ஏப்ரல் 21, 2012 காலை மணி 4.
நேற்று காலையிலும் சீக்கிரமே எழுந்து விட்டேன். இரண்டரை மணி என்று நினைவு. ஆனால் எழுதுவதற்கோ மிச்சம் வைத்திருந்த வேலைகளை செய்வதற்கோ மனம் வரவில்லை. முதலில் ஜாவாஸ்கிரிப்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் விழும் கட்டைகள் என்ற விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டேன். மிக எளிமையான வடிவமைப்புதான். இறங்கி விட்டால் பல மணி நேரம் சாப்பிட்டு விடும். 4 கணுக்களைக் கொண்ட கட்டைகள் வெவ்வேறு வடிவத்தில் இருப்பவை கீழ் நோக்கி விழும் அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்தி உட்கார வைக்க வேண்டும். ஒரு வரிசை முழுவதும் இடைவெளி இல்லாமல் பொருத்தி விட்டால் அது மறைந்து விடும், அதற்கான புள்ளிகள் கிடைக்கும். 4 வரிசைகளை ஒரு சேர மறைய வைத்தால் அதிக புள்ளிகள், ஒற்றை வரிசை மறைந்தால் குறைந்த பட்ச புள்ளிகள். நான்கு கணுக்களும் தலை/அடியாக இணைந்த கட்டை, 3+1 என்று இணைந்த வலது புற/இடது புற திருப்பமுடைய வகைகள் 2, 2+2 என்று இணைந்த வலது புற இடது புற திருப்பமுடைய 2 என்று மொத்தம் 5 வகை கட்டைகள். கட்டைகளை செங்குத்தாக கோணம் திருப்ப வசதிகள் உண்டு.
சரியாக 5 மணிக்கு திட்டமிட்ட வேலையை ஆரம்பித்தேன். எழுதி வைத்த கட்டுரைக்கு சரியான வடிவம் கொடுத்தேன். மொழிபெயர்த்த கட்டுரையின் உரையை உரைக்கோப்பில் எடுத்து பிழை திருத்தி அனுப்ப தயார் செய்தேன். 6 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டு விட்டது. அதற்கு முன்பு கட்டுரையை அனுப்பி விட்டிருந்தேன். அடுத்த மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டது. அடுத்ததாக மாலை தமிழ் ஊடகப் பேரவையில் பேச வேண்டியதற்கான குறிப்புகளை எழுத வேண்டும். குறைந்த பட்சம் 1 மணி நேரத்துக்கு குறிப்பு எழுதிக் கொண்டால் சுமார் 20 நிமிடங்கள் பேச முடியும் என்று திட்டமிட்டிருந்தேன்.
பசிக்கவே, பல் தேய்த்து விட்டு முந்தைய நாள் தண்ணீர் ஊற்றி வைத்திருந்த சோற்றை சாப்பிட போனேன். மாங்காய் ஊறுகாய் வாங்கியதில் உப்பு அதிகம், கூடவே காரக் குழம்பு மிச்சமும் இருந்தது. சாப்பிட்டு விட்டு தூக்கம் வராமலிருக்க உறுதி செய்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து ஒரு கப் கடும் காபி. 1 ரூபாய்க்கு கிடைக்கும் ப்ரூ பொதியை ஒரு கப்பில் கொட்டி, 2 கரண்டி சீனி, கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்தால் காபி தயார்.
பால் சேர்த்து தயாரிப்பதை விட இந்த கருப்பு காபிதான் மிகவும் விருப்பமானது. சிறு வயதில் வெறும் வயிற்றில் முட்டை உடைத்து குடித்தால் உடம்புக்கு நல்லது என்று கொடுப்பார்கள். அப்போது முட்டை வாடை தெரியாமல் இருக்கு இது போன்ற கடும் காப்பி கிடைக்கும். இந்த கடும் காப்பிக்காகவே முட்டை குடிக்க வாய்ப்பு தேடுவேன். அதன் பிறகு, வளர்ந்த பிறகு உடல் நிலை சரியில்லா விட்டால் இந்த கடும் காபிதான் மருந்து. இங்கிலாந்துக்கு போயிருந்த போது அங்கிருந்தவர்கள், காபியில் பார் சேர்த்து சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவார்கள். நான் காபியில் சர்க்கரை சேர்த்து பால் சேர்க்காமல் சாப்பிடுவேன்.
இதை செய்வதற்கு பாட்டிலில் காபிப் பொடி வாங்கி வைத்தால் சில நாட்களில் கெட்டித்துப் போய் வீணாகி விடுகிறது. அதனால் வாங்காமலேயே வைத்திருந்தேன். இப்போது 1 ரூபாய் பாக்கெட்டை பார்த்ததும் வழி தெரிந்து விட்டது. இரண்டு வாரம் முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வாங்கியது, தொடர்ந்து பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு ஒரு கப்புக்கு மேல் போவதில்லை. அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அளவையும், தடவைகளையும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்திக் கொண்டால் பக்க விளைவுகள் பெரிதாக ஏற்பட்டு விடாது என்றுதான் நம்பிக்கை.
காபி குடித்து விட்டு பேச்சுக்கான தயாரிப்பு. மின் புத்தக படிப்பான்களை பற்றி என்று நினைத்து வைத்திருந்து கிண்டில் தொடர்பான வீடியோக்களை தரவிறக்கியிருந்தேன். கூடவே சொல்லியிருந்த 15ம் நூற்றாண்டு வாடிக்கையாளர் சேவை வீடியோ, கார்னிங் கிளாஸ் நிறுவனம் தயாரித்த எதிர்கால தொழில் நுட்ப சாத்தியங்கள் வீடியோ என்று வரிசைப்படுத்தி இவற்றை மையப்படுத்தி பேசலாம் என்று முடிவு செய்திருந்தேன். இடையில் தொலைபேசி அழைப்புகள், குளியல், தியானம் எல்லாம் முடித்து எழுத ஆரம்பிக்கும் போது 11 மணி ஆகி விட்டது. ஓரளவு நிறைவாகவே வந்தது. இணைய இதழ்களின் தொழில் நுட்ப சாத்தியங்கள், எதிர்கால சாத்தியங்கள் என்னென்ன, இடையூறுகள் என்னென்ன போன்ற விபரங்களை சேகரித்துக் கொண்டேன்.
12 மணிக்கு துணிகளை பைக்குள் எடுத்து வைத்து, மடிக்கணினி எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். குடங்களை காலி செய்து கீழே கொண்டு வைத்தேன். தண்ணீர் வந்தால் பிடித்து வைப்பார்கள். காலி செய்த தண்ணீரை கொட்டி விடவில்லை. தண்ணீர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டேன்.
படிப்பதற்கு கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். எப்போதோ வாங்கியது, சீனாவில் வெளியிடப்பட்ட பதிப்பு, சீன மொழியில் முன்னுரையுடன் இருந்தது. அமெரிக்க கல்லூரிகளில் பயிற்றுவிப்பதற்கான பாட புத்தகம். இப்போதைய ஆர்வத்திற்கு பொருத்தமான வாசிப்பு. பைக்கு கொஞ்சம் கனம் அதிகம் என்ற சிக்கல் மட்டும்தான்.
கோபால புரம் வந்து சாலையைக் கடக்கும் போது பகிர்வூர்தி நிறுத்தி ஏற்றிக் கொண்டார். புதிய பேருந்து நிலையத்துக்கு முன் இறங்கி டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு சென்னை பேருந்து நிற்கும் பகுதிக்கு வந்தால் ஒரு குளிர் சாதன அரசு விரைவுப் பேருந்து நின்றது. எந்த ஊரிலிருந்து வருகிறது என்று பார்க்காமலேயே ஏறிக் கொண்டேன். பெங்களூர் அல்லது திருப்பதியாக இருக்க வேண்டும். வழியில் சாப்பிட நிறுத்தும்போது பார்த்தால் 911 திருப்பதி வண்டிதான். உள்ளே அதிகம் கூட்டமில்லை. யாரும் உட்காராத இருவர் இருக்கையின் பின், உட்கார்ந்து கொண்டேன். இருக்கையை சாய்த்து தொல்லை கொடுக்க மாட்டார்கள். மொத்தமே 10-15 பேர்தான் இருந்தார்கள். பூந்தமல்லிக்கு 110 ரூபாய் சீட்டு.
தூக்கம் வரவில்லை, தூங்கவும் இல்லை. முதலில் நாளிதழ், தொடர்ந்து கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் படித்துக் கொண்டிருந்தேன். திருப்பெரும்புதூர் தாண்டி கட்டண சாவடி தாண்டிய பிறகு சில நிமிடங்கள் கண்ணயர்ந்திருப்பேன். அதற்கு முன்பு காஞ்சிபுரம் மேம்பாலம் இறங்கியதும் இடது புறம் இருக்கும் (வெள்ள கேட் பகுதி) விடுதியில் சாப்பிட நிறுத்த ஒரு தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டேன். 25 ரூபாய். 3 மணிக்கு பூவிருந்தவல்லி வந்து சேர்ந்தது.
54Fல் ஏறினால் நேராக போய் விடலாம். 54 போய்க் கொண்டிருந்தது. அவற்றில் ஏறாமல் பேருந்து நிலையத்துக்கு உள்ளே போனேன். 54L வேளச்சேரி பேருந்து பயணிகள் யாரும் உட்காரமல் நகர்ந்து கொண்டிருந்தது ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
இந்த பேருந்திலும் கூட்டம் மிக மிகக் குறைவு இருக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. சின்னமலை சீட்டு வாங்கிக் கொண்டேன். 11 ரூபாய். சின்ன மலையில் இறங்கினால் சைதாப்பேட்டையிலிருந்து வரும் பேருந்துகளையும் பிடிக்கலாம். நேரம் ஆகி விட்டால் ஆட்டோ பிடிக்கும் தூரம் கூட. வண்டி எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று வந்து ராமாபுரம் சாலை நிறுத்தத்தில் நின்று விட்டது. எஞ்சின் தொடங்க மறுத்தது. இறங்கி அடுத்த பேருந்தை பிடிக்க வேண்டுமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் புறப்பட்டு விட்டது. கிண்டி தாண்டி 3.45க்கு சின்னமலையில் இறக்கி விட்டார்கள். இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வரும் முன்பு கடந்து போன ஆட்டோவை கை காட்டி ஏறிக் கொண்டேன்.
ஆட்டோ உள்ளே போகுமானால் உள்ளேயே விட்டு விடச் சொன்னேன். உள்ளே அனுமதித்தார்கள். வாசலில் பதிவு செய்து கொண்டு போய் கூட்டம் நடக்கும் கட்டிடத்துக்கு முன்பே இறங்கிக் கொண்டேன்.
கூட்டம் முடிந்து அடையாறு, கிரீன்வேஸ் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, போயஸ் கார்டன் வழியாக கதீட்ரல் சாலை வந்தது. ராணி மேரிக் கல்லூரி எதிரில் சாலை நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். வந்து ஆவணத்தை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். தேநீர் கடையில் ஒரு கோப்பை தேநீர் ஒரு சமோசா சாப்பிட்டு விட்டு அருகிலேயே இருந்த நகலகத்தில் கடவுச்சீட்டுக்கான நகலை எடுத்துக் கொண்டேன். முதல் பக்கம் மட்டும் போதும் என்று அதைக் கிழித்து கையெழுத்து போட்டு வைத்துக் கொண்டேன். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். சொன்னபடியே அரை மணி நேரத்தில் வந்து விட்டார். இப்போது நேரம் 6 ஆகியிருந்தது. கூட்டம் 6.30 என்று சொல்லியிருந்தார்கள்.
அவரது வண்டியிலேயே வைட்ஸ் சாலையில் விட்டு விடுவதாகச் சொன்னார். கோபால புரம் வழியாக திரும்பி ராயப்பேட்டை வந்து மணிக்கூண்டு, எக்ஸ்பிரஸ் அவன்யூ தாண்டி வலது பக்கம் கட்டிடம் தென்பட்டது. இடது பக்கம் இறங்கி சாலையைக் கடப்பது பெரிய விஷயம்தான். பாதசாரிகள் சாலை கடப்பதற்கான வெள்ளை பட்டிகளும் போட்டிருக்கத்தான் செய்தார்கள். அது வரை நடந்து சென்று கடந்தேன்.
முதல் தளத்திலிருந்து கைகாட்ட ஏறி போனேன். குளிரூட்டப்பட்ட அறை. புரஜெக்டர், திரை என்று அமர்க்களமாக இருந்தது. கணினியை இணைத்து சரி பார்த்து விட்டு அணைத்து வைக்கச் சொன்னேன். ஆறரை மணிக்கு சிலர் வந்திருந்தனர். காபி, வடை கொடுத்தார்கள். நன்றாக இருந்தது. வடை பெட்டியை திறந்ததும் நல்ல மணம் வந்தது. 7 மணிக்குப் பிறகு கூட்டம் ஆரம்பித்தது. முதலில் பேச ஆரம்பித்தேன்.
பேச்சு நன்றாகவே போனது, குறிப்பாக காணொளிகளை காட்டியது மிகவும் வரவேற்பை பெற்றது. யாரும் போரடித்து போயிருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. முடிந்ததும் கேள்வி பதில்களும் சுவாரஸ்யமாக போயின. அதைத் தொடர்ந்து அய்யநாதன் பேசினார். வெப்துனியாவிலிருந்து வெளி வந்து விட்டார் என்று பின்னர்தான் தெரிந்தது.
இளைய தலைமுறையினர் தம்மை மேம்படுத்திக் கொள்ள, பிறருடன் தொடர்பு கொள்ள, ஆய்வு செய்து விபரம் தெரிந்து கொள்ள, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இணையத்தை நாடுகிறார்கள். பொழுதுபோக்கு என்பது 5வது காரணியாகத்தான் இருக்கிறது. முதல் நான்கு நோக்கங்களுக்கு சரியான தீனி போட்டால் தவறான பொழுது போக்கு அம்சங்களை நாடி போக மாட்டார்கள் என்று பேசினார். அதற்கான புள்ளி விபரங்களை வெளியிட்டார். இந்தியாவில் 12 வயது முதல் 17 வயது வரையிலான இளம் இளைஞர்கள். 18 வயது முதல் 29 வயது வரையிலான முதிய இளைஞர்களில் 80 சதவீதத்துக்கு மேல் இணையத்தை நாடுகிறார்கள் என்று புள்ளி விபரம் சொன்னார். எந்த அடிப்படையிலான புள்ளி விபரம் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பெரிதும் பொருந்தும் என்றே தோன்றியது.
அவர் பேசி முடித்த பிறகும் விவாதங்கள் தொடர்ந்தன. 9 மணிக்குப் புறப்பட்டோம்.
மீண்டும் சாலையைக் கடந்து வந்து ஆட்டோதான் பிடித்தேன். தாம்பரம் போகும் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடக் கேட்டுக் கொண்டேன். டிஎம்எஸ்சில் விட்டு விட்டு 50 ரூபாய் வாங்கிக் கொண்டார். 1B வந்தது. 17 ரூபாய் சீட்டு. பூந்தமல்லி - சின்னமலை = 11 ரூபாய், இப்போது 17 ரூபாய் - மொத்தம் 28 ரூபாய்தான் ஆகியிருக்கிறது. 50 ரூபாய் சீட்டு வாங்காதது நல்லதுதான். பேருந்தில் அருகில் இருந்த பெரியவர் வைத்திருந்த சிறுவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவனது பாட்டியும் அம்மாவும் பெண்கள் பகுதியில் உட்கார்ந்திருந்ததை பிறகுதான் பார்த்தேன். அம்மா கூப்பிட்ட போதுதான் இவன் முகத்தில் மலர்ச்சியே வந்தது.
அதன் பிறகு அருகில் உட்கார்ந்தவர் பேருந்து கட்டண உயர்வைப் பற்றி புகார் சொல்ல அவரிடம் பேசிக் கொண்டே தாம்பரம் வந்து விட்டது.