என்னைப் பற்றி

எனது புகைப்படம்
mobile : 9884070556
நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பு, 
சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்ப பட்டம்
தேவாஸ் (மத்திய பிரதேசம்) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (டாடா) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (பிஎல்சி) நிறுவனத்தில் வேலை
சொந்த நிறுவனம் பிஎஸ்ஜி லெதர் லிங்க். 

Sunday, January 15, 2012

சென்னை மக்கள்


வெள்ளிக் கிழமை காலையில் வழக்கமான காலைக்கடன்கள், 8.30 மணிக்கு இட்லிக் கடையில் காலை உணவு முடித்த பிறகு வாசிப்பு, கணினி, இணையம் என்று நேரம் போன பிறகு 11.30க்குப் புறப்பட்டேன். தொலைபேசி, இப்போதுதான் புறப்படுகிறேன் என்று தகவல் சொன்னேன். அவரும் அப்போதுதான் புறப்படுகிறார். வடபழனி கோயில் வரை சீட்டு, ஆற்காடு சாலை படு மோசமாக ஆகி விட்டிருக்கிறது. பேருந்து ஓட்டுபவர்கள் நிச்சயம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

570 அல்லது 70 வசதியாக கிடைக்காமல், கிண்டி வரை போகும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். கிண்டியில் இறங்கி M49 திருவான்மியூர் பேருந்தில் ஏறிக் கொண்டு தொலைபேசினேன். அவர் சேர்ந்து விட்டாராம், சாப்பிடுவதற்கு சங்கீதா போய் விடலாம் என்று சொன்னார். நான் மத்ய கைலாஷ் என்றுதான் சீட்டு எடுத்திருந்தேன். பேருந்து நிறுத்தமே அங்குதான் போலிருக்கிறது. நடத்துனரிடம் போய் மத்திய கைலாஷ் சீட்டு எடுத்திருக்கிறேன், அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாமா, சீட்டு தனியாக வாங்க வேண்டுமா என்று கேட்டால், தேவையில்லை என்று சொல்லி விட்டார்.

நான் அப்படியே புத்தகக் கண்காட்சி போக வேண்டும். ஆட்டோவில் கேட்டோம். கழுத்தில் பட்டி அணிந்திருந்தார் ஆட்டோ ஓட்டுனர். 60 ரூபாய் கேட்டு 50 ரூபாய் ஒத்துக் கொண்டார். முதுகில் வலி வந்ததாம் என்ன காரணம் என்றே தெரியவில்லை நியூரோ சர்ஜனிடம் போய் மாத்திரை சாப்பிடுகிறார். மாத்திரை ஒரு பட்டி 315 ரூபாய் ஆகிறது. டாக்டருக்கு பீஸ் 800 ரூபாய், இந்த டாக்டர் நல்லவர் 200 ரூபாய்தான் வாங்குகிறார், குமரேசன் என்று பெயர். 20000 ரூபாய் செலவாகி விட்டது. 2 மாசமா ஆட்டோவே எடுக்காமல் வீட்டில் இருந்தார். அப்படியே உட்கார்ந்திருக்க முடியாது என்று வந்து ஓட்டுகிறார். தலையைத் திருப்ப முடியாது. முதுகில் குடைச்சல் போன்ற வலி மட்டும் குறைந்திருக்கிறது.

நான் 47க்குக் காத்திருந்தேன். 47A அல்லது A47ல் ஏறியிருக்க வேண்டும். வெறும் 47ல் ஏறினேன். ஏறிய பிறகு பார்த்தால் 100 ரூபாய் நோட்டுகள்தான் இருந்தன. நடத்துனரிடம் நோட்டை நீட்டியதும் முறைத்துப் பார்த்தார், பச்சையப்பா கல்லூரி என்று சொன்னதும், போகாது  இறங்கிக்கோ என்று ஐஐடி அருகில் இறக்கி விட்டார்.

அங்கிருந்து நடந்து அண்ணா பல்கலை நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தேன். வழியில் கேன்சர் மருத்துவமனை வாசலில் கழுத்தில் பட்டை போட்ட அதே ஆட்டோ ஓட்டுனர் நின்று இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

பேருந்துகள் கூட்டமாகவே போயின. கோயம்பேடு போய் அங்கிருந்து 15B பிடிக்கலாம் என்று உத்தேசம். கோயம்பேடு போவதற்கு 570 அல்லது வெளியூர் பேருந்துகள் வர வேண்டும். கிண்டி, தாம்பரம், வில்லிவாக்கம் பேருந்துகள் வரிசையாக போயின. வந்து நின்ற பாண்டிச்சேரி வண்டி விரைவுப் பேருந்தில் ஏறினேன். 20 ரூபாய் சீட்டு. கூட ஏறினவர்கள் எல்லோரும் 10 ரூபாய் நோட்டுகள், 20 ரூபாய் நோட்டுகள் என்று கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு முன் இருக்கையில் உட்கார்ந்த பெண் 100 ரூபாய் நோட்டு நீட்டினார். சில்லறை வேண்டும் என்று நடத்துனர் சொன்ன பிறகு தேடி எடுத்து சில்லறை காசுகளைக் கொடுத்தார். என்னிடம் சில்லறை சுத்தமாகவே இல்லை. 80 ரூபாய் திரும்பிக் கொடுத்து விட்டார்.

ஜவஹர்லால் சாலை குறுகலாக பேருந்துகள் போவதற்கு சித்திரவதையாகத்தான் இருக்கிறது. ஒரு வழியாக முக்கி முனகிக் கொண்டு சேர்த்தார். நகர ஆரம்பித்திருந்த 15Bல் ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். புத்தகக் கண்காட்சி போய் விட்டு வெளியில் வந்து பேருந்துக்கு. 15B கொஞ்ச நேரம் கழித்து கூட்டமாக வந்தது. 27ம் எண்ணில் ஏறினேன். நின்று கொண்டேதான் போக வேண்டியிருந்தது. எல்லா பேருந்துகளிலும் பொங்கலுக்கு ஊருக்குப் போகும் பைகளுடன் மக்கள் கூட்டம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி 570 குளிர்சாதன பேருந்தில் ஏறிக் கொண்டேன். இன்னொரு முறை இணையம் பார்க்க முடிந்தது இந்த பேருந்துக்குள். நல்ல சாலை நெருக்கடி. கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி விட்டது.

காசி தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வந்து சேர்ந்தேன். வாசலிலேயே வண்டியில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

விஷ்ணுபுரம் நாவல் படிக்கிறாராம். அது வெளி வந்த காலத்தில் பெருத்த அலையை உருவாக்கியதாம். பலருக்குப் புரியவில்லையாம், பலர் அதை இந்துத்துவ பிரச்சார நாவல் என்று  விமர்சனம் செய்தார்களாம். இன்னொரு நண்பர் இரண்டு நாட்கள் முன்புதான் அதைப்பற்றிச் சொல்லியிருந்தார். விவாதத்தின் மூலம் ஒரு அரசு அதிகாரத்தை தீர்மானிக்கும் முறை, அதன் வழியாக இந்து ஞான மரபுகளை விளக்கும் நாவல். வாங்கிப் படிக்க வேண்டியதில்லை என்று சொல்லியிருந்தார்.

ஜெயமோகனை நேரில் பார்த்து பழகியிருக்கிறாராம். அவரது மனைவி அருண்மொழி தபால்நிலையத்தில் வேலை செய்பவரையும் தெரியுமாம். ஒரே இரவில் 250 புல்ஸ்கேப் தாள் எழுதிக் குவித்து விடுவாராம் ஜெயமோகன். தூங்காமல் எழுதுவாராம்.

'அவரது அப்பா, கம்யூனிச தொழிற்சங்கத்தில் இருந்தவர். அவரது அம்மா வாசிப்பு மிகுந்தவர், இலக்கிய விவாதங்கள் நிறைந்த வீட்டுச் சூழல். சுந்தரராமசாமியைப் பார்த்து அவர் மனதில் தோன்றுவதை எழுத்தில் வடித்து விடும்படி அறிவுரை சொல்ல அப்படித்தான் எழுத்தில் இறங்கினாராம்.'

சாப்பிட்டு விட்டு ஆட்டோ பிடித்தேன். 'நீங்களே சொல்லுங்கள்' என்றார் ஆட்டோ காரர். ஏதோ கம்பெனியில் வேலை செய்கிறாராம். காலையிலும் மாலையிலும் ஆட்டோ ஓட்டுவாராம். 40 ரூபாய் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டார். 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் வாங்கினாராம். வங்கியில் வேலை செய்தவர்கள் தெரிந்தவர்களாம், 10000 ரூபாய் இவர் போட வேண்டும், மீதி லோன், அரசு மானியமும் உண்டு.

வாடகைக்கு பகலில் ஓட்ட விட்டால் காசும் வராது, செலவும் அதிகம். அதனால் இவரே காலையிலும் மாலையிலும் ஓட்டுகிறார். இப்படி ஏதாவது சம்பாதிச்சால்தான் உண்டு என்றார். வண்டியை எடுத்துக் கொண்டு போய் சவாரியே கிடைக்கவில்லை. அதுதான் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பி வருகிறேன். வீடு ராமாபுரம்தான். டாஸ்மாக் கடை அருகில் இறக்கி விட்டு விட்டுப் போனார்.

காலையில் 3 மணியிலிருந்தே கொட்டு அடித்துக் கொண்டு போகி பண்டிகை ஆரம்பித்து விட்டது. சத்தத்தில் சரியாக தூங்க முடியவில்லை.

உரக்க ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அந்த அம்மாவின் மகன் போலிருந்தது. 'நான் சொல்வதைக் கேளு அப்பதான் நீ நல்லா இருக்க முடியும். நீ சாகப் போகும் போது நான்தான் முதலில் வருவேன் அவங்க எல்லாம் அப்புறம்தான் வருவாங்க' என்று அலட்டிக் கொண்டிருந்தார். 'இப்படி எல்லாம் நடந்து கொள்வதால்தான் நான் நல்லா இருக்கேன்' என்று சொன்னார். பல் தேய்க்கப் போகும் போது எட்டிப் பார்த்தால் நல்ல பளபள சட்டை போட்டு உட்கார்ந்திருந்தார்.

பல் தேய்த்து விட்டு அறைக்கு வந்த பிறகு சிறிது நேரத்தில் கீழே இருந்து குரல். 'ஒரு 20 ரூபாய் இருந்தா கொடும்மா' என்று அம்மாவிடம் கடன் கேட்கிறார். 'பெட்ரோல் போடணும், 500 ரூபாயாத்தான் இருக்கு' 'என்னிடமும் 500 ரூபாயாத்தான் இருக்கு, சில்லறையா 7 ரூபாய்தான் இருக்கும்' என்கிறார் இவர். 'எதுக்கு 20 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறாய், 500 ரூபாயை மாத்தி போட்டுக்கோ' என்று அனுப்பி விடுகிறார். சினிமாவில் டிரைவராக இருக்கிறாராம் இவர்.

மாலையில் புத்தகக் கண்காட்சியிலிருந்து திரும்பும் போது கோயம்பேடு பாலத்தில் நெருக்கடி அதிகமாக இருக்கவே, இடது புறம் எடுத்து அரும்பாக்கம் திசையில் பாலத்தில் ஏறினார்கள். நான் இறங்கி நடந்து கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி ஆட்டோ பிடித்தேன். 80ல் ஆரம்பித்து 130ல் முடித்தார். அவர் பேசும்போதே சாராய நெடி அடித்தது.

'பார்த்து ஓட்டுங்க'
'பொங்கலுக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க வேண்டும் அதுக்குத்தான் ராத்திரி ஓட்டுகிறேன் எப்போதும் குடிப்பதில்லை, இது ஒரு நண்பன் வாங்கிக் கொடுத்தது'

டாஸ்மாக்கில் விற்பனையாளராக வேலை செய்கிறாராம். பணி நிரந்தரம் செய்வதாக வாக்களித்தார் ஜெயலலிதா செய்யவில்லை. 3000 ரூபாய் சம்பளம், விற்பனைக்கேற்ப இன்சென்டிவ். இன்சென்டிவ் கிடைக்கும் என்று இருந்திருக்கிறார். கிடைக்கவில்லை, வீட்டுக்குப் போனால் மனைவி குழந்தைகளுக்குத் துணி எடுக்க காசு கேட்கிறார். பக்கத்து வீட்டுக் காரரிடம் ஆட்டோ வாங்கி கேஸ் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார். இது வரை 240 ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.

'காலையில் 10 மணி முதல் இரவு 10 மணி வரை டுயூட்டி. இரண்டிரண்டு பேராக 2 ஷிப்டு, கணக்கு ஒப்படைக்க குழப்பம் வரும் என்று ஒரே குழு நாள் முழுவதும் பார்த்து விட்டு அடுத்த நாள் ஆப் எடுத்துக் கொள்வார்கள்' என்றார்.

'குடிக்க வருபவர்களைப் பற்றி பரிதாப்படுவதில்லை. விற்பதற்குத்தான் எனக்குச் சம்பளம், நிறைய விற்றால் இன்சென்டிவ். அவனைப் பேசித் திருத்துவது என் வேலை இல்லை' என்று தெளிவாகப் பேசினார்.

வீட்டருகில் இறங்கிய பிறகு பார்த்தால் என்னிடம் 115 ரூபாய்தான் சில்லறை, அவரிடம் 40 ரூபாய்தான் சில்லறை. 15 ரூபாய் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் மனமில்லை. நல்ல வேளையாக மளிகைக்கடைக்காரர் திறந்திருந்தார். 100 ரூபாய்க்கு மாற்றிக் கொண்டேன். இரண்டு 50 கேட்டும் 50ம் 10களுமாக கொடுத்தார்.

பணத்தைக் கொடுத்து விட்டு நடக்கும் போது கோலம் போடும் சிறு பெண், எதிரில் இருக்கும் பழைய பேப்பர் கடை பையனிடம், 'நாளைக்கு தமிழ்ப் புத்தாண்டா' என்று சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இன்னொருவரிடம் கேட்டு ஆமாம் என்று சொன்னார்.

0 கருத்துரைகள்: