என்னைப் பற்றி

திங்கள், மே 17, 2010

துளிர்ப்புகள்

நேரம் காலை 6.25, நாள் மே மாதம் 17ம் தேதி, 2010ம் ஆண்டு.

2008 மே மாதத்துக்கும் இந்த மே மாதத்துக்கும் எவ்வளவு வேறுபாடுகள். இதிலிருந்து மீண்டு ஏறி வர வேண்டுமானால் என்னுடைய முனைப்பும், மன உறுதியும் உழைப்பும் மட்டும்தான் உதவியாக இருக்க முடியும். ஏதாவது மாயமோ, தெய்வ அருளோ மின்னல் போல வந்து தாக்கி விடாது.

என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படலாம் என்று தோன்றியது. இப்போதைய நிலைமையில் செய்ய வேண்டியவை

A. மாதாந்திர வருமானம்

சேவைக்கான பணிகளை செய்து அந்த வாடிக்கையாளர்களை நிறைவாக வைத்திருக்க வேண்டும்.
அவர்களுக்கான மாதாந்திர திட்டங்களைத் தயாரிப்பது, அந்தத் திட்டத்தின்படி வேலைகளை முடித்து மாதா மாதம் காசு வாங்குவது, இரண்டையும் தவறாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்.

B. அணி

மூன்று பேரிடமும் தொடர்பும் ஒருங்கிணைப்பும் வலுப்பட வேண்டும். சென்னையில் வாரத்துக்கு 1 நாள் சந்திக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாம். ராமாபுரம் பணியிடத்தில் சந்திக்கும் போது இணைய வழி உரையாடலில் கலந்து கொள்ள வேண்டும்.

மாலை 4 மணி முதல் 5 மணி வரை எல்லோரும் இணைய வழி உரையாடலில் பேசிக் கொள்ள வேண்டும்.

C. புதிய வாய்ப்புகள்

விவாதக் களம், லெதர்லிங்க் வலைப்பதிவு, லெதர்லிங்க் தகவல் களஞ்சியம் மூன்றையும் தினமும் மேம்படுத்த வேண்டும். இவற்றிலிருந்து மின்னஞ்சல் அனுப்புவதையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

செவ்வாய், மே 04, 2010

பாதையும் பயணமும்

'உங்கள் ஒவ்வொருத்தருக்கும் இரண்டு கண்கள்தான் இருக்கின்றன. ஆனால், உங்களைச் சுற்றி ஆயிரம் சோடி கண்கள் இருக்கின்றன. நீங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லது செய்தாலும், அல்லது செய்தாலும், உங்களைப் பற்றிய தகவல், கருத்துக்கள் தாமாக உருவாகி விடும். அதனால் என்ன செய்கிறோம், எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்'

1993ல், டாடா நிறுவனத்தில் பயிற்சி நிலை பட்டதாரி பொறியாளர்களாக சேர்ந்து ஓரிரு மாதங்கள் சென்ற பிறகு ஒரு மாலையில் எங்களை எல்லாம் அழைத்து பேசும் போது நிறுவனத்தில் அப்போது துணைத் தலைவர் பதவியில் இருந்த (இன்றைக்கு செயல் இயக்குனராக உச்சத்துக்குப் போய் விட்டிருக்கும்) திரு ஓ கே கௌல் சொன்ன அறிவுரை அது.

டாடா நிறுவனத்தில் மட்டுமில்லை, உலகத்தில் நமது வாழ்க்கையின் அசைவுகளை நம்மைச் சூழ்ந்த சமூகம் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இரண்டு கண்களால் என்ன நடக்கிறது, யார் நம்மை பார்க்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளவும், ஒரு வாயால் சுற்றி இருப்பவர்களின் மனதை நிரப்பவும் முடிகிறது என்றால், நமது செயல்களைப் பார்க்க ஆயிரம் ஆயிரம் கண்கள்.

2006ம் ஆண்டு ஜூன் மாதம், தினசரி நிகழ்வுகளை எழுதி வெளியிடும் பழக்கத்தை ஆரம்பித்தேன். தனியாக வாழ ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஓடி விட்டிருந்தன. பெரிய தேடலும், குழப்பங்களுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் வெளிப்பாடுகளாக இந்த நாட்குறிப்புகளை எழுத ஆரம்பித்தேன். முந்தைய நாள் நடந்தவற்றை காலையில் எழுத வேண்டும் என்று ஆரம்பித்தது. ஒரு வாரம், 10 நாட்களுக்குப் பிறகு ஒரு வலைப்பதிவில் இடுகைகளாக வெளியிடவும் ஆரம்பித்தேன்.

அதற்கு முன்பே அரசியல், சமூகம் பற்றி எழுதும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற பதிவை ஆரம்பித்து விட்டிருந்தேன். எண்ணங்களை எழுதுகிறேன் என்ற தலைப்பில் ஆரம்பித்த இந்த வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்கவோ, மற்றவர்களிடம் பரப்பவோ செய்யவில்லை. ஒரு சில நாட்களுக்குள்ளாகவே டோண்டு ராகவன், என்னுடைய பிளாக்கர் அடையாளப் பக்கத்தில் இதற்கு இருந்த இணைப்பைப் பிடித்து வந்து படித்து விட்டு ஒரு பின்னூட்டம் கொடுத்து விட்டு சென்றார்.

வயிறு சரியில்லாத நாய் ஒன்று அதை சரி செய்யும் மூலிகையை தேடிப் போய் தின்பதை போல என்னை வழிநடத்த ஒரு பயிற்சியாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு சில இடைவெளிகளுடன் இது தொடர்ந்தது. தினம் தோறும் படிப்பவர்கள் என்று பலர் அறிமுகமானார்கள். படிப்பதாக என்னிடம் வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே படித்தவர்கள் அதை விட பல மடங்கு இருப்பார்கள் என்று தோன்றியது. இடையில் பதிவின் தலைப்பை உள்ளத்தை எழுதுகிறேன் என்று மாற்றிக் கொண்டேன்.

2008ல் மீண்டும் தொடர்பு ஏற்பட ஆரம்பித்த போது, இன்னமும் இவ்வளவு விளக்கமாக சொந்த வாழ்க்கையை எழுதுவது அவளுக்கு நியாயமாக இருக்காது என்று தோன்றியதால் 2008 மார்ச்சில் பதிவில் எழுதுவதை நிறுத்தி விட்டேன். ஒரு ஆண்டுக்கு எழுதப் போவதில்லை என்று அறிவித்து நிறுத்தினாலும், ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிக்கிறேன் என்று அறிவித்து எழுத ஆரம்பித்தாலும், 2008 இறுதியிலும் 2009 முழுவதிலுமாக கலக்கிய நிகழ்வுகள் ஒரு ஆட்டு ஆட்டி நிறுத்தி விட்டன.

இப்போது மீண்டும் ஒரு கரையில் ஏறி புதிய திசையில் செல்ல ஆரம்பித்திருக்கிறேன். கிட்டத்தட்ட தனியாக உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். இணையம் மூலமாக கூட பணி செய்பவர்களுடன் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.

எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறோம், எத்தனை மணிக்கு சாப்பிடுகிறோம், எத்தனை மணிக்கு வேலை ஆரம்பிக்கிறோம் என்று ஒழுங்கு தேவை இல்லாத வேலை முறைமை.

9 மணி அலுவலகத்துக்கு 15 பேர் வரப் போகிறார்கள் என்றால் நாம் 8 மணிக்கே அலுவலகம் போய் விட வேண்டும் என்று 5 மணிக்கு எழுந்து விடலாம். இல்லை என்றால் 5 மணிக்கு எழுந்திருக்க என்ன தூண்டுதல் இருக்கும்?

எதையோ சாதித்து விட வேண்டும் என்று மூழ்கி விட்டிருக்கும் பணி ஒன்றில் ஈடுபட்டிருக்கும் போது விழிப்பு வந்து சில நிமிடங்களுக்கு மேல் உடல் படுக்கையில் தரிக்காமல் எழுந்து விடுவோம். அப்படி இல்லாத நாட்களில்?

நேரம் ஒரு சொத்து, இன்னொன்று பணம். பணத்தை கையாளுவது எனது பலவீனங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. கையில் பணம் இருக்கும் போது அதை எவ்வளவு சீக்கிரம் செலவழிப்பது என்றுதான் செலுத்தப்படுவதாக தோன்றுகிறது. அளந்து, திட்டமிட்டு செலவழிப்பது மூலம் பணத்தை சேமிப்பது, அல்லது கையிருப்பை நீட்டிப்பது என்பது கைவராத கலையாகவே இருந்து வருகிறது.

100 ரூபாய் வருமானம் வர திட்டமிட்டால், உடனேயே அந்த நூறு ரூபாயை யாருக்கு ஊதியமாகக் கொடுக்கலாம், அல்லது புதிதாக என்ன கணினி வாங்கி பயன்படுத்தலாம் என்று கணக்கு போகும். பணம் வங்கிக் கணக்கில் இருந்தால் யாருக்கு ஆதாயம், அதை பலனுள்ள வகையில் செலவழித்தால்தானே நாம் ஏதாவது உருவாக்க முடியும் என்று தத்துவம்.

அது இன்னமும் சரியாகத்தான் படுகிறது. ஆனால் ஊதியம் கொடுப்பதும், கணினி வாங்குவதும் எப்படி ஆக்கபூர்வமான விளைவுகளைத் தர வேண்டும் என்று மேலாண்மை செய்வது இல்லா விட்டால் செலவழித்த பணம், வங்கியில் இருந்த வட்டி சேர்வதற்கு மாறாக வீண் செலவாக நின்று விடும். கல்வி, தொழிலுக்குத் தேவையான கருவி இரண்டுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம், ஆனால் ஒவ்வொரு ரூபாய் செலவழிக்கும் போதும் இது எப்படி செலவழிகிறது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ஒரு ரூபாயாக இது ஈட்டித் தருமா என்று ஆராய்ந்து விட்டு செலவழிப்பது தேவை.

எது எப்படியோ, எனது நேரத்தையும், பணத்தையும் இப்படி எழுதி வைத்துக் கொள்வது என்று உத்தேசம். முதலில் எனக்குத் தெளிவும் பதிவும் கிடைப்பது முதன்மை நோக்கம்.

இரண்டாவதாக எழுதி வைத்துக் கொண்டதை உள்ளத்தை எழுதுகிறேன் பதிவில் இடுகைகளாக வெளியிடுவது. இதனால், எனது செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரம் கண்களை பல்லாயிரமாக, ஏன் பல கோடிகளாகக் கூட பெருக்கிக் கொள்ள இணையத்தில் படிக்கக் கொடுத்துக் கொள்ளலாம்.

முன்பு எழுதிக் கொண்டிருக்கும் போது பணம் தொடர்பான விபரங்களை நீக்கி விடுவேன். சில நண்பர்கள், இப்படி செலவழித்த விபரங்கள் எல்லாம் எழுதத் தேவையில்லை என்று கூடச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது அந்த நீக்கம் செய்யப் போவதில்லை.

முதன்மை நோக்கம் என்னை நானே உரசிப் பார்ப்பதுதான். அதனால் படிப்பவர்களின் விருப்பு வெறுப்புகள் எப்படி எழுத வேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடாதுதான்.

படிப்பவர்களின் பின்னூட்டங்கள் மூலமான வழிகாட்டல்கள், திருத்தங்கள், ஆலோசனைகள் கிடைப்பது கூடுதல் பலன். நாம் எழுதுவதின் மூலம் படிப்பவர்களுக்கு ஏதாவது ஒப்பீடும், வழிநடத்தலும் கிடைத்தால் அது இன்னும் குறைவாக எதிர்பார்க்கும் பலன்.

அலுவலகத்தை காலி செய்து அவரவர் வீட்டிலிருந்து வேலை செய்வது என்று வந்து சேர்ந்து விட்டோம். நிறுவனம் ஆரம்பித்து 2001, 2002, 2003 ஆகஸ்டு வரை வீட்டின் ஒரு அறையிலிருந்துதான் வேலை செய்து கொண்டிருந்தேன். நிறுவனத்தில் சேர்ந்த முதல் ஊழியர்கள் அதே அறையில் இடம் பெற்றார்கள். 2003 ஆகஸ்டில் மூன்று பேராக புதிய அலுவலகத்துக்கு மாறினோம். அரும்பாக்கம், ஜெய்நகர் முதல் சாலையில் நூறடி சாலையை நோக்கி வாசல் இருக்கும், கட்டிடத்தின் பக்கவாட்டு அறைகளில் பெட்டிகள் போன்ற மூன்று அறைகள். மூன்றும் சேர்த்தே 100 சதுர அடிகளுக்குள்தான் இருக்கும். நுழைந்த உடன் ஒரு 20 சதுர அடிக்குள் ஒரு வராந்தா, அதிலிருந்த நேராக ஏறினால் சமையல் மேடையுடன் ஒரு 30 முதல் 40 சதுர அடிக்கு ஒரு அறை. அங்கிருந்து இடது புறம் திரும்பினால் அதை விட சின்ன அளவில் இன்னொரு அறை. அந்த அறையிலிருந்து ஒட்டிய கழிவறை.

அங்கு ஓரிரண்டு ஆண்டுகள் கழித்தோம். கூட வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 10 பேரை எட்டி விட்டது என்று நினைவு. எதிர்பார்த்த வருமானம் இல்லாமல், செலவுகள் மட்டும் பெருகிக் கொண்டே போயின. சேமிப்பு எல்லாம் கரைந்து வாடகை கொடுக்க திணறும் நிலையில், விலை குறைவாக இன்னொரு இடத்தைத் தேடினோம். நிறைய தேடி போரூரிலிருந்து குன்றத்தூர் போகும் சாலையிலிருந்து பிரிந்து முகலிவாக்கம் போகும் சாலையில் இருக்கும் மதனந்தபுரத்தில் ஒரு மளிகைக்கடையின் மாடியில் மாறினோம்.

இங்கு இரண்டு அறைகள், ஒரு முன்னறை, ஒரு சமையலறை. முன்னறைக்கு காற்றே வராது. படியேறி நுழைந்ததும் முன்னறை, சாலையைப் பார்த்தபடி ஒரு அறை, எதிர் புறத்தில் இன்னொரு அறை. இங்கு ஆட்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. சேர்ந்து கொள்ள வளர்ச்சிப் பாதையில் அடி எடுத்து வைத்தோம். இடம் போதவில்லை, பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்ற காரணங்களுக்காக புதிய இடம் தேடினோம். இதற்குள் சந்தைப்படுத்தலிலும் போதிய அளவு வெற்றிகள்.

2004 ஆகஸ்டு 13ம் தேதி வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகரில் ஒரு மூன்று அறை வீட்டில் இடம். வீட்டின் மாடியில் வீட்டுச் சொந்தக்கார அம்மா, கீழே நாங்கள். வண்டி நிறுத்தும் இடம் முன்புறம், வெளியில் நீட்டிக் கொண்டு ஒரு அறை, நுழைந்ததும் முன்னறை, வலது பக்கம் இரண்டு அறைகள், அதனைத் தொடர்ந்து சமையலறை, பொருட்கள் வைக்கும் அறை, வெளியில் பின்பக்கம் கழிவறை என்று வசதியான இடம்.

அடுத்த 4 ஆண்டுகள், 2008 அக்டோபர் வரை அங்கு கழித்தோம். பல வளர்ச்சிகள், வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 20ஐத் தாண்டியது, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே போனது. எல்லோருக்கும் இடம் போதவில்லை, மின் இணைப்பை வணிக முறை இணைப்பாக மாற்றிக் கொள்ள முடியவில்லை, நேரத்துக்கு வாடகை கொடுக்கவில்லை என்று சிக்கல்கள் முற்றி வேறு இடத்துக்கு நகர முடிவு செய்தோம்.

வளசரவாக்கம் ஜெய்நகரில் மாடியில் பெரிய அறையாக ஒரு அலுவலகம், L வடிவில் எல்லோருக்கும் உட்கார மூன்று அறுகோண மேசைகள், 20 நாற்காலிகள், என்று புதிதாக செய்து தடபுடலாக இடம் மாற்றினோம். அதுதான் வளர்ச்சியின் உச்சக் கட்டம், அங்கிருந்து மேலே மேலே போவோம் என்ற திட்டத்தில் செலவுகளை பெருக்கிக் கொண்டால், 2008 செப்டம்பரில் சரிந்த உலகப் பொருளாதாரம் விதிகளைப் புரட்டிப் போட்டது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது, இன்னொரு அலுவலக மாற்றம், விருகம்பாக்கத்தில், வேலை செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் பாதியாகக் குறைந்தது.

கடைசியில் 5 பேர் மட்டும் அலுவலகத்தில் பணி புரியப் போகிறோம். எதற்கு இவ்வளவு பெரிய அலுவலகம், அதற்கு வாடகை, அதற்கு மின் கட்டணம், அவரவர் வீட்டில் அவரவர் செலவில் மின் கட்டணம், இணைய இணைப்பில் வேலை செய்வோம், இணையத்தின் மூலம் ஒருங்கிணைத்துக் கொள்வோம், வாரத்துக்கு ஓரிரு முறை சந்தித்துக் கொள்வோம், பெரும்பான்மை நேரம் வாடிக்கையாளர்களை சந்திப்பதில் செலவிடுவோம் என்று முடிவு செய்து வீடுகளுக்கு மாற்றிக் கொண்டு விட்டோம்.

மே 1ம் தேதி அலுவலகத்தை காலி செய்து, பொருட்களில் பெரும்பாலானவற்றை பயன்படுத்துபவர்களுக்கு விற்று விட்டு, தேவைப்படும் பொருட்களை, கோப்புகளை, ஆவணங்களை மட்டும் கட்டி பெட்டியில் போட்டுக் கொண்டோம்.

15 நாற்காலிகள், 4 தட்டிகளை அலுவலகக் கட்டிடத்தின் உரிமையாளரே வாங்கிக் கொண்டார். 5000 ரூபாய்கள்.
இரண்டு பணி மேசைகள், ஒரு கணினி மேசை, 3 வெள்ளை தட்டிகளை அடுத்து அலுவலகத்தை எடுத்துக் கொள்பவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். 10000 ரூபாய்கள்.
எட்டு கணினி பெட்டிகள், (நினைவகம், வன்தட்டு எல்லாம் அகற்றி) - மின் பெட்டி, மின்னணு பலகை, கணினி இயக்கி அதற்கான விசிறி மட்டும் கொண்டிருந்தன. 5 கணினித் திரைகள், இவை எல்லாவற்றுக்கும் 3700 ரூபாய் கொடுத்து எடுத்துக் கொண்டார் பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர்.

மொத்தம் 18,700 ரூபாய்கள். கிட்டத்தட்ட வாங்கிய, செலவழித்த தொகையில் 10ல் ஒரு பகுதிதான் கிடைத்திருக்கிறது. மற்ற கணினிகள் கருவிகளை இடம் மாற்றிக் கொண்டோம்.

பிஎஸ்என்எல் இணைப்பை ராமாபுரம் வீட்டுக்கு மாற்றிக் கொண்டோம். இணைப்பை சனிக்கிழமையே கொடுத்து விட்டார்கள். இணையம் இன்னும் செயல்பட ஆரம்பிக்கவில்லை.

நேற்று முழுவதும் ஆவணங்கள், கோப்புகளை ஒழுங்குபடுத்தி அடுக்கி வைக்கும் வேலையில் நேரம் கழிந்தது. இன்றைக்கு இணையம் வந்து விட்டாலும், வரா விட்டாலும் வேலையை முழு மூச்சாக ஆரம்பிக்க வேண்டும்.

நேற்று திநகரிலிருந்து திரும்பிய பிறகு மோடத்தை இயக்கிப் பார்த்தால் இணையம் இன்னமும் செயல்பட ஆரம்பித்திருக்கவில்லை. பிஎஸ்என்எல் கட்டண அறிக்கையில் குறிப்பிட்டிருந்த எண்ணை அழைத்தால், யாரும் பேசுவதற்கு ஆளில்லை. 2 மணி நேரம் எழுத வேண்டும் என்று உட்கார்ந்து இடையில் அலுவலக மேசைகளை வாங்கிக் கொள்ள தொலைபேசி அழைப்பு குறுக்கிட, கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கான எழுத்தை முடித்து விட்டு பொருட்கள் வாங்கி வர முடிவு செய்தேன்.

1. அதிக விலை கொடுத்தால் அதிக தரம் என்று ஒரு அணுகுமுறை உண்டு. தரத்தை நாம் கண்ணால் பார்த்து, பயன்படுத்தி உணர்ந்து முடிவு செய்யலாம் ஆகக் குறைந்த விலையில் பொருட்கள் வாங்கலாம் என்று இன்னொரு அணுகுமுறை. இரண்டாவது அணுகுமுறையைப் பின்பற்றுவது என்று முடிவு.

2. தலைக்குத் தேய்க்கும் தேங்காய் எண்ணெய் தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்டுக் கிடைக்கும் விவிடி, இன்னொன்று பாராசூட். நாம் வசிக்கும் இடத்துக்கு எவ்வளவு அருகில் பொருள் உற்பத்தியாகியிருக்கிறதோ அந்தப் பொருளை வாங்கிக் கொள்ளலாம். போக்குவரத்து செலவு குறைவாக இருக்கும்.

3. சமையல் எண்ணெயாக, சுத்திகரிக்கப்பட்ட, வடிகட்டப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் என்று அதிக விலை கொடுக்காமல், சமைக்க எண்ணெய் பண்பு கொடுக்கக் கூடிய சாப்பிடும் எண்ணெய் ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். பாம் ஆயில் என்று அரை லிட்டர் 22 ரூபாய்க்குக் கிடைத்தது.

4. அரிசி 20 ரூபாய் கிலோ என்று ஆரம்பித்து 36 ரூபாய் வரை இருந்தது. பார்ப்பதற்கு பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. கடைக்காரரிடம் கேட்டால், குறைந்த விலை அரிசியில் சோறு கொஞ்சம் பெரிதாக வரும், சாப்பிட எல்லாமே நன்றாகத்தான் இருக்கும் என்றார். முயற்சித்துத்தான் பார்ப்போமே, 20 ரூபாய் அரிசியே போதும்.

5. கோதுமை மாவு ஒரு கிலோ 33 ரூபாய்கள். இதை எப்படிக் குறைக்க முடியும்? பளபள பொதியில், தொலைக்காட்சி விளம்பரங்களுடன் வரும் கோதுமை மாவுதான் இப்போது கிடைக்கின்றன. உள்ளூர் பொதிகள் கிடைப்பதில்லை.

6. பிரட் 16 ரூபாய். இதை இரண்டு வேளை உணவாகப் பயன்படுத்தலாம்.

7. பால் - அரை லிட்டர் 12 ரூபாய் - திருமலா பால். ஆவின் பால் அட்டை வாங்கிக் கொண்டால் விலை குறையும். அது வரை, குறைந்தது உதிரியாகவாவது ஆவின் பால் பொதி வாங்கிக் கொள்ள வேண்டும்.

8. தயிர் டப்பா ஒன்று 4 ரூபாய்கள். பாலைக் காய்ச்சிக் குடித்த பிறகு மீதி இருப்பதில் உறை ஊற்றி புதிய தயிர் செய்து கொள்ளலாம். சோறு பொங்கினால் தயிர் சாதம், அதைத் தொடர்ந்து அடுத்த வேளைக்கு பழைய சாதம் என்று உருவாக்கிக் கொள்ளலாம்.

9. துணி துவைக்க ஊற வைக்க 10 ரூபாய்க்கு ஒரு ரின் பொதி.

10. துணிகளில் தேய்த்து சுத்தம் செய்ய பவர் சோப்பு 8 ரூபாய்கள்.

11. 4 முட்டைகள் 8 ரூபாய்கள்.

12. முறுக்கு 10 ரூபாய்

மொத்தம் 190 ரூபாய்கள்.

இந்தப் பொருட்களை வைத்து, சமையல் வாயு, நமது நேரம், குழாயில் வரும் குடிதண்ணீர் பயன்படுத்தி ஒரு வாரத்துக்குச் சாப்பிட முடியும் என்று தோன்றுகிறது. தினமும் கணக்குப் பார்த்தால் தெரிந்து விடும். வெளியில் உணவு விடுதியில் சாப்பிட்டால், இதே பணத்துக்கு 7 வேளை மட்டும் கொஞ்சம் இறுக்கிப் பிடித்து சாப்பிடலாம்.

காலையில் வெங்காயம் நறுக்கிப் போட்டு, பச்சை மிளகாயுடன், எண்ணெய் தாளித்து சேமியா உப்புமா. மதியம் திநகர் போகும் வழியில் விருகம்பாக்கத்தில் இரண்டு பரோட்டா, (சாப்பாட்டு நேரம் தாண்டி விட்டிருந்தது), பாண்டிபஜாரில் முருகன் இட்லி கடையில் 4 இட்லி, ஒரு காபி. 4 இட்லிக்கு 36 ரூபாய்கள், ஒரு காபி 15 ரூபாய். மொத்தம் 52 ரூபாய் வரியுடன் சேர்த்து. விலையைப் பார்த்தே இட்லி செரித்து விட்டிருந்தது.

திரும்பி பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து வரும் போது பலாப்பழச் சுளைகள், மூன்று 10 ரூபாய்க்கு. ராமாபுரம் வந்து வாங்கியிருந்தால் 5 10 ரூபாய்க்குக் கிடைத்திருக்கலாம். நெசப்பாக்கத்தில் பேருந்திலிருந்து இறங்கி நடக்கும் போது அதைச் சாப்பிட்டுக் கொண்டேன்.

திங்கள், மே 03, 2010

நேரம் மாலை ஏழு மணி 15 நிமிடங்கள். சனிக்கிழமை அன்று விருகம்பாக்கம் அலுவலகத்திலிருந்து பொருட்களை எடுத்து ராமாபுரம் வீட்டுக்குக் கொண்டு வந்தாகி விட்டது. ஏப்ரல் 30க்குள் நிலுவைத் தொகைகளை கொடுத்து விடுவதாக சொல்லியிருந்த வாக்கை மீள் உறுதி செய்யும் அஞ்சலையும் அனுப்பியாகி விட்டது.

அலுவலகத்துக்குக் கொடுத்திருந்த முன்பணத்தொகையை 10ம் தேதியிட்ட காசோலையாகக் கொடுத்திருக்கிறார் கிருஷ்ணன். அதை கடன் திருப்பிக் கொடுப்பதாகத் திட்டம். பிரைம் பணம் வந்தவுடன் சேவைவரி கட்டிய பிறகு, மீதியிருக்கும் பணத்தில் கொடுத்து விட வேண்டும்.

ஊழியர்களின் ஊதிய பாக்கித் தீர்ப்பதில் முதலில் சம்பளப் பணம் கடைசி மாத நிலுவை, அதைத் தொடர்ந்து செலவுக் கணக்கில் கேட்டிருக்கும் தொகைகள். இரண்டும் சேர்ந்து 1 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்காக நான்கு மாத நிலுவைத் தொகையைத் தீர்த்து விடலாம். அது கிட்டத்தட்ட 7 லட்ச ரூபாய் வருகிறது. ஆண்டு விடுமுறைக்கான பணத்தை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்.

கூட இருந்தே, நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கடைசியில் கழுத்தை அறுத்த, வேண்டுமென்றே வெறுப்பைத் தூண்டி விட்டு மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினதுக்கு என்ன தண்டனை? இது போன்று core dump செய்யும் போது எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. இவ்வளவு எழுதிய உடனேயே போதும் என்று சோம்பல் தடுக்க முயற்சிக்கிறது.

இணைய இணைப்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. நாளைக்கு வந்து விடும் என்று நம்பலாம். அதே போல புத்தகம் படிக்கும் உந்துதல் இழுத்து விடாமல் இருக்க வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய ஐகான் என்ற புத்தகம் பழைய திருட்டு அச்சிடப்பட்ட பிரதி வாங்கி வந்திருந்தேன். 30 ரூபாய்க்கு திநகரில் கிடைத்தது.

வண்டியில் போய் விருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தால் 11Hஐ காணவேயில்லை. அருகில் 2இட்லி, 1 வடை உணவகத்தில் போய் 2 பரோட்டா சாப்பிட்டால், 16 ரூபாய் கட்டணம். அந்தப் பாட்டி 500 ரூபாய்க்கு சில்லறை கொடுக்க மாட்டேன் என்றது. கையில் நிறையவே இருந்தது. 16 ரூபாய் சில்லறை கொடுத்து விட்டு 500 ரூபாய்க்கு ஐந்து நூறு ரூபாய்கள் வாங்கிக் கொண்டேன். வெளியில் வந்த உடன் 11H பேருந்து வந்தது.

இருக்கைகள் நிறைய காலியாக இருந்தன. பாண்டிபஜார் சீட்டு 8 ரூபாய்கள். நடத்துனர் முகம் அதிகம் சுழிக்காமல் சில்லறை கொடுத்து விட்டார். அடுத்த இரண்டு நிறுத்தங்களிலேயே உட்காரவும் இடம் கிடைத்து விட்டது. இந்த தடத்தில் கே கே நகரில் நிறைய கூட்டம் ஏறி நெரிசலாகத்தான் போகும். அதற்குள் உட்கார்ந்து விடுவது நல்லது. முருகன் இட்லிக் கடைக்கு எதிரில் டாடா இண்டிகாம் சேவை நிலையம்.

தொலைபேசி கருவியின் அலைவாங்கி உடைந்து போயிருந்தது. வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொலைபேசி, தமிழில் பேச எண் 2ஐ அழுத்தினால், ஒரு பெண் குரல். தூய தமிழில் ஆரம்பித்ததை, பேச்சுத் தமிழுக்கு மாற்றிக் கொண்டேன்.

'உங்க கருவியை சேவை நிலையத்துக்குக் கொண்டு போனால் மாற்றிக் கொடுத்து விடுவாங்க.' 'நீங்க சென்னையிலிருந்துதானே பேசுறீங்க' என்றவரிடம்.
'இப்போ நீங்க எங்க இருக்கீங்க' என்று கேட்டால், கேரளாவிலாம்.
'பரவாயில்லையே தமிழில் நல்லா பேசுறீங்களே' என்று சொன்னால்,
'ஆமாமா, எல்லா மொழி பேசுபவர்களும் உண்டு' என்று மறுமொழி.

வரிசையாக முகவரிகள் சொல்ல, ஈக்காட்டுத் தாங்கல் அல்லது திநகர் நிலையங்களின் முகவரி கேட்டேன். திநகரில் ஜிஎன் செட்டி சாலையில், முருகன் இட்லி கடை எதிரில், ஈக்காட்டுத் தாங்கலில் ஜவஹர்லால் நேரு சாலையில் ஸ்டேட் பேங்க் இந்தியா எதிரிலாம். மேலே சொன்ன மாதிரி விருகம்பாக்கத்தில் இறங்கிக் கொண்டேன்.

பனகல் பூங்கா சுற்றி வந்து பாண்டிபஜாரில் திரும்பிய இடத்தில் இறங்கியிருந்தால் அருகில் போயிருக்கலாம். அடுத்து பாண்டி பஜார் நிறுத்தத்தில் இறங்கி குறுக்குச் சாலையில் போனால் அது வளைந்து இணைப்புச் சாலைக்குக் கொண்டு போனது. தியாகபிரம்ம சபையின் அருகில் ஜிஎன் செட்டி சாலை, அங்கிருந்து நடந்து நடந்து அடுத்த சாலை நிறுத்த விளக்கு வரை வந்தால் வலது புறம் முருகன் இட்லி கடை, இடது புறம் ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் டாடா இண்டிகாம் சேவை மையம்.

உள்ளே நுழைந்தால் வாயிற்காவலர் தடுத்து இருக்கையில் காத்திருக்கச் சொல்கிறார். வழியிலேயே வாங்கி விட்டிருந்த ஐகான் புத்தகத்தைப் பிரித்து உட்கார்ந்து கொண்டேன். உள்ளே அதிகம் நகர்தல் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னொரு பெண்மணி வந்து உள்ளே புகுந்து விட முயற்சிக்கும் போது என்னை முதலில் அனுப்பினார். அப்போதுதான் உள்ளிருந்த வந்த ஊழியர் இருக்கையில் உட்கார்ந்து கருவியை கையில் கொடுத்தேன்.

அலை வாங்கியை அப்படியே சரி செய்து பொருத்த சிறிது நேரம் முயற்சித்தார், சில நிமிடங்களுக்குப் பிறகு புதிய ஒன்றை எடுத்து மாற்றி விட்டார். சரியாகப் பொருத்தி இணைப்பு ஏற்படுத்திய பிறகு கணினியில் விபரங்களை உள்ளிட்டு அச்சிட்ட விபரத் தாள் எடுப்பதற்கு வெகுநேரம் பிடித்தது.

====
அலுவலகத்தில் மேசைகளையும் நாற்காலிகளையும் விற்பதற்கு செய்த ஏற்பாடுகளில் நிறைய குளறுபடி, இரண்டு மேசைகள், 15 நாற்கலிகள், மூன்று வெள்ளை பலகைகள், நான்கு தட்டிகள், ஒரு ஒற்றை கணினி மேசை என்று சேர்த்து 17,000 ரூபாய் பேசி முடித்திருந்தோம். அலுவலகக் கட்டிடத்தின் உரிமையாளருக்கு நாற்காலிகளின் மீது ஒரு கண். நாற்காலிகளை எல்லாம் சேர்த்து 3000 ரூபாய்க்குக் கேட்டிருந்தார். நாங்கள் பேசி முடித்திருந்தவர்களிடம் நாற்காலிகள் போய் விடக் கூடாது என்று குட்டையைக் குழப்பி நாற்காலிகளுக்கு தட்டிகளுக்கும் சேர்த்து 5000 ரூபாயில் கிட்டத்தட்டக் கட்டாயப்படுத்தி வாங்கி விட்டார்.

உடனடியாக பணத்தைக் கொடுப்பதாகச் சொல்லி, 1100 ரூபாய் மின் கட்டணத்தைக் கழித்து விட்டு 3900 ரூபாய் கொடுத்து விட்டார். கையில் சில்லறை இல்லாமல் நான் போய் நிற்பதை உணர்ந்து, 100 ரூபாய் இருக்கிறதா என்று அதட்டலாகக் கேட்டு 8, 500 ரூபாய் தாள்களை கையில் திணித்து விட்டார். அதிலிருந்து 500 ரூபாய் எடுத்து அலுவலகம் தூய்மை செய்யும் அம்மாவிடம் கொடுத்து விடுமாறு அவரிடமே கொடுத்தேன்.

காலையில் வங்கிக்குப் போய் பிரைம் காசோலையை போட்டு விட்டு, மின்வாரிய அலுவலகத்தில் கட்டணம் கட்டி விட்டேன். 13ம் தேதி கணக்கு எடுத்தார்களாம். இன்றுதான் கடைசி நாள். இன்னும் ஒரு நாள் தாமதமாகியிருந்தால், தண்டத் தொகையும் சேர்ந்திருக்கும். காசோலை வாங்க மாட்டோம், வரைவோலைதான் கொடுக்க வேண்டும் என்று இழுத்தடித்திருக்கும்.

மாலையில் அந்த வாடகைக்கு வரும் நிறுவனத்தின் உரிமையாளர் தொலைபேசி, நாற்காலிகளைக் கொடுத்து விட்டீர்களாமே, எங்களுக்கு மேசையைக் கொடுங்கள். ஒரு மேசைக்கு 3000 என்று 6000த்துக்கு கொடுங்கள் என்று பேரம் ஆரம்பித்தார். ஏற்கனவே குறைவாகத்தான் பேசியிருக்கிறோம், 10000த்துக்கு குறையாமல் கொடுத்தால் தருகிறோம் இல்லை என்றால் நாங்களே பிரித்து எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டேன். கொஞ்ச நேரத்தில் அந்த அம்மா தொலைபேசினார். அவருக்கு பேரம் பேசத் தெரியவில்லை என்று இவர் இடித்துப் பார்க்கிறார். கொஞ்சமாவது குறைக்க வேண்டாமா என்று சொல்லிச் சொல்லி கடைசி விலை 9000 கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் வேண்டாம் என்று தகவல் சொல்லுங்கள் என்று சொல்லி விட அடுத்த சில நிமிடங்களில் உறுதிப் படுத்தி விட்டார்கள்.

========
கட்டிடப் பொருட்களை விற்கும் வியாபரத்துக்கான சரக்கு, கணக்கு விபர மென்பொருள் செய்து விற்கலாம். ஒரு கணினியில் நிறுவி, அச்சு எந்திரத்துடன் கொடுத்து விட்டால் இயங்கும் படி செய்து விடலாம். எதிர்காலத்தில் இணையத்தில் செயல்பட வேண்டுமானாலும் செய்து கொடுத்து விடலாம்.

கணினி - 20,000, மென்பொருள் 20,000 ரூபாய், சந்தைப்படுத்துதல் 20,000 ரூபாய். மொத்தம் 60,000 ரூபாய்க்கு மென்பொருளை விற்க வேண்டும்.

கணினியை வாங்கிப் போய் மின்னிணைப்புக் கொடுத்து இயக்கினால் மென்பொருளைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம், பொருள் பட்டியலை உள்ளிட ஒரு திரை, சரக்கு உள் வருவதை உள்ளிட இன்னொரு திரை, சரக்கு வெளியில் போவதை உள்ளிட மூன்றாவது திரை. அவ்வளவுதான் தரவு உள்ளிடுதல்.

என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்கின்றன, என்ன பொருட்கள் ஒரு நாளில் ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் உள்ளே வந்தன, என்னென்ன பொருட்கள் ஒரு நாளில் ஒரு வாரத்தில் ஒரு மாதத்தில் விற்றன. இன்ன தேதியில் கைவசம் என்ன சரக்கு இருந்தது, இன்றைய தேதியில் சரக்கு கைவசம் என்ன இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட பொருளின் விற்பனை, வாங்கிய விபரங்கள் என்று பலவகைப்பட்ட அறிக்கைகள் கொடுக்கலாம்.

விலை விபரங்களை உள்ளிட்டால், விற்பனை வாங்கும் விபரங்களுக்கான கணக்கியல் அறிக்கைகளையும் பார்த்துக் கொள்ளலாம். மேலும் கணக்கு விபரங்களை (சம்பளம், மற்ற செலவினங்களை) உள்ளிட்டால், கணக்கியல் அறிக்கைகள், விற்பனை வரி துறைக்கு சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

இதை இணையத்தில் இணைத்து மின்னஞ்சல் மூலம் அல்லது தொலைபேசியில் அறிக்கைகளை விபரங்களை பெறுவதுடன் மற்றவர்களுக்கு அனுப்பவும் செய்யலாம். டேலியுடன் ஒப்பிடும் போது, கணினியுடன், இயங்குதளத்துடன், முழுமையான மென்பொருளாகக் கிடைக்கிறது, இணையத்தில் இணைந்து இயங்கும்படி இருக்கிறது என்று ஆதாயங்கள் இருக்கும். மொத்த விலை 45,000 ரூபாய்கள். VAT 4% சேர்த்தால் 47,000 ரூபாய்க்கு ஒருவர் பயன்படுத்த முடியும்.

இதன் இடைமுகத்தை தமிழிலும், கொடுக்கலாம். கணினி இயங்கி ஆரம்பிக்கும் போதே தமிழில் இடைமுகத்தில் கொண்டு விட்டிருக்கும். கடையில் இருக்கும் கணக்கு ஊழியர்கள் மட்டுமில்லாமல், கடை முதலாளிகளும் உரிமையாளர்களும் கணினியை பாவிக்கும் வசதி கொண்டு வருவதுதான் நமது நோக்கம். இதில் ஈடுபட விருப்பம் இருப்பவர்களுக்கு இதில் முன்னுரிமை கொடுக்கலாம். சொல்லப் போனால், மென்பொருள் நிரலை முதலீடாகக் கொண்டு வருவதற்கு ஈடாக மற்ற இருவரும், பண முதலீடு செய்ய வேண்டும்.

இன்னொரு பக்கம் லெதர்லிங்க் மென்பொருட்களை திறவூற்று மென்பொருட்களா வெளியிடுவது குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். நிறைய ஆட்சேபணைகளை எழுப்பினாலும், கடைசியில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டார். மிக வேகமாக நுணுக்கமான புரிந்து கொள்ளும் தன்மை அவருக்கு. இதை எப்படிச் செய்யலாம் என்று பேசினோம்.

1. லெதர்லிங்க் என்ற பேர் மதிப்பை எல்லா வாடிக்கையாளர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.
2. அடுத்த வாரங்களில் என்னென்ன புதிய உருவாக்கங்கள் சேர்க்கப்பட போகின்றன என்று அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் சேர்ந்துதான், வாடிக்கையாளர்களையும் போட்டியாளர்களையும் நமது நிரலை எடுத்துக் கொண்டு நம்மை விட்டு விலகி விடாமல் இருப்பதற்கு உதவும். வேறு எந்த விதமான பூட்டு போடுவதும் வேலைக்கு உதவாதுதான்.

இரண்டு நாட்களாக பெரும் மனத்தளர்ச்சி, எல்லா இடங்களிலும் தோல்வியடைந்து கொண்டிருந்தால் தவறு என் மீதுதானே, தவறான உலகில், தவறான நேரத்தில் பிறந்திருக்கிறேன் என்று வெம்பிக் கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் இடித்தால் இடித்தவர்கள் மீது குறை சொல்லலாம், மாறி மாறி இடித்துக் கொண்டே இருந்தால், தவறு நம் மீதுதானே என்று நொந்து கொண்டேன்.

கிட்டத்தட்ட ஒரு கண்ணாடி பாத்திரம் போல ஆகி விட்டிருக்கிறது. நாளைக்கே யாராவது தொலைபேசி ஒரு கல்லை விட்டெறிந்தால் மீண்டும் விரிசல் விட்டு விடத்தான் செய்யும். ஏதாவது ஒரு புதிய வாய்ப்பு வந்து விட்டால், வசதியாக பாக்கிகளை கொடுத்துத் தீர்க்க ஆரம்பித்து விடலாம்.

திறவூற்று மென் பொருளாக வெளியிடும் போது என்னென்ன தடுமாற்றங்கள் வரும் என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். திறவூற்று மென்பொருளாக வெளியிடுவதற்கு என்னென்ன அணுகுமுறைகள் வேண்டும் என்று ஒரு ஆலோசகர் இருந்தால் உதவியாக இருக்கும்.

அதன் மூலம் ஓரிருவரை உதவியாளராக வைத்துக் கொண்டால் நல்லபடியாக செயல்படுத்தலாம். இப்படி செலவைக் குறைத்து மாதா மாதம் கூடுதல் தொகை மிச்சம் பிடிப்பதையும், வெளி நாட்டு சந்தைகளுக்குள் நுழைய ஓப்பன் சோர்சாக போகவிருப்பதையும், பிஎஸ்ஜி வணிக நண்பனாக கருவி விற்பனையில் இறங்கப் போவதையும் குறிப்பிட்டு அறிக்கை அனுப்ப வேண்டும்.

மாதா மாதம் வருமானம் நிலை நாட்டிக் கொள்ள வேண்டும். சம்பள பாக்கிகளைத் தீர்க்க மாதா மாதம் 2 லட்ச ரூபாய் வருமானம் வர வேண்டும். இரண்டும்தான் மன அழுத்தத்துக்குத் தேவையான செலுத்திகள். 10 ஆண்டுகள் முன்பு பணத்துக்காக எதுவும் செய்யவில்லையே, அப்போது இருந்த உந்துதல் இப்போதும் இருக்க வேண்டும். அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து நிரல் எழுதியிருக்கிறேன். இரவெல்லாம் உட்கார்ந்து மென்பொருள் செய்திருக்கிறேன். இணையத்தில் உரையாடல்கள் நடத்த நேரம் காலம் பார்த்ததில்லை. அந்த ஓட்டமும் முனைப்பும் தேவை. அதுதான் இலக்கு.

இன்னமும் இணைய இணைப்பு கிடைக்கவில்லை. அதனால் சோம்பேறி எழுத்துதான் மீந்திருக்கிறது. இல்லை என்றால் என்ன வேலை. பிரைமின் இந்த மாதப் பணிக்கான (ஏப்ரல் பணிக்கான) நிரல்களை முடிக்க வேண்டும். அதை எப்போது செய்யப் போகிறேன்.

கடைக்குப் போய் வாங்க வேண்டிய பொருட்கள்

அரிசி - 2 கிலோ (50 ரூபாய்கள்)
கோதுமை மாவு - 1 கிலோ (30 ரூபாய்கள்)
சமையல் எண்ணைய் - அரை கிலோ (30 ரூபாய்கள்)
தேங்காய் எண்ணெய் - 200 மிலி (20 ரூபாய்கள்)
துணி துவைக்கும் பொடி - கால் கிலோ (20 ரூபாய்கள்)
துணி துவைக்கும் சோப்பு - ஒன்று (10 ரூபாய்கள்)
கடுகு - 50 கிராம்
தேங்காய் - 1

வேறு என்ன வேண்டும்? பல் தேய்க்கும் பசை - சின்னதாக வாங்கிக் கொள்ளலாமா. பாத்ரூம் கழுவும் அமிலம் வாங்கி தேய்த்துக் கழுவ வேண்டும்.

சாப்பிடும் பொருட்களில், சிறுபருப்பு, உளுந்து, பயறு, இருக்கின்றன. ரவை வாங்கிக் கொள்ளலாம், சேமியா இருக்கிறது, கொஞ்சம் பாஸ்தாவும் இருக்கிறது. அவல் வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு மின்பணியாளரைக் கூப்பிட்டு மின்விசிறிகளைப் பொருத்தவும் தடையில்லா மின்சாரக் கருவியை இணைக்கவும் சொல்ல வேண்டும். பாண்டியனைக் கேட்கலாம்.

பிரைமுக்கு VAT, அறிக்கையில் not in நிபந்தனை இரண்டையும் செய்து கொடுத்து விட வேண்டும். சீனிவாசாவுக்கு எடை கருவி விபரத்தை உள்வாங்கும் செயலி முடித்துக் கொடுக்க வேண்டும். கிட்டத்தட்ட புதிதாக செய்வது போல ஆகி விட்டது.

தலை முடி வளர்ந்து காதுக்குள் போகும் நீளம் வந்து விட்டது. பேன் எல்லாம் காதுக்குள் போய் விடலாம்.

பேருந்தில் பின்னிருக்கையில் எம்ஜிஆரைப் பற்றிப் பேசிக் கொண்டே இரண்டு பேர். கேகே நகரில் காமராசர் சாலையில் திரும்பும் முனையில் கருப்பு எம்ஜிஆர் என்று விஜயகாந்த் தலையில் வெள்ளை தொப்பி வைத்து, அந்தப் படத்திலேயே எம்ஜிஆரின் படத்தையும் சேர்த்து பெரிய தட்டி வைத்திருந்தார்கள்.

'எம்ஜிஆர் மாதிரி வருமா' என்று ஆரம்பித்தவர்கள் புள்ளிவிபரங்களை அள்ளி விட்டார்கள். 'எம்ஜிஆர் கடைசி வரை வில்லனாக வந்தது என்ன படம்.'
'இரட்டை வேடத்தில் ஹூரோவும் அவர்தான் ஆனால் வில்லன் கடைசி வரை திருந்தாமலே இருந்தது' என்று ஒரு படம் சொன்னார்கள்.
'லட்சுமி எம்ஜிஆருடன் நடித்த படம் என்ன? எஸ்பிபாலசுப்பிரமணியனுடன், ஜெயலலிதாவும் பாட ஆரம்பித்த படம் எது?'

'நீங்க பார்க்க கலக்கலாக இருக்கிறீங்க' என்று என் காலையும் இடையில் வாரிக் கொண்டார்கள். 'எல்லா விபரங்களையும் கைவிரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே' என்று நானும் அவர்களை பாராட்டினேன். ஒன்று வந்தால் திருப்பிக் கொடுப்பதுதானே மரியாதை.

அசோக் தூண் அருகில் இறங்கிக் கொண்டார்கள். மணி ஒன்பதாகப் போகிறது.

பேசாமல் போய் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். அதிகம் மூளையை வருத்தாமல் ஏதோ எழுதிக் கொண்டே போவது என்று சோம்பேறித்தனம். அதை விட்டால்தான் நான் உருப்படுவேன். படிப்பதைக் குறைத்து உருவாக்கத்தை வளர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.