என்னைப் பற்றி

நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 02, 2012

தனிமை


தனிமை என்பதற்கு இலக்கணம் வகுத்து, தனிமையுடனேயே வாழும் கோடிக்கணக்கான பேர் இருக்கலாம். ஆனால் தன்னந்தனியாக, மனித கும்பலுக்கு நடுவில் தன்னந்தனியாக வாழ்வது நிறைய பேர் இருக்க முடியாது.

பள்ளியில் படித்து முடிக்கும் வரை பிரச்சனை இல்லை. உடன்பிறந்தவர்களுடன் வளரும் போது தனிமை என்ற பேச்சுக்கே இடமில்லைதான். எந்த அறைக்குள் நுழைந்தாலும் யாராவது இருப்பார்கள். பள்ளியில் வகுப்பிலும் 40க்கும் மேற்பட்ட சக மாணவர்கள் உண்டு. ஆனால் பள்ளியிலிருந்து வீட்டுக்குப் போகும் போதும், வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் போது தனியாக நடந்து போவதும் ஒரு கட்டத்துக்கு மேல் சைக்கிளில் போவதும் ஆரம்பித்தது. கூட ஆள் சேர்த்துக் கொள்வதில்லை.

கல்லூரியிலும் தனிமை ஆள் பிடித்தது. நட்பு ஏற்படுத்திக் கொள்ளுதல், சக மனிதர்களுடன் சகஜமாக பழகிக் கொள்ளுதல் பழக்கம் இல்லாததால் தயக்கத்துடனும் கூச்சத்துடனும் தனிமையாகவே வாழப் பழகிக் கொண்டேன். ஒரு ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கிய போது இரண்டு பேருடனும் ஒரே அறை. அருகில் இருக்கும் அறைத் தோழர்களுடன் பழக்கம். முதல் ஆண்டு முடிந்ததும்  விடுதியிலிருந்து வெளியில் தங்கிப் படிக்கும் மாணவன் ஆகிப் போனேன்.

தாம்பரத்திலிருந்து கல்லூரிக்கு வரும் சக மாணவர்கள், குரோம்பேட்டை, நங்கநல்லூர் போன்ற பகுதிகளிலிருந்து வருபவர்கள் டிரெயினில் மாதாந்திர டிக்கெட் எடுத்து வந்தார்கள்.  உண்மையில், ரயிலில் வந்து சைதாப்பேட்டையில் இறங்கி, ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்து பேருந்து பிடித்து கல்லூரி வருவது என்பது கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விவகாரம்தான். மாற்றாக, 21G, அப்போது 21V, B21 என்று ஓடிக் கொண்டிருந்த பேருந்தை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பிடித்தால் நேராக கல்லூரியின் முன்பு இறங்கி விடலாம். செலவும் குறைவு. கடைசியாக சொன்ன காரணம் முதலிடம் பிடித்ததில் ஆச்சரியமில்லைதான்.

பேருந்து சலுகை அட்டைக்கு சைதாப்பேட்டையில் பிரேக் வைத்து கொடுக்கச் சொன்னால் தரவில்லை. நேராக போகும் பேருந்து இருக்கிறதே என்று தட்டிக் கழித்து விட்டார் அட்டை தரும் அலுவலர். தினமும் காலையில் தாம்பரம் பேருந்து நிலையம் வந்து நாளிதழ் வாங்கிக் கொண்டு 7.05 அல்லது 7.20 பேருந்தைப் பிடித்தால் 8.15 போல் காந்திமண்டபம் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். தாம்பரத்திலேயே பேருந்து நிரம்பி விடும். குரோம்பேட்டை வருவதற்குள் ஒரு முறை சீட்டு கொடுக்க நிறுத்துவார்கள். குரோம்பேட்டையில் இன்னொரு கூட்டம் ஏறும். பல்லாவரம் வருவதற்கு முன்பு இன்னொரு முறை டிக்கெட் கொடுக்க நிறுத்தம். பல்லாவரத்தில் இன்னொரு கூட்டம். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் தடத்திலிருந்து காந்திமண்டபம், கோட்டூர்புரம், மந்தைவெளி, கடற்கரை போவதற்கான ஒரே பேருந்து இதுதான்.

கிண்டியில் பேருந்து வரும் போது புதிதாக யாரும் ஏற முடியாத படி படிகள் எல்லாம் அடைத்திருக்கும். ஓரிருவர் அதிலும் தொத்திக் கொள்வார்கள். காந்தி மண்டபம் நிறுத்தத்தில் பெரும் எண்ணிக்கையில் இறங்குவார்கள். அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள், சிஎல்ஆர்ஐயில் வேலை பார்ப்பவர்கள், சென்னை பல்கலைக் கழக - கிண்டி வளாக ஊழியர்கள் என்று 10-12 பேர் இறங்கிய பிறகுதான் பேருந்தில் கொஞ்சம் இடம் நிற்பதற்கு கிடைக்கும். அங்கு நானும் இறங்கி விடுவேன். பேருந்து தனது தினசரி நெடும்பயணத்தைத் தொடரும்.

மாலையிலும் அதே வழிதான். காலையிலாவது முனையத்தில் ஏறி இருக்கையில் உட்கார்ந்து கொள்ளலாம். மாலையில் நெரிசலில் நின்று கொண்டேதான் போக வேண்டும். சீக்கிரமே, மாலையில் ஜெர்மன் கற்றுக் கொள்ள, நூலகத்துக்குப் போக என்று வேலைகள் வந்திருந்தன. கல்லூரியிலிருந்து அண்ணா சாலை - டிஎம்எஸ்சில் இறங்கினால் மேக்ஸ்முல்லர் பவன், அங்கிருந்தே அமெரிக்கன் தகவல் நூலகம் போகலாம். இன்னொரு நூலகம் எழும்பூர் போகும் 23Cல் ஏறி கன்னிமரா நூலகத்துக்குப் போவது. கிட்டத்தட்ட தினமும் ஏதாவது ஒரு திசையில் போய் விட்டு இரவு 9 மணிக்கு மேல்தான் வீடு போய் சேருவேன்.

அதற்கு முன்பு 2ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஜெர்மன் வகுப்புகள் ஆரம்பித்திருந்தார்கள். பிரிண்டிங் தொழில்நுட்பம் படித்துக் கொண்டிருந்த ஒரு பையன்  பேசிக் கொண்டே பேருந்து பிடிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அவன் வசித்தது ஆழ்வார் திருநகர். அவன் 5E பிடித்து வடபழனி போய் போக வேண்டும். நான் 21G. இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். இன்னொரு தோழனாக தோள் கொடுத்தது கூடப் படித்த நண்பன், அவனுடனும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். இவை மிகக் குறைவான நாட்களிலேயே நிகழ்ந்தன. தினமும் பேச கருத்துப் பரிமாற, என்னுடைய இயல்புடையவராக யாரும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஜெர்மன் கற்றுக் கொள்ள மேக்ஸ்முல்லர் பவன் போகும் போது, ஒரு முறை தாம்பரம் போகும் பேருந்து பிடிக்க இன்னொரு பெண்ணும் போக வேண்டும். அந்தப் பெண்ணை டிவிஎஸ் நிறுத்தம் வரை நடத்தியே கூட்டி வந்ததில் அடுத்த நாள் முதல் அந்த பெண் வகுப்புக்கு வருவதையே விட்டு விட்டாள் என்று நினைக்கிறேன். என்னுடனேயே வாழ்ந்து கொள்ளும் கலையைக் கற்றுக் கொண்டிருந்தேன். மற்றவர்களுடன் ஒத்துப் போவதை தவிர்க்கும் கூச்சமும் தாழ்வு மனப்பான்மையும் நிறைந்திருந்தன.

டாடா நிறுவனத்தில் வேலைக்குப் போகும் போதும் அப்படிப்பட்ட கூடு ஒன்றை தூக்கிக் கொண்டேதான் போனேன். ஒரு இண்டஸ்ட்ரியல் எஞ்சினியருடன் மனம் விட்டு ஓரிரு மாலைகள் பேசியிருக்கிறேன். எங்கள் ஜூனியர் வேலைக்கு சேர்ந்த போது அவனுடன் பேசியிருக்கிறேன். அதன் பிறகு நீஈஈஈஈஈண்ட இடைவெளி. திருமணம், சீனா, லெதர்லிங்க் ஆரம்பித்தது என அடுத்த 15 ஆண்டுகள் தனிமையிலேயே போயிருக்கின்றன. மனதில் நினைப்பதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தும்படியான தினசரி நட்பு அல்லது உறவு இல்லாமலேயே போய் விட்டிருந்தது.

வாழ்க்கை எனக்குத் தேவையான பாதுகாப்பு உணர்வை ஒரு போதும் தந்ததில்லை. பாதுகாப்பு உணர்வு இல்லாமல், மனதைத் திறப்பதும் முடியாமலேயே போயிருந்தது.

இருவரையும் எப்போதாவது சந்திக்கும் போது அது போல பேசும் தருணங்கள் வாய்க்கும். என்னை நெருங்குபவர்கள் யாரும் என்னால் காயப்பட்டு விடும் அபாயம் இருக்கிறது. கட்டிப் போட்டே வளர்க்கப்பட்ட நாய் போல திடீரென்று பாய்ந்து பிடுங்கி விடும்.

வெள்ளி, மே 06, 2011

குமரி முனை

இரவு தூங்கப் போவதற்கு முன்பு 1 மணி நேரம் நாட்குறிப்புகள், 20 நிமிடங்கள் தியானம் என்று வரையறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. பிற்பகலில் அல்லது மாலையில் அல்லது இரவில் நேரம் கிடைக்கும் போது எழுதுவோம் என்று வைத்துக் கொண்டால், அது நடக்காமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். 1 மாதம் முன்பு ஆரம்பித்த எழுதும் பழக்கத்தை திரும்பவும் நிறுத்தி விடாமல் தினசரி ஒழுக்கமாகத் தொடர வேண்டும்.

12 மணிக்கு திரும்பி வந்தால் 1 மணி நேரம் எழுதி விட்டு, 20 நிமிடங்கள் தியானம் செய்து விட்டு 1.30க்குத் தூங்கினால் போதும். அதற்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று மே 5, 2001. நேரம் இப்போது இரவு 8.50

இன்று காலை தாமதமாகவே எழுந்திருந்தேன். முந்தைய நாள் இரவு பேருந்து பயணத்தில் கழிந்ததால் சரியாகத் தூங்கிவில்லை என்ற காரணத்தோடு, இரவு 9 மணிக்குத் தூங்கிப் போயிருந்தேன். 3 மணி வாக்கில் விழிப்பு வந்தும் எழுந்திருக்காமல் 5 மணிக்கு எழுந்தேன். செய்ய வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. காலைக் கடன்களை முடித்து விட்டு நடக்கப் போனேன்.

ஐஎஸ்ஆர்ஓ குடியிருப்பின் வெளிச்சுவர் அருகிலான சந்து வழியாகப் போய் பூங்கா பேருந்து நிறுத்தம் போய், கன்கார்டியா பள்ளி வரை நடந்து அங்கிருந்து ஆசாரி பள்ளம்/மருத்துவக் கல்லூரி சாலையில் வலது புறம் திரும்பி பிஷப் இல்லம் தாண்டி ஜேகப் தெருவுக்குள் நடந்தேன். ஜேக்கப் தெரு என்று இப்போதுதான் பெயர் வெளியில் தெரிந்திருக்கிறது.

சின்ன வயதில் நியாய விலைக்கடை இந்தத் தெருவில்தான் இருந்தது. வீட்டிலிருந்து சைமன்நகரின் முனைக்கு வந்து கல்லறைத் தோட்டம் வழியாக இந்தத் தெருவுக்கு வந்து மண்ணெண்ணெய், சீனி, பாமாயில், கோதுமை என்று வரிசையில் காத்திருக்க வேண்டும். எப்போது என்ன கொடுக்கிறார்கள் என்பது திடீரென்று யாராவது சொல்லும் தகவலில் தெரிய வரும். பைகளை அல்லது டப்பாக்களை எடுத்துக் கொண்டு ஓடுவோம்.

கடைக்கு முன்பு சில சமயம் பொருட்கள் வரும் வரை காத்திருப்போம். மண்ணெண்ணெய் லாரி வந்து ஊற்றுவதைக் கூடப் பார்த்துக் கொண்டிருப்போம். நியாயவிலைக்கடை ஊழியர்கள் கிட்டத்தட்ட கடவுள்கள் போல நடந்து கொள்வார்கள். கொஞ்சம் அப்பாவிகளாக தென்படுபவர்களை விரட்டி அடிப்பார்கள்.

தடித்த தங்கச் சங்கிலி போட்ட ஒருவர் ஒருமுறை பில் போடுபவராக நியமிக்கப்பட்டு கொஞ்ச காலம் இருந்தார். மண்ணெண்ணெய் ஊற்றுபவர் 900 மிலி வரும்படி 1 லிட்டர் அளவையில் திறமையாக அளப்பார். சீனி அளப்பவர் 5 கிலோ சீனிக்கு 4.5 கிலோ வரும்படி நிறுப்பதில் சமர்த்தர். எதையும் தட்டிக் கேட்காமல் வாயை மூடிக் கொண்டு வாங்கிக் கொண்டு போய் விட வேண்டியிருக்கும்.

அரிசி மட்டும் வேறு யாரிடமாவது வாங்கும்படி கொடுத்து விடுவார்கள். அரிசியில் புழு பிடித்துக் கொத்துக் கொத்தாக இருப்பது வாடிக்கை. கோதுமையை புடைத்து தூசி தும்பு நீக்கிக் காய வைத்து, மாவாகத் திரிக்க அரவை நிலையத்துக்கு எடுத்துக் கொண்டு போவோம். பையில் கோதுமையைக் கொண்டு போய் ஒரு பாத்திரத்தில் மாவைச் சுடச் சுடப் பிடித்துக் கொண்டு வருவோம். அதை வைத்து சப்பாத்தி, பூரி சில சமயம், அவசர சிற்றுண்டியாக கோதுமை தோசையும் செய்யலாம்.

சீனி நியாய விலைக்கடை விலைக்கும் வெளிச் சந்தை விலைக்கும் இருந்த வேறுபாடு கணிசமாக இருந்ததால் 5 கிலோ சீனி வாங்குவதைத் தவற விடுவதில்லை. பாம்ஆயில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மற்ற எண்ணெய்களை விட பாதி விலையில் கிடைப்பதால் மிகவும் விரும்பப்படுவதாக இருந்தது. சோயாபீன் எண்ணெய் என்று அறிமுகப்படுத்தப்பட்டது அந்த அளவு பிரபலமாகவில்லை.

பாமாயில் வாங்கினால் கூட ரவை வாங்க வேண்டும், சீனி வாங்கினால் துணிதுவைக்கும் சோப்பு வாங்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதிப்பார்கள் கடைக்காரர்கள். அவற்றையும் முணுமுணுக்காமல் வாங்கிக் கொண்டு வருவோம். என்ன வாங்க வேண்டுமோ அதற்கு மட்டும் காசை எண்ணிக் கொண்டு போக வேண்டியிருக்கும்.

இப்போது தெருவின் இரண்டு பக்கங்களும் பெரிய பெரிய வீடுகள் கட்டப்பட்டு, தெருவில் நல்ல தார் சாலை போட்டு புதியதாகத் தெரிந்தது. தெருவின் முடிவில் வலது புறம் திரும்பிய உடன் சைமன் நகரின் நுழைவாயில்.

அந்த நுழைவாயிலில் குடியிருப்போர் சங்கத்தின் அலுவலகம். சொசைட்டி என்று அடையாளம் சொல்வோம். குடியிருப்பில் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் தண்ணீர் வழங்க ஆழமான பெரிய கிணறு தோண்டியிருப்பார்கள். அதிலிருந்து மேல்நிலைத் தொட்டிக்கு ஏற்றி குழாயில் திறந்து விடுவார்கள்.

1979ல் நாங்கள் போன சமயத்தில், தண்ணீர் நிறைய வரும். எல்லா மனைகளிலும் வீடுகள் கட்டப்படாததால், இருந்த வீடுகளுக்குத் தண்ணீர் போதுமானதாக இருந்தது. எங்கள் வீட்டின் வரிசையில் இப்போது இருக்கும் 8 வீடுகளில் 4 வீடுகள்தான் இருந்தன. அப்போது வீட்டில் எங்கு திறந்தாலும் தண்ணீர் வரும்படி குழாயிலேயே வேகமாக வரும். மொட்டை மாடியில் சிமென்டில் கட்டப்பட்ட தொட்டியில் நிரப்பிக் கொள்ளலாம்.

போகப் போக நிலைமை மோசமாகி, வெளியில் பொதுக் குழாயில் பிடிக்கப் போவது, அருகில் உள்ள விளைகளில் இருக்கும் கிணறுகளிலிருந்து பிடித்து வருவது, கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நடந்து போய் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டு வருவது என்று போய் கடைசியில் வீட்டில் ஆழ்குழாய் கிணறு போட்டார்கள். அதிலும் முதலில் அடி பைப்பு, அடுத்து சில ஆண்டுகள் கழித்து மோட்டார் வைத்துக் கொண்டு கடைசியில் ஒரு தீர்வுக்கு வந்தது.

வீட்டுக்கு வந்து துணிகளைத் துவைத்துப் போட்டுக் குளித்து விட்டு, தியானம். அதன் பிறகு முதலில் பழையது நிறைய சாப்பிட்டு விட்டு, ஐநா அறிக்கையை மொழிபெயர்ப்பதில் எனது பங்கை இன்னும் ஒரு முறை திருத்தி விடலாம் என்று உட்கார்ந்தேன். 1 மணி நேரம் திட்டமிட்டுக் கொண்டு 10-20 நிமிடங்களில் முடிந்து விடும் என்று நினைத்தாலும் 45 நிமிடங்கள் வரை ஆனது. திருத்திய பதிப்பை பென்டிரைவில் நகல் எடுத்துக் கொண்டு மடிக்கணினியை மூடினேன்.

அதன் பிறகு இணையம். மொழிபெயர்த்தக் கோப்பை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு, 12 பக்கங்களையும் 12 பகுதிகளாக வலைப்பதிவில் பதிந்தேன். 5ம் தேதி ஆரம்பித்து 15ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலையில் வெளியாவதாக அமைத்துக் கொண்டேன்.

குசும்பன் கிழக்கு பதிப்பகம் படம் எடுப்பதாக ஒரு நகைச்சுவைப் பதிவை தனது வழக்கமான நகைச்சுவையுடன், கொஞ்சம் அவசரமாக எழுதப்பட்ட எழுத்தில், பல நடைமுறைகளைச் சாடி எழுதியிருந்தார். மிகப் பலமான அரசியல், சமூக சடையர் எழுத்தாளராக உருவாகியிருக்கிறார்.

அதன் பிறகு நாளிதழ் படித்துக் கொண்டே கண்ணயர்தல், எழுந்து வேறு ஏதாவது செய்ய முயற்சித்தல் என்று நேரம் போனது. போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை தொடர்பான துண்டறிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆரம்பித்து சிறிது செய்து விட்டு மூடி விட்டேன். தொலை பேச வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள் யாருடனும் பேசவில்லை.

மதியம் உளுந்தஞ்சோறு. அரிசி+உளுந்து போட்டு வேக வைத்து, வெள்ளைப் பூண்டு சிறிதளவு+உப்பு+ தேங்காய் கலந்து செய்யும் உணவு. தொட்டுக் கொள்ள கொத்தமல்லி துவையல் என்று தேங்காயை வறுத்துச் செய்யும் துவையல், அவரைக்காய்+மாங்காய்+முருங்கைக்காய் போட்ட அவியல். அவரைக்காய் வெட்டிக் கொடுத்த வேலை மற்றும் தேங்காய் துருவிக் கொடுத்தது மட்டும் எனது பங்களிப்பு.

மதியத்துக்கு மேல் கன்னியாகுமரி போகலாம் என்று திட்டம் போட்டு விட்டார்கள். மேல் வீட்டுக் காரரின் காரை இரவல் வாங்கி, அந்த ஓட்டுனரே ஓட்டிப் போக போய் வரலாம். 3.15க்கு சரியான நேரத்துக்கு வந்து விடுவார் என்று எல்லோரும் புறப்பட்டுத் தயாராகி விட்டோம். 3.20க்கெல்லாம் வந்து விட்டார். முன் இருக்கையில் நான் உட்கார்ந்து கொண்டேன். சைமன் நகரிலிருந்து காவல்துறை ஆணையர் வீடு வழியாக புன்னை நகர் வந்து, ராமன்புதூர் விலக்கு தாண்டி செட்டிக் குளம்.

செட்டிக் குளத்தை கடந்த 10 ஆண்டுகளில் சிறிதுசிறிதாக நிரப்பி கட்டிடங்கள் கட்டி விட்டார்கள்.  கொஞ்சம் அழுக்குக் குட்டையாக மீந்திருக்கிறது. நாங்கள் சிறுவயதாக இருக்கும் போது குளம் பெரிதாக இருந்தாலும் அழுக்காகத்தான் இருக்கும். ஆனால் குளிக்கும், துணி துவைக்கும் அளவில் இருந்து வந்தது. இப்போது முற்றிலும் சீரழிந்து விட்டிருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் அது முற்றிலும் மறைந்து போய், செட்டி குளம் என்ற பெயர் மட்டும் மிஞ்சியிருக்கும் அந்தப் பகுதிக்கு.

அங்கிருந்து இறங்கி சவேரியார் கோவில் வழியாக கோட்டாறு வந்து  கன்னியாகுமரி போகும் சாலை. ஈத்தாமொழி போகும் சாலை, ரயில் நிலையம் போகும் சாலை என்று கடந்து போனோம். கோதையாறு பாசனத் திட்டம் என்று பலகைகளோடு நீர்வளங்கள் வழியெங்கும் தென்பட்டன. பேச்சிப்பாறை அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டதாம். அதிலிருந்து பாசன வசதி பெறும் பகுதிகள் அந்தத் திட்டத்தின் கீழ் வருகின்றன. சுசீந்திரம் ஆற்றில் நிறைய பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

கோவிலைத் தாண்டி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலம் கட்டி குறைந்தது 80 ஆண்டுகள் இருக்குமாம். நாகர்கோவிலில் இருந்து வரும் சாலைக்கு செங்குத்தாக பாலம். அதில் திரும்பி மீண்டும் 90 டிகிரி திரும்பி கன்னியாகுமரி சாலையைப் பிடிக்க வேண்டும். மிகவும் நெருக்கடியான பாலம்தான்.

பாலத்தைத் தாண்டி வலது புறம் திரும்பாமல், நேராக இறங்கும் சின்ன சாலைக்குள் போனால் நல்லூர், இரவி புதூர், மருங்கூர், ராஜாவூர் என்று கிராமங்கள் மருங்கூர் அப்பாவின் ஊர். இப்போது எந்தத் தொடர்பும் இல்லாமல் போய் விட்ட ஊர். தாத்தா விட்டுப் போன வீட்டில் தன் பங்கை அப்பா சில ஆண்டுகளிலேயே விற்று விட்டார்கள். இப்போது நினைத்துப் பார்க்கும் போது எவ்வளவு சிறந்த முடிவு என்று புரிகிறது. நமது கிராமங்கள் முன்னோர்களின் பாவத்தால் தள்ளாடும் அமைப்புகள். அவற்றை முற்றிலும் மாற்றா விட்டால் அவற்றுடன் மூதாதையர் கிராமம் என்று தொடர்பு வைத்திருப்பது எந்த பலனையும் தராது.

இராமனாதிச்சன் புதூர் கல்லூரியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, இரண்டு பேரைக் கொன்று கொள்ளைக் காரர்கள் வெறியாட்டம் என்று தொலைக்காட்சியில் பார்த்த செய்தி மாலை நாளிதழ்களிலும் வெளியாகியிருந்தது. வெளியில் பேனர்களில் தொங்க விட்டிருந்தார்கள்.

கொட்டாரம், ஆஸ்ராமம், தாமரை குளம் என்று ஊர்கள் வழியில். வட்டக் கோட்டை போகும் வழி, சென்னையிலிருந்து வரும் தேசிய நெடுஞ்சாலை சேரும் இடம், கூடங்குளம் போகும் சாலை என்று கடந்து கன்னியாகுமரி வந்து சேர்ந்தோம். கூடங்குளம் கன்னியாகுமரியிலிருந்து ஏறக்குறைய 10 கிலோமீட்டர்கள், நாகர்கோவிலிலிருந்து கிட்டத்தட்ட 20-30 கிலோமீட்டர் வட்டத்துக்குள் இருக்க வேண்டும். கூடங்குளத்தில் அணுஉலை விபத்து நடந்தால் நாகர் கோவில் வரை ஊர்கள் பாழடைந்து விடும், ஆட்கள் சரியாக மீட்கப்பட்டு விட்டால் கூட.

4 மணிக்குப் பிறகு விவேகானந்தர் பாறைக்குப் போகும் படகு சேவைக்கு சீட்டு கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள். என்று அவசரமாகப் போய்ச் சேர்ந்தோம்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் கேந்திர நடவடிக்கைகள், விவேகானந்தர் பாறை, பிறகு திருவள்ளுவர் சிலை அமைப்பது பெரிய தொழிற்சாலைகளை கிராமங்களில் அமைப்பது போன்ற ஒருவிதமான வன்முறை நடவடிக்கைதான். அந்தப் பகுதி மக்கள் போராடித்தான் தமது உரிமைகளை, பாரம்பரிய வாழ்க்கைமுறையைப் பராமரித்துக் கொள்ள முடிந்தது.

1980களில் விவேகானந்தா கேந்திரம் படகுப் போக்குவரத்தை இயக்கிய போது பெரிய பிரச்சனை ஆகி, தமிழ்நாடு அரசு தலையிட்டு கடைசியில் படகு போக்குவரத்தை பூம்புகார் கழகம் என்று அரசு கழகத்தில் தனியாக நடத்த ஆரம்பித்தார்கள். அப்போது மீனவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் அதன் பிறகு ஏற்படவில்லை. 'மீனவர்கள்தான் வேண்டுமென்றே குறுக்கே படகுகளை விட்டு தகராறு செய்தார்கள்' என்று கேந்திர பிரச்சாரங்கள் சொல்லின. அப்போதே எனக்கு ஏற்பட்ட சந்தேகம், 'அரசு கழகம் படகு விட ஆரம்பித்த பிறகு எப்படி திடீரென்று பிரச்சனை நின்று விட்டது' என்று யாரிடமோ கேட்டேன். 'இப்பவும் இடைஞ்சல் செய்யத்தான் செய்கிறார்கள். அரசு நிறுவனம் சமாளித்து ஓட்டிக் கொள்கிறார்கள்' என்று பதில் வந்தது. உண்மை நிலை, மீனவர்களை எப்படியாவது துரத்தி விட வேண்டும் என்று 'இந்து'க்கள் முயற்சித்ததாகத்தான் இருக்க வேண்டும்.

4 மணிக்கு முன்பு வளாகத்துக்குள் போய் விட்டதால் சீட்டு எடுத்துக் கொண்டு படகில் ஏறினோம். கிட்டத்தட்ட அரை மணி நேர வரிசைக் காத்திருப்பு. தலைக்கு 20 ரூபாய் படகு பயணத்துக்கான சீட்டு, போக வர. திருவள்ளுவர் சிலைக்கும் போய்க் கொள்ளலாம். படகில் ஏறுபவர்கள் எல்லோரும் பாதுகாப்பு மிதவை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆளுக்கு ஒன்று கொடுத்தார்கள். பெரும்பகுதி கேரளா, வடநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஒரு சில தமிழ்நாட்டின் மற்ற ஊர்க் காரர்கள் என்று தென்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வருபவர்கள் விரல் விட்டு எண்ணி விடும்படித்தான் இருக்க வேண்டும்.

பாறையில் போய் நான் மேலே மண்டபத்துக்குப் போகாமல் உட்கார்ந்து கொண்டேன். ஒரு ஊருக்குப் போனால் அந்த ஊரின் மக்களுடன் பழகுவதுதான் எனக்கு ஊர் பார்ப்பதாக தோன்றுகிறது. இது போன்ற சுற்றுலா தலங்களைப் பார்த்து வருவது மிகவும் சலிப்பைத் தரும் ஒன்றாக எனக்கு இருக்கிறது. எனக்கு மட்டும்தான் அப்படியா என்று தெரியவில்லை.

திரும்பும் வழியில் படகு திருவள்ளுவர் சிலை இருக்கும் பாறையில் நின்ற போது இறங்காமல் திரும்பி வந்து விட்டோம். அங்கு ஊழியர் விடுதியில் மாசா வாங்கிக் குடித்து விட்டு வெளியில் வந்து உணவு விடுதியில் தோசையும், காஃபியும். தோசை 35 ரூபாய் ஒன்றுக்கு, காபி 14 ரூபாய், வாயில் வைக்கச் சகிக்காமல் பாதியை விட்டு விட்டு வந்தோம்.

கோவிலா, கடற்கரையா என்ற தேர்வில் கடற்கரை முந்தி கோயிலின் வெளிமதில் அருகிலாக கடற்கரை சங்கிலித் துறைக்கு அருகில் வந்து கீழே இறங்கி கடலலையில் கால் நனைத்து விட்டுத் திரும்பினோம். காந்தி மண்டபத்திலிருந்து இறங்கி வரும் கடற்கரைப் பகுதி முற்றிலும் தடுக்கப்பட்டிருக்கிறது. பாறைகள் போட்டு அடுக்கி யாரும் கடல் அலைக்குப் போக முடியாத படி செய்திருந்தார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இது செய்யப்பட்ட போது எனக்கு மிகவும் துக்கமாக இருந்தது. பெரிய பெரிய அலைகளில் கால் நனைத்து விளையாடக் கூடிய இடத்தை பாழ் படுத்தி விட்டார்களே என்று வருத்தப்பட்டேன். இன்றும் அப்படியேதான் இருக்கிறது. நிறைய பேர் கடலில் குளிக்கப் போய் உயிரிழந்து விடுவதால் அந்த நடவடிக்கை.

வண்டியில் ஏறி கடற்கரையோரமாகவே போய் பேருந்து நிலையம் வழியாக திரும்பி சாலைக்கு வந்து பயணம். இருட்டில் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருந்தது. வீட்டுக்கு வரும் போது 8 மணி தாண்டி விட்டிருந்தது. ரசம் வைத்து சாப்பிட்டு விட்டு, இப்போது நாட்குறிப்பு.

இதை முடித்து விட்டு 20 நிமிடங்கள் தியானம். 10.15க்குத் தூக்கம். காலையில் 3 மணிக்கு எழுந்து விட வேண்டும்.

1. ஐநா குழு அறிக்கை பற்றிய துண்டறிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.
2. உற்பத்தித் திட்டமிடலில் IIநிறமூட்டுதல் விடுமுறை நாட்கள் பற்றி நிரல் சேர்க்க வேண்டும்.
3. டிரேட்புரோ தேவைகளை சேர்க்க வேண்டும்.
4. அறிக்கை கட்டமைப்பை ஒருங்கிணைக்க வேண்டும்.
5. டிரேட் புரோவில் செய்த மாற்றங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
6. அறிக்கை அணுகல் உரிமை முறையை மாற்ற வேண்டும்.

வெள்ளி, ஏப்ரல் 29, 2011

சமூக (அ)நீதிகள்


எழுதுவதை மாலை அல்லது இரவு நேரத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தோன்றியது. நேற்றும் இன்றும் காலையில் எழுந்தவுடனேயே மென்பொருள் பணியில் இறங்கி விட்டேன். சிக்கலான மூளையைக் கசக்க வேண்டிய முடிச்சுகள் அதிகாலை நேரத்தில் சுலபமாக அவிழ்ந்து விடுகின்றன. அந்த நேரத்தில் இது போன்று பெரிதாக சிந்திக்க அவசியமில்லாத வேலையை நீக்கி விட்டு heavy lifting பணிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

ஓம் சக்தி என்று பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு மாத இதழ் வெளியிட்டார். தமிழ்நாட்டு பழக்கங்களைப் பற்றி கட்டுரைகள் வரும். ஒரு கட்டுரை நம்முடைய சாப்பாடு பற்றி:

சாப்பாட்டுக்கு முன்பு நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடக் கூடாது என்பார்கள். அப்படிச் சாப்பிட்டால் வயிற்றில் மூண்டிருக்கும் செரிமான சக்தி அணைக்கப்பட்டு விடும்.

இலை போட்டவுடன், கையைக் குவித்து நீரை ஊற்றி இலையைச் சுற்றித் தெளித்து விட்டு வாயில் ஒரு சொட்டு போட்டுக் கொள்வார்கள். இலையைச் சுற்றி நீர் அரண் அமைப்பதன் மூலம் எறும்புகள் போன்ற ஊர்வன இலையை அணுக முடியாமல் போகும். எதுவும் சாப்பிடாமல் சுருங்கிப் போயிருக்கும் உணவுப் பாதையை இந்த சொட்டு நீர் ஒரு பைலட் கார் போலப் போய் சிறிதளவு ஈரப்பசை ஊட்டும்.

பரிமாறி முடிப்பது வரை எதையும் எடுத்து வாயில் போடக் கூடாது. ஏனென்றால் எதை முதலில் சாப்பிட வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

முதலில் செரிக்கக் கடினமான பருப்பு சோறு. அதிலும் சில துளிகள் நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடும் போது நெய் தோய்ந்த சோறு உணவுப் பாதையில் சுமுகமாக சென்று வயிற்றை அடைகிறது. தீவிரமாக இருக்கும் செரிமான சுரப்புகள் இந்த கடினமான பொருளை சீரணிக்க ஆரம்பிக்கின்றன.

தொடர்ந்து சாம்பார், ரசம் என்று நீர்த்துக் கொண்டே போகும். கடைசியில் மோர் சோறு.

இப்படிச் சாப்பிட முடிபவர்கள் எத்தனை பேர் என்று சின்ன வயதில் இதைப் படித்த போது தோன்றவில்லை. சாப்பாட்டுப் பிரியனான எனக்கு திருமணங்களில் இப்படி இலை போட்டு பரிமாறுவதை சாப்பிட மிகவும் விருப்பம். அதை நினைத்துக் கொண்டேன்.

ஆனால், பல ஊர்களில் திருமண விருந்து கூட இது போல இருப்பதில்லை என்பதையும் பார்த்திருக்கிறேன். வறண்ட பகுதிகளில், வசதி குறைந்த அல்லது வசதி மறுக்கப்பட்ட குழுவினர் தங்களுக்குக் கிடைப்பதை வைத்துதான் திருமண விருந்து கூட தயாரித்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

சிவசங்கரி எழுதிய ஒரு சிறுகதையில் காரில் குடும்பத்தினர் பிக்னிக் போகிறார்கள். காலையிலேயே அம்மா, பூரி செய்து பாத்திரத்தில் எடுத்துப் போகிறார். மகனும், மகளும், அப்பாவும் காரில் ஏதேதோ பேசி சச்சரவு போட்டுக் கொண்டு காலை உணவுக்கு நிறுத்தும் போது சாப்பாடு வேண்டாம் என்று அவரவர் மறுத்து விடுகிறார்கள். கொஞ்ச தூரம் உலாவப் போனால் புளியமரத்திலிருந்து இலைகளைப் பறித்துக் கொண்டிருக்கும் தோல் சுருங்கிப் போன மூதாட்டியைப் பார்க்கிறார்.

'இலையை கொதிக்க வைத்தால் குழம்புக்கு ஆகும்' என்று தகவல் சொல்லும் அந்த பாட்டியம்மாவைப் பார்த்து, 'இல்லாமையையும் இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கும்' அவருக்கு முன்பு அலட்டிக் கொள்ளும் தன் குடும்பத்தினரை ஒப்பிட்டுப் பார்க்கிறார். பாத்திரத்தில் இருந்த பூரி, உருளைக்கிழங்கு முழுவதையும் அவரிடம் கொடுத்து விடுகிறார்.

பள்ளியில் படிக்கும் போது தங்கமிராசு என்று தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் எங்களுடன் படித்தான். தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது சமூக அநீதி என்றால் என்ன என்று புரியாத காலம், அதைச் சொல்லிக் கொடுத்தவர்களும் யாரும் இல்லை. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் தமக்கு வாய்த்த ஆதாயங்களை பயன்படுத்திக் கொண்டு, இந்தக் காலத்தில் அது குறைந்து போகிறதே என்று திட்டிக் கொண்டிருப்பவர்கள். இந்தப் பையன் பெயர் தங்கமிராசு.

இப்போதும் அவன் முகம் என் கண் முன் தெரிகிறது. உருண்டையான சிவந்த முகம், குள்ளமான உருவம். எப்போதும் திருத்தமாக தலை சீவி, பவுடர் போட்டுக் கொண்டு வருவான்.

அவனுக்குப் புத்தகங்களும் நோட்டுகளும் அரசே உதவித் திட்டத்தில் வழங்கி விடும். அந்தப் புத்தகங்களுக்கு அழகாக பிரவுன் அட்டை போட்டு கசங்காமல் வைத்திருப்பான். எனது புத்தகங்கள் ஒரு மாதத்துக்குள்ளாகவே பைண்டிங் குலைந்து விளிம்புகள் மடிந்து அலங்கோலமாகியிருக்கும். அதைப் பார்க்கப் பொறாமையாக இருக்கும்.

90%க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கா விட்டாலும், 60-70க்கு மேல் தவறாமல் மதிப்பெண் எடுப்பான். மற்றவர்களுடன் அதிகமாக ஒட்ட மாட்டான். இயல்பாக பழகுவான். யாரை விட்டு ஒதுங்குவதும் கிடையாது.

அவனது அம்மா நாகர்கோவில் நகராட்சியில் பணி புரிவதாக ஒரு முறை சொன்னான். அவனது அப்பா குடித்து விட்டு வந்து கலாட்டா செய்வார் என்று இன்னொரு தகவல் சொன்னதாக நினைவு.

பொதுவாக எங்கள் பள்ளியில் வெள்ளாளர்களும், செட்டியாளர்களும், நாடார்களும்தான் அதிகம் படிப்பவர்கள். அதிலும் நாடார் மாணவர்களை சில ஆசிரியர்கள் மிகவும் மோசமாகத் திட்டுவார்கள்.

'வந்துட்டானுங்க வட்ட விளை, வடலி விளையிலிருந்து பொத்தகத்தையும் தூக்கிக்கிட்டு, ஒழுங்கா படிக்க முடியாது' . ஆமா சரியா படிக்காததினால்தானே இப்படிச் சொல்கிறார்கள் என்று தோன்றும்.

பள்ளி இருந்தது செட்டித் தெருவின் அருகில், தேசிக விநாயகர் தேவஸ்தானம் என்ற செட்டியார் சமூக நிர்வாகத்தின் கீழ் இருந்த பள்ளி. இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளி. அதனால் அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான்.

செட்டித் தெருவிலிருந்தே வரும் மாணவர்கள், நகரத்தின் அருகாமை இடங்களிலிருந்து வரும் பிற சாதி மாணவர்களுக்கிடையே, வட்டவிளை, வடலி விளை என்பவை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஊர்கள். கொஞ்சம் தூரமும் கூட. அந்த மாணவர்கள் பொதுவாக கறுப்பாக, பருத்தித் துணியில் தைத்த சீருடை அணிந்து, முரட்டுத் தனமாக வருவார்கள். அவர்களைப் பார்த்தால் ஒரு வித ஒதுக்கம் கூட எனக்கு இருந்திருக்கிறது.

இப்போது நினைத்துப் பார்த்தால் எத்தகைய சூழலில் அந்த மாணவர்கள் படித்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. கொஞ்சம் விழிப்புணர்வு இருந்திருந்தால் நிறைய வேறுபாடுகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்து சமூகத்தில் ஆதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும், அடுத்த நான்கைந்து தலைமுறைகளுக்கு தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு சேவை செய்வதுதான் நமது கடமை (வேண்டுமென்றால் பகவத்கீதை சொல்லும் கடமை என்று வைத்துக் கொள்ளலாம்) என்று உணர்ந்து வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டால்தான் நமது சமூகம் உயர்வதற்கு வழி பிறக்கும்.

பல நூற்றாண்டுகளாக சக மனிதர்களை ஒடுக்கி, கல்வி மறுத்து, கொடுமைப்படுத்தி வைத்திருந்த குற்றங்களுக்கு வேறு என்னதான் பரிகாரம் இருக்க முடியும்? நம்முடைய தாத்தாக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வளவு பேரை நசுக்கிப் பிழிந்திருப்பார்கள். தாத்தாக்களின் சொத்துக்களையும், மரபணு இயல்புகளையும் பெற்றிருக்கிறோம் என்றால் அவர்களின் தவறுகளுக்கும் நாம்தானே பொறுப்பேற்க வேண்டும்.

என் வீடு, என் குடும்பம், என் சுகம் என்பதை குறைந்பட்ச தேவைகளாக சுருக்கிக் கொண்டு, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைப்பதுதான் ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க வேண்டும். இன்றைக்கும் கிராமங்களில் 'காலனி'களில் ஒதுக்கி வாழும், தேநீர்க் கடைகளில் தனி குவளையில் தண்ணீர் குடிக்கும், கோவில்களில் வெளி நிறுத்தப்படும் ஒவ்வொரு மனிதரின் மனக்காயமும் ஒவ்வொருவருக்கும் வலிக்க வேண்டும்.

எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து விட்டது. நாளின் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது. இந்த சாதிக் கொடுமைகளில் இந்தக் கால சந்ததியினரின் பொறுப்பு பற்றி சில நாட்களாகவே யோசித்து வந்தேன். அது நேரம் பார்த்து வெளி வந்து விட்டது.

அதிகம் கடினமான பணிகளை சிந்தனை சக்தி அதிகமாக இருக்கும் காலைப் பொழுதில் செய்யவும், இலகுவாக செய்து போகிற நாட்குறிப்பு எழுதுதல் போன்றவற்றை மாலையிலும் செய்யலாம் என்று முடிவு.

நேற்று காலையில் 5 மணிக்கு எழுந்து உடனேயே உற்பத்தித் திட்டமிடல் பணியை ஆரம்பித்து விட்டேன். நான்கைந்து மணி நேரத்தில் முடித்து விடலாம் என்று ஆரம்பித்தது தொடர்ந்து தொடர்ந்து மாலை இரவு தூங்கப் போகும் வரை தொடர்ந்து இன்று காலை 3 மணிக்கு எழுந்தும் 7 மணி வரை நீண்டது.

மிகவும் சிக்கலான, பல டசன் காரணிகளைக் கொண்ட உற்பத்தித் திட்டமிடல். வாடிக்கையாளரிடம் பேசும் போதே திட்டமிடலின் எல்லையை குறுகலாக வரையறுத்துக் கொண்டாலும், ஏழெட்டு காரணிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றும் திட்டமாக இல்லாமல் குத்துமதிப்பான அளவீடுகள்.

அதாவது ஒரு டிரம்மில் கறுப்பு நிற தோலும் உற்பத்தி செய்யலாம், பிரவுன் நிற தோலும் உற்பத்தி செய்யலாம், இன்னொரு டிரம்மில் பிரவுன் மட்டும், மூன்றாவதில் எல்லா நிறங்களும், நான்காவதில் இளம் நிறங்கள் மட்டும். இப்படியே ஒவ்வொன்றும் இடியாப்பச் சிக்கலாக ஏழெட்டு பற்றிய விபரங்களை சேமித்து வைத்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுவதற்கா நிரல் எழுத வேண்டும்.

தேவை வரையறுப்பு ஏற்கனவே முடிந்திருந்தது. பத்து, பதினைந்து நாட்களாகவே (12ம் தேதியிலிருந்து) எப்படி வடிவமைக்க வேண்டும் என்று மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு வடிவமைப்பில் ஆரம்பித்து அதன் சிக்கல்களை அவிழ்த்துக் கொண்டே வந்தேன். எங்கெங்கு தவறுகிறதோ அதற்கான சரிசெய்தலை உடனுக்குடன் செய்து விட்டு, தகவல்களை எப்படி சேமிக்க வேண்டும் எப்படி எடுக்க வேண்டும் என்று செயலிகளையும் உருவாக்கிக் கொண்டேன்.

எந்த கோப்பில் எந்தெந்த நிரல்கள் என்று பிரிப்பதும் முக்கியம். ஒன்றில் புதிதாக உருவாக்கும் தரவுத்தள விபரங்கள்  மட்டும், அடுத்ததில் தரவுத்தளத்தில் இயங்கப் போகும் செயலி மட்டும், மூன்றாவதில் ஆரம்பத்தில் சேர்க்க வேண்டிய தரவுகள், நான்காவதில் அறிக்கைக்கான நிரல்கள்.

முதல் மூன்றிலுமே பல மணி நேரம் கழிந்தது குறிப்பாக இரண்டாவதான செயலி எழுதுவது, எழுதி இயக்கிப் பார்த்தால் எதிர்பார்த்த சரியான திட்டமிடல் கிடைக்கவில்லை என்றால் எங்கே ஓட்டை என்று பார்த்து அதை சரி செய்வது என்று தீவிரமான மூளை வேலை.

மாலைக்குள் பெரிய சிக்கல்கள் எல்லாம் அடையாளம் தெரிந்து தீர்க்கப்பட்டு விட்டன. ஒரு இடத்தில் சிக்கி நின்றது. அதற்கு அடிப்படை வடிவமைப்பையே மாற்ற வேண்டும். மூன்று கோப்புகளையும் அப்படியே வைத்து விட்டு அடுத்த பதிப்பாக முதலிலிருந்தே எழுதியதில் எளிதாக உருவாகி விட்டது.

இன்று அதைக் கொண்டு போய் வாடிக்கையாளர் பயன்பாட்டுப் பதிப்பில் இயக்கி அறிக்கையைக் காட்டியாகி விட்டது. அறிக்கையை அவர்கள் தற்போது பயன்படுத்தும் வடிவில் செய்து தரக் கேட்டார்கள். இன்னும் சில விபரங்களைச் சேர்க்க வேண்டும். கிட்டத்தட்ட இன்னும் நான்கைந்து மணி நேர வேலையில் முடித்து விடலாம்.

நேற்றுக் காலையில் முந்தைய நாள் செய்த சோற்றில் நீர் ஊற்றி வைத்தது இருந்தது. கடைக்குப் போய் காய்கறி வாங்கி வந்து மதிய உணவு செய்து கொண்டேன். இரண்டு மூன்று நாட்களாக இன்னும் விளக்கமான சமையல்.

புளிக்கறி என்பது எங்க வீட்டின் ஒரு அடிப்படை குழம்பு. சாம்பார் என்பது வாரத்துக்கு ஒரு முறைதான். புளிக்கறிதான் வாரத்துக்கு மூன்று நாட்கள். எல்லா சமையலிலும் தேங்காய் சேரும் என்பது அடிப்படை. புளிக்கறியிலும் தேங்காய்தான்.

தேங்காய் துருவல், மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, நல்ல மிளகு, வெங்காயம் ஒன்றிரண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். புளி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

சேர்க்க வேண்டிய காயை வெட்டி வேக வைத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காய், முருங்கைக்காய், வெள்ளரிக்காய், தடியங்காய், கீரை, வாழைக்காய், வாழைத்தண்டு, மாங்காய் என்று ஏதாவது ஒரு காய்கறிகளைச் சேர்க்கலாம்.

வெந்த காய் துண்டுகளுடன் தேங்காய் அரைத்ததையும், புளிக் கரைசலையும் சேர்த்து, உப்பு சேர்த்து கொதிக்க விட்டால் புளிக்கறி தயார். தாளிப்பதற்கு கடுகு, வெந்தயம் மற்றும் வெங்காயம் பொடியாக நறுக்கியது.

சேர்க்கும் காய்க்கு ஏற்ப மற்ற சேர்க்கைகள் மாறும் அந்த விபரங்கள் சரியாக நினைவில்லை. இதிலேயே பருப்பும் சேர்த்து பருப்பு புளிக்கறி என்று சாம்பாருக்கும் புளிக்கறிக்கும் கலவையாக ஒன்று அரிதாக செய்வார்கள்.

அந்த புளிக்கறி புதன் கிழமை செய்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் செய்தது. செய்முறை மறக்கவில்லை, செய்த சுவையும் மாறவில்லை.

தேங்காய் போட்டுதான் தொட்டுக் கொள்ளும் கறிகளும். பொரியல் என்று தேங்காய் இல்லாமல் எண்ணெயில் வதக்கி எடுப்பதைத் தவிர துவரன் என்று சிறுசிறு துண்டுகளாக வெட்டிய பீன்ஸ், சீனி அவரைக்காய், கீரை, வாழைத்தண்டு போன்ற காய்களுடன் தேங்காய்+மிளகாய்ப்பொடி+மஞ்சள் பொடி+சீரகம்+ பூண்டு அரைத்துச் சேர்த்து தாளித்து துவரன் செய்யலாம்.

அல்லது கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி தேங்காய்+மிளகாய்ப் பொடி + மஞ்சள்+சீரகம் சேர்த்து ஒற்றைக் காய் அவியல் என்று செய்யலாம்.

மாங்காய் போட்டு அவியல் செய்து பார்த்தேன், நன்றாகவே இருந்தது.

நேற்றைக்கு தக்காளி போட்டு ரசமும், பாகற்காய் அவியலும். பாகற்காய் எனக்குப் பிடித்தமான ஒரு காய். பொரியலாக வைத்தால் கரிந்து போய் சுவை குன்றி விடும். ஆவியில் வேக வைத்து தேங்காய் சேர்க்கும் அவியலில் கசப்புச் சுவை முழுமையாக, தேங்காயில் ஒளிந்து சாப்பிடக் கிடைக்கும்.

இன்று காலையில் மீதியிருந்த ஒரு கப் அரிசி மாவை வறுத்து, உளுந்து வறுத்துச் சேர்த்து தேங்காயும் சேர்த்து கொழுக்கட்டை செய்து கொண்டேன். மதியத்துக்கு நேற்று மீதியிருந்த சோறில் தண்ணீர் ஊற்றியிருந்ததில் ரசத்தை ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டேன். மாலை உணவை விட்டு விடலாம். நாளைக்கு முடிக்க வேண்டிய பணிகளை அதிகாலை செய்ய வேண்டியிருக்கும். குறைவான வயிற்றுடன் தூங்கினால் சீக்கிரம் எழுந்து சீக்கிரம் பணிகளை முடித்து விடலாம்.

இப்போது மணி மாலை 6.30 நாட்குறிப்பை முடிக்கும் போது 6.45 ஆகியிருக்கும். அதன் பிறகு 7 மணி முதல் 9 மணி வரை ஐநா அறிக்கை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். 9 மணிக்குத் தூங்கி விட்டு நாளைக் காலை 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். 2.30 முதல் 6.30 வரை தேவைகளை முடித்து விட வேண்டும். 6.30க்கு உலாவப் போய் விட்டு வந்து வீட்டு வேலைகள், வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும், துணி துவைக்க வேண்டும், குடி தண்ணீர் பிடித்து வர வேண்டும்.

சாப்பிட்டு விட்டு மின்சாரம் தடைப்பட்டால், மொழிபெயர்ப்பைத் தொடர வேண்டும். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நாளையும் செய்தால் முடிந்து விடும் என்று தோன்றுகிறது. மதியத்துக்கு மேல் உற்பத்தித் திட்டமிடலின் மேல் பணிகளை முடித்து விட வேண்டும். நாளை மாலை, 2 மணி நேரம் நாட்குறிப்பு, 1 மணி நேரம் மின்னஞ்சல்கள் அனுப்புவது - ஐநா போர்க்குற்ற அறிக்கை குறித்து தொழிலாளர் அமைப்புகளுக்கு அனுப்புவது, 2 மணி நேரம் ஆQ மொழி பெயர்ப்பு.

ஞாயிற்றுக் கிழமை மே தின பேரணிக்கு போக முடியாது என்று தோன்றுகிறது. காலை 4 மணி நேரத்தில் டிரேட் புரோ பணிகளை முடித்து ஆவணம் தயாரித்துக் கொள்ள வேண்டும். முற்பகலில் ஐநா அறிக்கை பற்றிய மின்னஞ்சல் தயாரிப்பது, பிற்பகலில் மீண்டும் டிரேட் புரோ பணிகள். மாலையில் நாட்குறிப்பு, ஆQ மொழி பெயர்ப்பு. திங்கள் கிழமை உற்பத்தித் திட்டமிடலை பயன்பாட்டுக் கணினியில் சேர்த்து விட வேண்டும்.

செவ்வாய்க் கிழமை சென்னைக்குப் போய் டிரேட் புரோ வாடிக்கையாளர் கணினியில் நிறுவிக் கொடுத்து ஆரம்ப அறிமுகம். அன்று மாலையில் நாகர்கோவிலுக்குப் பேருந்தில் போய், நான்கு நாட்கள். அங்கு. ஞாயிற்றுக் கிழமை மாலை ரயிலில் ஏறி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மீண்டும் வேலூர். இதுதான் அடுத்த 10 நாட்களுக்கான வேலைத் திட்டம்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைப் பற்றிய ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானதும் தமிழ்நாட்டில் சாதகமான சூழல் உருவானதற்கு சீமான் முதற்கொண்டு தமிழ் தேசிய இயக்கங்கள் தொடர்ந்து மேற்கொண்ட பரப்புரைகள் முக்கிய காரணம். பெரும்பான்மை மக்களுக்கு திமுக/அதிமுக சொல்வதுதான் அரசியலாக இருப்பதுதான் நடைமுறை. அவர்களை ஒரு நிலைப்பாடு எடுக்கச் செய்வதுதான் இது போன்ற சிறு இயக்கங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் கம்யூனிச புரட்சி இயக்கங்கள் செயல்படுவது சிரமம். இருக்கும் அமைப்பில் எந்த மேம்பாடும் சாத்தியமில்லை. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு புதிய புரட்சி அரசை உலகெங்கும் அமைப்பதுதான் ஒரே வழி, அதற்காக மக்களைத் தயார்படுத்துவதுதான் நமது பணி என்ற கோட்பாட்டில் செயல்படும் போது, கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பண உதவி செய்வதோ, இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் நடத்துவதோ தேவையில்லாத ஒன்று. எல்லா பிரச்சனைகளையும் உலகளாவிய கோணத்தில்தான் பார்க்க முடிகிறது.

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

நக்கிப் பிழைக்கும் நாய்களாகிய நாம்

ஒன்பதரை மணிக்குத் தூங்க ஆரம்பித்து முதல் நிலை தூக்கத்திலேயே பெரிய பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. தூக்கம் கலைந்து எல்லோரும் எழுந்து விட்டோம். என்ன கலவரமோ என்று பதட்டம் அம்மாவுக்கு.

தூக்கக் கலக்கத்திலும், தூக்கம் கலைந்து விட்டதே என்ற சோகத்திலும் நடந்து கொண்டிருந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நினைவுக்கு வந்தது. அதில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக யாரோ வெடி வெடிக்கிறார்கள். சில நிமிடங்கள் தொடர்ந்து வெடித்து யாரும் தொடர்ந்து தூங்கியிருக்க முடியாமல் வெடித்தது அது.

நள்ளிரவு இருக்கும் என்று சொன்ன அம்மா, தொலைக்காட்சியைப் போட்டால் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. படுத்திருந்த அறையின் கதவைச் சாத்தி விட்டுத் தொடர்ந்து தூங்க ஆரம்பித்தேன். இது போன்ற கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளவில்லை என்ற எண்ணம் மிகச்சிறிதளவு மட்டும் எட்டிப் பார்த்தது. தூங்கி விட்டேன்.

2009ல் தமிழ் இனப்படுகொலை நடந்து முடிந்தது. அதன் பிறகு ஈழத்தமிழர்களின் வாழ்க்கைக்கு அரசியல் தீர்வு எதுவும் கிடைத்து விடவில்லை.

இனப் படுகொலைக்கு அரணாக இருந்த மத்திய அரசுக்குத் துணையாக தமிழ்நாட்டில் கூலி வேலை செய்த கருணாநிதி 2010ல் உலகச் செம்மொழி மாநாடு என்று ஒரு கொண்டாடிக் கொண்டார். 2011ல் இலங்கை அரசுடன் கூட்டாக கிரிக்கெட் உலகக் கோப்பை நடத்தி இரு நாடுகளின் இறையாண்மையையும் குடிமக்களின் தேசபக்தியையும் உறுதி செய்து கொண்டு விட்டது இந்தியா.

நேற்றைக்குப் பேசிக் கொண்டிருந்த போது
'மே 2009க்குப் பிறகு பல மாதங்கள் சோர்வடைந்த மன நிலை இருந்தது. தமது உரிமைகளுக்காக போராடிய, ஒழுக்கமான ஒரு மக்கள் கூட்டம் இப்படி கவனிப்பாரில்லாமல் அழிக்கப்படும் இந்த உலகில் நேர்மை, ஒழுக்கம் என்று நாம் வாழ்ந்து என்ன பலன்? நாளைக்கே ஆதிக்க சக்திகள், நம்மை அடித்துத் தெருவில் நாய் போல இழுத்துக் கொண்டு போனாலும் கேட்பதற்கு நாதி இருக்காது. நமது நம்பிக்கைகள், எண்ணங்கள் அனைத்துமே தவறா என்ற சோர்வு'

'அதிலிருந்து எழுந்து வெளிவர பல மாதங்கள் ஏற்பட்டன. வெளியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், மனதில் ஊக்கமும் முயற்சிக்கும் வன்மையும் தளர்ந்து விட்டிருந்தன. பல அனுபவங்களுக்குப் பிறகு ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சிறிது சிறிதாக செயல் முனைப்புகளை ஆரம்பிக்க முடிந்தது.'

'எல்லாமேதான் முடிஞ்சாச்சு, இனிமேல் இவனுங்க என்ன செய்யப் போகிறானுங்க' என்று கேட்கிறார்கள் என்றார் நண்பர்.

'நாளைக்கு நமது குழந்தைகளும் சந்ததியினரும் 21ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இலங்கையின் வட பகுதியில் சீரிய அரசு நடத்திய ஒரு இயக்கத்தையும், அந்த இயக்கம் அழிக்கப்பட்ட வரலாற்றையும், மக்கள் படுகொலைகளையும் பற்றிப் பேசும் போது, 'அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் வசித்தவர்கள் என்ன செய்தார்கள், புழுக்களாக தின்று செரித்து கள்ளுண்டு மயங்கிக் கிடந்தார்களா' என்று ஏசும் போது, அந்தப் புழுக்களின் நடுவில் ஒரு சில புழுக்கள் சிறிது துடிக்கவாவது செய்தன' என்ற அளவிலாவது பேசப்பட வேண்டும்.

செம்மொழி மாநாடு தொடர்பான விவாதங்களில் இப்படிப் புழு பற்றி எழுதியதையும் நண்பர் குறிப்பிட்டார்.

நேற்றுக் காலையில் உலாவப் போகும் போது, ஐஎஸ்ஆர்ஓ குடியிருப்பின் பக்கவாட்டுச் சந்தின் வழியாகப் போய் பூங்கா நகர், கன்கார்டியா பள்ளி அருகில் ஆசாரி பள்ளம் சாலைக்கு வந்தேன். அங்கிருந்து ராணித்தோட்டம் தாண்டுவது வரை 15 நிமிடம் ஆகியிருக்கவில்லை. மருத்துவக் கல்லூரி இந்த சாலையில்தான் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் மருத்துவக்கல்லூரி வருவதற்குள் நேரமாகி விடத் திரும்பி விட்டேன்.

பள்ளியில் படிக்கும் போது கன்கார்டியா பள்ளி நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குப் போவது பல நூறு நாட்கள் நடந்திருக்கும். கன்கார்டியா பள்ளியைத் தாண்டி போனது சரஸ்வதி பூஜை நேரத்தில் ராணித்தோட்டத்தில் நடக்கும் பாட்டுக் கச்சேரிக்கு (மெல்லிசைக் கச்சேரி) ஒன்றிரண்டு முறை போனது. ராணித்தோட்டத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்த்தது கூடக் கிடையாது.

அதே போன்று அந்தப் பக்கம், இன்னொரு சாலை. செட்டிக் குளம் சந்திப்பிலிருந்து மேற்கு நோக்கி மூன்று சாலைகள். வலது புறம் முதல் சாலை ஆசாரி பள்ளம் சாலை - கோபாலபிள்ளை மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்தியாஸ் வார்டு. இந்த இடத்தில் சாலை இரண்டாகப் பிரிந்து ஒன்று ஆசாரி பள்ளம் நோக்கி, மற்றது திருவனந்தபுரம் நோக்கி.

செட்டிக் குளத்திலிருந்து இரண்டாவது சாலை மேலராமன் புதூர் போவது. இதில் பேருந்து போக்குவரத்து பெரிய அளவில் கிடையாது. நடந்தே நாகர்கோவிலில் இருந்து சைமன் நகருக்கு வருவதற்கு இந்தச் சாலையில் வருவோம்.

மூன்றாவது சாலை ராஜாக்கமங்கலம் போவது என்று தெரிந்து வைத்திருந்தேன். அந்த சாலையிலும் பேருந்தில் ஏறி புன்னைவிளை நிறுத்தத்தில் இறங்கி சைமன் நகர் வீட்டுக்குப் போவது பல முறை நடந்திருக்கிறது. கீழராமன் புதூர், சிறுமலர் பள்ளி, கார்மல் பள்ளி தாண்டி புன்னை விளை நிறுத்தம்.

மேலராமன் புதூர், சைமன் நகர் இருக்கும் பகுதி இந்த மூன்று சாலைகளுக்கு நடுவில் இருக்கிறது எந்தத் திசையிலும் இறங்கி நடந்து வந்து விடலாம்.

நேற்று மதியம் இராஜாக்கமங்கலம் சாலையில் குளச்சல் தாண்டி கடலோரக் கிராமங்களுக்குப் போய் வந்தோம்.பத்தரை மணிக்கெல்லாம் சைமன் நகர் வந்தார். சிறிது நேரம் உட்கார்ந்து பேசி விட்டுப் புறப்பட்டோம். #defeatcongress என்ற பொருளில் எழுதி வைத்திருந்த கருத்துரைகளை அச்செடுத்து பிரதி எடுக்கலாம்.

நேற்று ஜெயலலிதா கன்னியாகுமரி மாவட்டத்துக்குப் பிரச்சாரத்துக்கு வந்ததால் கவனமெல்லாம் அந்தப் பக்கம் குவிந்திருந்தது. என்னைப் பொறுத்த வரை கட்சி வேட்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்து விடாமல், தனிப்பட்ட முறையில் வீடு வீடாகப் போய்ப் பேசுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

பள்ளியாடிக்குப் போகலாம் என்று புறப்பட்டோம். வழியிலேயே அவரது நண்பர் ஒருவரை நினைவு கூர்ந்து தொலைபேசினார். அவர் தமிழ்உணர்வாளர், அவரிடம் போய்ப் பேசலாம் என்று அழைத்துப் போனார். வழியில் கணினி மையங்களில் உரையை வடிவமைத்து ஒரு பக்கத்தில் இரண்டு பிரதிகளாக அச்சிட்டுத் தர முடியுமா என்று முயற்சித்து முடியவில்லை. ஏற்கனவே வைத்திருந்த அச்செடுப்பை நகல்கள் செய்து கொண்டோம்.

கீழராமன் புதூரில் நண்பர் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தோம். பேசிக் கொண்டிருந்த போது, அவரது மனதில் இருந்த உணர்வுகளும் வெளிப்பட்டன. 'நாம் என்ன செய்ய முடியும்' என்ற விரக்தி எல்லோரிடமுமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

'தமிழ்நாட்டில் பல லட்சம் பேரிடம் ஈழ நிகழ்வுகள் தொடர்பாக கோபம், ஆத்திரம், வெறுப்பு இருக்கிறது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமது மனச்சிறைகளுக்குள் வருந்திக் கொண்டிருக்கிறோம். ஒத்தக் கருத்துடையவர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படக் கூட வாய்ப்பில்லாமல் இருக்கிறது'

இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைப்பதற்கு வைகோவும் நெடுமாறனும் வந்திருந்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்திருக்கிறார்களாம்

'சார், நான் கன்னியாகுமரிக்குப் போறேன். மத்தியானம் கிளாசில் இருக்க மாட்டேன்' என்று சொல்லிட்டு ஓடிட்டான் என்று ஒரு கல்லூரி ஆசிரியர் சொன்னார். 'நீங்க வரலையா' என்று என்னையுத் கேட்கிறான்' என்றார்.

'நான் எதனால் தூண்டப்பட்டு அங்கே போனேன் என்று தெரியவில்லை. ஆனால், தகவல் அறிந்த உடன் அங்கு போய் நின்று விட்டேன்' என்று இன்னொரு நண்பர்.

கவிஞர் காசி ஆனந்தன் பேசியதை தனது செல்பேசியில் பதிவு செய்திருந்தார்.

இப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்று தொலைக்காட்சிகளோ, நாளிதழ்களோ செய்தி வெளியிடக் கூடச் செய்யவில்லை. தமிழனுக்கு கிரிக்கெட்டையும், திரைப்படங்களையும் காட்டி விட்டால் அவன் மெய் மறந்து இருந்து விடுவான் என்ற ஊடகச் சதியில் ஆளும் வர்க்கத்தின் கைப்பிடியில் இருக்கும் சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகளும், தினகரன், தினத்தந்தி, தினமலர், தினமணி நாளிதழ்களும் இன உணர்வுகள் பரவி விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன.

'அவன் எங்க ஊர்க்காரங்க, நான் சாப்பிட்ட சாப்பாடு சாப்பிடுபவன், நான் வாழும் முறையில் வாழ்பவன், நான் பேசும் மொழியில் பேசுபவன், எங்க ஊர் பெண்கள் போலவே அந்த ஊர் பெண்கள் பொட்டு வைத்துக் கொள்கிறவர்கள்'

கோபத்திலும் ஆத்திரத்திலும் சொற்கள் பீறிட்டன. ஈழத்துப் படுகொலைகளைப் பற்றிப் பேசும் போது கண்கள் நிரம்பி விடுகின்றன. எனக்கு மட்டும்தான் அந்த கையாலாகாத்தனத்தின் கண்ணீர் வந்து விடுகிறது என்று நினைத்திருந்தேன்.

இந்த உணர்வுகள் வெளிப்பட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு குளச்சலை அடுத்த கிராமத்துக்குப் போய் தலைவர் ஒருவரை சந்திக்கலாம் என்று அழைத்துப் போனார்.

'ஆமாய்யா, நாங்கதான் கொன்னோம். அதுக்காக என்ன செய்யப் போறீங்க'. ராஜீவ் காந்தியின் படுகொலையைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இலங்கையில் நடந்து கொண்டிருந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து எதுவும் செய்யக் கூடாது என்று வாதிட்டவர்களிடம் இப்படிப் பேசினாராம் அந்தத் தலைவர்.

2009ல் கட்சி பிரிவுகளைத் தாண்டி 75000 மக்களை திரட்டி ஊர்வலமும் கூட்டமும் நடத்தினார்களாம். அந்தக் கூட்டத்தில் நிகழ்ந்தது இது. அவர் பேசியவுடன் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தார்களாம்.

பிரின்ஸ் என்பவர் இப்படிப் பேசியவரைக் கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டாராம். அந்த பிரின்ஸ்தான் இப்போது குளச்சல் தொகுதியின் காங்கிரசு வேட்பாளர்.

அவரை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் மீனவர்கள் காங்கிரசை எதிர்த்துதான் வாக்களிப்பார்கள். மீனவர்களின் பிரதிநிதி ஒருவராவது சட்டசபைக்குப் போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. லூர்தம்மாள் சைமன், அதன் பிறகு பெர்னார்டு என்ற இன்னொருவர் தவிர்த்து மீனவர் யாரும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

'கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நேசமணியும், லூர்தம்மாள் சைமனும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், தமது சாதியைச் சேர்ந்த நேசமணிக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்காமல் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமனை அமைச்சராக்கும் தலைமைப் பண்பும் அக்கறையும் காமராசருக்கு இருந்தது' என்று வியந்து பாராட்டினார் நண்பர். அதற்காக காமராசருக்கு எதிர்ப்புகளும் ஏற்பட்டனவாம்.

'தொகுதி மறுசீரமைப்பின் போது, மீனவ மக்களை ஒரே தொகுதியில் பெரும்பான்மை பெற்று விடாமல் வெவ்வேறு தொகுதிகளில் சிதறச் செய்தார்கள், இதைத் திட்டமிட்டுச் செய்தார்கள்' என்று ஒரு கருத்து வந்தது. கடலோரக் கிராமங்கள் அனைத்தையும் இணைத்துக் கூட ஒரே தொகுதியாகை ஏற்படுத்தியிருக்கலாம். தனித்த குணங்களும், சிறப்பான பிரச்சனைகளும் கொண்ட மீனவ மக்களுக்கு பிரதிநிதித்துவமும் போதுமான கவனமும் கிடைத்திருக்கும். அப்படி எந்த மாவட்டத்திலும் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொகுதி மீனவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் படி ஏற்படுத்தினால் கூட போதும். 12 பிரநிதிகள் சட்டசபைக்குப் போவார்கள். நடக்கவில்லை.

கிள்ளியூர் தொகுதியில் 40,000 மீனவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் எந்தக் கட்சியும் மீனவ வேட்பாளரை நிறுத்தவில்லை. அதை எதிர்த்து ஜோஸ் என்ற மீனவரை சுயேச்சையாகப் போட்டியிட வைத்திருக்கிறார்கள். காங்கிரசு வேட்பாளருக்குப் போட்டியாக முன்னாள் உறுப்பினர் குமாரதாஸ் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் மணற் கொள்ளையில் ஈடுபடும் வைகுண்டராஜ் என்பவருக்கு ஆதரவாகச் செயல்படுபவர் என்ற கருத்து இருக்கிறது.

இதனால் கிள்ளியூர் தொகுதியில் தெளிவான நிலவரம் இல்லை. மீனவரான ஜோசுக்கு உள்நாட்டு மக்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

'மக்களிடையே ஈழம் குறித்த விழிப்புணர்வும், கோபமும் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் மத்திய அரசு செய்தது என்றுதான் சொல்லி வந்திருக்கிறோம். அதைக் காங்கிரசு என்று உணர்த்தும் பணியைச் செய்ய வேண்டியிருக்கிறது'

'சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காணொளி ஒன்று அடங்கிய குறுந்தகடை வினியோகித்தோம். காட்சிகளைக் காட்டும் போது பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் காங்கிரசு பெயர் வந்ததும், "நீங்க ஓட்டு கேட்கத்தானே வந்திருக்கீங்க" என்று சொல்லி விட்டார்கள்'

இப்போதும் துண்டு பிரசுரங்களை விட காணொளிகளை குறுந்தகட்டில் வினியோகிப்பது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% எழுத்தறிவு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடலோரக் கிராமங்களில் 50% மட்டுமே படித்தவர்கள் இருக்கிறாரகள். அதிலும் பெரும்பான்மை இளைய தலைமுறையினர். அதனால் வாசிக்கும் பழக்கம் குறைவு. ஆனால் எல்லோருக்கும் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இருக்கிறது.

'அதனால் குறுந்தகடுகளாக வினியோகித்தால், ஊர் இளைஞர்களே நகல் எடுத்து எல்லோரும் பார்க்கும்படி செய்து விடுவார்கள்'.

'தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் தமிழ் உணர்வாளர்களின் பிரச்சாரத் தாக்கம் தேர்தலில் இருந்தது என்று வெளிவந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைச் செய்ய வேண்டும்.'

'காங்கிரசை தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டு விடும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தோல்விக்கான காரணம் தமிழர்களுக்கு எதிரான செயல்கள் என்பது உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பிரச்சாரம் செய்ய வேண்டும்'

'இணையத்திலும் டுவிட்டர், ஃபேஸ்புக் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். மின்னஞ்சல் மூலம் கருத்துக்களைப் பரப்ப வேண்டும்.'

ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, கடியப்பட்டிணம், குளச்சல், சைமன் காலனி என்று பேருந்து பெயர்ப்பலகைகளில் மட்டுமே பார்த்திருந்த ஊர்களை எல்லாம் பார்க்க முடிந்தது. குளச்சலில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியைக் காட்டினார்கள். சுனாமி மறுவாழ்வுக்கு கடற்கரையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வீடு கட்டிக் கொடுத்த கொடுமையைப் பற்றி இங்கும் பேசினார்கள்.

'சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தக்காளி சாதமும் தயிர் சாதமும் கொண்டு வந்து அதை சாப்பிட மறுத்ததைக் குறை சொன்னார்கள். அவங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நாங்க மீன் குழம்பும் சோறும் கொண்டு போயிருந்தால் சாப்பிடுவார்களா'

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணி புரிந்த இன்னொரு நண்பர் கொஞ்சம் விரக்தியாகத்தான் பேசினார். 'நாம் என்ன செய்து என்ன? மக்களிடம் போய்ச் சேர்க்க முடியாது. ஊடக பலமும் பண பலமும் இருக்கும் இடத்தில் நமது முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போகின்றன' என்று சொன்னார்.

'அதற்காக வாளவிருந்து விடாமல், நம்மால் முடிந்த துரும்பை நகர்த்திப் போடுவது கடமை' என்று பேசிக் கொண்டோம்.

அடுத்த வாரம் மீண்டும் வந்து குளச்சல், கிள்ளியூர் தொகுதியில் பணி செய்ய வேண்டும் என்று தோன்றியது. விளவங்கோடு தொகுதியில் காங்கிரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் வெளியூர்க்காரர். மார்க்சிஸ்ட் வேட்பாளர் லீமா ரோஸ் நல்ல பெயர் உள்ளவர். அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

குளச்சல், கிள்ளியூர் தொகுதிகளில் நிறைய வேலை செய்ய வேண்டும்.

coastal zone regulation, coastal management scheme, மணற்கொள்ளை என்று மீனவர்களை பாதிக்கும் உள்ளூர் பிரச்சனைகளைப் பற்றியும் பேச வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதியை விட மதம்தான் வாக்களிப்பு முடிவைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. பாஜக வந்து விடக்கூடாது என்பதில் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

இன்று பள்ளியாடி போய் பணி செய்யலாம் என்று திட்டம். மாலையில் சந்தித்த நண்பரும் வருவதாகச் சொன்னார்.

புதன், மார்ச் 30, 2011

அவரவர் நியாயங்கள்


புதிதாக செய்யும் மாற்றங்களை, பயன்பாட்டு பதிப்பில் சேர்ப்பது யாரும் பயன்படுத்தாத நேரத்தில்தான் செய்ய வேண்டும். உருவாக்கப் பதிப்பில் மாற்றங்கள் செய்து, சோதனை பதிப்பில் சரி பார்த்து, பயன்பாட்டுப் பதிப்பில் சேர்க்க வேண்டும். யாரும் பயன்படுத்தாத நேரம் இரவு நேரம்தான். இரவு 10 மணிக்குப் பிறகு காலை 8 மணி வரை அந்த அவகாசம் இருக்கிறது.

இப்படி செய்ய இரண்டு காரணங்கள்:

  • ஒரு வேளை மாற்றப்பட்ட நிரல் கோப்புகளைச் சேர்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்து விட்டால், பயனர்களுக்குத் தொந்தரவு ஏற்படாமல் சரி செய்து கொள்ளலாம். 
  • தரவுகளை புதுப்பிக்கும் நிரல்கள் இருந்தால் அவை இயங்கும் போது கணினியின் வளங்கள்  மற்ற வேலைகளுக்கு இல்லாமல் போய் விடலாம். மற்றவர்களும் கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும். 

நேற்றும் சரி இன்றும் சரி சீக்கிரமாகவே எழுந்து விட வேண்டியிருந்தது. நேற்று எழுந்து நாட்குறிப்பு எழுதிய பிறகு 5 மணிக்கு உலாவச் செல்வதற்கு முன்பு 1 மணி நேரம் பயன்பாட்டுப் பதிப்பில் மாற்றங்கள் செய்து விட்டுப் புறப்பட்டேன்.

நடக்கப் போகும் போது முந்தைய நாள் திட்டமிட்டது போல காட்பாடி திசையில் நடந்தேன். நிறைய வாகனங்கள் - பேருந்துகள், பகிர்வூர்திகள், இரு சக்கர வண்டிகள் போக ஆரம்பித்திருந்தன.

சித்தூர் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் நேராகப் போனால் சித்தூர் போகும் சாலை, நேராகப் போய் வலது புறம் ரயில் நிலையம், அங்கேயே வலது புறம் திரும்பினார் விஐடி போகும் சாலை.

வலது புறம் திரும்பி விஐடி நோக்கிப் போகும் சாலைக்குள் நடந்தேன். கொஞ்ச தூரத்திலேயே அமைதி முழுமையாக தழுவிக் கொண்டது. எந்த வாகனங்களும், மற்ற சத்தங்களும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. இந்தப் பகுதி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காடாக இருந்திருக்கும் என்று தோன்றியது. காட்பாடி என்பது காட்டுப்பாடி என்பதன் மருவு. ஒரு வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கத்தில் காட்டுப்பாடி கூட்டுறவு சங்கம் என்றுதான் எழுதியிருக்கிறார்கள்.

வேலூர் பழைய பேருந்து நிலையம், சிஎம்சி, கோட்டை பகுதியில் ஊரின் மையம். பெரிய மருத்துவமனை, சுற்றுலாத் தளம், பெரிய சந்தை, பேருந்து நிலையம். இது 10 ஆண்டுகள் முன்பு வரை என்று நினைக்கிறேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்தை பாலாற்றின் அருகில் இருக்கும் செல்லியம்மன் கோவிலை அடுத்த இடத்தில் மாற்றினார்கள். பெங்களூரு போகும் நான்கு வழிச்சாலை அந்தப் பகுதியில் போடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சத்துவாச்சாரியைத் தாண்டி வந்தவுடன் புறவழிச்சாலை அருகிலேயே இருக்கிறது. பேருந்து நிலையம் வந்ததும் இந்தப் பகுதி பெருமளவு வளர்ச்சி பெற்று விட்டது.

காட்பாடியின் காந்திநகர் பகுதியும் ஓரிரு 10 ஆண்டுகளுக்குள் வளர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். காந்திநகர் முறையாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். காட்பாடி ரயில் நிலையம் போகும் சாலைக்கு வலது புறம். சாலைக்கு இடது புறம் கிராமங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த சாலையின் இரு புறமும் முட்செடிகள் நிரம்பி காடு போல இருக்குமாம். இப்போது மரங்கள் எல்லாம் பெருமளவு அழிக்கப்பட்டு விட்டாலும், மாற்றாக சாலை ஓர மரங்கள் சில வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி காட்டுச் சூழல் நன்காகவே தெரிகிறது.

காலையில் எழுந்து உட்கார்ந்தால், இரவில் உட்கார்ந்திருந்தால், கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்யும் அறிவிப்புகள் கேட்கும் அளவுக்கு நிசப்தம். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சன்னல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தால், பல வீடுகளில் அறைக் குளிர் கருவி இயங்கும் சத்தம் இரவு முழுவதும் இரைந்து கொண்டே இருக்கும். அமைதியாக சுவர்க்கோழி சத்தம் கூடக் கேட்காது.

இங்கு சுவர்க்கோழி மட்டுமில்லை பல்லி நகரும் சத்தமும் கேட்கிறது. பல்லியின் டிக்டிக்டிக் போக, சுவரில் நகரும் ஓசையும் எதிலாவது முட்டிக் கொள்ளும் ஓசையும் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருக்கிறது.

15 நிமிட நடை முடிந்ததும் திரும்பி வர ஆரம்பித்தேன்.

ஐந்தரை மணிக்கெல்லாம் அங்கு நாளிதழ்கள் வந்திருக்கின்றன. போகும் போது சித்தூர் பேருந்து நிறுத்தத்தின் அருகில் சாலை சந்தியில் இருந்த மேடையில் செய்தித்தாள் பொட்டலங்களைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். திரும்பி வரும் போது ஒரு கடையில் விற்பனைக்கு போட்டு விட்டார்கள். 1 ரூபாய்க்கு டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன்.

வேலூர் வந்த பிறகு வாங்கினால் டெக்கான் குரோனிக்கிள் மட்டும்தான். இணையத்தில் பெரும்பாலான செய்திகள் படித்து விடுவதால் செய்தித்தாள் வாங்கா விட்டாலும் எதுவும் குறைந்து விடுவதில்லை. ஆனால், செய்தித்தாள் தொடர்ந்து சில நாள் வாங்கும் போது, காலையில் அதைப் படிக்கா விட்டால் ஏதோ தவற விட்டது போல நாள் முழுவதும் இருக்கும். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக செய்தித்தாள் படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ஓரிரு நாட்கள் விடுமுறையில் செய்தித்தாள் வராவிட்டால், வெறிச்சோடி இருக்கும். தினமலர் அன்றும் வெளியிட்டு விடுகிறார்கள்.

இங்கு டெக்கான் குரோனிக்கிள் வார நாட்களில் 1 ரூபாய், ஞாயிற்றுக்கிழமை 2 ரூபாய். ஓரிரு மாதங்களுக்கு முன்பு சனிக்கிழமை வாரம் முழுவதற்குமான தொலைக்காட்சி நிகழ்ச்சி இணைப்பு ஒன்றைச் சேர்த்து அன்றும் 2 ரூபாய் என்று மாற்றினார்கள். தினமும் நகர இணைப்பு ஒன்று இருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஞாயிறு மலர்.

சென்னையில் டெக்கான் குரோனிக்கிள் (அதே பதிப்பு) வார நாட்களில் 2 ரூபாய், ஞாயிற்றுக்கிழமை 2.50.

வேலூரில், இந்து நாளிதழ் தினமும் 3.25. நகர மலர் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை 4.50.

சென்னையில் இந்து நாளிதழ் தினமும் 2.50, கூடவே தினமும் நகர மலரும் உண்டு. வெள்ளிமலர், சிறுவர் மலர் என்று இணைப்புகளுக்குக் கூட.  ஞாயிற்றுக்கிழமை விலை அதிகம்.

போட்டி இல்லாத, அல்லது போட்டி குறைவான இடங்களில் எவ்வளவு கல்லா கட்ட முடியுமோ அவ்வளவு வசூலிக்கிறார்கள் இந்து நாளிதழ்காரர்கள். ஏகபோக சந்தை உரிமை உடைய நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அவர்களின் நடவடிக்கைகளை பாடமாக வைக்கலாம்.

வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிட்டு விட்டுப் புறப்படும் போது ஏழரை மணி. பையில் குடி தண்ணீர், குறிப்பேடு, வங்கி அட்டை, வங்கியில் கொடுக்கத் தயாரித்து வைத்திருந்த அடையாள ஆவணம், முகவரி ஆவணம், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். எதை எல்லாம் கேட்பார்களோ அதற்கெல்லாம் தயாராக இருந்து விட்டால் தேவையில்லாத அலைச்சலை தவிர்க்கலாம்.

ஓடைப்பிள்ளையார் பேருந்து நிறுத்தத்தில் வெளியூரில் இருந்து வரும் அரசுப் பேருந்தில் ஏறினால் காந்திநகருக்குள் சுற்றி போகாமல் நேராக வேலூர் - காட்பாடி சாலையிலேயே போவார்கள். காந்தி நகர் சுற்றிப் போனால், ஓடைப் பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் இடது புறம் திரும்பி - ரவுண்டானா - வலது புறம் திருப்பம்,  ஈபி, டான்போஸ்கோ, கல்யாண மண்டபம் - வலது புறம் திருப்பம் நிறுத்தங்களுக்குப் பிறகு மறுபடியும் பிரதான சாலைக்கு வந்து சேரும். அந்த நிறுத்தத்துக்குப் பெயர் சில்க் மில் என்று நினைக்கிறேன்.

நேர் வழியில் போகும் பேருந்துகள் ஓடைப்பிள்ளையார் கோவில் நிறுத்தத்துக்கு அடுத்து சில்க்மில் நிறுத்தம்தான். அடுத்தது இரண்டு நிறுத்தங்கள், அதன் பிறகு பாலாறு பாலம் தாண்டி புதிய பேருந்து நிலையம்.

நிலையத்தில் இறங்கி முதலில் வெளியூர் போகும் பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு வந்து புதுக்கோட்டை பேருந்தின் நேரம் பார்க்க முயற்சி செய்தேன். அப்போது ஒரு புதுக்கோட்டை பேருந்து - அரசுப் பேருந்து திருச்சி நின்றிருந்தது. நேர அட்டவணை அரசு விரைவுப் பேருந்துகளுக்குத்தான் போட்டிருந்தார்கள். மற்ற போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு நேர விபரங்கள் இல்லை.

மாலையில் ஒரு பேருந்தைப் பார்த்திருக்கிறேன். 7 மணி வாக்கில் வந்தால் 8 மணிக்குப் புறப்படும் பேருந்தில் ஏறிக் கொள்ளலாம். காலையில் 4 மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்து விட்டால், ஒரு விடுதியில் அறை எடுத்துக் காலைக் கடன்களை முடித்து விட்டு காலை 8 மணிக்கு பேருந்து பிடித்து ஜெகதாபட்டிணம். அங்கு பணத்தைக் கொடுத்து விட்டு மதியத்துக்கு மேல் ராமநாதபுரம். அங்கிருந்து நேரம் பார்த்து நாகர்கோவில்.

வெள்ளிக் கிழமை விடியற்காலையில் போய்ச் சேர்ந்து விடலாம். வெள்ளிக்கிழமை அங்கிருந்தே அலுவலகப் பணிகள். சனி, ஞாயிறு ஸ்பெ உடன் ஊர்களுக்குப் போகலாம். திங்கள் கிழமையும் அங்கிருந்தே வேலை பார்த்து விட்டுப் புறப்படலாம்.

அப்படியே சென்னை பேருந்துகள் நிற்கும் இடத்தைச் சுற்றி, ஓசூர் பேருந்துகளுக்கு வந்தேன்.

'இன்னைக்கு செவ்வாய்க்கிழமை, வண்டியே காலியா இருக்கு, ஏறுங்க, ஏறுங்க' என்று நடத்துனர் பின்னர் சொன்னது போல கூட்டம் அதிகமில்லை. ஆம்பூர் சீட்டு கேட்டதும் 'சில்லறையா வேணும் சார்' என்று எச்சரித்தார். இரண்டு 10 ரூபாய் தாள்களை  நீட்டினேன். அதன் பிறகு சில்லறை அறையைத் துளாவி 5+2 நாணயங்களைக் கொடுத்தேன். 17 ரூபாய் கட்டணம். கிட்டத்தட்ட முதல் முறையாக ஒரு நடத்துநர் சில்லறையாகக் கொடுத்ததற்கு 'தேங்க்ஸ்' சொன்னார். சில்லறை இல்லை என்றால் திட்டுபவர்கள், சில்லறை கொடுத்தால் நன்றி சொல்லலாம்!

மூன்று பேர் உட்காரும் இருக்கை, பின் சக்கரத்துக்கு மேல் இருக்கை. சக்கரப் பகுதிக்குப் போகாமல், நடைபாதை ஓரமாகவே உட்கார்ந்து கொண்டேன். அதன் பிறகு ஏறிய யாரும் அந்தப்பக்கம் ஜன்னலோரமாக போக விரும்பவில்லை. சக்கரம் துருத்திக் கொண்டிருக்கும் இடத்தில் கால் வைக்க வசதியாக இருக்காது.

பள்ளிகொண்டா வரை கண்ணயர்ந்து விட்டேன். பள்ளிகொண்டாவில் நிறைய பேர் ஏறினார்கள். ஒரு பெண் வசதியான இடம் கிடைக்காமல் தயங்கி நிற்க மூன்று பேர் இருக்கையில் ஒரு ஆளாக இருந்த நான் எழுந்து இரட்டை இருக்கையில் காலியாக இருந்த ஒரு இடத்தைப் பிடித்தேன். அந்தப் பெண் உட்கார்ந்ததும் இன்னும் இரண்டு பெண்கள் முன் பக்கமிருந்து வந்து அந்த இருக்கையை நிரப்பி விட்டார்கள்.

மாதனூர், ஆம்பூர். 9 மணி தாண்டி விட்டிருந்தது. இறங்கி வந்த வழியிலேயே நடந்தேன். நகரப் பேருந்தின் முந்தைய நிறுத்தம். விரைவுப்பேருந்துகள் நிறுத்தாமல் வந்து விடுவார்கள். நடக்கும் வழியில் வலது புறம் தேநீர்க் கடைகள், காஜா உணவு விடுதி, பெட்ரோல் நிலையம், ஆரம்பப்பள்ளி (உதவி பெறும் பள்ளி) -பள்ளிக்கு வரும் குழந்தைகள், பையன்களும் பெண்களும், இரு சக்கர வண்டியில் மகனை இறக்கி விடும் அப்பா, நடந்து குழுக்களாக வரும் சிறுவர்கள். தலையில் வெள்ளைக் குல்லா பையன்களுக்கு, துப்பட்டாவைத் தலை மீது மூடல் சிறுமிகளுக்கு. அவ்வளவு சின்னக் குழந்தைகளை அப்படிப் பார்க்கும் போது நன்றாகவே இருந்தது.

திரும்பும் இடத்து முனையில் உயர்நிலைப்பள்ளி, இங்கும் இசுலாமிய மாணவர்கள்தான் நிறைய என்று நினைக்கிறேன். தலையை முழுதுமாக மறைக்காத ஆண்களுக்கான குல்லா. வலது புறம் திரும்பி ரயில் பாதை தலைக்கு மேலே போகும் பாலத்தின் கீழ் நடக்க வேண்டும். பெங்களூரிலிருந்து வரும் லால்பாக் விரைவு ரயில் அப்போதுதான் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தது. கீழே நடக்கும் போது, தலைமேல் விழுவது போல நினைத்துக் கொண்டேன்.

இவர்கள் 9 மணிக்கு பெரும்பாலும் வந்து விடுகிறார்கள், ஓரிருவர் ஒன்பதரை மணிக்கு.

பயன்பாட்டுக் கணினியில் உட்கார்ந்து கட்டுப்பாட்டு அறிக்கைகளுக்காக செய்த மாற்றங்களைச் சேர்க்க ஆரம்பித்தேன். இடையிடையே பயனர்கள் ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளைச் சொல்லவும், சந்தேகங்களை கேட்கவும் வந்தார்கள்.

2003, 2004, 2005, 2006ல் இதே போல் நான் போய் அங்கு உட்கார்ந்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து செய்து கொடுத்து விட்டு வந்தேன். எம்ஏகேஎச் வந்த நேரத்திலிருந்து அந்த முறை மாறிக் குறைந்து போய் எனது நேரடி ஈடுபாடு குறைந்து, மற்றவர்கள் மூலம் சேவை அளிக்கும் முறை வந்தது.

இப்போது இங்கும் நேரடி பங்களிப்பு. கிட்டத்தட்ட அவர்கள் நிறுவன மேலாளர் போல ஆகி விடுகிறோம். அவர்களது நிறுவன உரிமையாளரிடம் பேசி அறிக்கைகளைக் கொடுப்பதால், எல்லோரும் கொஞ்சம் கவனமாகவே பழகுவார்கள். ஏதாவது நம்மைப்பற்றி தவறாகச் சொல்லி விடக்கூடாதே. வாடிக்கையாளர்கள் என்ற மரியாதை எனக்கும் இருக்கும். பயனர்கள்தான் நமது மென்பொருளைப் பயன்படுத்தப் போகிறார்கள், நிறுவன உரிமையாளரிடம் கருத்துச் சொல்லப் போகிறரவர்கள். இப்படிப்பட்ட நெருக்கமான, இருதரப்புக்கும் ஆக்கபூர்வமான உறவு அனுபவிக்க வேண்டிய ஒன்று.

இதில் சில இடங்களில் அதிகார பூர்வ பழக்கத்துக்கு வெளியே தனிப்பட்ட ஆதாயம் பற்றிக் கோடி காட்டியவர்களும் ஓன்றிரண்டு பேர் உண்டு. ஒருவர் கடன் என்று சொல்லி வாங்கித் திரும்பித் தருவதில்லை. முதல் முறை கேட்கவில்லை. இரண்டாவது முறை அவர் கேட்டதும் கொடுத்து விட்டேன். சில நாட்கள் கழித்து, பஞ்சப்பாட்டுப் பாடி, கொடுத்த பணத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டேன்.

இன்னொரு இடத்தில், 'இது மாதிரி ஒரு லேப்டாப் எனக்குக் கொடுத்து விடுங்களேன் சார்' என்று கேட்டவரிடம், 'உங்க கம்பெனியில இல்லாத லேப்டாப்பா' என்று புரியாதது போல மழுப்பி விட்டேன்.

'முந்தைய நிறுவனத்தில் இது போல மென்பொருள் செயல்படுத்திய பிறகு மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் எங்க வீட்டுக்கே வந்து ஒரு தங்க கைக்கடிகாரம் பரிசளித்தார்' என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவார் ஒருவர்.

'உங்களுடனான எனது உறவு, உங்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்த ஒப்பந்தம் இல்லை என்றால் உங்களை எனக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். அதனால் அந்த ஒப்பந்தத்துக்கு வெளியில் பணத் தொடர்புகள் எதுவும் வைத்துக் கொள்ள முடியாது. அப்படி இருந்தால், உங்கள் நிறுவனம் என்னை அடுத்த முறை உள்ளே விட மாட்டார்கள்'

அதே போல சேவை அளிக்கும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், வேறு வேலை வாய்ப்புகள் பற்றிக் கேட்டாலோ, வேலை வாய்ப்பு கேட்டாலோ, இதே பதில்தான். 'உங்களை நான் எடுத்துக் கொண்டு போய் விட்டால், அதன் பிறகு வேறு எந்த நிறுவனத்திலும் என்னை உள்ளே விட மாட்டார்கள்'

அப்படி வாடிக்கையாளர் நிறுவனங்களில் வேலை பார்த்த ஒருவரை வேலைக்கு எடுக்க வேண்டுமானால் அந்நிறுவன உரிமையாளரிடம் பேசி அவரது ஒப்புதலுக்குப் பிறகே செய்ய வேண்டும். செய்தோம்.

நான் பிஎல்சியில் சேர்ந்த போது, 'உன்னை எங்களுக்குத் தெரிய வந்தது, டாட்டாவுடனான எங்கள் பணியின் மூலம் இல்லை. நீயாகத்தான் எங்களைத் தொடர்பு கொண்டாய். அதனால் இதில் எந்த தர்மசங்கடமும் இல்லை' என்று மைக்பார்சன்ஸ் சொன்னார். 'நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்' என்றுதான் எல்லோருமே நினைக்கிறார்கள். அடுத்தவர் பொருளைத் திருடுபவர்களும், பெரும் பாதகங்களைச் செய்பவர்களும் கூட அவர்கள் அளவில் ஒரு நியாயத்தை வைத்திருப்பார்கள்.

நம்மளவில் நாம் வைத்திருக்கும் நியாயங்கள்தான் நம்மைத் தீர்மானிக்கின்றன. 'என்ன வந்தாலும் எனது அடிப்படை நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன்' என்பது எனது நியாயமாக இருக்கலாம்.  நட்புக்காக உறவுகளுக்காக சமரசம் செய்து கொள்வதில் தவறில்லை என்பது இன்னொருவரின் நியாயமாக இருக்கலாம்.

நிறுவனத்தில் வேலையே செய்யாத ஒருவருக்கு அனுபவ கடிதம் வேண்டும் என்று கேட்பவர் நெருங்கிய நண்பராக இருந்தால் சங்கடம்தான். 'அவரை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள், நான் பேசிப் பார்த்து எப்படிப்பட்ட கடிதம் கொடுக்க முடியும் என்று கொடுக்கிறேன்'

நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் விபரங்களைப் பேசிக் கொண்டிருந்த நண்பருக்கு அப்படி ஒரு கடிதம் தேவைப்பட்டது. அதற்குப் பிறகு சில ஆண்டுகள்  தொடர்பே இல்லை. அவர் நிறுவனத்துக்கு ஆலோசனைகள் வழங்கும் நிபுணராக செயல்பட்டார் என்று கடிதம் கொடுக்க முடிந்தது. இன்ன தேதியில் இருந்து இன்ன தேதி வரை இன்ன பொறுப்பில் இருந்தார் என்று முடியாது.

வேலையை விட்டுப் போனவர்கள், அடுத்த 1 ஆண்டையும் சேர்த்து அனுபவக் கடிதம் கேட்டிருக்கிறார்கள். 'கொடுப்பதால் உங்களுக்கு என்ன குறைந்து போகும், 2 ஆண்டுகள் வேலை பார்த்தவருக்கு இதைக்கூடச் செய்ய வேண்டாமா' என்று யாரும் இதுவரை கேட்கவில்லை. நான் இல்லை என்றால் வெளிப்படையாகத் திட்டாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். தாம் கேட்பது சரியில்லை என்று தெரிந்திருக்கலாம். ஒருவர் மட்டும் பெரிதாக முகத்தில் ஏமாற்றத்தைக் காட்டி விட்டுப் போனார்.

பொய்யான தகவல்களைச் சொல்வதில் நமக்கு நேரடி பாதிப்பு இல்லா விட்டாலும், ஒட்டு மொத்த சமூக அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு நம்மையும் வந்து சேர்வதற்கு நிறைய நாள் ஆகாது. அதனால் முடிந்த அளவு, தெரிந்த அளவுக்கு உண்மையாகவே இருப்பது நல்லது. அப்படி இருப்பதால் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

12 மணிக்குப் புறப்பட வேண்டும் என்று திட்டமிட்டு 12.30 ஆகி விட்டது. அவர்கள் உதவியாளர் ஒருவரை இரு சக்கர வண்டியில் பேருந்து நிலையத்தில் விடச் சொல்லி விட்டார். சேலம் பேருந்து ஒன்று கிடைத்தது. வேகமாக ஓடியது. 50 நிமிடங்களில் வேலூர்.

ஒன்றரை மணிக்கெல்லாம் வங்கிக்கு வந்து விட்டேன்.

'கணக்கு கிளை மாறியாச்சு' என்று உறுதி செய்து விண்ணப்பப்படிவம் ஒன்றைக் கொடுத்தார். விபரங்களை நிரப்பி, புகைப்படம் சான்று ஆவணங்களோடு கொடுத்து விட்டேன். 'நீங்க அடுத்த தடவை வரும் போது தந்தாலும் சரிதான்' என்று சொன்னாலும், நான் உடனேயே நிரப்பிக் கொடுத்ததும், 15 நிமிடம் வேலை பார்க்க வேண்டியிருந்தது அவருக்கு. முகவரி மாற்றி, கணக்கு அட்டையில் அச்செடுத்து, மேலாளரிடம் விண்ணப்பத்தைச் சரிபார்க்கச் சொல்லி, ஒரு வழியாக மாறி விட்டது. இனிமேல் ஏடிஎம் அட்டை, காசோலைகள், இணைய பயன்பாட்டு விபரங்கள் வர வேண்டும்.

வீட்டுக்கு வந்து, முந்தைய நாள் சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்த பழையது. மதிய வேளையில் இப்படி ஒரு வெயில் நாளில், உப்புப் போட்ட தண்ணீர் சோறும், எலுமிச்சை ஊறுகாயும் +தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப்பொடியும் அமிர்தம். தயிரும் சேர்ப்பதுண்டு, ஆனால் அது அளவுக்கதிகமான மந்த நிலைக்குக் கொண்டு போய் விடும்.

ஞாயிறு, ஜூலை 25, 2010

சிறு குறிப்புகள்

வாணியம்பாடி வெற்றி தங்கும் விடுதியில். வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்கு சிஎல்ஆர்ஐயில் ஆல்ஃபா செயற்குழு கூட்டமும் தொடர்ந்து ஆறரை மணிக்கு ஆண்டு பொதுக்குழுக் கூட்டமும் நடக்க இருந்தது. ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் போதும் என்று திட்டமிட்டிருந்தேன்.

மாலையில் வந்து கடிதங்களை வாங்கிக் கொள்ளட்டுமா என்று மின்னஞ்சல். விபரங்களைச் சொல்லி ஐந்தே கால் மணிக்கு ராமாபுரம் மியாட் மருத்துவமனை அருகில் வந்து விட்டால் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தேன். அவரிடமிருந்து மறுமொழி எதுவும் இல்லை. கையில் அவரது கடித உறையை எடுத்துக் கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று ஒரு கேள்வி!

மூன்றரை மணி வாக்கில் நண்பன் தொலைபேசி வீட்டில் இருந்தால் வருவதாகச் சொன்னான். அன்றைக்கு லீவு எடுத்திருக்கிறானாம். போன தடவை காரில் வந்திருந்தான். இப்போது இரு சக்கர வண்டியில். நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை அலசி விட்டு, அவனது செல்லத் திட்டமான மருத்துவ சேவைகளை ஒருங்கிணைக்கும் மென்பொருள் குறித்து பேச ஆரம்பித்தோம்.  உலகத் தரமான மென்பொருள் பயன்பாடு பல வசதிகளுடன் செய்து முடிக்க வேண்டும்.

மதியம் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவியிருக்கவில்லை. சாப்பிட்ட உடன், டம்ளரிலில் இருந்த பாலையும் குடித்து விட்டிருந்தேன். தயிர் கடையில் கிடைக்கவில்லை. காலையில் பால் வாங்கும் போது பசுமை மளிகைக் கடையில் தயிர் இல்லை என்றார்கள். சாப்பிடுவதற்கு முன்பு இன்னொரு கடையில் கேட்டால், அங்கும் தயிர் இல்லை. இரவு கூட்டம் முடித்து விட்டுத் திரும்பும் வழியில் ஆரோக்யா நிலையத்தில் கேட்டால் அங்கும் தயிர் இல்லை.

அதனால் வீட்டில்  தேநீர் எதுவும் தயாரித்துக் கொடுக்க முடியாது. அவனிடம் 6 மணி கூட்ட விபரத்தைச் சொல்லி விட்டு அப்படியே புறப்பட்டு வழியில் ஒரு தேநீர் குடித்து விட்டுப் போகலாம் என்று சொல்லிக் கிளம்பினோம். புறப்படுவதற்கு முன்பு  தொலைபேச முயற்சித்தால் எடுக்கவேவில்லை. கொஞ்ச தூரம் வெளியில் வந்த பிறகு தொலைபேசினார். 'ஐந்தேகாலுக்கு வந்து சேர முடியாது, திங்கள் கிழமை வாங்கிக் கொள்கிறேன்.'

வெள்ளிக் கிழமை காலையிலிருந்தே நிறைய முடிக்க வேண்டிய வேலைகளை முடித்திருந்தேன்.

வியாழன், ஜூலை 01, 2010

கடன்பட்டார் நெஞ்சம்....

நேரம் நான்கு மணி முப்பத்தி இரண்டு நிமிடங்கள். ஜூலை மாதம் 1ம் தேதி, 2010ம் ஆண்டு. சரியாக 4 மணிக்கு எழுந்து நின்று விட்டேன். 3.40க்கு எழுந்து மணி பார்த்து விட்டு திரும்பப் படுத்து விட்டு அடுத்தது எழுந்து பார்க்கும் போது மணி 4.

நேற்றைக்குக் காலையில் எழுந்திருக்கத் தாமதமாகி விட்டிருந்தாலும் மற்ற வேலைகளை பழுதில்லாமல் செய்ய முடிந்தது. ஒரு மணி நேரம் எழுதி முடித்த பிறகு வீட்டை தூய்மைப் படுத்தும் வேலை. துணிகள், பாத்திரங்கள், புத்தகங்கள் ஒழுங்கு படுத்திய பிறகு, துணியை எடுத்து மேசைகள், நாற்காலிகளை எல்லாம் தூசி தட்டினேன். அதன் பிறகு அதே துணியை தண்ணீரில் அலசி, ஈரத் துணியால் எல்லாவற்றையும் துடைத்து தூய்மைப் படுத்தினேன்.

துணி துவைக்க வேண்டியதோ, பாத்திரம் கழுவ வேண்டியதோ பெரிதாக இருக்கவில்லை. தரை தூத்து வாரி, அதன் பிறகு துடைத்து விட்டுக் குளிக்கப் போக வேண்டியதுதான். இவ்வளவுக்கும் ஒன்றரை மணி நேரம் ஓடி குளித்து முடித்து பார்க்கும் போது நேரம் ஏழரை தாண்டி விட்டிருந்தது. கடைக்குப் போய் பால் வாங்கும் போது டெக்கான் குரோனிக்கிளும் வாங்கிக் கொண்டேன். ஓமர் அப்துல்லாவின் பேட்டியின் இரண்டாவது பகுதியைப் படிக்க வேண்டும். நடுப்பக்கத்தில் அது இருக்கவும் செய்தது. முதல் பக்கத்தில் காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு, மேலும் உயிர்ப்பலிகள் என்று செய்தி.

தலையங்கத்தில் ஆந்திரா /கர்நாடகா எல்லையில் பெல்லாரியில் இரும்புத் தாது சுரங்கங்களை வைத்துக் கொண்டு அதிகாரம் செய்து கொண்டிருக்கும் ரெட்டி சகோதரர்களை கண்டித்து எழுதியிருந்தார்கள். அவர்களைத் தட்டிக் கேட்கும் நீதிபதிகள், அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டு விடுகிறார்கள். கிட்டத்தட்ட திரைப்படங்களில் வரும் வணிக/அரசியல் வாதிகள் போல செயல்படுகிறார்கள் என்று தோன்றியது. உலகச் சந்தையில் இரும்புத் தாதுவின் விலை வெகுவாக ஏறி விட்டிருக்கிறது. இவர்கள் அதைப் பயன்படுத்தி பணத்தைக் குவிக்கிறார்கள்.

குடிக்கத் தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு, இட்லிக்கு துவையல் அரைக்கும் வேலை. தேங்காய், இரண்டு பச்சை மிளகாய்கள், இரண்டு பல் வெள்ளைப் பூண்டு, சிறிதளவு புளி, உப்பு, கூடவே சிறிதளவு இஞ்சியும் சேர்த்துக் கொண்டேன். திங்கள் கிழமை காலையில் வாங்கிய மாவில் பாதி மீதியிருந்தது. இதை இட்லி ஊற்றிக் கொள்ள வேண்டும். செவ்வாய்க் கிழமை செய்த சோற்றில் பெரும்பகுதியில் தண்ணீர் ஊற்றி வைத்தது இருந்தது. அதை மதிய உணவுக்கும், செவ்வாய்க் கிழமை மாலையில் பிசைந்த சப்பாத்தி மாவில் மீதியிருந்ததை மாலை உணவுக்கும் வைத்துக் கொள்ளலாம். இவை மூன்றுக்கும் துணைப் பொருளாக துவையல்.

12 இட்லிகள் ஊற்றும் தட்டில் ஊற்றிய பிறகு மாவு இன்னும் மீதி இருந்தது. அதை வழித்து இன்னொரு சின்னக் கிண்ணத்தில் ஊற்றி குளிர் பெட்டியில் வைத்துக் கொண்டேன். சாப்பிட்டு விட்டு பணி மேசை. இன்றைக்கும் javascript, jquery தொடர வேண்டும். முதலில் நமது இணையத் தளத்தின் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். இணையத் தளத்தின் நோக்கம் என்ன, அது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டேன். தொடர்ந்து jquery புத்தகத்தின் அடுத்தடுத்த பகுதிகளைப் படித்துக் கொண்டிருந்தேன். இடையிடையே மின்சாரம் தடைப்பட்டு திரும்ப வந்தது. 12 மணிக்குப் போனது 12.30க்குத் திரும்பியது. 2 மணி வாக்கில் போய் மூன்றரைக்குத்தான் திரும்பி வந்தது.

இணையக் கணினியில் git சில கட்டளைகள் வேலை செய்யவில்லை. perl வடிவமைப்பில் ஏதோ மாறுதல்கள் காரணமாக பிழை காண்பித்தது. அதற்கான நுட்ப சேவை விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து மின்னஞ்சல் உரையாடலும் நடந்தது. அவர்கள் நேரம் முடிந்ததும் (அமெரிக்க நேரம் என்று நினைக்கிறேன்), பிரச்சனை சரியாகமலேயே மின்னஞ்சல் பரிமாற்றம் நின்றிருந்தது. இன்றைக்கு சரியாகியிருக்க வேண்டும்.

மூன்றரைக்கு தொலைபேசி விற்பனை சந்திப்பில் காண்பிப்பதற்கு இணையத்தில் வைத்திருக்கும் மாதிரியைத்தான் காட்ட வேண்டும், அதை ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுமாறு சொன்னார். EDIலிருந்து அழைத்து 16ம் தேதி சந்திப்பில் நாம் கலந்து கொள்வதை உறுதி செய்தார்கள். நிவதி குறித்து பேச வேண்டும்.

இடையிடையே வலைப்பதிவுகளில், கூகுள் பஸ்சில் வரும் கருத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எரிபொருள் விலை உயர்வு, கார்பொரேட் நிறுவனங்களின் செயல்பாடு என்று விவாதங்கள். தமிழ் பதிவர் பட்டறைக்கான மடற்குழுவிலும் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்க ஆரம்பித்திருந்தன. வலைப்பதிவர் பட்டறை என்று நடந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பேர் தமது காசை செலவழித்து பங்கேற்றுக் கொண்டதற்கும், வேறு ஏதோ வழியில் வந்த பணத்தைச் செலவழித்து ஆதாயம் தேடி வந்து போன நிகழ்வுகளுக்கு உள்ள வேறுபாட்டை சுட்டிக் காட்டி ஒரு மடலும் எழுதினேன்.

மாலைக்குள் jquery அஜாக்சு கையாளுதல் வரை வந்து விட்டது. கிட்டத்தட்ட எல்லாமே ஒரு சுற்று அடித்தாகி விட்டது.

5 மணிக்கு மேல் சப்பாத்தி போட்டு - நான்கு சப்பாத்திகளும் ஒரு குட்டி சப்பாத்தியும் வந்தன - மீதியிருந்த தோசை மாவையும் ஊற்றி சாப்பிட்டு முடித்தேன். தொட்டுக் கொள்ள துவையலும், நெல்லிக்காய் ஊறுகாயும்.

முரட்டுக் காளை என்ற 1980களின் ரஜினிகாந்த், ஏவிஎம், எஸ் பி முத்துராமன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் காட்சியில் ஜல்லிக் கட்டு, தொடர்ந்து ஒரு பாட்டு, பண்ணையாருடன் பகைமையை மூட்டி விடும் கணக்குப்பிள்ளை என்று கதை வளர ஆரம்பித்தது. பண்ணையாரின் தங்கை காளையனைக் காதலிக்கிறாள். இருவருக்கும் திருமணம் பேசும் போது, தனது தம்பிகளை உத்தேசித்து அந்த உறவை நிராகரித்து விடுகிறான் காளையன். அத்தோடு போதும் என்று நிறுத்திக் கொண்டேன்.

இன்னொரு படமாக மைக்கேல் மதன காமராஜன். பெயர்கள் போடும் போதே நான்கு குழந்தைகள் பிறந்து பிரிந்த கதையை இளையராஜா பாட்டில் சொல்லி பின்னணி காட்சிகளும் ஓடுகின்றன. 4 குழந்தைகளாகப் பெற்ற அம்மாவிடமிருந்து குழந்தைகள் கொல்ல எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒரு குழந்தை திருடனின் மனதை மாற்றி மைக்கேல் என்ற பெயரில் வளர்கிறது. ஒரு குழந்தை தனது தந்தியிடமே அனாதை என்ற முத்திரையோடு போய்ச் சேருகிறது - பெயர் மதன கோபால் என்ற மதன். ஒரு குழந்தை பாலக்காடு சமையல் காரரிடம் காமேசுவரன் என்ற பெயரில் வளர்கிறது. நான்காவது குழந்தை ராமகிருஷ்ண ராஜூ என்ற பெயரில் வளர்கிறது.

மதனின் தந்தையை சூழ்ச்சி செய்து கொல்கிறார்கள், சொத்தைக் கைப்பற்றத் துடிக்கும் தந்தையின் தம்பியும் அவரது மகன் நாசரும். கமல் சரியான நேரத்தில் லண்டனில் இருந்து வந்து தந்தை எழுதியிருந்த உயிலைக் காட்டி சொத்துக்களை ஆள ஆரம்பிக்கிறார். மைக்கேலின் தந்தை கள்ள நோட்டு அடித்து, மைக்கேல் காவல் துறைக்கு அல்வா கொடுத்து விட்டு, சென்னைக்கு எடுத்துச் செல்லும் போது காவல் துறை துரத்த தப்பி ஓடும் போது தீ விபத்தை உருவாக்குகிறார்கள்.

அந்தத் தீ விபத்தில் ஓவியரான குஷ்புவின் கண்காட்சி பாதிக்கப்பட தீயில் சிக்கிக் கொள்ளும் குஷ்புவை ராஜூ தீயணைப்புப் படைவீரராகக் காப்பாற்றி ஜொள்ளு விட ஆரம்பிக்கிறார். அவர் வீட்டுக்குத் திரும்பும் போது கடன் கொடுத்த பட்டாணி பணம் கேட்டு நெருக்க பொதியில் இருந்த கருவாட்டுத் துண்டுகள் தெருவில் வீசி எறியப்படுகின்றன.

காமேசுவரன் கல்யாணச் சமையலுக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு போகும் போது அவர் மேல் கருவாட்டுத் துண்டுகள் விழுகின்றன. டெல்லி கணேஷிடம் கணக்குக் கொடுக்கும் போது சட்டைப் பையிலிருந்து ஒரு கருவாட்டுத் துண்டு எடுக்கப்பட தவறி சாம்பாரில் விழுந்து, அதை பரிமாறவும் செய்கிறார்கள். அதனால் எதுவும் குழப்பம் வந்து விடக் கூடாது என்று ஓடும் போது கையில் கிடைத்ததை லவட்டிச் செல்லும் பாட்டி ஒருத்தி, அந்தப் பொருட்களை திரும்ப வைத்து விட முயலும் பேத்தியாக ஊர்வசி. ஊர்வசியிடம் கொஞ்சம் வழியும் காமேசுவரன், அவர்தான் திருடுவதாக கையைப் பிடிக்க, பாட்டி பேத்தியின் கையைப் பிடித்து விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்து காமேசுவரனுக்கு டெல்லிகணேஷிடமிருந்து அடி விழுகிறது.

சூழ்ச்சி ஆள் மாறாட்டம் முகக் குழப்பம் என்று படம் தொடர, அதற்கு மேல் சகிக்க முடியாமல் மூடி விட்டேன். சிங்கதம் சீனிவாசராவ் என்பவரின் இயக்கம். நகைச்சுவை, அடிதடி என்று கலவையாக போய்க் கொண்டிருந்தது.

தனி மின்னஞ்சலில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதா, கூகுள் பஸ்சில் ஏதாவது உண்டா, லினக்சு குழுமத்தில் என்ன சேதி, அலுவலக அஞ்சலில் என்ன மடல் என்று தாவித் தாவி பார்ப்பது ஒரு பக்கம். தமிழ்மணத்தில் என்ன பதிவுகள், slashdot.orgல் என்ன விவாதம் நடக்கிறது, statcounterல் நமது பதிவுகளை யார் பார்க்கிறார்கள் என்ற விபரம் இன்னொரு பக்கம். இவற்றுக்கு நடுவில் மற்ற வேலைகளும் நடந்து கொண்டிருந்தன.

எட்டு மணிக்கெல்லாம் கணினியை அணைத்து விட்டுத் தூங்கச் சென்று விட்டேன். கொஞ்ச நேரம் தியானமும் நடந்தது அதன் பிறகு படுத்துத் தூங்கி விட்டேன். இரவு பத்தே முக்காலுக்கு விழிப்பு வந்து எழுந்து நேரம் பார்த்திருந்தேன். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பகல் தூக்கத்திலும், இரவு சீக்கிரம் தூங்குவதிலும் சமனாகி விடுகிறது. ஆனால் அந்த அதிகாலை மணிகளில் செய்ய முடியும் வேலைகள் பகலிலும் முன்னிரவிலும் விழித்திருந்தாலும் செய்து முடிக்க சிரமமானவை. காலையில் ஆவதை விட இரண்டு மடங்கு நேரமாகி விடுகிறது. அல்லது வேலை நடக்காமலேயே இருந்து விடுகிறது.

எழுத்து முடிக்கும் போது 5.35 ஆகியிருக்கும். எழுந்து தூத்துத் துடைக்க வேண்டும். கழுவ வேண்டிய பாத்திரங்கள் சில கிடக்கின்றன. ஈரத் துணியால் கதவுகள், அலமாரிகள், துடைக்க வேண்டும். முன்னறையில் சாமான் வைக்கும் தட்டுகளில் நாளிதழ் விரிப்பை மாற்ற வேண்டும். அதன் பிறகு தூத்து, பாத்திரம் கழுவி, தரை துடைத்து முடிக்கும் போது 6.45 ஆகி விடும்.

காலை உணவாக மீதியிருக்கும் பழையது சாப்பிட்டுக் கொள்ளலாம். மதிய உணவுக்கு கோதுமை மாவும், ரவையும் சேர்த்துக் கலக்கி, வெங்காயம் வெட்டிப் போட்டு, சீரகம், மிளகு சேர்த்து தோசை சுட்டுக் கொள்ளலாம். அதற்கு தேங்காய் ஒன்றும் வாங்கிக் கொள்ள வேண்டும். மாலை உணவுக்கு ரவை கிண்டிக் கொள்ளலாம்.

மதிய உணவுக்கு என்ன என்று காலையிலேயே திட்டமிடாதவன் யோகி என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார். வேறு யாரிடமாவது பிச்சை எடுக்கும் வாழ்க்கை முறை இருந்தால் அந்தத் திட்டமிடல் தேவையில்லை. நாமே பொருள் வாங்கி, நாமே சமைத்து, நாமே சாப்பிடும் போது திட்டமிடல் இல்லாவிட்டால் பட்டினியில் சாகத்தான் வேண்டும்.

பணிக்கும் நுணுக்கமாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

9.00 - 11.00 jquery / javascript குறித்த கட்டுரை எழுதுதல்
11.00 - 1.00 leatherlink.net தளத்திற்கான மறுவடிவமைப்பை செய்தல்
1.00 - 2.00 மதிய உணவு
2.00 - 4.00 அனுப்ப வேண்டிய அறிக்கை
4.00 - 6.00 leatherlink.net தளத்திற்கான மறுவடிவமைப்பு

இவற்றைத் தவிர தொலைபேசி நேற்றைய விபரங்களைக் கேட்க வேண்டும். நாளைக்கு போவதற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்க வேண்டும், எண்ணை வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு பின்நோக்குப் பார்வை
  • டாடா நிறுவனத்தில் உற்பத்தித் தளத்தில், விற்பனைப் பிரிவில் பல மாற்றங்களை, மேம்பாடுகளைக் கொண்டு வந்தேன்.
  • டாடா சாங்காயில் போய் தோல் விற்பனையை கிழக்கு சீனாவில் தொடங்கி வைத்தேன்.
  • பிஎல்சியின் சீனா பணிகளை ஆரம்பித்து வைத்து தளம் ஏற்படுத்திக் கொடுத்தேன்.
  • எறும்புகள் குழுவின் மூலம் உலகளாவிய தமிழர் அணி ஒன்றை உருவாக்குவதில் பங்களித்தேன்.
  • தமிழ் கணினி என்று ழ திட்டத்தில் பணியாற்றி மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டேன்.
  • பிஎஸ்ஜி லெதர்லிங்கின் மூலம் இணைய வழி சேவையாக மென்பொருள் வசதிகளை தோல் துறையினருக்கு செய்து கொடுப்பதில் வெற்றி பெற்றேன்.
  • லெதர்லிங்க் விவாத மேடை முழுக்க முழுக்க நான் எழுதிய நிரலால் இயங்குவது.
  • அஜாக்ஸ் என்பது நான் செயல்படுத்தியது
  • stock source என்ற கோட்பாட்டின் படி ஒரு சரக்கு விபரத்தின் வரலாற்றை எளிதாக எடுத்துக் காட்டும் வடிவமைப்பைச் செய்து கொடுத்தேன்.
  • வலைப் பதிவுகள் மூலம் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது.
  • சென்னை வலைப்பதிவர் பட்டறை என்ற கூட்டுறவு சாதனையின் ஒரு பகுதியாக இருந்தேன்.
இப்படி சாதித்தவை பல இருக்க, வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஏதாவது உழைத்துக் கொண்டே இருக்க யாரையும் பற்றிக் கவலைப் படாமல் நமது மனதுக்குச் சரி என்று படும் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மற்றவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்றைக்கு இந்தச் சேவையை அளித்தால், அவர்களிடமிருந்து பிற்காலத்தில் இன்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் செயல்படுவோம். அந்த எதிர்பார்ப்பு, நம்பிக்கை, அந்த பலன்களின் தைரியத்தில் அடுத்தவர்களிடம் கடன் படாமல் இருக்க வேண்டும்.

கையில் இருக்கும் கருவிகளைப் பயன்படுத்தி நமது வெளிப்பாட்டைச் செய்து கொண்டே இருக்கலாம். என்ன வருகிறதோ வரட்டும். பட்டக் கடன்களை திருப்பி விட்டால், அதன் பிறகு கட்ட தளைகள் எதுவுமே இருக்காது. நான் இறகு போன்ற மனதுடன் என் கடமையை செய்து கொண்டு போக முடியும். அதற்கான வழிகள் பிறக்க வேண்டும்.

சனி, ஏப்ரல் 10, 2010

சில பதிவுகள்

இன்றைக்கு தேதி 10-04-10. நேரம் ஐந்து மணி நாற்பத்தி ஆறு நிமிடங்கள்.

நேற்றைய நாளின் சில பதிவுகள். நிறைய மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இதையும் நாம் கற்றுக் கொண்டு மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் பேசக் கூடாது, நன்கு யோசித்து பேச வேண்டும். வாடிக்கையாளர் பேசுவதை வெட்டக் கூடாது.

நேற்றைக்கு அவருக்கு மிகவும் நிறைவாக இருந்திருக்கும். நாம் தயாரித்துக் கொண்டு போயிருந்த வரைபடங்கள், அலசல்கள் அவருக்கு மிகவும் மதிப்புடையவனாவாக இருந்தன. அடுத்தக் கட்டத்துக்கு நகர உற்சாகமாக வரவேற்றார்.

இரண்டாவது காட்சி, பார்ப்பதற்கு அவர்கள் வீட்டிற்கு போனது. குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்தி விட்டு திரும்பும் போது ஒரு குட்டிப்ப எண் எதிர் முனையிலிருந்து நேராக என்னை நோக்கி வந்தது. நானும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதுவுமே பேசவில்லை. கையில் ஒரு தொப்பி. அவள் மனதில் என்ன என்ன நினைவுகளோ!.

'உனக்கு பேட்டிங் கிடைக்கவில்லையே' என்று கேட்டேன். 'இனிமேல்தான் பேட்டிங் செய்யப் போகிறாயா! உனக்கு பேட்டிங் பிடிக்குமா பவுலிங் பிடிக்குமா.' முதல் கேள்விகளுக்கு தலை அசைப்பும், முக பாவனைகளும் மட்டும்தான். கடைசியில் பேட்டிங் என்று சொன்னாள். கனத்த குரல்.

ஏதோ ஒன்றை என்னில் பார்த்திருக்கிறாள். அவளுக்குத் தெரிந்த யாரோ போல நான் தோற்றமளித்தேனோ என்னவோ!

மூன்றாவது நாள் முழுவதும் இருந்த சோர்வு. காலையில் எழுந்து தூத்து, துடைத்து, குளித்து தியானம் செய்வது வரை நன்றாகத்தான் இருந்தது. இடையில் வெளியில் உலாவி விட்டும் வந்தேன்.

முடிக்கும் போது 6.45. வெளியில் போய் கடையில் சோப்பு வாங்கிக் கொண்டு வர வேண்டும். ஊற வைத்த துணிகளை அலசிப் போட வேண்டும். அதற்குள் ஏழரை மணி ஆகி விடும். இடையில் துணிகளை தேய்க்க வேண்டும். அதன் பிறகு குளித்து தியானம் செய்து விட்டுப் புறப்பட வேண்டும்.

9 மணிக்கு அருகில்தான் அலுவலகம் போக முடியும்.

ஒரு நிறுவனத்தைக் கட்டிக் காப்பதில் இருக்கும் சிரமங்களை புரிந்து கொள்ளாமலேயே நாம் நிறுவன மேலாண்மையில் உதவப் போகிறோம். இப்போது அந்த சிரமங்கள் தெரிந்து விட்டிருக்கின்றன.

'நாளைக்கு பதிவர் சந்திப்பு இருக்கிறதே'.

பணம் வாங்குவதில் அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது. 'நம்ம பணத்தை நாமதான் வாங்க வேண்டும்'.

நேற்றைக் காலையில் எழுந்திருக்கும் போது நான்கு மணி அடித்திருக்கவில்லை. சரியாக தூங்கியிருக்கவில்லை என்று நினைக்கிறேன். செருப்பையும் நமது பொருட்களையும் தினமும் துடைத்துப் பயன்படுத்த வேண்டும். அதில்

பல் தேய்த்து விட்டு படுக்கையை சுருட்டி வைத்து விட்டு எழுத்து. எழுதி முடித்து விட்டு உலவாப் போனேன். உலாவல் நீண்டு கொண்டே போவதாக ஒரு உணர்வு. நடக்க நடக்க வந்து கொண்டே இருந்தது. எதிரில் நடக்கப் போவதாக யாரையும் பார்த்து விடவில்லை.

வீட்டுக்கு வந்து தரை தூத்து தொடர்ந்து துடைக்க ஆரம்பித்தேன். மடிக்கணினியில் வாணி ஜெயராம் பாடிய பாடல் தொகுப்பை ஒலிக்க விட்டிருந்தேன். மல்லிகை முல்லை பூப்பந்தல் என்ற பாடல், நான் பாடிக் கொண்டே இருப்பேன் என்ற பாடல், ஏழு சுவரங்களுக்குள் என்ற பாடல், எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது என்ற பாடல்.

தரை துடைத்து நிமிரும் போது உடல் களைத்துப் போயிருந்தது, குளித்து விட்டு தியானம். தியானத்தில் உட்கார்ந்ததும் வேர்வைக் குளியலாக கொட்டியது. ஊற்றிக் கொண்டே இருந்தது 15 நிமிடங்களுக்குப் பிறகும் ஓயவில்லை.

என்னென்ன பொறுப்புகள். வரி கட்டுவது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். கொஞ்சம் முறுக்கிக் கொண்டு இருந்து விட்டு அதன் பிறகு அவராக பேச்சை ஆரம்பித்தார்.

நமக்கு வரும் பணத்தில் 10% வரிக்காக ஒதுக்கி விட்டுத்தான் மற்ற கணக்குகளை போட வேண்டும். சேவை வரி கட்டி விட்டோம்.

எல்லா வேலைகளையும் முடித்து நிமிர்ந்த பிறகு ஒரு ஓய்வு விடுமுறை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 'வேலை செய்வதுதான் ஓய்வு. விடுமுறை என்று எடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தால் சோர்வு அதிகமாகத்தான் செய்கிறது' பார்க்கலாம்.

செவ்வாய், மார்ச் 09, 2010

ஊதியம்

'வேலைக்கு சேர்ந்து கொள்பவர்கள் நிறுவனத்தின் மேலாளர்கள் போல உரிமையாளர்கள் போல செயல்படுவார்கள். எல்லோரும் வேலை செய்து வரும் பணத்தில் ஊதியம் எடுத்துக் கொள்ள வேண்டும். பணம் வரவில்லை என்றால் ஊதியமும் இல்லை' என்பது என்னுடைய கோட்பாடு, எண்ணமாக இருந்திருக்கிறது.

அதை யாருமே ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்று தெரிந்தது. 'வேலை செய்தோம், சம்பளம் வேண்டும்' அந்த வேலை எப்படி இருந்திருந்தாலும் மாத இறுதியில் சம்பளம் ஒருவரது உரிமை.

'நானும் அப்படித்தான் இருந்தேனோ' என்று நேற்றைக்கு நினைத்துக் கொண்டிருந்தேன். டாட்டாவிலும், பிஎல்சியிலும் வேலை பார்க்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் சம்பளம் தராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?

டாட்டாவில் சம்பளம் வாங்கும் போது, தேவாசில் வேலை பார்க்கும் போது, 'நாம் செய்யும் வேலை இந்த சம்பளத்துக்கு நியாயமானதுதானா' என்ற கேள்வி உறுத்திக் கொண்டே இருக்கும். ஆகக் கூடுதல் எவ்வளவு உழைக்க முடியும் எப்படி எல்லாம் நிறுவனத்தில் நமது மதிப்பை காட்ட முடியும் என்று முயன்று கொண்டே இருப்பேன். கடைசி வரை தேவாசிலும், சென்னையிலும் சம்பளம் என்பது ஒரு சுமையாக, கடனாகவே தெரிந்தது.

சென்னையில் 5 மாதம் தங்கியிருக்க வேண்டியிருந்த நேரத்தில் தேவாசிலிருந்து என்னை இட மாற்றம் செய்திருக்கவில்லை. சென்னை அலுவலகத்தின் கணக்காளர், மாதச் சம்பளம் போக இங்கு தங்கும் ஒவ்வொரு நாளைக்கும் தினப்படி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கருத்து சொன்னார். கிட்டத்தட்ட சம்பளத்தை விட ஒன்றரை மடங்கு படி வாங்கியிருக்கலாம்.

'இங்கு அக்கா வீட்டில் தங்கியிருக்கிறேன். சொந்த ஊரில் சாப்பிட்டு சுகமாகிருக்கிறேன். இதுக்குப் போய் ஒரு நாளைக்கு 300 ரூபாய் என்று எப்படி கோரி பெறுவது' என்று அந்த வெளியூர் பயணப்படியை தொடவே இல்லை. மாதா மாதம் வழக்கமான சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டிருந்தேன். அவ்வளவு பெரிய நிறுவனத்தில் விதி முறைகளின் படி கூடுதல் பணம் வாங்கிக் கொண்டிருந்தால், மேலாளர்களுக்குத் தெரிந்து என் பணி மாற்ற உத்தரவு கொடுப்பதற்கே இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். அதற்குள் பல ஆயிரம் ரூபாய்கள் சேர்த்திருக்கலாம். செய்ததில்லை.

சாங்காய்க்குப் போனால், திடீரென்று மாதா மாதம் 1500 டாலர்கள் சம்பளம்.இந்தியாவில் வாங்கிய சம்பளத்தை விட 5 மடங்கு. அப்போதும் தவிப்புதான். 'வெளிநாட்டிற்கு அனுப்புவது, இரண்டு ஆண்டுகள் நல்ல ஓய்வெடுத்து பணம் சேர்த்து விட்டு வருவதற்குத்தான்' என்று பலர் அறிவுரை சொல்லி அனுப்பியிருந்தார்கள். அலுவலகமும் அப்படித்தான் இருந்தது. சின்ன அலுவலகம், எனக்கு முன்பு செஸ்டர் என்பவர் இருந்தார். இரண்டு பேர்தான் உட்கார வேண்டும்.

நினைத்திருந்தால், அந்த இரண்டு ஆண்டுகளை கற்பதற்கும், பணம் சேர்ப்பதற்கும் பயன்படுத்தியிருந்திருக்கலாம். செஸ்டரும் பெரிய முனைப்புடையவர் இல்லை. நாள் முழுவதும் அலுவலகத்தில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். மதியம் சாப்பாடு வரும், சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்ச நேரம் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். அலுவலகத்தில் இரண்டு பணி மேசைகள், ஒரு சோஃபா, ஒரு வட்ட மேசை இருந்தன.

செஸ்டர் சாங்காயின் மிகப்பெரிய மிதிவண்டி நிறுவனத்திலிருந்து மிதிவண்டிகளை தான்சானியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒருங்கிணைப்பை செய்து கொண்டிருந்தார். அந்த அளவுக்கு அவரது சம்பளம் நியாயப்படுத்தப்படுகிறது. நான் என்ன செய்வேன்?

'சும்மா உட்கார்ந்திரு, தோல் விற்கப் பார்க்கலாம்' என்றுதான் எல்லா திசைகளிலிருந்தும் அறிவுரை. என்னால் பொறுக்க முடியவில்லை.

யாருக்காவது நிறுவனத்தை அறிமுகப்படுத்தி தொலைநகல் அனுப்பலாம் என்றால் கையால் எழுதித்தான் அனுப்ப வேண்டும். அலுவலகத்தில் கணினி கிடையாது. இரண்டாவது மாதச் சம்பளம் முழுவதையும் கொடுத்து கணினி ஒன்றை வாங்கி விட்டேன். அதற்கு செஸ்டர்தான் பேரம் பேசினார். கொடுத்த விலைக்கு லாயக்கில்லாத கணினிதான். ஆனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

அந்த சமயத்தில் சாங்காய் வந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் என்னைப் பார்த்து கடும் சொற்களைச் சொன்னார். 'செஸ்டருடன் போய் தொழில் செய்வதற்கு எதற்கு இவ்வளவு சம்பளத்தில் ஏன் இங்கு உட்கார்ந்திருக்க வேண்டும். இரண்டு பேரும் தனித்தனியாக வேலை பார்க்க வேண்டும்' என்றார். சியாமல் குப்தா என்ற அந்த பெரியவர் என்னுடைய மகிழ்ச்சியின்மையையும், செஸ்டரின் வரையறைகளையும் உணர்ந்திருக்க வேண்டும். என்னுடைய உடனடி மேலாளருக்கு ஈயாடவில்லை. அவர்தான் 'செஸ்டருடன் போய் தொழில் கற்றுக் கொள்கிறேன். சீன மொழி தெரியாததால் தனியாகப் போக முடியாது' என்று சொல்லச் சொல்லியிருந்தார்.

சீன மொழி கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு கல்லூரியில் போய் சேருவதற்கான ஏற்பாடுகளைக் கூட செய்து கொண்டு வந்தேன். அதற்கான பணமும் சரி, கணினிக்கான பணமும் சரி நிறுவனம் தர வேண்டும் என்று ஒரு நிமிடம் கூட யோசித்திருக்கவில்லை. கையில் காசு இருக்கிறது, செலவு செய்வோம் என்றுதான் செயல்பட்டேன்.

எம்டி சொன்னது நியாயம்தானே, மொழி தெரியாமல் என்ன சாதிக்க முடியும். உள்ளூரில் ஒருவரை நமது மொழிபெயர்ப்பாளராக வைத்துக் கொள்ளலாம். எனக்கே தண்ட சம்பளம் இதற்கு மேல் இன்னொருத்தரை சேர்க்கிறோம் என்றால் என்ன ஆகும். அந்த மாதிரி கேள்விகள் எழாமலேயே, அப்படி மொழிபெயர்ப்பாளருக்கான சம்பளத்தை நான் கொடுப்பேன் என்று நானாகவே முடிவு செய்து கொண்டேன்.

நமக்கு ஒன்று தேவை என்றால் அதற்கான கதவு திறந்துதான் விடும். தரையடி ரயிலில் வரும் போது என்னை அணுகி ஆங்கிலத்தில் பேசிய ஒரு சீன இளைஞரின் பெயரட்டை கையில் இருந்தது. அவரது தொலைபேசி எண்ணில் அழைத்து, எனது தேவையைச் சொன்னேன். 'ஆங்கிலம் தெரிந்த யாராவது எனக்கு மொழிபெயர்ப்பாளராக பணி புரிய கிடைப்பார்களா?'

அவர் ஒரு தில்லாலங்கடி பேர்வழி. அடுத்த ஒரு வாரத்துக்குள் சாங்காய் ஜியாவ்தோங் பல்கலைக்கழகத்து மேலாண்மை படிக்கும் மாணவ கூட்டத்துக்குள் கொண்டு சென்று விட்டார். ஒரு ஞாயிறு பிற்பகலில் ஒரு மணி நேர சந்திப்பில் இறுதி ஆண்டு மாணவி ஒருவரை பகுதி நேர வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டேன். ராயும் மற்றவர்களும் சொன்ன கணக்கை ஏற்றுக் கொண்டு, வாரம் 400 RMB என்று ஊதியம் நிர்ணயம் செய்து கொண்டேன். மாதத்துக்கு கிட்டத்தட்ட 200$. எனது சம்பளத்தில் 15% அதில் செலவானது.

அதைப்பற்றி எதுவும் சிறப்பாக நினைக்கவில்லை. அந்தப் பெண் வந்து புதிதாக நான் வாங்கியிருந்த கணினிக்கு இணைய இணைப்பு பெற்று தந்தாள். தோல் விற்க வேண்டும் என்று தனக்குத் தெரிந்த தொடர்புகளுக்கெல்லாம் தொலைபேசி எந்த ஊரில் தொழில் நடக்கிறது என்று துப்பு பிடித்தாள். டாட்டா நிறுவனத்தை சாங்காயில் அறிமுகப்படுத்துவதற்கு ஆங்கிலத்தில் நான் எழுதிக்கொடுத்த கடிதங்களை சீன மொழியில் மொழிபெயர்த்துக் கொடுத்தாள்.

அவள் வேலையில் சேர்ந்து ஓரிரண்டு மாதங்களுக்குள் சாங்காய்க்கு அருகிலேயே இருந்த ஊருக்குப் போய் தோல் ஆர்டர் கொண்டு வந்து விட்டோம். ஆர்டர் கிடைப்பது வரை திரும்பி வரப் போவதில்லை என்று உறுதியுடன் போயிருந்தேன். முதல் நாள் எல்லா நிறுவனங்களையும் சுற்றிச் சுற்றி வந்தேன். இரண்டாவது நாளும் அப்படியே நகர்ந்தது. மாலை நெருங்கும் போது மெங்னு என்ற நிறுவனத்துக்குப் போனால் அதன் இயக்குனர் தோல் தேவை, வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டார்.

எப்படியோ பிஎஸ்ஜி லெதர்லிங்கில் சேரும் ஒவ்வொருவரும் என்னைப் போலத்தான் நினைப்பார்கள் என்று கருதியிருந்தேன். யாரையும் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் என்று நினைக்கவே இல்லை. நம்மைப் போலவே அவர்களும் சிந்தித்து வளம் உருவாக்கப் போகிறவர்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது எனது பொறுப்பு என்று உறைத்ததே இல்லை.

வேலை செய்ய இடம் கொடுத்திருக்கிறோம். எல்லா வாய்ப்புகளையும் தடையின்றி தந்திருக்கிறோம். மாதா மாதம் இவ்வளவு சம்பளம் என்று நிர்ணயித்திருக்கிறோம். ஒவ்வொருவரும் தனது சம்பளத்தை சம்பாதிக்க முனைந்து நிறுவனத்தை வெற்றிப் பாதையில் செலுத்துவார்கள் என்பது எனது எளிமையான கணக்காக இருந்தது. ஏதாவது சறுக்கல்கள் வரும் போது ஒருவராக இல்லாமல் 20 பேர் சேர்ந்து அதை சிடுக்கு விடுவித்து பணம் வரும் வழி கண்டு விடுவோம் என்று நம்பிக்கை இருந்தது.

சம்பளம் கொடுக்கத் தாமதமானால், செலவுக்குத் தவித்து விடக் கூடாதே என்ற பதட்டம் எப்போதுமே இருந்தது. சம்பளம் வேலை செய்பவர்களின் பிறப்புரிமை என்று எனக்கு என்றுமே தோன்றியதில்லை. எப்போதும் தோன்றி விடப் போவதுமில்லை என்றுதான் படுகிறது. வேலை செய்து தனது சம்பளத்துக்கான மதிப்பை நிறுவனத்துக்கு ஈட்டித் தந்தால் சம்பளத்துக்கு தகுதியுடையவராகிறார்.

உலகின் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் அப்படியிருக்கவில்லை. அந்தப் பாடத்தை தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்கள், யாருமே என்னைப் போல நினைத்திருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது.

நான் அவர்கள் நிறுவனத்துக்குக் கடன் பட்டிருக்கிறார்கள் என்று நினைத்திருக்க, என்னை கடனாளி என்று ஒவ்வொருவரும் நினைத்திருக்கிறார்கள். ஏதோ பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து நமக்கு உதவி செய்திருக்கும் உணர்வில்தான் இருக்கிறார்கள்.

தூங்கி அதிகாலை 2 மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். பல் தேய்த்து விட்டு முந்தைய நாளே ஊற வைத்திருந்த துணிகளை துவைத்துப் போட்டு முகம் மழித்து குளித்து அலுவலகத்துக்குக் கிளம்பி விட்டேன். போகும் வழியில் முடிவு தெரிந்தது.

வியாழன், டிசம்பர் 17, 2009

மணிமாலை

1.
பணம். ஒருவருக்கு 10 ரூபாய் கொடுக்கிறோம் என்றால் 10 ரூபாய் மதிப்பிலான நமது உழைப்பை அவருக்குத் தருகிறோம். இதுதான் பணத்தின் உண்மையான பயன்பாடு. நமது உழைப்பை சேமித்து வைத்து பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தும் ஊடகம் பணம்.

நடைமுறையில் உழைப்புக்குத் தொடர்பில்லாமல், பணம் பாய்வது நடந்தாலும், பெருவாரியிலான பரிமாற்றங்கள் உழைப்பு = பணம் என்ற வாய்ப்பாட்டின் அடிப்படையில் நடப்பதால்தான் சமூகம் முன்னேறி செல்ல முடிகிறது.

இதன் மறுபக்கத்தைப் பார்க்கலாம். ஒருவரிடமிருந்து 10 ரூபாய் வாங்கினால், அல்லது 10 ரூபாயை எதிர்பார்த்தால் அவருக்கு 10 ரூபாய் மதிப்பிலான உழைப்பை கொடுத்திருக்க வேண்டும்.

1993ல் டாடா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த போதே உள்ளுணர்வு ஒன்று நாம் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வேலை செய்து விட வேண்டும் என்று செலுத்திக் கொண்டே இருந்தது. பல நேரங்களில் அலுவலக வேலைக்காக செலவழித்த பணத்தை, அலுவலகத்திலிருந்து கேட்பதைத் தவிர்த்திருக்கிறேன். ஆரம்ப நாட்களில் பயிற்சியும் அளித்து பணமும் கொடுத்த நிறுவனத்தின் மீது எப்போதுமே நன்றியுணர்ச்சி இருந்தது.

நிறுவனத்தில் வேலை செய்யும் போது இன்னின்ன வசதிகள் எனது உரிமை என்று மற்றவர்கள் போட்டி போடும் போது அதில் சேர்ந்து கொள்ள மனம் வந்ததே இல்லை. நிறுவனத்தின் எந்த ஒரு கூடுதல் வசதியையும், நன்றிக் கடன் படுகிறோம் என்று உணர்வுடனேயே அணுகியிருக்கிறேன்.

டாடா நிறுவனத்தின் சார்பாக சாங்காயில் வேலை பார்க்கப் போன போதும், கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வரை, வாங்கிய சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு வரை எனது அலுவலகப் பணிகளை சரிவர செய்வதற்கு செலவழித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பல காரணங்களால் அந்த ஒழுக்கத்தில் தவற நேர்ந்தது. (வேலை செய்ததை விட அதிக சம்பளம் கிடைக்க, அது முழுவதையும் சொந்த பயன்பாட்டுக்குத் திருப்பிக் கொண்டிருந்தேன்).

பிஎஸ்ஜி லெதர்லிங்க் ஆரம்பித்த போது அதே மாதிரியான அணுகுமுறைதான் எனக்கு இருந்தது. ஒருவருக்கு இத்தனை ஆயிரம் ரூபாய்கள் ஊதியம் என்று வரையறுத்தால் அதற்கு ஈடான உழைப்பை, பங்களிப்பைக் கொடுத்தே தீருவது என்ற பொறுப்பு அவருக்கு இருக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது.

2.

டாடா நிறுவனத்தில் சேர்ந்த போது ஆரம்ப நிலை தொழில்நுட்ப பயிற்சி அலுவலராக சேர்ந்தேன். அந்த நாளிலிருந்தே அந்த நிறுவனத்தில் வாழ்நாள் முழுவதும் வேலை செய்யப் போவதாகவும், நிறுவனத்தின் தலைவராக உயரப் போவதாகவும் உருவகித்துக் கொண்டுதான் ஒவ்வொரு நாளும் பணி புரிந்து கொண்டிருந்தேன். மத்திய பிரதேசத்தில் 4 ஆண்டுகள், சீனாவில் 1 ஆண்டு வரை அதே அடிப்படையில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த ஒழுக்கத்துக்கும் பங்கம் வந்து அடுத்த நிறுவனத்துக்குப் போனேன். எனது அடிப்படை இயல்புக்கு அது பொருந்தாத ஒன்றுதான். அதனால்தானோ என்னவோ, தனியாக பிஎஸ்ஜி லெதர்லிங்க் தொடங்கி விட்டேன்.

எந்த உறவுகளிலும் - நட்புகள், கூட வேலை பார்ப்பவர்கள், நிறுவனத்தில் சேருபவர்கள், முக்கியமாக திருமண உறவு - பிணைப்பு என்பது வாழ்நாள் முழுமைக்குமானது என்றுதான் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. எல்லாமே தற்காலிகம்தான், ரயில் பயண நட்புகள் போல இறங்கும் இடம் வந்தால் பிரிந்து போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்ற வேதாந்தம் படித்தாலும், என் இயல்பில் அது சேரவே இல்லை.

நிறுவனத்திலும் சேருபவர்கள் ஒவ்வொருவரையும் நீண்ட கால பணிக்குத் தயாரிப்பதுதான் நோக்கமாக இருந்தது. ஒரு சின்ன நிறுவனத்தில், வேலைக்கு வருபவர்களை ஆகச் சீக்கிரம் எவ்வளவு வேலை வாங்கி மதிப்பை சம்பாதிப்பது என்ற போக்கில் இல்லாமல், பயிற்சி கொடுப்பது, கற்றுக் கொள்ளுதல் என்ற நோக்கில்தான் முடிவுகளும் அமைப்புகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

3.
குழந்தையை படிக்க அனுப்பலாம் . குழந்தை சின்ன வயதில் உடம்புக்கும், மனதுக்கு நல்ல ஊட்டம் அளித்து பல ஆண்டுகள் பேணிப் பாதுகாத்தால் வளர்ந்த பிறகு குழந்தையின் பணிகள் உயர் மதிப்பில் அமையும். இது ஒரு முறை.

இரண்டாவது முறையில் குழந்தையை வேலை செய்ய அனுப்பலாம். அடிப்படைத் தேவையான உணவு அளித்து நான்கைந்து வயது ஆனதும் வேலைக்கு அனுப்பி, குழந்தை சம்பாதிக்கும் காசில் சாப்பிட்டுக் கொள்ளட்டும். அந்த சம்பாத்தியத்தில் பெற்றோரும் தமக்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். திறமை உள்ள குழந்தை அப்படிப்பட்ட வேலையிலேயே புதிது புதிதாக கற்றுக் கொண்டு 20 வயதுக்கு மேல் திறமையாக பணி புரியலாம். ஆனால், பெரும்பாலான குழந்தை தொழிலாளர்களின் எதிர்காலம் போராட்டமாகவே போய் விடுகிறது.

குழந்தை பருவத்தில் வேலைக்கு அனுப்பக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாக இருக்கிறது.

குழந்தை வேலைக்குப் போகவில்லை என்றால் சாப்பாடு, படிப்புச் செலவுகளை யார் பார்த்துக் கொள்ள வேண்டும்? குழந்தையை பெற்றெடுத்தவர்கள், தமது தற்போதைய உழைப்பின் மூலம் சம்பாதிப்பதை அல்லது முந்தைய உழைப்பில் சேமித்ததைக் குழந்தையின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும். பொதுவாக இளமையில் கல்வி பெற்ற பெற்றோர்கள் உயர் வருமானம் ஈட்டி, குழந்தைகளை படிக்க அனுப்ப முடியும். கல்வித் தேர்ச்சி இல்லாத பெற்றோர்களின் வருமானம் குறைவாக இருந்தால், அவர்கள் குழந்தைகளும் கல்வி பெறாமல் போய் விடுவது நடக்கிறது.

'அப்படித் திறன் இல்லாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். வசதி இல்லை என்றால் சாகட்டும், அறியா மனிதர்களாக வாழட்டும்' என்று முதலாளித்துவ பொருளாதார முறையில் ஒரு வாதம் உண்டு. நடைமுறை சமூகங்களில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று சமூகத்தின் வாய்ப்புகள் குறைந்த பிரிவினருக்கு வசதி செய்து கொடுப்பது நடக்கிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு இலவச உணவு கொடுப்பது கூட வறுமையின் தளைகளிலிருந்து அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு வழி.

4.
வணிக நிறுவனங்களுக்கு இதைப் பொருத்திப் பார்க்கலாம். நிறுவனம் வளர்ச்சி பெறும் வரையிலான பயிற்சிகள், கற்றல்கள், நடைமுறை செலவுகளுக்கு பணம் எப்படிக் கிடைக்கும். நிறுவனத்தின் வருமானத்திலிருந்து அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும் (குழந்தையின் ஊதியத்தில் படித்துக் கொள்ள வேண்டும்). அல்லது முதலீடு திரட்டி வளர்ந்து வர வேண்டும். உறுதியான ஒரு நிறுவனம் உருவாக பல ஆண்டுகள் பிடிக்கலாம்.

வளர்ந்த, முதிர்ச்சி பெற்ற பொருளாதார சமூகங்களில் புதிய நிறுவனங்களைப் பேணி காக்க அமைப்புகள் இருக்கின்றன.

சனி, மே 30, 2009

அடிப்படை பாடங்கள்

மே மாதம் 30ம் தேதி, காலை மணி 8. அலுவலக வேலை நாளாக இருந்தால் சனிக்கிழமை காலை கூட்டம் கூடும் நேரம். இன்றைக்கு வீட்டில். நேற்றைக்குக் காலையில் எழுதிக் கொண்டிருக்கும் போது எது எதற்கு எவ்வளவு தேவைப்படும் என்று கணக்குப் போடும் நேரத்தில் உதயம் வந்தது.

'தன் வீட்டில் வரவு செலவுக் கணக்கே போடுவதில்லை. யாருக்கு என்ன தேவையோ அதை செய்து கொள்கிறோம்' என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் சொன்னதைக் குறிப்பிட்டு, தனது வீட்டில் வரவு செலவுக் கணக்குப் போடத் தேவை இல்லாதவருக்கு நாட்டின் தேவைகளை எப்படி தரம் பிரித்து நிறைவேற்ற முடியும் என்று எழுதியிருந்தேன். என்னுடைய கதையும் கிட்டத்தட்ட அதுவேதான்.

சின்ன வயதில் பணம் என்பது அப்பா அம்மா கை வழியாகத்தான் வருவது. என்னென்ன தேவையோ அதை எல்லாம் அம்மா திட்டம் போட்டு வாங்கி விடுவார்கள். பணம் இல்லை என்று எதையும் வாங்கவில்லை என்று சொன்னதில்லை. 'உனக்கு இது தேவையில்லை அதனால் வாங்கவில்லை. நீ பொறுப்பாக இதைப் பார்த்துக் கொள்ளவில்லை, அதனால் புதுசு கிடையாது.' தேவைப்பட்டால் கிடைத்து விடும் என்ற வாழ்க்கை. தேவைப்படுவதை மட்டும் மட்டுப் படுத்திக் கொண்ட வாழ்க்கை.

சுஜாதா மிதிவண்டி வாங்குவதற்கு அப்பாவிடம் அனுமதி கேட்டு அவர் கொடுக்காமலே போய், கடைசி காலத்தில் காரணம் கேட்டதற்கு கையில் காசு இல்லைடா அப்போ என்று சொன்னதை ஒரு சிறுகதையாக எழுதியிருந்தார். அண்ணன் மேற்படிப்பு படிக்கலாமா என்று பார்த்து இல்லை வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்த போதுதான் முதல் முதலில் காசு இல்லாததால் ஒன்றைச் செய்ய முடியவில்லை என்று உறைத்தது. அது கூட எனக்கு நடக்கவில்லை. நான் பட்டப்படிப்பு முடித்ததும், 'வேணும்னா மேற்படிப்புக்குப் போ, அவங்களை படிக்க வைக்க முடியவில்லை, நீயாவது படி' என்று வசதி கிடைத்த போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை.

நுழைவுத் தேர்வு எழுத திருநெல்வேலிக்குப் போன போது கடைக்குப் போய் மாலையில் தேநீர் குடிப்பது, பஜ்ஜி சாப்பிடுவது என்று செலவழித்தது 'இதெல்லாம் தேவைதானா!' என்று தோன்றியது.

தாராளப் போக்கு என்னிடமும், ஏன் எல்லோரிடமுமே இருக்கிறது. 'இவ்வளவு செலவாகிறது, இதையும் செய்தால் என்ன' என்று வழக்கமாக வாரா வாரம் வாங்கும் ஆனந்த விகடனுடன் கூட கல்கி பத்திரிகையையும் வாங்க முடிவு செய்த போது அம்மா சொன்ன காரணம் மனதில் ஆழப் பதிந்திருக்கும். தினமும் காலையில் படிப்பதற்கு தினமலர் வாங்கிக் கொண்டிருந்த அப்பா சில மாதங்களில் அதை நிறுத்தி விட்டார்கள். டார்சான் படிக்க வேண்டும் என்று தினமும் போட்டி போடும் எனக்கு பெரிய ஏமாற்றம். பல ஆண்டுகளுக்கு நாளிதழே வீட்டில் வாங்கியதில்லை.

பத்திரிகைகள் வாங்குவது வெட்டிச் செலவு என்பது அப்பாவின் அபிப்பிராயம். ஆனந்த விகடன், கல்கி வாங்குவதிலும் அவற்றை நாங்கள் படிப்பதிலும் அப்பாவுக்கு சம்மதம் மிகக் குறைவுதான். அம்மா அவற்றைத் தவிர பிற கதைப் புத்தகங்களையும் நூலகங்களிலிருந்து வாங்கிக் கொண்டு வருவார்கள். 'இதை எல்லாம் படிச்சு கெட்டுப் போகாதீங்கடே' என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

அந்தக் 'கெட்டுப் போதல்' மட்டும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அக்கம்பக்கத்திலிருக்கும் வீடுகளை எல்லாம் சூறையாடி எல்லா புத்தகச் சேகரிப்புகளையும் படித்துத் தீர்த்தேன். பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்கு சென்னை கிளம்பும் போது படிக்கும் ஆர்வத்தை மட்டும் நிறைத்துக் கொண்டு போயிருந்தேன்.

முதலாம் ஆண்டில் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும். அக்கா குரோம்பேட்டை விடுதியில் தங்கியிருந்த போது வாரா வாரம் போய் பார்த்து பேசி விட்டு வருவேன். விடுதியிலிருந்து காந்தி மண்டபம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து 21 B பிடித்து குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தே எம் ஐ டி கேட் வழியாக கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அக்காவின் விடுதிக்கு வருவேன். வெளியிலிருந்து சொல்லி அனுப்பினால் அக்கா வருவாள். அவளிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பவும் வந்த வழியில் போவேன். அங்குமிங்கும் திரும்பியதாகவே நினைவில்லை. அதைப்பற்றி நினைத்துப் பார்த்தது கூட கிடையாது. 'வாரா வாரம் போய்ப் பார்க்க வேண்டும். பார்க்கிறேன்' என்ற உணர்வு.

'அவ்வளவு தூரம் வந்துட்டு, ஏதாவது சாப்பிடக் கூட கொடுக்க முடியாமல் போய் விடுகிறான்.' என்று சொல்லி விடுதியை விட்டு வெளியில் தங்க முடிவு எடுத்தாள் அக்கா.

எனது விடுதி மற்றும் சாப்பாட்டு செலவுக்கான மாதக் கட்டணத்தை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். பேருந்தில் போவதற்கு மாதா மாதம் கூப்பன்கள் வாங்கிக் கொள்வேன். வெளியில் போய் சாப்பிடுவது, புத்தகங்கள் வாங்குவது, பொருள்கள் வாங்குவது என்று எதிலும் ஆர்வம் வரவுமில்லை, வரவில்லை என்று வருத்தமும் இருந்ததில்லை. முதலாமாண்டு முடிக்கும் போது தாம்பரத்தில் வீடு பார்த்து விட்டார்கள். அப்பாவுக்கும் சென்னை மாற்றலாகி வர மூன்று பேராக இருந்து கொள்ளலாம் என்று திட்டம்.

தாம்பரம் முடிச்சூர் ரோடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் ஒரு வீடு. அங்கிருந்து தினமும் காலையில் நடந்து தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு வந்து 21B பிடித்து காந்தி மண்டபத்துக்கு வந்து விட வேண்டும். 6.50 வண்டி, 7.20 வண்டி 7.50 வண்டி. 7.50 வண்டியைப் பிடித்தால் வகுப்புக்குத் தாமதமாகி விடும். அதனால் 7.20க்கு பேருந்து நிலையம் வந்து விட வேண்டும். அதற்குள் வீட்டில் சமையல் முடித்து சாப்பிட்டு, மதியத்துக்கும் அடைத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். 7.20 பேருந்தில் உட்கார இடம் வேண்டுமானால் ஆறே முக்காலுக்கே பேருந்து நிலையம் வர வேண்டும். 6.50 கிளம்பிய பிறகு சர சரவென்று நிரம்பி விடும்.

கொஞ்ச நாட்களில் பேருந்து நிலைய கடையில் இந்து நாளிதழ் வாங்கிக் கொண்டு பேருந்து ஏறுவேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேர பேருந்து பயணத்தில் முக்கி முனகி முதல் பக்கத்தை முடித்திருப்பேன். ஆங்கிலம் படிப்பதில் சரளம் ஆரம்பித்தது அங்குதான். பேருந்தில் போக வர சலுகைக் கட்டண அட்டை. வேறு எங்காவது வெளியில் போக வேண்டுமானால் சலுகை விலை கூப்பன்கள். கையிலிருந்து காசு செலவழிப்பது என்பது மிக மிகக் குறைவாகவே இருந்தது.

அந்த நேரத்தில் ஜெர்மன் கற்றுக் கொடுப்பது குறித்து அறிவுப்பு வெளியிட்டார்கள். அண்ணா பல்கலைக் கழக வளாகத்திலேயே மேக்ஸ்முல்லர் பவன் ஆசிரியர்கள் வந்து கற்றுக் கொடுத்தார்கள். ஆறு மணி முதல் ஏழரை வரை என்று நினைவு. அது முடிந்து பேருந்து பிடித்து வருவேன். ஆழ்வார் திருநகரிலிருந்து வரும் அச்சுத் துறையில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனும் என் கூடவே பேருந்துக்குக் காத்திருப்பான்.

ஒரு ஆண்டுக்குப் பிறகான படிப்புக்கு மேக்ஸ் முல்லர் பவன் போக வேண்டும். வாரத்துக்கு மூன்று நாட்கள் மாலை வகுப்புகள் முடிந்த பிறகு காந்தி மண்டபத்துக்கு அருகில் பேருந்து பிடித்து டிஎம்எஸ்சில் இறங்கி காதர் நவாஸ்கான் சாலையில் இருக்கும் மேக்ஸ் முல்லர் பவனுக்குப் போவேன். 5 மணி வகுப்புக்குப் போவதற்கு தாமதமாகி விடுவதால், ஆறரை மணி வகுப்பு என்று மாற்றிக் கொண்டேன். 4 மணி கல்லூரி முடிந்து கொஞ்சம் நேரமாகி விட்டாலும் பேருந்தில் ஏறி ஆறரை மணிக்கு வெகு முன்னதாகவே போய் விடுவேன்.

8 மணிக்கு வகுப்பு முடிந்து மீண்டும் நடந்து டிஎம்எஸ் வந்து தாம்பரம் போகும் பேருந்தைப் பிடிப்பேன். ஒன்பது ஒன்பதரை வாக்கில் தாம்பரம். அதற்குள் ஊரிலிருந்த எனது மிதிவண்டியை சென்னைக்குக் கொண்டு வந்திருந்தோம். நிறுத்தத்திலிருந்த மிதிவண்டியில் வீட்டுக்கு வரும் போது 10 மணி ஆகியிருக்கும். அதன் பிறகு சாப்பிட்டு விட்டுப் படுத்தால் மறுபடியும் அடுத்த நாள் காலையில் 5 மணிக்கு எழுந்து 7 மணிக்கு முன்பு தாம்பரம் பேருந்து நிலையம்.

இன்னும் இரண்டு நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் கன்னிமரா நூலகம், அமெரிக்க நூலகம் என்று போய் வருவேன். அதற்கும் பேருந்து சீட்டு எடுக்கக் கையில் காசு தேவையில்லை. கூப்பன்கள் கொடுத்தால் போதும். இந்த நேரத்தில்தான் 'வெளியில் போகும் போது ஏதாவது குடித்துக் கொள்ள வேண்டும்'என்று அறிவுறுத்தப்பட்டு அதை ஆரம்பித்திருப்பேன் என்று தோன்றுகிறது. அதிலும் செலவு குறைவாக கரும்புச் சாறு குடிப்பதுதான் பழக்கமாகப் போனது. நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தப் போனால் நான் காசு கொடுக்க முந்தியதே இல்லை.

இதை முடிக்கும் போது ஒன்பது மணி ஆகியிருக்கும். குளிப்பதற்கு ஒரு வாளி நிரப்பியாகி விட்டது. இன்னொன்று நிரம்பிக் கொண்டிருக்கிறது. குளித்து விட்டு (9.15) தியானம் செய்து விட்டு (9.35), உடை மாட்டி கடைக்குப் போக வேண்டும். கிரேஸ் அல்லது புட்வேர்ல்டு போய் பொருட்கள் வாங்க வேண்டும். முதல் சுற்றில் துணி துவைக்க, குளிக்க, முகம் மழிக்கத் தேவையான வீட்டு பயன்பாட்டுப் பொருட்களை மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும். (10.45) திரும்பும் வழியில் தேய்க்கக் கொடுத்திருந்த துணிகளை வாங்கிக் கொண்டு, இன்னும் திரும்பும் வழியில் தோசை மாவும், பக்கத்தில் பழமுதிர் நிலையத்தில் தக்காளி, தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம் வாங்கிக் கொண்டு டெக்கான் குரோனிக்கிளும் வாங்கிக் கொள்ள வேண்டும். (11)

வீட்டுக்கு வந்து பொருட்களை வைத்து சாப்பிட்டு விட்டு, துணிகளை ஊற வைத்து விட்டு வெளியில் புறப்படலாம். (12) வண்டியை எடுத்துக் கொண்டு போய் அலுவலகத்தில் விட்டு விட்டு, (12.15) நேராக பேருந்து பிடித்து ஜெமினி அருகில் இறங்கி (1) லேண்ட்மார்க் போய் நாளைக்கு வரவேற்பில் கொடுக்க வேண்டிய பரிசுப் புத்தகம் வாங்கிக் கொள்ள வேண்டும் (1.30). மீண்டும் வளசரவாக்கம் (2.00) வந்து கிரேஸ் அல்லது புட்வேர்ல்டில் அடுத்த மாதம் முழுமைக்குமான சாப்பாட்டுப் பொருட்களை வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்து விடலாம். (3)

மூன்று மணிக்குப் பிறகு சமைக்க ஆரம்பிக்கலாம். வெளியில் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும். வீட்டில் செய்துதான் சாப்பிட வேண்டும். நான்கு மணிக்குச் சாப்பிட்டு விட்டு, புதிய சோதனை செய்யும் முறையை செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும். செய்து கொண்டிருக்கும் பணியை அடிப்படையாகக் கொண்டு அதை முடித்து விட வேண்டும். (7 மணி).

அதன் பிறகு ஊற வைத்திருந்த துணிகளைத் துவைத்துப் போட்டு விட்டு அடுத்த சுமையை ஊற வைக்க வேண்டும். சுற்றில் மற்ற துணிகள். அடுத்த சுற்றில் தரையில் விரிக்கும் துணிகளையும் ஊற வைத்து விட வேண்டும்.

நாளைக்குக் காலையில் 4 மணிக்கு எழுந்து 4.30 முதல் 6.30 வரை எழுத்து. 6.30க்கு வீட்டை ஒதுங்க வைத்து, பாத்திரம் கழுவி விட்டு துணி துவைத்துப் போட வேண்டும். 8 மணிக்குப் பிறகு ஏதாவது செய்து சாப்பிட்டு விட்டு 10 முதல் 12 வரை எழுதலாம். 12 மணிக்கு சமையல் 1 மணிக்குச் சாப்பாடு.

மதியத்துக்கு மேல் பயனர் கையேடு எழுதலாம். அதையே இணைய வழி சேவை வழங்கலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நமது தொப்புளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தால் போதும். இந்த உலகையே வெல்லலாம்.

சனி, மே 09, 2009

நீண்ட ஓட்டம்

இன்று காலை ஆறு மணியிலிருந்து இப்போது (மதியம் 2 மணி) வரையிலான நேரத்தை நான் தொலைத்து விட்டேன் என்று சொல்லலாம். நாட்குறிப்பு எழுதி விட்டு ஐந்து நிமிடங்கள் கண்ணயரலாம் என்று படுத்தவன், எழுந்திருக்கும் போது ஏழு மணிக்கு 10 நிமிடங்கள் என்று நேரம் காட்டியது. உடனேயே எழுந்து வெளியில் கிடந்த நாளிதழை எடுத்துக் கொண்டு படிக்கலானேன். இன்னும் எவ்வளவு நேரம் என்று தெரியாத பொழுது சோம்பி இருந்து விட்டு தோசை சாப்பிட முடிவு செய்தேன். நேற்று இரவே ஊற வைத்திருந்த கடலையையும் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

தூக்கவோ, துணி துவைக்கவோ, தரை துடைக்கவோ மனம் வரவில்லை. ஒரு கிலோ மாவு வாங்கி நேற்று இரவு நான்கு தோசை சாப்பிட்டது போக மீதி இருந்தது அனைத்தையும் சுட்டுச் சாப்பிட்டேன். கடைசி நான்கைந்தை திணறித் திணறித்தான் சாப்பிட்டேன். தோசைக்குத் தடவவும் மிளகாயப் பொடிக்கு ஊற்றவும் நல்லெண்ணெய் கூடத் தீர்ந்து விட்டிருந்தது. மிளகாய்ப் பொடி இரண்டாவது முறை போட்டு தலைக்குத் தேய்க்கும் விவிடி தேங்காய் எண்ணைய் ஊற்றிக் கொண்டேன்.

அவ்வளவையும் கொண்டு வயிறு நிறைந்த பிறகு உள்ளறையில் போய் படுத்துக் கொண்டேன். பிக்விக் பேப்பர்ஸ் என்ற சார்லஸ் டிக்கன்சின் கதையை கையில் எடுத்துக் கொண்டிருந்தேன். அரை உறக்கமும் மயக்கமுமாக எட்டரை, ஒன்பது, ஒன்பதரை மணி என்று பார்த்துக் கொண்டு மீண்டும் தூங்கிக் கொண்டிருந்தேன். வெளியில் குழந்தைகள் வந்து விளையாட ஆரம்பித்திருந்தார்கள். முடி வெட்டி விட்டு வர வேண்டும் ஒன்பது மணி முதல் 12 மணி வரை எழுத வேண்டும், தியானம் செய்யாமல் காலையில் சாப்பிடக் கூடாது. காலையிலேயே குளித்து விட வேண்டும் எல்லாமே காத்தோடு போய் விட்டிருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து கணினியை இயக்கி முன்னறை சோஃபாவில் உட்கார்ந்தேன். ஏதாவது படித்துக் கொண்டிருக்கலாம். கான்கொரர் இயக்கினால் அறிமுகத் திரை வந்தது. அதை இயந்திரம் போல கிளிக்கி படித்துக் கொண்டே போகும் போது மிதிவண்டியில் மலையேறும் விளையாட்டு கிடைக்க அதைக் கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்தேன். நிறைய நேரமே விளையாடினேன். குழந்தைகள் நான் வீட்டுக்குள் இருப்பதைப் பார்த்து 'அங்கிள் இன்னைக்கு ஆபிசு போகவில்லை' பேசிக் கொண்டு போனார்கள்.

இப்படி எழுதிக் கொண்டே இருக்கும் போதே சோர்வு வருகிறது. பேசாமல் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கலாம்.

இன்றைக்குத் தொலைபேசி, பூந்தமல்லி கடையில் தேவையான கல் வந்து விட்டதா என்று கேட்க வேண்டும். இல்லை என்றாலும் போய் விட்டு வர வேண்டும். இதை முடிக்கும் போது 5 மணி ஆகியிருக்கும். 5 மணிக்குப் பிறகு குளித்து 20 நிமிடங்கள் தியானம் செய்து விட்டு ஐந்தே முக்கால் போல புறப்பட்டு ராமாபுரம் போய் பேருந்தைப் பிடிக்க வேண்டும். முதலில் தொலைபேசியில் கேட்டுக் கொள்ள வேண்டும். அந்தக் கடையில் வாங்கி வைத்திருந்தால், நேராக பூந்தமல்லி போய் அதை வாங்கி வர வேண்டும். விலை தாங்கும் அளவுக்குத்தான் இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.

bias for action என்று பீட்டர் துருக்கரின் மேலாண்மை நூல்களில் ஒன்றில் படித்ததாக நினைவு. என்னென்ன செய்ய வேண்டுமோ அதைத் தள்ளிப் போடாமல் உடனேயே செய்து விட வேண்டும். இன்னும் சில நாட்கள் தள்ளிப் போட்டு விட்டால், என்ன சாதித்து விட முடியும். நாம்தானே செய்ய வேண்டும்.

காசு எதுவும் கொடுக்காமல் எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கி விட வேண்டும் என்றுதான் முயற்சிக்கிறார்கள் எல்லோரும். பார்க்கலாம். வியாபார குடும்பங்களில் சின்ன வயதிலேயே இப்படி வளர்த்திருப்பார்களோ.

அந்த வணிக நேர்த்தி அத்துப்படி. அதை எல்லா இடத்திலும் கொண்டு வருகிறாள் என்று எனக்கு ஆத்திரம்.
என்னுடைய உயர் எண்ணங்கள், கருத்துக்கள் எல்லாம் அப்படி இருந்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற வியாபார அடிப்படையில்தான் இருந்திருக்கின்றன. இருக்கின்றன. அதனால் எதிராளி பலனைத் தராமல் இருக்கும் போது நடத்தையைக் கைவிட்டு எதிர்மறைக்குத் திரும்பி விடுகிறேன். அதுதான் எனது இயல்பின் அடிப்படை ஓட்டை. இதை எப்படிச் சரி செய்து கொள்ளலாம்?

எதை கடைப்பிடிக்கிறோமோ அது மாறக் கூடாதது. மாற முடியாதது. நிறைய பில்லிங் செய்யும் போது யாரையும் வேலையை விட்டு அனுப்ப மாட்டோம், தரக் குறைவாக நடத்த மாட்டோம் என்று இருப்பது நல்லது. பில்லிங் குறையும் போதும் அதை கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் அல்லவா? நேரத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறிக் கொள்பவை என்ன கொள்கைகள்.

எப்படி நடந்து கொண்டாலும் அடிப்படை மனிதப் பண்புகளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இருப்பது உயர் கொள்கை. நல்லபடியாக நடப்பதைப் பொறுத்துதான் உன் உயர்வு இருக்கிறது என்றால் என்ன சிறப்பு. அடிப்படைக் கொள்கைகளை உறுதியாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். அதை எந்த நேரத்திலும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கையில் நிறைய காசு இருந்தாலும், கையில் காசே இல்லா விட்டாலும், எதிராளி அன்பாக நடந்தாலும், அவமதிப்பாக நடத்தினாலும், சுற்றி பெரிய கூட்டம் இருந்தாலும், தன்னந்தனியனாக இருந்தாலும் மாறவே செய்யாத கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. எளிமை, வறுமை. தேவையான பொருட்களை மட்டும்தான் வைத்திருக்க வேண்டும். தேவையான உணவுகளை மட்டும்தான் சாப்பிட வேண்டும். வீட்டை நிரப்பிக் கொள்வதற்காக பொருட்களை வாங்கிக் குவிப்பதை தவிர்த்து விட வேண்டும்.

2. இருப்பதை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

நம்மிடம் இருக்கும் பொருட்கள், ஒரு நாளின் 24 மணி நேரம், கையில் ஒப்படைக்கப்பட்ட பணம். ஒவ்வொன்றையும் அருமையாக கையாள வேண்டும். மனம் போன போக்கில் வாரி இறைப்பதையும், மனம் சோர்ந்து போய் எல்லாவற்றையும் புறக்கணித்து ஒதுங்கி நிற்பதையும் விட்டு விட வேண்டும். ஒரு நாளின் 24 மணி நேரத்துக்கும் திட்டம் இருக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கடமைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

ஒவ்வொரு பொருளுக்கும் இடமும் ஏவலும் வேண்டும். எல்லா தேவைகளுக்கும் பொருளும் வசதியும் இருக்க வேண்டும்.

3. யாரையும் மனம் நோக வைக்கக் கூடாது.

4. நேர்மையான வாழ்க்கை நடத்த வேண்டும்.

இதற்கு சிந்திப்பதற்கு தலை வலிக்கிறது. எழுதியது வரை போதும், போய்ப் படுத்து பிக்விக் பேப்பர் புத்தகத்தைப் புரட்டலாம் என்று உறுதியான உந்துதல். காலையில் எழுதும் போது அப்படிப்பட்ட உந்துதலுடன் போராடிப் போராடி ஒரு மணி நேரம் உட்கார்ந்து விட்டாலும், அதன் பிறகு எல்லாமே குலைந்து போய் விட்டது.

இன்றைக்கு வெளியில் சாப்பிடக் கூடாது. வீட்டில் ஓட்சு இருக்கிறது. கோதுமை மாவு இருக்கிறது. உருளைக்கிழங்கு, உள்ளி இருக்கின்றன. அவற்றை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டாம். இதை முடிக்கும் போது 5 மணி ஆகும். ஓட்சு கொதிக்க வைத்து விட்டு குளிக்கப் போக வேண்டும். குளித்து விட்டு வந்து ஓட்சை அணைத்து விட்டு தியானம். 20 நிமிடங்களில் ஓட்சும் ஆறிப் போயிருக்கும். குடித்து விட்டு போரூர், பூந்தமல்லி போய் விட்டு வர வேண்டும். அதன் பிறகு எதுவும் செய்ய வேண்டாம். காலையில் சாப்பிட்ட ஒரு கிலோ மாவு இன்னும் வயிற்றில் தங்கியிருக்கிறது.

டேவிட் காப்பர்பீல்டு கதையில் பள்ளிக்குப் போகும் காப்பர் ஃபீல்டுக்கு வழியில் சாப்பாடு ஏற்பாடு ஆகியிருக்கும். முழு விருந்தையும் பையனிடம் காட்டிக் காட்டி பரிமாறுபவரே சாப்பிட்டு விடுவார். அது போல ஒரு கிலோ மாவையும் சாப்பிட்டு விட்டு மலைப்பாம்பு போலப் படுத்திருந்தேன். முருகன் படத்தை கிழித்து விட்டிருக்கிறாள். இது போல அடையாளக் குறியூடுகளில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஒரு 10% தாக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தில் இடத்தை மாற்றுவது நல்லது என்றுதான் படுகிறது என்று சொன்னேன். அவருக்கெல்லாம் நம்பிக்கையை ஊட்டி வைத்திருக்க வேண்டும்.

காசு தர வேண்டும் என்று நினைக்கிறாரா அல்லது இப்படியே இழுத்துக் கொண்டு போய் விடலாமா என்று நினைக்கிறாரா. போய்ப் பேசச் சொல்ல வேண்டும். மதிப்பு வேறுபாட்டை சரி செய்வது இப்படியே இழுத்துக் கொண்டே போகலாம். ஆனால் தொடர்ந்து பராமரிப்பது பயன்பாட்டுக்கு உதவிகள் செய்வதை செய்யாவிட்டால் பலன் இல்லாமல் போய் விடலாம்.

அவருக்கும் அந்த சிரமம் புரிந்திருக்கலாம். இப்போது போய் உறைக்கும் படி சொன்னால் பராமரிப்பு ஒப்பந்தம் கிடைத்து விடலாம்.

சும்மா தூங்கித் தூங்கி நேரத்தைக் கழிக்காமல் எழுதிக் கொண்டிருக்கலாம் என்று உத்தேசம். வயிற்றில் இருக்கும் தோசைகள் செரிக்க வேண்டும்.

எல்லாம் நடைமுறைக்கு வந்து விட்டால், பெரியதொரு வாய்ப்பாக இருக்கும். பல்லைக் கடித்து விட்டு எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பான திட்டமிடலுடன் பணியாற்ற வேண்டும்.

ஒவ்வொரு வாடிக்கையாளராக எடுத்து வேலைகளை முடித்துக் கொண்டே வர வேண்டும். காசையும் கேட்டு வாங்க வேண்டும். சனிக்கிழமை நாம் விடுமுறை என்று இருந்து விடுவதால் வாடிக்கையாளர்கள் வேலை பார்க்காமலா இருப்பார்கள். அவர்களது தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். நேற்றைய தேவைகளை மாலையில் முடித்து விட்டாலும், அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பாமல் விட்டிருக்கிறேன். அனுப்பி விட வேண்டும். வெளி பயனர் தகவல் உள்ளிட்டால் தவறு வருவதாக இருந்தது. அந்தப் பிழையை நேற்றைக்குச் சரி செய்திருந்தேன்.

நல்ல காற்று அடிக்கிறது. மே மாதம் கத்திரி வெயில் எனப்படும் அக்கினி நட்சத்திர வெயில் அடிக்கிறது. பக்கத்து குரு ஃபிளாட்சு மாடியில் ஒரு துணி காற்றில் படபடக்கிறது. கிழிக்கப்பட்டு விட்ட முருகன் படத்தில் கிழிந்து தொங்கும் பகுதியும் காற்றில் அசைகிறது. மின்விசிறி போடாமலேயே உட்கார்ந்திருந்தாலும், உடலை காற்று தழுவிச் செல்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மேலெல்லாம் வேர்க்குரு பரவியிருக்கிறது. நம்முடைய சிறப்புகளை எல்லாம் விட்டுக் கொடுத்து விடாமல் தாக்குப் பிடித்து வெளி வந்தால் நடக்கும். பாட்டு ஒலிக்க விடலாம் என்று தேடினால் கிடைக்கவில்லை. எல்லா கோப்புகளையும் கொஞ்ச மாதங்களுக்கு முன்பு அழித்து விட்டிருக்கிறேன். நல்ல பாட்டுக்களை கேட்டுக் கொண்டிருந்தால் மனம் நிம்மதி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

வலைப்பதிவுகளில் எழுதி அதிலேயே மூழ்கி அதுதான் சொர்க்கம் என்று உட்கார்ந்து விட்டால் அடுத்தக் கட்டத்துக்கு நகர முடியாது என்று சமாதானமும் சொல்லியாச்சு. சோஃபாவில் எறும்பு ஒன்று. கையை முழங்கையின் அருகில் கடித்துக் கொண்டிருந்தது. எடுத்து சோஃபாவின் கைத்தாங்கலில் விட்டு விட்டேன்.

மகளை அழைத்துக் கொண்டிருக்கிறாள். 'எங்க அம்மாவுக்கு 27 வயதாகிறது' என்றாள் போன வாரம். தலை வலிக்கிறது என்று சொல்லி நான் தண்ணீர் குடிக்கச் சொல்லப் போய் எதிர் வீட்டில் தண்ணீர் குடித்து விட்டு வந்தாள். பாட்டிலில் அடைத்த தண்ணீர் இல்லை, குளிர வைத்த தண்ணீர் இல்லை என்று தண்ணீர் குடிக்கக் குழந்தைகளுக்கு விருப்பம் கிடையாது.

சூடாக இருக்கும் சட்டியில் குளிர் தண்ணீர் ஊற்றினால் என்ன ஆகும் என்று ஒரு டாக்டர் எனக்கு விளக்கம் சொன்னார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். காற்றடிப்பது நின்று போயிருக்கிறது. புழுக்கமும் அதிகமாகி விட்டிருக்கிறது.

இதை விட்டு விட்டால் வேறு என்ன மாற்று.

சாப்பாட்டுக்கு மனம் தாவுகிறது. ஆந்திரா மெஸ்ஸில் பருப்பு, சாம்பார், ரசம் என்று சாப்பிடலாமே என்று மனம் கனவு காண்கிறது. ஓட்சு கஞ்சியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது இன்னும் உறைத்து விட வில்லை. ரூசோ confessions என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். தான் வாழ்க்கையில் செய்த எல்லாவற்றையும் ஒழிவு மறைவில்லாமல் எழுதியிருக்கிறாராம். ஓரிரு முறை படிக்க முயற்சி செய்து பாதியில் விட்டு விட்டேன். இல்லை, பாதிக் கூட வரவில்லை. ஒரு சில பக்கங்கள் மட்டும் படித்தேன். ஒரு வேளை மொழிபெயர்ப்பில் சுவை குன்றி விட்டதோ என்னவோ!

ஏதோ ஒரு குழந்தை சைக்கிளில் விளையாட ஆரம்பித்தாகி விட்டது. இரண்டு பேரில் ஒருத்தர். அல்லது காவல் காரரின் கூட வந்திருக்கும் குழந்தையாக இருக்கலாம். அந்தப் பையன் வீட்டுக்குள் வந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது எனக்கு முகம் மிகவும் சுளித்துக் கொண்டிருந்தது. என்ன நாற்றம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் வீட்டு விருந்தாளி என்று நினைத்திருந்தேன். இதை எடுக்காதே, அதில் மேல் ஏறாதே, இங்கே வராதே என்று தடைகள் போட்டுக் கொண்டே போனேன். மற்றக் குழந்தைகளும் தம்முடன் அவனை சேர்த்துக் கொள்ளவில்லை.

தாத்தா கூட வேலைக்குப் போனால் விளையாடுவதற்கு நிறைய பொருட்கள் கிடக்கும். வீடுகளுக்குள் போய்ப் பார்க்கலாம் என்று இந்தப் பையன் வருவான். நான் நிழலில் குளுமையாக உட்கார்ந்திருக்க அந்த முதியவரும் குழந்தையும் வெயிலில் ஒதுங்கி இருக்கிறார்கள். இது எந்த ஊர் நியாயம். வெளியில் தூங்கிக் கொண்டிருக்கும் பழைய பாதுகாவலர் குடும்பத்தை உள்ளே வந்து படுத்துக் கொள்ளச் சொல்லலாமா என்று நினைத்த துடிப்புகள் எங்கே போய் விட்டன?

குளிக்காமல் அழுக்குத் துணி போட்டுக் கொண்டு நாற்றம் சூழ ஒருவர் அருகில் வந்தால் தள்ளி நிற்கத்தான் சொல்லுவோம் என்று காரணம் கற்பித்தார். எனக்கும் அந்த மனப்பான்மை நிறையவே இருக்கிறது.சாதி ஒட்டுதல் இல்லாமல் போவதும் எனது ஒதுக்கத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி என்று ஏற்றுக் கொள்வார்கள். சின்ன வயதில் வீட்டில் எத்தனை விதமான பேர் வந்து போயிருக்கிறார்கள். டீச்சரின் வீட்டுக் காரர் வேலைக்கார பெண்ணிடம் உறவாடுவதாக அந்த டீச்சர் சொல்லி அதைப்பற்றிய விவாதங்கள் கேட்டிருக்கிறேன்.

தாத்தா திருவனந்தபுரத்திலிருந்து ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை வந்து தங்கி விட்டுப் போவார். வெள்ளை வேட்டி, ஜிப்பா போட்டு, கண்ணாடியுடன் உயரமாக நடந்து வந்தால் எழுந்து நிற்கத் தோன்றும். அதே தாத்தா, உடை மாற்றி கை பனியனுடன் முகம் கழுவி விட்டு வரும் போது சின்னப் பையன் போலத் தோன்றும். ஒவ்வொரு முறை வரும் போதும் பேக்கரி பண்டம் வாங்கி வருவார்கள். தாத்தாவுக்கு பேரப் பிள்ளைகள் என்று எங்கள் மீது பிரியம். கிரீம் உள்ளே அடைத்த கேரட் போன்ற ஒரு பிஸ்கட் கம் கேக்கு வாங்கி வருவார்கள் என்பது நினைவிருக்கிறது. எல்லாருக்கும் ஆளுக்கொரு துண்டு பங்கு வைத்துக் கிடைக்கும்.

திருவனந்தபுரத்து உறவுகள் மீது பெருமை ஏராளம். அம்மாவின் அம்மாவின் தம்பிகள் திருவனந்தபுரத்தில். அவர்கள்தான் அம்மாவுக்குப் படிக்க வைத்து உதவி செய்தது.

காவல்காரரின் பேரன்தான் அந்தச் சின்ன பையன் போலிருக்கிறது. மூன்று சக்கர மிதிவண்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறான். எனது வயிற்றில் தோசைகள் இன்னும் கனத்துக் கொண்டிருக்கின்றன. இன்றைக்குக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்னிடம் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. நண்பர்களிடமும் எல்லா திசையிலும் உதவிகளை வாங்கிப் போட்டு விட்டேன். தெரிந்தவர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்த லெதல்லிங்க் இன்னும் எவ்வளவு சாப்பிட்டு விட்டு பிறகு எனக்கு பெருமை தேடித் தருமோ தெரியவில்லை.

நமது மென்பொருளைப் பயன்படுத்தி குறைந்தது 10 நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அது ஒரு சாதனை இல்லையா! கடந்த 7 ஆண்டுகளில் கிட்டத்தட்ட மதிப்பிலான சேவைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். இப்படியே நஷ்டத்திலேயே எப்படி இயங்கிக் கொண்டிருக்க முடியும். ஏதாவது வழி தெரிய வேண்டாமா! ஒவ்வொரு நாளும் லாப/நஷ்டம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க வேண்டாமா. தொலைபேசி வேலைக்குத் திரும்ப வரவா என்று கேட்கவில்லை. காசு வேண்டும் என்றுதான் கேட்டார்.

1. கிரைண்டர் பார்ட் வாங்குவது
2. உடைந்து போன கண்ணாடித் துண்டை மாற்றுவது
3. தரை துடைப்பது,
4. சட்டைக்கு பொத்தான்கள் தைப்பது
5. எல்லோருக்கும் கடிதங்கள் தயாரிப்பது
6. முடி வெட்டுவது

என்று ஆறு வேலைகளை இன்றைக்கு நாளைக்குள் முடித்து விட வேண்டும். சுடு நீர் குடிக்கக் குடிக்க வயிற்றில் கிடக்கும் மக்கு செரித்து வெளி வந்து விடும் என்ற நம்பிக்கை. நல்ல வேளை துணி துவைத்ததும் உடனேயே தண்ணீரை மேலே ஊற்றிக் கொள்ளவில்லை. மாலையில் 5 மணிக்குக் குளித்தால் சரியாக இருக்கும்.

நடைமுறைகள், அமைப்புகள் இவற்றை ஏற்படுத்திக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. கவனமாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மேல் எழுதுவதற்கு எதுவுமே இல்லை. எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு பிடித்து விட்டது போலத் தோன்றுகிறது. இத்தோடு விட்டால், அந்த சோஃபாவில் அல்லது கட்டிலில் படுத்து கனவில் ஆழ்ந்து விடுவதுதான் நடக்கப் போகிறது.

செவ்வாய்க்கிழமை ராணிப்பேட்டை போக வேண்டும். புதன் கிழமை தேர்தல் நாள். வெள்ளிக்கிழமை முடிவுகள் வர ஆரம்பிக்கும். சனிக்கிழமை புதிய அரசு அமைப்பது குறித்த முயற்சிகள் ஆரம்பிக்கும்.

உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் ஆதரவு சரிந்து அது பிஜேபி பக்கம் போக ஆரம்பித்திருப்பதாக எகனாமிக் டைம்சில் செய்தி அலசல் வெளியிட்டிருக்கிறார்கள். முலாயம் சிங்குக்கும் முஸ்லீம்கள் ஆதரவு சரிகிறதாம். காங்கிரசு தோற்கப் போகும் கட்சி என்று ஓட்டு கிடைக்காது. முஸ்லீம்கள் ஒட்டு மொத்தமாக பிஎஸ்பிக்கு வாக்களிப்பார்கள். மேல் சாதியினர் பிஜேபிக்கும், சில தொகுதிகளில் மட்டும் காங்கிரசுக்கும் ஆதரவு அளிக்கலாம்.

மாநில வாரியாக கணக்குப் பார்த்தால் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும்.அருண் நேரு போடும் பட்டியல் போல ஆகி விடும் இதுவும். பிஎஸ்பி 150 இடங்கள், காங்கிரசு, பிஜேபி தலா 100 இடங்கள். இடது சாரிகள் 50 இடங்கள். அதிமுக, தெலுகு தேசம், பிஜூ ஜனதா தள், மம்தா பானர்ஜி, தலா 15 இடங்கள். இதுவே 460 இடங்கள் ஆகி விட்டது. இதைத் தவிர அகாலி தள், லோக் தள், சரத்பவார் கட்சி, தேவகவுடா கட்சி என்று ஆளுக்கு 10 இடங்கள் கணக்குப் போட்டால் தகைந்து விடும். இவற்றை வைத்துக் கொண்டு எப்படி அரசு அமையும்?

என்னுடைய எண்ணம் பகற்கனவாகவே இருந்து விடுமா என்ன? மீண்டும் ஒரு தேக்கம். என்ன எழுதுவது? மேலே மேலே என்ன செய்து கொண்டு போவது. காசு எங்கிருந்து வரும்.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யாரு என்று கேட்டால், யாரும் இல்லை என்று ஒரு மழலைக் குரல். வாட்ச்மேனின் பேரன்தான். வீட்டுக்குள் வந்து விடக் கூடாதே என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்து விட்டேன்.

எல்லா சீர்திருத்த வாதிகளும் பேசுவதை எல்லாம் பேசி விட்டுக் கடைசியில் சாதி பார்த்துதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எப்படி பிறருடன் பழகுகிறோம், எப்படி எல்லோரிடமும் உறவை வளர்க்கிறோம் என்பதுதான் முக்கியம்.

விபாசனா யோகாவில் பல மணி நேரங்கள் எல்லாவற்றையும் கொட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம். பிரியங்கா வடோரா, டெக்கான் குரோனிக்கிளில் ஒருவர், நம் பிராசாந்து என்று மூன்று பேர் விபாசனா யோகத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதைப் பற்றிப் படித்துப் பார்க்க வேண்டும். படித்துப் பார்க்க வேண்டும் என்று பல குறித்து வைத்து செய்யாமல் இருக்கிறேன். குளித்து விட்டு வெளியில் புறப்படும் வழியைப் பார்க்கலாமா!

தொலைபேசிக் கேட்டால் இன்னும் பிரிமியர் ஆட்டுக் கல் வந்திருக்கவில்லை. வந்திருந்தால் உடனேயே குளிக்கப் போய் விடலாம் என்று திட்டம். எது எப்படியிருந்தாலும் படுத்துத் தூங்குவதற்குத் தேவையும் இல்லை, செய்யவும் கூடாது. தொலைபேசி விபரம் சொல்லி விடலாம். கொடுத்து விட வேண்டியவரின் எண்ணையும் எடுத்துப் பேசிப் பார்க்க வேண்டும். இந்தக் கணினியை சரிவர பராமரிக்க வேண்டும். பாதிக் கிணறு தாண்டிய பிறகு முன்னேற்றத்தைக் கண்ணால் அளந்து கொண்டே ஏறிக் கொண்டிருப்பதும் ஒரு தனி சுகம்தான். பாதி நேரம் முடிந்து விட்டது. இது வரை எழுதியதைப் போல ஒரு பங்கு எழுத வேண்டும். எழுதிப் பார்க்கலாமா!

5 மணிக்கு இதை முடித்ததும் குளித்து விட்டு தியானத்தில் உட்கார வேண்டும். குளித்து முடிக்கும் போது கிட்டத்தட்டை ஐந்தரை மணி ஆகியிருக்கும். தியானத்தை முடித்து பிக்விக் பேப்பர்ஸ் படித்துக் கொண்டே ஓட்சு குடிக்க வேண்டும். ஆறரை மணி வாக்கில் புறப்பட்டு மணப்பாக்கம் நிறுத்தத்துக்குப் போக வேண்டும். 7 மணி. பூந்தமல்லி செல்வம் ஸ்டோர்ஸ் போய் கல் வாங்கிக் கொண்டு வந்தால், எட்டரை மணி தாண்டி விடும். அதற்குத் தேவையான பணத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டு பயன்பாட்டுக்கு சீனி, தேங்காய், பொரிகடலை, பட்டாணிக்கடலை, பச்சை மிளகாய், ஊசி, நூல் (சட்டை பட்டன்கள் தைக்க) வாங்கிக் கொள்ள வேண்டும். நாளைக்குக் காலையில் நான்கு மணிக்கு எழுந்து விட வேண்டும். நாலரை முதல் ஐந்தரை வரை நாட்குறிப்பு. ஐந்தரை மணிக்கு உலாவப் போக வேண்டும். ஆறு மணிக்குத் தரை தூத்துத் துடைத்து விட்டு ஆறரை மணிக்கு துணி துவைக்க வேண்டும். சப்பாத்திக்கு மாவு பிசைந்து, உருளைக்கிழங்கு வேக வைத்து கறியும் செய்து கொள்ள வேண்டும்.

எட்டு மணிக்குக் குளித்து விட்டு தியானம் செய்து விட்டு சாப்பிடும் போது எட்டரை மணி. சாப்பிட்டு விட்டு சட்டைக்கு பட்டன்கள் தைக்க வேண்டும். அதை முடித்து விட்டு எல்லோருக்கும் கடிதங்கள் தயார் செய்து முடித்து விட்டு 10 மணி ஆகியிருக்கும். வெளியில் போக வேண்டும். நல்ல வெயிலாக இருக்கும். என்ன செய்வோம்! இல்லை என்றால் மாற்றுத் திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ள வேண்டும்.

இடையில் தொலைபேசியது எழுந்து போனது எல்லாம் நேரம் குறைந்திருக்கும்தானே. எங்கோ தொழிற்சாலையில் சங்கு ஊதுகிறது. நான்கு மணி சங்காக இருக்கலாம். முதுகுப் புறத்தில் சலசலவென்று காற்று. அடுக்களையில் ஜன்னல் திறந்திருப்பதால் தங்குதடையின்றி அடித்துக் கொண்டிருக்கிறது.

நாகர்கோவிலில் காலையில் 5 மணி, 9 மணி, மதியம் 12 மணி, மாலை 5 மணி, இரவு 9 மணிக்கு சங்கு ஊதுவார்கள். அதே வரிசையில் நள்ளிரவு 12 மணிக்கும் ஊதுவார்கள் என்று வாதிட்டிருக்கிறேன். எதிலுமே முழு ஒழுங்கு வேண்டும் எனக்கு. அது எதுக்கு ஊதுவார்கள்! அதே போல அமாவாசை அன்று தெரு விளக்குகளை எல்லாம் அணைத்து விடுவார்கள் என்று சொல்லியிருக்கிறேன். அம்மாவாசை என்றால் கும்மிருட்டாக இருக்க வேண்டும், அப்படி என்றால் விளக்குகளையும் அணைப்பதுதானே சரியாக இருக்க வேண்டும்.

பெரிய பெரிய கோபங்கள் வரும். அவர்களது நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் போது, நான் விட்டுச் செல்லும் எச்சங்களை புரட்டிப் பார்க்கும் போது எனது பக்க தேவைகளை நியாயங்களை உணர்ந்து கொள்ள முடியலாம்.

நண்பன் ஒருவனின் பிறந்த நாள் பார்ட்டிக்குப் போகும் முன்னர் சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது 'எங்க வாழ்க்கை முறை வேறு, உன்னைப் பார்த்து அல்லது உனக்காக மாறுவோம் என்று நினைத்துக் கூடப் பார்க்காதே' விரும்பும் வாழ்க்கையை தனியாக தேடி அமைத்துக் கொள்ளும் திறன் இருப்பதால் ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும். தேவை இல்லாதவற்றை இரண்டு விரல்களால் சுண்டி எறிந்து விடுவது வாடிக்கை. எந்தப் பலனும் இல்லை என்றால் எதற்கு சகித்துக் கொள்ள வேண்டும். மிகவும் சுலபமான காரண காரியம்.

நேற்றைக்கு நிறுவன மேம்பாட்டில் கற்றுக் கொண்டது என்ன? விற்பனையின் போது மிடுக்கும், அனுபவமும், வயதும் தரும் ஆதாயம்.

இப்போது நிரம்பிக் கொண்டிருக்கும் தண்ணீர் தெளிவாக இருக்கிறது. 3 நிமிடங்களில் கால் வாளிதான் நிரம்பியிருக்கிறது. முழு வாளியும் நிரம்புவதற்குக் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகி விடும் போலிருக்கிறது. 4.50 வரை போய்ப் பார்க்க வேண்டிய அவசியமில்லைதான். தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுக் குளிப்பதால் குளிரக் குளிரக் குளிக்க முடிகிறது. இன்றைக்கு முன்னறையில் பொருட்கள் வைக்கும் மாடங்களில் நாளிதழை மாற்றி தூசி தட்டி விட்டேன். அடுக்களையிலும் செய்ய வேண்டும். முடி வெட்டும் நாட்களில் தூசி தட்ட வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஒரு போர்வையையும் துவைத்துப் போட வேண்டியிருக்கிறது. அதை நாளைக்கு துணி துவைத்த பிறகு ஊற வைத்துக் கொள்ளலாம். நேரம் 4.45. வாளி நிரம்பி வழிவதாக ஒரு உணர்வு. அரை வாளி தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். நான்கில் ஐந்து பகுதி நிரம்பி விட்டது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் நிரம்பி விடும். கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் ஆகின்றன.

ஒவ்வொரு வரி உடைப்புக்கும் எண்ணிக்கைக் கிடைக்கிறது. தானாக மடியும் வரிகளை தனி வரிகளாக எண்ணுவதில்லை. இன்னும் ஒரு நிமிடம் கழித்துப் போயிருக்கலாம். போய் அடைத்து விட்டு வந்து விட்டேன். வெதுவெதுவென்று வெந்நீர் குடித்ததில் வயிறு கொஞ்சம் சமாதானமாகி இருக்கிறது. திட்டமிட்டது போல ஓட்சோடு நிறுத்திக் கொண்டால் இரவு நன்கு தூங்கி காலையில் நிம்மதியாக எழுந்திருக்கலாம்.

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பிறகு ஆற வைத்துக் கொடிக்க வேண்டும். குளிர்ந்த நீரை வெதுவெதுப்பாக வரும் வரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. கொதிநிலையில்தால் கிருமிகள் கொல்லப்படும். கொல்லாமை எல்லாம் பேசி விட்டு குடிநீரை கொதிக்க வைத்துக் குடிப்பது என்ன நியாயம். அப்படிப் பார்த்தால் கரப்பான் பூச்சியைக் கொல்ல ஹிட் பிரயோகிக்கும் குடும்பத்தலைவிகளும் சரிதான். எறும்பு மொய்த்து விட்டால் எறும்புகளைக் கொல்லாமல் அந்தப் பொருளை அப்படியே தானத்துக்கு வெளியில் வைத்தால் எறும்புகள் முழுமையாகச் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவதாக சொல்லியிருந்தார்.