என்னைப் பற்றி

உடல்நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல்நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 27, 2011

காற்றடைத்த பை


ஏப்ரல் 27, மணி 3.30 அதிகாலை.

2 மணிக்கு எழுந்து 1 மணி நேரம் நாட்குறிப்பு, 2 மணி நேரம் ஆQ மொழி பெயர்ப்பு என்று தீர்மானித்திருந்ததை செயல்படுத்தும் ஒரு வாய்ப்பு. சீக்கிரம் தூங்கி விட்டதால், வேறு பயணக் களைப்புகள் இல்லாததால் 2 மணிக்கு எழுந்து விட முடிந்தது.

நேற்றுக் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க முடிந்தது. வெகு நேரம் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். 5 மணிக்கு எழுந்து, மீண்டும் மோசமாக்க வேண்டாம் என்று ஒழுங்குகளை செயல்படுத்த முயற்சித்தேன். பல் தேய்த்து காலைக் கடன்களை முடித்த பிறகு நாட்குறிப்பு. எழுதிக் கொண்டிருக்கும் போதே விட்டுப் போன ஓரிரு பணிகளை செய்து கொண்டேன். எழுதிய பிறகு 6 மணிக்கு வெளியில் உலாவப் புறப்பட்டேன்.

நடைவாசல் பெருக்கிக் கழுவி கோலம் போட்டு விட்டுப் போயிருந்தார்கள். இரவுக் காவலர் அப்போதுதான் எழுந்து உட்கார்கிறார். அந்தப் பக்கமாகவே இறங்கி கோபலபுரம் வழியாக காட்பாடி சாலைக்கு வந்து சாலையைக் கடந்து காந்திநகர் கிழக்கு நெடுஞ்சாலைக்கு வந்தேன். காலையில் நடக்கப் போகிறவர்களின் நேரம் அது. நிறைய பேர் கையில் நாளிதழ்களுடன் கடந்து போகிறார்கள்.

பெண்கள் அதிகாலை நடக்கப் போகும் போதும் திருத்தமாகத்தான் வருகிறார்கள். நான், கலைந்த தலையை சீப்பால் ஒழுங்கு செய்து கொண்டு போவது போல. "காலையில் நடக்கத்தான் போகிறோம், தலை கலைந்தும் முகம் அழுது வடிந்து கொண்டும் இருக்கட்டுமே" என்று யாருமே நினைப்பதில்லைதான், பெண்களை மட்டும் ஏன் குறிப்பாகச் சொல்ல வேண்டும். எதிரில் வருபவர்களுக்கு மரியாதை காட்டுவது போலத்தான்.

ஒரு கால்சட்டையில் பையின் கொக்கி பட்டு பின்பக்கம் சிறிது கிழிந்து விட்டிருக்கிறது. சட்டையை இழுத்து விட்டால் மறைந்து விடும் இடம்தான், அதற்கு கால் சட்டையை இடுப்பில் உயர்த்திப் போட்டு சட்டையை கவனமாக இழுத்து விட வேண்டும். இரண்டில் ஒன்று தவறினாலும் ஓட்டை வெளியில் தெரியும். பெரிய ஓட்டை இல்லை, உள்ளாடை தெரியுமளவுக்கு ஓட்டை இல்லை, கிழிந்திருக்கிறது என்று மட்டும் தெரியும் அவ்வளவுதான்.

காலை உலாவப் போவதற்கு அதைப் போட்டுக் கொண்டு போய் விட்டேன். குளிர் காலங்களில் வீட்டில் போடவும் பயன்படுத்தலாம். அதைப் போட்டுக் கொண்டு போகும் போது உள்ளுணர்வில் சட்டை மேலே நகர்ந்து ஓட்டை வெளியில் தெரிகிறதோ என்று உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. பேசாமல் ஊசி நூல் வைத்துத் தைத்து விடலாம்.

முனையில் இருந்த கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். தினமலரும் டெக்கான் குரோனிக்கிளும்தான் வந்திருந்தன. கடைக்காரர் அப்போதுதான் நாளிதழ்கள், பத்திரிகைகளின் வெளி போஸ்டர்களைத் தொங்க விட்டுக் கொண்டிருந்தார். ஒரு ரூபாய் சில்லறையாக இல்லா விட்டால் கேட்பது சிக்கல்தான். வாங்கிக் கொண்டு தொடர்ந்து நடந்து அடுத்த பேருந்து நிறுத்தம் வரை போய் விட்டேன். நடுவில் மணி அடித்தது.

அடுத்த நிறுத்தத்தில் சாலைக்கு வந்து சாலையைக் கடந்து நெடுஞ்சாலைத் துறை, தரக்கட்டுப்பாட்டு மையம் அலுவலகத்துக்கு முன்பு நடைபாதையில் ஏறி எதிர்த்திசையில் நடந்தேன். சில்க்மில் நிறுத்தம் தாண்டி நடந்து வந்து கோபால புரம் வழியாக திரும்பி வந்தேன். வழியிலேயே மணி அடித்து விட்டது.

வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் நாளிதழ் படித்து விட்டு, கணினியை இயக்கினேன். பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். என்னென்ன செய்ய வேண்டும் என்று பணிநிர்வாக பயன்பாட்டில் பட்டியலிட்டு விட்டு, அவற்றின் தேவை விபரங்கள், நுட்ப வடிவமைப்பையும் எழுதிக் கொண்டேன். வாடிக்கையாளர் கணினி இயங்கி விட்டால் நேரடியாகச் செயல்படுத்தி விடலாம். சின்னச் சின்ன திருத்தங்கள்தான்.

சீக்கிரம் வந்து இயக்கி விடுவதாகச் சொன்னவருக்கு அதிகாலை தொலைபேசியிருந்தேன். எடுக்கவே இல்லை. 9 மணி வரை கணினிக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. மீண்டும் தொலைபேசி கேட்டால் காலையிலேயே இயக்கியிருப்பார்களே என்கிறார். அவர் போய்தான் கணினி இயங்க ஆரம்பித்திருந்தது.

முதலில் சராசரி விலை காட்டும் அறிக்கையில் சொன்ன குறையைப் பார்த்தேன். சில பொருட்களுக்கு மதிப்பு கணக்கிடப்படாமல் இருந்ததால் அந்த மதிப்பை விட்டு விட்டு ஆனால் அவற்றின் அளவை எடுத்துக் கொண்டதால் விலை குறைவாக இருந்தது. மதிப்பு கணக்கிடும் சூத்திரத்தை மாற்றி சரி செய்தேன். பயன்பாட்டுப் பதிப்பிலும் செய்து விட்டேன்.

இரண்டாவதாக, தரக்குறைவு என்று நிராகரிக்கப்பட்டவற்றுக்கான அறிக்கை வேண்டும் என்று தேவை. அதற்கான கூடுதல் விபரங்களைச் சேர்த்து, இயக்கிப் பார்த்தால் நிறைய தரவுகளில் உள்ளே வரும் எண்ணிக்கை 0 வாக இருந்தது. எங்கோ தவறு இருக்கிறது என்று பார்க்கப் போகும் போது 10 மணி, மின்தடை ஏற்பட்டு விட்டது.

சமையலறையை ஒதுங்க வைத்து பாத்திரங்களைக் கழுவி விட்டுக் குளித்து கொஞ்ச நேரம் தியானம் செய்தேன். இதற்குள் 11 மணி ஆகி விட்டது. பணம் எடுக்கும் மையத்தில் பணம் எடுத்து தொலைபேசி கட்டணம் கட்டி விட்டு, கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு வர வேண்டும். வெளியில் இறங்கி நடந்தேன். வலி தீவிரமாக ஆகி விட்டிருக்கிறது. நிற்கும் போதும், நிமிர்ந்து உட்காரும் போதும் உடனேயே வலிக்கிறது. நடக்கும் போது புண்ணாக வலிக்க ஆரம்பித்தது. ஆட்டோ ஏதாவது பிடித்துதான் போக வேண்டும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன்.

ஓடைப் பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் காந்தி நகர் முனையில் ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி இரண்டின் பணமையங்கள் இருந்தன. அனுக்ரஹா அருகில் இருக்கும் ஸ்டேட் வங்கி வரை போக முடியாது, இங்கேயே எடுக்கலாம் என்று ஆக்சிஸ் வங்கிக்குப் போனால் அங்கு தொடர்பு இல்லை என்று பலகை தொங்கியது. எச்டிஎஃபிசியில் உள்ளே ஒருவர் பணம் எடுத்துக் கொண்டிருந்தார். வெளியில் காவலர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.

முதல் முறையாக வலிக்க ஆரம்பித்தது திருப்பதி மலையில் ஏறிக் கொண்டிருக்கும் போது (முதல் முறை அல்லது இரண்டாவது முறை என்று நினைவு). மலை ஏறும் போது உள் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதை குணப்படுத்த வேண்டியது ஏழுமலையானின் பொறுப்புதான்.

பணம் எடுப்பவர் இரண்டு மூன்று தடவை எடுத்துக் கொண்டே இருந்தார். அவர் வெளியே வரவும் காவலர் வந்து உள்ளே போனால். 'சீக்கிரம் எடுங்க சார், பணம் வைக்க வண்டி வந்திருக்கிறது' என்றார்.

ஸ்டேட் வங்கி பண எந்திரங்களில் அட்டையை ஒரு முறை நுழைத்து விட்டு வெளியில் எடுத்து விடலாம். பணம் எடுத்த பிறகு பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விடலாம். மற்ற வங்கிகளில், அட்டையை எந்திரம் உள் வாங்கிக் கொள்கிறது. பணம் எடுத்த பிறகு ஞாபகமாக அட்டையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு முறை ஆழ்வார்திருநகர் ஆக்சிஸ் வங்கியில் பணம் எடுத்துதான் அட்டை தொலைந்து போனது. அட்டையை எடுக்காமலேயே வெளியில் வந்து விட்டேன். பிறகு போய்க் கேட்டால் 'எந்திரத்தில் இருந்தால் எடுத்து உடைத்துப் போட்டிருப்பார்கள்' என்று காவலர் சொல்லி விட்டார். அட்டை தொலைந்ததால் வேறு சிக்கல் எதுவும் ஏற்படவில்லை.

பணம் எடுத்து விட்டு வெளியில் வந்து சாலைக்குப் போய் பகிர்வூர்தியை நிறுத்தினேன். ஆட்டோ ஏதாவது வந்திருந்தாலும் ஏறி நேராக பிஎஸ்என்எல் அலுவலகம் வரை போகக் கூடத் தயாராக இருந்தேன். அதிகம் செலவாகி விடக் கூடாது என்று இருக்கிறது. 5 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் அலுவலகம் போகும் தெருவின் முனையில் இறங்கி நடந்தேன்.

நல்ல வெயில் அடிக்கிறது. அலுவலகத்தினுள் எதிர்பார்த்தது போலவே நீண்ட வரிசை. பணம் கட்டும் இடத்திலிருந்து வெளியில் வந்ததும், வெயிலில் நிற்காமல் அறைச்சுவரின் வெளிப்பக்கத்தில் போட்டிருந்த இரும்பு பெஞ்சில் வரிசை நீண்டிருந்தது. உண்மையில் இரண்டு இரும்பு நாற்காலிகள் அதற்குப் பிறகு மூன்று பேர் உட்காரும் பெஞ்சு. கடைசி வரை உட்கார்ந்திருந்தார்கள். நான் போய் கடைசியில் கீழே உட்கார்ந்து கொண்டேன். ந

ஒரே ஒரு பெண் மட்டும் வரிசையில். உட்காரவில்லை, நின்று கொண்டிருந்தார். சில நிமிடங்களில் எனக்கும் பெஞ்சில் உட்கார இடம் கிடைத்தது. அந்தப் பெண் விடாப்பிடியாக உட்காரவேவில்லை.

40 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், கொஞ்சம் சதைப்பிடிப்பில் வயது தெரிந்தாலும் முகத்தில் வயது தெரியவில்லை. பளீர் என்ற நிறம். கழுத்தில் தடிமனான சங்கிலிகள், காதில் பட்டையான காதணிகள். கேரளாவைச் சேர்ந்தவராக இருக்கலாம். அப்படியானால் உட்கார தயங்க மாட்டாரே!

நமது முறை வரும் வரை முடிந்த வரை உட்கார்ந்தே இருக்கலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு காவல் அதிகாரி வந்து உட்கார்ந்திருந்தவர்களைக் கவனிக்காமல் வரிசையில் போனார். இந்த அம்மாவைப் பார்த்ததும் வந்து பேச்சுக் கொடுத்தார்.

அவரை காட்பாடியில் போட்டிருக்கிறார்களாம், குற்றப்பிரிவு.

'ஒரே தொந்தரவு, அடையாள அட்டையைத் தொலைத்து விடுபவர்கள், உணவு அட்டையைத் தொலைத்து விடுபவர்கள் என்று புகார்கள் வருகின்றன. காவல் அதிகாரி அறிக்கை கொடுத்தால்தான் மாற்று அட்டை வாங்க முடியும். சும்மா வேலூரிலிருந்து காட்பாடிக்கு பேருந்தில் வரும் போது தொலைந்து போனது என்று சொன்னால் கொடுத்து விடுவார்களா? இன்ஸ்பெக்டர் சான்றிதழ் கொடுத்தால்தான் தருவார்கள். யாருக்கும் பொறுப்பே இல்லை. எத்தனையோ தடவை சொல்லியாச்சு.'

'வண்டியில் வரும் போது உரிமம் வைத்திருப்பதில்லை, வீட்டில் இருக்கிறது, சொந்தக் காரனிடம் இருக்கிறது என்று காரணம் சொல்கிறார்கள். ஒரு நகல் எடுத்து வண்டியில் வைத்திருக்கத் தெரியவில்லை. கோர்ட்டில் போய் ஃபைன் கட்டுகிறார்கள், நான்கைந்து தடவை. எத்தனை தடவை சொன்னாலும் புரிவதில்லை.'

'போலீஸ்காரனுக்குத் தொப்பியைப் போல இது போன்ற ஆவணங்களை சரியாக பேணுவதை ஒரு பெருமையாக கருத வேண்டாமா. அக்கறை இல்லை' என்று இடைவெளி விடாமல் பேசினார்.

அந்த அம்மா இடையில் தனது கருத்தையும் நுழைக்க முயன்று தோல்வியடைந்தார்.
'என் மகனைப் பாருங்க, பொறுப்பே கிடையாது 37,000 ரூபாய் கொடுத்து வண்டி வாங்கிக் கொடுத்தோம், துடைக்கச் சொன்னா துடைக்க மாட்டாங்கிறான்'.

காதில் விழாதது போலவே பேசிக் கொண்டிருந்தார் காவல் அதிகாரி.

நாம் எங்கெங்கு ஆவணங்களை சரியாக வைத்திருக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அருகில் உட்கார்ந்திருந்தவர் வெயிலைப் பற்றியும் நீள வரிசை பற்றியும் குறைபட்டுக் கொண்டிருந்தார். நியாயமான வேகத்தில்தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. அந்த அம்மாவுக்குப் பிறகு ஒருவர் அடுத்தது நான். அந்த அம்மா பணம் கட்டி வெளியில் வந்த பிறகு எழுந்தால் போதும் என்று நினைத்திருந்தேன்.

இதற்குள் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டி இன்னும் பின்னால் ஏழெட்டு பேர் நீண்டு விட்டார்கள். நினைத்திருந்ததற்கு முன்பாகவே எழுந்து உள்ளே போய் விட்டேன். மூன்று பேர் கட்டும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த அம்மாவின் எண்ணைக் கேட்டு பெயரைச் சொன்னார். இசுலாமிய பெயர்களாக அவரது வீட்டுக்காரராக ஒரு ஆண் பெயரும் ஒரு பெண் பெயரையும் சொல்லி சரி பார்த்துக் கொண்டார்.

'ஒரு ஆண்டுக்கு முழுமையாகக் கட்ட வேண்டுமானால் என்ன வழிமுறை' என்று அவர் கேட்டதற்கு அந்த விபரங்களை இங்கு கிடைக்காதும்மா, பக்கத்தில் கேளுங்க என்று அனுப்பினார். அடுத்தவரிடம் 10 ரூபாய் சில்லறை கேட்டு வாங்கினார். அவர் கட்டி ரசீது வாங்கிக் கொண்டு நகர்ந்த பிறகு எனது தொலைபேசி எண்ணைச் சொன்னேன். இந்த மாதமும் பில் வந்திருக்கவில்லை.

பெயர் கேட்டு சரி பார்த்து விட்டு, 993 ரூபாய். 900 ரூபாய் கட்டணம் 10.2% சேவை வரி. 993 ஆகிறது. 1000 ரூபாயாக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். 5 ரூபாய் இருந்தா கொடுங்க என்று இழுத்து விட்டு உடனே வேண்டாம் என்று விட்டார். '10கள் குறைவாகத்தான் இருக்கின்றன. அடுத்த மாத பில்லில் அட்ஜஸ்ட் ஆகி விடும்.'

'பில் வருவதே இல்லையே ஏன்' என்று  கேட்டேன். 'ஒரு மாதம் என்றால் விட்டு விடலாம் மூன்று மாதங்கள் ஆகி விட்டன.' இவரிடம் கேட்பது முறைதானா என்ற சந்தேகத்துடனேயே கேட்டேன். எரிச்சல் படாமல் பதில் சொன்னார்.

'நிறைய பேர் அப்படித்தான் கேட்கிறாங்க. பில்லிங் பத்தி எனக்குத் தெரியாதுங்க. நீங்க கொஞ்சம் கூடுதலா கட்டிவிடுங்க, இணைப்புத் துண்டிக்காமல் இருக்கும், இல்லைண்ணா 10ம் தேதிக்கு முன்னால் வந்து விடுங்க, நான் பில் எடுத்துத் தந்து விடுகிறேன்' என்று சொன்னார்.

நன்றி சொல்லி விட்டு வெளியில் வந்தேன். நடக்கும் போது தாங்க முடியவில்லை. ஆட்டோ எதுவும் வந்தால் ஏறி கொண்டு விடச் சொல்லலாம். வரவில்லை. தானாகக் குறைந்து மெதுவாக நடந்து போனேன். கிழக்கு பதிப்பகமும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி இன்னும் இருந்தது.

வெளியில் கூடையை எடுத்துக் கொண்டு எழுதி வைத்திருந்த பட்டியலின்படி பொருட்களை எடுத்துக் கொண்டேன். 'தரக்குறைவால் நிராகரிப்பு அறிக்கையில் பிராண்ட், சரக்கு உருவான நாள், குறிப்புகள் மூன்றும் வேண்டும்' என்று தொலைபேசி சொன்னார்.

விலை போடும் இடத்துக்கு வந்தால் ஒரே ஒரு ஒல்லிப் பெண் நின்றிருந்தாள். இந்தக் கடைகளில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ஒல்லியாக குள்ளமாகத்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும். இந்தப் பெண் முகம் பாராமலேயே அடுத்த மேசைக்கு கூடையை எடுத்து நகர்த்தி பில் போட ஆரம்பித்தாள். நானும் அங்கு போனேன். இடையில் சீரகம் தரையில் விழுந்தது.

ஒரு அப்பா குண்டான ஒரு பையனுடன் உள்ளே வந்தார். ஓடிப் போய் சாக்லேட் பொதி பெரியதை எடுத்துக் கொண்டான். அப்பா திரும்பி வைக்க சண்டை போட்டார். அப்பா எடுத்த பொருளுக்கு பில் போடும் பெண் இதை பில் போடவில்லை. நான் நின்ற மேசைப்பெண் அவன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு (கிரி), 'இங்கே வா, நான் பில் போடுகிறேன் என்று அழைத்ததும் வந்து விட்டான். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று பார்க்காமல் புறப்பட்டு விட்டேன்.

வெளியில் வந்து சில அடிகளில் பேருந்து நிறுத்தம். காலியாக ஒரு பேருந்து வந்தது. ஏறி உட்கார்ந்து கொண்டேன். நடத்துனர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் அருகில் இருக்கையில் போய் சீட்டு வாங்கினேன்.

'அவர் தூங்கிக் கொண்டிருப்பதால் எழுப்பினாலும் விழிக்க முடியவில்லை' என்றார் அருகில் இருந்த பெரியவர். 'காலையில் சீக்கிரம் எழுந்து விட்டாரோ என்னவோ?' என்று அனுதாபப்பட்டால், 'பெருமைக்குச் சொல்லலீங்க, நான் தூங்கும் போது காலை 3.30 மணி, அஞ்சரை மணிக்கு எழுந்து விட்டேன்.' 'ஓ, அதுக்குப் பிறகும் விழிப்பா இருக்கீங்க' என்று சொல்லி எழுந்து விட்டேன். இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது.

கோபால புரம் வழியாக வீடு வந்து சேர்ந்தேன். மின்சாரம் வந்திருக்கவில்லை. கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிருந்தேன். மின்விசிறி இயங்க ஆரம்பித்ததும் எழுந்து  வேலையை ஆரம்பித்தேன்.

தரவுத்தள டேபிள் அமைப்பில் புதிய நெடுவரிசைகளைச் சேர்த்து, அதற்கான செயலியில் மாற்றங்களைச் செய்து, அறிக்கையில் புதிய தேவைகளைச் சேர்த்து, செயலியில் ஒரு வழு சரி செய்து இயக்கிய பிறகு சரியாக வந்தது. பயன்பாட்டுப் பதிப்பிலும் இயக்கி விட்டேன். சரக்கு அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று சரி பார்க்கச் சொன்னார். இந்த அறிக்கையில் உற்பத்தியிலிருந்து நேரடியாக நிராகரிக்கப்பட்டவை காட்டப்படுகின்றன. அந்த அறிக்கையில் உற்பத்தியிலிருந்து சரக்குக்கு மாற்றி பிறகு நிராகரித்தவையும் காட்டப்படுகின்றன. அதையும் இந்த அறிக்கையிலேயே காட்ட வேண்டுமே என்று கேட்டதும், அது முடியாது என்று பதில் சொல்லி விட்டேன்.

காலையிலேயே கண்ணன் தொலைபேசி ஐநா அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டக் குழு அமைத்திருப்பதாகச் சொன்னார். அது பற்றிய விபரங்களை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இணைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடியுமா என்று கேட்டார். நிச்சயம் செய்வதாகச் சொல்லி, ஒரு சில நாட்கள் பணி அதிகமாக இருக்கும், அவற்றை முடித்ததும் அதிக நேரம் செலவழிக்க முடியும் என்று சொன்னேன். கண்ணன், சதீஷ், பாலன் மூன்று பேர் எண்களையும் கொடுக்கலாம்.

கூகுள் பஸ்சில், டுவிட்டரில் கனிமொழி, தயாளு அம்மாள் பெரிதும் பேசு பொருளாகவே தொடர்ந்தன. மாற்றி மாற்றி ஏதேதோ படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் தூங்கி விடக் கூடாது என்று கவனமாக இருக்க முயற்சித்தேன்.

உணவுக்காக, பாம்பே ரவையும் கோதுமை மாவும் கலக்க நினைத்து மிஞ்சியிருந்த கோதுமை ரவையையும் சேர்த்துக் கொண்டேன். சீரகம், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொண்டேன். தேங்காய் கீறி துவையல், அதில் மூன்று பல் பூண்டு. ஒரு வெங்காயத்தை முழுமையாக நறுக்கி வைத்துக் கொண்டேன். ஊற வைக்க வேண்டாம் என்று வெளியிலேயே வைத்திருந்தேன். மாலை வேளையில் இவ்வளவு வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் இரவெல்லாம் வாயில் மணக்கும் என்று தோன்றினாலும் வெட்டியதை வீணாக்க மனம் வராமல் சேர்த்துக் கொண்டேன்.

கொசாக் கதையை முடித்து விட்டேன். ரஷ்ய மேட்டுக்குடி மகன், கொசாக் பெண்ணை திருமணம் செய்ய முடியாமலேயே திரும்பிப் போகிறான். ஒன்பதே முக்காலுக்கு பேசி விட்டு தியானம். இன்றைக்குச் செய்ய வேண்டியவற்றை நிச்சயப்படுத்திக் கொண்டு படுத்தேன்.

2 மணிக்கு எழுந்திருப்பு
4 மணி வரை மொழிபெயர்ப்பு
5 மணி வரை எழுத்து
6 மணி உலாவி வருதல்
பயறு கஞ்சி
பணிகள் முடிப்பு
உற்பத்தி திட்டமிடல் முடித்து விட வேண்டும்.

இப்போது 4.25 இன்னும் 2 நிமிடங்கள் இருக்கின்றன. இதை முடித்து விட்டு ஆQ 3வது அத்தியாயத்தை சீர்படுத்தி மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். அதன் பிறகு உலாவப் போகலாம். (5.30க்கு). 6 மணிக்குத் திரும்பி வந்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு அலுவலகப் பணியில் இறங்க வேண்டும்.

திங்கள், ஏப்ரல் 18, 2011

அவரவர் நியாயங்கள்


இன்றைக்கும் எழுந்திருக்க நேரமாகி விட்டிருக்கிறது.

சனிக்கிழமை இரவு 12 மணி ஆகி விட்டது தூங்குவதற்கு. அதனால் ஞாயிறு காலையிலும் கொஞ்சம் நேரங் கழித்து எழுந்திருக்கலாம் என்று நினைத்தாலும் 5 மணிக்கு எழுந்து கொண்டேன். ஒன்பதரை மணிக்கு ஒரு தொலைபேசி வழி சந்திப்பு. அதற்கு முன்பு வேலைகளை முடித்துக் குளித்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தூங்கி வழிந்து கொண்டு மந்தமாக பேச முடியாது.

நடக்கப் போனது, வேலூர் சாலையிலேயே, அர்ச்சனா உணவு விடுதியையும் தாண்டி அதே சாலையில் சிறிது தூரம் போய் விட்டு, சாலையைக் கடந்து எதிர்த்திசையில் காந்திநகர் கிழக்கு சாலைக்கு வந்தேன். அதில் நேராக நடந்து ஓடைப்பிள்ளையார் கோவில் எதிரில் சாலையைக் கடந்து பத்திரிகைக் கடையில் டெக்கான் குரோனிக்கிளும் தினமணியும்.

தினமணியில் படிப்பதற்கு செறிவான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். தினமலர், தினத்தந்தியில் படிக்கும் போது பஞ்சு மிட்டாய் சாப்பிடுவது போல பொசுக்கென்று அமுங்கி உள்ளே போய் விடுகிறது. இந்து நாளிதழிலோ டெக்கான் குரோனிக்கிளிலோ, அந்த தினமணியிலோ கட்டுரைகளைப் படிப்பது, பழம் வெட்டித் தின்பது போல நன்கு சவைத்து அனுபவித்து படிக்க முடிகிறது.

ஞாயிறு இணைப்பாக தினமணி கதிர் அதில் ஒரு சிறுகதை.

வக்கீல் அலுவலகத்தில் உதவியாளனாக வேலை செய்யும் ஒருவன். திருமணமான நண்பன் தொலைபேசி கடன் கேட்கிறான். இவனுக்கு இன்னும் திருமணமாகாத குறை இருக்கிறது. கடன் கேட்டவன் ஏற்கனவே பல முறை வாங்கிய தொகைகளைத் திருப்பித் தருவதாக அறிகுறியே இல்லை. அவன் முறையாகப் படித்திருந்தும் வேலைகளில் நிரந்தரமாக ஒட்டியிருப்பதில்லை. வீட்டில் குழந்தைகள் வேறு. வீட்டுக் கஷ்டத்தைச் சொல்லிப் புலம்பி எப்படியாவது காசு கொடுத்து விடு என்று கேட்கிறான்.

காசு கொடுக்க மனமேயில்லை. நமக்கே கஷ்டப் பிழைப்பு, 1000 ரூபாய் என்றால் சும்மாவா என்று எண்ணங்கள். அலுவலகத்துக்கே வந்து விடுபவனை தவிர்க்க கழிவறைக்குள் போய் நின்று கொண்டு இல்லை என்று சொல்லச் சொல்லி விடுகிறான். மாலையில் மீண்டும் பார்த்தால் வெளியில் காத்திருக்கிறான் அவன். கடைசி வாக்கியமாக கூட வேலை பார்க்கும் வக்கீல் குமாஸ்தாவிடம் பணம் கேட்பதாக கதை முடிகிறது.

இது போல பணத்தையும் வாழ்க்கையையும் சரியாக நடத்தத் தெரியாமல் பலர் இருக்கிறார்கள். அதுவும் மாதச் சம்பளம் இல்லாமல், சுய தொழில் செய்பவர்களின் நிலைமை பெரும்பாடுதான். சுயதொழில் செய்பவர்களுக்குச் சரியாக வழிகாட்ட தொழில்முறை அமைப்புகள் கிடையாது. வங்கிகள் தமது சுகநிலைகளிலிருந்து வெளியில் வர விரும்புவதில்லை.

குடும்பத்தொழிலில் சொந்தக்காரர்கள் வழிகாட்டுவதைத் தவிர, ஏதோ படிப்பு படித்து தனியாக தொழில் செய்பவர்கள் நட்டாற்றில் விடப்படுபவர்கள்தான். கிட்டத்தட்ட ஒருவருடைய தனிப்பட்ட நியாய சட்டங்களின் விளிம்புகளை எல்லாம் தொட்டு விடும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. அந்த நியாய சட்டகத்தின் தரத்தைப் பொறுத்து தப்பிப் பிழைக்கிறோம்.

நிறுவனம் ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பொய் சொல்லக் கூடாது என்ற உறுதியான கட்டுப்பாட்டால் புதைகுழிகள் எதற்குள்ளும் விழுந்து விடவில்லை. ஆனால் நம்பியவர்களுக்கு ஏமாற்றம் அளித்தது நிறைய நடந்தது.

நர்சிம் என்ற பதிவர் பற்றி இப்போது வெளியாகும் தகவல்களும் கிட்டத்தட்ட அதைப் போலத்தான். யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. முதன் முதலில் பெண் பதிவர் ஒருவரைப் பற்றிக் கீழ்த்தரமான அபுனைவு எழுதியதிலிருந்து அவர் பெயர் அறிமுகமானது. அவரது நேர்முகத்தைக் கிண்டல் செய்து வெளியிட்ட இன்னொரு நேர்முகத்துக்கான எதிர்வினை. அதை ஒரே குரலில் எல்லோரும் கண்டித்து அவருக்கு புத்தி சொல்லியிருக்க வேண்டும். நட்பு, கருத்துரிமை என்ற பெயரில் சிலர் அவரைத் தாங்கிப் பிடித்தார்கள். நகுதல் பொருட்டன்று நட்பு என்பதை மறந்து விட்டோம்.

மருத்துவச் செலவுக்காக பணம் திரட்டியது, வேலை வாங்கித் தருகிறேன் என்று இழுத்தடித்தது, கைமாற்று வாங்கி விட்டு இழுத்தடித்தது என்று அவரது நம்பகத்தன்மை குறித்த பலரும் வருத்தப்படுகிறார்கள். ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளும், நியாய சட்டகங்களும் வெவ்வாறாக இருப்பதைத் தவிர வேறு எந்த கேடுகட்ட குணமும் இதில் வெளிப்பட்டு விடவில்லை. அவரைப் பொறுத்த வரை

'வசதியாக இருப்பவர்களிடம் கைம்மாற்று வாங்குகிறோம், முடிந்த நேரத்தில் திருப்பிக் கொடுத்து விடுவோம். யாரையும் பணம் கொடுக்காமல் ஏமாற்றவில்லை'.

'பொது விஷயத்துக்காக பணம் திரட்டுகிறோம். சிகிச்சை நடக்க இருக்கும் சமயம் வரை நாம் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வோம், தேவைப்படும் போது எங்காவது புரட்டிக் கொடுத்து விடலாம்'
என்று சமாதானங்கள் செய்து கொண்டு செயல்பட்டிருக்கிறார்.

இப்படிப் பயன்படுத்தப்பட்டவர்களுக்கு உண்மை தெரியும் போது ஏற்படும் மன வருத்தம் உண்மையானது.

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயரை பெரிதாக்கிச் சொல்வது அடுத்தது.

ஃபோர்ட் கார் வாடகைக்கு விடும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது ஃபோர்டில் வேலை பார்க்கிறேன் என்று சொல்வது, நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலர் பல கட்டங்களில் பல வகைகளில் செய்யும் ஒன்றுதான்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கும் ரெஸ்யூமில் செய்த பணிகள், அனுபவ விபரங்கள், படித்த படிப்புகள் என்று ஒவ்வொன்றிலும் கொஞ்சம் பூச்சு தடவி பளபளப்பாக காட்டாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஆனால், உண்மை தெரிந்து ஏமாற்றப்பட்டதாக உணர்கிறவர்களுக்கு எந்த சமாதானமும் கிடையாதுதான்.

மூன்றாவதாக வேலை வாங்கித் தருவதாக இழுத்தடித்து, கடைசியில் நட்டாற்றில் விடுவது.

தனது முக்கியத்துவத்தைப் பெரிதாக்கிக் காட்டுவதற்கு வாக்குறுதிகள் கொடுப்பது, அந்த வாக்குறுதிகள் இன்னொருவருக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்பதை உணராமல் அலட்சியமாக செயல்படுவது இவையும் ஒரு சாதாரண மனிதரின் உள்ளே ஒழிந்திருக்கும் அல்லது அடங்கியிருக்கும் இயல்புதான். நமது நியாய உணர்வுகளின் நிலையைப் பொறுத்து கூடக் குறைய இருக்கலாம்.

நர்சிம்மைப் பொறுத்த வரை ஏதோ பெரும் பாதகம் இழைத்து விட்டதாக உட்கார்ந்து விடத் தேவையில்லை. இவ்வளவு பேரும் தவறு என்று சொல்லும் நடத்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இது வரை நடத்திய வாழ்க்கை, குணநலன்களை அமைதியாக அலசி ஆராய்ந்து எப்படித் திருத்திக் கொள்வது என்று முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் சொன்னால் அது அவரது காழ்ப்புணர்ச்சி என்று விட்டு விடலாம். பழகிய பலர் சொல்லும் போது நம்மிடம்தான் குறை இருக்கிறது. தவறுவது மனித இயல்பு, தவறு என்பது தெரியாமலேயே பல விஷயங்களைச் செய்கிறோம். அது மற்றவர்களை பாதிப்பது குறித்து அறிந்தவுடன் அதைத் திருத்திக் கொள்வதுதான் தேவை.

அதே போல நாளிதழில் ஞாயிறு சிறப்புப் பகுதி, உள்ளே கட்டுரைகள் என்று படிக்க நேரம் பிடிக்கும் அளவு விஷயங்கள். வார நாட்களில் தலையங்கம், கருத்துக் கட்டுரைகள் என்றும் வெளியிட்டிருப்பார்கள். முன்பு ஒரு முறை வாங்க ஆரம்பித்து அதன் பிறகு தொடராமல் நிறுத்தி விட்டேன். ஏன் என்று தெரியவில்லை. பார்ப்பனீய சார்பு அல்லது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் என்று ஏதாவது காரணம் இருக்கும்.

தூதுவளை காப்பி குடித்து விட்டு வீட்டைத் தூய்மை செய்தல். ஞாயிற்றுக் கிழமை தரை துடைக்க வேண்டும், கழிவறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஹார்பிக் தீர்ந்திருந்தது. தரை துடைக்கப் பயன்படுத்தும் டோமக்ஸ் திரவத்தையே தண்ணீர் சேர்க்காமல் பயன்படுத்தி கழிவறையையும் தேய்த்து விட்டேன். தரை துடைப்பதற்குள் பெண்டு நிமிர்ந்து விடத்தான் செய்கிறது. ஆனால் தரை எல்லாம் பளிச்சென்று ஆகி விடுகிறது.
(தினசரி தரை துடைக்கப்பட வேண்டும். வேலைக்காரி வராவிட்டால் தானா துடைப்பாள்)

குளித்து விட்டு தியானம் செய்துவிட்டு பார்க்கும் போது எட்டரை மணி. 9 மணிக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு முன்பு தொலைபேசி வழி கூட்டத்துக்கான விபரங்களை எடுத்து வைத்துக் கொள்வோம் என்று இணையத்தில் இணைத்துப் பார்த்தேன்.

sabsebolo.com என்ற தளத்தில் கூட்டத்துக்காக பதிவு செய்து அறை எண்ணை அனுப்பியிருந்தார் போன கூட்டத்துக்கு. ஒவ்வொரு ஊரிலும் அணுக வேண்டிய தொலைபேசி எண் கொடுத்திருந்தார்கள். சென்னை, பெங்களூர், மும்பை, டில்லி, கொல்கத்தா போன்று. தொலைபேசியில் இந்த உள்ளூர் எண்களை அழைத்து அறை எண்ணையும் அதற்கான கடவுஎண்ணையும் உள்ளிடச் சொல்வார்கள். பல்வேறு இடங்களில் வசிப்பவர்கள் இதே போல உள்ளே வந்து விட்டால் கலந்துரையாடலை ஆரம்பித்து விடலாம்.

இதைத்தவிர முந்தைய கூட்டத்தில் பேசியது, அனுப்பிய மின்னஞ்சல்கள் அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டேன். மின்சாரம் போனாலும், மடிக்கணினியின் மின்கலன் மூலம் இந்தத் தகவல்கள் பார்வையில் இருக்கும். அறை எண்ணும் கடவுச் சொல்லும் மாறவில்லை என்று நண்பருக்குத் தொலைபேசி உறுதி செய்து கொண்டேன்.

காலை உணவுக்கு எதுவும் செய்திருக்கவில்லை. கிடைத்த இடைவெளியில் சாப்பிட்டு விடலாம் என்று முந்தைய நாள் நீர் ஊற்றி வைத்திருந்த பழையதைச் சாப்பிடப் போனேன். கொஞ்சமாக மீந்திருந்த இரண்டு நாள் ஆன சாம்பார்.

நம்ம ஊர் குழம்புகளில் புளி ஊற்றுவதன் தேவை இப்போதுதான் புரிகிறது. பாதுகாத்து வைக்க குளிர்பெட்டிகள் இல்லாத காலத்தில் புளி நிறைய ஊற்றி வைக்கும் குழம்புகள் சீக்கிரம் கெட்டுப் போகாது. புளிக் கரைசலின் அமிலத் தன்மையால் நுண்ணுயிரிகள் வளர முடியாமல் போய் விடும்.

வேலூரின் வெயிலிலும் கெட்டுப் போகாம் இருந்தது சாம்பார். புளிக்குப் பதிலாக தக்காளி சேர்க்கலாம் என்று செய்தால் அடுத்த நாள் காலையில் கூட இருக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. உணவை குளிர் பெட்டிக்குள் வைக்கிறவர்கள் புளி சேர்க்காமலேயே சமைப்பது உடலுக்கு நல்லது என்று தோன்றுகிறது.

தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்ட ஒலி கேட்டது, மடிக்கணினி சத்தம் போடும். சில நிமிடங்களில் மடிக்கணினியும் மின்சாரத்தை சேமிக்க அணைந்து போகும் எச்சரிக்கை கேட்டது. யாரும் பயன்படுத்தாமல் இருந்தால் மின்கலனில் இயங்கும் போது சில நிமிடங்களில் அணைந்து போகிறபடி அமைத்திருக்கிறது. எடுத்து வைத்தத் தகவல்கள் எல்லாம் போச்சே என்று நினைத்தால் அப்படித்தான் போய் விட்டிருந்தன. இணைய இணைப்பு இருந்தால்தான் மீண்டும் எடுக்க முடியும்.

நண்பருக்குத் தொலைபேசி- தொலைபேசி எண், அறை எண், கடவு எண் வாங்கிக் குறித்துக் கொண்டேன். சரியாக ஒன்பதரை மணிக்கு தொலைபேசி எண்ணை அழைத்து சேர்ந்து கொண்டேன். எல்லோரும் வந்து சேருவதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது. அமெரிக்காவிலிருந்து அழைப்பவர்கள் பக்கத்தில் ஏதோ குளறுபடிகள், இணைப்பு அறுந்து போனது. எல்லாம் சரியாகி பேச ஆரம்பிக்க 10 மணி ஆகியிருக்கும்.

இந்தியாவில் பள்ளி போகும்குழந்தைகளுக்கு பண உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை குறித்து பேசுவதற்கு. அமெரிக்காவில் ஆதாயம் இல்லாத அறக்கட்டளையாக பதிவு செய்து, பெறும் நன்கொடைகளுக்கு வரி விலக்குப் பெறும் வசதியையும் பெற்று விட்டார்களாம். இந்தியாவில் பதிவு செய்யும் வேலை இன்னும் ஆரம்பிக்கவில்லை. யாருக்கு உதவி செய்ய வேண்டும் எப்படி உதவி செய்ய வேண்டும் என்று பல கருத்துக்களைப் பேசினோம். ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நன்கொடை பெற்று இந்திய கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள் பல இருக்கின்றன. புதிதாக சிறப்பாக என்ன செய்ய வேண்டும்? பணம் மட்டும் என்றில்லாமல் தன்னார்வலர்கள் பகுதி நேரத்தில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் ஈடுபடுவதாக செயல்படலாம்.

இது முடிந்ததும் சிறிது நேரம் இளைப்பாறல். மின்னிணைப்பு வந்ததும் இணையத்தில் பதிவுகள். சீன நகைச்சுவைகள் இரண்டை வெளியிட்டேன். ஏற்கனவே நாம் கேள்விப்பட்டவை, மிகவும் நீளமானவை இவற்றைத் தவிர்த்து சின்ன துணுக்குகளை பஸ்சில் வெளியிட்டேன்.

அண்ணாவின் காஞ்சிபுரம் தேர்தல் பேச்சு மிகவும் பிடித்துப் போனது. இரண்டு மூன்று முறை கேட்டபிறகும் போர் அடிக்கவில்லை. பேச்சைக் கேட்டு எழுத்தில் கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியது. யூடியூபில் ஒலிக்க விட்டு விட்டு உரைக்கோப்பில் காதில் விழுவதை தட்டச்ச ஆரம்பித்தேன்.

ஏதாவது ஒரு வாக்கியத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அதைத் தட்டச்சும் போது அடுத்தடுத்த வாக்கியங்கள் வந்து விடுகின்றன. அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், முடித்த நேரத்தில் தொடங்கும் அடுத்த வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டு அதை எழுதி முடித்து விட வேண்டும். கூட்டத்தினரின் கைத்தட்டல் வரும் போது கொஞ்சம் நேரம் கிடைக்கிறது.

அடுத்த முறை ஒலிக்க விட்டு, விட்டுப் போன வாக்கியங்களை நிரப்ப ஆரம்பிக்க வேண்டும். இப்படியே திரும்பத் திரும்பச் செய்து ஏழெட்டு முறையில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் எழுதி விட்டேன்.

எளிய தமிழ், மனதைக் கவரும் தமிழ், கண்ணியமான கருத்துக்கள், நியாய உணர்வுடைய யாரையும் கவரக் கூடிய எண்ணங்கள் - தமிழ்நாட்டில் சமூகப் புரட்சியை உருவாக்கியவர் என்பதில் வியப்பில்லைதான்.

பள்ளிப் பாடத்தில் அண்ணாவின் அண்ணாமலைப் பேருரை என்று ஒரு பாடம் இருந்தது. அதைப் படிக்கும் போது அவ்வளவு பிரமாதமாகத் தோன்றவில்லை. அம்மாவிடம் கேட்டால், 'பேச்சை எழுத்தாக வடிக்கும் போது பல நுணுக்கங்கள் விட்டுப் போகும், அவர் பேசுவதைக் கேட்க வேண்டும்' என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தார்கள். தமிழ் அறிஞர் என்ற வகையில் அண்ணாவின் மீது பெருமதிப்பு அம்மாவுக்கு. காங்கிரசை எதிர்த்தவர் என்ற அளவில் அவரது அரசியலுக்கு ஆதரவு கிடையாது.

எழுதியதையும், யூடியூப் இணைப்பையும் வலைப்பதிவில் வெளியிட்டு பஸ்சிலும், தமிழ்மணத்திலும் இணைத்து விட்டேன். மதிய உணவுக்கு, உருளைக்கிழங்குகளை வெட்டி பொரியல் செய்து பழையதையே சாப்பிட்டுக் கொண்டேன்.

வேலூர் வெயில் வாட்டும் அளவுக்கு வந்து விட்டிருக்கிறது. பகலில் உயிர்கள் எல்லாம் முடங்கிப் போகின்றன. சாலையில் போகாமல் இருப்பது அறிவுடமை.

பல் வலித்துக் கொண்டே இருந்தது. 'இன்னும் ஒரு இரவு இந்த வலியால் சரியாகத் தூங்காமல் ஆக வேண்டுமா' என்று எண்ணம் எட்டிப் பார்த்தது. ஜனவரி மாதம் நாகர்கோவிலுக்குப் போயிருந்த போது பல்வலி தாங்க முடியாமல் போய் மருத்துவரைப் போய் பார்த்திருந்தேன். வலிக்கும்போது பிடுங்க முடியாது என்று மாத்திரை எழுதிக் கொடுத்திருந்தார். இரண்டு பொழுது சாப்பிட்டவுடன் வலி நின்று விட்டது. அதன் பிறகு வேலூர் வந்து விட பிடுங்குவதைப் பற்றி முயற்சிக்கவில்லை.

போன தடவை வாங்கி மீந்திருந்த மாத்திரைகளை நேற்று காலையில்தான் குப்பையில் போட்டிருந்தேன். அதன் காலாவதி ஆகும் தேதி தெரியவில்லை. மேசை இழுப்பறையில் தேடியதில் மருத்துவரின் மருந்துச் சீட்டுக் கிடைத்தது. எதற்கும் மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்வோம். தேவைப்பட்டால் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

உடை மாற்றி வெளியில் வந்தேன். மதிநகர் சாலையில் இருக்கும் மருந்துக்கடை பூட்டப்பட்டிருந்தது, ஞாயிறு விடுமுறை. அட்சயா மருத்துவமனையில் இருக்கும் மருந்தகத்தில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நாகர்கோவிலில் எழுதப்பட்ட மருந்து இங்கு கிடைப்பது கஷ்டம்தான், அதற்கு இணையான மருந்து தருவதற்கு மருந்தாளுனர் இருந்தால்தான் முடியும். நடந்து சில்க்மில் பக்கம் வந்து ராஜன் மெடிக்கல்சில் கேட்டால் அங்கும் அதே கதைதான்.

மாலை உணவையும் வெளியில் முடித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். 'அப்படியே பேருந்து பிடித்து வேலூருக்குப் போய் விடலாம்' என்று பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். நிறுத்தத்தில் நிறைய பேர் காத்திருந்தார்கள். பேருந்து வருவதற்கு பல நிமிடங்கள் ஆனது. கூட்டமாக வந்த பேருந்தில் உள்ளே திணித்து ஏற்றினார்கள். தனியார் பேருந்து. அடுத்த இரண்டு நிறுத்தங்களில் நெரிசல் அதிகமாகி விட்டது. புதிய பேருந்து நிலையத்தில் நிறைய பேர் இறங்க அதை விட அதிகம் பேர் ஏறினார்கள். நிறுத்தி நிதானமாக ஏற்றிக் கொண்டார்கள். இன்று பேருந்துகள் குறைவோ என்று தோன்றியது.

சிஎம்சி எதிரில் இறங்கி, அதன் வெளிவாயிலைக் கடந்து நடந்தேன். கதர் பவன் என்ற பலகை மாட்டியிருந்த கடையில் சாரம் வாங்க நுழைந்தேன்.

'கட்டம் போட்டதா, அச்சடித்ததா' என்று கேட்டார்.
'கட்டம் போடாமல், அச்சு போடாமல், ஒற்றை நிறத்தில் வேண்டும்' என்று கேட்டால் எதிர்ப்பக்கம் கை காட்டினார்.
காவி நிறத்தில், கொஞ்சம் சிவப்பு அதிகான நிறத்தில் என்று இரண்டு தேர்தெடுத்துக் கொண்டேன்.

உடை வாங்கப் போவதில் கடை உதவியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்படிதான் எனது தேர்ந்தெடுப்பு இருக்கிறது. ஓரிரு நிமிடங்களில் பார்த்த முதல் சிலவற்றில் தேர்ந்தெடுத்து பில் போடக் கொடுத்து விட்டால் எப்படி? 200 ரூபாய் விலை போட்டிருந்ததை 160 என்றும் 140 ரூபாய் விலை போட்டிருந்ததை 96 ரூபாய் என்றும் விலை போட்டார். குறைத்துக் கொடுக்க கேட்க வேண்டியதே இல்லை.

அதை வாங்கிக் கொண்டு சிஎம்சி பிரதான நுழைவாயில் இருக்கும் சாலையில் திரும்பினேன். சாலையைக் கடந்து எதிர்ப்புறம் நடக்க வேண்டும், அங்குதான் கடைகள். இந்தப் பக்கம் சிஎம்சி. முதலில் தென்பட்ட மருந்துக்கடையில் சீட்டை நீட்டினால், குண்டாக செழிப்பான ஒருவர் உட்கார்ந்திருந்தார். மாற்று மருந்துகளின் பெயர் சொல்லி எடுத்துக் கொடுக்கச் சொன்னார். அதையும் வாங்கி துணிப்பைக்குள் போட்டு விட்டுத் தொடர்ந்து நடந்தேன்.

மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது வேலூர், மரங்கள் குறைவான மொட்டை மலைகள், அதனால் வெயில்காலத்தில் அனல் தகிக்கிறது. கொஞ்சம் தூரத்தில் இருக்கும் மலையில் தீப்பிடித்து எரிவது தெரிந்தது. வெயிலில் காய்ந்து போன மரங்கள் தீப்பிடித்து விடுவது நடப்பதுதான் என்று செய்தியில் படித்திருக்கிறேன். சமூக விரோதிகள் வேண்டுமென்றே தீ வைப்பதும் உண்டு. அந்த மலையின் அடிவாரத்தில் தோல் கையுறைகள் செய்யும் தொழிற்சாலை இருப்பது நினைவுக்கு வந்தது.

தீயை அணைக்க முயற்சிகள் செய்வார்களா? கொஞ்ச நேரத்தில் தீயணைக்கும் வண்டி மணி ஒலித்துக் கொண்டு வேகமாகக் கடந்து போனது. மலை மேல் வண்டி ஏற முடியுமா என்ன? கீழே நிறுத்தி விட்டு நீளமான குழாய்கள் மூலம் நீர் கொண்டு போய் தீயை அணைக்கலாம்.

பத்திரிகைக் கடையில் அவுட்லுக் பத்திரிகை. டாடா நிறுவனம் விஎஸ்என்எல் வாங்கிய பிறகு அதன் கூடுதல் நிலத்தை அரசுக்குத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பது குறித்த ஒரு விவாதம் வெளியாகியிருந்தது. நிறுவனம் கைமாறி 10 ஆண்டுகள் ஆகப் போகிற நிலையில் நிலத்தைத் திருப்பிக் கொடுக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு. அதற்கு டாடாவிலிருந்து மறுமொழி அனுப்பியிருக்கிறார்கள்.

ஊழல் பற்றி நடுத்தரவர்க்கத்தின் இரட்டை முகம். லஞ்சம் கொடுப்பதை தினசரி நிகழ்வாக ஏற்றுக் கொண்ட நமக்கு, யாரையும் குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது. லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று அதனால் ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் எப்படி அமைப்பை சீர்திருத்த முடியும்?

சரவணபவனில் 4 இட்லி பால் சாப்பிட்டு விட்டு இறங்கி பேருந்து நிறுத்தத்துக்கு நடந்தேன். சாலையைக் கடப்பதற்கு முன்பே ஒரு தனியார் பேருந்து போனது. கூட்டம் நெருங்கிக் கொண்டு. பின்னால் ஒரு அரசு பேருந்து பாகாயம்-காட்பாடி தடப் பேருந்து ஆனால் பலகையில் திருவண்ணாமலை என்று ஒட்டப்பட்டு வந்து கொண்டிருந்தது. அரசுப் பேருந்துகள் எல்லாவற்றையும் பவுர்ணமிக்காக திருவண்ணாமலை அனுப்பி விட்டிருக்கிறார்கள்., அதனால் தனியார் பேருந்தில் கூட்டம் ஏற்றி கல்லா கட்டுகிறார்கள் என்பது புரிந்தது.

சாலையைக் கடந்த காட்பாடி போகும் பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். 10 ரூபாய்க்கு உட்கார்ந்து கொண்டே வந்து சேர முடிந்தது. சனிக்கிழமை அவரது நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஆம்பூரில் கன்கார்டியா பள்ளியில் நடக்கவிருப்பதாக தொலைபேசினார். புதன் கிழமை சிதம்பரம் போக வேண்டும், வெள்ளிக் கிழமை தமிழ் இளைஞர் பாசறை ஆய்வுக் கூட்டம் சென்னையில், சனிக்கிழமை இந்தக் கூட்டம் ஆம்பூரில், ஞாயிற்றுக் கிழமை சென்னையில் அலும்னி கூட்டம், அடுத்த திங்கள் கிழமை சென்னையில் வாடிக்கையாளர் பணி.

வியாழன், அக்டோபர் 15, 2009

பகுக்க முடியாத அறிவு

அக்டோபர் மாதம் 15ம் நாள். பல நாட்களாக ஒழுங்கு முறைகள் எல்லாம் மாறி விட்டன. உடம்பில் சதைப்பிடிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. மனதில் கலக்கம், பதட்டம் குறைந்தால், உடம்பும் தேறி விடும் அல்லவா! நிறைய சாப்பிடுவது, நிறைய தூங்குவது மட்டும் அதற்குக் காரணமாக இருக்காது.

எல்லாமே நம் தலையில் ஓடிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது அன்றாட வாழ்க்கையில் சின்ன பிறளல் கூட மனதையும் உடலையும் பதற வைத்து விடுகிறது. கடவுள் மீது பாரத்தைப் போடுவோம் என்று வாழ ஆரம்பித்த பிறகு அது இல்லாமல் போய் விட்டது.

இறைவன் அருள் இரண்டையும் வழிகாட்டியாக வைத்துக் கொண்டால் சரியாகப் போய் விடுகிறது. ஏதாவது பாதகமாக நடந்தால், இது சம்பாதித்ததற்கு பலன் இது என்று ஏற்றுக் கொள்ளலாம். ஏதாவது சிறப்பாக நடந்தால் இறைவன் அருளால் அது நடக்கிறது என்று நிதானப்படுத்திக் கொள்ளலாம்.

எதற்கு கவலைப்பட வேண்டும், சும்மா படுத்துத் தூங்க வேண்டியதுதானே! அப்படிப் படுத்துத் தூங்கினாலோ, தவறான வழிகளில் போனாலோ வருங்காலங்களில் வருத்தும்.

நல்லதையோ கெட்டதையோ தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் கடவுள் நம்பிக்கையில்தான் கிடைக்கிறது. 'நீங்கள் நினைத்ததை எல்லாம் சாதிக்கலாம்' என்று வரும் சுயமுன்னேற்ற நூல்களை மூத்தவை கடவுள் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லும் வழிகள். இறைவனிடம் நான் கேட்டு விட்டேன், எனக்கு வந்தே தீர வேண்டும் என்று நம்பும் போது அகில உலகமும் சதி செய்து அதை நிறைவேற்றி விடுகிறது.

இவ்வளவு லாஜிக்கலாக நினைத்துப் பார்த்தாலும், சிலவற்றை விளக்கவே முடியவில்லை. காந்தி திரைப்படம் பார்க்க வேண்டும் என்று ஒரு உந்துதல், அக்டோபர் 2லிருந்து. வெகு வேகமாக நிகழ்வுகள் நிறைவேறின. அக்கா வீட்டுக்குப் போயிருக்கும் போது, டிவிடி பிளேயர் அங்கு இருந்ததை எடுத்துப் போகும் படி சொன்னாள். அதை கையில் எடுத்துக் கொண்டு திரும்பும் போது வீட்டுக்குப் போகலாம் என்று ஆதம்பாக்கம் நிலையத்தில் இறங்கி வெளியில் வந்தால், தெருவோர திரைப்பட தகடுகள் விற்கும் வியாபாரி. அதில் காந்தி பட அடர்தகடு, கூடவே நான்கு படங்கள். இது எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று என்னால் விளக்க முடியவில்லை.

திங்கள் கிழமை மாலையில் பணம் எதுவும் வராத களைப்பும் கோபமும். அடுத்த நாள் காலையில் தொலைபேசி காசோலை வாங்கிப் போகச் சொன்னார். முற்பகலில் புறப்பட்டுப் போனால், மாலையில் காசோலையோடு திரும்பி விட்டேன். காசோலையும் அன்றைக்கு துரித அஞ்சலில் வந்து விட்டிருந்தது. இதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

திங்கள், அக்டோபர் 20, 2008

அரைத் தூக்கப் புலம்பல்

நேற்றைக்கு பெரியமேடுக்குப் போகும் வழியிலேயே முன்பு வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து மனம் கிளர்ந்தது. வெள்ளிக் கிழமை இரவு வாங்கிய விகடனில் சுஜாதாவின் சிறுகதை படித்த தாக்கம் என்று மனதைக் கடிந்து கொண்டு 24 மணி நேர விரதத்தை விதித்துக் கொண்டேன். அதைத் தொடர்ந்து சோ வென்று மழை பெய்து தொப்பலாக நனைந்தும் விட்டேன்.

சந்தித்தது நல்ல வெற்றிகரமாக முடிந்தது. தொடர்ந்து வெளியில் வந்ததும் சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொண்டேன். அலுவலகத்துக்கு வந்து இரவு வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருந்து விட்டு, பையில் போட்டிருந்த பூட்டின் சாவியைக் கொடுத்து விட்டு வந்தேன். தியானம் முழுவதுமாக முடிக்காமல் தூக்கம்.

காலையில் எழுந்ததும் சாப்பிடப் பறக்கவில்லை. உடம்பில் மதமதப்பு இருந்து கொண்டே இருந்தது. பசிக்கவும் ஆரம்பிக்கவில்லை. காலை பணிகளை ஆரம்பித்தேன். ஆறரை மணிக்குத்தான் எழுந்திருந்தேன். துணிகளைத் துவைக்க ஊற வைத்து விட்டு நாளிதழ்களை, துணிகளை அடுக்கி வைத்தேன். வெளியில் குடி தண்ணீர் பிடித்து வந்தேன். துணி துவைக்க ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போது நாளிதழைப் போட்டு விட்டுப் போனார். அதை கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன்.

துணி துவைத்துக் குளித்து விட்டு தியானம். நாளிதழ் படித்து விட்டு களைப்பாக அரை மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். வெளியே ஏதோ ஒரு குழந்தை தீபாவளி பட்டாசு துப்பாக்கி வெடித்துத் தூக்கிப் போட வைத்துக் கொண்டிருந்தது. கடைசியில் நாளிதழுக்கு காசு வாங்க வந்தவரின் கதவு தட்டலில் தூக்கம் முடித்து எழுந்திருந்தேன்.

அரைக் கால் சட்டையும், டி சட்டையும் போட்டுக் கொண்டு வண்டியில் கிளம்பினேன். காலையிலேயே செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் குறிப்பேட்டில் பட்டியல் போட்டுக் கொண்டிருந்தேன். அதில் எழுதாத கல்லூரி மாணவர்களை தேர்வு செய்யும் தேர்வுக் கேள்விகளை தயாரிப்பதில் ஆரம்ப மணிகள் கரைந்தன. இடையிடையே வலைப்பதிவுகள், கிரிக்கெட் போட்டி நிலவரம் காட்டும் தளங்கள். சாரு நிவேதிதாவின் பதிவுகள் மிகக் கீழ்த்தரமாக இருந்தன. அதில் ஒரு மாணவியிடம் உறவு கொண்டதைக் குறித்து எழுதியிருந்தார்.

எதுவும் சாப்பிட்டு விடாமல், நிறைய இனிப்பு போட்டு எலுமிச்சை தேநீர் மட்டும் குடித்துக்கொண்டிருந்தேன். சப்வெர்ஷன் பிரச்சனைக்கு தீர்வு மளமளவென்று அவிழ்ந்து விட்டது. அதன் கடைசி பணியை தொக்கி வைத்து விட்டு சாப்பிடப் போனேன். கடையில் 2 ரூபாய்க்கு டெக்கான் குரோனிக்கிள், வளசை சுபாவில் எலுமிச்சை சாதமும் வடையும். அந்த வடையும் தேவையில்லாத வினை.

அத்தோடு நிற்காமல் நந்தினியில் 30 ரூபாய்க்கு முறுக்கும், 13 ரூபாய்க்கு ஒரு இனிப்புப் பண்டமும் வாங்கிக் கொண்டேன். அலுவலகத்துக்குக் கொண்டு வந்து பகிர்ந்து கொள்ளாமலேயே நிறைய முறுக்குகளை தின்று தீர்த்தேன். வாங்கியதில் ஓரிரண்டு சாப்பிட்டு விட்டு மீதியை மாலையில் வரப் போகும் விருந்தினர்களுக்காக வைத்திருந்திருக்கலாம்.

3 மணிக்குள் சப்வெர்ஷன் முடித்து விட்டேன். அதைக் குறித்த மின்னஞ்சல் அனுப்பும் முன்பு அழைப்பு. வெளியில் போய் அவர்களை அழைத்துக் கொண்டேன். பதிவர்கள் பலர் வந்து விட சூடான பேச்சுக்கள் ஏழரை மணி வரை நீண்டன. அதிலும் தேவையில்லாத கிளறும் பொருட்கள் பல பேசப்பட்டன.

மிருகமாகத்தான் பிறந்தோம். அதிலிருந்து எழுந்து இரண்டு காலில் நடக்கும் மனிதனாக வாழ வேண்டும். அதிலிருந்து உயர்ந்து தெய்வ நிலைக்கும் போக முடியும். மீண்டும் மீண்டும் மிருக இச்சைகளுக்கே பலியாகிக் கொண்டிருந்தால், அங்கேயே நின்று விட வேண்டியதுதான்.

1. இனிமேல் ஆனந்த விகடன் வாங்கக் கூடாது. இந்தியன் எக்ஸ்பிரசையும் நிறுத்தி விட வேண்டும். எகனாமிக் டைம்ஸ் மட்டும் போதும்.
2. பருப்பு வகைகள் - சாம்பார், வடை, பொங்கல் ஒதுக்க வேண்டும்.
3. பால் பொருட்களை ஒதுக்க வேண்டும். இப்போதே கிட்டத்தட்ட எதுவும் சாப்பிடுவதில்லை.
4. எண்ணெயில் பொரித்த பண்டங்கள் முற்றிலுமாக ஒதுக்க வேண்டும்.
5. இனிப்பு பண்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எலுமிச்சை தேநீரிலும் இனிப்பு போடாமல் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
6. அசைவ உணவு - முட்டை, இறைச்சி, மீன், பால் தவிர்த்து விட வேண்டும்.

மாலை 7 மணிக்கு மேல் சாப்பிடக் கூடாது. அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.

நேற்றைக்கு கிட்டத்தட்ட என்னை அவர் மட்டத்துக்குக் கொண்டு வந்து பேசினார். பணம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக அப்படிப் பேசினாரா, அல்லது உண்மையிலேயே மரியாதையா என்று தெரியாவிட்டாலும். அந்த மரியாதை வருவது உள்ளத்தின் அழகும், அதில் பிரதிபலிக்கும் உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியமும், முகத்தில் தெரியும் தெளிவும், உடலில் வழியும் அழகும்தான்.

ஒவ்வொரு முறையும் விரதம் இருந்து விட்டால் சரியாகி விடுமா! ஏதோ ஒரு நிலையை அடைந்து விட்டால், அதன் பிறகு மிருக உணர்ச்சிகளே எழாது என்று நினைத்து விட முடியாது. வாழ் நாள் முழுவதற்குமான விடாத போராட்டமாகத்தான் இருக்கப் போகிறது. மிருக உடலினுள்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அது சறுக்கி விடுவதுதான் இயற்கை. ஒவ்வொரு முறையும் சளைக்காமல் எழுந்து தூசியை தட்டி விட்டு விட்டு, விழுந்ததற்கான காரணங்களை ஒதுக்கி வாழ்க்கையைத் தொடர வேண்டியதுதான்.

இன்று முதல் 48 மணி நேரத்துக்கு உண்ணா விரதம். நாளைக்கு, நாளை மறுநாள் அலுவல பணிகள், புதன் கிழமை போவது என்று எல்லாவற்றின் நல்ல முடிவுகளுக்கு விழிப்புணர்வின் பிறளலுக்குப் பரிகாரமாக நான் விரதம் இருக்க வேண்டும்.

நாளைக்கு மாயவரம் போக வேண்டும். காலையில் 4 மணிக்கு கோயம்பேடு வந்து விடுவதாக ஏற்பாடு. 2 மணிக்கு எழுந்து விட வேண்டும். 2 முதல் 2.30 வரை காலைக் கடன்கள். அரை மணி நேரம் வீட்டை ஒதுங்க வைத்து விட்டுக் குளித்து தியானம் செய்து 3.30க்குப் புறப்பட வேண்டும். 4 மணிக்கு பேருந்து, மாயவரத்தில் 12 மணிக்கு. மாலை 6 மணிக்கெல்லாம் பேருந்து பிடித்து பின்னிரவில் திரும்பி விட வேண்டும்.

நாளை முழுவதும் உணவைத் தவிர்த்து விடலாம். நாளை மறுநாள் அலுவலகத்திலும் சாப்பிடாமலேயே நாளைக் கழிக்க வேண்டும். புதன் கிழமை காலையில்தான் சாப்பிட வேண்டும். நாளை மறுநாள் அலுவலகத்தில் எலுமிச்சை சாறு சேர்த்த தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம்.

இதை எழுதி முடித்து விட்டு இருபது நிமிடங்கள் தியானம். இன்னும் 35 நிமிடங்கள் எழுத வேண்டும். 11.05 ஆகி விடும். 20 நிமிட தியானத்தில் 11.30 ஆகி விடும். அதன் பிறகு படுத்து 2 மணி வரை தூங்க வேண்டும். மொத்தம் இரண்டரை மணி நேரத் தூக்கம்தான். அதன் பிறகு பேருந்தில் வேண்டுமானால் கொஞ்ச நேரம் தூங்கிக் கொள்ளலாம்.

தேவைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இன்னும் பத்து ஆண்டுகளில் சேவை பெருமளவில் தேவைப்படும். அழுக்குகளை எல்லாம் எரித்துப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குப்பைகள் மனதுள் புகுந்து விடாமல் அணை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் இடைவிடாத விழிப்புணர்வை, தவத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியாவில் மதவாத சக்திகள் தலைதூக்க முயற்சிக்கும். வெளிநாட்டிலிருந்து இங்கு வாழ்க்கைப்பட்ட பெண்மணி சோனியாவின் தீர்க்கமும் ஆர்வமும் அதற்கு அணை போட்டுக் கொண்டு இருக்கிறது. ஆனால் அதன் ஊற்றுக்கண்ணை அடைத்து புதியதோர் சமூக நெறியை உருவாக்க முடியும்.

தூக்கம் கண்களைச் சுழற்றும். நல்ல பசிக்கும். அடுத்த தடவை சாப்பிடும் போது நிறைய சாப்பாடு ஏற்கும். அதற்குத்தான் உண்ணா விரதம். பசி தூண்டலுக்கு இரை கொடுக்காமல் இருந்து அந்த இணைப்பை உடைக்க வேண்டும். இன்றுதான் தூக்கத்தின் தாக்கத்தையும் உடைக்கத் தீர்மானம்.

இன்று காலையில் ஆறரை மணி வரை தூங்கியிருக்கிறேன். நேற்று இரவு தூங்கியது 11.30க்கு. மொத்தம் 7 மணி நேரத் தூக்கம். அதன் பிறகு இன்று 11 மணிக்கு முன்பு ஏன் கண்களைச் சுற்றுகிறது

நட்பு பாராட்ட முயற்சிக்கிறாள். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு அப்பா கொண்டு வர வேண்டும். மனப்போக்கையும் வாழ்க்கை தத்துவங்களையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தொடர்பாக எனக்கு ஆணவம் அதிகமாகி விட்டது. இழி செயல்கள் என்னை கீழ்த்தரமான நிறைவு கொள்பவனாக்கி விடுகின்றன. குறைகளே இல்லாமல் போகும்போது நான் மகிழ்வுடன் போற்றும் நாள் வர வேண்டும். அதற்கு நமது மன ஓட்டம் மாற வேண்டும்.

குழந்தைகள் நல்வழிப்படுத்தப்பட வேண்டும். கையில் இவ்வளவு காசு எப்படி வந்து சேர்ந்து விடுகிறது? ஏதோ நிலம் விற்றுதான் பாடு நடக்கிறது என்று படுகிறது.

இது வரை 36 நிமிடங்கள் ஆகியிருக்கின்றன. கண்களை தூக்கம் சுற்றி வருகிறது. இப்போது கணினியை மூடி விட்டு தியானம் செய்யாமல் படுத்துத் தூங்கி விட்டால், காலையில் நேரத்துக்கு எழுந்து பேருந்தைப் பிடிக்க முடியாமல் ஆகி விடும். என்னவானாலும் அப்படியே உட்கார்ந்து இன்னும் 25 நிமிடங்கள் எழுதி விட்டுத்தான் எழுந்திருக்க வேண்டும். அதன் பிறகு எந்த இடையூறும் இல்லாமல் 20 நிமிடங்கள் தியானத்தில் உட்கார வேண்டும்.

நாளைக்குக் காலையில் 10 மணிக்கு முன்பு அறிக்கை வேண்டும் என்று சொல்லியிருந்தார். பார்க்கலாம்.

விழிப்பும் தூக்கமுமான அரைத்தூக்க நிலை. ஏதேதோ நினைவுகள், மனம் எங்கெங்கோ பறக்கிறது. என்ன சொல்ல வருகிறோம் என்ற தெளிவும் உறுதியும் இந்த வாக்கியங்களிக் காணக் கிடைக்காது. ஏதோ மனதின் ஒரு பகுதி மட்டும் இயங்குவது போல தோன்றுகிறது.

இப்படியே எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் முடியவில்லை. கண்களை சுழற்றி வருகிறது. குழந்தைகள் இரவில் படித்து முடிக்கவில்லை என்றால் எப்படி வற்புறுத்திப் படிக்க வைப்பது போலத்தான். இப்போது எழுதிக் கொண்டிருப்பதும். இதற்கு எந்த விதமான தளர்வும் ஏற்படுத்தத் தேவையில்லை.

மாலையில் மூன்று பேரும் தொடர்பு கொண்டார்கள். தர்மமும் தவமும்தான ஒரே காப்பு. ஒரு நாள் சிறைக்குப் போனாலும் நாம் தயாராக இருக்க வேண்டும். இன்னும் 18 நிமிடங்கள் இருக்கின்றன. மணி 10.49 ஆகிறது. இத்துடம் 18 நிமிடங்கள் சேர்த்தால். 11.07க்கு முடிய வேண்டும்.

இன்றைக்கு பெரும்பாலான நேரம் வெட்டிப் பேச்சிலேயே கழிந்தது.

ஆர்வம் வந்து ஒருங்கிணைப்பில் பங்கு கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். கைகளே நின்று விட்டன. கண்கள் மூடுகின்றன. படிச்சு முடிச்சுட்டுதான் தூங்கப் போக வேண்டும் என்று கொடுமைக் கார அம்மா குழந்தையின் அருகில் நின்று கொண்டு ஒரு பிரம்பால் எழுப்பிக் கொண்டே இருப்பது போல இருக்கிறது. அப்படித்தான இருக்க வேண்டும்.

அப்படி ஒரு கண்டிப்பான அம்மா இருந்தால்தான் நமது உடலில் சூடும் சுரணையும் வரும். அந்த சூடு சுரணையை எல்லா இடத்திலும் வருவது போல செய்து கொடுத்து விட வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நமது குவியம் அதில்தான் இருக்க வேண்டும்.

வரிசையாக எல்லோரிடமும் போய் பதிவுகளைப் பார்த்து வந்தேன். தளத்தை விட்டு விட்டு யாருமே தமிழ் வலைப்பதிவுலகம் குறித்து விளக்கி விட முடியாதுதான். தூக்க மயக்கத்தில் யாரு யாருக்கு காசு கொடுத்து விட்டார்கள் என்று பார்க்க வேண்டும்.

மின்கட்டண அட்டையை காணவில்லை. அதைத் தேடிப் பிடிக்க வேண்டும். இன்னும் 11 நிமிடங்களுக்குக் குறையாமல் அவகாசம் இருக்கிறது.

வலைப்பதிவுலகில் தீவிரமாக இருப்பவர்கள் எல்லோருக்கும் ஏதோ மனோவியாதி இருக்கிறது என்று சொல்லியிருந்தாராம். கண்கள் தானாக மூடிக் கொண்டன. தூக்க நிலைக்கு நழுவப் பார்த்தது. விட்டுக் கொடுக்கக் கூடாது. அலுவலகத்தில் கணினியின் முன்பு தொலைந்து போன கட்டுப்பாடை நிலை நிறுத்த இதுதான் ஒரே வழி. நேரத்தைப் பார்த்து பார்த்து எழுதினாலும் நேரம் முடியாமல் வெளியில் போய் விடக் கூடாது.

எண்ணங்களை எழுதுகிறேன் பதிவில் போய்ப் படிக்கிறாரா என்று தெரியவில்லை. இன்றைக்குச் சொல்லியிருக்கலாம். இவர் பல் தேய்ப்பதையும், பேருந்தில் சீட்டு வாங்குவதையும் எழுதுவார் அதற்கும் வாசகர் கூட்டம் உண்டு என்று சொன்ன போது எனது 20 நிமிடப் புகழ் பரவசத்தைத் தந்தது. இந்த எழுத்துக்கள் என்னை நானே உரசிப் பார்த்துக் கொள்ளும் உரைகல். என்னை நானே புடம் போட்டுக் கொள்ளும் தூள்.

இன்னும் நேரம் பார்ப்பதிலேயே நிறைய நிமிடங்கள் ஆகியிருக்கும். இது வரை 87 வரிகள் எழுதியிருக்கிறோம். அதை 100 வரிகள் என்று ஆக்குவதை ஒரு இலக்காக வைத்துக் கொள்ளலாம்.

அடுத்தது எதை எழுத, எதை விட? என்ன எழுத என்றுபுரியாத வளர்ச்சி. எதை எழுதினாலும் பதிவர்கள் யாரும் தப்பாக நினைத்து விடக் கூடாது. அவர்கள் மனதை புண்படுத்தி விடக் கூடாது என்று நோக்கத்துடன் மாற்றுமத இலக்கியங்களை குறை சொல்வதையும் கவனமாக கையாள வேண்டும்.

90வது வரியில் நிற்கிறது சுட்டி. அவர்கள் வருவதற்கு தாமதமாகி விடும். அவர்களுக்கும் சேர்த்து தேநீர் போட்டு வைத்தேன். பழக்கமே இல்லை, ஒருவர் கறுப்புத் தேநீர் அருந்துவதில்லையாம். காபி, தேநீர் கூட தவிர்த்து விட வேண்டும். அப்படி குறுந்தகடு கொண்டு போயிருக்கலாம்.

ஒவ்வொரு வாக்கியமும் ஒரு வரியில் வர வேண்டும் என்றால் பல பிரச்சனைகள் வரும் அல்லவா? நாளைக்கு கல்லூரியில் பார்க்கும் போது அவருக்கும் இது போன்ற வழிமுறைகள் இருக்கின்றன என்ற விழிப்புணர்வு ஏற்படும். இல்லை என்றால் அது நம் மீதுதான் வந்து விடிகிறது.

இப்போது எழுதியது கிட்டத்தட்ட தூக்க நிலைக்கு அருகில் இருப்பதாகத்தான் காட்டுகிறது. யாரை வெளியில் அனுப்ப வேண்டும் என்று ஒரு வாக்குப் பதிவு போட்டு விடலாம். நிறுவனத்திலிருந்து வெளியில் போனது ஒரு வகையில் நல்ல தாக்கத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது என்று தோன்றுகிறது.

ஒரு மணி நேரம் முடிந்து விட்டது. இத்துடன் கணினியை மூடி விடலாம்.

ஞாயிறு, மார்ச் 09, 2008

நோன்பு

ஐம்பத்தொன்பது மணி நேரம் கடந்து விட்டது. இன்னும் 12 மணி நேரத்தில் மூன்று நாட்கள் முழுமையாகி விடும். வியாழக் கிழமை மாலை ஆறரை மணிக்கு சாப்பிட்ட 4 இட்லிகள்தான் கணக்கு. அதன் பிறகு வெள்ளிக் கிழமை முழுவதும் தண்ணீர் கூட குடிக்கவில்லை. நேற்று சனிக்கிழமை காலையில் ஆரஞ்சு பழங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தால் கிடைக்கவேயில்லை. அலுவலகத்துக்குப் போய் விட்டு அருகில் இருந்த கடைக்குப் போய் சாறாக வாங்கிக் கொண்டேன். ஐஸ் போடாமல், இனிப்புக் குறைவாக என்று கேட்டால், அந்த இளைஞர் இனிமையாகப் போட்டுத் தந்தார். அப்படி இனிப்புக் குறைவாக ஆரஞ்சு சாறு போடச் சொன்னால் ஒரு சுளை அழுகியதாகப் போட்டு விட்டாலே சுவை கெட்டு விடும்.

இரண்டாவதாக அலுவலகத்தில் பன்னிரண்டரை மணி வாக்கில் எலுமிச்சை சாறுடன் சர்க்கரை போட்டு ஒரு கோப்பை தண்ணீர். மூன்றாவதாக மாலையில் மெலிதான தேநீர் வாசத்துடன் ஒரு கோப்பை சுடு நீர். இவற்றைத் தவிர்த்து எதுவுமே சாப்பிடாமல் கழித்தாகி விட்டது.

உண்ணாவிரதம் இருக்கும் போது முதல் நாள் உடம்பு சோர்வாக இருக்கும், பசி எடுக்கும், வேலைகளை செய்ய முடியாது. இது எல்லாமே மனவியலான விளைவுகள்தான் என்கிறார் ஓஷோ. 'நாம் சாப்பிடவில்லை, நமக்கு சோர்வாக இருக்க வேண்டும்' என்று உருவகித்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருப்போம்.

நேற்றுக் காலையில் எழுந்து பல் தேய்த்து விட்டு உட்கார முடியவில்லை. கணினியைத் திறக்கக் கூட மனமில்லை. அப்படியே படுத்துக் கொண்டிருக்கலாம் என்று தூங்கவே செய்து விட்டேன். 7 மணிக்கு எழுந்து குளித்து விட்டு அலுவலகம் போனேன்.

இன்றைக்கு எழுந்திருக்கும் போது சுறுசுறுப்பு அதிகமாகத்தான் இருக்கிறது. ஐந்தேகாலுக்கு விழிப்பு. எழுந்து எழுத ஆரம்பிக்க முடிந்தது.

ஓஷோவின் கருத்துப் படி 21 நாட்களுக்குப் பிறகுதான் உண்மையான பசி ஏற்படுமாம். எந்த ஒரு உடலிலும் சில நாட்களுக்குத் தேவையான உணவு ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கொழுப்பை உடைத்து ஆற்றலாக மாற்றிக் கொள்வது ஆரம்பித்து விடும். மூன்று வாரங்களில் அது தீர்ந்து போய் விட்ட பிறகு உடலின் ஒவ்வொரு செல்லும் உணவுக்காகத் துடிக்க ஆரம்பிக்குமாம். அதுதான் உண்மையான பசி என்கிறார்.

அந்த மாதிரி பசி எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பதில்லை. மூன்று நாட்கள் மனதையும் உடலையும் தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம்தான். நேற்றைக்கு மூன்று குவளை பழச்சாறு குடிக்கும் போது ஒவ்வொரு மடக்கும் வாயிலிருந்து தொண்டை வழியாக வயிறு வரை இனம் புரிகிறது. முழு விருப்பத்தோடு, சுவையை உணர்ந்து அனுபவித்துக் குடிக்க முடிந்தது.

இன்றைக்கும் காலையில் பழச்சாறு அல்லது பழம் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் இரண்டு மூன்று கோப்பைகள் எலுமிச்சை சாறு சேர்த்த சுடுநீர் குடித்துக் கொள்ள வேண்டும். மாலை 7 மணிக்கு திட உணவைச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

'நாங்க சாப்பிடுவதைப் பார்த்தால், எங்களுக்கல்லவா வயித்து வலி வரும். வாங்க நீங்களும் கொஞ்சம் சாப்பிடுங்க' உண்மையில் சாப்பாட்டைப் பார்த்து சாப்பிட வேண்டும் என்று ஆசையே வரவில்லை. நாக்கில் தண்ணீர் ஊறவில்லை.

ஆரம்பத்தில் விரதம் இருக்கும் நாட்களில் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ரமலான் நோன்பிருக்கும் இசுலாமிய அன்பர் ஒருவர் தண்ணீர் குடிக்காமல் இருந்து விட்டால் பசியும் சோர்வும் வராது என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து தண்ணீரும் குடிக்காமல் இருப்பதுதான் சரியான முறை என்று தெரிந்து விட்டது.

சுவை உணர்ச்சி, உணவின் மீதான பற்று எல்லாம் குறைந்து போய் விட்டன.

'எப்போது உன் விரதம் முடியும்?'
'நாளைக்கு மாலையில்'
'மூன்று நாட்கள் என்று சொன்னாயே, அதுவா'

ஆமோதித்ததும் குரல் மாறி விட்டது.

சுசீந்திரம் தேர்த் திருவிழா அன்று, தேர் வடம் பிடித்ததும் வரிசையாக வெடிகள் வைத்து திருவனந்தபுரத்தில் இருக்கும் மகாராஜாவக்குத் தகவல் கொண்டு சேர்ப்பார்களாம் (60 கிலோமீட்டர் தொலைவு).

'என்ட தாணுமாலயன் புறப்பட்டாச்சோ' என்று சொல்லிக் கொண்டு திருவிதாங்கூர் மன்னர் எழுந்து ஒற்றைக் காலில் நிற்க ஆரம்பிப்பாராம். தேர் நான்கு வீதிகளைச் சுற்றி வந்து நிலைக்கு வந்ததும் அடுத்த தகவல் அதே போல வரிசையான வெடிச்சத்தம் மூலம் அவருக்குப் போய்ச் சேருமாம்.

அது வரை காலை கீழே இறக்காமல், தண்ணீர், சோறு எடுத்துக் கொள்ளாமல் இறைத் தியானத்தில் நின்றிருப்பாராம் மன்னர்.

'அப்படி ஒருத்தன் ஒத்தைக் காலில் நிற்கிறான் என்று பொறுப்பு இருந்தது அன்னைக்கு. இப்போ யாருக்கு என்ன வந்திச்சி'. சின்ன வயசில் தேர்த்திருவிழாவிற்கு போன போது ஒரு தடவை தேரின் அச்சு முறிந்து விட்டது. அதைச் சரி செய்து திரும்ப இழுத்து மாலை வேளையில்தான் நிலைக்குக் கொண்டு வந்தார்கள். அப்போது அப்பா சொன்னதுதான் அது.

நம்முடைய செயல்களின், பணிகளின் பின்பு ஒருவரின் மனப் பிடிப்பு இருக்கிறது என்ற எண்ணம் உணர்ச்சியைம் பொறுப்பையும் கொடுத்து விடும். காந்தப் புலத்தின் உள்ளே இருக்கும் இரும்புத் துகள்கள் எல்லாம் ஒழுங்குபட்டு வரிசை அமைத்துக் கொள்வது போல.

நேற்றுக் காலையில் நாலரைக்கு எழுந்து பல் தேய்த்தாலும், உட்கார்ந்திருக்க முடியாமல் படுத்து யோசித்துக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து அதுவும் முடியாமல் தூங்கி விட்டிருந்தேன். ஏழு மணிக்கு எழுந்து குளித்துத் தயாராகி எட்டு மணிக்கு அலுவலகம். 8 மணிக்கு ஒரு சந்திப்பு என்று சொல்லியிருந்தது என்னைத் தவிர மீதி எல்லோருக்கும் மறந்து போயிருந்தது.

ஒன்பது மணிக்கு அடுத்த ஆண்டு திட்டம் குறித்துப் பேசப் போவதாக ஆரம்பித்து, இப்போது தவற விட்ட ஒரு நெறியை சுட்டிக் காட்டினார் ஒருவர். அடுத்த ஒரு மணி நேரத்தில் பல இடங்களைத் தொடர்பு கொண்டு அதை சரி செய்து விட்டேன்.

12 மணிக்கு வாராந்திர கூட்டத்தில் ஏழெட்டு பேர்தான். இரண்டு பேர் ஊருக்குப் போய் விட்டிருந்தார்கள். இன்னும் ஒருவர் விடுமுறை. ஆறு பேர் வாடிக்கையாளர் இடத்துக்கு. ஒருவர் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார். ஒருவருக்கு உடம்பு சரியில்லை.

பேசும் போதும் தொலைபேசும் போதும் நல்ல எதிர்வினைகள், ஆக்கபூர்வமான கருத்துக்கள் கிடைத்தன. காலையில் அழைத்த வாடிக்கையாளர் அழைப்பை எடுக்க முடியாமல் விட்டு அவரே மதியம் கூப்பிட்டுப் பேசினார். இன்னொரு வாடிக்கையாளரும் அன்பாக திங்கள் கிழமைக்குள் வேலை ஆகி விடும் என்று சொன்னார்.

மதியம் நண்பர் வருவதாகச் சொல்லியிருந்தார். அவரது புத்தகங்களை எடுத்துக் கொண்டு அப்படியே ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்து வீட்டுக்குப் போய்ப் படுத்துத் தூங்கினேன். அலுவலகத்தில் உணவு இடைவேளை. 'என்னால் எல்லாம் ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடியாது' என்று வற்புறுத்தி சாப்பிட அழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதிலிருந்து தப்பிக்கவும் உதவியாக இருந்தது.

நண்பர் குழந்தையின் பள்ளி சேர்க்கை தொடர்பான பணிகளை முடித்து விட்டு அலுவலகத்துக்கு வந்தார். அவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, வலைப்பதிவுகளையும் மேய்ந்து கொண்டிருந்தேன். இந்த நோன்பின் நோக்கமான பொய் சொல்லக் கூடாது பாப்பா என்ற தலைப்பில் ஒரு இடுகையும் எழுதி வெளியிட்டேன்.

நண்பர் வந்து வழக்கம் போல் விவாதங்கள் சூடு பறந்தன. சில இடங்களில் அவர் சொல்வதால் வேண்டுமென்றே எதிர் வாதம் புரிந்து கொண்டிருந்தேன். கோபப்பட்டு விடாத, உணர்ச்சிவசப்பட்டு விடாத இயல்பு. கோபப்பட்டு விடப் போவதாக மிரட்டிக் கொண்டிருந்தார்.

இன்று மாலை நடேசன் பூங்காவில் நடக்க ஏற்பாடு செய்திருந்த சந்திப்பைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.

வெள்ளி, பிப்ரவரி 01, 2008

காட்சிகள்

கண்ணாடி ஒட்டிக் கொள்ளப் போகிறது. தரம் குறைவான, கோடுகள் விழுந்த கண்ணாடி வைத்திருந்ததால், வண்டியில் போகும் போது மட்டும் தூரத்தில் இருப்பவற்றைப் பார்க்க மட்டும் கண்ணாடி பயன்படுத்திக் கொண்டிருந்தேன். கணினியில் வேலை செய்யும் போது, படிக்கும் போது, யாரிடமாவது பேசும் போது கழற்றி வைத்து விடுவேன்.

செவ்வாய்க் கிழமை போய்ப் பரிசோதித்தால் வலது கண்ணில் 0.5 புள்ளிகளும் இடது கண்ணில் 0.25 புள்ளிகளும் கூடியிருக்கின்றன. 'எப்பவும் தொடர்ந்து கண்ணாடி போடுவதில்லை, இந்த கண்ணாடி போடுவது வசதிக் குறைவாக இருக்கிறது' என்றதற்கு, 'அதைப் பார்த்தாலே தெரிகிறதே. தொடர்ந்து போட்டால்தான் குறை சரியாக முடியும்' என்றார்.

செவ்வாய்க் கிழமை மாலையில் தயார் என்று தொலைபேசினார்கள். புதன் கிழமை, நேற்றுக் காலையில் கொண்டு கொடுத்து விட்டார்கள். புது வெளிச்சம் போட்டது போல தூரத்தில் இருப்பவை எல்லாம் பளிச்சென்று தெரிகின்றன. வண்டி ஓட்டும் போது இரவில் எதிரில் வரும் வாகன விளக்கொளி கண்களைக் கூசச் செய்வதில்லை. கொஞ்ச நாட்களாக இருட்டி விட்டாலே வண்டி ஓட்டுவது சிரமமாக இருந்து வந்தது.

முதன் முதலில் கண்ணாடி போட வேண்டும் என்று உணர்ந்தது, ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்து நண்பர் ஏதோ சொன்ன போது எனக்கு அது தெரியாமல் போனது. ஸ்பென்சரில் சுற்றிப் பார்க்க எல்லோரும் போன போது கபாலேஸ்வர் ஆப்டிக்ஸ் என்ற கடையின் கிளையைப் பார்த்து நுழைந்து விட்டேன். கிட்டப்பார்வை, தூரத்தில் இருப்பவற்றைப் பார்க்க முடியாமல் இருக்கிறது.

என்ன சட்டம், என்ன லென்சு என்று தேர்ந்தெடுத்து சுற்றிச் சட்டம் இல்லாமல், கொக்கிகளில் பொருத்தப்படும் கண்ணாடியாக வாங்கிக் கொண்டேன். கடனட்டையைத் தேய்த்து 2000 ரூபாய்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார்கள். இரண்டு நாட்களுக்குள் வந்து சேர்ந்து விட்டது. 'கண்ணாடியைப் போட்டு ஸ்மார்டா ஆகிட்டீங்க' என்று கருத்துக்கள் கிடைத்தன.

'எனக்குப் பிடிச்சிருந்த தேர்வில்தானே இதை வாங்கி மினுக்குகிறாய்' என்று அது உடைந்து போனது. எப்படியோ ஒட்டுப் போட்டுக் கொண்டு தொடர்ந்தாலும். சில நாட்களுக்குள் பொருத்திப் பிடித்திருக்கும் கொக்கிகள் கழன்று வந்து விட்டன. அவற்றை மாற்றுவதற்கு தி நகரில் இருக்கு கபாலேஸ்வர் முதன்மை கடைக்குப் போய்க் கேட்டால், அதுக்கும் காசு வாங்கிக் கொண்டு வேறு ஒரு சட்டம் மாட்டிக் கொடுத்து விட்டார்கள்.

இன்னும் சில வாரங்களில், லென்சில் கீறல் தெரிய ஆரம்பித்தது. அதைச் சரி செய்ய முடியாது. 'இப்படி மாறி மாறி செலவு செய்வதற்குப் பதிலாக புதிய கண்ணாடி வாங்கலாம்' என்று வளசரவாக்கத்தில் ஒரு கடையில் ஆயிரம் ரூபாய்களுக்குள் ஒரு கண்ணாடி வாங்கிக் கொண்டேன். ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. அதுதான் கடைசியாகப் பரிசோதித்தது.

'பேனா, செல்பேசி, காசுகள் எல்லாவற்றையும் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு கண்ணாடியையும் கழற்றி வைத்துக் கொண்டால் அதில் கோடு விழாமல் என்ன நடக்கும்? நம்ம பொருளை நாமதான் கவனமா பராமரிக்கணும். இப்படிப்பட்ட கண்ணாடியைப் போட்டுக்கிட்டுத் திரிந்தால் தலைவலிதான் வரும். உடனே மாற்றி விடு' என்று நண்பனின் ஒரு இடித்துரைப்பு நான்கு நாட்களுக்கு முன்பு.

அன்றைக்குக் கடை எதுவும் வாகாகக் கண்ணில் தென்படவில்லை. நண்பர் வடபழனியில் இருக்கும் பிரெஸ்டீஜ் ஆப்டிக்சில் விலையும் குறைவு சேவையும் நிறைவு என்று பரிந்துரை செய்திருந்தார். அதை மறந்து போய் துராக்கியோ போய் அங்கு உணவு இடைவேளையாக இருக்க அது தவறியது. மாலையில் பிரெஸ்டீஜ் போய் பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடி செய்யச் சொல்லி விட்டிருந்தேன்.

இதையாவது சரிவர பராமரித்து தவறாமல் போட வேண்டும்.

இரவில் ஓரிரண்டு கொசுக்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தன. ஏழெட்டு முறை எழுந்து நேரம் பார்த்து விட்டுத் தூங்கினேன். இது போல சரியாகத் தூங்காத நாட்களின் பகல் பொழுதுகள் சோர்வாகப் போய் விடும்.

நேற்றைக்கு அப்படிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை. காலையில் எழுந்தது, எழுதியது, நடக்கப் போனது எல்லாம் திட்டப்படி நடந்தன. ஏதோ உடலில் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. குளியலறையில் துணி துவைப்பதால், குளிக்கும் போது தெறிக்கும் சோப்பு நுரைகள் படிந்த சுவர்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும் என்று தேய்த்து கழுவி முடித்துக் குளித்துத் தயாராகி 7.10க்குக் கிளம்பினேன்.

ஏழரைக்கு அலுவலகம். தடையில்லா மின்வழங்கு அமைப்பில் ஏதோ குறைபாடு என்று எடுத்துப் போயிருந்தார்கள். நேரடி மின்னிணைப்புதான். அதனால் இணைய இணைப்புக் கருவி உள்ளுறை வலையிணைப்புக் கருவி இரண்டும் எரிந்து கொண்டே இருந்தன. அவற்றை ஒரு முறை அணைத்து போட்ட பிறகுதான் வேலை செய்ய ஆரம்பித்தன. தடையில்லா மின்வழங்கி இருக்கும் போது அதை அணைத்து விட்டால் எல்லாம் அணைந்து விடும் என்று அதை பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற நேரங்களில் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது.

ரிலையன்சு குறித்து எழுதியதற்கு விளக்கமான கருத்தை பின்னூட்டமாகப் போட்டார் கல்வெட்டு. மாலையில் இந்திய பன்னாட்டுத் தோல் கண்காட்சிக்குப் போனால் ரிலையன்சு சில்லறை விற்பனை கடைகள் மூலமாக காலணிகளை எப்படி விற்பது என்பது குறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் உரையாற்றப் போவதாக நிகழ்ச்சி நிரல் போட்டிருந்தார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே உறுதிக்கு சோதனை வரப் போகிறது.

8 மணிக்குப் பேச வேண்டியவர் வந்து விட்டார். பசியும் ஆரம்பித்து விட்டிருந்ததால் அவருடன் போய் டாடா உடுப்பி விடுதியில் சாப்பிட்டுக் கொண்டே பேசினோம். ஆரம்பத்தில் பல குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியிருந்தற்கு நல்ல மாற்றங்கள் தெரிந்தன. இவரிடம் ஒரே ஒரு கடுப்புதான். என்ன பதில் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோம் என்று பார்த்து பார்த்து விடைகள் சொல்வதாக ஒரு நினைப்பு. உண்மையான விடைகள் வருவதில்லை.

எந்தக் குறை சொல்லவும் வழி இல்லாத வகையில் பேசிக் கொண்டிருந்தோம். தன் குறைகளைப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். மாலையில் நண்பர் கேட்ட போதுதான் நினைவு வந்த இவரது 'வேகமாகப் பேசி வாக்கியங்களின் ஆரம்ப முடிவுகளை விழுங்கி விடும்' பழக்கத்தை ஒரு மணி நேரத்தில் ஒரு முறை கூட உணர முடியவில்லை. குழுவினரிடம் எப்படி உறவாடுவது என்று உணர்ந்திருக்கிறார். வாடிக்கையாளர் சேவையை எப்படிச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று கற்றுக் கொண்டிருக்கிறார்.

'இன்னும் 8 ஆண்டுகளில் உங்களைப் போல ஒரு மென்பொருள் நிறுவனம்' ஆரம்பிக்க வேண்டும் என்று தன் குறிக்கோளாகச் சொன்னார். 'வியாபாரக் குடும்பத்தில் பிறந்ததால், தொழில் செய்யத்தான் ஆர்வம். ஆனால் சில ஆண்டுகளாவது வேலை பார்த்து விட்டுத்தான் அதைச் செய்ய வேண்டும். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அதைச் செய்வது என்று முடிவு. தொழில் தொடங்க நல்ல தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்வதில் தேர்ச்சி பெற வேண்டும். நல்ல திட்டங்களை வகுக்க வேண்டும். நிறைய பணம் வேண்டும்' என்று விவரித்துச் சொன்னார்.

ஆங்கிலத்தில் டூ குட் டு பி ட்ரூ என்பார்கள். இருந்தாலும் நம்பிக்கையின் பலனை கொடுத்து அவரது வழியிலேயே பேச ஆரம்பித்தேன். நிறுவனங்களில் ஏர்டெல் போன்ற நிறுவனமாக இருக்க வேண்டுமாம். தனிப்பட்ட முறையில் சச்சின் டெண்டூல்கர் அவரது துறையில் கலக்குவது போல தேர்ந்தெடுக்கும் துறையில் இவர் கலக்க வேண்டுமாம்.

'ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம், ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்' என்று அறையை சீராக வைத்துக் கொள்வதற்கான வழிகாட்டலாக நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். 'ஒவ்வொரு நோக்கம், திட்டத்துக்கும் ஒரு நேரம், எல்லா நேரத்துக்கும் ஒரு நோக்கம்/திட்டம்' என்று வகுத்துக் கொள்ளச் சொன்னேன்.

'வாழ்க்கை இயந்திரம் போல ஆகி விடும் என்று நினைக்கலாம். ஒரு நாளாவது திட்டங்களில்லாமல் ஓய்வாக இருக்கலாம் என்று தோன்றலாம். ஆனால் தேர்வு உங்கள் கையில். முதல் நிலை கிரிக்கெட் விளையாடும் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களில் ஒரே ஒரு டெண்டூல்கர்தான் மிளிர்கிறார். 11 பேர்தான் இந்திய அணியில் விளையாடுகிறார்கள். ஆயிரக்கணக்கில் கூட்டத்தில் ஒருவராக இருக்க வேண்டுமானால் அதிகம் மெனக்கெட வேண்டாம். நமக்கென தனி இடம் வகுத்துக் கொள்ள வேண்டுமானால், உடல், அறிவு, மனத்துக்கு இடைவிடாத பயிற்சிகளைத் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வர வேண்டும்'

'முன்னிலை விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் பயிற்சி செய்கிறார்கள். ஒரு வாரம் இடைவெளி விட்டு விட்டால் மறுபடியும் தொடர்வதற்கு மன உறுதி எவ்வளவு தேவைப்படும்.'

வாய் திறக்காமல் கேட்டுக் கொண்டார். 'திரைப்படத்துக்குப் போக வேண்டுமா, அதற்கென்று நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டு உருவாக்கும் போது பிற்பாடு வருத்தப்படும் வகையிலான செயல்களைத் தவிர்த்து விட முடியும். ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 முதல் மாலை 7 வரை நண்பர்களுடன் திரைப்படத்துக்குப் போக வேண்டும் என்று வெள்ளிக் கிழமையே திட்டம் போட்டுக் கொள்வது ஒரு வகை. ஞாயிற்றுக் கிழமை எழுந்து பன்னிரண்டு மணி வாக்கில் திடீரென்று படத்துக்குக் கிளம்பிப் போவது இன்னொரு வகை.'

'முதல் வகையில் நேரம், வாழ்வு நம் கையில் இருக்கிறது. அதனால் மனமும் அமைதியாக இருக்கும். எல்லாமே மகிழ்ச்சியாக, அமைதியாக இருப்பதற்கான நோக்கத்தில்தானே செய்கிறோம். 3 மணி நேரம் திரைப்படம் பார்த்து விட்டு வந்து அதற்காக 6 மணி நேரம் வருத்தப்பட்டால் என்ன பலன். திட்டமிட்டபடி 3 மணி நேரம் திரைப்படம் பார்த்தேன். அதனால் மற்ற கடமைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்திருந்தால் சலனம் இல்லாமல் நம் வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம்'.

'நிச்சயமாக திட்டமிட்டு நேரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறேன்' என்று உறுதி சொல்லி முடித்துக் கொண்டோம்.

கடைசி நேரத்தில் பரபரப்பாக இயங்குவது என்பது எல்லோருக்கும் இயல்பாக போய் விட்டது. 20ம் தேதியிலிருந்தே பேசிக் கொண்டிருந்த வேலைகள் நேற்று காலை வரை பாதி தூரம் வரை வந்திருக்கவில்லை. மாலைக்குள் சுறுசுறுப்பாக இயங்கி எல்லாவற்றையும் தயாரித்து விட்டோம். வாடிக்கையாளர் தேவைகள், நீண்ட காலத் திட்டங்கள் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

புதன்கிழமையிலிருந்தே பகல் பொழுதில் இணைய இணைப்பு குளறுபடி செய்து கொண்டிருந்தது. எகிப்தின் கடற்கரைக்கு அருகில் தரையடி இணைப்பு இரண்டு அறுந்து போய் விட்டதாம். அதனால் இணைப்பு வேகம் குறைந்து போய் விட்டிருக்கிறது. நேற்றுக் காலையில் இயல்பாக இருந்தது. நேரம் போகப் போக பகலில் வேகம் குறைய ஆரம்பித்தது. ஐரோப்பாவில் மக்கள் எழுந்து வேலை பார்க்க ஆரம்பிக்கும் போது நெருக்கடி அதிகமாகி வேகம் குறைந்து விடுகிறது.

இந்திய தளங்களில் சிக்கல் இல்லை. அதிகமாகப் பாதிக்கப்பட்டது ஜிமெயில்தான். அதன் மூலமே பல வேலைகளைச் செய்து வந்ததால் கொஞ்சம் இடையூறாக இருந்தது.

10 மணிக்கு வாடிக்கையாளர் குழுவினருடன் மறுபார்வை. இந்த வாடிக்கையாளரிடம் பயன்பாடு நல்ல நிலைக்கு வந்து விட்டிருந்தது. தரவுகளின் அளவும் தரமும் அருமையாக இருந்தன. இந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி மேலும் மேலும் சேவைகளை அறிக்கைகளை தயாரிப்பதுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

சாப்பிடும் இடத்தில் பாத்திரங்களைக் கழுவ சோப்பு வைத்திருக்கும் பாத்திரம் சோப்பு எல்லாம் ஒட்டி அருவெருப்பாக இருந்தது. சுவர்களில் எல்லாம் அழுக்குப் படிவுகள். தினமும் பயன்படுத்தும் நமக்கு மரத்துப் போய் விடும். புதிதாக யாராவது வந்தால் அவர்களுக்கு சாப்பிடத் தோன்றாது. தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அந்த டப்பாவைக் கழுவி ஒரு மூடி போட்டு, சுற்றி இருந்த சுவர்களின் பிசுபிசுப்புகளையும் நன்கு தேய்த்துக் கழுவி விட்டேன். இதே போன்று பராமரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

நிறுவனத்தின் வலைத்தளத்தில் குழுவினரின் விபரங்களைப் புகைப்படங்களுடன் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். வெளி இயக்குனர்களிடமிருந்து விபரங்கள் வந்து விட்டிருந்தன. 29ம் தேதிக்குள் முடிப்பதாக வாக்குக் கொடுத்து நடக்காமல் போய் விட்டது. நேற்று மதியம் நல்ல ஒரு வடிவம் பெற ஆரம்பித்தது. 5 பேர் புகைப்படமும் விபரங்களும் வந்து விட்டன. அலுவலகக் குழுவினர் எல்லோரின் புகைப்படத்தையும் வட்டமாக ஒரு சேர்க்கைப் படம் செய்து போட்டு விடலாம் என்று திட்டம்.

சென்னைக் கண்காட்சியில் பங்கேற்க இடம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் அவ்வளவு தீவிரமாக முயற்சிக்கவும் இல்லை. புதிதாக விளம்பரக் கையேடுகள் தயாரித்துக் கொண்டிருந்தோம். நிறுவன பெயர் சின்னம் பொறித்த சட்டைகளைப் போட்டுக் கொண்டு போகலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், 'நேரடியாக பங்கு பெறாத நாம் தீவிரமாக அறிமுகமில்லாதவர்களை அணுகக் கூடாது.' என்று முடிவு செய்திருந்தோம். அப்படி அணுக வேண்டுமானால் கண்காட்சி நடத்துபவர்களிடம் அனுமதி பெற்று ஒரு இடம் வாங்கிக் கொள்ள முடியுமா என்று பார்க்க வேண்டும்.

3 மணி வாக்கில் கிளம்பி நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்துக்குப் போனோம். மாநாட்டு அரங்கு முழுவதும் கடைகள் போட்டு விட்டார்கள் அதுவும் பத்தாமல் வெளியிலும் கூரை போட்டுக் கடைகள். மற்றபடி முதன்மை அரங்கிலும் கடைகள். இன்னும் பெரிதாக இன்னும் சிறப்பாக ஏற்பாடுகள்.

இந்திய வர்த்தக முன்னேற்ற கழகத்தினர் நடத்துகிறார்கள். அவர்களின் ஒருங்கிணைப்பு மையத்துக்குப் போனால் ஜெயச்சந்திரன் உட்கார்ந்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த கண்காட்சியில் பங்கேற்ற போது நல்ல அறிமுகமானவர். 'முகம் எங்கோ பார்த்தபடி இருக்கே' என்று சொன்னவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும், லெதர்லிங்க் என்று சொல்லிப் பார்த்துக் கொண்டார்.

'ஒரு நிறுவனம் கடைசி நேரத்தில் வர முடியாததால் இடம் இருக்கிறது. உங்களுக்கு ஒதுக்கச் சொல்கிறேன்' என்று உடனேயே தொலைபேசி விட்டார். 'மாலைக்குள் இத்தனை ஆயிரம் கட்டி விடுங்கள்.' ஏதாவது கஞ்சி கிடைக்குமா என்று வந்தவர்களுக்கு விருந்து சாப்பாடே கிடைக்கிறது.

ஆனால் அதற்கான தயாரிப்புகள் எதுவும் செய்திருக்கவில்லை. அவ்வளவு பணம் செலவழித்து இடம் எடுத்தால், கடைசி நேர மாற்றம் என்பதால் கண்காட்சி கையேட்டில் நிறுவனத்தின் பெயர் வராது, யாருக்கும் அழைப்புகள் அனுப்பவில்லை. சரி, இடம் எப்படி இருக்கிறது என்று போய்ப் பார்த்தோம்.

அவ்வளவு சிறப்பான இடம் இல்லை. ஒதுங்கித்தான் இருந்தது. 'செலவுக்கும் பலனுக்கும் நியாயப்படுத்தல் முடியாது' என்று மறுத்து விட்டோம். விலையைக் குறைக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

கையில் மூன்று இலவச நுழைவுச் சீட்டுகளைத் திணித்து விட்டார். 'எனது சொந்தக்கார பொண்ணு கம்ப்யூட்டர் படிச்சிருக்கா, என்ன செய்யலாம்' என்று உதவி கேட்டார். அதற்குத்தான் சிபாரிசே தேவையில்லையே. 'விபரங்களை அனுப்பச் சொல்லுங்க பார்க்கலாம்'.

ஆறு மணி கூட்டத்துக்கு வரலாம் என்று திரும்பி அலுவலகம். முடிக்க வேண்டிய வேலை ஆறே முக்கால் வரை இழுத்தடித்தது. அதன் பிறகு கிளம்பிப் போனால், கூட்டம் முடிந்து விட்டிருந்தது. பல வாடிக்கையாளர்கள், அறிமுகமானவர்கள், நண்பர்களை சந்திக்க முடிந்தது.

சனி, ஜனவரி 26, 2008

விழுந்து எழுந்து

கடைசியாக ஞாயிற்றுக் கிழமை காலையில் ரயிலில் உட்கார்ந்து கொண்டு எழுதியது. இழுத்தடித்து ஏழரை மணிக்குத்தான் நிலையம் வந்து சேர்ந்தது. இறங்கி தொலைபேசி தொலைத்தவருக்கு சொன்னது போல தரையில் விழுந்திருக்கிறதா என்று ஒரு தடவை பார்த்து விட்டு வெளியே வந்தோம். ஆட்டோ தேடிப் போய் வாய் கொடுக்க மனதில்லாமல் சாலையைக் கடந்து பேருந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

பக்கவாட்டு பாதை வழியாக வெளியே வந்து அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் தரைவழி நடைபாதை வழியாக சாலையைக் கடந்து மருத்துவமனையின் முன் வாசல் அருகில் ஏறினால், நல்ல கூட்டம். நான்கைந்து பேர் பாத்திரங்களில் உணவுப் பொருட்கள் விற்றுக் கொண்டிருக்க, வாங்குவதற்குத்தான் அந்தக் கூட்டம்.

பேருந்து நிறுத்தம் நோக்கிப் போகும் போதே பூந்தமல்லி போகும் ஒரு தடம் கடந்து சென்றது. நிறுத்தத்தின் அருகில் வந்ததும் இன்னொரு பேருந்து அதே தடம் வர, அந்த சொகுசு பேருந்தில் ஏறிக் கொண்டோம். 10 ரூபாய் சீட்டு. அண்ணா சாலைக்குத் திரும்பி, சைதாப்பேட்டை கிண்டி கத்திப்பாரா வழியாகப் போக வேண்டும். போரூரில் இறங்கி வேறு வண்டி பிடித்துக் கொள்ளலாம்.

கூட்டமும் அதிகமில்லை, வாகன நெரிசலும் இல்லை. வழியில் கூட வந்த நண்பரிடம் கொஞ்சம் சூடாகவே வாதங்கள். போரூரில் இறங்கி, ஆட்டோ ஒன்றை பிடித்தோம். 20 ரூபாய்க்கு என்று ஏறிக் கொண்டு அந்த ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தோம். 'சின்னச் சின்னப் பசங்க எல்லாம் இருபதாயிரம் சம்பாதிக்குது. நானும் சாஃப்ட்வேர் போகப் போறேன், தொழிலை மாத்தப் போறேன்' என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார். 'இந்தத் தொழிலில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்க வழி இருக்குதுங்க, ஒங்க பிடிவாதத்தால கெடுத்துக்கிறீங்க' என்று சொல்ல ஆரம்பித்து சீக்கிரம் இடம் வந்து விட்டது.

ஒன்பது மணி சந்திப்பு 11 மணி ஆகி விட்டிருந்தது. கைகால் கழுவி விட்டு இணைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பார்த்து விட்டு கேரளா விடுதியில் சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு உரையாடல். அவர் பக்கமிருந்து பேசுவது எனக்குக் கேட்டது. நான் பேசுவது அவருக்குக் கேட்கவில்லை, ஸ்கைப். அவர் பேச நான் எழுத என்று சமாளித்தோம்.

இடையில் ஒரு முறை இணைப்புப் போய் வர, நண்பர் வந்திருந்தார். அவர் எழுதிய நூலை சமீபத்தில் படித்திருந்ததைக் குறித்து ஒளிவு மறைவில்லாத விமரிசனத்தைக் கேட்டிருந்தார். பார்த்துப் பார்த்து எழுதியிருந்த புத்தகத்தை ஒருவர் குறை கூறுவதைக் கேட்க அபாரமான மனப் பக்குவம் வேண்டும். அதற்கான தயாரிப்புகளுடன் வந்திருந்தாலும், அடுத்த 10 நிமிடங்களில் முகம் இருண்டுதான் போயிருந்தது. 'நல்லா இருக்கு, அருமையான உழைப்பு' என்று சொல்ல நிறைய பேர் கிடைப்பார்கள். என்னென்ன மேம்படுத்த முடியும் என்று சொல்வதற்குத்தான் ஆள் கிடையாது. தயங்காமல் கருத்தைச் சொல்லுங்கள். என்று கேட்டிருந்தார்.

'முந்தைய புத்தகத்தை விட எழுத்து நடை பல படிகள் மேம்பட்டிருக்கிறது. யாரையும் பிரதிபலிக்காமல், உங்களுக்கு என்று ஒரு துள்ளல் நடை வகுத்துக் கொள்வதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எடுத்துக் கொண்ட பொருளில் பல தகவல்களைத் திரட்டி ஒரு முழுமையான தொகுப்பாக உருவாக்கியிருப்பதும் பெரிய வெற்றி'

என்று முதலில் தடவிக் கொடுத்து விட்டுத் தாக்குதல். இரண்டுமே உண்மையாக உணர்ந்தவை.

'புத்தகத்தின் நீளம் அதிகமாகி விட்டது. நிறைய இடங்களில் கடுமையா வெட்டி இப்போதைய நீளத்தில் 10ல் ஓரு பங்கு மட்டும் புத்தகமாக வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று பாருங்கள். சிறந்த புத்தகம் அளவில் பெரிதாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது.'

'நம் நாட்டுச் சார்பை விட்டு விடவில்லை. எல்லா இடங்களிலும் இந்தியாவின் நிலைமையை நியாயப்படுத்துவதுதான் நோக்கமாகத் தெரிகிறது' என்று இன்னும் அடிப்படையான குறையைச் சுட்டிக் காட்டினேன்.

இந்த நேரத்துக்குள் ஞாயிற்றுக் கிழமை எட்டிப் பார்க்க வந்தவர்களில் சிலர் கிளம்ப ஆரம்பித்து விட்டிருந்தார்கள். முந்தைய நாள் பெங்களூரு விவாதங்களையும் பேச்சுக்களையும் விளக்கி அதற்கான திட்டமிடல்களை ஆரம்பிக்க முடிவு செய்தோம். இரண்டு பேர் அதில் இறங்கி விட, வங்கிக்குப் போய் பணம் எடுத்துக் கொண்டு, வழியில் சாப்பிட்டு விட்டு, பார்க்கப் போகும் நண்பருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்குப் போய் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினேன். திரும்பும் வழியில் தேய்க்கக் கொடுத்திருந்த துணிகள்.

பொருட்களை மறந்து விடும் போக்கு ஒரு வாரமாகவே துரத்துகிறது.

சிறிது நேரம் தூங்க வேண்டும். பெங்களூரு போய் விட்டு வருவது ஒவ்வொரு முறையும் பெரிய அசதியை தருவதாக, நோயில் தள்ளி விடுவதாக அமைந்து விடுகிறது. காலநிலை வேறுபாடு, குளிர் அதிகம். இரவு ரயிலில் ஏறி வருவது எந்த நேரமானாலும் வசதிக் குறைவுதான். 6 மணி நேரப் பயணமாதலால், ஒன்று நள்ளிரவு வரை விழித்திருந்து ஏற வேண்டும் அல்லது அதிகாலை இறங்க வேண்டும். இடையில் குளிர் நடுக்கும் பயணத்தின் தூக்கம் வேறு..

வீட்டுக்குப் போய் நல்ல ஒரு தூக்கம். ஆறு மணிக்கு உலகத் தமிழர் தொழில் வணிகப் பேரவை சார்பாக விருந்துக் கூட்டம். வெள்ளிக் கிழமை ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். கடைசி நிமிடத்தில் அழைக்கிறாரோ என்பதற்கு அவரே சமாதானமும் சொல்லிக் கொண்டார்.

'ஞாயிற்றுக் கிழமை மாலை கோயம்பேட்டுக்கு அருகில் மாருதி பராமரிப்பு மையத்தில் ஒரு விருந்துக் கூட்டம். எல்லோருக்கும் அழைப்பு அனுப்ப பொறுப்பேற்றவர் உங்களுக்கு அனுப்பினாரா என்று தெரியவில்லை. உறுதி செய்து கொள்ளத்தான் கூப்பிடுகிறேன். தவறாமல் வந்துடுங்க'.

'சும்மா, எல்லோரும் சந்தித்து உறவாடத்தான். மற்றபடி கூட்டம் பேச்சு என்றெல்லாம் இருக்காது.' அப்படிச் சொல்ல வேண்டியதன் தேவை கூட்டத்துக்குப் போன பிறகு தெரிந்தது. சும்மா பழகுவதற்காக விருந்துக் கூட்டத்துக்குப் போவது எனக்கு அவ்வளவு விருப்பமில்லாத ஒன்றுதான். இன்னொரு நண்பரையும் அழைத்திருந்தார்கள். அவர் தொலைபேசி தான் போகப் போவதாகவும் அங்கு சந்திக்கலாம் என்றும் சொல்லியிருந்தார். அதற்காகவாவது போகலாம் என்று முடிவு செய்திருந்தேன். நல்லதாகப் போயிற்று.

கோயம் பேடு நெருங்கும் போது வருவதாகச் சொல்லியிருந்த நண்பரிடமிருந்து தொலைபேசி. இன்னும் கிளம்பவில்லை., தாமதமாக வந்து விடுவதாகச் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்துக்கு முன்பு வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே போனால், ஒலி பெருக்கி இல்லாமல் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். போகும் போது நெடுமாறன் பேசிக் கொண்டிருந்ததால், காதில் சரியாக விழ வேண்டும் என்று முன்பக்கமாக போய் உட்கார்ந்து கொண்டேன்.

அவரைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து தமிழ்ச் சங்க பொறுப்பாளர், கவிஞர் காசி ஆனந்தன், நாடாளு மன்ற உறுப்பினர் (காசிலிங்கம் என்று நினைவு). பிந்திய இரண்டு பேரையும் திருப்பூர் மாநாட்டில் பேசக் கேட்டிருக்கிறேன்.

காசி ஆனந்தன், பொங்கல் என்றால் பொங்குவது, போராட்டத்தின் அறிகுறி என்று புதிய கருத்தை அழகாக எடுத்து வைத்தார். நேரம் பார்க்க அலை பேசியை நேரம் பார்க்க எடுத்தால் ஒரு குறுஞ்செய்தி. 'வீ ஆர் ஆல்சோ ஹியர்' என்று பாலபாரதி. கழுத்தை வளைத்து பின்னால் பார்த்தால் அவரும் லக்கிலுக்கும் உட்கார்ந்திருந்தார்கள்.

தாமதமாக வருவதாகச் சொன்ன நண்பருக்கு கூட்ட விபரத்தை குறுஞ்செய்தியாக்கி, முழுதுமாக இருந்து விடப் போவதாகவும் வந்து விடுமாறும் என்று அனுப்பினால், பாதி எதிர்பார்த்தபடி ஏதோ சாக்கு சொல்லி வரவே இல்லை. தொலைபேசியில் அழைப்பு விடுத்த அமைப்பாளர் இப்படி எதிர்வினைகளை எதிர்பார்த்துதான் விபரங்களை சொல்லியிருக்கவில்லை என்று தோன்றியது.

திருப்பூர் மாநாட்டில் பேசும் போது இருந்ததை விட தளர்ச்சி முகங்களிலும் பேச்சிலும். 'கடைசித் தமிழன் இருக்கும் வரை போராட்டம் ஓயாது, வெளிநாட்டு ஆயுதங்களை வைத்துக் கொண்டு சிங்களப் பேரினவாதிகள் கொக்கரிக்கிறார்கள்' என்று போராட்டக் குரல்கள்.

ஒலிபெருக்கி கூட இல்லாமல், இருளடைந்த ஒரு வாகன பராமரிப்புக் கூடத்தில் கூட்டம் நடத்தும் நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது. சொந்தச் சகோதரர் துன்புற்று மாள்வதைப் பார்த்தும் வாளாயிருக்கும் கூட்டத்தினராகப் போய் விட்டோம். என்னதான் குறை சொன்னாலும், தன் வாழ்வையும் உயிரையும் அர்ப்பணித்து உறுதியாக ஈழப் போராட்டத்தை ஆதரித்து நிற்கும் நெடுமாறன், திருமாவளவன், வைகோ போன்றவர்கள் பெரிவர்கள்தான்.

விருந்தில் பாக்கு மட்டையில் செய்த தட்டில் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், இரண்டு வகையான சாதம். புத்தகங்கள் வாங்கிக் கொண்டோம். குத்து விளக்கு என்ற ஈழத் திரைப்படம் ஒன்றைக் காண்பிக்கப் போகிறார்களாம் காந்தளகம் சச்சிதானந்தம் வந்ததும் அது ஆரம்பிக்கும். வலையுலக அரசியல், தமிழக அரசியல் குறித்த விவாதம் சூடாகும் போது படம் போடும் நேரம் வந்து விட்டதால் நுழைந்து விட்டோம். பழைய, கருப்பு வெள்ளைத் திரைப்படம். ஒரு ஆவணமாகப் பார்க்கலாம் என்று கருத்து சொன்னவரும் சீக்கிரமாகவே கிளம்பி விட்டார்.

வீட்டுக்கு வந்து தூங்கும் போது தாமதமாகி விட்டது.

திங்கள் முழுவதும் சோர்வும், மாற்றங்களின் அழுத்தமும். ஒரு நாள் பிற்பகலில் விவாதித்த உள்வாங்கிய மாற்றங்கள் அனைத்தும் எல்லோருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். சின்னச் சின்னக் குழுக்களாப் பேசினோம். கூடவே வாடிக்கையாளர் சேவைப் பணிகளும். மதியம் மூன்று மணிக்கு மேல் பூந்தமல்லியில் இருக்கும் ஒரு வாடிக்கையாளர் தொழிற்சாலைக்கு.

ஆங்கிலப் புத்தாண்டு முடிந்து அடுத்த மாதம் சீனப் புத்தாண்டு. அங்கிருந்து விடுமுறை முடிந்து வணிகம் ஆரம்பிக்காத, சீனா பக்கமிருந்து விடுமுறைக்கு மூடப் போகும் கொஞ்சம் சுணக்கமான காலகட்டம். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் அப்படிப் போய் ஜனவரி இறுதியில் நடக்கும் கண்காட்சிகளிலிருந்து சூடு பிடிக்கும். ஜனவரி மாதம் இதமான காலநிலை நிலவும் சென்னை ஒரு வகையில் கொடுத்து வைத்தது. ஆண்டை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு சரியான களம்.

அந்த வகையில் தையில் புத்தாண்டு தொடங்குவது நல்லதாகப் படுகிறது. ஆங்கில முறையில் ஏப்ரலில் புத்தாண்டு ஜனவரிக்கு மாறி சில நூற்றாண்டுகள் ஆகி விட்டன. மாதப் பிறப்பும் 15 நாட்கள் முன்கூட்டியே நடப்பதும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடந்து விட்டது. தமிழ் மாதங்களிலும் அந்த 15 நாட்கள் குறைத்தலை செய்து விட்டால், மேற்கத்திய மாத, ஆண்டு பிறப்பும் தமிழ் மாத ஆண்டு பிறப்பும் ஒன்றி விடும். இரண்டுமே சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டிகள்.

இசுலாமிய, இந்து நாட்காட்டிகள் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவையாம்.

மாலையில் கோடம்பாக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரைப் பார்க்க. அப்போதுதான் பிடிக்க ஆரம்பித்தது சளி. திரும்பும் போதே அலுப்பாக இருந்தது. நண்பனைப் பார்க்க ராதாகிருஷ்ணன் சாலை போக முயற்சித்து வழி சரியாகப் பிடிக்காமல், அசோக் நகர் வந்து சேர்ந்து விட்டேன். கிருஷ்ணா இனிப்பகத்தில், ரசம், லசான்யா என்று ஒரு மேற்கத்திய உணவு என்று சாப்பிட்டு விட்டு திரும்பினேன்.

தூங்கும் போது முன்னெச்செரிக்கையாக கெட்டியான போர்வை, விரிப்பு என்று படுத்துக் கொண்டாலும், காலையில் எழுந்திருக்கும் போது சளி தலைக்கு ஏறியிருந்தது. சமாளித்து தூங்கு மூஞ்சி முகத்தோடு அலுவலகம். பதினொரு மணிக்கெல்லாம் உட்கார்ந்திருக்க முடியாமல் திரும்பி விட்டேன். நான்கைந்து மணி நேரம் நன்கு தூங்கி விட்டு திரும்ப அலுவலகம்.

மின்னஞ்சல்கள், செய்ய வேண்டிய வேலைகள் நிறைய தேங்கி விட்டிருந்தன. சனிக்கிழமை பேசிவற்றின் குறிப்புகளை முடிவுகளைத் தொகுத்து அனுப்புவது கூடச் செய்திருக்கவில்லை. நல்ல வேளையாக வாடிக்கையாளர் யாரும் சந்திக்க நேரம் கொடுத்து விடவில்லை.

புதன் கிழமையும் நீண்ட தூக்கம் காலை முழுவதும். அலுவலகத்திற்கு சென்று ஒவ்வொன்றாக நூல்பிடிக்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர் அலுவலகத்தில் அழைத்து 4 மணிக்கு வரச்சொன்னார்கள். எதுவும் ஓடவில்லைதான். மூன்று இடங்கள் என்று திட்டமிட்டுக் கொண்டு போனால், நான்கு மணிக்கு வரச் சொன்ன இடத்தில் தாமதமாகும் என்று அடுத்தடுத்த இடங்களுக்குப் போய் விட்டேன். இரண்டுமே திருப்தியாகப் போயின.

ஆறு மணிக்கு மேல் வந்தால் இன்னும் தாமதமாகும் என்றார்கள். பொடி நடையாக போய் ரயில் நிலையம் எதிரில் இருந்த வசந்தபவனில் இட்லி, தோசை பால். சரியான பசி.

எட்டு மணிக்கு மேல் சந்திக்க அழைத்தால், வாய் நிறைய வருத்தங்களுடன், காத்திருக்க வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பி விட்டேன்.

வியாழக்கிழமை ராணிப்பேட்டை போக வேண்டும்.

ஆங்கிலத்தில் feed the cold and starve the fever என்பார்களாம். சளி பிடித்திருந்தால் சாப்பிட மனதிருக்காது. அதற்காக சாப்பிடமல் இருந்தால் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். காய்ச்சலின் போது வயிற்றில் மக்கு இல்லாமல் செய்வது அவசியம்.

சளி பிடிக்கும் போது திரவ உணவாகச் சாப்பிட வேண்டும் என்று முயன்றிருக்கிறேன். இந்த முறை தண்ணீர் குடிப்பதை முடிந்த அளவு குறைத்துக் கொண்டு காய்ந்த பொரித்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டேன். புதன் கிழமை மாலைக்குள் நல்ல தெளிந்து விட்டிருந்தது. அத்தோடு வீட்டுக்குப் போய் தூங்கியிருந்தால் சரியாகி இருக்கும். ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து மின்னஞ்சல்களுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தேன். அப்படியும் பல இன்னும் தேங்கி விட்டன.

வியாழக் கிழமை காலை, நேற்று சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. ஆறரைக்கு எழுந்து, குளித்து தயாராகி, வாங்கி வைத்திருந்த ரொட்டியை வாட்டி சாப்பிட்டு விட்டு மணப்பாக்கம் போய் பேருந்து பிடிக்கக் கிளம்பினேன். பக்கத்து வீட்டுக்காரர் சிறிது தூரம் தனது வண்டியில் கொண்டு விட்டார். நல்ல வேளை, அங்கிருந்த ஆட்டோ கிடைத்தது. சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும், அந்தக் குறும்பயணத்தை பகிர்வூர்தி பயணமாக மாற்றி விட்ட பெண், ஏறிப் போயிருக்க வண்டி கிடைத்திருக்காது. அந்தப் பெண் 5 ரூபாய் கொடுக்க நான் 10 ரூபாய் கொடுத்து இறங்கிக் கொண்டோம்.

நகரப் பேருந்தில் ஏறி போரூர் சந்திப்பில் இறங்கும் போது எட்டு மணி ஆகியிருந்தது. விரைவு வண்டியில் ஏறினால் அனுபவம் நிறைந்த நடத்துனர், புதிய ஓட்டுனர். பயணிகளில் ஒருவருக்கும் நடத்துனருக்கும் விவாதம், வண்டி விரட்டி விரட்டி மிதமான வேகத்தில் மட்டும் போக வாலாஜா 10.30 மணிக்கு. முதல் வாடிக்கையாளர் இடத்தில் வேலைகளைப் பார்த்தால் எதிர்பார்த்திருந்த முன்னேற்றம் இல்லை. அது தொடர்பான வாக்குவாதம். சண்டையும் போட்டுக் கொண்டோம். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டாவது இடம். எதிர்பார்த்த அளவு பணி போய்க் கொண்டிருந்தது. இன்னும் சிறப்பாக இருக்கலாமே என்று ஆதங்கம்.

மூன்றாவது இடத்துக்குப் போயிருந்தவர்களிடமிருந்து தொலைபேசி. போக வேண்டாம் என்று முடிவு. கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பி விடுவோம் என்று ஐந்து மணிக்கு முன்பு பேருந்து பிடித்து விட்டேன். குமுதம். பாமரன், லீனா மணிமேகலை சச்சரவில் அடுத்த குத்து பாமரன் பக்கங்களில்.

போன ஆண்டு பணிமுறைகளில் பெரிய மாற்றங்கள் செய்த போது விளைவுகள் தெரிய ஒரு ஆண்டு ஆகி விட்டிருந்தது. இந்த ஆண்டு அப்படிக் கட்டுப்படி ஆகாது. ஓரிரு மாதங்களில் மாற்றங்களுக்கு உருவம் வந்து விட வேண்டும். போன ஆண்டு செய்த தாமதங்களைப் படித்துப் பார்த்து கவனமாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். 2007 ஜனவரி முதலான நாட்குறிப்புகள் இப்போது பயன்படும்.

எழுதுவதற்கு நிறையத் தோன்றுகிறது. எழுதாமல் விட்டுப் போவதாக மனத்தாங்கல். காலையில் சோம்பலில் தூங்கிக் கொண்டிருந்தால் மனத்தாங்கல் மட்டும்தான் மிஞ்சும்.

செவ்வாய், அக்டோபர் 09, 2007

அழுத்தங்கள்

அப்பாடா, மூச்சு விட ஒரு இடைவெளி. மூன்று நாட்கள் விடுப்பாக ஊர் சுற்றப் போய் திரும்பி வந்ததிலிருந்து எப்படி நாட்கள் ஓடின என்றே தெரியவில்லை. புதன் கிழமை தாமதமாக அலுவலகம் போய் நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு மாலையில் திரும்பி வந்து அந்தக் களைப்புக்கு வியாழன் காலையில் நேரம் கழித்து எழுந்திருந்து அன்று மாலையில் பெரியமேட்டில் சந்திப்பை முடித்து விட்டுத் திரும்பும் போது இரவு நேரமாகி தூங்க நேர்ந்தது.

வெள்ளிக் கிழமை விடியும் போதே வினோதமாக விடிந்து, கவனிக்காமல் விட்டவை எல்லாம் வந்து கடித்துக் கொண்டிருந்தன. மதியத்துக்கு மேல் பெரியமேட்டில் சந்திக்கப் போன வாடிக்கையாளர், குற்றம் குறைகளை எல்லாம் பிட்டு பிட்டு வைத்து விட்டார். 'இந்த சூழலில் உங்களைத் திருத்திக் கொண்டால்தான் வேறு போட்டியாளர்கள் வரும் போது தாக்குப் பிடிக்க முடியும்' என்று ஆறுதல் வேறு. சொன்னது எல்லாம் சரியான குறிப்புகள். பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டு, எல்லாவற்றையும் திருத்திக் கொண்டு விடுவதாகச் சொல்லிக் கிளம்பினேன்.

கடந்த மூன்று மாதங்களில் அவர்கள் தொழிற்சாலைகளில் ஒரு புரட்சியே நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். அது அவருக்கும் தெரியும். இப்போது அன்னியச் செலவாணி நாட்டியத்தில் காசை இழுத்துப் பிடிக்க வேண்டிய கட்டாயம். அதனால் கறாராக இன்னும் சிறப்பான சேவை கேட்கிறார். காசு எங்கும் போய் விடாது என்ற நம்பிக்கை. இருந்தாலும் உடனடி நெருக்கடி கடுப்பாக்கியது.

வெளியில் இறங்கி அலுவலகத்துக்குத் திரும்பும் வழியில் ராணிப்பேட்டையிலிருந்து ஒரு வாடிக்கையாளர் தொலைபேசி, மென்பொருள் அறிக்கையில் இருந்த தவறால் அவர்கள் பணியில் பெரிய குழப்பம் நிகழ்ந்து விட்டதாகச் சாடினார். நமக்குச் சிறு வழு, அவருக்கு தலையில் இடியே விழுந்தது போல. அலுவலகம் போய்ப் பார்த்தால் நம்ம குழப்படிதான். உற்பத்திச் சாலை சூழலை நன்கு புரிந்திருந்ததால் அவர்களின் கோபமும் புரிந்தது.

அடுத்த நாள் காலையில் நேரில் போய் அறிக்கையைச் சரி செய்து விட்டு நிறுவனத் தலைவரையும் பார்த்துப் பேசி விடுவது என்று முடிவு செய்தோம். வழக்கத்துக்கு மாறாக சனிக்கிழமை காலையில் ராணிப்பேட்டை பயணம். நிகழ்ந்த தவறுக்கு வருந்தி இனிமேல் அது போல நடக்காமல் பல நடவடிக்கைகளை ஆரம்பித்தோம். இழப்புக்கு ஈடாக அபராதம் கொடுக்கவும் தயாராகப் போனோம்.

அங்கு முந்தைய நாளே அழுத்தம் எல்லாம் வெடித்து வடிந்து போய் எல்லோரும் ஓய்ந்து போயிருந்தார்கள். நிறுவனத் தலைவர், அது வரை கணினி அறை பக்கம் எட்டியே பார்த்திராத உற்பத்தித் துறை தலைமை மேலாளர் எல்லோரும் வந்து என்னென்ன நடக்கிறது என்று கற்றுக் கொண்டு போனார்கள். நிகழ்ந்து விட்ட தவறே ஒரு படிக்கல்லாக அடுத்த நிலைக்கு எடுத்து போய் விட்டது.

காலையில் இருந்து மாலை ஐந்து மணி வரை அங்கு இருந்து விட்டு ராணிப்பேட்டையில் விட்டிருந்த பைக்கை சென்னைக்குக் கொண்டு வந்து விட முடிவுடன் கிளம்பினோம். பாதி தூரம் வரை கூட வந்தவர் ஓட்டினார். கையெழுத்து மங்கும் நேரத்தில் காஞ்சிபுரம் தாண்டி சுங்குவார் சத்திரம் வந்து விட்டிருந்தோம். மதியமும் சாப்பிடாத பசியில் அதற்கு முன்பிருந்த அறுசுவை விடுதியில் சாப்பிட்டு விட்டு நான் ஓட்ட ஆரம்பித்தேன்.

இருட்டி விட்டது. குளிர் காற்று, எதிரில் வரும் வண்டிகளின் முகப்பு வெளிச்சம் கண்ணைக் கூச வைக்க சமாளித்து ஓட்டி ஏழரை மணிக்கு போரூர் வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையும் வேலை நாள். முந்தைய திங்கள் கிழமை விடுப்பு எடுத்து போய் விட்ட எல்லோரும் ஈடு செய்ய வேலைக்கு வந்தோம். 2 பேர் மட்டும் திங்கள் வேலை பார்த்ததால் ஞாயிறு விடுமுறை. அதிலும் ஒருவர் சில மணி நேரங்களுக்கு வந்து விட்டார்.

மென்பொருளின் வழுவால் பெரிய நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு விட்டது என்பது எல்லோரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சனிக்கிழமை நான் இல்லாத போது கூட்டம் நடத்தி எல்லோரும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இரண்டரைக்கு எழுந்து எழுத ஆரம்பித்தால் ஒரு மணி நேர இறுதியில் உட்கார முடியாமல் அலைத்தது.

இரண்டரை மணி நேரம் இரு சக்கர வண்டியில் உட்கார்ந்து கொண்டு வந்ததற்கு ஓய்வு வேண்டாமா! மூன்றரை போல படுத்தால் உடலில் அனல் அடித்தது. மின்விசிறியை அணைத்து விட்டு, ஒரு டி சட்டையைப் போட்டுக் கொண்டு போர்த்திக் கொண்டு படுத்து விட்டேன். அப்படியே எட்டரை மணி வரை போய் விட்டது. எல்லோரையும் வரச் சொல்லி விட்டு நாம் மட்டும் காய்ச்சல் என்று ஒழிந்து கொண்டால் நன்றாகவா இருக்கும்!

எட்டே முக்காலுக்கு எழுந்து குளிக்காமலே கிளம்பிப் போய் விட்டேன். அலுவலகத்தில் மின்சாரம் தடை பட்டிருந்தது. இரண்டு பேர் ஏற்கனவே வந்து விட்டிருந்தார்கள். ஒன்பதரை, பத்து மணிக்குள் இரண்டு பேரைத் தவிர் வர வேண்டிய எல்லோரும் வந்து விட்டார்கள். வழக்கத்துக்கு அதிகமான பரிவும் கவனமும் காட்டினார்கள். வேலையில் அக்கறை கொடி கட்டிப் பறந்தது. ஆச்சரியமாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்யச் சொல்கிறார்களே என்று திட்டு விழுமோ என்று எதிர்பார்த்தால் அதற்கு எதிர்மறையான சுறுசுறுப்பு.

பல முறை சூடான தண்ணீர், மதியம் நல்ல சாப்பாடு என்று மாலைக்குள் உடல் இயல்புக்குத் திரும்பி விட்டிருந்தது. வேறு எந்த அலைச்சலும் வேண்டாம் என்று தங்கி விட்டதில் நல்ல ஓய்வு. மாலையில் நண்பன் ஒருவன் வந்து விட மூன்ற மணி நேரங்கள் ஓட்டமாக ஓடி விட்டன. கணினி, மின்னணு பொருட்களில் பயன்படும் சில்லுகள் எப்படித் தயாரிக்கப் படுகின்றன என்று ஒரு புத்தகத்தை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் அறிவாளி அவன். எழுதியிருந்து ஓரிரு பகுதிகளைக் காட்டினான். எளிமையாகப் புரியும்படி வந்திருந்தது.

அவன் கிளம்பிய பிறகும் பதிவுகள் படிப்பதிலும் ஆங்கிலக் கட்டுரைகள் படிப்பதிலும் சிறிது நேரம் போனது. ஒன்பதரைக்கு மேல்தான் வீட்டுக்கு வந்து உடனேயே படுத்து விட்டேன். குடிக்க வாங்கி வைத்திருந்த தண்ணீர் நான்கு நாட்களுக்கு மேல் ஆகி விட்டிருந்தது.

காலையில் விழிப்பு வரும் போது ஐந்தரை மணி. எழுந்திருக்கும் போது ஆறு மணி. மூன்றாவது சுமையாக துணிகள் ஊறிக் கொண்டிருந்தன. குடிக்கும் தண்ணீர் வாளியில் எறும்புகள் படை எடுத்திருந்தன. அதைத் தூய்மை செய்து விட்டு வெளியே வந்து குழாயில் பிடிக்க முடியுமா என்று நோட்டம் விட்டால். சற்றுத் தொலைவில் இருக்கும் குழாயில்தான் வருகிறது என்று முன்னாள் காவலாளியின் மனைவி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தார். கேட்டதும் ஊற்றிக் கொடுத்து விட்டார். பேசாமல் அவரிடம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு குடம் தண்ணீர் எடுத்துத் தரச் சொல்லி விடலாம். வாரம் 20 ரூபாய் பாட்டில் தண்ணீருக்குக் கொடுப்பதற்குப் பதிலாக இவரிடம் மாதம் 100 ரூபாய்கள் கொடுத்து விடலாம்.

ஒவ்வொரு வேலையாக முடிய ஏழு பத்து ஆனது. அதன் பிறகு தியானத்தில் அமர்ந்து தெளிந்த அமைதியான மனதுடன் கிளம்பினேன். மொத்தம் 5 பேன்டுகள் ஆகி விட்டன. ஒன்று 12 ஆண்டுகளுக்கு முன்பு டாடாவில் ஐரோப்பா பயணம் போகும் முன் தைத்த நீல நிற சூட்டுக்கான பேன்டு. அது கால் சட்டையாக பணி புரிய ஆரம்பித்து வெகு நாளாகி விட்டது. அதில் கால் பகுதியில் தையல் பிரிந்திருந்தது. இன்னொன்று மாமியார் எடுத்துக் கொடுத்தது. அதிலும் கால்பகுதி தையல் பிரிந்தது.

மூன்றாவது சாங்காயில் எடுத்திருந்த சீனப் பாணி தொள தொள கால்சட்டை. கொஞ்சம் இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருந்தாலும் இன்னும் நன்றாகவே இருக்கிறது. வெளிர் நிறத்தினதான அதை அணியக் கொஞ்சம் சுணக்கம்தான்.

ஆக போன ஆண்டு தங்கச்சி எடுத்துக் கொடுத்து ஒன்று, போன மாதம் அம்மா,அப்பா எடுத்துக் கொடுத்தது ஒன்று என்று இரண்டுதான் திருப்தியானவை. முதலிரண்டின் தையல் பிரிவைச் சரி செய்து விட்டால் மொத்தம் 5 கால்சட்டைகள் ஆகி விடும். வாரத்துக்கு 2 என்று மாற்றிப் போட்டாலும், மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் ஒன்றைத் திருப்பிப் போட வேண்டியிருக்கும். நல்ல ஆடம்பரம்.

கதை என்னவென்றால் இன்று காலையில் பார்த்தால் இரண்டாவதும் மூன்றாவதும், நான்காவதும் தேய்க்கப் போயிருந்தன. ஐந்தாவது தோய்த்துப் போட்டிருந்தேன். முதலாவதை போட மனமில்லை. அண்ணன் திருமணத்தில் கிடைத்த பல இடங்களில் தையல் விட்டுப் போன ஒன்றைப் போட்டுப் போய் தேய்க்கும் கடையில் துணி வாங்கி மாற்றிக் கொள்ளலாம் என்று கிளம்பினேன்.

பசியான பசிக்கு ஹாட்சிப்சில் வழக்கமான 4 இட்லிகள். அவர்களுக்குப் பழகிப் போய் விடும். உள்ளே நுழைந்தாலே நான்கு இட்லிகளுக்கு சீட்டு அடித்துக் கொடுத்து விடுவார்கள். வழக்கமான உற்சாகத்துடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கிளையின் மேலாளர் வேலை செய்வதைப் பார்ப்பதே தனிப் பாடமாக இருக்கும்.

பொதுவாக ஞாயிற்றுக் கிழமை திங்கள் கிழமை காலைகளில் தேய்க்கும் கடைகளில் வேலை அதிகமாக இருக்கும். சனி, ஞாயிறுகளில் துவைக்கப்பட்ட துணிகள் வந்து சேரும். அந்தக் கூட்டத்தில் சேர்ந்து விடக் கூடாது என்று முயன்றாலும் சில நேரம் முடியாமல் போய் விடும். இன்றும் காலையில் துணி கிடைக்காமல். மதியத்துக்கு மேல் வாங்கிக் கொண்டேன். 9 துணிகளுக்கு 27 ரூபாய். விலை ஏறி விட்டிருக்கிறது போலிருக்கிறது.

மென்பொருள் நிரல் எழுதுவதின் அழகும் நளினமும் போகப் போக ஆழமாகப் புரிபட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முடிவும் பல சாத்தியங்களில் ஒன்றுதான். இப்படி எடுக்கப்பட்ட முடிவுகளின் தொகுப்புகளில் ஆகச் சிறந்தது காலத்தை வென்று நீடித்து நிற்கும்.

அப்படியே முழுகிப் போய் விட்டேன். ஒவ்வொருவரும் தத்தமது பணிகளில் ஓடிக் கொண்டிருக்க நாள் நிறைவாகவே போனது. மதியத்துக்குச் சற்றுமுன் வியாழக்கிழமை சந்தித்த வாடிக்கையாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. அன்று பேசும் போது 'நாங்கள் முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம். மாதத்துக்கு இவ்வளவு கொடுத்து விடுங்கள்' என்று சொல்லியிருந்தோம். யோசித்துச் சொல்வதாகச் சொன்னவர். இன்று அழைத்து 'ஏன் அந்தத் திட்டப் படி இன்னும் ஆள் யாரையும் அனுப்பவில்லை' என்று அதட்டுகிறார். 'கட்டணத்தை மட்டும் பேசிக் கொள்ளலாம் என்றுதான் சொன்னேன். இன்றைக்கு ஆள் போயிருக்க வேண்டுமே' என்று விரட்டினார். அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு நாளையிலிருந்து வேலையை ஆரம்பிக்க முடிவு செய்து விட்டோம்.

அடுத்த மூன்று மாதங்களில் நெருக்கடி அதிகமாகத்தான் போகிறது. எல்லோருமே ஏற்றுமதி வருமானம் குறைந்து போய்ச் செலவுகளில் கை வைக்க ஆரம்பிப்பார்கள். அதற்குக் கூட நி.வ.தி மென்பொருளின் தேவை அதிகமாக வேண்டும். இப்போது சேவை கொடுத்து வரும் வாடிக்கையாளர்களிடமே ஒட்டிக் கொண்டு பொருளையும் சேவையும் மெருகேற்றி, சுழற்சி மீண்டும் மேல் வரும் போது பளபளப்புடன் வெளி வர வேண்டும்.

சீனாவில் நிலைமை இன்னும் மோசமாம். நம்ம ஆட்களாவது பாதிக்கு மேல் ஏற்றுமதி ஐரோப்பாவுக்கு அனுப்புகிறார்கள். சீன ஏற்றுமதியாளர்களின் சந்தையே அமெரிக்காதான். ஐரோப்பாவிற்குள் நுழைய பல தடைகள். இறக்குமதி செய்பவர்கள் சீனத் தயாரிப்புகளுக்கு கூடுதல் வரி கொடுக்க வேண்டியிருக்கிறது.

சீனாவின் ரென்மின்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க கட்டுப்பாடு தளர்த்தப் பட்ட பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இருந்து வந்த 8.3 நிலையிலிருந்து சரிந்து சரிந்து இன்றைக்கு 7.5க்கு வந்து விட்டிருக்கிறது. 14% இழப்பு. ஆனால், அவர்கள் புத்திசாலியான தொழிலதிபர்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்காவில் நிறுவனங்களையும் சொத்துக்களையும் வாங்க ஆரம்பித்து விடுவார்கள். அவற்றைப் பயன்படுத்தித் தம் தொழிலை விருத்திச் செய்து கொள்வார்கள்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று சொல்வது போல எந்த சிக்கலும், நெருக்கடியும் திறமைசாலிக்கு என்ன பொருட்டு! அதையும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு கலக்க ஆரம்பித்து விடுவார். திறமை இல்லாமல் நொள்ளை சொல்லிக் கொண்டிருப்பவருக்கு மிகச் சிறந்து சூழல் கிடைத்தாலும் அதே வாயடிதான் மிஞ்சியிருக்கும்.

மாலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். ஏழே முக்காலுக்கு உட்கார முடிந்தது. எழுத ஆரம்பித்ததும் ஒரு தொலைபேசி அழைப்பு. இத்துடன் தூங்கப் போய் விட்டால் காலையில் இன்னொரு நாளைப் புதிதாக ஆரம்பிக்கலாம்.

'ஒனக்கும் அழுத்தம் வர வேண்டும்பா' என்று சொன்னார் வெள்ளிக் கிழமை சந்தித்த வாடிக்கையாளர்.

ஞாயிறு, செப்டம்பர் 23, 2007

ஞாயிற்றுக் கிழமை மாலை எண்ணங்கள்

"நான் சின்ன பையனாக இருந்த போது எங்க வீட்டுத் தோட்டத்தில் ஒரு உயரமான மரம் இருந்தது. இந்த மரத்தின் உச்சியில்தான் சொர்க்கம் இருக்கிறது என்று எப்படியோ கேள்விப்பட்டிருந்தேன். நானும் எங்க அப்பா போல வளர்ந்து மரத்தின் மீது ஏறி உச்சிக்குப் போய் விட்டால் சொர்க்கம் கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அப்போது மகிழ்ச்சியாக இருந்தேன்.

இப்போது வளர்ந்து விட்டேன். நிறையத் தெரிந்து கொண்டேன். மரத்தின் உச்சியில் இலைகள்தான் இருக்கின்றன என்று பாடப்புத்தகங்கள் சொல்லித் தந்து விட்டன.

சின்ன வயது அறியாமை தந்த மகிழ்ச்சி தொலைந்து போய் விட்டது. "

இப்படி ஒரு ஆங்கிலக் கவிதை பள்ளிப் பாடத்தில் படித்தது. ஏதோ தெரிந்து கொண்டு விட்டோம் என்று உணரும் போது அறியாமையில் இருந்த பொய்யான மகிழ்ச்சி/நிம்மதி தொலைந்து போய் விடுகிறது.

நான்கும் நான்கும் எட்டு என்று கணக்கில் சொன்ன நம்பிக்கை இன்னும் தொலையவில்லை. பாடத்தின் இறுதியில் இருக்கும் பயிற்சி வினாக்களிலிருந்துதான் தேர்வில் கேட்பார்கள் என்று சொல்லிப் படிக்க வைத்த ஆசிரியரின் வார்த்தை தந்த நிம்மதி வேறு கேள்வியை வினாத்தாளில் பார்த்த நாள் தொலைந்து போனது. புத்தகத்தில் படிக்கவே செய்யாத ஒன்றைக் கூடக் கேட்பார்கள் என்று உணர்ந்த அன்று வந்து படபடப்புக்கு அளவே இல்லை.

17 வயதில் பள்ளி இறுதி வகுப்பு, அப்புறம் படிப்பு, அப்புறம் ஏதோ ஒரு வேலை, திருமணம், குழந்தைகள், அவர்கள் பெரிதாகி விடுவார்கள் என்று ஏதோ கணினி நிரல் எழுதி வைத்தது போல எல்லாம் நடந்து விடும் என்று நம்பிக்கையுடன் ஓடிக் கொண்டிருந்த போது சந்தித்த புதிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விட்டன. இதைத்தான் இவ்வளவு காலம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்களா!

நேற்று மத்திய ரயில் நிலையத்தில் நிற்கும் போது பத்தே முக்கால் மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.
'ஓ நெகடிவ் பிளட் குரூப் யாராவது தெரியுமா',
'ஓ தெரியுமே. நான் கூட ஓ நெகடிவ்தான். ஆனா கடைசியா ரத்தம் கொடுத்து மூன்று மாதம் முடிஞ்சிருக்காதே, பார்த்துட்டு கூப்பிடட்டுமா',
'இல்ல நாளைக்குக் காலைல ஆறரை மணிக்கு பிளட் வேணும்'
'வீட்டுக்குப் போய்ப் பார்த்து விட்டு பதினொண்ணரை மணிக்கு சொல்லி விடுகிறேன்'

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைப்பு.
'95% தேவை இருக்காதாம். அறுவைச் சிகிச்சை நடக்கும் போது ஒரு அவசரத்துக்கு நீங்க வந்தா போதுமாம். இரண்டு மாதங்கள் ஆகியிருந்தாலே போதுமாம். வந்து விட முடியுமா!'.
'ஓகே, நோ பிராப்ளம். காலைல ஆறரை மணிக்கு வந்துடறேன்'
'இல்ல இல்ல, அஞ்சரை மணிக்கு ஆரம்பிக்கப் போறாங்களாம். உங்களுக்குத் தொந்தரவு தரதுக்கு சாரி. அஞ்சரைக்கு வர முடியுமா'.
'சரி வந்துடறேன்'

ரிப்பன் கட்டிடத்துக்கு எதிர் சாலை நிறுத்த விளக்கைத் தாண்டும் போது மீண்டும் தொலைபேசி.
'காலையில் உங்களை அழைத்து வர அனுப்பட்டுமா'
'இல்லங்க நானே வந்துர்றேன்.'

வீட்டுக்கு வரும் போது பதினொண்ணே முக்கால். தூங்கப் போகும் போது பன்னிரண்டு. கண்ணைச் சொக்கும் நேரத்தில் ஓரிரு முறை கண் விழிப்பு. அப்புறம் தூங்கி விட்டு விழிக்கும் போது அதிகாலை இரண்டரை மணி. இன்னும் ஒரு மணி நேரம் தூங்கி விட்டு நான்கு மணிக்கு எழுந்திருக்கலாம் என்று இழுத்துப் போர்த்திக் கொண்டால், அடுத்த விழிப்பின் போது நான்கு ஐம்பது நிமிடங்கள். கண்கள் எரிய எழுந்து, வாயில் பற்பசை நுரையோடு நிற்கும் போது தொலைபேசி அடித்தது.

'இழ்ழும் அங்சி நிமிசத்தில கிளம்பிர்றேன்' என்று சொல்லி விட்டாலும் வெளியே வண்டி எடுக்கும் போது 5.15 ஆகி விட்டிருந்தது. அதிகாலை சில்லென்ற குளிர். தலைக்கவசத்துக்கு மீண்டும் ஒரு நன்றி சொல்லிக் கொண்டே அதிகாலையிலேயே நடக்கக் கிளம்பி விட்டிருந்தவர்களைத் தாண்டி சாலையைப் பிடித்தேன்.

ராமாபுரம் திருவள்ளுவர் சாலையைத் தாண்டி மவுண்ட் சாலையில் ஏறும் போது அதிகாலை அசட்டையுடன் ஓட்டிய வண்டிகளைத் தாண்டி வேகம் பிடித்தேன். கண்ணாடியும் போட்டு, தலைக்கவச முக மறைப்பும் சேர்ந்து கொண்டால் எதிரில் வரும் வண்டிகளின் முகப்பு வெளிச்சம் கண்களை மறைத்து விடுகிறது. கத்திப்பாராவில் ஏதோ நினைவில் வாகனம் பார்க்காமலேயே தாம்பரத்திலிருந்து வரும் பாதையைக் கடந்து விட்டு அந்த நேரத்திலேயே போக்குவரத்துக் காவலர் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த ஈக்காட்டுத் தாங்கலிருந்து வரும் சாலையைக் கடந்து கிண்டி தாண்டும் போது ஒரு வழிப் பாதை நினைவுக்கு வந்தது.

அதிகாலை நேரத்தில் விலக்கு அளித்திருப்பார்கள் என்று ஒரு சின்ன நப்பாசை நடக்கவில்லை. விரட்டி விரட்டி ஆளுனர் மாளிகை அருகில் வலது பக்கம் திரும்பும் போது அகலமாகத் தெரிந்த திருப்பப் பாதை பயமுறுத்தியது. எதிரில் ஏதோ வண்டி வருகிறதோ என்று!

வேளச்சேரி சாலையில் திரும்பி போன தடவை வந்ததற்கு பெரிதும் மாறி விட்ட மேடு பள்ளங்கள் நீக்கப்பட்டு விட்ட சாலையில் ஒரு சாலை நிறுத்தத்தை தாண்டியதும் சந்தேகம் வந்து விட்டது. திரும்பியிருக்க வேண்டுமோ! இல்லையாம். நேராஆஆப் போனால் வேளச் சேரி பேருந்து நிலையம் வந்து விடும் என்று அந்த நேரத்தில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் வழி காட்டினார்.

தரமணி நோக்கிப் போகும் சாலையில் வலது பக்கம் இருக்கும் மருத்துவமனை என்று அடையாளம். கிட்டத்தட்டத் தவற விட்டு விட்டேன். குறுகலான நுழைவாயிலுடன், சின்ன பெயர்ப்பலகையுடன் ஒரு மருத்துவமனை.

அறுவைச் சிகிச்சை ஆரம்பித்து விட்டிருந்ததாம். கூட இருந்தவர் பேசப் பேச அவரது கனவுகள் விரிந்தன. இந்திய இளைஞர்கள் அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு அவரையும் உள்ளூருக்கு ஒரு பகுதியாவது வேலை செய்யச் சொல்லி விட்டு ஏழு மணி அடிக்கும் போது சிகிச்சை முடிந்து விட்டது, ரத்தம் தேவையில்லை என்று தகவல் வர நன்றி பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

ஒன்பதரை மணிக்குச் சாப்பிட வரச்சொல்லியிருந்த இடத்திலும் அறுவைச் சிகிச்சை குறித்து பேச்சு. பேசும் போது இருமல் வந்து கொண்டே இருந்ததாம். ஆசிரியரான அவர் பாடம் எடுக்கப் போகும் போது தண்ணீர் குப்பியுடன்தான் போக வேண்டியிருந்ததாம். பிரபல மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்தால், உங்க கல்லீரல் பெரிதாகி விட்டது. மூக்கில் எலும்பு வளைந்து விட்டது. அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டியிருக்கும் என்றாராம் "மருத்துவர்". 'நானும் தயாராகி விட்டேன்'.

'உடனேயே மருத்துவமனையில் சேர்ந்து விடுங்கள். அறுவைக்கு நாள் குறித்து விடுவோம் என்று தொலைபேசி அழைப்புகள் பறக்கின்றன. ஒரு கட்டத்தில் மறுமுனையில் அறுவைக்குப் பிறகு தேறுவதற்குத் தங்கலுக்கு அறை இருக்காதே என்ற கேள்விக்கு, அதனால் என்ன வராந்தாவில் ஒரு கட்டில் போட்டுக் கொள்ளலாம் என்று கேட்டபிறகுதான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன்'

இன்னொரு கருத்து கேட்டு விட்டு வருகிறோம் என்று வெளியே வந்தவர்கள் அந்தப் பக்கமே தலை வைக்கவில்லையாம் அவர்கள். இன்னொரு கருத்து சொன்ன மருத்துவர், 'வயதானால் கல்லீரல் மாறத்தான் செய்யும். மூக்கில் எலும்பு வளைந்து இருப்பதும் பெரிய தொல்லை கிடையாது' என்று சொல்லி விட இன்றைக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த நண்பர்.'

நான் வழக்கம் போல, 'கொலை கொலையாளிகள்' என்று ஆரம்பிக்கப் பார்க்கப் பேச்சை மாற்றி விட்டார்கள்.

வீட்டுக்கு வந்து குளித்து விட்டுக் கிளம்பி தியாகராயநகர். கடை கடையாக அலைந்து பொருள் பார்ப்பது சீக்கிரம் சோர்வடைய வைத்து விடுவது. அவ்வளவு கூட்டமும் ஒரு தாக்கமாக இருக்கலாம். 50% வரை தள்ளுபடி என்று வெளியே போட்டு விட்டு 5%லிருந்து ஆரம்பிக்கிறார்கள். இன்னொரு கடையில் 999 ரூபாய்க்கு மூன்று பேன்டு, மூன்று சட்டைகளுக்குத் துணி விற்கிறார்களாம். 'தீபாவளி வரை இந்தச் சலுகை விலை இருக்கும், நல்லா யோசிச்சு வந்து அப்புறமா வாங்கினாலும் போதும்' என்று அறிவுரை சொன்ன உண்மையான கடை ஊழியர். ஏற்கனவே மூன்று பேன்டுகள் ஆகி விட்டன. இதுவும் சேர வேண்டாம் என்று வெளியேறி விட்டோம்.

இட்லி அவிக்க தட்டு ஒன்று.

சாப்பாட்டுக் கடையில், 'பாம்பே மீல்ஸ், மெட்ராஸ் மீல்ஸ், டிஃபன் எல்லாம் மேலே போங்க. நிறைய இடம் இருக்கு, ஏசி.' என்றவர் 'டோக்கன் வாங்கினவங்க எல்லாம் அந்தப் பக்கம் போங்க' என்று கீழேயே வழி காட்டினார். கல்யாண வீட்டுச் சாப்பாட்டுக் கூடம் போல வரிசையாக மேசைகள் போடப்போட்டு, பிளாஸ்டிக் நாற்காலிகள்.

இரண்டு மணி நெருங்கும் போதும் நாலைந்து பேர்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடிக்கும் போது கூடம் நிறையும் அளவுக்கு ஆட்கள் வந்து விட்டார்கள். எல்லோருமே பொருட்கள் வாங்கிக் களைத்தவர்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து நிற்கும் போது என்று இரண்டு முறை. டோக்கன் வாங்கிக் கொண்டிருக்கும் கணவனை ஆவேசமாக தான் இந்த மாதிரி கூடத்தில் சாப்பிட முடியாது என்று காசைத் திருப்பிக் கொடுக்க வைத்த இரண்டு திருமதிகள். அப்படியே மாடிக்கு இழுத்துப் போய் விட்டார்கள்.

பொதுவாக பெண்களுக்கு இது போன்று எளிமையான இடங்களில் சாப்பிடுவது விருப்பமாக இல்லை. தெருவோரக் கடையில் டீ குடிக்கப் போவதைக் குறித்து அப்பாவும் அம்மாவும் கடுப்பாவதைப் பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கு குறைவான விலையில் முடித்து விட வேண்டும். அம்மாவுக்கு அந்தக் கடையிலா என்று கடுப்பு.

ஒன்று, தூய்மையாக இருக்காது என்ற நியாயமான காரணம். தூய்மையாக இருக்கும் இடங்களிலும் சிறிய விடுதிகளில் பெண்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. அப்படி சின்னக் கடைகளில் நுழைந்தால் எல்லாம் ஆண்களாக இருப்பார்கள் என்றும் காரணம் இருக்கலாம்.

'நகையெல்லாம் போடாம போனா நம்மை ஒண்ணும் இல்லாதவங்க என்று மதிக்க மாட்டாங்க' என்பதும் ஒரு பொதுவான கருத்தாக இருக்கிறது.

'இப்ப எல்லாம் கிரெடிட் சிஸ்டம் வந்திருச்சி. நாங்க போடுறதுதான் மதிப்பெண். தேர்வு வைத்தாலும் சரி, அப்படியே போட்டாலும் சரி, ஆசிரியர் கையில்தான் எல்லா பவரும். இதப் பயன்படுத்தி வகுப்பில் 60 மாணவர்களிடம் ஆளுக்கு 3000 ரூபாய் வாங்கி விடுபவர்களும் உண்டு'

'ஆம்பிளைங்கல்லாம் மோசம் கிடையாது. உங்க கிட்ட படிச்சவன் 50000 ரூபாய் சம்பளம் வாங்க ஆரம்பிச்சிட்டான். நீங்க இன்னும் அந்தப் பிச்சைக் காசைத்தான் சம்பளமா கொண்டு வரீங்க என்று மூக்கைச் சிந்துவது யார்' என்று அருகில் இருந்தவர் ஒரு குத்து விட, அதில் இருந்த அடாவடியையும் மீறி ஒரு பகுதியினராவது அப்படி இருக்கும் கசப்பான உண்மை குத்தியது. தவறான வழியில் சம்பாதித்த கணவனை வெளியில் துரத்தினாள் மனைவி என்று இது வரை கேள்விப் பட்டிருக்கிறோமா?

புதன், ஆகஸ்ட் 29, 2007

ஹூம்

நேற்றைக்கு மடிக் கணினியின் ஒரு பிரிவில் பெடோரா கோர் 7 பதிப்பை நிறுவிக் கொண்டேன். அதற்கு முன்பு வாடிக்கையாளர் ஒருவரின் புதிய கணினியில் லினக்சு நிறுவி அனுப்ப வேண்டிய வேலை. apic, apci என்ற நேரம், மின்விசை சேகரிப்பு கருவிகளில் இருந்த கோளாறுகளால் சூசே, பெடோரா எதுவும் வேலை செய்யவில்லை. டெபியனில் என்ன பழுது என்று வந்த தகவலைப் பார்த்து அதற்கேற்ற தேர்வுகளை அமைத்து நிறுவி முடித்தேன்.

இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு இயங்குதளத்தை நிறுவுவது நமக்குத்தான் சிரமம் என்பார். ஆரம்ப காலங்களில் பெடோரா கோர் போட்டுக் கொண்டிருந்தோம். பதிப்பு 2, 3 காலங்களில் சொதப்பலாகி விடவே சூசேவுக்கு நகர்ந்தோம். இப்போது டெபியன். எல்லாமே லினக்சு என்றாலும் இடைமுகங்களில் சின்னச் சின்ன வேறுபாடுகள் உண்டு. கட்டளை இடைமுகத்தைப் பயன்படுத்தினால் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். அந்த பொறுமையும் ஆர்வமும் இல்லாதவர்களுக்குத்தான் சிரமம்.

காலையில் வேலைகளில் கலந்து கொண்டேன். எதற்கு இவ்வளவு கஷ்டப்படுகிறோம். வெந்தால் தின்போம், விதி வந்தால் சாவோம் என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதானே என்ற சலிப்பு. வழியில் சரவணபவனில் நிறுத்தி சாப்பாடு சாப்பிட்டேன். அப்படி காரமும், காய்களுமாகச் சாப்பிடாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியே அலுவலகம் வந்து கணினியை எடுத்துக் திரும்பும் வழியில் கடையில் 6 கேக்குகள், ஒரு பிரெட், சீடை பொதி ஒன்றும் வாங்கிக் கொண்டேன்.

வீட்டுக்கு வந்ததும். சீடைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு நொறுக்கித் தீர்த்தேன். அப்படியே போய்ப் படுத்துக் கொண்டேன். தியானமாவது ஒண்ணாவது. காலையில் ஆறு மணி வரை இழுத்து இழுத்து அடித்தும் அதற்கு மேல் தூங்க முடியவில்லை. எழுந்து குளித்து தியானம். தியானம் செய்யும் போது இருபது நிமிடங்களுக்கு கண்களைத் திறக்காமல், நிமிர்ந்து முதுகை குறுக்காமல் இருக்க வேண்டும் என்று உறுதி. அப்படியே முடித்துக் கொண்டேன். ஆப்பிள் பழங்கள், பிரெட், கேக், சீடை, கடும் காபி என்று விளக்கமான காலை உணவு. பெட்டியைத் தூக்கிக் கொண்டு அலுவலகம்.

அலுவலகத்தில் இன்னும் வேலை குறை இருந்ததை முடித்துக் கொண்டிருந்தார்கள். வெளியில் அமர்ந்து கோப்புகளை ஒழுங்குபடுத்தினேன். எழுதுவதற்கும் இது வரை எழுதியவற்றை ஒரே அடைவில் நகர்த்தி விட்டேன். அப்புறம் வேலை ஆரம்பித்தது.

கடையில் போய் எலுமிச்சம் பழம் வாங்கி வந்து தேநீர் போட்டுக் கொண்டேன். பிஸ்கட்டுகள் சின்ன சின்னவை. மதிய முட்டைக் குழம்புடன், ரசத்துடன், முட்டைகோஸ் துவரனுடன், வற்றலுடன் சாப்பாடு அதுவும் தேவைக்கதிகமாகவே போட்டுக் கொண்டேன். சாப்பிட்ட பிறகு லெதர்லிங்க் தமிழ் பதிப்புக்கான வேலைகளை ஆரம்பித்தேன். அதற்கிடையே வழி தவறி படிக்க நிறுவப் போய் விட்டேன். இயங்கு தளம் நிறுவும் போது கால்வின் ஹாப்ஸ் படக் கதைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

மடிக்கணினியில் பெடோரா போட்டு முடிக்கும் போது பத்து மணி தாண்டி விட்டது. பெடோராவில் தமிழ் ஆதரவு நிறுவுதலில் இருந்து, கிடைத்தது. கேடியி, ஜினோம் இரண்டிலும் தமிழ் இடைமுகம் இருந்தது. SCIM தமிழ்ப் பொதிகளுடன் கொடாநிலையாக இருந்தது. xkbயில் மட்டும். தமிழ் நெட் 99 கிடைக்கவில்லை. இண்ட்ஸ்கிரிப்டு, பழைய தட்டச்சு முறை, இவற்றுடன் டேப், திஸ்கி போன்ற எழுத்துருக்களுடன் இரண்டு தட்டச்சு முறைகள். 99ஐக் காணவில்லை.

இன்று காலையில் எழுந்து சூசே பிரிவில் இருந்து கோப்புகளை பெடோரா பிரிவுக்கும் கிடைப்பது போல அமைத்துக் கொண்டேன். எதில் நுழைந்தாலும் எல்லோ கோப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்று காலையில் ஐந்தேகாலுக்குப் பிறகு உறங்க முடியவில்லை. இரவிலும் தூங்கும் முன்பு 20 நிமிடங்கள் உறுதியான தியான நேரம். அதனால் நல்ல தூக்கம் கிடைத்திருக்க வேண்டும். எழுந்த பிறகு பல் தேய்த்து விட்டுத் தரையைப் பெருக்க ஆரம்பித்தால் குனிய முடியாமல் முதுகில் வலி. முதுகெலும்பா என்று தோன்றினாலும், வாயுத் தொல்லை என்று புலப்பட்டு விட்டது. குளிப்பதை ரத்து செய்ய முடிவு செய்தேன்.

அப்படியே கோதுமை மாவு, ரவை கலக்கி வைத்து விட்டு, வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் வெட்டி சேர்த்து வதக்கி, உப்பும் சாம்பார் பொடியும் போட்டு இறக்கி வைத்து விட்டுக் கை கால் கழுவி விட்டு வந்தேன். அதன் பிறகு 20 நிமிடங்கள் தியானம் அதிலேயே முதுகில் நின்று வாயு நகர்ந்து போய் விட்டது. பாதியில் எதற்கோ முதுகை வளைத்தால் வலி மாயமாகி இருந்தது. எழுந்து பார்த்தால் பக்கவாட்டாக மிக லேசான வலி, அவ்வளவுதான்.

நேற்று வாங்கிய பிரெட்டில் மிச்சத் துண்டுகளை வாட்டி தேன் தடவி, கோதுமை தோசை - வதக்கி வைத்ததை அரைத்த தக்காளி சட்டினியுடன், துண்டுகளா வெட்டிய ஆப்பிள் பழம், கடும் காபி என்று மீண்டும் விரிவான காலை உணவு. வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு ஆடைகளை மாட்டிக் கொண்டு உட்கார்ந்தேன்.

எட்டரை மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும். நிறுவனத்தில் பங்கேற்க விரும்பும் ஒருவரை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். அவருடன் பேசி முடித்த பிறகு புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகச் செய்தி உருவாக்கம். அதன் பிறகு நிரல் வேலைகளைச் சரிபார்த்து நாளைக்குத் தயாராக முடிக்க வேண்டும். அறிக்கை விபரங்களையும் முடித்து விடலாம்.