என்னைப் பற்றி

சனி, பிப்ரவரி 28, 2009

நடைமுறை உலகம்

நேரம் 3.34. நான்காவது நாளாக அதிகாலையில் எழுந்து கொண்டிருக்கிறேன். புதன் கிழமை காலையில் எழுந்து தொடர்ந்து ராணிப்பேட்டை போய் வருவது வரை அழகாக அமைந்து விட்டது. வியாழக் கிழமை இடையில் மீண்டும் படுத்து கண்ணயர்ந்து சொதப்பினேன். நேற்றைக்கு பிரமாதமாக அமைந்து விட்ட நாள். மாலையில் மனதை தொந்தரவு படுத்தும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டி வந்து விட்டது. சரி, தவறு என்று நியாயப்படுத்த முடியாத விளிம்பு நிலை முடிவுகளில் இன்னொன்று.

தோல் தொழில் நுட்ப பட்டதாரிகளின் சங்கத்தில் போன ஆண்டு செயற்குழு உறுப்பினராக நியமித்தார் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். மாதா மாதம் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். இடையில் இரண்டு மாதங்களைத் தவிர எல்லாக் கூட்டங்களுக்கும் போய்க் கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

உறுப்பினர்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும், நன்கொடைகளை நம்பி காலம் தள்ளாமல் கணிசமான கையிருப்பு திரட்ட வேண்டும், நன்கொடைகள் தரும் நிறுவனங்களுக்கும் பதில் ஆதாயம் கிடைக்கும் படி சங்கத்தின் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று உருப்படியான பேச்சுக்கள் முதல் கூட்டத்தில் நடந்தன. இணையம் வழியாக ஒருங்கிணைப்புக் கருவிகள் பயன்படுத்தலாம் என்பதற்கு பெரிய ஆர்வம் இல்லை. அதை அப்படியே விட்டிருந்தேன்.

'பணம் திரட்டுவதற்கு உறுப்பினர்களிடமிருந்து நன்கொடை வாங்க வேண்டும். நன்கொடை வாங்குபவர்களுக்கு வரி விலக்கு கிடைத்தால் கொடுப்பவர்கள் இன்னும் ஆர்வமாகக் கொடுப்பார்கள்' என்று ஒருவர் முன் மொழிய அது பற்றிக் கொண்டு விட்டது. வருமான வரிச்சட்டத்தின் 80G பிரிவின் கீழ் சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்து விட்டால் அது நடந்து விடும்.

இதற்கு இரண்டு வலுவான காரணங்கள்

1. கையிருப்பு கணிசமாக இருந்தால்தான் சங்கம் உறுதியாக செயல்பட முடியும்.
2. 80G பிரிவில் பதிந்து கொள்வது சங்கத்தின் செலவுகள் சரியான வழியில்தான் இருக்கின்றன என்று வெளியாருக்கு தெரிவிக்கும் முத்திரையாக இருக்கும்.

இது வரை சிக்கல் எதுவும் இல்லை. 80G பிரிவுக்கு தகுதி பெற நடைமுறை விதிகளில் மாற்றுக் கருத்துகள் ஆரம்பித்தன:

1. மொத்தச் செலவுகளில் 75% முதல் 80% வரை சமூகநல அல்லது கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் செலவிடப்பட்டிருக்க வேண்டும் அப்போதுதான் 80G கிடைக்கும்.

நமது செலவுகளில் பெரும்பகுதி ஆண்டு தோறும் நடக்கும் எல்லா உறுப்பினர்களுக்குமான சந்திப்பில் வழங்கப்படும் உணவுக்கான செலவும், பொதுக்குழுக் கூட்டத்தில் வழங்கப்படும் உணவுக்கான செலவும்தான். இந்த இரண்டையும் எப்படி சமூகநல அல்லது கல்வி தொடர்பான நடவடிக்கை என்று காட்டுவது?

2. 80Gக்கு தொடர்பில்லாத ஆனால் எல்லா சங்கங்களுக்கும் பொருந்தும் ஒரு விதி: ஆண்டு இறுதியில் உபரியாக இருக்கும் கையிருப்புக்கு வருமான வரி கட்டியிருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் இதை எடுத்துச் சொல்லாத தணிக்கை அலுவலரால் அப்படி வரி கட்டப்படாமலேயே இருந்து வந்தது. எல்லாவற்றையும் சேர்த்து இந்த ஆண்டில் கட்டி சீர் செய்து கொள்ள வேண்டும்.

எப்படியோ 80G பிரிவில் அங்கீகாரம் வாங்கி விட வேண்டும் என்று தலைவர் முடிவு செய்து விட்டார். நவம்பர், டிசம்பர் கூட்டங்களுக்கு என்னால் போக முடியாமல் போய் விட்டது. அந்த நேரத்தில் இதை விவாதித்து முடிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். போன மாதம், இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்தன.

பழைய வரி பாக்கி செலுத்துவது, 75% முதல் 80% வரை செலவுகளை சமூகநல அல்லது கல்வி வளர்ச்சிக்காகத செலவழிப்பதாக அமைத்துக் கொள்வது இரண்டுக்கும் வழிமுறைகள் ஆராயப்பட்டன. ஆண்டுதோறும் நடக்கும் கூட்டங்களை மாணவர்கள், தொழில் துறை உறவாடல் என்று வைத்துக் கொண்டால் கல்வி வளர்ச்சிக் கூட்டம் என்று சொல்லி அதில் ஆகும் செலவை கல்வி தொடர்பான நடவடிக்கைக்கு செலவிட்டதாகக் காட்டலாம்.

'அப்படி 75% முதல் 80% வரை செலவுகளை மறுசீரமைத்துக் காட்டுவது 3 ஆண்டுகளுக்காவது நடந்திருக்க வேண்டும். அதை தவிர்க்க புதிதாக ஒரு சங்கத்தை ஆரம்பித்து அந்த சங்கத்தின் துணைச் சங்கமாக இதை அமைத்துக் கொள்ளலாம். அந்தச் சங்கத்தின் நடவடிக்கைகளை சமூக நல பிரிவின் கீழ் ஆரம்பத்திலிருந்தே காட்டலாம். சில ஆண்டுகளில் இந்த சங்கம் புதிதாக ஆரம்பிக்கப்படவிருக்கும் சங்கத்தில் கரைந்து போய் விடலாம்' என்று ஒரு திட்டம் முன்மொழியப்பட்டது.

'ஆண்டில் திரட்டிய பணத்தை முழுவதுமாக செலவழித்து விட்டால் வரி கட்ட வேண்டிய தேவை கிடையாது. ஆனால், புதிய ஆண்டில் ஏதாவது அவசரத் தேவை வந்தால் கையிருப்பு இல்லாமல் சிரமமாக இருக்கும். இந்த ஒரு காரணத்துக்காக கணக்கு வழக்கில் இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமா?'

'சங்கத்தின் அமைப்பையே மாற்றி நாளடைவில் சங்கத்தை மறையச் செய்யும் அளவுக்கு திட்டமிட செயற்குழுவுக்கு உரிமை கிடையாது.'

'வரி விலக்கு என்பது ஒரு துணைத் தேவைதான், சங்கத்தின் நடவடிக்கைகளை வரி விலக்கு நோக்கத்திலேயே நடத்துவது நம்மை நாமே குறுக்கிக் கொள்வது போலாகி விடும். நமது நேரத்தையும் நடவடிக்கைகளையும் உறுப்பினர்களின் நலம் பேணும் வகையில் அமைத்துக் கொள்வது வளர்ச்சிக்கு வழி வகுக்கும்'

இப்படி நான் அந்தக் கூட்டத்திலேயே மாற்றுக் கருத்து சொன்னேன். வேறு யாரும் எதிர்த்துக் குரல் எழுப்பாமல் இருக்க எனது எதிர்ப்பு கொஞ்சம் இடறலாகத்தான் இருந்திருக்கும். இருந்தாலும் 'சரி என்று பட்டதை சொல்வதற்குத்தானே நம்மை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்?' புது சங்கம் ஆரம்பிக்கும் திட்டங்களை அத்தோடு கைவிட்டு விட்டார்கள்.

இந்தக் கூட்டத்தில் மீண்டும் செலவினங்களை வகைப்படுத்தும் விவாதம் தொடர்ந்தது. இதற்கிடையில் பிப்ரவரி 2ம் தேதி ஆண்டு விருந்தில் வரவேற்புப் பலகையில் மாணவர்கள், தொழில் துறையினர் சந்திப்பு என்று பெயர் கொடுத்திருந்தார்கள். விருந்து முடிந்து பணம் கட்டும் போது பில்லை இரண்டாகப் பிரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். கட்டணத்தை காசோலையாக இல்லாமல் பணமாகக் கொடுத்தார்கள்.

இது எல்லாம் இருந்தால் கணக்குகளை 80G தகுதி பெறத் தேவையான படி அமைத்துக் கொள்ளத் திட்டமிட்டுக் கொண்டார்களாம். அப்போதே நிறைய நிரடியது. சரி, உலக வழக்குக்கு இப்படித்தான் நடக்கும் என்று சமாதானப்பட்டுக் கொண்டேன்.

நேற்றைய கூட்டத்தில், 'விருந்துக்கான செலவை ஒரே மாதத்தில் செலவழித்ததாகக் காட்டாமல் மாதா மாதம் கூட்டம் நடத்தி சின்னச் சின்ன தொகைகளாக செலவழித்ததாக சொல்லலாம். ஆண்டு இறுதியில் மிஞ்சியிருக்கும் தொகையை யாருக்காவது ஊதியமாகக் கொடுத்து விட்டு அடுத்த ஆண்டில் அதைத் திரும்பிப் பெற்றுக் கொள்ளலாம். செலவுகளை 80Gக்கு தகுதி பெறத் தேவையான முறையில் எழுதி கொள்ளலாம்' என்று பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

விவாதங்களின் திசை மிகவும் உறுத்தலாக இருந்தது. 'நாம் என்ன ஆதாயத்துக்கான நிறுவனம் நடத்துகிறோமா, சேர்ந்து படித்தவர்களின் நலனுக்காக ஒரு சங்கம் நடத்துகிறோமா? வளமையான நமது நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் வரி விலக்குக்கான திட்டங்கள் போவது வேடிக்கையாக இருக்கிறது' என்று ஆரம்பித்தேன்.

மற்ற எல்லோருக்குமே வரி கட்டுவது கசப்பாக இருந்தது. வரி விலக்கு இருந்தால் நன்கொடை கொடுப்பவர்களுக்கு நல்ல ஒரு காரணம் இருக்கும் என்ற நோக்கமும் சிலருக்கு புரிந்தது.

வெள்ளி, பிப்ரவரி 27, 2009

கொட்டல் மன்னன்

அதிகாலை நான்கு மணி நாற்பது நிமிடங்கள். இல்லை, முப்பத்தைந்து நிமிடங்கள். இன்றும் இரண்டே முக்காலுக்கு எழுந்து விட்டேன். நேற்று கூட்டம் முடிந்து அலுவலகம் திரும்பி வீட்டுக்கு வந்து ஒன்பதரைக்குத் தூங்கி விட்டேன். 2 மணிக்கு எழுந்து விடலாம் என்று மனத்திட்டம்.

நேற்றுக் காலையில் எழுதிக் கொண்டிருந்ததை பாதியில் நிறுத்தி தூங்கி விட்டேன். இப்படித் தூங்கினால், நாள் நாசமாகப் போய் விடும் என்று உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. இருந்தும் கேட்காமல் தூங்கி விட்டேன். ஆறு மணிக்கு எழுந்து அலுவலகம் போய் விட்டேன். கணினியை இயக்கி முந்தைய நாட்களின் விபரங்களையும் மின்னஞ்சல்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனம் வெகுவாக சோர்ந்து மலைத்துப் போய் இருக்கிறது. எழுதுவதை எல்லாம் தூக்கி வைத்து விட்டு தூங்கவோ ஏதாவது படிக்கவாவது போய் விடலாம் என்று தோன்றுகிறது. நிகழ்வுகளைப் பதிவு செய்ய முயலாமல், மனதில் வருவதை அப்படியே கொட்டி விடலாம். ஒரு மணி அடிக்கும் வரை எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.

தக்காளி சாறும், வேர்க்கடலை, பொரிகடலை கலவையும் அருகில் சாப்பிடக் குடிப்பதற்கு. இடையில் தக்காளிச் சாறை நிரப்பிக் கொள்வதற்கு மட்டும் எழுந்து கொள்ளலாம். இப்போதே நிரப்பிக் கொள்ளலாம். இதன் பிறகு வேறு இடையூறே இருக்கக் கூடாது.

நிறைய கடமைகளில் தவறிக் கொண்டே இருக்கிறேன். ஆவணங்களை பராமரிப்பது, உலக வழக்குகளை பின்பற்றுவது இவற்றில் அடிப்படை பிடிப்பு கூட இல்லாமல் இருக்கிறது. அதுதான் என்னில் இருக்கும் தவறு. கணவனின் கடமை என்ன, ஒரு அப்பாவாக குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும், வீட்டில் குடியிருந்தால் என்ன கடமை, நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தால் அரசுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஒவ்வொன்றையும் யாராவது வெளியில் இருந்து அழுத்தம் கொடுத்தால்தான் செய்கிறேன். வாடிக்கையாளர்களுக்கு சரியான தரத்தில் சேவை தர வேண்டும் என்பதில் இந்தக் கோளாறுகளுக்கு எல்லாம் காரணம்.

குடிக்க இருக்கும் தண்ணீர் நான்கு நாட்களுக்கு முன்பு பிடித்தது. திங்கள் கிழமை காலையில் பிடித்து வைத்த தண்ணீரை இன்று வரைக் குடித்துக் கொண்டிருக்கிறேன். புதன் கிழமை காலையில் வெளியில் வாளி வைத்துப் பிடித்து வைத்துக் கொள்ளச் சொல்லாமல் போயிருந்தேன். நான்கு நாட்களில் தண்ணீரில் நச்சு உருவாகித்தான் விடுகிறது. வளமையாக தண்ணீர் பிடித்துத் தர வேண்டுமானால் சம்பளம் கொடுக்க வேண்டும். அதைப் பேசிக் கொள்ளலாம். பழைய செய்தித்தாள்களை எடுத்துக் கொள்ளும்படி கொடுத்து விடுகிறேன். அதற்கு மாறாக இந்தச் சின்ன உதவியை அந்த அம்மா செய்யலாம்.

வெள்ளிக் கிழமை தோறும் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து மாடிப்படிகளை கழுவி விட ஆரம்பித்து விடுகிறார்கள். இன்றைக்கும் இதோ சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. கடமை தவறுவதைப் பற்றி எழுதும் போது நேற்றைய கூட்டம் குறித்து நினைவு வந்து விட்டது. சந்திப்பு என்று எழுதியதும் நேற்றைக்கு மாலையில் அதட்டி வேலை சொன்னது நினைவுக்கு வந்தது. நான் கிளம்பிய பிறகும் உட்கார்ந்திருந்தார்கள்.

மடிக்கணினியில் விசைகள் சிக்குகின்றன. எண் 1 சரியாக விழ மாட்டேன் என்கிறது. அவும் சிக்கிக் கொண்டிருந்தது. இதை எழுதும் போது சரியாகி இருக்கிறது. அல்லது நான் அழுத்தி தட்டச்சக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

அடுத்தக் கட்டிடத்தில் கழுவி வெளியில் தண்ணீர் தள்ளி விட ஆரம்பித்து விட்டார்கள். பணம் கேட்க வேண்டும். காலையில் ஆறு மணிக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்புவதைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னார். இப்போது காசு தராமல் இழுத்தடித்தால் என்ன நியாயம். அதட்டிப் பணத்தைக் கேட்கலாம்.

10 நாட்களுக்குள் பணம் கொடுத்து விடுவதாகச் சொன்னவர்கள் இன்னும் காசோலை தயார் செய்யவில்லை. இன்றைக்குத் தொலைபேசி கேட்க வேண்டும். இன்றைக்கு பயிற்சிக்காக LLCP வருகிறார்கள். மாலை ALFA கூட்டம் இருக்கிறது. தொலைபேசி விட்டுப் போய்ப் பார்க்க வேண்டும். காலையில் கண்டிஷனல் காலம் போட்டு அறிக்கையை சரி செய்ய வேண்டும். ஸ்டாக் மதிப்பை சரி செய்ய வேண்டும். அறிக்கை சிக்கல்களை சரி செய்ய வேண்டும். இரண்டு பேரும் சேர்ந்து அறிக்கைகளை உருவாக்கிக் கொடுத்து விட வேண்டும்.

இத்தோடு நிறுத்தி விடலாமா என்று ஒரு உந்துதல். எழுத முயலும் போது தூக்கம் வந்து விடும். சில குழந்தைகளுக்கு படிக்க உட்கார்ந்தால் ஏதாவது இயற்கையின் உந்துதல் வந்து விடும். ஒண்ணுக்குப் போகணும் இரண்டுக்குப் போகணும் என்று ஓடி விடுவார்கள். ஒரு பத்திரிகையில் கால் ஆட்டிக் கொண்டே இருப்பது குறித்து ஒருவர் எழுதியிருந்தார். சின்ன வயதில் காலில் கொசு கடிப்பதாகச் சொன்னதற்கு டியூஷன் ஆசிரியை காலை ஆட்டிக் கொண்டே இருக்கும்படி சொன்னதை பின்பற்ற ஆரம்பித்து கால் ஆட்டியாகவே ஆகி விட்டதாக எழுதியிருந்தார்.

இதை எழுதியவர் இப்போது நமக்குத் தெரிந்தவராகக் கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படி பத்திரிகைக்கு எழுதும் சமத்து எல்லாம் இல்லைதான். ஆனால் அவர் உடலை ஆட்டிக் கொண்டேதான் இருக்கிறார்.

வேண்டும் என்றே மூக்குடைத்தேன். அவ்வளவு மோசமான நிலையில் அறிக்கை எடுத்துக் கொண்டு போக வேண்டியிருந்தது அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு பாதகம்தான். அதை சொல்லி விட வேண்டும். எல்லா வேலைகளையும் முடித்து விட வேண்டும்.

தேவையில்லாத நேரம் வீணாக்கலை பெரிதும் தவிர்த்து விட்டேன். 8 மணிக்கு உட்கார்ந்து வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை பேசிக் கொள்ள வேண்டும். குறைக்கப்பட்ட சம்பளப் பணம் கிடைக்காது என்று சொல்லி விட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். என் மீது கடுப்பாகக் கூட இருக்கலாம். தேவையில்லாமல் எதற்கு வருத்திக் கொண்டியிருக்கிறோம்.

மனதில் எல்லாமே வடிந்து விட்டதா என்ன? ஓசையே இல்லை. வெளியிலும் தரை தூக்கும் சத்தம் நின்று விட்டது. தரை கழுவி விட்டு வாரியலால் தண்ணீரைத் தள்ளும் சத்தம் தனியாகத் தெரியும். வேறு ஓசைகளே இல்லை. கோழிகள் கூட கொக்கரிப்பது நின்று போயிருக்கிறது. கடிகாரம் ஓடும் ஓசை துல்லியமாக கேட்கிறது. உயர் விழிப்பு நிலை போலத் தெரிகிறது. வெகு தூரத்தில் நாய்கள் குரைக்கின்றன. கிட்டத்தட்ட விமலா கான்வென்ட் போகும் தெருவில் என்று நினைக்கிறேன். எப்படி எல்லாமே நின்று போய் விட்டது.

விமலா கான்வென்டில்தான் படிக்கிறான். பரவாயில்லை என்று அவன் அப்பாவின் தீர்ப்பு. காக்காய் கரைதலும், சுவர்க் கோழியின் கத்தலும் கேட்கிறது. இப்போது நிறைய காக்காய்கள் கோரசில் சேர்ந்து கொள்கின்றன. கண்கள் சொக்குகின்றன. இப்போது நீட்டிப் படுத்தால் உடனேயே தூங்கிப் போய் விடலாம். சொல்லப் போனால் நான் போகாமல் இருந்தால் பல விஷயங்கள் சீராகி விடும் என்று படுகிறது.

மடிக்கணினியிர் நேரம் 4.30 மணி. செல்பேசியில் 05:08 கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வேறுபாடு. கணினியில் மாற்றினாலும் மாற மாட்டேன் என்கிறது. சிங்கப்பூர் நேரம் இப்போது ஏழு மணி ஆகியிருக்கிறது. ஒரு வேளை இலங்கை அல்லது பாகிஸ்தான் நேரத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேனோ என்று ஒரு ஐயம். அதையும் பார்த்துக் கொள்ளலாம். கணினி நேரத்தைச் சரி செய்து கொண்டேன். 5 மணி 10 நிமிடங்கள்.

பகிர்வூர்தி ஒன்று ஓடும் ஓசை. திருவள்ளுவர் சாலையிலிருந்து நெசப்பாக்கம் நோக்கிப் போகிறது. சரக்கு ஏற்றி வரும் வண்டியாகவும் இருக்கலாம். இதற்கு மேல் எழுதுவதற்கு எதுவுமே இல்லை என்ற நிலை வந்து விட்டதோ! தூக்கம் கண்களில் நிரம்பி வழிகிறது. யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கிறது. நாளிதழ் போடும் பையன் ஆறரைக்குத்தான் வருகிறான். ஐந்தே முக்காலுக்குக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். அது போலத் திட்டமிட்டுக்கொள்ளச் சொல்லலாம்.

அதுவும் ஒரு சிரமமான வேலைதான். ஒவ்வொரு நாளும் காலையில் நூற்றுக் கணக்கான வீடுகளுக்குப் போய் நாளிதழைக் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லோருக்குமே ஆகச் சீக்கிரம் வந்து விட வேண்டும். ஐந்தரை மணிக்கு ஆரம்பித்து ஏழரைக்குள் வேகவேகமாகப் போக வேண்டும். ஏழரைக்கு நாளிதழ் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பின்தூங்கி எழுபவர்களுக்கு அவர்கள் வசதிப்படியும், 2 மணிக்கே எழுந்து நின்று விடும் முன் எழுபவர்களுக்கு அவர்கள் வசதிப்படியும் போட்டு விட வேண்டும். ஒரே தெருவில் இரண்டு வகை மக்களும் இருப்பார்கள். இரண்டாவது வகை மக்களை எப்படியும் பகைத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

அது கூட இயற்கையாக அமைந்து விடலாம். ஒரு குடியிருப்பில் ஒரு பையன் பேப்பர் போடுகிறான். அவனுக்கு அதுதான் முதல் இடம். ஐந்தரை மணிக்கு வந்து விடுவான். யாருக்கும் பிரச்சனை இல்லை. அவன் தனது கடைசி இடத்துக்கு வரும் போது ஏழரை மணி ஆகி விடுகிறது. இரண்டாவது குழுவினருக்கு அது ஒப்புதல் இல்லை. அவர்கள் இவனை வேண்டாம் என்று சொல்லி விட்டு, தமது குடியிருப்பை ஆரம்பத்திற்கு வைத்துக் கொண்டிருக்கும் பையனை அழைத்துக் கொள்வார்கள். இப்படியே மாறி இப்போதைய நடைமுறையில் ஒரே பகுதிக்கு இரண்டு மூன்று பேர் நாளிதழ் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் வந்து போகும் நேரம் வெவ்வேறாக இருக்கும். இது இயற்கையாகவே தேவைகளின் இழுப்பால் நிறைவேறி விடும்.

இதுதான் சந்தைப் பொருளாதாரத்தின் போட்டி விற்பனையின் ஆதாயம். எது நல்ல தீர்வோ அது தானாகவே அமைந்து விடுகிறது. யாரோ ஒருவர் இரு சக்கர வண்டியைக் கிளப்பி வெளியில் போய் விட்டார். இது போன்ற அதிகாலை அல்லது பின்னிரவு நேரங்களில். வண்டிகளில் சத்தத்தைக் குறைத்து ஓட்டலாம். வெளியில் போன பிறகு சத்தம் போட்டுக் கொள்ளலாம். தனது காரில் போடும் பின்எடுக்கும் இசை எவ்வளவு பேருக்குத் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

பல நாட்கள் திட்டம் போட்டு கார் வாங்கியிருப்பார்கள். வார இறுதி நாட்களில் பையனையும் அழைத்துக் கொண்டு இன்பச் சுற்றுலா கிளம்பி விடுகிறார்கள். புதிதாக முதல் முறை கார் பயன்படுத்துபவர்கள் என்பதை தம்பட்டம் தட்டித் தெரிவித்து விடுகிறார்கள். நாங்க கார் வாங்கினால் எங்கே விடுவோம் என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார்கள். திட்டமிட்டு அழகாக வாழ்பவர்கள்.

எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொள்வார். நான் இன்னும் சொத்து வரி கட்டிய ரசீதைத் தேடிக் கொடுக்கவில்லை. வீட்டுக்குள் தண்ணீர் இணைப்பு வேண்டுமானால் அது தேவையாம். இன்றைக்கு அலுவலகத்திலும் தேடிப் பார்த்து விட வேண்டும். சின்னத் தாள் எங்காவது மாட்டிக் கொண்டிருக்கும். தவறிக் குப்பைக் கூடையில் போடாமல் இருப்பது வரை சரிதான்.

அலுவலகத்திற்குப் போய் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. நம்மிடமிருந்து வேலை வாங்கிக் கொள்வது மட்டும் நடக்கிறது. நமக்குத் தேவையானவற்றை கொடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு வலியாகத்தான் இருக்கிறது.

இதை முடித்தது உடை மாட்டிக் கொண்டு புறப்பட வேண்டியதுதான். வலைப்பதிவுகளில் பதிந்து விட வேண்டும். வந்ததும் அவருக்கு கண்டிஷனல் காலம் விளக்கிச் சொல்லி விட்டு, சிங்கிள் சைன் ஆன் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். 8 மணி கூட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அறிக்கை போய் விட்டதா என்று பார்க்க வேண்டும்.

யம்மா என்று ஏதோ குழந்தை கூப்பிடும் சத்தம். வாளியில் எவர்சில்வர் பாத்திரம் உராயும் சத்தம். கோழிகள் கூவும் சத்தம். காக்காய் கரையும் சத்தம். கணினி பயன்படுத்தினால் கை விரல்கள் பழுதாகி விடும். இரு சக்கர வண்டி ஓட்டினால் முதுகெலும்பு வலிக்க ஆரம்பித்து விடும் என்று பலருக்கு இருக்கிறது. இந்த ஒரு மணி நேரத்தில் மனதின் சுமைகள் இறங்கி விட்டன என்று படுகிறது. இன்றைக்கு பிரச்சனைகளுக்கு நொடிப்பொழுதுகளில் தீர்வு கொடுத்து விடலாம். நல்ல விளைவுகளைக் கொடுத்து விடலாம்.

வியாழன், பிப்ரவரி 26, 2009

தூக்கமும் விழிப்பும்

நேற்று இரவு படுக்கும் போது மணி பத்தரை. ராணிப்பேட்டையிலிருந்து திரும்பி, அலுவலகத்திற்குப் போய் விட்டு, வீட்டுக்கு வந்து தொலைபேசி விட்டுப் படுக்கும் போது அவ்வளவு நேரம் ஆகி விட்டிருந்தது. இரண்டரை மணிக்கு எழுந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 4 மணி நேரத் தூக்கம். காலையில் ராணிப்பேட்டை போகும் போது பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தேன்.

சரியாக இரண்டரைக்கு விழிப்பு வந்தது. விழிப்பு வந்ததும் கார் பின்நோக்கிப் போவதற்கான ஒலி கேட்டதா, அல்லது அந்த ஒலி கேட்டதால் விழிப்பு வந்ததா என்று பகுத்தறிய முடியாதபடி, மறுபடியும் தூங்கி விடாமல் அந்த ஓசை உசுப்பிக் கொண்டிருந்தது. இரண்டு மூன்று முறை முயன்று எழுந்து விட்டேன். பல் தேய்த்து காலைக் கடன்களை முடித்து விட்டு முன்னறையையும், சாமி அறையையும் ஒதுங்க வைக்க வேண்டும்.

சாமி அறையில் தூசி பாழடைந்த பங்களா போல மூடியிருந்தது. மேல்தட்டில் பூசை சாமான்கள், கீழ்த் தட்டில் புத்தகங்கள். குழந்தைகளின் புத்தகங்கள் ஒரு புறம், பெரியவர்களின் புத்தகங்கள் ஒரு புறம். பஞ்சதந்திரக் கதைகள், படிக்கும் தொகுப்பு என்று சேகரிப்புகள் காணக் கிடைத்தன. அத்தோடு குழந்தைகள் நினைவும் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு தூத்து ஒதுக்கி விட்டு முன்னறை.

இரண்டு காட்சி அலமாரிகள். ஒரு அலமாரியில் கண்ணாடித் தட்டுகள் பொருத்தியிருந்தார்கள். பொருட்களை எடுத்து வைத்து, விரித்திருந்த நாளிதழை மாற்றி, பொருட்களைத் தூசி துடைத்து அடுக்கி வைத்தேன். மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் கிடைத்தன. எடுத்து பூசை அறையில் வைத்து விட்டேன். அடுத்த தடவை மின்தடை ஏற்படும் போது நேராக அந்த அறைக்குள் போய் விடலாம். இப்படி வாரம் ஒரு முறை அறைகளை ஒதுங்க வைத்தால், எந்தப் பொருள் எங்கு இருக்கிறது என்று தேட வேண்டிய அவசியம் இல்லாமல் நினைவில் நிற்கும்.

அலுவலகத்திலிருந்து எடுத்து வந்து நாற்காலியில் வைத்திருந்த கோப்புகள், தொலைக்காட்சி பெட்டி வைத்திருந்த அலமாரித் தட்டுகளில் இருந்த குறுவட்டுகள், ஒலி நாடாக்கள் எல்லாவற்றையும் சீர்படுத்தி, வீட்டைத் தூத்து முடித்தேன். நூலடைகள், தூசி, மண் என்று எல்லாம் குப்பைக் கூடைக்குள் போக நிறைவான உணர்வு. குப்பைக் கூடையிலிருந்து பையை எடுத்துக் கட்டி குப்பை போடும் டப்பாவில் போட்டு வந்தேன். அடுத்தது துணி துவைப்பு.

நேற்றுப் போட்டு வந்த உடுப்புகள், ஒரு தலையணை உறை, ஒரு போர்வை, விடுமுறை நாட்களில் போட்டு அழுக்காகியிருந்த ஒரு சட்டை என்று ஒரு சின்னக் குவியலாக ஊற வைத்திருந்தேன். குடிப்பதற்கு தண்ணீர் கொதிக்க வைத்து விட்டுத் துணியும் துவைத்துக் காயப் போட்டேன். அதைத் தொடர்ந்து முகம் மழிப்பு. உடனடி சேவை என்று வாங்கி வந்திருந்த ராகி சேவையை தாளித்துக் கொள்ளலாம்.

மூன்று நாட்கள் முன்பு முதல் முயற்சியில் நிறைய வெந்நீர் ஊற்றி கொளகொள என்று ஆகி விட்டிருந்தது. இன்று அரை டம்ளர் மட்டும் ஊற்றிக் கரண்டியால் கிளறி வைத்தேன். உள்ளி ஒன்று வெட்டி, சட்டியில் எண்ணெய், கடுகு, உளுந்து தாளித்து உள்ளியையும் வதக்கி அதனுடன் லேசாக ஈரப் பதத்துடன் இருந்த ராகி சேவையை கொட்டி, இன்னும் கொஞ்சம் சுடுநீரும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி விட்டேன். குளித்து விட்டு எழுத உட்காரும் போது மணி 4.55. ஆறு மணிக்குப் புறப்படலாம் என்று உட்கார்ந்து விட்டேன்.

நேற்றைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக போனாலும் அலுவலகத்தை நானேதான் திறந்து கொண்டேன். புரட்டி வைத்திருந்த சிட்னி செல்டனின் if tomorrow comes என்ற கதையின் சில பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்தேன். பணக்கார சீமாட்டிகளாக நடித்து பணம் பறிக்கும் டிரேசி விட்னியின் கதை. இவரது நாயகிகள்தான் ஆதர்சங்கள். எதைச் செய்தாவது சாதித்து விட வேண்டும் என்று நிற்கும் பெண்கள். நாட்குறிப்புகளை பதிந்து விடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை.

அனுப்ப வேண்டிய ஆவணங்களுக்கான முன்வடிவத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தேன். பணி விபரங்களை சொல்லிக் கொண்டே அதுவும் நடந்து முடிந்தது. 8 மணிக்குப் புறப்படுவதாகத் திட்டம். புறப்பட்டு வெளியில் வந்து கேரளா விடுதியில் 4 இட்லி, ஒரு வடை, ஒரு பூரி - இரண்டு பேர் சாப்பிட்டதற்கு 36 ரூபாய்கள் வந்தது. திங்கள் கிழமை 5 பேர் சாப்பிட்ட இடத்தில் 255 ரூபாய் கட்டணம் வந்தது. அங்கு விலைகள் இங்கை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.

நண்பரின் இருசக்கர வண்டியில் போரூர் வந்து சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வரும் போது ஆற்காடு போகும் பேருந்து வந்தது. திருப்பெரும்புதூர் உள்ளே போவது, வழியில் சாப்பிடப் போடுவது என்று கூடுதல் அரை மணி நேரம் ஆகும் என்று நினைத்திருந்தோம். பேருந்து இருக்கைகள் சுகமாகத் தெரிந்ததால் ஏறி விட்டோம். சுங்குவார் சத்திரம், பாலுசெட்டிச் சத்திரம் மட்டும் ஊருக்குள் போனார்கள். சாப்பிடவும் நிறுத்தவில்லை.

ஒரு மணி நேரம் அமைத்துக் கொண்டு கண்களை மூடினால், தூக்கமும் விழிப்புமாக ஓடியது. படிப்பதற்கு நாளிதழ் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. பேருந்தில் படிக்காமலேயே முத்துக்கடை வந்து சேர்ந்து விட்டோம். ஆற்காடு பேருந்து ஆதலால் முத்துக் கடை வழியாக போகிறது. இறங்கியதும் விமல் விடுதியில் காபி. இரண்டு பேருக்கு 10 ரூபாய்கள். சரவணபவனில் ஒரு மினி காபி 9 ரூபாய்.

சந்திக்க வேண்டியவர்களுக்குத் தொலைபேசினால், இரண்டு பேரைப் பிடிக்கவே முடியவில்லை. ஒருவர் பிற்பகலில் வரச் சொல்கிறார். இன்னொரு இடத்துக்கு பணி நிறைவு பெறாததால் மதியம் போனால் போதும் என்று அலுவலகத்திலிருந்து தகவல். வேலூர் வாடிக்கையாளருக்குத் தொலைபேசி 12 மணிக்கு நேரம் கேட்டால் வரச் சொல்லி விட்டார்.

தனியார் பேருந்தில் வேலூர் சீட்டு. வழியில் நிறுத்த மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். ஆற்காடு போய் அங்கிருந்து வேகமாக ஓட்டிக் கொண்டு வந்து வள்ளலார் நிறுத்தத்தில் இறக்கி விட்டார்கள். அதற்கு முன்பே இறங்க வேண்டிய இடத்தில் இறக்கக் கேட்டும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இறங்கி ஆட்டோ ஒன்றில் 30 ரூபாய் கொடுத்துப் போய்ச் சேர்ந்தோம். 11.40க்கெல்லாம் போய் விட்டோம். கொஞ்ச நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு அழைத்தும் விட்டார்.

பேச ஆரம்பித்து இரண்டரை மணி வரை நீண்டு விட்டது. விலை விபரங்களை ஒரு முறை பார்த்து விட்டு சேவை விபரங்களில் இறங்கி விட்டார். பயன்பாட்டை இயக்கிப் பார்த்து தேவையான மாற்றங்களைக் கேட்டுக் கொண்டே வந்தார். கடைசியில் பாதி விலைக்கு கையெழுத்தும் போட்டு விட்டார். சாப்பிட்டு விட்டுப் போகும்படி சொன்னார். கணினித் துறை மேலாளர் அழைத்துப் போனார். சோறு, கீரைக் குழம்பு, ரசம், காரட் பொரியல். சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தால் அவர்களது வண்டி ஒன்று வேலூர் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அதில் ஏறி சத்துவாச்சாரியில் இறங்கிக் கொண்டோம்.

சத்துவாச்சாரியிலிருந்து சென்னை போகும் விரைவு வண்டியில் வாலாசா. நான்கு மணிக்கு வந்து சேர்ந்து விட்டோம். ஆட்டோவில் 25 ரூபாய்க்கு தொழிற்சாலை. சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தோம். கணினித் துறை மேலாளர் வெளியில் புறப்பட்டு விட்டிருந்தார். அவரைத் திருப்பி அழைத்து வந்து வந்த வேலையை ஆரம்பித்தோம். பாதியில் அவர் இன்னொருவரை அழைத்து உட்கார வைத்து விட்டுக் கிளம்பி விட்டார். அவருடன் பேசிக் கொண்டே நிரல்கள் இயங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அரை மணி நேரத்தில் முடிந்து விடும் என்று நினைத்திருந்தது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

ஆறரை மணிக்குப் பிறகு கிளம்பி வெளியில் சாலைக்கு வந்ததும், பேருந்தும் கிடைத்து விட்டது. வாலாஜா பேருந்து நிலையத்தில் இறங்கி சென்னை பேருந்து நிறுத்தத்துக்கு வரும் வழியில் பாதாம் பால் குடித்து விட்டு வந்தால் பேருந்து நிறுத்தத்தில் 102B பேருந்து. ஓட்டுனருக்கு பின் இருக்கையில் இடமும் இருந்தது. அதற்கு நேரான இடது பக்க இருக்கையில் ஒரு நடுத்தர வயது குண்டான மனிதரும் அவரது பெண்ணும். நிறைய பெட்டிகளோடு உட்கார்ந்திருந்தார்கள். தொலைக்காட்சியில் அர்சுன் படம் ஒன்று, ஏழுமலை என்று பெயர் என்று நினைக்கிறேன். நாயகனின் பெயர் ஏழுமலை. ஆரம்பத்தில் சலித்துக் கொண்டாலும், திரையிலிருந்து கண் திரும்பினாலும், இழுத்துக் கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட முழுப்படத்தையும் பார்த்து விட்டேன்.

ஓட்டுனர் ஒலிப்பானுக்கு முழு வேலை கொடுத்துக் கொண்டே ஓட்டிக் கொண்டிருந்தார். சத்தம் அதிகமாகவே இருந்தது. பூந்தமல்லி வந்ததும், அந்தப் பக்க இருக்கைக்காரர் யாருக்கோ தொலைபேசி இடம் கேட்டுக் கொண்டிருந்தார். இவருக்கு இந்தி மட்டும் பேசத் தெரிகிறது. தொலைபேசியை என்னிடம் கொடுத்துப் பேசச் சொன்னார். 'நாளைக்கு திநகரில்தான் பார்க்க முடியும். இன்றைக்கு அவரே கிளம்பி வந்து விட்டார்' என்று விட்டேற்றியாக சொன்னார். 'ஏதாவது லாட்ஜில் தங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்' என்றார். பேருந்தில் இருந்த இன்னொருவர் கோயம்பேட்டில் இறங்கும் போது உதவுவதாகச் சொன்னார்.

போரூரில் இறங்கும் போது எட்டே முக்கால் மணி. அலுவலகத்துக்கு வந்து கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு வீடு. தூக்கம்.

இதை முடித்து விட்டு உடை உடுத்து, அலுவலகம். இன்றைக்கு மதியத்துக்கு மேலான கூட்டத்துக்குத் தயாரிக்க வேண்டும். நேற்றைக்குப் போய் வந்த விபரங்களை ஆவணப்படுத்த வேண்டும்.

புதன், பிப்ரவரி 25, 2009

தூசி

நேரம் நான்கு மணி 50 நிமிடங்கள். ஆறு மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். வீட்டில் வேலைகள் எல்லாம் முடங்கிக் கிடந்தன. ஆறு மணிக்கு எழுந்து போகும் போது மாலையில் சீக்கிரம் வந்து வீட்டு வேலைகளைப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். அலுவலகத்திலிருந்து புறப்படும் போதே மாலை தாமதமாகி விடும். வீட்டுக்கு வரும் போது தூக்கமும், பசியும் அழுத்தும். வயிறு நிறைய ஏதாவது சாப்பிட்டு விட்டு அப்படியே சொக்கும் தூக்கத்தில் தூங்கிப் போய் விடுவேன்.

காலையில் சோர்வுடன் எழுந்து அலுவலகத்துக்கு அவசர அவசரமாகப் புறப்பட்டு போய் விடுவேன். தரை தூப்பது, தூசி படிந்து கால் தடம் தெரிய ஆரம்பிக்கும் போதுதான் நடக்கிறது. தரை துடைப்பது இன்னும் மோசம். அலமாரிகளில் விரித்திருந்த தாள்களில், வைத்திருந்த பொருட்களில் எல்லாம் தூசி ராஜ்ஜியம் கோலோச்சுகிறது.

நேற்றைக்கும் மாலையில் வீடு திரும்பும் போது ஆறரை ஆகி விட்டது. சீக்கிரம் தூங்கி விட்டுக் காலையில் எழுந்து வேலைகளை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஒரு கிண்ணத்தில் ஓமப்பொடி, வேர்க்கடலை எடுத்துக் கொண்டு, குடிப்பதற்கு காம்ப்ளான் கலக்கிக் கொண்டேன். சாப்பிடும் போது படிக்கக் கூடாது என்பதற்கு பல நாட்களாகவே சோதனை. Schindler's List கதையை இரண்டாவது முறையாக புரட்டிக் கொண்டிருந்தேன். அப்படியே தொடர்ந்து, தூங்கும் அறையில் மட்டும் தூத்து ஒதுக்கி பாயில் படுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். ஏழரை மணி வரை படித்து விட்டு அதன் பிறகு தூங்கிக் கொள்ளலாம் என்று திட்டம்.

படித்துக் கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விட்டது. முன்னறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தொலைபேசியை ஒலி அடக்கி வைத்து விட்டு மின்விசிறியை சுழல விட்டுக் கொண்டு தூங்கி விட்டேன். ஒன்பதரை மணிக்கு ஒரு முறை விழிப்பு வந்த போது எழுந்து விளக்குகளை அணைத்து, மின்விசிறியையும் நிறுத்தி விட்டுத் தூங்கி விட்டேன். ஒரு மணிக்கெல்லாம் தூக்கம் நிறைவு பெற்று விட்டது. இரண்டு மணி வரை போர்த்தி போர்த்தி தூங்க முயற்சித்து விட்டு 10 நிமிடங்கள் இருக்கும் போதே எழுந்து விட்டேன்.

எழுந்து பல் தேய்த்து விட்டு அடுக்களையை ஒதுங்க வைக்கப் போனேன். முதலில் சமையல் வாயு அடுப்பு துடைத்து, சமையல் மேடையை துடைத்து விட்டு, காய்கறிகள் ஒரு தட்டில், அகப்பைகள் ஒரு தட்டில் போட்டு வைக்கும் அடுக்கில் பொருட்களைத் துடைத்து விரித்திருந்த நாளிதழ் துண்டை மாற்றி தூசி தட்டினேன். அதைத் தொடர்ந்து சின்னக் கரண்டிகள் ஒரு தட்டில், கத்தி, கத்திரி, எரிகருவி போன்றவற்றைப் போட்டு வைக்கும் அடுக்கை துடைத்து விட்டு சமையல் பொருட்கள் வைத்திருக்கும் அலமாரிக்கு வந்தேன்.

டப்பாக்கள், டம்ளர்கள், கிண்ணங்கள், தட்டுகள் என்று வரிசையாக அலமாரிப் படிகள். மூடிகளில் எல்லாம் தூசி படிந்திருந்தது. விரித்திருந்த தாள்கள் வெள்ளை நிறம் மாறி அழுக்கு நிறத்துக்கு வந்து விட்டிருந்தன. நேற்றைய எகனாமிக் டைம்ஸ் பக்கங்கள் புது இடம் பிடித்தன. அழுக்குத் தாள்கள் குப்பைக் கூடைக்கு. பொருள் வாங்கி பயன்படுத்திய பிறகு மீந்திருக்கும் டப்பாக்களும் பாட்டில்களும் நிறைய கிடந்தன. சமையல் மேடைக்குக் கீழ் இருக்கும் தட்டில் வரிசையாக இருந்தவற்றை ஒரு பையில் போட்டு வெளியில் வைத்து விட்டேன். நம்மிடம் சும்மா கிடந்து தூசி ஏறுவதற்கு யாராவது பயன்படுத்திக் கொள்ளட்டும்.

போன வாரம் படித்து விட்டு வைத்திருந்த எகனாமிக் டைம்ஸ் தாள்களை குளியலறையிலிருந்து எடுத்துக் கொண்டேன். மற்ற எல்லா தாள்களையும் நேற்றைக்கு வேலை செய்யும் அம்மாவிடம் எடுத்துப் போகச் சொல்லிக் கொடுத்திருந்தேன். நமக்கு விரிப்பதற்கு இப்போது தாள் இல்லை.

தரை தூத்து, பாத்திரங்கள் கழுவி அடுக்கிய பிறகு கொசு வராமல் தடுக்கப் பொருத்தப்பட்டிருந்த கம்பி வலையில் அழுக்கு படிந்து இருட்டாக மாறியிருப்பதன் பக்கம் கவனத்தைத் திருப்பினேன். பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி தூசி எல்லாம் போகும்படி கழுவினால் சிவப்பாக தண்ணீர் வடிந்தது. அதுவும் தன் இயல்பான நிறத்துக்குத் திரும்பிய நிறைவுடன் அடுத்த வேலை.

அடுத்த வேலை செய்யும் முன்பு ஒரு பானம். தண்ணீர் சுட வைத்து காம்ப்ளான் கரைத்துக் குடித்துக் கொண்டேன். குடிக்கும் போது படிக்க புத்தகம் எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டேன். இனிமேல் துணி துவைப்பு.

5 நாட்களுக்கான சட்டைகள். ஆறு பனியன்கள், 3 ஜட்டிகள், 1 சதை காலுறை, ஒரு சாரம், தலையணை உறை ஒன்று என்று நிறைந்திருந்தது. தரை துடைத்த துண்டையும் நனைய போட்டு விட்டு ஒவ்வொன்றாக சோப்பு போட்டேன். எடுக்க எடுக்க வந்து கொண்டே இருப்பது போன்ற உணர்வு. மனமும் எங்கெங்கோ பறந்தது.

'கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாக இருக்கணும், செத்த வீட்டில் பிணமாக இருக்கணும்' என்று எல்லா இடங்களிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயல்வது ஒரு வகை மனநோய்தான். தான்தான் எல்லாமே.

ஒருவருக்கு வாழ்க்கையில் மன நிம்மதியே இல்லை. வீட்டில், வேலையில் பல பிக்கல் பிடுங்கல்கள், மனம் நிலையில்லாமல் தவித்தது. பேசாமல் துறவு பூண்டு காட்டுக்குப் போய் விடலாம் என்று காவி உடை உடுத்துக் கிளம்பி விட்டார். காட்டில் போயும் நிம்மதி கிடைத்து விடவில்லை. நிம்மதி வெளியில் இருந்து வந்து விடாது. அமைதியின்மை நமது மனதுக்குள்ளிருந்துதான் வருகிறது. அதையும் தூக்கிக் கொண்டுதானே காட்டுக்குப் போகிறோம்.

நம்மில் நாமே அமைதி காண முடியாவிட்டால், வேறு எந்த முறையிலும் அமைதி கிடைக்காது. 'படிப்பை முடித்து வேலைக்குச் சேர்ந்து விட்டால் என்னுடைய மனம் அமைதி கண்டு விடும். திருமணம் மட்டும் முடிந்து விட்டால் செட்டில் ஆகி விடுவேன். மேற்படிப்பு படித்து பட்டம் வாங்கி விட்டால் நான் வேண்டுவது கிடைத்து மனம் நிம்மதி அடைந்து விடும். குழந்தை ஒன்று பிறந்து விட்டால் நிம்மதியாகி விடுவேன்.' என்று ஓடிக் கொண்டே இருந்தால் அதற்கு முடிவே கிடையாது. நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது.

ஓடிக் கொண்டே இருப்பது மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுதான். ஆனால், அதை நிம்மதி தேடிய ஓட்டமாக வைத்துக் கொள்ளக் கூடாது. இருக்கும் இடத்தில், இருக்கும் வளங்களை வைத்துக் கொண்டு நிம்மதி அடைந்த பிறகுதான் பொருள் பொதிந்த ஆக்க பூர்வமான ஓட்டம் ஓட முடியும். தன்னில் தானே அமைதி கண்டு, மனம் நிறைந்து இருப்பவர் ஒருவர்தான் மற்றவர்களுடன் பயனுள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

என்னில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள ஒரு புதிய வேலை, புதிய உறவு, புதிய இடம் என்று ஓடுவது பலன் தராது.

ஒரு வழியாக துணிகளை துவைத்து அலசி, வட்டியில் நிரப்பி வெளியில் காயப் போட்டேன். இப்படி நேரம் மாற்றி தூங்கி எழுவதால் சாப்பிடுவதும், கூட சீர் கெட்டுப் போயிருந்தது. துணி காயப் போட்ட பிறகு கழிவறையில் உட்கார்ந்து விட்டேன். கையில் புத்தகம் கூடவே கூடாது.

எல்லா உறவுகளும், விதிமுறைகளும் அமைப்புகளும், மனித மனத்தின் படைப்புகள்தான். அடிப்படையில் ஒவ்வொருவரும் தனித்தனி உயிர்கள்தான். முடிந்த அளவு வேலை செய்ய வேண்டும். அந்த வேலையில் விளைவாக உணவு பெற்று உடல் வளர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது தன்னைப் போன்ற இன்னொன்றை உருவாக்க வேண்டும். இதுதான் அடிப்படை உந்துதல்.

செய்யும் வேலையை பிறருடன் பகிர்ந்து கொள்வது ஆண் பெண் உறவிலிருந்து ஆரம்பித்திருக்கலாம். ஒருவர் குழந்தை சுமக்கும் போது இன்னொருவர் உணவு தேடலையும், பாதுகாப்புத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒருவர் உடல் நலன் குன்றும் போது மற்றவர் அவருக்கு உணவும், கவனிப்பும் தரலாம். இது ஒரு குடும்பத்துக்குள் கூட்டு வாழ்க்கை.

இதை நீட்டி ஒரு ஊர் என்று ஒவ்வொரு குடும்பமும் ஒரு வகையான வேலையை செய்து மற்றவர்களுக்கு பலனளிக்க, மற்றவர்களிடமிருந்து தமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளும் பொருளாதார அமைப்பு உருவாகியிருக்கும். இதற்கு அடிப்படை கோட்பாடுகள், மனித உரிமை விதிகள் தேவைப்படும். 'ஏமாற்றக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, கொல்லக் கூடாது'

வேலை செய்யாமல் பிடுங்கிப் பறித்து வாழ முயற்சிக்கும் மனிதர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ஊர் காவலும், பிற ஊர் மக்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள படை பலமும் உருவாகும். அந்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றவர்களின் உழைப்பிலிருந்து கிடைக்கிறது.

உடல் வளர்த்து உயிர் படைக்கும் அடிப்படை உந்தலுக்கு பிடித்துப் பறித்து வாழும் வாழ்க்கையும் போதுமானதுதான். ஊராக, நாடாக, உலகமாக மனித குலம் தழைக்க வேண்டுமானால், மனிதர்கள் எல்லாம் ஒரே அடிப்படை நெறிகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்காமல், நன்னெறிக் கல்வி என்று பள்ளிகளிலும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தாய் தந்தையரும் அறிவு புகட்டி வளர்க்கிறார்கள்.

சுயநலமியாக இரு, பசித்தால் சாப்பிடு, எதிர்பாலாருடன் உறவு வளர்த்துக் கொள் என்று சொல்வதற்குத் தேவையே இல்லை. அது ஒவ்வொரு உயிரின் அடிப்படை இயல்பு. அதைத் தூண்டி விடாமலேயே நடந்து கொண்டுதான் இருக்கும். உழைத்துச் சாப்பிடு, அடுத்தவர் உழைப்பில் வாழ முயற்சிக்காதே என்பதுதான் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அப்படி நெறிகளுக்கு உட்பட்டு வாழும் மனிதர்களின் சமுகங்கள்தான் எல்லோருக்கும் போதுமான உணவும், எல்லாக் குழந்தைகளுக்கும் வளர்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தர முடியும்.

எழுதிக் கொண்டே இருக்கும் போது கண்கள் சொக்கிக் கொண்டு வந்தது. தூங்கினால் காலையிலிருந்து உருவாக்கி வந்த தெளிவுகள் தொலைந்து போகும். அலுவலகத்துத்துக்கும் போவது தாமதமாகிப் போகும். சாப்பிடுவதற்குக் கிண்ணத்தில் வேர்க்கடைலையும் ஓமப்பொடியும் எடுத்திருந்தேன். அதைச் சாப்பிட்ட களைப்பும் இருக்கலாம்.

வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஏதாவது இனிப்பு சாப்பிட்டால், உடனடி சர்க்கரை குருதியில் சேர்ந்து மூளைக்கு சுறுசுறுப்பு இருக்கும் என்று நண்பர் சொன்னார். அதுதான் வாழைப்பழம் சாப்பிடுவதன் ரகசியம் என்று சொன்னார். ரத்த தானம் செய்வதற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மாலையில் கூப்பிடுவதாகச் சொல்லி விட்டு அதன் பிறகு அழைக்கவே இல்லை.

பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் தோல் கண்காட்சி. பெரிய திருப்புமுனைகள். எந்தத் திசையில் போகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. தியானத்துக்கு என்று உட்கார வேண்டாம். விழித்திருக்கும் கணங்கள் எல்லாம் தியானமாக இருக்கட்டும் என்று ஒரு ஒழுங்கை விட்டேன். அரிசி உணவு சாப்பிடாமல் இருப்பது சாத்தியமில்லாமல் போவதாக அதை ஒரு மாதத்தில் மாற்றிக் கொண்டேன். எழுதுவது நின்று போயாச்சு.

உடல் வளர்க்க உணவு உண்ண வேண்டும். செரித்தபிறகு கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட வேண்டும். அப்படி வளர்த்த உடலைப் பயன்படுத்தி படைக்க வேண்டும். உள்ளம் வளர்க்க படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் செய்ய வேண்டும். ஐம்புலன்கள் - பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் என்று ஏன் நிறுத்தி விட்டார்கள். பார்த்தலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். கேட்டலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். பிறர் சொல்வதைக் கேட்பது மிகவும் குறைந்து போயிருக்கிறது. சுவைத்தல் தானாக நடந்து கொண்டே இருக்கிறது. முகர்தல் தன்னிச்சையாக நடப்பதைத் தவிர முகரும் சக்தியை வளர்க்கும் விதமாக எதுவும் செய்வதில்லை. தொடுதல் முற்றிலும் நின்று போய் விட்டிருக்கிறது.

எப்படி பிரிந்து இருக்கிறீர்கள் என்று கேட்பதன் அடிப்படை அதுதான். தொடுதல் வாழ்க்கைக்கு ஒரு அடிப்படை தேவைதான். கூடி வாழும் சமூக நெறிப்படி, வாழ்க்கைத் துணையாக வரித்தவருடன் அந்த உறவு வேண்டும்.

நாளைக்கு முன்னறையும், சாமி அறையும் தூய்மை படுத்தி துணி துவைக்க வேண்டும். வெள்ளிக் கிழமை தூங்கும் அறை, சனிக்கிழமை உள் அறை.

திங்கள் கிழமை போகும் போது பற்றற்று போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்றைக்கும் அதே திட்டம். என்ன முடிந்திருக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு போக வேண்டும். பார்க்கலாம் எப்படி ஆகிறது என்று.

ஞாயிறு, பிப்ரவரி 22, 2009

ஊற்றுக்கண்

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. ஏதேதோ காரணங்களால் எழுதுவது நின்று போயிருக்கிறது. முக்கியமாக தொற்றிக் கொண்டு விட்ட சோம்பலும், தூக்கக் கோளாறுகளும்தான்.

போன ஒரு மாதத்தில் படித்த புத்தகங்கள், நேருவின் Glimpses of World History, அயன் ராண்டின் The Fountainhead, இர்விங் வாலசின் The Chapman Report, தாமஸ் கெனீலியின் Schinler's list. எண்ணக் குவியல்களை ஒரு கலக்கு கலக்கி புரட்டிப் போட்டு விட்ட படைப்புகள்.

நேருவின் வரலாற்றுப் புத்தகத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்திருந்தும் படிக்க முயற்சித்து விட்டு விட்டிருந்தேன். அதுவும் பல இடங்களுக்கு பயணித்து பெங்களூரில் போய்ச் சேர்ந்திருந்தது. இப்போதைய புதிய பார்வையில் படிக்க முடியலாம் என்று படிக்க முடிந்தது.

அயன் ராண்டின் கதையை படிப்பது எத்தனையாவது முறை என்ற கணக்கு தொலைந்து போய் விட்டிருக்கிறது. முதல் முதலில் சென்னை அமெரிக்க நூலகத்தில் படித்தது - கல்லூரியில் படிக்கும் போது. அதன் பிறகு வேலையில் சேர்ந்து சொந்தமாக வாங்கிய புத்தகம், இந்தூரில் ரூபயானா புத்தகக் கடையில் வாங்கியது என்று நினைவு. அதுவும் அங்கிருந்து இந்தூர், சென்னை, திருப்பத்தூர், சாங்காய், தில்லி, திரும்பவும் சென்னையில் பல வீடு மாற்றங்களை தாக்குப்பிடித்து கடைசியாக எல்லா புத்தகங்களையும் அலுவலகத்துக்குக் கொண்டு போகும் முயற்சியில் அலுவகத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ரோர்க் குறித்து பேசும் போது அதை மறுபடியும் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல். மாலையில் வீட்டுக்கு வந்தால் செய்வதற்கு ஒரு வேலை கிடைத்திருந்தது. ஹோவார்டு ரோர்கும், டொமினிக்கும், தூஹியும் புதைந்து கவனத்திலிருந்து விலகிப் போயிருந்த பல உணர்வுகளை, கருத்துக்களை உயிர் பெற வைத்தார்கள்.

அதற்கிடையில் ஏதோ நேரத்தில் இர்விங் வாலசின் கதை. அவரது தகுதியும் தொழிலும் அப்படியா என்று தெரியவில்லை. அவரது எல்லா கதைகளிலும் ஆண் பெண் உறவின் உடலியல் பற்றி நுணுக்கமான விபரங்கள் ஊடுருவி நிற்கும். இதுவும் விதி விலக்கில்லை. சொரிந்து சொரிந்து சுகம் காணும் சிரங்கு பிடித்தவனின் அரிப்பைப் போல ஆண் பெண் உறவின் கோணல்களை தேடிக் கண்டுபிடித்து வெளிச்சம் போடும் போக்கு அவரது.

Schindler's list ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் திரைப்படமாக ஆஸ்கர் விருது பெற்ற ஆண்டில் வாங்கியது. அதன் முதல் அத்தியாயத்தைத் தாண்டி படிக்க முடியாமல் மெல்ல விலகி விட்டிருந்தேன்.

இந்த 10 நாட்களிலும் மற்ற எல்லா ஒழுக்கங்களையும் தள்ளி வைத்து விட்டிருந்தேன். எப்போது தூங்கினேன், எப்போது சாப்பிட்டேன், எப்போது குளித்தேன், எப்படி வாழ்ந்தேன் எல்லாமே வெளி தாக்கங்களுக்கு உட்பட்டுப் போய்க் கொண்டிருந்தது. என்னுடைய உந்து சக்தி இந்தப் புத்தகங்கள் இழுத்த இழுப்புக்குப் போய்க் கொண்டிருந்தது.

இன்று இதோ Schindler's List படித்து முடித்தாகி விட்டது. இதற்கு முன்பும் ஹோலகாஸ்டு தழுவிய கதைகளைப் படித்திருக்கிறேன். முகாம்களில் குவிக்கப்பட்டு வதைபடுவது, விலங்குகள் போல நடத்தப்படுவது, கூட்டம் கூட்டமாக கொல்லப்படுவது என்று நம்ப முடியாத கதைகள் போல படித்துப் போயிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் முதல் முறையாக நடந்ததைப் பார்த்த அனுபவித்த சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். நாவலின் எந்த நிகழ்ச்சியும் கற்பனை இல்லை என்று ஆசிரியர் சொல்கிறார். கதை சொல்லிப் போகும் போது இடையிடையே எவ்வளவு உண்மையில் நடந்திருக்கும் என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளையும் அலச முற்படுகிறார்.

கடந்த 100 ஆண்டுகளுக்குள் மனித வரலாற்றில் இப்படி ஒன்று நடந்திருக்கிறது என்பதை நம்மில் பலர் தெரியாமலேயே இருந்திருக்கலாம். நமது பள்ளியில் வரலாற்றுப் பாடத்தில் கூட இரண்டாவது உலகப் போரின் போது செருமனியின் ஆதிக்கத்தில் யூதர்கள் கொன்றொழிக்கப்பட்டதைக் குறித்து கற்றுக் கொடுக்கவே இல்லை. நாமாக புத்தகங்களில் படித்து வெளிநாட்டு வரலாற்று ஏடுகளில் தெரிந்து கொண்டவைதான்.

அதனால்தால் பாசிச முறைகள் நமக்கு கோபத்தையும் கண்டனத்தையும் போதுமான அளவு ஏற்படுத்தி விடுவதில்லை. திமுகவின் அழகிரியில் ஆரம்பித்து, அதிமுகவின் ஊருக்கு ஊர் இருக்கும் குண்டர்கள், சிங்களர்களின் ஆதிக்கம், தாம் அனுபவித்த துன்பத்தை மற்றவர்கள் மீதும் சுமத்த முயலும் இன்றைய இசுரேலிய யூத அரசாங்கம், அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ் ஆட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகள் என்று நமது ஞாபக சக்தி குறைந்த காலத்துக்குத்தான் நீடிக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

இன்றைக்குக் காலையில் ஏழே கால் மணிக்கு அப்பாவும் அம்மாவும் ரயிலில் பெங்களூருக்குப் புறப்பட்டார்கள். ஐந்தரை மணிக்கு வண்டி வரச் சொல்லியிருந்தோம். ஆறே காலுக்கெல்லாம் நிலையம் போய்ச் சேர்ந்து விட்டோம். இரவுக் கட்டணம் என்று 310 ரூபாய் ஆகியிருந்தது. ஆற்காடு சாலைப் பகுதியில் சாலைகளைத் தோண்டிப் போட்டிருக்கிறார்கள் என்று காரணம் சொல்லி கிண்டி வழியாக சுற்றி வேறு அழைத்துப் போனார். காலை வேளையில் காரில் போவது நன்றாகத்தான் இருந்தது.

அவர்களை ரயிலில் ஏற்றி விட்டு விட்டு சரவணபவனில் ஒரு மினி டிபனும், ஒரு மினி காபியும். மினி டிபன் 50 ரூபாய்கள் - குட்டி இட்லிகள் சாம்பாரில் மிதந்த படி, குட்டியாக உருளைக்கிழங்கு வைத்த தோசை ஒன்று, ஒரு சின்ன கரண்டி அளவு பொங்கல், ஒரு சின்னக் கரண்டி அளவு கேசரி. அதில் காபியும் உண்டா என்று கேட்காமல் காசைக் கொடுத்து கீழே வந்து காபி குடித்துக் கொண்டேன்.

சாலையைக் கடந்து பொது மருத்துவமனைக்கு முன்பு பேருந்து பிடித்து போரூர். பேருந்து சாலை நிறுத்தத்தைத் தாண்டி பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டார்கள். அங்கிருந்து அலுவகம். இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

பதினொன்றரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து இருந்த பிஸ்கெட்டுகளையும், உருளைக்கிழங்கு வறுவலையும் சாப்பிட்டு விட்டு எகனாமிக் டைம்ஸ், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படித்துக் கொண்டும் தூங்கிக் கொண்டும் நாள் ஓடியது. மதிய உணவுக்கு வெளியில் போகவோ, எதுவும் சமைக்கவோ தோன்றவில்லை. களைப்பு தீர நன்கு தூங்கி எழுந்து குளித்து விட்டு எழுத உட்கார்ந்து விட்டேன்.

நேற்று இரவு 2 மணிக்கு விழிப்பு வந்தது. காலையில் 6 மணிக்கெல்லாம் முந்தைய இரவு செய்து மீந்திருந்த சப்பாத்தி, கொஞ்சம் ஓட்சு காய்ச்சியது என்று சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்குப் போனேன். தாமதமாக ஆறரை மணி தாண்டிதான் போய்ச் சேர்ந்தேன். 8 மணி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கேரளா விடுதிக்குப் போய் 3 பூரிகள் சாப்பிட்டு விட்டு வந்தோம். 10 மணி வரை கூட்டம் நடந்தது. அதன் பிறகு கல்லூரி பயிற்சி மாணவர்களின் பணியை சரி பார்த்து அடுத்தக் கட்ட திட்டங்களை சொன்னேன். மதியம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பி கேகே நகர். அப்பாவும் அம்மாவும் சித்தப்பா வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார்கள்.

நீலகிரீஸ் கடையில் கேக்குகள் வாங்கிக் கொண்டு 11Hல் கே கே நகரில் இறங்கினேன். மதிய தூக்கக் கலக்கத்தில் இருந்தார்கள், ஆத்தாவும், சித்தப்பாவும், சித்தியும். கேட்டு ஒரு கலக்குக் கலக்கினார்கள், அதைத் தொடர்ந்து மாமியார் மருமகள் விவாதங்கள், என்று போய் புத்தகம் படிக்கும் பழக்கம் குறித்து விவரணை முடிந்து சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அத்தை வீட்டுக்குப் போன அம்மா அப்பாவும் திரும்பினார்கள்.

சாப்பிடுவதற்கு நான் வாங்கிப் போயிருந்த கேக்கு, ஒரு சோன்பப்டி துண்டு, ஒரு பஃப்ஸ், தொடர்ந்து ஒரு டம்ளர் தேநீர். கிளம்பும் போது ஆத்தா கூப்பிட்டு ஆசீர்வதித்து அனுப்பினாள். பிள்ளையார் கோவில் அருகில் பேருந்து பிடித்து லிபர்டி நிறுத்தத்தில் இறங்கினோம். மாமாவும் அத்தையும் வீட்டில் இல்லையாம், காத்திருந்து அரை மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் வீடு. அங்கு ஒரு தேநீர்.

வெளியில் இறங்கி 100 ரூபாய்க்கு ஒரு ஆட்டோ பிடித்து ராமாபுரம். அரிசி, பிஸ்கட்டு கடையில் வாங்கிக் கொண்டு வந்து பயறு சேர்த்த கஞ்சிக்கு வைத்து விட்டு வெளியில் குழந்தைகளுடன் விளையாட்டு. கஞ்சிக்குத் தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு வறுவல் வேண்டும் என்று கடைக்குப் போய் வாங்கி வந்தேன். வீட்டில் இருந்த முறுக்குகள், பிஸ்கட்டுகள், கஞ்சி, உருளைக் கிழங்கு வறுவல் என்று நிறையச் சாப்பிட்டதன் விளைவாக இரவில் தூக்கம் தடைப்பட்டு எழுந்து படித்துக் கொண்டிருந்தேன்.

வெள்ளிக் கிழமை அலுவலகத்தில். மதியத்துக்கு மேல் அப்பாவும் அம்மாவும் தாம்பரத்திலிருந்து வந்து விட 4 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். புதன் கிழமை ராணிப்பேட்டைக்குப் போய் பார்க்க முடியாமல், வாய்ப்பு கிடைக்காமல் வேறு எங்கும் போக முடியாமல் கடைசியில் போய்ப் பார்த்தேன். அவருடன் காரில் சென்னை திரும்பி விட்டேன். பூந்தமல்லியில் பேருந்து பிடித்து அலுவலகம் திரும்பி விட்டேன்.

இதை முடித்து விட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.

நாளைக்கு ராணிப்பேட்டைக்குப் போகலாம் என்று திட்டமிட்டிருக்கிறார். பல வாய்ப்புகளை பின்பற்றிப் போக வேண்டும்.

கொஞ்சம் ஒழுங்குகளை திட்டமிட்டுக் கொள்ளலாம். தினமும் காலையில் 6 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 4 மணிக்கு எழுந்து விட வேண்டும். காலைக்கடன்களை முடித்து விட்டு, முகம் மழித்து, குளித்து விட்டு ஐந்தே காலுக்கும் ஐந்தரைக்கும் இடையில் வீட்டிலிருந்து கிளம்பி விட வேண்டும். ஆறு மணிக்கு முன்பு அலுவலகத்தைத் திறந்து மின்னஞ்சல்கள், இணைய வேலைகளை ஆரம்பித்து நாளுக்கான பணிகளை செய்ய வேண்டும்.

எட்டரை மணிக்குக் காலை உணவு. ஒன்பது மணிக்கு வேலைக்குத் திரும்ப வேண்டும். பதினொரு மணிக்கு காலை தேநீர், பதினொன்றரைக்குத் திரும்பி விட வேண்டும். ஒரு மணிக்கு மதிய உணவு. ஒன்றரை மணிக்கு பணி ஆரம்பித்து விட வேண்டும். 4 மணி வரை வேலை செய்து விட்டு வீட்டுக்குப் புறப்பட வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும், தரை தூத்து, பாத்திரங்கள் கழுவி, தரை துடைக்க வேண்டும். துணி துவைக்க சேர்ந்திருந்தால் துவைக்க வேண்டும், இல்லை என்றால் ஒரு அறையை ஒதுங்க வைக்க வேண்டும். இதற்கெல்லாம் சேர்த்து ஒரு மணி நேரம் ஆகி விடும். குளித்து முடிக்க ஒன்றரை மணி நேரம். 6 மணிக்கு இந்த வேலைகளை முடித்து விட்டு மாலை உணவு தயாரிக்க வேண்டும். சாப்பிட்டு விட்டு 7 மணி முதல் 8 மணி வரை எழுத்து, 8 மணி முதல் 10 மணி வரை புத்தகப் படிப்பு. 10 மணிக்குத் தூங்கப் போய் விட வேண்டும்.

அலுவலக நேரம் மாறியதால் நமது வாழ்க்கை நெறிகள் எல்லாமே குலைந்து போய் விடுவது எப்படி நியாயமாகும்? அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வீட்டில் படிந்திருக்கும் தூசியைப் பார்த்து நொந்து போய் விட்டது. தரையை மட்டும் எப்படியோ தூத்து துடைத்து விடுகிறேன். பாத்திரங்கள் மீதும் மற்ற பொருட்கள் மீதும் படிந்திருக்கும் அழுக்கும் தூசியும் பொறுக்க முடியாமல்தான் இருக்கின்றன.

வெளியில் குழந்தைகளின் விளையாட்டு. ஏதோ அங்கிளைச் சேர்த்துக் கொண்டு கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆறு மணி தாண்டி விட்டிருக்கிறது. அயன் ராண்டின் fountainhead போல தமிழில் எழுத வேண்டும் என்று ஒரு திட்டம். திட்டங்கள் பல போடப்படுகின்றன.

ரோர்க் என்ற ஆதர்ச மனிதனைச் சுற்றி வருதைப் போல மணி மொழி என்ற ஆதர்ச பெண் நாயகியாக இருக்க வேண்டும். இன்றைய தொலைக்காட்சித் தொடர்களின் பாணியில் பெண்களின் உலகம்தான் பொருத்தமாக இருக்கும்.

தகவல் தொழில் நுட்பத் துறை - கட்டிடக் கலை
ஹோவார்டு ரோர்க் - மணிமொழி
பீட்டர் கீட்டிங் - கவிதா
எல்ஸ்வொர்த் டூஹி - ரீட்டா
கய் பிராங்கன் - பிரமீளா
டொமினிக் - வேணுகோபால்
வைனான்ட் - வசந்தா

ஸ்டான்டன் இன்ஸ்டிடுயூட் ஆஃப் டெக்னாலஜி - திருநெல்வேலி பொறியியல் கல்லூரி
நியூயார்க் - சென்னை
கனாட்டிகட் - தருமபுரி

திங்கள், பிப்ரவரி 09, 2009

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்...

அன்றைய நாட்குறிப்பை அன்று தூங்கப் போவதற்கு முன்பு இரவில் எழுதி விட்டுப் படுப்பதுதான் பொதுவான வாடிக்கை என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றாலும் சின்ன வயதில் நாட்குறிப்பு என்றால் இரவில் தூங்கப் போகும் முன்பு அன்றைய நாளின் நடப்புகளை எழுதி விட்டுத் தூங்குவது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நானாக மாற்றிக் கொண்டு அடுத்த நாள் காலையில் முந்தைய நாள் குறித்து எழுதும் போது கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது. கட்டுடைத்து விட்டோம் என்று.

இப்போது வளமைக்குக் கட்டுப்படுவது நடக்கிறது. நேற்றைக்கு 7 மணிக்கு உட்கார்ந்தேன். இன்று ஒன்பது மணி ஆகி விட்டது. 10 மணிக்குத்தான் தூங்கப் போக வேண்டும். 10 மணிக்கு குடியிருப்பின் வெளிப்புற அளிக்கதவை பூட்டி விடும் பொறுப்பு என்னுடையது. முந்தா நேற்று நடு இரவில் விழித்து பன்னிரண்டரை மணிக்குப் பூட்டினேன். நேற்றைக்கு ஒன்பதே முக்காலுக்குப் பூட்டி விட்டு 10 மணிக்குத் தூங்கினேன். இன்றைக்கும் 10 மணிக்குப் பூட்டி விட்டுத் தூங்கலாம்.

நாளைக்கு ராணிப்பேட்டை போகும் திட்டம். வேலைகள் எல்லாம் ஓரளவு முடித்து விட்டேன். தரை தூத்து துணிகளை மடித்து வைத்து பாத்திரங்களையும் கழுவி கவிழ்த்தாகி விட்டது. காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் குளித்து விட்டுப் புறப்பட்டு விடலாம். 4 மணிக்கு எழுந்து ஐந்தரை மணி வாக்கில் அலுவலகம் போக வேண்டும். ராணிப்பேட்டையில் தேவையான வாடிக்கையாளர் ஆவணங்கள், அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் எல்லாவற்றையும் செய்து விட்டு ஏழரை மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்படலாம். 10 மணிக்கு ராணிப்பேட்டை போய் விடலாம்.

இன்றைக்குக் காலையில் எழுந்திருக்க கொஞ்சம் இழுத்தடிக்கத்தான் செய்தது. நேற்று இரவு சாப்பிட்டிருந்த சப்பாத்திகளின் கனம் இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்திருக்கும். இரண்டு மூன்று முறை விழித்து போர்த்தி தூங்கினேன். பெரிய பெரிய கொசுக்கள் மாலை நேரத்தில் சுற்றுகின்றன. இரவில் அவ்வளவாகக் காணவில்லை. மின் விசிறி போடாமலேயேதான் தூங்குகிறேன். காலையில் மேலும் தூங்க முயற்சிக்கும் போது கொசு ஒன்று பாட்டுப் பாடி எழுப்பியே விட்டது. காப்பாற்றுவதற்கு அகில உலகமும் சதி செய்வது போல நேற்றைய நிகழ்வுகள்.

ஐந்து அடிக்க ஐந்து நிமிடங்கள் முன்பு எழுந்திருந்து காலைக்கடன்களை முடித்தேன். பற்பசை தீரும் நிலை வந்து விட்டது. இன்னொரு குளியல் அறையில் இன்னொரு பற்பசை குழாய் இருந்தது. அதையும் பயன்படுத்தித் தீர்க்கலாம். பொருட்களை முழுமையாக வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று கண்களைத் திறந்து கொண்டால் பல கண்களில் பட ஆரம்பித்து விடுகின்றன. இதுவே முற்றிப் போய் கஞ்சத் தனமாக உருவெடுத்து விடக் கூடாது.

பல் தேய்த்து விட்டு வெளியில் காயப் போட்டிருந்த துணிகளை உள்ளே எடுத்து வந்தேன். பகல் வேளையில் தூசி பறந்து படிவதைத் தடுக்கவும், பகலில் வந்து வண்டி எடுப்பவர்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்கவும் உள்ளே போட்டு விட்டேன். கிட்டத்தட்ட எல்லாமுமே ஈரமாக இருந்தன. நாற்காலிகளில் விரித்துக் காய வைத்துக் கொண்டேன். உடை மாட்டிக் கொண்டு கிளம்பி இரு சக்கர வண்டியில் ஆறு மணிக்கு முன்பு அலுவலகம். யாரோ வந்து அலுவலகத்தைத் திறந்து வைத்திருந்தார்கள். இரவில் இங்கேயே தங்கியிருப்பார்களோ! இல்லை காலையில்தான் வந்திருக்கிறார்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்களை எழுத வேண்டும். செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு வைத்துக் கொண்டேன். எட்டு மணிக்கு முன்னதாகவே பல வேலைகள் முடிந்து போயின. 8 மணிக்கு சந்திப்புக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வருவதாக ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருக்க அந்த இடைவெளியில் வெளியில் சாப்பிட்டு விடப் போனேன். ஆற்காடு சாலை தாண்டி சாய் கடை என்று இருக்கும் மலையாள தேநீர் கடையில் சிற்றுண்டி இன்னும் வரவில்லை. ஆட்டோவில் வைத்து எடுத்து வர வேண்டும் என்று சொன்னார். அருகில் இருக்கும் இன்னொரு தேநீர் கடையிலும் சிற்றுண்டி கிடையாது. திரும்பி வரும் போது முதல் கடையில் உணவு வந்து விட்டது. பொங்கல், தேநீர். 14 ரூபாய் மட்டும்.

அலுவலகத்துக்கு வந்தால் 2 பேர் வந்து விட்டிருந்தார்கள். இன்னொருவரும் வந்ததும் 9 மணிக்கு சந்திப்பு ஆரம்பித்தது. நீளமாக 1 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அதை முடித்த பிறகு விற்பனை பணிகளைக் குறித்த விவாதத்துக்கு 11.30க்கு சந்தித்தோம். இடையில் போய் தேநீரும் குடித்து விட்டு வந்து விட்டேன். விற்பனை சந்திப்பு முடிந்து 12 மணிக்கப்புறம் வாராந்திர ஆய்வுக்கூட்டம்.

இனிமேல் தேவையில்லாமல் பேசக் கூடாது, விலகி இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான்கு பேரிடம் மட்டும் நமது மன வேகத்தை வெளிப்படுத்தி மற்றவர்களை விட்டு கொஞ்சம் விலகியே இருக்க வேண்டும். மூத்த மேலாளர்கள் பொறுப்பை எடுத்து தமது பாணியில் வழி நடத்திச் செல்ல இடம் கொடுக்க வேண்டும்.

இந்த இரண்டு வாரங்களில் என்னென்ன சாதிக்க வேண்டும், என்னென்ன பணிகளை முடித்திருக்க வேண்டும் என்று திட்டம் செய்து கொள்ள வேண்டும். இணையத் தளத்தில், மின்னஞ்சல் மூலம், ஆவணமாக்கம் மூலம் மேம்பாடுகளை செய்து தர வேண்டும். பயனர் கையேடு ஒன்றை எழுதுவதில் ஈடுபடலாம்.

ஆய்வுக் கூட்டம் முடியும் போது மதியம் ஒன்றரை மணி தாண்டி விட்டது. சாப்பிட்டு விட்டு ஒரு வாரமாகவே அளவுக்கதிகமாக புண்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவர் அழைக்க வெளியில் போய் ஒருதேநீர் இடைவேளை. திரும்பி வந்த பிறகு புதிதாக நாடும் வாடிக்கையாளரின் தேவை விபரங்களைக் குறித்த விவாதம். அது முடிந்த சில நிமிடங்களில் அந்த வாடிக்கையாளரே வந்து விட்டார். இடையில் போய் இன்னொரு வாடிக்கையாளரின் பணித் திட்டம் குறித்த விவாதத்தில் பங்களித்துக் கொண்டு வந்தேன்.

வங்கியில் கடன் தொகை கட்டப் போக வேண்டும். இன்னும் தாமதித்தால் தவறி விடும் என்று வண்டியில் போய் ஆழ்வார்த்திருநகரில் இரண்டு கணக்குகளிலும் கட்டப் போனேன். பணம் செலுத்தும் படிவத்தை நிரப்பிக் கொண்டு போனால், உறையில் வைத்துக் கொடுத்து விடுங்கள் என்று அந்தப் பக்கம் கையைக் காட்டினார்கள். அதிலும் விபரங்களை நிரப்பி கொடுத்து விட்டுத் திரும்பினேன். அதற்குள் அடுத்த நாள் ராணிப்பேட்டை போகும் திட்டம் இறுதியாகி விட்டது. வந்திருந்த வாடிக்கையாளரை ஏற்றிக் கொண்டு ஆற்காடு சாலை வழியாக ஓட்டி அவரை கேசவர்த்தினி நிறுத்தத்தில் இறக்கி விட்டு அடுத்தத் திருப்பத்தில் ராமாபுரம் நோக்கி வந்து வீட்டை அடைந்தேன்.

சென்னையில் இன்னொருவர் தீக்குளிப்பு என்று மாலை நாளிதழ் ஒன்று வெளியில் செய்தி சொல்லிக் கொண்டிருந்தது. முதலில் தீக்குளித்தவர் உணர்வு மிகுதியால் தீக்குளித்தாலும் அதன் பிறகு அதைப் பார்த்து வேறு பல காரணங்களும் சேர்ந்து இந்த பெயரில் உயிரை விடுவோம் என்று தற்கொலை உணர்வைத் தூண்டி விடுவதாகவே போய் விடுகிறது என்று தோன்றுகிறது.

வீட்டுக்குள் வரும் போது குடியிருப்பில் எந்த அரவமும் இல்லை. மின்விளக்குகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ, குளிர் பெட்டி ஓடும் சத்தமோ கேட்கவில்லை. மின்தடையாக இருக்குமோ என்று உள்ளே போய்ப் பார்த்தால் மின்இணைப்பு இருக்கத்தான் செய்தது. நேற்றை ஊற வைத்திருந்த கடலையை வேக வைத்து கோதுமை மாவு கலக்கி தோசை சுட்டுக் கொள்ள வேண்டும். கடையில் வாழைப்பழம் செழிப்பாக தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கி வைத்திருந்த பழுத்திருந்தாலும், சரியாக விளையாத வாடல் பழுப்புதான் தெரிந்தது. கொஞ்ச நேரம் பார்த்து விட்டு வாங்காமலேயே வந்து விட்டேன்.

உடை மாற்றி விட்டு உள்ளி வெட்டி, சின்னத் துண்டுகளாக செய்து, அதை வதக்கி அதனுடன் ஊறிய கடலையையும் போட்டு வேக வைத்து விட்டு பாத்திரத்தில் கோதுமை மாவையும் கலக்கி வைத்துக் கொண்டேன். பொதியிலிருந்த எல்லா மாவையும் தீர்த்து விடாமல், கொஞ்சம் மீதி வைத்துக்கொண்டேன். கடலை வெந்து கொண்டிருக்கும் போது நாளிதழ்களை புரட்டி முடித்துக் கொண்டேன். அதன் பிறகு கல்லைப் போட்டு தோசை சுடுதல். சுடும் போது சாப்பிடவும் கூடாது, படிக்கவும் கூடாது. சாப்பிடுவதைத் தவிர்த்து சுட்டு அடுக்க ஆரம்பித்தேன். 5 தோசைகள் வந்து விட்டன.

சாப்பிட்டு கை கழுவிய பிறகு 1 மணி நேரம் படிப்பதற்கு, fountaihead. howard roarkன் கதையை படித்தால் கொள்கைப் பிடிப்பும் நெறி தவறா மன உறுதியும் பலப்படுத்திக் கொள்ள முடிகிறது.

ரோர்க் காமரூனிடம் வேலைக்கு சேர்ந்து அவரது கடைசி கால சிரமங்களில் பங்கெடுத்துக் கொள்ள, பீட்டர் கீட்டிங் ஃபிராங்கன் நிறுவனத்தில் அடுத்தவர்களின் கால்களை வாரி உயர்நிலைக்கு போகிறான். மூன்று ஆண்டு கதை சில அத்தியாயங்களில் தாவிப் போய் விடுகிறது. இடையிடையே பீட்டர் தனது உண்மையான காதலி கேத்தரீனைத் தேடிப் போகிறான். அவன் அம்மா அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ரோர்க் வேறு வழியில்லாமல் பீட்டர் கீட்டிங்கின் கீழ் வேலைக்கு அமர்கிறான். 'வடிவமைப்பு பணி எதையும் செய்ய மாட்டேன். பொறியியல் தொடர்பான வேலைகளைக் கொடு' என்று ஒப்பந்தம். அவனை வேலை வாங்கும் நிறைவு பீட்டருக்கு, வயிற்றுக்கு சாப்பாடு கிடைக்கும் வசதி ரோர்க்குக்கு. அந்த வேலையை நிறுவன உரிமையாளரை பகைத்துக் கொண்டு விட்டு விடுகிறான், ரோர்க். பீட்டரின் வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ரோர்க் ஐந்து பேரின் பாணியைக் கலந்து கட்டிடம் அமைத்துக் கட்டிக் கொடுக்கும் கட்டிடக் கலைஞரிடம் வேலைக்கு அமர்கிறான். அவன் திறமைப்படி கட்டிடங்கள் வடிவமைப்பை வரைய முடியும். ஆனால் அந்தக் கட்டிடங்கள் அப்படியே கட்டப்படப் போவதில்லை. 'அவன் வேண்டியதை விட மிகக் குறைவான பணி, ஆனால் அவனுக்குக் கிடைக்கக்கூடியதில் மிக அதிகமான பணி' சகித்துக் கொள்கிறான்.

அது வரை படித்து விட்டு வீட்டு வேலைகள். அதை முடித்து விட்டே நேரம் பார்த்தால் 10 மணி ஆகியிருக்கவில்லை. 9 கூட ஆகியிருக்கவில்லை. ஒரு மணி நேரம் எழுதினால் 10 மணிக்குத் தூங்கப் போக சரியாக இருக்கும். அரை மணி நேரம்தான் ஆகியிருக்கிறது. இன்னும் 25 நிமிடங்கள்.

காலையில் 4 மணிக்கு எழுந்து ஐந்தரைக்கு முன்பு அலுவலகம். எல்லாம் எடுத்துக் கொண்டு ஏழரை மணிக்கு அலுவலத்தை விட்டுப் புறப்பட வேண்டும். ஒன்பதரைக்கு வாலாஜா.

ஞாயிறு, பிப்ரவரி 08, 2009

நேரங்கள் மாறி வரும்...

மாலை மணி 7.05. மடிக்கணினியில் 6.55தான் காட்டுகிறது. ஏதோ ஒரு அமைப்பில் நேரத்தைத் திருத்திக் கொண்டாலும் மீண்டும் 10 நிமிடங்கள் தாமதமாக ஓட ஆரம்பித்து விடுகிறது.

வேலை நேரம் அதிகாலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்று சொல்லி விட்டார்கள். அதனால் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் தொடர்பில்லாத பழக்கங்களை மாற்றிக் கொள்ளலாம். காலையில் நாளிதழ் படிப்பதையும், குடிதண்ணீர் பிடிப்பதையும் செய்ய முடியாமல் போய் விடுகிறது. இரண்டுமே ஆறரை மணிக்குப் பிறகுதான் செய்ய முடிபவை. நாளிதழை மாலையில் வந்து படித்துக் கொள்கிறேன். தண்ணீர் பிடிக்க உதவி கேட்டால்தான் முடியும்.

வீடு தூத்தல், துடைத்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், குளிப்பதைக் கூட மாலைக்கு மாற்றிக் கொள்ளலாம். மதியம் 2 மணிக்கு வேலை நேரம் முடிகிறது என்றால் நான்கு அல்லது ஐந்து மணிக்குப் புறப்பட்டு வீட்டுக்கு வந்து விடலாம். வேலைகளை செய்து விட்டு, எழுதுவதையும் மாலையிலேயே வைத்துக் கொள்ளலாம். மாலை உணவை வீட்டிலேயே செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

'வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, வார நாட்களின் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டாம்' என்பது பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே முட்டாள்தனமானதாகப் பட்டு விட்டது. பழக்கங்களின் தொடர்ச்சியை இடையில் அப்படி துணித்துக் கொண்டால், திங்கள் கிழமை வழக்கமாக பணி ஆரம்பிக்கும் போது சிரமமாகிப் போய் விடுகிறது. இன்றைக்கும் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் வழக்கம் போல எழுந்து அலுவலகத்துக்குப் போய் விட்டு ஞாயிற்றுக் கிழமைக்கான பணிகளைச் செய்து விட்டு மதியம் 2 மணிக்குத் திரும்பி விடலாம்.

காலையில் ஐந்து மணிக்கு மேல் எழுந்து கொண்டேன். நேற்று ஸ்கூட்டி சாவியைக் கையில் கொடுத்து, அவ்வளவு தூரம் தினமும் நடப்பது சரியில்லை என்று வண்டியில் போகச் சொல்லி விட்டார். அதனால் நடக்கும் நேரமும் முயற்சியும் மிச்சம். காலைக் கடன்களை முடித்து, உடை மாட்டிக் கொண்டு வண்டியில் கிளம்பி விட்டேன். 5.50க்குத்தான் வீட்டிலிருந்து புறப்பட்டு 6 மணிக்கு முன்பு அலுவலகம் வந்து விட்டேன். கதவைத் திறந்து மின்வழங்கியை ஓட விட்டு, கணினியை இயக்கி பார்த்தால் இணைய இணைப்பு குளறுபடி செய்தது.

எழுதி வைத்திருந்தவற்றை வலைப்பதிவுகளில் இடுவது, போன ஆண்டுகளில் பதிந்தவற்றைத் திரும்பிப் பார்க்கும் உள்ளச் சுவடுகள் என்ற வலைப்பதிவை செயல்படுத்த ஆரம்பிப்பது என்று திட்டங்கள். நான்கைந்து நாட்கள் நிறைய எழுதியிருந்தேன். குறிப்பாக ஈழத் தமிழர் போராட்டம், நிறுவனத்தில் சந்திக்கும் சிக்கல்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொண்டிருக்கும் இழுபறிகள், தனி வாழ்க்கையின் சங்கடங்கள் என்று கலவையாக எழுதியிருந்தேன். ஒவ்வொன்றாக தொகுத்து எழுத்து, பொருள் செய் பதிவுகளில் சேர்த்து, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் பதிவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்த கருத்துக்களையும் வெளியிட்டேன்.

ஸ்லாஷ்டாட், ஜோயல் ஆன் சாப்ட்வேர், தமிழ் வலைப்பதிவுகள் என்று மேய்ந்து கொண்டே போனேன். தமிழக அரசியல்வாதிகள் மீது தெரியும் கோபம் சுட்டது. மதிமுகவின் வைகோ, பாமகவின் ராமதாசு, விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடமைக் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு அணி அமைத்தால் திமுக/அதிமுக வியாபாரக் கட்சிகளுக்கு ஒரு மாற்று காட்டி விடலாம். நடக்குமோ!

எட்டு மணிக்கு மேல் வெளியில் போய் பார்த்தால் சாலைக்கு எதிர்ப்புறம் இருக்கும் கடையும் சரி, பழைய கேரளா விடுதியும் சரி சாப்பிட எதுவுமில்லை. டாடா உடுப்பியில் செலவழிக்க மனமில்லாமல் வளசை சுபாவில் பொங்கல் வடை - 20 ரூபாய்கள். சாப்பிட்டு விட்டு தெருமுனை தேநீர் கடையில் தேநீர், சுசியன். டெக்கான் குரோனிக்கிள், வாழைப்பழங்கள் வாங்கிக் கொண்டு அலுவலகம் திரும்பினேன்.

கீழ்க் கட்டிடத்தில் வாடகைக்கு இருந்தவர் இடத்தை காலி செய்து கொண்டு போன பிறகும் முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் வீட்டு உரிமையாளரின் பிரதிநிதி குரல் கீழே கேட்க அவரிடம் போய் கேட்டால் சீக்கிரம் கொடுத்து விடுவதாகச் சொன்னார். வேண்டுமென்றால் நாங்கள் கொடுக்க வேண்டிய வாடகைப் பணத்தை அங்கு கொடுத்து விடுகிறோம் என்று சொன்னேன்.

தேவையில்லாமல் படித்துக் கொண்டே போவதற்கு இடையூறாக பயிற்சி மாணவர் ஒருவரின் உறவினர்கள் சீர்காழியிலிருந்து வந்திருந்தார்கள். நாளிதழ்களிலும் இணையத் தளங்களிலும் படித்திருந்த காங்கிரசு பிரமுகர் தற்கொலை செய்தியைக் குறிப்பிட்டதும், மறுபக்கமாகப் பேசினார்கள். 'இந்த அரசியல்வாதிகள் சேர்ந்து கொண்டு குழப்புகிறார்கள். இதனால் ஈழத்து மக்களுக்கு என்ன பலன்.' என்று சொன்னார்கள்.

தொடர்ந்து மின்னஞ்சல்கள் சிலவற்றுக்கும் பதில் போட்டுக் கொண்டிருந்தேன். உள்ளச் சுவடுகள் என்ற பதிவில் முந்தைய ஆண்டுகளில் இதே நாளில் எழுதிய இடுகைகளின் சுட்டியைப் போட்டு ஓரிரு வரிகள் அறிமுகமும். ஒவ்வொருவராக மற்றவர்களும் வர ஆரம்பித்தார்கள்.

விற்பனை ஆவணங்கள் எழுதி வைத்திருந்ததை சரிபார்த்து விட்டு, பயனர் இடைமுகம் வடிவமைப்பது குறித்த காட்சிப் படத்தை நிதானமாக ஒரு முறை பார்த்தேன். இன்னொரு விற்பனை ஆவணத்தை ஆரம்பித்துக் கொடுத்து விட்டுப் புறப்படத் தயாரானேன். மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. வழியில் ஆந்திரா விடுதியில் சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும் என்று தீர்மானம்.

ஆந்திரா விடுதியின் முன்பு பெரிய கூட்டம். பொதி கட்டி வாங்கிச் செல்பவர்களின் வரிசை. வண்டியை நிறுத்தி விட்டு சாப்பாடு. பருப்பு, சாம்பார், ரசம், கோங்குரா சட்டினி, தயிர், அரிசிச் சோற்றுடன். வீட்டுக்கு வரும் வழியில் தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்ததும் நாளிதழ்களை புரட்டி விட்டு கையோடு கொண்டு வந்திருந்த ஃபவுண்டன் ஹெட் நூலைப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு அத்தியாயம் படித்து முடித்தது தூக்கம் கண்களைச் சுழற்றியது. 4 மணி வரைத் தூங்கி விட்டு வேலைகளை ஆரம்பிக்கலாம். துவைக்க வேண்டிய துணிகளை வட்டிலில் சோப்புப் பொடி போட்டு ஊற வைத்துக் கொண்டேன்.

பாயில் படுத்து நல்ல தூக்கம். சரியாக 4 மணிக்கு எழுந்து கொண்டேன். பாத்திரங்களை ஒழித்து போட்டு விட்டு தரை தூத்து வாரி, துடைத்தல். தொலைக்காட்சி மேசை, குளிர்பெட்டி எல்லாவற்றையும் நகர்த்தி துடைத்து தரை பளபளவென்று ஆனது. பாத்திரங்கள் கழுவி விட்டு துணி துவைப்பு. சரியாக 5 மணிக்கு முடிவெட்டப் புறப்பட்டேன். செல்பேசியை வீட்டிலேயே வைத்து விட்டு, பணப்பையையும் வீட்டிலேயே வைத்து விட்டு 50 ரூபாய் தாளையும் வீட்டைப் பூட்ட சாவியும் மட்டும் எடுத்துக் கொண்டேன்.

கடந்த இரண்டு மூன்று முறைகளாக வெட்டும் கடைக்கு வந்தேன். ஒரே ஒரு சோடி செருப்பு மட்டும்தான் வெளியில் கிடந்தது. உதவியாளர் ஒருவருக்கு வெட்டிக் கொண்டிருந்தார். உரிமையாளர் இருக்கையில் உட்கார்ந்து - தூங்கிக் - கொண்டிருந்தார். அவர் வரவேற்று உடனேயே முடி வெட்டும் இருக்கையில் உட்காரச் சொல்லி முகம் கழுவி பணியை ஆரம்பித்து விட்டார். 'சின்னதாக, கட்டையாக வெட்டுங்கள்' என்றால் காதில் விழவில்லை அவருக்கு. 'short ஆக வெட்டி விடுங்கள்'

அவருக்கு நீண்ட கால அனுபவம், பணி நேர்த்தியில் தெரிந்தது. சுற்றிச் சுற்றி வெட்டி, விளிம்புகளில் கச்சிதமாக மழித்து, மீசையில் எட்டிப் பார்த்த முடிகளை வெட்டி விட்டு இருபது நிமிடங்களுக்கு மேல் பார்த்து பார்த்து செய்தார். தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. 'ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்' என்று பாட்டு. படத்தின் பெயர் தெரியவில்லை. கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டிருந்ததால் எதுவும் பார்க்கவும் முடியவில்லை. ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சியில் மட்டும் சிரிப்பு வந்தது.

50 ரூபாய் ஒரு முடி வெட்டுக்கு. பக்கத்து இருக்கையில் முடி வெட்டு முடிந்து முகம் மழித்து, முடிக்கு சாயம் பூசும் சேவை நடந்து கொண்டிருந்தது. தலை கழுவுவதற்கு சாம்பூ வாங்கத் தேவையில்லை. வீட்டில் ஒரு பெரிய டப்பாவில் குழந்தையைக் குளிப்பாட்டும் திரவம் இருந்தது. அது கெட்டுத்தான் போகும். நாமாவது பயன்படுத்தித் தீர்க்க வேண்டும்.

குளித்து முடித்து விட்டு நேரத்தோடு சாப்பிட சமையல். பசி என்று பெரிதாக எடுத்து விடவில்லை. பெல்லாரி உள்ளி ஒன்றை வெட்டி, மீந்திருந்த மூன்று சின்ன உருளைக் கிழங்குகளை தோல் செதுக்கி வெட்டி வேக வைத்து விட்டு கோதுமை மாவு பிசைந்து கொண்டேன். சப்பாத்திக்கு. சப்பாத்தி போட்டு இந்து நாளிதழுடன் வரும் tabloid அளவிலான இணைப்பில் போட்டுக் கொண்டே வந்தேன். 5 சப்பாத்திகள் வந்து விட்டன. அதற்குள் உருளைக் கிழங்கும் வெந்து விட, இறக்கி விட்டு கல் போட்டு சுட ஆரம்பித்தேன்.

7 ரூபாய்க்கு நல்லெண்ணெய் பொதி கிடைக்கிறது. அதிலிருந்து சிறிதளவு தடவிக் கொள்ளும் கிண்ணத்தில். சப்பாத்தி சுட்டு முடித்த பிறகுதான் சாப்பிட வேண்டும். சமைத்துக் கொண்டே சாப்பிடுவதோ, சாப்பிட்டுக் கொண்டே படிப்பதோ கூடாது. சாப்பிட்டு முடிக்கும் போது ஆறு மணி நாற்பது நிமிடங்கள். 20 நிமிடங்கள் fountaiheadஐத் தொடர்ந்தேன். ஏழு மணிக்கு எழுத உட்கார வேண்டும்.

வெள்ளிக் கிழமை மாலையில் வாலாசாவில் பேருந்து பிடிக்கும் போது பத்து மணி தாண்டி விட்டது. வசதியான இருக்கைதான். இரண்டு பேர் உட்காரும் இருக்கையில் சன்னலோரம் உட்கார்ந்திருந்தவர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அதனால் எனக்கு இடம் பாதிதான் கிடைத்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தூங்கவும் செய்தேன். 12 மணிக்கு மேல் ராமாபுரத்தில் இறங்கி நடந்தேன். வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் படித்துக் கொண்டிருந்து விட்டு தூங்கி விட்டேன். காலை 6 மணி பணிக்குப் போய் விட வேண்டும்.

காலையில் எழுந்திருக்க ஐந்து மணி தாண்டி விட்டது. அவசர அவசரமாகப் புறப்பட்டு வெளியில் வரும் போது ஐந்து ஐம்பது. ராமாபுரம் அரச மரம் பக்கத்தில் திரும்பி நடக்கும் போது பேருந்து ஒன்று வருவது தெரிந்தது. கையை நீட்டினால் நிறுத்தி ஏற்றிக் கொண்டார்கள். 2 ரூபாய் கொடுத்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் நடையை மிச்சப்படுத்திக் கொண்டேன். இறங்கி கொஞ்ச தூரம் நடந்து 6.10க்கு அலுவலகம் வந்து விட்டேன்.

போன வாரம் அனுப்பியிருந்த அறிக்கையைத் தொடர்ந்து மேல் விபரங்களையும் ஒரு வார மாற்றங்களையும் அனுப்ப முடிவு செய்திருந்தேன். அது தொடர்பான ஏமாற்றங்களைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்றும் காத்திருந்தது. அறிக்கை தயாரிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஒரு வாரத்துக்குள் சிக்கலான முடிச்சுகள் இரண்டு அவிழ்ந்து புதிய கதவுகள் இரண்டு திறந்திருந்தன. வரும் வாரத்தில் இன்னும் சில சிக்கல்கள் தீர்ந்து போகும் என்ற எதிர்பார்ப்பு. கவனமாக எல்லா தகவல்களையும் சரிபார்த்து மின்னஞ்சல் அனுப்பினேன். நன்கு பசிக்க ஆரம்பித்திருந்தது. ஆனால் 8 மணி கூட்டத்தை தவற விட்டு விடக் கூடாது.

8 மணிக்கு மூன்று பேர் இருந்தோம். 5 நிமிடங்களில் இன்னும் மூன்று பேர் வந்து விடக் கூட்டம் ஆரம்பித்தது. முந்தைய நாள் அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்த போது இரண்டு பேரும் சேர்ந்து கொண்டார்கள். ஒருவர் மதியத்துக்கு மேல்தான் அலுவலகத்துக்கே வந்தார். பல வாரங்களுக்குப் பிறகு நல்ல செய்திகளுடன் திடமான திட்டங்களுடன் விவாதங்கள் நடந்தன. பொறுப்புகள், பணம் ஈட்டுவது, தரம் மேம்படுத்துவது என்று பேசிக் கொண்டிருந்தோம்.

நண்பரின் திருமண நாளை முன்னிட்டு வீட்டிலிருந்து சிறப்பு காலை உணவு கொண்டு வந்திருந்தார். அதைச் சாப்பிட்டு விட்டு வேலையில் கவனம் சரியாகச் செலுத்தாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கும் ஒருவரைக் கூப்பிட்டுப் பேசினோம். ஏற்கனவே இரண்டு மூன்று தடவை தனியாகக் கூப்பிட்டு எச்சரித்து விட்டேன். போன தடவை இதுதான் கடைசி எச்சரிக்கை என்றும் சொல்லியாகி விட்டது. அதன் பிறகும் தாமதமாக வருவது, சொல்லாமல் விடுப்பு எடுப்பது, கடமைகளை முடிக்காமல் இருப்பது என்று சொதப்பிக் கொண்டிருந்தார்.

அவரிடம் கடுமையாகப் பேசி விட்டு 'எனக்கு நம்பிக்கை சுத்தமாகப் போய் விட்டது, நீங்கள் பொறுப்பு ஏற்று அவருக்குப் புரிய வைக்க முடியும் என்றால் பாருங்கள். வாடிக்கையாளர் சேவையை இவரை நம்பி விட முடியாது' என்று சொல்லி விட்டு எழுந்து வந்தேன்.

பயிற்சி மாணவர்கள் வெள்ளிக் கிழமை தொலைபேசி, 'ஊருக்குப் போகிறோம். சனிக்கிழமை விடுமுறை' என்று கேட்டிருந்தார்கள். 'பொங்கலுக்கு முன்பு முடித்திருக்க வேண்டிய பணி இன்னும் முடிந்திருக்கவில்லை. நண்பனின் வீட்டில் திருமணம் என்றெல்லாம் போய்க் கொண்டிருக்கும் நேரமில்லை. வேகமாக பணிகளை முடித்து வேலையில் அமரும் வழியைப் பாருங்கள்' என்று அதை நிராகரித்திருந்தேன்.

அவர்களுடன் உட்கார்ந்து செய்திருந்த வேலையைப் பார்வையிட்டேன். இன்னும் ஒரு வாரத்துக்குள் அதை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டோம். கல்லூரியிலேயே திட்டப்பணி செய்யும் மாணவர்களும் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். அவர்கள் 11 மணிக்கு வரும் வரை மின்னஞ்சல்கள், இணையத் தள மாறுதல்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளிக் கிழமை போய் வந்திருந்த சந்திப்புகளுக்கான மின்னஞ்சல்களை எழுதி அனுப்பிக் கொண்டேன்.

விற்பனை ஆவணத்துக்கான தயாரிப்புகளும் செய்து வந்தேன். தூக்கச் சோர்வு கண் இமைகளை அழுத்தியது. 1 மணி முதல் 5 மணி வரைதான் தூங்கியிருக்கிறேன். 2 மணிக்கு வீட்டுக்குப் புறப்பட்டு விட வேண்டியதுதான். அடுத்த வாரத்துக்கான திட்டங்களை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு மதிய உணவு சிறிதளவு சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டேன்.

துணி தேய்க்கக் கொடுத்திருந்த கடையில் துணிகளை வாங்கிக் கொண்டு வங்கியில் பணம் எடுத்து கடன் தவணைக்கு செலுத்தப் போனேன். தானியங்கி பணம் எடுக்கும் கருவியில் பணம் கிடைத்து விட்டது. பணம் செலுத்தும் வங்கியில் வேலை நேரம் முடிந்திருந்தது. வழக்கமாக மாலை 8 மணி வரை வேலை செய்பவர்கள் இப்போது நேரத்தை மாற்றி விட்டார்களாம். பெரிய தொகையை வீட்டில் வைத்திருக்க வேண்டுமே என்ற சலிப்போடு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

காலையில் சொல்லி விட்டுப் போனது போல குடிதண்ணீர் ஒரு வாளியில் பிடித்து வைத்திருந்தார். அதற்கு கைம்மாறாகவோ என்னவோ 50 ரூபாய் கடன் கேட்டார். 'இப்போதானே சம்பளம் வாங்கியிருப்பீங்க' என்று கேட்டால் எல்லாம் செலவழித்து விட்டாராம். 'கொடுப்பதற்கு என்னிடம் இல்லை'. நன்கு தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டு எழுந்து தரை தூத்து கடையில் பால் பொதியும், திராட்சைப் பழங்களும், ஆலு புஜியா என்ற ஹல்திராம் பண்டமும் வாங்கி வந்து ஓட்சு காய்ச்சி பால் ஊற்றிச் சாப்பிட்டேன்.

சனி, பிப்ரவரி 07, 2009

காத்திருத்தலும் தொடர்ந்து நடத்தலும்

நேரம் முற்பகல் 11 மணி. ராணிப்பேட்டையில் வாடிக்கையாளர் தொழிற்சாலையில். காலையில் 6 மணிக்கு அலுவலகம் போய் விட்டு ஏழரை மணிக்கு ராணிப்பேட்டைக்குப் புறப்பட வேண்டும் என்று திட்டம். இரவில் சீக்கிரம் தூங்கி விட்டாலும் பத்தரை மணிக்கு விழிப்பு வந்தது. வயிற்றில் திணித்திருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு தொல்லை கொடுக்க கணினியை இயக்கி எழுத உட்கார்ந்தேன். கொதிக்க வைத்திருந்த நீர் ஆறிப் போயிருந்தது. அதிலிருந்து மொண்டு இரண்டு டம்ளர்கள் குடித்தேன்.

எழுதும் போது நாளை சந்திக்க நேரம் கொடுத்திருந்த வாடிக்கையாளருடன் என்ன பேச வேண்டும் என்ற தெளிவுகளை எழுதிப் பார்த்தேன். தொடர்ந்து அப்பா அழைத்திருந்த அழைப்பைக் குறிப்பிடும் போது எழுதி முடித்து விட்டேன். ஒரு மணி நேரத்துக்கு 10 நிமிடங்கள் மீதி இருக்கும் போது நிறுத்தி விட்டு தூங்கப் போய் விட்டேன். தூக்கத்தில் பல வகை கனவுகள். காஷ்மீர் கேக்கு என்று இனிப்பையெல்லாம் திணித்தால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

நான்கு மணிக்கு விழித்து நாலேகாலுக்கு எழுந்து கொண்டேன். காலைக்கடன்களை முடித்து விட்டு, துணிகளை மடித்து வைத்தேன். கட்டிலில் குவிந்து கிடந்த படுக்கை மெத்தைகளை மடித்து ஒவ்வொரு அலமாரிக்குள் திணித்து வைத்தேன். தரையில் படிந்து கிடந்த தூசி விலகுமாறு வீடு முழுவதும் தூத்து முடித்தேன். அடுக்களையில் பாத்திரங்களை ஒழித்துக் கழுவப் போட்டேன். கழுவி வைத்தேனா என்பது மறந்தே போய் விட்டது!

முகம் மழித்து குளித்து விட்டு தயாரானேன். அலுவலகம் போய் அணிந்து கொள்ள காலுறை ஒன்றையும் பைக்குள் திணித்துக் கொண்டேன். வெளியில் வந்து கதவைப் பூட்டும் போது காவலர் கண்ணில் தென்பட இந்த மாத பராமரிப்புத் தொகையைக் கொடுத்தேன். இரவில் வெளிக் கதவைப் பூட்டாமல் விட்டு விட்டதைச் சுட்டிக் காட்டினார். நான்தான் பொறுப்பேற்றிருந்தேன். இப்படி ஏற்ற பொறுப்புகளை எல்லாம் சரியாக செய்யாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறேன்.

பராமரிப்புத் தொகையைக் கொடுக்கும் போது யாரிடம் கொடுக்க வேண்டும், என்ன நோட்டு, கொடுத்த உடன் எனக்கு தொலைபேச சொல்லுங்கள் என்ற பலவிதமான காப்புகள் செய்து கொண்டேன். தேவைதானா! இருள் இன்னும் விலகியிருக்கவில்லை. அதிகாலை ஐந்தரை மணி. ஆறு மணிக்குள் அலுவலகம் போய் விடலாம்.

திருவள்ளுவர் சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது எதிரில் இரண்டு பெண்கள் அதிகாலை உடற்பயிற்சிக்காக வந்து கொண்டிருந்தார்கள். இந்தி பேசும் வடநாட்டு மாணவர்கள் போலத் தோன்றியது. இல்லையென்றால் புதிதாக வந்துள்ள பல நூறு குடியிருப்பு வீடுகளில் வந்திருப்பவர்களாக இருக்கலாம். நேற்றைக்கு எஸ்ஆர்எம் கல்லூரிக்கு முன்பு போகும் போது வந்தார்கள். இன்றைக்கு நான் தாமதமாகக் கிளம்பியிருக்கிறேன்.

அதிகாலையில் நிறைய பேர் எழுந்து வேலை ஆரம்பித்து விடுகிறார்கள். எஸ்ஆர்எம் தாண்டி தெரு முனையில் இருக்கும் சிறுவிடுதியின் உரிமையாளர் ஒரு பனியன் போட்டுக் கொண்டு காலையிலேயே சமையல் ஆரம்பித்து விடுகிறார். நேற்றைக்கு இட்லிகள் அவித்து எடுத்து சாம்பாரும் கொதித்துக் கொண்டிருந்தது. இன்றைக்கு ஏதோ காய் வெட்டிக் கொண்டிருந்தார். துர்கா விடுதியிலும் உயர் ஒலியில் பண்பலை வானொலியை இயக்கி விட்டு விட்டு மாவு பிசைந்து கொண்டிருக்கிறார்.

வீட்டுக்கு முன் முற்றத்தை தூத்து பெருக்கிக் கொண்டிருப்பவர்கள், வாசல் தெளித்துக் கொண்டிருப்பவர்கள் என்று கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பெண்கள் இயங்க ஆரம்பித்து விட்டிருந்தார்கள். காலையில் குடிதண்ணீர் திறந்து விடுபவர் கையில் திருப்பு கருவியுடன் நீர்க் குழாய் சந்திப்பைத் திறந்து விட வந்தார்.

நாய்களின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகி விட்டிருக்கிறது. வீட்டிலிருந்து வெளியில் வரும் போது ஒரு குட்டி நாய், எஸ் ஆர் எம் இருக்கும் சாலையில் ஒரு பெரிய நாய் வண்டியில் அடிபட்டு இறந்து கிடந்தன. தேய்க்கக் கொடுத்த துணிகளை வாங்க வேண்டும். வெள்ளிக்கிழமை ஆனதால் தாமதமாகத்தான் திறப்போம் என்று நேற்றே சொல்லியிருந்தார்.

அலுவலகத்துக்கு வந்து சாவியை மறைவிடத்திலிருந்து எடுத்துக் கதவைத் திறந்தேன்.

அலுவலகத்துக்குள் நுழைந்து ராணிப்பேட்டை பயணத்துக்கான ஆவணங்களை அச்செடுக்க ஆரம்பித்தேன். ஏழு மணிக்குள் ஒவ்வொருவராக மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். எனக்குத் தேவையான ஆவணங்களை அச்செடுத்துக் கொண்டேன். வணிக விபரக் கோப்பையும் எடுத்துக் கொண்டேன். நேற்றிலிருந்து தேடிக் கொண்டிருந்த பேனா கோப்புகள் வைத்திருந்த அலமாரியிலிருந்து கிடைத்து விட்டது, மிகவும் நிறைவாகப் போனது.

ஏழு மணிக்கு வெளியில் ஒரு நடை போய் துணி தேய்க்கும் கடைபக்கம் எட்டிப் பார்த்தேன் இன்னும் திறந்திருக்கவில்லை. நல்ல வேளை, இவர்களை நம்பி நான் டி சட்டை போட்டுக் கொண்டு வந்திருந்தால் இன்றைக்கு ராணிப்பேட்டை போகும் திட்டம் கந்தலாகியிருக்கும். உயர்தர சட்டையும் கால் சட்டையும் போட்டிருந்தேன். கொஞ்சம் மதிக்கும்படியாகவே இருப்பேன்.

அலுவலகத்துக்கு வந்து பையை நிரப்பிக் கொண்டு வெளியில் புறப்பட்டேன். மசூதி இருக்கும் தெரு வழியே ஆற்காடு சாலை வந்து லட்சுமி நகர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். அங்கிருந்து அய்யப்பன்தாங்கல் போகும் பேருந்தில் போரூருக்கு சீட்டு. 3 ரூபாய். சாலை நிறுத்தத்தில் விளக்குக் கம்பத்துக்கு அருகில் நின்று விட்டது, சிவப்பு விளக்குக்கு. இறங்கி சாலையைக் கடந்து, அடுத்த சாலையையும் கடந்து கடையில் டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் வாங்கிக் கொண்டு வேலூர் பேருந்து நிறுத்தம் வந்தேன்.

சாப்பிட்டு விட்டுப் போவதா, வாலாஜா போய் சாப்பிடுவதா என்று மனப் போராட்டம். நந்தினி இனிப்புக் கடையில் குடிப்பதற்கு பானங்கள் எதுவும் இருக்கவில்லை. அதைக் கைவிட்டேன். முதலில் வந்தது ஓசூர் வண்டி, வாலாசா போகாது. அடுத்தது ஒரு சாதாரண பேருந்து. எல்லா ஊருக்குள்ளும் நுழைந்து போகும். அதை விட்டேன். அடுத்த விளக்கு மாற்றத்தில் மூன்று பேருந்துகள் - வேலூர் விரைவு வண்டி ஒன்று, திருப்பத்தூர் விரைவு வண்டி, ஆரணி விரைவு வண்டி. வேலூர் வண்டியில் ஏறி மூன்று பேர் உட்காரும் இருக்கையில் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டேன். பேருந்துக்குள் படக்காட்சி ஓடிக் கொண்டிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏதோ விஜய் நடித்த படம்.

காதலித்த பெண்ணின் காதலை நிறைவேற்ற ஹீரோ உழைக்கிறார். அவரைக் காதலிக்கும் பெண்ணையும் திருமணம் செய்யாமல் தனது அமரக் காதலுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்து விடுகிறார். இடையில் ' ஆம்பளை ஆம்பளைதான், பொம்பளை பொம்பளைதான். மனுசன்தான் மதம் பார்க்கிறான், ஆனால் காக்கா குருவிக்கு கூட காதல் உண்டு' என்று விஜய் பேணி வசனங்கள் நிறைய உதிர்ந்தன. சார்லியின் துணி அவிழ்க்கும் நகைச்சுவைகள் நாலைந்து. யாருக்கோ உண்ட உணவு செரிக்காமல் வாந்தி எடுத்த கற்பனைகள் திரையில் ஊர்வலம் வந்தன. பாடல்கள் மட்டும் ஏற்கனவே கேட்டிருந்த இனிமையில் நன்றாக இருந்தன.

நாளிதழ் படித்தல், கண்ணயர்தல், இடையிடையே திரைப்படம் பார்த்தல் என்று நேரம் நகர்ந்தது. பூந்தமல்லியில் ஏறிய கூட்டத்தில் உட்கார்ந்திருந்த இருக்கையில் இன்னொருவர் சன்னலோரமாகப் போய் உட்கார்ந்தார். இரண்டு பேரும் வசதியாக உட்கார்ந்து கொள்ள முடியும். ஸ்ரீபெரும்புதூருக்குள் வண்டி போனது. சுங்குவார்ச் சத்திரத்துக்குள் போகவில்லை. வாலாஜா வந்து சேரும் போது ஒன்பதரை மணி.

வெங்கடேசுவரா விடுதிக்குப் போனேன். உரிமையாளரே ஓடோடி வந்து சுடச் சுட பூரி 3ம், உளுந்து வடை 1ம் தட்டில் எடுத்து வைத்தார். தொட்டுக் கொள்ள வடைகறியும், சாம்பாரும். சாப்பிட்டு முடிக்கும் போது காபி வேண்டுமா என்று உபசரித்து இனிப்பு குறைவான காபியும் சொல்லி விட்டார். மொத்தம் 24 ரூபாய்கள். கடையின் முன்பு குளிர்பானக் கடை வைப்பதற்கு இடம் கேட்டு இரண்டு பேர் வந்து பேசினார்கள். '75 ரூபாய் தருகிறார்களாம்' என்று பேசிக் கொண்டார்கள் ஊழியர்கள். வந்தவர்களும் உரிமையாளரும் இந்தியில் பேசிக் கொண்டார்கள். 'ஐம்பதாயிரத்துக்குக் கூட உங்களுக்கு இடம் கொடுத்து விடுவேன். பணத்துக்காக இல்லை. ஒரு வாரம் போய் வந்து பாருங்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

வெளியில் வந்ததும் ஆட்டோ ஓட்டுனர்களின் உபசரிப்பு. 'பேருந்தில் போகப் போகிறேன்' என்றதும், 'எங்களுக்கும் வாடிக்கை தாருங்கள்' என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

'சாலையை விட்டு தள்ளி இருக்கும் இடங்களுக்குப் போகும் போது ஆட்டோ எடுப்பது சரிதான். சாலையிலேயே இருக்கும் நிறுவனத்துக்கு பேருந்தில் போகலாமே'

'அப்படியெல்லாம் ஏன் மிச்சம் பிடிக்கப் பார்க்கறீங்க? கம்பெனில கொடுத்தா தந்துட்டு போறாங்க'
'அவருதான் கம்பெனி எம்டியே! அவர் கூடத்தான் மற்ற எல்லாரும் வேலை பார்க்கிறாங்க' இன்னொருவர் தனது ஞானத்தை பிட்டு வைத்தார்.

'எரிபொருள் சிக்கனம் என்று ஏன் விளம்பரம் எல்லாம் செய்கிறார்கள். பணம் மிச்சம் பிடிப்பது மட்டுமில்லை. தேவையில்லாமல் பெட்ரோலும் வீணாகக் கூடாதில்லையா!'

ஆற்காடு போகும் நகரப் பேருந்து என்று நின்று வந்த வண்டிக்கு முன்பு கூவிக் கொண்டிருந்தார்கள். ஏறியதும் ஆட்டோ நகர் ஒன்று குறிப்பிட்டால், 'ஆட்டோ நகர் நிற்காது, அடுத்து ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கிக்கோங்க' என்று ஒரு அடாவடி. 'சரி விசிமோட்டூருக்குக் கொடுங்க' என்று சீட்டு வாங்கிக் கொண்டேன். விசி மோட்டூரிலிருந்து நடந்து விடலாம்.

வாகாக வேறு பேருந்தோ, ஆட்டோவோ நிற்கவும் இல்லை. 11 மணிக்குத்தான் வரச் சொல்லியிருந்தார்கள். மணி பத்துதான் தாண்டியிருந்தது. மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். என்ன பேச வேண்டும் என்பது மனதுக்குள் தெளிவாகிக் கொண்டிருந்தது.

வாசலுக்கு வரும் போது அங்கு காவலர் தொலைபேசியைக் கையில் கொடுத்தார். உதவியாளர்தான், 'நீங்கள் காண்பித்த காட்சிப் படத்தின் நகலை அனுப்பி வைத்து விடுங்கள்'. வெளியில் வந்து அடுத்த பணிக்குத் திட்டம் தேடினேன். மணி பன்னிரண்டரை ஆகி விட்டது. வெள்ளிக் கிழமை தொழுகைக்காக போவதால் முஸ்லீம் நிறுவனங்களில் யாரையும் மதிய உணவுக்குப் பிறகுதான் பிடிக்க முடியும். மற்ற இரண்டு நிறுவனங்களுக்குத் தொலைபேசி கேட்டால் ஒருவர் 3 மணிக்கு வரச் சொன்னார். இன்னொருவர் சென்னைக்குப் புறப்பட்டு விட்டாராம்.

மூன்று மணிக்குத்தான் அடுத்த வேலை. மெதுவாக முத்துக்கடை நோக்கி நடந்தேன். ஏதாவது இணைய மையத்தில் தகவல்களைத் தொகுத்து மின்னஞ்சல் அனுப்பி விடலாம். முத்துக்கடை தாண்டி நாவல்பூர் அருகில் இருக்கும் இணைய மையத்துக்குப் போனால், மின்இணைப்பு இல்லை என்று எல்லாவற்றையும் நிறுத்தி விட்டிருந்தார்கள். ஒரு மணி அடிக்கப் போகிறது. விமல் விடுதிக்குப் போய் குளிர் செய்யப்பட்ட அறையில் விலை உயர்ந்த சாப்பாடு சாப்பிடுவதற்கு பதிலாக எதிரிலேயே இருந்த விடுதியில் உட்கார்ந்து சாப்பாடு.

அதை முடித்து விட்டு வெளியில் வந்து பேருந்து நிறுத்தம். கடைக்குள் ஒதுக்கமாக சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். உள்பக்கமாக இருந்தவன் மறைவாக புகைபிடித்துக் கொண்டிருந்தான். மற்றவர் இரண்டு பேரும் மறைத்தது போல உட்கார்ந்திருந்தார்கள். புகை பிடித்துக் கொண்டிருந்தவன், கையை மடக்கி முஷ்டியில் பலம் பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த நான் அவர்கள் பக்கமே பார்வையை படர விட்டேன். அதைக் கவனித்ததும் அவர்களது பேச்சில் தடங்கல் ஏற்பட்டது.

'கையை மடக்கி பலம் எல்லாம் பார்க்கிறார் அவர். இப்படியே தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தால் ஒண்ணுமே மிஞ்சாது. உடலையே உருக்கிப் போட்டு விடும்' என்று சொன்னேன். 14 வயதுக்குட்பட்டவர்களுக்குப் புகையிலை தயாரிப்புகளை விற்கக் கூடாது என்று அறிவிப்பு முன்பெல்லாம் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். இந்தக் கடையில் அதைக் காணவில்லை. கடைக்காரரின் முகத்திலும் போதுமான குற்றவுணர்வு தெரிந்தது.

வந்து நின்ற பேருந்தில் ஏறி சிப்காட்டில் இறங்கினேன். 3 மணிக்குப் போக வேண்டிய நிறுவனத்துக்கு 1.30க்கெல்லாம் வந்து விட்டேன். பல ஆண்டுகளாக பணி செய்த இடம். எல்லோரையும் நன்கு பழக்கம். அலுவலக உதவியாளர் ஆரவாரமாக வரவேற்று உள்ளே உட்கார வைத்தார். சாப்பிடப் போயிருந்த கணினி பயனர் அரை மணி நேரத்துக்குப் பிறகு வந்தார். சந்திக்க வேண்டிய நிறுவனத் தலைவர் இன்னும் சாப்பிடப் போயிருக்கவில்லை. பேசிக் கொண்டிருந்து விட்டு கிட்டத்தட்ட இரண்டே கால் மணிக்கு வெளியில் எட்டிப் பார்த்தால் நிறுவனத் தலைவரின் தலை தெரிந்தது. பிடித்து விடலாம் என்று போய் வணக்கம் சொன்னதும் உள்ளே வரச் சொன்னார். 'நீங்கள் சாப்பிட்டு விட்டு வந்து விடுங்கள்' என்று சொன்னதும் ஏற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார்.

அலுவலக அறையில் உட்கார்ந்து கணினியில் எழுதிக் கொண்டிருந்தேன். அங்கிருந்தவர்களிடம் இடையிடையே பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். 'சென்னையில் எங்காவது நல்ல வேலை இருந்தால் சொல்லுங்க சார். இங்க சம்பளம் கூட்டித் தர மாட்டேங்கிறாங்க'
'அப்படி எல்லாம் நான் உங்களுக்குத் தகவல் சொன்னால் உங்க நிறுவன உரிமையாளர் என்னை அடுத்த தடவை உள்ளே வர விடமாட்டார். உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தேவைப்படுகிறது என்று நிர்ணயம் செய்து கொண்டு நிறுவன உரிமையாளரிடம் போய் பேசுங்கள். இவ்வளவு பணம் எனக்குத் தேவைப்படுகிறது. நான் என்னென்ன பொறுப்புகளை ஏற்றால் நீங்கள் அந்த சம்பளம் எனக்குக் கொடுப்பீர்கள் என்று கேளுங்கள்'

இரண்டே முக்காலுக்கெல்லாம் வெள்ளையர் ஒருவர் வந்து எட்டிப் பார்த்தார். 'சார் சாப்பிடப் போயிருக்கிறார். அறையில் காத்திருங்கள்'
'அடடா, அவர் வந்தாலும் நான் பார்ப்பது நடக்காதோ' 'அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. இவர் பத்து நிமிடங்களில் போய் விடுவார்'

இரண்டே முக்காலுக்கு சாப்பாடு முடித்து வந்து விட்டார். வெள்ளையரும் மூன்றரை மணிக்கெல்லாம் கிளம்பி விட்டார். மூன்றரை மணிக்கு நான் கதவைத் தட்டி உள்ளே நுழைந்தால் வரச் சொன்னார். என்னை உட்கார வைத்து விட்டு வரிசையாக தொலைபேசி பேச்சுக்களில் இறங்கி விட்டார். பொறுமையாகக் காத்திருந்தேன். தொலைபேசி அழைப்புகள் முடியும் நேரத்தில் இரண்டு பேர் கதவைத் தட்டி எட்டிப் பார்த்தார்கள். அவர்களை உள்ளே வரச் சொன்னார். 'சிவகுமார், இவங்கள்ட்ட பேசி விட்டு நாம உட்காரலாம்' என்று சொல்ல நான் வெளியில் வந்து விட்டேன்.

கிட்டத்தட்ட 5 மணி வரை ஆகி விட்டது. புறப்பட வேண்டியதுதான் என்று முடிவு செய்து அறைக்குள் எட்டிப் பார்த்து தகவல் சொல்ல ஆரம்பித்தால், 'இன்னும் ஒரே ஒரு வேலை இருக்கிறது, அதை முடித்து விட்டால் வேறு செய்ய வேண்டியது எதுவும் இல்லை. நாம் பொறுமையாக உட்கார்ந்து பேசலாம். எங்கள் காலணி தொழிற்சாலைக்குப் போகிறேன். ஆறு மணி வாக்கில் வந்து விடுங்களேன். உங்களை இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்து விட்டேன். உங்கள் நேர வசதியையும் பார்த்துக் கொள்ளுங்கள்'

'இன்னொரு நிறுவனத்துக்குப் போய் விட்டு ஆறு மணிக்குப் பிறகு வருகிறேன்' என்று அவர்களது நிறுவன இரு சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு உதவி வேண்டும். அங்கு போய் வேலைகளை முடித்து அறிக்கைகளை சரி செய்து கொடுப்பதற்கு போனேன். முடித்து அவரை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு, இரு சக்கர வண்டிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு திரும்பி வரும் போது ஏழு மணி ஆகி விட்டது.

அவர்களே வண்டியில் காலணி நிறுவனத்துக்குக் கொண்டு விட்டார்கள். அங்கு பணி முடிந்து தொழிலாளர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இங்கு இப்போதுதான் முதல் முதலாக வருகிறேன். அட்டையைக் கொடுத்து விட்டதும் உடனேயே உள்ளே வரச் சொல்லி விட்டார். இன்னும் பணி அழுத்தம் அவருக்குக் குறைந்திருக்கவில்லை. நான் உள்ளே போன பிறகும், தொழிற்சாலை மேலாளர்களுடன் செலவுக் குறைப்பு, ஆட்குறைப்பு குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்.

கணினியை இயக்கி காட்ட வேண்டிய காட்சிப்படக் கோப்பு, பயன்பாட்டு செயல் மாதிரிப் பக்கங்கள் எல்லாவற்றையும் திறந்து வைத்துக் கொண்டேன். அவர் மற்ற வேலைகளை முடித்து விட்டு கவனத்தைத் திருப்ப அரை மணி நேரம் ஆகியிருக்கும்.

மிகவும் சின்ன நிலையில் ஆரம்பித்து, தோல் பதனகத்தை பெரிதாக உருவாக்கி, இப்போது காலணி தொழிற்சாலையும் அமைத்திருக்கிறார். கடும் உழைப்பாளி, தொழில் முனைவில் மிகச் சிறந்தவர். அவ்வளவு சோர்வுக்கும் அழுத்தத்துக்கும் பிறகும் நான் பேச ஆரம்பித்ததும் கவனத்தை முழுமையாக திருப்பிக் கொண்டார்.

ஐந்து கோப்புகளை இணைத்து எண்பதுக்கும் மேல் காட்சிப் படங்கள். அவருக்கு ஆர்வம் இருக்கக் கூடிய பத்திருபது படங்களில் மட்டும் நிறுத்தி விளக்கி விட்ட மற்ற எல்லாவற்றையும் வேக வேகமாக நகர்த்திக் கொண்டு போனேன். அரை மணி நேரத்துக்குள் முழு ஆர்வம் வந்து விட்டது. அவரது உதவியாளரை தொலைபேசியில் அழைத்து சேர்ந்து கொள்ளச் சொன்னார். தேநீர் தயாரித்துக் கொடுத்தார்.

மென்பொருள் பயன்பாட்டு செய்முறையையும் காட்டினேன். அதன் பிறகு அவர்கள் பணி நடைமுறையைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நல்லபடியாக முடிந்தது.

வெள்ளி, பிப்ரவரி 06, 2009

கொடுமனம்

நேரம் பத்து மணி முப்பது நிமிடங்கள். காலையில் 6 மணிக்கு அலுவலகத்துக்குப் போக வேண்டும். பிற்பகல் 2 மணி வரை பணி நேரம். குறைந்தது 4 மணிக்காவது கிளம்பி வந்து, வீட்டு வேலைகளை பார்த்து விட்டு 8 மணிக்குத் தூங்கி விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அலுவலகத்திலிருந்து புறப்படும் போது மாலை ஏழு மணி ஆகி விட்டது. தேய்க்கக் கொடுத்திருந்த துணிகள் இன்னும் தயாராகியிருக்கவில்லை. ஆற்காடு சாலை வழியாக நடந்து பாரத அரசு வங்கியில் பணம் எடுத்து விட்டு ஆழ்வார் திருநகர் தஞ்சாவூர் விடுதியில் 4 சப்பாத்திகள் சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேரும் போது ஏழே முக்கால் மணி.

பிஸ்கட்டுகளும், காஷ்மீர் கேக் என்று உலர்ந்த பழங்கள் சேர்ந்த பண்டமும் வாங்கி வந்திருந்தேன். நாளிதழ் படித்துக் கொண்டே அவற்றைக் கொஞ்சம் சாப்பிட்டேன். பொரிகடலையும், தேங்காயும், சீனியும் சேர்த்து கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டேன். குடிக்க கொதிக்க வைத்து ஆறிய நீர் தீர்ந்து போனது. தண்ணீர் கொதிக்க வைத்தேன். இத்தனைக்கும் எகனாமிக் டைம்சும், இந்து நாளிதழும் படித்துக் கொண்டிருந்தேன். தூக்கம் கண்களைச் சுற்றியதும் தூங்கப் போய் விட்டேன்.

ஏற்கனவே பல முறை அனுபவித்தது போல ஏழரை மணிக்கு சாப்பிட்ட சப்பாத்தி சரியாக எழுப்பி விட்டது. மொத்தம் 5 தவற விட்ட அழைப்புகள். ஒரு பெயர் இல்லாத எண். நாளை காலையில் 11 மணிக்கு சந்திக்க நேரம் கொடுத்திருக்கிறார் என்று மின்னஞ்சல் வந்திருக்கிறதாம். போய்ப் பார்க்க தயாரித்துக் கொள்ளுங்கள். அலுவலகம் போய் தேவையான ஆவணங்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.

அதற்குப் பிறகு கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருந்த தூக்கமும் கழன்று போனது.

அப்பா அழைத்தது எதற்கு என்பது தெரிந்ததுதான். துணி தேய்க்கும் கடைக்கு போகும் முன்பு சாலையோரம் நின்று அம்மாவுக்குத் தொலைபேசியிருந்தேன்.

'அப்பா இறந்து விட்டாராம். மதியம் தொலைபேசி சொன்னாள்'.

'நீ அங்கு போகப் போகிறாயா?'

'இல்லை போகலை. காலையில் கூப்பிட்டு ஒரே கூப்பாடு. நீ வர மாட்டாயா என்று சத்தம் போட்டாள். அவளுக்குத் தேவைப்படும் போது மட்டும் போய் போய் எனக்குச் சலித்து விட்டது. அதன் பிறகு அழைத்துப் பேசினார். சாவு நடந்திருக்கும் போது கோபத்தையும் வெறுப்பையும் ஒதுக்கி வைத்து விட்டு நீ போய் பார்த்திருக்க வேண்டும் என்று சொன்னார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்'

'உனக்கு என்ன தோணுகிறதோ அதைச் செய். எனக்கு எதுவும் தோணலை. நீ போய் பார்க்கவில்லை என்றால் எங்க அப்பா செத்த போது நீ வரவில்லை என்று நாளைக்குச் சொல்ல மாட்டாளா!'

'அவள் சொல்வாள் என்பதற்காக எதையும் செய்யும் வழக்கத்தை விட்டு விட்டேன். இனிமேல் அதற்காக எல்லாம் போவது இல்லை. அவர் நல்ல மனிதர், என்னிடம் பண்புடன் நடந்து கொண்டவர். இங்கு இறப்பு நிகழ்ந்திருந்தால் நிச்சயம் போய் மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். அவர்கள் வீட்டுக்கெல்லாம் போகும் எண்ணம் சுத்தமாக இல்லவே இல்லை'

'அப்பாவிடமும் சொல்கிறேன். அப்பாவும் ஒனக்குப் பட்டதை செய் என்றுதான் சொல்லப் போகிறார்கள். பார்த்து செய்'

வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் இரண்டு பாதைகள் தென்படும். ஒரு பாதை கரடுமுரடாக தெரியும். அதுதான் சத்தியத்தின் பாதை, அதில் போனால் ஆரம்பத்தில் சிரமாமாக இருக்கும். பல இன்னல்களை சந்திக்க நேரிடும். ஆனால் கடைசியில் சரியான இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம்.

இன்னொரு பாதை பார்ப்பதற்கு சொகுசாக தெரியும். ஆரம்பத்தில் வசதியாக இருக்கும். ஆனால் போகும் இடம் நாம் நினைத்தாக இல்லாமல் தவறாக கொண்டு விட்டு விடும்.

இப்படி சரி தவறு என்று அறுதியிட்டு சொல்ல முடியாத படி சில கணங்கள் வந்து விடுகின்றன. தன்னஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்ற தெய்வப் புலவரின் வாக்கு மட்டும்தான் வழி காட்டும். நம் நெஞ்சு நம்மைச் சுடாமல் இருந்தால் எடுத்த முடிவு சத்தியம் பொய்க்காமல் நிலைத்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு. அலறலான குரலில் 'உடனே வா, உடனே வந்து விடு' என்று உரத்த குரலில் கத்துகிறாள். 'என்ன ஆச்சு' என்று சொல்லு. குழந்தைகளுக்கு ஏதாவது ஆகி விட்டதா என்று பதற்றம். 'அவளது கார் அல்லது வீட்டுக்கு ஏதாவது இழப்பு வந்திருக்கும்' என்ற ஆறுதல் இன்னொரு பக்கம். ஓரிரு நிமிடங்களுக்கு தொடர்ந்து அப்படியே கத்திக் கொண்டிருந்தாள்.

'எங்க அப்பா இறந்துட்டாராம். உடனே வந்துரு, உடனே என்கிட்ட வா!'

என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாகி விட்டேன். அவளது அப்பா ஆரம்பம் முதலே அன்பான அப்பாவியான மனிதராகவே நடந்து கொண்டிருக்கிறார். யாருக்கும் கெடுதல் நினைக்காத வெகுளியான சுபாவம். பல நாட்களாகவே நோய்களால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். மூப்பின் தள்ளாட்டமும் அதிகமாகவே தாக்கியிருந்தது.

'ஏன் எதுவும் பேச மாட்டேன் என்கிறாய். என்னிடம் வர மாட்டாயா! சீக்கிரம் சொல்.... சொல்லு.... எனக்குப் புரிந்து விட்டது. இப்போது கூட நீ வர மாட்டாய்'

நடைமுறை யதார்த்தங்கள் உறைக்க ஆரம்பித்தது. இங்கிருந்து போவதற்குக் கூட என்னிடம் வண்டி கிடையாது. யாரிடமாவது இரவல் வாங்கிக் கொண்டு போக வேண்டும். அவளுடன் போவதற்கு அல்லது அவளை சமாதானப் படுத்துவதற்கான மனமும் இடமும் முற்றிலும் இல்லை.

'நீ கொஞ்சம் அமைதியான பிறகு திரும்ப அழைக்கிறேன்' என்று இணைப்பைத் துண்டித்து விட்டேன்.

தொடர்ந்து பணி செய்ய வேண்டிய நாட்கள். இந்த நாட்களில் விடுமுறை எடுத்துக் கொண்டு போக வேண்டுமா? கணவன் என்ற முறையில் மட்டும்தான் என் கடமை இருக்கிறதா? என் பொறுப்புகளுக்கு எந்த விதத்திலும் தோள் கொடுக்காமல் தனக்குத் தேவைப்படும் போது மட்டும் அழைத்துக் கொள்பவருக்காக இப்போது ஓட வேண்டுமா!

இப்படி எல்லாம் எண்ண ஓட்டங்கள். திரும்பவும் எண்ணை அழைத்தால் பயன்பாட்டில் இருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவளே அழைத்தாள்.

'எனக்கு மிகவும் தேவைப்படும் சமயத்தில் நீ வர மாட்டாய்தானே'

'உனக்குத் தேவைக்கு மட்டும் ஓடி ஓடி வந்து எனக்கு சலித்து போய் விட்டது'

'உங்க அப்பா செத்தாத்தான் உனக்கு தெரியும்.'

இம்மியளவும் தனது இயல்பில் மாறி விடாமல் இருக்கிறாள். 'தனது சோகத்தில் மூழ்கி விட்டவள் அப்படிக் கத்தினாள்' என்று நினைக்கக் கூட வழியில்லாமல் இந்த நேரத்திலும் என்னை நோகடிக்கும்படி பேசுவதை மறக்கவில்லை. இருந்தாலும் அப்படியே விட்டு விட மனதில்லை. அவசரமாக பேச வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் உன்னைக் கூப்பிடுகிறேன் என்று பதில் அனுப்பினான்.

அதற்குள் ஒரு தொலைபேசி அழைப்பு. 'இறந்து விட்டாராம். நீங்க போகவில்லையா'

'வாங்க பேசலாம்' என்று வெளியில் போனோம்.

'என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவருடைய இயல்பில் கொஞ்சம் கூட மாறாமல் அடாவடியாக பேசும் அவருக்காக எனது கடமைகளை விட்டு விட்டு நான் ஓட விருப்பப்படவில்லை. எதற்கும் அறிவுரை கேட்கலாம் என்று செய்தி அனுப்பியிருக்கிறேன்'

'அவங்க அப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இறப்பு அல்லவா, நீங்கள் நிச்சயமாக போய்ப் பார்க்க வேண்டும். அவர்கள் தனியாக என்ன செய்வார்கள். அவங்க அப்பா இங்குதான் இருக்கிறார்கள் என்று சொன்னார்'

அது எனக்குப் புதிது. நான் அவர் பீகாரில் இருக்கிறார் என்று நினைத்திருந்தேன். 'இறப்பு இங்கு நடந்தது என்றால் நான் கண்டிப்பாக போக வேண்டும். போய் அவரைப் பார்க்கவும் சடங்குகளுக்கு உதவி செய்யவும் வேண்டும். பேசி விடுகிறேன்' என்று திரும்பி வந்து கொண்டிருந்தோம்.

அழைப்பு மீண்டும். 'அவர் பீகாரில்தான் இருந்தாராம். மதியம் 2 மணி விமானத்தில் புறப்படுகிறாராம்' அதற்கு மேல் என்னை வற்புறுத்தவில்லை. எந்த அழைப்பும் வரவில்லை. மதியம் இரண்டரை மணிக்குத்தான் அவன் கூப்பிட்டான்.

என்னுடைய வருத்தங்கள், துக்கங்கள், கஷ்டங்கள் எதிலும் சிறிதளவு கூட பங்கேற்றுக் கொள்ளாத, எப்போதும் தான் தன் சுகம், தன் தேவைகள் என்று மட்டும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் யாருக்கும் நான் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன். அதே நிலைப்பாடுதான் இப்போதும்.

என் முகம் பசியால் வாடியிருந்தால் சாப்பிடவில்லையா என்று கரிசனம், நான் ஏமாற்றத்தில் கடுகடுவென்றிருந்தால் உள்ளம் சிணுங்கி முறையிடும் அன்பு, நான் கடிந்து ஒரு சொல் சொல்லி விட்டால் அதை பெரும் கண்டனமாக எடுத்துக் கொண்டு கண்ணீர் விடும் பொறுப்புணர்ச்சி, நான் கோடு காட்டினால் அதில் ரோடு போடத் துடிக்கும் துடிதுடிப்பு.

இப்படி என்னைச் சுற்றி ஒரு உலகத்தை உருவாக்கித் தந்திருக்கும் பொறுப்பை அலட்சியப்படுத்தி விட்டு, நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்று தெரியாமல், கடும் காய்ச்சலில் தன்னந்தனியாக வீட்டில் இருக்கும் போது தகவல் தெரியாததால் எட்டிப் பார்க்க முடியாத ஒரு உறவின் உரிமையுடன், சாப்பாட்டுக்குக் கடன் வாங்கக் கூடாது என்று பட்டினியாக கழித்த நாட்களில் அந்த பசிப்பிணி கூடத் தெரியாத தொலைவில் தனது கவலைகளை பார்த்துக் கொண்டு போகும் ஒரு வாழ்க்கைத் துணையின் பந்தத்தைச் சொல்லி நான் ஏன் ஓட வேண்டும்!

நான் சொல்ல வேண்டியதைக் கேட்டு விட்டு செய்தது தவறு என்று தெளிவாகச் சொன்னான். 'அவள் எப்படி நடந்து கொண்டிருந்தாலும், இப்போது எப்படி நடந்தாலும் இந்த நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய அடிப்படை மனிதப் பண்பில் நீ தவறி விட்டாய். உடனடியாக நீ போய் அவளைப் பார்த்திருக்க வேண்டும். இந்தத் தவறை சரி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டுமோ செய்'

'சரி, அவர்கள் வீட்டுக்குத் தொலைபேசி பேசுகிறேன். விமானத்தில் இன்னும் ஏறியிருக்கா விட்டால் அவளது செல் பேசியிலும் பேசுகிறேன்'

அவர்கள் வீட்டுத் தொலைபேசி எண் மறந்து போய் விட்டதோ, மாறி விட்டதோ, கிடைக்கவேவில்லை. செல்பேசி எண் ஒரு முறை பயன்பாட்டில் இருந்தது. அடுத்த முறை முழுவதும் அடித்து ஓய்ந்தது. மூன்றாவது முறை பயன்பாட்டில் இருந்தது. குறுஞ்செய்தி ஒன்றில், எனது வருத்தத்தையும், அவளுக்கு ஆறுதலையும் சொல்லி, அவள் அப்பாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, நேரில் பார்க்க வராததற்கு மன்னிப்பும் கேட்டு அனுப்பினேன்.

இந்த விபரங்களை சொல்லி இத்துடன் விட்டு விடலாம் என்று கேட்டுக் கொண்டேன். நெஞ்சம் என்னைச் சுடவில்லை.

புதன், பிப்ரவரி 04, 2009

தர்ம சங்கடங்கள்

பத்தரை மணிக்கு தொலைபேசி கணினி வல்லுநர் வந்து விட்டாரா, அவர்களது பிரச்சனை சரியாகி விட்டதா என்று கேட்டு விட்டு தொலைபேசி தகவல் சொல்லி விட்டேன். அவர் இன்னொரு வேலை வைத்தார். அதைச் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டேன். இன்றைக்கு வந்து பார்க்கச் சொல்லியிருந்தார். நாளை, வெள்ளிக் கிழமை அல்லது சனிக்கிழமை நேரம் தரும்படி சொல்லி விட்டு தொலைபேசியை வைத்தேன்.

அதற்குள் தரை தூத்து, துணிகளை அடுக்கி வைத்து துடைக்க ஆரம்பித்திருந்தேன். இன்றைக்கு பெரியமேடு போக வேண்டாம் என்று ஆனதும் துணியையும் ஊற வைத்து விட்டேன். தரை துடைத்து முடிக்கும் நேரத்தில் தொலைபேசி அழைப்பு. அலுவலக எண்ணிலிருந்து அழைத்திருக்கிறான். பெயர் தொலைபேசிக் கருவியில் தெரியவில்லை. யாரென்று உடனேயே அடையாளம் தெரிந்து கொள்ளாமல், இரண்டு முறை அலோ சொல்லி அவன் பேச ஆரம்பித்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

தோல் கண்காட்சியில் பங்கு பெற்றதில் நடந்ததை சொன்னேன். 'இப்படித்தான் எப்போதும் திட்டம் போடுகிறாய். எதுவும் நடக்க மாட்டேன் என்கிறது' என்றான்.

தரை துடைத்தல் முடித்து விட்டு துணி துவைப்பு, மூன்று சட்டை, மூன்று பனியன், மூன்று சட்டி, மூன்று காலுறை, ஒரு பேன்டு, ஒரு சாரம். எல்லாவற்றுக்கும் சோப்பு போட்டு கும்மி, அலசி காயப்போடுவதற்கு வெகு நேரம் பிடித்தது.

தியானம் என்று தனியாக உட்கார வேண்டாம். நாள் முழுவதும் தியானமாக இருக்கட்டும் என்று நினைத்தது கொஞ்சம் சொதப்பலாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. சாப்பிடும் போது படிப்பது, பயணம் செய்யும் போது படிப்பது, சமைத்துக் கொண்டே சாப்பிடுவது போன்ற பழக்கங்களை விட்டொழித்து விட்டேன்.

அரிசி உணவை விட்டு விடுவது என்று முடிவு பெரும் சோதனைக்கு உள்ளாகி விட்டது. ஒரு ஆண்டு இல்லா விட்டாலும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு அந்த ஒதுக்கலை செய்தது விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறது. இனிமேல் முடிந்த அளவு அரிசி உணவைத் தவிர்க்க வேண்டும்.

ஓட்சு காய்ச்சி அதில் பால் ஊற்றி சாப்பிடுவதையும் செய்து கொண்டிருந்தேன். சுவை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பாலில் ஏற்படும் உணர்வுத் தாக்கங்களை சமாளிப்பது பெரிய பாடாகப் போய் விடும். அது நமக்கு வேண்டாம். ஓட்சில் சுவை சேர்ப்பதற்கு வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமானால் ஏதாவது பருப்பு வகைகளை சேர்ப்பதை பரீசிலிக்கலாம்.

இன்றைக்கு பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்து விட்டு மாலையில் சாப்பிடலாம். நேற்று வாங்கி வைத்த பிரெட் பொதியில் இரண்டு மூன்று துண்டுகள் மீந்திருக்கின்றன. வாங்கி வைத்த சிறுபயறு கொண்டைக் கடலை இரண்டும் சாப்பிடப்படாமலேயே இருக்கின்றன. அதை ஊற வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். போய் கொண்டை கடலையும் சிறுபயறும் ஒரு கிண்ணத்தில் மீந்து வைத்திருந்த பொரிகடலையையும் ஊற வைத்து விட்டு வந்து விட்டேன்.

பால் உணவை முற்றிலுமாக ஒதுக்க வேண்டும். தேநீர்க் கடைக்கு தேநீர் சாப்பிடப் போனால் பால் சேர்க்காமல் குடிக்க வேண்டும். பால் வாங்கி ஓட்சில் சேர்ப்பது தேவையே இல்லை. குலாப்ஜாமூன் போன்ற பால் இனிப்புகளை ஒதுக்க வேண்டும். பால் சேர்க்காமல் வாழ முடியும், பால் சேர்ப்பதால் நன்மைகளை விட கெடுதியே அதிகம்.

எண்ணையில் பொரித்தவற்றையும் தவிர்க்க வேண்டும். பூரி, நொறுக்குத் தீனிகள், பப்படம், வற்றல் வகைகளை தொடவே கூடாது. காலையில் வெளியில் சாப்பிட நேர்ந்தால் பொங்கல் அல்லது இட்லி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

மதிய வேளையில் சோறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்கள், பன், ரொட்டி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். முட்டை முதலான மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பன், பிரெட், பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் பால், முட்டை சேர்த்துக் கொள்ளலாம். பயறு அவித்து தேங்காய் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சொல்லப் போனால் பால், நெய் சேராத, எண்ணெயில் பொரிக்கப்படாத இனிப்பு வகைகளில் பாதகம் இல்லைதான். உடலுக்கு சர்க்கரைச் சத்து தருவதற்கு கடலை மிட்டாய், பொரி உருண்டை, மாவு உருண்டை போன்றவை சேர்த்துக் கொள்ளலாம். தேநீரில் பால் சேர்க்காமல் இனிப்பு போட்டு சாப்பிடலாம்.

இப்படி உட்கார்ந்து ஒவ்வொரு உணவு வகையாகப் பட்டியலிட்டுக் கொண்டிருப்பது விரதமாகாது. வயிற்றைக் கிள்ளும் பசிக்கு, தொண்டையில் தெரியும் வறட்சிக்கு நினைவூட்டலாக இன்றைய நிலையை எதிர்கால முன்னேற்றத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.

போன தடவை எழுதிக் கொண்டிருந்த போது ஒரு மணி நேரம் ஆகும் முன்னதாகவே தூக்கம் கண்களைச் சுழற்ற தூங்கப் போய் விட்டேன். இப்போது அரை மணி நேரம் ஓடி விட்டிருக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் போது இரண்டு அழைப்புகளைத் தவற விட்டிருந்தேன். அவரது சகோதரியின் பெண்ணுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா என்று ஒரு கேள்வி கேட்க அழைத்திருக்கிறார். நான் திரும்ப பேசிய போது கணினி மென்பொருள் சேவை குறித்துப் பேச வெள்ளிக் கிழமை வரலாமா என்று கேட்டேன்.

இன்னொரு அழைப்பு கணினி பராமரிக்கும் வல்லுனர் வந்திருப்பதாகவும் அவர் உபுண்டு லினக்சு நிறுவுவது குறித்துக் கேட்பதாகவும் சொன்னார். அவர் தனது வீட்டில் உபுண்டு நிறுவு எல்லா துணைக்கருவிகளையும் பொருத்திக் கொள்ள முடிந்ததாம். இங்கும் உபுண்டு நிறுவி முயற்சிக்கலாமா என்று கேட்டார். தாரளமாக செய்து கொள்ளலாம் என்று சொன்னேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு லினக்சு என்றால் கேட்டுக் கூட இராதவர்கள் எல்லாம் இன்றைக்கு இணையத்திலிருந்து தகவிறக்கி நிறுவிப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். வாழ்க வளமுடன்.

லெதர்லிங்க் மென்பொருள் விண்டோசில் இயங்குமா என்று கேட்டார். இயங்கும் ஆனால் அதை நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம் என்று சொல்லி காரணங்களை விளக்கினேன். குழந்தையின் கையில் கத்தியைக் கொடுக்கக் கூடாது. பராமரிப்பது எளிதானது என்று விண்டோசு கையில் சர்வர் கணினியை ஒப்படைக்கக் கூடாது என்று சொன்னேன். இன்றைக்குக் காலையில் அழைத்து எஞ்சியிருக்கும் வேலைக்கு பணித்திட்டத்தைக் கேட்டார்.

தயாரிப்புகள்

துணி துவைக்க வேண்டும், தரை தூத்து துடைக்க வேண்டும். பொருள்களை அடுக்கி வைக்க வேண்டும். பாத்திரங்களை கழுவி வைக்க வேண்டும். தூசி படிந்த பொருள் அடுக்குகளை தூசி தட்டி வைக்க வேண்டும்.

எழுத வேண்டும். எழுதுவதற்கு விஷயங்களா இல்லை. ஈழத் தமிழர் நிலைமை, சோனியா காந்தியின் அரசியல், உலகப் பொருளாதார நெருக்கடி, நிறுவனத்தில் வணிக நிலைமை, அதை மாற்றுவதற்கான முயற்சிகள், உணவுப் பரிசோதனைகளில் மாற்றங்கள், குழந்தைகள், நண்பர்கள், சமூகப் பொறுப்பு என்று நிறைய எண்ணங்களும் கருத்துக்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. கடைசியாக எழுதியது சனவரி 26ம் தேதி விடுமுறை அன்று. ஒரு வாரத்துக்கு மேல் ஆகி இன்றைக்கு பத்தாவது நாள் ஆகி விட்டது.

திங்களோடு திங்கள் எட்டு, செவ்வாய் ஒன்பது, புதன் பத்து என்று கணக்குப் போடுவார்கள். இன்றைக்குப் பத்தாவது நாள்.

போன திங்கள் கிழமை குடியரசு தின விடுமுறை முடிந்து செவ்வாய்க் கிழமை காலையில் அலுவலகத்தில் கூட்டம். புதன் கிழமையிலிருந்து அதிகாலை 6 மணிக்கு பணி தொடங்கும் வளமை. ஒரு அணி 6 மணி முதல் 2 மணி வரையிலும், இரண்டாவது அணி 2 மணி முதல் 10 மணி வரையிலும், மூன்றாவது அணி 9 மணி முதல் 6 மணி வரையிலும் பணி புரிய வேண்டும். அலுவலகத்தில் இருக்கும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சி.

6 மணிக்கு அலுவலகம் போக வேண்டுமானால் ஐந்தரைக்கு வீட்டிலிருந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும். நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அதற்கு முன்பே எழுந்திருந்தால்தான் எழுத்து, காலைக்கடன்களை முடித்து நிறைவாகக் கிளம்ப முடியும். செவ்வாய்க் கிழமை காலையில் தூங்கி எழுந்து தாமதமாகவே வீட்டிலிருந்து கிளம்பினேன். சரியாக 9 மணிக்கு அலுவலகம்.

புதன் கிழமை ரயிலைப் பிடித்து ஆம்பூர் வாணியம்பாடி போக வேண்டும். நான்கரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி 5 மணிக்கு ராமாபுரத்தில் பேருந்து ஏறி ஐந்தரைக்கு மத்திய காவல் நிலையம் போய் விட்டேன். ராமாபுரத்திலிருந்து ஒரு வேன், கிண்டி ரயில் நிலையத்துக்கு முன்பு 18A பேருந்தில் ஏறி தொடர்ந்து ரயில் நிலையம் அடைந்தேன். இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்பதிவு செய்து விட்டிருந்ததால் சீட்டு வாங்க அலைய வேண்டாம், உட்கார இடம் கிடைக்குமா என்று மன அழுத்தம் இருக்காது.

காத்திருக்கும் நேரத்துக்கு எகனாமிக் டைம்சு நாளிதழ் வாங்கிக் கொண்டேன். 2 ரூபாய்தான். வீட்டிலும் போட்டிருப்பார்கள். சரவணபவனில் காபி குடிக்கப் போனோம். கூடவே இட்லி தட்டும் வாங்கிக் கொண்டேன். ஆறே காலுக்கு ரயில் சரியாகக் கிளம்பி விட்டது. காட்பாடி தாண்டிய பிறகு உணவு அறைக்குப் போய் இரண்டு தோசைகள், பிரெட் ஆம்லெட் ஒரு தட்டு வாங்கி நான் ஒரு விள்ளல் தோசையும் பாதி பிரெட் ஆம்லெட்டும் சாப்பிட்டு விட்டுத் திரும்பினேன். மீதியை நண்பர் சாப்பிட்டுக் கொண்டார்.

வயிறு நிரம்பியிருக்கவில்லை. தோசை வடை விற்றுக் கொண்டு போன ஊழியரிடம் வடை 2 ஒரு தட்டில் வாங்கிச் சாப்பிட்டேன். ஆம்பூரில் இறங்கி இருப்புப் பாதையில் இறங்கி ஏறினேன். வழக்கமாக சண்டை போட்டு படி ஏறி பாதசாரிகள் கடக்கும் பாலத்தைப் பயன்படுத்துவேன். வயதாகி விட்டது போலத் தெரிகிறது.

ஆம்பூரிலிருந்து வாணியம்பாடிக்கு அரசுப் பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டோம். வாணியம்பாடி காதர்பேட்டையில் ஆட்டோ ஒன்று பிடித்து பயணத்தை ஆரம்பித்தோம். நல்ல வேளையாக நாங்கள் போன நேரத்துக்கு உள்ளே வந்தார். அவரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தோம். எங்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்தார். கொல்கத்தாவில் அவர்களது வாடிக்கையாளர்கள் நன்கு இயங்கிக் கொண்டிருக்கார்கள். அந்தப் பகுதியில் முயற்சிக்குமாறு சொன்னார்.

அங்கிருந்து அடுத்த இடம். நாங்கள் போய் உட்கார்ந்த நேரத்தில் வண்டியில் வந்து இறங்கினார். அவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து பேசிக் கொண்டிருந்து விட்டு அடுத்தடுத்து முதலாளிகளைச் சந்திக்காமல் உதவியாளர்களிடம் கொடுத்து விட்டு வந்தோம்.

உள்ளே இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார். அங்கும் வரவேற்பரையில் இருந்தவரிடம் கொடுத்து விட்டு வந்தோம். வேறு எங்கும் போய் இது போல மூக்கு உடைபட விருப்பமில்லாமல் நேராக பேருந்து நிலையம். ஆட்டோவுக்கு 150 ரூபாய். 500 ரூபாய் நோட்டை மாற்றி 350 ரூபாய் திரும்பக் கிடைத்தது.

குடிப்பதற்கு பழச்சாறுப் பெட்டி ஒன்று வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறினோம். சென்னை செல்லும் பேருந்தாக இருந்தாலும், இருக்கை வசதியும் போகும் வேகமும் மட்டாக இருக்கவே ஆம்பூர் சீட்டு வாங்கிக் கொண்டோம். ஆம்பூரில் இறங்கி வேக வைத்த சோளக் கொண்டை. அங்கிருந்து சேலத்திலிருந்து வரும் பேருந்தில் ஏறி வேலூர். ஒன்றரை மணி மதிய உணவு வேளை. ஆர்யாஸ் விடுதியில் பரோட்டா வாங்கிச் சாப்பிட்டேன், அதைத் தொடர்ந்து ரவை தோசை, காபி.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து பகிர்வூர்தியில் சத்துவாச்சாரி. அங்கிருந்து நகரப்பேருந்தில் பெருமுகை. இரண்டு மணிக்கு மேல்தான் தொழிற்சாலைக்குப் போய்ச் சேர்ந்தோம். இயக்குனர் வேலையாக இருக்கிறார் என்று வரவேற்பறையில் சொன்னார்கள். இரண்டு நிமிடங்கள் மட்டும்தான் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும் உள்ளே போக விட்டார்கள். அவர் வரவேற்று அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார்.

வெளியில் வரும் போது மூன்றரை மணி. நேராக வேலூர் போய் சென்னை திரும்ப முடிவு செய்தோம். செய்ய வேண்டிய வேலைகளும் மீதியிருக்கின்றன. பெருமுகையிலிருந்து நகரப்பேருந்தில் சத்துவாச்சாரி. பகிர்வூர்தியில் வேலூர் பேருந்து நிலையம். பெங்களூரிலிருந்து வரும் அதிசொகுசுப் பேருந்தில் இருக்கை பிடித்தோம். ஆளுக்கு 75 ரூபாய் சீட்டு 150 ரூபாய்களுக்கு வேட்டு.

போரூரில் இறங்கி அலுவலகம். அடுத்த நாள் ராணிப்பேட்டை போக வேண்டும். சந்திப்பதற்கு கூப்பிட்டிருந்தார்கள் என்று சொல்லியிருந்தார். அவரும் ராணிப்பேட்டைதான் திட்டமிட்டிருந்தார். காலையில் சரியாக 6 மணிக்கு அலுவலகம் போய் விட்டேன். இந்த ஆண்டில் இதுவரை செய்த பணி விபரங்களை அட்டவணை இட்டேன். நவம்பர், டிசம்பர், சனவரி மாதங்களில் மாதத்துக்கு குறைவாகவே வேலை செய்திருக்கிறோம். சம்பளச் செலவுகள் மட்டும் தாண்டுகிறது.

சம்பளச் செலவை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம். அதை பேசி விட்டு அந்த மடலை எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன். பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் திட்டமிட்டிருக்கும் பணி அளவு தாண்டவில்லை. அதற்கான எதிர்வினைகளும் எதிர்பார்த்தபடி கடுமையாக இருந்தன.

அலுவலகத்தில் முதல் பணி நேரத்திற்காக வந்திருந்த காலை உணவு பூரி சாப்பிட்டுக் கொண்டேன்.

அதை அனுப்பிய கலக்கத்தோடு சந்திப்பதற்கு ஆயத்த ஆவணங்களையும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்து விட்டேன். வெள்ளிக் கிழமை வந்து பார்க்கும் படி சொல்லியிருந்தார். இதை எல்லாம் முடித்து விட்டுப் புறப்படும் போது ஒன்பது மணி ஆகி விட்டது. 11 மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். நாங்கள் சரியாக 12 மணிக்கு தொழிற்சாலையை போய்ச் சேர்ந்தோம். அது கொஞ்சம் கோபத்தைக் கொடுத்திருக்கத்தான் செய்தது.

இடைத்தரகர் வருவதற்குக் காத்திருந்து அவர் மூலமாக மேலாளர்களை சந்தித்து விளக்கினோம். மதிய உணவு தொழிற்சாலைக்கு அருகிலேயே சாப்பாடு. சோறு, சாம்பார், ரசம்.

மதியத்துக்கு மேல் தோல் தொழிற்சாலைக்குப் போய் அங்கு பொறுப்பிலிருந்த இயக்குனரை சந்தித்து விபரங்களைப் பேசினோம். கட்டுப்பாட்டுக்காக சேர்ந்திருந்த கணக்காளர்கள் இருவரும் நமக்கு ஆதரவாக இருந்தார்கள். முன்பு ஒரு முறை ஆம்பூரில் பார்த்திருந்தவர் இப்போது இங்கு சேர்ந்திருந்தார்.

இடைத்தரகரின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்துப் பேசி விட்டு நேராக வந்தோம். விபரங்களை விளக்கி விட்டு காத்திருக்கச் சொல்லியிருந்த ஆட்டோவில் வாலாசா. அவர் 80 ரூபாய்கள் வாங்கிக் கொண்டார். பேருந்து வந்து இடம் கிடைத்து விட்டது.

போரூரில் இறங்கி வளரசவாக்கம் வரை பேருந்து. அலுவலகத்தில் மாலை பணிக்காக கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டுக்கொண்டேன். வெள்ளிக் கிழமை காலையிலும் 6 மணிக்கு வந்து சேர்ந்து விட்டேன். வேலூரில் அவரது அம்மாவுக்கு ஆண்டு நினைவு நாள் சடங்குகளுக்காக போயிருக்கிறார். இன்றைக்கு அலுவலகத்துக்கு வருவது சந்தேகம்தான்.

தோல் கண்காட்சியை முன்னிட்டு இணையத் தளத்தை மேம்படுத்துதல் செய்து கொண்டிருந்தேன். அழைப்பிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவதையும் செய்தேன்.

சனிக்கிழமை தோல்க் கண்காட்சியின் தொடக்க விழா நாள். இன்றைக்கு பார்க்க வாய்ப்பு கிடைப்பது சாத்தியக் குறைவுதான். காலையில் தொலைபேசி கேட்டால், அலுவலகத்துக்கு வந்து விட்டுத் திரும்பிப் போய் விட்டார் என்றார்.

12 மணி வாக்கில் தொலைபேசி வரச் சொன்னார். ஒரு மணிக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லி வெளியில் பேருந்து பிடித்துப் போய்ச் சேரும் போது ஒன்றரை ஆகி விட்டது. வளசரவாக்கத்திலிருந்து வடபழனி. அங்கிருந்து எழும்பூர். பாதசாரி நடைபாதையில் நிலையத்தைக் கடந்து மறுபக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து வழியில் ஒரு தேநீர் கடையில் ஆளுக்கொரு சமோசா சாப்பிட்டு தேநீர் குடித்துக் கொண்டோம். அதுதான் மதிய உணவு. சந்திப்பு மாலை வெகு நேரம் வரை நீடிக்கும் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.

ஒன்றரை மணிக்கு உள்ளே யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். தாமதமாக வந்ததால் இன்றைக்குப் பார்க்க முடியாது என்று கிண்டலாகச் சொன்னார். இரண்டரை மணிக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்தவர்கள் வெளியில் வந்தார்கள். அதன் பிறகு அவரது மதிய உணவு ஆரம்பித்திருக்கும். காத்திருத்தல் என்று 20 நிமிடங்கள் அமைத்து 5 நிமிடங்களுக்குள் அழைத்து விட்டார்கள்.

வழக்கம் போல, நேரடியாக வேலைக்கு வராமல் பொது விவகாரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். வழக்கத்துக்கு மாறாக 10, 15 நிமிடங்களில் அதை முடித்து விட்டு வேலை விபரத்தைக் கேட்டார். தயாராக எடுத்துப் போயிருந்த ஆவணங்களைக் கொண்ட கோப்பைக் கையில் கொடுத்து விட்டேன். முதல் ஆவணத்தில் பேச வேண்டிய விபரங்களின் பட்டியல். இரண்டாவதில் காலணித் தொழிற்சாலைக்காக ஒத்துக் கொண்ட, புதிதாக சேர்க்கப்பட்ட, முடித்து விட்ட பணி விபரங்கள். மூன்றாவதில், தர வேண்டிய பண விபரங்கள். நான்காவது, ஐந்தாவதில் இந்த ஆண்டு செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல். கடைசித் தாளில் முன்பணமாகக் கேட்கும் பண விபரங்கள்.

விளக்க வேண்டியதை விளக்கி சொல்ல வேண்டியதைச் சொல்லி பணம் கேட்கும் நிலையை அடைந்தோம். பண நிலுவையில் தெரிந்தோ தெரியாமலோ தவறாக நமக்கு அதிகமாகத் தருவதாகச் சொன்னதை சரி செய்து குறைவாகவே தரும்படிக் கேட்டுக் கொண்டேன். அந்த நேர்மை வலிமையில் நாம் கேட்ட பணத்தில் பெரிய அளவு குறைக்காமல் கொடுத்து விட்டார்.

இந்த ஆண்டு இனிமேல் செய்ய வேண்டிய பணிகளுக்கான விபரங்களை தோல் கண்காட்சி முடிந்து 4ம் தேதி பேசலாம் என்று சொன்னார். இன்றுதான் நான்காம் தேதி. நேற்றைக்கு தொலைபேசி இன்று பத்தரை மணியிலிருந்து 12க்குள் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். பேருந்துகள் ஓடாது என்று சொல்லிப் பார்த்ததை ஏற்றுக் கொள்ளவில்லை. பத்தரை மணிக்குத் தொலைபேசி வரச் சொன்னால் போய்ப் பார்த்து விட வேண்டும். எப்படி கணினி வடிவமைப்பது என்று விளக்கி விட வேண்டும்.

பண விபரங்களைப் பேசி விட்டுப் புறப்படத் தயாரானோம். வருவதற்குக் காத்திருக்கும் போது பொருளாதாரச் சுணக்கம் பற்றி கருத்துக்களைக் கேட்டோம். 1929ல் தொடங்கிய உலகளாவிய நிதி நெருக்கடி சார்ந்த பொருளாதார பின்னடைவு பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கவேவில்லை. இரண்டு முறை அழுத்திச் சொன்ன பிறகுதான் இது போல ஒன்று நடந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். இன்னும் நான்கு பேரிடம் பேசி அது பற்றிய முழு விபரங்களையும் சேகரித்துக் கொள்வார்.

அங்கிருந்து ஆரம்பித்து அமெரிக்க வாழ்க்கை முறை, இந்திய வாழ்க்கை முறை, கடவுள் பக்தியின்மை, பெரியவர்களை மதிக்காமல் இருத்தல் என்று வளர்ந்து இந்து மதம் என்று திரும்பி, சாதி முறைக்கு வந்து நின்றது. இவருக்கு தனது சாதி அடையாளத்தை விட்டுக் கொடுக்க மனமில்லை. சாதி முறை உடைய வேண்டுமானால் ஒடுக்கப்பட்டவர்கள் மாற்றங்களை உள்ளிருந்து கொண்டு வர வேண்டும் என்று மட்டும் ஒரு கட்சியை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார். 'சாதி அமைப்பு இந்துமதத்தைப் பிடித்த சாபம், இந்து மதத்தை நேசிப்பவர்கள் சாதி அமைப்பை உடைத்துப் போடுவதை செய்யாமல் இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது என்று நான் சொன்னதையும் ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொண்டார்.

திருமணம் ஆகாத மகன்கள் இருக்கும் போது அவர் சாதியை நிராகரிக்க முடியாது. '20 ஆண்டுகளுக்குப் பிறகு நீ வந்து சொல்லு' என்று என்னிடம் ஒரு கொக்கியைப் போட்டு வைத்தார். நின்று கொண்டே ஓரிரு மணி நேரங்கள் பேசியிருப்போம். கால் எல்லாம் வலிக்க ஆரம்பித்திருந்தது. மாலையில் நடந்த தோல்க் கண்காட்சி தொடக்க விழாவுக்கு நாங்களும் போகவில்லை. அவரும் போகவில்லை.

வெளியில் வந்து கலைக்கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து பிடித்து லிபர்டி வரை வந்தோம். அங்கிருந்து வளசரவாக்கம். அச்செடுக்கும் பணிகளை கொடுத்த அழுத்தத்தால் அதிகமாக வேலைகள் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அலுவலகத்துக்கு வந்து பார்த்தால் இன்னும் வேலை முடித்திருக்கவில்லை. அவரே தொலைபேசி, தாமதமாகி விட்டதால் வீட்டுக்குப் போய் விடுவதாகவும் அடுத்த நாள் கொண்டு கொடுப்பதாகவும் சொன்னார்.

பின்னிரவில் அழைத்து அடுத்த நாள் அவரால் வர முடியாது என்றும் சொன்னார். அடுத்த நாள் காலையில் போய் வாங்கிக் கொண்டு வந்தார். தோல் கண்காட்சிக்குப் போய் பார்த்து வரலாம் என்று நினைத்திருந்தோம். எல்லோரையும் வெளியில் அனுப்பி விட்டார்கள் என்று அழைத்துச் சொல்லவே அதை கைவிட்டோம்.

முதல் நாள் மாலையில் கடையை மூடி அலுவலகம் திரும்பும் போது நிறைவாக இருந்தது. சூட்டோடு சூட்டாக முதல் நாள் நிகழ்வுகளைக் குறித்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

வீட்டில் சாப்பிடுவதற்கான பொருட்கள் வாங்கி வைத்திருந்தேன். ஞாயிற்றுக் கிழமை இரவு உணவுக்கு வெளியில் போகலாமா என்று யோசித்து விட்டு கடைசியில் பசுமைக் கடையில் டாப் ரேமன் நூடுல்ஸ் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டேன்.

அன்று மாலை கல்லூரி பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்திரக் கூட்டம். வண்டியிலேயே இடம் பிடித்துப் போய்ச் சேர்ந்தோம்.

போகும் போது தேவைகளை பரிமாறி ஒருவொருக்கொருவர் உதவி செய்யும் இணையப் பயன்பாடு உருவாக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அதே சூட்டோடு உள்ளே செயலரிடம் கூட்டத்துக்கு முன்பு பேசியிருந்தேன். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு பேசிக் கொண்டிருந்தேன். அவரது நிர்வாக இயக்குனரின் பையனை அடுத்த நாள் அழைத்து வருவதாகச் சொன்னார்.

எல்லோரும் உட்கார்ந்து பேசிய பிறகு, தலைவர் பேசினார். தொடர்ந்து மற்றவர்களின் அறிமுகங்கள். நானும் நண்பரும் எங்கள் முறையில் நிறுவன பெயரை அழுத்தமாகவே சொல்லிக் கொண்டோம்.

கருத்துப் பரிமாற்றத்துக்கு வரவேற்கும் போது என்னை முன் வந்து பேசச் சொல்லி விட்டார். ஒரு சில வாக்கியங்களில் திட்டத்தை விளக்கி விட்டேன். பல முகங்களில் வரவேற்பும் ஆமோதிப்பும். இரண்டு அல்லது மூன்று பிடெக் மாணவர்களை சேர்த்துக் கொண்டு திட்டப்பணியாக செய்து முடிக்கலாம் என்று சொன்னேன்.

அத்தோடு சாப்பிட அழைத்து விட்டார்கள். சூப்பு வேண்டாம் என்று ஒதுக்கும் அளவுக்கு வரிசை காத்திருந்தது. ரொட்டித் துண்டுகள், சோறு. தொடர்ந்து தயிர் சோறு. காலிபிளவர் குழம்பு இல்லாத பொரியல். கடைசியில் ஐஸ் கிரீமும் கொஞ்சம் கெட்டுப் போன வாடை அடித்த குலாப் ஜாமூனும் சாப்பிட்டேன். சோறு, இனிப்பு வகைகளை ஒதுக்கியிருக்கலாம்.

1993 வகுப்பிலிருந்து அதிக எண்ணிக்கையில் வந்திருந்தோம். இந்த ஆண்டு இறுதி ஆண்டு மாணவர்கள் யாரும் வந்திருக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடுவார்கள் என்று அஞ்சி கல்லூரியை மூடி விடுதிகளிலிருந்து வெளியேறச் சொல்லி விட்டார்களாம். நாசமாகப் போக வேண்டிய அரசாங்கம்!

கிளம்பும் போது அருகிலேயே இருந்த வீட்டுக்கு போகும் பாதையில் இறங்கிக் கொண்டு சாப்பிட தோசை பொதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். அழைத்த போது பேச முடியாததால், திரும்ப அழைத்தால் அது வீட்டு இணைப்பு.

சிஎம்எம்எம் முறைமை செயல்படுத்தப் போய் தேவையில்லாத நெறிமுறைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். நமது பணி முறையை மேம்படுத்துவதை மட்டும் குறிக்கோளாக வைத்துக் கொண்டால் போதும் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டார். நமது சேவைகளை விற்கும் போது பொருள் என்று விற்காமல் இருக்க வேண்டும் என்று வீடு கட்டிக் கொடுக்கும் தொழிலை எடுத்துக்காட்டாகச் சொன்னார். அதை நாம் செய்ய முயற்சிக்கும் முறைக்குப் பொருத்திக் காட்டியதும் ஏற்றுக் கொண்டார்.

தூக்கம் கண்களைச் சொக்கவே தூங்கிப் போய் விட்டேன். கார் வந்து இசைத்த கடூரமான ஓசையில் விழிப்பு வந்து விட்டது. அப்புறம் தூங்கி காலையில் தாமதமாக எழுந்திருந்தேன். ஐந்தரை மணி.

சமையல் மேடை துடைத்து, பாத்திரங்கள் கழுவி வைத்து, குடிக்கத் தண்ணீர் பிடித்து வந்து கொதிக்க வைத்தேன். சாப்பிடுவதற்கு ஓட்சும், பிரெட்டும். ஓட்சை அடுப்பில் வைத்து விட்டு கடையில் பாலும் பிரெட்டும் வாங்கப் போனால் ஓட்சு பொங்கி வழிந்து விட்டிருந்தது. பால் 10 ரூபாய்கள், பிரெட், சீனி. ஜாம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

முகம் மழித்து, குளித்து விட்டு பிரெட் துண்டுகளை சூடாக்கி முந்திய நாள் வாங்கி வந்த தோசைக்குத் தொட்டுக் கொள்ள வந்த சாம்பாருடன் உள்ளே தள்ளினேன். (சாப்பிடும் பொருட்களைப் பற்றி எழுதும் போது பசியும் சபலங்களும் அதிகமாகின்றன, தவிர்க்க வேண்டும்.), தொடர்ந்து வாழைப்பழம் ஒன்று. அதற்குள் விழித்து விடவே விபரங்களைச் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

மின்னஞ்சல்களுக்கு பதில் போட்டு விட்டு நான் கிளம்பினேன். வீட்டுக்கு நடந்து வரும் வழியில் துர்கா விடுதியில் 3 பரோட்டாக்கள் சாப்பிட்டுக் கொண்டேன். குடியிருப்போர் நலச் சங்க விவகாரங்களுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். 8.45க்கு வருவதாகச் சொல்லியிருந்தேன். வீட்டுக்கு முன்பு நாற்காலிகளை எடுத்துப் போட்டு எல்லோரும் பேச ஆரம்பித்தோம். 5 நிமிடங்களில் முடிய வேண்டியது ஒரு மணி நேரம் வரை இழுத்துக் கொண்டிருந்தது.

இடையில் வீட்டிற்குள்ளிருந்து புத்தகங்களை எடுத்து வர அவனுக்குப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தேன். பேசும் விபரங்களில் அக்கறையே இல்லை. எனக்குப் பொறுப்பு எதுவும் கொடுக்காமல் விலகிக் கொண்டார்கள். 'கருத்து கந்தசாமியாக' இருந்து கொள்கிறேன் என்று சொன்னேன். மாதா மாதம் பராமரிப்புத் தொகை கொடுப்பதே பெரிய பாடு என்று பல முறை குத்திக் காட்டிக் கொண்டார் பழைய செயலர் அம்மா. மிகவும் குறுகிய மனம் படைத்தவர்கள்.

தூங்கி காலையில் ஐந்தரை மணிக்கு விழிப்பு வந்தது. எழுந்திருக்காமல் ஏழரை மணி வரை தூக்கம். பல கனவுகள். இதை முடித்து விட்டு வீட்டை கொஞ்சம் ஒதுங்க வைத்து விட்டு பத்தரை மணிக்கு தொலைபேச வேண்டும். சாப்பிடுவதைத் தவிர்த்து விட வேண்டும்.