ஆரம்பத்தில் உணர்வுகளைப் பதிவு செய்வதற்காக ஆரம்பித்த இது, பதிய ஆரம்பித்தவுடன் சிறிது சிறிதாக உருமாறிப் போய் விட்டது. யாருக்கும் மனம் புண்பட்டு விடக் கூடாது, பிறர் பெயரைத் தவிர்க்க வேண்டும், எதிர் மறை உணர்வுகளைத் தூண்டக் கூடாது என்று ஒவ்வொன்றாகக் கட்டுப்பாடுகள் நுழைந்து விட்டன.
குமுறும் எண்ணங்களைக் கூட அடக்கிக் கொள்ள நேர்ந்து விட்டது. தவறி விழுந்து விட்ட ஒரு வாக்கியம் ஏற்படுத்திய எதிர்வினைகள் இன்னும் இழுத்துப் பிடித்தலுக்குக் கொண்டு போய் விட்டன.
எழுத்துக்கு ஒரு தற்காலிக நிறுத்தம் போடலாம் என்று வழி விட்டால், ஒரு வாரம் கூட ஆகும் முன், வெளிப்படையான தளர்ச்சிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. இன்று மாலை புதிய உறுதிகள்:
- இன்று முதல் எழுத்தை தொடர்தல்.
- எழுதும் எதையும் வெளியிடப் போவதில்லை.
- 90 ஒரு மணி நேர பகுதிகள் நிறைந்த பிறகு ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்து வெளியிடலாம் என்று தோன்றினால் பதியலாம், அல்லது பொதுவில் காட்டாத பதிவில் போடலாம், அல்லது கணினியின் ஒரு ஓரத்தில் விட்டு வைக்கலாம், அல்லது அழித்தே விடலாம்.
இப்படி எழுத வேண்டும். ஒரு மணி நேரம் ஒரு நாளைக்கு என்று திட்டம் வைத்துக் கொண்டாலும், ஒரு நாளைக்கு அதிகமாகக் கூட எழுதலாம். ஏற்றுக் கொண்ட பொறுப்புகளிலிருந்து விடுப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.
மனம் ஒரு அற்புதமான கருவி. அதை பழைய எண்ணங்களின் குவியலில், எண்ணச் சுமைகளில் கழுத்து நெரிபட வைப்பது சரியில்லை. என்னதான் நடந்தது, நடக்கிறது என்பதை வார்த்தைகளில் வடித்து மனதுக்குள் இடம் செய்து கொள்ள வேண்டும். தொட்டனைத்துதானே மணற்கேணி ஊறும்.
கட்டிப் போடும் பழைய நினைவுகள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், பெருமைகள் எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு வந்து விட்டால் அவற்றின் சுமை இறங்கி விடுகிறது. வெளிப்படையாக பதிவதற்கு எழுதும் போது செய்திகள் கழுத்து நெரிபடுகின்றன. வாக்கியங்கள் அழகாக வர வேண்டும் என்று சில தடை பட்டு விடுகின்றன.
எந்தத் தடையுமின்றி எழுதுவதுதான் இப்போதைய நோக்கம். தொண்ணூறு மணி நேரத்துக்கான எழுத்தில் எழுத வேண்டியது எல்லாம் வந்து விடும் என்று நினைக்கிறேன்.
காவல்காரர் குடும்பம்
இரண்டு நாட்களாக தூக்கத்தில் நிம்மதியே இல்லை?
கதவின் வெளியே காவலாளியின் குடும்பம், இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகள். ஒரு பையன் ஐந்து வயதிருக்கும், பெண் குழந்தைக்கு இரண்டு வயதிருக்கும். எப்போது பார்த்தாலும் ஒழுகும் மூக்கு. மணலில் உருண்டு கொண்டே இருக்கின்றன. மாலை வேளையில் பையன் தொலைக்காட்சி அருகில் முகத்தை ஒட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறான். பெண் குழந்தை காலையில் ராகம் இழுப்பது போல் அழுதுக் கொண்டே திரியும்.
வீட்டில் எல்லாக் கதவுகளையும் மூடிய பிறகும் கொசுவுக்கு திரவ மருந்தை சொருகி விட்டுத்தான் தூங்க முடிகிறது. குளிரில் சளி பிடித்துக் கொள்கிறது. இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் எப்படி குளிரைத் தாங்குகின்றன? எப்படி கொசுக் கடியில் தூங்குகின்றன?
இரண்டு நாட்கள் முன்பு பார்த்தால் ஒரு சட்டியில் புகை போட்டு வைத்திருக்கிறார்கள். கொசுக்கள் ஓடும் அளவுக்கு புகை வளர்த்தால் தூங்குவது எப்படி? இப்படி இரண்டு குழந்தைகளும் இரண்டு பெரியவர்களும் வெளியே தூங்கும் போது, அவ்வளவு பெரிய வீட்டில் ஒரு மூலை அறையில் மூடிக் கொண்டு தூங்க மனம் வரத்தானே செய்கிறது? இவர்களை உள்ளே வந்து படுக்கச் சொன்னால் குறைந்தா போய் விடும்?
இப்படி படுக்கச் சொன்னால் எல்லோரும் என்ன பேசுவார்களோ என்ற எண்ணம்? இரண்டாவது அவர்களும் புழங்கினால் அழுக்காகி விடுமே, யார் கழுவி விடுவார்கள் என்று குழப்பம். சொல்லித்தான் பார்ப்போமே, குடியா முழுகி விடும்? யாராவது வந்தால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
பையனின் ஒழுகும் மூக்கைச் சிந்தக் கற்றுக் கொடுத்து நன்றாகக் குளிப்பாட்டி ஆடைகள் அணிவித்து விடலாம். அந்தச் சின்னஞ்சிறு பெண் தரையில் சிதறிக் கிடக்கும் பொரி கடலைகளைப் பொறுக்கித் தின்று கொண்டிருக்கும் போது, பையில் முந்திரிப் பருப்புகளோடு உள்ளே போக எப்படி மனம் வந்தது?
அந்தப் பெண்ணுக்கு பிஸ்கெட் பொட்டலம் வாங்கிக் கொடுப்பது உனக்கு பொறுப்பு இல்லையா?
குழந்தைகளுக்கு தினமும் சாப்பிட பொருட்கள், தூங்குவதற்கு இடம், உடுத்த நல்ல உடை, விளையாட விளையாட்டுப் பொருட்கள் இவை அனைத்தும் கொடுக்க வேண்டும். சோம்பேறியாக இருப்பது பாவம், இந்த விஷயத்தில். மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்காக படுத்திருக்கும் குழந்தைக்கு தொண்டு செய்வதுதான் தொண்டு என்று இல்லை. நமது கதவுக்கு வெளியே இருக்கும் மனித அவலத்தை சரி செய்யாமல் இருப்பவனுக்கு மற்றதைப் பற்றிப் பேச அருகதையே இல்லை.
இதைச் செய்தால் பிறர் ஏளனம் செய்வார்களோ என்று ஒரு எண்ணம். அப்படி பார்த்து பார்த்துதான் எல்லா அநீதிகளும் உலகில் நடக்கின்றன.
இப்படி எழுதிப் பார்த்தால்தான் குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கிறது. ஊரோடு ஒத்து வாழ்வதற்கு முன்பு என்னோடு நான் ஒத்து வாழ வேண்டுமே? என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொண்டால்தான், அடுத்த நிலைக்கே போக முடியும். நான் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்றால் எனது நம்பிக்கைகளின் படி நடந்து கொள்ள வேண்டும்.
அதனால் என்ன விரோதம் வந்தாலும் சரி, உறவுகள் எல்லாம் விலகிப் போனாலும் சரி, உயிரே போனாலும் சரி, கொண்ட நம்பிக்கை, அது நம்பிக்கையாக இருக்கும் வரை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கையில் எடுத்த பணிகள் நினைத்த இலக்கை நோக்கிப் போக உதவும்.
யாரை ஏமாற்றினாலும், என்னை நானே ஏமாற்றிக் கொள்ள முடியாது. கண்ணெதிரே வறுமையில் உழலும் இரண்டு குழந்தைகளுக்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய வேண்டும்.
சமூக அக்கறை
சில நாட்களாக சிறு பையன்கள் வேலை செய்வதைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் போகும் மரத்தனம் வந்து விட்டது. இன்று காலையில் எல்&டி முன்பு சிவப்பு விளக்குக்கு வண்டியை நிறுத்தாமலேயே வந்ததும் சிறிதளவுதான் உறுத்தியது. இப்படியே தொடர்ந்தால் செத்துப் போகலாம்.
ஏதோ சுவையான உணவுக்கு வழியில்லாமல் போய் விடும் என்றுதானே அந்தப் பையன்களைப் பற்றி உரிமையாளரிடம் பேசவில்லை. இந்த டீக்கடைப் பையனைக் கிண்டல் செய்வதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறாய்?
இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. செய்ய வேண்டிய வேலைகளை செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து அந்தப் பையன்களை பள்ளிக்கு அனுப்பும் வழியைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் முழுமையான குழந்தைப் பருவம் கிடைக்க வேண்டியது அவர்களது அடிப்படை உரிமை. அதற்கு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு உண்டு. அந்தப் பொறுப்பை தட்டிக் கழிப்பதோ, பாராமுகமாக இருப்பதோ சரி கிடையாது.
(பிப்ரவரி 27, 2007)