என்னைப் பற்றி

செவ்வாய், ஜூன் 16, 2026

வளர்வதும் விரிவதும்

என்னுடைய வட்டம் விரிந்து கொண்டேதான் போகிறது. வெள்ளாள சாதிய வட்டத்தை உடைத்து திருமணம் செய்த பிறகு, வெள்ளாள திமிர் ஆண் திமிர் அனைத்தையும்  அடித்து நொறுக்கினாள். டாடா நிறுவனம் அதன் ஷாங்காய் அலுவலகம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து இணைய உலகம், மென்பொருள் நிறுவனம் என்ற பெரிய வட்டத்துக்குள் நுழைந்தேன்.

அந்தக் கட்டத்தில் பதிவர் உலகம் மூலம் தமிழ் எழுத்து/நுட்ப உலகிலும் லெதர் லிங்க் மூலம் தோல் துறையிலும் பரந்து விரிந்த வட்டத்துக்குள் காலடி எடுத்து வைத்தேன். அதில் பலருடைய தொடர்புகள் பலருடைய நல்லெண்ணங்கள். ஆனால், அவை அனைத்தும் நடுத்தர வர்க்க நலன்களை மையமாகக் கொண்டவை.

அது உடைந்து நொறுங்கியபோது ம.க.இ.க வில் நுழைந்தேன். இந்த மாறிச் செல்லும் கட்டத்தில் மிகவும் தனிமைப்பட்டிருந்தேன். ம.க.இ.க தோழர்கள் குட்டி முதலாளித்துவ, முதலாளித்துவ அற்பத்தனங்களை உடைக்கும் மார்க்சியக் கல்வியை வழங்கினார்கள். ஆனால், அது ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான் இருந்தது. அறிவுத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தாலும் அது நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருந்தது.

மா.அ.க.விலிருந்து வெளியேறிய அந்த அறிவுத்தளம் மூலதனம் வாசிப்பு, இளம் கம்யூனிஸ்ட் கழகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்ற அடித்தளங்களில் அடுத்த தளத்தில் விரிவடைந்தது. மூலதனம் வாசிப்பு வட்டங்களிலும் அம்பேத்கரிய வட்டங்களிலும் ஓரளவு பரவலாக முடிந்தது. நேர்முகங்கள், புத்தக வெளியீடுகள் மாநிலம் முழுவதும் அரசியல் கருத்துகளைக் கொண்டு செல்ல உதவியுள்ளன. மூலதனம் வாசிப்பு வட்டத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறேன். 

 அடுத்த கட்டம் இன்னும் அறிவை விரிவாக்கி பணியை ஆழமாக்கி தளத்தை பரவலாக்குவதாக இருக்க வேண்டும். லெனின் தேர்வு நூல்கள், திறந்தநிலை மார்க்சியம், அம்பேத்கர் மக்கள் பதிப்பு, மூலதனம் சிறுநூல்கள் என ஒவ்வொன்றிலும் எனது முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் குறைபாடாகவும் போகப் போக மேம்பட்டும் இருக்கின்றன.

 இப்போது இந்த வட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய கட்டம். தனிமைப்படுத்தலின் ஊடாகத்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: