என்னைப் பற்றி

புதன், டிசம்பர் 23, 2009

தீமிதிப்பு

யூனிக்சு நிரல் எழுதுதலில் core dump என்று ஒரு நிகழ்வு உண்டு. மென்பொருள் என்று செயல்படும் போது ஏதாவது பிழை நேர்ந்து விட்டால், அந்த நேரம் இருக்கும் தகவல்களை எல்லாம் ஒரு கோப்பில் எழுதி விட்டு வெளியேறி விடும். நிரலாளர் கோப்பைப் படிப்பதன் மூலம் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். அதைப் போல நாட்குறிப்புகள் பயன்படும்.

அடிவயிற்றுக்குக் கீழ் ஏதாவது நோய்கள் வந்தால் கவனமாக இருக்கவும் என்று ராசி பலன் ஒன்றில் கொஞ்ச நாள் முன்பு வந்திருந்தது. முதலில் ஆரம்பித்தது அடிவயிற்றில் தொடைக்கு அருகில் வலி. திருப்பதியில் மலை ஏறும் போது வலித்தது, நடந்ததால் வலிக்கிறது என்று விட்டு விட்டேன். அதன் பிறகு தொடர்ந்து கூடிக் கொண்டே இருந்தது. என் மனதின் உருவகம், உள் உறுப்பு ஏதோ காயம் அடைந்து அதில் நீர் கோர்க்கிறது என்று. வீக்கம் நாளுக்கு நாள் இடம் நகர்வது போலத் தெரிந்தது. அதுவும் தொடர்ச்சியான வீக்கம் கிடையாது. படுத்துக் கிடக்கும் போது வீக்கம் வடிந்து விடும், எழுந்து நடக்கும் போது உட்கார்ந்திருக்கும் போது உப்பி வீங்கி விடும்.

இறுக்கமான உள்ளாடை அணிந்தால், அதன் விளிம்புகள் இந்த வீக்கத்தின் மீது பட்டுக் கொண்டிருக்கும், அழுத்தம் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது வலி தாங்க முடியாமல் சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வந்திருக்கிறேன்.

இணையத்தில் அறிகுறிகளை உள்ளிட்டுத் தேடி விபரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது கூட புண்ணைத் தொட்டால் வலிப்பது போன்ற வலி உணர முடிகிறது. அதைத் தொடர்ந்து வயிற்றுக்குள் கடுப்பு. அந்த வலி மிகவும் நுண்ணியது. இந்த வீக்கமும் அந்தக் கடுப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையா என்று தெரியவில்லை. வெறும் வயிற்றில் வலி உயிரை வாங்கி விடும். காலையில் எழுந்த உடன், ஏதாவது சாப்பிட்டு விட்டுப் புறப்படும் போது அதிகமாக இருந்தது. சில நாட்களிலேயே வயிற்றுப் புண்ணாக இருக்கலாமோ என்று ஒரு நண்பர் சொல்ல அதை சரி செய்ய முற்பட்டேன். சில நாட்களுக்கு மிளகாய்ப் பொடி, தனியா பொடி சேர்த்த உணவுகளை ஒதுக்கி வைத்தேன். சீரகம், மோர் அதிகமாக சேர்த்துக் கொண்டேன். வலி கிட்டத்தட்ட நின்று விட்டது. எப்போதாவது உணவு கட்டுப்பாடுகளை மீறிப் போனால் திரும்பவும் வலிக்கும்.

இந்த இரண்டு வலிகளுமே கூடவே இருப்பதால் பழகி விட்டன என்று ஆகியிருக்கின்றன.

கடந்த 10 நாட்களாக வலது கால் இரண்டாவது விரலில் நகச்சுத்தி. நகத்தை வெட்டுவது என்பது கை நகத்தால் உரிப்பதுதான். இந்த விரலில் நகம் உரித்த போது விளிம்பில் ஆழமாக பிய்த்து எடுத்து சீழ் வைத்துக் கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு கை விரலில் அப்படி ஏற்பட்டு வலியில் துடித்து, மருத்துவமனையில் கீறி விட்டது எல்லாம் நினைவு வந்தது. இந்தத் தடவை மருத்துவரைப் பார்க்கப் போவதில்லை என்று ஒரு உறுதி.

1. நல்ல வேளையாக அலுவலகத்துக்கு நடந்து போவது நின்று போய் இரு சக்கர வண்டியில் போகும் வசதி கிடைத்து விட்டது.
2. அந்த விரலில் தண்ணீர் பட்டு விடாமல், குளிப்பதை ஏற்பாடு செய்து கொண்டேன். காலை ஒரு நாற்காலியின் மீது தூக்கி வைத்துக் கொண்டு குளித்தால் சரியாகி விடுகிறது.

இருந்தாலும் சில சமயம் வலி விண் விண்ணென்று தெறிக்கும். இரவு தூங்கும் போது மூடியிருக்கும் போர்வை இசகுபிசகாக பட்டு விட்டால் வலியில் தூக்கமே போய் விடும். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது வலிக்கும். அந்த பாதமே நோயாளி பாதமாக காட்சியளிக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு புள்ளியாக பழுக்க ஆரம்பித்தது இப்போது பரவலாகி நகத்தை உட்பக்கமாக அரைவட்டமாக சூழ்ந்து விட்டிருக்கிறது. வலியும் இடம் நகர்ந்து நடுவில் இருக்கிறது. இது எந்த திசையில் போய் முடியும் என்று தெரியவில்லை. நகம் நிச்சயமாக உதிர்ந்து போகும். இன்னும் எவ்வளவு நாளாகுமோ!

டென்ஷன் இல்லாமல் சாப்பிடுவது, அமைதியாக மனதை வைத்திருப்பது என்று உடல் கூட எடை அதிகமாக ஆரம்பித்து விட்டது. பெரிய பெரிய மாற்றங்களை அதிகக் கலக்கம் இல்லாமல் எதிர் கொள்ள முடிகிறது. நமக்கு ஒவ்வாத, நம்மை ஏமாற்றும் தொடர்புகளையும் உறவுகளையும் விட்டு நகர முடிந்து விட்டது. வாடிக்கையாளர்களில் நச்சுப் பிடித்தவர்களை விட்டு விலகி விட்டோம். வேலை செய்பவர்களும் நெருப்பில் புடம் போட்டு தங்கமாக வெளி வந்தவர்கள் மட்டும் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் வெவ்வேறு காரணங்களில் வெளியேறும் வாய்ப்புகள்.

1. வேலை செய்யும் கெடுபிடிகள் வரையறைகள் பிடிக்கவில்லை
2. சம்பளம் போதவில்லை
3. சம்பளம் தாமதமாகிறது

பயிற்சி அளித்து, அவர்கள் கற்றுக் கொள்வதற்கு காசு கொடுத்து தவறுகளைச் சுமந்து வளர்த்திருக்கிறோம். மனதளவில் பெரியதொரு சோர்வைக் கொடுத்து விடக் கூடியது. அப்படி நடந்து விடாமல் சமாளித்து விட்டேன்.

வியாழன், டிசம்பர் 17, 2009

மணிமாலை

1.
பணம். ஒருவருக்கு 10 ரூபாய் கொடுக்கிறோம் என்றால் 10 ரூபாய் மதிப்பிலான நமது உழைப்பை அவருக்குத் தருகிறோம். இதுதான் பணத்தின் உண்மையான பயன்பாடு. நமது உழைப்பை சேமித்து வைத்து பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தும் ஊடகம் பணம்.

நடைமுறையில் உழைப்புக்குத் தொடர்பில்லாமல், பணம் பாய்வது நடந்தாலும், பெருவாரியிலான பரிமாற்றங்கள் உழைப்பு = பணம் என்ற வாய்ப்பாட்டின் அடிப்படையில் நடப்பதால்தான் சமூகம் முன்னேறி செல்ல முடிகிறது.

இதன் மறுபக்கத்தைப் பார்க்கலாம். ஒருவரிடமிருந்து 10 ரூபாய் வாங்கினால், அல்லது 10 ரூபாயை எதிர்பார்த்தால் அவருக்கு 10 ரூபாய் மதிப்பிலான உழைப்பை கொடுத்திருக்க வேண்டும்.

1993ல் டாடா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த போதே உள்ளுணர்வு ஒன்று நாம் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வேலை செய்து விட வேண்டும் என்று செலுத்திக் கொண்டே இருந்தது. பல நேரங்களில் அலுவலக வேலைக்காக செலவழித்த பணத்தை, அலுவலகத்திலிருந்து கேட்பதைத் தவிர்த்திருக்கிறேன். ஆரம்ப நாட்களில் பயிற்சியும் அளித்து பணமும் கொடுத்த நிறுவனத்தின் மீது எப்போதுமே நன்றியுணர்ச்சி இருந்தது.

நிறுவனத்தில் வேலை செய்யும் போது இன்னின்ன வசதிகள் எனது உரிமை என்று மற்றவர்கள் போட்டி போடும் போது அதில் சேர்ந்து கொள்ள மனம் வந்ததே இல்லை. நிறுவனத்தின் எந்த ஒரு கூடுதல் வசதியையும், நன்றிக் கடன் படுகிறோம் என்று உணர்வுடனேயே அணுகியிருக்கிறேன்.

டாடா நிறுவனத்தின் சார்பாக சாங்காயில் வேலை பார்க்கப் போன போதும், கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வரை, வாங்கிய சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு வரை எனது அலுவலகப் பணிகளை சரிவர செய்வதற்கு செலவழித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பல காரணங்களால் அந்த ஒழுக்கத்தில் தவற நேர்ந்தது. (வேலை செய்ததை விட அதிக சம்பளம் கிடைக்க, அது முழுவதையும் சொந்த பயன்பாட்டுக்குத் திருப்பிக் கொண்டிருந்தேன்).

பிஎஸ்ஜி லெதர்லிங்க் ஆரம்பித்த போது அதே மாதிரியான அணுகுமுறைதான் எனக்கு இருந்தது. ஒருவருக்கு இத்தனை ஆயிரம் ரூபாய்கள் ஊதியம் என்று வரையறுத்தால் அதற்கு ஈடான உழைப்பை, பங்களிப்பைக் கொடுத்தே தீருவது என்ற பொறுப்பு அவருக்கு இருக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது.

2.

டாடா நிறுவனத்தில் சேர்ந்த போது ஆரம்ப நிலை தொழில்நுட்ப பயிற்சி அலுவலராக சேர்ந்தேன். அந்த நாளிலிருந்தே அந்த நிறுவனத்தில் வாழ்நாள் முழுவதும் வேலை செய்யப் போவதாகவும், நிறுவனத்தின் தலைவராக உயரப் போவதாகவும் உருவகித்துக் கொண்டுதான் ஒவ்வொரு நாளும் பணி புரிந்து கொண்டிருந்தேன். மத்திய பிரதேசத்தில் 4 ஆண்டுகள், சீனாவில் 1 ஆண்டு வரை அதே அடிப்படையில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த ஒழுக்கத்துக்கும் பங்கம் வந்து அடுத்த நிறுவனத்துக்குப் போனேன். எனது அடிப்படை இயல்புக்கு அது பொருந்தாத ஒன்றுதான். அதனால்தானோ என்னவோ, தனியாக பிஎஸ்ஜி லெதர்லிங்க் தொடங்கி விட்டேன்.

எந்த உறவுகளிலும் - நட்புகள், கூட வேலை பார்ப்பவர்கள், நிறுவனத்தில் சேருபவர்கள், முக்கியமாக திருமண உறவு - பிணைப்பு என்பது வாழ்நாள் முழுமைக்குமானது என்றுதான் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. எல்லாமே தற்காலிகம்தான், ரயில் பயண நட்புகள் போல இறங்கும் இடம் வந்தால் பிரிந்து போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்ற வேதாந்தம் படித்தாலும், என் இயல்பில் அது சேரவே இல்லை.

நிறுவனத்திலும் சேருபவர்கள் ஒவ்வொருவரையும் நீண்ட கால பணிக்குத் தயாரிப்பதுதான் நோக்கமாக இருந்தது. ஒரு சின்ன நிறுவனத்தில், வேலைக்கு வருபவர்களை ஆகச் சீக்கிரம் எவ்வளவு வேலை வாங்கி மதிப்பை சம்பாதிப்பது என்ற போக்கில் இல்லாமல், பயிற்சி கொடுப்பது, கற்றுக் கொள்ளுதல் என்ற நோக்கில்தான் முடிவுகளும் அமைப்புகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

3.
குழந்தையை படிக்க அனுப்பலாம் . குழந்தை சின்ன வயதில் உடம்புக்கும், மனதுக்கு நல்ல ஊட்டம் அளித்து பல ஆண்டுகள் பேணிப் பாதுகாத்தால் வளர்ந்த பிறகு குழந்தையின் பணிகள் உயர் மதிப்பில் அமையும். இது ஒரு முறை.

இரண்டாவது முறையில் குழந்தையை வேலை செய்ய அனுப்பலாம். அடிப்படைத் தேவையான உணவு அளித்து நான்கைந்து வயது ஆனதும் வேலைக்கு அனுப்பி, குழந்தை சம்பாதிக்கும் காசில் சாப்பிட்டுக் கொள்ளட்டும். அந்த சம்பாத்தியத்தில் பெற்றோரும் தமக்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். திறமை உள்ள குழந்தை அப்படிப்பட்ட வேலையிலேயே புதிது புதிதாக கற்றுக் கொண்டு 20 வயதுக்கு மேல் திறமையாக பணி புரியலாம். ஆனால், பெரும்பாலான குழந்தை தொழிலாளர்களின் எதிர்காலம் போராட்டமாகவே போய் விடுகிறது.

குழந்தை பருவத்தில் வேலைக்கு அனுப்பக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாக இருக்கிறது.

குழந்தை வேலைக்குப் போகவில்லை என்றால் சாப்பாடு, படிப்புச் செலவுகளை யார் பார்த்துக் கொள்ள வேண்டும்? குழந்தையை பெற்றெடுத்தவர்கள், தமது தற்போதைய உழைப்பின் மூலம் சம்பாதிப்பதை அல்லது முந்தைய உழைப்பில் சேமித்ததைக் குழந்தையின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும். பொதுவாக இளமையில் கல்வி பெற்ற பெற்றோர்கள் உயர் வருமானம் ஈட்டி, குழந்தைகளை படிக்க அனுப்ப முடியும். கல்வித் தேர்ச்சி இல்லாத பெற்றோர்களின் வருமானம் குறைவாக இருந்தால், அவர்கள் குழந்தைகளும் கல்வி பெறாமல் போய் விடுவது நடக்கிறது.

'அப்படித் திறன் இல்லாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். வசதி இல்லை என்றால் சாகட்டும், அறியா மனிதர்களாக வாழட்டும்' என்று முதலாளித்துவ பொருளாதார முறையில் ஒரு வாதம் உண்டு. நடைமுறை சமூகங்களில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று சமூகத்தின் வாய்ப்புகள் குறைந்த பிரிவினருக்கு வசதி செய்து கொடுப்பது நடக்கிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு இலவச உணவு கொடுப்பது கூட வறுமையின் தளைகளிலிருந்து அவர்களை வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு வழி.

4.
வணிக நிறுவனங்களுக்கு இதைப் பொருத்திப் பார்க்கலாம். நிறுவனம் வளர்ச்சி பெறும் வரையிலான பயிற்சிகள், கற்றல்கள், நடைமுறை செலவுகளுக்கு பணம் எப்படிக் கிடைக்கும். நிறுவனத்தின் வருமானத்திலிருந்து அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும் (குழந்தையின் ஊதியத்தில் படித்துக் கொள்ள வேண்டும்). அல்லது முதலீடு திரட்டி வளர்ந்து வர வேண்டும். உறுதியான ஒரு நிறுவனம் உருவாக பல ஆண்டுகள் பிடிக்கலாம்.

வளர்ந்த, முதிர்ச்சி பெற்ற பொருளாதார சமூகங்களில் புதிய நிறுவனங்களைப் பேணி காக்க அமைப்புகள் இருக்கின்றன.