2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள். நாம் தனியாள், ஊரும் இல்லை வேரும் இல்லை என்ற நிலையில் உள்ள ஆள். எந்த அமைப்புப் பின்புலமும் இல்லாமல் உதிரியாக இருக்கும் ஆள். இது மாறும், இதை மாற்ற வேண்டும், பிறர் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஓர் அமைப்பு நமக்கு இடம்தர வேண்டும், இவை எல்லாம் எதிர்பார்ப்புகள் மட்டுமே. இப்போதைய நிலைமை தனியாள் என்பதுதான். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது நமது கையில் இல்லை. எனவே, இப்போதைக்கு தனியாள் என்ற நிலையிலேயே வாழ்ந்து மறைந்து போவோம் என்ற வகையில் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்திச் செல்ல வேண்டும்.
அதற்கு உடல்நலம், மனநலம் பேண வேண்டும். பொருள் ஆதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். உடல்நிலை மோசமானாலோ இறப்பின் போதோ அநாதையாக இருக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. பணம் என்றால் பிணமும் வாய்த் திறக்கும். நான்காவதாக, சமூக ஆதாரங்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தனிமனிதர் என்ற முறையில் அடையாள அட்டைகள், காப்பீடுகள், வங்கிக் கணக்குகள் இவற்றை முறையாகப் பேண வேண்டும்.
மகனும் மகளும் வயது வந்தவர்கள், அவர்களுக்கு இப்போது ஓர் அப்பா தேவையில்லை. அவர்களுக்கு அப்பா தேவைப்பட்ட போது நான் இருக்கவில்லை. இப்போது போய் நான் ஒட்டிக் கொள்வது அவர்களுக்குத் தேவையில்லை. அதிக அளவில், ஒரு மனிதர் என்ற வகையில் சிறிது இடம் கொடுக்கலாம் அவ்வளவுதான். அதற்குமேல் எந்த வகையான உறவையும் எதிர்பார்ப்பது சரியாகாது.
முன்னாள் மனைவி தெளிவாகவே ஒதுக்கிவிட்டாள். பேச விருப்பமில்லை, சந்திக்க விருப்பமில்லை என்று தெளிவுபடுத்தி விட்டாள். அப்படியே தொடரும் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான். நான் முயல்கிறேன் என்று இந்த வயதில் அவளைத் தொந்தரவு செய்வது நாகரிகமாகாது. அவள் வயதான வாழ்வை அனுபவிக்கும் காலம் இது, இதில் என்னைத் தூக்கிச் சுமக்க அவள் விரும்பப் போவதில்லை.
அண்ணன்கள், அக்கா, தங்கை - அவர்களும் என்னை ஒரு பெயரளவு உறவாகச் சுருக்கிக் கொண்டார்கள். அதுதான் என்னுடைய விருப்பமும். ஏதோ ஓர் உறவு என்று தொட்டுச் செல்கிறார்கள். அதற்கு மேல் பாசமோ பிணைப்போ இல்லை.
நட்பு வட்டங்களைப் பொறுத்தவரை, கல்லூரியில் கூடப் படித்தவர்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கிறேன். அவர்களது வாழ்க்கை முறையும் வாழ்க்கைத் தரமும் எனக்குப் பொருந்தப் போவதில்லை.
இப்போது செயலில் இருப்பது வேலை செய்யும் நிறுவனம், மூலதனம் வாசிப்புக் குழுக்கள், இளம் கம்யூனிஸ்ட் கழகம். நிறுவனம் என்னை குட்டிமுதலாளித்துவ அறிவாளி, பயன்படுத்தப்பட வேண்டியவர் என்று வைத்திருக்கிறார்கள். அவர்களது நிருவாக அமைப்பில் என்னை அனுமதிக்கத் தயாராக இல்லை. கட்சி உறுப்பினர்களுக்குத்தான் இடம் என்று சொன்னாலும் என்னுடைய செயல்பாடுகள் அவர்களுக்கு உகந்ததாக இருக்கவில்லை. இப்போது அம்பேத்கர் வேலை முடிவது வரை நான் உறுதியாக வேண்டும். அதன் பிறகு நிறுவனத்துக்காக அவர்கள் போடும் திட்டத்துக்குள் நான் பொருந்திக் கொள்ள வேண்டும். நான் மூலதனம் சிறுநூல்களை தயாரித்துக் கொடுத்ததும் சரி, மின்நூல் செயலியை உருவாக்கிக் கொடுத்ததும் சரி, இணையதளத்தை உருவாக்கிக் கொடுத்ததும் சரி அனைத்துமே கொடுத்த சம்பளத்துக்கு வேலை செய்த கணக்குதான். லெனின் தேர்வு நூல்கள் தொகுப்புப் பணி தொடர்பாகவும் அதன் வெளியீட்டு விழாவில் எனது பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை. நான் என்ன வேலை செய்தேன் என்று தெரிந்தும் அந்த நிலை. வடிவமைப்பாளர் அதில் வேலை செய்தார், அவர் பெயரையும் குறிப்பிடவில்லை. அச்சிட்டவர் வேலை செய்தார் அவர் பெயரையும் குறிப்பிடவில்லை. எல்லோருமே பணத்துக்கு உழைப்புச் சக்தியை அல்லது சேவையை விற்றவர்கள். அதற்கு மேல் அந்தக் கட்டமைப்புக்குள் இடம் இல்லை.
மூலதனம் வாசிப்புக் குழுவைப் பொறுத்தவரை, கட்சித் தோழர் தனது அறிக்கையில் ஒரு பதிவாக அதை நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு இரண்டாவது வரிசையாக நான் வந்து விட்டேன் என்று எழுதியிருப்பார். அதைக் கடந்து செல்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. மூலதனம் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்தவோ வளர்த்துச் செல்லவோ தயாராக இல்லை. அதாவது அளவு வழி மாற்றம் சிக்கல் இல்லை. பண்பு வழியில் அதனை ஓர் அமைப்பாகக் கொண்டு செல்வதில் உடன்பாடு இல்லை. நான் எவ்வளவு வலியுறுத்தினாலும் அதற்கு மேல் அது நகர்வதாக இல்லை. நானும் என்னுடைய பங்கேற்பை வரம்பிட்டுக் கொண்டேன்.
இளம் கம்யூனிஸ்ட் கழகத்திலும் தோழமை என்பது இல்லை. என்னை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் ஒருவர் தெளிவாக இருந்தார். தலைவரை சந்திக்க அழைத்துச் செல்லக் கூடத் தயாராக இல்லை. வாங்கிக் கொண்ட பணத்தைத் திருப்பித் தருவது என்ற எண்ணமே இல்லை. இன்னொருவரும் அப்படித்தான். அவருக்காக இரண்டு மூன்று முறை செலவு செய்திருக்கிறோம். அது எதற்கும் அவர் பணம் தருகிறேன் என்று முன்வரவில்லை. ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வாங்குகிறார். ஆனால், இதில் தோழர்கள் செலவழிக்கட்டும் என்று விட்டு விடுகிறார். கூட்டாக வாசிப்பதில் ஒவ்வொருவரும் பலன் பெறுகிறோம் அதற்கு மேல் தோழமை இல்லை. மூன்றாவது தோழர் மட்டும் தனிப்பட்ட முறையில் தோழமை ஆதரவு காட்டுகிறார். அது ஒரு குழுவாக இல்லை.
இந்நிலையில் எனக்கு வேரும் இல்லை ஊரும் இல்லை உறவும் இல்லை அமைப்பும் இல்லை ஆதரவும் இல்லை. நான் தனியாக எனது காலில் நிற்க வேண்டும். எனது வேலைகளைச் செய்ய வேண்டும். கூட பயணிப்பவர்களுடன் பயணிக்க வேண்டும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.
இதில் புதிய வரவு பெண் தோழர், தன்னலம் பாராத ஓர் அன்பு. அது எதிர்பாலினக் கவர்ச்சியாகத் தொடங்கியது, நானும் அதை ஒட்டி நிறைய முரண்டினேன், அதை சரிசெய்து கொண்டு இப்போது ஒரு தோழமையாக் அக்கறை எடுத்துக் கொள்கிறார். உங்களுக்கு ஒருகுடும்பம் இருக்கிறது, தானும் தனது கணவனும் மகளும் என்கிறார்.
அவர் சொல்லித்தான் வி.சி.க தோழர், தலைவரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தார். நாளை சென்னை வருவதாக மாலையில்தான் தொலைபேசினார். காலை 8 மணி வாக்கில் இருந்து புறப்படுகிறார்களாம். 10.30, 11 மணி வாக்கில் வந்து சேருவார்களாம். தகவல் சொல்கிறேன் என்றார்.
அவர் தகவல் சொன்னால் விடுப்பு எடுத்துக் கொண்டு போக வேண்டும். மூலதனம் சிறுநூல்கள், லெனின் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள், நாட்டுப் புற ஏழை மக்களுக்கு, மூலதனம் கற்க முடியுமா, லெனினின் போராட்ட வாழ்க்கை, மூலதனம் சிறுநூல்கள், முதல் மூன்று நிமிடங்கள் இவற்றைக் கொண்டு கொடுக்கலாம். தன்விவரக் குறிப்பையும் புதுப்பித்து எடுத்துக் கொள்ளலாம். அச்செடுத்துக் கொள்ள வேண்டும். நாளை சந்திப்பது இயலாமல் போகலாம். ஆனால், போய் விட வேண்டும்.
இன்னின்ன வேலைகள் செய்கிறேன், உங்களைத் தலைவராகவும் கட்சியை இந்தியாவில் பாட்டாளி வர்க்க சனநாயகப் புரட்சியின் தலைமை ஆற்றலாகவும் ஏற்கிறேன். இந்த இயக்கத்துக்கு நான் என்ன பணி செய்வது பொருத்தம் என்று சொல்லுங்கள். நிறுவனத்தில் வேலையைத் தொடர்வது, தமிழ்நாட்டு சமூகம் பற்றிய ஒரு கோட்பாட்டு நூலை எழுதுவதுதான் எதிர்காலத் திட்டம். மூலதனம், அம்பேத்கர் வாசிப்பு வட்டங்களில் கலந்து கொள்வதையும் செய்யவிருக்கிறேன். இது பொருத்தமானதுதானா, வேறு ஏதாவது வேலை செய்ய வேண்டியிருக்கிறதா என்று சொல்லுங்கள்.
லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள், அம்பேத்கர் மக்கள் பதிப்பு 100 தொகுதிகள் தொகுப்புப் பணியில் வேலை செய்திருக்கிறேன். திறந்தநிலை மார்க்சியம் தொகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறேன். உங்கள் நூலகம் இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் - மார்க்ஸ் பற்றியும், மார்க்சியம் பற்றியும். குறிப்பாக சீனாவைப் பற்றிய நூல் அறிமுகங்களை எழுதியிருக்கிறேன்.
அதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர்தான் பத்திரிகை தோழருடன் பேசியிருந்தேன். மதியம் அழைத்த போது மாலையில் கூப்பிடுவதாகச் சொன்னார். எதிர்காலத்தில் என்னமாதிரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது என்று அவரது வழிகாட்டலைக் கேட்க வேண்டும் என்று சொன்னேன். ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று அம்பத்தூர் வருவதாகக் கூறினார். அவரிடமும் மேலே சொன்ன பணிகளைப் பற்றிச் சொல்லி விட்டு அரசியல் இலக்கையும் சொந்த வாழ்க்கைக்கான தேவைகளையும் கூற வேண்டும். இதை நிறைவேற்ற நிறுவனத்தில் தொடர்ந்தால் இயலாததாகி விடும். நல்ல ஊதியத்தில் வாரம் 5 நாட்கள் வேலை என்ற முறையில் வேறு ஒரு பதிப்பகம் அல்லது பத்திரிகையில் வேலை கிடைத்தால் நல்லது. அரசியல் சார்பு இருந்தால் நல்லது. தமிழில் தொகுப்புப் பணி செய்ய முடியும், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க முடியும், ஆங்கிலத்தில் எழுத முடியும், கணினி தொடர்பான பணிகளைச் செய்ய முடியும் என்று விளக்க வேண்டும்.
அவர் அழைப்பதற்கு முன்னர் கன்னிமரா நூலகத்தினுள் உட்கார்ந்திருந்தேன். கோபால் குரு தொகுத்த ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். humiliation பற்றியது, அது குறிப்பாக சமூக இழிவுபடுத்தல் பற்றியது. ஒரு கட்டுரை மும்பை பஞ்சாலைத் தொழிலாளர்கள் அவமதிக்கப்பட்டது குறித்தது, அடுத்து காந்தியும் அம்பேத்கரும் தீண்டாமையை ஒழிக்க எவ்வாறு இணை பாதைகளில் செயல்பட்டார்கள், அவர்களிடையே தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்தது என்பதைப் பற்றியது. இறுதிக் கட்டுரை கோபால் குரு எழுதிய recognition, reduction, rejection, counter rejection பற்றியது. ஹெகலிய கருத்தினங்களை தீண்டாமைக்குப் பொருத்துகிறார். குறைத்தலையும் மறுத்தலையும் வேறுபடுத்திக் காட்டுகிறார். நல்ல கட்டுரை.
இது போல வாரம் ஒருமுறையாவது நூலகத்துக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டேன். ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில் போகலாம். கன்னிமரா நூலகம் அல்லது அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் போகலாம்.
முன்னதாக விடியற்காலையில் எழுந்து மெரீனா கடற்கரைக்குச் சென்றேன். முதன்முதலில் முன்னாள் மனைவி சென்னைக்கு வந்த போது சந்தித்த இடம் மெரீடா கடற்கரை. அதன் பிறகு குழந்தைகளுடன் இருந்த போது வாரம் தோறும் ஞாயிறு மாலை மெரீனா கடற்கரைக்கு பைக்கில் நான்கு பேருமாக போய் வருவோம். இருட்டிய பிறகு சாந்தோமில் இருக்கும் ஒரு சைவ உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவோம். போக வர 30 கிலோமீட்டர். அது குடும்பமாக பிணைப்பை ஏற்படுத்திய ஒரே இடம் என்று சொல்லலாம். குழந்தைகளுடன் கதை சொல்வது நடந்திருக்கிறது நான்கு பேரும் சேர்ந்து செய்தது இப்படி கடற்கரைக்குப் போனது மட்டும்தான்.
பையில் குடிநீர், குடை, டேப் எடுத்துக் கொண்டு போனேன். டீக்கடையில் வடையும் டீயும் குடித்து விட்டு பேருந்து நிறுத்தத்துக்குப் போனால் 40 A வந்தது. அது நேராக கண்ணகி சிலை வரை கொண்டு விட்டது. மூலதனம் வாசிப்பு அமர்வுக்கான பகுதியை வாசித்து விட்டேன். போகும்போது தினத்தந்தி வாங்கியிருந்தேன். கடற்கரையில் இருந்து திரும்பும்போது ரத்னா கஃபே நிறுத்தம் வந்து ஒரு போண்டா, டீ. தி ஹிந்து ஆங்கிலச் செய்தித் தாள் வாங்கிக் கொண்டேன். டீ குடித்து முடிப்பதற்கு முன் நின்றிருந்த 40 A கிளம்பிப் போய் விட்டது. அதன் பிறகு வந்த 40 L இல் ஏறிவிட்டேன். வாவினில் இறங்கினேன். அங்கிருந்து 77B இல் ஏறி ஆம்பிட் இறங்கி ஆனந்தா பவன் வரை நடந்தேன். 2 இட்லி, 3 பூரி, 1 காஃபி என்று மொத்தம் 155 ரூபாய் கட்டணம், ரூ 15 சேவை அளிப்புக்கு. அப்போது அமர்வு தொடங்கிவிட்டது.
ஒருவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இருவரும் விளக்கினார்கள். சிறப்பாக விளக்குகிறார். சுரங்கங்கள், தொழிற்சாலைகளில் இயந்திர பாதுகாப்பு சாதனங்கள், பணியிட சுகாதாரம் என்ற தலைப்புகளில் தொழிலாளர் நலனைப் பலி கொடுத்து மாறா மூலதனத்தை மிச்சப்படுத்தல் பற்றிப் படித்தோம். அதன் பிறகு விசையூட்டல், விசைக் கடத்தல் இரண்டிலும் மேம்பாடுகளைப் பற்றிய விவரணை, அதனை அடுத்த தோழர் விளக்கினார். நானும் இரண்டு தலைப்புகளிலுமே தலையிட்டு கருத்து சொன்னேன். ஒருங்கிணைப்புத் தோழர் படித்து வரவில்லை. அடுத்த வாரம் விளக்குகிறேன் என்றார்.
நேற்று இரவு கீரை வாங்கி வைத்திருந்தேன். அதை ஆய்ந்து முடித்தேன். துணியையும் துவைக்க ஊற வைத்திருந்தேன். கழிப்பறையைக் கழுவுவதற்கு ஊற வைத்தேன். கீரையை சமைப்பது, துணி துவைப்பது, சப்பாத்தி போடுவது என்று நேரம் போனது. அல்கா அஜித்தின் சிங்கார வேலனே பாடல் பார்த்தேன். கஜினி படத்தில் அசின் - சூர்யா காட்சிகளைப் பார்த்தேன்.
11 மணிக்கு ஆங்கில வாசிப்பு. ஒப்பீட்டு மதிப்பு வடிவத்தின் இயல்பும் தன்மையும் என்ற தலைப்பை வாசித்தோம். கொஞ்சம் திணறித்தான் விளக்கினார்கள். ஒருவரிடம் அலட்சியம் தெரிகிறது. இரண்டு பேரும் துல்லியமாக விளக்கி விடுகிறார்கள். இன்னொருவர் கொஞ்சம் சுற்றி வளைத்தாலும் சாரத்தைப் பிடித்து விடுகிறார். நடத்தியவர் கூர்மையான புரிதலைப் பெறுகிறார். பத்திரிகையாளர்தான் கொஞ்சம் பின்வாங்குகிறார். அந்த வாசிப்பு முடிந்த பிறகு சப்பாத்திகளைப் போட்டு முடித்து குளித்து விட்டேன். பாத்திரங்களைக் கழுவிவைத்து விட்டு ஆடைகளை மாட்டிய பிறகு 3 மணிக்கு மேல் போகலாம் என்று ஆங்கில தி இந்து கட்டுரைகள் வாசித்தேன்.
தி ஹிந்து நாளிதழில் புத்தக மதிப்புரைகள், ஓப்பன் பேஜ் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள் வாசித்தேன். பன்மைத்துவத்துடன் உள்ளது அந்தப் பத்திரிகை. அதில்தான் வேலை செய்கிறார். தினத்தந்தியில் தி.மு.கவின் கள ஆய்வு முடிவுகள் தலைப்புச் செய்தி.
ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஞாயிறன்று கையெழுத்தாலும் என்று டிரம்ப் சொல்ல, ஈரான் அதை மறுத்திருக்கிறார்கள். ஒப்பந்தத்தை நெருங்கி வந்து விட்டோம், ஆனால் ஞாயிறன்று கையெழுத்தாகும் என்று சொல்ல முடியாது.
கேந்திரிய வித்யாலயாக்களில் சமஸ்கிருதம் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளில் தென் கொரியா வெற்றி பெற்றிருக்கிறது. அமெரிக்க அணி வெற்றிபெற்றிருக்கிறது. மெக்சிகோ வெற்றிபெற்றிருக்கிறது. மொராக்கோ வெற்றிபெற்றிருக்கிறது.
FIDE பற்றிய ஒரு கட்டுரை தி ஹிந்துவில் இருந்தது. 2022 இல் கத்தாரில், 2018 இல் ரசியாவில், 2026 இல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் 2030 இல் 2034 இல் சவுதி அரேபியாவில் நடக்கவிருக்கிறது. இந்த அமைப்பு உலகின் பெரும்பணக்கார விளையாட்டுக் கழகமாக உள்ளது. அது பணக்காரர்களை உள்ளுக்கு இழுக்கிறது, விளையாட்டைப் பரப்புவதை விட அதன் தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கைப் பரப்புவதுதான் விளைவாக இருக்கிறது.
திருமண வாழ்வு கசந்து விட்ட அப்பா, அம்மாவுடன் வளர்ந்த ஒருவர் எழுதிய புத்தகம். அவர் ஓர்பாலின ஈர்ப்பாளர். ஓர் ஆணுடன் 30 ஆண்டுகளால சேர்ந்து வாழ்கிறார். அப்பாவையும் அம்மாவையும் நியாயமாக நடத்த முயன்றதையும் அதில் இருந்த போராட்டத்தையும் எழுதுகிறார். அம்மாவின் கண்ணாடி வழியாகத்தான் அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்கிறார்.
இன்னொருவர் கொங்கண அப்பாவுக்கும் யூத ஜெர்மானிய பெண் அமெரிக்காவைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவர். சலுகை பற்ற வர்க்கம். படித்த படிப்பை விட்டு விட்டு உணவுத் தொழிலில் இறங்கியிருக்கிறார்.
பாகிஸ்தான் ஆக்கிமிப்பு காஷ்மீரில் என்ன கலவரம் என்று ஒரு கட்டுரை. அகதிகளாக வந்தவர்களுக்குக் கொடுக்கும் இட ஒதுக்கீடுதான் மையமாக உள்ளது. தேர்தலில் போட்டி போடவிருக்கும் 45 தொகுதிகளில் 14 ஒதுக்கப்படுகிறது. அதுவும் 14 இலட்சம் மக்களுக்கு 14 தொகுதிகள், 1 கோடி மக்களுக்கு 30 தொகுதிகள் என்று பாகுபாடு இருக்கிறது. இது போக மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல் போன்ற கோரிக்கைகளும் இருக்கின்றன.
அரசோ எல்லா அரசுகளையும் போல போராட்ட அமைப்பைத் தடைசெய்வது, போலீஸ் அடக்குமுறையே ஏவுவது என்று நடந்து கொண்டிருக்கிறது. பதிப்புத் துறையில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்படும் புத்தகங்கள் பற்றிய ஒரு உரையாடல் இடம் பெற்றிருக்கிறது. விருது பெற்ற ஒரு சிறுகதை செய்யறிவால் எழுதப்பட்டது என்று அம்பலப்பட்டிருக்கிறது. கிரந்தா என்ற தளத்தில் அது வெளியிடப்பட்டிருக்கிறது.
3 மணிக்கு ஓய்வெடுக்க அரை மணிநேரம் கண்ணயர்ந்தேன். எழுந்து லெமன் டீ போட்டுக் குடித்து விட்டு கிளம்பினேன். நல்ல வெயில்தான். அந்த வெயிலிலும் நிறைய இளைஞர்களும் இளம்பெண்களும் போய் வந்து கொண்டிருந்தார்கள். 120 சென்ட்ரல் போகும் பேருந்தில் ஏறி விட்டேன். தர்மபிரகாஷ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 29 A பிடித்து கமிஷனர் அலுவல நிறுத்தத்தில் இறங்கி நடந்து போனேன். அருங்காட்சியக அரங்கில் மேஜிக் காட்சி நடப்பதாக தட்டி வைத்திருந்தார்கள். சென்ற வாரமே முடியப் போவதாக வெளியில் அறிவிப்பு இருந்தது. ஆனால், இன்றும் நடந்திருக்கிறது.
டி.பி.ஆர் ஜோசப்பின் என்கதையுலகத்தைத் தேடினேன். அவர் சூரியன் பகுதிகளை நீக்கி விட்டிருக்கிறார். இன்டர்நெட் வேபேக் மெசினில் உள்ளது. அதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் தூங்கப் போவதற்கு முன் 1 மணி நேரம் நாட்குறிப்பு எழுத வேண்டும். வாரம் ஒரு முறை (வியாழக்கிழமை காலை) மெரீனா கடற்கரை செல்ல வேண்டும். வாரம் ஒரு முறை (ஞாயிறு) நூலகம் செல்ல வேண்டும்.
இரவில் மட்டும் தூங்க வேண்டும். முழுமையான ஆழமான தூக்கத்தைப் பெறுவதற்கு முயல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக