என்னைப் பற்றி

வியாழன், மே 31, 2007

சாப்பாடு (வயிற்றுக்கும்... )

நேற்று ஒரு வழியாக தொக்கியிருந்த பல வேலைகள் நல்லபடியாக முடிந்தன. செலவினங்கள் எல்லாம் சரிக்கட்டும் வகையில் பணம் வந்து விட்டது.

நேற்றுக் காலையில் ரவை கிண்டும் வேலை. உள்ளி உரித்து வெட்டி, தேங்காய் கீறி மிக்சியில் தூளாக்கி விட்டு, ரவையை பிரித்துப் பார்த்தால் வறுக்காத ரவை. இரண்டு உழக்கு வறுக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பு ஓட்சு கஞ்சி கொதித்து முடித்திருந்தது. வறுத்த ரவையை தட்டில் கொட்டி விட்டு, எண்ணெய் விட்டு கடுகு, பருப்பு, உளுந்து போட்டு வெடித்தவுடன் உள்ளி வெட்டி வைத்ததைப் போட்டேன். பச்சை மிளகாய் இருந்தால் அதையும் சேர்ப்பார்கள், இஞ்சி தேவைப்பட்டால் அதுவும். எதுவும் கைவசம் இல்லை.

இரண்டு உழக்கு ரவைக்கு மூன்றரை தம்ளர் தண்ணீர். உள்ளி வதங்கியதும் தண்ணீரை பிடித்து விட்டு சில நிமிடங்களில் அது கொதிக்க ஆரம்பித்தது. இடைப்பட்ட நேரத்தில் தேவையான உப்பை தண்ணீரிலேயே போட்டு, தண்ணீரில் ஒரு சொட்டு வாயில் விட்டு சுவை பார்த்துக் கொண்டேன். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், வறுத்த ரவையை அதில் கொஞ்சம் கொஞ்சமாக தூவி கிளற அது தண்ணீரை உறிஞ்சி சுருள ஆரம்பித்தது. பொடித்து வைத்திருந்த தேங்காயையும் போட்டுக் கிண்டி மூடி வைத்து விட்டேன்.

அப்புறம் தியானம். அது முடிந்துவுடன் கடைக்குப் போய் இந்து பேப்பர் வரும் வழியில் முந்திரிப் பழம், வாழைப்பழம். ரவைக்குக் கூட, வாழைப்பழம் இல்லையென்றால் அப்பாவுக்கு ரசிக்காது. நமக்கு எப்படியோ பழத்தை தனியாகத்தான் சாப்பிடுவது. இந்த உப்ப ஆரம்பிக்கும் பண்டத்துடன் பழத்தை உள்ளே தள்ளுவது செரிக்க உதவும் என்று காரணமாக இருக்கலாம்.

இந்து நாளிதழுடன் ஓட்சு கஞ்சி உள்ளே போனது. அந்த நேரத்தில் விகடன் வந்திருக்கவில்லை. மாலையில் விகடன் அட்டையைப் பார்த்ததும் வாங்கியே ஆக வேண்டுமா என்று தோன்றியது. முகம் மழித்து விட்டு குளித்து சாப்பிட உட்கார்ந்திருந்தேன். ரவை நன்றாக வந்திருந்தது. சமைத்த உணவை காவலாளி குடும்பத்துக்கும் சேர்த்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் ஏதோ கூச்சம் தடுத்தது.

ஒரே ஆளாக இரண்டு உழக்கு ரவையையும் தின்று முடித்தேன். கூடவே முந்திரிப் பழங்களும். நெஞ்சு வரை நிறைந்து விட்டது.

வீட்டைப் பூட்டி விட்டு வெளியே வரும் போது கட்டிடம் கட்டுபவர் வெளியே நிற்கிறார். குறையாக இருக்கும் வேலைகளைப் பற்றிப் பேசுகிறோம். முடித்து விடலாம் என்கிறார். நீங்க அந்த அறையைப் பூட்டி விட்டுப் போய் விட்டதால் செய்ய முடியவில்லை என்கிறார். வண்டியை நகர்த்திய பிறகு கூடப் பேசிக் கொண்டே போனார்.

டாட்டா உடுப்பி ஓட்டலில் முந்தைய நாள் மாலையில் சாப்பிட்டதற்கு காசு கொடுக்காமல் கம்பீரமாக வெளியே வந்திருக்கிறேன். அதனால் சாலை வழியாகவே போய் அந்தக் காசைக் கொடுத்து விடலாம் என்று போனேன். கல்லாவில் இருந்தவர் எதுவும் சொல்லாமலேயே காசை வாங்கிப் போட்டார்.

பத்து பத்துக்கு வெளியே வண்டியில் ஏறி உட்கார்ந்திருந்த போது கூட வருபவரும் வந்து விட்டார். சின்மயாநகர் சாலைக் குமுறல்களை தவிர்க்க ஆற்காடு சாலையிலேயே கோடம்பாக்கம் மேம்பாலம் தாண்டிய பிறகுதான் இடது பக்கம் திரும்பினேன். நெரிசல் சகிக்கும் அளவில்தான். அப்படியே நுங்கம்பாக்கம் காவல் நிலையம் எதிரில் ஸ்டெர்லிங் சாலையில் நுழைந்து நேராக சேத்துப்பட்டு மேம்பாலம் வழியாக ஈகா திரையரங்கு எதிரில் பூந்தமல்லி நெடுஞ்சாலை. சரியாக 11 மணிக்கு பெரியமேடு வந்து சேர முடிந்தது.

வேலை தொடர்பாக பேச ஆரம்பித்தது நீண்டு கொண்டே போய் இரண்டு மணி அடிக்கும் வரை தொடர்ந்தது. இரண்டாவது முறையாக இவருக்கு புத்தி சொல்லும் வாய்ப்பு. 'அடுத்த நிலையில் மேலாளர்கள் தன்னளவு இல்லை' என்ற மனக்குறைக்கு 'நீங்கள் என்ன செய்தீர்கள்' என்று கேட்டேன். 'உங்கள் பொறுப்பாக அவர்களைக் கைப்பிடித்துக் கூட்டிப் போக வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை கூப்பிட்டு வைத்து பேசுங்கள்' என்று சொன்னேன். 'எதையும் குறை சொல்லாமல், குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி இல்லாமல் பொதுவாக உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு உதவும்' என்று சொன்னேன்.

அவரது மேன்மை, 'இது மாதிரி யாரும் இதுவரை சொல்லவில்லை' என்று எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். பதின்மூன்று ஆண்டுகளில் இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கிக் காட்டிய பெருமை அவருக்குத்தான். 'மற்றவர்களும் உங்களைப் போல இருந்திருந்தால், அவர்கள் இன்னொரு நிறுவனத்தை உருவாக்கியிருப்பார்கள். அது இல்லாததால்தான் உங்களின் கீழ் வேலை செய்கிறார்கள். அவர்களை உருவாக்கி நிறுவனத்தின் எதிர்காலத்தை செம்மைப் படுத்துவது உங்களது பொறுப்புதான்' என்று சொன்னேன்.

பேசும் போது நாராயண மூர்த்தியை சரியான முன்னோடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஜாம்ஷெட்ஜி டாடாவைச் சொன்னது பொருத்தமாக இருந்தது. தன்னுடைய கோபம் எப்படிக் குறைந்தது என்றும் விளக்கினார். 'நான்கு பேர் தன்னை மதிக்கும் போது தனது நடத்தையால் அவர்களுக்கு தவறான வழி காட்டி விடக் கூடாது ' என்று கொஞ்சம் மென்மையடைந்து விட்டதாகக் கூறினார்.

எல்லோரிடமும் இவ்வளவு பேசுவார் என்று தோன்றவில்லை. என்னை விட்டு விட அவருக்கு மனம் வருவதில்லை. அவரது உயரத்தில் அவரது எண்ணங்களைப் புரிந்து கொண்டு உரையாடக் கூடியவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்று தோன்றவில்லைதான்.

நண்பர் அவ்வளவு உறவாடி விட்டு கடைசியில் அவருக்குச் சொல்லாமலேயே போனதும் ஒரு வகையில் ஏமாற்றமளிப்பதுதான். மக்களின் பண்பாடு அவ்வளவுதான். இரண்டு மணிக்கு விடாப்பிடியாக கிளம்பி விட்டேன்.

இடைப்பட்ட நேரத்தில் அமெரிக்க நூலகத்தில் புத்தகங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று பார்த்தேன். மூன்று புத்தகங்களில் ஒன்று தொடர்பில்லாதது. இது மாதிரி நடப்பது இரண்டாவது தடவை. கொஞ்சம் எளிதாக உள்ளே கெடுபிடிகள் முடிந்தன.

புத்தகங்களை எடுத்து விட்டு வரும் போது பதிந்து கொடுப்பவர் சொதப்ப கணினியில் சிக்கல். அப்போது உறுப்பினர் அட்டையை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைவில் பதித்து விட்டு சிறிது நேரம் காத்திருந்து விட்டு அவர் கூப்பிடும் போது மறந்து போய் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டேன். மாலைக்குள் தொலைபேசி சொல்லியே விட்டார்கள். புண்ணியவான்கள். அடுத்த முறை போகும் போது பெற்றுக் கொள்ளலாம்.

அலுவலகம் வந்து சேர்ந்து சாப்பாட்டுப் பாத்திரத்தைப் பார்த்தால் நிறைய மீதியிருந்தது. நல்லா இல்லை என்று யாரும் சாப்பிடவில்லையாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வந்த அந்த சமையல் அம்மாவிடம் விலையை என்ன வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளுங்கள் சீரான உயர் தரம் கொடுங்கள் என்று சொன்னேன். மகன் விஸ்காம் படிக்கிறான், தான் கால்சென்டரில் வேலை பார்த்தது என்று விபரங்கள் சொல்லுமளவுக்கு கணினி எல்லாம் பயன்படுத்துகிறீர்களா என்று ஒரு விசாரிப்பு செய்து விட்டேன். இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

நிறைய இருந்த சோறையும் கத்திரிக்காய் பொரியலையும் பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு வந்தேன். வீட்டுக்குக் கொண்டு வந்து பழையது ஆக்கி விடலாம் என்று திட்டம். அப்புறம்தான் பாலா சொன்னது போல காவலாளி குடும்பத்துக்குக் கொடுத்து விடலாம் என்று தோன்றியது.

எதிரிலேயே அவர் வெளியே போய்க் கொண்டிருந்தார். கடையில் உருளைக் கிழங்கும், கோதுமை மாவும், பற்பசையும், துணி துவைக்கும் பொடியும் வாங்கிக் கொண்டு திரும்பும் வரை அவர் வந்திருக்கவில்லை. பையன் மட்டும் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தான். சாப்பிட்டாச்சா என்று கேட்டுக் கொண்டே பாத்திரங்கள் அடங்கிய பையைக் கொடுத்தேன். அவ்வளவு மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டான். இன்னும் ஆக்காததால் பசியோடு உட்கார்ந்திருக்கிறான் குழந்தை. பசித்தால் கடையில் போய் வாங்கிச் சாப்பிட முடியாத நிலை. மனம் உருகி விட்டது.

துக்ளக் சிறிது நேரம் படித்திருந்து விட்டு தியானத்தில் மூழ்கினேன். தியானம் என்பது தூக்க மாத்திரைக்கு நிகராகப் போய் விட்டது. கண் மூடி உட்கார்ந்தால் பல எண்ணங்கள் அலை மோதின. பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் அலைகள் அடங்கி மனம் சமநிலைக்கு வந்தது. அதற்கு பிறகு படுத்து உறங்கினேன்.

மார்ச்சு 3, 2007

பாதை எங்கே...

மாதத்தின் கடைசி நாள். நேற்றைக்கு அப்பாவிடமிருந்து தொலைபேசி. பேசும்போது திருப்பதி போவதைக் குறித்து சொன்னேன். அண்ணன் முந்தா நாள் போய் வந்தானாம்.

ஞாயிற்றுக்கிழமை சின்னண்ணனிடமிருந்து தொலைபேசி. 'நீயும் திருப்பதிக்கு வருவதாக அத்தான் சொன்னாங்க, நான் அங்கதான் இருக்கேன், கிளம்பப்போறேன். நீ இங்க இருந்தா பார்க்கலாமே என்று கூப்பிட்டேன்.' என்றான். திருப்பதி போக நினைத்திருப்பதாக அத்தானிடம் சொல்லியிருந்ததை அவங்க பாணியில் 'சிவாவும் திருப்பதி வரணும்னு சொல்லிட்டிருந்தான்' என்று ஏதாவது சொல்லப் போக அப்படி புரிந்து கொண்டிருக்கலாம்.

ஆச்சரியம் என்னவென்றால் மூணு பேருக்குமே ஒரே வாரத்தில் தனித்தனியே திருப்பதி போக வேண்டும் என்று தோன்றியதுதான். 2006ல் ஏப்ரல் 30 அன்று நண்பரின் திருமணத்துக்கு போனது. ஒரு ஆண்டு முடிந்ததும் இன்னொரு தடவை போக நினைத்து ஏப்ரல் 30லிருந்தே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அது ஜூன் 1க்கு நடக்கிறது.

இணையத்தளங்களில் துளாவி தங்குமிட வசதிகளை எடுத்து வைத்துக் கொண்டுள்ளேன். நாலரைக்கு ரயில், எட்டு மணி வாக்கில் போய்ச் சேரும். முடிந்தால் தரிசன சீட்டு வாங்கிக் கொண்டு கீழேயே தூங்கி விட்டு காலையில் மலை ஏறலாம். நாளை மாலையே சென்னை திரும்பல். சனிக்கிழமை நிறைய வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன.

நேற்றிரவு பத்தரை மணிக்கு டோண்டு சாரிடமிருந்து அழைப்பு தவற விட்டிருந்தேன். வழக்கம் போல தூங்கும் போது தொலை பேசியை ஒலி நெரித்து வைத்திருந்தேன். தூக்கத்துக்கு முந்தைய 20 நிமிட தியானம் தூக்கத்தை எங்கோ கொண்டு போய் விடுகிறது. நேற்று ஒன்பதே முக்காலுக்குப் படுத்துதான் தெரியும், காலையில் மூன்றரைக்கு விழிப்பு.

தூக்கம் விழிப்பதற்காக அலாரம் மணி பயன்படுத்தியதே இல்லை என்று பெருமைப்பட்டுக் கொள்வேன். அதிகாலை வண்டியைப் பிடிக்கவோ, யாரையாவது சந்திக்கவோ தவறியதாகவே நினைவில்லை. இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று மனதில் பதித்துக் கொண்டு தூங்கினால் தானாக எழுப்பி விடுகிறது மனசு. தூங்கும் முன் ஏதாவது படித்துக் கொண்டு அப்படியே தூங்கி விட்டால் காலையில் விழிப்பு வந்து விட்டாலும் எழ முடியாமல் சோம்பலில் தொடர்வது நடக்கும். மற்றபடி தூங்கித் தொலைத்த வாய்ப்புகள் குறைவுதான்.

துணி தேய்க்கும் இடத்தில் வெளியில் இருப்பதை விட 2-3 டிகிரி சூடு அதிகமாகத்தான் இருக்கும். அவர்களிடம் பகலில் ஓய்வெடுத்துக் கொண்டு மாலையில் வேலை ஆரம்பிக்கலாமே என்று போன தடவை சொல்லியிருந்தேன். அருகிலேயே போட்டிக் கடை ஒன்று இருக்கையில் சோதனைகள் செய்து வாடிக்கையாளர்களை இழக்க முடியாது. அப்படியே கத்தரியை சமாளித்து ஓட்டி விட்டார்கள்.

இரவல் புத்தக நூலகத்தில் எடுத்த கேல்வின் அன்ட் ஹாப்ஸ், ஜெஃப்ரி ஆர்ச்சரின் சிறை அனுபவங்களின் இரண்டாம் பாகம் இரண்டையும் படித்து முடித்திருந்ததால் எடுத்து வண்டி இருக்கை கீழான பெட்டியில் போட்டிருந்தாலும் நாள் முழுவதும் அண்ணா நகர் போக வாய்க்கவில்லை.

unputdownable எழுத்துகளுக்கு சொந்தக்காரர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இங்கிலாந்து பிரபுக்கள் சபை உறுப்பினராக இருந்து லண்டன் நகரத்தலைவர் பதவிக்குப் போட்டி போடத் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் ஏதோ ஒரு வழக்கில் சிக்கி நான்காண்டு சிறைத்தண்டனை பெற்றார். எ பிரிசன் டயரி என்று தனது அனுபவங்களைக் குறித்து வைத்துக் கொண்டு புத்தகங்களாகப் பதிப்பித்துள்ளார். முதல் பாகம் ஏற்கனவே படித்திருந்தேன். இரண்டாவது இந்த நூலகத்தில் கிடைத்து விட்டது.

இன்னொரு புத்தகம் கேல்வின் அன்ட் ஹாப்ஸ் படத் துணுக்குகளின் தொகுப்பு. இந்து அல்லது டெக்கான் குரோனிக்கிளின் இணைப்பிதழ்களில் தினமும் தவறாமல் படித்து விடும் இந்தத் துணுக்குகள் தொகுப்பாகக் கிடைத்ததில் சர்க்கரைப் பாகில் விழுந்த எறும்பு போல ஆகி விட்டேன்.

புதன், மே 30, 2007

நீளமான கனவு

ஒரு பெரிய உள்ளூர் மாண்புமிகு முரடரின் பேச்சில் குறுக்கிட்டு அவரை வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறேன். அவரும் எதையும் மறைக்காமல் பேசுகிறார். விவாதம் தொடரத் தொடர அவரது கோபம் அதிகமாகிறது. வேறு யாரும் எனக்கு ஆதரவாக பேசாமல் மௌனம் சாதிக்கிறார்கள்.

கடைசியில் ஒருவர் முன் வந்து அந்த பிரமுகரை பாராட்டிப் பேசுகிறார். 'இவ்வளவு வெளிப்படையாக பேசிய உங்களுக்கு எனது நன்றிகள்' என்று.

'இப்பவும் பிச்சுவா கத்தி காட்டும் முட்டாள்களாக இல்லாவிட்டாலும் உண்மையில் இவரைப் போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள்தான். இவரைப் போய் பாராட்டுகிறாயே' என்று சொன்னதை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அதனால் மனதில் கலக்கமும் ஏற்பட்டு விடவில்லை.

வெளியே வரும் போது அவர் ஏற்கனவே அலைபேசியில் பேச ஆரம்பித்திருக்கிறார். அடி வாங்கிப் பழக்கமில்லை, என்ன நடக்கப் போகிறதோ என்று அருகில் சொல்கிறேன். எல்லோரும் கவனமாக இருக்கச் சொல்கிறார்கள்.

இந்த வகுப்பறை டிவிடி பள்ளி மாடி வகுப்பறை வாக்கு மாறி இருப்பது போன்றது.

அப்புறம் புதிய குடியிருப்புக்கு போவதற்கு ஆயத்தம் செய்ய விடுதிக்குப் போகிறேன். அங்கு பொருட்களை திரட்டுவதில் தாமதம். ஏதோ உள்ளுணர்வில் அந்த முரடரின் அடியாட்களுக்கு தொலைபேசினால், 'அடித்துப் போட்டு விட்டோம்' என்று எதேதோ எண்களையும் படங்களையும் தெரியச் செய்கிறார்கள். 'அதே குடியிருப்பை நோக்கிப் போய் கொண்டிருந்தான்' என்று விளக்குகிறார்கள்.

'நான் இல்லை, நான் ஏற்கனவே பணம் கட்டி விட்டேன் என்று முறையிட்டான் அடி வாங்கும் பையன். அந்த ரசீதைக் கேட்டால் காட்ட முடியவில்லை. அறையில் விட்டு விட்டதாகச் சாக்கு சொன்னான். அதற்குள் அடியில் உயிரையே விட்டு விட்டான்' என்று விளக்குகிறார்கள்.

எனக்குப் பதிலாக இன்னொரு உயிர் போய் விட்டது என்பது உறைக்கிறது. அதனால் சோகம் காட்ட வேண்டும் என்று தோன்றினாலும் உள்ளுக்குள் அடியிலிருந்து தப்பித்த நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவுகிறது.

அடுத்து பல்லாவரம் வரை ஓடியே போய் விடலாம் என்று கும்பலாக ஓடுகிறோம். மாணவன் இறந்ததற்கு எதிர்ப்பாம். வழியிலோ போய்ச் சேர்ந்த பிறகோ ஒரு விடுதிக்குள் போகிறோம். அங்கு அறை அறையாகச் சுற்றிக் காட்டும் போது ஒரு அறைக்குள் என்னைப் பார்த்தால் தொல்லை விளைவிக்கக் கூடிய அந்த முரடர் ஒரு கும்பலுடன் வேறு பணியாக வந்திருக்கிறார்.

ஓடு என்று மனதுக்குள் கத்திக் கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தால் உயரமான மதில் சுவர், இன்னொரு தோழனும் மதிலில் ஏறிக் கொண்டிருக்கிறான். ஏறிக் குதித்ததும், வெளியே முழுவதும் தண்ணீர். கடல் போலத் தோன்றுகிறது. நீந்த ஆரம்பிக்கிறேன். மேலே தலை தெரிந்தால் மதில் வழியாகப் பார்த்து அவர்கள் தாக்க ஆரம்பிக்கலாம். எங்கே போய்ச் சேரும் என்று தெரியவில்லை.

ஏறிக் குதித்த தோழன் அருகில் தவித்து வருகிறான். தன்னால் முடியவில்லை என்று பரிதவிக்கிறான். ஏன், விமானத்தில் ஏற முயற்சிக்கவில்லையா என்று கேட்டால் அவர்கள் எவ்வளவு கை கொடுத்தும் இவன் ஏற முடியவில்லை என்று பரிதாபப்படுகிறான். விமானம் போய் விட்டிருக்கிறது. 'அம்மா ஏறி விட்டாளா' என்பதற்கு ஆமாம் என்று பதில் சொல்லவும் ஒரு நிம்மதி.

'நான் அப்படியே மூழ்கிச் சாகிறேன், நீ போய் விடு' என்கிற அந்த நபரை அப்படியே தூக்கிப் பிடித்து நீச்சல் போட ஆரம்பிக்கிறேன். அப்படித் தூக்கியது ஒரு பெண். அவள் கையில் ஒரு கைக்குழந்தை கூட, சுற்றிச் சுற்றிப் பார்க்கிறது. 'நான் முழு மூச்சைப் பிடித்து நீந்தப் போகிறேன். உன்னுடைய தலை வெளியே இருக்கிறது. சுற்றுமுற்றும் பார்த்து ஏதாவது அபாயம் வருகிறதா என்று கவனித்து வா' என்று சொல்லி விட்டு தொடர்கிறேன்.

நீர்ச் சுவர் ஒரு மலை விளிம்பு போல் முடிந்து விடுகிறது. அதைத் தாண்டி ஆழத்தில் தரைப்பரப்பு நகரம். 'இப்போது குதிக்கப் போகிறோம், கீழே மட்டும் பார்க்காதே, தரைக்கு அருகில் வந்ததும் ஏதாவது மரத்தைப் பற்றி, வேகத்தைக் குறைத்து இறங்கி விடலாம்' என்று சொல்லிக் கொண்டே நீர்ச் சுவரிலிருந்து குதித்து விடுகிறேன்.

ஓவென்று விழுந்து கொண்டே இருக்கும் போது தரை நெருங்கி விடுகிறது, என் கைகள் ஏதோ மரக் கிளைகளை பற்ற முயற்சிக்க, என் தோளில் இருக்கும் பெண் ஒரு திரைச்சீலையைப் பிடித்து இதமான வேகத்தில் தரையைத் தொடுகிறேன்.

அவளது பங்கைப் பாராட்டி விட்டு எங்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்று பார்க்கிறேன். 'பழைய கட்டிடத்துக்குள்ளேயே வந்து விட்டோமா, வெளியில் போய்ப் பார்த்தால்தான் தெரியும்' என்று வெளியே வந்தால் பழைய நிறுவன மேலாளர் ஒருவர் உதவியாளர் செவிலியுடன் நடந்து வருகிறார். என்னைப் பார்த்ததும் தலையை அசைத்து வரவேற்கிறார்.

இவரிடம் சொன்னால் காட்டிக் கொடுக்காமல் இருப்பாரா என்று யோசிக்கும் போது, மனித உறுதி நினைவுக்கு வருகிறது. மனித மனங்களில் நல்ல இயல்புகளை நம்பி அங்கேயே தங்கி விடுகிறோம்.

ஏதோ மிக விரோதமான ஒரு பெண்ணுடன் பிணக்கு, ஏதோ சாப்பிட்டது என்று தூங்கப் போகிறோம். வீட்டின் எல்லாக் கதவுகளும் அடைத்து வெளியில் நிறைய நாய்கள் உலாவி வருகின்றன. இரவில் நாய்கள் குரைக்கும் ஓசை. ஒரு பெரிய நாய் கண்ணாடி வழியாக வீட்டுக்குள் பார்க்கிறது. ஏதோ படையினர் வெளியில் வந்து இறங்கியிருக்கிறார்கள். சத்தம் காட்டாமல் விளக்குகளைப் போடாமல் பார்க்கிறேன். எதிரியின் கையில் மாட்டி விட்டால் அதோகதிதான் என்று தோன்றுகிறது. ஏதோ கதவைத் திறந்து சிப்பாய்கள் உள்ளே வந்து விடுகிறார்கள்.

பார்த்தால் அவர்கள் நம் கட்சியினர். உடலெங்கும் நிம்மதிகள் பரவ மகிழ்ச்சியாக அவர்களை வரவேற்கிறேன்.

அதற்குப் பிறகு நடந்தது மங்கலாகிப் போயிருக்கிறது.

வீட்டிற்குள் ஓசையே இல்லாமல் எப்படி உட்கார்ந்திருக்க முடிகிறது என்று நினைக்கலாம். எனக்கு இந்த அமைதி ஏகாந்தம் பிடித்திருக்கிறது. அப்படியே மனதையும், நினைவுகளையும் உறையச் செய்து கைகளால் தொட்டுப் பார்க்கும் படி திட உருவாக காற்றில் மிதப்பதாகப் படுகிறது.

நேற்று காலையில் மின்னஞ்சல்களுக்கு பதில்கள் போட்டு விட்டு, செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடும் பணியை ஆரம்பித்தேன். நமது இணைய வழங்கியில் பல விதமான மென்பொருள்களை போட்டுப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது. முதலில் சொந்தமாக எழுதியிருந்த மன்ற மையத்துக்குப் பதிலாக வேறு ஒன்றை போடலாம் என்று PHP நியூக் என்று ஒன்றை இறக்கிக் கொண்டேன். அது தண்ணீர் காட்டியது. ஒரு நிலையில் தளர்ந்து வெறுத்துப் போய் PHP BB என்று இறக்கி ஒரு மணி நேரத்துக்குள் கனினியில் நிறுவி இணைப்பும் கொடுத்து விட்டேன்.

(மார்ச்சு 2, 2007)

99ல் உழுதல்

சோம்பேறித்தனம் ஊறிப் போய் விட்டது. காலையில் எழுந்திருக்க முடியவில்லை, நாட்குறிப்பு எழுத முடியவில்லை, பகலில் ஒழுக்கம் மட்டும் ஓரளவு ஒட்டுகிறது.

புதிய நண்பர் வருவதாக எல்லோரிடமும் சொல்லியாச்சு. ஏதாவது காரணத்தால் அவன் மனம் மாற்றிக் கொண்டால் சிக்கலாகி விடும். திட்டங்களிலும் அவனையும் சேர்க்க ஆரம்பித்து விட்டேன், என் மனசுக்குள். அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு இருப்பவர்களை அடிப்படையாகக் கொண்டு மட்டும் திட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் கூட யார் எப்போ போகப் போவார்களோ என்றே விழிப்புடன் தயாராக இருக்க வேண்டும்.

திருப்பதி போக ரயில் இருக்கை பதிவு செய்த பிறகு தரிசனத்துக்கு பதிவு செய்யத் தொலை பேசினால், ஜூன் 5க்குப் பிறகுதான் இருக்கிறது என்றார்கள். சேர்ந்து வருபவரிடம் கேட்டால், உள்ளே போய் சாமி கும்பிடா விட்டாலும் பரவாயில்லை என்று வேதாந்தம் சொல்ல, திட்டப்படி வியாழன் மதியம் நாலரை மணி ரயிலில் கிளம்ப முடிவு செய்தோம்.

இன்று அலுவலகத்துக்கு வருவதாகச் சொல்லியிருந்தவர், சற்று முன் தொலை பேசி வெள்ளிக் கிழமை வருவதாகச் சொல்ல கடைசியில் ஞாயிற்றுக்கிழமை பார்ப்பதாக முடிவு செய்தோம். பார்க்கலாம் எப்படி போகிறது என்று.

முந்தாநேத்து மாலையில் தண்ணீர் வாங்க மாச்சப்பட்டு காய்ந்து கொண்டே வந்தது பெரிய தவறு. உடல் சோர்வு பல மடங்காக அதிகமாகி விட்டது. எப்படியோ பல நாட்களாக காலையில் எழுந்திருப்பது நடக்கவில்லை.

அநியாயத்தை எண்ணி மனம் வெதும்புவது நின்று விட்டது. அவ்வப்போது மனதுக்குள் திட்டுவதோடு சரி. வெறியும், துடிப்பும் அடங்குகிறது.

இந்த தமிழ் நெட் 99 குறித்து எழுதியதை பொன்ஸ், சிந்தா நதி, ரவிசங்கர் பலமாக ஆதரித்தும், வினையூக்கி, மயூரேசன் முயற்சி செய்வதாகவும் பின்னூட்டியிருந்தார்கள். உண்மைத்தமிழன் மாற முடியாது என்று காரணங்களை அடுக்கியிருந்தார். உண்மைத்தமிழனுக்குத் தொலை பேசி எழுதியது அவர்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

பின்னூட்டமிட்டவர்களின் பெயர்கள் காண்பிக்காத அவரது வார்ப்புரு கோளாறைச் சரி செய்தேன் . பழைய பிளாக்கரில் பின்னூட்டமிட்டவர்களின் பெயர் சரியாகத் தெரிய வைக்கப் போட்டிருந்த ஜாவாஸ்கிரிப்டு நிரலின் குளறுபடி. அதை முற்றிலும் நீக்கியதும் சரியாகி விட்டது.

ஹெல்மெட் அணிவது குறித்த அவரது பதிவு வழக்கம் போல நீளமாகச் சுவையாக இருந்தது. நிவதிப் பதிவில் தரவுத்தளம் தேர்வு செய்வது குறித்து எழுதும்படி தென்றல் கேட்டிருந்தார். போட்டுத் தாக்கக் கூடிய அளவு சரக்கு நிறைந்த ஒன்று. தட்டச்சிடுவதில் சுணக்கத்தால் நேற்றே எழுதவில்லை. இன்றைக்கு மதியம் 1 மணி நேரம் ஒதுக்கி எழுத வேண்டும்.

அப்பாடா இன்றைக்கு ஒரு திரை நிரம்ப 45 நிமிடம் ஆகியிருக்கிறது. உண்மையில் பார்க்கப் போனால் இது இரண்டாவது 1 மணி நேரம்தான் 99 விசை முறையில். முதலில் ஞாயிற்றுக்கிழமை எழுதியது. திங்கள், செவ்வாய் எழுதவேயில்லை. இந்த வாரம் முழுவதும் முயற்சித்தால் வந்து விடும். வெள்ளி, சனியில் முடியாமல் போய் விடும். திருப்பதிக்கு கணினியை எடுத்துப் போகப் போவதில்லைதான்.

இன்றைக்கு இன்னும் அடித்து ஆட வேண்டும். இன்றைக்கும் நாளைக்கும் எவ்வளவு வேலை முடிக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். அரசாங்க நடைமுறைகளை முடுக்க வேண்டும்.

இன்றைக்கு 1 மணி நேரத்தில் 350 சொற்கள் அடித்திருக்கிறேன். நிமிடத்துக்கு 6 சொற்கள்.

செவ்வாய், மே 29, 2007

மனங்கள் இன்னும்

சரியாக மார்ச் 1க்கு அலைபேசியில் இருக்கும் கடிகாரம் மாறி விட்டது. பழைய கடிகாரங்களில் இயந்திர முறையில் இயங்கும் நாட்காட்டிகள் இப்படி குதிப்பதில் குளறுபடி செய்து விடும். இது போன்று மென்பொருள் இயக்கும் நாட்காட்டிகளில் குழப்பம் குறைவு.

திரும்பவும் பழகிய சாலைக்குத் திரும்பி விடுவது என்று முடிவு வந்து விட்டது. அவிழ்த்து விட்டவுடன், அடக்கி வைத்திருந்தது எல்லாம் பீறிக் கொண்டு வந்தாகி விட்டது. இனிமேல் வழக்கம் போல் எழுதுவது, இடையில் மனத் தடைகளை மட்டும் நீக்கியிருப்பது என்று எழுத வேண்டியதுதான். போகின்ற போக்கைப் பார்த்தால் மே 20 வரை பதிவது ஆரம்பிக்காது போல தோன்றுகிறது. அதனால் எதுவும் கெட்டுப் போய் விடப் போவதில்லைதான்.

நேற்றைக்கு பழைய நாட்குறிப்புகள், புரட்டிப் போட்ட புத்தகங்கள் படித்துப் புரட்டினேன். நாட்குறிப்பில் வெளிப்படையாக எழுதியவை ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன. அது கூட போதாது என்று இன்னும் வெளிப்படையாக எழுத வேண்டும் என்று ஏன் நினைத்தேன்! புரட்டிப் போட்ட புத்தகங்களில் எழுதுவதில் ஆழமே இல்லை. ஏதோ ஏனோ தானோ என்று எழுதியது போல பட்டது.

வெளியில் காவலாளியின் மகள் எழுந்து அதிகாலை ராகத்தை ஆரம்பித்து விட்டிருந்தாள்.

நல்ல உதவி செய்யப் போய் மற்றவர்களுக்கு தொந்தரவுதான் தருகிறோமோ என்று தோன்றுகிறது. டீக்கடைப் பையன் ஊருக்குப் போய் விட்டு வருவதாகச் சொல்லியிருக்க உண்மையில் வேறு இடத்தில் ஒரு புகைப்படக் கடையில் சேரப் போகிறானாம். இந்தக் குழந்தைகளின் நலனுக்காகப் பேசப் போனால், பள்ளிக்குப் போகும் அக்கா நேற்று நான் கிளம்பும் போது அப்படியேதான் உட்கார்ந்திருந்தது.

பொது இடத்தில் நல்லது செய்ய ஆயிரம் யோசிக்க வேண்டியிருக்கிறது. தமிழ்மணத்தில் ஒரே இடுகைக்கு 30 பின்னூட்டங்களுக்கு மேல் வந்தால் வலது புற பின்னூட்ட நிலவரப் பட்டியில் காண்பிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்கள். அதை ஒட்டியும் வெட்டியும் பல கருத்துகள். மட்டுறுத்தல் வைத்திருந்தால்தான் பின்னூட்டங்களை திரட்டுவோம் என்பதையும் மறுபரீசிலனை செய்யும் படி ஒருவர் எழுதியிருந்தார்.

என்னுடைய எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், எண்ணங்களை எழுதுகிறேன் இரண்டுக்கும் மறுமொழி நிலவரம் திரட்டப் படுவதில்லை. அப்புறமாக உருவாக்கிச் சேர்த்த பொருள் செய்ய விரும்பு, புரட்டிப் போட்டப் புத்தகங்கள் பதிவுகள் ஆரம்பத்திலேயே மட்டுறுத்தல் இல்லாமலேயே பின்னூட்ட நிலவரம் திரட்டப்படுகின்றன.

ஆரம்ப சில நாட்கள் கலங்கலாகிப் போனாலும், இப்படி சுதந்திரமாக எழுதிப் போவது மனதை சுமைகளிலிருந்து விடுவித்து விடும் என்றே தோன்றுகிறது. ஒரு மணி நேரம் எழுதித் தள்ளி விட்டு அப்புறம் நிதானமாக பதிப்பது குறித்து முடிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வாக்கியத்திலும் பொதுவில் பதிவதையும், இதைப் படிப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தவிர்ப்பதையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லாமல் மனதுக்கு வந்ததை சொற்களில் இறக்கிப் போக வேண்டியது சுகமாக இருக்கிறது.

வெர்பல் டயோரியா என்றார் சுஜாதா. மனதில் வந்ததை அப்படியே வாந்தி எடுப்பது என்று தமிழில் மொழி பெயர்க்கலாம். உண்மையில் சொற்களின் வயிற்றுப் போக்கு என்பதுதான் சரியான பொருள்.

இந்த வீட்டில் ஓசைகள் இல்லாமல் நிசப்தம் நிரம்பி வழிகிறது. முன்பு வாடகைக்கு இருந்த இடத்தில் இரவு முழுவதும் ஏதோதோ ஓசைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். இங்கு காலையில் கூட அவ்வப்போது கடந்து போகும் வண்டிகள், இடியாப்பம் விற்கும் குரல் என்றுதான் தப்பிப் போய்க் கேட்கிறது. மற்ற நேரங்களில் ஊன்றிக் கேட்டால் சுவர்க்கோழிகளின் கத்தல் கூடக் கேட்கிறது.

தெருவை விட்டு இரண்டு வீடு தள்ளியிருப்பது ஒரு வரப்பிரசாதம்.

(மார்ச்சு 1, 2007)

ஞாயிறு, மே 27, 2007

மனித மனங்கள்

கோத்ரா ரயில் சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டதாக இந்துவில் ஒரு கட்டுரை. குஜராத்தை இந்து இந்தியாவை உருவாக்கும் பட்டறையாக நடத்தி வருகிறார்களாம். வரிந்து வரிந்து எழுதியிருந்தார் கட்டுரை ஆசிரியர். அங்கு வசிக்கும் யாரிடமாவது விபரமாகக் கேட்க வேண்டும். அடுத்த தேர்தலின் போது குஜராத் போய் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம் என்று கூடத் தோன்றியது.

காலையிலேயே தோன்றியது போல நாள் முழுவதும் எடுத்த வைலைகள் எல்லாம் சொதப்பின. காலையில் எழுந்து எழுதி முடித்து விட்டு, முடி வெட்டக் கிளம்பினேன். அதற்கிடையே கொடுக்க வேண்டிய பொருட்களை, பழைய துணிகளை எடுத்து வெளியே வைத்தேன்.

முடி வெட்டப் போனால் அங்கு யாருக்கும் உதவியாள் பையனிடம் வெட்டிக் கொள்ள மனமில்லை. நான் போனவுடனேயே ஏற்றி கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தான். அந்த வயதுக்கே உரிய ஒரு மிரளலுடன் கூடிய அலட்டலுடன் வேலையைப் பார்த்தான். அழகாகவே வெட்டி முடித்தான். வேண்டுமானால் நாளைக்கு வருகிறேன் என்று சொல்கிறார்களே தவிர அவனது நாற்காலியில் உட்கார முன்வர மாட்டேன் என்கிறார்கள்.

ஜான் நேஷின் கதை காலையில் முடிந்து போனது. டாட்டர் ஆஃப் ஃபார்ச்சூன் என்ற கதையும் மாலையில் முடிந்து விட்டது. தற்செயலாக இரண்டுமே பெண் எழுத்தாளர்கள் எழுதியது. பெண்கள் உலகை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் பல கோணங்கள் கிடைத்தன. அந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றுக் கதையில் எல்லாப் பெண்களுமே தாமாக உழைத்து சம்பாதிக்கிறார்கள், தமது ஆண் துணையுடன் வீட்டுச் செலவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆண் செலவளிக்கும் தொகைக்கு ஈடாக வேலை செய்து விடுகிறார்கள். பெண் நினைத்தால் எதுவும் செய்து கொள்ளலாம் என்று நம்புகிறார்கள்.

நாஷ் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும், பெண் கோணங்களை அழகாக வெளிப்படுத்தியிருந்தார். அவரது வாழ்க்கையை வெளியில் இருந்து பார்ப்பது போன்ற ஒரு விவரிப்பு. ஒரு ஆண் எழுதியிருந்தால் நிச்சயமாக அவரது மன ஓட்டங்களின் உணர்வுகளையும் படம் பிடித்திருக்கலாம். பெண்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ள ஓரளவு இவை உதவின என்று சொல்லலாம்.

நேற்று மாலையிலும், இன்று காலையிலும் தடையின்றி எழுதலாம் என்று ஆரம்பித்த பிறகு வெளி வந்து விழுந்த நினைவுகள் நாளையும் அசைத்துத்தான் போட்டு விட்டன. காந்தி ஆண்டவனுக்கும் ஒரு மனிதனுக்கும் இடையேயான நினைவுகளை பகிர்ந்து கொள்ளல் ஆகாது என்று குறிப்பிட்டிருக்கிறார். அறிந்தும் அறியாமலும் பல தவறுகளை செய்கிறோம், தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறோம். அதை உணர்ந்து திருந்திய பிறகு மனதறிய அதை ஏற்றுக் கொண்ட பிறகு ஆண்டவனிடம் அது போய் விடுகிறது. அவற்றை சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதால் அவர்களுக்கு ஏதாவது நன்மை இருந்தால் ஒழிய பகிர்ந்து கொள்ளுதல் தகாது.

அதனால் நேற்று எழுதியதில் பெரும்பகுதி கத்திரிக்கு இரையாக வேண்டியதுதான். காலையில் சாப்பிட்ட பிறகு ஒரே கலக்கமாக இருந்தது. இன்னொரு முறை தியானத்தில் இருந்து விட்டுப் போகலாம் என்று பதினைந்து நிமிடங்கள் அமர்ந்து விட்டுத்தான் கிளம்பினேன். அது பெரிதும் உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

மூன்றரை மணிக்குப் பிறகு தொலைபேசியும், இணைய இணைப்பும் சரியானது. ப சிதம்பரத்தின் நிதிநிலை அறிக்கை உரையை, கணக்கியல் தொடர்பான சில விபரங்களைப் படித்தேன். மடிக்கணினியின் மின்னிணைப்பு மீண்டும் அறுந்து போனது. அது உடனேயே சரி செய்து கிடைத்தது.

அப்புறம் தேன்கூடு வழியாக சுடர் பதிவுகளை படித்தேன். கல்வெட்டிடமிருந்து பாலபாரதி. அவர் மதிகந்தசாமிக்கு நகர்த்தியிருக்கிறார். பாலா கொஞ்சம் உணர்வு பூர்வமாக தன் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருந்தார். கல்வெட்டு மிக நீளமாக எழுதியிருக்கிறார். அருமையான தொடராக வளர்ந்து வருகிறது. எங்கெல்லாம் சுற்றி சுற்றி வந்திருக்கிறது. அருமையான எண்ணம் இந்த சுடர் தொடர் பதிவு.

பிப்ரவரி 28, 2007 - 2

சனி, மே 26, 2007

மெரீனா கடற்கரை

பிப்ரவரி முடியப் போகும் நாட்களிலும் இன்னும் சூரியன் உதிப்பது ஆறரை மணி தாண்டி விடுகிறது. நேற்றைக்கு மெரீனா கடற்கரைக்குப் போய் மணற்பரப்பில் நடக்கும் போது, சூரியன் சிவப்புப் பழமாக மேகங்களுக்கிடையே தெரிந்தது. அடிவானத்திலிருந்து சிறிதளவே உயர்ந்திருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் மேகங்களைத் தாண்டி பாரதி கலர் அடித்தது போன்ற சிவப்பு போய் தகதகக்கும் கோளம் வானில் ஏறி விட்டிருந்தது. இருந்தாலும், கரையை நோக்கிய முதுகுப் புறத்தில் குளிர் காற்று அடித்தது.

நான்கைந்து பையன்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அதைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவராக கால் தடுப்புக் கட்டிக் கொண்டு மட்டை பிடிக்கிறார்கள். இரண்டு பேர் மாற்றி மாற்றி இரண்டு பந்துகளைப் பயன்படுத்தி வீசுகிறார்கள். இரண்டு பேர் பந்து எடுத்து போட. முதலில் பார்க்கும் போது நேர்த்தியாக மட்டை பிடித்து தடுத்தாடிக் கொண்டிருந்த பையன் தலைக் கவசத்தை கழற்றி விட்டு அடுத்த பையனுக்கு வழி விட்டான். அவன் பந்து வீச வந்தான்.

நீளமான ஓட்டப் பாதையில் ஆரம்பித்து வேகப்பந்து வீச ஆரம்பித்தான். மட்டை பிடித்தவன், பல பந்துகளுக்கு தடவிய பிறகு, பயிற்சியாளரின் தூண்டுதல்களுக்கிடையே கடைசியில் ஒரு பந்தை சரியாக எதிர் கொண்டான். அப்படியே எழுந்து நடந்து கொண்டே அவர்களைக் கடந்து போனேன். மணலை ஒதுக்கு பந்து விழுவதற்கு கடினமான தரை உருவாக்கியிருந்தார்கள். நான் நின்று பார்ப்பதை எல்லோரும் கவனித்தார்கள். நீல பேன்ட், வெள்ளை சட்டையில் வழக்குரைஞர் போல் இருப்பதாக சொன்னது போல், யாரோ அதிகாரி என்று இவர்கள் நினைத்திருக்கலாம்.

தான் இந்திய அரசின் புள்ளிவிவரத் துறையில் வேலை பார்ப்பதாகவும், ராணிப்பேட்டை, ஆம்பூர் பகுதிகளில் விபரம் திரட்டப் போவது உண்டு என்று சொல்லிக் கொண்டு ஒருவர் சந்திக்க வந்தார். தோல் நிறுவனங்களில் நமது மென்பொருளை விற்பதற்கு உதவி செய்வதாக பேச்சு. அவரது மகனுக்கு வேலை தேடிக் கொள்வதுதான் நோக்கமாக இருக்கும் என்று படுகிறது. அதை நேரடியாகக் கேட்டிருக்கலாம்.

இப்படி வேறு ஒரு தூண்டிலைப் போட்டு தம்முடைய உண்மையான நோக்கத்தை மறைத்து உறவாட நினைப்பவர்கள் மீது இயல்பான வெறுப்பு தலைதூக்கி விடுகிறது.

காந்தி, சத்திய சோதனையில் பலவற்றை வெளிப்படையாகச் சொல்லி விட்டாலும், தனது மனதில் ஓடிய அனைத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றுதான் படுகிறது. அவர் நிறையப் படித்திருக்கிறார், நிறைய அனுபவித்திருக்கிறார். அதையெல்லாம் விளக்கிச் சொல்லி விடவில்லை.

ஆனாலும் அவ்வளவு எழுதி விட்ட அவரின் மனதின் மூலை முடுக்குகள் எல்லாவற்றுக்கும் வெளிச்சம் விழுந்திருக்கும். அவரது எழுத்துக்கள் எல்லாவற்றையும் ஊன்றிப் படித்தால் அவரை முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியலாம்.

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொடுப்பதை செய்தால் வேண்டாத சந்தேகங்கள் தோன்றலாம். என்னுடைய நோக்கங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இருந்தாலும் கீழே பெட்டிகளை இறக்கி பொருள்களை திரட்டிக் கொள்ள வேண்டும். என்னுடைய சட்டைகள், பழைய உடுப்புகளை காவல்காரருக்கே கொடுக்கலாம். அவர்களுக்கு உதவி செய்ய வழிகளைத் தேடலாம்.

(பிப்ரவரி 28, 2007 - 1)

அமெரிக்கர்களின் அடாவடி நடைமுறைகள்

நேற்றுக் காலையில் சமையலறை மேடை மீது உட்கார்ந்து எழுதினேன். அடுப்பில், அரிசியும் உளுந்தும், வெந்தயமும் கலந்து வேகப் போட்டு விட்டு அருகில் இருந்த பாத்திரங்களை விலக்கி வைத்து விட்டு வசதியாக உட்கார்ந்து கொண்டேன். உண்மையிலேயே எழுதுவதில் குழப்பம் தெளிந்து விடுகிறது.

எழுதி முடித்ததும் குளியல், கஞ்சி குடிப்பு. ஒன்பது மணிக்கு முன்பு போய் கொஞ்சம் இணையத்தில் உலாவிக் கொள்ள வேண்டும். எட்டரை மணிக்குப் போய்ச் சேர்ந்தால் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. யாரையும் காணோம். செருப்பைப் போட்டுக் கொண்டே சுற்றிக் கொண்டு பின் வாசல் வழியாகப் போகலாம்.

பத்திரிகைகளுக்கு செய்தி பஞ்சமான நேரம். ஏதேதோ முதல் பக்கத்தில் போடுகிறார்கள். இந்துவில் படித்த செய்தியை ஒட்டி ஒரு பதிவு போட்டேன். நேற்று எழுதி வைத்த நாட்குறிப்பை இட்டுக் கொண்டிருந்த போது மின்தடை ஏற்பட்டது. அது வரைவில் சேமிக்கப்பட்டிருந்தது.

அந்த மின்தடை, இப்படி மின் அழுத்தம் ஏற்றத் தாழ்வாக இருக்கிறதே என்று மின் பொறியாளரை கூப்பிட்டுக் காட்டியதுதான். அவர் ஒவ்வொன்றாகக் கழற்றிப் பார்த்து விட்டு எந்தக் கோளாறும் இல்லை. வெளியிலிருந்து வருவதே அழுத்தம் குறைவுதான் என்று சொல்லி விட்டார். வெயில் காலத்தில் ஈரப்பதம் குறைவதால்தான் அழுத்தம் குறைவு என்று தனது காரணத்தையும் சொன்னார்.

காலையில் ஒரு முறை, மதியம் ஒரு முறை இரண்டு மணி நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டு விட்டது. ஒன்பது மணிக்குப் பிறகு நாளுக்கான திட்டத்தை வகுத்துக் கொண்டேன். ஏற்கனவே அமைத்திருந்த மாதம்-வாரம்-ஆண்டு-நீண்டகாலம் என்ற பிரிவுகளுக்கு 2-2-2-2 மணி நேரங்கள் ஒதுக்குவதாக விரிதாளிலும் பெரிய எழுத்துக்களில் தலைப்பு வைத்துக் கொண்டேன்.

ஜூன் மாதத்துக்கான திட்டமிடலில் தொடங்கி, காலணி மென்பொருள் குழுவினரிடம் விவாதம். எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன நிலையில் வேலைகள் உள்ளன என்று பார்த்தேன். நேற்றுக் காலையில் முடிவு செய்தது போல கணக்குப் போட்டிருந்தேன்.

இதற்குள் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இந்த விவாதங்கள் எல்லாம் மின்தடையின் போதே நடைபெற்றன. மொழிபெயர்ப்பதற்கு மொழிமாற்ற அமைப்பை முழுமைப்படுத்தும் படிக் கேட்டுக் கொண்டேன். ஒரு மொழியை முற்றிலும் முடித்து விட்டால் பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது குறித்து சிந்திக்கலாம்.

தமிழ்நாட்டில் நிறுவனங்களுக்கு தமிழ் இடைமுகமும், வட இந்திய நிறுவனங்களில் இந்தியும், சீனாவில் சீன மொழியும் கொடுக்க வேண்டும். முஸ்லீம் நிறுவனங்களுக்கு அரபி மொழியில் கொடுப்பதைக் கூடச் செய்யலாம்.

இனிமேல் இது போல மின்தடை ஏற்பட்டால், மூன்று மடிக் கணினிகள், தடையில்லாது மின்சாரம் வழங்கும் இரண்டு கணினிகளின் முன்பு எல்லோரும் வேலையைத் தொடர வேண்டும் என்று விதி செய்து கொள்ள வேண்டும்.

அதற்குத் தேவைப்பட்டால் இன்னும் ஓரிரண்டு UPS கூட வாங்கிக் கொள்ளலாம்.

மின்சாரம் வரும் வழி தெரியாததால் அமெரிக்க நூலகத்துக்குக் கிளம்பினேன். கூட நண்பரையும் கூப்பிட்டுக் கொண்டேன். கையில் அவர் புத்தகங்களை வைத்துக் கொள்ள போரூர்-கிண்டி சாலையைப் பிடித்து அண்ணா சாலை வழியாகப் போனோம். பெரிய வண்டியில் சின்ன சாலைகளில் போவது சரியாக இருக்காது என்று அந்த வழி. செல்லம்மாள் கல்லூரி அருகில் பெட்ரோல் போட்டுக் கொண்டோம்.

போகும் போது வெயில் ஏறியிருக்கவில்லை. அண்ணா சாலையில் தேனாம்பேட்டை தாண்டியதும் ஓரளவு குளிர்ந்த கடற்காற்று அடித்தது. நண்பரிடம் இருந்த அடையாள அட்டை பிரதி எடுத்தது. அதனால் அவரை உள்ளே விடவில்லை. இரண்டு நாள் முன்பு வந்து அவரிடம் அடையாள அட்டையே இல்லை என்று உள்ளே போகவில்லை. இன்றாவது புத்தகங்களைத் திருப்பி விடுவோம் என்று நான் மட்டும் நுழைந்தேன்.

நல்ல பசி, தாகம். உள்ளே பாதுகாப்பு சோதனை செய்பவர் அளவுக்கதிகமாகத் தடவி வெறுப்பேற்றினார். 'இது போன்ற கெடுபிடிகளால் இனிமேல் உங்கள் நூலகம் வரப் போவதில்லை' என்று உறுப்பினர் அட்டையைத் திருப்பி விடுவதா என்று முடிவு செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை அந்தக் குளிரூட்டப்பட்ட சூழலில் புத்தகங்களின் மத்தியில் உலாவுவது நன்றாகத்தான் இருக்கிறது.

எல்லாம் செயற்கையான விதிகள், வேண்டுமென்றே முறுக்கு காட்டும் ஊழியர்கள். வெளியே நடக்கும் போது நடைபாதையை விட்டு நடந்தால் காவல் இருப்பவர், துப்பாக்கியால் சைகை காட்டி மேலே ஏறச் சொல்லுவார்.

மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டுக் கிளம்பினேன். நேற்று நூலகத்தில் நல்ல கூட்டம். பல ஆராய்ச்சி மாணவர்கள் ஆசிரியர்கள் குறிப்புகள் எடுக்க வந்திருந்தார்கள். ஒளிநகல் செய்ய புத்தகத்தை எடுத்து வந்த ஒருவரை 30 பக்கங்களுக்கு மேல் நகல் செய்யக் கூடாது என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த உதவியாளர்கள்.


திரும்பும் போதும் அண்ணா சாலையில் தி நகர் அருகில் திரும்பி, கண்ணம்மா பேட்டை சுடுகாடு திரும்பும் தெருவைத் தாண்டி ரயில் பாதையைக் கடந்தோம். அசோக் நகர் கேகே நகர் வழியாகப் போக வேண்டும். உதயம் திரையரங்கு அருகில் நிறுத்த விளக்குகள் ஒரே நிலையில் இருக்கின்றன. இரண்டு திசைகளில் சிவப்பும் ஒரு திசையில் பச்சையும் மாறாமல் இருந்தன. பைத்தியம் போல கொளுத்தும் வெயிலில் காத்திருந்து விட்டு அப்புறம் முறை வைத்துத் திரும்பிக் கொண்டோம்.

எவ்வளவோ நடப்புகளை வசதியாக அனுபவிக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் யாரோ ஒருவர் மெனக்கிட்டு வேலை செய்ய வைக்க வேண்டும் என்பது மறந்து விடுகிறது. அவர்கள் பணியில் தவறும் போதுதான் அது உறைக்கிறது. வளர்ந்த பொருளாதார சமூகங்களில் அப்படி வேலை செய்ய வைக்கப்படும் பணிகளின் எண்ணிக்கையும் நம்பகத்தன்மையும் அதிகமாக இருக்கிறது. நகரங்களில் கிராமங்களை விட அதிகமாக இருக்கிறது.

அதன் பிறகு முக்கிய சாலைகளை விட்டு விட்டு, ராமாபுரம் வழியாக வந்து ஆற்காடு சாலையைப் பிடித்தேன். அலுவலகத்தில் மின்சாரம் வந்து விட்டிருக்க சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. தாகத்தைத் தணிக்க தண்ணீர் குடித்து விட்டு சாப்பாட்டையும் ஒரு பிடி பிடித்தேன். சாம்பார், காரக் குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல் என்று அளவு அதிகம்தான்.

சாப்பிட்டு விட்டு உட்காரும் போது மீண்டும் மின்தடை. ஆவணத்தை எழுத ஆரம்பித்தேன். சிறிது நேரத்துக்குப் பின்னர் அதை விட்டு விட்டு குட்டித் தூக்கம். அதன் பிறகு புத்தகப் படிப்பு. கடைக்குப் போய் ஆனந்த விகடன் வாங்கி வரும் வழியில் ஒரு வாழைப்பழம் வந்து பார்த்தால் மின்சாரம் வந்திருந்தது.

ஆவணத்தை முழுமை செய்து மின்னஞ்சல் செய்ய வேண்டும். அவரது அஞ்சலுக்கு ஒருஇடைக்கால பதில் எழுதி வைத்து விட்டு திங்கள் கிழமை ஆவணம் அனுப்பலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

ஐந்து மணி வாக்கில் தேவ் தனக்கு மின்னஞ்சல் வரவில்லை என்று முறையிட்டார். அவருக்கு சுட்டியைச் சொன்னேன்.

நிவதியின் அடுத்த பகுதியைப் போட்ட பிறகு, நாட்குறிப்பின் பிப்ரவரி 27 2ம் பகுதியை வெட்டி இட்டேன். பல பகுதிகள் போய்த் துண்டு துண்டாகத் தெரிந்தது. வேறு வழி இல்லைதான். வெட்டி ஒட்டுவதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஒன்றோடு ஒன்று இயையும் படி போட வேண்டும்.

பதிவர் ஒருவர் தொலைபேசினார். எழுத்து இடுகைகளைப் படித்த பிறகு பேசத் தோன்றியிருக்கும் என்று பின்னர் புரிந்தது. நிரல் என்ற மொழிபெயர்ப்பைப் பற்றி. தன்னிடம் இருக்கும் கலைச்சொல் அகராதியைப் புரட்டி பல சொற்களைப் பகிர்ந்து கொண்டார். புதிது புதிதாகக் கற்றுக் கொள்வதாக என்னைப் பாராட்டிக் கொண்டார். code, program இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டார். பேசியது நன்றாக இருந்தது.

அதன் பிறகும் பதிவுகளில் செய்ய வேண்டியது எதுவும் இருக்கவில்லை. உங்கள் நண்பன் சரவணனின் கிராமத்து பதிவைப் படித்தேன். அவருக்கு பின்னூட்ட சுட்டி வராத குறையையும் சரி செய்து கொடுத்தேன்.

மாம்பழங்களைச் சாப்பிட்டேன். மாலை உணவு அம்போவாகி விட்டிருந்தது. இன்றைய பிரிவுபசாரத்துக்கு பரிசுகள் வாங்கப் போயிருந்தவர்கள் வெறுங்கையோடு திரும்பினர்.

சென்னையில் வேலை செய்யும் ஊர் பையன் ஒருவன் வந்திருந்தான். பக்கத்தில் பணி தொடர்பாக வந்த கையோடு இங்கும் வந்திருக்கிறான். மான்ஸ்டர் இந்தியாவில் ஒரு கணக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன். நவுக்கரி போன்ற தளங்களிலும் பதிவு செய்து விடாமல் தேடிக் கொண்டிருக்கும் படி அறிவுறுத்தினேன். மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு வேலை செய்வது சரியில்லை என்று சொன்னேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலகம் வந்து லினக்சு கற்றுக் கொள்ள இணையத்தைப் பயன்படுத்த அழைத்தேன்.

இந்த ஞாயிறன்று தொலை பேசி விட்டு வருவதாகச் சொன்னான்.

இந்த ஞாயிறுக்கு நிறைய சந்திப்புகள். புத்தகம் தொடர்பாக, அலுவலகப் பணி தொடர்பாக, துறை சார்ந்த எழுத்துகள் தொடர்பாக, பதிவர் பட்டறைக்கான ஏற்பாடுகள் குறித்த சந்திப்புகள், இந்தப் பையனும். எல்லோரிடமும் இன்று பேசி நேரத்தை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இன்னும் இரண்டே நிமிடங்கள்தான். அத்தோடு வெற்றிகரமான எழுத்துப் பணி முடிந்து விடும். நேற்று நல்ல தூக்கம். முந்தைய இரவின் தூக்கக் குறைபாட்டை ஈடு செய்யும் வண்ணம், வந்ததும் கை கால் கூடக் கழுவாமல், துணியை மாற்றி விட்டுப் படுத்து விட்டேன். தியானமும் இல்லை. சில பல கனவுகளோடு நீளமான தூக்கம். இனிமையான கனவுகள் வந்ததாக நினைவு.

வெள்ளி, மே 25, 2007

எண்ணங்களும் எழுத்தும்

எப்படியாவது 90 பகுதிகளை சீக்கிரமாக முடித்து விட்டு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆர்வம்.
காலையில் எழுந்த உடன் ஒன்று, இரவு தூங்கப் போகும் முன்னால் ஒரு மணி நேரம் எழுதினாலே 45 நாட்களில், சில நாட்கள் தவறினாலும் ஐம்பது நாட்கள் இரண்டு மாதங்களுக்குள் முடித்து விடலாம்.

இப்போது அழகிய மனது (A Beautiful Mind) என்ற ஜான் நேஷ் பற்றிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அத்தகைய மேதை மனம் சிதைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் உழன்ற பிறகு மீண்டும் மீண்டு வந்த கதை. அவரது மனைவி, விவாகரத்து செய்து விடுகிறாள். அப்புறம், அவருக்கு ஆதரவு கொடுக்கிறாள். அவர் அனுபவித்தது போன்ற துயரங்களையும், நிராகரிப்புகளையும் அனுபவித்த பிறகுதான் அவரது நிலையை முழுதும் புரிந்து கொள்ள முடிந்தது என்று சொல்கிறாள்.

மாலையில் எழுதி முடித்த பிறகு, உடனடியாக டீக்கடைக்குப் போய் வினோத் என்ற பையனைப் பற்றி அந்த கடை உரிமையாளரிடம் பேசினேன். ஏற்கனவே தெரிந்த தகவல்கள்தான். அவன் மாமா கொண்டு விட்டாராம். அவன் பள்ளிக்குப் போக ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னேன். நாளைக்கு ஊருக்குப் போகிறானாம்.

அப்படியே கிளம்பும் போது கடையில் பிஸ்கெட்டு பொதிகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழையும் முன் காவல்காரரைக் கூப்பிட்டுப் பேசினேன். தங்குவதற்கு மூடிய இடம், குழந்தைகளுக்கு நல்ல வளர்ப்பு, கல்வி வாய்ப்புகள் என்று பேசும் நேரத்தில் பையன் வந்து பசி என்றான். வாங்கி வந்திருந்த பொதிகளை வாங்கிப் போனான். அவன் அப்பாவுக்கு விபரம் அதிகம் போதவில்லைதான்.

'பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது, மோதி மிதித்து விட வேண்டும், அவர் முகத்தில் உமிழ்ந்து விட வேண்டும்' என்று எந்த அநீதி தென்பட்டாலும், சோம்பலாலோ, பயத்தினாலோ தள்ளிப் போட்டு விடாமல் உடனேயே தீர்வுக்கு வழி காண ஆரம்பிக்க வேண்டும்.

எல்லோரும் எல்லாமும் பெற வழி காண வேண்டும். அதற்கு சோவியத் அல்லது சீன முயற்சிகளைப் போல தனிமனித உரிமைகளை நசுக்காமல், ஒவ்வொருவரும் தம்மிடம் வந்து சேரும் வளங்களை சமூகப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

தமது ஆற்றல்களை சரிவர பயன்படுத்தி பொருள் ஈட்டுபவர்களை தட்டிக் கொடுத்தல், அல்லவர்களை இடித்துரைத்தல், ஈட்டிய பொருளை தனக்கு தேவையான படி செலவிட்டுக் கொண்டு மிஞ்சியதை பொது நலனுக்கு, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு செலவளிப்பவர்களை ஊக்குவித்தல், எல்லாவற்றையும் தனக்கு என்று பதுக்கி வைப்பவர்களை தட்டிக் கேட்டல், இந்த நான்கையும் சொந்த வாழ்வில் பயன்படுத்துதல் ஆரம்பிக்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் ஏதோ உந்துதலில் மெரீனா கடற்கரை போக முடிவு செய்தேன். தலைக்குக் குல்லா, படிக்க தேவனின் புத்தகத்துடன் வெளியே போய் பார்த்தால்தான் தெரிகிறது, செல்பேசியை உள்ளேயே விட்டு விட்டேன். மீண்டும் திறந்து போய் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்

சாந்தோம் மதுரை மீனாட்சி பவனுக்குப் போய் பார்க்கலாம் என்று எண்ணம். காலை வேளையில் இருக்குமா என்று சந்தேகம் இருந்தாலும் போய்ப் பார்க்க எண்ணம். முன்பெல்லாம் ஞாயிறு தோறும் கடற்கரையில் விளையாடி விட்டு மீனாட்சி பவனுக்குப் போனது பல வாரங்கள் இருக்கும். சுனாமி வந்ததோடு அது நின்றது.

தொலைக்காட்சி, திரைப்பட காட்சிகளிலோ, பலனற்ற விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதிலோ நேரத்தை செலவிடாமால், ஒவ்வொரு நிமிடத்தையும் ஆக்கபூர்வமாக செலவிடும் பாக்கியம் கடந்து ஆறு மாதங்களாகவே கிடைத்திருக்கிறது. இதே பாதையில் நடந்தால், இன்னும் பல மாறுதல்களை கொண்டு வந்து விடலாம்.

குவாண்டம் இயற்பியலின் நிலையற்ற கொள்கைதான் வாழ்க்கையின் அடிப்படை. மனதுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் எண்ணங்கள் தீர்மானிக்கப்படாத நிலையிலேயே உள்ளன. அவற்றை பேச்சிலோ, எழுத்திலோ, செயலிலோ வடிக்கும் போதுதான் அவை திட்டமான வடிவம் பெறுகின்றன. கடந்த காலத்தின் நினைவுகளை வடித்து விட்டால் அவை உருப்பெற்று மனதுக்கு விடுதலை கொடுத்து விடும். மனதிலேயே திடமில்லாத எண்ணங்களாக இருக்கும் போது நாமும் திடமில்லாமல் போய் விடுகிறோம்.

எதையும் சொற்களில் வடித்து விட வேண்டும். எழுத்தில் கொண்டு வந்து விடுவது உத்தமம். அதைத்தான் நான் செய்கிறேன். கடந்த காலத்தின் தளைகளை அறுத்துக் கொண்டு எதிர்காலத்தில் திட்டங்களுக்கு உருக் கொடுப்பது நிகழ் காலத்தில் சொல்லுருக் கொடுப்பதில்தான் இருக்கிறது.

எதிர்மறை நிகழ்ச்சிகளை கலையாகப் படைக்கும் படைப்பாளிகள் செய்வது மிகப் பெரிய தவறு. எண்ணங்களில் இருப்பவற்றை வடிவில் உருவாக்கும் போது அவற்றுக்கான உருவம் கிடைத்து நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்து விடுகின்றன.

பிப்ரவரி 27, 2007 (2)

வியாழன், மே 24, 2007

எழுதுவதற்கு ஒரு தடா...

ஒரு வார விடுமுறை தாங்க முடியவில்லை. ஏதோ பொருள் இல்லாமல் எழுதிக் கொண்டே போவது போல உணர்ச்சி. தீ என்று சொல் சுட்டு விடும் தீர்க்கம் இருக்க வேண்டும், இல்லாமல் எழுதுவது நேரத்துக்கும், கணினிப் பொருளுக்கும் வீண்தான்.

ஆரம்பத்தில் உணர்வுகளைப் பதிவு செய்வதற்காக ஆரம்பித்த இது, பதிய ஆரம்பித்தவுடன் சிறிது சிறிதாக உருமாறிப் போய் விட்டது. யாருக்கும் மனம் புண்பட்டு விடக் கூடாது, பிறர் பெயரைத் தவிர்க்க வேண்டும், எதிர் மறை உணர்வுகளைத் தூண்டக் கூடாது என்று ஒவ்வொன்றாகக் கட்டுப்பாடுகள் நுழைந்து விட்டன.

குமுறும் எண்ணங்களைக் கூட அடக்கிக் கொள்ள நேர்ந்து விட்டது. தவறி விழுந்து விட்ட ஒரு வாக்கியம் ஏற்படுத்திய எதிர்வினைகள் இன்னும் இழுத்துப் பிடித்தலுக்குக் கொண்டு போய் விட்டன.

எழுத்துக்கு ஒரு தற்காலிக நிறுத்தம் போடலாம் என்று வழி விட்டால், ஒரு வாரம் கூட ஆகும் முன், வெளிப்படையான தளர்ச்சிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. இன்று மாலை புதிய உறுதிகள்:
  1. இன்று முதல் எழுத்தை தொடர்தல்.
  2. எழுதும் எதையும் வெளியிடப் போவதில்லை.
  3. 90 ஒரு மணி நேர பகுதிகள் நிறைந்த பிறகு ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்து வெளியிடலாம் என்று தோன்றினால் பதியலாம், அல்லது பொதுவில் காட்டாத பதிவில் போடலாம், அல்லது கணினியின் ஒரு ஓரத்தில் விட்டு வைக்கலாம், அல்லது அழித்தே விடலாம்.
சில நாட்களில் அடுத்தவருக்கு முகம் சுழிக்கும் காட்சிகள் தோன்றலாம், சில நாட்கள் பலன் உள்ளவாக இருக்கலாம். எழுதுவதன் நோக்கம், மனதில் புதைந்து கிடக்கும் எண்ணக் குவியல்களை அடுக்குகளை அலசிக் காயப் போட்டு விடுவது. அதைத் தவிர வேறு பலனே இல்லாமல் போனாலும் கவலை இல்லை.

இப்படி எழுத வேண்டும். ஒரு மணி நேரம் ஒரு நாளைக்கு என்று திட்டம் வைத்துக் கொண்டாலும், ஒரு நாளைக்கு அதிகமாகக் கூட எழுதலாம். ஏற்றுக் கொண்ட பொறுப்புகளிலிருந்து விடுப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

மனம் ஒரு அற்புதமான கருவி. அதை பழைய எண்ணங்களின் குவியலில், எண்ணச் சுமைகளில் கழுத்து நெரிபட வைப்பது சரியில்லை. என்னதான் நடந்தது, நடக்கிறது என்பதை வார்த்தைகளில் வடித்து மனதுக்குள் இடம் செய்து கொள்ள வேண்டும். தொட்டனைத்துதானே மணற்கேணி ஊறும்.

கட்டிப் போடும் பழைய நினைவுகள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், பெருமைகள் எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு வந்து விட்டால் அவற்றின் சுமை இறங்கி விடுகிறது. வெளிப்படையாக பதிவதற்கு எழுதும் போது செய்திகள் கழுத்து நெரிபடுகின்றன. வாக்கியங்கள் அழகாக வர வேண்டும் என்று சில தடை பட்டு விடுகின்றன.

எந்தத் தடையுமின்றி எழுதுவதுதான் இப்போதைய நோக்கம். தொண்ணூறு மணி நேரத்துக்கான எழுத்தில் எழுத வேண்டியது எல்லாம் வந்து விடும் என்று நினைக்கிறேன்.

காவல்காரர் குடும்பம்

இரண்டு நாட்களாக தூக்கத்தில் நிம்மதியே இல்லை?

கதவின் வெளியே காவலாளியின் குடும்பம், இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகள். ஒரு பையன் ஐந்து வயதிருக்கும், பெண் குழந்தைக்கு இரண்டு வயதிருக்கும். எப்போது பார்த்தாலும் ஒழுகும் மூக்கு. மணலில் உருண்டு கொண்டே இருக்கின்றன. மாலை வேளையில் பையன் தொலைக்காட்சி அருகில் முகத்தை ஒட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறான். பெண் குழந்தை காலையில் ராகம் இழுப்பது போல் அழுதுக் கொண்டே திரியும்.

வீட்டில் எல்லாக் கதவுகளையும் மூடிய பிறகும் கொசுவுக்கு திரவ மருந்தை சொருகி விட்டுத்தான் தூங்க முடிகிறது. குளிரில் சளி பிடித்துக் கொள்கிறது. இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் எப்படி குளிரைத் தாங்குகின்றன? எப்படி கொசுக் கடியில் தூங்குகின்றன?

இரண்டு நாட்கள் முன்பு பார்த்தால் ஒரு சட்டியில் புகை போட்டு வைத்திருக்கிறார்கள். கொசுக்கள் ஓடும் அளவுக்கு புகை வளர்த்தால் தூங்குவது எப்படி? இப்படி இரண்டு குழந்தைகளும் இரண்டு பெரியவர்களும் வெளியே தூங்கும் போது, அவ்வளவு பெரிய வீட்டில் ஒரு மூலை அறையில் மூடிக் கொண்டு தூங்க மனம் வரத்தானே செய்கிறது? இவர்களை உள்ளே வந்து படுக்கச் சொன்னால் குறைந்தா போய் விடும்?

இப்படி படுக்கச் சொன்னால் எல்லோரும் என்ன பேசுவார்களோ என்ற எண்ணம்? இரண்டாவது அவர்களும் புழங்கினால் அழுக்காகி விடுமே, யார் கழுவி விடுவார்கள் என்று குழப்பம். சொல்லித்தான் பார்ப்போமே, குடியா முழுகி விடும்? யாராவது வந்தால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

பையனின் ஒழுகும் மூக்கைச் சிந்தக் கற்றுக் கொடுத்து நன்றாகக் குளிப்பாட்டி ஆடைகள் அணிவித்து விடலாம். அந்தச் சின்னஞ்சிறு பெண் தரையில் சிதறிக் கிடக்கும் பொரி கடலைகளைப் பொறுக்கித் தின்று கொண்டிருக்கும் போது, பையில் முந்திரிப் பருப்புகளோடு உள்ளே போக எப்படி மனம் வந்தது?

அந்தப் பெண்ணுக்கு பிஸ்கெட் பொட்டலம் வாங்கிக் கொடுப்பது உனக்கு பொறுப்பு இல்லையா?

குழந்தைகளுக்கு தினமும் சாப்பிட பொருட்கள், தூங்குவதற்கு இடம், உடுத்த நல்ல உடை, விளையாட விளையாட்டுப் பொருட்கள் இவை அனைத்தும் கொடுக்க வேண்டும். சோம்பேறியாக இருப்பது பாவம், இந்த விஷயத்தில். மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்காக படுத்திருக்கும் குழந்தைக்கு தொண்டு செய்வதுதான் தொண்டு என்று இல்லை. நமது கதவுக்கு வெளியே இருக்கும் மனித அவலத்தை சரி செய்யாமல் இருப்பவனுக்கு மற்றதைப் பற்றிப் பேச அருகதையே இல்லை.

இதைச் செய்தால் பிறர் ஏளனம் செய்வார்களோ என்று ஒரு எண்ணம். அப்படி பார்த்து பார்த்துதான் எல்லா அநீதிகளும் உலகில் நடக்கின்றன.

இப்படி எழுதிப் பார்த்தால்தான் குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கிறது. ஊரோடு ஒத்து வாழ்வதற்கு முன்பு என்னோடு நான் ஒத்து வாழ வேண்டுமே? என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொண்டால்தான், அடுத்த நிலைக்கே போக முடியும். நான் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்றால் எனது நம்பிக்கைகளின் படி நடந்து கொள்ள வேண்டும்.

அதனால் என்ன விரோதம் வந்தாலும் சரி, உறவுகள் எல்லாம் விலகிப் போனாலும் சரி, உயிரே போனாலும் சரி, கொண்ட நம்பிக்கை, அது நம்பிக்கையாக இருக்கும் வரை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கையில் எடுத்த பணிகள் நினைத்த இலக்கை நோக்கிப் போக உதவும்.

யாரை ஏமாற்றினாலும், என்னை நானே ஏமாற்றிக் கொள்ள முடியாது. கண்ணெதிரே வறுமையில் உழலும் இரண்டு குழந்தைகளுக்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும்.

சமூக அக்கறை

சில நாட்களாக சிறு பையன்கள் வேலை செய்வதைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் போகும் மரத்தனம் வந்து விட்டது. இன்று காலையில் எல்&டி முன்பு சிவப்பு விளக்குக்கு வண்டியை நிறுத்தாமலேயே வந்ததும் சிறிதளவுதான் உறுத்தியது. இப்படியே தொடர்ந்தால் செத்துப் போகலாம்.

ஏதோ சுவையான உணவுக்கு வழியில்லாமல் போய் விடும் என்றுதானே அந்தப் பையன்களைப் பற்றி உரிமையாளரிடம் பேசவில்லை. இந்த டீக்கடைப் பையனைக் கிண்டல் செய்வதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறாய்?

இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. செய்ய வேண்டிய வேலைகளை செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து அந்தப் பையன்களை பள்ளிக்கு அனுப்பும் வழியைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் முழுமையான குழந்தைப் பருவம் கிடைக்க வேண்டியது அவர்களது அடிப்படை உரிமை. அதற்கு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு உண்டு. அந்தப் பொறுப்பை தட்டிக் கழிப்பதோ, பாராமுகமாக இருப்பதோ சரி கிடையாது.

(பிப்ரவரி 27, 2007)