என்னைப் பற்றி

சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 04, 2012

செயல் மட்டும்தான் செல்லும்


ஜனவரி 4, 2012.

இரண்டு நாட்களில் நிறைய நடந்தது.  நேற்றுக் காலையில் நாட்குறிப்பு எழுதவில்லை.

மன அழுத்தங்கள், சோர்வுகள் என்பது நமது பாரம்பரியத்தின் விளைவுகள். "நமது மனதுக்குள்ளேயே எல்லாவற்றையும் படைத்து விடலாம், மாற்றி விடலாம்" என்று போதிக்கப்பட்டு கற்றுக் கொண்ட ஆன்மீக தத்துவம் நம்மை முடக்கிப் போட்டு விடுகிறது. அந்த பாடத்தைக் கற்றுக் கொண்டு நம்பாதவர்கள் செயல் திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

உண்மையில், நம் உடல் செயல்படாவிட்டால் ஒரு புல்லைக் கூட பிடுங்கிப் போட முடியாது என்பதுதான் நடைமுறை. அதை விட்டு விட்டு மனதுக்குள்ளேயே உலகை நடத்திப் பார்க்கும் போக்குதான் மனச் சோர்வுக்கும், அழுத்தத்துக்கும் காரணம்.

திங்கள் கிழமை காலையில் நாட்குறிப்பு முடித்த பிறகு நாளுக்கான திட்டம் வகுத்துக் கொண்டேன். ஆனால் அன்றைய நாள் மிக மோசமாகவே போனது.

கீழே வீட்டுக் காரரிடம் வாடகை கொடுக்கப் போனேன். பழைய வீட்டுக்கு, புது வீட்டுக்கு வீதம் கணக்கு போட்டு கொடுத்தால், இது என்ன இப்படிப் போட்டிருக்கீங்க என்று கேட்கிறார். கடைசியில் உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்றதை மறுத்துச் சொல்லாமல் வந்து விட்டேன். அங்கேயே பேசியிருக்க வேண்டும்.

11 மணி வாக்கில் மின்கட்டணம் கட்ட அட்டை எடுத்துக் கொண்டு போனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 'இன்றைக்கு பவர் கட் சார்.' பார்த்தால் மின் நிலையத்தில் ஏறி கம்பிகளை இழுத்துக் கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். வழியில் மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

நாளைக்குத்தான் வந்து கட்ட வேண்டும். நம்ம வீட்டிலும் மாலையில்தான் கரண்ட் வரும். 2 மணி நேரம் மின்கலத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

அங்கிருந்து நடந்து புதிதாகத் திறக்கப்பட்டிருந்த வோடபோன் மினிஸ்டோருக்கு வந்தேன். காட்பாடி மில்லேனியம் பிளாசா என்பது ஓடைப்பிள்ளையார் கோவிலுக்கும் சில்க்மில்லுக்கும் நடுவில் இருக்கும் பெரிய கட்டிடம்தான். காலையில் உலாவப் போகும் போது பார்த்திருந்தேன்.

உள்ளே ஒரு பெண் தொலைபேசிக் கொண்டிருக்க முன்னால் இரண்டு இருக்கைகளில் இன்னும் இரண்டு பெண்கள் ஒரு வாடிக்கையாளர் உட்கார்ந்திருந்தார்கள். நான் 'கட்டணத்தைக் கட்ட முடியுமா' என்று கேட்டால், 'சென்னை எண்கள் இன்னமும் இங்கு மாற்றப்பட்டிருக்கவில்லை'யாம். 198ல் பேசச் சொன்னார்கள்.

சனிக்கிழமை 198 வேலை செய்யவில்லை. அதற்கும் தவறான எண் என்றே தகவல் வந்தது. இப்போது அழைத்து 6ம் எண் தேர்வில் பேச வந்தார் ஒரு வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்.

'பணம் எங்கு கட்ட முடியும், சனிக்கிழமை சென்னைக்குப்போய் கட்டப் பார்த்தால் அன்று எல்லோருக்கும் விடுமுறை விட்டு விட்டார்கள், வேலூரில் கடை பார்த்துச் சொல்லுங்கள்'

'சாரி சார், வேலூரில் மினிஸ்டோர்தான் இருக்கு. பணம் கட்ட முடியாது. கிரெடிட் கார்டு இருந்தால் இணையத்தில் கட்டி விடலாம். டெபிட் கார்டுண்ணா ஆக்ஸிஸ் பேங்க் மட்டும்தான் வேலை செய்யும்'

'கிரெடிட் கார்டு கிடையாது, டெபிட் கார்டுதான் இருக்கு, எஸ்பிஐ கார்டு. நான் வேலூரில் இருக்கிறேன். வேலூருக்கு இணைப்பை மாற்றச் சொல்லி கடிதம் கொடுத்தும் இன்னும் நடக்கவில்லை. சென்னைக்கு வரும் போது கடை இல்லை. நான் சென்னைக்கு வரும்போதுதான் கட்டணம் கட்ட முடியும். இணையத்திலும் கட்ட முடியவில்லை. என்னதான் வழி'

'வேற வழியில்லை சார், பணம் கட்டினாத்தான் லாக்க எடுக்க முடியும்'

'அப்போ இன்னும் ஒரு வாரம் நான் இணைப்பு இல்லாமத்தான் இருக்கணுமா? சரிங்க, என் தப்புதான், அப்படியே இருக்கட்டும். ஆனா, உங்க சர்வீசை நான் ஏன் பயன்படுத்தணும். எல்லா ஊர்லயும் கடை வச்சிருக்கிற கம்பெனிக்கு மாறிக்கிறேன். இப்போ எண்ணை மாற்றமலே மாறவும் வசதி இருக்கு. பை'

என்று போனை வைத்து விட்டுப் பார்த்தால் அவுட்கோயிங் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. போட்ட போடில் திறந்து விட்டிருக்கிறான் அந்த பையன். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.  பில் கட்டாமல் இருந்து விட்டு இப்போது தகராறு செய்வது என்னைப் பொறுத்த வரை சரியில்லைதான். தொகை என்னவோ 500 ரூபாய்தான், ஆனால் அவங்க கணக்கில் கட் பண்ணுவது சரிதான்.

இந்த சிரமங்கள் இருப்பது அவர்கள் பக்க பலவீனம். அதைப் பயன்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் திட்டமிட்டு ஒரு நாள் சென்னையில் பணம் கட்டி விட்டிருந்தால் தொல்லை ஏற்பட்டிருக்காது.

எதிரில் சாலையைக் கடந்து காத்திருந்தேன். இரண்டு மூன்று பகிர்வூர்திகள் நிற்காமலே போனார்கள். கடைசியில் வந்தவரை கை காட்டி நிறுத்தினேன். உள்ளே வேறு இரண்டு பயணிகள் இருந்தார்கள். ஓடைப்பிள்ளையார் தாண்டி, பாலாஜி தியேட்டர் தாண்டும் வரை பேசாமல் இருந்து விட்டு கேஸ் அலுவலகம் வரும் போது இடது புறம் நிறுத்திக் கொள்ளச் சொன்னேன். அவர் இண்டிகேட்டர் போட்டு விட்டு இடது புறம் ஒதுக்க, இடது புறமாக முந்திப் போக வந்த ஒரு இரு சக்கர வண்டிக்காரர் அடிபட்டு கீழே விழுந்தார்.

முதல் தவறு என்னுடையது,ஆரம்பத்திலேயே இறங்கும் இடத்தைச் சொல்லியிருந்தால், திட்டமிட்டு இடது புறமாக வந்திருப்பார் ஆட்டோகாரர்.

இரண்டாவது தவறு ஆட்டோ காரருடையது. இடது புறம் ஒதுங்கும் போது பின்னால் வரும் வண்டிகளை கவனித்து ஒதுங்கியிருக்க வேண்டும்.

முக்கிய முதன்மை தவறு இரு சக்கர வண்டிக்காரருடையது. இடது புறமாக வேகமாக முந்த முயன்றது தவறு.

அதனால் அவர் மீதுதான் எல்லா பார்வையும் விழுந்தன. நல்ல வேளையாக கீழே விழுந்து பெரிய அடி எதுவும் படவில்லை. காலில் உராய்த்து, தோல் பிய்ந்து விட்டிருந்தது. வலியில் துள்ளினார். அவருக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. தொலைபேசி யாரிடமோ சொல்லி அப்பாவை வரச் சொல்லு என்றார். நல்ல குண்டான இளைஞர். 20 வயதுக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும். அவருக்கு முன்பு பகிர்வூர்தி ஓட்டுனர் மிகச் சிறிதாக நோஞ்சானாகத் தெரிந்தார். அவரது அப்பா வந்து அடாவடி செய்தால் ஆட்டோ டிரைவருக்கு சிரமம்தான்.

எனக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. 10 ரூபாய் கொடுத்து விட்டு அவரை எழுப்பி விட்டு அடுத்த ஆட்டோவில் ஏற்றி அனுப்புவது வரை நின்றிருந்தேன். வெளிப்படையாக யாரும் என் மீது குறை சொல்லா விட்டாலும், அந்த ஆட்டோ டிரைவருக்கு உள் மனதில் என் மீது வருத்தம் இருந்திருக்கும். அது நியாயமான வருத்தமும் கூட. சட்டப்படி, விதிகளின் படி என் மீது தவறில்லை. ஆனால் தருமப்படி முதல் குற்றவாளி நான்தான்.

சமையல் வாயு முகர்வரின் அலுவலகத்துக்குள் போய் மேலாளரை சந்தித்தேன். போன வாரம் வந்த போது 'கறாராக 1 ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது, சிலிண்டர் தர முடியாது' என்று சொல்லி விட்டிருந்தார். 'சிலிண்டரையும் அட்டையையும் எடுத்துக் கொண்டு வந்து சரண்டர் செய்துடுங்க' என்று தீர்ப்பு. வீட்டுக் காரரிடம் சொல்லி அவர் இந்த ஏஜன்சியின் உரிமையாளரிடம் பேசி போய் வாங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்.

' போன வாரம் இந்த மாதிரி சொன்னீங்க, அப்புறம் நான் குடியிருக்கும் வீட்டுக் காரரிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். உங்க ஓனரை அவருக்குத் தெரியுமாம். அவர் அவங்ககிட்ட பேசினாராம். உங்களைப் பார்த்து திரும்பவும் ரிக்வெஸ்ட் செய்து கொள்ளச் சொன்னார். பார்த்துப் போட்டுக் கொடுத்தா நல்லா இருக்கும்' என்று அவர் முகமிழக்காமல் பேசினேன். இன்னும் ஒரு முறை விபரங்களைக் கேட்டார். வேறு இடத்தில் இணைப்பு இருக்கிறதா, இன்னும் ஒரு வருஷம் ஆகி விடுமே என்றெல்லாம் சொல்லி விட்டு, இன்னைக்கு ஸ்டாக் இல்ல நாளைக்கு வந்து வாங்கிக்கோங்க என்று அனுப்பினார்.

குறைவாக கேஸ் செலவழிப்பதும் ஒரு குற்றமாக இருக்கிறது. நான் மானிய விலை சிலிண்டர் வாங்கக் கூடாது என்று கமர்ஷியல் வாங்கி, அதையும் மிகக் குறைவாக பயன்படுத்தி 1 ஆண்டு நீட்டித்திருக்கிறேன். அதைப் பாராட்டி விருது எதுவும் கொடுக்காவிட்டாலும், இப்படி சிலிண்டரை திரும்பக் கொடு என்பது என்ன நியாயம்? இதைக் கொடுத்து விட்டு இன்டக்சன் ஸ்டவ் வாங்க வேண்டியதுதானே என்று சொல்கிறார்கள்.

இதைத் திருப்பிக் கொடுத்தால் 1400 ரூபாய் திரும்பித் தருவார்கள். ஏற்கனவே வாங்கி வைத்த ஸ்டவ் வீணாகப் போகும். இண்டக்சன் ஸ்டவ் வாங்கப் போனால் 4,000 ரூபாய் வரை ஆகும். அதற்காக சமையல் பாத்திரங்கள் தனியாக வாங்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் பாத்திரங்கள் வீண். மின் இணைப்பு இல்லாத போது பயன்படுத்த முடியாது, மின்கட்டணம் எகிறும். இதை எல்லாம் கணக்கு போட்டு, சிலிண்டர் வாங்க போராடுவது என்று முடிவு செய்திருந்தேன். வீட்டுக்காரர் உதவிக்கு வரவில்லை என்றால் போய் சண்டை போடுவது என்று எண்ணம். நல்ல வேளை இவர் உதவி செய்து விட்டார்.

மனதுக்குள் மறுகிக் கொண்டிருந்தால், உலகின் தர்ம நியாயங்கள் எல்லாம் உருவெடுத்து வந்து நமக்கு நல்லது செய்து விடும் என்று நினைப்பது அபத்தம். நடைமுறை செயல்பாடு மட்டும்தான் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.

வீட்டுக்கு வந்து பார்த்தால் மின்சாரம் வந்திருக்கவில்லை. வாணியம்பாடிக்கு அழைத்தேன்.  இன்றைக்கு தொழிற்சாலை இயங்குகிறதான். மின்வெட்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொண்டேன். இப்போதுதான் புறப்படுகிறேன் இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று சொல்லி விட்டேன். உடை மாற்றி சாலைக்கு வந்தேன். பகிர்வூர்தியில் ஏறி புது பஸ்ஸ்டாண்ட். பத்திரிகைக் கடைக்குப் போகாமல் நேராக அலங்கார் விடுதி. சாப்பிட சாம்பார் சாதம் ஒன்று, தயிர் சாதம் ஒன்று.

வெளியில் வரும் போது 102B விரைவு வண்டி உள்ளே நுழைந்திருந்தது. நடைபாதைகள் வழியாக நடந்து திருப்பத்தூர் வண்டி நிறுத்தத்துக்கு வந்தால் ஒரு தனியார் பேருந்துக்கு அருகில் இவர்கள் நிறுத்தினார்கள். நிறைய  கூட்டம் ஏறிக்கொண்டிருந்தது. தனியார் வண்டியும் நிரம்பி ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று ஏறிக் கொண்டேன். பின் ஏறும் வழியில் இடது புறம் முதல் இருக்கை. ஒரு வயதானவர் உட்கார்ந்திருந்தார், நகர்ந்து இடம் கொடுத்தார்.

வலது புற இருக்கையில் ஜன்னலோரம் ஒருவர். தோல் தொழிற்சாலையில் வேலை செய்பவர் ஒன்று தோன்றியது. இரண்டு குழந்தைகளுடன் அம்மா. பையன் உள்ளே, அடுத்து பெண் குழந்தை, நடைபாதை ஓரமாக அம்மா. இரண்டு குழந்தைகளும் ஆம்பூர் வரை அட்டகாசம் செய்து கொண்டே வந்தார்கள்.  அம்மா இடையில் ஓடிய பழைய பாடலை ஒலி பெருக்கியுடன் பாடினார். அதன் பிறகு செல்பேசியில் பேச ஆரம்பித்து இறங்கும் வரை பேசிக் கொண்டிருந்தார்.

நடத்துனர் மாதனூர் நிற்காது என்று மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். 'வாதம் செய்யாமல் அமைதியாக இருந்தால் இறக்கி விடுவார்' என்று விளக்கினேன். மாதனூர் டிக்கெட் போட்டுக் கொடுத்து விட்டார். பள்ளிகொண்டாவில் ஏறியவர்களில் ஒரு குழந்தையும் அம்மாவும் அருகில் நின்றார்கள். பெண் குழந்தை, 3-4 வயது இருக்கும். '3 வயதுக்குக் குறைவு என்று சொல்லுங்க, உனக்கு மட்டும்தான் டிக்கெட் எடுத்திருக்கிறேன்' என்றார். ஆம்பூரில் ஏறிய பார்வையற்றோரிடம் சலுகை அட்டை செல்லாது என்று விளக்கியும், விடாப்பிடியாக ஏறி விட்டார்கள். டிக்கெட் எடுக்கும் போது தகராறு. கடைசியில், நடத்துனர் விட்டுக் கொடுத்து விட்டார். இப்படி மூன்று விட்டுக்  கொடுத்தல்கள்.

கடைசியில் முன் பக்கம் யாரோ, இரண்டு தடவை சீட்டு எடுத்தது குறித்த வாக்குவாதத்தில் மாட்டிக் கொண்டார். சேர்ந்து போகும் இரண்டு பேரில் இருவரும் சீட்டு எடுத்திருக்கிறார்கள். நடத்துனருக்கும் அதில் ஏதோ பங்கு இருக்கும் போலிருக்கிறது. வாக்குவாதம் பெரிதாகி, ஓட்டுனரும் இறங்கி, மற்ற பயணிகள் தலையிட்டு சத்தம் போட்ட பிறகுதான் நின்றது.

அருகில் நின்றிருந்த குழந்தையை இருக்கையின் நடுவில் உட்காரச் சொன்னேன். உட்கார மறுத்து விட்டது. கையில் வைத்திருந்த குட்டி பர்சிலிருந்து காசு எடுத்து தான் டிக்கெட் எடுக்கப் போவதாகச் சொன்னது. அம்மாவும் பொறுமையா இங்கு வேண்டாம் ஊருக்குப் போகும் போது எடு என்று இன்னும் ஒரு 10 ரூபாய் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். முகம் முழுக்க குறும்பாக சிரித்த முகமாக துறுதுறுத்துக் கொண்டிருந்தது.அம்மாவை இடுப்பில் தூக்கச் சொன்னதற்கு தூக்கவில்லை. உட்காரவும் மனமில்லை. மாதனூரில் ஆட்கள் இறங்கிய பிறகு உட்கார்ந்து விட்டார்கள். பக்கத்து இருக்கையில் ஜன்னலோரம். உட்கார்ந்ததும் தூங்கி விட்டது. உடன் உட்கார்ந்த ஒரு வயதானவர் பேசிக் கொண்டே வந்தார்.

வாணியம்பாடி போகாது. புறவழிச்சாலை தாண்டி ஊருக்கு அந்தப் பக்கம் நிறுத்தினார்கள்.  இந்தப் பக்கம் நிறுத்தினால் ஆட்டோ செலவு இல்லாமல் போயிருந்திருக்கலாம். அங்குதான் நிறுத்துவார்கள் என்று தெரியும். கேட்கவில்லை. இறங்கி வந்த ஆட்டோவில் கேட்டால் 50 ரூபாய். ஏறி உட்கார்ந்தால் நெடுஞ்சாலையிலேயே ஓட்டி அடுத்த பாலத்துக்குக் கீழ் மறுபக்கம் வந்து கொண்டு சேர்த்து விட்டார். வாணியம்பாடி ரேஞ்சுக்கு கொஞ்சம் அதிகம்தான்.  சென்னை அளவில் மிகக் குறைவு.

உள்ளே போய் முதலில் பழைய கணினியின் பாஸ்வேர்ட் கேட்கிறது என்பதைப் பார்த்தேன். file system பிழை வந்ததால் ரிப்பேர் செய்யச் சொல்கிறது. கடவுச் சொல் கொடுத்து விட்டு fsck இயக்கினேன். கேட்ட கேள்விகளுக்கு ஆமோதித்து பதில் சொல்லி சில நிமிடங்களில் முடிந்து விட்டது. அடுத்தது, மின்னஞ்சல் அனுப்புவது ஏன் வேலை செய்யவில்லை என்று பார்த்தேன். கோப்பை சேமிக்கும் அடைவில் உரிமைகள் இல்லை. அதை சரி செய்து காட்டினேன்.

மூன்றாதவாக ஏதோ மாஸ்டர் நுழைவு, அதை கேட்டுத்தான் செய்ய வேண்டும், செய்து விடுவார். நவம்பர் மாத கெமிக்கல் டிரான்சாக்சன் அறிக்கை இயக்கினேன். தொடர்ந்து டிசம்பருக்கு இயக்கும் முன்பு  எல்லா தரவுகளும் போட்டு முடித்து விட்டாரா என்று கேட்டால் இன்னும் 1 மணி நேரம் ஆகும் என்றார். அழைத்து விபரம் சொல்லி விட்டுப் புறப்பட்டேன்.

இடையில் மடிக்கணினிக்கு மின்னூட்டம், இணையத்தில் செய்ய வேண்டிய பணிகள் முடித்து விட்டேன். வெளியில் வந்து நெடுஞ்சாலையைக் கடந்து எதிர்பக்கம் போனால் பேருந்து நிலையத்துக்குப் போக எந்த வண்டியும் வரவில்லை. சோர்வாக இருந்தது.

கடைசியில் ஊருக்குள்ளே இருந்து வந்த பகிர்வூர்தி ஓட்டுனர் அழைத்து ஏற்றிக் கொண்டார். பின்னிருக்கையில் கல்லூரி மாணவியர்.  பேசிக் கொண்டே வந்தார்கள். பேருந்து நிலையத்துக்கு அருகில் இறக்கினார். 7 ரூபாய்.

வெளியில் வரும் போது இரண்டு பேருந்துகள். சமாளித்துக் கொண்டு பின்னால் போன சென்னை வண்டியில் ஏறி விட்டேன். கடைசி இருக்கையில் இடம்.

ஆம்பூரில் நிறைய பேர் இறங்கினார்கள். மாதனூரில் இன்னும் சிலர். மாதனூரில் ஏறிய ஒரு அம்மா இருக்கையின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். கடைசி இருக்கையில் ஒரு இடம் இருந்தது.  ஆனால் அவர் வந்து ஆண்களுக்கு நடுவில் நெருக்கிக் கொண்டு உட்கார வசதியாக இருக்காது. யோசித்துக் கொண்டே இருந்தேன். எழுந்து இடம் கொடுக்கும் அளவு உறுதி இல்லை. நடத்துனர் சீட்டு கொடுத்துப் போய் விட்ட பிறகு, முன் இருக்கையில் உட்கார்ந்திருந்தவரை தட்டி, அவரை இங்கு வரச் சொல்லி அந்த அம்மாவுக்கு இடம் கொடுக்கச் சொன்னேன். மறு பேச்சில்லாமல் எழுந்து விட்டார். அவரும் நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த அம்மா கண்களால் நன்றி சொல்லி விட்டு உட்கார்ந்தார்கள். நடுத்தர வயது, நிற்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

வேக வேகமாக வேலுர் வந்து விட்டது. பேருந்து நிலையத்துக்குள் இறங்கி விட்டு மறுபக்கம் காட்பாடி சாலையில் வெளியில் வந்தேன். காத்திருந்த பகிர்வூர்தியில் ஏறி முன்பு படித்திருந்த பாடத்தின் படி கோபால புரம் என்று முதலிலேயே சொல்லி விட்டேன். கோபால புரத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்தேன்.

காலையில் எழுந்து  8.30க்கெல்லாம் போய் மின் கட்டணம் கட்டி விட்டேன். வழியில் 'நேற்று காசு வாங்காமல் போயிட்டீங்களே, இன்னைக்கு நினைவாக வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொன்னேன்.

கூட்டம் அதிகம் இல்லை. 40 ரூபாய்தான். அட்டையை வீட்டுக் காரரிடம் கொடுத்து விட்டு கேஸ் விபரமும் சொன்னேன். நன்றி சொல்லி விட்டு வெளியில் வந்தேன். உலாவலாகப் போய் சில்க் மில் அருகில் டெக்கான்குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு அழகர் விடுதி. சாப்பிட்டு விட்டு திரும்பும் வழியில் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டேன். கேஸ் சிலிண்டருக்குத் தேவை.

திரும்பி வந்து கொஞ்ச நேரம் படித்துக் கொண்டிருந்தேன். விவாதம் தொடர்ந்தது. அவர் சொன்னது தவறு என்று வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உணர்ந்திருப்பார். 10 மணிக்கு மின்சாரம் போய் விட்டது. 12 மணிக்கெல்லாம் வெளியில் வந்தேன், கேஸ் அட்டையுடன். ஏஜன்சிக்கு நடந்து போனேன். மேலாளர் சிறிது நேரம் காத்திருந்து எனது முறை வந்ததும் அட்டையைக் கொடுத்தால் பில் போடச் சொல்லி விட்டார். கவுண்டரில் உள்ளே அனுப்பினார்கள். மேசைக்குப் பின்பு அன்று பார்த்த பெண். அறைக்குள் உரிமையாளர் பெண்.

'என்ன செய்யணும், சரண்டரா' என்று கேட்டவரிடம். பில் போடச் சொல்லி விட்டார் என்றதும் போட்டுக் கொடுத்து விட்டார். 'பிளாக் ஆகி விடும், நாங்களே நினைச்சாலும் போட முடியாது' என்று சொன்னதெல்லாம் வெற்றுக் கதைதான். பணம் கட்டுவதற்கு மேலாளரிடம் போய் கொடுத்தேன்.  40 ரூபாய் சில்லறை கொடுத்ததும் 100 ரூபாய் திரும்பிக் கொடுத்து விட்டார்.

பின்பக்கம் போய் சிலிண்டர் எடுக்கும் இடத்தில் கேட்டால் காலி சிலிண்டரைக் கொண்டு கொடுத்து விட்டுதான் புதியதை எடுக்க வேண்டுமாம். திரும்பும் வழியில் ஆட்டோ பிடிப்பதைப் பற்றி யோசித்தேன். கடைசியில் பாலாஜி தியேட்டர் முன்பு நின்றிருந்த வண்டிக்காரர் ஒருவரிடம் கேட்டேன். தள்ளு வண்டி. ஆட்டோவுக்குக் கொடுப்பதை அவருக்குக் கொடுக்கலாம். இன்னொரு வண்டிக்காரருக்கு கை காட்டினார். அந்த வண்டி உலோகம் போட்டது. தட்டையான படுகைதான். 70 ரூபாய் கேட்டார். 50 ரூபாய்தான் நினைத்திருந்ததாகச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டேன்.

வீட்டுக்கு வந்து 2ம் மாடியிலிருந்து இறக்க வேண்டும் என்றதும் 'இன்னும் 10 ரூபாய போட்டுக் கொடுங்க, ஆட்டோ காரங்கன்னா கீழேயே நின்னுப்பாங்க, நான் மேலே வந்து தூக்கி வரேன்' என்றார். 'அதெல்லாம் இல்லை கேஸ் சிலிண்டர் எடுத்து வரணும்னா தூக்கியும் வர வேண்டியதுதான்' என்றேன்.

திரும்பப் போகும் போது மதி நகர் சாலையில் எதிர் புறம் நடந்து சந்து வழியாக தியேட்டர் தாண்டி கொண்டு சேர்த்தார். சிலிண்டரை கயிறால் கட்டியிருந்தார். திரும்பி வரும் போது அவர் ஏறி மிதித்துப் போய் விட்டார்.

'நீங்க வீட்டாண்ட வந்துடுங்க, என்னை எதிர்பார்க்க வேண்டாம்' என்று சொல்லியிருந்தார். கோபாலபுரம் நோக்கி மெயின் ரோடிலேயே போய் விட்டார். நான் டாடா மோட்டர்ஸ் அருகில் திரும்பினேன்.

"அவர் அப்படியே வராமல் போய் விட்டால், 1500 ரூபாய் நஷ்டம், வழியில் ஏதாவது கடையில் சிலிண்டரை மாற்றிக் கொண்டு வந்தால் எப்படி சரி பார்ப்பது" என்ற எண்ணங்கள்  எல்லாம் வந்தது வெட்கமாக இருந்தது. ஆனால் வரத்தான் செய்தன. நான் சிமெண்டு சாலையில் போய்ச் சேரவும் அவரும் வந்தார்.

வீட்டுக்கு முன்பு இறக்கி மேலே கொண்டு போகவும் உதவி செய்தார். 100 ரூபாய் தாளை நீட்டினால் சில்லறை இல்லை. 'அந்தப் பக்கம் வரும் போது வாங்கிக்கோங்க' என்று சொல்லி போய் விட்டார். 'கவலைப்படாதீங்க அங்கதான் இருப்பேன்' என்று உத்தரவாதமும் அளித்தார்.

சிலிண்டரை இணைத்து ஸ்டவ்வை கொளுத்திப் பார்த்தேன், புத்துணர்ச்சி வந்தது.

தஸ் கேபிடல் பாகங்களை தகவிறக்கி வைத்திருந்தேன். முதல் பாகத்தை முன்பே படிக்க முயற்சி செய்திருக்கிறேன். அச்சில் படிப்பதை விட இது எளிதாகத்தான் இருக்க வேண்டும். மதிய உணவுக்கு சப்பாத்தி போட்டேன். சப்பாத்தி மாவு, ரவை இரண்டையும் சரி பார்த்தேன். ரவையில் வண்டு வந்திருந்தது.அதை வெயிலில் பரப்பி வைத்தேன். சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய்தான். அது முடிந்ததும் ஓட்ஸ் கொதிக்க வைத்து விட்டேன், முந்திரி பருப்புகளையும் போட்டு.

சாப்பிடும் போது 'எவ்வளவு நாளாயிற்று' என்று பெருமூச்சு வந்தது. உணவு விடுதியில் சாப்பிடும் போது மனம் நிறைய சாப்பிட முடிவதில்லை. இரண்டு இனம்களாக சாப்பிடுவது என்று வயிற்றுக்கும் மனதுக்கும் உளைச்சலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களாக இந்த வேலை.

தஸ் கேபிடல் படிக்க ஆரம்பித்தேன். இடையிடையே ஆட்டோ டிரைவர் கட்டுரையில் ஒரு பின்னூட்டம், +ல் ஒரு பின்னூட்டம் என்று நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். சாராவிலிருந்து அழைத்து டிஸ்க் நிரம்பி விட்ட பிரச்சனையைச் சொன்னதும் ஏஎம்சி இல்லாமல் எப்படி உதவுவது என்று மறுத்து விட்டேன். அதன் பிறகு மாலையில் மேலாளரிடம் பேசினோம் என்று திரும்பி வந்த பிறகு தொலைபேசியிலேயே வழி சொல்லி சரி செய்து விட்டேன். ரூபாய் தயார் செய்து வைக்கும்படி சொன்னேன். என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.

மாலை பையும், நகல் எடுக்க வேண்டிய புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு போனேன். நகலகத்தில் புத்தகத்தின் பின்னை எடுத்து விட்டுக் கொடுத்தால், 32 பக்கங்கள், 8 தாள்கள் - 16 பக்கங்கள். அனைத்தையும் சேமித்துக் கொண்டது. 7 பிரதிகள் எடுக்க வேண்டும். கடைசியில் பட்டனைத் தட்டினால் ஒவ்வொரு தாளாக இரண்டு புறமும் நகலாகி வந்து விட்டது. மொத்தம் 60 ரூபாய்தான் வாங்கினார். அட்டைக்குத் தனி என்று நினைக்கிறேன். ஒரு பிரதிக்கு சராசரியாக 9 ரூபாய்தான் ஆனது. 50 காசு வீதம் கணக்கு போட்டால் 8 ரூபாய். அட்டைக்கு 1 ரூபாய் என்று கணக்காக இருக்கும்.

மளிகைக் கடையில் சாப்பாட்டு அரிசி, வெங்காயம், குடை மிளகாய், தேங்காய், தக்காளி வாங்கினேன். தயிர் இல்லை என்று சொல்லி விட்டார்.  கேட்கக் கூடாது. விளக்கு வைத்த பிறகு தயிர் கொடுத்தால் லட்சுமியும் சேர்ந்து போய் விடுவாளே!

வீட்டுக்கு வந்து அரிசியையும், சிறுபயறையும் போட்டு கஞ்சிக்கு வைத்தேன். வெங்காயம், சிம்லா மிர்ச்சி, தக்காளி வெட்டி வைத்தேன். கரண்ட் போனது. அரை மணிக்குப் பிறகு கூட வரவில்லை. 1 மணி நேரம் ஆனது என்று நினைக்கிறேன். அதற்குள் சமையலை முடித்து விட்டேன்.
கஞ்சியை முழுதும் குடித்து விட்டு காயில் கொஞ்சம் மீதியிருக்கிறது.

செவ்வாய், டிசம்பர் 13, 2011

வாழ்க்கைப் போராட்டங்கள்


நேரம் 7.33, டிசம்பர் 13, 2011.

நேற்று காலையில் 4.30க்கெல்லாம் எழுந்து விட்டேன். நாட்குறிப்பு எழுதி முடித்தபிறகு உலாவப் போனேன். நாட்குறிப்பு எழுதுவதில் 1 மணி நேரத்தில் தொடர்ச்சியாக நிறைய எழுதியிருந்தேன். ஒரு வாரத்துக்கான திட்டமிடல்கள் செய்து வைத்திருந்ததால் கொஞ்சம் பதற்றம் குறைந்திருந்தது. அரச மரம் சந்திப்புக்கு முன்பாக இருந்த கடையில் இன்னமும் ஆங்கில நாளிதழ்கள் வந்திருக்கவில்லை. தினத்தந்தி வாங்கிக் கொண்டேன். முன்னே எல்லாம் இங்க இருந்து பேப்பர் பிரித்து கொண்டு வருவாங்க, இப்ப மெயின் ரோட்டில இருந்து வருகிறது, அதான் லேட்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும் என்று கடையில் இருந்த அம்மா விளக்கம் சொன்னார்கள்.

திரும்பும் வழியில் திறந்திருந்த டீக்கடையில் ஒரு பால் கேட்டு குடிக்க வாங்கினேன். சாப்பிடத்தானே என்று உறுதி செய்து கொண்டார். பால் பாக்கெட் வாங்கக் கூட யாராவது கேட்டு விடலாமா. டீ குடிப்பதை விட இதுதான் நல்லது. டீத்தூளில் சேரும் கலப்படங்களை தவிர்த்துக் கொள்ளலாம். காலை வேளையில் புதிதாக கொதிக்க வைக்கப்பட்ட பால் கிடைக்கத்தான் செய்யும்.

நான் படித்துக் கொண்டிருந்த தினத்தந்தியை எட்டிப் பார்த்து, இந்தியா ஜெயிச்சிடுச்சி என்று ஒருவர் திருப்தியாக சொன்னார். என்ன ஜெயிப்பது,எல்லாம் பேசி வைத்துக் கொண்டு ஒன்றை நான் ஜெயித்துக் கொள்கிறேன். அடுத்ததை நீ ஜெயிச்சுக்கோ என்றுதான் விளையாடுகிறார்கள் என்று நானும் சொல்லி வைத்தேன். அவர் வாதத்தில் இறங்கா விட்டாலும், பதில் எதுவும் சொல்லவில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக ஒற்றுமையை காட்டுவதற்கு ஜெயலலிதா சட்டசபை கூட்டத்தைக் கூட்டப் போகிறார் என்பதுதான் தலைப்புச் செய்தி. முல்லைப் பெரியாறு தொடர்பாக குமுளி - கம்பம் பகுதியில் நடக்கும் மக்கள் போராட்டம் நேற்றைக்கு தலைப்புச் செய்தியாக இருந்தது. இன்றைக்கு உள்பக்கம்தான் செய்தி.

முதல் பக்கத்தில் ஒரு புகைப்படம் மட்டும். 20000க்கும் அதிகமான மக்கள் கூடி எல்லையை நோக்கிப் போனது, காவல் துறை தடுப்பரண்களை உடைத்து போட்டது, காவல் துறையை தடுக்க அரண் ஏற்படுத்தியது, பெண்கள் கையில் கிடைத்த பொருட்களை தாக்குவதற்காக எடுத்துப் போனது, மாவட்ட ஆட்சியர் பெண்கள் எல்லாம் நிறைய வந்திருக்கீங்க என்று சமாதானப் படுத்த முயன்றது. கேரளாவுக்குப் போகும் 13 சாலைகளையும் மூடுவதற்கு அரசிடம் பேசி ஏற்பாடு செய்வதாகச் சொன்னது, ஓ பி பன்னீர்செல்வம் சமாதானம் செய்ய வந்தது, அவரை கூட்டத்தினர் விரட்டி அடித்தது, அதைத் தொடர்ந்து காவல் துறை தடியடி நடத்தியது.

வீட்டுக்கு வந்து முகம் மழித்து, குளித்தேன். தினமும் முகம் மழிக்க வேண்டும் என்பது செய்து கொண்ட உறுதிகளில் ஒன்று. குளித்து விட்டு தியானம். அதன் பிறகு கணினியை இயக்கினேன். சாப்பிட்டு விட்டு நானும் புறப்படலாம் என்று திட்டமிட்டேன்.

ஆற்காடு சாலை போய் சாலையைக் கடந்து டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு திரும்பவும் கடந்து ஹாட் சிப்ஸ் வந்தேன். 4 இட்லி+1 பால் 48 ரூபாய். பில் போடுபவர் எப்போதும் கிண்டலாக சிரிப்பது வழக்கம். அவரது கண்ணைப் பார்த்து நானும் புன்னகைத்தேன். ஒரு விதமான நட்பு உருவானது.

இட்லி வாங்கக் கொடுக்கும் போது ஒரு பெண் வழி விடும்படி கையால் ஒதுக்கினார். அந்தப் பெண்ணும் ஒரு முதியவரும் உட்கார்ந்திருந்த மேசைக்கு புற முதுகு காட்டி உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தேன். தொடர்ந்து பால். வெளியில் வந்து சாலையைக் கடந்து எதிரில் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். பேருந்துகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக போயின. 49A, 37G, 17M என்று எதிலும் ஏறுவதற்கு கூட இடம் கிடப்பது கஷ்டமாக தெரிந்தது. காத்திருந்தேன். உட்கார போட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் உட்கார்ந்து கொண்டேன். எல்லாம் ஆண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்க பெண்கள் நினைத்தாலும் ஒரு இருக்கையில் உட்கார முடியாது.

525 வடபழனி பேருந்து வந்தது. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வருவது என்று நினைக்கிறேன். அதற்கு முன்பு 88 ஒன்று போயிருந்ததால் அதிக கூட்டம் இல்லை. ஏறி நடத்துனர் அருகில் நின்று சீட்டு எடுத்தேன். அவருக்கு முன்னால் இருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்த அம்மா ஒதுங்கி உள் இருக்கைக்கு நகர்ந்து இடம் ஏற்படுத்தினார். என்னை உட்காரச் சொல்லும் செய்கை. அவர்களைப் பார்த்து அனுமதி வாங்கி விட்டு உட்கார்ந்தேன்.

சிறிது நேரத்தில் நேரம் எட்டரை ஆகி விட்டதா என்று கேட்டார். 8.35. வடபழனி சூரியா ஆஸ்பத்திரிக்கு எதிரில் இருக்கும் ஆனந்தா பவன் ஓட்டலில் வேலை செய்கிறேன். 8 மணிக்கு வந்துடணும் என்று சொல்றாங்க. எப்படி முடியும்? நாம மட்டும் ஓட்டலில் போய் சாப்பிட்டு விட்டா போதுமா? வீட்டில குழந்தைகளுக்கு சமையல் செய்ய வேண்டாமா. அதற்கப்புறம் கிளம்பி வரும் போது இவ்வளவு நேரம் ஆகி விடுகிறது.

சாயங்காலம் 4.30க்கெல்லாம் விட்டுடுவாங்க. போக வர 26 ரூபாய் ஆகிறது. வீடு இருப்பது குமணன் சாவடிக்கு அருகில் மாங்காடு சாலையில். வீட்டுக்காரரும் அதே ஹோட்டலில்தான் வேலை செய்கிறார். பிரியாணி எல்லாம் செய்கிற மாஸ்டர். அவர் 10.30 மணி வாக்கில்தான் வருவார்.

வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதில் நடந்து நடந்து காலெல்லாம் வலிக்கிறது. வீட்டுக்குள் டைல்ஸ் எல்லாம் நாசம் ஆகிறது. எப்போ தண்ணீ எடுக்கப் போறாங்கன்னு தெரியவில்லை.

தண்ணீரில் வேலை செய்து வேலை செய்து அவர் கைகள் புண்ணாக இருந்தன. பாத்திரங்கள் கழுவும் வேலையாம். நாள் முழுவதும் சேல்சைப் பொறுத்து வேலை இருக்கும். சாப்பாடு எல்லாம் சாப்பிட்டுக் கொள்ளலாம். சில நாள் சேல்ஸ் அதிகமா இருக்கும். சில நாள் குறைவாக இருக்கும். சனிக்கிழமை நல்ல சேல்ஸ். நேற்றைக்குக் கொஞ்சம் குறைவு. நல்ல ஓட்டல், எல்லாம் டேஸ்டா இருக்கும். நிறைய பேர் வந்து நல்லா சாப்பிடுவாங்க என்று விசுவாசமாக தனது பணியிடத்தை போற்றவும் செய்தார்.

முஸ்லீம் பெண்மணி போன்று தெரிந்தார். சூரியா மருத்துவமனை அருகில் சிக்னலில் பேருந்து நிற்காமல் போய் விட பேருந்து நிலையம் போன பிறகுதான் அவருக்கு இறங்க முடிந்தது. இறங்கி நடந்து போக வேண்டும். நானும் இறங்கி பேருந்து நிலையத்துக்குள் காத்திருந்தேன். இங்கிருந்தே கிளம்பும் பேருந்தில்தான் உட்கார இடம் கிடைக்கும். 17 தடம் லிபர்டிக்கு அப்புறம் சேத்துப்பட்டு, எழும்பூர் வழியாக போவது. 17M வெட்டு சேவை ஒன்று நிறைந்து நின்றிருந்தது. கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு, அடுத்த 17M வெட்டு வந்த பிறகு அதில் ஏறி இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். பாம்குரோவ் சீட்டு வாங்கினேன்.

நல்ல கூட்டம், சாலையிலும் வாகன நெருக்கடி. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பிடித்தது. 9.25 வாக்கில் இறங்கினேன். எதிரில் பாம்குரோவ் ஓட்டல் அருகில் நின்ற ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டால் அடையாளம் சொன்னார். அவர் வரத் தயாராக இல்லை. முறை வரிசையில் முதலில் நின்றவரை தேடினார். ஓட்டலுக்கு உள்ளே இருந்து யாராவது செல்வந்தர்கள் வந்து அவர்களை அழைத்துச் செல்வதுதான் விருப்பமாக இருந்திருக்கும்.

மீண்டும் சாலையைக் கடந்து வந்த ஆட்டோவை நிறுத்தினேன். இடம் சொன்னதும் 70 ரூபாய் என்றார். பேசவும் ஆரம்பித்தார். இரண்டு பையன்கள் ஒரு பையன் ஐடி படித்து விட்டு ஸ்டாண்டேர்ட் சார்டட் வேலை பார்த்தான். இரவு பணி முடியவில்லை என்று விட்டு விட்டு இப்போது எம்பிஏ படிக்கிறான் வேறு வேலை தேடுகிறான். நாம் எதுவும் சொல்ல முடியாது. ஒரு அறிவுரைதான் சொல்ல முடியும். அவங்க விருப்பப்படிதான் நடப்பாங்க. இரண்டாவது பையன் பிளஸ் டூ படிக்கிறான். மரியாதையே கிடையாது. சொல் பேச்சு எதுவும் கேட்பதில்லை.

இவர் சின்ன வயதில் ஒரு நாளைக்கு 20 தவலை தண்ணீர் பிடிச்சு ஊத்தணும். அவங்க அப்பா கொத்தவால் சாவடியில் கடை வைத்திருந்தாராம். இந்த பையனிடம் வேலை ஏதாவது சொன்னா, நான் அந்த வேலை செய்கிறேன், நீங்க படிக்கப் போறீங்களா என்று இவரையே மிரட்டுகிறானாம். இவர் 2ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். படிப்பில் நல்லா சுட்டிதான், ஆனால் சொல் பேச்சுதான் கேட்க மாட்டேங்கிறான். பெரியவனைப் பார்த்துதான் இவனும் கத்துக்கிட்டான். அவன் இப்படித்தான் எதிர்த்து எதிர்த்துப் பேசுவான். அந்த சமயத்தில் சின்னவனை அடித்தால் என்னை ஏன் அடிக்கிறே, முடிஞ்சா அவன அடிச்சுப் பாரேன் என்று கத்துவான்.

சமயத்தில் அண்ணா அறிவாலயம் அருகில்  திமுகவின் உண்ணாவிரத பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. பக்கா திமுக காரர் போலிருக்கிறது. தேர்தல்ல ஜெயிக்கவே இல்லை சார், அந்த வடநாட்டுக் காரன் குரேஷி அவன்தான் ஏதேதோ செய்து இவங்கள ஜெயிக்க வைச்சான். அந்தந்த ஊரில் பொன்முடி, நேரு, வீரபாண்டி ஆறுமுகம் என்று அராஜகம் செய்தது, காங்கிரசு காரன் மிரட்டியது எல்லாம்தான் காரணம். இரண்டு பேரும் மக்களுக்கு நல்லது செய்யப் போறதில்லை என்று தெரியும். அப்படின்னா நீங்கதான் வரணும் என்று சொல்லி வண்டியை நிறுத்தினார். இறங்க வேண்டிய இடம் வந்து விட்டிருந்தது. 'நீங்க வரணும்' என்று அவரை சுட்டி காட்டி விட்டு இறங்கினேன்.

வியாழன், டிசம்பர் 08, 2011

தூக்கி எறியப்படும் மக்கள்


நேரம் 4.17, டிசம்பர் 8, 2011 காலை.

கடந்த இரண்டு நாட்களாக நாட்குறிப்பு எழுதவில்லை. வேலூரில் குளிர் காலத்தில் தலையையும் காதையும் சரிவர மூடிக் கொள்ளா விட்டால் சளி பிடித்து விடும். இரவில் போர்த்திக் கொள்வதோடு தலைக்கு ஒரு பாதுகாப்பும் தேவை. இது போக ஞாயிற்றுக் கிழமையும், திங்கள் கிழமையும் இரவில் கொசுக் கடி தொல்லை வேறு. தூக்கம் சரியாக இல்லை என்று நினைக்கிறேன். எல்லா சோர்வும் செவ்வாய் கிழமை மாலை உணவு கைவிட்டு, சீக்கிரமே படுக்கப் போய் காலையில் 6 மணி வரை தூங்கியதில் தீர்ந்தது.

கேபிள் இணைப்புக்கு காசு வாங்க வந்தார் வழக்கமாக வருபவர். 'எப்படி போய்க்கிட்டு இருக்கிறது' என்று கேட்டால். 'இன்னும் ஓரிரு மாதங்கள்தான் வருவேன், அதன் பிறகு வர மாட்டேன்' என்றார்.

மாதம் 6000 ரூபாய் சம்பளம், வீட்டிலிருந்து வந்து போக பேருந்து கட்டணம், சாப்பாட்டு செலவு என்று கொடுத்துக் கொண்டிருந்த முதலாளி இப்போது சம்பளம் மட்டும்தான் பேருந்து+சாப்பாடு அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறாராம். போய் வருவதற்கு பேருந்து செலவு 25 ரூபாய் ஆகி விடுகிறதாம். இரத்தினகிரிதான் சொந்த ஊர். சாப்பாடு 25 ரூபாய். இப்போது எல்லாம் முழுச் சாப்பாடு சாப்பிடுவதில்லை, மினி மீல்ஸ் போல சாப்பிட்டுக் கொள்கிறேன், வீட்டிற்குப் போய் மாலையில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். டீ குடித்தால் 10 ரூபாய் ஆகி விடுகிறது. எப்படி வேலை செய்ய கட்டுப்படி ஆகும்!

ஊரிலேயே ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன். 250 ரூபாய் வரை தினசரி சம்பளம் கிடைக்கும். 10 வருஷமா இந்த கேபிள் வேலை பார்க்கிறேன். எல்லா வேலையும் செய்யத் தெரியும், எல்லா வகையான கஸ்டமரிடமும் பேசி காசு வாங்கி விடுவேன். 130 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்ததை 100 ரூபாய்தான் வாங்குகிறோம். இதில் 25 ரூபாய் கவர்ன்மெனடுக்கு கட்டணம். இதுக்கே ஒவ்வொரு வீட்டில சண்டை போடுகிறார்கள். எப்போ 70 ரூபாய்தான் வாங்கணும் என்று ஸ்டிரிக்டா சொல்லிடுவாங்களோ! இதுக்கே படியை வெட்டின ஓனர் அப்போ என்ன செய்வார்னு யாருக்குத் தெரியும்? அதான் நின்னுடலாம்னு பார்க்கிறேன்.

அவர் நஷ்டத்தில தொழில் செய்ய மாட்டார் என்பது புரிகிறது. ஆனா, அதுக்காக நாமும் கைக்காசைச் செலவழித்து வேலை செய்ய முடியுமா. வேறு ஏதாவது தொழில்தான் பார்க்கணும். இரத்தினகிரியில் கேபிளுக்கு முழு நேர வேலை கிடையாது. சாயங்காலம் ஒரு மணி நேரம் 2 மணி நேரத்திலேயே வேலை செய்து முடித்து விடுகிறார்கள். அது மாதிரியும் ஏதாவது செய்து கொண்டே வேறு வேலைகளையும் பார்க்கணும். கல்யாணம் இன்னும் ஆகலை, ஆகப் போகுது, வீட்டில பார்த்துக் கொண்டு இருக்காங்க

மதியம் சாப்பிடப் போனால், 'இப்படி கரண்ட் கட்டாவது எப்பதான் நிக்கும். காலையில 4 மணிக்கு எழுந்து கிரைண்டர் போட வேண்டியிருக்கு'

'இப்போ எல்லாம் 6 மணிக்கு கரண்ட் போய் விடுகிறது. அடுத்த மாதம் நேரம் மாறும்'.

மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த மின்சார வாரிய ஊழியருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 'கட்டாறது சரியான நேரத்தில் கட்டாகி திரும்ப வந்துடும்' என்று மட்டும் ஆறுதலாகச் சொன்னார்.

எதிரில் பிஎஸ்என்எல்லில் வேலை பார்க்கும் குடிகாரர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அய்யப்பன் மாலை போட்டிருந்தார், குடிக்காமல் எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை.

நேற்று காலையில் எழுந்தவுடன் எழுத வேண்டிய பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். 7.15க்கு தொலைபேசினால் வழியில் இருக்கிறாராம். பிருந்தாவன் மூலம் வந்து கொண்டிருக்கிறாராம். 10 மணி வாக்கில் வாணியம்பாடி வந்து விடுவார்கள். நானும் தயாராக ஆரம்பித்தேன்.

முதலில் துணி தேய்ப்பு. 8 மணிக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு முன்பு தேய்க்க வேண்டும். 3 பேன்டுகள் முடித்து சட்டை ஒன்று தேய்த்ததும் மின்சாரம் தடைப்பட்டது. இன்னும் 4 சட்டைகள்  இருந்தன. இப்போது போட்டுக் கொண்டு போக சட்டை தயாராகி விட்டது.

சீன மொழி வீட்டுப் பாடங்களை சரி பார்த்து மதிப்பெண் குறித்துக் கொண்டேன். அதன் பிறகு குளித்து விட்டு உடை மாட்டி புறப்பட்டேன். 9 மணி.

பேனாவை காணோம். கணினி பையுடன் இறங்கி வழியில் மெஸ்சில் காலை உணவு, வழக்கமான பொங்கல்+ 2 வடை + காபி=50 ரூபாய். தினத்தந்தியில் தலைப்புச் செய்தி நாளை திருவண்ணாமலை தீபம் என்பதுதான். முல்லைபெரியாறு பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று அரசு தரப்பில் சொல்லியிருக்கலாம். உள் பக்கங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

திருவண்ணாமலை தீபம் என்றால் இந்த பகுதியில் மற்ற ஊர்களுக்குப் போகும் பேருந்துகள் எல்லாம் திருப்பி விடப்பட்டு பயணம் செய்வது சிக்கலாகி விடும். நல்ல வேளையாக வாணியம்பாடி போய் விட்டு வந்து இன்றே சென்னை போய் விடுவதாகத் திட்டம்.

சாலைக்கு வந்தால் சாலையைக் கடக்கும் முன்னரே கவனித்து காத்திருந்த பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். இறங்கும் போது 10 ரூபாய் கொடுத்தால் 4 ரூபாய்தான் சில்லறை இருக்கிறது என்றார். எத்தனை தர வேண்டும் என்று கேட்டால் 5 ரூபாய் தாள் வாங்கிக் கொண்டார். பேருந்து நிலையத்துக்குள் நாளிதழ் கடையில் சரியாக 1.50 கொடுத்து டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன்.

திங்கள், நவம்பர் 28, 2011

சமூக நியாயங்கள்


நேரம் 6 மணி. நவம்பர் 27, 2011.

நேற்று காலையில் நாட்குறிப்புக்குப் பிறகு வெளியில் உலாவப் போகவில்லை. நேரம் ஏழரை தாண்டி விட்டிருந்ததால், குளித்து தயாராகி விட்டு அப்படியே கணினியையும் கையில் எடுத்துக் கொண்டு புறப்படலாம் என்று முடிவு செய்தேன். நாட்குறிப்பு பாதியிலேயே நிறுத்தி விட்டேன். அதாவது அரை மணி நேரத்தில் நாட்குறிப்பு முடித்து விட்டு அடுத்த அரை மணி நேரத்துக்கு ஒரு உண்மை மனிதனின் கதை ஆங்கில உரைக் கோப்பை வடிவமைத்துக் கொண்டிருந்தேன். குறுஞ்செய்தி வந்தது, 'சீக்கிரமாக சந்திக்க வேண்டும் என்றாலும் செய்யலாம். அதன் பிறகு வங்கிக்குப் போகலாம் என்று'. பதில் உடனே போடவில்லை.

குளித்து கணினி பையை எடுத்துக் கொண்டேன். கொடுக்க வேண்டிய குறிப்பேட்டை நினைவாக எடுத்து வைத்தேன். ஹாட்சிப்ஸ் போய் சாப்பிட்டு விட்டு அப்படியே போரூர் போய் போகலாம் அல்லது லட்சுமி பவனில் சாப்பிட்டு விட்டுப் ராமாபுரம் போய் போகலாம் என்று ஒப்பிட்டுப் பார்த்து விட்டு கடைசியில் ராமாபுரம் சாலையிலேயே நடந்தேன். வழக்கமாக நாளிதழ் வாங்கும் கடையில் டெக்கான் குரோனிக்கிளும் ஜூனியர் விகடனும் வாங்கினேன். பாரதி பவனில் இன்னமும் காலை உணவு தயாராகியிருக்கவில்லை என்று தோன்றியது.

லட்சுமி பவன் போவதற்கு எப்போதுமே தயக்கம்தான். சிறுவர்களை வேலைக்கு வைத்திருப்பதாக அவர்களுடன் சண்டை போட்டதும் எனக்கும் சரி அவர்களுக்கும் சரி மறந்திருக்கவில்லை. நடக்கும் வழியில் சுப்ரபாவின் முன்பு காலை உணவு பலகையைப் பார்த்து அதற்குள் நுழைந்தேன். பொங்கல் வடை, இரண்டு இட்லி, காபி. பூரி, தோசை எல்லாம் இல்லை. இவர்கள் காலையில் கொஞ்சம் சோம்பேறிகள்தான்.

திருவள்ளுவர் சாலை புதிதாய் தார் போட்டிருந்தார்கள். தண்ணீர் தேக்கம் மேடு பள்ளங்கள் எல்லாம் நிரந்து போயிருந்தன. ஓடையில் தண்ணீர் நிரம்பி ஓடியது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

நாம் ஊகிப்பதை எல்லாம் தகவலாக அடுத்தவர்களிடம் பேசக் கூடாது. தெரிந்ததை மட்டும்தான் பேச வேண்டும். எட்டரை மணி ஆகியிருந்தது. மெயின் ரோடுக்கு சற்று முன்பு இருந்த இணைய மையத்தில் அப்போதுதான் திறந்து கொண்டிருந்தார் ஊழியர். முன்பக்கம் படியில் உட்கார்ந்து கணினியில் இருந்து கோப்புகளை பென்டிரைவில் நகல் எடுத்துக் கொண்டேன். இணையம் இணையவில்லை.

மெயின் ரோடுக்கு வந்து சாலையைக் கடந்ததும் சாலை நிறுத்தத்தில் நின்ற பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். வங்கியின் முன்பே போய் இறங்கிக் கொள்ளலாம். பேருந்தில் என்றால் அப்படி முடியாது. முகலிவாக்கம் தாண்டியதும் நல்ல மழை ஆரம்பித்தது. வங்கியின் முன்பு இறங்கிக் கொள்கிறேன் என்று உட்கார்ந்திருந்தேன். காசை முன்பாகவே எடுத்துக் கொடுத்து விட்டு இறங்கினேன். வங்கிக்குள்ளும் கூட்டம் அதிகம் இல்லை. உட்கார்ந்து இரண்டு காசோலைகளுக்கும் படிவம் நிரப்பி பெட்டியில் போட்டு விட்டேன்.

அங்கிருந்து போரூர் சாலை நிறுத்தம் நோக்கியே நடந்து குன்றத்தூர் சாலை முனையில் ஆட்டோ நிறுத்தத்தில் இடம் கேட்டேன். 70 ரூபாய். ஒரு இளைஞர் இரு சக்கர வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியிருந்தார். முழங்கால் அருகில் பேன்ட் கிழிந்து ரத்தகாயமாக இருந்தது. கீழே விழுந்து விட்டாராம்.

அம்மா பகவான் கோவிலுக்கு முன்பு என்று சொல்லிக் கொண்டார்கள். குன்றத்தூர் சாலை வழியாக போய் இடது புறம் திரும்பி மதனந்தபுரம். குன்றத்தூர் சாலையில் போரூர் நிறுத்தம் அருகில் வலது புறம் தண்ணீர் நிரம்பியிருந்தது. இடது புறம் பரவாயில்லை. இந்த சாலை ஒரு ஆண்டுக்குள் போட்டதாக நினைவு. அதற்குள் இப்படி சொதப்பியிருக்கிறது.

முகலிவாக்கம் சாலையிலிருந்து உள்ளே போகும் தெருக்களில் தண்ணீர் நிரம்பியிருந்தது. இது முன்பே தெரிந்திருந்தால் அவர் 100 ரூபாய் கூட கேட்டிருந்திருப்பார். திணறி எடுத்து விட்டு போய்ச் சேர்த்தார்.

70 ரூபாய் எண்ணிக் கொடுத்தேன். அடுத்த தடவை இங்கு வரும் போது ரம்யா நகர் அருகில் என்று சொல்லுங்கள். குறுக்குப் பாதையில் வந்து விடலாம் என்று அறிவுரை சொன்னார். கூட 10 ரூபாய் கொடுத்திருந்திருக்கலாம்.

கட்டிடக் காவலரிடம் வீட்டு எண் சொல்லி பதிவு செய்தால் எனக்கு முன்பு நின்றவரும் போகிறார்.

மேலே போனால், சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்திருந்தார்கள். வணக்கம் சொன்னார். கொஞ்ச நேரத்தில் கைக்குழந்தையுடன் வந்தார்.  அவர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கிறார்கள்.  பயோடெக்னாலஜி துறையில் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தவராம்.

பிரிவோம் சந்திப்போம் படத்தில் (ஆனந்த தாண்டவம்) வரும் ராதாகிருஷ்ணன் , அந்தப் படத்தில் தமன்னா நன்றாக நடித்திருப்பார். கதாநாயகனாக நடிக்க நல்ல ஒரு நடிகரை போட்டிருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும். அதில் நடித்திருந்தவர் சொதப்பியிருந்தார். ஜெயம் ரவி பொருந்தியிருக்கலாம்.

தொலைபேசி உரையாடல்களிலும் வணக்கம் சொன்னதிலும் ஒரு விதமான நக்கலும் கிண்டலும் தெரிந்தன. அது எதிர்பார்த்ததுதான். ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி இந்த வேலையிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக சொல்ல வேண்டும். முதலில் விவாதித்துப் பார்த்தேன்.

'இது போன்ற ஒரு முயற்சியை எடுப்பதில் ஏற்படும் விரயம், இன்றைய அமைப்பில் அது நிச்சயம் வெற்றி பெற முடியாத ஒன்று, பணத்தை வாங்கியதற்கு பயன்படும்படி ஒரு தயாரிப்பை கொடுத்து விட வேண்டும்' என்றெல்லாம் விளக்கினேன்.

'இது தோல்வியடையப் போகிறது என்று முயற்சித்துப் பார்த்து விட்டு விடுவோமே'

மிகவும் மன வருத்தம்தான். எஞ்சியிருக்கும் பகுதிகளை முடித்து, ஆவணமும் எழுதிக் கொடுத்து விடும்படி சொன்னான்.

அந்த நேரம் தொலைபேசி சிபி-சிஐடி தொடர்பு மின்னஞ்சல், தொலைபேசி எண் கேட்டார். அதை இணையத்தில் எடுத்து அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு அரசியல் பேச ஆரம்பித்தோம்.

கொலவெறி பாட்டைப் பற்றி பேச்சு வந்தது. அதைக் கேட்டிருந்தானாம். நன்றாகத்தானே இருக்கிறது என்றான். யூடியூபில் போட்டுக் காண்பித்தான். மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு, தனுஷ், ஐஸ்வர்யா, சுருதி என்று முகங்களையும், இடங்களையும் கலந்து உருவாக்கப்பட்ட காணொளி. பாடல், வேண்டுமென்றே குப்பையான வரிகளுடன். இது தற்செயலாக அமைந்தது என்று பில்ட் அப் கொடுக்கிறார்கள். அது வரை 15 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

நாளிதழில் பார்த்து போய் கேட்டிருக்கிறான். இது திட்டமிட்ட ஒரு பிரபலமாக்கல்தான். கடைசி திரையில் சோனி மியூசிக் என்று விளம்பரம். இந்து, டெக்கான் குரோனிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா, என்டிடிவி, புதிய தலைமுறை என்று செய்தி ஊடகங்களில் எல்லாம் அதை பேசியிருப்பதுதான் இத்தனை லட்சம் பேர் பார்த்ததற்கு காரணம். மிகவும் கேவலமான ஒரு பொருளை கேவலமான முறையில் சந்தைப்படுத்தும் உத்தி இது.

மழை வலுத்திருந்தது. வெளியில் போக வேண்டுமாம். நானும் ஒரு குடை வாங்க வேண்டும். அவர்கள் போகும் கடையிலேயே போய் வாங்கிக் கொள்ளலாம். கீழே வந்து காரில் ஏறினோம். ஆட்டோக்காரார் 70 ரூபாய் கேட்டார் என்று பேச்சு வந்ததும், 'ஆட்டோக்காரனுங்க எல்லோரும் திருடனுங்கதான்' என்று ஒரு டயலாக். விவரமாக ஒரு ஆட்டோ ஓட்டுனருடன் பேசியதைச் சொன்னேன்.

போரூர் சாலை நிறுத்தத்தில் கார் நீந்தி இடது புறம் திரும்பி இலாஹி வந்தோம். உள்ளே போய் தரையடி தளத்தில் குடை. மூன்றாக மடங்கும் குடை. 196 ரூபாய்க்கு. அதை எடுத்துக் கொண்டு நான் கிளம்பி விட்டேன்.

மேம்பாலம் கட்டும் பணியை பாதியிலேயே நிறுத்தியிருந்தார்கள். ஒரு தூணின் அடிப்பகுதி மட்டும் நீட்டிக் கொண்டிருந்தது. சில கோடிகள் செலவழித்து விட்டு மூடுவிழா நடத்தியிருக்கிறார் வெற்றி வீராங்கனை ஜெயலலிதா.

சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். அண்ணா பல்கலை வழியாக போகும் பேருந்தில் ஏறி, கணினியை இயக்கினால் இணையம் வேலை செய்தது. கிண்டியில் இறங்கிக் கொண்டேன்.

அண்ணா நூலகம் இட மாற்றத்தை எதிர்த்து கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். திமுகவின் ஏதோ அணியின் பெயர் படிவத்தின் அடியில் இருந்தது. திநகர் போகும் பேருந்து நிறுத்தம் வந்தேன். கணினியை இயக்கினேன். இணைய இணைப்பு நன்கு கிடைத்தது.

என் அருகில் இருந்தவரிடம் கையெழுத்து கேட்டார். அவர் போட மறுத்து விட்டார். என்னிடம் கொடுங்கள் என்று வாங்கிப் போட்டேன். 'இதற்கு போராடுவதை விட விலைவாசி உயர்வுக்கு போராடுங்க, இதுவும் தேவைதான். ஆனா அதுதான் மக்களை உடனடியா பாதிக்கக் கூடியது. உங்க கட்சியும் உத்தமம் கிடையாது, அவங்க போட்ட ஆட்டத்தில்தான் இந்த அம்மாவுக்கு வாய்ப்பு வந்தது, இவங்க எல்லோரையும் சாகடிக்கிறாங்க.'. 'இல்லங்க, நான் கட்சிக்காரன் கிடையாது.' என்று பதில் சொல்லி நகர்ந்தார்.

பின்னூட்டங்கள் போட்டு விட்டு பேருந்தில் ஏறினேன். திநகர் வரை போகும் பேருந்து. உட்கார இடம் கிடைத்தது. தொலைபேசி தகவல் சொல்லி விட்டேன். நந்தினி ஸ்வீட்ஸ் பக்கம் நிற்கச் சொன்னார்.

பேருந்து சைதாப்பேட்டை கடக்கும் போது பின் இருக்கையில் உட்கார்ந்திருந்தவர் என் அருகில் இருந்தவரிடம் 'ஏழாம் அறிவு 25ஆம் நாள் வெற்றி என்ற போஸ்டரில் வள்ளல் சூர்யா என்று போட்டிருக்கிறதே' என்று வியப்பாக கேட்டார். அவருக்கும் பதில் தெரியவில்லை. 'ஒரு அறக்கட்டளை மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி செய்கிறாராராம், அதுதான். ஆனா அந்த அறக்கட்டளைக்கு தொலைபேசி செய்தால் யாரும் எடுப்பதில்லை' என்று தகவல் சொன்னேன். 'ஆமா இவனுங்க பெரிய ஆளுன்னு பில்ட்அப்தான் கொடுக்கிறானுங்க. அவங்க அப்பா என்னவோ தான்தான் பிள்ளை வளர்த்ததா பீத்திக்கிறான்' இளம் வயதுதான் இருக்கும். விஜய் வேலாயுதம் படம் பற்றி பேச்சு வந்தது. 'அந்தப் படம் எல்லாம் ஏன் சார் பார்க்கப் போறீங்க' என்று ஒரு போடு போட்டார்.

பேருந்து நிலையம் அருகில் இறங்கி விசாரித்தால் வந்த சாலையிலேயேதான் நந்தினி. சாலையைக் கடந்து விட்டேன். பார்த்தால் சாலைக்கு இந்த புறம்தான் இருந்தது. மறுபடியும் கடந்து வந்தேன். அவரிடம் நோட்டைக் கொடுத்து விட்டு பார்த்தால் நந்தினியிலேயே மதிய உணவு இருந்தது. மினிமீல்ஸ். அவரையும் அழைத்துக் கொண்டு போனேன். ஏற்கனவே ஒருவர் உட்கார்ந்திருந்த மேசையில் உட்கார்ந்தோம்.

அவருக்கு 45+ வயது இருக்கும். எனக்கு மினிமீல்ஸ். அவர் சாப்பிட்டு விட்டாராம். மினி மீல்சில் சப்பாத்தி, புலாவ், சாம்பார் சாதம், தயிர் சாதம், இனிப்பு, அப்பளம், ஊறுகாய், ஒரு பொரியல் கொடுத்திருந்தார்கள்.

எதிரில் இருந்தவர் கோயம்புத்தூர் காரராம், மருந்துதுறையில் வேலை. ஹைதராபாத்தில் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார், அவரது குடும்பம் அங்கே இருக்கிறது, இவர் இங்கு வேலை விஷயமாக தங்கியிருக்கிறார். 'சென்னையை விட ஹைதராபாத் எவ்வளவோ பரவாயில்லை. இங்கு மாற்றம் வாங்கி வந்தது தவறு' என்றார். அவரது மகன் இங்கு வர மறுத்து விட்டானாம். 'நாங்க எப்சி. இங்கே வந்தால் அவனுக்கு வாய்ப்பே இருக்காது' என்று காரணமாம்.

சென்னையில் சாலைகள், ஒரு பெண் திறந்திருந்த சாலை பள்ளத்தில் விழுந்து இறந்தது, வேலை வாய்ப்புகள், கல்லூரிகளில் வேலை திருவிழாக்கள், மாணவர்கள் மீதான அழுத்தம், சத்யபாமா பல்கலை மாணவர் தற்கொலை என்று பேசினோம். பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்து விடைபெற்றுக் கொண்டேன்.

குடையைப் பிடித்துக் கொண்டு பேருந்து நிலையத்துக்குள் போனேன். எல்ஐசி வழியாக போகும் பேருந்தில் ஏறி சீட்டு சிம்சன் வாங்கி இறங்கிக் கொள்ளச் சொன்னார். அங்கிருந்து மாறி திருவல்லிக்கேணி. ஆயிரம் விளக்கு இறங்கியும் மாறி 25Gயில் ஏறிக் கொள்ளலாம்.

அருகில் இருந்தவர் காவி வேட்டி உடுத்தி காவி துண்டு போட்டிருந்தார். பேச்சுக் கொடுத்தால் அவர் அய்யப்பன் விரதம் இருக்கிறாராம். ஆடை மொத்த வியாபாரம். சட்டைகள் துணிக்கடைகளுக்கு செய்து கொடுப்பது. நாகர்கோவிலில் ஏடிஎஸ், மார்த்தாண்டம், தக்கலை ஊர்களுக்கும் ஆடைகள் அனுப்புகிறாராம். அவர் நேரில் போவதில்லை, வேறு ஒருவர் கையாளுகிறார்.

அடுத்த மாதம் சபரி மலை போகிறாராம். ரயிலில் எர்ணாகுளம் போய் அங்கிருந்து வேன் பிடித்து எரிமேலி போய் வாவர் சாமி கும்பிட்டு விட்டு பம்பா போய் சிறுவழியில் போவார்களாம். தரிசனத்துக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். இணையத்தில் பதிவு செய்து அச்செடுத்து வைத்துக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில் உடனேயே போய் விடலாம். போன தடவை பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

திருப்பதி போல ஆகி விட்டது. திருப்பதிக்கும் சபரி மலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டிலும் கிடைக்கும் பலன் வேறுபடுகிறது. சபரிமலையிலும் இப்போது கூட்டம் அதிகமாகி விட்டது. மூன்று மாதங்களும் முழு அளவுக்கு பக்தர்கள் வருகிறார்கள். ஏப்ரலில் போனால் இவ்வளவு பலன் இருப்பதில்லை.

சிறுவழியில் 11 கிமீ நடக்க வேண்டும். பெருவழிதான் சிரமமானது. ஆனா முன்பு போல இல்லை. பெருவழியில் போக 45 நாட்கள் விரதம் இருந்துதான் போவாங்க, ஷேவ் பண்ணக் கூடாது, செருப்பு போடக் கூடாது, இரண்டு தடவை குளிக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டடுப்பாடு உண்டு. ஆனா, இப்போ எல்லாம் அவ்வளவு கட்டுப்பாடா யாரும் இருப்பதில்லை.

நண்பர் ஒருத்தர் ராணுவத்தில் மாலை போட்டு தாடி எல்லாம் வளர்க்காமலேயே விரதம் இருக்கிறார், கேட்டா விதிகள் அனுமதிக்காதாம். சில பேர் சரியாக திட்டமிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு போவார்கள்.

இவர் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக போய் கடந்த 4 ஆண்டுகளாக போகவில்லையாம். இந்த ஆண்டு மீண்டும் போகிறார். வேலையில் விடுப்பு எடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு சரியாக அமைந்து விட்டது. அழைப்பு கிடைத்திருக்கிறது, போகிறோம்.

பேருந்தில் பயணம் செய்ய மாதாந்திர பாஸ் எடுத்தாராம், கட்டணம் கூட்டிய பிறகு கூடுதல் தொகையைக் கட்டச் சொல்லி விட்டார்களாம். இல்லை என்றால் சீட்டு எடுக்க வேண்டும். அதுவும் டீலக்ஸ் வண்டியில் இந்த பாஸூக்கு மேல் 7 ரூபாய் கொடுக்க வேண்டும். கடையில் வேலை செய்யும் பையன்கள் 7 ரூபாய் தினமும் கொடுக்க முடியாமல் நடந்து வருகிறான்கள். பாஸ் எடுத்துக் கொடுத்தாச்சு. ஆனால் எல்லாமே டீலக்சாத்தான் வருது, என்று நடந்து வருகிறான்கள். நாம எவ்வளவுதான் உதவி செய்ய முடியும்.

அரசாங்கம் கையில் போய் விட்டால் பணம் திரும்ப வராது.

ஆனந்த் தியேட்டர் அருகில் இறங்கி சாலையைக் கடந்து நின்றால் 25G வந்தது. திருவல்லிக்கேணி என்று கேட்டால் நடத்துனருக்கு புரியவில்லை. உரக்கச் சொன்னேன். கண்ணகி சிலை சீட்டு கொடுத்தார். உட்கார இடம் கிடைத்தது, முன் பக்கம். பின்னால் பலர் நின்று கொண்டிருந்தார்கள். வைட்ஸ் ரோடு என்று பெயர் பாதிக்கு மேல் டாக்டர் பெசன்ட் சாலை இந்த விபரத்தை முதல் முறை வரும் போது ஒரு ஆட்டோ ஓட்டுனர் சொல்லிக் கொடுத்தார். குடைக்கு நிறைய வேலை இருந்தது. இறங்கும் போது மழை பெய்து கொண்டிருந்தது. இறங்கி நடக்கும் போது தொலைபேசினேன். அவர் வந்து விடுவதாகச் சொன்னார்.

சீனா முதலாளித்துவ அமைப்பாக மாறி விட்டது என்று 80களில் தீர்ப்பு சொன்னோம். சீனாவின் நடைமுறைகள் சீன கம்யூனிஸ்டு கட்சியை விட வேறு யாருக்குத் தெரியும். முதலாளித்துவ நாடுகள், கட்சியை ஊடுருவி விட்டார்கள் என்று சொன்னால் அது வேறு விஷயம், நீங்கள் வெளியில் இருந்து கொண்டு பேசுவது எப்படி.

திபெத்தை சீனா பிடித்து வைத்திருப்பது சுரண்டலுக்கா என்று விவாதம். சீனாவும் மற்ற நாடுகளை சுரண்டுகிறது என்று விவாதம் போகப் பார்த்தது.

வெள்ளி, ஜூன் 17, 2011

ஒருத்தனுக்கா கொடுத்தான்!


ஜூன் 17, 2011 - பிற்பகள் 4 மணி 2 நிமிடங்கள்.

ஞாயிற்றுக் கிழமை சென்னையில், திங்கள் கிழமையும் சென்னையில், திங்கள் இரவு தாமதமாகப் புறப்பட்டு செவ்வாய்க் கிழமை அதிகாலையில் வேலூர், புதன் கிழமை ஆம்பூர், புதன் கிழமை மாலை சென்னை போய் இரவுப் பேருந்தில் கோட்டைப் பட்டினம். வியாழக்கிழமை கோட்டைப் பட்டினத்தில், வியாழக் கிழமை அறந்தாங்கி போய் புதுக்கோட்டை போய் அங்கிருந்து இரவுப் பேருந்தில் வேலூர். இன்று அதிகாலை 5.30க்கு வேலூர் வந்து சேர்ந்தேன்.

இனி வரும் நாட்களிலும் வரிசையாக பயணங்கள் அணி வகுத்து நிற்கின்றன. நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னையில் நடக்கவிருக்கும் கூட்டத்துக்குப் போக வேண்டும். ஒன்றரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் 2 மணிக்கு பேருந்து பிடித்து 5 மணி கூட்டத்துக்குப் போய்ச் சேரலாம், அடுத்த நாள் காலையில் 10 மணிக்கு நடக்கவிருக்கும் வகுப்புக்குப் போக வேண்டும். மாலை 4 மணி வகுப்பு முடிந்த பிறகு புறப்பட்டு வேலூர் வர வேண்டும்.

22ம் தேதி பல்லாவரத்தில் டேன்புரோ போக வேண்டும். 25ம் தேதி கிருஷ்ணகிரியில் தமிழ் இணையம் பற்றிய கருத்தரங்கில் பங்கேற்கப் போக வேண்டும். 26ம் தேதி மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்வு. அன்று பகலில் மார்க்சிசம் வகுப்பு, இரண்டும் சென்னையில்.

இதற்கிடையில் ராணிப்பேட்டை ஒரு தடவை போக வேண்டும், வாணியம்பாடி ஒரு தடவை போக வேண்டியிருக்கலாம்.  இன்வாய்ஸ் போடுதல்,  பணி முடித்து இன்வாய்ஸ் கொடுத்தல் என்று வரிசையாக பணிகள். அலுவலகத்தில் முகவரிக்கான ஒப்பந்தம் உருவாக்கி கையெழுத்து வாங்கி வருமான வரித்துறை, சேவை வரித் துறை, நிறுவனங்கள் பற்றிய மத்திய அமைச்சகத் துறை என்று மாற்றத்தைப் பதிவு செய்ய வேண்டும். இணைய தளத்திலும், இன்வாய்சிலும் முகவரியை மாற்ற வேண்டும்.

நாகர்கோவிலுக்கு இரண்டு நாட்கள் போய் வர வேண்டும்.

திங்கள் கிழமை மாலை நாகல்கேணியில் பல்லாவரத்தில் பணிகளை முடித்து விட்டு 6 மணிக்குப் புறப்பட்டேன். பகிர்வூர்தியில் பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, ஆசர்கானா வரை போகும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். அங்கிருந்து வேறு பேருந்து பிடிக்கலாம்.

இறங்கிய பிறகு தொலைபேசினேன். ஞாயிற்றுக் கிழமை காலையில் அழைத்த போது எடுத்திருக்கவில்லை. இப்போது எடுத்தான். வீட்டுக்கு வந்து விட்டதாகவும், முடிந்தால் அங்கு போகச் சொல்லியும் சொன்னான். பார்த்து கொஞ்ச நாட்கள் ஆகி விட்டது, தொலைபேசியிலும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை. தரையடிப் பாதையில் நடந்து எதிர்த் திசையில் போய் ஆட்டோ பிடித்தேன். அவர்கள் புதிதாக மாறியிருக்கும் வீடு நங்கநல்லூர் தபால்நிலையம் எதிரில் ஆறாவது மெயின் ரோட்டில், நங்கநல்லூர் மார்க்கெட் தாண்டி என்று அடையாளம் சொல்லியிருந்தான். ஆட்டோ ஓட்டுனர் நங்கநல்லூர் காரர் என்பதால் சரியாகக் கொண்டு போனார்.

குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் இருக்கும் வீட்டுக்குப் போகும் போது வெறும் கையோடு போகக் கூடாது என்பது வாரியாரின் அறிவுரை. வாரியார் கேள்வி பதில்கள் என்று ஒரு புத்தகம் வீட்டில் இருந்தது. பள்ளியில் படிக்கும் போது, வாசிப்பதற்கு பொருள் கிடைக்காமல் ஒரே புத்தகத்தை பல முறை வாசிப்பது வழக்கம். இந்தப் புத்தகத்தை அப்படி பத்திருபது தடவைகளுக்கு மேலேயே வாசித்திருப்பேன். தானும் கேடாமல் தன்னைச் சேர்ந்த பொருளையும் கெடாமல் வைத்திருப்பது எது? என்று ஒரு கேள்வி, விடை - தேன்.

'லைசன்ஸ் போட்ட நாயைத் தொட முனிசிபாலிட்டி ஊழியர் அஞ்சுவது போல இறைவன் அருள் பெற்ற பக்தர்களைத் தொட யமதூதர்கள் அஞ்சுவார்கள்' என்று ஒரு பதில் வரும். சுவாரஸ்யமான கேள்வி பதில்கள் அவரது சொற்பொழிவுகளிலிருந்து தொகுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அடுக்கு மாடி கட்டிடம். இறங்க வாசலுக்குள் நுழையும் போது மேலே வீட்டு சன்னலில்  நின்றிருந்தான். கை காட்டி அடையாளம் சொன்னான். 4வது மாடி. மின்தூக்கியில் ஏறி போய் இறங்கினேன். வீட்டுக்குள் போக மணியடித்து காத்திருந்து கதவு திறந்ததும் நுழைந்தேன்.

தொலைபேசி உரையாடலில் மூழ்கியிருந்தான். காதில் கேட்கும் கருவியை மாட்டிக் கொண்டு வீடு முழுவதும் நடந்து நடந்து பேசிக் கொண்டிருந்தான். 'he is wedded to his job"

புறப்படும் போது சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்ல அதற்கும் உட்கார்ந்தேன். இடையில் அவர்களது பழைய வீட்டை விரைவுப் போக்குவரத்து ரயில் பாதைக்காக எடுக்கப் போவதை எதிர்த்த போராட்டம் பற்றி ஒரு மனு தயார் செய்ய ஒருவர் வந்தார். தலைமைச் செயலகத்தில் பணி புரிபவராம். ஜெயலலிதாவுக்கு, சசிகலாவுக்கு என்று ஏதோ தொலைநகல் விபரம் பேசினார்கள்.

சாப்பிட்டு விட்டு என்னை பேருந்து நிறுத்தத்தில் விடுவதற்கு அழைத்துப் போனான். அந்த நேரத்தில் அலுவலகத் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று தவறியது. போகும் வழியில் நாகர்கோவிலுக்கு வரும்படி அழைத்தேன். 'எங்காவது போக வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.' என்று சொன்னான்.

கோயம் பேடு வந்து 102 பேருந்தில் ஏறிக் கொண்டேன். 10.30 மணி போலப் புறப்பட்டு அதிகாலை 2.00க்குத்தான் வந்து சேர்ந்தது. பகிர்வூர்தியில் ஏறி வீட்டுக்கு வந்து முகம் கழுவி விட்டுத் தூங்கினேன்.

ஆறரை மணிக்கு தொலைபேசினார், வேலூர் வந்து விட்டாராம். காட்பாடி வரும், ஓடைப் பிள்ளையார் கோவிலில் இறங்கும் நகரப் பேருந்துக்கு வழி சொல்லி விட்டுப் புறப்பட்டேன். ஓடைப் பிள்ளையார் கோவில் போய்ச் சேரவும் அவர் வரவும் சரியாக இருந்தது. வீட்டுக்கு வந்து அவர் குளிக்கப் போய் விட நானும் பல் தேய்த்துப் புறப்ப்ட்டேன்.

11 மணிக்கு அவர் ராணிப்பேட்டை போக வேண்டும். ராகவேந்திரா மெஸ்சில் சாப்பிட்டு விட்டு அவரை மெயின் ரோட்டில் விட்டு விட்டு சுற்றி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வேலை எதுவும் ஓடவில்லை. சமையல் செய்தேன். சோறு, சாம்பார் வைத்துக் கொண்டிருக்கும் போது வந்து சேர்ந்தார். அவரை கடைக்குப் போய் தயிர், நொறுக்குத் தீனி ஏதாவது வாங்கி வரச் சொல்லி விட்டு வந்த பிறகு சாப்பிட்டு முடித்தோம்.

அதன் பிறகு நல்ல தூக்கம்.

'எனக்கு இலக்கிய வாதி எல்லாம் தெரியாதுங்க. மனிதர் என்ற முறையில்தான் உதவி செய்கிறேன்' என்று புறப்படும் முன்பு அவர் சொன்ன 'தமிழ்நாட்டில் இலக்கியவாதிக்கு யாரும் உதவி செய்ய மாட்டாங்க' என்று கருத்துக்கு பதிலாக  சொன்னேன்.

முதல் முறை ஆம்பூரில் புத்தக விமர்சனக் கூட்டத்துக்கு வருவதாகச் சொன்ன போது வேலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்து காலை உணவு வாங்கிக் கொடுத்து ஆம்பூர் வரை அழைத்துப் போனேன். 'அங்கு ஏதோ முன்பதிவில் குளறுபடி, அவர்களை நன்கு திட்டி விட்டேன்' என்று தொலைபேசியில் அவர் பேசியபோதுதான் முதலில் இடறியது.

'நீங்க நேர்ல வந்து பிக்அப் செய்வீங்கதானே'
'முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி விடுகிறேன்'.
'காட்பாடியில் என்னை ரயில் ஏத்தி விட்டு விடுங்கள்'
'சின்னக் குழந்தையா, காட்பாடி ரயில் நிலையத்துக்குப் போய் ஏறிக் கொள்ள வேண்டியதுதான்'

மாலை 6 மணிக்கு மேல் வெளியில் புறப்பட்டோம். ncbh போக வேண்டும் என்று சொல்லியிருந்தார். நானும் வீட்டுக்கு ஒரு பூட்டும், துணி காயப் போடும் கிளிப்புகளும் வாங்க வேண்டும். இந்த மாதத்துக்கான ncbh புத்தகங்களும் வாங்க வேண்டும். ஓடைப் பிள்ளையார் கோவில் நிறுத்தம் வந்து நகரப் பேருந்தில் ஏறிக் கொண்டோம். 3 ரூபாய் சீட்டு.

பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பு சிஎம்சியிலேயே இறங்கி சிஎம்சியையும் காட்டி விட்டு என்சிபிஎச்சில் விட்டு விட்டு நான் கடைத் தெருவுக்குள் போனேன். பூட்டும் கணிசமான விலைதான் 270 ரூபாய்க்கு கோயோ பூட்டு, நவ்தால் போட்டு என்றால் 400 ரூபாய்க்கு மேல் ஆகுமாம். வாங்கிக் கொண்டு கொஞ்ச தூரம் நடந்து பிளாஸ்டிக்குகள் விற்கும் கடையில் துணி கிளிப்புகள் கூடவே தேயிலை அரிப்பும் வாங்கிக் கொண்டேன்.

புத்தகக் கடைக்கு வந்தால் வெளியில் வைத்திருந்த சோவியத் புத்தகங்களை உள்ளே அடுக்கியிருந்தார்கள். காற்றும் மழையுமாக இருந்ததால் உள்ளே வைத்திருக்கிறார்களாம். வேறு எங்காவது அனுப்பி விடப் போகிறார்களோ என்று தோன்றியது. இல்லையாம். இந்த மாதம் இன்னும் சிறப்புத் தள்ளுபடியாக 50% விலை குறைத்திருக்கிறார்கள்.

நான்கைந்து புத்தகங்கள் எடுத்து பில் போட்டுக் கொண்டேன். புத்தகங்கள் வாங்கி ஒரு கட்டு கட்டி வாங்கிக் கொண்டார். காத்திருக்கும் நேரத்தில் மேய்ந்ததில் கணினிச் சொற்களுக்கான ஒரு புத்தகம் கிடைத்தது. அதையும் வாங்கிக் கொண்டேன். கீழே வந்து பேருந்துக்குக் காத்திருக்கும் போது மாலை உணவு குறித்துப் பேசினோம்.

தொலைபேசி கேட்டதில் டார்லிங் போகச் சொன்னார். சாலையைக் கடந்து எதிர்ப்புறம் ஒரு ஆட்டோவில் ஏறினோம். 20 ரூபாய்க்குக் கொண்டு விட்டார்.

கீழ்த்தளத்தில் சைவ உணவகம். மாடியில் அசைவ உணவகம். அதிலும் மொட்டை மாடி உணவகம் ஒன்று இருக்கிறது போலிருக்கிறது. அறையில் நுழைந்து பார்த்தால் ஒருவர் தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு முன்பிருந்த நாற்காலிகளில் உட்காரப் போனால் சேவையாளர் வந்து வெளியில் அனுப்பி விட்டார். கால் மணி நேரம் காத்திருந்து இடம் கிடைத்தது.

அவருக்கு கோழி 65, எனக்கு ரொட்டி, மஷ்ரூம் கறி, அவருக்கு பரோட்டா, நான் குடிக்க ஒரு பெப்சி, கடைசியில் அவர் ஒரு ஐஸ்கிரீம். முடித்து விட்டு மீண்டும் நகரப் பேருந்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

தூக்கம் மிக மோசமானதாக இருந்தது.  நான் வாசற் கதவைத் திறந்து வைத்துப் படுத்திருந்தேன். நல்ல காற்று. அதனாலோ, சாப்பிட்ட  பெப்சி அல்லது மஷ்ரூம் கறியினாலோ உடலெல்லாம் உலர்ந்து போனது. தூக்கம் சரிவரக் கிடைக்காமல் 5 மணிக்கு எழுந்திருந்தேன்.

பல் தேய்த்து, பாத்திரங்கள் கழுவி விட்டு, போட்டுக் கொண்டு போக வேண்டிய உடைகளைத் தேய்த்து வைத்தேன். அதன் பிறகு முகம் மழித்தல். குளித்துத் தயாராகும் போது 8 மணி தாண்டியிருந்தது.

ராகவேந்திரா விடுதியில் வழக்கமான காலை உணவு. சாலைக்கு வந்து பேருந்தில் புதிய பேருந்து நிலையம். கையில் குறிப்பேடு மட்டும் எடுத்துக் கொண்டிருந்தேன். பணம் கணக்கில் சேர்ந்து விட்டால் வாணியம்பாடிக்கும் போக வேண்டும். டெக்கான் குரோனிக்கிளும், ஜூனியர் விகடனும் படிப்பதற்கு.

ஜூனியர் விகடனில் மாறன் குறித்து இன்னும் விளக்கமாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். சவுக்கு விளாசியதற்கு பலன் இருக்கத்தான் செய்கிறது.

இன்னமும் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியல் இட்டார். 'இது வரை நீங்கள் கேட்டது எல்லாவற்றையும் செய்து கொடுத்திருக்கிறோம். இதற்கு மேலும் செய்வதற்கு அடுத்தக் கட்ட ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும், நியாயமாக யோசித்துப் பாருங்கள்' என்று சொன்னேன்.

அதன் பிறகு சொல்லியிருந்த மாற்றங்களை ஒவ்வொன்றாக செய்து செயல்படுத்தினேன். மதிய உணவாக தயிர் சாதமும் வாங்கி வந்தார்கள். டிரம் திட்டமிடலுக்கான அறிக்கை மாற்றங்கள், அதை பயன்படுத்துவதில் இருக்கும் சிறு வழு நீக்கி விட்டு மீண்டும் இணையத்தில் பார்த்தால் பணம் வந்திருக்கவில்லை. நேராக ஆம்பூர் பேருந்து நிலையம் வந்து வேலூர் பேருந்தில் ஏறிக் கொண்டேன். உட்கார இடமும் கிடைத்து விட்டது.

வேலூரில் இறங்கி அமிர்தம் விடுதியில் போண்டா, செட் தோசை, காஃபி சாப்பிட்டு விட்டு நகரப் பேருந்து பிடித்தேன்.  'நான் வருவதற்கு தாமதமானால், சாவியை ஜன்னலில் வைத்து விட்டுப் புறப்படுங்கள்'. 5 மணிக்கு முன்பு வந்து சேர்ந்து விட்டேன். அவரது ரயில் 6 மணிக்கு.

உட்கார்ந்து தயாரிப்புகளை முடித்து விட்டுக் கை கால் முகம் கழுவி, துணிகளை எடுத்து வைத்து, உடை மாற்றி வெளியில் வந்தேன். 9.45க்கு கோயம்பேட்டிலிருந்து பேருந்து. ஆறரைக்குள் பேருந்து ஏறி விட்டால் போய்ச் சேர்ந்து விடலாம். சரியாக 6.15க்கு வேலூர் பேருந்து நிலையத்தில் சாதாரண பேருந்தில் ஏறிக் கொண்டேன். விரைவுப் பேருந்து, ஆனால் வேகம் குறைவு, ஆனால் வேறு ஊர்களுக்குள் போகாது. 46 ரூபாய்தான் சீட்டு. 100 ரூபாய் குறைவு குளிர்சாதனப் பேருந்தை விட.

பேருந்தில் போகும் போது அருகில் உட்கார்ந்திருந்தவர் நசுக்கித் துன்புறுத்தினார். கால்களை விரித்து என் காலை அமுக்குகிறார். தோளின் முனையை என் கையில் அழுத்துகிறார். தோளை விட்டுக் கொடுத்து முன்பக்கம் சாய வேண்டும். காலைக் குறுக்கிக் கொண்டு உட்கார வேண்டும். கிட்டத்தட்ட அரை இருக்கையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

7.45 வாக்கில் அழைத்து சனிக்கிழமை கூட்டத்தைப் பற்றி நினைவூட்டினார். அழைத்தால் அவரை அடையவே முடியவில்லை. தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது, அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறது என்று மட்டுமே தகவல் வந்து கொண்டிருந்தது.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறக்கினார்கள். சாலை நிறுத்தத்தில் இறங்கியிருந்தால் வசதியாக இருந்திருக்கும். திரும்பி நடந்து வந்து சாலையைக் கடந்து சங்கீதாவில் சாப்பிடப் போனேன். இட்லி தொடர்ந்து தேங்காய் ஊத்தப்பம் என்ற புதன் கிழமை சிறப்பு உணவு, தொடர்ந்து பால். முடித்து விட்டு கீழே வந்து சாலையைக் கடக்கக் காத்திருக்கும் போது தொலைபேசி. அவர் வந்து விட்டாராம். சீட்டு வாங்கி விட்டுக் காத்திருப்பதாகச் சொன்னார்.

கேபிஎன் இருக்கும் மேடையின் கடைசியில் இந்த எம்ஜேடி பேருந்துகள் நின்றிருந்தன. நாம் போக வேண்டிய பேருந்து உள்ளே வராதாம். ஓட்டுனர் வந்து அழைத்துப் போவாராம். 10.15 வரை காத்திருந்தோம்.

இந்தப் பயணத்துக்கான செலவுகளை நாம் அறக்கட்டளையின் மீது சுமத்த வேண்டாம். அவரவர் செலவுகளை அவரவர் பார்த்துக் கொள்ளலாம் என்று என் சார்பில் 500 ரூபாய் கொடுத்து விட்டேன். 370 ரூபாய் கட்டணமாம். குடிக்கத் தண்ணீர் வாங்கிக் கொண்டோம்.

'இது போன்ற நிர்வாகச் செலவுகளை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். தானமாக வாங்கும் பணத்தை, தானம் கொடுக்க மட்டும் பயன்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவுகளை அறங்காவலர்கள் யாராவது பொறுப்பேற்றுக் கொள்ளலாம். ஒருவர் பயணத்துக்குச் செலவழிக்க முடியாமல் இருந்தால் அவரது செலவுகளை இன்னொரு அறங்காவலர் ஏற்றுக் கொள்ளலாம். நன்கொடை வாங்கும் பணம் 100% உரிய பயனாளிகளுக்குப் போய்ச் சேர வேண்டும். '

'நல்ல பணி செய்கிறோம் என்று ஒரு பெரிய நிறுனவத்தைக் கட்டி எழுப்பி ஊழியர்களுக்கு சம்பளமும் கட்டட வாடகையும் கொடுப்பதிலேயே பணம் செலவழிப்பது சரியில்லை.'

வெளியில் பேருந்து நிறுத்தியிருந்தார்கள். A1, A1 இருக்கைகள். கிட்டத்தட்ட பேருந்து நிரம்பி விட்டிருந்தது. ஏழெட்டு இருக்கைகள் காலி, அவையும் வழியில் நிரம்பி விடும். இது போக கூரையிலும் அடிப்பக்கத்திலும் நிரம்ப நிரம்ப சரக்குகள் ஏற்றியிருந்தார்கள்.

இருக்கை நன்கு சாய்க்க முடிந்தது, காலையும் நீட்டிக் கொள்ள முடிந்தது. நடந்து போகிறவர்கள் இடிப்பதில் தூக்கம் தடைப்பட்டுக் கொண்டிருந்தது. காலையில் போய்ச் சேர்ந்து விட்டால் காலைக் கடன்களை முடித்து விட்டுத் தயாராகி விடலாம்.

5 மணிக்கு விழிப்பு வந்த போது எங்கோ பேருந்து நின்று சரக்கு இறக்கிக் கொண்டிருந்தார்கள். நாகூர், நாகப்பட்டினம், அதிராம பட்டினம் என்று நின்று நின்று போனது பேருந்து. ஆள் இறங்குவதும் சாலையோரமாக எந்தப் புள்ளியிலும் கேட்டு நிறுத்திக் கொண்டார்கள்.

'அந்த மஞ்ச கலர் கட்டிடம்' என்று இடம் சொல்லி ஒருவர், 'லாரி நிற்பதற்கு அருகில்' என்று இன்னொருவர். கிட்டத்தட்ட 30 பேரும் 30 இடங்களில் இறங்கினார்கள். நாங்கள் இறங்க வேண்டிய இடம் கடைசியில் இருந்தது. அம்மா பட்டினம், கோட்டை பட்டினம், ஜெகதா பட்டினம் தாண்டி மீமிசல் வரை போகும் பேருந்து.

கோட்டை பட்டினம் போய் இறங்கும் போது 9 மணி தாண்டி விட்டிருந்தது. 11 மணி நேரப் பயணம். பல் தேய்க்கவில்லை. காலைக் கடன்கள் முடிக்கவில்லை. உடை மாற்ற வேண்டும். ஏதாவது விடுதி அறை கிடைக்குமா என்று தேடினால், இல்லை.

பள்ளியை நோக்கி நடந்தோம். குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வண்டி ஓட்டி வந்தார். பள்ளி அலுவலக அறைக்குள் போய் உட்கார்ந்தோம். ஒல்லியாக இளைஞர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரை தலைமை ஆசிரியராக நியமனம் செய்திருக்கிறாராம்.

பல் தேய்த்து முகம் கழுவி விட்டு விபரங்கள் கேட்க ஆரம்பித்தோம். காலை உணவை முடித்து விட்டு வந்து விடலாம் என்று போனோம். தலைமை ஆசிரியரிடம் காசு வாங்கி பையில் வைத்தவரிடம், 'இங்கு வரும் போது எங்களுக்கான செலவுகள் எதையும் நீங்கள் செய்யக் கூடாது என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறேன். இது போல பள்ளியின் செலவில் சாப்பிட்டுக் குடித்து அனுபவித்து விட்டு முடிவு எடுக்கிறோம் என்று இருக்கக் கூடாது' என்று சொன்னேன். அவரும் பணத்தை வெளியில் எடுக்க வில்லை.

கணபதி உணவகம். 4 கல் தோசைகள் சாப்பிட்டுக் கொண்டேன்.

பள்ளிக்கு வந்து பள்ளியின் கடந்த ஆண்டுகளின் வரவுசெலவு அறிக்கை, ஆண்டறிக்கை, பதிவுச் சான்றிதழ் போன்ற விபரங்களைக் கேட்டோம். வரவு செலவு எழுதி வைத்திருக்கிறார்கள் ஆனால், கணக்கியல் அறிக்கைகள் தயாரித்து தணிக்கை செய்து வைத்திருக்கவில்லை. ஆண்டறிக்கைகள் 2007 வரை கிடைத்தன. சம்பளப் பட்டியல் காண்பித்தார்கள். பதிவு உரிமம் 2002லிருந்து 2005 வரை அதன் பிறகு புதுப்பிப்பதற்கு பணம் கட்டிய ஆவணங்கள் இருந்த. 2005லிருந்து 2008, 2008லிருந்து 2011. அடுத்த புதுப்பிப்பு தேவைப்படுகிறது.

சராசரியாக ஒரு குழந்தைக்கு 100 ரூபாய் கட்டணம் மாதந்தோறும் வாங்குகிறார்கள். ஆசிரியர்களுக்கு சராசரியாக 1500 ரூபாய் சம்பளம். அதை 500, 500, 500 ரூபாயாகக் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளின் கட்டணமும் கறாராக வாங்கப் படுவதில்லை. நிதி நிலவரம் நெருக்கடியாகவே இருக்கிறது.

1999ம் ஆண்டில் தியாகு மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இணைந்து ஆரம்பித்த இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆரம்பித்திருக்கிறார்கள். அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தி (பாவேந்தர் கல்வி அறக்கட்டளை) அதன் பள்ளியாக பதிவு செய்திருக்கிறார்கள். இப்போது அறக்கட்டளை பெயரளவுக்குத்தான் இருக்கிறது.

தனது செலவுக்கு அவ்வப்போது பள்ளியிலிருந்து பணம் எடுப்பதாகச் சொன்னார். எடுப்பதற்கு பெரிய அளவு வருமானம் இல்லைதான். பள்ளிக்கு 2005 கும்பகோணம் தீவிபத்துக்குப் பிறகு கூரையை ஓடு வேய்ந்திருக்கிறார். குழந்தைகளை அழைத்து வருவதற்கு டாடா மேஜிக் வேன்கள் இரண்டு இருக்கின்றன. இதற்கெல்லாம் வட்டியில் கடன் வாங்குவதாகச் சொன்னார். அவரது குடும்பச் செலவுகளுக்கு பொது வழக்குகளுக்குப் போகும் போது கிடைக்கும் காசைத் தான் நம்பியிருக்கிறாராம்.

அவரது இரண்டு மகள்களும் தாய்த்தமிழ்ப் பள்ளியில்தான் படித்தார்களாம். இப்போது 5ம் வகுப்பு தாண்டி 6ம் வகுப்பு போய் விட்டார்கள். விச்சூர் என்ற ஊரில். அவர்களை பள்ளியில் சேர்க்க விச்சூர் போகும் அவசரமும் அவருக்கு இருந்தது.

ஆசிரியர்கள் வந்து அவர்களுடனும் பேசினோம். 5-6 ஆண்டுகளாக பணி புரிபவர்கள் 5 பேர் இருக்கிறார்கள். 2 ஆண்டுகள் பணி புரிபவர்கள் 3 பேர். தலைமைஆசிரியர் இப்போதுதான் சேர்ந்திருக்கிறார்.

ஒரே கூரையின் கீழ் தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகளுக்குள் நடப்பவை நிறைய கேட்டிருந்தன. பொறுமையாகக் குழந்தைகளை கையாண்டு கற்றுக் கொடுத்தார்கள். மொட்டு வகுப்பில் முதல் நாள் அழுகைக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

இடையில் கட்டிடங்கள், வகுப்புகள், குழந்தைகள், ஆசிரியர்கள் என்று புகைப்படம் எடுத்தார். 5ம் வகுப்பு 4ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினியில், கொண்டு வந்திருந்த அடர் வட்டைப் போட்டுக் காண்பித்தார். ஹம்மிங்பேர்ட் என்ற பறவையைப் பற்றிய ஆவணப் படம். ஆர்வமாகப் பார்த்தார்கள். தொடர்ந்து 2ம் 3ம் வகுப்பு மாணவர்களுக்கும் காண்பித்தார்.

அலுவலக அறையில் உட்கார்ந்து ஓய்வெடுத்தோம். நகல் எடுக்க வேண்டிய ஆவணங்களை தனியாக எடுத்து வைத்தோம். கொஞ்ச நேரம் நாற்காலியில் உட்கார்ந்தே கண்ணயர்ந்தேன். 2 மணி போல சாப்பிடக் கிளம்பினோம். பிறகு அவருடன் போய் சில பெற்றோர்களைப் பார்க்கலாம் என்று திட்டம்.

வெளியில் வரும் போது எதிரில் அவரும் வந்து விட்டார். பசி இல்லை என்றால் முதலில் பெற்றோர்களைப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று புறப்பட்டோம். போகும் வழியில் அருகிலேயே இன்னொரு மெட்ரிக் பள்ளி, ஆங்கில வழிப் பள்ளி. பெரிய கட்டிடம் நிறைய வகுப்புகள் என்று செழிப்பாக இருந்தது.

'ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு நல்ல கட்டிடம், கணினி வசதி வேண்டும். சம்பளம் சரியாக கிடைக்க வேண்டும், சம்பளம் உயர்த்த வேண்டும்' என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக இருந்தது.

பெற்றோர்கள் என்று சந்தித்தவர்கள் மிகவும் எளிய பின்னணி என்று தெரிந்தது. மீன்பிடித் தொழிலாளர்களின் குடும்பங்கள். தாய்மார்கள்தான் இருந்தார்கள். 'தாய்த்தமிழ் பள்ளி நன்றாக இருக்கிறது. மற்ற ஆங்கில வழிப்பள்ளியை விட நன்றாகத்தான் இருக்கிறது.' கட்டணம் கொடுக்க முடியாமல் அரசுப் பள்ளிக்கு அனுப்பிய ஒருவரையும் சந்தித்தோம்.

தாய்மார்கள் பாட்டிமார்கள் உற்சாகமாக நல்ல கருத்து சொன்னார்கள். 'முன்பு இருந்த ஆசிரியர்கள் போல இல்லாமல் இப்போது இருப்பவர்கள் பொறுமை யாக இல்லை. குழந்தைகளை அடித்து விடுகிறார்கள்' என்று ஒருவர் குறை சொன்னார்.

2007-08 வரை நிர்வாகம் சிறப்பாக இருந்ததாகத் தோன்றியது. அறங்காவலர் குழுவில் இரண்டு பேர் இந்தக் கட்டத்தில் பிரிந்து போயிருக்கிறார்கள். தனியாக பள்ளி ஆரம்பித்திருக்கிறார்கள். இவர் தனியாக இப்போது தூக்கிப் பிடித்திருக்கிறார்.

திரும்பி வந்து தயாராக வைத்திருந்த ஆவண நகல்களை எடுத்துக் கொண்டோம். 'எந்த வகையில் உதவி செய்ய முடியும்' என்று அவருக்கும் விளக்கினோம்.

முதல் கட்டத்தில் படப்பெட்டி, கரும்பலகைகள், மாதம் தோறும் கற்பிக்கும் கருவிகள் அனுப்புவதில் ஆரம்பிக்கலாம். இதன் மூலம் பள்ளியில் குழந்தைகளின், பெற்றோர்களின் பற்றை அதிகரித்து 150 குழந்தைகளாக இருக்கும் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்தலாம். இதன் மூலம் சம்பளக் குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் ஒரு மாதச் சம்பளத் தொகையை வைப்புத் தொகையாக வங்கிக் கணக்கில் பராமரிக்கலாம் என்றும் ஆலோசனை சொன்னோம்.

கட்டிடம் கட்ட 60-70 லட்சம் வரை செலவாகும். கணினி வசதி செய்து தரலாம். சம்பளம் உயர்த்துவதற்கு உதவி செய்யலாம். என்று பல தேவைகள் இருக்கின்றன. இதை எல்லாம் பேசி முடித்து விட்டுப் புறப்பட்டோம்.

3 மணி தாண்டியிருந்தது. சாப்பாட்டுக் கடையில் சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சொல்ல, தேநீர்க் கடையில் சுசியம், உளுந்து வடை, அப்பம் சாப்பிட்டு ராமநாதன் வாங்கிய பெப்சியில் ஒரு பகுதியையும் குடித்தேன். அறந்தாங்கி-புதுக்கோட்டை-திருச்சி போகும் பேருந்தில் ஏறி அறந்தாங்கி சீட்டு வாங்கிக் கொண்டோம். எனக்கு உடனேயே உட்கார இடம் கிடைத்து விட, நாச்சிக்கு இரண்டு மூன்று நிறுத்தங்களுக்குப் பிறகு கிடைத்தது. நாச்சியார் கோவில் என்ற ஊரில் கடந்து போனது.

இதே உடையில், நீண்ட தூர பயணம் செய்வதை விட அறந்தாங்கியில் ஒரு அறை எடுத்துக் குளித்து உடை மாற்றி விட்டு பேருந்து ஏறலாம் என்று முடிவு செய்தோம். பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் விடுதியில் கேட்டால் பணியாளர் 4 மணி நேரத் தேவைக்கு பதிவு செய்யாமலேயே 150 ரூபாய் வாங்கிக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். கழிவறை பொதுவில் இருந்த கழிவறை நன்றாக இருந்தது.

குளித்து உடை மாற்றிக் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தேன்.

7 மணிக்குப் புறப்பட்டோம். பேருந்து நிலையத்துக்கு எதிரில் கடையில் சாப்பிடப் போனோம். 2 பரோட்டா, 4 இட்லி. மிகவும் நன்றாக இருந்தது. குடிக்கத் தண்ணீரும் கொதிக்க வைத்தத் தண்ணீர் போலத் தோன்றியது. பாட்டிலில் நிரப்பக் கூச்சப்பட்டுக் கேட்கவில்லை.

புதுக்கோட்டை-திருச்சி என்று போட்ட அரசுப் பேருந்தில் ஏறினால், நடத்துனரே புதுக்கோட்டை போய் வண்டி மாறிக் கொள்ளச் சொன்னார். 'முதலில் போகும் பேருந்து கிடைக்கும் சார்'. 10 ரூபாய் சீட்டு.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சுற்றிப் பார்த்தால் நிறைய சென்னை போகும் பேருந்துகள், வேலூர் போகும் பேருந்து வரும் என்று குடிதண்ணீரும், ஆனந்த விகடனும் வாங்கிய கடையின் சொன்னார். தேடிய போது பேருந்து வந்து நின்றது. திருச்சி-விழுப்புரம்-செஞ்சி-ஆரணி-வேலூர் போவது. இந்தப் பாதை கொஞ்சம் கஷ்டமான சாலையில் போக வேண்டியிருக்கும். திருச்சி-திருக்கோவிலூர்-திருவண்ணாமலை வழியில் கொஞ்சம் வசதியாக சீக்கிரம் போய் விடலாம்.

பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.  காலையில் 5 மணிக்கு வேலூர் வந்து விடும் என்று சொல்லியிருந்தார் நடத்துனர். 5 மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விட்டது. சித்திரவதை செய்த வழித்தடமும் சாலைகளும்தான்.

வீட்டுக்கு வந்து பல் தேய்த்து காலைக் கடன்களை முடித்து விட்டுக் கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தால் வீட்டைத் தூய்மை செய்யும் அம்மா வந்தார்கள். அவர்கள் பணியை முடித்துப் போன பிறகு ராகவேந்திரா போய் காலை உணவு. அதற்கு முன்பு குடிதண்ணீர் குடங்களை கொண்டு வந்து சேர்த்தேன்.

மணி 6 ஆகி விட்டது. மின்சாரமும் வந்து விட்டது. அடுத்தடுத்த பணிகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

வியாழன், மே 26, 2011

பழகப் பழக வரும் இசை


மாலை 7.30 மணி, மே 26, 2011.

இன்று காலையிலும் மிகவும் கடினமான சோம்பல்தான். மூன்றரைக்கே விழித்து நான்கு மணி வரை கடத்தி, எழுந்து மின்விசிறியை அணைத்து விட்டுப் படுத்துக் கொசு கடித்து தூங்க விடாமல் செய்த பிறகு எழுந்து கொண்டேன். நான்கு மணிக்கு ஓரிரு நிமிடங்கள் இருந்தன. முன்னறையில் மீண்டும் படுத்துக் கொள்ளலாமா என்று கூட ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. முந்தைய நாள் டெக்கான் குரோனிக்கிளின் செய்திப் பக்கங்களைப் படித்தபடியே காலைக் கடன்களை முடித்தேன்.

பணி மேசைக்கு வரும் போது 'எதிர்ப்பக்கம் கிடந்த மேசையை சன்னல் அருகில் நகர்த்தி விட்டு கட்டிலை புத்தக அலமாரிக்குப் பக்கம் தள்ளி விடலாம்' என்று தோன்றியது. 'அதுதான் சரியான அமைப்பாக இருக்க முடியும்.'

நாற்காலிகளை நகர்த்தி விட்டு இந்தப் பக்கம் கிடந்த கட்டிலை ஓரளவுக்கு நகர்த்தி இடம் செய்து மேசையை அதிகம் சத்தம் வராமல் நகர்த்தி விட்டேன். கட்டிலை புத்தக அலமாரி பக்கமாக இழுக்கும் போது சத்தம். அவ்வளவு அமைதியான காலைப்பொழுதில் விகாரமான சத்தம், முடிந்த அளவு சமாளித்து நினைத்தபடி மறு அமைப்பு செய்து கொண்டேன்.

இந்த கணினி மேசையில் மூன்று மின் இணைப்புகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதனால் இன்னொரு மடிக்கணினியையோ, மேசைக் கணினியோ இயக்க வசதியாக இருக்கும்.

தொடர்ந்து '11 மணிக்கு முன்பு முடித்து விடுங்கள்' என்று ஆம்பூரில் கேட்டுக் கொண்ட பணியைத் தொடங்கினேன். ஏற்கனவே யோசித்து வைத்து விட்டதால் என்ன செய்ய வேண்டும் என்பதில் தாமதம் இல்லை. தேவையை வரையறுத்துக் கொண்டு, வடிவமைப்பைக் குறிப்பு எழுதி விட்டு நிரல் எழுத ஆரம்பித்தேன்.

தரவுத்தள மேசையில் ஒரு மாற்றம், அந்த புதிதாகச் சேர்க்கப்பட்ட விபரத்தை பழைய தரவுகளுக்கு சேர்த்தல், இனிமேல் வரும் தரவுகளுக்கு இந்த புதிய தகவலும் தானாக சேர்ந்து கொள்ள வைத்தல். தகவலை அறிக்கையில் சேர்த்துக் காட்டுதல் என்று நான்கு கோப்புகள்.

ஒரு மணி நேரத்தில் எழுதி விட்டேன். மூன்று முறை சோதனை, வழு நீக்கத்துக்குப் பிறகு எதிர்பார்த்தபடி வந்து விட்டது.

தொடர்ந்து டிரேட்புரோவுக்கான ஆவணங்கள் தயாரிப்பு. இது கொஞ்சம் விறுவிறுப்பில்லாத வேலை, கவனமாகப் பார்த்து அலங்கரிக்க வேண்டிய பணி. காலை நேரத்துக்கு இந்த மாதிரி வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறது. இது போன்ற பணிகளை முற்பகலில் வைத்துக் கொள்ளலாம்.

எழுந்திருந்த போதே துவைக்க வேண்டிய துணிகளை சோப்பில் ஊற வைத்து விட்டிருந்தேன். காலை உணவுக்கு உளுந்து அடைக்கும் ஊற வைத்திருந்தேன். அரிசி+உளுந்து 3:1 என்று வீதத்தில் சேர்த்து ஊற வைத்து 3 மணி நேரத்துக்குப் பிறகு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது சீரகம், மிளகு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொண்டு அரைத்த பிறகு பொடிசாக நறுக்கிய வெங்காயமும் துருவிய தேங்காயும் சேர்த்துக் கலக்கிக் கொள்ளலாம். பருப்பு அடையில், கடலைப் பருப்பால் வாயுத் தொல்லை ஏற்படுவதைத் தவிர்க்க இந்த அடை நல்ல மாற்று. உண்மையில் அதை விட இது சிறந்த உணவு, மாவுச்சத்து, புரதச் சத்து, சீரகம்+மிளகு என்று தொல்லை செய்யாத பொருட்கள். தேங்காய் விரும்பாதவரகள் அதைத் தவிர்த்து விடலாம்.

உலாவப் போய் விட்டு அப்படியே தேங்காய் வாங்கிக் கொள்ளலாம், கூடவே அரை லிட்டர் பால் வாங்க வேண்டும்.

நீண்ட தூரம் போகாமல் கோபாலபுரம் வழியே வெளியில் வந்து சுற்றி கடையில் நாளிதழ்கள் (விகடனும்) வாங்கிக் கொண்டு ஓடைப்பிள்ளையார் வழியே சுற்றி மதிநகர் சாலையில் மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கப் போனால் காலை நேரக் கூட்டம். சுறுசுறுப்பாக கடைக்காரரும், இன்னும் மூன்று பேரும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். பால் வாங்குபவர்கள், காய் வாங்குபவர்கள், பட்டியல் போட்டு பல பொருள் வாங்குபவர்கள் என்று எல்லோரையும் கவனித்து யாரும் முகம் கோணி விடாமல் கவனித்துக் கொள்ளும் லாவகம் காண அரிதாகவே கிடைப்பது.

தேங்காய், பச்சை மிளகாய், பால், மெடிமிக்ஸ் சோப்பு, பவர் டிடர்ஜென்ட் கேட்டால் இல்லை - அரசன் சோப்பு, நீலமாக டிடர்ஜென்டாக இருந்தால் போதும், அது ரின்னாக இருந்தால்தான் துணி வெளுக்கும் எல்லாம் நமது மூளையை சலவை செய்யும் விற்பனை நிலையங்களின் கற்பிப்புதான். அந்த நம்பிக்கைக்குக் கூடுதல் விலை வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் முடிந்த  வரை உள்ளூர் தயாரிப்புகளாக வாங்கிக் கொண்டால் பன்னாட்டு ஆதிக்கத்தின் தாக்கங்களையாவது குறைத்துக் கொள்ளலாம்.

வீட்டுக்கு வந்து மாவை அரைத்து வைத்து விட்டு வெங்காயம், தேங்காய் சேர்த்து கலந்து கொண்டேன். 'நாட்குறிப்பை பதிவில் போட்டு விட்டு சாப்பிடலாம்' என்று முடிவு. சாப்பிட்டு விட்டு வந்து ஆம்பூருக்கு அழைத்து 'பணி முடிந்து விட்டது' என்று தகவல் சொல்லி இணைய முகவரி எண்ணைக் கேட்டேன். 'இன்னும் சில நிமிடங்கள்தான் மின்னிணைப்பு இருக்கும்'. எண்ணை வாங்கி இயக்கி முடித்து அவருக்குத் தகவல் சொல்லவும் மின்சாரம் தடைப்படவும் சரியாக இருந்தது.

தொடர்ந்து ஆவணங்களை மாற்றுவதில் இறங்கினேன். கிட்டத்தட்ட பத்தே முக்கால் மணி வரை அதே வேலை.

பொதுவாக மனிதர்களாகிய நாம் சமூக விலங்குகள். அடுத்தவர்களைச் சார்ந்தே நமது ஒழுங்குகள் நேரத் திட்டமிடல்கள் இருக்கின்றன.
காலையில் எழுந்திருக்க,

  • 'எழுந்திருக்கா விட்டால் அம்மாவிடம் பேச்சு கிடைக்கும்'
  • 'ஒன்பது மணிக்குப் பள்ளிக்குப் போகா விட்டால் பிரச்சனை வரும்' 
  • 'அலுவலகத்துக்கு 8 மணிக்கு எல்லோரும் வருவார்கள், நாம் மட்டும் தாமதமாகப் போகக் கூடாது'
  • 'குழந்தைகள் ஏழரை மணிக்குத் தயாராகி விட வேண்டும், நாமும் எழுந்து உதவி செய்தால்தான் முடியும்' 
என்று வெளிப்புறத் தூண்டுதல்கள்தான் தூக்கம் எழுவதில் இருந்து ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒழுங்கை வரையறுத்துக் கொடுக்கின்றன.

தற்காலிகமாக, அந்த அழுத்தங்கள் இல்லாமல் போய் விட்டால் என்ன ஆகும்? ராபின்சன் குருசோ, தீவில் வாழும் போது 'சாப்பிடப் போதிய பழங்கள் கிடைக்கின்றன' என்று பசி வரும் வரை படுத்தே இருந்து எழுந்து போய் சாப்பிட்டுக் கொண்டா இருந்திருப்பார்? அது முடியாத ஒன்று மனிதர்களுக்கு. கூடிய பட்சம் நான்கைந்து நாட்கள் அப்படி இருந்து விடலாம். அதன் பிறகு (அதற்கும் கூட சமூக அழுத்தமே காரணமாக இருக்கலாம்) எழுந்து ஏதாவது சாதிக்கக் கிளம்பி விடலாம்.

சூழலில் நம்மை ஒழுங்குபடுத்த வெளிக் காரணிகள் இல்லை என்றால், நமக்கு நாமே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ந்து உருப்படியான வேலை செய்வது என்பது சாப்பிடுவது போன்ற அடிப்படைத் தேவை மனிதர்களுக்கு. அது எப்படியானாலும் நடந்துதான் தீரும்.

எனக்கு இப்படிப்பட்ட நமக்கு நாமே சூழல் வாய்த்திருப்பதால் அப்படிக் கட்டுப்பாடு விதித்துக் கொண்டு பின்பற்ற வேண்டியிருக்கிறது. அவற்றை எழுதி இணையத்தில் ஒப்புவிப்பதும் அந்தக் கட்டுப்பாட்டில் ஒரு பகுதி.

மதிய உணவு தயாரித்துக் கொண்டிருக்கும் போது நீளமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நண்பரிடம் இதைச் சொல்ல முயன்றேன். அரை மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்போம்.

'நாமெல்லாம் எவ்வளவு சின்ன வட்டத்துக்குள் உழன்று கொண்டிருக்கிறோம்' என்று பலருடன் பேசும்போதுதான் தெரிகிறது. இதைத்தான் மக்களைப் போய்ச் சந்திப்பது என்று சொல்கிறார்கள். நமது சின்ன வட்டத்தை விட்டு வெளியில் இருக்கும் மக்களின் வாழ்க்கையைத் தொட்டு விட்டு வந்தால்தான் உண்மையான புரிதல் கிடைக்கும்.

இந்த ஒழுங்குகளும், பின்பற்றல்களும் வயதாக வயதாக எளிதாகி வருகின்றன. 20 வயதில் இருந்ததை விட நிறைவாகவும், அமைதியாகவும் இருக்கிறேன். 60 வயதில் இப்போது இருப்பதை விட மன நிறைவு அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

உடம்பில் சில உபாதைகள் பல்லில் ஒன்று, வயிற்றில் ஒன்று என்று அவ்வப்போது தலை காட்டினாலும் 20 வயதிலும் அப்படி சில இருந்து கொண்டுதான் இருந்தன. அப்போது இருந்த பலவீனங்கள் இப்போதும் தொடர்ந்தாலும், சறுக்கி விழுந்தால் ஏற்படும் விரக்தியும், ஏமாற்றமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஒரு முறை தவறி விட்டால், சலிப்பும், கோபமும் மீறிட சோர்ந்து போவது போய் முந்தைய அனுபவங்களை வைத்து அவற்றையும் கொஞ்சம் நிதானமாக எதிர் கொண்டு முன் செல்ல முடிகிறது.

ஓம் சக்தி என்று பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு மாத இதழை வெளியிட்டு வந்தார். அதில் வந்த ஒரு  கதையில், தன் மனைவியைக் கொலை செய்ய வேண்டி யாராலும் கண்டுபிடிக்க முடியாத படி உயிரைப் போக்கி விடும் நச்சை விலைக்கு விற்கும் கிழவரிடம் அதை வாங்க வருகிறான் இளைஞன். கடைசியில் நச்சை அவனுக்கே கொடுத்து விட்டதாக அதிர்ச்சி கொடுத்து உயிரின் விலையை உணர்த்துகிறார். அதில் கிழவர் சொல்லும் ஒரு கருத்து, 'வயதாக வயதாக தோளில் அனுபவம் என்ற இட்சிணி உட்கார்ந்து கொண்டு எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் சீக்கிரம் ஏமாந்து விடுவது தவிர்த்துக் கொள்ள முடிகிறது'

அந்த இட்சிணி இல்லாத பதற்றம் 20களில் நிறைய இருந்தது, 40களில் வெகுவாக குறைந்திருக்கிறது.

சென்னை நண்பரின் கணினியில் இணையம் மூலம் நிரலை இழுத்துக் கொள்ளும் அமைப்பை தொலைபேசி மூலம் விளக்கி ஏற்படுத்த முயன்று நடக்கவில்லை. 12 மணிக்கு மின்சாரம் வருவதற்கு முன்பு இன்னொரு தடவை கடைக்குப் போய் முருங்கைக்காய், சின்ன வெங்காயம், தயிர் வாங்கிக் கொண்டேன்.

முருங்கைக்காய் புளிக்கறி, பச்சை பருப்பு துவரன், தாளித்த மோர் என்று மதிய சமையல். தேங்காயைத் தீர்த்து விட வேண்டிய தேவை. புளிக்கறி, துவரனில் பெரும்பகுதி தீர்ந்து விடும். சமையல் செய்து சாப்பிட ஆரம்பிக்கும் போது 2.30 மணி.

வாடிக்கையாளர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருந்தவர் தொலைபேசி வேறு நிறுவனத்துக்கு பணி மாறப் போவதாகவும், லெதர்லிங்க் தொழில்நுட்பத்தில் பணி புரிந்தது குறித்து கடிதம் வேண்டும் என்று தொலைபேசினார். திங்கள் கிழமை வாங்கிக்  கொள்கிறீர்களா என்று கேட்டால் அவரசம். இன்றே வேண்டும். வேலூர் வந்து விடுவதாகச் சொன்னார்.

அதன் பிறகு முற்பகலில் முடித்த வேலைகளை நேரக் கண்காணிக்கும் மென்பொருளில் உள்ளிட்டு விட்டு இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். வினவு தளத்தில் நன்கொடை கேட்டு வெளியிட்டிருந்த வேண்டுகோளை கேலிப் பொருளாக்கி கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் சேராமல், நமது நிலைப்பாட்டைத் தெரிவித்து விட வேண்டும் என்று தோன்றியது. 'நன்கொடை கொடுப்பதாக உத்தேசம்' என்று பஸ்சில் ஒரு பதிவு சேர்த்து விட்டேன்.

எதிரில் நான்கு வீடுகள் தள்ளி விடுமுறை பைபிள் வகுப்பு என்று ஒலிபெருக்கி வைத்து ஒரு அம்மா குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளின் இரைச்சலும் ஓங்கி ஒலித்தது.

மூன்றரை மணிக்கு அழைக்கவே கோபாலபுரம் தாண்டி ராகவேந்திரா அருகில் போய் அழைத்து வந்தேன். அவருக்கான கடிதம், அச்செடுக்க வேண்டிய இன்வாய்ஸ்கள் பென்டிரைவில் எடுத்துக் கொண்டோம். இப்படி மென்பொருளைக் குறைந்த விலைக்குக் கொடுத்து, அதையும் எந்த வித பிடியும் இல்லாமல் கொடுத்து, அதைப் பராமரிக்க ஆட்களையும் பயிற்சி அளித்துக் கொடுத்த பிறகு முரண்டி நம்மை வெளியில் நிறுத்தி விட்ட வாடிக்கையாளர்.

'ஏதாவது பிடியை நீங்க வச்சிருந்திருக்கணும் சார்' என்று இவரும் சொன்னார்.

நமது அருமை அவர்களுக்குப் புரியாதபடி வணிக நோக்கு கண்களை மறைக்கிறது. நான் அவர்களைப் போல மாறப் போவதில்லை. நமது பிடி நமது திறமையும், அறிவும்தான். அது தேவைப்பட்டால் வருவார்கள். நமது சேவை நமது கட்டணத்தைத் தரும் எல்லோருக்கும் உண்டு.

வெளியில் போய் அச்செடுத்துக் கொண்டு, ஒரு பென்டிரைவும் வாங்கினேன். 4 GB 375 ரூபாய் குட்டியாக ஒரு விரல் நீளம் கூட இல்லை. மறுபடியும் காரில் வீட்டில் கொண்டு விட்டு விட்டார். காலையில் வாங்கியிருந்த பாலில் தேநீர் போட்டு இரண்டு பேரும் குடித்தோம். தேநீர் கொஞ்சம் கசப்பாக இருந்தது. சீனி குறைவாகப் போட்டதா, தேயிலை நாளாகி விட்டதா என்று சந்தேகம். தேயிலையும் கெட்டுப் போகுமா என்ன?

அதன் பிறகும் வேலைகளில் இறங்கவில்லை. 6 மணிக்குப் பிறகு உலாவி வரக் கிளம்பினேன். அதற்கு முன்பு ஒரு பிடியளவு சோறு சாப்பிட்டுக் கொண்டேன். பாத்திரங்களைக் கழுவிப் போட்டு விட்டு மீதியிருந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டுக் கிளம்பினேன்.

கோபால புரம் வழியே போய் சில்க்மில் நோக்கி நடந்து பாதி வழியிலேயே பிஎஸ்என்எல் அலுவலகம் இருக்கும் சாலையில் திரும்பி முனையில் இருக்கும் திருமண மண்டபத்துக்கு அருகில் தெருவில் திரும்பினேன். ஏதோ கல்யாண வரவேற்பு பரபரப்பு, இரண்டு தெருக்கள் தாண்டி இன்னொரு மண்டபம், குளிரூட்டப்பட்டது என்ற பலகையுடன், அங்கும் திருமணம். இன்று ஏதோ முகூர்த்த நாள் போலிருக்கிறது.

சுற்றி வந்து ஓடைப் பிள்ளையார், சுசீ மோட்டர்ஸ், மதி நகர் சாலை வழியாக வீடு வந்து சேர்ந்தேன். துவைத்துப் போட்டிருந்த துணிகளை எடுக்க மறந்திருந்தது. நல்ல வேளை காற்றில் எதுவும் கீழே விழுந்து விட்டிருக்கவில்லை. துணிகளைக் கீழே போட்டு விட்டு கை கால் கழுவி பல் தேய்த்து விட்டு நாட்குறிப்பு.

இது முடித்து கொஞ்ச நேரம் பணி திட்டமிடலை மறு ஆய்வு செய்ய வேண்டும். நேற்று திட்டமிட்டதில் அரை மணி நேரமும் இன்று திட்டமிட்டதில் 5 மணி நேரமும் குறைவு. இதை முடித்து விட்டு 9 முதல் 10 வரை ஒரு மணி நேரம் முடித்து விடலாம். அதன் பிறகு காலையில் 2 மணிக்கு எழுந்து 2 முதல் 7 வரை பெரும்பகுதியை முடித்து விடலாம். 7 முதல் 9 வரை காலை வேலைகளை முடித்து விட்டு 9 முதல் 12 வரை டிரேட் புரோ பணப் பரிமாற்றப் பகுதிகளின் பணிகளை முடித்து விடலாம். 12 மணிக்குப் புறப்பட வேண்டும்.

துணிகளை தேய்க்கும் வேலை இருக்கலாம். அது கூடத் தேவையில்லை. தூத்து பாத்திரம் கழுவி விட்டுக் குளித்தால் போதும், சாப்பிடுவதற்கு பழையது இருக்கிறது.

நாளை மாலை 4 மணிக்கு சந்திப்புக்குப் பிறகு 5.30க்குப் புறப்பட்டு திநகருக்கு 6 மணிக்கு வந்தால் அந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம்.

திங்கள், மே 23, 2011

2 ரூபாய்


இரவு 8.54, ஞாயிற்றுக் கிழமை, மே 22, 2011.

தாமதமாகி விட்டது. இரண்டு மூன்று நாட்களாக மாலையில் பெய்த மழையைத் தொடர்ந்து இன்றும் காலையில் மேக மூட்டமாக இருந்தது. ஆனால் வெயிலின் பாய்ச்சல் காத்திருப்பது தெரிந்தது. முன் ஜன்னலில் போர்வையைக் கட்டி மூடி விட்டேன். வெளியிலிருந்து அனல் வராமல் தடுத்து விட்டால் அறைக்குள் சகிக்கும் படியாக இருக்கிறது. பகலில் கொளுத்து கொளுத்து என்று கொளுத்தியது. மாலையில் 6 மணிக்கு மேல்தான் ஓய்ந்தது.

காலையில் 2 மணிக்கு விழிப்பு வந்து விட்டது. நேற்று வாங்கி வந்திருந்த வாழைப்பழங்கள் எப்படி பழுத்த பழங்களோ. அந்த வாழைப்பழ வாசம்தான் தொண்டைக்குள் நின்று கொண்டிருந்தது. அதன் பிறகு தூங்கவும் முடியாமல் எழுந்து வேலை ஆரம்பித்தேன். ஆறரை மணி வரை நிற்காமல் சுறுசுறுப்பாக ஓடியது. திட்டமிட்டதில் பெரும்பகுதியை முடித்து விட்டேன். மென்பொருள் வேலையில் ஒரு குறிப்பிட்ட மனநிலைக்கு வந்து விட்டால் செய்யும் பணிகள் அளிக்கும் நிறைவு வேறு எதற்கும் நிகரில்லைதான்.

'உலாவப் போகலாம்' என்று பையையும் எடுத்துக் கொண்டேன். எங்கோ ஒரு கடையில் 'தோசை மாவு விற்கப்படும்' என்று பார்த்த நினைவு. சில்க்மில் நிறுத்தத்துக்கு அருகில் இருக்கும் காய்கறிக் கடை என்று பிறகுதான் நினைவு வந்தது. நடந்து அந்த திசையில்தான் போனேன். அந்தக் கடையில் தேங்காய் வாங்கிக் கொண்டு பார்த்தால் அங்குதான் அந்த பலகை, ஒரு குளிர்பதன பெட்டியும் வைத்திருந்தார்கள். அரை கிலோ ஒரு பொதி. ஒரு தேங்காயும்.

பக்கத்தில் பத்திரிகைக் கடை. டெக்கான் குரோனிக்கிள், தினமணி. டெக்கான் குரோனிக்கிள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் 2 ரூபாய். '2 ரூபாய்க்கெல்லாம் எதுவும் கெடக்கறதில்ல. டீக்கடையில கூட 5 ரூபா, 10 ரூபாதான். இந்த பஸ்சிலதான் 2 ரூபா, 3 ரூபா டிக்கட் கொடுத்துக்கிட்டிருக்கான். அதுவும் எத்தனை நாளைக்கோ' மாலையில் பேருந்தில் கடைக்குப் போகும் போது இரண்டு பேர் பேசிக் கொண்டு வந்தார்கள்.

அருகில் இருக்கும் மனிதர்களை கூர்ந்து கவனிக்கத் தூண்டுகிறது. சரியான இடத்தில் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காக உடல் உழைப்பிலிருந்து தப்பி, அறிவு வேலை செய்து கொண்டிருக்கிறோம். பிறப்பும் வாய்ப்புகளும் சாதகமாக இல்லாததால் உழைத்து உழைத்து அடிப்படைத் தேவைகளுக்கே தேய்ந்து கொண்டிருப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள். 'ஒருவர் உயர் நடுத்தர சுக வாழ்வு வாழ அதைத் தாங்கிப் பிடிப்பதாக குறைந்தது குறைந்தது 10 உழைப்பாளிகளாவது சமூகத்தில் இருக்கிறார்கள்' என்று தோன்றியது.

குளிக்கும் அறையில் பிளாஸ்டிக் மக் உடைந்து விட்டிருந்தது. ஒழுகிக் கொண்டே  பயன்படுத்திக் கொண்டிருந்தேன். நேற்று போகும் போது பிளாஸ்டிக் விற்கும் கடை எதுவும் கண்ணில் படவில்லை.

நேற்று வாங்கி வந்த ஆடைகளில் அளவு சின்னதாகக் கொடுத்து விட்டார்கள். கேட்ட அளவு போட்ட பெட்டியை எடுத்துக் கொடுத்தாலும் அதனுள் சின்ன அளவில் இருந்திருக்கின்றன. அதை மாற்றிக் கொள்ள இன்றும் போக வேண்டியதாகி விட்டது. நல்ல வேளையாக ஞாயிறு விடுமுறை விடாமல் கடை திறந்திருந்தது. கடைக்குப் போகும் வழியில் ஓரமாக பிளாஸ்டிக் பொருட்களை பரப்பி வைத்திருந்தார் ஒருவர்.

பெரிய அளவு ஆடையின் விலை சின்ன அளவை விட 7 ரூபாய் குறைவு. 14 ரூபாய் லாபம். இது பழைய விலையாம். அதற்கு ஈடு கட்ட ஒரு கைக்குட்டை வாங்கிக் கொள்ளச் சொன்னார். கைக்குட்டை பயன்படுத்துவதே இல்லை. வெளியில் போனால் சாப்பிட்டு விட்டு வாயை சட்டையின் தோள் பட்டையில் துடைத்துக் கொள்வேன். ஏதோ ஒரு கட்டத்தில் கல்லூரியில் படிக்கும் போது மட்டும் கைக்குட்டை பயன்படுத்தியதாக நினைவு. அதன் பிறகு அந்தப் பழக்கத்தை வலுக்கட்டாயமாக விட்டு விட்டேன். கூடுதலாக ஒரு துணி துவைக்கும் சிரமம் எதற்கு?

பிளாஸ்டிக் விற்பவரிடம் மக் விலை கேட்டால், 'சின்னது வேணுமா, பெருசு வேணுமா, சின்னது 12 ரூபா, பெருசு 20 ரூபா' என்றார். பெரிது வாங்கினால் அதிக தண்ணீர் கோரி ஊற்றுவோம். சின்னதாகவே இருக்கட்டும் என்று எடுத்துக் கொண்டேன்.

வேறு ஏதோ வாங்கிக் கொண்டிருந்த இன்னொருவர் இரு சக்கர வண்டியிலிருந்தே, 'பார்த்துப் போட்டுக் கொடு' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

'எங்களுக்கே ஒரு ரூபாதான் கிடைக்கும் சார். என் இடத்தில நீங்க இருந்தா இதுக்குப் போய் வியாபாரம் பண்ணணுமா என்று திட்டுவீங்க' என்று கடைக்காரர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

சின்ன மக்கை எடுத்து 10 ரூபாய் தாள் ஒன்று 2 ரூபாய் நாணயம் ஒன்று கொடுத்தேன். தாளை மட்டும் எடுத்துக் கொண்டு நாணயத்தை கையில் திருப்பிக் கொடுத்து விட்டார். பேரம் பேசுவதை எதிர்பார்த்து 2 ரூபாய் ஏற்றிச் சொல்கிறார். அவருக்குள்ள நியாயம், பேரம் பேசாவிட்டாலும் அதைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இரண்டு பேருக்கும் சில மூச்சுகள் மிச்சம்.

கோட்டை மைதானத்தில் பொருட்காட்சி, தாஜ்மகால் என்று வெளிச்சத்தில் மின்னியது. பெரிய கூட்டமும். நண்பர் தொலைபேசியில் அழைக்க பேசியபடியே தாண்டிப் போய் விட்டாலும். சில அடிகள் திரும்பி வந்து  பொருட்காட்சி எதிரிலேயே சாலையைக் கடந்தேன். சீட்டு வாங்கிக் கொண்டு மக்கள் திரளில் கலந்து கொள்ளலாம்.

அலங்கரித்துக் கொண்டு முகத்தில் பரவசத்துடன் குழந்தைகளும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவு செய்து கொள்ளும் பொருளாதார வசதி வந்து விட்ட பிறகு இது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்கள் இல்லாமலேயே போய் விடுகின்றன.

நடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். தனியார் பேருந்தில் அடைத்து ஏற்றிக் கொண்டு போனார்கள். பின்னால் வந்த சிரீபுரம் பேருந்தில் ஏறினேன். புதிய பேருந்து நிலையம் வரை 4 ரூபாய் சீட்டு. அதைச் சொல்லி ஏற்றிக் கொண்டார். வழியில் சிஎம்சி தாண்டி ஏறிய ஒருவர் 4 ரூபாய் சீட்டு என்று சொன்னதும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். 'இவ்வளவு தூரத்துக்கு எதுக்கு 4 ரூபா, 2 ரூபாதான் இருக்க வேண்டும்' 'இந்த பஸ்சில இப்படித்தான், உன்னை யார் ஏறச் சொன்னார்கள்' என்று நடத்துனர்.

புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கினால் அதே தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தது. அடுத்த பேருந்து வருவது தெரிந்த பிறகுதான் நகர்வார்கள். அதில் ஏறாமல் காத்திருந்தேன். அரசுப் பேருந்து வருவது தெரிந்ததும் நகர்ந்து போனார்கள். அரசுப் பேருந்தில் ஏறிக் கொண்டேன். ஓடைப் பிள்ளையார் கோவில் வரை 2 ரூபாய் சீட்டு.

பாலம் கடக்கும் போது பின்பக்கம் பெரிய வாக்குவாதம். மூட்டை ஒன்று ஏற்றிய பெண்ணிடம் சுமைக் கட்டணம் வாங்கச் சொல்லியிருக்கிறார். அவர் மறுத்து திட்ட, இவர் திரும்பித் திட்ட, ஒரே சத்தம். விருதம்பட்டு நிறுத்தத்தில் அவர் இறங்கிய பிறகும் நிறுத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

2 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்க தொகையாகவே இருக்கிறது. பேருந்தில் ஓடைப் பிள்ளையாரில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை போகலாம், டெக்கான் குரோனிக்கிள் வாங்கலாம், 4 எக்ளேர்ஸ் சாக்லேட் வாங்கலாம், தண்ணீர் பாக்கெட் வாங்கலாம், தினகரன் நாளிதழும் 2 ரூபாய்தான் என்று நினைக்கிறேன். டீக்கடையில் பன் 1 ரூபாய்தான், வடை 2 ரூபாய்க்கு சில இடங்களில்.

காலையில் திரும்பி வந்த பிறகு பாத்திரங்களைக் கழுவி விட்டு குளித்தேன். தோசை, தேங்காய் துவையல், 9.30 வெற்றிவேல் அறக்கட்டளை தொலைபேசி உரையாடல். போன வாரம் பதிவு அலுவலகத்தில் பதிவு முடித்து விட்டிருந்தார்கள். இனிமேல் பணிகளை ஆரம்பித்து விடலாம். வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே 'இது போன்ற நிர்வாக வேலைகளில் என்னை சேர்க்காதீர்கள்' என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

அறக்கட்டளையின் இணைய தளம் உருவாக்குவது குறித்து பேசினோம். துருபாலில் வசதியாக செய்து கொள்ளலாம் என்று முடிவு. உதவி பெறும் பள்ளிகளில் முதலில் கோட்டைப் பட்டினத்தின் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு உதவி செய்யலாம் என்று பேசினோம். ஜூன் 3வது வாரம் அங்கு போய் அவர்களை படிவம் நிரப்பித் தரச் சொல்லி, மாணவர்கள்/ஆசிரியர்களிடமும் பேசி தகவல் சேகரிக்க வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ற உதவி செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் வசதியாக இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட், அமெரிக்க பிள்ளையார் கோயில் பணி, வீணை வகுப்புகள் என்று நின்று விடாமல் இப்படி முன்முயற்சி எடுத்தது பாராட்டுதற்குரியது. கோட்டைப் பட்டிணம் ராமநாதனிடமும் உடனேயே பேசி விட்டேன். தொடர்ந்து பேசி வேலூர் அல்லது திருவண்ணாமலை மாவட்டத்தில் தெரிந்த பள்ளிகளையும் விசாரிக்கக் கேட்டுக் கொண்டேன்.

இன்றும் 9 மணிக்கு மின்சாரம் தடைப்படவில்லை. அதனால் முடித்த வேலைகளை இயக்கி சரி பார்த்தல், அறிக்கை கட்டமைப்பை ஒன்று சேர்த்தல் என்று எல்லா பணிகளையும் ஒவ்வொன்றாக முடித்து விட்டேன்.

மதிய உணவுக்கு சோறு, உருளைக்கிழங்கு மசால் கறி, புளிக்குழம்பு தக்காளியுடன். அப்படி ஒரு சாப்பாடு சாப்பிடுவதும் நிறைவாகத்தான் இருக்கிறது. சமைக்கும் போது தொலைபேசி அழைப்பு, 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு கொண்டு பேசியது. என்னுடைய நாட்குறிப்பு பதிவுகளைப் படித்து விட்டு தொடர்பு கொண்டதாகச் சொன்னார்.

'உன்னை எனக்குத் தெரிந்திருக்கவே இல்லை. நீ எழுதிய கடிதங்களிலிருந்து ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தேன். உண்மையில் நீ அப்படி இல்லை. நான் ஏமாந்து விட்டேன்' இப்படித்தான் என்னைக் குற்றம் சாட்டுவாள். டாடாவில் வேலை செய்யும் போதும், 'அவன் எழுதுவது ஒரு மாதிரி இருக்கிறது, பேச்சில் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது' என்று ஒரு பெரிய சிக்கலின் போது சொன்னார்கள்.

'என்னுடைய எழுத்தில் நான் வெளிப்படுத்தும் பிம்பம் என்னுடைய உண்மையான பிம்பம் இல்லை' என்பது கடந்த காலத்தில் நெருங்கிப் பழகியவர்களின் அனுபவம். இது எல்லாம் வலைப்பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பு 1990களில் நடந்தவை. 2006லிருந்து நாட்குறிப்பு எழுதி பகிர்ந்து கொண்ட பிறகு என்ன மாறியிருக்கிறது என்று தெரியவில்லை.

சாப்பிட்ட பிறகு பெரிதாக வேலை ஓடவில்லை. படித்தல் தூக்கம் இணைய மேய்ச்சல் என்று நேரம் போனது. மாலை எழுந்து மேலே சொன்னது போல வெளியில் புறப்பட்டேன். உடை வாங்கியிருந்த கடையில் கொடுத்த விற்பனை ஆவணத்தில் விற்ற பொருளை திரும்பி வாங்க மாட்டோம் என்று கூட எழுதியிருந்தார்கள். சந்தேகத்தோடுதான் போனேன். ஆனால் உடனேயே மாற்றிக் கொடுத்து விட்டார்கள்.

மார்க்சிய-லெனினியம் என்றால் என்ன? என்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். இது போன்ற மொழிபெயர்ப்பு புத்தகங்கள் லாட்டரி சீட்டு வாங்குவது போலத்தான். சில மொழிபெயர்ப்புகள் மிகவும் சிறப்பாக படிக்க எளிதாக இருக்கும். சில மொழிபெயர்ப்பில் கரடுமுரடாகப் போய் விட்டிருக்கும். இந்த புத்தகம் முதல் வகை. படிப்பதற்கு எளிதான நடை. முதல் அத்தியாயத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு. இரண்டாவது அத்தியாயத்தில் அடிப்படைக் கோட்பாடுகள்.

பொருள் முதல்வாதம், கருத்து முதல்வாதம் முரண்பாடுகள் இப்போதுதான் பிடிபட ஆரம்பித்திருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அறிவியல் ரீதியாக அனைத்தும் பொருள் சார்ந்தே இருக்கிறது என்று தோன்றினாலும் மறு பக்கத்திலும் வலுவான வாதங்கள் இருக்கின்றன. இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பிரிவு இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

அழகிய பெரியவன் கதைகள் என்ற நூலையும் ஆரம்பித்துக் கொண்டேன். மதியம் வைத்த மசால் கறியைத் தீர்க்க சப்பாத்தி போட்டுக் கொண்டேன். சப்பாத்தி சுடும் போது அந்த புத்தகம், கண்கொத்தி இரவு என்று தெலுங்குப் பெண் தாழ்த்தப்பட்ட இளைஞனை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும் கதை. சொற்களின் சேர்க்கை மிகவும் வலுவாகத் தாக்குகின்றன. எளிதாகப் படித்துக் கொண்டே போய் கதை முடியும் போது மனம் அதிர்ந்து போய் நிற்கிறது.

அடுத்த கதையில் ஆயா வீட்டுக்கு அனுப்பப்பட்ட பையன். 'இந்தக் குப்பைக் காட்டில் இருந்தா நீயும் பீடி சுத்தத்தான் போயிடுவ' என்று தன் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்ட அம்மா மீது பையனுக்கு கோபம். பீக்காட்டின் மத்தியில் தரும நிலத்தில் ஒரு இடம் பிடித்து கீரை வளர்க்கிறார் ஆயா. மாலையில் போய் கீரை பறித்து வர வேண்டும். காலையில் போய் விற்று வர வேண்டும் என்று இடை விடாத உழைப்புதான் அந்த வயதான ஆயாவின் வாழ்க்கை

சனி, மே 21, 2011

நம்மைச் சுற்றிய உலகம்


நேரம் மாலை 7.30, மே 21, 2011.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு திட்டமிட்ட ஒழுங்குக்குத் திரும்பியிருக்கிறோமா?!

காலையில் 4 மணிக்கு முன்பே எழுந்து கொண்டேன். நேற்று இரவிலும் 11 மணிக்குப் பிறகுதான் தூங்கப் போனேன். காலையில் 9 மணி முதல் 12 மணி வரை மின்சாரம் தடைப்பட்டு விடுவதால், பின்னிரவிலும் அதிகாலையிலும் மென்பொருள் பணிகளை பார்க்கலாம் என்று தாமதமாகத் தூங்கப் போனேன். நாட்குறிப்பும் எழுதவில்லை. காலையில் 4 மணிக்கு எழுந்து 9 மணி வரை 5 மணி நேரம் முழுதாகக் கிடைக்கும்.

ஏழரை மணி வரை தடைபடாமல் ஓடியது. பெரிய பெரிய பணிகள் தொடங்கி ஒரு வடிவத்தைப் பெற்றன. ஏழரை மணிக்குப் பசிப்பது போலத் தோன்றியது. நேற்று இரவு சாப்பிடவில்லை, மாலை 4 மணி போல சாப்பிட்டதுதான்.

இத்தோடு நிறுத்தி விட்டு வெளியில் ஒரு சின்ன உலாவல் நாளிதழ்களை வாங்கிக் கொண்டு வரலாம் என்று புறப்பட்டேன். வெயில் ஆரம்பித்திருக்கவில்லை. நேற்று வந்த மழையில் மேக மிச்சங்கள் இருந்தன. ஆனாலும் பின்னணியில் வெயிலின் உக்கிரம் ஒளிந்து தெரிந்து கொண்டே இருந்தது.

வழக்கமாக நாளிதழ் வாங்கும் கடைக்காரர் வந்து விட்டிருந்தார். ஊருக்கு எங்காவது போயிருப்பார். டெக்கான் குரோனிக்கிள், ஜூனியர் விகடன், தினமணி. இரண்டு நாளிதழ்களிலும் கனிமொழி திகாருக்கு அனுப்பப்பட்டது முதல் பக்க எட்டு கால செய்தி. நேற்று இரவு ஆரம்பித்து இது குறித்த ஒரு விவாதம். நிறைய பேருக்குப் பிடிக்காமல் போன விவாதம். நிறைய பேர் ஒத்துக் கொள்ளவும் செய்யக் கூடிய ஒரு கருத்து.

'ஜூனியர் விகடனில் 3 நாட்கள் தொடர்ந்து நடந்த தமிழ்நாட்டு அமைச்சரவைக் கூட்டம், அதில் ஜெயலலிதா அமைச்சர்களுக்கு அளித்த பயிற்சி' என்று பாராட்டும் தகவல் கட்டுரை ஒன்று. 20 ஆண்டுகளுக்கு முன்பு 1991லும் இதே போல நடந்திருப்பது அந்த நேரத்தில் வெளியான கட்டுரையின் மறு பதிப்பில் தெரிந்தது. அந்த ஆட்சியில் நிர்வாகமும், மக்கள் ஆதரவும் சீர்குலைந்தது இப்படி ஒரு நல்ல ஆரம்பத்துக்குப் பிறகுதான் என்று நினைவூட்டல். அப்துல் கலாமின் ஆலோசகர்தான் பாடம் நடத்தினாராம். 3 மாதங்களுக்குள் மின் வெட்டை கட்டுக்குள் கொண்டு வருவதாக நத்தம் விசுவநாதன் மின்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்தாராம். மின் வழங்கல் நிலவரம் பற்றிய புள்ளிவிபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தாராம்.

கழுகார் மதுரையை மீட்கும் நடவடிக்கைகளைப் பேசியிருந்தார். என்கவுண்டர், அப்ரூவர், வழக்கு, சிறை என்று ஏதோ நான்கு வழிமுறைகளைக் கையாளப் போகிறார்களாம். உமாசங்கர் கர்த்தரின் மீது பாரத்தைப் போட்டு கருத்து சொல்லியிருந்தார். குறைந்த பட்சம் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

பழையதுடன் ரசம் சேர்த்து சாப்பிட்டேன். நாளிதழ் வாங்கி வரும் போது பக்கத்தில் இருந்த நொறுக்குத் தீனி கடையில் காரச்சேவு வாங்கி வந்திருந்தேன். அதையும், நேற்றைய உருளைக்கிழங்கு மீதியையும் சேர்த்து எப்போதும் போல பழையதுக்கான அருமையுடன் சாப்பிட்டு முடித்தேன். மின்சாரம் தடைப்படுவதை எதிர்பார்த்து சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு 9.15க்கு விழித்துப் பார்த்தால் மின்சாரம் தடைபட்டிருக்கவில்லை.

'பராமரிப்பு பணிகளுக்காக வேலூர், சத்துவாச்சாரி பகுதியில் இன்று மின் வெட்டு' என்று தினமணியில் போட்டிருந்தார்கள். 'அங்கு நாள் முழுவதும் வெட்டுவதால் மற்ற பகுதிகளுக்கு தொடர்ந்து வழங்க முடிகிறது போலிருக்கிறது' என்று வேலைக்குள் மீண்டும் இறங்கினேன்.

காலையில் செய்த பணிகளை சரிபார்க்குமாறு அனுப்பியிருந்த மின்னஞ்சலைப் பற்றி தொலைபேசி விசாரித்து விபரம் தெரிந்து கொண்டார். தொடர்ந்து அடுத்த அறிக்கைகளுக்கான மாற்றங்களைச் செய்து கொண்டு போனேன். செய்வது மிகவும் கடினமானது என்ற அறிக்கையையும் இறங்கி உருவாக்கி விட்டேன்.

ஒரே கோப்பில் எழுதி வைத்திருந்த நிரலை தனித்தனி கோப்புகளாக பிரித்துக் கொண்டேன். இரண்டு தேவைகளுக்கான பணிகள். இதற்கிடையில் காலையில் சேர்த்த மாற்றங்கள் சரியாக இருக்கின்றன என்று ஒப்புதல் வர அதை பயன்பாட்டுப் பதிப்பில் சேர்த்தேன்.

மதிய உணவுக்கு இன்னும் இருந்த பழையது, பெரும்பகுதி தண்ணீர்தான். வெயில் அடிக்கா விட்டாலும், வெப்பம் ஏறியிருந்த சூழலில் சிறப்பான ஆகாரம். கோதுமை ரவையுடன் சிறுபருப்பைச் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் நன்றாக இருக்கும் என்று  சொல்லியிருந்ததை முயற்சிக்கலாம் என்று செய்ததில் கோதுமை ரவை அதிகமாகி கெட்டியாக உப்புமா போல ஆகி விட்டது. அடுத்த முறை கொஞ்சம் குறைவாக போட்டு பார்க்க வேண்டும்.

இடையிடையே இணையத்தில் செய்திகள் விவாதங்கள், கட்டுரைகள் என்று படித்துக் கொண்டு வந்தேன். நடுவில் கொஞ்ச நேரம் தூங்கி இரவு தூக்கக் குறைபாட்டை நிறைத்துக் கொண்டேன்.

மதியத்துக்கு மேல் மூன்று அறிக்கைகள், அவற்றுக்கான தரவுகள் கணக்கிடுதல், அவற்றுக்கான செயலிகள் தயாராகி சரிபார்க்கப்பட்டு விட்டன. அது பற்றிய மின்னஞ்சலையும் அனுப்பி விட்டேன்.

சவுக்குத் தளத்தில் கருணாநிதி குடும்பத்தின் சொத்துக்கள் பட்டியல் வெளியிட்டிருந்தார். படித்தால் பட்டியல் நீண்டு கொண்டே போனது. உறுதி செய்யப்பட்ட பட்டியலில் குறிப்பிட்ட மதிப்பு மட்டுமே 100 கோடிக்கு மேல் போனது. அந்த பட்டியலிலேயே மதிப்பு குறிப்படப்படாதவை, உறுதி செய்யப்படாத பட்டியல் என்று சில பத்தாயிரம் கோடி மதிப்பு சொத்துக்களுக்கு அதிபதிகளாக இருப்பார்கள் அந்தக் குடும்பம் என்று தோன்றுகிறது.

1991-96 ஆட்சியின் போது ஜெயலலிதா ஆட்சிப் பணிகளில் சம்பாதித்த கமிஷன்களில் தன்னையும் அலங்கரித்துக் கொண்டதை தோலுரித்துக் காட்டிய அடுத்த ஆட்சியை போல இப்போது நடக்க வேண்டும். இவ்வளவா சம்பாதித்தார்கள், இவ்வளவா குவித்தார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும்.

ஆட்சி நடத்தும் போது பணிகளுக்கு கமிஷன் வாங்குவது எல்லோரும் செய்வதுதான் என்று நினைக்கும் திமுகவினர், ஜெயலலிதா மீது அவ்வளவு காட்டமும் காழ்ப்பும் காட்டியது ஏன் என்று தெரியவில்லை? அடித்த பணத்தை சொந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தியதுதான் காரணம். அதே தவறை இப்போது கருணாநிதி குடும்பம் செய்து மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது.

5 மணிக்கு வெளியில் புறப்பட்டேன். 10 மணி நேரத்துக்கு மேல் இன்று வேலை நடந்திருக்கிறது. பேருந்து நிறுத்தத்துக்கு வந்து பேருந்தில் ஏறிக் கொண்டேன். ஊரிலிருந்து வரும் பேருந்து ஆதலால் காந்தி நகருக்குள் போகாமல் நேராக சென்றது. பழைய பேருந்து நிலையத்துக்குள் இறங்கி மண்டித் தெரு பக்கம் இருக்கும் நுழைவாயிலில் வெளியில் வரும் போது ஒரு பத்திரிகைக்கடை. நிறைய ஆங்கிலத் தமிழ் வார/மாதப் பத்திரிகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. மே மாத உயிர்மை இதழ் வாங்கிக் கொண்டேன்.

சாரு நிவேதிதா, ஷாஜி, ராமகிருஷ்ணன் இவர்களின் கட்டுரை எல்லா இதழிலும் வருகிறது, மனுஷ்ய புத்திரனின் தலையங்கம். போன தடவை ஒரு முறை வாங்கிய போது ஒருவர் மனுஷ்யபுத்திரனின் கவிதைக்கு பொருள் சொல்லி 4 பக்கங்களுக்கு மேல் ஆராய்ச்சி எழுதியிருந்தார். மனுஷ்ய புத்திரனே அதை எல்லாம் யோசித்திருப்பாரோ தெரியவில்லை. தன்னுடைய இதழிலேயே அப்படி வெளியிட்டுக் கொண்டது கொஞ்சம் ரசக் குறைவாகப்பட்டது.

அவரது தலையங்கமும், சாரு நிவேதிதாவின் கட்டுரையும் அவர்களது பதிவுகளில் சில நாட்களுக்குப் பிறகு வெளி வருகின்றன. சாரு நிவேதிதாவின் செலின் என்ற திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையை காலையில்தான் இணையத்தில் படித்திருந்தேன். மனுஷ்யபுத்திரனின் தலையங்கமும் முன்பே படித்ததுதான். அச்சில் படிப்பது நன்றாகத்தான் இருந்தது.

ஷாஜி தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் பற்றி எழுதியிருந்தார். நுணுக்கமாக பார்த்து இதனால் இந்தத் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லத் தெரியாவிட்டாலும், ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று எனக்கும் தெரிகிறது. அந்தத் திரைப்படத்தை பார்த்த போது நிறைவான ஒரு உணர்வு இருந்தது. அதை ஷாஜி பிரித்து மேய்ந்திருந்தார். ஒவ்வொரு பாட்டும் ஏன் எப்படி நன்றாக இருந்தது, பாத்திரங்கள் எப்படி சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன, காட்சி அமைப்புகளின் சிறப்பு என்று சொல்லும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

பொதுவாக ஒரு திரைப்படத்துக்கு விருது கிடைத்த பிறகு அதைப் பார்த்து விட வேண்டும் என்று சில படங்களைப் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது சத்யம் திரையரங்கில் அப்படி சில திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு விருது பெற்ற படங்களை அங்கு திரையிடுவார்கள். சைலன்ஸ் ஆஃப் த லேம்ப் அப்படி பார்த்த படம்.

அப்படியே கடைவீதிக்குள் சுற்றி வந்தேன். நகைக்கடைகளுக்கான தெருவில் நுழைந்து விட்டேன். வரிசையாக நகைக்கடைகள், சில அடகுக் கடைகள். அங்கிருந்து திரும்பி மின்சாதனங்கள் கடைகளுக்கான தெரு, சின்ன சந்துகளுக்குள் நுழைந்து மீண்டும் பிரதான வீதிக்கு வந்தேன். எல்லா பொருட்களும் ஓரிரு கிலோமீட்டர் தூரத்துக்குள் கிடைக்கின்றன.

கோட்டை நோக்கி வரும் தெருவில் நுழைந்தால் பழக்கடைகள். ஒரு தள்ளு வண்டியில் வாழைப்பழங்கள் டசன் 40 ரூபாய் என்றவரிடம் 9 வாங்கிக் கொண்டேன்.

அதே தெருவின் முனையில் ncbh. மார்க்சிய - லெனினிசம் என்றால் என்ன? - வி காரட்நோவ், வி புசுயோவ், இந்திய பொருளாதாரம் என்று இரண்டு பழைய ரஷ்ய நூல்களும், அழகிய பெரியவன் கதைகள் என்ற புத்தகமும் மொத்தமே 68 ரூபாய்தான் வாங்கினார்கள். ரஷ்ய புத்தகங்களுக்கு 10 ரூபாய் ஒன்று 5 ரூபாய் ஒன்று. சிறுகதைப் புத்தகம் 65 ரூபாய் என்று போட்டிருந்தது 48 ரூபாய்க்கு. எப்படித்தான் கட்டுப்படி ஆகிறதோ. மறுபக்கம் நாவல், நீல பத்மநாபனின் புத்தகம் ஒன்று தெரிந்தன. இப்படி மேய்ந்து உடனேயே வாங்க வேண்டாம், ஒரு முறை பார்த்து வைத்து விட்டு அடுத்த முறை வாங்கிக் கொள்ளலாம். போன மாதம் வாங்கிய தோல் புத்தகமே இன்னும் படித்து முடிக்கவில்லை. அதையும் ஒரு ஒழுங்காக செய்தால்தான் சாத்தியமாகும்.

சாலையைக் கடக்க சிறிது தூரத்தில் ஒரு நடை பாலம் அமைத்திருக்கிறார்கள். ஆனாலும் பேருந்து நிலையத்துக்கு முன்பு போட்டுள்ள சாலைக் கோடுகளில் எப்போதும் கூட்டம்தான். ஏறி இறங்க வேண்டாமே! கோட்டுப் பகுதியில் கடந்து சென்று பேருந்து நிறுத்தத்துக்கு வந்தால் அருகில் இருக்கும் உயர்நிலை நடைபாதையிலும் நிறைய பேர் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கம் இருக்கும் கடைகளுக்குப் போக வசதியாக இருக்குமாயிருக்கும். ஒரு நாள் நாமும் போய்ப் பார்க்க வேண்டும்.

சிறீபுரத்திலிருந்து வந்த பேருந்தில் ஏறிக் கொண்டேன். புது பேருந்து நிலையத்துக்கு 4 ரூபாய் சீட்டாம். பகிர்வூர்தியை விட குறைவுதான், நகரப் பேருந்தை விட இரண்டு மடங்கு.

நம்மை மாதிரி கணினியில் சல்லியடித்து வெயில் அடித்தால் மட்டும் வியர்த்து, காலையில் உலாவப் போவதே உடல் பயிற்சியாக வாழ்பவர்கள் மிகச் சிறிய சதவீதமே இருப்பார்கள் என்று  தெரிகிறது. வேலூர் மண்டித் தெருவிலும் பேருந்துகளிலும், உணவு விடுதிகளிலும் பார்க்கும் பெரும்பான்மை மக்கள் உடலுழைப்பையும், விளிம்பு நிலை வருவாயையும் நம்பியே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை வைத்து நம்மைச் சுற்றி இருப்பவர்களை வைத்து உலகை அளவிடாமல் உழைத்து வாழும் மக்களிடமும் நெருங்கிப் பழகி அவர்களது நிலைமையைப் புரிந்து கொண்டால்தான் நேர்மையாக வாழ முடியும். அதற்கான எண்ணத்தையாவது கொண்டிருப்பது நல்ல விஷயம்.

மாலை உணவை வெளியில் சாப்பிட்டு விடலாம். ஆர்யாவில் ரவா இட்லி, தோசை, காஃபி. வெளியில் வந்தால் ஒரு நகரப் பேருந்து அதைத் தொடர்ந்து அடுத்த பேருந்து. ஓடிப் போய் அடுத்த பேருந்தில் ஏறினால் உட்கார இடம் கிடைத்தது. உயிர்மையைப் படித்துக் கொண்டே வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்து பொருட்களை அதனதன் இடத்தில் வைத்து விட்டு எழுத்து. கணினியில் இன்னமும் பணிகள் தரவு உள்ளிடுதல் நடந்து கொண்டிருந்தது. அதனால் மாற்றங்களை இப்போது இயக்க முடியாது. எழுதி முடித்து விட்டு பல் துலக்கி விட்டு 9 மணி முதல் 11 மணி வரை வேலை செய்து கொள்ளலாம். காலையிலும் 4 மணி முதல் 8 மணி வரை வேலை செய்தால் எல்லா பணிகளையும் முடித்து விடலாம்.

வியாழன், மே 19, 2011

சமூக அடிமை நிலைகள்


மே 17, 2011 - இரவு நேரம் 7.35.

காலையில் 5 மணிக்குத்தான் எழுந்திருந்தேன். 12 மணிக்குத் தூங்கியது, பகலில் செய்த பயணக் களைப்பு எழுந்திருக்க ஒட்டாமல் அடித்திருந்தது. இணையத்தில் செய்திகளைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்கள் செய்த வேலைகளின் விபரங்களை மேலாண்மை பயன்பாட்டில் உள்ளிட்டேன். இதற்கே 1 மணி நேரம் பிடித்தது.

வெளியில் நடந்து திரும்பும் போது கடையில் டெக்கான் குரோனிக்கிளும், தினத்தந்தியும் நாளிதழ்கள் வாங்கிக் கொண்டேன். காலை உணவுக்கு ஏதாவது செய்யலாம் என்று மனதுக்குள் விவாதித்து, 9 மணிக்கு மின்சாரத் தடை என்ற தலைக்கு மேல் தொங்கும் கத்தியின் கீழ் எதையும் திட்டமிட முடியாது. பேசாமல் குளித்துத் தயாரானதும் ராகவேந்திரா மெஸ்சில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு. பொங்கல் செய்யலாம் என்றுதான் திட்டமும் தோன்றியது.

வீட்டைத் தூத்து, துவைக்க வேண்டிய துணிகளை அதற்கான வட்டிலில் போட்டு குளித்து தியானம். தண்ணீர் தீர்ந்து விடும் நிலையில் இருந்தது. குடிக்கும் தண்ணீர். குடத்தில் இருந்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து விட்டுக் குடங்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். பக்கவாட்டுக் குழாயில் குடங்களைக் கழுவப் போகும் போது அருகில் டப்பாக்களில் வைத்திருந்த செடிகள் வாடிப் போய் தண்ணீர் இல்லாமல் தெரிந்தன. எல்லாவற்றுக்கும் குடத்தில் தண்ணீர் பிடித்து ஊற்றினேன். இப்போதும் போய்ப் பார்க்க வேண்டும். தினமும் காலையில் தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். முடிந்தால் இன்னும் பல தொட்டிகளை வாங்கி வைக்கலாம்.

நிறுவனப் பணிச் சுமை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. அவற்றைச் செய்வதற்கு எனது மற்ற வேலைகளைக் குறைக்க முயற்சிக்கலாம். வீட்டைத் தூத்து, துடைப்பதற்கு யாராவது ஒருவரை அமர்த்திக் கொள்ளலாம். அதில் மிச்சமாகும் நேரத்தை பொருட்களை ஒழுங்கு படுத்த பயன்படுத்தலாம். இன்னும் நேரம் தேவைப்பட்டால் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு சமைப்பதற்கும் பாத்திரம் கழுவுவதற்கும் உதவி அமர்த்திக் கொள்ளலாம். துணி துவைப்பதை நாமே செய்து கொள்ள வேண்டும்.

தண்ணீர் வேகமாகவே வந்து கொண்டிருந்தது. ஓரிரு நிமிடங்களுக்குள் இரண்டு குடங்களும் நிறைந்து விட்டன. எடுத்து விட்டு வெளியில் வரும் போது மாடி வீட்டிலிருந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ போகும் ஒரு பெண் இறங்கி வந்தாள். நான் திறந்த வெளிக்கதவை வழிவிட்டு ஒதுங்கி நின்றேன். குடங்களை எடுத்து வெளியில் வைத்து விட்டு கதவை மூடினேன். நான் இந்தப் பக்கம் வந்து சேரும் வரை அவளது அம்மா மாடிப்படி மேலிருந்து நடந்து போகும் மகளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

ராகவேந்திரா மெஸ்சில் வழக்கமான காலை உணவு. கொஞ்சம் தாமதம் ஆகி விட்டதால் பூரி செய்வதற்கு நிறைய நேரம் பிடித்தது. டெக்கான் குரோனிக்கிளின் நடுப்பக்க ஆசிரியர் கட்டுரைகள், பத்திக் கட்டுரைகளைப் படிக்க எடுத்துப் போயிருந்தேன். அசோக் மாலிக், க்ரூக் மேன், ஒரு முன்னாள் படைத் தளபதி எழுதிய கட்டுரைகள்.

சாப்பிட்டு விட்டு வந்து இணையத்தில் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை எடுத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தடைப்பட்டது. இதுதான் நல்ல வாய்ப்பு என்று களத்தில் இறங்கினேன்.  செய்ய வேண்டிய இரண்டு பணிகளையும் ஆரம்பித்தேன். மின்கலனில் சேமிப்பு 3 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் என்று நம்பிக்கை. 2.45 மணி நேரம் தாக்குப் பிடித்தது. அதற்குள் உற்பத்தி விபரங்கள் அறிக்கையை மாற்றி அமைத்து, உற்பத்தியில் வெளியில் போன சரக்கு அறிக்கையிலும் தேவையான மாற்றம் அதற்கான தரவு உருவாக்குதல் செய்து முடித்து விட்டேன். அவற்றை இயக்கிப் பார்த்து அறிக்கைகள் சரியாக வருவதாகவும் பார்த்துக் கொண்டேன்.

11.45க்கு மின்கலன் 2%க்கு இறங்கியதும், கணினியை அணைத்து விட்டுப் பையை எடுத்துக் கொண்டு காய் வாங்கப் போனேன். உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, தேங்காய், வாழைக்காய், வெண்டைக்காய், தயிர் எல்லாம் சேர்த்து 50 ரூபாய். வாழைக்காய் புளிக்கறி, வெண்டைக்காய் பொரியல், தாளித்த மோர், கூடவே பாட்டிலில் வாங்கி வைத்திருக்கும் பூண்டு ஊறுகாயும் இருக்கிறது.

அரிசியை அழுத்தக் கலனில் வைத்து விட்டு வாழைக்காய்க்குத் தோல் சீவி துண்டுகளா வெட்டி வேக வைக்க வேண்டிய கிண்ணத்தில் தண்ணீரில் போட்டேன். புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டேன். போன வாரம் ஒரு பெரிய வெங்காயம் வெட்டும் போது கத்தியின் கைப்பிடி உடைந்து போனது. உடனேயே அதை தூக்கியும் போட்டு விட்டேன். இப்போது காய் வெட்டுவதற்கு சின்ன ஒரு கத்தியைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. சமையல் வாயு இணைப்பு வாங்கும் போது இலவசமாகக் கொடுத்த கத்தி. அதை வைத்து வாழைக்காய் வெட்டி விட்டேன். வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாகத்தான் வெட்ட முடிந்தது. வெங்காயம் வெட்டுவது சாத்தியமே இல்லை.

இதற்கிடையில் மின்சார இணைப்பும் வந்து விட வாடிக்கையாளரிடமிருந்து அவர்களது இணைய முகவரி எண்ணைப் பெற்று செய்த பணிகளை அவர்களது கணினியிலும் இயக்கினேன். தொலைபேசி தகவலையும் சொல்லி விட்டேன். நான் கேட்டிருந்த விபரங்களை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறாராம்.

சோறு வேகும் நேரம் முடிந்ததும் அழுத்தக் கலனை இறக்கி வைத்து விட்டு வாழைக்காய் வேகப் போட்டேன். இதற்கும் அடுப்பில் தீயின் அளவை அதிகரிக்கவில்லை. இதற்குள் வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாக வெட்டி முடித்தேன். தயிர் பொதியை வெட்டி கிண்ணத்தில் ஊற்றி உப்பும், தண்ணீரும் சேர்த்துக் கலக்கிக் கொண்டேன். அடுத்த தடவை மின்சாரம் தடைப்படுவதற்கு முன்பு புளிக்கறிக்கு அரைத்து விடலாம் என்று தேங்காய் உடைத்துத் துருவி, மிளகாய்த் தூள்+மஞ்சள் தூள்+நல்ல மிளகு சேர்த்து அரைத்துக் கொண்டேன். கூடவே சின்ன வெங்காயமும் சேர்த்து அரைப்பது தேவை, ஆனால் சின்ன வெங்காயம் வாங்கியிருக்கவில்லை. கடையில் காய் வாங்கும் போது கண்ணில் பட்டது, வாங்க வேண்டும் என்று உறைக்கவில்லை. தாளிப்பதற்கு, புளிக்கறிக்கு அரைப்பதற்கு, சாம்பாரில் சேர்ப்பதற்கு என்று பல வகையில் பயன்படும்.

புளிக்கறி நன்கு கொதிக்கட்டும் என்று கொதிக்க விட்டு, அப்போதுதான் துண்டுகளில் உறைக்கும், தொடர்ந்து சட்டியை வைத்து புளிக்கறிக்கு ஒரு தாளிப்பு (கடுகு+வெந்தயம்), மோருக்கும் அதே தாளிப்பு ஆனால் தனியாக (கடுகு+வெந்தயம்) - இரண்டுக்கும் தாளிப்பை கிண்ணத்தில் சேர்த்ததுதான், சட்டியில் போட்டு மோரைச் சூடு படுத்தவில்லை.

மோர் தாளிப்பதற்கு மிளகாய் வற்றல் இருந்தாலும் நன்றாக இருக்கும்.

அதன் பிறகு அதே சட்டியில் எண்ணெய், கடுகு தாளித்து வெண்டைக்காய், எதற்குமே தீயை உயர்த்தவேயில்லை. வெண்டைக்காயைப் போட்டு விட்டு வந்து இணையத்தில் விவாதங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெண்டைக்காய் வெந்த பிறகு உப்பு+சாம்பார் பொடி சேர்த்து சிறிது நேரம் வேக வைத்து விட்டு அணைத்து விட்டேன். இதற்கிடையில் அழுக்கான பாத்திரங்கள், அழுத்தக் கலன், காய் வெட்டிய பலகை, பாத்திரங்கள் கழுவி வைத்து விட்டேன். மாலையில் குழி நிறைய குவிந்து கடுப்பேற்றாமல் இருக்கும்.

இப்போது போய் உட்கார்ந்தால் பசிக்க ஆரம்பித்தது. 1.30க்கு மின்சாரம் மீண்டும் தடைப்பட்டது. சோறுடன் பருப்புப் பொடி ஒரு முறை, புளிக்கறி ஆசை தீர, அதன் பிறகு மோர் என்று பொரியல் அனைத்தையும் தீர்த்து விட்டேன். கொஞ்சம் அதிகம்தான், தூக்கம்தான் வரப் போகிறது.

விடாப்பிடியாக அடுத்த வேலையைத் தொடர்ந்தேன். இதே மாற்றங்களைச் சேர்த்து விடலாம் என்று பார்த்தால் அங்கு அறிக்கைகளில் ஏற்கனவே பிற மாற்றங்கள் இருந்தன, இதை அப்படியே பயன்படுத்த முடியாது, அங்கத்திய தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் அவ்வளவுதான். மின்சாரம் தடைப்பட்ட பிறகும் கோப்புகளை நகல் எடுத்து போட்டுக் கொண்டிருந்தேன். 45 நிமிடங்களுக்குப் பிறகு மின்னிணைப்பு திரும்பியது.

வெயில் உச்ச உக்கிரத்தில் இருந்தது. காலையில் பணி மேசையை வெளியில் சன்னலைப் பார்க்குமாறு இழுத்துப் போட்டிருந்தேன். தொலைக்காட்சிக்கான கம்பி வரும் இடத்துக்கு அருகில். தொலைக்காட்சி பயன்படுத்துவதில்லையாதலால், தொலைக்காட்சியை எடுத்து முன்பு பணி மேசை இருந்த இடத்தில் வைத்து விட்டேன். இப்போது வெளியில் பார்த்துக் கொண்டே வேலை செய்யலாம். ஆனால் இந்த வெயில் காலத்துக்கு இது தேவையில்லை. சன்னல்களுக்கு ஒரு திரை மறைப்புப் போட்டுக் கொண்டால் வெயில் வெக்கை உள்ளே வருவதைக் குறைக்கலாம், தேவைப்படும் போது திரை மடிப்பில் தண்ணீரும் ஊற்றி விட்டால் கொஞ்சம் சில் என்று இருக்கும். ஆனால் சென்னை போல ஈரப்பதம் வாய்ந்த நச நச என்ற சூழலாகி விடக் கூடாது. இங்கு இருக்கும் வெக்கையில் என்னவானாலும் உலர்ந்து போய் விடும்.

அடுத்த 2 மணி நேரங்கள் இலக்கு இழந்து போயின. அதன் பிறகு இழுத்துப் பிடித்து உற்பத்தித் திட்டமிடலை மறு செயல்படுத்த ஆரம்பித்தேன். அவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகு இப்போது கொஞ்சம் எளிமைப்படுத்த முடிந்தது. அதை இயக்கிப் பார்த்துக் கொண்டேன். மதியம் போட்ட அறிக்கையில் ஏதோ குளறு படி என்று தொலைபேசி. ஒரு தரவுத்தள அட்டவணையே அறிக்கைக் காட்சியில் சேர்த்ததில், அந்த அட்டவணையில் பல தரவுகள் ஒரே தரவுக்கு இருக்கும் போது எண்கள் தவறாக வந்து விட்டன. அதை மாலையில் பொறுமையாகத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். உடனேயே சரி செய்து விட்டேன். அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன்.

6 மணிக்கு மேல்தான் உலாவப் போக வேண்டும் என்று கிளம்பினேன். கோபால புரம் வழியாக வேலூர் நோக்கி நடந்து சில்க்மில் அருகே சாலையைக் கடந்து காந்திநகர் சாலைக்கு வந்தேன். பத்திரிகைக் கடையில் ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும் இல்லை. தமிழில் படிக்க வேண்டியதெல்லாம் வந்த அன்றைக்கு படித்து விடுகிறேன்.

திரும்பவும் வீட்டுக்கு வந்து கை கால் கழுவி சாப்பிட்டு விட்டு இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். இது வரை அரை மணி நேரம்தான் முடிந்திருக்கிறது. அடுத்த 24 மணி நேரங்களுக்கான திட்டப் பணியை எழுதினால் அடுத்த அரை மணி நேரமும் முடிந்து விடும்.

இதை முடித்ததும் மணி 8.40. பல் தேய்த்து விட்டு தியானம் செய்து விட்டுத் தூங்கும் போது ஒன்பதரை மணி ஆகலாம். 4 மணிக்கு எழுந்து விட வேண்டும். துவைக்க வேண்டிய துணிகளை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். டேனேஜ், அசார்ட்மென்ட் தேதி,, விபரங்களை சேர்க்கும் செயலி மாற்றங்கள், ஆர்டர் தேதி மாற்ற கட்டுப்பாடு இவற்றை 6 மணி வரை முடித்து விட வேண்டும். ஆறு மணிக்கு உலாவப் போக வேண்டும்.

திரும்பி வந்து வீடு தூத்து, துணி துவைத்துக் குளித்து விட்டு தியானம். சாப்பிடுவதற்கு கோதுமை ரவை, தேங்காயும் இருக்கிறது. வெங்காயம் வெட்டிச் சேர்ப்பதுதான் முடியாது.

9 மணி முதல் 12 மணி வரை அறிக்கை உருவாக்கக் கட்டமைப்பைத் தனியாகப் பிரித்தெடுக்கும் பணியை முடித்து விட வேண்டும். 12 மணிக்கு மேல் உற்பத்தித் திட்டமிடலை, முடித்த பணிகளை சேர்த்து விட வேண்டும்.

மதிய உணவுக்குப் புளிக்கறி மீதி இருக்கிறது, சோறு பொங்கி, உருளைக்கிழங்கு பொரியல் வைத்துக் கொள்ளலாம்.

3 மணிக்கு மேல் புறப்பட வேண்டும். 4 மணிக்கு வருவதாகச் சொல்லி விடலாம். கையோடு மாற்றிய அறிக்கைக் கட்டமைப்பைக் கொண்டு போய் அவர்கள் கணினியிலேயே இயக்கிக் காட்டலாம். அவர்களது அறிக்கையிலேயே பார்த்தால் அவருக்கு நன்கு பழக்கமாகும். முடித்த பிறகு நிரல்களை அழித்து விட வேண்டும். கேட்கும் காசைக் கொடுத்தால் போட்டுக் கொடுக்கலாம். அவர்களுக்கு இணையம் வழியாக சேவை அளிப்பதையும் செயல்படுத்தி விட வேண்டும்.

தகிப்பான வெக்கை வாட்டுகிறது. இதுதான் கத்திரி வெயில் என்பார்களோ, கொஞ்சம் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இனி வரும் மாதங்களில் அதிகமாக வேலை தேடிக் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா உற்சாகமாக பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடியை அழைத்துக் கொண்டது ஒரு நறநற. விஜயகாந்திடம் சிரித்துப் பேசியது, பத்திரிகையாளர்களைச் சந்தித்தது, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முனைவது, சட்ட ஒழுங்கில் கடுமையாக இருக்கப் போவதாகச் சொல்வது, நகரில் பயணிக்கும் போது போக்குவரத்தைத் தடை செய்யாதது என்று பல சரியான முறைகளை வெளிப்படுத்துகிறார். நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்பது போல உண்மையான இயல்பு சில மாதங்களில் வெளி வரும்.

அமைச்சர்களையும் சட்டசபை உறுப்பினர்களையும் ஊழல் செய்யக் கூடாது என்று எச்சரித்து, அந்த நச்சுச் சுழற்சியை தடுத்து நிறுத்தினால் இவரது பெயரை மக்கள் பல காலம் சொல்லி வருவார்கள். பொதுப் பணிகளில் கமிஷன் எடுப்பது, பொதுமக்களிடம் பணம் வாங்குவது, வியாபாரிகள்/தொழிலதிபர்களிடம் பணம் பிடுங்குவது இவை அனைத்தையும் விடுத்து அரசு கொடுக்கும் சம்பளத்தை வைத்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

'இன்றைய சமூகக் கட்டமைப்பில் ஒடுக்கப்படுபவர்களும், ஒடுக்குபவர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். ஒடுக்குபவர்கள் தமது ஆதாயத்தைத்தான் பார்ப்பார்களே தவிர, ஒடுக்கப்படுபவர்களை விடுவிக்க முயற்சி எடுக்க மாட்டார்கள். இந்த சமூக அமைப்பை உள்ளிருந்து மாற்ற முயற்சிக்கு எதையும் ஏற்கனவே அதிகார பீடங்களில் இருக்கும் அவர்கள் முட்டுக் கட்டை போட்டு வெற்றி கரமாக முறியடிப்பார்கள். '

'இது கிட்டத்தட்ட, தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் சிறுபான்மை ஆட்சி, தன்னைத் தானே நீக்கிக் கொள்ள வாக்களித்தது போல். அங்கு நடக்க முடியுமென்றால் இங்கு ஏன் நடக்க முடியாது?'

'மூன்று வகைகளில் அடிமைத்தனம் அல்லது ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. அரசியல், சமூகம், பொருளாதாரம். மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்றாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிகழ்வுகள் இருக்கின்றன'

இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுயாட்சி ஏற்படுத்திக் கொண்டது அரசியல் விடுதலை.
விடுதலைப் புலிகள் சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபட போராடியது அரசியல் விடுதலைப் போராட்டம்.

ஆங்கிலேய அரசோ, சிங்கள அரசோ தமது உரிமைகளை தாமாக விட்டுக் கொடுத்து விடுவதில்லை. ஆயுதம் தாங்கிய அல்லது அமைதி வழி போராட்டங்கள்தான் வழி. மக்களிடையே  காலனி ஆட்சியின் பாதகங்களைப் பற்றி விழிப்புணர்வு உருவாக்கப் பட வேண்டும்.

பெரியார் சாதிக் கட்டமைப்பை ஒழிக்க போராடியது சமூக விடுதலைப் போராட்டம். இங்கும் ஆதிக்க சாதியினர் தமக்கு ஆதாயமாக இருக்கும் சாதிக்கட்டமைப்பை எப்படி உடைப்பார்கள்? வெளியிலிருந்து போராடுவதுதான் வழி.

அரசியல் விடுதலை என்பதை அந்த அரசு போய் நம்ம அரசு வருவது என்று வரையறுத்து விடலாம். சமூக விடுதலைக்கு என்ன வரையறை? யாரும் தனி வாழ்க்கையில் சாதியைப் பின்பற்றக்கூடாது என்று அரசு உத்தரவு போட முடியுமா? சாதிக்குள் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்த முடியுமா?

அரசியல் அதிகாரம் இருந்தால்தான் சமூக விடுதலையை சாதிக்க முடியும் என்று திமுக உருவானது.

மூன்றாவது அடிமைத்தனம் பொருளாதார அடிமைத்தனம். உழைக்காமல் வாழும் வர்க்கத்தினர் உழைக்கும் வர்க்கத்தினரை தமக்கு அடிமையாகவே வைத்திருக்கிறார்கள்.

பொருளாதார விடுதலையையும் அரசியல் அதிகாரத்தின் மூலம் கொண்டு வர முடியாது. அரசியல் அதிகாரம் இயல்பாகவே உழைக்காத மக்களின் கையிலேயே வந்து சேர்கிறது. அவர்கள் பொருளாதா அடிமைத்தனத்தை ஒழிக்க முழு முயற்சி செய்ய வாய்ப்பே இல்லை. அரசு அதிகாரிகள், நீதிபதிகள் எல்லோருமே சமூக விடுதலையினால் பலன் பெறுபவர்களிடமிருந்து வெகு தூரத்தில் இருக்கிறார்கள். அதனால் போகப் போக தொழிலாளர்களுக்கு எதிரான சூழல் அதிகமாகி வரும்.

இந்த மூன்றையும் சேர்த்துதான் பார்க்க முடியும், ஒன்றோடு ஒன்று  பின்னிப் பிணைந்தவை.