வேலை செய்வதில் இருக்கும் கோளாறுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.
காமன்வெல்த் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு வரை ஏற்பாடுகள் எல்லாம் அரைகுறையாக இருந்தன. ஊடகங்கள் போட்டு வாட்டி எடுத்த பிறகு கடைசி நிமிட சுறுசுறுப்பில் களம் இறங்கி எல்லாவற்றையும் சீர்படுத்தி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்த வழி செய்தார்கள். இது போன்று வாழ்க்கையிலும் பல முறை நடந்திருக்கிறது.
பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது பாடங்களை அன்றன்றே படித்து விட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தாலும். தேர்வுக்கு முந்தைய ஒரு மாதம், தேர்வுக்கு முந்தைய நாளில் அதிக அழுத்தத்துடன் படித்துக் கொண்டிருப்போம். தேர்வு முடிந்து அடுத்த ஆண்டு, பருவம் ஆரம்பித்த நாட்களில் தேர்வு நாட்களில் அனுபவித்த அழுத்தத்தை மறந்து மீண்டும் படிப்பை பின்னால் தள்ளி விட்டு பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் நம்மை மறந்திருப்போம். இந்த நாட்களுக்கான தேர்வு நெருங்கும் போது மீண்டும் கடைசிக் கட்ட தயாரிப்புகளில் இரவு பகலாக மணிகளைச் செலவிட்டுக் கொண்டிருப்போம்.
இந்தச் சுழலை உடைக்க மாதா மாதம் தேர்வு என்று சில கல்லூரிகளில் வைக்கிறார்கள். இப்படி வெளிக் காரணி ஒன்று தூண்டி, அழுத்தம் கொடுத்தால்தான் நாம் நமது கடமையைச் செய்கிறோம். எதையும் செய்ய ஆரம்பிப்பதை இழுத்தடித்து தாமதித்திருந்து விட்டு, ஆரம்பித்த பிறகு இராப்பகலாக கண் விழித்து, அதிக அழுத்தத்துடன் அவசர அவசரமாக முடிக்கப் பார்க்கிறோம். start late, execute fast seems to be our mantra. Can it be start early, execute deliberately and create great.
கடைசி நிமிடத்தில் வேலை முடிக்க முயற்சிக்கும் போது நமக்கே தோன்றும் பல நுணுக்கங்களை செய்ய முடியாமல் போய் விடுகிறது. இந்த நுணுக்கங்கள், செய்யா விட்டாலும் வேலை முடிந்து எதிராளி ஏற்றுக் கொள்வார் என்றாலும், இந்த நுணுக்கங்களுடனான பணி முடிப்பு உயர்ந்த தரத்தையும், அதன் விளைவான எதிர்காலச் சிறப்பையும் தரும்.
கல்லூரி எடுத்துக் காட்டில், தினமும் 2 மணி நேரம் படித்து, அழுத்தம் எதுவுமில்லாமல் நிதானமாகப் படித்து, சின்னச் சின்னக் குறிப்புகளை அவதானித்துக் கொண்டிருந்தால் படித்ததில் தோன்றும் கிளைச் சிந்தனைகளை, தொடர்ந்து போய் புதிய ஆக்கங்களைச் செய்யலாம். அந்த வாய்ப்பு இல்லாமலேயே போய் விடுகிறது.
இரண்டாவதாக, டாட்டா நிறுவனத்தில் நான் பணிபுரியும் போது நடக்கும் மாதாந்திர உற்பத்தித் திட்டமிடல். 20ம் தேதிக்குப் பிறகு எல்லா விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டும், சுறுசுறுப்பாக பெரும் அளவிலான உற்பத்தி நடக்கும். 28, 29, 30, (31)ம் தேதிகளில் ஒவ்வொரு மணி நேரமும் இலக்கைக் கண்காணித்து அறிக்கை தயாரிப்பார்கள். மாதக் கடைசி நாளின் இரவு முழுவதும் பணி புரிவார்கள். அடுத்த மாதம் முதல் நாளின் வேலை நேரத்துக்கு முன்பு தொழிற்சாலையிலிருந்து வெளியில் போய் விட்டிருக்கும் சரக்கு மாதக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
கடைசி வாரத்தில் தினமும் ஒரு டிரக், கடைசி நாளில் ஒரே நாளில் 3 டிரக்குகள் என்று போய்க் கொண்டிருக்கும்.
இவ்வளவும் முடிந்து அடுத்த மாதம் ஆரம்பித்ததும், எல்லாமே தளர்வாகி விடும். நிறைய பேர் விடுமுறைகள் எடுக்க ஆரம்பிப்பார்கள், உற்பத்தி கொஞ்சம் மந்த கதியில் நகர்ந்து கொண்டிருக்கும். திட்டத்தை கண்காணித்தல் அறிக்கை கொடுத்தல் எல்லாம் சுணக்கமாகவே இருக்கும். திரும்பவும் சூடு பிடிப்பதற்கு 15ம் தேதி ஆகி விடும்.
இந்த அணுகுமுறையில் ஒரு ஆதாயம், கிட்டத்தட்ட 1000 பேர் இணைந்து ஏழெட்டு பிரிவுகள் ஒத்துழைத்து வேலை செய்வதற்கு 10 நாட்களில் அதிக குவியத்துடன் பணி செய்வது பலனைத் தருகிறது. மற்ற 20 நாட்களில் சொந்த வேலைகளுக்காக விடுமுறை எடுப்பது, இயந்திரங்களுக்கான பராமரிப்பு வேலை செய்வது, போன்ற ரிப்பேர் பணிகளை முடித்துக் கொள்ளலாம்.
அட்ரீனலின் பாய்ச்சலில் மொத்த நிறுவனமும் சுறுசுறுப்பாக வேலை செய்வதால் கிடைக்கும் அதிக ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி இராப்பகலாக வேலை செய்வதால் உடல்நலக் கோளாறுகள், மன அழுத்தம் அதிகமாகிறது. பொருளின் தரக் கட்டுப்பாடும் தளர்வாகி விடுகிறது. கடைசி நேர அவசரத்தில் கொஞ்சம் ஏறக்குறைய இருப்பதையும் தள்ளி விட்டு விடும் போக்க வந்து விடுகிறது. ஒரு நாள் தாமதித்தால் சரியான தரம் உருவாக்கி அனுப்ப முடியும் என்று வருபவற்றை அந்த ஒரு நாள் வேலையை வெட்டி விட்டு அன்றே அனுப்பி விடும் மனநிலை ஏற்பட்டு விடுகிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், பொருட்களின் தரம், ஊழியர்களின் மனஆரோக்கியம், பணப் புழக்கம் போன்ற நோக்குகளில் இப்படி மாதத்துக்கு 10 நாட்கள் அதிக ஆற்றலுடன் வேலை பார்ப்பது என்ற திட்டமிடல் ஊறு விளைவிப்பதாகவே இருந்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பொருள் அனுப்புவதும், பணம் பெறுவதுமான சுழற்சியும் வட்டமாக இல்லாமல் ஒரு பக்கம் புடைத்துப் போய் விடுகிறது.
இன்னொரு பழக்கம், மேலே சொன்ன start early, execute with care என்பதற்கு நேரடியாக பொருந்தும் நேரப் பராமரிப்பு. ஒரு இடத்துக்கு இன்ன நேரத்துக்குப் போக வேண்டும் என்றால் தாமதமாக புறப்பட்டு வழியெங்கும் டென்ஷனோடு வேகமாக ஓட்டிப் போய்ச் சேருவதை விட, திட்டமிட்டு நேரத்தில் புறப்பட்டு, நிதானமாக பயணப்பட்டுப் போய்ச் சேருவதுதானே நல்லது! வழியில் ஏதாவது தேவை இருந்தால் நிறுத்தி அதையும் முடித்துக் கொள்ளலாம். எதிர்பாராத சிறப்பான ஒன்று கண்ணில் பட்டால் அதையும் செய்து விட்டு பயணத்தைத் தொடர்ந்து கொள்ளலாம்.
இன்னாருக்கு இன்ன தேதி வாக்குக் கொடுத்து விட்டால், கட்டாயம் இருந்தால் ஒழிய வேலை ஆரம்பிப்பதே இல்லை. அதுவும் வாக்கு கொடுத்த உடனேயே பணி ஆரம்பிப்பதில்லை. பணி செய்ய 2 நாட்கள் இருக்கிறது என்று கணக்குப் போட்டிருந்தால், முதல் நாளில் ஆரம்பித்து 2 நாட்களில் வேலையை முடிக்காமல், முடிப்பதாகச் சொன்ன நாளிலிருந்து இரண்டு நாட்கள் முன்பு பணி ஆரம்பித்து முடிக்க முயற்சிப்பேன். நம்முடைய கணக்கு தவறிப் போனால் வாக்கும் தவறி விடும். மேலே சொன்னது போல அவசர அவசரமாக செய்வதால் பல நுணுக்கங்கள், இன்னும் சில நிமிட முயற்சியில் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பவற்றை புறக்கணித்து விட வேண்டியிருக்கும்.
அதற்காக ஒரு பணியை எடுத்துக் கொண்டு அதை செதுக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லைதான். செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்.
எந்த ஒரு வேலையும் செய்து கொண்டிருக்கும் போது இதைச் சீக்கிரம் முடித்து விட்டு அடுத்ததற்கு தாவி விட வேண்டும் என்றில்லாமல், திட்டமிட்ட நேரம் வரை நிதானமாக செய்யும் போது தோன்றும் சின்னச் சின்ன நுணுக்கங்களை எல்லாம் கவனித்து செய்ய வேண்டும். சீக்கிரமாக ஆரம்பித்து நிதானமாக பணி செய்து, சிறப்பாக முடிக்க வேண்டும். தாமதமாக ஆரம்பித்து அவசரமாக பணி செய்து முடிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக் கொண்டு வந்தது. அதன் பிறகு முடி வெட்டவே இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு (வேலூருக்கு இடம் மாற்றும் பொழுது) முகம் மழிக்கும் கருவியின் கைப்பிடி உடைந்து விட்டது. (செப்டம்பர் 5ம் தேதி என்று நினைக்கிறேன்). புதிதாக வாங்கவில்லை. தாடியும் மீசையும் வளரட்டும் திருப்பதிக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.
அப்படி ஒன்றரை மாத தாடி மீசையுடனும் 5 மாத தலைமுடியுடனும் சுற்றிக் கொண்டிருந்தேன். முதல் ஒரு வாரம் தாடி சோம்பேறி, நோயாளித் தாடி போலத் தெரிந்தது. அடுத்த ஒரு மாதம் முதிர்ச்சியைக் காண்பிப்பதாக இருந்தது. கடைசி இரண்டு வாரங்கள் மீசை மேலுதடு தாண்டியும், தாடியில் கத்தரித்து விடாத ஒழுங்கின்மையும் சோம்பேறி வடிவத்துக்குப் புது உயிர் கொடுத்திருந்தன.
போன வாரம் 21ம் தேதி திருப்பதிக்குப் போகலாம் என்று திட்டமிட்டிருந்தேன். சுணக்கமாக இருந்து விட்ட பணிகளை எல்லாம் முடித்து இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 27ம் தேதி மதியம் புறப்பட்டுப் போகலாம் என்று நினைத்திருந்தேன். அன்றைக்கு நானும் ஆம்பூர் போக, புறப்படுவது நின்று போனது. மாலையில், இரவில் போகலாம். அன்று காலையிலேயே நல்ல மழை, காயப்போட்டிருந்த துணிகள் எல்லாம் நனைந்து விட்டிருந்தன. அதனால் தீபாவளி நாட்களில் போகலாம் என்று நினைத்துக் கொண்டுத் தூங்கி விட்டேன்.
காலையில் 4 மணிக்கு எழுந்திருக்கும் போது இணைய இணைப்பு மீண்டும் வேலை செய்தது. பணிகளை எல்லாம் திட்டமிட்டு விட்டு, இன்றைக்கே போக வேண்டும் என்று தோன்றியது. வீட்டை ஒழுங்கு படுத்தித் தூத்துத் துடைத்து, பாத்திரம் கழுவி, துணி துவைத்துப் போட்டு துவைத்த துணிகளை தேய்த்து வைத்து விட்டுப் புறப்பட வேண்டும். போகலாம் வேண்டாம் என்று பல முறை ஊசலாடி, பணிகளை செய்து கொண்டிருந்தேன்.
10 மணி வாக்கில் தயாராகி விட்டேன். கால் சட்டையை தேய்க்கும் வேலை மட்டும் இருந்தது. அதையும் முடித்துக் கிளம்பும் போது பத்தரை மணி தாண்டி விட்டிருந்தது. பையில் மாற்றுத் துணிகள், செல்ஃபோனை வீட்டிலேயே விட்டு விட்டேன். ஓடைப்பிள்ளையார் கோவில் நிறுத்தத்தில் ஓரிரு நிமிடங்கள் காத்திருந்தால் சித்தூர், திருப்பதி பேருந்துகள் எதுவும் வரவில்லை. சாலையைக் கடந்து பேருந்து நிலையம் போகும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.
பேருந்து நிலையத்திலும் சித்தூர் என்று போட்டிருந்த தனியார் பேருந்தில் மட்டும் திருப்பதி, சித்தூர் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஏறாமல் காத்திருந்தேன். 10 நிமிடங்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலப் போக்குவரத்துக் கழக பேருந்து வந்தது. திருமலை போவது. திருமலை பேருந்து கிடைத்தால் நேராக ஏறி விடுவதாக நினைத்திருந்தேன். ஏறி உட்கார்ந்தால் பேருந்து நிரம்புவது வரை காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. பேருந்து புறப்படும் போது 11.45 ஆகி விட்டிருந்தது. இதற்குள் இன்னொரு ஆந்திர பேருந்து, ஒரு தமிழ்நாடு பேருந்து புறப்பட்டுப் போய் விட்டிருந்தன.
88 ரூபாய் கட்டணம். மேல் திருப்பதி வரை போவதற்கு. அதிகமாகப் பட்டது. சென்னையிலிருந்து திருப்பதி 60 ரூபாய், மலையில் ஏற 30 ரூபாய். இதுவும் கிட்டத்தட்ட அதே கட்டணம். தூரம் குறைவு என்பதற்கு என்ன ஆதாயம்.
வழியில் சித்தூர் ஆட்களையும் ஏற்றி கொண்டார்கள். சித்தூர் சீக்கிரமே வந்து விட்டது. பேருந்து நிலையத்தில் சாப்பிடுவதற்கு 10 நிமிடங்கள். பேருந்து மறுபடியும் புறப்பட்டு ஓடியது. அடுத்த 2 மணி நேரங்களுக்குள் திருப்பதி வந்து விட்டது. இது வரை வந்திராத வழித்தடம். புத்தூரும் பார்க்கவில்லை, காளகஸ்தியும் பார்க்கவில்லை. திருப்பதி பேருந்து நிலையம் கூட வராமல், நேராக அலிப்பிரி பாலாஜி லிங்க் பேருந்து நிலையம் வந்து விட்டது.
மலையில் நடந்தே ஏறினால்தான் இலவச மொட்டை, சீக்கிர தரிசனம் என்று இங்கு இறங்கி நடைபாதைக்கு வந்தேன். இடையில் எங்கும் உட்காராமல் ஒரே முயற்சியில் ஏற வேண்டும் என்று நினைத்திருந்தேன். 1200 படிகள் ஏறிய பிறகு மட்டும் ஒரு முறை உட்கார்ந்து மூச்சு வாங்கிக் கொண்டேன். அதன் முன்பும் பின்பும், மொட்டை போட உட்காரும் வரை நடந்து கொண்டுதான் இருந்தேன். இடையில் பொருள் வாங்க, சீட்டு பெற நின்றதைத் தவிர வேறு இடங்களில் நிற்கக் கூட இல்லை.
ஏற ஆரம்பிக்கும் போது யாரோ இரண்டேகால் என்று மணி சொன்னார்கள். (பேருந்து பயணம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம்) காலி கோபுரத்தில் சீட்டில் வந்த நேரம் 3.05 (2050 படிகள் ஏற 1 மணி நேரம்). ஏறி முடித்த பிறகும் இருட்டியிருக்கவில்லை. 5 மணி ஆகியிருக்கும் என்று தோன்றியது. மொட்டை போட்டு விட்டு அங்கேயே குளித்து உடை மாற்றிக் கொண்டேன்.
வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸ் வந்தால் நடந்து வந்தவர்கள் போவதற்கு வெளியில் பெரிய வரிசை நிறுத்தியிருந்தார்கள். சாப்பிடலாம் என்று சுற்றி வந்து இந்தியன் காஃபி ஹவுசில் இட்லி, உப்புமா, காஃபி குடித்து விட்டு, வெளியூர் பேருந்து நிறுத்தத்தில் வேலூர் பேருந்தில் ஏறிக் கொண்டேன். ஆறே முக்காலுக்குக் கிளம்பி ஏழே முக்காலுக்கு திருப்பதி பேருந்து நிலையம். 10 நிமிடங்கள் நிற்குமாம். போய் செருப்புக் கடையில் புதுச் செருப்பு 200 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டேன். போன தடவை வாங்கிய 30 ரூபாய் கடனையும் கொடுத்து விட்டேன்.
பேருந்து புறப்படும் போது எட்டரை மணி இருக்கும். வேலூர் வரும் போது 11 மணி தாண்டி விட்டிருந்தது. வீட்டில் 11.30க்கு வந்தேன் என்று நினைவு.