என்னைப் பற்றி

புதன், டிசம்பர் 23, 2009

தீமிதிப்பு

யூனிக்சு நிரல் எழுதுதலில் core dump என்று ஒரு நிகழ்வு உண்டு. மென்பொருள் என்று செயல்படும் போது ஏதாவது பிழை நேர்ந்து விட்டால், அந்த நேரம் இருக்கும் தகவல்களை எல்லாம் ஒரு கோப்பில் எழுதி விட்டு வெளியேறி விடும். நிரலாளர் கோப்பைப் படிப்பதன் மூலம் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். அதைப் போல நாட்குறிப்புகள் பயன்படும்.

அடிவயிற்றுக்குக் கீழ் ஏதாவது நோய்கள் வந்தால் கவனமாக இருக்கவும் என்று ராசி பலன் ஒன்றில் கொஞ்ச நாள் முன்பு வந்திருந்தது. முதலில் ஆரம்பித்தது அடிவயிற்றில் தொடைக்கு அருகில் வலி. திருப்பதியில் மலை ஏறும் போது வலித்தது, நடந்ததால் வலிக்கிறது என்று விட்டு விட்டேன். அதன் பிறகு தொடர்ந்து கூடிக் கொண்டே இருந்தது. என் மனதின் உருவகம், உள் உறுப்பு ஏதோ காயம் அடைந்து அதில் நீர் கோர்க்கிறது என்று. வீக்கம் நாளுக்கு நாள் இடம் நகர்வது போலத் தெரிந்தது. அதுவும் தொடர்ச்சியான வீக்கம் கிடையாது. படுத்துக் கிடக்கும் போது வீக்கம் வடிந்து விடும், எழுந்து நடக்கும் போது உட்கார்ந்திருக்கும் போது உப்பி வீங்கி விடும்.

இறுக்கமான உள்ளாடை அணிந்தால், அதன் விளிம்புகள் இந்த வீக்கத்தின் மீது பட்டுக் கொண்டிருக்கும், அழுத்தம் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது வலி தாங்க முடியாமல் சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வந்திருக்கிறேன்.

இணையத்தில் அறிகுறிகளை உள்ளிட்டுத் தேடி விபரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது கூட புண்ணைத் தொட்டால் வலிப்பது போன்ற வலி உணர முடிகிறது. அதைத் தொடர்ந்து வயிற்றுக்குள் கடுப்பு. அந்த வலி மிகவும் நுண்ணியது. இந்த வீக்கமும் அந்தக் கடுப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையா என்று தெரியவில்லை. வெறும் வயிற்றில் வலி உயிரை வாங்கி விடும். காலையில் எழுந்த உடன், ஏதாவது சாப்பிட்டு விட்டுப் புறப்படும் போது அதிகமாக இருந்தது. சில நாட்களிலேயே வயிற்றுப் புண்ணாக இருக்கலாமோ என்று ஒரு நண்பர் சொல்ல அதை சரி செய்ய முற்பட்டேன். சில நாட்களுக்கு மிளகாய்ப் பொடி, தனியா பொடி சேர்த்த உணவுகளை ஒதுக்கி வைத்தேன். சீரகம், மோர் அதிகமாக சேர்த்துக் கொண்டேன். வலி கிட்டத்தட்ட நின்று விட்டது. எப்போதாவது உணவு கட்டுப்பாடுகளை மீறிப் போனால் திரும்பவும் வலிக்கும்.

இந்த இரண்டு வலிகளுமே கூடவே இருப்பதால் பழகி விட்டன என்று ஆகியிருக்கின்றன.

கடந்த 10 நாட்களாக வலது கால் இரண்டாவது விரலில் நகச்சுத்தி. நகத்தை வெட்டுவது என்பது கை நகத்தால் உரிப்பதுதான். இந்த விரலில் நகம் உரித்த போது விளிம்பில் ஆழமாக பிய்த்து எடுத்து சீழ் வைத்துக் கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு கை விரலில் அப்படி ஏற்பட்டு வலியில் துடித்து, மருத்துவமனையில் கீறி விட்டது எல்லாம் நினைவு வந்தது. இந்தத் தடவை மருத்துவரைப் பார்க்கப் போவதில்லை என்று ஒரு உறுதி.

1. நல்ல வேளையாக அலுவலகத்துக்கு நடந்து போவது நின்று போய் இரு சக்கர வண்டியில் போகும் வசதி கிடைத்து விட்டது.
2. அந்த விரலில் தண்ணீர் பட்டு விடாமல், குளிப்பதை ஏற்பாடு செய்து கொண்டேன். காலை ஒரு நாற்காலியின் மீது தூக்கி வைத்துக் கொண்டு குளித்தால் சரியாகி விடுகிறது.

இருந்தாலும் சில சமயம் வலி விண் விண்ணென்று தெறிக்கும். இரவு தூங்கும் போது மூடியிருக்கும் போர்வை இசகுபிசகாக பட்டு விட்டால் வலியில் தூக்கமே போய் விடும். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது வலிக்கும். அந்த பாதமே நோயாளி பாதமாக காட்சியளிக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு புள்ளியாக பழுக்க ஆரம்பித்தது இப்போது பரவலாகி நகத்தை உட்பக்கமாக அரைவட்டமாக சூழ்ந்து விட்டிருக்கிறது. வலியும் இடம் நகர்ந்து நடுவில் இருக்கிறது. இது எந்த திசையில் போய் முடியும் என்று தெரியவில்லை. நகம் நிச்சயமாக உதிர்ந்து போகும். இன்னும் எவ்வளவு நாளாகுமோ!

டென்ஷன் இல்லாமல் சாப்பிடுவது, அமைதியாக மனதை வைத்திருப்பது என்று உடல் கூட எடை அதிகமாக ஆரம்பித்து விட்டது. பெரிய பெரிய மாற்றங்களை அதிகக் கலக்கம் இல்லாமல் எதிர் கொள்ள முடிகிறது. நமக்கு ஒவ்வாத, நம்மை ஏமாற்றும் தொடர்புகளையும் உறவுகளையும் விட்டு நகர முடிந்து விட்டது. வாடிக்கையாளர்களில் நச்சுப் பிடித்தவர்களை விட்டு விலகி விட்டோம். வேலை செய்பவர்களும் நெருப்பில் புடம் போட்டு தங்கமாக வெளி வந்தவர்கள் மட்டும் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் வெவ்வேறு காரணங்களில் வெளியேறும் வாய்ப்புகள்.

1. வேலை செய்யும் கெடுபிடிகள் வரையறைகள் பிடிக்கவில்லை
2. சம்பளம் போதவில்லை
3. சம்பளம் தாமதமாகிறது

பயிற்சி அளித்து, அவர்கள் கற்றுக் கொள்வதற்கு காசு கொடுத்து தவறுகளைச் சுமந்து வளர்த்திருக்கிறோம். மனதளவில் பெரியதொரு சோர்வைக் கொடுத்து விடக் கூடியது. அப்படி நடந்து விடாமல் சமாளித்து விட்டேன்.

வியாழன், டிசம்பர் 17, 2009

மணிமாலை

1.
பணம். ஒருவருக்கு 10 ரூபாய் கொடுக்கிறோம் என்றால் 10 ரூபாய் மதிப்பிலான நமது உழைப்பை அவருக்குத் தருகிறோம். இதுதான் பணத்தின் உண்மையான பயன்பாடு. நமது உழைப்பை சேமித்து வைத்து பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தும் ஊடகம் பணம்.

நடைமுறையில் உழைப்புக்குத் தொடர்பில்லாமல், பணம் பாய்வது நடந்தாலும், பெருவாரியிலான பரிமாற்றங்கள் உழைப்பு = பணம் என்ற வாய்ப்பாட்டின் அடிப்படையில் நடப்பதால்தான் சமூகம் முன்னேறி செல்ல முடிகிறது.

இதன் மறுபக்கத்தைப் பார்க்கலாம். ஒருவரிடமிருந்து 10 ரூபாய் வாங்கினால், அல்லது 10 ரூபாயை எதிர்பார்த்தால் அவருக்கு 10 ரூபாய் மதிப்பிலான உழைப்பை கொடுத்திருக்க வேண்டும்.

1993ல் டாடா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த போதே உள்ளுணர்வு ஒன்று நாம் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வேலை செய்து விட வேண்டும் என்று செலுத்திக் கொண்டே இருந்தது. பல நேரங்களில் அலுவலக வேலைக்காக செலவழித்த பணத்தை, அலுவலகத்திலிருந்து கேட்பதைத் தவிர்த்திருக்கிறேன். ஆரம்ப நாட்களில் பயிற்சியும் அளித்து பணமும் கொடுத்த நிறுவனத்தின் மீது எப்போதுமே நன்றியுணர்ச்சி இருந்தது.

நிறுவனத்தில் வேலை செய்யும் போது இன்னின்ன வசதிகள் எனது உரிமை என்று மற்றவர்கள் போட்டி போடும் போது அதில் சேர்ந்து கொள்ள மனம் வந்ததே இல்லை. நிறுவனத்தின் எந்த ஒரு கூடுதல் வசதியையும், நன்றிக் கடன் படுகிறோம் என்று உணர்வுடனேயே அணுகியிருக்கிறேன்.

டாடா நிறுவனத்தின் சார்பாக சாங்காயில் வேலை பார்க்கப் போன போதும், கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வரை, வாங்கிய சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு வரை எனது அலுவலகப் பணிகளை சரிவர செய்வதற்கு செலவழித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பல காரணங்களால் அந்த ஒழுக்கத்தில் தவற நேர்ந்தது. (வேலை செய்ததை விட அதிக சம்பளம் கிடைக்க, அது முழுவதையும் சொந்த பயன்பாட்டுக்குத் திருப்பிக் கொண்டிருந்தேன்).

பிஎஸ்ஜி லெதர்லிங்க் ஆரம்பித்த போது அதே மாதிரியான அணுகுமுறைதான் எனக்கு இருந்தது. ஒருவருக்கு இத்தனை ஆயிரம் ரூபாய்கள் ஊதியம் என்று வரையறுத்தால் அதற்கு ஈடான உழைப்பை, பங்களிப்பைக் கொடுத்தே தீருவது என்ற பொறுப்பு அவருக்கு இருக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது.

2.

டாடா நிறுவனத்தில் சேர்ந்த போது ஆரம்ப நிலை தொழில்நுட்ப பயிற்சி அலுவலராக சேர்ந்தேன். அந்த நாளிலிருந்தே அந்த நிறுவனத்தில் வாழ்நாள் முழுவதும் வேலை செய்யப் போவதாகவும், நிறுவனத்தின் தலைவராக உயரப் போவதாகவும் உருவகித்துக் கொண்டுதான் ஒவ்வொரு நாளும் பணி புரிந்து கொண்டிருந்தேன். மத்திய பிரதேசத்தில் 4 ஆண்டுகள், சீனாவில் 1 ஆண்டு வரை அதே அடிப்படையில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த ஒழுக்கத்துக்கும் பங்கம் வந்து அடுத்த நிறுவனத்துக்குப் போனேன். எனது அடிப்படை இயல்புக்கு அது பொருந்தாத ஒன்றுதான். அதனால்தானோ என்னவோ, தனியாக பிஎஸ்ஜி லெதர்லிங்க் தொடங்கி விட்டேன்.

எந்த உறவுகளிலும் - நட்புகள், கூட வேலை பார்ப்பவர்கள், நிறுவனத்தில் சேருபவர்கள், முக்கியமாக திருமண உறவு - பிணைப்பு என்பது வாழ்நாள் முழுமைக்குமானது என்றுதான் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. எல்லாமே தற்காலிகம்தான், ரயில் பயண நட்புகள் போல இறங்கும் இடம் வந்தால் பிரிந்து போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்ற வேதாந்தம் படித்தாலும், என் இயல்பில் அது சேரவே இல்லை.

நிறுவனத்திலும் சேருபவர்கள் ஒவ்வொருவரையும் நீண்ட கால பணிக்குத் தயாரிப்பதுதான் நோக்கமாக இருந்தது. ஒரு சின்ன நிறுவனத்தில், வேலைக்கு வருபவர்களை ஆகச் சீக்கிரம் எவ்வளவு வேலை வாங்கி மதிப்பை சம்பாதிப்பது என்ற போக்கில் இல்லாமல், பயிற்சி கொடுப்பது, கற்றுக் கொள்ளுதல் என்ற நோக்கில்தான் முடிவுகளும் அமைப்புகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

3.
குழந்தையை படிக்க அனுப்பலாம் . குழந்தை சின்ன வயதில் உடம்புக்கும், மனதுக்கு நல்ல ஊட்டம் அளித்து பல ஆண்டுகள் பேணிப் பாதுகாத்தால் வளர்ந்த பிறகு குழந்தையின் பணிகள் உயர் மதிப்பில் அமையும். இது ஒரு முறை.

இரண்டாவது முறையில் குழந்தையை வேலை செய்ய அனுப்பலாம். அடிப்படைத் தேவையான உணவு அளித்து நான்கைந்து வயது ஆனதும் வேலைக்கு அனுப்பி, குழந்தை சம்பாதிக்கும் காசில் சாப்பிட்டுக் கொள்ளட்டும். அந்த சம்பாத்தியத்தில் பெற்றோரும் தமக்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். திறமை உள்ள குழந்தை அப்படிப்பட்ட வேலையிலேயே புதிது புதிதாக கற்றுக் கொண்டு 20 வயதுக்கு மேல் திறமையாக பணி புரியலாம். ஆனால், பெரும்பாலான குழந்தை தொழிலாளர்களின் எதிர்காலம் போராட்டமாகவே போய் விடுகிறது.

குழந்தை பருவத்தில் வேலைக்கு அனுப்பக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாக இருக்கிறது.

குழந்தை வேலைக்குப் போகவில்லை என்றால் சாப்பாடு, படிப்புச் செலவுகளை யார் பார்த்துக் கொள்ள வேண்டும்? குழந்தையை பெற்றெடுத்தவர்கள், தமது தற்போதைய உழைப்பின் மூலம் சம்பாதிப்பதை அல்லது முந்தைய உழைப்பில் சேமித்ததைக் குழந்தையின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும். பொதுவாக இளமையில் கல்வி பெற்ற பெற்றோர்கள் உயர் வருமானம் ஈட்டி, குழந்தைகளை படிக்க அனுப்ப முடியும். கல்வித் தேர்ச்சி இல்லாத பெற்றோர்களின் வருமானம் குறைவாக இருந்தால், அவர்கள் குழந்தைகளும் கல்வி பெறாமல் போய் விடுவது நடக்கிறது.

'அப்படித் திறன் இல்லாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். வசதி இல்லை என்றால் சாகட்டும், அறியா மனிதர்களாக வாழட்டும்' என்று முதலாளித்துவ பொருளாதார முறையில் ஒரு வாதம் உண்டு. நடைமுறை சமூகங்களில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று சமூகத்தின் வாய்ப்புகள் குறைந்த பிரிவினருக்கு வசதி செய்து கொடுப்பது நடக்கிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு இலவச உணவு கொடுப்பது கூட வறுமையின் தளைகளிலிருந்து அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு வழி.

4.
வணிக நிறுவனங்களுக்கு இதைப் பொருத்திப் பார்க்கலாம். நிறுவனம் வளர்ச்சி பெறும் வரையிலான பயிற்சிகள், கற்றல்கள், நடைமுறை செலவுகளுக்கு பணம் எப்படிக் கிடைக்கும். நிறுவனத்தின் வருமானத்திலிருந்து அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும் (குழந்தையின் ஊதியத்தில் படித்துக் கொள்ள வேண்டும்). அல்லது முதலீடு திரட்டி வளர்ந்து வர வேண்டும். உறுதியான ஒரு நிறுவனம் உருவாக பல ஆண்டுகள் பிடிக்கலாம்.

வளர்ந்த, முதிர்ச்சி பெற்ற பொருளாதார சமூகங்களில் புதிய நிறுவனங்களைப் பேணி காக்க அமைப்புகள் இருக்கின்றன.

வியாழன், நவம்பர் 12, 2009

ஒரு மழைநாள்

நேற்றைக்கு 11112009.

சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

1. சொல்வது போல டிசம்பர் 1 முதல் ஆரம்பிப்பதில்தான் கருத்தாக இருக்கிறார். நம்முடைய நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லி விட முடிந்தது.

2. இந்திய ஸ்டேட் வங்கியில் தொகையை கணக்கில் சேர்த்து விட்டார்கள்.

3. single sign on செய்து முடித்து விட்டார்கள். அருமையான பார்க்க கவர்ச்சியான பக்கம் ஒன்று முடித்திருக்கிறார்கள்.

4. எதிர்பார்ப்பது, எதை செய்யக் கூடாது என்று தெளிவாக விளக்கி விட்டேன்.

6. விவாதம் ஆரம்பித்து, தமிழ் - இந்தி மொழி, பணம் வந்து விட்டதால் தந்தையை மதிக்காமல் இருக்கும் இளைஞர்கள் என்று விவாதம்.

7. EMS கணக்கு விபரங்களை முழுமையாக உள்ளிடச் சொல்லி முடித்து விட்டிருக்கிறார்.

8. batch costingல் இருந்த வழுவைச் சரி செய்து அனுப்பி விட்டார்கள்.

சனிக்கிழமை மாலை புறப்பட்டு திருப்பதி போய் விட்டு வந்தேன். வெள்ளிக் கிழமை இரவில் இணையத் தொடர்பைப் பயன்படுத்தி நிறைய நேரம் விழித்திருந்த பிறகு, காலையில் தாமதமாக எழுந்திருந்தேன். சமாளித்துக் கொண்டு ஒன்பதரை மணிக்கு உடன் பேசிக் கொண்டிருந்தேன். 11 மணி வரை ஆனது. புறப்பட்டுப் போய் இணைய மையத்துக்குப் போனால் இணைப்பு மிகவும் மெதுவாக இருந்தது. கீழே வந்து விடுதியில் பூரி. லட்சுமி பவனில் கிட்டத்தட்ட ஒரு எதிரியாக என்னைப் பார்க்கிறார்கள்.

பத்திரிகைக் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு நிற்கும் போது மழை பலத்து விட்டது. வெறிக்கும் வரை காத்திருந்து விட்டு நடக்க ஆரம்பித்தேன். ராயலா நகர் முதல் பிரதான சாலையில் தொப்பத் தொப்ப நனைந்து கொண்டே வந்தேன். தலையெல்லாம் தண்ணீர் நிரம்பி முகத்தில் வழிய ஆரம்பித்திருந்தது. ஆறேழு வயதிருக்கும் ஒரு சின்னப் பையன். குடை பிடித்துக் கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் என்ன நினைத்தானோ தெரியவில்லை, குடையை உயரத் தூக்கி என்னையும் உள்ளே கூப்பிட்டான்.

முகத்தில் பால் வடியும் களை. புதிய ஆளிடம் உறவாடுகிறோமே என்ற கூச்சம். எனக்கு மனம் நிறைந்து விட்டது. குடைக்குள் தலையை விட்டு விட்டு, 'நீ இந்தப் பக்கம் போகிறாயே, நான் எதிரில் போகிறேன். good boy' என்று சொல்லி விட்டு தொடர்ந்தேன். அந்த முகம் இன்னமும் பல நாட்களுக்கு மனதை நிறைக்கும்.

வீட்டுக்கு வந்து நாளிதழ் படிப்பது, கோதுமை மாவு கரைத்து தோசை சுடுவது, தூக்கம் என்று நேரம் நகர்ந்தது. இடையில் தொலைபேசி. மதியத்துக்கு மேல் இப்படியே சோம்பிக் கிடக்காமல் புறப்படு. துவைக்க வேண்டிய துணிகைள ஊற வைத்து விட்டு வீட்டை ஓரளவு ஒதுங்க வைத்து விட்டு துவைத்துக் குளித்துப் புறப்பட்டேன்.

மழை தூறிக் கொண்டுதான் இருந்தது. தெரு முனைக்கு வரும் போது அரசமரம் நோக்கிப் போகும் பேருந்து ஒன்று வந்தது. M49R. அதை கை காட்டி ஏறிக் கொண்டேன்.அதற்கு முன்பு நிறுத்தத்தில் நின்றிருந்த ஆட்டோகாரரிடம் பேச முயன்றால் அவர் முழு போதையில் உட்கார்ந்திருந்தார். பேருந்தில் ஆழ்வார் திருநகர் சீட்டு கேட்டால், போகாதாம். ராமாபுரம் வரை வெட்டு சேவை. ராமாபுரமே வாங்கிக் கொண்டேன்.

மழை வெறித்திருந்தாலோ, ஆட்டோ ஒன்று வாகாகக் கிடைத்தாலோ அங்கு இறங்கி வளசரவாக்கம் போய், பேருந்து பிடித்து வடபழனி போகலாம். இல்லை என்றால் இதிலேயே திரும்பி கிண்டி போகலாம். இந்தப் பேருந்து நிலையத்தில் நுழையும் போது 18E ஒன்று வெளியில் போனது. அதை போக விட்டுப் புறப்படலாம் என்று நடத்துனரும் ஓட்டுனரும் தேநீர்க் கடைக்குப் போய் விட்டார்கள்.

நான் மட்டும் உட்கார்ந்திருந்தேன். இன்னொரு 18E உள்ளே வந்து நின்றது. இரண்டு பேர் வந்து ஒருத்தர் மட்டும் பேருந்தில் ஏறினார். இளையர். நந்தம்பாக்கம் போகுமா என்று கேட்டுக் கொண்டார். 10 நிமிடங்களில் நடத்துனரும் ஓட்டுனரும் வந்து வண்டி கிளம்பி விட்டது. நந்தம்பாக்கம் போகிறவர் 100 ரூபாய் தாளை நீட்டினார். என்னிடமும் 100 ரூபாய்தான் இருந்தது. இரண்டு பேருக்கும் சில்லறை கொடுத்து விட்டார் நடத்துனர்.

'நான் அந்த பேருந்தில்தான் வந்தேன். தூக்கத்தில் இறங்க மறந்து விட்டேன். அதுதான் திரும்பிப் போகிறேன். அருமையான வானிலை இல்லையா' என்று ஆங்கிலத்தில் சொன்னார் இளைஞர். நானும் அதை ஆமோதித்து, மழை அளவோடு பெய்வதைக் குறிப்பிட்டேன்.

அரசமரம் நிறுத்தத்தில் நிறையப் பேர் ஏறினார்கள். மணப்பாக்கம் வந்தால் பேருந்து நிறைந்து விட்டது. இங்கு இறங்கி எதிர்த் திசையில் திருப்பதிக்குப் பேருந்து பிடிக்கலாம் என்று பாதி உத்தேசித்திருந்த திட்டத்தைக் கைவிட்டு வண்டியிலேயே உட்கார்ந்து கொண்டேன். பட் ரோடுக்கு அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். மழை விட்ட பாடில்லை. வெளியூர் பேருந்துகள் சாலை நடுவிலாக தாண்டிப் போய்க் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் காத்திருந்து விட்டு தாண்டிப் போன தானி ஒன்றை நிறுத்தி ஏறிக் கொண்டேன். காசி தியேட்டர் பக்கம் போக அதிகமாகக் கேட்டார். 50 ரூபாய்க்குப் பேசி ஏறிக் கொண்டேன்.

மழை குறித்துப் பேச்சு கொடுத்தேன். ஒலிம்பியாக் எதிரில் பெரிய வெள்ளம் என்றார். அவரது வீடு நங்கநல்லூரிலாம். காலையிலிருந்து சம்பாதித்ததை எல்லாம் முதலாளியிடம் கொடுத்து விட்டாராம். மூன்று நாள் அவருக்கு காசு கொடுக்க வில்லையாம். நாளைக்கு 200 ரூபாய் வைத்து 600 ரூபாய் அவரிடம் போய் விட, கையில் காசு இல்லை. வீட்டுக்கு வெறுங்கையோடா போக முடியும். அதுதான் தொழில் தொடர்கிறது.

மாதம் 600 ரூபாய் அடைக்கிறார். 2 ஆண்டுகளில் ஒரு ஆட்டோ வாங்கி விடுவதற்கான தொகையை வட்டியோடு கொடுத்து விடுகிறார். மைக்ரோ கிரெடிட் நிறுவனங்கள் இவர்களுக்குக் கடன் கொடுத்தால் என்ன? வங்கிகளில் முயற்சித்தார்களாம், எதுவும் நகரவில்லையாம். ஒலிம்பியாட் எதிரில் ஆறு போல ஓடிக் கொண்டிருந்த வெள்ளப் பெருக்கைத் தாண்டி பத்திரமாக பாலம் ஏறி இறங்கி விட்டோம். சரியாக சரவணபவன் எதிரில் இறங்கிக் கொண்டேன்.

சரவணபவனுக்குள் போய், சாப்பாடு ஏதாவது இருக்கிறதா என்றால் ஃபிரைட் ரைஸ், புலாவ், பிரியாணி என்றார். புலாவ் கேட்டால் அதனுடன் சூப்பையும் சேர்த்து விட்டார். கடைசியில் மசாலா பால். பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இன்னொரு மேசையில் இலை போட்டு சாப்பாடு கொடுத்தார்கள். பேசாமல் அப்படி சாப்பிட்டிருக்கலாம்.

இந்தப் பக்க மேசையில் அழகான அம்மா, அழகை வரித்த பெண், பணக்கார அப்பா, செல்ல பையன் என்று ஒரு குடும்பம். அதிகம் பார்வையைத் திருப்பாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு இளைஞர்களும் ஒரு இளைஞியும் அதற்கு முந்தைய மேசைக்கு வந்தார்கள்.

சூப்பு சொதப்பலாக இருந்தாலும், புலாவ் நன்றாக இருந்தது. மேற்பார்வை செய்ய பெண் மேற்பார்வையாளர் நியமித்திருந்தார்கள். இப்போது மேசை துடைக்கவும் பெண்கள். அந்தப் பெண் சுற்றிச் சுற்றி வந்து மேசைகளை தூய்மை செய்து கொண்டே இருந்தது. நன்கு திட்டமிடப்பட்டு நிர்வகிக்கப்படும் நிறுவனம் இயங்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கிட்டத்தட்ட 30-40 பேர் யாரும் உத்தரவுகள் கொடுக்காமலேயே தத்தமது பணிகளை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

மழை தூறிக் கொண்டிருந்தது. கடக்க வேண்டிய தூரத்தைக் கடந்து தொலைபேசி மையம் அருகில் பேருந்து நிறுத்தம். மழைக்கு ஒதுங்க கூரை கிடையாது. கொஞ்ச பேர் குடையுடன் நின்றிருந்தார்கள். யாரிடமும் கேட்க மனமில்லை, நனைந்து கொண்டே நின்றேன். குள்ளமாக, கையில் மூட்டைகளுடன், குடை பிடித்தபடி ஒரு முதியவர் வந்தார். என்னைப் பார்த்ததும் நின்று என் முகம் பார்த்துத் திரும்பினார். குடையை உயர்த்தி உள்ளே அழைத்துக் கொண்டார். ஒரே நாளில் நனையும் எனக்கு குடை பிடித்த இரண்டாவது மனிதர். 'ஆண்டவன் கைவிட்டு விட மாட்டானே. ஆண்டவன் அநியாயம் செய்ய மாட்டானே' என்று ஏதேதோ கேட்க ஆரம்பித்தார். 'நிச்சயம் கை விட மாட்டான். பாரத்தை ஆண்டவன் மேல் போட்டு விட்டு கடமையைச் செய்து கொண்டே இருங்கள்' என்றேன்.

'நீ பிராமணனா' என்றார். 'நான் மனிதன். சாதியால் அடையாளம் பார்க்க முயற்சிக்கும் யாரையும் கோபிக்கத்தான் செய்வேன்'
சிறிது நேரத்தில் ' நீ கிறிஸ்டியன்' என்று சொல்ல ஆரம்பித்தார். 'என் குடும்பத்தையே அழித்து விட்டாங்க, நான் மட்டும்தான் இருக்கேன். என் கண் முன்னால என் அண்ணனை வெட்டினாங்க. நான் தவுல் வித்துவான்' என்று தொடர்பு இல்லாமல் பேசிக் கொண்டே இருந்தார். வெளியூர் பேருந்தில் ஏற வேண்டாம், 10 ரூபாய் கேட்பான் என்றார். நகரப் பேருந்து வந்ததும் ஓடிப் போய் ஏறினேன். அவரும் கோயம்பேடுக்குத்தான் போக வேண்டுமாம். அவரும் முன்பக்கமாக ஏறிக் கொண்டார். பின்வாசலில் ஏறி நடத்துனரிடம் சீட்டு வாங்கினேன். அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் முன்னே ஓடிப் போய் ஏறிக் கொண்டேன்.

முன்பக்கம் வாசல் அருகில் வழியை அடைத்தபடி நின்றிருந்தார் பெரியவர். இறங்க வருபவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அவரை அதட்டி நகரச் சொன்னால் நகரவில்லை. 'நீங்க சிவகுமார்தானே' என்று உயரமான இளைஞர் ஒருவர் கேட்க, அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.

வேலையை விட்டு விட்டாராம். ஒரு வருடமாக வீட்டில் சும்மாதான் இருக்கிறாரார். பிகாம் படித்திருக்கிறாராம். கணக்கியல் தெரியுமாம். அலுவலகத்துக்கு வந்து பாருங்கள் என்று தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன். பேருந்து எம் எம் டி ஏவில் நின்றதும் பெரியவரை இறக்கி விட்டு விட்டார்கள். கோயம்பேடு நிலையத்துக்குள் போவதற்கு வழி இல்லாமல் பேருந்து நின்று விட இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

முதலில் கழிப்பறைக்கு பெரிய கூட்டம் அங்கே. ஒவ்வொரு தொட்டிக்கு முன்பும் நாலைந்து பேர் காவல் வரிசையில். அவ்வளவு மழை சொதசொதப்பிலும் சுத்தமாக இருந்தது. வெளியில் வந்து திருப்பதி பேருந்துகள் நிற்கும் வரிசையில் நடந்தேன். கடைசி இடங்களில் நிற்கும். 201 ஒன்று, சொகுசுப் பேருந்து ஒன்று. சொகுசுப் பேருந்தில் ஏறினால் ஒரு இருக்கை கிடைத்தது. 100 ரூபாய். சின்னத்திரை இயங்கவில்லை. தத்தமது கை பேசிகளில் பாட்டு ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள். அருகில் ஒரு தெலுங்குக் கார இளைஞர், பின் இருக்கையில் ஆணும் பெண்ணுமாக ஒரு இளஞ்சோடி, பக்கவாட்டு இருக்கையில் ஒரு ஆள் அவரது குடும்பம் பின்னால் என்று நிரம்பியிருந்தது.

வண்டி பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வர வெகு நேரம் பிடித்தது. தூங்கி முதலில் விழித்தது காளகஸ்தி வந்ததும், தூக்கத்தைத் தொடர்ந்தால் திருப்பதி வந்து விட்டதாக வந்த குரல் எழுப்பியது. இறங்கி மணி பார்த்தால் 1.30

வியாழன், அக்டோபர் 15, 2009

பகுக்க முடியாத அறிவு

அக்டோபர் மாதம் 15ம் நாள். பல நாட்களாக ஒழுங்கு முறைகள் எல்லாம் மாறி விட்டன. உடம்பில் சதைப்பிடிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. மனதில் கலக்கம், பதட்டம் குறைந்தால், உடம்பும் தேறி விடும் அல்லவா! நிறைய சாப்பிடுவது, நிறைய தூங்குவது மட்டும் அதற்குக் காரணமாக இருக்காது.

எல்லாமே நம் தலையில் ஓடிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது அன்றாட வாழ்க்கையில் சின்ன பிறளல் கூட மனதையும் உடலையும் பதற வைத்து விடுகிறது. கடவுள் மீது பாரத்தைப் போடுவோம் என்று வாழ ஆரம்பித்த பிறகு அது இல்லாமல் போய் விட்டது.

இறைவன் அருள் இரண்டையும் வழிகாட்டியாக வைத்துக் கொண்டால் சரியாகப் போய் விடுகிறது. ஏதாவது பாதகமாக நடந்தால், இது சம்பாதித்ததற்கு பலன் இது என்று ஏற்றுக் கொள்ளலாம். ஏதாவது சிறப்பாக நடந்தால் இறைவன் அருளால் அது நடக்கிறது என்று நிதானப்படுத்திக் கொள்ளலாம்.

எதற்கு கவலைப்பட வேண்டும், சும்மா படுத்துத் தூங்க வேண்டியதுதானே! அப்படிப் படுத்துத் தூங்கினாலோ, தவறான வழிகளில் போனாலோ வருங்காலங்களில் வருத்தும்.

நல்லதையோ கெட்டதையோ தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் கடவுள் நம்பிக்கையில்தான் கிடைக்கிறது. 'நீங்கள் நினைத்ததை எல்லாம் சாதிக்கலாம்' என்று வரும் சுயமுன்னேற்ற நூல்களை மூத்தவை கடவுள் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லும் வழிகள். இறைவனிடம் நான் கேட்டு விட்டேன், எனக்கு வந்தே தீர வேண்டும் என்று நம்பும் போது அகில உலகமும் சதி செய்து அதை நிறைவேற்றி விடுகிறது.

இவ்வளவு லாஜிக்கலாக நினைத்துப் பார்த்தாலும், சிலவற்றை விளக்கவே முடியவில்லை. காந்தி திரைப்படம் பார்க்க வேண்டும் என்று ஒரு உந்துதல், அக்டோபர் 2லிருந்து. வெகு வேகமாக நிகழ்வுகள் நிறைவேறின. அக்கா வீட்டுக்குப் போயிருக்கும் போது, டிவிடி பிளேயர் அங்கு இருந்ததை எடுத்துப் போகும் படி சொன்னாள். அதை கையில் எடுத்துக் கொண்டு திரும்பும் போது வீட்டுக்குப் போகலாம் என்று ஆதம்பாக்கம் நிலையத்தில் இறங்கி வெளியில் வந்தால், தெருவோர திரைப்பட தகடுகள் விற்கும் வியாபாரி. அதில் காந்தி பட அடர்தகடு, கூடவே நான்கு படங்கள். இது எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று என்னால் விளக்க முடியவில்லை.

திங்கள் கிழமை மாலையில் பணம் எதுவும் வராத களைப்பும் கோபமும். அடுத்த நாள் காலையில் தொலைபேசி காசோலை வாங்கிப் போகச் சொன்னார். முற்பகலில் புறப்பட்டுப் போனால், மாலையில் காசோலையோடு திரும்பி விட்டேன். காசோலையும் அன்றைக்கு துரித அஞ்சலில் வந்து விட்டிருந்தது. இதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

ஞானி

26ம் தேதி சனிக்கிழமை மாலையில் அலுவலகத்தில் பூஜை போட்டார்கள். பிற்பகலில் அதியமான் தொலைபேசி மாலை இந்தப் பக்கம் வருவதாகவும் கே கே நகர் போய் ஞானியைப் பார்த்து வரலாமா என்றும் கேட்டார். போகலாமே என்று சொல்லி தயாராக இருந்தேன்.

அடுத்த நாள் காலைக்குள் தமிழ்க் கம்பியூட்டர் பத்திரிகைக்கு திறவூற்று மென்பொருள் குறித்து ஒரு கட்டுரை எழுதவதாக வாக்கு கொடுத்திருந்தேன். அது வரை ஆரம்பித்திருக்கக் கூடவில்லை. உங்களுக்கு அந்த வேலை இருக்குதுண்ணா நீங்க அதைப் பாருங்க என்று சொன்னதை மறுத்து ஞானியைப் பார்க்க போகலாம் என்று கிளம்பி விட்டேன். அவரும் தொலைபேசியில் அழைத்துப் பேசி, அவர் வீட்டில்தான் இருப்பதாகத் தகவல் சொன்னார்.

என் வண்டியை எடுக்காமல் அதியமானின் வண்டியிலேயே பின்னால் உட்கார்ந்து கொண்டேன். கே கே நகரில் டபுள் டேங்க் அருகில் இருக்கிறதாம் வீடு. மிகச் சீக்கிரமாகவே வீடு வந்து விட்டது. வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே போகும் போது கதவைத் திறந்து ஞானியே கதவருகில் நின்றார். வீட்டுக்கு வந்திருந்த யாரையோ வழியனுப்பிக் கொண்டிருந்தார். உள்ளே இன்னும் நான்கு பேர் நின்றிருந்தார்கள். ஓரிரு நிமிடங்கள் வெளிக் கதவருகில் நின்று பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் போனோம்.

வீட்டில் ஓய்வாக இருக்கும் கோலத்தில் லுங்கியும் தொளதொள ஜிப்பாவும் போட்டுக் கொண்டிருந்தார். விகடனிலும், குமுதத்திலும் பார்த்த புகைப்படத்தில் தெரிந்ததை 10-15 வயதுகள் அதிகமாகத் தெரிந்தார். 57 வயது ஆகிறது என்று பின்னால் சொன்னார். இயல்பாக வரவேற்று உள்ளே அழைத்தார். வாசலுக்கு இடது புறத்தில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டி என்று தெரிந்தது. பரீட்சா நாடகக் குழுவில் போட இருக்கும் பலூன் நாடகத்துக்கான ஒத்திகைக்கு வந்த இளைஞர்கள் தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்தார்கள். ஞானி தொலைக்காட்சியைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

அறையின் மறுமுனையில் கொண்டு நிறுத்தி கொஞ்ச நேரம் விசாரித்துக் கொண்டிருந்தார். 'மூத்த பதிவர் இவர், எங்களுக்கெல்லாம் வலைப்பதிவுகளுக்கு முன்னோடி' என்று அதியமான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். 'இவரைப் பார்த்துதான் நாங்க எல்லாம் எழுத ஆரம்பித்தோம்' என்று வேறு சொல்கிறார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'உங்க சமீபத்திய இடுகைகள் என்னென்ன என்று கேட்டார் ஞானி. 'தமிழ்மணத்தில் போய்ப் பார்ப்பேன். பதிவர் என்றெல்லாம் போய்ப் படிப்பதில்லை. இடுகை கவனத்தைக் கவர்ந்தால் போய்ப் படிப்பேன்.'

'தலைப்புக்கு கவர்ச்சி இருக்கிறது. செருப்பாலடிப்பேன் என்று தலைப்பில் எழுதிய இடுகைக்கு நிறைய வருகையாளர்கள், பின்னூட்டங்கள்.' 'ஆமாமா, செருப்பைப் போட்டு நடந்தேன் என்று எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள்.'

இப்படி எல்லாம் பேசிக் கொண்டே தரையில் உட்கார்ந்து கொண்டோம். பிராண்ட் குறித்து பேச்சு வந்தது. 'உன்னைப் போல் ஒருவன்தான் இப்போது வலைப்பதிவுலகில் பரபரப்பாக இருக்கிறது. அதுதான் கமலஹாசனின் பிராண்ட். எந்திரன் பற்றி இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களும் வணிக முறையில் வெற்றிபெற்றிருந்தாலும், இந்த அளவு பரபரப்பாக பேசப்படாததற்குக் காரணம் பிராண்ட் இல்லாததுதான்.'

புதன், செப்டம்பர் 02, 2009

உணர்வு

நேரம் 4.34

படை எடுத்து வரும் கொசுக்களை சற்றே தள்ளி இருக்கச் சொல்ல கொசு விரட்டும் ஆவி வெளியிடும் குட்நைட் காலருகில் வைத்துக் கொண்டேன். நேற்று இரவு தூங்கும் போதும் அதை பொருத்தி வைத்து விட்டு தூங்கியிருந்தேன். கொசு விரட்டும் ஏதாவது வேதிப் பொருளுடன் தூங்கப் போனால் இரவு முழுவதும் அதை சுவாசித்து காலையில் போதை தலைக்கேறி இருக்கிறது.

நேற்றுக் காலையில் எழுதி முடித்து விட்டு தண்ணீர் கொதிக்கும் வரை அடுக்களை பாத்திரங்களைக் கழுவப் போட்டு விட்டு, துணிகளையும் மடித்து வைத்தேன். வெளியில் எட்டிப் பார்த்தால் விடாமல் பெய்து கொண்டிருந்த மழை கொஞ்சம் வெறித்து சின்னத் தூறலாக இருந்தது. முந்தைய நாள் இருந்ததை விட அதிகம்தான். நனைந்தாலும் விடுவதில்லை என்று நடக்கப் புறப்பட்டு விட்டேன். சேற்றில் செருப்பு போட்டுக் கொண்டு போய் காலெல்லாம் சேறு தெறித்துக் கொள்ள வேண்டாம் என்று வெறுங்காலில் கிளம்பி விட்டேன். தரை போடப்படாத இடங்களில் நடப்பது சிரமமில்லை. ஏதாவது கல் கூர்மையாக குத்தி விட்டால் உயிர் போய் விடுகிறது.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு காங்கிரீட் பாவப்பட்ட தெருவில் பார்த்தால் மழையில் மேல் தளம் எல்லாம் பறிந்து போய் சல்லிக் கற்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தன. மழைத் தண்ணீரில் ஊறிப் போயிருந்த பாதங்கள் தாங்க முடியாத தளம். நடக்கும் வழியை சுருக்கி பக்க வாட்டு தெருவழியாக வந்து விட்டேன். வீட்டுக்கு வந்ததும் அழுத்தக் கலனில் கஞ்சிக்கு அரிசியும், சிறுபயறும், கொஞ்சம் வெந்தயமும் சேர்த்து வைத்து விட்டேன்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். பாத்திரங்களை எல்லாம் கழுவிக் கவிழ்த்தி விட்டு முகம் மழித்தல். குளித்து விட்டு வெளியில் வரும் போதுதான் நாளிதழ் கொண்டு வந்து போட்டான். வங்கியில் பணம் எடுத்து நாளிதழுக்கு, வீட்டு பராமரிப்புக்குக் காசு கொடுத்து விட வேண்டும்.

இறப்பைக் கண்டு இடிந்து போய் விடுவது எனக்கு வருவதில்லை. சரியான முறையில் துக்கம் விசாரிக்கத் தெரியவில்லை. மாமா இறந்து விட்டதை, 'என் மடியிலேயே இறந்து போனார்' என்று சொல்லி அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்திக் கொண்டார். எனக்கு இழப்புகள் புரியவே மாட்டேன் என்கிறது.

காலையில் வயிறு நிறையும் வரை சாப்பிட்டு விட்டு மீதியை அப்படியே மூடி வைத்து விட்டேன். தேங்காய் சேர்த்திருக்கவில்லை, மழை பெய்து வெப்பநிலையும் இதமாகத்தான் இருக்கிறது. இரவு ஏழரை மணி வரை எதுவும் கெட்டுப் போய் விடவில்லை. மாலையிலும் அதையே சாப்பிட்டுக் கொண்டேன். காலையில் கஞ்சிக்கு முன்பு இரண்டு நாட்கள் முன்பு கரைத்து மீதப்படுத்தி வைத்திருந்த கோதுமை மாவுக் கரைசலையும் தோசையாகச் சாப்பிட்டுக் கொண்டேன். அதனுடன் மிளகாய்ப் பொடி, இஞ்சி ஊறுகாய் எடுத்து அதையே தொடர்ந்து கஞ்சிக்கும் சாப்பிட்டுக் கொண்டேன். மாலையிலும் அதே கூட்டணி. தேங்காய் அல்லது வேறு நொறுக்குத் தீனிகளை வாங்க முயற்சிக்கவில்லை.

இன்றைக்குப் பொருள் வாங்கப் போனால், காம்ப்ளான், பல் தேய்க்கும் பிரஷ், தின்பண்டங்கள், முந்திரி, பாதாம், இவ்வளவுதான் வாங்க வேண்டும். கோதுமை மாவு, குளிக்கும் சோப்பு, துவைக்கும் சோப்பு, துவைக்கும் சோப்புத் தூள், பற்பசை, முகம் மழிக்கும் தளவாடங்கள், தரை துடைக்கும் திரவம், அவல், பருப்பு வகைகள், ஓட்சு இன்னும் இருக்கின்றன. அடுத்த முறையில் வாங்கிக் கொண்டால் போதும்.

நேற்றைக்குக் கனவில் யாரோ ஒருவர் குளிர் சாதனப் பெட்டியை துடைத்து திறந்து விட்டிருப்பதாக வருகிறது. நான் அடுக்களையில் ஏதோ செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

சாப்பிட்டு விட்டுக் கிளம்பி அலுவலகம் போகும் வழியில் தேய்க்கக் கொடுத்திருந்த துணிகள் தேய்த்து விட்டார்களா என்று கேட்கப் போகவில்லை. மாலையில் பார்க்கலாம்.

நாங்கள் பேச ஆரம்பித்து வெகு நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார். தாமதமாக வந்ததற்கு எதுவும் சமாதானமும் சொல்லவில்லை. அதன் பிறகு மார்கெட்டிங்கில் எதையும் தவற விடாமல் செய்வதற்காக கூடுதல் ஆள் வேண்டும் என்று பேசி அதில் ஈடுபடச் செய்ய முடிவு செய்தோம்.

தேநீர் குடிக்க ஒரு பயணம். 24 ரூபாய்க்கு 3 காபிகள், 2 தேநீர். அலுவலகத்துக்கு வந்து விற்பனை முயற்சிகளைப் பற்றிப் பேசுவோம் என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்குப் போனது. புதிய அணுகுமுறைகள், வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளுதல், வகைப்படுத்துதல் என்று நிறைய கருத்துக்கள் மாற்றங்கள் கிடைத்தன. அவை அனைத்தையும் பதிவு செய்து கொண்டோம். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு எதுவும் விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வேலை இருந்தது. பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதை முடித்து விட்டு தினேஷைக் கூப்பிட முயற்சித்தால் அவரது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மதிய உணவுக்குப் பிறகு பில்லிங் வேலைகளுக்கான ஆவணங்களை சரி பார்த்தலில் கழிந்தது. நாலரை மணிக்கு மேல் அறிக்கை அணுகல் குறித்த பணியைக் கையில் எடுத்தேன். 2 மணி நேரம் அதில் போனது. அடுத்த கட்டத்தில் இன்னொரு பக்கம் செய்து முடிக்க வேண்டும். சின்னச் சின்ன வேலைகளை முடித்து விட்டு 7 மணிக்குப் புறப்படும் முன்பு போன மாதம் சாதித்தவற்றைப் பற்றிய மின்னஞ்சல் அனுப்பி விட்டுக் கிளம்பினேன். துணி இன்னும் தேய்த்து முடித்திருக்கவில்லை. ஒரு பேன்டை மட்டும் உடனேயே தேய்த்து வாங்கிக் கொண்டேன். ஸ்கூட்டியை இயக்குவதற்கு மிதிக்க வேண்டியிருக்கிறது. பராமரிப்புச் சேவைக்கு விட வேண்டும்.

வீட்டுக்கு வந்து நல்ல பிள்ளையாக கஞ்சி குடித்து விட்டு அரை மணி நேரம் தமிழகம், திராவிட இயக்கம் குறித்து கொஞ்சம் எழுதினேன். அதன் பிறகு அறைக்குள் தாளிட்டுக் கொண்டு ஓ ஹென்ரி படிக்க ஆரம்பித்தேன். திடீரென்று கதவு தட்டப்படும் முயற்சி. ஞாயிற்றுக் கிழமை மதியம் விளையாடியதைப் போலவே பொதுஅறிவுக் கேள்வி பதில் விளையாடக் கேட்கிறார்கள். 9 மணி வரை விளையாடலாம்.

விளையாட்டுப் பொருட்களுடன் விளையாட ஆரம்பிக்க இவர்கள் இரண்டு பேரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள். இடையில் கூப்பிட்டதற்கு போய் விபரம் சொல்லி அனுமதி வாங்கி வந்து விட்டார்கள்.

அதன் பிறகு ஒரு மணி நேரம் படிக்க முயற்சித்து விட்டுத் தூங்கி விட்டேன். 20 நிமிடங்கள் இப்போது தூங்க வேண்டும்.

செவ்வாய், செப்டம்பர் 01, 2009

இனிய கனவு

ஒன்பதாவது ஆண்டு ஒன்பதாவது மாதம் பிறந்து விட்டது. 1-1-1, 2-2-2, 3-3-3, 4-4-4, 5-5-5, 6-6-6, 7-7-7, 8-8-8 என்ற வரிசைக்குப் பிறகு இந்த ஆண்டு அடுத்த புதன் கிழமை 9-9-9 என்ற தேதி காட்டப் போகிறது. அடுத்த ஆண்டு 10-10-10 வரும். அதன் பிறகு 11-11-11, 12-12-12. அத்தோடு நின்று போகும் 2013க்கு அப்புறம் மாதத்தின் எண் அடுத்த நூற்றாண்டில்தான் நாள், ஆண்டோடு ஒத்துப் போக முடியும். இதெல்லாம் கொஞ்சம் தேவையில்லாத கணக்குகள். படிக்க நன்றாக இருக்கிறது அவ்வளவுதான்.

நேற்றைக்குத் திட்டமிட்டபடி பெரும்பாலும் நடந்து முடிந்தன. எழுதி முடித்ததும், தண்ணீர் கொதித்து முடிப்பது வரை அடுக்களையில் ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தேன். தண்ணீர் கொதித்து முடித்ததும் வெளியில் உலாவி வரப் புறப்பட்டால், மழை தூறிக் கொண்டிருந்தது. பரவாயில்லை, நனைந்து கொண்டே போய் வரலாம் என்று கிளம்பி விட்டேன். ஒரு சுற்று சுற்றி வரும் வரை அதே அளவு தூறிக் கொண்டே இருந்ததில் உடுத்தியிருந்த உடுப்புகள் நனைந்து போயிருந்தன. வழக்கமான நடை மன்னர்களில் பெரும்பாலரைக் காணவில்லை. ஒரே ஒரு தம்பதி மட்டும் தலையில் பிளாஸ்டிக் பை மாட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். மழை பெய்தால் சேறும் சகதியும், மழை பெய்யா விட்டால் தூசி என்பது நமது தலை எழுத்தாகப் போய் விட்டது.

வீட்டுக்கு வந்ததும் துவைத்துப் போட்டிருந்த துணிகளை எல்லாம் மடித்து வைத்து, தேய்க்கக் கொடுக்க வேண்டியதை தனியாக ஒரு பையிலும், மடித்து வைத்துக் கொள்ள வேண்டியவற்றைத் அலமாரியிலும் வைத்து விட்டேன். அடுக்களையில் பாத்திரங்கள் குவிந்திருந்தன. குப்பைத் தொட்டியில் வழக்கம் போல கன்னா பின்னாவென்று இறைத்திருந்ததைப் பார்த்துப் பல்லைக் கடித்து விட்டு அதை அள்ளி பையில் கட்டி வெளியில் போட்டு விட்டு வந்தேன். பாத்திரங்கள் கழுவுவதற்கு அரை மணி நேரம் ஆகியிருக்கும். முந்தைய நாள் வாங்கி காலையில் சாப்பிட்டு விட்டு மீதி இருந்த தோசை மாவு, குளிர் பெட்டியில் வைத்திருந்த சப்பாத்தி மாவு, குளிர் பெட்டியில் வைத்திருந்த கோதுமை தோசை மாவு என்று மூன்றையும் எடுத்துக் கொண்டேன். தேங்காய் இன்னொரு பக்கம்.

தேங்காயைக் கீறி பொடித்து, பொரிகடலை, சர்க்கரையுடன் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டேன். முகம் மழித்துக் குளிக்கப் போனால் தண்ணீர் வரவில்லை. இருக்கின்ற தண்ணீரில் கை கால் மட்டும் கழுவிக் கொண்டேன். தியானத்தில் உட்காரமல் நேராக சாப்பாட்டுக் கடையில் இறங்கினேன். நான்கு தோசைகள், 3 சப்பாத்திகள். கோதுமை தோசைக்கான மாவை திரும்ப வைத்து விட்டேன். தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடியும், பாட்டிலில் வாங்கி வைத்திருந்த இஞ்சி ஊறுகாயும். சாப்பிடும் போது பிசினஸ் ஸ்டாண்டார்டு.

சாப்பிட்டு முடித்து விட்டு அலுவலகத்துக்குப் புறப்பட வேண்டும். வண்டியை உதைத்துக் கிளப்பி அலுவலகத்துக்குப் போகும் போது 8 மணி ஆகியிருக்கவில்லை. கதவைத் திறந்து உட்கார்ந்து வேலைகளை ஆரம்பித்து விட்டேன். 8 மணி முதல் 8 மணி வரை 12 மணி நேர வேலை பதிய வேண்டும் என்று உத்தேசம். முதலில் அறிக்கைகளுக்கு அனுமதி அளிக்கும் முறையில் மாற்றங்களை ஆரம்பித்தேன். 10, 11 மணி வரை ஓடியது. இடையிடையே வேறு சின்னச் சின்ன விவாதங்கள். வந்து ஆகஸ்டு மாத வேலைகளுக்கான பில்லிங் பற்றிக் கேட்க, அதற்கான இஷ்யூ ஐடி கேட்டு அனுப்பி வைத்தேன். போய் அறிக்கை மாற்றத்தின் வடிவமைப்பை சின்னதாக விவாதித்துக் கொண்டேன்.

இடையில் மின்னிணைப்பைத் துண்டித்து எழுதியதில் கொஞ்சம் போய் விட்டது. மாலை 7 மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். வரும் வழியில் தேய்க்கக் கொடுத்திருந்த துணிகளைக் கேட்டால் இன்னும் முடிக்கவே இல்லையாம். இன்றைக்கு அழுக்கான பேன்ட்தான் போட்டு விட்டுப் போக வேண்டும்.

பாஸ்டாவைக் கொதிக்க வைத்துக் கொண்டேன். கொதிக்கும் நீரில் உப்பும் சேர்த்திருக்க நன்கு ஏறியிருந்தது. போன தடவை உப்பு போட மறந்து விட்டதற்கு பரிகாரமாக இந்த தடவை இரண்டு மடங்கு உப்பு. வெந்து விட்டது கடுகு தாளித்து விட்டு தக்காளி சாஸூம் பாலாடைக் கட்டியும் போட்டு ஒரு தட்டில் எடுத்துக் கொண்டேன். குப்பைத் தொட்டியைக் குப்பையாக வைத்திருந்ததைப் பற்றி அழைத்துச் சொல்லி, இனிமேல் தனியாகக் குப்பைத் தொட்டி வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டேன்.

சாப்பிட்டு விட்டு 8 மணிக்கு கணினியை இயக்கினேன். சீனாவைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அப்படியே ஓடி ஓடி, டிராகன் பற்றியும் வளர்ந்து விட்டது. நேரம் எதுவும் இமைத்துக் கொள்ளா விட்டாலும் ஒன்பது மணி வரை எழுதிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு ஓ ஹென்ரி கதைகளோடு படுக்கை விரித்து விட்டேன். தியானத்தை தவற விடக் கூடாது. என்னென்ன மாதிரியான கனவுகள்.

பாழடைந்த மண்டபம் ஒன்றில் தங்கியிருக்கிறேன். அதில் போட்டி போட வரும் இரண்டு பேர் குழுவை பெரிதாக அலறி அனுப்பி வைக்கிறேன். ஒரு சின்னப் பையன் மண்டபத்துக்குள் வருகிறான். 'நான் உன்னுடன் இல்லாத போதுதான், சந்தோஷமாக இருக்கிறாய்' என்று சொன்னதும், 'ஆமாமா' ஆமோதிக்கிறாள். அதற்குள் வீட்டுக்குப் போயிருக்கிறோம். அப்போது புரியா விட்டாலும், பார்க் ரோட்டில் இருந்த வீடு. முன்னறையில் தரையில் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளைத் தூக்கி படுக்கைக்குக் கொண்டு போகலாம் என்று எடுத்தால், பெரிதும் வளர்ந்து விட்டிருக்கிறாள். என் கையில் எடுத்ததும் விழித்து, 'மம்மி ஆயா நா' என்று கேட்டு அம்மாவைத் தேடுகிறாள். 'ஆமாமா' என்று சமாதானப் படுத்தி படுக்கைக்கு கொண்டு போனால், ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடன் இடம் பிடிக்கும் சண்டையில் அவனையும் எழுப்பி விடுகிறாள். 'தூங்குறவங்களை தொந்தரவு பண்ணக் கூடாது' என்று சொல்கிறேன்.

12.30லிருந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் விழிப்புதான். கடைசியில் நான்கு மணிக்கு எழுந்து விட்டேன். தூக்கக் கலக்கம், உடல் சோர்வு என்றெல்லாம் எதுவும் இல்லை. வயிற்றுக்குள் போயிருந்த பாலாடைக்கட்டி தூக்கத்தைப் போதுமான அளவு தொந்தரவு செய்திருக்கத்தான் செய்யும்.

இதை முடிக்கும் போது 5.22. துணிகளை மடித்து, பாத்திரங்களை ஒழித்துப் போட்டு, தரை தூத்து விட்டு 5.45க்கு உலாவக் கிளம்பலாம். திரும்பி வந்ததும் கஞ்சிக்கு உயர் அழுத்தக் கலனில் வைத்து விட்டு பாத்திரங்களைக் கழுவ வேண்டும். முகம் மழித்து குளித்து விட்டு தியானம். 7 மணிக்குச் சாப்பிட்டு விட்டு ஏழரைக்கு புறப்பட்டு விட வேண்டும். நேற்றைக்கு இணையப் பயன்பாட்டில் நான் போட்டிருந்த சுப்ரபாதமும் சேர்ந்திருக்கும். இறைவனை நம்முள் எழுப்புவதுதான் சுப்ரபாதம்.

கொசுக்கள் அடர்த்தியாக மொய்த்துக் கொண்டிருந்தன. பை ஒன்றுக்குள் இருந்த அரை டசன் கொசு விரட்டும் எந்திரங்களில் ஒன்றை பொருத்திக் கொண்டு அதன் அருகில் கால் நீட்டிக் கொண்டதில் கால் பிழைத்து விட்டது.

8 மணிக்கு காலை சந்திப்பு.

இரவு முழுவதும் நல்ல மழை பெய்திருக்கிறது. இப்போது நின்று விட்டிருக்கிறது. புதிதாகப் பார்த்திருக்கும் அலுவலகத்துக்கு வெளியில் தண்ணீர் தேங்குகிறதா என்று இப்போது பார்த்தால் தெரிந்து விடும். இந்த அலுவலகத்தை மாற்றுவதற்கு கெடு நேற்றோடு முடிந்து விட்டது. இன்றைக்குப் போனால் அவர்கள் பூட்டை மாற்றியிருந்தாலும் எதுவும் சொல்வதற்கில்லைதான். தொலைபேசினால் எடுக்கவே இல்லை. இன்றைக்குப் போய் பேசிப் பார்க்க வேண்டும். எதற்கும் காசு இருந்தால் மளமளவென்று வேலைகளை முடித்து விடலாம்.

திங்கள், ஆகஸ்ட் 31, 2009

பன்றிக் காய்ச்சல்

ஆகஸ்டு மாதம் 31ம் தேதி அதிகாலை 4.35. ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு நாட்குறிப்பு என்று எழுத உட்கார்ந்திருக்கிறேன். இந்த நாட்களில் பல மாறுதல்கள். பல நம்பிக்கைகள். நல்ல பழக்கங்களை மட்டும் திரும்பவும் கொண்டு வரலாம் என்று உத்தேசம். வார இறுதி நாட்களில் நேரம் போவதில்லை என்று புகார் சொல்லிக் கொண்டிருந்தேன். எழுதுவதை தவமாக செய்து கொண்டிருந்த நாட்களில் அந்த புகாரே இல்லாமல் இருந்தது. இப்படி தூங்கி சாப்பிட்டு, படித்துக் கழிக்க ஆரம்பித்ததும் மனதுக்கு உரம் இல்லாமல் போய் விட்டது.

நேற்றைக்கு அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் போது ஒரு எண்ணம். தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் 8 மணி முதல் 8 மணி வரை அலுவலக வேலை. அலுவலகத்துக்குப் போய் வேலை பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலைகள் பதிவு செய்ய வேண்டும். இரவு 10 மணிக்குத் தூங்கி விட வேண்டும். 10 முதல் 4 வரை 6 மணி நேரம் தூக்கம். 4 மணிக்கு எழுந்திருந்து பல் தேய்த்து காலைக் கடன்களை முடித்து எழுதுவதற்கு 1 மணி நேரம். அதன் பிறகு காலை உலாவப் போதல். 6 மணியிலிருந்து 7 மணி வரை வீட்டை ஒதுங்க வைத்துக் குளித்து தயாராதல். 7 மணிக்கு தியானம். சாப்பிட்டு விட்டு 7.45க்கு அலுவலகத்துக்குப் புறப்பட வேண்டும்.

அலுவலகத்தில் எதைச் செய்தாலும் பதிவு செய்ய வேண்டும். இன்றைக்கு 31ம் தேதி.

நேற்று செய்ய நினைத்து தவற விட்டது செந்தில்நாதனின் டிராகன் புத்தகத்துக்கான மதிப்புரை ஒன்று எழுதிக் கொடுப்பது. படிப்பதை வெகு வேகமாக முடித்து விட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு வார இறுதியில் உட்கார்ந்து படித்து அவருக்கு தொலைபேசி மூலம் ஒரு விமரிசனமும் சொல்லி விட்டேன். நேற்று மாலைக்குள் எழுதி அனுப்புகிறேன் என்று வாக்களித்து அதைத் தவற விட்டிருக்கிறேன். இன்றைக்கு அனுப்பி விட வேண்டும்.

14ம் தேதி முதல் தொடங்கும் வாரத்தில் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். இன்று முதல் தினமும் இரவு வீட்டுக்குத் திரும்பிய பிறகு 9 மணி முதல் 10 மணி வரை நட்சத்திர வாரத்துக்கான படைப்புகளை எழுத வேண்டும். 15 நாட்களில் 15 மணி நேரம் எழுதலாம். அந்த வாரத்தில் காலையில் 1 மணி நேரம், மாலையில் 1 மணி நேரம் ஒதுக்கி படைப்புகளை வெளியிட வேண்டும். 14ம் தேதிக்கு முந்தைய வார இறுதியில் எழுதியவற்றை எல்லாம் வரைவுகளாகப் பதிந்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக வெளியிடலாம்.

அக்டோபர் 1ம் தேதி எல்களம் பீட்டா பதிப்பு வெளியிட வேண்டும். அதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நாளுக்கு 12 மணி நேரம் வேலை பார்த்தால் முடித்து விடலாம். என்னிடமிருந்துதான் ஊக்குவிப்பு வெளிப்பட வேண்டும்.

இத்தனை நாட்கள் எழுதாமல் இருந்து விட்டு எழுத ஆரம்பிக்கும் போது விரல்கள் பறக்கின்றன. வேகம் பல மடங்காக அதிகரித்திருக்கும் என்று தோன்றுகிறது. இப்போது கணக்குப் பார்க்கலாமா. 675 சொற்கள், 23 நிமிடங்களில். 29.35 ஒரு நிமிடத்துக்கு என்று எழுதியிருக்கிறோம். ஒரு வேளை மேலே மேலே எழுதும் போது விரல்கள் சடைந்து வேகம் குறையுமோ என்னவோ.

பன்றிக் காய்ச்சல்தான் இப்போது பரபரப்பாக எல்லோராலும் பேசப்படுவது. பன்றிக்குப் பிடித்தது மலம்தான். சாருநிவேதிதா என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார், கிட்டத்தட்ட பன்றி போல. சமூகத்தில் ஆயிரம் விஷயங்கள் நடக்க அவருக்குக் கண்ணில் படுவது, விருப்பமாக இருப்பது முறையற்ற உறவுகள், பாலியல் கருது கோள்கள், தண்ணி அடித்தல் போன்றவைதான். உலக திரைப்படம் என்று பேச ஆரம்பித்தால் அதில் வினோதமான கருத்துக்கள் கொண்ட படங்களைப் பற்றித்தான் பேசுகிறார். ஆனந்த விகடனில் அவர் எழுதிய சிறுகதை பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை என்ற தொடரில் வெளியாகி உள்ளது. என்ன இலக்கியவியாதியோ! ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

வெள்ளிக் கிழமை மாலையில் அலுவலகத்திலிருந்து வரும் வழியில் தோசை மாவு வாங்கிக் கொண்டேன். தோசை சுட்டுச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம் என்று நேரமாகி விட்டது. சாப்பிடாமல் புறப்பட்டிருந்தால் ஒரு வேளை திருப்பதி போய் வந்திருக்கலாம். வழக்கம் போல புறப்பட்டு, செல்பேசியை அணைத்து வீட்டிலேயே வைத்து விட்டு நடந்து போனேன். கடந்து போன ஆட்டோக்களும் சாலை வரை கொண்டு விடுவதாக அழைக்கவில்லை. பேருந்துகள் எல்லாம் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்தன. முதல் முறை பல் தேய்க்கும் தளவாடங்களை மறந்து திரும்ப வந்து எடுத்துக் கொண்டு போனேன். பாதி வழியில் செருப்பு வைத்துக் கொள்ள பை எடுத்துக் கொள்ளாதது நினைவு வந்தது.

ராமாபுரம் நிறுத்தத்தில் பேருந்துகள் தோதாக இல்லைதான். பூவிருந்தவல்லி வரை போவதற்கு ஸ்ரீபெரும்புதூர் வண்டியில் ஏறிக் கொண்டேன். 8 ரூபாய் கட்டணத்துக்கு 100 ரூபாய் கொடுத்தும் திட்டு எதுவும் கிடைத்து விடவில்லை. பூவிருந்தவல்லியில் இறங்கினால் பேருந்துக்குக் காத்திருக்கும் பெரிய கூட்டங்கள். திருவள்ளூர், வேலூர், தருமபுரி என்று பேருந்துகள் ஒவ்வொன்றாக வந்தன. எல்லாம் திமிறிக் கொண்டு கூட்டம். பல நிமிடங்களுக்குப் பிறகு திருப்பதி பேருந்து ஒன்று வந்தது, வாசலில் தொங்கிக் கொண்டு மக்கள் நின்றிருந்தார்கள். எப்படிப் போவது என்று ஒரு தளர்வு வந்து விட்டது. அடுத்த பேருந்தைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்து கடைசியில் சாலையைக் கடந்து எதிர்ப்புறத்தில் ராமாபுரம் போக நகரப் பேருந்தைப் பிடித்து விட்டேன். ராமாபுரத்தில் இறங்கி நடந்து வீடு.

எனது பொறுமையை பெரிதாக சோதிக்கத்தான் செய்கிறான். எதைச் செய்தாலும் ஒரு திமிர், அலட்சியத்தோடு செய்வது. குப்பைகளை போடுவது, செய்த இடத்தை தூய்மை செய்வது, அழுக்காக்கின பாத்திரங்களை கழுவுவது என்று எதிலும் பொறுப்பு கிடையாது. இரண்டு பேரையும் உட்கார வைத்துப் பேசி விடுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நடக்கவில்லை இன்னும். சனிக்கிழமை காலையில் ஏழரை மணி வரை தூக்கம். அதன் பிறகு உலாவப் போவதையும் ரத்து செய்தேன்.

உருளைக் கிழங்கை வேக வைத்து மசால் கறி, சப்பாத்தி போட்டு சாப்பிட்டேன். சப்பாத்தி மாவில் ஒரு பகுதி குளிர்ப் பெட்டிக்குள். அலுவலகத்துக்குப் போகும் வழியில் வண்டியில் பெட்ரோல் தீர்ந்து போனது. ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளிக் கொண்டு வந்து பெட்ரோல் போட்டுக் கொண்டேன். இடையிடையே வாடிக்கையாளர் அழைப்புகள், வேலைகள். பெரிதாக எதுவும் சாதித்து விடவில்லை. மதிய உணவுக்கு வளசை சுபா விடுதியில் 30 ரூபாய்க்கு சாப்பாடு 3 ரூபாய்க்கு தயிர்.

இதை முடித்ததும் (5.36), சட்டை போட்டுக் கொண்டு உலாவப் போக வேண்டும். 6 மணிக்குத் திரும்பி வந்ததும் குடிப்பதற்கு தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும். துணிகளை மடித்து வைத்து, சமையலறை மேடையை ஒதுங்க வைத்து தரை தூக்க வேண்டும். பாத்திரங்கள் கழுவி விட்டு, முகம் மழித்தல், குளியல். 7 மணிக்கு தியானம். சாப்பிடுவதற்கு சப்பாத்தி போட்டுக் கொள்ளலாம், அல்லது தோசை, அல்லது கோதுமை தோசை. மூன்றுமே கொஞ்சம் கொஞ்சம் மீதி வைத்திருக்கிறேன். சாப்பிட்டு விட்டு 7.45க்கு அலுவலகத்துக்குக் கிளம்பி விடலாம்.

8 மணிக்கு அலுவலகம் போனதும் முதல் வேலையாக இஷ்யூ டிராக்கரில் அறிக்கை உரிமைகள், அணுகல்கள் குறித்த மாறுதல்களை செய்ய வேண்டும். ஒரு அறிக்கை உருவாகும் போது அதை உருவாக்கியவரை உரிமையாளராக சேர்க்கலாம். அறிக்கையை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதை அவர் நிர்ணயிக்கலாம். அறிக்கைகள் பக்கத்தில் உரிமையாளர் பெயர் காட்டப்பட வேண்டும்.

ஒவ்வொரு பயனரும் என்னென்ன அறிக்கைகளை பார்க்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க ஒரு பக்கம். முதல் தொகுப்பில் அவரை உரிமையாளராகக் கொண்ட அறிக்கைகள். இரண்டாவது தொகுப்பில் அவர் பார்ப்பதற்கு அனுமதி உள்ள அறிக்கைகள். இங்கு போய் காண்பிக்கப் பட வேண்டிய அறிக்கைகளை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

தள நிர்வாகி, ஒரு அறிக்கையின் உரிமையாளரை மாற்றும் உரிமை பெற்றிருக்க வேண்டும். அறிக்கை ஒன்று உருவாக்கி அதை இன்னொருவருக்கு கையளித்து விடும் வசதி இருந்தால் போதுமானது. இந்த வசதி எல்லா பயனர்களுக்கும் இருக்கக் கூடாது.

இப்போது சோர்வும், கண்ணில் சுமையும், படுத்துத் தூங்கி விடலாம் என்ற நப்பாசையும் எட்டிப் பார்க்கின்றன. இதுதான் சைத்தான் என்பது. எழுந்து உட்கார்ந்து முதுகெலும்பை நேராக்கி கால்களை நீட்டி புதுப்பித்துக் கொண்டேன். போய் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வரலாம்.

வேலைகளை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி அதைச் செயல்படுத்துவது பெரும் பாடாக இருக்கிறது. ஆகஸ்டு மாதத்திலிருந்து பின்பற்றலாம் என்று எல்லோரும் ஒத்துக் கொண்டு ஆரம்பித்தோம். இன்றைக்குப் பார்த்தால் தெரியும் எந்த அளவு பின்பற்றுகிறோம் என்று.

இன்றைக்கு மீண்டும் ஒரு நினைவூட்டல் அனுப்ப வேண்டும். முடியாதவர்கள் நின்று கொள்ளலாம் என்று கொஞ்சம் கடுமையாகவே சொல்ல வேண்டும். என்னுடைய வேலை நேரத்திட்டத்தையும் தெரிவித்து விடலாம். இன்னும் 10 நிமிடங்களுக்கு இருக்கிறது. இல்லை 8 நிமிடங்கள்தாம். முதுகை வளைக்காமலேயே விரித்திருந்த போர்வையை இழுத்து செல்பேசியை எடுத்துக் கொண்டு மணி பார்த்தேன்.

தண்ணீர் கொதிக்க வைக்க அடுப்பில் ஏற்றி வைத்து விட்டேன். அது 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். மாவு வகையறாக்களை வெளியில் எடுத்து வைத்து விட்டால், குளிர் ஆறி அறை வெப்பநிலைக்குத் திரும்பி விடலாம். உலாவி விட்டு வந்து துணிகளை மடித்து வைத்து தேய்க்கவும் கொடுக்கப் போக வேண்டும்.

இரண்டு நாட்களாக வெயிலும் நன்றாக கொளுத்துகிறது. செப்டம்பர் மாதம் வந்து விட்டது.

புதன், ஜூலை 08, 2009

The pilgrimage

வீட்டில் ஒரு திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்ட தொங்கும் அட்டை இருந்தது. அதை முன்னறையில் மின்பொத்தான்கள் இருக்கும் பட்டியின் ஓரத்தில் பொருத்தியிருந்த ஆணிகளில் தொங்க விட்டிருந்தேன். ஏதோ மாற்றங்கள் செய்து கொண்டிருக்கும் போது அதை எடுத்து தூங்கும் அறையில் சன்னலில் நிறுத்தும் கம்பியில் சொருகி தொங்க விட்டேன்.

இரவில் தூங்கப் போகும் போது மின்விசிறியை இயக்கியதும் கம்பியிலிருந்து நழுவி தரையில் விழுந்து விடும். காலையில் எழுந்திருக்கும் போது எடுத்து திரும்ப மாட்டுவேன். இப்படியே இரண்டு மூன்று வாரங்கள் போய்க் கொண்டிருந்தன. 'என்னடா இது, சாமி படத்தை இப்படி மேலும் கீழுமாக அலைக்கழிக்கிறோமே' என்று படத்தை எடுத்து அலமாரியின் சாவியில் மாட்டினேன். அடிக்கடி திறந்து மூடாத அலமாரிதான். சாவியின் முன்பகுதியைத் தாண்டிய குழிவான பகுதியில் தொங்கிக் கொள்ள காற்றில் விழவும் செய்யாது.

அலமாரியின் நேரெதிரில் பாய் விரித்து தூங்குவேன். வழக்கமாக சுவர் பக்கமாக தலையும், அலமாரியை நோக்கி காலும் வைத்துத் தூங்குவேன். 'எங்கும் இருக்கும் இறைவனுக்கு கால் எந்தத் திசையில் வைத்தால் என்ன!' என்ற அவ்வையார் கொள்கையோடு அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தூங்கும் முன்பும் காலையில் குளித்த பிறகும் தியானம் செய்யும் போதும் சுவருக்கு முதுகைக் காட்டி அலமாரியைப் பார்த்து உட்காருவேன்.

பார்க்கப் போயிருந்த போது திருப்பதிக்குப் போவது குறித்து விவாதம். 'எப்பாவாவது குஷன் இல்லாமல் கோயிலுக்குப் போயிருக்கீங்களா!' என்று கொளுத்திப் போட, அப்படிப் பணம் கொடுத்து வசதியாக கடவுளைப் பார்ப்பது சரிதான் என்று வக்காலத்து வாங்கினேன். அது கொஞ்சம் உறுத்திக் கொண்டுதான் இருந்தது.

அந்த விவாதத்தை ஒட்டி ஓரிரு நாட்களுக்குள் அலமாரியில் மாட்டியிருந்த வெங்கடாசலபதி படத்தில் மார்புக்குக் கீழ் திருமகளின் படம் இருப்பதைக் கவனித்தேன். மிகத் தெளிவாக பெரிய அளவில்தான் வரைந்திருந்தார்கள். திருமகளின் கையிலிருந்துதான் தங்க நாணயங்கள் கீழே கோயிலின் மீது சொரிந்து கொண்டிருக்கின்றன. அது வரை திருமகளைப் பார்க்காமலேயே, பெருமாளில் உடம்பிலிருந்து செல்வம் கொட்டுகிறது என்றுதான் பார்த்திருந்தேன்.

கொஞ்சம் அசைத்துப் போட்டு விட்ட நிகழ்வுதான். கண் முன்னே தினமும் பார்க்கும் ஒன்றில் இருப்பது எப்படி மனதில் பதியாமல் போனது. ஒன்று, எனது அவதானிப்பு அவ்வளவு மோசமாக இருக்கிறது என்று பகுத்தறிவுப் பாதையில் சொல்லலாம், அல்லது திருமகள் என் கண்களில் படாமல் இருந்திருக்கிறார்.

திருப்பதிக்குப் போக வேண்டும் என்று ஒரு எண்ணம்.

சனிக் கிழமை முகம் மழிக்கவில்லை, ஞாயிற்றுக் கிழமையும் விட்டு திங்கள் கிழமை தாடி வளர்க்கலாம் என்று தோன்றியது. திருப்பதிக்குப் போய் மொட்டை போடுவது வரை தாடியும் மீசையும் வளர்த்துக் கொள்ளலாம். மீசையை ஒரு வாரமாகவே கத்தரிக்காமல் விட்டிருந்தேன்.

அன்றைக்கு அலுவலகத்தில் உணவு இடைவேளையில் திருப்பதிக்குப் போக உத்தேசித்திருப்பதால் தாடி வளர்ப்பதாகச் சொல்லி விட்டேன். வியாழன், வெள்ளி விடுமுறையும் கேட்டுக் கொண்டேன். அடுத்த மூன்று நாட்கள் அதே திட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தன. வாடிக்கையாளர் சந்திப்பு எதுவும் இடையூறாக வந்து விடவில்லை.

புதன் கிழமை மாலையில் முடிக்க வேண்டியதை முடித்து விட்டு, 'மூன்று நாட்கள் என்னைப் பிடிக்க முடியாது, ஞாயிற்றுக் கிழமை காலையில் திரும்ப வந்திருப்பேன்' என்று எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்பி விட்டுக் கிளம்பினேன்.

'வியாழக்கிழமை எப்படிப் புறப்பட வேண்டும், எப்படிப் போக வேண்டும், காசு எவ்வளவு வேண்டும், தயாரிப்புகள் என்னென்ன வேண்டும்' என்று எதுவும் முன்தயாரிப்புகள் செய்து கொள்ள முயற்சிக்கவில்லை. திநகரில் வழிபாட்டுக்கு பதிவு செய்து கொள்ளலாம், தங்கும் இடம் பதிவு செய்து கொள்ளலாம் என்று எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

வியாழக் கிழமை இப்போது வளமையாகி விட்டபடி ஆறு மணிக்கு மேல் எழுந்திருந்தேன். தரை தூத்து, பாத்திரங்கள் கழுவி வைத்து விட்டு புறப்பட ஆரம்பித்தேன். வண்டி சாவி எடுத்துப் போக வேண்டாம், வீட்டுச் சாவியையும் இங்கேயே வைத்து விட்டுப் போய் விடலாம் என்று ஆரம்பித்து, பேனாவையும் விட்டு விட முடிவு செய்தேன். செல்பேசியை விட்டு விடலாம் என்று அடுத்த உதயம். புறப்படுவதற்கு முன்பு செல்பேசியை அணைத்து வைத்து விட்டேன்.

பணப்பையில் 102 ரூபாய்தான் இருந்தது. 'வங்கி அட்டையின் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு தானியங்கி எந்திரத்துக்குப் போய் வந்து விட்டு பணப்பையையும் அட்டைகளையும் விட்டு விட்டுப் போய் விடலாம்' என்று ஒரு எண்ணம். அதை கைவிட்டு பணப்பையில் பணம் எடுக்க உதவும் அட்டையைத் தவிர மற்ற அட்டைகளை வெளியில் வைத்து விட்டு எடுத்துக் கொண்டேன். 'நடந்தே போக வேண்டும், முடிந்த வரையில் குறைந்த செலவு செய்ய வேண்டும், உணவுப் பொருட்களையோ படிக்கும் நாளிதழ்களையோ காசு கொடுத்து வாங்கக் கூடாது, சொகுசுப் பேருந்துகளைத் தவிர்த்து குறைந்த செலவில் போக வேண்டும். மலைக்கு நடந்தே போக வேண்டும். காசு கொடுத்து சிறப்பு தரிசன அனுமதி வாங்கி போகக் கூடாது. பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டாலும் இலவச தரிசனத்தில்தான் போக வேண்டும்.'

செருப்பை வீட்டுக்குள் வைத்துக் கதவைப் பூட்டினேன். வெளிப்புறத்தில் போய் ஜன்னல்களை எல்லாம் மூடினேன். வீட்டு சாவியை முன் ஜன்னலின் வழியே உள்பக்கமாக வைத்து விட்டேன். சட்டை, கால் சட்டை, கால் சட்டைப் பையில் பணப்பை - 102 ரூபாய், வங்கி அட்டை. கையில் ஒரு பை - துடைத்துக் கொள்ளும் துண்டு, உள்ளாடை ஒன்று, உடுத்திக் கொள்ள லுங்கி ஒன்று.

விறு விறு என்று நடக்க ஆரம்பித்தேன். வெறும் பாதத்தில் சாலையில் நடப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. மண் சாலைகளில் சிறு கற்கள் குத்தின. நல்ல வேளையாக வெயில் இல்லை. பாதம் சுடாமல் நடந்து கொண்டிருந்தேன்.

ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து மவுண்டு பூந்தமல்லி சாலையில் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். திருப்பதி போகும் பேருந்துகள் இப்படித்தான் போகும். அடுத்த பல நிமிடங்களில் எதுவும் வரவில்லை. பூந்தமல்லி போய் பேருந்து பிடிக்கலாம் என்ற முடிவில் மேப்பூர் போகும் பேருந்தில் ஏறி பூந்தமல்லி சீட்டு வாங்கிக் கொண்டேன். காலில் செருப்பு இல்லாமல் ஏறி உட்கார்ந்த என்னைப் பார்த்து நடத்துனருக்கு முகம் மாறியது. நல்ல மதிப்பான உணர்வுதான் தெரிந்தது.

பூந்தமல்லியில் இறங்கி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். கூட்டமாகத்தான் இருந்தது. நேரம் பார்க்கக் கூட கைத்தொலைபேசி இல்லை. உத்தேசமாக, அடுத்தவர் கையில் கடிகாரத்தைப் பார்க்க முயற்சித்தேன். அரசு விரைவுப் பேருந்துக் கழகத்து கூண்டில் ஒருவர் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தார். திருப்பதி போகும் பேருந்து 7.40க்கு குளிர் சாதனப் பேருந்து, 9 மணிக்கு சொகுசுப் பேருந்து என்று போட்டிருந்தார்கள். குளிரூட்டப்பட்ட பேருந்து வரும் போது கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல் ஓடியிருந்தது. திருப்பதி பேருந்து வேறு எதுவும் வரவில்லை.

102 ரூபாயில் போரூர் பூந்தமல்லி 4 ரூபாய் போக 98தான் மீதியிருந்தது. குளிர் பேருந்தில் திருப்பதி கட்டணம் எவ்வளவு என்று கேட்டால் 115 ரூபாய்கள். பணம் இருந்திருந்தால் ஏறியிருந்திருப்பேன். மீண்டும் காத்திருத்தல். பார்த்து பேசிக் கொண்டிருந்தான். leathercraft ல் சேர்ந்திருக்கிறானாம். அவன் பேருந்து வர ஏறிப் போய் விட்டான்.

ஓசூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் என்று பேருந்துகள். ஒன்றிரண்டு திருத்தணி வண்டிகளும். திருத்தணி வண்டிகளில் உட்கார இடம் கிடைக்கவில்லை. காத்திருந்தேன். வெயிலுக்கு ஒதுங்கி பக்கவாட்டுச் சாலை முனையில் நிற்றல், திரும்பவும் சாலையில் எட்டிப் பார்த்தல், வரும் பேருந்துகளை எட்டிப் பார்த்தல் என்று நேரம் நகரந்து கொண்டிருந்தது. அரக்கோணம் போகும் வண்டி வந்தது. அதில் உட்கார இடம் இல்லை. அதைத் தொடர்ந்து வந்த திருவள்ளூர் வண்டியில் ஏறிக் கொண்டேன். பூந்தமல்லி திருவள்ளூர் வண்டி, உட்கார வசதியாக இடம் கிடைத்தது.

ஏறிய பிறகும் பின்பக்கம் பார்த்து வேறு வண்டி வந்து விடுகிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தேன். 'ஏன் இவ்வளவு பதட்டம், எப்போ போய்ச் சேருகிறோமோ அதை ஆண்டவன் பார்த்துக் கொள்ளட்டும். முடிவு எடுத்து ஏறியாச்சு, பேசாமல் உட்கார வேண்டியதுதானே' என்று கடிந்து கொள்ளுதல். 10, 15 நிமிடங்களுக்குள் பேருந்தை எடுத்து விட்டார்கள். 7 ரூபாய் கட்டணம். கிலோமீட்டருக்கு 28 பைசா கட்டணம் என்று சுந்தர் சொல்லியிருந்ததை நினைவு படுத்தி தூரத்தைக் கணக்குப் போட்டேன். கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர்.

பெங்களூரூ நெடுஞ்சாலையில் அரக்கோணம் சாலையில் திரும்பி விட்டது. திருமழிசையில் கல்லூரி மாணவ மாணவியர் ஏறினார்கள். இரண்டு பெண்கள் புத்தகச் சுமையை என்னிடம் கொடுத்து விட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு வார தாடி, வெறித்த முகம் என்று கிட்டத்தட்ட துறவிக் கோலம்தான்.

இன்னொரு உயரமான பெண்ணும், அவள் அருகில் இன்னொரு மாணவனும், ஏதோ காதல் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்ற மாணவர்கள் எல்லாம் திருவள்ளூர் பேருந்து நிலையத்துக்கு முன்னதாகவே இறங்கி விட, இவர்கள் இரண்டு பேரும் பேருந்து நிலையத்தில்தான் இறங்கினார்கள். நானும் இறங்கி ஒரு சுற்றுச் சுற்றி வந்தேன். திருத்தணி பேருந்து நின்றிருந்தது. நேரக் காப்பாளர் அல்லது தகவல் மைய அலுவலரைக் கேட்டால் திருப்பதி பேருந்து இங்கு வராது, சாலைக்குப் போக வேண்டும் என்று சொன்னார்.

வெளியில் வந்து பேருந்து திரும்பிய இடம் நோக்கி நடந்தேன். முந்தைய நாள் மதியம் அலுவலகத்தில் சாப்பிடும் போது இதுதான் கடைசி சாப்பாடு என்று நினைத்துக் கொண்டேன். மாலையில் ஒரு தேநீரும் பிஸ்கட்டுகளும். அதன் பிறகு எதுவும் சாப்பிடவில்லை.

சாலை நிறுத்தத்தைத் தாண்டி காத்திருந்த சிலருடன் நின்று கொண்டேன். எல்லோருமே திருப்பதி பேருந்துக்குத்தான் நிற்கிறார்கள். அது பேருந்து நிற்க அனுமதிக்கப்பட்ட இடம் இல்லை என்று தோன்றினாலும், இவ்வளவு பேருக்கு உள்ளது நமக்கும் என்று நின்று கொண்டேன். கொஞ்ச நேர காத்திருப்புக்குப் பிறகு தொலைவில் பேருந்து தெரிந்தது. முன் கண்ணாடியில் திருப்பதி பெருமாளின் தலை படம் பதித்திருந்தார்கள். சாலை விளிம்பைத் தாண்டி உறுதியாகக் கையை நீட்டினேன். மற்றவர்களும் பேருந்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவே ஓட்டுநர் நிறுத்தி விட்டார். அதற்காக போக்குவரத்துக் காவலரிடம் வாங்கிக் கட்டவும் செய்தார்.

எல்லோருக்கும் வழி விட்டு நின்றதில் உட்கார இடம் கிடைக்கவில்லை. முன் பக்கம் வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை தெரியும் படி முன் இருக்கைகளுக்கு அருகில் நின்று கொண்டேன். திரைப்படம், விஷால் நடித்த தூத்துக்குடியை முன்னிறுத்திய கதை. விஷாலின் மாமா பிரபு, விஜயகுமார், நாசர், (நதியா என்று பின்னர் தெரிந்து கொண்ட) விஜயகுமாரின் மகள், பானு என்ற நாயகி. அதிகமாக போரடிக்காமலே போனது. அதில் காவல் துறையினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அறைக்குள் வண்டியை விட்டு அவர்களை எந்தத் துறையினர் என்று தப்பாகவே ஊகித்து அடி வாங்கும் நகைச்சுவைக் காட்சி. இதைக் குறிப்பிட்டு எழுதி என்ன படம் என்று டோண்டு தனது பதிவில் கேட்டிருந்தார். முந்தைய நாள் படித்தது, காலையில் படம்.

படத்தின் பெயர் தெரியவில்லை. பின்னர் கேட்டதில் தாமிரபரணி என்று தெரிந்தது. பேருந்து நின்ற அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்து விட்டது. நிறைய பேர் நிற்க வேண்டியிருந்தது. நான் விட்டுக் கொடுக்கவில்லை. இன்னும் கொஞ்ச தூரத்தில் எல்லோரும் உட்கார்ந்து விட்டார்கள். இடையில் சாப்பிடுவதற்கு நிறுத்திய இடத்திலும் இறங்கவில்லை. திருப்பதி வருவதற்கு முன்பு தமிழ் என்ற படம் ஆரம்பித்து விட்டது. இது எல்லாமே சனிக்கிழமை ராணிப்பேட்டை போகும் போன பேருந்தில் பார்த்ததா என்று ஒரு ஐயம் இப்போது.

திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்கும் போது என்ன நேரம்? 11.30க்குக் கொண்டு விட்டு விடுவார்கள் என்று யாரோ சொன்னது காதில் விழுந்திருந்தது. அந்தக் கணக்கில் திருமலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அலிப்பிரி வரை போவதற்கு இலவச பேருந்து உண்டு என்று நினைவிருந்தது. அதைத் தேடிப் போகவோ யாரையும் கேட்கவோ மனதில்லை. திருமலை 5 கிலோமீட்டர் என்று பலகை இருந்தது. 1 மணி நேரத்துக்குள் நடந்து விடலாம்.

செருப்பு இல்லாமல் நடப்பதுதான் சிரமமாக இருந்தது. சாலைகள் தூய்மையாகவே இருந்தன. அதனால் காலில் கல் குத்துவதோ, அசிங்கத்தை மிதித்து விடுவோமோ என்ற கூச்சமோ இல்லாமல் நடக்க முடிந்தது. திசை தவறிப் போய் தவறாக நடக்க வேண்டி வந்து விடக் கூடாது என்று மட்டும் கொஞ்சம் கவலை இருந்தது. அகலமான சாலைகளில் வண்டிகள் பறந்து கொண்டிருந்தன.

'ஆண்டவனாகப் பார்த்துக் கொடுத்தால்தான் சாப்பாடு. நான் கொண்டு வந்திருக்கும் காசு கடன் வாங்கியது. அதை எனது சொகுசுக்காக செலவழிக்கக் கூடாது. எல்லா தரித்திரத்தையும் கொடுத்து செல்வங்களை வாங்கிக் கொண்டுதான் போவேன்.'

வழியில் ஒரு சுற்றுப்பாதையில் உயிரியல் பூங்கா இருந்தது. அதுதான் கோயில் நுழைவாயில் என்று ஒரு எட்டிப் பார்த்து விட்டு திரும்பி நடந்தேன். அலிப்பிரி பேருந்து மையத்தைத் தாண்டிய பிறகு கண்ணுக்கு பாதுகாப்புச் சோதனைச் சாவடி தெரிந்தது. மலை ஏறும் வரை தாகமும் பசியும் தாக்குப் பிடிக்குமா என்று ஒரு சந்தேகம் வந்து விட்டது. பரிபூரண சரணாகதி வந்து விடுவதே இல்லை.

இளநீரைக் குளிர்வித்து கொடுக்கும் வண்டி ஒன்று பார்த்தேன். கொஞ்ச தூரத்தில் இன்னொரு வண்டி. 14 ரூபாய், வெட்டி வைத்திருந்த இளநீர்க் காயைக் கவிழ்த்தி கீழ்ப்பக்கம் கோப்பையை வைத்து நிரப்பிக் கொடுத்து விட்டார். சில்லென்று இருந்தது, பனிக்கட்டிகள் போடாமல் குளிர்விக்கப்பட்டது என்று எழுதியிருந்தார்கள். குடித்து சிறிது நேரத்திலேயே தொண்டை கட்டிக் கொள்ளப் போவதாகத் தோன்றி விட்டது. குரலும் கம்மி விட்டிருந்தது.

அலிப்பிரி மலை அடிவாரத்தில் சாலையின் வலது புறமாக நுழைந்தால் நிறைய பேர் அப்போது வந்திருந்தார்கள். 'திருமலைக்கு ஏறிப் போகும் பாதை மிகவும் புனிதமானது. வரலாற்று சிறப்பு மிக்கது. பல நூற்றாண்டுகளாக பெரிய மகான்கள் நடந்து போன பாதை. அதில் காலணி அணியாமல் போகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று பலகை. போன இரண்டு தடவையும் இறங்கி வரும் போது காலணியுடன்தான் இறங்கியிருந்தேன்.

இப்போது சென்னையிலிருந்தே காலணி இல்லாமல் வந்தாச்சு. 'அனைத்தும் இலவசம். கால்நடையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். மொட்டை போடுதலும் இலவசம். பல மணி நேரம் காத்திருக்காமல் தரிசனமும் உடனேயே பெறுங்கள்' என்று ஒரு அறிவுப்புப் பலகை. இப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கவே இல்லை. நான் நடந்தும் போய் தரிசன வரிசையிலும் காத்திருக்க வேண்டாம் என்று அருள் பாலிக்க இப்படி நிகழ்ந்திருப்பதாக தோன்றியது. பகுத்தறிவு அந்த எண்ணத்தை விரட்டியது. கீழே இருந்த கோயிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று புளியோதரை வாங்கிக் கொண்டேன். அதை சாப்பிட்டு விட்டு தண்ணீரும் குடித்து விட்டு மலையில் ஏற ஆரம்பித்தேன்.

இருதய நோய், நுரையீரல் நோய், மூட்டு வலி உள்ளவர்கள் நடந்து போக முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை. இலவச சாப்பாடு, தங்குமிடம், தரிசனம் என்றதுமே உற்சாகம் நிரம்பியிருந்தது. ஏற ஆரம்பித்தேன். படிகளில் 50 படிகளுக்கு ஒரு முறை எண்ணிக்கை பொறித்திருந்தார்கள். ஆயிரம் வரை கொஞ்சம் முனைந்து விடாமல் ஏறி விட்டேன். ஓரிரு முறை மட்டும் உட்கார்ந்து போனேன். அடுத்த ஆயிரத்தை விடாமல் ஏறி விடுவேன் என்று முடிவு செய்தேன்.

குறைந்தது 10, 15 தடவை உட்கார்ந்துதான் போக முடிந்தது. பல முறையில் மலை ஏறுபவர்கள். ஒவ்வொரு படியிலும் சந்தனம், குங்குமம் வைத்துக் கொண்டே ஏறுபவர்கள், சூடம் ஏற்றிக் கொண்டே ஏறுபவர்கள், குனிந்து தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே ஏறுபவர்கள் என்று ஏற்றத்தை இன்னும் கடினமாக்கிக் கொள்கிறார்கள். அடுத்த நாள் இறங்கி வரும் போது ஒருவர் ஒவ்வொரு படியிலும் வலது இடமாக நடந்து ஏறிக் கொண்டிருந்தார்.

புதன், ஜூலை 01, 2009

திருப்பம்

இன்னொரு மாதம் ஓடிப் போய் விட்டது. ஜூலை பிறந்து விட்டிருக்கிறது. போன மாத சம்பளத்துக்கு வாடிக்கையாளரிடம் பணம் திரட்டிக் கொடுக்க முடிந்திருக்கிறது.

நாளைக்குத் திட்டம் போட்டது போல விடுமுறை எடுத்து திருப்பதி போக வேண்டியதுதான். நாளைக்குக் காலையில் எழுந்து வீட்டில் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு காலை உணவும் முடித்து விட்டு குட்டித் தூக்கம் போட்டு விட்டு 12 மணி வாக்கில் கிளம்ப வேண்டும். கத்திப்பாராவுக்குப் போய் திருப்பதி பேருந்தைப் பிடிக்க வேண்டும். மாலை 6 மணி வாக்கில் கொண்டு விடலாம்.

புறப்பட்டதிலிருந்து திரும்பும் வரை காசு கொடுத்து உணவு எதுவும் வாங்கிச் சாப்பிடக் கூடாது. காசு கொடுத்து சாமியை தரிசிக்கப் போகக் கூடாது. உள்ளே போய் பார்க்க முடியாவிட்டாலும் சரிதான் என்று இருந்தால் கடவுளும் அதற்கு அருள் பாலிக்க மாட்டார்தான். எல்லாவற்றையும் அவன் கையில் விட்டு விட்டு போக வேண்டியதுதான்.

மாலை 8 மணி வாக்கில் மலை ஏற ஆரம்பித்தால் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு மேலே போய்ச் சேரலாம். இடையில் தூக்கம் வந்தால் உட்கார்ந்து தூங்கிக் கொள்ள வேண்டும். மலை மேல் ஏறியதும், குளித்து விட்டு மொட்டை போடும் இடத்தைத் தேடி முடி இறக்கிக் கொள்ள வேண்டும். அது வெள்ளிக் கிழமையாக இருக்கும். அதன் பிறகு தர்ம தரிசனத்துக்கான வரிசையில் நின்று கோயிலுக்குள் போகும் வழியைப் பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட சனிக்கிழமை இரவில்தான் உள்ளே போய் தரிசனம் முடிந்து வெளியில் வர முடியுமாயிருக்கலாம். சனிக்கிழமை அதிகாலை மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தால் சனி மதியத்தில் திருப்பதி வந்து விடலாம்.

சனிக்கிழமை மாலையில் சென்னை திரும்பி விடலாம்.

காசு கேட்பது என்றதும் நினைவு. திங்கள் கிழமை காலையில் புறப்படும் போது சீருடை மாட்டிக் கொண்டு பள்ளிப் பேருந்துக்குக் காத்திருந்தாள். நான் புறப்படும் நேரத்தில் அவள் அம்மா மேலே அழைத்து விட என்னைப் பார்த்து வணக்கம் சொல்லும் வாய்ப்பு இல்லாமல் வெளியில் ஓடி விட்டாள். ஷ்ராம் அகாடமியில் பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை. இரு பாலருமே கால் சட்டையும், மேல் சட்டையும் அணிய வேண்டும். இப்போது நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை பார்க்க அழகாக இருக்கிறது. முன்பு சிவப்பு கால் சட்டையும், வெள்ளை மேல்சட்டையும் வைத்திருந்தார்கள்.

அதற்கு முன்பே காலையிலிருந்தே குழந்தைகளின் நினைவு துரத்திக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் சோகம் மறைந்து விட்டது. ஒரு வித வருத்தம். 2006ல் இருப்பதாக உருவகித்த வருத்தம் மட்டும் மிச்சமிருக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அதுவும் மறைந்து போய் விடலாம்.

ஆண்டவன் என்ன விதித்திருக்கிறாரோ அதுதான் நடக்கும். ஆண்டவனிடம் பேரம் பேசப் போவதில்லை ஆனால் என்னென்ன மாறுதல்கள் வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

1. தினமும் இலக்கில்லாமல் சுறுசுறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பது நிற்க வேண்டும்.
2. அடுத்தவர்களை சார்ந்து இல்லாமல் நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது போல பொருள் செய்ய வேண்டும்.
3. பொருள் செய்யும் பாதையில் சக மனிதர்களை எரித்துப் போட்டு விடக் கூடாது.
4. நாட்டில் என்ன நடந்தால் என்ன என்று விட்டேற்றியாக இல்லாமல் நமது பங்களிப்பை தவறாமல் கொடுக்க வேண்டும்.
5. நம்மிடம் தரப்பட்ட வளங்களை சரியாக பராமரித்து வளர்க்க வேண்டும்.

திங்கள், ஜூன் 29, 2009

வார இறுதி திட்டமிடல்கள்

நேற்றுக் காலையில் எழுந்திருக்கும் போது ஆறரை மணி. இழுத்து இழுத்து அது வரை தூங்கிக் கொண்டிருந்தேன். பல் தேய்த்து விட்டு எழுத உட்கார்ந்தேன். ஏழே கால் மணியிலிருந்து எட்டே கால் வரை எழுத வேண்டும். அதை முடித்த பிறகு வரிசையாக வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தேன். 15 நிமிடங்கள் முன்னதாகவே எழுத்தை நிறுத்தி விட்டு மற்ற வேலைகளை ஆரம்பிக்காமல் நாளிதழ் படிப்பதையும் கணினியில் சீட்டு ஆட்டம் விளையாடுவதையும் ஆரம்பித்திருந்தேன்.

சோஃபாவின் தலைப் பாகத்தில் தூசி படிந்திருந்தது. தரை துடைக்கும் துண்டை எடுத்து எல்லா ஜன்னல்களிலும் தூசி தட்டினேன். அடுக்களையில் சமையல் மேடைக்கு மேல் இருந்த ஜன்னலில் கொசு வலையை எடுத்துக் கழுவ முடியாது. அப்படியே தட்டினால் தூசி மழையே பொழிவது போல இருந்தது. அதுவும் ஓரளவு தெளிவாகி விட்டது.

தரை தூக்கும் போது நாற்காலிகளை, சோஃபாக்களை நீக்கி தூய்மை செய்தேன். உள்ளறையில் சாய்த்து வைத்திருந்த படுக்கைகளையும் இடம் நகர்த்தி பழைய இடத்தில் சேர்ந்திருந்த தூசியை தூய்மை செய்தேன். தூங்கும் அறையில் பக்கவாட்டில் இருந்த பகுதியில் அடைந்திருந்த தூசிகளையும் வாரிக் கொண்டேன்.

அடுத்தது பாத்திரம் கழுவுதல். துணிகளை துவைக்க ஊறப் போட வேண்டும். பாத்திரம் கழுவி முடித்த பிறகு தரை துடைக்க ஆரம்பித்தேன். உடல் வணங்க மறுத்தது. சோம்பலில் உடல் தசைகள் விறைப்பாகிக் கொண்டிருக்கலாம். முதுகு வலிக்கிறது, வயிறு பிடிக்கிறது என்று புலம்பும் நிலைக்கு வந்து விடாமல் இருக்க ஒழுக்கங்களை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டாம். தேவையில்லாத சதை, கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பது என்பது ஒரு வரம். அதை தூக்கி எறிந்து விடக் கூடாது.

வயிற்றுப்பகுதியில் பிடித்துக் கொண்டு வலித்தது. அதைக் கண்டு கொள்ளாமல் குளித்து விட்டு தியானத்தில் உட்கார்ந்தேன். 20 நிமிடங்கள் உட்கார முடியவில்லை. பின்பக்க தேவாலயத்திலிருந்து அல்லேலூயா வழிபாட்டு பாடல்கள் காதை அறைந்தன. அதன் பின்னணியில் வேறு எங்கிருந்தோ குழந்தைகள் கூட்டமாகப் பாடும் உச்சாடன ஓசை. எதிரில் திருப்பதி வெங்கடாசலபதி படத்தில் மார்புக்குக் கீழ் திருமகளின் உருவமும் இருப்பதை அப்போதுதான் கவனித்தேன். அவர் கையிலிருந்துதான் தங்க நாணயங்கள் சொரிகின்றன.

வெளியூருக்குப் போய் வரலாமா என்று தோன்றியது. யாரும் வரப் போவதில்லை என்று தோன்றியது. நாம் மட்டுமாவது திருப்பதி போய் விட்டு வர வேண்டும். திநகருக்குப் போய் தரிசன சீட்டு வாங்கி விட்டு ஒரு நாள் பேருந்தில் ஏறி போய் இரவில் தங்கி விட்டு அடுத்த நாள் அதிகாலையில் மலை ஏறி கோயிலுக்குப் போய் விட்டு நடந்தே இறங்கி வர வேண்டும். இரண்டாவது மாலையில் பேருந்தில் திரும்பி விடலாம். வரும் வியாழக்கிழமை கிளம்பி வெள்ளி, சனி, ஞாயிறு செலவழிப்பது போல போகலாம்.

20 நிமிடங்கள் நகர்வது ஏதோ பெரும் சாதனை போல இருந்தது. மணி அடித்த பிறகுதான் எழுந்திருந்தேன். ஒரு உழக்கு ரவை, இரண்டு உழக்குகள் கோதுமை மாவு சேர்த்து கரைத்து வைத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் ஊற வேண்டும். குடிப்பதற்கு வெந்நீர் கொதிக்க வைத்திருந்தேன். அதில் துளசிப் பொடியைச் சேர்த்து சர்க்கரை சேர்த்து குடிக்க எடுத்துக் கொண்டேன். தொட்டுக் கொள்ள முந்தைய நாள் வாங்கி வந்திருந்த சீடைகள். அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வெளியில் குழந்தைகள் விளையாட வந்து விட்ட சத்தம்.

அந்த அரை மணி நேரமும் War of Worlds கதையும் சீட்டாட்டங்களும் ஓடிக் கொண்டிருந்தன. 10 மணிக்கு முன்னதாகவே கல்லைப் போட்டு தோசை சுட்டுச் சாப்பிட்டேன். தொட்டுக் கொள்ள ஊறுகாயும், மிளகாய்ப் பொடியும். கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே வயிற்றை நிறைத்துக் கொண்டேன். சாப்பிட்ட பிறகு இன்னும் படித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் வந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்கள். கொதித்துக் கொண்டிருந்தது. ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆற்றிக் கொடுத்தேன். கொஞ்ச கொஞ்சமாக எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு குடித்தார்கள்.

11 மணி வாக்கில் அலுவலகத்துக்குக் கிளம்பி விடலாம் என்று புறப்பட்டேன். தேய்க்கக் கொடுக்க வேண்டிய துணிகளை எடுத்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே கொடுத்திருந்த துணிகளை வாங்கிக் கொள்ள நினைவு இருந்தது. இரண்டு கால் சட்டைகளும் இரண்டு சட்டைகளும் இருந்தன. இன்னும் இரண்டு நாட்களுக்கு அவற்றைப் போட்டுக் கொள்ளலாம், அதன் பிறகு வெள்ளைச் சட்டை போட்டுக் கொள்ளலாம். வெள்ளைச் சட்டைக்கு பொத்தான்கள் தைக்க வேண்டும்.

இருசக்கர வண்டி கீழே நின்றிருந்தது. அவருக்கு நேரம் மாற்றியது தெரியாதாம். தொலைபேசி சொல்லியிருக்கவில்லை. வருத்தம் தெரிவித்துக் கொண்டேன். லினக்சு, போஸ்ட்கிரெஸ்கியூஎல், பி எச்பி, மடற்குழு மடல்களை படித்துக் கொண்டிருந்தேன். ஸ்லாஷ்டாட்டில் விவாதங்கள் - இங்கிலாந்திலிருந்து வேறு ஒரு நாட்டுக்குக் குடியேறப் போவதாக ஆலோசனை கேட்பவரைப் பற்றிய விவாதம், மோனோவை அடிப்படையாகக் கொண்டு நிரல் எழுதக் கூடாது என்று ரிச்சர்ட் ஸ்டால்மான் எழுதியிருந்ததைக் குறித்து விவாதம். அங்கிருந்து அமேசான் டாட் காம் தளத்தை எட்டிப் பார்த்தேன். முகப்பை முற்றிலுமாக மாற்றி விட்டிருந்தார்கள். புத்தகங்களையே காணவில்லை.

ஆசிப் மீரான், லக்கிலுக், பத்ரி, டோண்டு பதிவுகளைப் படித்து விட்டு தமிழ் மணத்துக்கு வந்தேன். சாரு நிவேதிதா ஜெயமோகனைக் குறித்து எழுதியிருந்ததைத் தாக்கி பைத்தியக்காரன் என்பவர் பதிவு போட்டிருந்தார். அதை முழுவதுமாகப் படிக்க முடியவில்லை. மேலோட்டமாக மேய்ந்து சாருநிவேதிதா எந்த நிலையில் எழுதுகிறாரோ அதற்கு ஒரு நிலை கீழே என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதிலிருந்து சாரு ஆன்லைன் தளம்.

பக்கம் பக்கமாக ஜெயமோகனை சாடி, கீழ்த்தரமாக தாக்கி, தனது உயர்வையும் ஜெயமோகனின் சிறுமை என்று அவர் காட்ட விரும்புவதையும் வடித்திருந்தார். தனிப்பட்ட முறையில் அவரது பணி, குடும்பம், நண்பர்கள், தொழில் முறை உறவுகள் என்றும் தாக்குவதில் தயக்கம் காட்டியிருக்கவில்லை. மழை பெய்து தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியிலிருந்து பார்க்கும் போது ஒதுங்கிப் போகத் தோன்றும். உள்ளே விளையாடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அருவெறுப்பாக இருக்கும். அதிலிருக்கும் ஒருவர் சேற்றை வாரி இறைத்து நம்மீதும் தெளித்து விட்டால், கையைப் பிடித்து உள்ளே இறக்கி விட்டால், அதை நாமும் அனுபவித்து மகிழ ஆரம்பித்து விடுவோம். வெளியில் வரவே மனது வராது.

சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் அந்த ரகம். பிடிக்கவில்லை என்றால் படிக்காதீர்கள் என்ற அவரது அறிவுரை மிகவும் சரியானதுதான். அவ்வப்போது சேற்றில் விளையாட இறங்கி விட்டால், வெளியில் எளிதில் வந்து விட முடியாமல் போய் விடுகிறது.

ஜெயமோகனின் எதிர்வினை அவ்வளவு விபரமாக இல்லா விட்டாலும், குத்தலும் காயப்படுத்தலும் குறைவில்லைதான்.

படித்துக் கொண்டிருப்பதன் இடையிடையே குட்டித் தூக்கங்கள். தண்ணீர் பிடித்துக் குடித்துக் கொண்டேன் சாப்பிடுவதற்கு என்று முயற்சி எதுவும் எடுத்து விடவில்லை. 3 மணிக்கு சந்திப்பு. சரியா 3 மணிக்கு வந்து விட்டார். 3.10 வரை வரவில்லை. தொலைபேசிக் கேட்டால் புறப்பட்டு விடுவதாகச் சொன்னார். மூன்றரை மணிக்குப் பிறகுதான் வந்தார். அவர் வந்து உட்கார்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு கூட்டத்தை ஆரம்பித்தோம்.

முதலில் அடுத்த 9 மாதங்களில் எப்படி விற்பனை செய்யலாம், எத்தனை வாடிக்கையாளர்கள், ஒரு வாடிக்கையாளருக்கு என்ன வருமானம், நிலையான செலவுகள் என்னென்ன, மாறுபடும் செலவுகள் என்னென்ன என்று பட்டியலிட்டிருந்தார். நன்றாக யோசித்து எல்லாவற்றையும் சேர்த்திருந்தார். அதை மாதவாரியாக பிரித்து இன்னொரு விரிதாளில் போட்டுக் காட்டினோம்.

அதுவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. அவரைத் தொடர்ந்து மென்பொருள் உருவாக்கத் திட்டம் தயாரித்திருந்தார். எல்லாவற்றையும் மொத்தமாக தயாரித்து முடித்து அதன் பிறகு சோதனை, தர நிர்ணயம் அதன் பிறகு வெளியிடுதல் என்று வேண்டாம். ஒவ்வொரு மாதமும் இரண்டிரண்டு வெளியீடுகளை கொடுங்கள் என்று மற்றும் மாற்றினேன்.

இரண்டு திட்டங்களின் விபரங்களை தயாரிக்க வேண்டும். இரண்டையும் சேர்த்த திட்டம் உருவாக்க வேண்டும்.

எல்லோருக்கும் முன்னதாக நான் கிளம்பி விட்டேன். வழியில் கடையில் பொருள் வாங்க வேண்டும். பழமுதிர்ச் சோலையில் ஒரு தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், எலுமிச்சம் பழம் வாங்கினேன். 27 ரூபாய்க்கு 25 ரூபாய் எடுத்துக் கொண்டார். மாவுக் கடையில் 16 ரூபாய்க்கு ஒரு கிலோ மாவு.

வீட்டுக்கு வரும் போது யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. கால் சக்கரம் பற்றி பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கூப்பிட்டு எலுமிச்சை சாறு குடிக்கலாம் என்று அழைத்தேன். வெளியில் போவதற்கு அவன் பெற்றோர்கள் தயாராகி இருந்தார்கள். அவசர அவசரமாக கரைத்து ஆற்றிக் கொடுத்து விட்டேன். கொஞ்சம் உப்பும் சேர்த்து நான் குடிக்க வேண்டும்.

தோசை மாவை பாத்திரத்துக்கு மாற்றி உப்பு போட்டு வைத்தேன். தேங்காயைக் கீறி உப்பு சேர்த்து, புளி, பச்சை மிளகாயுடன் துவையல் அரைத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் படித்துக் கொண்டிருக்கலாம் என்று அலுவலகத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்த Lost Years என்ற Star Trek கதையைப் படித்துக் கொண்டிருந்தேன். பொன்னியின் செல்வன் பாகங்களை கொடுத்து கொடுக்கச் சொன்னால், அவன் நேரா கொடுத்து விடுவதாக ஓடிப் போய் வந்தான்.

தோசைக்குக் கல்லைப் போட்டு சாப்பிட ஆரம்பித்தேன். முதலில் ஊறுகாயும், துவையலும் மட்டும். நாலைந்து சாப்பிட்ட பிறகு மிளகாய்ப் பொடியும் குழைத்துக் கொண்டேன். இன்னும் இரண்டு தோசை சாப்பிட்டு விட்டு மாவை வழித்து மூடி வைத்து விட்டேன். வெளியில் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது. வீட்டுக்குள் கால் சக்கரங்களுடன் வந்து விட்டாள். சக்கரங்கள் வாங்கி விட்டிருந்தாள். வீட்டுக்குள் விளையாடினால் தரையில் கோடு விழுந்து விடும் என்று வெளியில் அனுப்பி விட்டேன்.

சக்கரம் இல்லை. 'வெளியில் நம்ம குடியிருப்புத் தரையில் எப்படி விளையாட முடியும்' என்று நான் சொன்னதும், 'எங்க அப்பாவும் அப்படித்தான் சொல்றாங்க, எங்க தாத்தா வீட்டுக்குப் போகும் போது விளையாடலாம் என்கிறாங்க' என்று சமாதானப் பட்டுக் கொண்டாள். இவர்கள் இரண்டு பேரும் விளையாடும் போது அவள் தனியாக உட்கார்ந்திருப்பது மனதுக்கு கஷ்டமான ஒன்றுதான்.

அவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் விளையாட வசதி செய்து கொடுக்கும் போது வீட்டில் வெளியில் போயிருந்தவர்கள் வந்து விட்டார்கள். பையனும் விளையாட இறங்கி விட்டான். அடுத்த அரை மணி நேரம் கலகலப்பாக இருந்தது. சாப்பிடக் கேட்க சீடை டப்பாவை எடுத்துக் கொடுத்தேன். நேற்றைப் போல டப்பாவை காலி செய்து வெறும் டப்பாவைக் கொடுத்து விட்டாள்.

நான் கொடுத்து விட்ட புத்தகங்களுக்கு நன்றி சொல்ல வருகிறார்கள். இறங்கி மிதிவண்டியில் விளையாட ஆரம்பித்தான். அவனைப் பற்றி நல்லதாக நான்கு வார்த்தை சொன்னேன்.

'இவருக்கு எல்லோரும் நல்லவங்கதான். வீட்டுக்குள் எல்லாம் freeயா போய் விளையாடி விட்டு வாராங்க. வண்டியைக் கழுவுவது கூட இவங்க நிறுத்தத்தில் செய்து விடுகிறார். கொஞ்சம் விட்டால் வீட்டு முன்னறையில் செய்து விடுவார்' என்று கிண்டல் அடித்தார்.

'குடும்பத்தினர் வந்து வசிக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது எல்லோரும் பயன்படுத்திக் கொண்டார் என்ன குறைந்து விடும் என்று சீரியசாகவே பதிலளித்தேன்.

வெளியில் வந்தால், சாப்பாடாகி விட்டதா என்று விசாரித்தார். அப்படியே வீட்டைப் பற்றிக் கேட்ட உள்ளே அழைத்து வீட்டைச் சுற்றிக் காட்டினேன். அப்போதும் உட்காரச் சொல்லவில்லை. உட்காரச் சொல்லி ஏதாவது குடிக்கக் கொடுத்திருக்கலாம். அவர்கள் கிளம்பிப் போகும் போது 9 மணி தாண்டியிருந்தது. கதைப் புத்தகத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். 9.40க்கு தியானத்தில் உட்கார்ந்தேன். தொடர்பே இல்லாமல் விழிப்புக்கு ஒட்டாமல் கனவு நிலையில் ஓடின. சில நிமிடங்களிலேயே படுக்கை விரித்து படுத்து விட்டேன். காலையில் சாப்பிட்ட ரவை தோசையும், மாலையில் சாப்பிட்ட அரிசி மாவு தோசையும் துவந்த யுத்தம் செய்து கொண்டிருந்தன. பல விதமான கனவுகள்.

நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்டதாகக் கனவு. எங்கோ வேலூரில் வண்டியை வெளியில் விட்டு விட்டு பேருந்தில் போய் விட்டதாகக் கனவு. திரும்பவும் வண்டியை எடுக்க இரண்டு நாட்கள் ஆகி தொலைந்து போயிருக்குமோ என்று பதற்றம். மணி 6 ஆகி விட்டது. இன்றைக்கு 8 மணிக்கு அலுவலகம் போக வேண்டும்.

இதை முடித்து விட்டு வீட்டை ஒதுங்க வைத்து தேய்க்கக் கொடுக்க வேண்டிய துணிகளை பையில் அடைக்க வேண்டும். தரை தூக்க வேண்டும். வெள்ளைச் சட்டையில் பட்டன் தைக்க வேண்டும் (6.30). பாத்திரம் தேய்த்து விட்டு துணி துவைக்க வேண்டும். (7.15). குளித்து விட்டு தியானம் (8). சாப்பிட்டு விட்டு அலுவலகம் (8.30)

ஞாயிறு, ஜூன் 28, 2009

வார இறுதி

எழுதாமல் இருந்தது பத்து நாட்கள்தான் ஆகியிருக்கின்றன. பல மாதங்கள் ஆகி விட்டது போன்ற உணர்வு. எல்லாமே துண்டு துண்டாக கழன்று விழுந்து கொண்டிருக்கின்றன. மனதின் எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளாமல் நாளின் பொழுதுகளை நிதானமாக செலவழிப்பது துர்லபமாகவே இருக்கிறது.

கர்மா குறித்து பெரிய விவாதம். லெதர்லிங்க் ஆரம்ப நோக்கமான நிறுவனங்களை இணைக்கும், நிவதிகளை இணைக்கும் பயன்பாடாக எப்படி செயல்பட முடியும் என்ற விவாதம். குழுமம் எப்படி எல்லோருடனும் ஒருங்கிணைந்து பெரிதாக வளர முடியும் என்று ஒரு கோடி காட்டியிருந்தேன்.

இங்கிருந்து எப்படிப் போக வேண்டும். நடந்து முடிந்தவற்றை திரும்பிப் பார்க்கக் கூட முடியாத அளவுக்குக் குழம்பிக் கிடக்கிறது. இரண்டு பேரிடமும் காசு கொடுத்தால்தான் வேலை என்று கறாராகச் சொல்லியாகி விட்டது. 'நீங்கள் பராமரிப்பு சேவைக்கு காசு தர தயாராக இல்லா விட்டால், மாதா மாதம் அறிக்கை எடுக்கும் வழிமுறையை மட்டும் கற்றுக் கொடுத்து விடுகிறோம், அதன் பிறகு நீங்கள் கூப்பிட்டால் வருகிறோம்' என்று சொல்லி நிறுத்தி விடலாம்.

இதை முடிக்கும் போது 7.20 ஆகியிருக்கும். வீட்டில் பொருட்களை ஒதுங்க வைக்க வேண்டும். - 7.45
தூத்து விட்டு பாத்திரம் கழுவ வேண்டும் 8.15
தரை துடைக்க வேண்டும் 8.30
குளிக்க வேண்டும் 8.45
தியானம் 9.15

தியானம் முடித்து விட்டு அலுவலகம் போக வேண்டும். அலுவலகத்தில் மின்னஞ்சல்கள் பார்த்து விட்டு விவாத மன்றத்தில் புதிய இடுகைகளைச் சேர்க்க வேண்டும். பக்கங்களில் வாக்கியங்களை சரிபடுத்தி விட்டு இன்றைக்கே மின்னஞ்சலில் எல்லோருக்கும் மறு வரவேற்பு கொடுப்பதை செயல்படுத்த ஆரம்பிக்கலாம். - 10.15

Lகலம் வணிகமுறை விற்பனைக்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். - 10.30
Lகளம் தொடர்பான நிறுவனத் திட்டங்களின் விவாதம் - 10.30 முதல் 12.30 வரை.

12.30க்கு வீட்டுக்குத் திரும்பலாம்.
குளியலறை சுவர்களை தேய்த்துக் கழுவ அமிலம் வாங்கி வர வேண்டும் இன்றைக்கு. குளியலறையில் ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புக் கூட்டங்களுக்கு வழி செய்ய வேண்டும். 2 மணி.

ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று குழப்பவாதியாக மாற்றி விட்டார்கள் என்னை எல்லோரும் சேர்ந்து. பேசுவதை நன்கு சிந்தித்து, குழப்பம் இல்லாமல் சொல்ல வேண்டும். ஒரு முடிவு எடுக்கும் முன் நன்கு ஆலோசித்து எல்லா பக்கங்களையும் உணர்ந்து முடிவு எடுக்க வேண்டும். முடிவு எடுத்த பிறகு மாறக் கூடாது. ஒரே குழப்ப மயமாகி போயிருக்கிறது.

இப்போதே மனதுக்கு எண்ண ஓட்டங்களில் இறங்க முடியவில்லை. நேற்றைக்குக் காலையில் தாமதமாக எழுந்து பல் தேய்த்துக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருப்பேன். இடையில் பிறந்தநாள் இனிப்பு என்று தட்டில் கொண்டு வந்து நீட்டினாள். கை குலுக்கிப் போனாள்.

காலை உணவுக்கு கோதுமை மாவைக் கலந்து தோசை சுட்டுக் கொள்ள முடிவு செய்தேன். மாவைக் கரைத்து வைத்து விட்டு நாளிதழில் படித்துக் கொண்டிருந்தேன். நான்கைந்து தோசைகள் வந்தன. மிளகாய்ப் பொடி, ஊறுகாய் இரண்டும் சேர்ந்து நன்றாகவே உள்ளே போயின.

அதைத் தொடர்ந்து கணினியில் war of worlds படிக்கவும், patience சீட்டாட்டம் ஆடவும் ஆரம்பித்தேன். ஒரு விளையாட்டுப் பெட்டியைத் திறந்து விளையாட ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் கழித்து அதை அப்படியே விட்டு விட்டு இன்னொரு பெட்டியை கீழே இழுத்தான். 'முதலில் எடுத்ததை திரும்பி வைத்து விட்டுத்தான் அதை எடுக்க வேண்டும் என்று வாங்கி வைத்து விட்டேன்'. அழுது புலம்ப ஆரம்பித்தான். கண்டு கொள்ளாமலேயே விட்டு விட கொஞ்ச நேரத்தில் ஓய்ந்து விட்டான். இடையில் அவன் அம்மாவும் வெளியில் இருந்து கொண்டு அழைத்துக் கொண்டு இருந்தார்கள். யாரும் அசைந்தே கொடுக்கவில்லை.

மேலே இருந்த ஒரு பெட்டியிலிருந்து சில புத்தகங்களை கீழே இறக்கினேன். கண்ணாடி இல்லாமலேயே கண் பார்வை சீர் செய்வது எப்படி என்ற நூல், தொழில் முனைவோர் பற்றிய பாடப் புத்தகம் ஒன்று, மின்னல் வேகக் கணிதம் என்ற புத்தகம், சுயமுன்னேற்ற அலசல் புத்தகம் ஆங்கிலத்தில். அவற்றை ஒவ்வொன்றாகப் புரட்டினேன். இடையிடையே ஜவஹர்லால் நேரு என்ற அவரது வாழ்க்கை வரலாறு சொல்லும் சோவியத் புத்தகம், தமிழில் படித்துக்கொண்டிருந்தேன்.

கீழே இருக்கும் கடையில் 20 ரூபாய்க்கு The Week வாங்கிக் கொண்டேன். நல்ல தரமான மனதுக்கு உரமளிக்கும் கட்டுரைகள்தான். அதை எடுத்துக்கொண்டே மேலே போய் சிறப்பு சாப்பாடு. 60 ரூபாய்கள். அவியல், உருளைக்கிழங்கு பொரியல், வற்றல்கள், அப்பளம், மல்லிசோறு, பழக் கூழ், மோர் மிளகாய், சாம்பார், காரக்குழம்பு, ரசம், தயிர், மோர். காரக்குழம்பும் மோர்மிளகாயும் விட்டு விட்டேன். மீதி எல்லாவற்றையும் திட்டம் போட்டு சாப்பிட்டு முடித்தேன்.

பக்கத்து மேசையில் ஒரு குடும்பம். அப்பாவின் அருகில் மகள், அம்மாவின் அருகில் மகன். அம்மாவுக்கு இலை போட்டு சாப்பாடு. அப்பாவுக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் தட்டில் கிண்ணங்களில் சாப்பாடு. நான் உட்கார்ந்திருந்த மேசையில் எதிரில் உட்கார்ந்தவருக்கும் அதே போல தட்டில் கிண்ணங்களில் சாப்பாடு.

பிசினஸ் இந்தியா இரண்டு வாரங்களுக்கு முந்தையது என்று தோன்றியது. ஜூன் 28 என்று தேதி போட்டிருந்தார்கள். அப்படி என்றால் நாளைக்கு இன்னொரு பதிப்பு வந்து விடப் போகிறது.

கிளம்பி எப்போது வீட்டுக்கு வந்து சேருவோம் என்ற பதற்றத்துடன் வண்டி ஓட்டி வந்தேன்.

இன்னும் ஓரிரு முறை எடுத்துச் சாப்பிட்டு விட்டு தூக்கம். விழிப்பும் தூக்கமுமாக ஐந்தேகால் வரை ஓட்டி விட்டேன். எழுந்து கொஞ்சம் உலாவி விட்டு வரலாம் என்று வெளியில் பார்த்தால், இரண்டு பேரும் அப்போதுதான் ஆரம்பித்திருந்த தூறலில் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். கீழே விளையாடிக் கொண்டிருக்க அவன் அம்மா மேலே இருந்து முறுவலித்தார். தூங்கி எழுந்த முகத்தோடு கீழே வந்து மிதிவண்டி எடுக்க ஆரம்பித்திருந்தான்.

மழைக்கு எல்லோரும் ஒதுங்கி விட, நான் புறப்பட்டேன். தொலைபேசியை மட்டும் இடுப்பில் சொருகி விட்டு நடக்க ஆரம்பித்தேன். மழை சிணுங்கலாகத்தான் தூறிக் கொண்டிருந்தது. பூமியை குளிர்வித்து விடப் போவதில்லை. விமலா கான்வென்ட் அருகில் மழை இல்லை. வழக்கமான பாதையில் சுற்றி வந்து வீட்டுக்கு வரும் போது மழை முழுவதுமாக விட்டிருந்தது. கால்களில் சக்கரங்களை மாட்டிக் கொண்டு பழகிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் ஆளுக்கொரு காலில் மாட்டுவதாக மாற்றிக் கொண்டார்கள். தனக்கும் தரும்படி கேட்டுக் கொண்டு முரண்டு பிடித்தான்.

வீட்டுக்குள் வந்து சாப்பிட கேட்க தட்டை ஒன்றைக் கையில் கொடுத்தேன். இதற்குள் புதிய முடி அலங்காரத்துடன் வெளியில் வந்தாள். 'அது பெயர் என்ன' என்று கேட்க தட்டு வடை என்று பதில் வந்தது. மற்றக் குழந்தைகளுக்கும் கொண்டு கொடுக்கலாம் என்று தோன்றினாலும், 'எங்களுக்கு ஒன்றும் வேண்டாம்' என்று துடுக்காகச் சொல்லி விடவும் செய்வார்கள். அவர்களாகக் கேட்டால் கொடுக்கலாம்.

'எனக்கும் அந்த தட்டடை கொடுங்க அங்கிள்' என்று கொஞ்ச நேரத்தில் கேட்டு விட்டது. 'நீயும் எடுத்துக்கோ, மற்றவங்களுக்கும் கொடு' என்று சொன்னதும் டப்பாவையே எடுத்துக் கொண்டு விட்டாள். அடுத்த அரை மணி நேரத்தில் சேர்ந்து எல்லாவற்றையும் முடித்து விட்டார்கள். நிறைய சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாது என்று சொன்னாலும் கேட்கவில்லை.

அவர்கள் எல்லாம் அந்தப் பக்கம் விளையாடப் போய் விட நான் மீண்டும் ஏதாவது படிக்கலாம் என்று ஆரம்பித்தேன். மதியச் சாப்பாடு, நொறுக்குத் தீனி, தூக்கம் இவற்றுக்குப் பிறகு இன்னும் சாப்பிடும் எண்ணமே தோன்றவில்லை. அப்படியே கண்களை தூக்கம் சொக்கியது.

இடையில் வந்து கதவைத் தட்டினார்கள். இரண்டாவது முறை அப்பா வந்து திட்டி தூக்கிக் கொண்டு போனார்கள். நான் விளக்குகள் எரிய அப்படியே தூங்கி விட்டேன். 11.30க்கு எழுந்து முன்னறையிலும் தூங்கும் அறையிலும் விளக்குகளையும் தூங்கும் அறை மின்விசிறியையும் நிறுத்தி விட்டேன். எழுந்து ஏதாவது எழுதக் கூடச் செய்யலாம். தூக்கம் வரவில்லை. வலுக்கட்டாயமாகத் தூக்கத்துக்குள் போனேன். மூன்று மணியிலிருந்தே விழிப்பு வந்து கொண்டிருக்க ஏதேதோ காரணம் கற்பித்து தூங்கிக் கொண்டே இருந்தேன்.

வகுப்பறையில் பாடம் நடப்பது போல ஒரு கனவு. ராஜீவ் காந்தி வருகை தரும் கூட்டத்தைப் பற்றிய ஒரு கனவு. அதை அரைக்கனவு என்று சொல்லலாம். உயரமான இடத்தில் நின்று கொண்டு பார்த்தால், வானமெங்கும் ஆக்கிரமிக்கும் ஒரு வானூர்தியில் வந்து இறங்குகிறார் ராஜீவ். இங்கிருந்து பார்வை கோட்டில்தான் இருக்கிறார், எப்படி விட்டு வைத்தார்கள். நாலா புறமும் பாதுகாப்பு வளையங்கள். இடுக்கின் வழியாகப் பார்த்தால் ஊர்தியிலிருந்து இறங்கி கூட்டத்துக்கு நடக்கும் மனிதர் கண்ணில் படுகிறார்.

அதன் பிறகு கற்பனைக் கனவு. நீங்கள் வருவதற்காக இந்த கிராமத்தில் ஏதேதோ தூசி தட்டி வைத்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் இவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா என்று ஒலி வாங்கியைப் பிடித்து நான் பேசுவதாக கற்பனை. வேறு என்னென்ன செயற்கரிய செய்யலாம் என்று கற்பனை செய்ய முயன்று முடியாமல் விட்டு விட்டேன்.

வியாழன், ஜூன் 18, 2009

இறுக்கல்கள்

நேற்றுக் காலையில் புதுச் சேரிக்குப் போக வேண்டும். 8.30க்கு அலுவலகத்தில் வாடிக்கையாளரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒரு வாடிக்கையாளரைக் குறித்துப் பேசுவதாக ஏற்பாடு செய்திருந்ததன் இரண்டாவது அமர்வு. அதை கைவிட வேண்டாம் என்று 10 மணிக்கு மேல் புதுச்சேரிக்குப் புறப்படலாம் என்று முடிவு. வாடிக்கையாளருக்கும் மதியத்துக்கு மேல் வந்து விடுவதாகத் தகவல் அனுப்பியிருந்தேன்.

காலையில் எழுந்து நாட்குறிப்பு எழுதும் போதுதான் முந்தைய நாள் முழுவதும் செய்து கொண்டிருந்த துண்டு துண்டான பணிகள் வரிசைப்பட்டன. எதையுமே பதிந்திருக்கவில்லை. அலுவலகத்துக்கு சீக்கிரமாகப் போய் அவற்றை பதிந்து விடலாம் என்று எண்ணம். குளித்து தியானம் முடித்து கிளம்பும் போது ஏழு மணி தாண்டியிருந்தது. சாப்பிடாமல் போனால் வெளியில் எங்காவது சாப்பிடத் தோன்றும். சப்பாத்தி செய்ய முடிவு செய்தேன்.

ஒரு பாகற்காய், ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, உருளைக்கிழங்குகள் கிடந்தன. அவற்றை எல்லாம் வெட்டி சமைத்துக் கொள்ளலாம். முதலில் எண்ணையில் வதக்கி பொரியலாக்கலாம் என்று ஆரம்பித்து, காரத்துக்கு நல்லமிளகும் சீரகமும் அரைத்துப் போட்டேன். நன்றாக வேகட்டும் என்று கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து விட்டேன்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது வாங்கி வைத்து பயன்படுத்தாமல் இருந்த புளியோதரைப் பொடியையும் கணிசமான அளவு கலந்து பிசைந்தேன். அடைத்த பரோட்டாக்கள் போல தடிமனாக சப்பாத்தி போட்டுக் கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சாப்பாடு தயாரித்து சாப்பிடுவதற்கு.

8 மணிக்கு முன்பு வீட்டிலிருந்து கிளம்பி விட்டேன். அலுவலகத்தில் போய் எழுதியவற்றை வலைப்பதிவிலும், அதைத் தொடர்ந்து பணி விபரங்களை அலுவலக பயன்பாட்டிலும் பதிந்து கொண்டேன். வண்டிச் சத்தம் கேட்டது,

எட்டரை மணிக்கு வர வேண்டிய யாருமே வரவில்லை. 'இன்றைக்கு அமர்வை ரத்து செய்து விடலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாமல் ஏன் இதை செய்து கொண்டிருக்கிறோம். நாளைக்கு வேண்டுமானால் பார்க்கலாம்' என்று அமைதியாகவே சொன்னேன். 'விருப்பம் இல்லை என்றால், வேண்டாம் என்றே சொல்லியிருப்போமே!'. 'அது பேச்சில் வரக்கூடாது, செயலில் வர வேண்டும். நான் அமர்வை தவற விடக் கூடாது என்று புதுச்சேரி போகும் வேலையையும் மதியத்துக்குத் தள்ளி வைத்து விட்டு உட்கார்ந்திருக்கிறேன். உங்களால் நேரத்துக்கு வருவது கூட முடியவில்லை என்றால் எப்படி' . 'போங்க, போய் வேலையைப் பாருங்க, நாளைக்கு நேரத்துக்கு வர முடியுமா என்று பாருங்கள்'.

நான் நடந்து கொண்டது அவர்களை மதிக்காமல் காயப்படுத்தியிருக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் இருப்பது அந்த நேரத்துக்கு வந்து விட்டவர்களை அவமானப்படுத்துவது என்பதை எப்படி உணரப் போகிறார்கள். நேற்றைக்கும் நான் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்டேன். உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல், சொல்ல வேண்டியதை சொல்லி, செய்ய வேண்டியதை செய்திருக்க வேண்டும்.

எப்படி கோபப்படுவது, எப்படி சமாதானப்படுத்துவது, எப்படி நடத்தையை சீர்படுத்துவது என்பதன் சமநிலை எனக்குக் கைவரவில்லைதான். கோபம் என்பது அதீத எல்லைக்குப் போன பிறகுதான் வருகிறது. அது வரை என்ன செய்தாலும் இயல்பாக இருந்து விட்டு, கோபங்களை அடக்கி வைத்து விட்டு, ஒரு கட்டத்தில் சீறிப் பாயும் போது மற்றவர்களுக்கு பெரிய வியப்பாக போய் விடுகிறது. அதன் பிறகு எப்படி தொடர்வது என்று புரியாமல் ஆகி விடுகிறது.

காலை அமர்வை தவற விட்டதற்கான விளக்கத்தைத் தரும்படி மின்னஞ்சல் அனுப்பினேன். பிற்பகலில் பேசும் போது போரூரில் ஏதோ தண்ணீர் குழாய் உடைத்துக் கொண்டதால் வழியில் தாமதமாகி விட்டதாக சமாதானம் சொன்னார். ஒரு நாள் என்றால் இதை ஒத்துக் கொள்ளலாம். என்றைக்காவது நேரத்துக்கு அலுவலகம் வந்திருக்கிறீர்களா என்று கடுமையாகவே பேசினேன்.

ஒன்பதரை மணிக்குப் புறப்பட்டேன். செய்தித்தாள் கடையில் அதைக் கொடுத்து ஜூனியர் விகடனும் டெக்கான் குரோனிக்கிளும் கேட்டால் சில்லறை இல்லை என்று சொல்லி விட்டார்கள். தேநீர்க் கடையிலும் சில்லறை இல்லை.

சாலையைக் கடந்து வடபழனி வரை போகும் 25G பேருந்தில் ஏறினேன். வழியெங்கும் வடபழனி பேருந்து நிலையம் வரை என்று ஒவ்வொரு நிறுத்தத்திலும் கத்திக் கொண்டே வந்தார் நடத்துனர். படிப்பதற்கு ஆங்கிலச் சிறுகதைகள் என்ற புத்தகம். பல முறை படித்து விட்ட கதைகள் இன்னும், சலித்து விடவில்லை. பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே 100 அடி சாலை. சாலையைக் கடந்து காத்திருக்கும் போது திருச்சி போகும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சொகுசுப் பேருந்து. திண்டிவனம் வரை 65 ரூபாய். சின்னத்திரையில் ஏதோ திரைப்படம். தாம்பரம் தாண்டும் வரை சகிக்கும் ஒலியில் ஏதோ தனுஷ் படம். ஆந்திராவுக்கு காதலியைத் துரத்தி போகிறார். விவேக் தாதாவாக காண்பிக்க முயற்சிக்கிறார். யோசிப்பதற்காக போட்ட ரூம் வாடகை தண்டமான படங்களுள் ஒன்றாகப் பட்டது.

விமான நிலையத்துக்கு முன்பு வெகு நேரம் நிறுத்தி விட்டார்கள். ஆள் ஏற்றிக் கொள்வதற்காக. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என்று நின்று நிறுத்தி நிதானமாக நகர்ந்து தாம்பரத்துக்குப் பிறகு வேகம் பிடிக்கும் போது 11 மணி நெருங்கியிருந்தது. சின்னத்திரை ஒளிபரப்பின் ஒலியையும் அதிகப்படுத்தி விட்டு முன்பக்கம் போய் உட்கார்ந்து கொண்டார் நடத்துனர். வழியில் நொங்கு விற்றவரிடம் 10 ரூபாய்க்கு ஒரு பொதி வாங்கினேன். நொங்கில் மேல் தோலை அகற்றி விட்டு சாப்பிட வேண்டுமா, அல்லது அப்படியே சாப்பிட வேண்டும். அந்த பிரௌன் நிற தோலை சாப்பிட்டால் துவர்த்து இருக்கிறது. அகற்ற வேண்டுமானால் கையெல்லாம் பிசுபிசுப்பாகி வெகு நேரம் பிடிக்கிறது. இரண்டாவது தேர்வில் கொஞ்ச நேரம் போனது. கை எங்கு கழுவுவது?

திண்டிவனத்தில் இறங்கி, பேருந்து நிலையத்துக்குள் போய் கை கழுவிக் கொண்டேன். பேருந்தில் உட்கார்ந்திருக்கும் போது வந்த தொலைபேசி அழைப்பை பேசாமல் விட்டதை எடுத்து விபரங்கள் சேகரித்து குறுஞ்செய்தி அனுப்பினேன். மீண்டும் அழைத்தால் அவர் எடுக்கவேவில்லை. இரண்டு மூன்று பேருந்துகளை விட்டு விட்டு தனியார் பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டேன்.

திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை வந்து சேரும் போது மணி ஒன்றரையைத் தாண்டியிருந்தது. தொழிற்சாலைக்குப் போனால் மதிய உணவு என்ன கிடைக்குமோ என்று அங்கிருந்த உணவு விடுதியில் சாப்பாடு. சொதப்பலான சாப்பாடுதான். பசி குறைவாக இருந்தார் ருசியும் நொள்ளை சொல்லிக் கொண்டுதானே இருக்கும்.

இந்தத் தடத்தில் பேருந்துகள் குறைவு. ஆட்டோ பிடித்தால், வெகு தூரம் போய்க் கொண்டே இருந்தது. 60 ரூபாய் கேட்டவரிடம் 50 ரூபாய் கொடுத்து விட்டு உள்ளே போனேன்.

நேற்றைக்கு பெரிய சிக்கலாகிப் போன இரட்டை இன்வாய்ஸ், சரியாக சொன்னதைக் கையாளாமல் இருந்ததுதான். அதற்கு பதிவு எண் இருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறதே என்று சொல்கிறார். எண்ணைக் கேட்டால், நான் போட்ட ஒரு பதிவு எண்ணைத் தருகிறார். நிறைய பொய் பேசுதல், பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளுதல் என்று பல குறைபாடுகள்.


திருவண்ணாமலை போகும் பேருந்தில் திண்டிவனம் வரை ஏறிக் கொண்டேன். உட்கார இடம் கிடைத்தது. மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தார். தூங்கிக் கொண்டே போனதால் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. திண்டிவனத்தில் வசந்தபவன் என்ற விடுதியில் தோசை ஒன்று பால் ஒரு டம்ளர். 23 ரூபாய்கள். சாலையைக் கடந்து போனால் இரண்டு சொகுசுப் பேருந்துகள் வந்தன. நான் நிறுத்தத்துக்குப் போவதற்கு முன்பு புறப்பட்டு போய் விட்டன.

அதன் பிறகு காத்திருந்தால், கால் வைக்க குறுகலான இடைவெளியுடன் பேருந்துகள். அவற்றில் ஏறினால் நாளைக்கு முழுவதும் முட்டி வலியோடுதான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். ஒரு பேருந்தில் ஏறி இறங்கவும் செய்தேன். அரசு விரைவுப் பேருந்து என்று வெளியில் வண்ணம் பூசிய வண்டியில் ஏறிப் பார்த்தால் பழைய டப்பா வண்டி. வண்டி நகரவே பெரிய முயற்சி தேவைப்படும். அதிலிருந்தும் இறங்கிக் கொண்டேன். விழுப்புரம் வண்டிகள் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. சொகுசுப் பேருந்துக்கே காத்திருந்தேன். கொஞ்சம் வசதியாக கால் வைக்கக் கூடிய வண்டி ஒன்று வந்தது. நடத்துனரும் ஏறுங்க என்று உபசரிக்கவே ஏறி விட்டேன். மூன்று பேர் இருக்கையில் சன்னலோரமாக ஒருவர் உட்கார்ந்திருக்க நான் இந்தப் பக்கம் உட்கார்ந்து கொண்டேன். கால் வைக்க வசதியாக இருந்தது.

தூக்கமும் விழிப்புமாக, தூக்கம் பெரும்பகுதி, நகர்ந்தது. கூடுவாஞ்சேரியில் வண்டி நிற்கும் போது உணர்வு வந்தது. அதன் பிறகு அரை குறைத் தூக்கம், வடபழனியில் இறங்கி ஆற்காடு சாலைக்குள் திரும்பினால், பகிர்வூர்தி. முதல் ஆளாகப் போய் உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் இன்னும் 4 பேர். ஆளுக்கு 15 ரூபாய் என்ற எச்சரிக்கையோடு வண்டியை நகர்த்தினார் ஓட்டுனர். ஆவிச்சி, விருகம்பாக்கம், ஆழ்வார்த் திருநகர், வளசரவாக்கம் பேருந்து நிறுத்தம் என்று எல்லோரும் இறங்கி விட கடைசி ஆளாக நானும் இறங்கிக் கொண்டேன். சாலையெல்லாம் தண்ணீராகக் கிடந்தது.

அலுவலகத்துக்கு வந்து காலணியை மாற்றிக் கொண்டு, கணினியை எடுத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பினேன். தாம்பரத்தில் பேருந்து நிற்கும் போது நள்ளிரவு 12 மணி அடித்தது. எங்கோ ஒரு கடிகாரம் 12 முறை அடிக்கவும் செய்தது. வீட்டுக்கு வந்து சேரும் போது 1 மணி நெருங்கிக் கொண்டிருந்தது கை கால் கழுவி படுக்கப் போகும் போது 1 மணி சரியாக. money changers வங்கி பதற்றம் பகுதிகளைப் படித்துக் கொண்டிருந்து விட்டுத் தூங்கி விட்டேன்.

காலையில் 4 மணிக்கு விழிப்பு வந்தாலும், ஆறரை மணி வரைத் தூக்கம். இதை முடித்து விட்டு கை கால் கழுவி விட்டு, முகம் மழித்து அலுவலகத்துக்குக் கிளம்பி விடலாம்.

புதன், ஜூன் 17, 2009

திட்டமில்லா நாள்

நேற்றைக்கு மட்டும்தான் எழுதாமல் இருந்திருக்கிறேன். முந்தாநேற்று எழுத ஆரம்பித்து அரை மணி நேரத்துக்குப் பிறகு சோர்வில் தூங்கி விட்டேன். எழுதும் நேரம் முடிந்த பிறகு எழுந்து கொண்டேன்.

இரண்டு நாட்களாக காலை உணவும் சமைக்கவில்லை. நேற்றைக்கு எழுந்திருக்கும் போதே ஐந்தே முக்கால் ஆகியிருந்தது. தரை தூக்கவில்லை. துணி ஊற வைத்திருந்தேன். பல் தேய்த்து விட்டு துவைக்க ஆரம்பித்தேன். அழுக்காகக் கிடந்த பாத்திரங்களையும் கழுவி வைத்தேன். ஒரு வாரத்துக்கு மேல் ஆகி மாற்றாத பிளேடால் மழித்துக் கொண்டது. நினைவாக புது பிளேடு பொருத்திக் கொண்டேன். டோண்டு ராகவன் 60 முறையோ என்னவோ ஒரே பிளேடால் மழித்துக் கொண்டது குறித்து எழுதியிருந்தார். கொஞ்சம் சாமர்த்தியம் தேவையான பயன்பாடுதான்.

குளித்து விட்டு தியானம். முழுவதுமாக 20 நிமிடங்கள் வரை உட்கார்ந்து விட்டு எழுந்து உடை மாட்டிக் கிளம்பினேன். 8 மணிக்கு சந்திப்பு, அதற்கு முன்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை அனுப்பி விட வேண்டும். ஏழரைக்கெல்லாம் போய்ச் சேர்ந்து விட்டேன். வழக்கம் போல கணினியைத் திறந்ததும், மின்னஞ்சல்கள், செய்திகளில் சில நிமிடங்கள் ஓடியது. பல்லாவரம் போய் வந்த விபரங்களை மின்னஞ்சல் செய்து விட்டு அதன் பிறகு ஒரு பக்க குறு அறிக்கை தயாரித்தேன். அதில் நமது தொக்கி நிற்கும் வேலைகளையும் விளக்க வேண்டும். விளக்கத்தை மின்னஞ்சலில் எழுதிக் கொண்டேன். 8 மணிக்கே வந்து விட்டிருந்தார். அவரிடம் காட்டி விட்டு அனுப்பினேன்.

முந்தைய நாள் வேலை விபரங்களை பிஎஸ்ஜி என்டர்பிரைஸ் பயன்பாட்டில் உள்ளிட்டேன். 8 மணி நேரத்துக்கும் அதிகமான கணக்கு நிரம்பியது.

கூட்டம் ஆரம்பித்தது. ஏவிசி கல்லூரி மாணவர்களை பரீசீலிக்கலாம் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து அதை மேற்பார்வை இடும் பொறுப்பையும் தனித்தனியாக ஏற்றுக் கொண்டோம்.

காலை கூட்டத்தில் பேசியதை மின்னஞ்சலாக தொகுத்துக் கொண்டிருக்கும் போது அவர் வெளியில் கிளம்பவே நானும் சேர்ந்து கொண்டோம். தேநீர்க் கடையில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம். காலையில் சாப்பிடாத பசி எரித்தது. சுசியன் ஒன்று முதலில், தேநீருடன் சமோசா ஒன்று மொத்தம் 19 ரூபாய். எல்லோருகே காசு விஷயத்தில் கொஞ்சம் கவனமாகி விட்டிருக்கிறோம்.

ஷிப்மென்ட் அனாலிசிஸ் அறிக்கை பற்றிய வேலை விவாதத்தை தள்ளிப் போட்டிருந்தோம். அதை ஆரம்பிக்கும் போது வேறு ஏதோ செய்து கொண்டிருந்தேன். அதை முடித்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு உட்கார்ந்திருந்தால் தூத்துக்குடி தொலைபேசி. தேநீர் குடிக்குப் போகும் போதும் அழைத்திருந்தார். நேற்றும் நிறைய தவறுகள். 'இன்வாய்சில் எண் தவறாக கொடுத்து விட்டார்கள், ஒரே பொருளுக்கு இரண்டு இன்வாய்ஸ் எடுத்து விட்டார்கள், அறிக்கை சரியாக வரவில்லை' என்று குற்றப்பத்திரிகை வாசித்தார். தொலைபேசி கேட்டால் விளக்கம் சொன்னார்.

அந்த விவாதத்தை முடித்து விட்டு ஷிப்மென்ட் அனாலிசிஸ் கூட்டத்தில் சேர்ந்தேன். அங்கு ஏன் வேறுபாடு வருகிறது என்பதை விளக்கி விட்டு பொறுப்பை எடுத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டேன்.

எல்லோரையும் அழைத்து நாம் செய்திருந்த முடிவை விளக்கி விடலாம் என்று சுந்தர், கார்த்தி, நான் நான்கு பயிற்சி மாணவர்கள் உட்கார்ந்தோம். அவர்களிடம் விபரங்களை விளக்கி விட்டு முடிவு செய்தோம்.

தொழிற்சாலையிலிருந்து பேசினார். அவரால் அறிக்கைகளை மேலேற்ற முடியவில்லையாம். அனுப்பியிருந்த கோப்பை கூட ஏற்ற முடியவில்லை என்றார். புதிய அறிக்கையாக முயற்சிக்கலாம் என்று முயற்சித்ததில் நேற்றைக்கு எனக்கு வேலை செய்தது. இன்றைக்குக் காலையில் தொலைபேசி அவருக்கும் 'புதிய அறிக்கை உருவாக்க முடிகிறது. அறிக்கையில் தரவுகளை புதிப்பிக்கும் போது பிரச்சனை வருகிறது' என்று சொன்னார்.

அதைப் பார்ப்பதற்கு பயன்பாட்டைத் திறந்து முயற்சித்தால் எல்லா வரிகளையும் நிராகரிப்பதாக தகவல் காண்பித்தது. ஏதோ தவறு இருக்கிறது. இரண்டாவது வரிசையில் தரவு தன்மையை போட்டு விட்டு முயற்சித்தால் அதையும் நிராகரித்தது. எங்கோ நிரலில் தவறு இருக்கிறது.

'டைரக்டர் மூன்று நாட்கள் வெளியூர் போகிறார். உற்பத்தி அறிக்கை இதன் மூலம்தான் பார்க்கப் போகிறேன் என்று சொல்லி விட்டார். எப்படியாவது இன்றைக்குள் சரி செய்து கொடுத்து விடுங்கள் சார்' என்று மீண்டும் தொலைபேசினார்.

ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த லட்டுகளை ஒன்றை சாப்பிட்டு விட்டு எஞ்சியிருந்தவற்றில் இன்னொன்றையும் எடுத்துக் கொண்டேன். நிர்வாகப் பணிகளை சுறுசுறுப்பாக ஆரம்பித்து விட்டிருந்தார். கொடுக்க வேண்டிய காசோலைகளை தயாரித்துக் கொண்டார். எச்பி மடிக்கணினிக்கு மின்னிணைப்பு கொடுப்பதற்காக பணம் எடுத்து வர வங்கிக்குப் போனார். என்னுடைய இரு சக்கர வண்டியை எடுத்துப் போனவர் அதற்கு எரிபொருளும் போட்டு கொண்டு வந்து விட்டார்.

சாப்பிடும் போது முதலில் நான் ஆரம்பிக்க தனியாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சோறு சரியாக வேகவில்லை. முதலில் போட்ட சோறோடு நிறுத்திக் கொண்டேன். பருப்பு, மோர், முட்டைகோஸ் துவரன், உருளைக்கிழங்கு பொரியல்.

ஏவிசி கல்லூரியின் இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றாம் ஆண்டு போகும் மாணவர்கள் பயிற்சிக்காக வந்திருந்தார்கள். நேற்றைக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சொதப்பி விட்டு அவர்கள் வந்த நோக்கத்துக்கான திட்டப்பணியை செய்ய வழிகாட்டலில் இறங்கினேன். அதில் நமக்கு என்ன நன்மை என்பது உறுத்திக் கொண்டே இருந்தது. இந்த பணியை வழக்கமாக பிஎச்பி, போஸ்ட்கிரெஸ்கியூஎல்லில் செய்யாமல் வேறு ஏதாவது சுருக்கமான கணிமொழியில் செய்யலாமா என்று படித்துக் கொண்டிருந்தேன். பைதான் அல்லது ரூபி மொழிகளை படிக்கும் போது எப்படி இணையம் சாராமல் இவற்றை செய்ய முடியும் என்று ஒரு ஐயம் வந்தது. தொலைபேசி ஆலோசனை கேட்டால், பைதான் பயன்படுத்தி wxPython என்ற நீட்சியின் மூலம் பல இயங்குதளங்களில் பயன்படுத்தக் கூடிய பயன்பாட்டை உருவாக்கலாம் என்று சொன்னார். தரவுகளை சேமிக்க sqlite தரவுத்தளத்தைப் பயன்படுத்தலாம்.

பயிற்சி மாணவர்களை அழைத்து இந்த முடிவுகளை அறிவித்தேன். பைதான் மற்றும் sqlite பற்றி படித்துக் கொள்ளுங்கள். அதில்தான் உங்களுக்குத் தேவையான பயன்பாட்டை உருவாக்க வேண்டும். இதை திறமூல பயன்பாடாக வெளியிட்டுக் கொள்ளலாம். ஒரு திரையில் கணினி செய்முறைக் கூடத்தை எந்த ஆண்டு வகுப்பு எந்த நேரத்தில் எந்த கிழமையில் பயன்படுத்தும் என்ற அட்டவணையிடல். அட்டவணையில் மாற்றம் செய்வதற்கான திரை ஒன்று. மூன்றாவதாக மாணவர்கள் பெயர், கடவுச் சொல் கொடுத்து உட்புகுதல். அவ்வளவுதான். இவற்றை செயல்படுத்தி இவை தொடர்பான அறிக்கைகளையும் உருவாக்க வேண்டும்.

இதை செய்து விட்டால், GPL மென்பொருளாக வெளியிட்டு விடலாம். அடுத்த ஒரு வாரத்தில் என்ன சாதிக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.

மதிப்பு சரி பார்க்கும் பணியில் பிழை கண்டு பிடித்து விட்டார் என்று பரபரப்பு ஆரம்பித்தது. போய் உட்கார்ந்து பார்த்தால் எதுவும் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. முழுப்படையே கணினியை சூழ்ந்திருந்தது. நானும் என்னுடைய கருத்துக்களைச் சொல்லி விட்டு எழுந்து வந்தேன்.

உயர் மேலாளர்களுக்கு அறிக்கைகள் காண்பிக்கும்படியாக நிலவரங்களை வண்ணங்கள் மூலம் காட்டும் பக்கம் வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தோம். ஒரு விரிதாளில் எங்கள் குழுவினர் மூலம் எந்த மாதிரி வெளிப்பாடு வேண்டும் என்று வடிவமைத்து அனுப்பி விட்டேன். அதை htmlல் செய்து காட்ட வேண்டும்.

தொலைபேசி விபரங்கள் கேட்டேன். நேற்று நடந்த கூட்டத்தின் தாக்கம் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தால் எதுவும் தெரியவில்லை. மாதிரி பொருள் தயாரிப்பதற்காக பொருள் அனுப்பும் முறையை விளக்கி விட்டீர்களா என்று ஒரு கேள்வி, shipment analysisக்கு அவ்வப்போது சரிபார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள்.

மங்களூரிலிருந்து காலையில்தான் ரயிலில் வந்தாராம். ரயில் தாமதமாக வந்ததாம். அவரையும் அழைத்துக் கொண்டு உரையாடல்.

'10 இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பிறகு உட்கார்ந்து மென்பொருள் பயன்பாட்டை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இந்த மாத இறுதிக்குள் இரண்டு வாடிக்கையாளர்களை நீங்கள் கொண்டு வர வேண்டும். '

'எனது இலக்கை நான் எட்ட வேண்டும். புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்' என்று வழக்கம் போல பெரிதாக பேசினார். கடைசியில் 'எனக்கு வர வேண்டிய பணம் எப்போது வரும்' என்று ஒரு கொக்கி போட்டார்.

மடிக்கணினியை இயக்கிக் கொண்டு வந்து விட்டார். கடிதம் தயாரித்துக் கொடுக்க வேண்டும். இவரும் பணிக்காலத்தை நீட்டித்து எழுதுமாறு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். எல்லோருமே அவருக்கு சேவை செய்ய பிறந்திருப்பதாக நினைப்பு அவருக்கு. வேலை செய்வதில் வளவள கொளகொள என்று செயல்படுபவர். அதைக் காணவில்லை, இதைக் காணவில்லை என்று அனத்திக் கொண்டிருந்தார். கடிதம் தயாரித்து அவர் கையில் கொடுத்து விட்டேன். நாட்களை எல்லாம் அதிகமாகச் சொல்ல முடியாது என்று மறுத்து விட்டேன்.

'ஒரு நாளுக்கு அவ்வளவு பணம் எல்லாம் தர முடியாது, எங்க ஆட்களே பார்த்துக் கொள்ளட்டும்' என்று வெளியில் அனுப்பி விட்டாராம். அதன் பிறகு வந்து 'ஒரு நாள் மட்டும் வந்து உதவி செய்யுங்கள்' என்று கேட்டாராம். 'பாதிக்கும் குறைவாக ரூபாய் தருகிறோம்' என்று சொன்னாராம்.

அதற்கு யாரை அனுப்பலாம்? 'அவர்கள் குறைத்து கொடுத்தாலும் முழு சேவை தந்தோம் என்று அவர்கள் உணர வேண்டும். ரூபாய் வாங்கிக் கொண்டு சொதப்பினால் அவர்களுக்கு பயனில்லாமல் போய் விடும். நமது பெயரும் வாய்ப்பும் கெடுவதுதான் மிச்சமாகும்.'

'மென்பொருளில் இருக்கும் வேலைகளை முடித்து விட்டோம், பணமும் கிடைக்க மாட்டேன் என்கிறது, அடுத்த நிலை பராமரிப்புக்கும் வழி செய்ய மாட்டேன் என்கிறீர்கள். மேலே மேலே நாங்கள்தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம்' என்று கேட்டால் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்னாராம். ஏற்பாடு செய்தால் நான் போகிறேன் என்றேன். நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்று ஒரு விளக்கப்படம் தயாரித்திருந்தார். அதை எனக்குக் காட்டினார். மேல் விபரங்களை காலையில் பேசலாம் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டேன்.

வீட்டுக்கு வரும் வழியில் தேய்க்கக் கொடுத்திருந்த துணிகளை வாங்கினேன். 7 துணிகள், 21 ரூபாய்கள். பையில் இருந்தது 19 ரூபாய்கள் மட்டுமே. 2 ரூபாய் நிலுவை இன்றைக்கு வங்கியில் எடுத்துக் கொடுத்து விட வேண்டும். திரும்பும் வழியில் எதுவும் வாங்குவதற்கு பையில் தெம்பில்லாமல் இருந்ததால் நேராக வந்து சேர்ந்தேன். பணம் எடுக்கும் மையத்தின் வெளியில் நீளமான வரிசை. அங்கும் போகாமல் வீட்டுக்கு வந்தேன்.

ஓடி வந்து சுற்றிக் கொண்டிருந்தது. 'சூஸ், சூஸ்' என்று கேட்க, போன தடவை எலுமிச்சை சாறு கொடுத்திருந்தேன். தக்காளிகளை வெட்டி மிக்சியில் அடித்து சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன். அரைத்த பிறகு இறுத்துத் தர வேண்டும் என்று நினைத்து அதைச் செய்யாமலேயே கொடுத்து விட்டேன். தோலும் விதைகளும் இருந்திருக்கின்றன. குடிக்காமலேயே திரும்பிக் கொண்டு வந்து விட்டது.

உப்புமா செய்யலாம் என்று, வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டி, ரவை வறுத்து செய்து விட்டேன். தேங்காயையும் சுரண்டி விட்டு வெட்டி உலர் அரவையில் போட்டுக் கொண்டேன். கூடவே moneychangers கதையைப் படித்துக் கொண்டிருந்தேன். கடனட்டையில் போலிகளின் தொல்லை, கதை நாயகரின் வாழ்க்கைச் சிக்கல்கள் பற்றிய பகுதிகளை படித்தேன். கிட்டத்தட்ட மூன்று கதைகள் இதனுள். வங்கியின் உயர்மட்ட அரசியல்கள். வங்கிக் கிளை ஒன்றில் நடக்கும் சம்பவங்கள். தவறு செய்து சிறைக்குப் போய், அங்கு துன்பப்பட்டு வெளியில் வந்து குற்றக் கூட்டங்களுக்கிடையே புகுந்து விடும் ஒருவரின் கதை. பன்னாட்டு நிதி முறை குறித்த குறை சொல்லும் பகுதிகள். தனித்தனியாக மூன்று நாட்களில் படித்துக் கொண்டிருந்தேன்.

தூங்கும் போது தியானம் செய்யவில்லை. நன்றாகவே தூங்கியதாக உணர்வு. நான்கு மணிக்கு மேல் விழித்து நாலரைக்கு எழுந்து கொண்டேன். இதை முடித்து விட்டு வீடு தூக்க வேண்டும் (6.10). பாத்திரம் கழுவி, முகம் மழித்து விட்டு குளியல். (7 மணி). உடனேயே கிளம்பி விட்டால். நேற்றைய பணிகளை எல்லாம் இஷ்யூ டிராக்கரில் உள்ளிட வேண்டும், வங்கியில் பணம் எடுத்து 2 ரூபாய் தேய்க்கும் கடைக்குக் கொடுக்க வேண்டும், 8.30க்கு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், இன்றைக்குச் செய்ய வேண்டிய பணிகளைக் குறித்து சொல்ல வேண்டும். 10 மணி வாக்கில் புறப்பட வேண்டும்.

10 மணிக்கு பேருந்து பிடித்து வடபழனி. 10.30க்கு புதுச்சேரி பேருந்து. 2 மணி வாக்கில் போய்க் கொண்டு விடுவார்கள். மாலை 7 மணி வாக்கில் திரும்ப பேருந்து பிடிக்கலாம்.
அதைத் தொடர்ந்து ராஜசிந்துவிடம் அவரது பணி விபரங்களை விளக்கி விட்டு, என்ன இலக்கு, என்னென்ன திறமைகளை பார்க்கப் போகிறேன் என்று சொன்னேன். அடுத்த 10 நாட்களில் இலக்கை எட்டுவதற்காக ஒரு திட்டம் வகுத்துக் கொள்ளும்படி சொன்னேன்.

திங்கள், ஜூன் 15, 2009

பாதியில் நின்று போனது

நேரம் 5.05

நேற்றை விட சீக்கிரமாக ஆரம்பித்து விட்டிருக்கிறேன். நேற்று ஓய்வு நாள். இன்றைக்கு வேலைக்குப் போக வேண்டிய நாள். அதுவும் 8 மணிக்கு அலுவலகத்தில் ஒரு பயிற்சிக் கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்குப் போய் சேர வேண்டும். இதை எழுதி முடித்தவுடன் எல்லோருக்கும் நினைவு படுத்தி குறுஞ்செய்தி அனுப்பி விட வேண்டியதுதான்.

நேற்றுக் காலை எழுதி முடித்தவுடன் குடிதண்ணீர் பிடிக்கப் போனேன். பாத்திரங்களை இரவிலேயே கழுவி வைத்திருந்தேன் என்று நினைக்கிறேன். இல்லை தரை மட்டும் தூத்திருந்தேனா! நினைவில்லை. தண்ணீர் பிடித்து வைத்த பிறகு துணி துவைத்து, குளித்து, தியானம் செய்து விட்டு சாப்பிடலாம் என்று திட்டம். வயிறு பசிப்பதாக உருவகித்து உடனேயே சாப்பிட ஆயத்தங்கள். தோசை மிளகாய்ப் பொடியுடன். கூடவே ஊறுகாயும். முன்பெல்லாம் மிளகாய்ப் பொடியுடன் தோசை சாப்பிட்டால் சரியாக செரிக்காமல் இருப்பதாகத் தோன்றும். அது அளவுக்கதிகமாக, புளிக்காத தோசை மாவில் சாப்பிடுவதால்தான் ஏற்பட்டிருக்கிறது. நேற்றைக்கு சாப்பிட்ட பிறகு எதுவும் பெரிதாக பின்விளைவுகள் இல்லை.

முந்தைய நாள் வாங்கி முழுவதும் படிக்காமல் விட்டிருந்த இந்து நாளிதழை படித்து விட்டு அதைத் தொடர்ந்து பிசினஸ் லைன் கட்டிலில் படுத்துக் கொண்டு. தூக்கம் வந்தால் தூங்கிக் கொள்ள வேண்டியது. கொஞ்சம் கண்ணயரவும் செய்தேன். இனிப்பாக சாப்பிட வேண்டும். கடைக்குப் போக முடிவு செய்தேன். திருமண வரவேற்பில் கொடுத்த பையை எடுத்துக் கொண்டு வெளியில் நடந்தேன். பசுமைக் கடைக்கு எதிர் தெருவில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பி நேராக நடந்தால் திருவள்ளுவர் சாலையில் லட்சுமி பவன் அருகில் கொண்டு விடுகிறது. லட்சுமி பவனில் சின்ன பையன்களை வேலைக்கு வைக்கிறார்கள், வேலை செய்பவர்களை மோசமாக நடத்துகிறார்கள் என்று அங்கு போவதும் நின்று விட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு கடையாக புறக்கணிக்க ஆரம்பித்தால், அப்புறம் எதுவும் செய்ய முடியாமல் போகும். புறக்கணிப்பது என்று passive ஆக இல்லாமல், முனைந்து செய்யும் எதிர்ப்புகளை கடைப்பிடிக்க வேண்டும்.

பத்திரிகைக் கடையில் டெக்கான் குரோனிக்கிள் 2.50 காசுகள். பழமுதிர் நிலையம் என்று காய்கனிகள் விற்கும் கடை. தக்காளி, பச்சை மிளகாய், பாகற்காய், வாங்கிக் கொண்டு ஒரு மாம்பழமும் எடுத்துக் கொண்டேன். இரண்டு எலுமிச்சம் பழங்கள். மொத்தம் 44 ரூபாய் வந்தது. காசைக் கொடுத்து விட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலையும் கேட்டு வாங்கிக் கொண்டேன். இன்றைக்கு சமைக்க வேண்டும், சாம்பார் அல்லது ரசம் வைக்கலாம். சாம்பார் வைக்க பருப்பு வாங்கியிருக்கவில்லை. ரசமும், பாகற்காய் பொரியலும் செய்யலாம்.

வீட்டுக்கு வந்ததும் முதலில் மாம்பழத்தை வெட்டி தட்டில் வைத்து சாப்பிட்டேன். பழங்களின் அரசன் என்பது சரியாகத்தான் இருக்கிறது. மாம்பழங்களைப் பழுக்க வைக்க வேதிப் பொருளை சேர்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டதிலிருந்து மாம்பழம் வாங்கும் ஆசையே போய் விட்டிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் இப்போதுதான் இரண்டு வாரங்களாக இரண்டு மாம்பழங்கள் வாங்கியிருக்கிறேன் என்று நினைவு.

கணினியில் உட்கார்ந்து ஏதாவது படிக்க எழுத வேலை செய்யலாம். பயனர் கையேடு எழுத ஆரம்பிக்க வேண்டும். பரிநிரல் மென்பொருள் திட்டங்களை எப்படி நடத்துவது என்ற புத்தகத்தை தகவிறக்கி வைத்திருந்தேன். கணினிக்கு வெளியே டெக்கான் குரோனிக்கிளின் கட்டுரைகள். குஷ்வந்த்சிங், அருண் நேரு, பாகிஸ்தானிலிருந்து ஒரு கட்டுரையாளர் என்று ஞாயிற்றுக் கிழமை தேர்வுகள் பயனுள்ளதாகவே இருக்கும். இன்னும் நடுப்பக்கக் கட்டுரை படிக்கவில்லை.

kpatience என்ற சீட்டு விளையாட்டுகளின் தொகுப்பில் புகுந்தேன். ஒவ்வொரு விளையாட்டாக புரிந்து கொண்டு முயற்சித்துப் பார்த்தேன். ஏற்கனவே இரண்டு மூன்று விளையாடியிருக்கிறேன். நேற்று இன்னும் ஒன்றிரண்டு. கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரம் அதில் போயிருக்கும், விட்டு விட்டு.

குழந்தைகள் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனார்கள். எலுமிச்சம்பழத்தை பிழிந்து சீனி, உப்பு போட்டு ஒரு சொம்பு குடித்திருந்தேன். 'சாப்பிட ஏதாவது தாங்க' என்று கேட்கவும், இன்னொன்றையும் பிழிந்தேன். அவனுக்கு ஒரு டம்ளர். குட்டிப்பெண்ணுக்கு ஒரு டம்ளர், அந்த நேரத்தில் வந்த இன்னொரு பையனுக்கு ஒரு டம்ளர். ரசித்து ருசித்துக் குடித்தார்கள். சப்பிச் சப்பி வெகுநேரம் வைத்திருந்து குடித்தாள். ஒருவன் பாதி மட்டும் குடித்து விட்டு வைத்து விட்டான்.

சமையலுக்கு காய்களை வெட்ட ஆரம்பித்தேன். முதலில் தக்காளியை வெட்டி விட்டேன். அதை ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு ரசம் செய்ய புளியையும் ஊற வைத்து விட்டு பாகற்காய்களை வெட்டினேன். வெங்காயம் அதனுடன் சேர்ப்பதற்கு. பாகற்காயை சட்டியில் வேகப் போட்டு விட்டு ரசத்துக்கான அரைப்பு - நல்லமிளகு, சீரகம், பூண்டு. கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் கொஞ்சம் உருவி தக்காளிக்கு அருகில் வைத்து விட்டேன்.

சோற்றுக்கு அழுத்த கலனை கழுவி எடுத்தேன். கொஞ்சம் உயரமான பாத்திரத்தில் இரண்டரை குவளைகள் அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தேன். வெளிப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றாமலேயே அடுப்பில் ஏற்றி விட்டேன். வெகுநேரமாக நீராவி வரவில்லையே என்று பார்த்தால் பாத்திரம் சூடாகிப் போய் இருந்தது. நல்ல வேளை அப்போது பார்த்தேன். தண்ணீர் ஊற்றியதும் வெதுவெதுவென்று சத்தம் போட்டது பாத்திரம். அதை மூடி வைத்து விட்டு தேங்காயையும் கீறிக் கொண்டேன்.

அதற்குள் பாகற்காய் வெந்து விட, அதே சட்டியைக் கழுவி விட்டு ரசத்துக்கு தயாரிப்புகள். கடுகு தாளித்து வெடித்ததும், அரைத்த கலவையைக் கொட்டி, தொடர்ந்து புளித்தண்ணீர், தண்ணீர் நிறைய ஊற்றி விட்டு தொடர்ந்து தக்காளி, கறிவேப்பிலை, மல்லியையும் போட்டு விட்டேன்.