என்னைப் பற்றி

செவ்வாய், ஏப்ரல் 29, 2008

என்னதான் ஆகி விடும்!

என்னை நம்பி இருப்பவர்களை கை விடுவதை வாடிக்கையாகப் போயிருக்கிறது. ஒரு மாதம் முடியப் போகிறது, இந்த மாத வேலையும் பார்த்து விட்டார்கள். அழகாக விரட்டி விரட்டிப் பார்க்கிறார்கள்.

இன்று காலையில் எட்டரை ஒன்பது மணிக்குத் தொலைபேசி முதலில் பேச வேண்டும். 'மீதித் தொகையை ஒரு வாரத்தில் கொடுப்பதாகச் சொன்னீங்களே, என்ன ஆச்சு' என்று கேட்டு வாங்க வேண்டும்.

இரண்டாவதாக, 'உங்க வேலை எல்லாம் முடிந்தாகி விட்டது. மீதிப் பணத்தை உடனடியாகக் கொடுங்கள்' என்று கேட்க வேண்டும்.

பேசி 'மீதிப் பணத்தை எப்போது கொடுப்பீர்கள்' என்று கேட்க வேண்டும். நினைவு படுத்த வேண்டும்.

உடனடியாக கொடுத்து விட வேண்டும் என்று உறுதியாகக் கேட்க வேண்டும். ஒரு வாரத்தில் மீதி 2 கொடுக்கட்டும்.

ஞாயிற்றுக் கிழமை தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து மாலையில் அவள் வீட்டுக்குப் போவதாக முடிவு. மதியத்தில் சிக்கலைத் தீர்த்த மகிழ்ச்சியில் ஐந்தரை மணிக்குக் கிளம்பி விட்டேன். ஆறு மணிக்கு அங்கு போகும் போது இன்னும் வீடு சுத்தம் செய்வதில்தான் ஈடுபட்டிருந்தாள்.

போன வாரம் என்னிடம் சண்டை போட்ட பிறகு வேலையைத் தொடரவில்லையாம். 'உன்னைக் குளிக்க விடாமல் துரத்தினேன். அந்த பாவமோ என்னவோ, தண்ணீர் வருவது சிக்கலாக இருக்கிறது. தண்ணீர் ஏற்றும் குழாயில் காற்றடைப்பு ஏற்பட்டு விடுகிறது. நீ குளிக்காமல் போய் விட்ட அன்றிலிருந்து ஒவ்வொரு முறையும் யாராவது வந்து சரி செய்த பிறகுதான் தண்ணீர் மேலே ஏறுகிறது' என்று அப்புறமாகச் சொன்னாள்.

முதலில் கீழே போய் குழாய்க் கிணற்றில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் ஏற்றத்தைத் தொடங்கும் முயற்சியில் நானும் சேர்ந்து கொண்டேன். அப்போது தொலைபேசி அழைப்பு. அன்று முழுவதும் காலையிலிருந்தே பலரது அழைப்பும், நீளமான பேச்சுக்களும்.

காலை அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது சிங்கப்பூரிலிருந்து. அவனிடம் ஆறு விலக்கத் தரக் கட்டுப்பாட்டு முறைகளை எல்லாம் விட மனித உறவுகளைப் பேணுவதுதான் முக்கியம் என்று நீண்ட வாக்குவாதம். அரை மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்போம்.

அதைத் தொடர்ந்து மாடிக்குப் போய் , அவரது தொழில், சிக்கல்கள், வளர்ச்சி என்று ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் பேசிக் கொண்டிருந்தோம். வருவதாகச் சொல்லியிருந்ததைத் தள்ளிப் போட வைத்தேன்,

தண்ணீர் நிரப்ப முயற்சிக்கும் போது அழைத்த , ஐசிஐசிஐ வங்கி இன்று திறந்திருக்குமா என்று கேட்டார். அதைத் தொடர்ந்து ஈஆர்பி குறித்து நீண்ட விவாதங்கள். அதுவும் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கும்.

இதற்குள் குளித்து முடித்து வந்திருந்தாள். 'நாம் எவ்வளவுதான் அடித்துக் கொண்டாலும், நம்மிடையே வேற்றுமைகளை விட ஒற்றுமைகள் அதிகம்' என்று சொன்னேன். 'பலரது மறுப்பையும் மீறி, நாம் இருவரும் முழு மனதுடன் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டோம். என்ன, வேற்றுமைகளை அமைதியாக பேசிப் புரிந்து கொள்ளும் பண்பு இருவரிடமும் இல்லை. வன்முறையில் இறங்கி விடுகிறோம், அதுதான் சிக்கல்'

சாப்பிடும் போது லட்ச லட்சமாகக் கொட்டி வீடு வாங்குவதைக் குறித்துப் பேசலானேன். தொழிலைப் புறக்கணித்து பணத்தை எல்லாம் நிலத்திலும் வீட்டிலும் போடக் கூடாது. அம்பானி வளரும் போது குடும்பத்துக்கு வசதிகள் என்று தொழிலைக் குறுக்கிக் கொள்ளவில்லை. அவளது வியாபாரத்தில் விலைகளை ஏற்றிக் கொள்ளச் சொன்னேன். உயர் தரத் தோல்களை மட்டும் வாங்கும் போது விற்பனையாளர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே இருக்கும். அதிகமாக இருக்க வேண்டும் என்பது அவளது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சாப்பிட்டு முடித்துக் கை கழுவும் போது தொலைபேசி. அக்காவும், அவரது கணவனும் வாணியம்பாடி அருகில் சின்னதொரு விபத்தில் சிக்கிக் கொண்டு விட்டார்கள். யாராவது அங்கு இருக்கிறார்களா?

நம்ம வாடிக்கையாளர்கள் பலர் உண்டு. முதலில் பேசினேன். அவர் தரப்பில் பல முயற்சிகள் செய்தார். அடுத்தது அவர் பேசி சரியான ஆளைப் பிடித்து விட்டார். அரை மணி நேரத்துக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக பல தொலைபேசி அழைப்புகள். கடைசியில் தொலைபேசி எண் அனுப்பி தகவலும் சொல்லி விட்டேன்.

அதிகமாக அடாவடி இல்லாமல், ஓரிரு மணி நேரத்தில் சிக்கல் அவிழ்ந்து விட்டது என்று தகவல் சொன்னான். சேதங்கள் பல, அடிபட்டவர் மருத்துவமனையில், கார் சேதமடைந்து சாலையில், காவல் துறை கையகப்படுத்திக் கொண்டு விட்டது. மன உழைச்சல். வேறு வண்டி பிடித்து பெங்களூர் போகிறார். அடுத்த நாள் காலையில், திரும்பி நாட்ராம்பள்ளி வந்து வழக்குக்குத் தேவையான வண்டியின் ஆவணங்களைக் கொண்டு காண்பிக்க வேண்டுமாம்.

அழைத்த போது அப்புறம் பேசுவதாக வைத்து விட்டேன். பைக்கில் ஏறி, முதலில் பிள்ளையார் கோவில். அங்கு சாப்பிட பாயாசமும் கிடைத்தது. எதிரில் இருந்த தெருவில் நீளமாக நடந்து வீடுகள் குறித்த வியத்தல்களைக் கேட்டுக் கொண்டே திரும்பினோம். மீண்டும் வண்டியில் ஏறி, வளசரவாக்கம் வரை. ஏதாவது குடிக்க வேண்டும் என்று சொல்ல, நந்தினி கடைக்குப் போய் நிறுத்தினேன்.

பைக்கை நிறுத்தியிருந்த இன்னொரு வண்டிக்கு அருகில் கொண்டு நிறுத்த கால் முட்டு அடி வாங்கிக் கொண்டது. மனதின் கணக்கைப் புறக்கணித்து இளைத்த தவறு. இடையில் புகுத்தியிருக்கவே கூடாது.

அவள், தர்பூசணி பழச்சாறும், நான் பாதாம் பாலும் கேட்டோம். வந்த பிறகு நான் பழச்சாற்றையும் அவள் பாலையும் குடித்தோம். சின்னக் குழந்தை போல, நன்கு வாழ்க்கையை அனுபவித்து வாழும் பிறவி. அவள் மனம் வருந்தாமல் முழுமையான சேவை செய்யக் கற்றுக் கொண்டாலே மனதின் குழப்பங்களை எல்லாம் வென்று விடலாம்.

வீட்டுக்குத் திரும்பி அவளை விட்டு விட்டுக் கிளம்ப வேண்டும். உன்னைத் தூங்க வைத்து விட்டுப் புறப்படுகிறேன். உடலில் பல இடங்களில் வலி. கால் பாதத்தில் பொரி பொரியாக வந்து அதைக் கிள்ளிக் கிள்ளி விட்டு புண்ணாக்கி வைத்திருந்தாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்தது. எல்லாம் உன்னால்தான் நடக்கிறது என்று அவள் சொல்வதைக் கேட்டு, ஆமாமா, உன் பாதம் அப்படியே புழுத்து அழுகி விடும் என்று சாபம் கூட விட்டிருக்கிறேன். அதனால்தான் இன்னும் சரியாகாமல் இருக்கிறது.

முதுகெலும்பில் வலி. சாங்காய் மருத்துவமனையில் போட்ட ஊசி தவறாகப் போட்டதன் பின் விளைவு என்கிறாள். வெயிலில், தூசியில் போனால் தோலில் ஒவ்வாமை வந்து விடுகிறது. வேலை செய்தால் இளைக்கிறது. இடது புறத்தில் நரம்பு இழுக்கிறது என்று வரிசையாக உபாதைகள்.

நம்முடைய வாழ்க்கை முறைகளைப் புகட்டி விடலாம் என்று நினைத்தேன். நடக்கப் போவதில்லை என்று தெரிந்தும் முயற்சி செய்து விட்டு விட்டேன். இந்தப் பேச்சுக்கள் எல்லாம் அவளது உபாதைகளை சரி செய்து கொள்ள வேண்டு கோள்கள் இல்லை. இப்படி எல்லாம் தோன்றுகிறது என்று சொல்வதுதான் நோக்கம். காது கொடுத்து கேட்பதே போதும். அதற்கு என்ன சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவளுக்குத் தெரியத்தான் செய்யும். குறிப்பான அறிவுரைகளைச் சொல்லாமல் பொதுவான கருத்துகளாகச் சொல்லலாம்.

எனது கருத்துக்களை, எண்ணங்களை எப்படியாவது பின்பற்ற வேண்டும் என்று அவளுக்குத் தவிப்பு. அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவும் பெருமை தடுக்கிறது. அவள் அதிகமாகப் பேசி அவளது மனச் சமாதானத்துக்காக நான் ஏற்றுக் கொண்ட பலவற்றை எனது கருத்துக்கள் என்று சொல்லியே பின்பற்றி வருகிறாள். நான் சண்டை போடாமல் அன்பாக அவளிடம் பேசிக் கொண்டிருக்கக் கற்றுக் கொண்டால் என் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவளை விட்டால் சிறந்த மாணவர் கிடையாது.

'என்னை அவ்வளவு திட்டினாயே, இனிமேல் ஏதாவது தப்பு என்று பட்டால் திட்டாமல் அன்பாகவே சொல்' என்று கேட்டுக் கொண்டேன்.

நாள் முழுவதும் வேலை செய்து களைத்திருந்தாள் அவள். தூங்கி விட்டாள். எனக்குக் கொசுக் கடியிலும் சூட்டிலும் தூக்கம் சரியில்லை. 3 மணியிலிருந்தே புரண்டு புரண்டு படுத்திருந்த 4 மணிக்கு எழுந்து விட்டேன்.

அங்கிருந்து வண்டியில் வளசரவாக்கம் வழியாக ராமாபுரம். சீக்கிரமாகக் குளித்து விட்டுப் புறப்பட வேண்டும் 6 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

அவிழ்த்துப் போட்ட துணிகள், வட்டில் தண்ணீரில் விழுந்தன. அவற்றைத் துவைத்து விட வேண்டும். மற்ற துவைக்க வேண்டிய துணிகளையும் தண்ணீரில் முக்கினேன். துவைத்த துணிகளை மடித்து வைக்க வேண்டும். தரை தூத்து விட வேண்டும் என்று தோன்றியது. பாத்திரங்கள் கழுவி வைக்க வேண்டும்.

மனதில் குழப்பம் தெளிந்து கொண்டே வந்தது. ஐந்தரை மணிக்குக் குளிக்கப் போனேன். ஏதாவது புத்தகம் கொண்டு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போகாமலேயே போய் விட்டேன். இன்று ஏதாவது புத்தகம் கொண்டு கொடுக்க வேண்டும்.

குளித்து, தியானம் செய்யாமலேயே புறப்பட்டேன். அலுவலகம் நெருங்கும் போது 6 மணி. தொலைபேசினார். புறப்பட்டு விட்டாராம். வண்டி வந்திருக்கவில்லை. அலுவலகத்திற்குள் போய் கணினிப் பையை தயார் செய்தேன், சட்டை மாற்றினேன். தண்ணீர் சுட வைத்து எலுமிச்சை தேநீர் குடித்தேன். அது வரை வண்டியைக் காணாமல் இருக்கவே தொலைபேசி பேருந்தைப் பிடித்து விடச் சொன்னேன்.

வெளியில் வந்து திரும்பினால், அங்கு ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது. முகவரி தேடிக் கொண்டிருந்தார். ஏறிக் கொண்டு ஏறியிருந்த பேருந்திலிருந்து இறங்கி குமணன் சாவடியில் இறங்கிக் காத்திருக்கச் சொன்னேன். வண்டியில் டீசல் நிரம்பி இருந்தது. அந்தச் செலவைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை.

குமணன் சாவடியில் ஏறிய பிறகு சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டேன். சுங்குவார்ச் சத்திரம் தாண்டி அறுசுவை அரசு விடுதி அருகில் சாப்பிடலாமா என்று பாலா கேட்கும் போதுதான் விழித்தேன். தூக்கமும் தியானமும் கலந்து உட்கார்ந்திருந்தேன்.

அறுசுவை அரசில் ஒரு பெரிய வைணவ குடும்பம் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அழகான இளம் அம்மாக்கள் இரண்டு பேர். 2 இட்லிகள், பூரி, தேநீர் சாப்பிட்டுக் கொண்டேன்.

எட்டரை மணிக்கு வாலாஜா, குட்லெதர் வந்து விட்டோம். சரி செய்ய வேண்டிய நிரலை ஓட விட்டு விட்டு, அறிக்கைகளைப் பார்ப்பதில் முனைந்தேன். விவாதிக்க வேண்டிய குறிப்புகளையும் தயாரித்துக் கொண்டிருந்தேன். 10 மணி வரைதான் ராணிப்பேட்டையில் இருப்பேன் அதற்குள் வந்து விடு, பேசலாம் என்று சொல்லியிருந்த சாரைக் காணவே இல்லை. சாரிடம் காலையிலேயே கேட்டிருந்திருக்கலாம். சொல்லவும் செய்தார்.

11 மணிக்கெல்லாம் சாரையும் காணவில்லை. சாருக்குத் தொலைபேசினால், இரவில் திட்டம் மாறி ஞாயிற்றுக் கிழமையே சென்னை திரும்பி விட்டதாகச் சொன்னார். கோபம் வந்தது. இப்படி ஒருவரைக் காலையில் வரச் சொல்லியிருக்கிறோமே என்று தோன்றி, தகவல் தெரிவிக்கச் சொல்லவில்லையே என்று தோன்றியது. எப்படியும் பார்த்துக் கொண்டு போகட்டும் என்று தோன்றியிருக்கலாம்.

2 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் இருக்க வேண்டும். தேடிப்பிடித்து அழைத்து வந்தோம். எடுத்து வைத்திருந்த அறிக்கைகளை ஒவ்வொன்றாக பார்வை இட்டார். கவனமாக எல்லாவற்றையும் நுணுக்கமாக கேள்விகள் கேட்டு அலசினார். ஒரு வகையில் சார் இல்லாமல் இருந்தும் நல்லதுதான். இடையில் சார் தொலைபேசி, மதிய சந்திப்பு உறுதிதானே என்று கேட்டுக் கொண்டார்.

சாரிடம் இனி வரும் மாதங்களில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் கொடுத்து விட்டேன். அதிலேயே கட்டண விபரங்களும். பணம் கேட்டால், இன்னும் ஓரிரு நாட்களில் கிடைத்து விடும் என்கிறார். ஓரிரு நாட்களில் என்ன குடி முழுகிப் போகும் என்கிறார்.

முடித்துக் கிளம்பும் போது ஒன்றே கால். ஓட்டுனரிடம் விபரம் சொன்னதில் வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். வேகமாகப் போக வேண்டும் என்று நான் சொல்லாமலேயே விரட்டி விரட்டி ஓட்டினார். அரை மணி நேரத்துக்குள் காஞ்சிபுரம். ஸ்ரீபெரும்புதூர் வரும் போது இரண்டே கால். இரண்டரைக்கு போய்ச் சேர்ந்து விட்டோம்.

அறையில் காத்திருந்தார். கூட்டங்கள் நடக்கும் அறைக்குள் உட்கார்ந்து விபரங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட அவர்கள் தரப்பில் குறைபாடுகள் இருப்பதாகத்தான் பேச்சுக்கள் போயின. நீங்கள் ஆரம்பத்திலேயே எச்சரித்திருக்க வேண்டும் என்று பந்தை நம் மீது அடித்தார். அதை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி விட்டு நடைமுறை விபரங்களைப் பார்த்தேன்.

சார் அற்புதமான தெளிவுடன், சிக்கல்களை கத்தரித்துக் கொண்டே போனார். இவர் ஆரம்பத்திலிருந்தே ஈடுபட்டிருந்தால் இன்னும் வேகமாக முடித்திருப்போம். மிகவும் சொதப்பி விட்டார்.

நாலரை மணி வரை அது போனது. சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினேன். அலுவலகத்துக்குப் போய் சாப்பிட்டு விட்டு ஆறரை சந்திப்புக்குப் போகலாம். பணம் கட்டவில்லை என்று ரோமிங் வசதியைத் துண்டித்திருந்தார்கள். சென்னைக்குள் வந்ததும் மீண்டும் உயிர் வந்தது. அழைப்புகளை பெறலாம், அழைக்க முடியாது.

மதியம் தனது வங்கிக் கணக்கு மூலம் கட்டலாம் என்று சொல்லியிருந்தார். தகவல்களுக்கும் பதில் போட முடியவில்லை. முகம் சலிப்பில் கோணியிருந்தது. போரூர் வந்து அலுவலகம் சேரும் போது 5 மணி தாண்டி விட்டிருந்தது. முதலில் ரசமும் வாழைக்காய் துவரனும் அமிர்தமாக சுவைக்க சாப்பிட்டு முடித்தேன். மட்டும் இருந்தார்கள். அலுவலகத்தில் மின்சாரம் தடைப்பட்டு விட்டதால் பகலில் எல்லோரும் கிளம்பிப் போய் விட்டிருந்தார்கள்.

கிளம்பும் போது ஆறு மணி தாண்டி விட்டது. அழைத்து ஏன் குறுஞ்செய்திக்குப் பதில் போடவில்லை என்று கேட்டாள். நாளின் நோவுகளை அவளிடம் சொல்லி அழுதேன். தலைக்கவசத்தை எடுத்துப் போயிருந்தார். அவருக்குக் காத்திருந்து அதை வாங்கிக் கொண்டுப் புறப்பட்டேன். மவுண்ட் பூந்தமல்லி சாலையைப் பிடித்து அதிக வாகன நெரிசல் இல்லாமல், கத்திப்பாராவைக் கடந்து, ஆளுனர் மாளிகை அருகிலான ஒரு வழிப் பாதையில் வேகமாக ஓட்டி சரியாக ஆறரை மணிக்கு போய்ச் சேர்ந்து விட்டேன்.

ஏழு மணிக்கெல்லாம் கூட்டம் தொடங்கி விட்டது. முதலானோர் வந்தார்கள் ஒவ்வொன்றாக மயிர் பிளப்பதாக விவாதங்கள் நடந்தன. ஆண்டறிக்கை, விதிகளை மாற்றி அமைப்பது, வரவு செலவு அறிக்கை என்று விவாதித்தார்கள். நானும் அழுத்தமாக ஓரிரு கருத்துக்களை முன் வைத்தேன்.

புதிய குழுவினர் பதவி ஏற்றார்கள். என்னையும் அறிமுகம் செய்து வைத்தார். மொத்தம் 10 செயற்குழு உறுப்பினர்களாம். நான் ஒரு வாக்கியத்தில் முடித்து விட வேண்டும் என்று போய் நான்கைந்து வாக்கியங்கள் பேசி விட்டேன்.

சாப்பாடு. சோறு, பூரி, உருளை, காலிபிளவர் வறுவல். தயிர் சாதம். கடைசியில் காரட் அல்வா. பேசிக் கொண்டே சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். அலுவலகம் வந்து சேரும் போது 10 மணி. 2 குறுஞ்செய்திகள் அதற்குள். பதிலாக அருகிலிருந்த பொதுத் தொலைபேசியில் அழைத்தேன். என் தொலைபேசி உயிரை விட்டு விட்டதாகச் சொல்லி விட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

வீட்டுக்கு வந்து தியானம் செய்து விட்டுப் படுத்துத் தூங்கி விட்டேன். காலையில் நல்ல உறுதியான கனவுகளுடன் மூன்றரை மணிக்கு விழிப்பு. 4 மணிக்கு எழுந்தேன். இப்போது எழுத்து.

இன்று மதியம் பல்லாவரம் போக வேண்டும். காலை முழுவதும் வர வேண்டிய பணத்தைத் துரத்த வேண்டும். இதை முடித்து விட்டு 20 நிமிடங்கள் உலாவப் போக வேண்டும். குடிக்கத் தண்ணீர் பிடித்து வர வேண்டும். தரை தூத்து, பொருட்களைத் துடைத்து வைக்க வேண்டும். அதன் பிறகு குளித்துப் புறப்பட வேண்டும். சாப்பிடுவதற்கு ஏதாவது செய்து கொள்ளலாம். அரிசியும் உளுந்தும் போட்டுக் கஞ்சி வைத்து பால் ஊற்றிக் கொள்ளலாம்.

ஞாயிறு, ஏப்ரல் 27, 2008

கோபமும் பாசமும்

புத்தகங்கள் எல்லாம் இரண்டு நாட்களாக அடுக்கி ஆகி விட்டது. தூங்கும் அறையில் இருக்கும் அலமாரியில் மூன்று தட்டுகள், சாமிப் படங்கள் வைத்திருக்கும் அறையில் இரண்டு அடுக்குகள் என்று முடிந்து விட்டது. கூடவே இருந்த குறுந்தகடுகள், ஒலி நாடாக்களை தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கும் மேசையினுள் வைத்து விட்டேன்.

ஒரு மாதத்துக்குள் எல்லா புத்தகங்களையும் தேவைப்படுபவர்களுக்குப் பொருத்தமானவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்று உறுதி. முதல் நாளில் காந்தி திரைப்பட குறுவட்டுகள், பெஞ்சமின் பிராங்கிளின் சுயசரிதை, பயிற்சி மாணவர்களுக்கு ஒவ்வொரு புத்தகமும் கொடுத்து விட்டேன். நேற்று ஆர்தர் ஹீலியின் வீல்ஸ் என்ற கதை, குவாண்டம் இயற்பியல் குறித்த இன் செர்ச் ஆஃப் ஷ்ரோடிங்கர்ஸ் கேட் என்ற புத்தகங்களை முறையே கொடுத்தேன்.

மதியம் சாரைப் பார்க்கப் போகும் போது கீ டு ஹெல்த் என்ற காந்தியின் உணவுப் பழக்கங்கள் குறித்த புத்தகம் அவருக்குக் கொடுத்து விட்டேன். தரையில் இறங்கும் விமானங்கள். தலைமைச் செயலகம் - சுஜாதா, இன்னும் கொடுக்கவில்லை. விஞ்ஞானச் சிறுகதைகள் - சுஜாதா.

புத்தகங்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எப்படி விட்டு வந்தேனோ அதே நிலையில் இருந்தன. நன்றாகப் பராமரித்து வந்திருக்கிறாள். புதன் கிழமை மாலையில் மெனக்கெட்டு காரில் அவ்வளவையும் ஏற்றி இங்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறாள். என்ன விதமான அன்பு என்று பிடிபடவில்லை. 'இப்படிப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தது உன் அன்பை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த செயல்களில் ஒன்று' என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.

'உன் மற்றப் பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். சந்தோஷமாக இருந்து கொள்' என்று பதில். அடுத்ததாக, 'எல்லாவற்றையும் கொடுத்து உன்னை விடுவித்து விடுகிறேன்'

'நான் வாழ்நாள் முழுவதும் உன் மீது அன்பு செலுத்திக் கொண்டே இருப்பேன்' என்று அனுப்பினேன். 'முதலில் அன்பு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள். அப்புறம் உன் வாழ்க்கைக்குப் பொருத்தமான ஒருவரிடம் அதைச் சொல்' என்று பதில். 'அன்பின் வடிவைத் தெரிந்து கொள்ள வாழ்நாள் முழுவதும் முயன்று கொண்டே இருப்பேன். ஆனால், உன் இதயத்தில் உயர்ந்த இறை அன்பு குடிகொண்டிருக்கிறது' என்று அனுப்பியதும் பல மணி நேரங்களுக்குப் பதில் இல்லை.

வியாழக் கிழமை மதியம் பெரியமேட்டுக்குப் போகும் வழியில் தொலைபேசி அடித்தது. முதலில் வண்டியை நிறுத்தி எடுக்கவில்லை. அடுத்த ஐந்து நிமிடங்களில் மீண்டும் அடித்தது. 'என்னதான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாய். எதற்கு இந்த மாதிரி எல்லாம் குறுஞ்செய்தி அனுப்புகிறாய்?'
'புத்தகங்களை இரண்டு ஆண்டுகளாகப் பராமரித்து இவ்வளவு முயற்சி எடுத்து என்னிடம் கொண்டு சேர்த்தாயே, அதை நினைத்து தாளவே முடியவில்லை. காலையில் கண் விழித்ததும் அதுதான் முதலில் மனதை நிறைத்தது. அதுதான் அப்படி செய்தி அனுப்பினேன். எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை'

'என்னுடைய பொருட்கள் என்று பராமரித்து வந்தேன். நான் உன் வாழ்க்கைக்குப் பொருத்தமானவள் இல்லை என்று நீ சொல்லி விட்ட பிறகு அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவது எதற்கு என்றுதான் திருப்பிக் கொண்டு கொடுத்து விட்டேன்''

பின்னிரவில் வரிசையாக 3 குறுஞ்செய்திகள். 'உன் வாழ்க்கைக்கு நான் பொருத்தமில்லாதவள் என்று சொல்லி விட்டாய். உன் மீது காதல் வைத்து என் மாநிலத்தை மக்களை விட்டு வந்தேன், என்னை எப்போதும் தனியாக விட்டு விட்டுப் போய் விடுகிறாய்.'

அவள் வாழ்க்கையில் நான் பொருந்த மாட்டேன் என்றுதான் சொல்லியிருந்தேன். அதை விவாதப் பொருளாக்கத் தேவையில்லை. அவள் புரிந்து கொண்டதும் சரிதான். அவள் வாழ்க்கையில் நான் பொருந்த மாட்டேன் என்றால் அவள் என் வாழ்க்கை முறைக்கு முரணாக இருக்கிறாள் என்பதுதானே பொருள்.

அவளால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னைத் தவறானவள் என்று சொல்லி விட்டாய் என்று துடிக்கிறாள். உடனே பதில் போடாமல், வெள்ளிக் கிழமை மாலையில் பெரியமேட்டிலிருந்து திரும்பி வரும் போது கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி வண்டியை நிறுத்தி பதில் எழுதினேன். 'என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை! உன்னை நான் நேசிக்கிறேன்'

வெள்ளிக் கிழமை காலையில் தரை தூத்து துடைத்து முடித்திருந்தேன். நேற்றுக் காலையில் ஜன்னல், கதவுகளைத் தூசி தட்டி, கழிவறைகளைக் கழுவி விட்டு துணி துவைத்தேன். குளித்து விட்டு தியானத்தில் உட்காரும் முன்பு ஒரு தொலைபேசி அடித்தேன். மணி அடித்ததும் எடுக்கவில்லை. நான் துண்டித்து சில நிமிடங்களில் அவளே அழைத்தாள். தூங்கிக் கொண்டிருக்கவில்லையாம். வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறாள். முக்கியமான தோல் விற்பனை நடந்தாக வேண்டுமாம்.

கனிவான, கோபங்கள் வடிந்து விட்ட குரல். சரியாக 6 நாட்கள் ஆகியிருக்கின்றன. 'சும்மாதான் கூப்பிட்டேன். நாள் நன்றாக அமையட்டும்' என்று சொல்லி வைத்து விட்டேன். பிற்பகலில் அழைப்பு. வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறாளாம். 'காலையில் என்ன திடீரென்று அப்படிக் கூப்பிட்டாய்.' சிறப்பாக எதுவும் இல்லை என்று சொல்லி விட்டு பொதுவான விசாரிப்புகளைச் செய்து வைத்து விட்டோம்.

மாலையில் நான் படுத்துத் தூங்க ஆரம்பித்து விட்ட பிறகு அழைப்பு. 'என்சான்டட் படத்துக்கு என்னை அழைத்துச் சென்றதற்கு ஏதாவது உள் நோக்கம் இருக்கிறதா. அதுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்கு ஏன் கூப்பிட்டுச் சென்றாய் என்று'

'கொஞ்சம் லைட் படமாக இருக்க வேண்டும். நல்ல அரங்கமாக இருக்க வேண்டும் என்றுதான் அதைத் தேர்ந்தெடுத்தேன். அதன் கதைப்பின்னணி எல்லாம் பார்த்து திட்டமிடவில்லை'

அந்தப் படத்தில் இளவரசி கனவுலகத்திலிருந்து நியூயார்க்கில் வந்து விழுந்து விடுகிறாள். கனவில் காதலிக்கும் இளவரசன் அவளைப் பின்தொடர்ந்து துரத்தி வருகிறான். நியூயார்க்கில் வக்கீலாக இருக்கும் ஒருவரால் காப்பாற்றப்படுகிறாள் இளவரசி. படம் முடியும் போது இளவரசியும் வக்கீலும், வக்கீலின் நண்பியும் இளவரசனும் காதல் வயப்பட்டு மணந்து கொள்கிறார்கள்.

இதில்தான் உள்ளர்த்தத்தைத் தேடுகிறாள். அவர்களைப் போல நாமும் சரியான இணை இல்லை, மாற்று இணைகளைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்வதாக நினைக்கிறாள்.

அப்படி இல்லை என்று சொல்ல வேண்டும். இதை முடித்ததும் தொலைபேசியில் அழைத்துப் பேச வேண்டும்.

1. வாழ்க்கை முறையில்தான் பொருந்தாமல் இருக்கிறோமே தவிர, மனதளவில் பல நிலைகளில் மிகச் சரியான பொருத்தம் இருக்கிறது. அவளது எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொள்வது எல்லோராலும் முடியாது. என்னைப் புரிந்து கொண்டு தலையில் தட்டி வைப்பதும் எல்லோராலும் முடியும் காரியம் இல்லைதான்.

2. அப்படிப் பார்த்து சேர்ந்த இணைகள்தாம் நாங்கள். அதை நாங்களே புத்திசாலித்தனமாக முடிவு செய்தோமா, அல்லது கடவுளாகப் பார்த்து சேர்த்து வைத்தாரா, அல்லது மேட்ரிக்ஸின் திட்டமிடுதலில் அப்படி அமைந்து விட்டதா என்பது தெரியாது. ஆனால் திருமண வாழ்வில் இணைக்கப்பட்டது முக்கியமான ஒரு நிகழ்வு.

ஒரு இணை பிடிக்கா விட்டால், உதறி விட்டு, சட்டையை மாற்றுவது போல மாற்றி விட்டு இன்னொருவரைத் தேடிப் போவது விலங்கு உலகத்தில் இருக்கலாம். மனிதர் விலங்கிலிருந்து வந்தாலும், சமூக நெறிகளில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்நாள் முழுவதும் பந்தம் விட்டுப் போகாமல் வாழ்வதுதான் மனிதரை விலங்குகளிலிருந்து தனிப்படுத்திக் காட்டுவது. அதை விட்டு விட்டு விருப்பம் போல வாழ ஆரம்பித்து விட்டால் சமூக அமைப்பே குலைந்து விடும்.

சொன்னது போல அவளது பாவங்களுக்குப் பரிகாரமாக நான் அவள் வாழ்வில் வந்திருக்கிறேன். அவள் சொன்னது, நான் ஒரு சுமையாக வந்திருக்கிறேன் என்ற பொருளில். பாவங்களைக் கழுவி விடும் புனிதனாக இருக்கிறேன் என்று நான் நினைத்துக் கொள்கிறேன். அவளது மனதில் உதிக்கும் நூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு விடைகள் என்னிடம்தான் இருக்கின்றன.

இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான் நான் அவள் வாழ்வில் வந்திருக்கிறேன். பிறவிக் கருமங்களைத் தொலைத்து உன்னத நிலையை அடையை அவளுக்குக் காட்டப்பட்ட வழி என்னுடனான வாழ்க்கை.

எனக்கு அன்பு செலுத்தத் தெரியவில்லை. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஒருவர் மீது முழுவதும், பைத்தியம் பிடித்தது போல அன்பு செலுத்துவது எனக்குக் கை கூடுவதில்லை. என் மீது, குழந்தைகள் மீது ஏன் உடமைகள் மீது வைத்திருக்கும் அன்பும், பற்றும் எந்த கேள்விகளும் கேட்காதது.

எனக்குக் கொடுக்கப்பட்ட இவற்றை நான் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன தேவையோ அதைச் சரிவரச் செய்ய வேண்டும்.

நான் என்னிடம் கொடுக்கப்பட்டவற்றை அலட்சியம் செய்வது, அழிப்பது என்ற குணங்களைக் கொண்டிருந்தேன். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சரி செய்து கொள்ள முடிகிறது. வாழ் நாள் முழுவதும் பேசிப் பழகிக் கொண்டிருந்தால் மேலே மேலே உன்னத நிலையை அடைய முடியும்.

அவள் தன்னைச் சுற்றி இருப்பவற்றைப் பார்த்துக் கொள்வதோடு நிறுத்தி விட்டு பற்றறுத்து விடுவதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு பேருக்கும் ஒருவருக்கொருவர் கொடுக்க ஏராளம் இருக்கிறது.

இதை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

முதல் விதி: எந்த விதமான எதிர்மறை எண்ணங்களுக்கும் இடம் கொடுத்து விடக் கூடாது.
இரண்டாவது : என்னை மேம்படுத்திக் கொள்ளப் போய் அவளது குறைகளையும் பற்றிக் கொண்டு விடக் கூடாது.
மூன்றாவது : எளிய சேவை வாழ்க்கை வாழும் அதே நேரத்தில் நிறைவான சேவையின் அடையாளமான பொருள் ஈட்டலையும் பராமரித்தலையும் கவனமாகச் செய்து வர வேண்டும்.

திங்கள் கிழமை மதியத்துக்கு மேல் சாரைப் பார்த்தேன். அவரிடம் திட்டமிட்டிருந்தது போல் பேசி விட்டு விபரங்களை விளக்கி விட்டேன். நாம் செய்யும் பணிக்கு ஈடாக வேறு இடத்தில் பல மடங்கு செலவாகும். கால அளவும் இதற்குக் குறையாமல் ஆகத்தான் செய்யும் என்று விளக்கியதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகப் போயிற்று.

வியாழக் கிழமை போகும் போது மதிய உணவுக்குப் பிந்தைய கிறக்கத்தில் இருந்தார். பணம் குறித்துப் பேச முடியவில்லை. நாளைக்குப் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி விட்டார். வெள்ளிக் கிழமை தொலைபேசினால் அவரிடமும் பேச முடியவில்லை, சாரிடமும் பேச முடியவில்லை. நேற்றுக் காலையில் 9 மணிக்கெல்லாம் அழைத்ததும், நினைவிருக்கிறது, மதியத்துக்கு மேல் வா என்று சொன்னார். பதினொரு மணிக்கு சாரும் அழைத்து முந்தைய நாள் பதிலுக்கு அழைக்காததற்கு வருத்தம் தெரிவித்து விட்டு இன்று வந்து விடும்படிச் சொன்னார்.

உடனேயே கிளம்பாமல் சாப்பிட்டு விட்டு 2 மணிக்குக் கிளம்பினேன். அலுவலகத்துக்கு கீழே வண்டியை வைத்து விட்டு நுழையும் போது ஓட்டுனர் சாப்பாட்டுப் பாத்திரத்தையும் பையையும் எடுத்துக் கொண்டு வந்தார். வெளியே கிளம்பி விட்டாரோ!

மேலே போய் உட்கார்ந்து சில நிமிடங்களில் அழைத்து விட்டார். 'இன்னும் முடியலையாமே, ஏதோ கோளாறு இருக்குதாமே' என்று ஆரம்பித்தார். உட்கார்ந்து பேசக் கூட நேரமில்லை, அவசரத்திலேயே பேசிக் கொண்டே கிளம்பி விட்டார். பணம் அதிகம், வரும் மாதங்களில் என்ன ஏற்பாடு என்றெல்லாம் சொல்லிக் கொண்டே, திங்கள் கிழமை காலையில் ராணிப்பேட்டையில் பார்க்கலாம் என்று கிளம்பி விட்டார். அவசரத்தில் ஆரோக்கியத் திறவுகோல் புத்தகத்தையும் திணித்து விட்டேன். மதியம் சாப்பிடாதது போலத் தெளிவாகத்தான் தெரிந்தார்.

நேற்றுக் காலையில் 7 மணிக்குத் தலைமைப் பண்பு வளர்க்கும் கூட்டம். மனம் கலங்கிப் போய்த்தான் இருக்கிறார். வேலை செய்வதிலும் சுணக்கம் அதிகமாகத்தான் தெரிகிறது.

நாம் செய்யும் வேலை வாடிக்கையாளருக்குச் சரிவரப் போய்ச் சேர வேண்டும். வேலையின் அளவை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கறாராக பணி முடிந்ததும் பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். மிகவும் தாழ்ந்து போய் விடக் கூடாது. பயனர் இடைமுகம் எளிமையாக்கப் பட வேண்டும். வாடிக்கையாளருக்குத் தேவையானதை செய்து கொடுக்க வேண்டும்.

இப்போது நாம் செய்யும் பணி நன்றாகவே இருக்கிறது. இதை தரத்தை தவறாமல் கடைப்பிடித்தால் நன்கு வளர்ச்சி அடையலாம். பொதுவான பொருளாதாரச் சூழல் சுணக்கமாகவே இருக்கிறது. நாம் நிச்சயமாகத் தாக்குப் பிடிக்கலாம் என்று விளக்கினேன்.

வெயிலில் வேலை ஓடவே மாட்டேன் என்கிறது. இன்றைக்கு புராஜெக்ட் மேனேஜ்மென்ட் குறித்து திட்டமிடலையும் வரையறுத்தலையும் செய்து கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர் உறவு குறித்து விளக்க வேண்டும். திருப்பெரும்புதூர் குறித்து விபரங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதை முடித்து விட்டுக் குளித்து விட்டுப் புறப்பட வேண்டியதுதான். பயறுக் கஞ்சி வேக வைக்கப் போட்டு விட்டேன். குளித்துத் தயாராக 7 மணி. தியானம் - 7.20 வரை. கஞ்சி குடித்தல் ஏழே முக்கால் வரை. 8 மணிக்கு அலுவலகம் போய் விடலாம். புத்தகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பேச வேண்டும். அவள் பேசுவதைக் கேட்க இல்லை, அவள் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்ல. நான் சொல்வது எங்கே போய்த் தைக்கிறது, எப்படிப் பாதிக்கிறது என்பது புரியாத புதிர்தான். மேலே எழுதியவற்றைச் சொல்லி விட வேண்டும்.

நாளைக்கு அதிகாலையில் எழுந்து பேருந்தைப் பிடித்து விட வேண்டியதுதான். 6 மணிக்கு போரூரில் பேருந்து ஏறினால் 8 மணிக்கு வாலாஜா. சாப்பிட்டு விட்டு 9 மணிக்கெல்லாம். 11 மணிக்கு அங்கிருந்து பேருந்தைப் பிடித்தால், 1 மணிக்கு திரும்பெரும்புதூர். 2 மணிக்கு்.

நாலரை - ஐந்து மணிக்கு அங்கிருந்துக் கிளம்பினால், நேராக போய் விட வேண்டும். 6 மணிக்கு, அதைத் தொடர்ந்து மாலை உணவு.

மாற்றாக கார் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். ஆறரை மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பினால், எட்டரைக்கு. பதினொன்றரைக்கு அங்கிருந்து கிளம்பினால் 1 மணிக்கெல்லாம். 5 மணிக்கு அங்கிருந்து கிளம்பினால், 6 மணிக்கு.. பேருந்தில் அல்லாடினால் உடம்பும் தளர்ந்து விடும், மூன்றையும் சரிவரச் செய்யவும் முடியாது. பார்க்கலாம்.

வியாழன், ஏப்ரல் 24, 2008

அன்பின் வெளிப்பாடுகள்

செவ்வாய்க் கிழமை கிளம்பிப் போய் புதன் கிழமை காலையில் மயிலாடுதுறையில் மீனாட்சியின் திருமண விழாவுக்குப் போய் விட்டு சிதம்பரம், பிச்சாவரம் போய் விட்டுத் திரும்புவதற்காக ஒரு வேன் எடுத்திருந்தார்கள். விஜயன் சார் புதன் கிழமை என்னை வரச் சொல்லியிருந்ததால், நான் கடைசி நிமிடத்தில் பின்வாங்கி விட்டிருந்தேன். செவ்வாய்க் கிழமை பகலில் அப்துல் சார் அழைத்து விஜயன் சாருடன் சந்திப்பு வியாழக்கிழமை என்று தெரிவித்தார்.

அலுவலகத்துக்கு விடுமுறை விட்டும் நான் கல்யாணத்துக்குப் போகவில்லை என்று மகாதேவன் சார் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் விஜயன் சாரிடம் சொல்லி சந்திப்பு நாளை மாற்றச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.

நெட்4இந்தியாவில் கணினி தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. போய் வெளியில் எடுத்துப் பார்த்தால் எந்தக் கோளாறும் இல்லை. திரும்பி வைத்து விட்டு அலுவலகம் திரும்பினேன். வழியில் பிக்பஜாரில் பரிசுப் பொருள் ஏதாவது வாங்கப் போய்ப் பார்த்தேன். வெகுமதிச் சீட்டுகள் வாங்கும் முறை இல்லையாம். 3000 ரூபாய்களுக்கு டிவிடி இயக்கி வாங்கிக் கொண்டேன். கணினியிலிருந்தும், யுஎஸ்பி சேமிப்புக் கருவி வழியாகவும் பாடல்களையும் படங்களையும் இயக்கிக் கொள்ளும் வசதியுடன் இருந்தது.

5 மணிக்குக் கிளம்ப வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள், நான் அலுவலகம் வரும் போதே ஐந்தே முக்கால். வீட்டுக்குப் போய் துணிகளை எடுத்து விட்டு வருவதாகச் சொன்னேன். வீட்டிலேயே காத்திருக்கும் படியும் இந்த வழியாக வந்து கூப்பிட்டுக் கொள்வதாகவும் சொன்னார்கள். வீட்டுக்கு வந்து துணிகளை ஒரு பையில் அடைத்துக் கொண்டேன். மறக்காமல் பல் தேய்க்க, முகம் மழிக்க, குளிக்க, தலை சீவ உதவிப் பொருட்களையும் எடுத்துக் கொண்டேன்.

இங்கே உட்கார்ந்திருப்பதை விட லட்சுமி பவனில் போய்ச் சாப்பிடலாம் என்று போய் சப்பாத்தி, பால் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தேன். வண்டி இன்னும் வந்த சேர்ந்த பாடில்லை. வழியில் வாகன நெரிசலில் மாட்டிக் கொண்டிருக்கிறதாம். வண்டியில் ஏறி ஓட்டுனர் இருக்கைக்குப் பின் வரிசையில் பிரமீளா உட்கார்ந்திருந்த இருக்கையில் இடம். நடைபாதையைத் தாண்டி ஒற்றை இருக்கையில் சூர்யா.

கலகலப்பாகப் பேசிக் கொண்டே பயணித்தோம். வழியில் வரும் இடங்களைப் பற்றி, கேள்வி பதில், பாட்டுக்குப் பாட்டு என்று போனது. இடையில் துஷாரிகாவின் அழைப்பு, 'நீ அனுப்பும் செய்திகளை நீ மனமார நம்பவில்லை, அது எனக்கும் தெரியும், ஏன் தொந்தரவு செய்கிறாய்' 'நான் முழுதும் நம்புவதை மட்டுமே எழுதி அனுப்புகிறேன்' என்று பதில்

முதலில் ஓட்டுனர் நிறுத்திய இடத்தைப் புறக்கணித்து, பிருந்தாவன் என்று உணவு விடுதிக்குள் நிறுத்தி இறங்கினோம். இடத்தைப் பார்த்ததும் நானும் 2 இட்லிகளை சாப்பிட்டுக் கொண்டேன். சந்தீப் வாங்கிய இடியாப்பங்களில் 2ம் கிடைத்தன. பெரிய அளவில் ஜெயலலிதாவின் புகைப்படம் மாட்டியிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து விட்டு சூர்யாவும் பிரமீளாவும் முடிக்கக் காத்திருக்கும் போது தொலைபேசி மணி.

'நாளைக்கு 9 மணி அளவில் வீட்டில் இருப்பாயா, உன்னுடையப் பொருட்களை கொண்டு தரப் போகிறேன்.' 'சரிம்மா, ஓனக்கு என்ன வேணுமோ அப்படியே செய்'.

திரும்பி வந்து வண்டியில் ஏறிக் கொண்டோம். ஏனோ மனம் வலித்தது. குழந்தைகளை நினைத்து மனதை நோகடிக்க முயன்றேன். பேச்சு எல்லாம் நின்று அமைதியாக உட்கார்ந்திருந்தேன். சூர்யாவுக்குத் தாங்க முடியவில்லை. 'ஏதாவது பேசுங்க சிவா' என்று வெளியே இழுத்து விட்டார்.

அந்த மணிகளில் திடீரென்று தோன்றியது. 'நான் ஏன் இந்த விஷயங்களைப் பெரிதாக நினைத்துக் குழப்பிக் கொண்டிருக்கிறேன். இத்தகைய நிகழ்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் மட்டும் கொடுத்து விட்டு மகிழ்ச்சியாக அமைதியாக நமது பணிகளைப் பார்த்துக் கொண்டு போக வேண்டும்.'

மயிலாடுதுறை போய்ச் சேரும் போது நள்ளிரவு தாண்டி மணி ஒன்றரை மணி ஆகியிருந்தது. தங்க ஏற்பாடு ஆகியிருந்த விடுதியில், இடம் பிடித்துக் கட்டையைச் சாய்க்கும் போது இரண்டே முக்கால். ஐந்தரை வரை தூங்கினேன்.

தூங்கி எழுந்திருக்கும் போது மனம் லேசாகப் போயிருந்தது. இது போல நடப்பவற்றை போட்டு மனதைக் குழப்பிக் கொள்வது மற்றவர்களுக்குச் செய்யும் அநீதி ஆகாதா! துஷாரிகாவின் பேச்சுக்களும் செயல்களும் என்னை பாதித்துக் கொண்டிருந்தால், வேறு எந்த வேலையையும் உருப்படியாகச் செய்ய முடியாமல் போய் விடும்.

குளித்துக் கிளம்பி ஆறரை மணி வாக்கில் நடந்தே திருமணக் கூடத்துக்குப் போனோம். சுபாஷிணி வரவேற்பு மேசைக்கருகில் நின்று கொண்டிருந்தார். மேல் தளத்தில் திருமணக் கூடம். தரைத்தளத்தில் சாப்பாட்டுக் கூடம். மேலே போய் உட்கார்ந்தோம். நீளமான சடங்குகள் தொடர்ந்து கொண்டிருந்தன. மாப்பிள்ளையும், பெண்ணும் செய்ய வேண்டிய சடங்குளை ஒவ்வொன்றாக செய்ய வைத்துக் கொண்டிருந்தார்கள். தாலி கட்டி முடித்து சில நிமிடங்களில் சாப்பிடக் கிளம்பி விட்டோம்.

பொங்கல், வடை, பூரி, குட்டி ஊத்தப்பம், இட்லி, இனிப்பு என்று பல வகை உணவுகள். 2 பூரி, 2 இட்லி, 2 ஊத்தப்பம், பொங்கல், வடை, இனிப்பு என்று நிறைய சாப்பிட்டு முடித்தேன். காபி குடிக்கும் போது மனதின் வேகத்தில் கை தவறி சட்டையில் கொட்டிக் கொண்டது. துஷாரிகா கண் விழித்து கொடுத்த சாபம் என்று நினைத்துக் கொண்டேன்.

திரும்பவும் மேலே போய்க் கொஞ்ச நேரம் காத்திருந்து மணமக்களைச் சந்தித்து வாழ்த்தி விட்டுப் புகைப்படம் பிடிக்க நின்று விட்டு வந்தோம். அப்படியே கிளம்ப வேண்டியதுதான். வேனுக்கு அருகில் சுபாஷிணி வந்து அருகில் இருப்பது தான் சின்ன வயதில் படித்த பள்ளி என்று சொன்னார். கூடவே இன்னொரு பெண், அவரது தோழியாக இருக்கலாம். இரண்டு பேரும் பேசி வைத்துக் கொண்டு என்னிடம் வந்து பேச்சுக் கொடுக்கிறார்கள் என்று தோன்றியது. வழக்கம் போல கடி ஜோக் சொல்ல முயன்று பள்ளியைப் பார்க்க முயற்சிக்காமலேயே நகர்ந்து விட்டேன்.

ஒரு இடத்துக்குப் போனால், முனைப்பெடுத்து பேசுவது, சில செயல்களைச் செய்வதைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்போதும் போல மற்றவர்கள் நம்மிடம் வந்து பேசுவார்கள் என்று ஒதுங்கி இருப்பது சரியில்லை. கொஞ்சம் தன்னம்பிக்கையும், அடுத்தவர் மீதான அன்பும் அதிகரித்தால்தான் அது சாத்தியமாகும்.

சிதம்பரத்தில் இறங்கி நான் பேருந்து பிடித்து சென்னை திரும்பி விடுவதாக முடிவு. மற்றவர்கள் சிதம்பரம் கோவில், பிச்சாவரம், கார்த்தி வீடு என்று போய் விட்டு வருவார்கள். 7 பேர் வரவில்லை. நாச்சியப்பா, சந்திரகுமார், பிரதீஷ், கதிரேசன், சங்கீதா, தனலட்சுமி, இப்ராஹிம்.

சிதம்பரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் வரும் போதே மாயவரத்திலேயே பார்த்திருந்த குளிருட்டப்பட்ட அரசுப் பேருந்து நின்றிருந்தது. சென்னை போவதுதான். அதில் இருக்கைகளும் நிறைய இருந்தன். ஏறிக் கொண்டு விட்டேன். வழியில் அதிகம் எங்கும் நிற்காமல் வண்டி ஓடியது. வண்டி வேகமாகப் போவதுதான் முடியாமல் இருந்தது.

திண்டிவனத்துக்கு வரும் போது மதியம் 1 மணி. நல்ல பசி. உள்ளே குளிர் வாட்டியது. சாப்பிட நிறுத்த மாட்டார்களாம். 'நேராக சென்னை போய் விடுவோம். இடையில் நல்ல இடம் ஏதும் இல்லை. மூன்று மணிக்கெல்லாம் போய் விடலாம்' என்றார் ஓட்டுனர். குட்டே பிஸ்கெட், லேஸ் சிப்ஸ், ஒரு மாம்பழ பானம் - 29 ரூபாய்கள். திண்டிவனம் தாண்டி நெடுஞ்சாலை பிடித்த பிறகு இன்னொரு திரைப்படத்தை ஓட விட்டார் நடத்துனர்.

திருவருட்செல்வர் என்ற திரைப்படம். எனக்காகவே போட்டது போல. என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்து அரை மணி நேரத்தில் மனமெல்லாம் ஒன்றிப் போய் உட்கார்ந்து விட்டேன். ஒருவரை ஒருவர் மதிப்பது, போற்றுவது, சேவை மனப்பான்மை என்று இப்படி ஒரு மக்கள் வாழ்ந்திருப்பார்களா என்று மனதை வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள்.

அப்பரும் திருநாவுக்கரசரும் சந்திக்கும் இடத்தில் ஆரம்பிக்கும் அவர்களது பெரியபுராண வரலாறு, சேக்கிழாரால் சொல்லப்படுவதாகக் காட்சி அமைப்பு. பல்லக்கில் ஊர்வலமாக வரும் சிறுபிள்ளை திருஞானசம்பந்தர், நாவுக்கரசர் தங்கியிருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அங்கு போக விரும்புகிறார். தான் அங்குதான் இருப்பதாக நாவுக்கரசரின் குரல் வருகிறது. பார்த்தால் பல்லக்குத் தூக்கிகளில் ஒருவராக அவர் நடந்து கொண்டிருக்கிறார். தள்ளாத வயது.

சம்பந்தர் கீழே குதித்து நாவுக்கரசரிடம் அதைக் குறித்து மனம் வருந்த, நாவுக்கரசர், உமையவள் திருமேனி தாங்கி பாலூட்டிய தெய்வக் குழந்தை நீங்கள். அந்த உடலை தாங்கி வருவது தான் பெற்ற பாக்கியம் என்கிறார். இனிமேல் பல்லக்கில் ஏறப் போவதில்லை. இருவரும் சேர்ந்தே பயணிக்கலாம் என்று புறப்படுகிறார்கள்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்று ஆரம்பிக்கும் பாசுரத்தை சம்பந்தரும் மாசில் வீணையும் என்ற பாடலை நாவுக்கரசரும் பாடுகிறார்கள். மூடிக் கிடக்கும் கோயில் கதவைத் திறக்கப் போகிறார்கள். பாடல் பாடி நாவுக்கரசர் திறக்க வைக்க, அதை மூடுவதற்கு சம்பந்தர் பாடுகிறார். அங்கும் ஒருவொருக்கொருவர் தன்னடக்கத்திலும் தொண்டுள்ளத்திலும் போட்டி போட்டுப் பேசுகிறார்கள்.

இந்தக் காட்சிகளைப் பார்ப்பதற்காகவே கத்திப்பாராவில் இறங்காமல், வடபழனி வரை போய் இறங்கிக் கொண்டேன். மனம் பாகாக உருகிப் போயிருந்தது. இறைவன் கொடுக்கும் சோதனைகள் எல்லாம் நம்மை மேம்படுத்துவதற்கு அல்லவா. எதற்கு கோபமும் வருத்தமும் வலிகளும். துஷாரிகா செய்வதெல்லாம் இறைவன் உளப்படி நடப்பவைதான். நான் சிற்றின்ப வளையத்துக்குள் மாட்டிக் கொண்டு என் பணிகளை கவனிக்காமல் விட்டு விடக் கூடாது என்று விடுவிக்கும் திருவிளையாடல்கள்தான் இந்த நிகழ்ச்சிகள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பாதை தவறி விடாமல் ஒழுங்கு படுத்திக் கொண்டே போகும் இறைவனின் கருணையே கருணை.

நம்ம வீடு வசந்த பவனில் பிரியாணியும், பால் பானமும் குடித்தேன். பிரியாணி 50 ரூபாய்கள், பானம் 47 ரூபாய்கள். 100 ரூபாய் மொத்தமாக வாங்கிக் கொண்டார்கள். பேருந்தில் 220 ரூபாய்கள் சீட்டு.

வடபழனி பேருந்தி நிலையம் எதிரில் பகிர்வூர்தி பிடித்து வளசரவாக்கம். பால தண்டாயுதபாணியின் எண்ணை தேடிக் கொண்டே இருந்ததில் வளசரவாக்கம் வந்து விட்டதைக் கூட கவனிக்கவில்லை. லினஸ் சரவணன் தனது பயிற்சி நிறுவனத்தை விரிவுபடுத்துவதாகவும் அதில் பங்கேற்க விரும்புவர்களை பரிந்துரைக்குமாறும் தொலைபேசியிருந்தார்.

அலுவலகம் வந்து சேர்ந்தால் நெட்4இந்தியாவில் கணினி இயங்கவில்லை என்று சேதி. a2hostingல் தளம் இயங்க ஆரம்பித்து விட்டிருந்தது. எப்படி எல்லாவற்றையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தெளிவில்லாமல் ஓரிரு மணி நேரங்கள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒரு வழியாக SSH அணுகல் பெற்று அங்கேயே எல்லா பயன்பாடுகளையும் வைத்துக் கொள்வது என்று முடிவு. முந்தைய நாள் எடுத்துக் கொண்டிருந்த சேமிப்புக் கோப்பை 10 கணினியில் ஏற்றி எஸ்விஎன்னும் தயார் செய்து கொண்டேன்.

ஏ2ஹோஸ்டிங்கில் 10.3 போஸ்ட்கிரெஸ் போட்டிருந்தார்கள். அதனால் சில குளறுபடிகள் வரலாம். மற்றபடி எல்லாம் சரியாக அமைந்து விட்டன.

'நீ சென்னையில்தான் இருக்கிறாயா. நான் எத்தனை மணிக்கு வரட்டும்' என்று கேட்டாள். எல்லாம் நினைவில் இருக்கும். திருமண நிகழ்ச்சிக்கு வெளியூர் போகிறேன் என்று சொல்லியிருந்ததை நன்கு தெரிந்து கொண்டுதான் கேட்கிறாள். அவள் கேள்விக்கு பதில் சொல்லவே சென்னை வந்திருந்தேன் போலிருந்தது. ஏழரை எட்டு மணிக்கு வரலாம் என்று சொல்லி வைத்தேன்.

ஏழரை மணிக்குப் பிறகு அலுவலகத்திலிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டேன். புத்தகங்கள் எல்லாவற்றையும் கொண்டு வருவாள். சோபா, துணிதுவைக்கும் எந்திரம், சாப்பாட்டு மேசை, தரை விரிப்புகள் கொண்டு வருவதற்கு அவளது கார் இடம் போதாது.

வெளியில் யோகேஷ். பதீமுடன் விளையாட ஆரம்பித்தேன். தொலைபேசி நான் வீட்டுக்கு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டாள். இன்னும் 5 நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொல்லி 15 நிமிடங்களில் வந்து சேர்ந்தாள். அவள் வந்ததும் கார் வீட்டு வாசல் அருகில் போவதற்கு வண்டியை நகர்த்தி வைத்து விட்டு வெளியில் குழந்தைகளுடன் விளையாட்டைத் தொடர்ந்தேன்.

தோளைச் சுற்றித் துணியால் போர்த்திக் கொண்டு மிகவும் பலவீனமாகத் தெரிந்தாள். அவள் முகத்தை ஏறிடவோ, பேச முயற்சிக்கவோ செய்யாமல் அவள் வண்டி ஓட்டுனரும், அவளும் எல்லாப் புத்தகங்களையும் உள்ளே கொண்டு சேர்க்கும் வரையிலும் வெளியிலேயே விளையாடிக் கொண்டிருந்தேன். அவளும் பேச்சுக் கொடுக்க முயற்சிக்கவில்லை. இன்னும் சிறந்த முறையில் நடந்து கொண்டிருந்திருக்கலாம்.

அவர்கள் கிளம்பிப் போனபிறகு வந்து பார்த்தால், புத்தகங்கள், முதல்முதலில் வாங்கிக் கொடுத்த கரடிப் பொம்மை, இப்போது வாங்கிக் கொடுத்த துவட்டும் துண்டு, ஷேக்ஸ்பியர் குறுவட்டுக்கள். புத்தகங்கள் மலை போலக் குவிந்திருந்தன.

ஒரு வேலை நாள் மாலையில் எல்லா புத்தகங்களையும் காரில் ஏற்றி இங்கு கொண்டு இறக்கி விட்டுப் போவது எவ்வளவு உயர்ந்த செயல் என்று மனம் நெகிழ்ந்தது. என் மீது உள்ள அன்பை வெளிப்படுத்துவதிலான செய்கைகளில் சிறந்தவற்றுள் ஒன்று என்று தோன்றியது. அதை ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பினேன்.

'உன்னுடைய மற்ற பொருட்களையும் அனுப்பி விடுகிறேன்' என்று பதில். 'உன்னை சீக்கிரத்தில் விடுவித்து விடுகிறேன். அப்போதுதான் உனக்குப் பொருத்தமான ஒருத்தரை நீ தேடிப் பிடித்துக் கொள்ளலாம்' என்று தொடர்ச்சி. துணிகளை அலசிப் போட்டு விட்டு தியானத்தில் உட்கார்ந்து விட்டிருந்தேன். 'நான் உன் மீது எப்போதும் அன்பு செலுத்துவேன்' என்று செய்திக்கு, 'அன்பு என்றால் என்ற என்பதைத் தெரிந்து கொண்டு உனக்குப் பொருத்தமானவர்களிடம் அதைச் செலுத்து' என்று அவள் அனுப்பிய செய்தியோடு நிறுத்திக் கொண்டேன்.

படுத்து நல்ல தூக்கம். நள்ளிரவு தாண்டி ஒரு முறை விழிப்பு. நான்கு மணிக்கு எழுந்திருந்தேன்.

இதற்குப் பிறகு, தரை தூக்க வேண்டும். புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும். தரை துடைக்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். குடி தண்ணீர் பிடிக்க வேண்டும். அலுவலகத்தில் வேலைகளைத் தொடர வேண்டும். விஜயன் சாரைப் பார்க்கப் போக வேண்டும் கேஎச் அரிந்த் பணம் கேட்க வேண்டும்.

எஸ்விஎன்னுக்காக விர்சுவல் சர்வர் அமைக்க வேண்டும். இப்போது 20 நிமிடங்கள் ஓய்வு.

ஞாயிறு, ஏப்ரல் 20, 2008

வாடிக்கையாளர் ஒருவருக்கு கடிதம்

மதிப்பிற்குரிய திரு ------ அவர்களுக்கு,

இன்று ஒரு அரை மணி நேரத்துக்கு எனக்கு என் பக்கத்து விபரங்களைச் சொல்ல வாய்ப்பு கொடுங்கள்.

உங்கள் நிறுவனமும் நீங்களும் என் மனதில் எப்போதும் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறீர்கள். முதல்முதலில் நான் உங்களைப் பார்க்க வந்தேன். முதலில் ராணிப்பேட்டையில் பார்த்து விட்டு அவர்கள் சொன்னபடி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்று வந்து பார்க்குமாறு பதில் போட்டிருந்தீர்கள். அந்த நாளில் நான் ராணிப்பேட்டை போக வேண்டியிருந்ததால் மாற்று நேரம் கேட்டதும் அதையும் கொடுத்தீர்கள்.

அந்தச் சந்திப்பின் இறுதியில், முன்பணமாகக் கொடுத்தீர்கள். நான் லெதர்லிங்க் தொடங்கியதிலிருந்து சந்தித்த தோல்விகள், வலிகள், குத்தல்களை எல்லாம் தடவிக் கொடுத்து ஆறுதல் அளித்தது அன்று நீங்கள் கொடுத்த காசோலை.

நீங்கள் எனது வாடிக்கையாளர் என்ற நிலையில் இல்லாமல், எனது தந்தை, அல்லது குரு அல்லது வழிகாட்டி என்ற முறையில்தான் நான் பலனடைந்திருக்கிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குச் சரியான வழி காட்டி, தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுட் குரு நீங்கள்.

இந்த புராஜெக்ட் குறித்து நீங்கள் எடுப்பது இறுதி முடிவு. அதை உங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவின் பணி என்று நினைத்து முடிவெடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆரம்ப நாட்களில் டேனரியிலும் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரிபடவில்லை. நீங்கள் விலை பேசி முடித்து விட்டிருந்தீர்கள். நானும் ஏதேதோ வழிகளில் முட்டி மோதிப் பார்த்தேன். காலையில் டேனரி அலுவலகத்தில் யாரும் வருவதற்கு முன்பு நான் போய்ச் சேர்ந்து விடுவேன். சென்னையிலிருந்து அதிகாலை 5 மணிக்குக் கிளம்பினால்தான் ஏழே முக்காலுக்கு வாலாஜா, அங்கிருந்து நகரப் பேருந்தில் வி சி மோட்டூர். அங்கிருந்து நடந்தே டேனரிக்குச் செல்வேன்.

இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மொத்தமாக வாங்கிய அந்தக் கட்டணத்துக்காக நான் உழைத்த உழைப்பின் மதிப்பு பல இலட்சங்கள் இருக்கும். அந்த அளவுக்கு நான் வருமானத்தை ஈட்டவில்லை. ஏனென்றால் என் உழைப்பின் பலன் முழுவதுமாக உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்திருந்தேன். சமீப காலம் வரை நான் ராணிப்பேட்டை போவது என்றால் பேருந்தில் போய் அங்கிருந்து நடந்து அல்லது இரு சக்கர வண்டியில்தான் போவேன்.

கடந்த 8 மாதங்களில் அதே டேனரியில் மென்பொருள் பயன்பாடு பல நிலைகள் உயர்ந்து விட்டது. இப்போது நான் அதிக பணம் கேட்டுப் பெற்று காரில் போய் வர ஆரம்பித்திருக்கிறேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், எனது தவறுகள், கற்றுக் கொள்வதற்கான செலவை நான் உங்களிடம் பெற்றுக் கொள்வதில்லை.

டேனரிக்காக நீங்கள் முதல் சந்திப்பில் சொன்ன எல்லாத் தேவைகளையும் செய்து முடித்திருக்கிறோம். இதற்கு மென்பொருளில் வழு இல்லாமல் இருப்பது முக்கியத் தேவை. அதற்கு மேல் பயன்படுத்துபவர்களின் ஈடுபாடும் பங்களிப்பும் மிகவும் தேவை. அது வந்ததும் டேனரியில் நாங்கள் போட்ட உழைப்பின் பலன் வெளி வர ஆரம்பித்தது.

முதல் 2 ஆண்டுகள் பணியாற்றியதன் நோக்கம், இப்படி பலன் வெளிப்படும் போது நாமும் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதுதான்.

மொத்தம் 15 பேர். இதைத் தவிர தலைமை அலுவலகத்தில் நீங்கள். இவ்வளவு பேரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டிருக்கிறோம். மென்பொருள் உருவாக்கத்திலும் இறங்கியிருக்கிறோம்.

டேனரியில் மென்பொருள் வேலையை ஆரம்பிக்கும் போது தவறான முறையில் குறைவான செலவில் வேலை செய்து கொண்டிருந்தோம்.

மென்பொருளின் வழுக்களைச் சரி செய்வதில் அதிக கவனம் செலுத்தாமல் பயனர்களின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தது எங்களுடைய தவறுதான். அவர்கள் பயன்படுத்தப் பயன்படுத்தானே மென்பொருள் மேம்படும் என்று இருந்து விட்டோம். அதைச் சுட்டிக் காட்டிய பிறகு, மென்பொருளில் எந்த வழுவும் இருந்து விடக் கூடாது என்று வேலை செய்து பயனர்கள் சொல்லும் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து விட்டோம்.

இன்னும் சீக்கிரமாக முடிந்திருக்க முடியுமா?

நான் இந்த புராஜெக்டை செய்பவன் என்ற நிலையிலிருந்து மட்டுமின்றி நேர்மையாக நடுநிலையாக வேறு மாற்று ஏற்பாடுகளையும் பற்றி விசாரித்தேன். என்னுடைய நண்பர்கள் எஸ்ஏபி பணி செய்பவர்கள், காலணி துறையில் பணியாற்றுபவர்கள் என்று பேசினேன்.

எஸ்ஏபியில் நாம் செய்த பணிக்கு ஆகும் செலவு இப்படி இருக்குமாம்:

1. மூன்று இடங்களிலும் பயன்படும் படி ஒரே கணினி, வலைப்பின்னல் மூலம் இணைக்கப்பட வேண்டும்.
2. மென்பொருளுக்கான உரிமத் தொகை 5 லட்சம் ரூபாய்கள் (உங்களுக்கு மூல நிரல் கிடைக்காது)

மென்பொருளில் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிந்தால்

3. மென்பொருள் பயன்பாட்டை வடிவமைத்துப் பயனர்களுக்கு பயிற்சி அளித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர 6 மாதம் வரை பிடிக்கலாம்
அந்த ஆறு மாதங்களில் 3 மேலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். 4 மாதங்களுக்கு ஒரு மென்பொருள் எழுதுபவர் தேவைப்படும். மொத்தம் 22 மனித மாதங்கள்.

ஐபிஎம் போன்ற உயர் தர சேவை நிறுவனத்திடம் போனால் ஒரு மனித மாதத்துக்கு 1 லட்சம் ரூபாய்கள். 22 மனித மாதங்களுக்கு 22 லட்ச ரூபாய்கள். எச்சிஎல் போன்ற விலை குறைவான நிறுவனத்திடம் வேலையைக் கொடுத்தால் ஒரு மனித மாதத்துக்கு 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை ஆகலாம். 30000 என்று வைத்துக் கொண்டால், 6.6 லட்ச ரூபாய்கள்.

4. எஸ்ஏபி மென்பொருளை இயக்க இயங்குதளம், தரவுத் தள உரிமங்கள் ஓரிரு லட்சங்கள் ஆகலாம்.

மொத்தச் செலவு குறைந்தது 15 லட்சத்திலிருந்து அதிக பட்சம் 35 லட்சம் வரை ஆகலாம்.

5. எஸ்ஏபியின் மென்பொருளை நமது சிறப்புத் தேவைக்கு ஏற்ப மாற்ற வேண்டுமானால், இன்னும் அதிகம் செலவாகும். ஒரு முக்கிய மாற்றத்துக்கு 100 மனித நாட்கள் வரை ஆகலாம். காலணி தொழிலில் கால் அளவுக்கு ஏற்ப எண்ணிக்கைகளைப் பிரித்து சேமிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய மாற்றமாக இருக்கும்.

ஒரு நாளுக்கு 5000 ரூபாய்கள் என்று கணக்குப் போட்டால் 5 லட்ச ரூபாய்கள்.

கால அளவு எப்படி இருக்கும்? இழுத்தடித்தால் யார் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்?

6 மாதம் என்று சொல்வது ஒரு கணிப்பு மட்டுமே. ஐபிஎம் எடுத்துச் செய்தால் 6-8 மாதங்களுக்குள் முடித்து விடலாம். எச்சிஎல் போன்ற விலை குறைவானவர்களிடம் போனால், ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கவும் செய்யலாம். அதற்கு செலவு அதிகமாகும்.

இவற்றைத் தவிர மென்பொருட்கள் உள்ளூரில் கிடைக்கின்றன. நான் கேள்விப்பட்டது வரை யாரும் முழுமையாகப் பயன்படும்படி எந்த நிறுவனத்திலும் பணி முடித்திருக்கவில்லை.

தாமே ஆள் வைத்து மென்பொருள் உருவாக்கியிருக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. அது நடந்திருக்கிறது. அந்த மென்பொருட்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய மென்பொருளால் மாற்றப்படும் நிலையில்தான் இருக்கின்றன.

லெதர்லிங்கில் நாங்கள் எஸ் ஏபியின் பலன்களை நம் ஊருக்கு ஏற்றபடி கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறோம்.

டேனரியில் நடந்தது போல உங்களது ஆதரவு, ஒருங்கிணைப்பின் கீழ் காலணி நிறுவனத்தையும் மென்பொருள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம். இந்தப் பணியோடு தினசரிப் பயன்பாடுகள். பொருட்களை வாங்குவது, பயன்படுத்துவது, கையிருப்பு விபரங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

இதோடு இந்த புராஜெக்ட் முடிந்து விடுமா?

எந்தத் தேர்வில் இறங்கினாலும், இதை விட 3 முதல் நான்கு மடங்கு செலவில்தான் வேலை முடியும். வேலை முடியும் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால், நமது நிறுவனத்துக்கு ஏதுவாக அவர்கள் மென்பொருள் இருக்காது.

வெள்ளி, ஏப்ரல் 18, 2008

தட்டித் தட்டிப் பார்த்தல்

மூன்று குறிப்புகள்.

முதலாவது, தினமும் எழுதுவது நாட்குறிப்பு எழுதுவது மிகவும் தேவையானது. காலையில் 6 மணி வரை தூங்கிக் கொண்டிருந்தால் மூளை மந்தமாகி விடுகிறது. பல விஷயங்கள் மறந்து போய் விடுகின்றன.

முந்தா நேற்று பேசும் போது அவன் மின்னஞ்சலில் அனுப்பியிருந்த விபரங்கள் சுத்தமாக மனதில் இல்லை. நேற்று பேசும் போது அவர்களுக்கு அனுப்பியிருந்த விற்பனை ஆவணத்தைப் பற்றி மறந்து போய் விட்டிருந்தது. இவ்வளவு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு விட்டு சொதப்ப ஆரம்பித்தால் பெரிய குழப்பங்களில் கொண்டு விட்டு விடும்.

இரண்டாவது, பேசுவது. உதவி செய்ய தேவைப்படும் போது அவளுக்கு சேவை செய்யும் வாய்ப்பு தெளிவாகத் தெரிந்தால் மட்டும் தொலைபேச வேண்டும். மனதளவிலோ, உடலளவிலோ எனது தேவைகளுக்காக நான் அவளை தொடர்பு கொள்வதை நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது. அது பேச்சையும் நடவடிக்கைகளையும் கீழ் நோக்கி செலுத்தி விடும்.

மூன்றாவதாக, நிமிர்ந்து உட்கார்ந்து 20 நிமிடங்கள் காலையிலும் மாலையிலும் தியானம் செய்வதை தவறாமல் பின்பற்ற வேண்டும். நேற்றுக் காலையில் பல நாட்களுக்குப் பிறகு அப்படி உட்கார முடிந்தது. பாதி நேரத்திலேயே உடலெல்லாம் வேர்த்து வடிந்தது. இவ்வளவு வெயில் அடிக்காத நாட்களிலும் கூட உட்கார்ந்த இடமும் உடலும் சூடாவதை உணர முடிந்திருக்கிறது. அப்படி சூடாகி எழுந்திருக்கும் போது எண்ணங்கள் வடிந்து மனம் அமைதியாகி விடுகிறது.

ஒவ்வொரு நிகழ்ச்சியாக நினைத்துப் பார்க்கும் போது கூட எழும்பும் எண்ண அலைகள் உடலை கிளர்ச்சி அடைய வைத்து சூட்டை உருவாக்குகின்றன என்று படுகிறது. அதை நாமாக காலையிலும் மாலையிலும் திட்டமிட்டு முறையாக செய்யும் போது கிளரும் எண்ணங்கள் அமைதியாக கையாளப்பட்டு படிந்து விடுகின்றன. அதைச் செய்யாமல் விட்டு வைத்தால், நாளின் எந்தப் பகுதியிலும் ஒவ்வொன்றாக முளைத்து தொந்தரவு செய்து கொண்டிருக்கும். அதனால் மன அமைதியும், நினைவாற்றலும் குலைந்து போய் விடும்.

நேற்றுக் காலையிலும் 4 மணியிலிருந்தே விழிப்பு வந்தாலும் புரண்டு கொண்டே இருந்தேன். எழுந்து விளக்கைப் போட்டு விட்டும் படுத்துக் கொண்டேன். ஆறு மணிக்குத்தான் எழுந்திருந்து எதுவும் செய்யாமல் கிளம்பி விடலாமா என்று யோசனை. பொருட்களை ஒதுங்க வைத்து, தரை தூத்து, துடைத்து குளித்துக் கிளம்பலாம். எட்டு மணிக்கு சந்திக்க ஏற்பாடு.

காசு வாங்காமலேயே வந்து விட்டிருந்தேன். நாளிதழ் போடுபவருக்கு முந்தைய நாள் திருப்பி அனுப்பி நேற்று வரச் சொல்லியிருந்தேன். அவருக்கு இன்னொரு நாள் கெடு சொல்லி திருப்ப வேண்டியிருந்தது. வீட்டு பராமரிப்புக்காக கூடுதலாகக் கொடுத்திருந்த 100 ரூபாயை வாங்கிக் கொள்ளச் சொல்லலாமே என்று தோன்றியது. அந்த அம்மாவுக்கு இன்னும் கொடுக்கத் தோன்றவில்லை.

சமைக்கவும் செய்யவில்லை. கஞ்சி வைத்து அரை லிட்டர் பால் வாங்கி ஊற்றிக் கொள்ளலாம் என்று நினைப்பிருந்தது. நேரம் போதாது என்று வேலைகளை முடித்துக் கிளம்பி விட்டேன்.

தரை துடைத்து ஒரு வாரம் ஆகி விட்டது. போன வெள்ளிக் கிழமை துடைத்தது. நேற்று மீண்டும் விடிவு காலம். ஜன்னல்கள், கதவுகள், பொருட்கள் வைக்கும் மேல் தட்டுகள் இவற்றையும் ஒதுங்க வைக்க வேண்டும். இடது பக்க அறையில் இருக்கும் சின்ன இடத்தில் போட்டிருக்கும் பொருட்களையும் நீக்கி தூசி தட்ட வேண்டும். வெளியில் தூசி தட்ட வேண்டும். வண்டியை துடைத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு கழிவறைகளை கழுவி விடலாம்.

அலுவலகத்துக்குப் போய்ச் சேரும் போது மணி சரியாக 8. வந்து விட்டிருந்தார். உள்ளே உட்கார்ந்திருந்தார். மூன்று பயிற்சி மாணவிகள் இரண்டாவது சோதனைத் தேர்வுக்கு நேற்றே கிளம்பி விட்டிருந்தார்கள். கிளம்பும் போது அறிக்கை எதுவும் இல்லாமல் விடை கேட்டார்கள். அவர்களை அச்செடுக்கச் சொல்லி, அதில் பிழை திருத்தி, வடிவம் மாற்றிக் கொடுத்து அனுப்பினேன். நேரம் குறைவாக இருக்கிறது என்ற பரபரப்பில்தான் இருந்தார்கள்.

மற்ற இரண்டு மாணவிகளும் போகவில்லை. அவர்கள் ஒன்பது மணிக்குப் பிறகு 10 மணிக்கு வந்தார்கள். உங்கள் பணி நேரம் அதிகாலை ஆறரை மணி என்று சொல்லியிருந்தேன்.

மாற்றங்கள் மிகவும் குழப்பமாக இருக்கின்றன. 'எல்லோரும் பரபரப்பாகவே இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதே இல்லாமல் போய் விட்டது. ஆளுக்காள் கேள்வி கேட்கிறார்கள்' என்று தனது எண்ணங்களைச் சொன்னார். மாற்றங்களைப் பற்றிய விபரங்கள், காரணங்கள், எப்படி வேலை செய்ய வேண்டும். எந்த அளவு வளர வேண்டும் என்று விளக்கினேன். 20 பேர் இருக்கும் குழுவில் ஒரு மாற்றம் கொண்டு வர எவ்வளவு முயற்சி தேவைப்படுகிறது! பெரிய நிறுவனங்களில் நிறுவன அமைப்பை மாற்றி செயல்பட பெரும் யத்தனங்கள் இல்லாமல் நடக்காது.

அவரிடம் பேசிப் பேசி 9 மணி ஆகி விட்டது. வங்கியில் போய் காசு எடுத்து வந்தவுடன் வாங்கிக் கொண்டேன். திடமான பழக்கங்கள் வைத்துக் கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய விற்பனை ஆவணம், இயக்குனர் சந்திப்பில் பேசிய குறிப்புகளுக்கான ஆவணம், பங்குதாரர் சந்திப்பில் பேசிய குறிப்புகளுக்கான ஆவணம் மூன்றையும் மீண்டும் ஒரு தடவை படித்துப் பார்த்து இறுதி வடிவம் கொடுத்தேன். அவற்றை அச்செடுத்து கொடுத்தேன். அவர் கொஞ்சம் வருத்தமாக இருப்பது போலப் பட்டது. காலையிலிருந்தே இறுக்கமாகவே இருந்தார்.

திருப்பதிக்கு எல்லாம் போனார்களா என்று தெரியவில்லை. நேற்று பேசும் போது அதிகம் பேசவே இல்லை. எப்படியோ மன அமைதியுடன் நிம்மதியாக இருந்தால் சரிதான். 'ஒன்றரை மாதங்களுக்கு விடுதலை, குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் தொல்லை இல்லை. தனியாக இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. நினைத்த நேரத்துக்கு வீட்டுக்கு வரலாம், நினைத்த உணவை சமைத்துச் சாப்பிடலாம், தோன்றினால் வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம், நினைத்தால் பணி நிமித்தமாக வெளியூர் போய்க் கொள்ளலாம். குழந்தைகளை நீ கொண்டு போய் வளர்த்துக் கொள். நான் பொறுப்பிலிருந்து விடுபட்டுக் கொள்கிறேன்' என்று பாதி விளையாட்டாகவும் பாதி வினையாகவும் பேசினாள். நான் எதுவும் பதில் சொல்லும் மன நிலையில் இல்லை.

குழந்தைகளை நினைத்தால்தான் இன்னும் வருத்தமாக இருக்கிறது. நமது வழிகாட்டலில் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளை ஆட்டுவிப்பது எவ்வளவு பெரிய பாவம்! அவர்கள் மனதின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலேயே நோகடித்து வருத்திக் கொண்டிருக்கிறாள். அதிகம் காயப்பட்டு விடாமல் வளர்ந்து விட வேண்டும்.

பத்தரை மணிக்கு பேசிக் கொண்டிருந்தேன். குறித்து கடுமையாகவே கேட்டேன். இந்த முறை நன்றாகத்தான் இருக்கிறது. பொறுப்பு எதுவும் தேவையில்லை, ஒருவரை கேள்வி கேட்பது மட்டும் செய்தால் போதும். சார் என்னை கடுமையான முகத்துடன் கடுமையாக கேள்வி கேட்டது மனதில் படிந்து விட்டது. அதே தீவிரத்துடன் கேட்க முடிகிறது. எல்லா வாடிக்கையாளர்களைப் பற்றியும் தினமும் சிந்திக்கக் கற்றுக் கொண்டு விட்டால், நான் அடுத்த பணிகளுக்கு நகர்ந்து விடலாம்.

11 மணிக்குப் பிறகு தொலைபேசியதாகவும் பேசும்படியும் சொன்னார். தொலைபேசினால், 10 நிமிடங்கள் வாங்கிக் கொண்டு கொடுத்து விடுகிறோம் என்று திரும்பிக் கூப்பிட்டுச் சொன்னார். பழைய பாக்கி பிடி கொடுக்கவில்லை. குறையக் கூடாது, கொடுக்கவிருப்பதை தெளிவாக விளக்கி விட வேண்டும். முதலில் கொடுத்தால்தான் எந்த வேலையையும் எடுத்துக் கொள்வோம் என்று முடிவு செய்தோம். பாதியாவது முன்பணமாக வாங்கி விட வேண்டும் என்று சுந்தரின் கருத்து.

தொலைபேசியில் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்று நேரில் வருவதாகச் சொன்னேன். 1 மணி வாக்கில் சந்திக்க ஒத்துக் கொண்டார். 12 மணிக்குக் கிளம்பி, வழியில் வீட்டுக்குப் போய் பனியனை மாற்றி சட்டை போட்டுக் கொண்டு பல்லாவரம். டிரைடன்ட் தாண்டி எரிபொருள் நிலையத்தில் 100 ரூபாய்க்கு நிரப்பிக் கொண்டேன். விமான நிலையம் எதிரில் போக்குவரத்துக் காவலர்கள் காத்திருந்தார்கள். வேகம் அதிகமாக ஓட்டினால் பிடிப்பார்கள் என்று தோன்றியது. 50க்கு மேல்தான் ஓடிக் கொண்டிருந்தது. பின்னால் வந்த இன்னொரு வண்டிக்குக் கை காட்டினார்கள்.

நுழையும் போது மணி 12.45 அறையில் வேறு யாரோ விருந்தினர் இருந்தார்கள். உள்ளே போய் சொன்ன சிக்கலை பார்த்துக் கொண்டிருந்தோம். வாடிக்கையாளர் ஆர்டரை உள்ளிடும் போது பதிய மறுக்கிறது. நிரல் எதுவும் சமீபத்தில் மாற்றியிருக்கவில்லை. இருந்தாலும் நிரலில் புகுந்துதான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஒதுங்கி தனியாக விட்ட பிறகுதான் அவர் பிரச்சனை உள்ளிட்ட தரவில் இருப்பதைக் கண்டு பிடித்தார்.

இதற்குள் வெளியில் புறப்பட்டு விட்டிருந்தார். தொலைபேசினால், வருத்தம் தெரிவித்தார். நான் வந்திருப்பதை நிச்சயம் சொல்லியிருப்பார்கள். எந்த செய்தியும் சொல்லாமலேயே கிளம்பி போய் விட்டிருந்திருக்கிறார். 'சரி, இன்றைக்கு நேரம் இருக்காது என்றால் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என்று சொல்லிக் கிளம்பி விட்டோம்.

'இன்றைக்கே பேசி முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். போட முடியவில்லை என்ற அவசரத்தில் நமக்கு சாதகமாகப் பேசியிருப்பார்' என்றார்.

'அவர்கள் அவசரத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு செயல்பட்டால், அவசரம் தீர்ந்ததும் அவர்கள் ஆர்வமும் வடிந்து விடும். அவர்கள் நிலைமையைப் பயன்படுத்தி நமது வேலையை சாதித்துக் கொள்ளக் கூடாது.' 'அப்படிப் பார்த்தாலும், விடுப்பில் போன பிறகு அவர்களுக்கு நமது உதவி தேவைப்படத்தான் செய்யும்' என்று திரும்பும் போது பதில் சொன்னேன்.

பல்லாவரம் தொழிற்சாலையில் எட்டிப் பார்த்தோம். மூன்று கணினிகளிலும் மென்பொருள் காட்சிகள் தெரிந்தன. அப்படிப் பார்ப்பது இது முதல் முறை. பொருட்களின் தேவைகளைத் திட்டமிடுவது குறித்த பகுதியை விளக்கி விட்டுக் கிளம்பினேன். வேறு எந்த சிக்கல்களும் இல்லை, எல்லா அறிக்கைகளும் சரியாக வருகின்றன என்று சொன்னார்கள்.

திரும்பும் வழியில் தாமஸ் மலை நோக்கித் திரும்பும் வளைவில் தர்பூசணி விற்கும் ஒரு பெண்மணி. வண்டியை நிறுத்தித் திருப்பி 2 துண்டுகள் வாங்கிக் கொண்டோம். 10 ரூபாய்கள்.

வருபவர்கள் எல்லாம், இவ்வளவு விலையா என்று அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. காய் விலை, வண்டி வாடகை, ஏற்றி இறக்கும் கூலி, சில காய்கள் கெட்டுப் போய் விடுவது, காவலர்கள், ராணுவ அதிகாரிகள் இலவசமாக காய் எடுத்துக் கொள்வது. சாப்பிடப் போனால் காய்களை எடுத்துக் கொண்டு போய் விடுபவர்கள், குடித்து விட்டு வந்து கலாட்டா செய்பவர்கள், முரடர்கள் என்று வியாபார சிக்கல்களை எல்லாம் சொன்னார்.

காய்கள் விளைவது திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளிலாம். ஒரு காய் 50, 60 ரூபாய்கள் ஆகிறது என்றார். 10, 12 துண்டுகள் விழும் என்றார். காய் 30-40 ரூபாய்க்கு வாங்கினாலும், ஒரு காய்க்கு 70, 80 ரூபாய்கள் கிடைக்கும்.

அவருக்கு சொந்த ஊர் விழுப்புரமாம். 'எல்லாருமே பிழைக்க வந்தவங்கதானே' என்று சொல்லிக் கொண்டார். இவ்வளவு பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொரு வாடிக்கையாளர் வந்தார். அவரும் விலை அதிகம் என்று புலம்ப, அதை சிரிப்புடன் சுட்டிக் காட்டினார்.

அலுவலகத்துக்கு வரும் போது 3 மணி. கொஞ்சம் அழுத்தமாக சில மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தார். அவற்றுக்கு என் பதிலையும் அனுப்பிக் கொண்டேன். சாப்பாட்டில் கீரை, உருளைக்கிழங்கு பொரியல், ரசம், மோர். நர்மதா ஆற்றில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தலாம் என்று கருத்தின் படி 4 மணிக்கு எல்லோரும் கூடி நின்றோம்.

வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பது குறித்த விதிமுறைகள் ஆவணத்தைப் பற்றிப் பேச நாலரை மணிக்குக் கூடினோம். யாருமே படித்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு வாடிக்கையாளருக்கு ஏற்றபடி ஆவணத்தை மாற்றலாம் என்று முடிவு செய்து கலைந்தோம். இன்று மாலை 4 மணிக்குப் பார்க்க வேண்டும்.

இன்னும் தனது புதிய பொறுப்பை முழுமையாகப் புரிந்து செயல்பட ஆரம்பிக்கவில்லை. 6 மணிக்கு அது குறித்துப் பார்க்கலாம் என்று சொல்லியிருக்க நானும் நேரத்தைத் தவற விட்டிருந்தேன். ஆறரைக்குக் கேட்டால், நாளைக்குப் பார்க்கலாம் என்று விடுபட்டுக் கொண்டார்.

பையுடன் வந்தார். ஏதோ வேலையாக வந்தாராம், காலையில். இரவில் பேருந்தில் கிளம்புகிறாராம். கொஞ்சம் சமூக சேவை உணர்வும் வேண்டும் என்று சொல்லியிருந்ததற்கு பதிலாக, துக்ளக்கில் வந்திருந்த புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் ஒன்றைக் காட்டி அதற்கு நிதியுதவி செய்யப் போவதாகச் சொன்னார். அவருடன் பக்தவத்சலம் கடையில் வெஜிடபிள் ரோல், நந்தினியில் தேநீர். அவரே காசு கொடுத்து விட்டார்.

இரவு உணவுக்கு எல்லோரையும் விருந்துக்கு அழைத்துப் போகுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். அவரும் கிண்டலாகவே தவிர்த்து விட்டார். அதைப் பற்றிப் பேசியதாலோ என்னவோ 8 மணிக்கெல்லாம் நல்ல பசி. சாப்பிடுவதில் முனைப்பு காட்டவில்லையாதலால். ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டோம்.

கை கால் கழுவி தியானத்துக்கு முன்பு தொலைபேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். முந்தே நேற்று காலையில் பேசும் போது, 'பல பெண்கள் வேறு வேலை இல்லாமல் வீட்டில் இருப்பார்கள். வீட்டு வேலை எல்லாம் முடிந்த பிறகு, என்ன செய்வது என்று தெரியாமல் பணிக்குப் போயிருக்கும் கணவனை தொலைபேசியில் அழைத்துத் தொணதொணப்பார்கள்' என்று சொல்லி, தான் அப்படி இல்லை என்று சொல்ல ஆரம்பித்தாள்.

'ஆமாமா, அலுவலகத்தில் கணவன் என்ன லீலைகள் செய்கிறானோ என்ற சந்தேகமும் ஏற்படும்' என்று வாயில் வந்ததைச் சொன்னேன். சாங்காயில் நடந்து கொண்டதே நேரடியாகக் குத்துவது போல அமைந்து விட்டது. அதன் பிறகு பேசுவது இறுக்கமாகவே இருக்கிறது.

நேற்றுக் காலையில் தொலைபேசும் போது ரயிலைப் பிடிக்கப் போனவர்கள் விட்டுப் போன பொருளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக ஓடி ரயில் நிலையத்தில் கொடுத்து விட்டு வந்தேன் என்றாள். இப்படி ஓடிப் போய் ரயிலைப் பிடிப்பது, அதற்காக வேகமாக காரில் ஓட்டுவது சரியில்லையே என்ன கரிசனத்தில், 'இதுவே வழக்கமாப் போச்சு. அன்றைக்கு திருப்பதிக்குப் போகவும் இதே போல ஓடினாய் (ஆம்பூர் போகும் போதுதான் ஓடினாள், அதுவும் குழம்பிப் போயிருந்தது).' என்றேன்.

உடனேயே 'ஆமாமா, நாங்கெல்லாம் அப்படித்தான், ஓடித்தான் பழக்கம்' என்று முடித்து விட்டாள். அதற்கப்புறம் அனுப்பிய குறுஞ்செய்திக்கு இறுக்கமான பதில்.

இரவில் தொலைபேசினால் இரண்டு செல்பேசிகளும் இணைப்பு கிடைக்கவில்லை. வீட்டு எண்ணைப் போட்டால், பல மணிகளுக்குப் பிறகு எடுத்தாள். செல்பேசிகளில் மின்னூட்டம் தீர்ந்து விட்டதாம். 'இப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தேன். நூடில்ஸ் செய்து சாப்பிடுகிறேன்' என்றாள். அப்போதுதான் தனியாக இருத்தல், விடுதலை என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அந்த வருத்தம் இருக்கத்தான் செய்யும். நாம் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவன் தனியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்று தோன்றலாம். எனக்கோ, நாம் குழந்தைகளைப் பிரிந்து கஷ்டப்படுகிறோம் என்ற எண்ணம் இருக்கிறது. அவளுக்கு தன்னிச்சையாக செயல்பட பணியாற்ற என்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்று யோசித்து அவளுடனும் பேசிக் கொள்ள வேண்டும்.

10 மணிக்கெல்லாம் பேச்சை முடித்து விட்டு தியானத்தில் உட்கார்ந்து விட்டுத் தூங்கி விட்டேன். கனவுகளுடன் கலந்த தூக்கம். நாலரை மணிக்கு விழிப்பு.

இதை முடித்ததும், துணிகளையும் நாளிதழ்களையும் மடித்து வைத்து விட்டு 20 நிமிடங்கள் உலாவப் போய் விட்டு வரலாம். ஆறரை மணி ஆகி விடும். குடிக்கத் தண்ணீர் பிடித்து வந்து விட்டுக் குளித்து தயாராகும் போது 7 மணி. தியானம் செய்து விட்டுக் கிளம்பினார் ஏழரை மணிக்கு வருவதாக சொல்லியிருந்தபடி போய்ச் சேர்ந்து விடலாம்.

புதன், ஏப்ரல் 16, 2008

இன்னொரு நாள் போதுமா!

வெயில் அடிக்கும் வெக்கையில் காலையில் எழுந்திருப்பது பெரும்பாடாகப் போய் விடுகிறது. திங்கள் கிழமை காலையில் அரிசி, உளுந்து ஊற வைத்து, முந்தைய நாள் அவல் தாளிக்க வாங்கியிருந்த தேங்காயையும் சேர்த்து அரைத்து அடை செய்தேன். முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டு அலுவலகம். 1 மணிக்கு பெரியமேடு போக வேண்டியிருந்தது.

மூன்றும் சேர்ந்ததாலோ என்னவோ மாலையில் அலுவலகம் திரும்பியதும் உயிரே மீதியிருக்கவில்லை. மதிய உணவையும் தவற விட்டிருந்தேன். 4 மணிக்கு சாப்பிட்ட பிறகுதான் தெம்பு வந்தது. அதன் பிறகும் வெக்கை தாங்க முடியவில்லைதான். வீட்டுக்கு வந்து எட்டரைக்கெல்லாம் தூங்க ஆரம்பித்து விட்டேன்.

அதனால் நேற்றைக்கு கொஞ்சம் மாற்றிக் கொண்டேன். காலையில் சாப்பிடக் கஞ்சி. அதுவும் அரிசியும், உளுந்தும் தேங்காயும் போட்டு வேக வைத்ததுதான். போட்டுக் கொள்ள அரைக்கை பனியன். நேற்று அவ்வளவாக சிரமம் தெரியவில்லை.

திங்கள் கிழமை காலையில் தியானத்தில் உட்கார்ந்து சில நிமிடங்களில் தொலைபேசி அழைப்பு. 10, 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தாள். திட்டமிட்டிருந்த நேரம் முடிந்து விடவே நேரடியாக சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டிருந்தேன். 8 மணிக்கு சந்திக்க வேண்டும். அலுவலகத்துக்குப் போய் பார்த்தால் சாவி எடுத்துக் கொள்ளாமல் போய் வீட்டில் காத்திருந்தார். திரும்பிப் போய் அவருக்கு சாவி கொடுத்து விட்டு வந்தேன்.

'எங்களை எல்லாம் அடிமைகள் போல நடத்துகிறீர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூரில் பார்த்த சிவகுமார் இல்லை இப்போது. பணத்தாசை அதிகமாகி விட்டது. அதுதான் மனிதர்களை மதிப்பதே இல்லை' என்று பொரிந்து தள்ளினார். '3 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் போது 20 பேர் இருந்தால், 6 லட்சமாக வளர திட்டமிடும் போது ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இருப்பவர்களையே அதிகம் வேலை வாங்குவது என்ன நியாயம்?'

'எனக்கு சனிக்கிழமை மதியத்துக்கு மேல் வேலை செய்ய மனமிருக்காது. ஞாயிற்றுக் கிழமை ஓய்வு வேண்டும். தினமும் 8 மணி நேரம் தூக்கம் வேண்டும். வார இறுதிகளிலும் அலுவலகம், மாலையில் வெகு நேரம் வேலை செய்தல் எல்லாம் எப்படி நடக்கும்?'

நாளுக்கு நல்ல ஆரம்பம்.

'குழுவினரைப் பற்றித்தான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். 20 பேருக்கு 3 லட்சம் என்றால் ஒருவருக்கு எவ்வளவு வருமானம்? 15,000. அதை வைத்துக் கொண்டு நல்ல சம்பளம் கொடுக்க முடியுமா? ஒருவருக்கு சராசரியாக 50000 ரூபாய்கள் சம்பளம் கொடுக்க வேண்டுமானால், 100000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும். 20 பேருக்கு 20 லட்சம் ரூபாய்கள் மாதத்துக்கு சம்பாதிக்க வேண்டும்'

அந்தக் கணக்கு புரிய கொஞ்ச நேரம் ஆனது. சனி, ஞாயிறு வேலை செய்ததுதான் அவருக்குக் கடுப்பு.

'அப்படி மாதம் 20 லட்ச ரூபாய் ஈட்ட, ஏற்கனவே தினமும் 9 மணி நேரம் வேலை பார்த்தவர்கள், எத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்? 18 மணி நேரம்? 24 மணி நேரம்? தேவையில்லை. ஒவ்வொருவரும் 8 முதல் 10 மணி நேரம் வேலை பார்த்தே மாதம் 20 லட்சம் இலக்கை எட்ட வேண்டும். வாடிக்கையாளர்களிடம் வாங்கும் கட்டணம் அதிகமாக வேண்டும், நாம் பணி செய்யப் பயன்படுத்தும் கருவிகள், முறைகள் மேம்பட வேண்டும். கூடவே ஒவ்வொருவரும் தத்தமது திறமைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.'

'எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லித் தப்பித்து விட்டீர்கள்.' என்று கடைசியாக ஒரு ஆலோசனையும் சொல்லி விட்டு முடித்தார். இன்றைக்கு பல விஷயங்கள் தெளிவாகி விட்டன என்று மகிழ்ந்து கொண்டார்.

நமக்கு வெளிப்படையாகத் தெரியும் விஷயங்கள் மற்றவர்களுக்கு புரிபடாமலேயே இருக்கலாம். அவற்றை கவனமாகப் பார்த்து விளக்க வேண்டும்.

திங்கள் காலையில் தியானம் இல்லாமல் போயிருந்தேன். அன்று மாலையும் சோர்வில் வந்து படுத்து தூங்கி விட்டேன்.

நேற்றுக் காலையில் எழுந்திருக்க தாமதமாகி விட்டது. ஏழரை மணிக்கு புதிய மென்பொருள் உருவாக்கக் குழுவினருடன் விவாதத்துக்கான நேரம். அதன் அவசரத்தில் 5 நிமிடங்கள் மட்டும் தியானம். தொலைபேசி எட்டு மணிக்கு மாற்றி விட்டதாகச் சொன்னார். மற்றவர்கள் மறந்து விட்டிருந்தார்கள். சொல்லி நினைவு படுத்திய பிறகுதான் நினைவு வந்தது. நான் சரியாக 8 மணிக்குப் போய் விட்டேன்.

இந்தக் கூட்டத்தில் அறிமுகம் ஆரம்ப விவாதத்தை தொடங்கி வைத்து விட்டு பேசப் போய் விட்டேன். ஒரு பெண்ணைப் பார்த்தாலே சகிக்க முடியவில்லை ஒருத்தருக்கு. அந்தப் பெண்ணுக்கு மனதளவில் பெரும் சித்திரவதை. கண்களில் வெறுப்பும் கோபமும் வெளிப்படையாகத் தெரிகின்றன.

நேற்றைக்கு மதியத்துக்கு முன்பே கிளம்பிப் போய் விட்டிருந்தார். ஏதோ கண்டிப்பாக சொன்னதால் மனம் புண்பட்டு விட்டிருக்குமோ என்று மாலையில் சொன்னார்.

புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை சொன்னார். எந்த வித வீம்புகளும் இல்லாமல் நிறுவனத்தின் நலனை மட்டுமே எண்ணிப் பார்க்கும் மனம் அவருக்கு. ஒவ்வொருவரையும் பார்க்கும் போது அப்படியே கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாசமும் நெகிழ்ச்சியும் பொங்குகிறது.

'நிறைய அடாவடி செய்கிறார்கள். அவர்கள் தவறாக போட்ட தகவல்களை திருத்திக் கொடுக்க இன்னும் காசு கொடுத்தால்தான் ஆச்சு என்று முரண்டு பிடிக்கலாமா? என்னால் அதைச் செய்ய முடியாது, வேறு யாருக்காவது அத்தகைய சண்டை போட மனமிருக்கிறதா?' என்று கேட்டதும். இரண்டு பேருமே, 'நாம் வாங்கிய காசுக்கு பணி முடித்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் தவறான தகவல்களை உள்ளிட்டதற்கும் நமது திட்டமிடல் சரியில்லாமல் இருப்பதுதானே காரணம். அதற்குக் கூடுதல் காசு எல்லாம் தேவையில்லை' என்று சொல்லி விட்டார்கள். வேறு என்ன வேண்டும் எனக்கு.

பிடித்து பத்தரை மணிக்கு இந்த மாதம் முடிக்க வேண்டிய வேலைகளைக் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தேன். 'நான் வேறு யாரிடமும் கேள்வி கேட்கப் போவதில்லை. உங்களிடம் தினமும் காலையில் பத்தரை மணிக்கு நிலவரங்களைத் தெரிந்து கொள்வேன். நீங்களும் எல்லாவற்றையும் கைவசம் வைத்துக் கொள்ளும் படி தயார் செய்து கொள்ளுங்கள்' என்றேன்.

'முன்பு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பொறுப்பாளர் என்று வைத்திருந்தோம். இப்போது எல்லோரும் எல்லா வாடிக்கையாளர்களின் பணிகளை செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை பணிக்கு பொறுப்பாளர் என்று மாற்ற முயல்கிறோம். ஒரு வாடிக்கையாளரின் பணி பற்றித் தெரிந்து கொள்ள யாரிடம் போய் நான் கேட்க முடியும்? ஒவ்வொருவரையும் தொந்தரவு செய்து கொண்டிருந்தால் அவர்கள் மீது தேவையில்லாத அழுத்தம். அதனால் நான் உங்களைத்தான் கேள்விகள் கேட்பேன்'

அதைத் தொடர்ந்து அறிக்கைகள் உருவாக்கும் கட்டமைப்பைக் குறித்த விவாதம். என்னென்ன திருத்தங்கள் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டோம். அது ஒரு மணி நேரம் போனது. 12 மணிக்கு இரண்டு பேருக்கும் நிறுவனத்தின் நோக்கங்கள், கொள்கைகள், வாடிக்கையாளர்கள் குறித்து விளக்கினேன். அவர்களுக்கு திட்டமிட்ட அறிமுகப் பயிற்சி நடத்தப்படாமல் தவறி விட்டது. அதை ஞாயிற்றுக் கிழமை சுட்டிக் காட்டினார்.

திங்கள் காலையில் முதல் வேலையாக அதை தயாரித்து அவர்கள் கையில் கொடுத்து விட்டேன். திங்கள் மதியம் 12 மணிக்கு நான் விளக்க வேண்டியிருந்தவற்றை செய்ய முடியாமல், 1 மணிக்கு வந்து விடுமாறு கூப்பிட்டிருந்ததற்கு புறப்பட்டு விட்டோம்.

வேகா வெயிலில் அவரது அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்து 10 நிமிடங்களில் அவர் வந்து விட்டார். 'இது வரை செலவானது, ஆரம்பத்தில் திட்டமிட்டதை விட அதிகமாகி விட்டது' என்று பேச ஆரம்பித்தார். 'ஆரம்பத்தில் எதிர்பார்த்த முடிவுகள் பலன்கள் கிடைத்து விட்டதா என்று பாருங்கள்' என்றேன். நடைமுறையில் நிறைய பலன்கள் கிடைக்கவே செய்து விட்டன. ஆனால் இறுதியான முடிவுகள் இன்னும் வரவில்லை என்றார். தொடர்ந்து பராமரித்து வந்தால் இன்னும் பல நிலைகளுக்குப் போகலாம் என்றேன்.

பணம் பற்றிக் கேட்டதும், ஏற்கனவே கொடுத்தாச்சே என்றார். 20000 தானே கொடுத்தீங்க என்றதும் உடனேயே தொலைபேசியில் இன்னொரு 30000 போடச் சொல்லி விட்டார். பணப் புழக்கம் குறைவாகவே இருப்பதை சமாளிக்கிறார் என்பது புரிந்தது. இன்னும் வர வேண்டும். அதை ஒரு வாரத்துக்குள் பார்த்துச் சொல்லி விடுகிறேன் என்றார்.

திங்கள் காலையில் பயிற்சித் திட்டத்தைக் கொடுத்து விட்டு முகத்தைப் பார்த்தால் மனதில் குமுறும் குழப்பங்களும், வலிகளும் அப்பட்டமாகத் தெரிந்தன. 'என்ன விஷயம், உட்காருங்க' என்று சொன்னதும். உட்கார்ந்தார். 'ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க' என்று ஆரம்பித்ததும், உடனடியாக எழுந்து பின்னறைக்குள் போய் விட்டார். அழுகையை அடக்க முடியவில்லை போலிருக்கிறது.

வருத்தம் தெரிவித்துக் கொண்டே மீண்டும் வந்து உட்கார்ந்தார். 'ஏன் இப்படி வருத்திக் கொள்கிறீர்கள்' என்று ஆரம்பித்ததும். கண்களில் கண்ணீர் மீண்டும் திரண்டது. 'சரி, சரி பேச வேண்டாம்.' என்று அனுப்பி விட்டேன்.

பொறுக்க முடியாத மன உளைச்சலில் வருந்துகிறார். நேற்றும் நன்கு சிந்தித்து இனிமேலும் நாமாக எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். அதை உறுதி செய்து கொள்ள தொலைபேசியதும் அவளிடம் ஆலோசனை கேட்டேன்.

'இப்படி ஒன்றை கற்பனை செய்து கொள்வோம்' என்று ஆரம்பித்து, பெண் என்று குறிப்பிடாமல், பையன் என்று சொல்லி, விபரங்களை சொல்லி எப்படிக் கையாளுவது என்று கேட்டேன்.

'புதிதாகச் சேர்ந்திருப்பதால் வெளிப்படையாகப் பேச விரும்ப மாட்டான். வேலை பாதிக்காமல் இருக்கும் வரை அப்படியே விட்டு விட வேண்டியதுதான்' என்று சொன்னாள். அதில் கொஞ்சம் தற்பெருமையும் சேர்த்து கொண்டாள். 'நான் வீட்டில் என்னதான் பிரச்சனை என்றாலும் வெளியில் போகும் போது அந்தக் கதவை மூடி விட்டு பணியில் இறங்கி விடுவேன். எல்லோராலும் அது முடியாது. நீயும் அப்படித்தான். வீட்டில் பிரச்சனை என்றால் பணியும் பாதிக்கப்பட்டு விடும்.'

அது உண்மைதான். ஒரு இடத்தில் மன அமைதி இல்லா விட்டால், நான் மொத்தத்தில் அமைதி இழந்து விடுவேன். வாழ்க்கையை அறைகளாகப் பிரித்துக் கொள்ளத் தெரிந்திருக்கவில்லை. இப்போது அது முடிகிறது என்று நினைக்கிறேன்.

நெருங்கிய தோழர்களாகி விட்டார்கள். எப்போதும் சேர்ந்தே இருக்கிறார்கள், சேர்ந்தே பணி புரிகிறார்கள். ஆரம்பத்தில் சேர்ந்த புதிதில், எப்படி ஒத்துப் போகுமோ என்று நினைத்தேன். இரண்டு பேருக்குமே ஆதிக்க மனப்பான்மை உண்டு. எப்படி ஒத்து வரும். எப்படியோ மிக நன்றாகவே ஒத்து வருகிறது.

இன்றைக்கு தம்பிக்கு திருப்பதியில் கல்யாணம், ரஷ்யப் பெண்ணுடன். தன் அக்காவிடம் சொல்ல வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அவன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். நான்கைந்து பரிமாற்றங்களில் அவனது திருமண தகவலையும் சொல்லி என்னையும் திருப்பதிக்கு வரும்படி கேட்டிருந்தான். வேலைப் பளு அதிகம் வர முடியாது என்று சொல்லியிருந்தேன். கூடவே இப்படிப்பட்ட திருமணத்துக்கு நான் வர முடியாது என்று உணர்வையும் தெரிவித்திருந்தேன்.

ஒரே ஒரு முறை என்னையும் திருப்பதிக்கு கூப்பிட்டாள். அதன் பிறகு வற்புறுத்தவில்லை. திங்கள் கிழமை பேசும் போது 'உன்னைக் கூப்பிட்டாலும் வர மாட்டாய், அலுவலக நாள் இல்லையா, அதனால்தான் எங்க அப்பா அம்மா வற்புறுத்தியும் உன்னைக் கூப்பிடவில்லை' என்று சொன்னாள்.

நேற்றைக்குக் காலையில் திருப்பதி போகும் பேருந்திலிருந்து தொலைபேசி. குறுஞ்செய்தி. போய்ச் சேர்ந்து ஒரு தொலைபேசியில், 'என் தம்பி உன்னை மின்னஞ்சலில் அழைத்திருந்தானா' என்று கோபக்குரல். வர முடியாது என்று நான் சொல்லி விட்டது அவளது தன்மானத்துக்கு, அவர்கள் குடும்ப தன்மானத்துக்குக் குறைவாம். 'அவன்தான் உன்னிடம் சொல்லக் கூடாது என்று எழுதியிருந்தான்' என்று பழியை முற்றிலும் அவன் மீது போட்டேன். அவனை ஒரு வாங்கி வாங்கியிருப்பாள்.

அதன் பிறகு பேச்சே இல்லை. நாளைக்கு எல்லோரும் பூர்ணியா போய் விடுவார்கள். இந்த அம்மா மட்டும்தான் 2 மாதங்கள் இங்கே.

நேற்று மாலையில் வீடு வரும் போது பக்கத்து வீட்டு செல்வி என்பவர் பிடித்துக் கொண்டார். பக்கத்து வீடுகளின் அரசியல், அவர்கள் வீட்டு நடப்புகள், என்று பேசிப் பேசி நம்மைப் பற்றிய விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். 'அவங்க இங்கதான் இருக்காங்களோ, ஏன் சேர்ந்து இருக்கலை. அப்பப்போ போய்ப் பார்த்து விட்டு வருவீங்களோ, கோபம் அதிகமானவங்களோ' என்று தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகளை எல்லாம் போட்டார்.

'இப்படித் தனித்தனியா இருப்பதுதான் ஒத்து வருகிறது. இரண்டு பேருக்கும் ஒருவரில் ஒருவர் பிடித்தது நிறைய உண்டு. முற்றிலும் பிடிக்காத சிலவற்றில் எல்லாம் அடிபட்டு விடுகிறது. அதுதான் இப்படி இருக்கிறோம்.'

இரவு ஒன்பதரை மணிக்குத் தூங்கி விட்டேன்.

இதை முடித்து விட்டு வீடு தூத்து வார வேண்டும். (6.15). துணி துவைத்து பாத்திரம் கழுவ 7 மணி. குளித்து தியானம் செய்து புறப்பட ஏழே முக்கால்.
பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒன்பதரை வாக்கில் போய் வர வேண்டும். மதியப் பொழுதில் மின்சார கட்டணம் கட்ட வந்து போக வேண்டும். பைக்கில் வரும் போது பெட்ரோல் தீர்ந்திருந்தது. பங்கில் ஆள் இல்லை. காலையில் போகும் போது அதையும் போட்டுக் கொள்ள வேண்டும்.

பணம் கேட்க வேண்டும். பணிகளை முடித்து இந்த வாரத்துக்குள் பணத்தை வாங்கி விட்டு அடுத்தக் கட்ட வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.

22ம் தேதி மாயவரம் போகும் பயணத்திட்டம். அதற்கு முன்பு கையில் பணம் வந்து விட்டால் உதவியாக இருக்கும்.
சொன்னது போல இப்படி 5 வாடிக்கையாளர்களை நம்பியிருக்காமல் இன்னும் ஏழெட்டு புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செவ்வாய், ஏப்ரல் 15, 2008

அந்த இரண்டு நாட்கள்

மூன்று நாட்களுக்கு இடைவெளி என்பது ஒரு வளமையாகப் போய் விட்டது. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நாட்குறிப்பு எழுத வேண்டும் என்று வகுத்துக் கொள்ளலாம். தினமும் எழுத வேண்டும் என்று வைத்துக் கொண்டு தவறுவதை விட மூன்று நாட்கள் விதி சிறந்ததாகத் தெரிகிறது.

காலையிலிருந்து தொலைபேசி கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேரும் அவர்கள் கேட்கும் மாற்றங்களுக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நம்மை சாமர்த்தியமாக ஆட்டுவிக்கிறார்கள் என்பது நேற்று உறைத்தது.

ஐந்தரை மணிக்கு காமராசர் அரங்கத்தில் நிகழ்ச்சி. தாமதமாகத்தான் ஆரம்பிப்பார்கள் என்று ஆறு ஆறரை மணிக்கெல்லாம் புறப்படலாம் என்று நினைத்திருந்தேன். காலையில் தொலைபேசி, அவளையும் கூட்டிப் போக வேண்டும் என்றாள். 'தம்பியின் தோழிக்கு உடல் நிலை சரியில்லை, அம்மா ஏதோ விரதம் இருக்கிறார், அப்பாவையும் விட்டு விட வேண்டியதுதான். நாம இரண்டு பேரும்தான் போகணும்' என்றாள். நான் ஏதாவது நினைத்துக் கொண்டு வராமல் இருந்து விடுவேனோ என்று கவனமாக திட்டமிட்டிருப்பாள் என்று நேற்று தோன்றியது.

நாலரை மணிக்கெல்லாம் மதுரவாயல் வந்து அழைத்துக் கொள்ளும்படி சொன்னாள். அலுவலகத்திலிருந்து 4 மணிக்காவது கிளம்ப வேண்டும். நான்கு மணிக்கு சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன்.

நாலரைக்கு முன்பே வீட்டுக்குப் போய் விட்டேன். வெளியில் ஒரு பைக்கும், அதில் வந்தவரின் காலணியும் தெரிந்தன. மேலே ஏறிப் போனால், அலுவலக அறையில் எதிரில் இருப்பவரிடம் கண்டிப்பாகப் பேசிக் கொண்டிருந்தாள். பேசும் தோரணையைப் பார்த்தால் கூட வேலை பார்ப்பவரிடம் பேசுவது போலத் தெரியவில்லை. ஏதோ தோல் செய்து கொடுப்பவரை மிரட்டுவது போலப் பட்டது. 'ஒரு வேளை எனது ஊகம்தான் தவறோ' என்று நினைத்துக் கொண்டேன்.

காலையிலிருந்து சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ செய்யாமல் விரதம் இருந்திருந்தேன். தண்ணீர் வேண்டாம் என்று சொல்லி விட்டுக் காத்திருக்க ஆரம்பித்தேன். நான் வருவேனா என்று சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது. அவள் அறையை விட்டு வெளியில் வந்ததும், தம்பியின் தோழியையும் வெளியில் அனுப்பி வைத்தார். காய்ச்சலில் வாடிய முகம். மெலிந்த தேகம், மென்மையான பண்பு. ரஷ்யாவைச் சேர்ந்த பெண் அவர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். 'நீ போவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஆச்சரியமாக இருக்கும். நீ வருவது சந்தேகம்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்' என்று தன்னை அறியாமலேயே குட்டை உடைத்து விட்டார்.

புகைப்படக் கருவியைக் கையில் கொடுத்து விட்டாள். ஏற்றிக் கொண்டு, ஆற்காடு சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் அருகில் திரும்பி அண்ணா சாலைக்கு வந்து காமராசர் அரங்கம். ஓட்டும் போது தடுமாற்றமாக இருந்தது. பசியாக இருக்கலாம். அல்லது பின்னால் உட்கார்ந்திருந்த அலைபாய்தலாக இருக்கலாம்.

வரவேற்பு மேசையில் சின்னவகுப்பு ஆசிரியை இருந்தார். 'உங்களை தொலைக்காட்சியில் பார்த்தேனே' என்று சொன்னார். அரங்கத்துக்குள் சரியான நேரத்துக்குப் போய் விட்டோம். நிகழ்ச்சிகள் அரை மணி நேரம் தாமதமாகத்தான் ஆரம்பித்தன. குழந்தைகளின் இருக்கைக்கு அருகில் போய் முகத்தைக் காட்டி விட்டு பின்னால் இடம் பிடித்துக் கொண்டோம். எல்லோருக்குமே என் வருகை தேவையாகவும் நிறைவாகவும் இருந்தது.

பேசிக் கொண்டிருந்ததில் பொழுது வேகமாகப் போனது. வாயில் நாற்றம் அடித்ததை வைத்து, கேட்டதும் சாப்பிடாமல் இருப்பதை சொன்னேன். தேவைஇல்லாமல் தொலைக்காட்சி பேட்டிகளைப் பற்றிக் குறிப்பிட்டேன். பொறுக்க முடியாமல் நாலு வாங்கு வாங்கினாள். 'பெரிய தத்துவம் மட்டும்தான் தெரியும். தனி வாழ்க்கையில் பூச்சியம்' என்று கிளறினாள்.

பரிசளிப்பு விழா முடிந்ததும் அழைத்து வந்து விட்டாள். அதற்கு முன்பே வெளியில் போய் சாண்ட்விச்சுகள், சோளப்பொறி, தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து விட்டேன். வரும் முன்பு அவை தீர்ந்தும் போயிருந்தன.

என்னருகில் இருப்புக் கொள்ளவில்லை. அம்மாவின் பக்கத்து இருக்கைக்குத் தாவி விட்டாள். பசிக்கு சாப்பிட முந்திரிப் பழம். தொடர்ந்து காரமாக ஒரு தின்பண்டம் வாங்கி வந்தாள். 100 ரூபாயைக் கொடுத்து அனுப்பி வைத்தாள் அவள் அம்மா. அவள் வழி தப்பிப் போவதாகப் பட நானும் பின்தொடர்ந்து போனேன். போய் பொருளைத் தொட்டுக் காட்டிக் காசை நீட்டினாள். கடைக்காரர் மீதிக் காசை கொடுக்க வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள். நான் அவள் கண்ணில் படாமலேயே வந்த வழியில் திரும்பி விட்டேன்.

அம்மாவிடம் காசைக் கொடுக்கும் போதுதான் கணக்குப் போட ஆரம்பித்தாள். அதுவும் அம்மாவின் மிரட்டல் கேள்விகளுக்கிடையே. கடைசியில் முதலிலேயே கணக்குப் போட்டு பார்த்துதான் வாங்கி வந்ததாகச் சொல்லி விட்டாள். அதைப் பொறுக்க முடியாமல் பிற்பாடு உணவு விடுதியில் சாப்பிடும் போது உண்மையைச் சொல்லி விட ஆரம்பித்தாள். கேட்கப் பொறுமையும் மனதும் இல்லை. தனது மனதில் உருவாக்கிக் கொண்ட கனவுலகத்திலேயே வாழ்ந்து கொள்கிறாள்.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. மயில் வேஷம் போட்டு ஆடும் ஒரு குழு நடனமும் முடிந்தது. அவனையும் அழைத்து வரப் போய் விட்டாள். ஒன்பதரை மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். வெளியில்

நான் கல் தோசை, வெங்காய ஊத்தப்பம். சூப்பும், ஆரஞ்சு சாறும். குடிக்கத் தண்ணீர் கேட்க, அதை சாறுக்கான வேண்டுகோள் என்று நினைத்துக் கொண்டு ஆர்டர் கொடுத்து விட்டாள். ஏன் சொல்வது காதில் விழ மாட்டேன் என்கிறது.

வெளியில் வந்து நால்வரும் வண்டியில் ஏறிக் கொண்டோம். முதல் நாள் போல இழுக்க முடியாமல் இல்லாமல், வசதியாகவே ஓடியது. தூக்கக் கலக்கம். வேண்டா வெறுப்பாக ஏறுவது போல ஏறிக் கொண்டார்கள். ஆற்காடு சாலை பிடித்து ஒரு வழிப்பாதை எல்லாம் தாண்டி வடபழனி வந்தேன். தூரம் இழுத்து விட்டது. டாடா உடுப்பி அருகில் ஆட்டோ ஒன்றில் ஏற்றி விட்டேன்.

11ம் தேதி வெள்ளிக் கிழமை சனிக்கிழமைக்கான தயாரிப்புகளை செய்யலாம் என்று காலையில் ஆரம்பித்தேன். அன்றும் இண்ட்கெம்முக்கான போராட்டங்கள் தொடர்ந்தன. மாலை 6 மணி வாக்கில் வீட்டு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்பது மறந்தே போயிருந்தது. ஐந்தே முக்காலுக்கு தொலைபேசினார். சொல்லி விட்டு கிளம்ப முனைந்தேன். 6 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விட்டார்

உடனேயே கிளம்ப மனமில்லாமல் இழுத்தடித்து இழுத்தடித்து ஏழரை மணிக்குக் கிளம்பினோம். வழியில் பெட்ரோல் போட்டுக் கொண்டோம். வாகன நெரிசலில் நீந்தி, கொஞ்சம் சுற்றி எடுத்து மயிலாப்பூருக்கு வரும் போது எட்டரை மணி ஆகி விட்டது. லஸ் முனையில் சங்கீதா விடுதி. மூன்று நிச்சயதார்த்தங்கள். மேலே போய் பேசிக் கொண்டிருந்து விட்டு சாப்பிடும் இடத்தருகில் வரும் போது வந்தார்கள். அவர்களுடன் காரசாரமான பேச்சுக்கள் தொடர்ந்தன.

இலை போட்டு பல விதமான உணவு வகைகளுடன் சாப்பாடு. சப்பாத்தி, இனிப்பு வகைகள், வடை, பாயாசம், சோறு, சாம்பார், ரசம், பருப்பு என்று வந்து கொண்டே இருந்தன. குலாப்ஜாமூன், பாயாசம், இனிப்பு தவிர்க்க முடிந்தது. பருப்பு, வடை, உருளைக்கிழங்கு வறுவல் சேர்ந்து கொண்டன. கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு எழுந்தேன்.

வீட்டுக்கு வந்து சேரும் போது 11 மணி தாண்டி விட்டது. இரண்டாவது நாளாக 12 மணி வாக்கில் தூக்கம். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். சனிக்கிழமைக்கான நிகழ்ச்சி நிரலை மனதில் உருவாக்கிக் கொண்டிருந்தேன்.

மொத்தம் நான்கு மணி நேரம். மதிய சாப்பாடும், மாலை தேநீரும் பக்தவத்சலத்திடம் சொல்லி விட வேண்டியது. மதிய உணவில் சாம்பார், ரசம் என்று இல்லாமல் பல வகை சாதங்கள் என்று திட்டம் செய்து கொண்டேன். இரவு உணவு எல்லோருமாக வெளியில் போக வேண்டியது. மாலையில் எல்லோரையும் புகைப்படம் எடுக்க ஏற்பாடு.

குழுவினர் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தும் சந்திப்பு, இயக்குனர்கள் சந்திப்பு, பங்குதாரர்கள் சந்திப்பு என்று எல்லாவற்றையும் திட்டமிட்டுக் கொண்டேன். கிட்டத்தட்ட வெறுங்கையில் முழம் போடுவது போலத்தான் தெரிந்தது. காலையில் அழைத்து வரப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். 7 மணிக்கு வழக்கமான சந்திப்பையும் ரத்து செய்யவில்லை.

காலையில் கிளம்பிப் போகும் போது எதிரில் வந்தார். முந்தைய இரவு படத்துக்குப் போய் விட்டு அலுவலகத்திலேயே தங்கியிருக்கிறார். அலுவலகத்தில் அதிகாலை பேருந்தில் வந்து விட்ட. அவர் தியானத்தில் இருக்க தொந்தரவு செய்யாமல் நிகழ்ச்சி நிரல் போட ஆரம்பித்தேன். அவர் கண் விழித்து வந்ததும் 7 மணி வரை அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

7 மணிக்கு தலைமைப்பண்பு வளர்ப்புக்கான வாராந்திர சந்திப்பு. குறிக்கோள்கள் என்று ஆரம்பித்தோம். இடையில் சேர்ந்து கொண்டார். 8 மணி வாக்கில் தனியார் நிறுவனம், இயக்குனர்கள், பங்குதாரர்கள் என்று அறிமுகம் கொடுத்தேன். அதற்குள் வந்து விடுவதாகத் தொலைபேசி விட்டு வந்து சேர்ந்தார்கள்.

தானாக வந்து எட்டிப் பார்த்தார். அவர் கையில் வீட்டுச் சாவியைக் கொடுத்து வண்டியில் வீட்டுக்கு அனுப்பி விட்டோம். வளசை சுபாவில் சாப்பிடப் போனோம். 4 இட்லி, வடை, தேநீர். கையில் காசு வறட்சி என்று சொல்லி முன் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்.

நிகழ்ச்சி நிரலை மின்னஞ்சல் மூலம் எல்லோருக்கும் அனுப்பினேன். 10 மணிக்கு முதல் பகுதி. ஒரு பகுதியில் தரக்கட்டுப்பாடு குறித்து ஒரு குழுவினருக்கும் இன்னொரு பகுதியில் வாடிக்கையாளர் சேவை குறித்து பேசினார்கள். சாப்பாட்டுக்கு ஏற்பாடுகளை ஒப்படைத்து விட்டேன். இடையில் விடுபட்டு காண்பிக்க வேண்டிய படக்காட்சியையும் தயார் செய்து கொண்டேன்.

வந்து விட்டார். இரண்டாவது பகுதியில் அவரை அமர்வுக்கு அனுப்பினேன். வாடிக்கையாளர்களின் தேவை விபரங்களை பதிவு செய்து தீர்வு காண்பதை கவனிக்கும் கருவியை மேம்படுத்துவது குறித்து அங்கு விவாதம். வாடிக்கையாளர்கள் சேவை மூலம் எப்படி நமது பணிகளைப் பெருக்கிக் கொள்வது என்று வகுப்பு.

ஒன்றரை மணிக்கு வந்தார்கள். உட்கார்ந்து சாப்பிட வேண்டாம் என்று கையில் தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தோம். திட்டமிட்டபடி இரண்டரை மணிக்கு இயக்குனர்கள் சந்திப்பு. போன ஆண்டு நிகழ்வுகளைப் பேச ஆரம்பித்தேன். படக்காட்சியும் வசதியாக அமைத்துக் கொண்டோம்.

இலக்கு மார்ச்சு மாதம் தவறியதற்கு சமாதானம் சொல்லக் கூடாது என்பதை ஏற்றுக் கொண்டேன். மாதா மாதம் என்ன இலக்கு இருக்க வேண்டும் என்று எண்களாகப் போட்டுப் பார்த்தோம். அப்படி மதிப்பை அதிகரிக்க வேண்டுமானால், வாடிக்கையாளர்களிடம் விலை ஏற்றம் கிடைக்க வேண்டும். குழுவில் புதிய கருவிகள் மூலம் பணித் திறன் அதிகரிக்க வேண்டும் என்று பேசினோம்.

வாடிக்கையாளர்களுக்கு மாதா மாதம் அவர்களுக்குப் புரியும் படியான, பலன் கிடைத்து விடும்படியான சேவைகளை வரையறுத்து காசு வாங்க முயற்சிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். குறிப்புகள் எடுக்க அழைத்திருந்தோம். அது மற்றவர்களுக்குக் கடுப்பாகத்தான் இருந்திருக்கும்.

இடையில் ஒரு தேநீர் இடைவேளை.

பணி ஆற்றும் குழுவினரை ஒருங்குபடுத்திக் கொண்டு செல்ல எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

சரியாக நாலரைக்கு வந்து விட்டார். உடல் நிலை சரியில்லாமல் வாடிப் போயிருந்தார். ஐந்தரை மணிக்கு. தேநீர் வர தாமதம். புகைப்படக் கலைஞர் வந்து காத்திருந்தார். எல்லோரும் உட்கார்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஐந்தரை மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பங்குதாரர்கள் கூட்டம் 6 மணி வாக்கில் ஆரம்பித்தது.

நிறுவனத்தின் நீண்ட கால கொள்கைகள் குறித்து படங்களைக் காட்டிப் பேச ஆரம்பித்தேன். யாருக்கும் விவாதிக்க மனமிருக்கவில்லை. நிறுவனங்களை இணைக்கும் சேவை என்ற அடிப்படைத் திட்டம் என்ன ஆச்சு? என்று குண்டைத் தூக்கிப் போட்டான். பேசிக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை. 20 பேர் பணி புரியும் நிறுவனத்தில் குறைந்தது மாதத்துக்கு ஈட்ட வேண்டாமா? நிறுவனங்களை இணைப்பதில்தான் நமது தனித்தன்மை இருக்கிறது.

புதன் கிழமையிலிருந்து தொடர்ந்து தாமதமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறேன். கண்கள் எரிச்சலும், தூக்கக் கலக்கமும் ஆட்டின. பேருந்து ஏற்றி விடலாம் என்று போய் வடபழனி வரை போய் விட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன்.

நானும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தூங்கப் போய் விட்டேன்.

காலையில் 6 மணிக்கு விழிப்பு. நான் நடமாடியதில் விழித்துக் கொண்டார். அவருடன் உலாவப் போய் விட்டுத் திரும்பும் போது அவர் செலவில் அவல், வெங்காயம், தேங்காய், பால் வாங்கிக் கொண்டேன். அவல் தாளித்து, பால் சுட வைத்து, தேநீர் போடுவதில் நேரம் ஓடி விட்டது. ஒவ்வொருவராகக் குளிக்க ஆரம்பிக்க நானும் குளித்து தியானத்தை தவற விட்டு சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

அலுவலகத்துக்கு 9 மணிக்கு வந்து விட்டோம். விவாதம் ஆரம்பித்தது. ஒன்பதைக்கெல்லாம் வந்து விட்டார்கள். 11 மணிக்கு, அவர்கள் பின்னாலேயே வந்தார்கள்.

11 மணிக்கு விவாதத்தை ஆரம்பித்தோம். வாடிக்கையாளர்களுக்கு சேவை முறைகளை தெளிவாக விளக்க ஒரு ஒப்பந்தமும் ஒரு உதவிக் கையேடும் தயாரித்திருந்தார். அதைக்குறித்து அவர் முதலில் பேச ஒவ்வொருவராக கருத்துச் சொல்லக் கேட்டேன். நல்ல புரிந்துணர்வுடன் தத்தமது கருத்துக்களை விளக்கினார்கள்.

அவர் புதிதாக உருவாக்கியிருந்த நிரல் அணியை விளக்க வேண்டும் என்று முனைந்து ஒரு வகுப்பெடுத்தார். நான் அதில் சேர்ந்து கொள்ளும் அளவுக்கு மூளைத் தெளிவு இருக்கவில்லை. அனுப்ப வேண்டிய ஆவணத்தைப் பார்ப்பதில் ஆரம்பித்து அவருக்கான வழிகாட்டல் விவாதமாக நீண்டது. 2 மணிக்கு அப்புறமும் போய்க் கொண்டிருந்தது.

இரண்டே கால் மணிக்கு டாடா உடுப்பி விடுதி. மாடிக்குப் போய் சாப்பாடு. சாம்பார் வேண்டாம் இனிப்பு வேண்டாம் என்று ஒதுக்கினாலே சாப்பிடும் அளவு குறைந்து விட்டது. பேசிக் கொண்டே சாப்பிட்டோம்.

தெளிவான தோற்றங்கள்

ஞாயிற்றுக் கிழமை மாலையில் எழுதிய பிறகு மூன்று நாட்களுக்கு எழுத்துக்கு வேலை கிடைக்கவில்லை. திங்கள் கிழமை முந்தைய நாள் எழுதி விட்ட சடைவு, செவ்வாய்க் கிழமை நேரமில்லை. நேற்று ராணிப்பேட்டைக்குக் கிளம்பல். இன்றைக்கு காலையில் 5 மணி.

நேற்றுக் காலையில் சீக்கிரமாக விழிப்பு வந்தாலும் 5 மணி வரை புரண்டு கொண்டே இருந்தேன். எண்ணங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு எழுந்திருக்கலாம் என்று நோக்கமாம். எழுந்து பல் தேய்த்து, குளித்துத் தயாராகும் போது ஐந்தே முக்கால் மணி. தியானம் செய்து விட்டு அலுவலகத்துக்குப் போனேன். அதற்குள் எழுந்து புறப்பட்டிருந்தார்.

கணினியை இணைத்து கோப்புகளை நகல் செய்து கொண்டேன். கார் ஆறரை மணிக்கு வந்து விட்டது. நான் முதலில் போய் ஏறிய பிறகு சில நிமிடங்கள் கழிந்து வந்தார். அதே லட்சுமணன் ஓட்டுனர். தூக்கக் கலக்கமும், மனச் சோர்வும் அடித்துக் கொண்டிருந்தன.

காரில் ஹலோ பண்பலை வரிசையின் காலை நிகழ்ச்சிகள். சாய்பாபா பக்தி பாடல்கள் வந்தன. ஆங்கிலக் கலப்பில்லாமல் நல்ல தமிழில் பேச வேண்டும் என்று முனைந்து பேசுவது போலப் பட்டது. ஏழு மணிக்கு திருச்சியிலிருந்து வந்துள்ளதாக ஒரு பெண் கனமான குரலுடன் பேசி பாடல்கள் வழங்க ஆரம்பித்தார். அதற்குள் எல்லை தாண்டிப் போய் கேட்க முடியாமல் ஆகி விட்டது.

வண்டிக்கு டீசல் போடுவதற்கு நிறுத்திய இடத்தில் காற்றடிக்க நேரமாகும் என்று சொல்லி விட்டார்கள். சக்கரங்களில் காற்று குறைவாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே நான்கைந்து பங்குகளில் நிறுத்திப் பார்த்தார். எங்கும் காற்றடிக்கும் சேவை இல்லை. ரிலையன்ஸ் பங்குக்குள் நுழைந்தால் அதன் பணியையே நிறுத்தி விட்டார்களாம்.

கடைசியில் ஓட்டை அடைக்கும் சின்ன கடை ஒன்றில் காற்று அழுத்தம் சரி பார்த்துக் கொண்டார். எட்டரை மணிக்கு வாலாஜா. வாலாஜா கோவிலுக்கு எதிரில் இருக்கும் தோட்ட உணவு விடுதியில் சாப்பிடலாம் என்ற ஆலோசனையைத் தொடர்ந்து அங்கு போனோம். இட்லி என்றால் ஈஸ்ட் போட்டு உப்பலாக 3 இட்லிகள். தோசை ஒவ்வொன்று. தேநீர். இட்லிகளுடன் கூட வடை. மொத்தம் 103 ரூபாய்கள். தலைக்கு 31 ரூபாய். அவ்வளவுக்குச் சிறப்பாக இல்லைதான்.

சாப்பிடப் போனால், அங்கு ஒரு பழைய நண்பர் இருந்தார். கல்லூரி மூத்த மாணவராகப் படித்தவர். கிளேரியன்டில் வேலை பார்த்து வருகிறார். முன்பு ஆம்பூர் வாணியம்பாடியில் இருந்தவர், இப்போது சென்னை, ராணிப்பேட்டையில் கேஎச் குழுமம், தேவாஸ் டாடா என்று பொறுப்பேற்றிருக்கிறாராம். போட்டி அதிகமாகி விட்டது, பணி செய்வதில் சிரமங்கள் அதிகம் என்று பேசிக் கொண்டிருந்தார்.

சாம்பார் சாப்பிடுவதை நிறுத்திய பிறகு நெஞ்சு எரிச்சல் குறைந்து விட்டதாக நினைவு. நேற்றும் காலையிலும் மதியமும் சாம்பார் சாப்பிடவில்லை. இடைவெளியில் முறுக்குகளும், கடலை உருண்டைகளும் கொடுத்தவை சாப்பிட்டும் தொந்தரவு எதுவுமே இருக்கவில்லை. சாம்பார் சாப்பிடாமல் இருந்தால் சாப்பிடும் அளவு குறைவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

டெம்ப் அடைவில் இருந்த கோப்புகளை நீக்கி விட்டாராம். ஆனால் ஒரு அறிக்கையில் விபரங்கள் வர மாட்டேன் என்கின்றன. மற்ற எல்லா இடங்களிலும் சரியாக இருந்தது. அறிக்கை உருவாக்கும் கோப்பில் படிப்படியாக ஆராய்ந்து பார்த்ததில் ஒரு வரி தவறாக எழுதியதன் விளைவாக நிகழ்ந்திருக்கிறது என்று தெரிந்தது. டெம்ப் அடைவில் கோப்புகளை நீக்கியதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. இன்னொரு கணினியில் பயர்பாக்சு இயக்க முயன்றால், 'இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்து, முட்டாள்' என்று ஒரு வாக்கியத்தைக் காட்டி விட்டு பயர்பாக்யை மூடும் நச்சு நிரல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. அந்தக் கணினியில் இணைய இணைப்பு இல்லை, அதனால் எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.

அறைக்குள் போய் உட்கார்ந்ததும். கூட்டம் நடக்கும் அறைக்குள் போகச் சொன்னார். எல்லா பிரிவுகளிலிருந்தும் கணினி பயன்படுத்துபவர்களை அழைக்கச் சொன்னார்.

புன்முறுவலுடன் மகிழ்ச்சியான சூழலில் ஆரம்பித்தது. மூன்று மாதங்களாக குறிப்பாக கடந்த மூன்று வாரங்களில் செய்த கடின உழைப்பின் பலன் தெரிந்தது. மென்பொருளின் பயன்பாட்டில் குறைகள் எல்லாம் கட்டுக்குள் வந்து விட்டிருந்தன. அவர்கள் கேட்ட மாற்றங்கள் எல்லாம் முடிந்து விட்டிருந்தன. ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்து, மாறுதல்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டேன்.

அதை மூன்று பிரிவுகளாக தருவதாகச் சொன்னார். சேர்த்தே வேண்டும் என்று சொன்னதும் பார்க்கலாம் என்றார். நேற்றே ஏதாவது காசோலை கிடைத்து விடும் என்று எதிர்பார்த்தால், எதுவும் சொல்லாமலேயே கிளம்பி போய் விட்டிருக்கிறார். வெள்ளிக் கிழமைதான் திரும்பத் தொடர வேண்டும்.

நமக்குச் சாதகமான வழியிலேயே விவாதங்கள் போயிருந்தன. அடுத்து, தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது குறித்த மென்பொருள் செய்ய வேண்டும் என்று தேவை கொடுத்திருந்தார்.

ஞாயிற்றுக் கிழமை எழுதியிருந்த கடிதத்தில் ஆங்கில மொழிமாற்றத்தை அனுப்பியிருந்தேன். பல பகுதிகளை நீக்கி விட்டு, நேரடியான உரையாடல் மட்டும் போதும் என்று சுருக்கியிருந்தேன். அதற்கு மறுமொழியாக நேற்று, 'உன் மடலைப் படித்தேன், சொல்ல வருவது என்னவென்று நன்றாகவே புரிகிறது' என்று நக்கலாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். அதற்கு மறுமொழி எதுவும் கொடுக்காமல் விட்டிருந்தேன். நேற்றுக் காலையில் வாலாஜாவில் இறங்கியதும். 'வழக்கம் போல உன்னைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன்' என்று குறுஞ்செய்தி அனுப்பியதற்கும் பதில் இல்லை.

மதிய உணவு வேளைக்குப் பிறகு தொலைபேசி அழைப்பு. பெரிய கனவுகளோடு தரம் பார்க்கப் போன தோல்கள் எதிர்பார்த்தது போல இல்லையாம். திட்டங்கள் நினைத்தபடி நடக்காது. கோபம், சோர்வு. வெளியே வந்து நான் முயன்றால் இணைப்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக இணைய மறுத்தது.

காரில் வாலாஜாவிலிருந்து கிளம்பும் போது அழைத்தாள். நேற்று ஓட்டுனர் வராததால் வண்டியை எடுக்க முடியவில்லை. பேருந்தில் ஷேர் ஆட்டோவில் பல்லாவரம், குன்றத்தூர் என்று அலைந்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கிறாள். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அழைப்பு. வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கிறாள். மிகவும் களைத்திருக்கிறாள். மனம் சோர்வடைந்திருக்கிறது.

உண்மைத் தமிழன் காவல் துறையிடம் போலி விவகாரம் குறித்து புகார் கொடுத்ததைக் குறிப்பிட்டுத் தொலைபேசினார். நீங்களும் புகார் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்ள. 'இன்னார்தான் போலி என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? எனக்குப் போலியால் ஏற்படும் பாதிப்பைத் துடைத்துப் போட்டு விட்டுப் போகத் தெரியும். இது போன்ற வேலைகளுக்கு என்னிடம் நேரம் இல்லை' என்று சொல்லி வைத்து விட்டேன். காய்ச்சல் வந்து விட்டதால் மருத்துவரைப் பார்க்கப் போயிருக்கிறாராம்.

'மம்மி களைப்பாகத் தூங்கி விட்டாள்' என்று தகவல் சொன்னான். 'நீ தூங்கலையாக்கும்' என்று விசாரித்தால், இறுக்கமான் ஒரு நோ. கனிவாக இரவு வணக்கம் சொல்லி விட்டு வைத்தேன். முதலில் கோபமாக இருந்தாலும் வீட்டுக்குள் வந்து கை கால் கழுவி உட்காரும் போது வடிந்திருந்தது. சின்னக் குழந்தை தனக்குத் தெரிந்தவற்றுக்கு, புரிந்த அளவுக்கு எதிர் வினை கொடுக்கிறான். இன்னும் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது.

நாளிதழைப் பார்த்தால் அமெரிக்காவில் திபெத்தியர்கள் சீன ஒலிம்பிக்கை எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் குறித்த செய்தி. சீன கம்யூனிஸ்டு அரசாங்கம் தலாய் லாமாவுடன் பேசி அமைதிக்கு வழி வகுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இந்த மூன்று நோக்கங்களுடன் இன்றைக்கு விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். மனம் தெளிவாக இருக்க வேண்டும். வலைப்பதிவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வது குறைய வேண்டும், திபெத்தில் மாறுதல்கள் ஏற்பட வேண்டும், அமைதி ஏற்பட வேண்டும்.

நேற்று திரும்பும் வழியில் அறுசுவை அரசு விடுதியில் சப்பாத்தி, பால் சாப்பிட்டிருந்தேன். மதியம் சாப்பாடு. அதற்கு முன்பு சில முறுக்குகள் கடலை உருண்டைகள். காலையில் இட்லி, வடை, தோசை, தேநீர். இன்றைக்கு காலையிலும் மதியத்திலும் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு மாலையில் பார்த்துக் கொள்ளலாம்.

பருப்பு வகைகளை ஒதுக்கும் போதும் அதற்கான காரணங்களை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

சனிக்கிழமை சந்திப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அலுவலகத்தில் தேவை இல்லாத பொருட்களை அகற்றி தூய்மைப் படுத்த வேண்டும்.

எழுத்தை முடித்து விட்டு, வீட்டை ஒதுங்க வைத்து தூத்து வார வேண்டும். 6.30. துணி துவைக்க வேண்டும் மூன்று நாட்களுக்கான துணிகள். அரை மணி நேரம் ஆகி விடும். குடிக்கத் தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும். குளித்து தயாராகும் போது 8 மணியாகி விடும். சாப்பிடுவதற்கு எதுவும் தேவையில்லை. அலுவலகத்துக்குக் கிளம்பி விடலாம்.

இன்று ராணிப்பேட்டையிலும், வாணியம்பாடியிலும் ஓய்வு நாள்.

ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விசாரிக்க வேண்டும். ஒரு பெண்ணாகப் பிறந்து வாழ்வது பெரும்பாடுதான். முக அழகு, உடல் ஆரோக்கியம், குடும்ப நலன், குழந்தைகளின் வளர்ப்பு, எதிர்கால சேமிப்பு என்று பல முனைகளில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. வெற்றிகரமாக இயங்கும் ஒரு நிறுவனத் தலைவர் சுமக்கும் பொறுப்பை ஒவ்வொரு குடும்பத்தலைவியும் தாங்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலானோர் நல்லபடியாக சமாளித்துப் போகிறார்கள்.

நல்ல காலம் இன்னும் பிறக்கவில்லை என்று தோன்றியது. அவளது தம்பி தன் இணையுடன் 7ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. வந்திருப்பான். 15ம் தேதி திருப்பதியில் திருமணமாம். 17ம் தேதி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவளது அப்பா அம்மா ரயிலேறுகிறார்களாம். அதற்குப் பின்பு இன்னும் அதிகமாக தனிமையை உணர ஆரம்பித்து விடுவாள்.

பெண்களின் கோபம் பனிக்கட்டி போன்றது, கொஞ்சம் வெதுவெதுப்பு காட்டினால் உருக ஆரம்பித்து விடும். விவாதங்களில் இறங்காமல், கருத்து வேறுபடும் இடங்களைத் தாண்டி அல்லது பக்காவாட்டில் ஒதுங்கி இன்னொரு திசையில் அணுகினால், கருத்து வேறுபாடு கருத்தில் இல்லாமலேயே போய் விடுகிறது.

சீனா குறித்து ஒரு புத்தகம் எழுதும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். விக்கிபீடியா திட்டத்துக்கு என்னால் ஆன உதவியை செய்கிறேன். புதிய பொறுப்புகள் எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்று சொல்லி வைத்தேன். அருள்குமாரின் நினைவு வருகிறது. அவரும் இப்படித்தான் வேலை வேலை என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

வெளியில் உலாவப் போவதும் ஞாயிற்றுக் கிழமை மாலை செய்ததுதான். செவ்வாய்க் கிழமை காலையில் வண்டியை எடுத்து வர விட்டு விட்டு நடந்தே அலுவலகத்துக்குப் போனதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சனிக் கிழமை கூட்டத்துக்கு, அலுவலகத்தை தூய்மை செய்வது, குழுவினரிடம் ஒருமித்த கருத்து உருவாக்குவது, சனிக்கிழமை காலை சந்திப்புடன் ஆரம்பித்து வைப்பது என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

55 நிமிடங்களில் 1355 சொற்கள். 23 சொற்கள் ஒரு நிமிடத்துக்கு என்ற வீதம்தான் வந்திருக்கிறது. எண்ண ஓட்டங்கள் கொஞ்சம் திக்கித் திக்கி எழுதியது போலத்தான் தோன்றியது. தூத்து ஒதுக்கி முடித்து விட்டு எம்ஜிஆர் பாடல்களை ஓட விட்டுக் கொள்ள வேண்டும். தேய்க்கக் கொடுத்திருந்த துணிகளை இன்றைக்கு துரத்தி வாங்கிக் கொள்ள வேண்டும்.

மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும். 15ம் தேதி கடைசி தேதி. அதற்குள் கட்டி விட வேண்டும். இன்னும் 3 நிமிடங்கள் இருக்கின்றன. இந்த வாரத்தில் இன்னும் மூன்று நாட்கள். இந்த மாதத்தில் மூன்றில் ஒரு பகுதி முடியப் போகின்றது. இன்றைக்கு ஆண்டுத் திட்டத்தை முடிவு செய்து விட வேண்டும்.

இன்று 10 மணி முதல் ஒரு குழு விவாதம் வேண்டும். அரை மணி நேரத்துக்கு. கடந்த ஆண்டு என்ன செய்தோம், வரும் ஆண்டில் என்ன திட்டங்கள் என்று சொல்லி கருத்து கேட்டு விட வேண்டும்.

வேலை பார்க்கும் குழுவினருக்கான அறக்கட்டளையிடம் பங்குகளை மாற்றுவது குறித்தும் சனிக்கிழமை சந்திப்பில் விவாதிக்க வேண்டும்.

செவ்வாய், ஏப்ரல் 08, 2008

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!

ஞாயிற்றுக் கிழமை மாலை ஏழு மணி முப்பது நிமிடங்கள். நேற்றுக் காலையில் எழுந்திருக்கும் போது 6 மணி. நான்கு மணியிலிருந்து புரண்டு புரண்டு படுத்து எழுந்திருக்கும் போதுதான், 7 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று நினைவுக்கு வந்தது. வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் போய் விட்டு, நூம்பலும் போய் விட்டு வந்திருந்தேன். அந்தக் களைப்பும் தூக்கமும் இருந்திருக்கலாம்.

எழுதுவது, தூப்பது துடைப்பது எல்லாம் தள்ளிப் போட்டு விட்டு, காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளித்து வெளியில் வரும் போது ஆறே முக்கால் ஆகி விட்டது. தியானத்தில் உட்கார்ந்தால் தாமதமாகி விடும் என்று, ஒரு நாள் தியானம் செய்யாமல் போனால் என்னவாகும் என்று கிளம்பி விட்டேன்.

அலுவலகத்தில் ஒருவர் ராணிப்பேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். இரண்டாமவர் பையனை பள்ளியில் சேர்க்கப் போவதை முன்னிட்டு விடுமுறை. இரண்டு பேர்தான் மிஞ்சினோம். நிறுவனத்தை தலைமை தாங்கி நடத்துவதற்குத் தேவையான பண்புகள் பற்றிப் பேச்சைத் தொடர்ந்தோம். இந்தியாவிலிருந்து பேர் சொல்லும்படியாக ஒரு பொருளை உலகெங்கும் விற்கும் நிறுவனத்தை உருவாக்குவதுதான் தனது வாழ்வின் குறிக்கோள் என்று சொன்னார்.

கொள்கை அடிப்படையிலான வாழ்க்கையாக அமைந்தால்தான் வாழ்வு முழுமை பெறும் என்று சொல்லி விளக்க ஆரம்பித்தேன். வேகமாகப் புரிந்து கொள்கிறார், அதே நேரம் தனது கருத்துக்களை சீக்கிரம் விட்டுக் கொடுப்பதில்லை. அவரைக் குறை சொன்னால், உடனடியா எதிர்மறை வினை வருகிறது. அதன் பிறகு நிதானித்து காரண காரியங்களை ஆராய்ந்து கொள்கிறார்.

நிறுவனத்தில் நடப்பவை குழப்பமாக இருப்பதாகச் சொன்னார். அவருக்கு மாற்றங்களின் காரணங்களை நியாயங்களை விளக்கினாலும் முற்றிலும் சமாதானமடையவில்லை. போன ஆண்டு நாலரை கோடி சம்பாதிப்போம் என்று போட்ட திட்டம் பலிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று பார்க்க வேண்டும் என்ற அவரது கருத்தை ஏற்றுக் கொண்டேன்.

டாடா உடுப்பியில் போய் பூரி, தோசை, தேநீர் சாப்பாடு. பூரி மைதா மாவாகத் தெரிந்தது. பருப்பு, கடலைக் கறி இல்லை, உருளைக்கிழங்கு மசாலும் வேலு ஒரு பட்டாணிக் கறியும் கொடுத்து விட்டார்கள். 52 ரூபாய்கள்.

அலுவலகத்துக்கு வந்து பணிகள் சுறுசுறுப்பாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். SVNல் எல்லோரும் கோப்புகளை மாற்றுவதை தடுக்க ஒரு தடை போட வேண்டும் என்று கேட்டவர்களிடம் அது குழுவின் நல்லுறவை பாதித்து விடும் என்று மறுத்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். லெதர்லிங்க் இணைய முகவரிக்கான எண் நாள் முடிவது வரை மாற்றப்பட்டிருக்கவில்லை. இரண்டு முறை தொலைபேசி, இரண்டு முறை இணையத்தில் புகார் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை. இன்றைக்குக் காலையில்தான் மாறியிருந்தது.

பத்தரை மணிக்கு வாராந்தர சந்திப்பு என்று சொல்லியிருந்தேன். முதலில் டிஎன்எஸ் சர்வரில் என்ன கோளாறு ஏற்பட்டிருந்தது என்று விளக்க ஆரம்பித்தேன். அவ்வளவு தெளிவாக விளக்கி விடவில்லை. சிலருக்குக் கொஞ்சம் பிடிபட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து வழக்கமான கூட்டமாகத் தொடராமல். நிறுவனத்தில் சமீப காலமாக நடக்கும் மாற்றங்களைக் குறித்த கருத்துக்களைக் கேட்டேன்.

பலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். 'என்ன மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது, ஏன் அப்படி நடக்கிறது' என்பது புரியாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு. அது நியாயமான குற்றச் சாட்டுதான் என்று சொல்ல வேண்டும். நான் எதையோ கேட்டு விட்டு பலரிடமிருந்து வரும் கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகளை எடுத்துக் கொண்டே போக மற்றவர்களுக்கு புரியாமல் போய் விடுவது இயற்கைதானே.

அதை விளக்கி விட்டு, இனிமேல் இன்னும் தெளிவாக விளக்கி முடிவுகளை எடுப்பதாக உறுதியளித்தேன். சமீபத்திய முடிவுகளின் காரண காரியங்களை விளக்கினேன். கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது என்று தோன்றியது. இன்னும் நீட்டித்து ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு என்பதை விளக்கியிருக்க வேண்டும் என்று சொன்னார் மதியத்துக்கு மேல்.

அது செய்ய வேண்டிய ஒன்று. காலையில் தனித்தனியா ஒவ்வொருவரின் பங்கு குறித்து கடிதங்கள் தயார் செய்து வைத்திருந்தேன். மின்னஞ்சல் வேலை செய்யாததால், ஒரு வாரமாக எல்லாமே சுணங்கி விட்டிருந்தது. இந்த சனிக்கிழமை சந்திப்புக்கான ஏற்பாடுகள், கலந்து கொள்பவர்களுக்கு நினைவூட்டுதல், பயண ஏற்பாடுகளைச் செய்தல் என்று எதுவுமே நடந்திருக்கவில்லை.

இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு மதிய உணவு.

கூப்பிட்டுப் பேசினால் அவரது வருத்தங்கள் குமுறல்கள் வெளி வந்தன. யாரையும் மதிப்பதில்லை, மற்றவர்களிடம் நன்கு பழகுவதில்லை என்று குறை சொன்னார். அவருக்கு உயர் நிலைக்கு உயர்வு கொடுப்பது ஆட்டம் காண ஆரம்பித்தது. இன்னொருவரும் அதில் இருக்கும் சிக்கல்களை ஒத்துக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து அவரது பணிகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் அழைப்பு. பல்லாவரத்திலிருந்து கிளம்பி விட்டாளாம். அலுவலகத்துக்கு அருகில் இறங்கிக் கொள்வதாகவும் கூப்பிட்டுக் கொள்ளும்படியும் சொன்னாள். எப்படியும் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகி விடும்.

சாலையில் இடது புறமாக திரும்பி நின்றேன். காரில் உள்ளே நிற்கும் முகம் இங்கிருந்தே தெரிந்தது. கை அசைத்ததும் வந்து இறங்கினாள். நாள் முழுவதும் வேலை செய்து களைத்த முகம். உண்மையிலேயே அழகாக , பிடித்திருந்த முகம்.

வீட்டுக்குப் போய் கை கால் கழுவி விட்டுப் போகலாமே என்றாள். அப்படியே சுற்றி இடது புறம் திரும்பி ராமாபுரம் வந்து வீட்டுக்கு வந்தோம். வீட்டில் தூசு படிந்து கிடந்தது. காலையில் எதையும் ஒதுங்க வைத்திருக்கவில்லை. பசிக்கிறது என்று பழம் சாப்பிட்டு விட்டதாகச் சொன்னாள். 21ம் தேதி அவள் வாங்கி வந்திருந்த பூங்கொத்தில் இயற்கைப் பூக்களும் இருந்தன. அவை அழுகிப் போயிருக்கும் என்று யோசிக்கக் கூட செய்யவில்லை நான். மேலே போர்த்தியிருந்த பொதியை அவிழ்த்து வாடி, தண்ணீரில் அழுகிப் போயிருந்த பூக்களையும் காம்புகளையும் எடுத்து விட்டு, காகிதப் பூக்களை கழுவினாள்.

நானும் மௌனமாகப் பார்த்துக் கொண்டு உதவ முயன்று கொண்டிருந்தேன். நிறுவனத்தில் ஒருவருக்கு பதவி உயர்வு கொடுக்க என்ன முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டேன். அவளது அறிவுரையைச் சொன்னாள். 'இன்றைக்கு நான் மும்மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். பணியில் ஒரு நல்ல புது திருப்பம், குழந்தைகள் பரிசு வாங்கியது, நீ என்னிடம் அறிவுரை கேட்டது' என்று அப்புறமாக சந்தோஷப்பட்டாள்.

கிளம்பி ராமாபுரம் தாண்டி மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் ஏறினோம். போரூர் சந்திப்புக்கு ஓரிரு கிலோமீட்டருக்கு முன்பிருந்தே வாகனங்கள் காத்திருந்தன. ஒரு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்றிச் செல்லும் வண்டிக்குக் கூட யாரும் வழி விடாமல் நின்று கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு ஒரு பக்கவாட்டுத் தெருவில் நுழைந்தேன். கேட்காமலேயே குழாயில் தண்ணீர் எடுக்க வந்த பெண்மணி இப்படிப் போனால் போரூர் போய் விடலாம் என்றார்.

உள்ளே தெருவின் இளைஞர்களும் மரியாதையுடன் அன்பாக வழி விட்டார்கள். போரூர் பாலமுருகன் கோயிலுக்குப் போக வேண்டும் கப்பாஜி அருகில் திரும்பி விட்டு மறுபடியும் திரும்பி பாலமுருகன் கோவில். சில நிமிடங்களில் அங்கிருந்துக் கிளம்பி குன்றத்தூர் சாலை வந்து வாகனங்களைத் தாண்டி சாலையின் இடது புறத்துக்குப் போய், பூந்தமல்லி திசையில் திரும்பினோம். நிறுத்தியிருந்த ஒரு வாகன ஓட்டியும் அன்பாக மதிப்பாக வழி விட்டார்.

ஹாட் பிரட்ஸ் எதிரில் பக்கவாட்டில் திரும்பி நின்று கொண்டு, சாலையைக் கடந்தோம்.

வெஜ்ஜி விச், வறுவல்கள், பால் என்று கொண்டு வரச் சொன்னாள், பிறந்த நாள் கேக்கு ஒன்றை செய்வதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்த முறை தானே செய்து பார்க்க முயற்சிப்பாள். வெளியில் வரும் போது 9 மணி. 'பையை கையில் கொண்டு வந்திருந்தால் இப்படியே சீக்கிரமாக வீட்டுக்குப் போயிருக்கலாம்' என்றாள். அப்படிப் போகக் கூடாது என்றுதானே பையை வீட்டிலேயே விட்டு விட்டு வரச் சொல்லியிருந்தேன்!

போரூர் சந்திப்பைத் தாண்டி ராமாபுரம் வந்து வீடு. 10 மணிக்குக் கிளம்பலாம், கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்று சொன்னேன். நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டோம். '10 மணி ஆகி விட்டது, சிந்தரெல்லா வீட்டுக்குப் போகும் நேரம்' என்றதும், 'சிந்தரெல்லா 12 மணிக்குத்தான் போகணும்' என்று குறும்பாகச் சொன்னாள். அவளுக்கும் தூக்கம், எனக்கும் தூக்கம், வீட்டுக்குத் தகவல் கொடுத்து விட்டு இங்கேயே தூங்கி விடுவதாகச் சொன்னாள்.

காலையில் வழக்கம் போல 5 மணிக்கு விழிப்பு. வெளி அறைகளில் நாளிதழ்கள், துணிகள் ஒதுங்க வைத்து, அடுக்களையில் பாத்திரங்களை ஒழித்துப் போட்டு தூத்துக் கழுவினேன். வெளியில் இருக்கும் குளியலறையில் குளித்து தியானமும் முடித்து விட்ட பிறகு குடிக்கத் தண்ணீர் பிடித்து வந்தேன். கடைக்குப் போய் பால், முந்திரிப் பழம், பிஸ்கட்டுகள், டாப்ரேமன் நூடுல்களும் வாங்கி வந்தேன்.

அவல் வாங்கி வந்திருந்ததைப் பார்த்து போஹா செய்து தருகிறேன் என்றாள். அதைத் திறந்து பார்த்தால் வண்டு வந்திருந்ததாம். மாற்றிக் கொண்டு வந்த பொதியும் அதே கதைதான். தக்காளி, கொத்தமல்லிக் கீரை, பீன்ஸ், எலுமிச்சை வாங்கி வந்து நூடுல்சைக் கிண்டிக் கொடுத்து விட்டாள், பார்க்கக் கவர்ச்சியாக சாப்பிட சுவையாக இருந்தது.

மகாபலி புரம் போய் விட்டதாக பொய்த் தகவல் சொன்னாள். 10 மணிக்குக் கிளம்பினோம். வீட்டுக்கு வெளியே நிற்கும் போது உள்ளே கூப்பிட்டாள். உள்ளே போக வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். குழந்தைகள் முறைப்பாக இருந்தார்கள்.

சிறிது நேரம் உட்கார்ந்து குழந்தைகளிடன் பேச முயற்சித்தேன். இரண்டு தோசை சுட்டுக் கொடுத்தாள். சாப்பிட்டு விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தேன். அலுவலகத்துக்கு வந்தால் எல்லாமே சோர்வான செய்திகள். தூக்கக் கலக்கமும். மதிய வேளையில் வாடிக்கையாளரிடம் பேசினால் அடாவடியாக எதுவுமே நடக்கவில்லை என்றார்.

வீட்டுக்கு வந்து மீதி இருந்த நூடுல்ஸ் சாப்பிட்டு, பால் குடித்து விட்டு 3 மணி வரை தூங்க முடிவு. 3 மணிக்கு எழுந்து துணிகளை ஒதுக்கி, தரை தூத்து, பாத்திரங்கள் கழுவி, துணிகள் துவைத்தேன். நான்கு சட்டைகள், 2 பனியன் சட்டைகள், 3 பனியன்கள், 2 ஜட்டிகள் என்று நீண்ட நேரம் இழுத்தது. உரத்த குரலில் பாடிக் கொண்டே வேலைகளைப் பார்த்தேன். மனம் தெளிவடைந்து லேசானது. தொடர்ந்து தரை துடைத்தலையும் முடித்தேன். குளித்து விட்டு தியானம்.

அப்புறம் மீதியிருந்த காய்களை வெட்டிப் போட்டு ஒரு சாதம் செய்ய ஆரம்பித்தேன். குக்கரில் மூடி வைத்து விட்டு எழுத உட்கார்ந்தேன். அரை மணி நேரத்தில் முடிக்க முயன்று 1 மணி நேரம் வரை விடாமல் எழுதினேன். நிறைய தெளிவுகள் வழக்கம் போலக் கிடைத்தன.

சோற்றை திறந்து கிளறி வைத்து விட்டு உலாவி விட்டு வரக் கிளம்பினால் தொலைபேசி. அப்போதுதான் தூங்கி எழுந்திருக்கிறாள். இதை முடித்து விட்டு தியானம் செய்து விட்டு அவளிடம் பேச வேண்டும்.

நடக்கப் போகிறாய் அல்லவா அப்புறம் பேசலாம் என்று வைத்து விட்டாள். வழியில் அழைத்து படுக்கை மெத்தை செய்யும் கடையில் விலை விசாரிக்குமாறு சொன்னாள். அந்தக் கடை நோக்கி நடந்தால் வாகன நெருக்கடி கடுப்பேற்றியது.

கடையில் உருளைக் கிழங்கு வறுவலும் வாங்கிக் கொண்டேன். பசுமைக் கடையில் தயிர் பொதி. வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தொலைபேசினாள். சாப்பிடுகிறாய் அல்லவா வைத்து விடுகிறேன் என்று வைத்து விட்டாள்.

சாப்பிட்டு விட்டு எழுத உட்கார்ந்தேன், ஏழரை மணிக்கு. இதை முடித்து விட்டு 20 நிமிடங்கள் தியானம். அதன் பிறகும் மனதில் அதே எண்ணம் இருந்தால் தொலைபேசி விட்டு தூங்கி விட வேண்டும்.

காலையில் 4 மணிக்கு எழுந்திருந்தால், ஐந்தரை வரை எழுதி விட்டு துணி துவைத்துக் குளித்துக் கிளம்ப ஆறே கால் ஆகும். தியானம் செய்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பினால் 7 மணி சந்திப்புக்குப் போய் விடலாம்.

பராமார்த்த குரு போல குழப்பிக் கொண்டிருக்கிறேனோ. கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த வாரம் முக்கியமான வேலைகள் செய்ய வேண்டிய வாரம். பார்க்கலாம்.

வெள்ளி, ஏப்ரல் 04, 2008

இருப்பதும் இல்லாததும்

நேற்றுக் காலையில் 4 மணிக்கு எழுந்தாகி விட்டது. ஆறரை மணிக்கு ராணிப்பேட்டை போகும் வண்டி வரும். அதற்கு முன்பே அலுவலகத்துக்குப் போய் இணைய பெயர் வழங்கி கணினி கோளாறை பார்க்க வேண்டும். எழுத்து கை விட்டு விட்டேன். பொருள்களை ஒதுங்க வைத்துக் கொண்டே போய் தரை தூத்து வாரி விட்டு துடைத்தும் முடித்து விட வேண்டும் என்று தோன்றியது. வலது புற அறையிலிருந்து ஆரம்பித்து எல்லா இடத்தையும் துடைத்தேன். முகம் மழித்து குளித்துக் கிளம்பும் போது ஆறு மணி ஆகியிருக்கவில்லை.

அந்த நேரத்தில் அலுவலகம் செல்லும் பாதை மாறுபட்டே காட்சியளித்தது. அதிகாலை நடக்கப் போகிறவர்கள் நிறையத் தென்பட்டார்கள். வண்டியை அலுவலகத்துக்கு வெளியில் நிறுத்தும் போது தலைக் கவசத்தைத் தட்டி விட்டு அது தடதடவென்று ஓசை எழுப்பியது, எழுப்பி விட்டது. பக்கவாட்டு அறை வழியாகவே நுழைந்து துணிகள் வைத்திருந்த பையையும் எடுத்துக் கொண்டேன். வேறு யாரோ தூங்கிக் கொண்டிருந்தார்கள்,

சட்டையை மாற்றிக் கொள்ள வேண்டும். தயாரித்திருந்த கோப்பை நகல் செய்கிறேன் என்று வேறு ஒரு கோப்பை நகல் செய்திருக்கிறேன். அது ராணிப்பேட்டை போன பிறகுதான் தெரிந்தது. மின்னஞ்சலில் இணைத்து அனுப்பியிருந்த பிடிஎஃப் கோப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். புதன் கிழமை அனுப்பியிருந்த திட்டப்படி காலையில் ஒன்பதரை மணி முதல் ஆரம்பித்து மூன்று விவாதச் சந்திப்புகள் என்று திட்டமிட்டிருந்தோம்.

திங்கள் கிழமை வந்த அதே ஓட்டுனர், பெயர் லட்சுமணனாம், வந்தார். எட்டே காலுக்கெல்லாம் ராணிப்பேட்டை.

நேராக கற்பகம் விடுதி. தொலைபேசினால் மதியத்துக்கு முன்பு வருவதானால் வரச் சொல்கிறார். தொலைபேசியை எடுக்கவே இல்லை. யார் யாரிடம் பேச வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தேன். காரில் உட்கார்ந்திருக்கும் போதே அந்தத் திட்டமிடல், ஜிஎன்யு கேஷ் விவரங்கள் உள்ளிடல், அரை மணி நேரம் நாட்குறிப்பு எழுதுதல் என்று நேரம் போனது.

கற்பகம் விடுதியில் 2 இட்லிகளைத் தொடர்ந்து பூரி கேட்டால், மொடமொடவென்று எண்ணைய் வழிய கொண்டு வந்து விட்டார்கள். கீழே வைத்திருந்தது மிகவும் மோசமாக இருந்தது. சர்க்கரை குறைவாக தேநீரும் குடித்து விட்டுக் கிளம்பினோம். போய்ப் பார்க்கலாம் என்று போய் விட்டேன். தொலைபேசி வருவதைக் குறிப்பிட்டுக் கொண்டேன். அங்கு போயும் இணையத்தில் இணைத்து மின்னஞ்சல்கள் பார்க்க முயன்றேன். கூட்டம் மாலை 5 மணிக்குத்தான் என்று உறுதி செய்து விட்டார். வேறு எங்காவது போய் விட்டு வர வேண்டியதுதான்.

உட்கார்ந்திருந்த இடத்தில் வைத்திருந்த நிறம் உருவாக்கும் கருவியைப் பயன்படுத்த கிளாரியன்ட் ஆட்கள் வந்து விடவே, பெட்டியைக் கட்டிக் கொண்டு வேலை செய்யும் சூழலே இல்லை. கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க, அவருக்கு பெண்கள் உறவைக் குறித்து பேசினார். உள்ளுக்குள், தனது அழகையும், உயரத்தையும், உடல் வாகையும் குறித்து பெருமை, பல பெண்களுடன் பழக வேண்டும், பெண்கள் எல்லாம் நம்முடன் பழக வேண்டும் என்று ஆசை. சின்ன வயது தோழி, இப்போது மணமாகி பக்கத்து வீட்டில் வசிப்பவர், இப்போது தொடர்பு கொள்ள முயல்கிறார் என்றார்.

'பெண்கள் தமது எண்ணங்களை வெளிப்படையாகப் பேசும் இயல்புடையவர்கள். நீங்கள் நட்புக்கு பாத்திரமானவர் என்று உணர்ந்து பெண்கள் பேசுவதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மதமும், நெறியும் நமக்கு விதித்த கட்டுப்பாடுகளுக்குள் ஒழுகுவதுதான் ஒரே வழி' கேட்டுக் கொண்டார்.

அப்படியே அழைத்துச் சென்று புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தைக் காட்டினார். பெரிய கூடம். 24 டிரம்கள் வருகின்றன என்றார். அங்கு வேதிப் பொருட்கள் கட்டுப்பாட்டுக்கு வழிகள் சில சொல்லிக் கொண்டே திரும்பினோம். மீண்டும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது நண்பர் வந்து விட்டார். பொதுவாகப் பேசிக் கொண்டே நம் வேலைகளையும் பார்த்துக் கொண்டோம். வாங்கிய ஒரு லாட்டுக்கான விபரங்களை எப்படிப் பார்ப்பது என்ற அறிக்கையில் இருந்த தவறைக் குறிப்பிட்டார். அதை யாருமே கவனித்திருக்கவில்லை.

மதிய உணவுக்கு வெளியில் போய் விடலாம். முத்துக்கடையில் கிராண்ட் பிரியாணி என்ற உணவு விடுதிக்குப் போக வேண்டும். மூன்று பேரும் காரில் ஏறிக் கொண்டோம். வண்டி ஓட்டுனரை, நீயும் போய் சாப்பிட்டு விட்டு வந்து விடு என்று சொன்னதை இடை மறித்து அவரையும் கூட சேர்ந்து கொள்ளச் சொன்னேன். நான்கு பேரும் ஒரு மேசை.

முட்டையுடன் குஸ்கா - 25 ரூபாய்கள். 4 பேருக்கு 100 ரூபாய்கள். கூடவே கோழிக்கறி வறுவல் வாங்கிக் கொண்டார். மொத்தம் 132. ரூபாய் கட்டணம் வந்தது. கொடுத்து விட்டு எழுந்தோம்.

காலையில் முத்துப் பாண்டி தொலைபேசி பச்சைத் தோல் இறக்குமதி செய்தவர்கள் குவாரண்டைன் முறையில் சிக்கி அல்லல்படுகிறார்கள் என்ற செய்தியைக் குறிப்பிட்டு விளக்கம் கேட்டார். வேலூர் பதிப்பை வாங்கிப் பார்த்தீர்களா என்று கேட்டார். தினமலரில் சேர்ந்திருக்கிறார் என்பது நல்ல வேளையாக நினைவுக்கு வந்து விட்டது.

கடையில் தினமலர் கேட்டால் தீர்ந்திருந்தது. காலையில் படிப்பதற்கு இந்து நாளிதழ் கேட்டால் அதுவும் தீர்ந்திருந்தது. அலுவலகத்தில் டெக்கான் குரோனிக்கள், வீட்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வாங்குவதால் வெளியில் இந்து வாங்க நினைத்திருந்தேன். டெக்கான் குரோனிக்கிளே வாங்கியிருந்தேன்.

2 மணிக்குக் கிளம்பி விடுவதாக வீட்டிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் பதில் சொன்னார். குறிப்பறிந்து புறப்பட்டு விட்டோம். 'நாளைக்கு ரூபாய்கள் கொடுத்து விடுங்கள். 10ம் தேதிக்கு முன்பு மீதித் தொகையையும் கொடுத்து விடுவது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும். என்னென்ன மேம்பாடுகள் செய்ய வேண்டும் என்பது எங்கள் பொறுப்பு' என்று சொல்லி விட்டுப் புறப்பட்டோம்.

அலுவலகத்தில் ஒரு புதிய பெண் இருந்தார். நீண்ட காலம் அறிமுகம் ஆனவர் போல பேச ஆரம்பித்து விட்டேன். அவரும் பதில் சொல்லிக் கொண்டே வந்தார். இன்னொருவர் மேலே சாப்பிடப் போயிருக்கிறாராம். அவரும் வந்து விட, 'பழைய பொறுப்பாளர் வேலையை விட்டுப் போன பிறகு உனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்' என்று அறிவுரை சொன்னேன். காலையில் சாருக்குப் பேசும் போது வேலை ஆரம்பிப்பதற்கான பணித் திட்டத்தை அனுப்பி வைக்கும் படி சொல்லியிருந்தார். அதை செய்து விட்டாரா!

புறப்படும் முன்பு இன்னொருவரும் வந்து விட்டார். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தார். இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினோம். அலுவலகத்தை எட்டிப் பார்த்து விட்டுப் போகலாமா என்று பார்த்தால் அது பூட்டியிருந்தது. வழியில் தானியங்கி பணம் வழங்கும் எந்திரத்தில் பணம் எடுக்காமலேயே தவற விட்டு விட்டேன்.

மாலை சந்திப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டதும் அவரே வெளியில் வந்தார். பக்கத்தில் இருந்த தோல் தரக் கட்டுப்பாட்டு அறையை ஒதுங்க வைத்து திரை கட்டிக் கொள்ளலாம். அதில் உற்சாகமாக ஈடுபட ஆரம்பிக்க நான் மற்ற வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தேன். இருமக் காட்சிக் கருவியையும் மடிக்கணினியையும் அங்கு கொண்டு போய் இணைத்து வைத்தோம்.

தோல்களை ஒதுக்கி, ஜன்னல்களில் காகிதத் தடுப்பு ஒட்டி, உட்கார பெஞ்சுகள், நாற்காலிகள், மேசைகள் போட்டு மின்னிணைப்புக்கு ஏற்பாடு செய்து ஒரு மணி நேரத்துக்குள் உயர் தர விவாதக் கூடமாக மாற்றியிருந்தார்கள். மேசைகள் மீது விரிப்புகளையும் போட்டு விட்டதால் நல்ல பார்வை வந்து விட்டது.

5 மணிக்கெல்லாம் எல்லோரும் கூடி விட்டார்கள். அலுவலகத்திலிருந்தும் எல்லோரும் வந்து விட்டார்கள். உயர் மேலாளர்களும் உட்கார்ந்தார்கள்.

தமிழில் எழுதிக் கொண்டு போயிருந்தோம். பேச ஆரம்பிக்கும் முன் அமைதியாக மனதை தயார் செய்து கொண்டிருந்தேன். முதல் காட்சியிலிருந்தே எல்லோரையும் கட்டிப் போட்டு விட்டேன். இரண்டாவது காட்சியில் அவர்கள் நிறுவனத்தின் சிறப்புகளை விளக்கும் போது கொஞ்ச நஞ்சம் சிதறும் கவனங்களும் குவிந்து விட்டன. விடாமல் கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேசியிருப்பேன்.

எந்த அசைவுகளும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நிர்வாகம் குறித்து, அலுவலகத்தில் கணினி பாவிப்பவர்கள் குறித்து என்று ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு அவர்களது சிறப்புகளையும் விளக்கினேன். அதை ஒரு கடமையாக திட்டமிட்டு செய்யாமல் இயல்பாக வந்தது. இடையில் ஒரு கட்டத்தில் நண்பரைப் பேசச் சொன்னால் என்னையே தொடரச் சொல்லி விட்டார்.

எப்படி வேலை செய்கிறோம், தகவல்களின் முக்கியத்துவம், கணினிகள் மூலம் வேலை எப்படி எளிதாகும் என்று விளக்கியிருந்தேன். கடைசி காட்சிப் படம் வரை முடித்து விளக்குகள் போட்டதும் ஒரு கனமான அமைதி நிலவியது. பேச ஆரம்பித்தவர்கள் எல்லோருமே கணினிகளின் பலனை நன்கு உணர்ந்து விட்டார்கள் என்று புரிந்தது.

இன்னும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அலுவலகத்துக்குள் வந்தோம். அடுத்தக் கட்ட வேலைகளைப் பற்றிப் பேசினோம். கடைசியில் பணம் கேட்டால், தெரியாமல் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னார். சொல்லி விட்டுதான் தரச் சொல்கிறேன் என்று குறிப்பிட்டேன். இது தவறாகப்பட்டு விடலாம். செய்த வேலையின் தரத்தையும் பார்த்து முடிவெடுக்கட்டும். அவர்தான் நேரடியாக பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார். அதனால் நாம் கேட்டதில் எதுவும் தவறு இல்லை.

இருமக் காட்சிக் கருவியை எடுக்காமலேயே கிளம்பியிருந்தேன். வங்கியில் பணம் எடுக்க வேண்டும் என்று வாலாஜா வரும் வழியில் அது நினைவுக்கு வந்தது. திரும்பவும் போய் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். வாலாஜா வங்கிக் கிளையில் பெரிய வரிசை காத்திருந்தது. பார்த்துக் கொள்ளலாம் என்று நகர்ந்து விட்டோம். கைவசம் இருந்த 200 ரூபாய்களுக்கு மட்டும் டீசல் போட்டுக் கொண்டோம்.

ஓட்டுனர் ரிலையன்சுக்கு அருகில் போடலாமா கேட்க, ரிலையன்சு வேண்டாம் என்று சொல்லி விட்டு அடுத்து வந்த பாரத் பெட்ரோலியத்தில் போட்டுக் கொண்டோம். மனம் நிரம்பி வழிந்தது. காலையிலிருந்து 20-30 பேர் பலன் அடைகிறார்கள்.

தூங்கி வழிந்து கொண்டே வந்து சேர்ந்தேன். போரூர் அருகில் திரும்பும் போது அவளது மறு அழைப்பு, நானே அழைத்ததில் பெரிய மகிழ்ச்சி, கர்வம், நிறைவு. 'எல்லாப் பயல்களும் என்னை விட்டுப் போறாங்க, அப்புறம் நான்தான் சிறந்தவள் என்று திரும்பி வந்து விடுகிறான்கள்' வேலைக்கு வர மாட்டேன் என்று போன ஓட்டுனர் திரும்பி வந்து விட்டதைப் பற்றிச் சொன்னாள். உள்ளுறை தகவல் நானும் அப்படி அவளை விட்டுப் போய் திரும்பினவனாம்.

கடுப்பாக இருந்தது. சில நிமிடங்களில் அவளது மன வடிவம் புரிந்து விட்டது. இதுதான் அவளுக்கு பெருமை, நிறைவைக் கொடுக்கும் என்றால் நாமே கூப்பிட்டுப் பேசலாம். அவர்களுக்கு என்னால் ஆன சேவை செய்வது என் கடமை.

அலுவலகத்தில் கொஞ்சம் கடுமையாக நிலவரங்களை விசாரித்து விட்டு குழுவினரின் பொறுப்புகளை விளக்கினேன். நன்கு பசிக்கவே வழியில் சாப்பிட ஏதாவது பார்க்கலாம் என்று ஒன்பதரை மணிக்குக் கிளம்பினேன். ராமாபுரத்தில் மின்வெட்டு. வழியில் எல்லாம் இருட்டு. எங்கும் நிறுத்த மனமில்லாமல் வந்து கொண்டே இருந்தேன். சுவாகத்தில் சாப்பிட காசு போதுமான அளவுக்கு பையில் இல்லை. நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று வீட்டுக்கு வந்து விட்டேன்.

இருட்டில், கதவைத் திறந்து நுழைந்து, தொலைபேசியில் எண்களை அழுத்தினேன். 'ஹூ இஸ் திஸ்?' குரல். 'ஒங்க அப்பா' என்று சொன்னதும் குரலில் ஒரு குழைவு வந்தது. அம்மாவிடம் கொடுத்தான். அவள் பேச ஆரம்பித்து என்னை சரியாக சாப்பிட அறிவுரை சொல்லி விட்டு தன் பணிகளைக் குறித்து ஆரம்பித்தாள் 40 நிமிடங்களுக்குப் பேசினோம். அவளுக்கு சில குறிப்புகளைக் கொடுக்க முயன்றேன். அவளைக் குறை சொல்ல முயல்வதாக படபடத்துக் கொண்டே இருந்தாள்.

வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவைக் கொடுக்க முடியவில்லை. விற்பனையாளர்கள் கேட்கும் தரத்தைக் கொடுக்க முடிவதில்லை. ஒரே டென்ஷன். இந்த மாதிரி நிலைக்கு ஒரு வழி விலையை அதிகரித்து விடுவதுதான் என்று சொன்னால், அதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. 'உனக்கு ஒன்றும் தெரியாது, பேசாதே' என்கிறாள். அதுவும் சரிதானே என்று இருந்தேன்.

'நாளைக்கு மிகவும் முக்கியமான நாள்' என்று குறிப்பிட்டதும், 'அப்போ, நல்லா ஓய்வெடு, நாளை நன்கு அமையட்டும்' என்று முடித்துக் கொண்டேன். தியானத்தில் அமர்ந்து மாலை வரை வருடலிலேயே நேரம் முடிந்து விட்டது. கொசுக்கள் நடமாடுவதை உணர முடிந்தது.

காலையில் எழுந்து ஒரு மணி நேரம் அரை மணி நேரம் சோம்பலில் புரண்டு விட்டு 5 மணிக்கு எழுந்தேன். பல் தேய்த்து விட்டு துணிகளை ஊற வைத்தேன். குளிப்பதற்கான சோப்பு தீர்ந்து விட்டது. இன்று எப்படியாவது வாங்கி விட வேண்டும்.

கழிவறை பீங்கான் பரப்புகளுக்கு ஸ்கார்பிக் போட்டுத் தேயத்து விட்டேன். அதன் பிறகு எழுத உட்கார்ந்தேன். 5.45 ஆகி விட்டது. எம்ஜிஆர் பாடல்களுடன் எழுத்து ஆரம்பித்தது.

இதை முடித்ததும் குடிக்கத் தண்ணீர் எடுத்து வர வேண்டும். கழிவறைகளைக் கழுவி விட வேண்டும். துணிகளைத் துவைத்துக் காயப் போட வேண்டும். கடைக்குப் போய் சோப்பு வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்குள் ஏழரை மணி ஆகியிருக்கும். குளித்து தியானம் செய்து விட்டுக் கிளம்பும் போது எட்டரை மணி அடித்திருக்கும்.

அலுவலகத்தில் அப்பா அம்மாவுக்கு நாகர் கோவில் போவதற்கான சீட்டு வாங்க வேண்டும். லெதர் லிங்க் டிஎன்எஸ் பார்க்க வேண்டும். நூம்பல், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம் நிலவரங்களைப் பார்க்க வேண்டும். பணம் வர வேண்டிய இடங்களில் கேட்க வேண்டும்.