு தடத்தில் வண்டிகள் நகர்ந்து கொண்டிருந்தன. இந்தத் திசையில் நகர்வே தெரியவில்லை.

அடுத்த 1 மணி நேரத்தில் சில அடிகள் சில அடிகளாக நான்கைந்து முறை நகர்ந்து நின்று கொண்டிருந்தது பேருந்து. வெளியில் வெயில் கொளுத்தினாலும் உள்ளே குளுகுளு என்று இருந்தது. பக்கவாட்டு சுவரில் சூடு ஏறி விட்டிருந்தது. போகத் திட்டமிட்டிருந்த நேரம் தாண்டி விட்டிருந்தது. பையை எடுத்துக் கொண்டு முன்பக்கம் ஓட்டுனருக்கு அருகில் வந்து எட்டிப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிற்கும் வாகனங்கள்தான் தென்பட்டன. எங்கு என்ன தடங்கல் என்று யாருக்கும் விபரம் தெரியவில்லை.

கதவைத் திறக்கச் சொல்லி இறங்கி விட்டேன். சாலையின் நடுவில் ஐந்தாறு அடி அகலத்தில் மையத் தடுப்பு அமைத்தில் அதில் செடிகளும் வைத்து விட்டிருக்கிறார்கள். நடக்க நன்றாக இருந்தது. மேலிருந்து எரிக்கும் வெயிலை மட்டும் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும். நாம் நடக்க ஆரம்பித்து வாகனங்கள் ஓட ஆரம்பித்து விட்டால், அசடு வழிந்து கொண்டு பேருந்தில் திரும்பவும் ஏற வேண்டியிருக்கும். அது மாதிரி நடந்து விடவில்லை.

இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் எதிரில் இதே மையத் தடுப்பில் சர்க்கஸ் செய்து கொண்டே ஓட்டி வந்தார்கள். கூடவே ஓடிக் கொண்டே இன்னொருவர். எந்த இடத்தில் தடங்கல் என்று கேட்டால் கூட்டு ரோடு வரைதான் சிக்கலாம். கூட்டுரோடு அருகில்தான் இருக்க வேண்டும். பக்கத்துக் கடையில் பெயர்ப்பலகையில் தண்டலம் என்று ஊர்ப் பெயர் தெரிந்தது. தண்டலம் கூட்டு ரோடுதான் அடுத்தது, அதை அடுத்த சவீதா பொறியியல் கல்லூரி என்று தூரம் நிறைய உண்டும். சிக்கலைத் தாண்டி பேருந்து ஏதாவது பிடித்தால் பூந்தமல்லி போய் விடலாம்.

ஒரு மணி நேரத் தடங்கலில் எத்தனை வண்டிகள் முடங்குகின்றன. கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நடந்திருப்பேன். வழியில் ஒரு இடத்தில் போக்குவரத்துக் காவலர்கள் தப்பாக வலது புறத் தடத்தில் வந்த வண்டிகளைத் திருப்பி சரியான தடத்துக்குள் விட ஆரம்பித்திருந்தார். எதிர்த் திசையிலும் நெருக்கடி ஆரம்பித்து வாகனங்கள் நிற்க ஆரம்பித்திருந்தன.

தண்டலம் கூட்டு ரோடில் பக்கச் சாலையிலிருந்து ஏறித் திரும்பும் இடத்தில் ஒரு சரக்கு லாரி கவிழ்ந்து கிடந்தது. சல்லி ஏற்றி வந்து லாரி, சல்லிகளும் சிதறிக் கிடந்தன. சென்னை நோக்கிப் போகும் தடத்தில் ஒரு வண்டி மட்டும் நுழைந்து போகும் அளவுக்கு இடம் ஏற்படுத்தி இருந்தார்கள். எதிர்ப் பக்கத்தில் எந்தத் தடங்கலும் இல்லைதான், இப்படி மாறு திசையில் வராமல் இருந்திருந்தால்.

கவிழ்ந்த லாரியைத் தாண்டியதும் இடது புறம் பேருந்து நிறுத்தம். காஞ்சிபுரத்தில் இருந்து வந்த பேருந்து நிறுத்தவில்லை. அதன் பிறகு, வெளி வந்த மாநகரப் பேருந்தும் நிறுத்தவில்லை, ஓடும் பேருந்தில் தொற்றிக் கொண்டேன். ஏறி 30 ரூபாய் மாநகரச் சீட்டு வாங்கிக் கொண்டேன். இங்கிருந்து பூந்தமல்லி, அங்கிருந்து குரோம்பேட்டை,  மாலையில் திரும்புதல் என்று எல்லாவற்றுக்கும் உதவும். பாப்பான் சத்திரம், செம்பரம்பாக்கம் என்று எலலா நிறுத்தங்களிலும் நின்று போனது பேருந்து.

பூந்தமல்லி பாலத்தில் ஏறும் போது பார்த்தால் பின்னால் நான் வந்த குளிர்சாதன பேருந்து வந்து விட்டிருந்தது.  இறங்காமல் உட்கார்ந்திருந்தால் நடையும், வேர்வையும் இல்லாமல் வந்து சேர்ந்திருக்கலாம். உட்கார்ந்திருக்கும் நேரம் எல்லாம் எவ்வளவு நேரம் ஆகுமோ, என்ன பிரச்சனையோ என்று மன சஞ்சலம் அதிகமாயிருக்கும். இரண்டுக்கும் சரியாகப் போச்சு என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

பூந்தமல்லியில் இறங்கி பேருந்து நிலையத்துக்குள் போகும் போது ஒரு PP66 போய் விட்டிருந்தது. அடுத்தது எந்த பேருந்து என்று கொஞ்ச நேரம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்து. ஓட்டுனர் நடத்துனர் ஏறியவுடன் அடுத்த PP66ல் ஏறிக் கொண்டேன். உட்கார இருக்கையும் கிடைத்தது. மாங்காடு, குன்றத்தூர், அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் தாண்டி குரோம்பேட்டை வரை இறங்கவில்லை. ஒரு வேளை பாண்ட்ஸ் அருகில் வண்டி நின்றால் இறங்கி விடலாம் என்று ஒரு நப்பாசை. ஆனால் வாசல் கதவை மூடியே வைத்து விட்டார். அடுத்த சாலை நிறுத்தத்தில் கூட இறங்க முடியவில்லை.

குரோம்பேட்டையில் இறங்கி சாலையைக் கடந்து எதிர்ப் புறம் M66ல் ஏறி பாண்ட்ஸ் நிறுத்தம் என்று இறங்கிக் கொண்டேன். கிட்டத்தட்ட பாலாஜி பவன் எதிரிலேயே இறக்கி விட்டு விட்டார்கள். நடக்க ஆரம்பித்தேன். கடந்து சென்ற ஆட்டோ ஒன்றைப் பிடித்துப் போய் இறங்கி விட்டேன்.

போய், கொண்டு போயிருந்த மாற்றங்களை செயல்படுத்தி விட்டு, கேட்ட விபரங்களை விளக்கினேன். ஆவணங்களையும் அறிக்கைகளையும் அச்செடுத்துப் பார்த்து விடலாமா என்று நினைத்து உணவு இடைவேளைக்குப் பிறகு உரிமையாளர் வந்த பிறகு செய்யலாம் என்று முடிவு.

சாப்பிடுவதற்கு அவருடனேயே போனோம். பாலாஜி பவன். குளிரூட்டப்பட்ட அறைக்குள் சாப்பிடப் போக வரிசையில் காத்திருக்க வேண்டும். 10-15 நிமிடங்கள் உட்கார்ந்த பிறகு அழைத்தார்கள். சாப்பாடு. முதலில் சூப், சப்பாத்தி, பெரிய தட்டத்தில் நான்கைந்து கறிகள், நான்கைந்து குழம்புகள், அப்பளம், கேட்கக் கேட்க சோறு என்று பெரும் சாப்பாடு. எதையும் வீணாக்கி விடக் கூடாது என்று தீர்த்துக் கட்டினேன். இனிப்பு என்ற பெயரில் முறைத்த கெட்டி பாயாசத்தையும், சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளக் கொடுத்த ஒரு மசாலா போட்ட குழம்பையும் தவிர வேறு எதுவும் வீணாகவில்லை.

காத்திருக்கும் போது பார்த்த ஃபலூடா சாப்பிட ஒருவருக்கு ஆசை. வேண்டாம் என்று சொல்ல விருப்பமில்லாமல் எல்லோருக்கும் கிடைத்தது. ஐஸ்கிரீம், பழங்கள், ஜெல்லி, பல வண்ண திரவங்கள் என்று கண்ணைக் கவரும்படி வந்து சேர்ந்தது. ஒரு கரண்டியால் எடுத்துச் சாப்பிட வேண்டும். அதையும் ஒரு சொட்டு விடாமல் சாப்பிட்டுக் கொண்டேன்.

மதியத்துக்கு மேல் ஆவணங்களை அச்செடுத்துக் காண்பிக்கும் போதுதான் இன்னும் பல மாற்றங்கள் வேண்டும் என்று விபரங்கள் வெளி வருகின்றன. 'எதுவும் மாற்றங்கள் கிடையாது, இருப்பதைப் பயன்படுத்த வேண்டும்' என்று சொல்லியிருந்தாலும். காரண காரியங்களோடு நியாயமான தேவையைச் சொல்லும் போது மறு பேச்சு பேச வாய்ப்பிருப்பதில்லை. 'இப்படித்தானே இருக்க வேண்டும், இதை எதிர்பார்ப்பது தவறா' என்பது வாதம்.

தவிர்க்க முடியாதவற்றை எல்லாம் குறித்துக் கொண்டு, அறிக்கைகளை இன்று முதல் பார்ப்பதற்கான வழிமுறைகளை விளக்கினேன். தேவையில்லாத தரவுகளை மூடி விட்டு அறிக்கைகளை சீர்படுத்தும் முறைகளைச் சொல்லிக் கொடுக்கும் போது பார்த்தால் ஏதோ ஒரு நடைமுறைத் தவறில் ஒரு தரவு சரிவர சேமிக்கப்படாமல் இருந்தது.

7 மணிக்குப் பிறகு வரை உட்கார்ந்து விட்டுப் புறப்பட்டேன். கிடைத்த பணி பட்டியலை முடிக்க 2-3 நாட்கள் ஆகும். தாமதமானால் தங்கி விடலாம் என்று உடைகளை எடுத்துக் கொண்டு வந்திருந்தாலும், ஒரு விதமான சோர்வான மனநிலையில் திரும்பிப் போக முடிவு செய்தேன். வண்டி எதுவும் கிடைக்கவில்லை.

நடந்து பாண்ட்ஸ் அருகில் வந்து, சாலையைக் கடக்காமல் பல்லாவரம் போக பேருந்து நிறுத்தம் தேட அடையாறு ஆனந்த பவன் அருகில் வந்து சேர்ந்தேன். வெக்கையும் சோர்வும் உள்ளே போகத் தூண்டின. பசி இல்லைதான். இட்லி 2, தோசை 1, காஃபி சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தேன். பேருந்து நிற்கும் இடம் அடையாளம் தெரியாமலேயே நடந்து குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்துக்கு வந்து விட்டேன்.

தொலைபேசியில் அழைப்பு. உடல்நிலை பற்றி விசாரிப்பதற்கு.  பேசிக் கொண்டிருக்கும் போதே குளிர் சாதனப் பேருந்து. அதில் 30 ரூபாய் சீட்டு செல்லாது. மீண்டும் 25 ரூபாய்க்குச் சீட்டு. கடைசி வரிசையில் நடு இருக்கை.

இடது புறம் ஒரு பெண்ணும், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவரது மேலாளர் போன்றவரும் - இரண்டு பேரும் சின்ன வயதுதான்- பேசிக் கொண்டிருந்தார்கள். அலுவலக அரசியல் பதவி உயர்வு, பயிற்சி, என்று அந்தப் பெண் அசோக் நகரில் இறங்குவது வரை பேசிக் கொண்டிருந்தார்கள். அசோக் நகர் வருவதற்கு நீண்ட நேரம் பிடித்திருந்தது.

வலது புறம் இரண்டு இளைஞர்கள். அவர்களும் ஏதோ மென்பொருள் துறையைச் சேர்ந்தவர்கள்தான். ஆங்கிலத்தில்தான் பேசினார்கள், வெளிமாநில ஆங்கிலம், ஒருவர் கேரளா இன்னொருவர் ஆந்திராவாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. பொதுவாகத் தெரிந்தவர் ஒருவரை கிண்டல் செய்து பேசிக் கொண்டார்கள். முன் இருக்கையில் உட்கார்ந்து கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் காதில் விழ வேண்டும் என்று பேசா விட்டாலும், பேசியது காதில் விழும் என்று நினைத்தே பேசியிருப்பார்கள் என்று தோன்றியது.

காலியான இருக்கைகளில் கோயம்பேடு போகும் மலையாள குடும்பத்தினர் ஒவ்வொருவராக உட்கார்ந்தார்கள். மாலை வேளை நெரிசல், சாலையின் நடுவை ஆக்கிரமித்திருந்த மெட்ரோ ரயில் பணிகள் என்று பேருந்து நிதானமாகவே போனது. இதே கதைதான் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கு சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்த வேலை. இந்த ரயில்/உயர் நெடுஞ்சாலை பணி முடிந்த பிறகு அதை அனுபவிக்க விடாமல் அடுத்த பணியை ஆரம்பித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது.

கோயம்பேடில் இறங்கும் போது 9 மணி. ஓசூர் பேருந்து, குளிர் சாதனப் பேருந்து, சொகுசுப் பேருந்து என்று வரிசையாக நின்றாலும். காலையில் தோன்றிய நினைப்பினாலோ என்னவோ 46 ரூபாய் கட்டண 102B திருப்பத்தூர் வண்டியிலேயே ஏறிக் கொண்டேன். அதிகம் கால் இடிக்காமல் இடமும் கிடைத்து விட்டது. மூன்று பேர் இருக்கையின் ஓர இருக்கை. இன்னொருவர் ஜன்னல் பக்கம் போய் விட மூன்றாவது ஆள் வரவேயில்லை. கடைசி வரை நெரிசல் இல்லாமல் பயணம் போனது.

பூந்தமல்லி மட்டும் போய் விட்டு அதன் பிறகு எந்த ஊருக்குள்ளும் போனது போலத் தெரியவில்லை. நல்ல தூக்கம், கண்களை விழிக்காமலேயே சாய்ந்து நிமிர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். வேலூர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரில் நிறுத்தும் போது விழித்து உட்கார்ந்தேன்.  அப்போதும் எழுந்திருக்க மனமில்லை. சத்துவாச்சாரி, அடுத்து பேருந்து நிலையத்துக்கு வெளியில் உள்ளே போய் இறங்கிக் கொண்டேன். பேருந்து நிலையத்தின் மறுபக்கத்துக்கு வந்து பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டு அவர் இன்னும் 2 பேர் வருவது வரை காத்திருந்து புறப்பட்டார்.

கோபாலபுரம் அருகில் இறங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். 12 மணி தாண்டியிருந்தது. வந்து கை கால் முகம் கழுவி விட்டு முன்னறையில் கட்டிலிலேயே படுத்துத் தூங்கி விட்டேன். நன்கு அசதி தீரத் தூங்கி எழுந்திருக்க வேண்டும் என்று காலையில் ஆறரை மணிக்குத்தான் எழுந்திருந்தேன்.

போன ஞாயிற்றுக் கிழமை கற்றுக் கொண்ட வாழ்க்கைத் திட்டமிடலை நாமும் முயற்சிக்க வேண்டும் என்று இரண்டு நோட்டுகளை எடுத்துக் கொண்டேன். 30 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும், என்ன சாதித்திருக்க வேண்டும் என்று முதலில் எழுத வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் (25, 20, 15, 10 ஆண்டுகளில், 5, 6, 7, 8 ஆண்டுகளில்) இலக்குகளைப் பற்றி எழுத ஒவ்வொரு பக்கம் ஒதுக்கி விட்டு. உடனடி எதிர்காலத்துக்கு வாரா வாரம் ஒவ்வொரு பக்கம். ஆறு மாதங்களுக்குப் பிறகு மாதா மாதம், அதற்குப் பிறகு காலாண்டுகளாக அதற்குப் பிறகு அரையாண்டுகளாக.

ஓரிரு பக்கங்களை நிரப்பினேன். நன்றாகத்தான் இருந்தது. இலக்கு தெளிவாக இருக்கும் போது செய்ய வேண்டியது, செய்யத் தேவையில்லாதது என்ற தெளிவு எளிதாக கிடைத்து விடுகிறது.

அடுத்ததாக ஒரு நாளின் விழித்திருக்கும் 18 மணி நேரத்தை எப்படிச் செலவிடப் போகிறோம் என்று ஒரு திட்டமிடல். மனவளத்துக்கு 3 மணி நேரம் ஆகிறது. உடல் நலனுக்கும் வீடு நலனுக்கும் 5 மணி நேரம். வேலைக்கு ஐந்தரை மணி நேரம், பொழுதுபோக்குக்கு ஒன்றரை மணி நேரம், சமூகப் பணிகளுக்கு 3 மணி நேரம்.

இப்படி வகுத்துக் கொண்டு விட்டால், பொழுது போக்கில் எல்லா நேரமும் வீணாவது தடுக்கப்பட்டு விடும். வேறு எதையோ பலியிட்டுத்தான் இதற்கு நேரம் செலவழிக்கிறோம் என்று விழிப்புணர்வே தடுத்து நிறுத்தி விடும்.

முதலில் இன்றைய நாளுக்கான திட்டத்தை எழுதிக் கொண்டேன். திட்டமிட்டதில் காலையில் வீட்டு வேலைகள் என்று இருந்ததை விட்டு காலையிலேயே திட்டமிடலை ஆரம்பித்தேன். நிறுவனத்தின் வலைத் தளத்தில் பார்த்திருந்த குறைகளைச் சரி செய்து விட்டு அதையும் ஒழுங்கு செய்தேன்.

தொடர்ந்து பழையது சாப்பிட்டதால், காலை உணவு செய்யும் நேரமும் கிடைக்க, மென்பொருள் பணி ஆரம்பித்தது. அடுத்த இரண்டரை மணி நேரம் அது செய்த பிறகு மீண்டும் பசி. அதே உணவை தண்ணீரோடு சாப்பிட்டு விட்டுத் தொடர்ந்தேன். 2 மணி வரை தொடர்ந்து விட்டு நிறுத்திக் கொண்டேன்.

2 மணிக்கு வீடு தூய்மை செய்தல் ஊற வைத்திருந்த துணி துவைத்தல், பாத்திரம் தேய்த்தல் என்று முடிந்து குளிக்கப் போகும் முன்பு சோறு அழுத்தக்கலனில் வைத்து விட்டுப் போனேன். துணிகளைக் காயப் போட்டு விட்டு அழுத்தக்கலனுக்கு வெயிட் போட்டு விட்டுத் தியானம். நடுவில் எழுந்து அடுப்பை அணைத்து விட்டு இன்னும் 10 நிமிடம்.

எழுந்து பணம் கேட்டு தொலைபேசி அழைப்புகள் செய்து விட்டு நேரம் பார்த்தால் 3.50. தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பினால் அதைப் பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்புவது குறித்த அமைப்புகளை செய்து முடித்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதமாக தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் வேலை. பல முறை சொல்லிச் சலித்து விட்டார்கள். இன்றுதான் அதற்கு நேரம் வந்தது. திட்டமிட்ட படி 1 மணி நேரத்தில் முடிந்து விட்டது.

ACTUN-YAWC என்ற குறிச்சொல்லுடன் 922002200 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால் அனுப்பியவரின் எண்ணைக் குறிப்பிட்டு ஐநா மனித உரிமை சபைக்கு மின்னஞ்சல் போவது போல அமைக்க வேண்டும். தகவல்களை பதிவு செய்வது போல செய்து முடித்து விட்டேன்.

முடித்த வேலை பற்றிய தகவலையும் சொல்லி விட்டு, இணையத் தளத்தில் செய்திகளை வெளியிடுவது ஆரம்பித்தேன். இடையில் செய்திகளும்.

ஜெயலலிதா வாரா வாரம் வாக்கு தவறாமல் பத்திரிகைகளை சந்திக்கிறார். கருணாநிதியை சின்ன பிள்ளைத்தனமாக பேசுவதாகக் கூட கடிந்து கொள்ள முடிகிறது. கம்மல் அணிவதற்கு ஒரு நீண்ட கதை சொல்கிறார். இப்படி 5 ஆண்டுகளும் வாரா வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தாலே தடம் பெரிய அளவு தவறாமல் பார்த்துக் கொள்ளலாம். கேள்வி கேட்பதற்கு உரிய சுதந்திரமும் இருக்க வேண்டும்.

தயாநிதி மாறன் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார். அவரும் சீக்கிரமே பதவி இழந்து சிறைக்குப் போக நேரிடும் என்று தோன்றுகிறது.  கனிமொழி போல சட்டத்துக்குக் கட்டுப்பட்டு சிறைக்குப் போகிறவர் இல்லை அவர். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நாட்டை விட்டே ஓடக் கூட முயற்சி செய்யலாம். சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் தமது செல்லப் பிள்ளைக்காக என்ன செய்யப் போகிறார்களோ!

மாலை உணவு சாப்பிட்டு விட்டு 5.50க்கு உலாவப் போனேன். ஆறரை மணிக்குத் திரும்பி வந்து மாலைக் கடன்கள் முடித்து விட்டு இப்போது நாட்குறிப்பு. இதை முடித்து விட்டு இன்னும் 2 மணி நேரம் இருக்கும். திட்டமிட்ட ஒரே ஒரு பணி மீதியிருக்கும். அதை செய்து முடிக்கலாம். நாளைக்கான திட்டமிடலையும் செய்யலாம்.

செய்ய வேண்டிய பணியின் வழிமுறை இன்னும் மனதில் தெளிவாகவில்லை. அதனால் அரசியல் வீட்டுப் பாடத்தைச் செய்து அனுப்பி விட்டு நாளைய திட்டமிடலில் இந்தப் பணியைச் சேர்த்துக் கொள்ளலாம். தரவுகளைப் பார்த்தால்தான் இன்னும் தெளிவாகும்.

திங்கள், மே 30, 2011

தாங்கிப் பிடிக்கும் கைகள்


மே 30, 2011 முற்பகல் 10.10

மூன்று நாட்கள் சென்னையில் கழித்து விட்டு நேற்று மாலையில் திரும்பி வந்தேன். சென்னைக்கு எடுத்துப் போன மடிக்கணினியில் எழுதுவதற்கு மனம் வரவில்லை. சென்னையின் நசுநசுப்பான வேர்வை வெயிலில் அலைந்து விட்டு வந்த பிறகு மாலையில் எழுதுவதற்கு விருப்பமும் இருக்கவில்லை. மூன்று நாட்கள் நிகழ்வுகளை ஒரேயடியாக எழுதி விடலாம் என்று உட்கார்ந்து விட்டேன்.

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அலுமினி செயற்குழு கூட்டம். 5 மணிக்கு என்று சொல்லியிருந்த (ஆனால் 6 மணிக்குப் பிறகுதான் வர முடியும் என்று சொல்லியிருந்த) போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம். அங்கிருந்து தாம்பரம் வந்து விட்டு, சனிக்கிழமை காலையில் பல்லாவரத்தில் வாடிக்கையாளர் அலுவலகத்தில் மாற்றிய நிரல்களைச் சேர்ப்பது, அன்று மதியத்துக்கு மேல் போரூரில் பணி விபரங்களை ஆராய்தல், ஞாயிற்றுக் கிழமை குரோம்பேட்டையில் வகுப்பு. முடிந்தால் போரூரில் வங்கியில் காசோலை பற்றி விசாரித்தல், சேவை வரி கட்டி விடுதல்.

இப்படித்தான் திட்டம். வெள்ளிக்கிழமை காலையில் 9 மணிக்கு மின்சாரம் தடைப்பட்ட உடனேயே வீட்டை ஒதுங்க வைத்து, பொருட்களை எடுத்து வைத்துப் புறப்பட ஆரம்பித்தேன். கடைசி நிமிட பதற்றத்தில் புறப்பட்டால், வீண் மன சஞ்சலம்தான் மிஞ்சும். சேவை வரிக்கான கோப்பை எடுக்கப் போகும் போது, பல மாதங்களாக எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்த ஒரு கோப்பு ஒற்றை காகிதத்தின் கீழ் முன் வரிசையிலேயே இருக்கிறது. காகிதத்தை நீக்கிப் பார்த்தால் கீழே அந்தக் கோப்பு. சேவை வரிக்கான படிவம் நிரப்பி விட்டு, அதற்கான காசோலை தாளையும் எடுத்துக் கொண்டேன்.  வங்கியில் போட்ட காசோலைக்கான விபரச் சீட்டு, பென்டிரைவில் நகல் எடுக்க வேண்டிய கோப்புகள், HP மடிக்கணினியில் இந்தக் கோப்புகளை நகல் எடுத்து வைத்தல் என்று தேவைப்பட்ட எல்லாவற்றையும் முடித்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு உடுத்தத் தேவையான உடைகள், பல் தேய்க்கும் பிரஷ் எடுத்துக் கொண்டு முகம் மழித்துக் கொண்டேன். குளித்து விட்டு சிறிது நேரம் தியானம். இணையத்தில் வங்கிக் கணக்கில் காசோலை சேர்ந்து விட்டதா என்று  பார்க்க வேண்டும், மாலை கூட்டத்தின் முகவரியைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

வாங்கி வைத்திருந்த தேங்காயில் ஒரு அரை மூடியும், முந்தைய நாள் வைத்திருந்த குழம்பில் சிறிதளவும் மீந்திருந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு திரும்பி வரும் போது இரண்டுமே கெட்டுப் போய் விடும். மதிய உணவையும் தயாரித்து விடுவது என்று உப்புமா செய்து கொண்டேன். தேங்காய் உப்புமாவில் போய் விட, அதைச் சாப்பிடும் போது குழம்பையும் தீர்த்துக் கொண்டேன்.

12 மணிக்குக் கூட மின்சாரம் வரவில்லை. கொஞ்ச நேரம் பார்த்து விட்டு 12.20க்குப் புறப்பட்டு விட்டேன். வெயில் உச்சத்தில் இருந்தது. கீழ் வீட்டில் குடியிருக்க ஆட்கள் வந்து விட்டிருந்தார்கள். மறு பக்கத்தில் இறங்கி ஓடைப் பிள்ளையார் கோவில் அருகில் படிப்பதற்கு நாளிதழ்கள் வாங்கிக் கொண்டு பேருந்து நிலையம். குளிர் சாதனப் பேருந்து ஒன்று நின்று கொண்டிருக்க ஓசூரில் இருந்து வரும் 503 குளிர் சாதன பேருந்து உள்ளே வந்தது. நீண்ட தூரம் போவதற்கு வசதியாக இருக்கைகள் அமைத்திருப்பார்கள். அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். இந்த பேருந்தில் இருப்பவர்களை அடுத்த நிற்கும் வண்டியில் ஏற்றி விட்டு விட்டு தாமதமாகப் போகலாம் என்று ஓட்டுனர் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் அது படியவில்லை, இவரே வண்டியை எடுத்து விட்டார். 12.45க்கெல்லாம் வண்டி புறப்பட்டு விட்டது.

நல்ல தூக்கம். வெயிலில் சிறிது நேரம் போனாலேயே களைப்பாகி விடுகிறது. இரண்டரை மணிக்கு பூந்தமல்லி. பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்குள் போய்ப் பார்த்தால் நிறைய பேருந்துகள் நின்றிருந்தன. 54F நிற்கும் இடத்தில் 66 நின்றிருந்தது. 54 பேருந்துகள் 66 இடத்தில் நின்றிருந்தன. எதுவும் புறப்படும் அறிகுறி இல்லை.

கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு வெளியில் வந்தேன். திநகர் போகும் திருப்பெரும்புதூரிலிருந்து வரும் வண்டியில் ஏறி கிண்டிக்கு பயணச் சீட்டு. உட்காரவும் இடம் கிடைத்து விட்டது.

3.30க்கெல்லாம் கிண்டி. தூது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய ஆவணத்தை அருகில் இருந்த அஞ்சலகத்தில் துரித அஞ்சலில் கொண்டு கொடுத்தேன். ஏதோ அரசு அலுவலகத்திலிருந்து பெரும் அளவில் பதிவுத் தபால் அனுப்பக் கொண்டு வந்திருந்தவரிடம், 'பட்டியல் போட்டுக் கொண்டு வந்தால்தான் வாங்கிக் கொள்வோம்' என்று தபால் ஊழியர் சொல்ல அவர் புரியாதது போல முரண்டு பிடித்தார். கடைசியில் என்ன நடந்தது என்று பார்ப்பதற்கு முன்பு என் வேலை முடிந்து வெளியில் வந்து விட்டேன்.

M47 அய்யப்பன்தாங்கல்- திருவான்மியூர் பேருந்து ஒன்று வந்தது, ஆனால் கிண்டியிலிருந்து கிளம்பி வருகிறது. அந்த வழியில் போகிறவர்கள் ஏறிக் கொள்ள எல்லோரும் உட்கார்ந்து கொண்டு போக முடிந்தது. சிஎல்ஆர்ஐ நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். நுழைவாயிலில் ஆல்ஃபா ஈசி மீட்டிங் என்று சொல்ல யாரோ அதற்கு முன்பு போயிருப்பதால் உடனேயே அனுப்பி விட்டார்கள்.

இரண்டு நாட்கள் தங்குவதற்கான பயணப் பையுடன், வேர்க்க விறுவிறுக்க அறைக்குள் நுழைந்தால் ஏற்கனவே 4 பேர் உட்கார்ந்திருந்தார்கள். 'மின்சாரத் தடை காரணமாக குளிர் சாதனம் வேலை செய்யவில்லை' என்று வருத்தம் தெரிவித்தார்கள். 'இந்த செயற்குழு கூட்டங்களில் யாரும் ஒழுங்காக வருவதில்லை' என்பது பொதுவான குற்றச்சாட்டு.  அத்தகைய மனநிலையில் இருந்தவர்களுக்கிடையே இந்த கோலத்தில் போனது நல்ல வரவேற்பைக் கொடுத்தது. 'it shows his commitment" என்று தலைவரிடமிருந்து கருத்து. 'கூட்டத்துக்கு வந்து விடுவது அடிப்படைத் தேவை, அதற்கு மேல்தான் commitment பற்றிப் பேச வேண்டும்'

பொதுவாக ஏதாவது சாப்பிட குடிக்க ஏற்பாடு செய்திருப்பார்கள். அன்று  ஒருவர் ஓய்வு பெறுவதை ஒட்டி அவர் தேநீர் விருந்து அளிப்பதாக அங்கு அழைத்துப் போனார்கள். மிகவும் வாட்ட சாட்டமாக சட்டையை கால்சட்டைக்குள் இன் செய்து, கரு கரு தாடி மீசையுடன் ஒருவர் வந்து கை குலுக்குகிறார். அவர்தான் அன்று ஓய்வு பெறுபவர். தலை முடி சாயத்தின் மாயம், வயதை முற்றிலும் மறைத்து விடுகிறது. பொதுவாக ஓய்வு பெறுகிறவர் என்றால் தளர்ந்து போய் இத்தோடு வாழ்க்கை முடிந்தது என்ற மனநிலையில் எதிர்பார்ப்போம், இவர் இன்றுதான் புதிதாகப் பிறந்தது போலத் தெரிகிறார்.

அதன் பிறகு ஆம்பூரில் நடத்தத் திட்டமிடும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வது குறித்துப் பேசினோம். எல்லா உறுப்பினர்களின் தொடர்பு விபரங்களைத் திரட்டவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருந்தேன். ஐந்தரை மணிக்கெல்லாம் கூட்டம் முடிந்தது. காரில் ஏறி ஐஐடி அருகில் இறங்கிக் கொண்டேன்.

47A பேருந்தில் ஏறி திநகர் பேருந்து நிலையத்தின் அருகில் இறங்கிக் கொண்டேன். தண்டபாணி தெருவில் அப்பலோ மருந்தகத்துக்கு எதிரில் அகில இந்திய இளைஞர் பேரவை என்ற அமைப்பின் அலுவலகத்தில் கூட்டம். ஆட்டோ பிடித்துக் கொண்டேன். ஒரு கிலோமீட்டர் தூரம்தான் இருக்கும். தோளை இழுக்கும் மடிக்கணினி, கையில் கனமான பையுடன் வெயிலில் நடப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஏற்கனவே நிறைய பேர் வந்து விட்டிருந்தார்கள். நான் கிட்டத்தட்ட ஒரு சிறுவன் போலத்தான் இதில் நுழைந்திருந்தேன் என்பது கொஞ்ச நேரம் பேசிய பிறகுதான் தெரிந்தது. வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் பிரதிநிதிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவரவர் கொள்கைப் பிடிப்புகளுக்காக வாழ்க்கையையே அற்பணித்த உறுதியும் தெளிவும் தெரியும் முகங்கள். ஆரம்பத்தில் இணையம் பற்றி சில விபரங்களைக் கேட்டதற்கு பதில் சொல்லி விட்டு அதன் பிறகு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஜூன் 1 முதல் 3 வரை பயங்கரவாத ஒழிப்பு மாநாடு என்று 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளை இலங்கையில் கூட்டுகிறாராம் ராஜபக்சே. ஜூன் 18ல் ஐநா அறிக்கை மீது ஐநாவின் மனித உரிமைக் குழு விவாதம் நடத்த இருப்பதாகவும் ஒரு தகவல். என்னென்ன செய்யலாம், என்று பல கருத்துகள் வந்தன. அமெரிக்க தூதகத்தில் மனு கொடுக்கலாம், மக்கள் கூடும் இடங்களில் புகைப்படக் காட்சி நடத்தலாம், கையெழுத்து இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தலாம் என்று பேசினார்கள்.

இந்த உயர் நிலை பேச்சுக்களுக்கிடையே தெளிவாக என்ன செய்ய வேண்டும் என்று வரையறுத்துச் சொல்ல வைத்தார் ஒரு வழக்கறிஞர்.
ஜூன் 1ம் தேதிக்கு முன்பு சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும்
ஜூன் 18க்கு முன்பு பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்
2 மாதங்களுக்குள் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தீர்மானங்களோடு கூட்டம் முடிந்தது.

சுவரொட்டி செலவுகளுக்கு பணம் பங்களித்தார்கள். 12 பேர் ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்தால் தேவையான 6000 ரூபாய் சேர்ந்து விடும். சேர்ந்து விட்டது.

கீழே இறங்கி நடக்கும் போது மிகவும் சோர்வாக இருந்தது. ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் அந்த இடத்திலேயே துண்டை விரித்துப் படுத்துத் தூங்கி விடலாம் என்று தோன்றியது. மெதுவாக நடந்து திநகர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அப்போது புறப்பட்டு நகர்ந்து கொண்டிருந்த G18 தட பேருந்தில் ஏறிக் கொண்டேன். ஓடும் போதே ஏறுவதில் கால் சிக்கவும் செய்தது. உட்காரவும் இடம் கிடைத்தது. போக்குவரத்து நெரிசலில் நீந்தி கிண்டு தாண்டுவதற்கே அரை மணி நேரம் ஆகி விட்டது.

தாம்பரம் ரயில் நிலையத்துக்கு அருகில் இறங்கி 55 பேருந்து ஏறி வீடு வந்து சேர்ந்தோம்.

காலையில் எழுந்து கணினியை இயக்கினால் மௌஸ் கோளாறு செய்தது. இழுத்தால் எங்கோ கொண்டு போனது. சிறிது நேரத்தில் மூடி வைத்து விட்டு மற்ற வேலைகளைப் பார்த்தேன். குளித்துத் தயாராகி  சாப்பிட்டு விட்டு எட்டரை மணிக்குப் புறப்பட்டு விட்டேன். சரியாக பேருந்து நிறுத்தத்துக்கு வரும் போது  தொலைபேசி அழைப்பு. அவரது வீடு அருகில்தான்.  அவர் சொன்ன திசையில் போனேன்.  இரண்டாவது முறையாக காலை சாப்பாடு.

சாப்பிட்டு விட்டு அவரே இரு சக்கர வண்டியில் அழைத்துப் போனார். சென்னை புறவழிச்சாலையின் பக்கவாட்டு சாலையில் போய் திருநீர்மலை சாலை வழியாக அழைத்துப் போய் விட்டார். அங்கு போய், செய்து கொண்டு வந்திருந்த மாற்றங்களைச் சேர்த்து விட்டு அறிக்கைகளை தேவைப்படி வடிவமைத்து வைத்தேன். ஒரு நிறுவன அறிக்கைகளை மற்றதற்கும் நகல் செய்து சேர்த்தேன்.

12.45க்குப் புறப்பட்டு விட்டோம். மீண்டும்  இரு  சக்கர வண்டியில், பம்மல், அனகாபுத்தூர் குன்றத்தூர், கோவூர், மௌலிவாக்கம் வழியா மதனந்தபுரம் கொண்டு விட்டு விட்டார். அவர் 2 மணிக்கு அம்பத்தூர் போக வேண்டும். ஒன்றரை மணிக்கு சேர்ந்து விட்டேன்.

பணிகள் பெருமளவு முடிந்திருக்கவில்லை, முடித்த வரை காட்டி விட்டு பேசிக் கொண்டிருந்தேன். பணி தாமதமாவதற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டேன்.

2 மணிக்கு சாப்பிட உட்கார்ந்து மராத்தி பாணி சாப்பாடு.  மராட்டிய ஆட்சியாளர்கள் பற்றி பேசிய போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னரைக் குறிப்பிட்டால் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. 'ஆந்திராவில் ராஜராஜேஸ்வர் கோவில் இருக்கும் இடத்தில் மராத்திய ஆட்சியாளர்கள் உண்டு' என்று அவர் சொல்ல, 'அது ஆந்திரா இல்லை, தமிழ்நாட்டின் தஞ்சாவூர்' என்று சொன்னேன். சாப்பிட்ட பிறகு விக்கிபீடியாவில் அதை சரி பார்த்துக் கொண்டோம்.

நிறுவனத்துக்கு இணைய தளம் ஏற்படுத்துவது, தனியாக தொழில் செய்வதில் இருக்கும் சிக்கல்கள், பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தின் விளைவுகள் என்று தொடர்ந்து தேநீர் நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். தேநீர் குடித்து விட்டுக் கிளம்பினேன். ஐந்தரை மணி இருக்கும். தனது காரில் மெயின் ரோட்டில் கொண்டு விட்டு விட்டான்.

அங்கிருந்து ஒரு பகிர்வூர்தியில் ஏறி கிண்டியில் இறங்கிக் கொண்டேன். கிண்டிக்குப் போகாமல் கத்திப்பாரா அருகில் இறங்கி சாலையைக் கடந்து ஆசர் கானா. தாம்பரம் பேருந்தில் ஏறிய பிறகு குரோம்பேட்டை அருகில் வரும் போது மடிக்கணினியில் Git அமைத்துக் கொடுத்தால் மாற்றங்களை அனுப்புவது எளிதாக இருக்கும் என்று தோன்ற அவருக்குத் தொலைபேசினேன். அவர் வீட்டில்தான் இருக்கிறாராரம்.

குரோம்பேட்டை நிறுத்தத்தில் இறங்கி கொஞ்சம் முன்னால் வந்து பகிர்வூர்தியில் ஏறி அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அவர் காருடன் வந்து அழைத்துச் சென்றார்.

அமைதியான வசதியான குடியிருப்புப் பகுதி. இரண்டு மாடி வீட்டில் மேல் அறையில் கணினி பணிகளுக்கு வடிவமைத்திருந்தார்கள். மடிக்கணினி லினக்சிலிருந்து இணையத்தில் இணைந்தது. நமது இணைய கணினியிலிருந்து git மூலமாக மாற்றங்களை இறக்கிக் கொள்வதை அமைத்தேன். அதற்காக .ssh/config கோப்பின் அனுமதிகள் குறித்து ஏதோ பிரச்சனை வந்தது. அதை மாற்றி அவருக்கான public keyஐ வழங்கியில் சேர்த்து ஒரே கட்டளையில் கோப்புகளை பெறுவதை செயல்படுத்தினேன்.

அதை ஒரு பென்டிரைவில் எடுத்து, வாடிக்கையாளர் கணினியில் மேம்படுத்துவதை விளக்கினேன். ஏதாவது தரவுத் தள மாறுதல்கள் இருந்தால் அவற்றை செயல்படுத்தும் முறையையும் விளக்கினேன்.

மாலை உணவு செய்து விட்டார்கள். சப்பாத்தி, கத்தரிக்காய் கறி, பருப்பு. நன்றாக சாப்பிட்டு விட்டு அவரது காரிலேயே குரோம்பேட்டை கொண்டு விட்டார். பேருந்து பிடித்து தாம்பரம் வந்து அடையாறு ஆனந்த பவனில் இனிப்புகளும் முறுக்குகளும் வாங்கிக் கொண்டு, கடையில் எழுதுவதற்கு வெள்ளைத் தாள்கள் வாங்கிக் கொண்டு சாலையைக் கடந்து ரயில் நிலையம் அருகில் வந்தேன்.

55 தடப் பேருந்தைப் பிடிக்க வேண்டும். முதலில் ஒரு பேருந்து நிற்காமலேயே வேகமாகப் போனது. திரும்பி வந்து வெகு நேரம் காத்திருந்த பிறகு வாசல்களில் ஆட்கள் தொங்கிக்கொண்டு பேருந்து வந்தது. அதில் நெருக்கி ஏறிக் கொண்டு வந்து சேர்ந்தேன். வீடு வரும் போது எல்லா வேலைகளையும் முடித்து விட்டு உட்கார்ந்திருந்தார்கள். நானும் கொஞ்ச நேரம் பேசி விட்டுத் தூங்கப் போனேன்.

காலையில் எழுந்து வீட்டுப் பாடத்தை எழுதி முடித்தேன்.

35 வயது வரையிலான பணி வாழ்க்கையைத் திட்டமிடுவது குறித்துப் பேசினோம். ஒரு நோட்டுப் புத்தகத்தில் 2028 முதல் குறைத்துக் கொண்டே வந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு ஆண்டுக்கு 2 பக்கங்கள், அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு அரை ஆண்டுக்கு 2 பக்கங்கள், அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு காலாண்டுக்கு 2 பக்கங்கள், அதன் பிறகு இந்த ஆண்டுக்கு ஒரு மாதத்துக்கு 2 பக்கங்கள் என்று செய்து விட்டு அடுத்த ஒரு மாதத்துக்கு ஒரு நாளைக்கு 1 பக்கம்.

தினமும் பணி வாழ்வு திட்டமிடும் நேரத்தில் ஏதாவது ஒரு ஆண்டை எடுத்து முன் பின் எழுதிய, நிகழ்வுகளைப் பொறுத்து அந்த ஆண்டில் செய்ய வேண்டிய சாதித்திருக்க வேண்டிய தகவல்களைப் பட்டியலிட வேண்டும். சொந்த வாழ்வு, பணி வாழ்வு, பொது வாழ்வு, வருமானம், சொத்து, வாழும் இடம், வாழும் வசதிகள் என்று பிரித்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு குளித்து விட்டு பிட்டு சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் (லட்சுமிபுரம்) வந்து பகிர்வூர்தி, அதிலிருந்து இறங்கி குரோம்பேட்டை போகும் பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு நடந்து குரோம்பேட்டை, சாலையைக் கடந்து பாலம் ஏறி இறங்கி ரயில்வே தடத்தின் மறுபக்கம் ஆட்டோ பிடித்து பள்ளித் தெரு போக வேண்டும். ஒரேயடியாக ஒரு ஆட்டோ பிடித்தேன். 170 ரூபாய் கேட்டு 150ஆக குறைத்துக் கொண்டார். வழியில் பணம் எடுக்கும் எந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டேன்.

9.15க்கெல்லாம் போய்ச் சேர்ந்து விட்டேன். பத்தரை மணிக்குப் பிறகுதான் எல்லோரும் வந்து வகுப்பு ஆரம்பித்தது. நான் எழுதிப் போயிருந்த வீட்டுப் பாடத்தை உரக்கப் படிக்கச் சொல்லி விவாதித்தார்கள். வேறு யாரும் எழுதியிருக்கவில்லை.

தேநீர் இடைவேளையில் கீழே போய் தேநீரும் வடையும் சாப்பிட்டுக் கொண்டோம். மதிய உணவுக்கு புளியோதரையும் தயிர் சாதமும் வாங்கி வந்தார்கள். மாலை 4 மணிக்கு முடித்து விட்டுக் கிளம்பினோம். 4ம் தேதி ஒரு கூட்டம், 18ம் தேதி ஒரு கூட்டம், அடுத்த மாத வகுப்புகள் 19, 26 தேதிகள் என்று முடிவு செய்தோம்.

தேநீர்க் கடையில் எல்லோரும் தேநீர் சாப்பிட்ட பிறகு நடந்தே ரயில் நிலையம் வந்தோம். சாலையைக் கடந்து கோயம் பேடு போகும் குளிர்சாதன பேருந்து. அதில் ஏறி நின்று கொண்டே கோயம்பேடு. பேருந்து பயணத்தின் போது பேசிக் கொண்டே வந்தோம்.

கோயம்பேட்டில் இறங்கி உள்ளே வந்தால் வேலூர் போகும் 102 நின்றது. அதில் ஏறிக் கொண்டேன். உட்கார்ந்த இருக்கையில் கால் நீட்ட வசதியில்லாமல் இருந்தது. காலை துன்புறுத்தியபடியே வேலூர் வந்தேன். நல்ல தூக்கம் இதிலும், தலையை தூக்க முடியாமல் தள்ளாட்டியது. 9 மணிக்கு வேலூர் வந்து சேர்ந்து நகரப் பேருந்தில் ஓடைப்பிள்ளையாரில் இறங்கி வீடு வந்து சேர்ந்தேன். 1 மணி நேரம் இணையத்தில் மேய்ந்து விட்டு தூங்கப் போனேன்.

வியாழன், மே 26, 2011

பழகப் பழக வரும் இசை


மாலை 7.30 மணி, மே 26, 2011.

இன்று காலையிலும் மிகவும் கடினமான சோம்பல்தான். மூன்றரைக்கே விழித்து நான்கு மணி வரை கடத்தி, எழுந்து மின்விசிறியை அணைத்து விட்டுப் படுத்துக் கொசு கடித்து தூங்க விடாமல் செய்த பிறகு எழுந்து கொண்டேன். நான்கு மணிக்கு ஓரிரு நிமிடங்கள் இருந்தன. முன்னறையில் மீண்டும் படுத்துக் கொள்ளலாமா என்று கூட ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. முந்தைய நாள் டெக்கான் குரோனிக்கிளின் செய்திப் பக்கங்களைப் படித்தபடியே காலைக் கடன்களை முடித்தேன்.

பணி மேசைக்கு வரும் போது 'எதிர்ப்பக்கம் கிடந்த மேசையை சன்னல் அருகில் நகர்த்தி விட்டு கட்டிலை புத்தக அலமாரிக்குப் பக்கம் தள்ளி விடலாம்' என்று தோன்றியது. 'அதுதான் சரியான அமைப்பாக இருக்க முடியும்.'

நாற்காலிகளை நகர்த்தி விட்டு இந்தப் பக்கம் கிடந்த கட்டிலை ஓரளவுக்கு நகர்த்தி இடம் செய்து மேசையை அதிகம் சத்தம் வராமல் நகர்த்தி விட்டேன். கட்டிலை புத்தக அலமாரி பக்கமாக இழுக்கும் போது சத்தம். அவ்வளவு அமைதியான காலைப்பொழுதில் விகாரமான சத்தம், முடிந்த அளவு சமாளித்து நினைத்தபடி மறு அமைப்பு செய்து கொண்டேன்.

இந்த கணினி மேசையில் மூன்று மின் இணைப்புகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதனால் இன்னொரு மடிக்கணினியையோ, மேசைக் கணினியோ இயக்க வசதியாக இருக்கும்.

தொடர்ந்து '11 மணிக்கு முன்பு முடித்து விடுங்கள்' என்று ஆம்பூரில் கேட்டுக் கொண்ட பணியைத் தொடங்கினேன். ஏற்கனவே யோசித்து வைத்து விட்டதால் என்ன செய்ய வேண்டும் என்பதில் தாமதம் இல்லை. தேவையை வரையறுத்துக் கொண்டு, வடிவமைப்பைக் குறிப்பு எழுதி விட்டு நிரல் எழுத ஆரம்பித்தேன்.

தரவுத்தள மேசையில் ஒரு மாற்றம், அந்த புதிதாகச் சேர்க்கப்பட்ட விபரத்தை பழைய தரவுகளுக்கு சேர்த்தல், இனிமேல் வரும் தரவுகளுக்கு இந்த புதிய தகவலும் தானாக சேர்ந்து கொள்ள வைத்தல். தகவலை அறிக்கையில் சேர்த்துக் காட்டுதல் என்று நான்கு கோப்புகள்.

ஒரு மணி நேரத்தில் எழுதி விட்டேன். மூன்று முறை சோதனை, வழு நீக்கத்துக்குப் பிறகு எதிர்பார்த்தபடி வந்து விட்டது.

தொடர்ந்து டிரேட்புரோவுக்கான ஆவணங்கள் தயாரிப்பு. இது கொஞ்சம் விறுவிறுப்பில்லாத வேலை, கவனமாகப் பார்த்து அலங்கரிக்க வேண்டிய பணி. காலை நேரத்துக்கு இந்த மாதிரி வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறது. இது போன்ற பணிகளை முற்பகலில் வைத்துக் கொள்ளலாம்.

எழுந்திருந்த போதே துவைக்க வேண்டிய துணிகளை சோப்பில் ஊற வைத்து விட்டிருந்தேன். காலை உணவுக்கு உளுந்து அடைக்கும் ஊற வைத்திருந்தேன். அரிசி+உளுந்து 3:1 என்று வீதத்தில் சேர்த்து ஊற வைத்து 3 மணி நேரத்துக்குப் பிறகு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது சீரகம், மிளகு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொண்டு அரைத்த பிறகு பொடிசாக நறுக்கிய வெங்காயமும் துருவிய தேங்காயும் சேர்த்துக் கலக்கிக் கொள்ளலாம். பருப்பு அடையில், கடலைப் பருப்பால் வாயுத் தொல்லை ஏற்படுவதைத் தவிர்க்க இந்த அடை நல்ல மாற்று. உண்மையில் அதை விட இது சிறந்த உணவு, மாவுச்சத்து, புரதச் சத்து, சீரகம்+மிளகு என்று தொல்லை செய்யாத பொருட்கள். தேங்காய் விரும்பாதவரகள் அதைத் தவிர்த்து விடலாம்.

உலாவப் போய் விட்டு அப்படியே தேங்காய் வாங்கிக் கொள்ளலாம், கூடவே அரை லிட்டர் பால் வாங்க வேண்டும்.

நீண்ட தூரம் போகாமல் கோபாலபுரம் வழியே வெளியில் வந்து சுற்றி கடையில் நாளிதழ்கள் (விகடனும்) வாங்கிக் கொண்டு ஓடைப்பிள்ளையார் வழியே சுற்றி மதிநகர் சாலையில் மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கப் போனால் காலை நேரக் கூட்டம். சுறுசுறுப்பாக கடைக்காரரும், இன்னும் மூன்று பேரும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். பால் வாங்குபவர்கள், காய் வாங்குபவர்கள், பட்டியல் போட்டு பல பொருள் வாங்குபவர்கள் என்று எல்லோரையும் கவனித்து யாரும் முகம் கோணி விடாமல் கவனித்துக் கொள்ளும் லாவகம் காண அரிதாகவே கிடைப்பது.

தேங்காய், பச்சை மிளகாய், பால், மெடிமிக்ஸ் சோப்பு, பவர் டிடர்ஜென்ட் கேட்டால் இல்லை - அரசன் சோப்பு, நீலமாக டிடர்ஜென்டாக இருந்தால் போதும், அது ரின்னாக இருந்தால்தான் துணி வெளுக்கும் எல்லாம் நமது மூளையை சலவை செய்யும் விற்பனை நிலையங்களின் கற்பிப்புதான். அந்த நம்பிக்கைக்குக் கூடுதல் விலை வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் முடிந்த  வரை உள்ளூர் தயாரிப்புகளாக வாங்கிக் கொண்டால் பன்னாட்டு ஆதிக்கத்தின் தாக்கங்களையாவது குறைத்துக் கொள்ளலாம்.

வீட்டுக்கு வந்து மாவை அரைத்து வைத்து விட்டு வெங்காயம், தேங்காய் சேர்த்து கலந்து கொண்டேன். 'நாட்குறிப்பை பதிவில் போட்டு விட்டு சாப்பிடலாம்' என்று முடிவு. சாப்பிட்டு விட்டு வந்து ஆம்பூருக்கு அழைத்து 'பணி முடிந்து விட்டது' என்று தகவல் சொல்லி இணைய முகவரி எண்ணைக் கேட்டேன். 'இன்னும் சில நிமிடங்கள்தான் மின்னிணைப்பு இருக்கும்'. எண்ணை வாங்கி இயக்கி முடித்து அவருக்குத் தகவல் சொல்லவும் மின்சாரம் தடைப்படவும் சரியாக இருந்தது.

தொடர்ந்து ஆவணங்களை மாற்றுவதில் இறங்கினேன். கிட்டத்தட்ட பத்தே முக்கால் மணி வரை அதே வேலை.

பொதுவாக மனிதர்களாகிய நாம் சமூக விலங்குகள். அடுத்தவர்களைச் சார்ந்தே நமது ஒழுங்குகள் நேரத் திட்டமிடல்கள் இருக்கின்றன.
காலையில் எழுந்திருக்க,

  • 'எழுந்திருக்கா விட்டால் அம்மாவிடம் பேச்சு கிடைக்கும்'
  • 'ஒன்பது மணிக்குப் பள்ளிக்குப் போகா விட்டால் பிரச்சனை வரும்' 
  • 'அலுவலகத்துக்கு 8 மணிக்கு எல்லோரும் வருவார்கள், நாம் மட்டும் தாமதமாகப் போகக் கூடாது'
  • 'குழந்தைகள் ஏழரை மணிக்குத் தயாராகி விட வேண்டும், நாமும் எழுந்து உதவி செய்தால்தான் முடியும்' 
என்று வெளிப்புறத் தூண்டுதல்கள்தான் தூக்கம் எழுவதில் இருந்து ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒழுங்கை வரையறுத்துக் கொடுக்கின்றன.

தற்காலிகமாக, அந்த அழுத்தங்கள் இல்லாமல் போய் விட்டால் என்ன ஆகும்? ராபின்சன் குருசோ, தீவில் வாழும் போது 'சாப்பிடப் போதிய பழங்கள் கிடைக்கின்றன' என்று பசி வரும் வரை படுத்தே இருந்து எழுந்து போய் சாப்பிட்டுக் கொண்டா இருந்திருப்பார்? அது முடியாத ஒன்று மனிதர்களுக்கு. கூடிய பட்சம் நான்கைந்து நாட்கள் அப்படி இருந்து விடலாம். அதன் பிறகு (அதற்கும் கூட சமூக அழுத்தமே காரணமாக இருக்கலாம்) எழுந்து ஏதாவது சாதிக்கக் கிளம்பி விடலாம்.

சூழலில் நம்மை ஒழுங்குபடுத்த வெளிக் காரணிகள் இல்லை என்றால், நமக்கு நாமே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ந்து உருப்படியான வேலை செய்வது என்பது சாப்பிடுவது போன்ற அடிப்படைத் தேவை மனிதர்களுக்கு. அது எப்படியானாலும் நடந்துதான் தீரும்.

எனக்கு இப்படிப்பட்ட நமக்கு நாமே சூழல் வாய்த்திருப்பதால் அப்படிக் கட்டுப்பாடு விதித்துக் கொண்டு பின்பற்ற வேண்டியிருக்கிறது. அவற்றை எழுதி இணையத்தில் ஒப்புவிப்பதும் அந்தக் கட்டுப்பாட்டில் ஒரு பகுதி.

மதிய உணவு தயாரித்துக் கொண்டிருக்கும் போது நீளமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நண்பரிடம் இதைச் சொல்ல முயன்றேன். அரை மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்போம்.

'நாமெல்லாம் எவ்வளவு சின்ன வட்டத்துக்குள் உழன்று கொண்டிருக்கிறோம்' என்று பலருடன் பேசும்போதுதான் தெரிகிறது. இதைத்தான் மக்களைப் போய்ச் சந்திப்பது என்று சொல்கிறார்கள். நமது சின்ன வட்டத்தை விட்டு வெளியில் இருக்கும் மக்களின் வாழ்க்கையைத் தொட்டு விட்டு வந்தால்தான் உண்மையான புரிதல் கிடைக்கும்.

இந்த ஒழுங்குகளும், பின்பற்றல்களும் வயதாக வயதாக எளிதாகி வருகின்றன. 20 வயதில் இருந்ததை விட நிறைவாகவும், அமைதியாகவும் இருக்கிறேன். 60 வயதில் இப்போது இருப்பதை விட மன நிறைவு அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

உடம்பில் சில உபாதைகள் பல்லில் ஒன்று, வயிற்றில் ஒன்று என்று அவ்வப்போது தலை காட்டினாலும் 20 வயதிலும் அப்படி சில இருந்து கொண்டுதான் இருந்தன. அப்போது இருந்த பலவீனங்கள் இப்போதும் தொடர்ந்தாலும், சறுக்கி விழுந்தால் ஏற்படும் விரக்தியும், ஏமாற்றமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஒரு முறை தவறி விட்டால், சலிப்பும், கோபமும் மீறிட சோர்ந்து போவது போய் முந்தைய அனுபவங்களை வைத்து அவற்றையும் கொஞ்சம் நிதானமாக எதிர் கொண்டு முன் செல்ல முடிகிறது.

ஓம் சக்தி என்று பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு மாத இதழை வெளியிட்டு வந்தார். அதில் வந்த ஒரு  கதையில், தன் மனைவியைக் கொலை செய்ய வேண்டி யாராலும் கண்டுபிடிக்க முடியாத படி உயிரைப் போக்கி விடும் நச்சை விலைக்கு விற்கும் கிழவரிடம் அதை வாங்க வருகிறான் இளைஞன். கடைசியில் நச்சை அவனுக்கே கொடுத்து விட்டதாக அதிர்ச்சி கொடுத்து உயிரின் விலையை உணர்த்துகிறார். அதில் கிழவர் சொல்லும் ஒரு கருத்து, 'வயதாக வயதாக தோளில் அனுபவம் என்ற இட்சிணி உட்கார்ந்து கொண்டு எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் சீக்கிரம் ஏமாந்து விடுவது தவிர்த்துக் கொள்ள முடிகிறது'

அந்த இட்சிணி இல்லாத பதற்றம் 20களில் நிறைய இருந்தது, 40களில் வெகுவாக குறைந்திருக்கிறது.

சென்னை நண்பரின் கணினியில் இணையம் மூலம் நிரலை இழுத்துக் கொள்ளும் அமைப்பை தொலைபேசி மூலம் விளக்கி ஏற்படுத்த முயன்று நடக்கவில்லை. 12 மணிக்கு மின்சாரம் வருவதற்கு முன்பு இன்னொரு தடவை கடைக்குப் போய் முருங்கைக்காய், சின்ன வெங்காயம், தயிர் வாங்கிக் கொண்டேன்.

முருங்கைக்காய் புளிக்கறி, பச்சை பருப்பு துவரன், தாளித்த மோர் என்று மதிய சமையல். தேங்காயைத் தீர்த்து விட வேண்டிய தேவை. புளிக்கறி, துவரனில் பெரும்பகுதி தீர்ந்து விடும். சமையல் செய்து சாப்பிட ஆரம்பிக்கும் போது 2.30 மணி.

வாடிக்கையாளர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருந்தவர் தொலைபேசி வேறு நிறுவனத்துக்கு பணி மாறப் போவதாகவும், லெதர்லிங்க் தொழில்நுட்பத்தில் பணி புரிந்தது குறித்து கடிதம் வேண்டும் என்று தொலைபேசினார். திங்கள் கிழமை வாங்கிக்  கொள்கிறீர்களா என்று கேட்டால் அவரசம். இன்றே வேண்டும். வேலூர் வந்து விடுவதாகச் சொன்னார்.

அதன் பிறகு முற்பகலில் முடித்த வேலைகளை நேரக் கண்காணிக்கும் மென்பொருளில் உள்ளிட்டு விட்டு இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். வினவு தளத்தில் நன்கொடை கேட்டு வெளியிட்டிருந்த வேண்டுகோளை கேலிப் பொருளாக்கி கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் சேராமல், நமது நிலைப்பாட்டைத் தெரிவித்து விட வேண்டும் என்று தோன்றியது. 'நன்கொடை கொடுப்பதாக உத்தேசம்' என்று பஸ்சில் ஒரு பதிவு சேர்த்து விட்டேன்.

எதிரில் நான்கு வீடுகள் தள்ளி விடுமுறை பைபிள் வகுப்பு என்று ஒலிபெருக்கி வைத்து ஒரு அம்மா குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளின் இரைச்சலும் ஓங்கி ஒலித்தது.

மூன்றரை மணிக்கு அழைக்கவே கோபாலபுரம் தாண்டி ராகவேந்திரா அருகில் போய் அழைத்து வந்தேன். அவருக்கான கடிதம், அச்செடுக்க வேண்டிய இன்வாய்ஸ்கள் பென்டிரைவில் எடுத்துக் கொண்டோம். இப்படி மென்பொருளைக் குறைந்த விலைக்குக் கொடுத்து, அதையும் எந்த வித பிடியும் இல்லாமல் கொடுத்து, அதைப் பராமரிக்க ஆட்களையும் பயிற்சி அளித்துக் கொடுத்த பிறகு முரண்டி நம்மை வெளியில் நிறுத்தி விட்ட வாடிக்கையாளர்.

'ஏதாவது பிடியை நீங்க வச்சிருந்திருக்கணும் சார்' என்று இவரும் சொன்னார்.

நமது அருமை அவர்களுக்குப் புரியாதபடி வணிக நோக்கு கண்களை மறைக்கிறது. நான் அவர்களைப் போல மாறப் போவதில்லை. நமது பிடி நமது திறமையும், அறிவும்தான். அது தேவைப்பட்டால் வருவார்கள். நமது சேவை நமது கட்டணத்தைத் தரும் எல்லோருக்கும் உண்டு.

வெளியில் போய் அச்செடுத்துக் கொண்டு, ஒரு பென்டிரைவும் வாங்கினேன். 4 GB 375 ரூபாய் குட்டியாக ஒரு விரல் நீளம் கூட இல்லை. மறுபடியும் காரில் வீட்டில் கொண்டு விட்டு விட்டார். காலையில் வாங்கியிருந்த பாலில் தேநீர் போட்டு இரண்டு பேரும் குடித்தோம். தேநீர் கொஞ்சம் கசப்பாக இருந்தது. சீனி குறைவாகப் போட்டதா, தேயிலை நாளாகி விட்டதா என்று சந்தேகம். தேயிலையும் கெட்டுப் போகுமா என்ன?

அதன் பிறகும் வேலைகளில் இறங்கவில்லை. 6 மணிக்குப் பிறகு உலாவி வரக் கிளம்பினேன். அதற்கு முன்பு ஒரு பிடியளவு சோறு சாப்பிட்டுக் கொண்டேன். பாத்திரங்களைக் கழுவிப் போட்டு விட்டு மீதியிருந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டுக் கிளம்பினேன்.

கோபால புரம் வழியே போய் சில்க்மில் நோக்கி நடந்து பாதி வழியிலேயே பிஎஸ்என்எல் அலுவலகம் இருக்கும் சாலையில் திரும்பி முனையில் இருக்கும் திருமண மண்டபத்துக்கு அருகில் தெருவில் திரும்பினேன். ஏதோ கல்யாண வரவேற்பு பரபரப்பு, இரண்டு தெருக்கள் தாண்டி இன்னொரு மண்டபம், குளிரூட்டப்பட்டது என்ற பலகையுடன், அங்கும் திருமணம். இன்று ஏதோ முகூர்த்த நாள் போலிருக்கிறது.

சுற்றி வந்து ஓடைப் பிள்ளையார், சுசீ மோட்டர்ஸ், மதி நகர் சாலை வழியாக வீடு வந்து சேர்ந்தேன். துவைத்துப் போட்டிருந்த துணிகளை எடுக்க மறந்திருந்தது. நல்ல வேளை காற்றில் எதுவும் கீழே விழுந்து விட்டிருக்கவில்லை. துணிகளைக் கீழே போட்டு விட்டு கை கால் கழுவி பல் தேய்த்து விட்டு நாட்குறிப்பு.

இது முடித்து கொஞ்ச நேரம் பணி திட்டமிடலை மறு ஆய்வு செய்ய வேண்டும். நேற்று திட்டமிட்டதில் அரை மணி நேரமும் இன்று திட்டமிட்டதில் 5 மணி நேரமும் குறைவு. இதை முடித்து விட்டு 9 முதல் 10 வரை ஒரு மணி நேரம் முடித்து விடலாம். அதன் பிறகு காலையில் 2 மணிக்கு எழுந்து 2 முதல் 7 வரை பெரும்பகுதியை முடித்து விடலாம். 7 முதல் 9 வரை காலை வேலைகளை முடித்து விட்டு 9 முதல் 12 வரை டிரேட் புரோ பணப் பரிமாற்றப் பகுதிகளின் பணிகளை முடித்து விடலாம். 12 மணிக்குப் புறப்பட வேண்டும்.

துணிகளை தேய்க்கும் வேலை இருக்கலாம். அது கூடத் தேவையில்லை. தூத்து பாத்திரம் கழுவி விட்டுக் குளித்தால் போதும், சாப்பிடுவதற்கு பழையது இருக்கிறது.

நாளை மாலை 4 மணிக்கு சந்திப்புக்குப் பிறகு 5.30க்குப் புறப்பட்டு திநகருக்கு 6 மணிக்கு வந்தால் அந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம்.