என்னைப் பற்றி

தினசரி வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினசரி வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 21, 2019

சொந்த வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்வது எப்படி?

தினமும் காலையில் நாட்குறிப்பு எழுதுவது முந்தைய நாள் அனுபவங்களை தொகுத்துக் கொள்வது அவசியமான ஒன்று. இதற்கு ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை ஒதுக்கலாம். முந்தைய நாள் செய்த வேலைகள் அனைத்தையும் பட்டியல் இட்டு அவை பற்றிய விபரங்களையும், மதிப்பீடுகளையும் எழுதி தொகுத்துக் கொள்ள வேண்டும். அப்படி தொகுத்துக் கொள்வது தனிப்பட்ட முன் முடிவுகளை ஏற்படுத்திக் கொண்டு கெட்டி தட்டிப் போன்ற மனநிலைக்கு இட்டுச் செல்லும் என்பது இதில் இருக்கும் அபாயம். கடந்த 3-4 ஆண்டுகளில் கற்றுக் கொண்ட இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனை முறையை கறாராக கடைப்பிடிப்பதன் மூலம் அந்த அபாயத்தை தவிர்க்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், போராட வேண்டும்.

இரண்டாவதாக, தினமும் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலையில் நடைப் பயிற்சி போனதால் ரத்து, தாமதமாக எழுந்ததால் ரத்து, உடல் வலியாக இருப்பதால் ரத்து, சளி பிடித்திருப்பதால் ரத்து என்று எந்த ஒரு காரணம் கிடைத்தாலும் உடற்பயிற்சி செய்வதை தவற விடக் கூடாது. அவற்றையும் மீறி செய்ய வேண்டும். இதற்கு இரண்டு தேவைகள் இருக்கின்றன. ஒன்று, பகலில் தூக்கம் வருவது, படுத்து தூங்க வேண்டும் என்ற தேவையை உடல்ரீதியாக சரி செய்து கொள்வது. அதாவது, உடற் பயிற்சி, மூச்சு பயிற்சி மூலம் உடலின் ஆக்சிஜன் பயன்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டு மூளையை சுறுப்பாக வைத்திருக்க உதவுவது. இரண்டாவது, இந்த 20 நிமிடங்களில் மனதின் எண்ண ஓட்டங்களை முறைப்படுத்தி, ஆற்றுப்படுத்தி சிந்தனை அலை பாய்வதை தடுப்பது.

மூன்றாவதாக, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். கடையில் சாப்பிடுவதால் செலவு, போதுமான ஊட்டச் சத்து கிடைக்காமல் உடல்நல குறைபாடு, அதனால் அதிக செலவு என்ற நச்சு சுழற்சியை சரி செய்ய வேண்டும். என்ன சமைக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று முறையாக திட்டமிட்டு அதற்கான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், சமைக்கும் போது ஒருவர் ஒரு நேரத்துக்கு சாப்பிடும் அளவில் சமைக்கும் மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமைப்பது சமைக்கிறோம், அதிகமாக சமைத்து விடுவோம் என்ற 'சிக்கன' போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த 'சிக்கன' போக்கு உணவுப் பொருள் வீணாவதிலும், அதைத் தடுப்பதற்கு அளவுக்கதிகமாக சாப்பிடுவதிலும், அதைத் தடுப்பதற்கு சமையலையே நிறுத்துவதிலும் கொண்டு விடுகிறது. இதை உடைக்க அரை கப் சோறு, ஒரு கப் கோதுமை மாவு, அரை கப் உப்புமாவுக்கு என்று அளவை பாதியாக குறைத்து சமைக்க வேண்டும்.

நான்காவதாக, தினமும் எழுதுவதையும் படிப்பதையும் எடிட் செய்வதையும் திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு, குறிப்பிட்ட கால அளவுக்கு செய்ய வேண்டும். ஒரு புத்தகத்தை படிக்க எடுத்துக் கொண்டால் அதை முடித்து விட்டுத்தான் அடுத்த புத்தகத்தையோ, ஒரு நீளமான கட்டுரையையோ படிக்க ஆரம்பிக்க வேண்டும். உபரி மதிப்பு கோட்பாடுகள் என்ற நூலை எடுத்துக் கொண்டால் அதன் 3 பாகங்களையும் முடிப்பது வரை வேறு நூல்களையோ, முக்கியமான கோட்பாட்டு கட்டுரைகளையோ படிக்க ஆரம்பிக்கக் கூடாது. ஒரு நூலை படிக்க ஆரம்பிக்கும் போது அதன் அளவு, அதற்கு தேவைப்படப் போகும் நேரம் இவற்றை கருத்தில் கொள்வது என்று ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவு நேரம் ஒதுக்க முடியாது என்றால் அந்த நூலை ஆரம்பிக்கக் கூடாது. வேறு நூலை அதே போல திட்டமிட்டு படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படி திட்டமிட்டு படித்த ஒவ்வொரு நூல், பார்த்த ஒவ்வொரு திரைப்படம், கட்டுரை பற்றியும் விமர்சன பூர்வமாக எழுத வேண்டும். அதை தினமும் நாட்குறிப்புக்கு ஒதுக்கிய நேரத்திலோ அதற்கு பிறகு தனியாக நேரம் ஒதுக்கியோ செய்ய வேண்டும்.

ஐந்தாவதாக, காட்சி ஊடகத்தையும், செய்திகளையும், சமூக ஊடக தகவல்களையும் படிப்பதை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். காட்சி ஊடகம், செய்தி, சமூக ஊடகம் மேய்வதற்கு என்று தினமும் கறாராக 1 மணி நேரம் மட்டும் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். செய்தித் தாள் வாசிப்பது, இணையத்தில் செய்தி வாசிப்பது, யூடியூப் வீடியோக்கள் பார்ப்பது, ஃபேஸ்புக் டிரெண்ட் அவதானிப்பது இவை அனைத்தும் சேர்த்து 1 மணி நேரம்தான். மற்றபடி, குறிப்பாக தேவையின் அடிப்படையில் அந்த தேவையைச் சுற்றி தேவைப்படும் நேரம் ஒதுக்கி திரைப்படம் பார்க்கவோ, யூடியூப் வீடியோ பார்ப்பதையோ, ஃபேஸ்புக்கில் ஆய்வு செய்வதையோ, இணையத்தில் செய்தி படிப்பதையோ செய்யலாம். அது மேலே சொன்ன வாசிப்பு திட்டத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆறாவதாக, தினமும் ஒரு மொழிபெயர்ப்புக்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 1000 வார்த்தைகள் மொழிபெயர்ப்பு என்று வைத்துக் கொள்ளலாம்.

ஏழாவதாக, தினமும் புதிதாக எழுதுவதற்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 2000 வார்த்தைகள் எழுத்து என்று வைத்துக் கொள்ளலாம்.

எட்டாவதாக, காலையில் நாட்குறிப்பு எழுதி முடிக்கும் வரை வேறு விஷயங்களை படிக்கக் கூடாது. உடற்பயிற்சி செய்து முடிப்பது வரை எதையும் சாப்பிடக் கூடாது. காலையில் கஷ்டமாக இருக்கிறது என்றால் இரவு தூங்கப் போவதற்கு முன்பு நாட்குறிப்பில் கணிசமான பகுதிகளை எழுதி விடலாம். இரவில் முறையாக சாப்பிட்டு விட்டு தூங்கலாம்.

பேசுவதை சரி செய்து கொள்வது எப்படி?
சாராம்சமான கருத்தில் ஊன்றி நிற்பது என்பது சரியானது. அதை ஒட்டி பேசும் போது கிளைத்துச் சென்று வேறு ஒரு விஷயத்துக்குள் போய் விளக்குவது தவறானது.

இது பேசும் போதும், எழுதும் போதும், வகுப்பு நடத்தும் போதும், கருத்து சொல்லும் போதும் என்ற சிந்தனை ஓட்டம் தொடர்பான பிரச்சனை. இயல்பாக எல்லா விஷயங்களும் இணைந்திருக்கின்றன, ஒன்றைப் பற்றி பேசும் போது அதனோடு தொடர்புடைய மற்ற விஷயங்களையும் பேசுவது சாத்தியமாகிறது என்பது உண்மை. ஆனால், ஒரு விஷயத்தை பேசும் போது அதன் மீது கவனத்தை குவித்து, பிற விஷயங்களிலிருந்து abstract செய்து கொள்ளும் ஒழுங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேசும் விஷயத்தின் மீது கவனத்தைக் குவித்து ஆழமாக பரிசீலிப்பதற்கும், கேட்பவர்களின் கவனத்தை ஈர்த்து சொல்லும் விஷயத்தை உறுதியாக கொண்டு சேர்ப்பதற்கும் இது அவசியமாக உள்ளது. இதை நாட்குறிப்பு எழுதும் போதும் சரி, மொழிபெயர்ப்பு செய்யும் போதும் சரி, படைப்பு ரீதியான எழுத்தின் போதும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

தொடர்பற்ற குறிப்புகள்


காசு கேட்டதற்கு பதில் எதுவும் வரவில்லை, சர்வர் வந்த பிறகு கூப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள், வேலை தொலைபேசியிலேயே முடிந்தது, இன்வாய்ஸ் அனுப்பி காசு வாங்க வேண்டியதுதான். அப்படி இருக்கையில் செவ்வாய்க் கிழமை திட்டமிட்டுக் கொள்ளலாம். அப்படியே வேலூர் திரும்பி விடலாம். அது வேண்டாம். புதன் கிழமை புறப்பட வேண்டியிருப்பதால் வேலூரிலேயே கழித்து விடலாம்.

இந்த மூன்று நாட்களிலும் எழுதும், படிக்கும் வேலைகளை செய்யலாம்.

நேற்று காலையில் 1 மணி நேரம் எழுத்து என்பது 40 நிமிடங்களில் முடிந்தது. ஒரு மணி நேர நடை என்பதும் சுமார் 40 நிமிடங்களில் முடிந்தது.  வேலூரில் இதையே அந்தப் பகுதிகளில் செய்யலாம். ஒரு நாளைக்கு 1 மணி நேர நடை, 1 மணி நேர எழுத்து என்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

நிறையவே என்னை தள்ளுகிறார். என்ன நோக்கம் என்று தெரியவில்லை. நோக்கம் இல்லாமல் ஆதாயம் இல்லாமல் அவரைப் போன்றவர்கள் எதையும் செய்வதில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். வகுப்பு கிட்டத்தட்ட ஒரு ராணுவ வகுப்பு போல எல்லோரும் கட்டுப்பாட்டுடன் போனது. அனைவரையும் குவித்து இரண்டு வரிசைகளில் உட்கார வைத்தது உதவியாக இருந்தது. முறைத்துக் கொண்டிருந்த ஒரு பையனையும் முதல் வரிசைக்கு கொண்டு வந்து உட்கார வைத்தேன். பவர்பாய்ன்ட் மூலம் விபரங்களை காட்டி விளக்கிக் கொண்டே போனது, இடையிடையே கேள்விகள் கேட்டு மாணவர்களை பதில் சொல்லச் சொன்னது, பலகைக்குப் போய் அவர்களை விளக்க வைத்தது என்று தொய்வில்லாமல் போனது.

சீன மொழி வகுப்பிலும் வாக்கியங்கள் உருவாக்குவதற்கான பயிற்சி நன்றாகவே போனது. பிரித்து உட்கார வைக்க வேண்டியிருந்தது. மிரட்டி உட்கார வைத்து இடையில் செய்த குளறுபடிகளுக்கு பதில் சொல்லி கடைசியில் பேச்சுவாக்கில் குறிப்பிட அவர் அழைத்து நன்கு காய்ச்சி விட்டார். நான்தான் முறையிட்டேன் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டேன்.

அடுத்த வாரம் விடுப்பு எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் மாற்று வகுப்புகள் ஏற்பாடுகளையும் செய்து கொண்டேன். சரியாக வெள்ளிக் கிழமைகளில் இரண்டு வகுப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார். 16,18 தேதிகளில் வகுப்பை தவற விட்டதற்கு மாற்றால 23,24,25 மூன்று நாட்கள் தொடர்ச்சியாக 1 நாள் கூடுதலும், 1,2,3 மூன்று நாட்கள் தொடர்ச்சியாக 1 நாள் கூடுதலும் வகுப்பு எடுத்து ஈடு செய்து கொள்ளலாம்.

சனி, ஜனவரி 07, 2012

திசைகளை நோக்கி


நேற்றுக் காலையில் எழுதி முடித்தவுடன் அறையை ஒதுங்க வைத்து விட்டுக் குளிக்கப் புறப்பட்டேன். துணிகளை எல்லாம் உள் அறைக்குள் கொண்டு போய் விட்டு, புத்தகங்கள் அடுக்கிக் கொண்டு வந்திருந்த அட்டைப் பெட்டிகளை பொருட்களை வைக்கும் மேல் பரணில் போட்டேன். இருக்கும் இடத்தில் இருக்கும் பொருட்களை சீர்படுத்தி வைப்பதில் ஒரு இடத்தைப் பெரியதாகவோ சின்னதாகவோ ஆக்கி விட முடியும். எல்லாவற்றையும் குவித்துக் குழப்பமாகப் போட்டால் பெரிய இடம் கூட மூச்சு முட்டுமளவுக்கு நெருக்கடியாகத் தோன்றும். அதனதன் இடத்தில் அதனதனை வைத்தால் சின்ன அறையைக் கூட வசதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதன் பிறகு உலாவப் போனேன். கீழே வீட்டுக் கார அம்மாவும், மேல் வீட்டில் இருக்கும் அம்மாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாளிதழ் கடை வரை போய்த் திரும்ப வேண்டும். கடையில் என்னைப் பார்த்ததுமே நாளிதழை எடுத்துக் கொடுத்து விட்டார். 5 ரூபாய் நாணயத்துக்கு 2 ரூபாய் போக மீதி 3 ரூபாயும். திரும்பி வரும் போதும் கீழேதான் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு வணக்கம் வைத்தேன்.

தூங்கிக் கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்து விடாமல் வெளியில் போய் உள்ளே வந்து நடமாடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பழக்கமாகி விட்டதால் எந்தத் தயக்கமும் இல்லாமல் கீழே குளியலறையில் போய்க் குளித்து விட்டு வந்தேன். உடை மாற்றிக் கொண்டு உட்கார்ந்து இணையத்தில் பின்னூட்டத்தைப் போட்டு விட்டு கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு 8 மணிக்குப் புறப்பட்டேன்.

சாப்பிடுவதற்கு இட்லி அம்மா கடைக்கே போய் விட்டேன். வழக்கமான உணவு, வழக்கமான சக வாடிக்கையாளர்கள். அண்ணன், தம்பி, தங்கை மூன்று பேரும் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். தினமும் வருவார்களா, அல்லது வெள்ளிக்கிழமை மட்டுமா என்று தெரியவில்லை. தங்கைக்கு இரண்டு இட்லிகள், தக்காளி சட்டினி மட்டும். ஒன்றை சாப்பிட்ட பிறகு இன்னொன்றுக்கு தேங்காய் சட்டினி என்று வளைந்து நெளிந்து கொண்டே கேட்டு வாங்கிக் கொண்டாள். எந்த குளறுபடியும் இல்லாமல் சமத்தாக சாப்பிட்டு எழுந்து விடுகிறாள். காசு கொடுத்த மூத்த அண்ணன் மீதிக் காசு 2 ரூபாயை தம்பியிடம் கொடுத்து விடச் சொன்னான். கொஞ்ச நேரத்தில் சில்லறை வந்ததும் இவள் கேட்டு வாங்கிக் கொண்டாள். 'நீ போடா' என்று கடைக்கார அம்மா துரத்த, தங்கச்சிக்கு ஒரு சின்ன அடி கொடுத்து விட்டு ஓடினான். 'இது வீட்டில கொண்டு கொடுக்கும், அவன்னா பாக்கெட்டில போட்டுக்குவான்' என்று விளக்கம்.

எதிர்ப்புறம் சாலையைக் கடந்து வந்த பகிர்வூர்தியில் ஏறினேன். நல்ல மெரூன் நிறத்தில் இருக்கைகள் போட்டு, திரைச்சீலைகள் தொங்க விட்டு, பாட்டு போட்டு வைத்திருந்த டீலக்ஸ் டாடா மேஜிக் வண்டி. இது போன்று கவனமாக சீரமைக்கப்பட்ட ஒரு வண்டி எவ்வளவு புத்துணர்வைத் தந்து விடுகிறது. சாலை முனை தாண்டுவதற்குள் பின் இருக்கைக்  நிரம்பி விட்டன. இரண்டு பள்ளிச் சிறுமிகள் ஏறினார்கள். கொஞ்ச தூரத்தில் இன்னும் 3 சிறுமிகள். இரண்டு பேர் பின்பக்க இருக்கைகளில் உட்கார்ந்து கொள்ள ஒருத்தி முன் பக்கம் நெருக்கத்தில் சேர்ந்து கொண்டாள். ஆட்கள் ஏறி இறங்கி நான் அசோக்  பில்லர் அருகில் இறங்கினேன். 7 ரூபாய்தான் வாங்கினார். பேருந்தில் இதை விட அதிகம் ஆகும்.

சாலையைக் கடந்து பல்லாவரம் போகும் பேருந்துகள் நிற்கும் இடம். நிறையக் கூட்டம், பேருந்துகள் எதுவும் வரும் அறிகுறி தெரியவில்லை. நேரம் 8.40 ஆகி விட்டிருந்தது. இங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து பல்லாவரத்தில் இறங்கி, பாண்ட்ஸ் வரை இன்னொரு பேருந்து, ஆட்டோ அல்லது பல்லாவரத்திலிருந்து ஆட்டோ. நெருக்கடியாக இருக்கிறது என்று ஏசி வோல்வோவில் ஏறினால் 50 ரூபாய் வரை கட்டணம் இருக்கலாம். ஆட்டோவுக்கு 70 ரூபாய் - 100 ரூபாய் ஆகி விடும். இங்கிருந்தே ஆட்டோவில் போனால் என்ன, உட்கார்ந்து கொண்டு போய் விடலாம், நேரத்துக்கும் போய் விடலாம். ஆட்டோக் காரர் ஒருவரை நெருங்கிக் கேட்டால் 200 ரூபாய் சொன்னார்.

சில நொடிகள் தயங்கி, முகத்தில் பேரம் பேசும் சுளிப்பைக் காட்ட, அவரே கட்டணத்தை நியாயப்படுத்தினார். ஏறிக் கொண்டேன். நூறடி சாலையில் கத்திப்பாரா வரையில் நெருக்கடிதான்.

ஆட்டோக் காரர் வாயில் ஏதோ புகையிலை அல்லது பான் போட்டுக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்கு ஒரு முறை துப்பிக் கொண்டே இருந்தார். வழியில் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்டேட் வங்கியாக இருந்தால் நல்லது. கடைசியில் நங்கநல்லூர் பெட்ரோல் நிலையத்தினுள் இருந்த எச்டிஎப்சிக்கு அருகில் நிறுத்தினார். நான் பணம் எடுக்கப் போய் விட்டு வந்தால் ஆட்டோவைக் காணவில்லை. அவர் உள்ளே போய் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். சரியாக 9.30க்கு பாண்ட்ஸ் அருகில் வந்து விட்டோம். ரொம்ப தூரமா என்று கேட்டுக் கொண்டே திருநீர்மலை சாலையில் விட்டார். சந்துக்குள் போகாமல் ரோட்டிலேயே இறங்கிக் கொண்டேன். 'கொஞ்சம் போட்டுக் கொடுங்க சார், குறைவாத்தான் கேட்டிருக்கேன்' என்றார். 'நான் 150 ரூபாய்தான் நினைத்தேன், 200க்கு பேரம் பேசவில்லை' என்று சொல்லிக் கொண்டே 20 ரூபாய் அதிகம் கொடுத்தேன்.

அலுவலகத்தில் வந்து விட்டிருந்தார்கள். முதல் வேலையாக புதிதாக இயங்கு தளம் மாற்றிய கணினியில் மென்பொருளை இணைத்துக் காட்டினேன். தொடர்ந்து விலை மாற்றும் போது ஹைட், சைட் மாறி விடுவதைச் சரி செய்தேன். அதில் ஏற்பட்ட சிறு வழுவையும் சரி செய்து கொடுத்தேன். அடுத்ததாக பேக்கிங் லிஸ்டில் 10ன் மடங்குகளான எண்ணிக்கையில் வரும் போது மொத்தக் கூட்டல் தனிப்பக்கத்துக்குப் போய் விடுவதைச் சரி செய்தேன். போன முறை முயன்று வெகு நேரம் கழித்து விட்டு விட்டேன். கடைசி வரிக்கு வரும் போது புதுப் பக்கம் போக வேண்டுமா என்று செயலியை அழைப்பதற்கு முன்பு மொத்த இனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு வரி எழுதியதும் சரியாகி விட்டது.

அடுத்ததாக விற்பனை அறிக்கையில் வரி+செலவுகளையும் சேர்த்து மொத்த மதிப்பையும் காட்ட வேண்டும் என்ற தேவை. முதலில் மடிக்கணினியில் செய்து சரி பார்த்து விட்டு அதன் பிறகு சர்வரில் இயக்கினேன். அவர்கள் கேட்டது போல செய்து கொடுத்து விட்டேன்.

ஆவணப்படத்தை தகவிறக்கித் தரும்படி கேட்டதைச் செய்து விட்டார். இப்போது முதல் ஆண்டு இலவச பராமரிப்புக் கட்டம். இதையாவது கட்டணமாக வாங்கிக் கொள்ளலாம். 220 ரூபாய் ஆட்டோக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். புறப்படும் முன்பு அதையும் கொடுத்து விட்டார். அவர்களுக்கு அன்லிமிடெட் இணைய இணைப்பு ஆனதால் கூடுதல் செலவு கிடையாதுதான். போகும் போது அவர்கள் ஊழியர் ஒருவரை பல்லாவரத்தில் கொண்டு விடச் சொல்லி விட்டார் பங்குதாரர்.

கடந்த 2 மாதங்களாக வியாபாரம் மிகவும் குறைவாக இருக்கிறதாம். அதனால் அவர் தினமும் வருவதில்லையாம். பல்லாவரம் பகுதி முழுமையுமே அப்படித்தான் இருக்கிறது என்றார்கள். பல்லாவரத்திலிருந்து போவதற்கு ஒரு பேருந்து தடம் இருக்கிறதாம். ஆனால் எந்த நேரம் என்று தெரியவில்லை.

பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இறங்கி கிண்டி வண்டியில் ஏறிக் கொண்டேன். விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த திநகர் போகும் பேருந்து. கிண்டியில் இறங்கும் போது 12 மணிதான்.ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முதல் இரண்டு கடைகளில் பார்த்தால், பிரியாணி, புரோட்டாதான். அடுத்து ஒரு சின்னக் கடையில் எலுமிச்சை சாதம். 15 ரூபாய். 100 ரூபாய்க்கு சில்லறை கொடுத்து விட்டார். நான் உட்கார்ந்த மேசையில் மூன்று பெண்கள் உட்கார்ந்தார்கள்.ஒரு பெண் கைக்குழந்தையுடன். ஒரு லெமன், ஒரு தக்காளி, ஒரு சாம்பார் என்று ஆளுக்கு ஒரு வகை. வாங்கி வந்த பெண் ஒரு வடையும் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து பாதி வடையை எடுத்துக் கொண்டார் கைக்குழந்தை பெண்.

குழந்தை தவளும் வயதுதான். மேசையில் உட்கார்த்தி வைத்ததும் இரண்டு பேரிடமும் மாறி மாறிப் போய் வாயில் சோறு வாங்கிக் கொண்டான். சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்த பெண்ணுக்கு தொலைபேசி வந்தது, அவரிடமிருந்து வாங்கி, 'நீங்க யாரு, தெரியலையே, நான் இன்னார்' என்று எதிர்முனைக் காரரை கலாய்த்தார் குழந்தையின் அம்மா. தொடர்ந்து நீங்க கேட்பவரின் 'உங்க அக்காவின் பிரெண்டு நான், உங்ககிட்ட பேச மாட்டாங்களாம்' என்று இன்னும் ஒரு அடி அடித்து விட்டுக் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு உரியவரிடம் பேசக் கொடுத்தார். 'நான் அப்படி எல்லாம் சொல்லவேயில்லையே, கடைக்குப் போயிருந்தேன்' என்று அவர் புராணத்தைத் தொடர நான் எழுந்து அடுத்த வேலையைப் பார்க்கப் போனேன்.

தபால் நிலையத்துக்குப் போய் கனிம வள நிறுவனத்துக்கான மனுவை அனுப்ப வேண்டும். 2 நாட்களாக பையில் இருக்கிறது. இதைத் தவற விட்டால் எங்கு தபால் நிலையம் தேடுவது! இரண்டு கவுண்டர்கள், இரண்டின் முன்பும் தலா 3-4 பேர். அப்பால் இருக்கும் 3 கவுண்டர்களில் மற்ற திட்டங்களுக்கான சேவை போலிருக்கிறது. ஆற அமர, தொலைபேசியில் பேசிய படி, தங்களுக்குள் பேசியபடி கணினியில் தகவல் உள்ளிட்டு தபால்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள், இரண்டு நடுத்தர வயது பெண்மணிகளும். எனது முறை வந்து கவரைக் கொடுத்ததும், உள்ளிருந்து இன்னொரு பெண் வந்து இரண்டு பேருக்கும் 121 ரூபாய் கொடுத்தார். ஏதோ ஊக்கத் தொகையாம். கொடுத்ததற்கு ஒப்புதல் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். அவர் இவர்களுக்கு பல ஆண்டுகள் ஜூனியர், நின்று இவர்களின் விசாரிப்புகளுக்குப் பதில் சொல்லி விட்டு நகர்ந்தார். மிகவும் அமைதியான பதட்டமில்லாத முகம், அக்கவுண்ட்சில் இருப்பவர்களின் நிதானம் தெரிந்தது.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகி விட்டது. வெளியில் வந்தால் குளிர்சாதன பேருந்து போனது. அதைத் துரத்திப் பிடிக்காமல் காத்திருந்தால்  பேருந்து வர அதில் உட்காரவும் இருக்கை கிடைத்தது. 12.45க்குப் போய் இறக்கி விட்டார்கள். அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீயும், இனிப்பான ஒரு டீக்கடை பண்டத்தையும் (பெயர் தெரியவில்லை) சாப்பிட்டுக் கொண்டேன். 10 ரூபாய் கொடுத்தால் 1 ரூபாய் திரும்பக் கொடுத்து விட்டார். டீ அநியாயத்துக்கு இனிப்பாக இருந்தது.

இப்போதுதான்  வந்து கொண்டிருப்பதாகவும்,  அருகில் இறங்கி ஆட்டோ பிடித்து வந்து விடுவதாகவும் அரை மணி நேரம் தாமதமாகி விடும் என்றும் சொன்னார்.

காத்திருந்து அவரும் வந்த பிறகு போகலாம் என்று முடிவு செய்தோம். அவர் சாப்பிட்டிருக்கவில்லை. கொஞ்ச தூரத்திலிருந்து கடைக்குப் போனோம். அவர் சாப்பாடு, எனக்கு பரோட்டா. அவர்களுக்கு அலுவலகத்தில் மதிய உணவு வருமாம். எங்கோ மவுண்ட்ரோடிலிருக்கும் செந்தூர் விடுதியிலிருந்து. இன்று டிராபிக் சிக்கலால் தாமதமாக வருகிறதாம். ஏன் அவ்வளவு தூரத்திலிருந்து சாப்பாடு வருகிறது என்று புரியவில்லை.

சாப்பிட்டு முடித்துத் திரும்பி வந்து  தொலைபேசினால், வந்து விட்டேன், ஆட்டோ பிடித்து விட்டேன், வந்து விடுகிறேன் என்றார். ஆனாலும் இன்னும் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் அவருடன் ஆட்டோ கண்ணில் பட்டது. சாலை ஓரமாக நின்றிருந்தோம்.

நேரம் 2.45 ஆகி விட்டிருந்தது. புறப்பட்டு விட்டோம்.  நெடுஞ்சாலைக்கு வந்து பேருந்து நிழற்குடை அருகில் நின்றால் எந்த பேருந்தும் நிற்கவில்லை. காலியாக வந்த ஆட்டோவை விட்டு விடக் கேட்டால் 30 ரூபாய் சொன்னார். மகிழ்ச்சியாக ஏறிக் கொண்டோம்.  அருகில் இறங்கி பேருந்து பிடித்து விட நான் குட்டிச் சுவரில் உட்கார்ந்து மின்னஞ்சல் பார்த்தேன். அதை முடித்து விட்டு இடது புறமாகவே நடந்து ஜூஸ் கடைக்குள் போனேன். 1 கேரட் ஜூஸ் என்று கேட்டேன், ஐஸ் போடாமல் என்று சொன்னது அந்த வெளி மாநில சிறுவனுக்குப் புரியவில்லை. அதை அப்படியே ஒலி மாறாமல் போய்ச் சொன்னான். இப்படி கலவையாக சாப்பிட்டதுதான் இரவில் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.

வெளியில் வந்து நடந்து சாலையைக் கடந்து போனேன். வாசலில் பதிவுக்குக் கூடக் கேட்கவில்லை. நேராக கட்டிடத்துக்கு வந்து முதல் மாடிக்குப் போனேன். வழியில் பார்த்து வணக்கம் சொன்னேன். அவரும் 4 மணிக்கு வந்து விடுவார். 3.30தான் ஆகியிருந்தது.

மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். உள்ளே போய் கணினியை இயக்கிக் கொண்டேன். நாற்காலிகளை ஒழுங்காகப் போட்டு விட்டு ஒவ்வொருவராக புறப்பட்டுப் போய் விட்டார்கள். இடையில் ஏசி போட்டு விட ஒருவர், தூய்மை செய்ய ஒருவர் என்று வந்து போனார்கள்.

தொடர்ந்து விவாதம் பல திசைகளில் போனது. ஆராய்ச்சிக்கு இண்டஸ்ட்ரீ பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தார். அரசு  நிதி உதவி செய்ய மறுக்கிறது. ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து பணம் சம்பாதிக்கச் சொல்கிறது என்று ஆரம்பித்து விவாதம் வளர்ந்தது. இது மிக மிக மோசமான முடிவு, பெரு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்று உறுதியாக பேசினேன்.

வெளியில் வந்தும் பேசிக் கொண்டிருந்தோம்.  அடிப்படை ஆராய்ச்சிக்கு பணம் கிடையாது, தொழில் துறையில் இருப்பவர்கள் 6  மாதக் கண்ணோட்டத்தில்தான் தேவைகளைச் சொல்ல முடிகிறது நிறைய பின்னணி தகவல்கள் தெரிந்தன.

லிபர்டி அருகில் இறங்கி பேருந்து 25G பிடித்தேன்.  பவர் ஹவுஸ் அருகில் உட்காரவும் இடம் கிடைத்து. போக்குவரத்து நெரிசலில் நீந்தி வந்து சேர்ந்தது. கேசவர்த்தினி நிறுத்தம் வரை போகாமல் போக வேண்டிய சாலை அருகில் பேருந்து மெதுவானதும் இறங்கினேன். பின்னாலேயே இன்னொரு பெண் என் மீது விழுந்து இறங்கினார். அவரை முந்தி நடந்து விட்டேன்.

வீட்டுக்கு வந்து கை கால் கழுவி விட்டு சிறிது நேரம் கணினி இயக்கி விட்டு கடைக்குப் போய் சாப்பாடு. 1 தோசை, 2 கல் தோசை. இரண்டு பெண்கள் பார்சல் வாங்க நின்றிருந்தார்கள். கூடவே இரண்டு குழந்தைகள். சுமார் 4 வயது ஒரு பெண், திருத்தமாக முகம், இரட்டைக் குடுமி தலை வாரல், குட்டை கவுன் என்று அப்படியே அழகு சொட்டியது. அவள் தம்பி கொஞ்சம் தூங்கி வழிந்த முகத்தோடு அமைதியாக இருந்தான். சிறுமி அடம் பிடித்து 'பார்சல் வேண்டாம், இங்கேயே சாப்பிடணும்' என்று தொடர்ந்து வற்புறுத்த நான் உட்கார்ந்திருந்த மேசையிலேயே எதிரில் உட்கார வைத்தார் கூட்டி வந்த பெண். ஒரு பரோட்டா, தம்பியும் சாப்பிடுகிறாயா என்று அவருக்கு எனக்கு இடது பக்கம் நாற்காலி போட்டு 1 இட்லி. இட்லி பார்த்ததும் அவளுக்கும் இட்லி வேண்டும். 1 இட்லி. இட்லி சாப்பிடும் போதே சப்பாத்தி நினைவு வந்து விட்டது குட்டி பையனுக்கு.  இரண்டு பேரும் சமர்த்தாக சாப்பிட்டு எழுந்தார்கள். குழந்தைகளின் உலகம் அற்புதமானதுதான்.

புதன், டிசம்பர் 14, 2011

சாப்பாடு


நேரம் 6.35, டிசம்பர் 14, 2011.

இன்றைக்கு core dumpதான் செய்ய வேண்டும். நேற்றைக்கு காலையில் நாட்குறிப்பு எழுதி முடிக்கும் போது 8.30 ஆகியிருந்தது. சாப்பிடப் போகலாம் என்று பேன்ட், சட்டை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

அப்படியே வழியில் வீட்டு உரிமையாளர் வீட்டுக்குப் போனேன். கூப்பிட்டால் யாரும் பதில் இல்லை. அழைப்பு மணியை அடித்தேன். உள்ளிருந்து அம்மா வந்தார்கள். உட்காரச் சொன்னார்கள். வீட்டுக் காரர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார். வீடு மாற்றுவது பற்றி பேசினோம். நானும் தண்ணீர் பிடிக்க வேண்டும். நான் சமையலறையை ஒதுக்கிக் கொடுத்து விட்டு, ஞாயிற்றுக் கிழமை வீடு மாற்றுகிறேன் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டார். அப்படியே திரும்ப வீட்டுக்குப் போய் குடிதண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு வந்தேன். அவரே பிடித்துக் கொடுத்து விட்டார்.

தண்ணீர் பிடிக்கும் நேரத்தில், நான் 3G அட்டை பற்றி சொல்ல அவர் இணையம் குறித்து பேச ஆரம்பித்து, அவர் ரிலையன்ஸ் அட்டை மேட்ரிமோனி பார்க்கத்தான் பயன்படுத்துகிறார். பையனுக்கு வரன் பார்க்கிறார். பல வரன்களை பார்த்து தொடர்பு கொள்ளும் நேரத்தில் வேறு அமைந்து விட்டது என்று தகவல் கிடைக்கிறதாம். பக்கத்தில் ஒரு ஊரில் நல்ல பெண், தகவல் துறையில் வேலை பார்ப்பவர், குடும்பமும் நல்ல குடும்பம். போய் பெண் பார்த்து விட்டு வந்தார்கள். ஒங்க குடும்பத்துக்கு ஒத்து வருவதா அமையணும் அதுதான் முக்கியம்.

இதற்கிடையில் ஒரு டீயும் போட்டுக் கொடுத்தார்கள். குடித்து விட்டுக் கிளம்பினேன்.

ஒரு வேலையை தள்ளிப் போட்டாகி விட்டது. குடத்தை வீட்டில் வைத்து விட்டு சாப்பிடப் போனேன். மெஸ்சில் சொந்தக்காரர் இல்லை. அவரது மனைவி கொண்டு வந்தார். பொங்கல் வடைதானே என்று கேட்டு விட்டு ஒரு வடையோடு கொண்டு வந்தார். அவர் கணக்குப்படி 2 வடைகள் வைக்க வேண்டும். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வண்டியில் கடைக்குப் போய் திரும்பி வந்த அவர் இன்னொரு வடையை கொண்டு வைத்தார். அதன் பிறகு வழக்கமான பூரி 3, காபி. சாப்பிட்டு விட்டு 50 ரூபாய் காசு கொடுத்து கிளம்பினேன்.

சாப்பிடும் போது தினத்தந்தி நாளிதழ், தினத்தந்தியில் காவல்துறை ஐஜி மக்களிடம் உருக்கமாக பேசியது குறித்த செய்தி வெளியாகியிருந்தது. பின்னர் அதை கூகுள் பஸ்சிலும் வெளியிட்டேன். எந்த குளறுபடியும் வரக்கூடாது, மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்திருந்திருக்கும்.

சுற்றி நடந்து வந்து கடையில் நாளிதழ் வாங்கிக் கொண்டு திரும்பி வீட்டுக்கு வந்தேன். செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் நீளமாக இருந்தது. இதற்குள் மின்னிணைப்பும் வந்து விட்டிருந்தது.

வீட்டு வேலை செய்யும் அம்மா வந்ததும், அடுக்களையில் இருக்கும ் பொருட்களை வேறு அறைக்கு மாற்றி வைக்க உதவி செய்யச் சொன்னேன். அவரும் அதைச் செய்து கொடுத்து விட்டார்கள்.

கதவைப் பூட்டிக் கொண்டு சாப்பிடக் கிளம்பினேன். வங்கியில் போட வேண்டிய காசோலைகளையும் எடுத்துக் கொண்டேன். ஓடைப்பிள்ளையார் கோவில் அருகில் இருந்த கணேஷ் பவனுக்குப் போனால், தயிர் சாதம் மட்டும்தான் இருக்கிறது என்று விரட்டி விட்டார். அங்கு போயிருக்கவே கூடாது. அப்படியே நடந்து மீனாட்சி பவனுக்குப் போனேன். கடை நிறைய ஆட்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 7 பேர். ஒரு இடம் காலியாக இருந்தது. அதில் நான் உட்கார்ந்தேன். கொஞ்சம் கூச்சம் தெளிந்து சகஜமாகியிருந்தது. காலிபிளவர் கூட்டு, முட்டை கோஸ் பொரியல் என்று நினைவு. சாம்பார், காரக் குழம்பு எல்லாம் கொஞ்சம் நீர்த்துப் போய் தெரிந்தன.

பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு அரசாங்க வண்டி வந்து நின்றது. உள்ளே முன் இருக்கையிலும் பின் இருக்கையிலும் ஆட்கள். இறங்கி வந்தார்கள்.என்னைத் தவிர மற்ற எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்து விட்டார்கள். தொலைக்காட்சி பெட்டியில் அத்திப்பூக்கள் ஓட ஆரம்பித்தது. குழந்தை ஒன்றை கடத்தி வந்திருந்த பெண்ணை காவல் துறை பெண் மிரட்டுவதாக காட்சிகள்.  5 பேருக்கு சாப்பாடு இருக்குமா என்று கேட்டு விட்டு வண்டியில் வந்தவர்கள் நுழைந்தார்கள். என் அருகில் ஒருவர், மற்ற இரண்டு மேசைகளில் இரண்டிரண்டு பேராக உட்கார்ந்து கொண்டார்கள். என் அருகில் உட்கார்ந்தவர் ஓட்டுனர் போல தெரிந்தது.

வண்டியில் தண்ணீர் பாட்டில் இருக்கிறதா என்று எனக்கு இடது பக்க பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர் கேட்டார். அவர்தான் அதிகாரி போலிருக்கிறது. இவர் பணிவாக பதில் சொல்லி, வேண்டுமென்றால் போய் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார். வேண்டாம், சாப்பிடுங்க, சாப்பிட்டு முடிச்ச பிறகுதான் தேவை என்று சொல்லி விட்டார்.

சாப்பிட்டு முடித்து 30 ரூபாய் கொடுத்து விட்டு பிஎஸ்என்எல் நோக்கி நடந்தேன். இணைப்பை சரண்டர் செய்வதற்கான வழிமுறைகள் பற்றிக் கேட்டேன். ஒரு படிவம் கொடுத்தார்கள். விண்ணப்பம் கொடுத்த அதே நாள் துண்டிக்கப்பட்டு விடும், நாள் குறிப்பிட்டு துண்டிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். போன மாத கட்டணத்தைக் கட்டி விடும்படி சொன்னார். வைப்புத் தொகை 1,400 ரூபாய் இருப்பதில் அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்று சொன்னார். தொலைபேசியையும் வெள்ளை பெட்டியையும் கொண்டு வரச் சொன்னார். மோடம், ஸ்பிளிட்டர் என்னுடையதுதான்.

சனிக்கிழமை திரும்பி வந்து, ஞாயிற்றுக் கிழமையும், திங்கள் கிழமையும் பயன்படுத்தி விட்டு திங்கள் கிழமை வந்து எழுதிக் கொடுக்கலாம். அப்படியே கேஸ் உருளையும் திங்கள் கிழமை வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அப்படியே வந்து ஸ்டேட் வங்கி கிளைக்கு போனால், அங்கு ஊழியர்கள் யாரும் இருக்கையில் இல்லை. உணவு இடைவேளையாம். பாதுகாப்பு காவலர் உட்காரச் சொன்னார். இரண்டு படிவங்கள் வாங்கி காசோலை விபரங்களை நிரப்பினேன். சாப்பிட்டு முடித்து உள்ளே போய் திரும்பி வர நிர்ணயிக்கப்பட்ட நேரம் எடுப்பது போல ஒவ்வொருத்தராக வந்தார்கள்.

காசோலைகளைக் கொடுத்து விட்டு வங்கி பாஸ்புக்கிலும் விபரங்களை நிரப்பி வாங்கிக் கொண்டேன். செலவு நிறையத்தான் ஆகியிருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் போது மின்னிணைப்பு இல்லை, 2 மணியிலிருந்து 4 மணி வரை வெட்டு போல தோன்றியது. மின்னஞ்சல்கள் பார்க்க 3G அட்டையை பயன்படுத்திக் கொண்டு மின்னிணைப்பு வந்த பிறகு நாட்குறிப்புகளை பதிவு போட்டேன்.

இரவு உணவுக்கு வெளியில் போகலாம் என்று புறப்பட்டேன். 7.45 ஆகியிருந்தது.  பேருந்து நிறுத்தத்துக்கு வந்ததும் 10ம் எண் பேருந்து வந்தது. ஏறி சிஎம்சி சீட்டு வாங்கினேன். 4 ரூபாய். உட்கார இருக்கையும் கிடைத்தது. நீண்ட பயணமாக பேருந்து வருவதாகப் பட்டது. சிஎம்சி வரும் போது திடீரென்று நினைவு வந்து இறங்கிக் கொண்டேன். நடந்து சிஎம்சி முன் வாசல் எதிரில் அவுட்லுக் வாங்கினேன்.

அவுட்லுக்கில் கபில் சிபலை ஹிட்லராக உருவகித்து அட்டைப் படம். அவரை கடுப்பேற்றிய புகைப்படங்களின் தொகுப்பு கட்டுரையில். சோனியா காந்தியை நிறையவே நக்கல் அடித்து சித்தரித்திருந்த படங்கள். அது தவிர இங்கிலாந்தில் டெஸ்கோ முதலான பெருநிறுவன சில்லறை வணிகர்களைப் பற்றிய கட்டுரை. முழுக்க முழுக்க குறை சொல்லி எழுதப்பட்ட கட்டுரை. இரண்டு பக்கக் கட்டுரை.

இதை முடிக்கும் போது 7.35 ஆகியிருக்கும். கொஞ்ச நேரம் இணையம் - இந்த நாட்குறிப்பு பதிதல் செய்ய வேண்டும். இப்போது 8.10 ஆகியிருக்கும். 8.10க்கு குளிக்க வேண்டும். 8.30. அதன் பிறகு தியானம் 8.50. 9 மணிக்கு தியானம் முடிந்து விடும். 9 மணிக்குப் புறப்பட்டு ஆம்பூருக்குப் போக வேண்டும். பேருந்து நிலையத்துக்கு 9.30க்கு. சாப்பிட்டு விட்டு 10 மணிக்கு பேருந்து. பேருந்தில் உட்கார்ந்து பணிகளை முடிக்க வேண்டும். கூடவே திட்டமிடுதல் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

11.30க்கு முதலில் அவரது லாட் நம்பர் வராமல் இருப்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு இந்த இரண்டு அறிக்கைகளையும் போட்டு விட வேண்டும். மதிய உணவு அங்கேயே சாப்பிட்ட விட்டு, அடுத்து சின்னச் சின்ன வேலைகள் இருந்தால் முடித்து விட்டு 4 மணிக்குப் புறப்பட வேண்டும். 6 மணிக்கு வீடு.

வீட்டிலிருந்து 8 மணிக்குப் புறப்பட்டால் போன வாரம் போல 11 மணிக்கு பூந்தமல்லி போய் 12 மணிக்கு வீடு போய் விடலாம்.

நாளைக்குக் காலையில் நாட்குறிப்பைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாளை தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை அச்செடுத்து, நகல் எடுத்து வைத்தால் சனிக்கிழமை தேர்வு நடத்தி விடலாம்.