என்னைப் பற்றி

திங்கள், டிசம்பர் 25, 2006

திருமணம்

ஒரு நண்பனின் தம்பியின் திருமணம். தொலைபேசியில் தகவல் சொல்லியிருந்தான். திருமணம் நடக்கும் இடம் எங்கே இருக்கிறது என்று இன்னொரு நண்பன் தொலைபேசியில் கேட்க கிளம்பும் படலம் ஆரம்பமானது. 'பரிசுப் பொருள் ஏதாவது நீயே வாங்கிக் கொண்டு வா, நானும் பங்கு கொடுத்து விடுகிறேன்' என்று அவன் சொல்லி விட பரிசு வாங்குதல் என் பொறுப்பில் வந்தது.

'என்ன பரிசு வாங்குவது?' 'முப்பத்தி இரண்டு அஜந்தா கடிகாரங்கள், இருபது அலங்காரச் சிலைகள், பதினாறு அலங்கார சாடிகள், பத்து டின்னர் செட்டுகள் என்று வந்து சேர்ந்ததை என்ன செய்வது' என்று குழம்புவதாக நகைச்சுவைக் கதைகளில் படித்து அது போல வாங்க தயக்கம். புத்தகம் ஏதாவது வாங்கினால், வழக்கத்துக்கு மிகவும் விலகியதாக ஆகி விடுமே என்று தோன்றியது. 'ஒரு வாழ்த்து அட்டை வாங்கி அதன் உறையினுள் கொடுக்க விரும்பும் தொகையினைப் போட்டுக் கொடுத்து விடலாம்' என்று வாங்கிக் கொண்டேன்.

பதினொரு மணிக்குக் கல்யாணம் என்று பதினொரு மணிக்கே போய்ச் சேர்ந்து விட்டவனிடமிருந்து தொலைபேசியில் போகும் வழிக்கான குறிப்புகள் வந்து விட்டன. பதினொரு மணியிலிருந்து நிகழ்ச்சியாம். அவனைத்தவிர மிகக் குறைவான பேர்தான் இருந்தார்களாம்.

ஜிஎன் சாலையில் ஒரு மேலதட்டு விடுதியின் அரங்கில் திருமண நிகழ்ச்சி. போய் உட்கார்ந்து இடையில் கடந்து போன காலங்களில் நடந்தவற்றை நண்பனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது மாப்பிள்ளை வந்து சேர்ந்தார். மாப்பிள்ளையும், பெண்ணும் தனித்தனியே உட்கார வைக்கப்பட்டு சிறு குழுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு அது வரை நடந்த நிகழ்ச்சிகளை ஒருவர் ஒலிவாங்கியில் ஆங்கிலத்தில் விளக்கினார்.

'இன்னாரின் மகன், இந்த முகவரியில் வசிக்கும் மணமகன், குறிப்பிட்ட முகவரியில் வசிக்கும் இன்னாரின் மகளை இத்தனை ரூபாய் மெஹர் கொடுத்து இரு தரப்பும் நியமித்த பெரியவர்கள் சாட்சியாக, மதப் பெரியவர் நடத்தி வைக்க திருமணம் செய்ய முன் வந்துள்ளான்' என்று ஒப்பந்தம் சொல்கிறது. தொடர்ந்து அரபியில் சில நிமிடங்கள் ஓதி விட்டு, தமிழிலும் மணமகனின் ஒப்புதலைப் பெற்று விட்டு, தொழுகை நடத்தினார் மத அறிஞர்.

எல்லோருக்கும் உலர்ந்த பேரீச்சை, கற்கண்டு, கொட்டைகள் இரண்டு அடங்கிய பொதியை கொடுத்தார்கள். அத்துடன் திருமண நிகழ்ச்சிகள் முடிந்து சாப்பாட்டுக்கு அழைத்து விட்டார்கள். ஒரு மணி நேரம்தான் ஆனது. மணமகனும், மணமகளும் அதன் பிறகுதான் சந்தித்தார்கள். பெண் தலையை நிமிரவேயில்லை. இருவரும் மேடையில் உட்கார்ந்து வாழ்த்த வந்திருந்தவர்களைச் சந்தித்தார்கள்.

பிரியாணியும், இறைச்சியும் முக்கிய உணவுகள். நாமே எடுத்து உண்ணும் முறையானதால் காய்கறி உணவை மட்டும் தேர்ந்தெடுக்கவும் முடியும். அதிலும் பன்னீர், மலாய் கோஃப்தா, காலிஃபிளவர் வறுவல், வெண்டைக்காய் வறுத்தது என்று செறிவான உணவுகள். பரோட்டாக்களும், காலிஃபிளவரும் எடுத்துக் கொண்டேன். கடைசியில் சேமியா பகளாபாத் என்று தயிர் சாதம் போலிருந்த ஒன்று.

வேலை முடிந்து கிளம்பி விட்டோம். 'நகருக்குள் எங்காவது சுற்றலாமா, போய் ஓய்வெடுக்கலாமா' என்று அதிகம் குழம்பாமல் கட்டி விட்ட மாடாக நேராக வந்து சிறிது நேரம் இணையத்தில் அமர்ந்து விட்டு பிற்பகல் தூக்கம். ஞாயிற்றுக் கிழமை, மாலை வேறு பணிகளைக் குறித்துக் கொள்ளாமல் தூங்குவது எழுந்து விட வரம்பு இல்லாத ஒரு ஓய்வு. எழுந்து மீண்டும் மின்னஞ்சல்கள், வலைப்பதிவுகள். திருவின் கையெழுத்து இயக்க விண்ணப்பத்தைத் தமிழில் மொழிமாற்றி அச்சடித்து நம் வட்டத்தில் கையெழுத்து வாங்கி அனுப்புவதாக தயார் செய்தேன்.

தோஸ்தோவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் (கிரைம் அண்ட் பனிஷ்மென்டு) என்ற மின் நூலைப் படிக்க ஆரம்பித்தேன். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் முடிந்து விட்டது. பொன்ஸ் சொல்வது போல் அச்சடித்த புத்தகத்தில் படிப்பது போன்ற வசதி மின்நூல் வடிவில் இல்லைதான். போரும் அமைதியும் அச்சு வடிவை விரும்பிய நேரம் கையில் எடுத்துக் கையில் வரும் பகுதியைப் படிக்க முடியுவது வெறும் உரைக்கோப்பாக இருக்கும் போது சாத்தியமில்லை.

புத்தகங்களுக்காக ஒரு மின்நூல் வடிவம் உருவாகி, அதன் எழுத்துதுல்லியம் அச்சு எழுத்து அளவு போல இருந்து, அதன் ஒளி வீச்சு கண்ணை உறுத்தாத வண்ணம் இருந்து, எடையும் அளவும் சராசரி மென் அட்டை புத்தகம் போல் அமைந்து விட்டால் மின்நூல்கள் பழைய புத்தக வடிவங்களின் இடத்தைப் பிடித்து விடலாம். அதே அளவில் பல நூறு புத்தகங்களை சேமித்துக் கொள்வது, குறிப்பிட்ட சொல்லை வேகமாகத் தேடுவது, குறிப்பிட்ட பக்கத்துக்குப் போக முடிவது என்ற கூடுதல் வசதிகள் கிடைக்கும்.

இணைய இணைப்பும் இருந்தால், பொருத்தமான இடங்களில், சொல்லின் மீது கிளிக் செய்து இணையத்தில் தேடவும் வசதி கொடுக்கலாம். இன்றைக்கு இருக்கும் தொழில் நுட்பத்தில் இத்தகைய சாதனம் உருவாக்குவது சாத்தியமாக இருக்கலாம். விலை என்னவாகும் என்று தெரியவில்லை.

இரவில் தூங்கப் போகும் முன், குவிந்து கலைந்து கிடந்த துவைத்த, அழுக்கான, தேய்த்துக் கொண்டு வந்த துணிகளை ஒழுங்குபடுத்த சிறிது நேரம் செலவிட்டேன். பத்து நிமிட வேலைதான். பல நாட்களாக மனதை அழுத்திக் கொண்டிருக்கும். இப்போது எந்தத் துணி எங்கே இருக்கிறது என்ற தெளிவு கிடைத்து விட்டது. இது போன்று துணிகள், ஆவணங்கள், புத்தகங்கள் என்று எல்லாவற்றிற்கும் வைக்க வேண்டிய இடம் தீர்மானித்து சீராக அமைத்து விட்டால் மனதுக்கு தெளிவு அதிகமாகி விடும். எட்டு ஆண்டு வாழ்க்கையில் கற்றுக் கொண்ட தேவையான பாடம் இது.

மீண்டும் குறுஞ்செய்தியாக 30ம் தேதி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு. நேரில் போக முடியாவிட்டாலும் சென்னையில் ஒரு சிறு குழுவாக அதே நேரத்தில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யலாம். சனிக்கிழமை இரவானதால் கலந்து கொள்பவர்களுக்கும் அடுத்த நாள் வேலை கட்டாயம் இருக்காது. தொடர்புடைய குழுக்களில் பேசி விட்டு செய்ய வேண்டும்.

டெக்கான் குரோனிக்கிளில் திடீரென்று தரையை நோக்கிப் பாய்ந்து விபத்துக்குள்ளாகவிருந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருத்தியின் அனுபவத்தைப் பற்றி அவரது கட்டுரை. அந்த நிமிடங்களில், தான் இறந்து போனாலும் நண்பர்கள், உறவினர்கள் சிறிது நேரம் துக்கித்து விட்டு வாழ்க்கையைத் தொடரத்தான் போகிறார்கள் என்று உறைத்ததாம். தப்பிப் பிழைத்த பிறகும் பல நாட்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் ஒட்டுதல் இல்லாமலேயே போனதாம். 'எதற்காக எல்லோரும் இப்படி ஓடிக் கொண்டிருக்கிறார்கள், எவ்வளவு பொருளற்ற சிரிப்புகள்' என்று தோன்றியதாம்.

இறப்பை சந்திக்கப் போகிறோம் என்ற நிலைக்குப் போய்த் திரும்பிய அனுபவங்களில் ஆழமாக விவரித்திருப்பது போரும் அமைதியில் கொல்லக் கொண்டு போகப் பட்டு கடைசி நிமிடத்தில் கொல்லப்படாமல் அழைத்து வரப்பட்ட டால்ஸ்டாயின் பீட்டர் அனுபவித்த உணர்ச்சிகள், அதன் பிறகான நாட்களில் அவனது மனப்போக்குகள். தோஸ்தோவ்ஸ்கியும் கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் மன்னிப்பு வரப்பெற்றவராம். கடைசியாக நேற்று படித்தது.

மரண தண்டனைக்கு எதிராக எழுதுபவர்களின் உணர்ச்சிகள் இன்னும் தெளிவாகப் புரிகின்றன. எவ்வளவு மோசமான குற்றமிழைத்தவனாக இருந்தாலும் முழு உலகையும் பாதிக்கக் கூடிய ஒரு மன நிலை கொல்லப்படப் போகிறோம் என்று உணர்நது விட்ட ஒரு நேரம். அதை உருவாக்கும் உரிமை யாருக்குமே இல்லை என்பதுதான் உண்மை.

கோபத்தில், சண்டையில் அடித்ததில் இறந்து விட்டதால் சித்துவுக்கு தண்டனை குறைவு, திட்டமிட்டுக் கொலை செய்தாதால் சிபு சோரனுக்கு அதிக தண்டனை. திட்டமிட்டதில் வெளிநாட்டு ஈடுபாடும் இருந்ததால் அப்சலுக்கு அதிகபட்ச தண்டனை. ஒரு உயிரிழப்பே நம்முடைய பார்வையைப் பொறுத்து வெவ்வேறு தீவிரம் பெறுகிறது. உயிரைப் பறித்தவனின் மன நிலை, அந்தச் செயலுக்கு அவனைக் கொண்டு சென்ற நிகழ்ச்சிகளின் விபரம் தெரிந்தால் நமது புரிதல் அதிகமாகி விடுகிறது. (இது டால்ஸ்டாயின் தத்துவம்). அது எதுவும் தெரியாத போது, குற்றம் மட்டுமே பெரிதாகி உச்ச தண்டனையான மரண தண்டனைக்கு போய் விடுகிறோம்.

ஞாயிறு, டிசம்பர் 24, 2006

வாழ்வின் அழைப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பழக்கமான ஒருவரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஒரு மடல். 'எனக்கு நுரையீரலில் புற்றுநோய் வந்து விட்டதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மும்பை டாடா நினைவுக் கழகத்தின் அறிக்கைபடி நான்கு முதல் ஆறு மாதம் வரைதான் உயிர் வாழ முடியும். நிறக்கற்றை சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறேன். அதனால் வாழ்நாள் சிறிதளவு நீடிக்கப்படலாம். ' (ஆங்கில மடல் கீழே)

கல்லூரியில் எனக்கு நான்கு ஆண்டுகள் முன்பு பட்டம் பெற்று இப்போது சென்னையில் தோல் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். நாற்பது வயதை தொட்டு விடாத இளம் தந்தை அவர். மிக உறுதியான, எதைக் கண்டும் கலங்காத உருவமும் மனமும் படைத்தவர்.

2002ல் புதிய தொழில் தொடங்க முடிவு செய்தவுடன் ஒரு நண்பர் மூலமாக அறிமுகமாகி எங்கள் மென்பொருளை பயன்படுத்த முன்வந்தார். அதன் பிறகு பல முறை சந்தித்துப் பழகி வந்திருக்கிறேன். புதிதாக ஒரு தோல் தொழிற்சாலை அமைக்கத் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்திக் கொண்டிருந்தார்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூரிலிருந்து திருப்போரூர் போகும் சாலையில் அவரது காரின் பின்னால் லாரி மோதி லேசான காயங்களுடன் தப்பினார். போன வருடம், ராணிப்பேட்டையிலிருந்து சென்னை வரும் போது காஞ்சிபுரம் வெள்ளகேட் பாலத்திலிருந்த இறங்கும் போது ஒரு படையினர் வண்டியில் நேராக மோதி பலமாக அடிபட்டு காயமடைந்தார். சில மாதங்களில் எழுந்து நிறுவன வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டிருந்தார். இன்னும் சில நாட்களில் முகத்திலும் தழும்புகள் முற்றிலுமாக மறைந்து விட்டிருந்தன.

இப்போது இந்த செய்தி. மருத்துவம் சொல்வது உடலின் தற்போதைய நிலை. அவர் தனது மடலில் சொல்வது போல் ஆண்டவனின் கருணை அளவற்றது. தனது வாழ்வின் பல தடைக் கற்களை கடந்து வந்தது போல இந்த சோதனையையும் வெற்றிகரமாகச் சந்தித்து இன்னும் பல ஆண்டுகள் தனது பணிகளைச் செய்து வருவார் என்பது என்னுடைய நம்பிக்கை.

இந்த மறுவாழ்வு மையம் என்பது அவரது முன்முயற்சியாக இருக்கும் என்பது எனது ஊகம். இது போல சோதனை வரும் போது ஆக்கபூர்வமாக சிந்திப்பது அவரது இயல்பு.

முதலில் படிக்கும் போது, யாரிடமிருந்தோ வந்த மடலை அனுப்பியிருக்கிறார் என்று நினைத்தேன். முழுவதும் படித்து, இன்னொரு நண்பருக்கு தொலைபேசி கேட்ட பிறகுதான் முழுவதும் புரிந்தது. நான் பார்த்தது வரை புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது. கல்லூரி நாட்களில் புகை பிடித்தது உண்டு என்று அவர் சொல்லியிருந்தது நினைவு.

நேற்று நாள் முழுவதும் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. மாலையில் காசிக்குப் போகும் அப்பா, அம்மாவை வழியனுப்பப் போயிருக்கும் போது இதைக் குறிப்பிட்டு அப்பாவிடமும் பேசினேன். குளிர் காலத்தில் வயதான இத்தனை பேர் வடநாட்டுப் பயணத்துக்குக் கிளம்பியது பற்றி, பல வேலைகளைப் போட்டு விட்டுக் கிளம்பி விட்டது பற்றி பேசும் போது, வேலை எல்லாம் நமக்கு அனுமதிக்கப்பட்ட காலம் வரைதான், திடீரென்று திசை மாற்றி வேறு பணியில் இறங்க வைப்பது கடவுளுடைய கைவண்ணம்தானோ!

அவர்களுக்குத் தேவைப்படும் என்று கம்பளி, குளிர் உடைகளை எடுக்கப் பெட்டி ஒன்றை திறந்த போது நினைவுகளின் வெறுப்பில் கசப்பு பொங்கியது. ரயில் நிலையத்திலிருந்து திரும்பி வரும் போது போக்குவரத்து நெரிசலிலும் பிடித்த பாடல்கள் ஓடிக் கொண்டே இருந்தன.


PRAISE THE LORD
Dear friends,

I have been diagonised to have lung cancer in the advanced stage.Doctors
from Tata Memorial Institute,Mumbai have said it to be uncurable and as per
their research and record the average lifespan will be 4 to 6
months.However iam undergoing chemotherapy which will control the spread of
cancer to other organs and it can increase the lifespan also.

But I have a trust and faith with our lord JESUS.JESUS,OUR SAVIOUR,WE
BELIEVE IN THEE,WE TRUST IN THEE.There will be a night vigil at nanguneri at
the below mentioned address on 30th dec at 9.00 P.M to 31st dec 6.00
A.M.where they are also helding a special prayer for me.I request you to
participate the same and pray for my sake if you have a faith and trust.As
on now 43 uncurable cancer patients,18 Uncurable aids patients and many
others have been wonderfully healed.

They are also starting a rehabitalitation centre on the same day for
patients.I hope the remaining of my/ life period will be spent here.

kindly contribute a generous amount towards this venture.Cheques can be made
out in the name”Missionaries of Compassion” to the below mentioned address
with your full contact details on or before 30th dec.

“you will be enriched in every way for your great generosity which will
produce thanksgiving to god through us”(ii corinthier 9:11)

Pl forward this message to all your friends and Get good wishes for the
coming newyear 2007.

Fr.A.Joseph Victor
Good news ashramam,
Good news nagar,karangadu{po},
nanguneri(t.k.);tirunelveli ditrict,
tamilnadu-627108.
Phone-9443452753.
(5 kms from nzngunery railway station).

You can also send the same to A.Antoy Micheal,3g Hanut flats,131/132
vellalar street.Adambakkam,Chennai-88.ph-22443677 with your full details

Loving brother in Christ
A.MARIA SELVARAJ.
Apma leathers.

சனி, டிசம்பர் 23, 2006

நியாயங்களின் குரல் ...

குளிர் காலத்தில் அதிகாலையில் எழுந்திருப்பது என்பது பெரும்பாடு, எழுந்து விட்டால் பெரும் பேறு. அதற்கு வழியாக பல நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். சபரி மலைக்கு விரதம் இருப்பதை முன்னிட்டு அதிகாலைக் குளிரில் குளித்து வழிபாட்டுக்குப் போவது, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுடன் பஜனைக்குப் போய் தேவர்களை எழுப்புவது என்று எழுந்து கொள்ள காரணங்களுக்குக் குறைவே இல்லைதான்.

ஆனாலும், விழிப்பு வருவதும், வந்த பிறகும் போர்வையின் கதகதப்பை மீறி எழுந்து விடுவதும் போராட்டம்தான். இந்த வாரம்
  • ஞாயிற்றுக் கிழமை பயணக் களைப்புத் தீர ஆறு மணி தாண்டும் வரை தூக்கம்
  • திங்கள் கிழமை பயணத்துக்கு ஆயத்தமாக நான்கு மணிக்கே
  • செவ்வாய் கிழமை ஆறு மணி தாண்டி விட்டது
  • புதன் கிழமையும் நீளமான தூக்கம்.
  • வியாழக் கிழமை பயணத்தை முன்னிட்டு நான்கரைக்கு விழிப்பு
  • வெள்ளிக் கிழமை முன் மாலைப் பொழுதிலேயே தூங்க ஆரம்பித்தும் ஆறு மணிக்குத்தான் விழிப்பே வந்தது.
  • இன்றும் ஆறு மணி வரை விழிப்பே வந்து விடவில்லை.
தலையில் பிடித்த கிருமிகள் போட்டு அசைப்பதற்கு ஈடான ஓய்வு தேவை என்பதால் இப்படி ஆகி விடுகிறதா அல்லது வழக்கம் போல நாளின் ஓட்டங்களைப் பொறுத்து இரவு நீண்டு விடுகிறதா என்று புரியவில்லை.

அறையெல்லாம் குளிர் ஊடுருவி, போர்த்தியிருக்கும் போர்வைக்குள்ளும் மிரட்டுவது அதிகக் குளிர் பகுதிகளில் பார்த்திருக்கிறேன். மின்சாரத்தால் இயங்கும் அறை சூடுபடுத்தியை இயக்கி விட்டால், உடலெல்லாம் உலர்ந்து நீரில் நனைந்து காய்ந்த காகிதம் போல் எழுந்திருப்போம். இல்லையென்றால் இடுக்குகள் வழியாகப் பரவியிருக்கும் குளிரில் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான்.

யா பெரல்மானின் பொழுதுபோக்குப் பௌதீகம் என்ற புத்தகத்தில் குளிர் என்ற ஒன்றே கிடையாது, வெப்பம் இல்லாமல் இருப்பதுதான் குளிர் என்று இயற்பியலின் பார்வையை உறைக்கும் படிச் சொல்லியிருப்பார். இருந்தாலும் குளிர் என்றே பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் குளிர் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறதோ!

அப்படி எலும்பு வரை ஊடுருவும் குளிர் வாலாஜாவில். எழுந்து பல் தேய்த்து, எழுதி விட்டு அடுத்த வேலை ஓடவில்லை. கிடத்திப் போட்ட தியானமாக திரும்பத் தூக்கம். எட்டு மணிக்கு எழுந்து வேலைகளை முடித்து விட்டு வெளியே கிளம்பினால் கதவுக்கு வெளியே குளிர் ஏற்கனவே விரட்டப்பட்டிருந்தது. நாய்களை மிரட்ட முந்தைய நாள் மாலையில் கையில் ஒரு குச்சியோடு உள்ளே நுழைந்த தாக்கத்தில் ஒரு அடி தள்ளியே நின்று வழியனுப்பின. பாச மிகுதியால் முகம் வரை பிராண்டுவதும், நக்க முனைவதும் போய் விட்டது.

கையில் நாளிதழோடு சாப்பிட விடமாட்டார் என்ற ஒரே காரணத்துக்காக மூர்த்தீஸ் கஃபேவைப் புறக்கணித்து ஒரேயடியாக தொழில் பேட்டைப் பக்கம் போய் விட்டேன். வழியில் இந்து நாளிதழ். சாப்பிட்டு, படித்துக் காலை முழுவதும் ஒரு முகாம். வெள்ளிக்கிழமை வழிபாட்டின் விளைவாக வைத்திருந்த பொறியுடன் கார பூந்தி கலந்த கலவையை கைக்கெட்டும் தூரத்தில் இருந்ததால் வஞ்சிக்க மனமின்றி கொரித்து முடித்தேன். பொறி, பொரிகடலை, வெல்லம் என்று கலவை செய்வார்கள் பொதுவாக - இங்குதான் கார பூந்தி கலப்பு. அது ஒரு வில்லன்.

பன்னிரண்டரை மணிக்கெல்லாம் இன்னொரு பகுதிக்குப் போய் விட்டு வரக் கிளம்பினேன். வழியில் சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் மின்னஞ்சல்களை படித்து விட்டுப் போகலாமா அல்லது முடித்து விட்டு வந்து விடலாமா என்று வாதிட்டு, வேலைக்கு முதலிடம். அது முடிய மூன்று மணி ஆகி விட்டது. சாப்பிடும் விடுதியில் அந்த நேரத்தில்தான் நிரம்பி வழிந்தது. இணைய வேலைகளை முடித்து விட்டு, அரை மணி நேரத்தில் வரும் போது வெறிச்சோடி விட்டிருந்தது.

தொழிற்பேட்டைக்குத் திரும்பி வந்தால் 'இன்றைக்கு விவாதிக்க நேரம் இல்லை, அடுத்த வாரம் பார்த்துக் கொள்ளலாம்' என்று வழியனுப்பி வைத்து விட்டார். 'முதலிலேயே சொல்லியிருந்தால் அப்படியே சென்னைக்குக் கிளம்பியிருப்பேனே'. இப்போதும் நான்கு மணிக்கு கிளம்பியாச்சு. அறைக்குப் போய் பொருட்களைப் பையில் திணித்து வண்டியை நிறுத்தத்தில் விட்டு வரும் போது நாலே முக்கால். வந்த விரைவு வண்டியில் உட்கார இடம் இல்லை. வெள்ளிக் கிழமை மாலை கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும் என்று எச்சரித்திருந்தார் ஒரு நண்பர்.

ஏறியவர்களில் ஒருவர் கடைசி இருக்கையில் இடம் கேட்க ஏற்கனவே உட்கார்ந்திருந்தவர், 'பார்த்து உட்காருங்க, இதில் இருப்பது லெதர் சாம்பிள், நசுக்கி விட்டீங்கண்ணா வீணாகி விடும்' என்று கைக்கடக்கமாக ஆனால் நீளமாக இருந்த ஒரு பொதியை கவனமாக எடுத்து சாமான் தட்டில் வைத்தார். அருகில் இருந்த நடத்துனர் அதைக் கேட்டு, 'லெதர் சாம்பிள்னா அதுக்கும் டிக்கெட் வாங்கணும்' என்று ஆரம்பித்தார். பயணி சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

'இருபத்தியைந்து கிலோவுக்கு மேல் இருந்தால்தானே சரக்குக் கட்டணம், இவ்வளவு சின்னப் பொதிக்கு ஏன்' என்பது பயணியின் வாதம். வெளிக் காற்று அதிகம் பார்த்திராத மேல்தட்டு தோற்றம் அவருக்கு. முதலில் சரியாக சொல்லத் தெரியாமல், கடைசியில் 'கமெர்சியல் பொதிகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்ற ரூல்' நடத்துனரின் கட்சி. பயணியின் உரத்த குரல் கோர்வையான வாக்கியங்கள், புகார் கொடுத்து விடுவேன் என்ற மிரட்டல்களுக்கு இடையே இவருக்கு சொல்ல வேண்டியதை சொல்லத் தெரியாமல் கடைசியில் பணிந்து போனார்.

'என்னை வேணும்னா இறக்கி விட்டுரு, நான் லக்கேஜுக்கு டிக்கெட் எடுக்க மாட்டேன். ஒங்க ஆஃபிசில் கம்ப்ளெயின்டு கொடுத்து ஒன்ன என் வீட்டுக்கு வந்து மன்னிப்புக் கேட்க வைப்பேன். மரியாதை இல்லாம பேசினான் என்று சொல்வேன்' என்று அடாவடியாக, மரியாதை இல்லாமலேயே பேசினார். நடத்துனருக்கு அவ்வளவு துணிச்சல் இல்லை. 'ஏழை சொல் அம்பலம் ஏறாத உலகில், இவன் யாரிடம் போய் நிற்பானோ, நமக்கு எதற்கு வம்பு' என்று ஒதுங்கி விட்டார்.

சீட்டு வாங்கும் போது என்னிடம் இருந்தது நூறு ரூபாய் தாள். சில்லறையாக இரண்டு ரூபாய் நாணயங்கள். அருகிலிருந்தவரும் நூறு ரூபாயை நீட்டினார். ஏற்கனவே கையில் நூறு ரூபாய்களாகத்தான் அடுக்கி வைத்திருக்கிறார் நடத்துனர். நிறைய பேருக்குச் செய்திருந்தது போல் எங்களுக்கும் சீட்டின் பின்னால் கொடுக்க வேண்டிய மீதியை எழுதிக் கொடுத்து விட்டார். ஊர் சேரும் முன்னால் அவருக்கும் எங்கிருந்து சில்லறை கிடைக்கும்?

சுங்குவார்ச் சத்திரத்திலும் சில்லறை தேறவில்லை. கையில் இருந்த விகடனுடன் வாசப்படியில் உட்கார்ந்து கொண்டேன். ஒரு புரட்டு புரட்டி விட்டு பக்கவாட்டில் வைக்கும் போது படிக்க ஒரு பெண் வாங்கிக் கொண்டார். 'புது இதழைப் பார்த்தவுடன் படிக்காமல் மனசு வராது, அது இயற்கைதான்' என்று விகடன் மீதான பற்று பற்றி அப்பா குறையாகச் சொல்வார்.

பூவிருந்தவல்லியில் ஏறிய ஒருவர் இரு நூறு ரூபாய்க்கு ஐம்பது ரூபாய்த் தாள்கள் மாற்றிக் கொண்டார். அப்படியும் பத்து ரூபாய்களுக்கு எங்கே போவது? தூங்கி வழிந்து கொண்டிருந்த ஒரு பெண் தானாக முன் வந்து ஐம்பது ரூபாய்க்கு பத்து ரூபாய் மாற்று கொடுக்க எல்லோருக்கும் சில்லறை கொடுத்து விட்டார். போரூரில் ஏழு மணி, சாலை நிறுத்தத்திலேயே அய்யப்பன்தாங்கலிலிருந்து வரும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். இருக்கையை அடைத்துக் கொள்ளும் படி பெரிய உருவம் இந்த நடத்துனருக்கு. நல்ல வேளையாகக் குரலும் அதற்கு ஈடாக இருந்தது. வேகமாகச் செயல்பட்டு கூட்டத்தைத் திறமையாகச் சமாளித்துக் கொண்டிருந்தார்.

வளசரவாக்கம் வரும் போது வாசலுக்கு அருகாக நகரும் போது பையில் கொக்கியில் நூல் மாட்டிக் கொண்டு ஒரு பெண் இழுபட்டு விட்டார். அவர் கூட இருந்த நண்பன் நூலை விடுவித்து அறுத்து அனுப்பி வைத்தார். இதற்கு மேல் தாம்பரம் போய் வந்து விட முடியுமா என்று மலைப்பு. கிளம்பி விட்டால் ஒரு மணி நேரப் பயணம்தான்.

தலையைச் சுற்றி முண்டாசு போலத் துண்டைப் போட்டுக் கொண்டு இரு சக்கர வண்டியில் கிளம்பி விட்டேன். 'தலைக் கவசம் போட்டுக் கொள்' என்று அடித்துக் கொண்டதற்கு செவி சாய்த்தால் பாதுகாப்புக்கு பாதுகாப்பும் ஆச்சு குளிருக்கு இதமும் கிடைத்து விடும் தான். விரட்டி விரட்டி அந்தச் சின்ன வண்டியையும் விரட்டிப் போய் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பக் கிளம்பி விட்டேன்.

'மார்கழிக் குளிரில் காசிக்குக் கிளம்பி விட்டீர்களே, அதற்குத் தேவையான உடைகள், அங்கே இதமான வசதிகளைச் செய்து கொள்ளுங்கள்' என்று வற்புறுத்தியதற்கு, 'எல்லாம் பார்த்துக் கொள்கிறோம், இல்லையென்றால் அங்கேயே முக்திதான்' என்று அப்பா சொல்லிச் சீண்ட அம்மாவுக்கு படபடப்பு.

எண்பது வயதுக்கு மேல் நாட்டை ஆளும் தலைவர்கள் இருக்கும் போது அறுபது வயதுகளிலேயே முக்தியைப் பற்றி என்ன பேச்சு, செய்ய வேண்டியது நிறையக் கிடக்கிறது. மனதளவில் ஓய்வு பெற்று விட்டோம் என்று நினைத்து விடுவதுதான் சோர்வுக்குக் காரணம். கருணாநிதியும், வாஜ்பாயும் அறுபது வயதில் நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தால் எவ்வளவு இழப்பு (அவர்களுக்கா, நாட்டுக்கா?)

வெள்ளி, டிசம்பர் 22, 2006

மனத் தொடல்கள்

மீண்டும் வாலாஜாவில். காற்றில் ஒரு புத்துணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. சென்னையை விட நான்கைந்து டிகிரி வெப்பநிலை குறைவாக இருக்கும் போலிருக்கிறது. சந்திக்கும் பல பேரின் காதுகளை அடைத்து பஞ்சு.

குளிர் காலத்தில் நெஞ்சுப் பகுதியை மட்டுமாவது மூடிக் கொள்ள கம்பளி சட்டைகளை முதன்மைப் படுத்துவார்கள் இந்தூரில். சீனாவில் கால்களுக்கு முக்கியத்துவம். கால்களை நன்றாகப் பொதிந்து கதகதப்பாக்கிக் கொண்டால் குளிரின் கடுமையைத் தாங்கிக் கொள்ளலாம். நம் ஊரில் தலையையும் காதுகளையும் மூடிக் கொள்ள அறிவுரை.

புதிய இடத்துக்குப் போனால் அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஊர் மக்கள் கடைப்பிடிக்கும் உணவு, உடை, தூக்கப் பழக்கங்களை புரிந்து கொண்டு நாமும் ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு தலைமுறைகளாக வந்து சேர்ந்த அந்த ஊரைப் பற்றிய அறிவு நமக்கும் பலன் தரும். வட நாட்டில் கோதுமை ரொட்டிகளும், தென்னாட்டில் அரிசிச் சோறும் முதன்மையான உணவாக இருப்பதற்கு காரணம் இருக்கத்தான் செய்யும். நாகர்கோவில் பக்கத்தில் தேங்காய் அதிகம் சேரும். வடக்கு ஐரொப்பாவில் மாட்டிறைச்சியும், திராட்சை மதுவும் என்று ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பழக்கம்.

'எனக்கென்று ஒரு நாடு, என்னைப் போற்றும் மக்கள்' என்று அமைத்துக் கொள்கிறேன் என்று கோபித்துக் கொண்டு கிளம்புகிறான் முருகன். நேற்றைக்கு பேருந்துப் பயணத்தின் போது திருவிளையாடல் படம். சின்ன வயதிலிருந்தே பல முறை வசங்கள் கேட்டுள்ள இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்ததே இல்லை. அப்படிக் கிளம்பி, கோவணத்தோடு ஆண்டியாக நின்ற முருகவேளைக் கடவுளாக உருவகித்த தமிழ்க்குடியினருக்கு உடையணிவதிலும், ஆடம்பரம் காட்டுவதிலும் ஆர்வம் இருப்பதில்லை. அதை மீறிக் கொண்டு ஓடும் போதுதான் மனம் அமைதியிழந்து விடுகிறது.

கிளம்பும் முன்னர் சாப்பிட்ட மீதியிருந்த உணவோடு, ஒன்பதரைக்கு குளிருக்கும் இதமாகச் சாப்பிட வேண்டும் என்று அளவுக்கு அதிகமாகவே சாப்பாடு. 'உறுதி மொழிகள் என்பவை மீறுவதற்கானவை' என்று அருள் குறிப்பிட்டிருந்தது போல நேற்று வாட்டி எடுத்தது.

'இது வரை என்னை யாரும் இந்த நேரத்தில் சாப்பிடக் கூப்பிட்டதே கிடையாது சார்.' என்று உருகி விட்டார். மதியம் உணவு நேரத்தின் போது போயிருந்த நிறுவனத்தில் அங்கு நின்றவரை, 'நீங்களும் சாப்பிட வாங்களேன்' என்று கூப்பிட்டவுடன் அப்படிச் சொன்னார். வழக்கமாக மதியம் மூன்று மணிக்கு மேல்தான் சாப்பிடப் போவாராம். கூட வேலை செய்பவர்கள் யாரும் சொல்வது இல்லை போலிருக்கிறது. காலையில் எட்டு மணிக்கு முன்னால் வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினால், மதியம் மூன்று மணிக்கு மேல் சாப்பாடு. இரவு ஒன்பது மணிக்கு மேல் கிளம்பிப் போய் பத்து மணிக்கு மேல் அடுத்த வேளை உணவு. இதுதான் அவர் பழக்கம்.

'மதியம் சீக்கிரம் சாப்பிட்டு விட்டால் மாலையில் பசிக்குமே' என்று தாமதமாகச் சாப்பிடுவதற்கு விளக்கம் கொடுத்தார். 'கஞ்சித் தண்ணீ குடிப்பீங்களா? சோறு வடித்த கஞ்சியைக் குடித்து வந்தால் வயிறு விரிவடையும், அதிகமாகச் சாப்பிடலாம்' என்று ஒல்லியாக இருந்த அவருக்கு இலவச அறிவுரை சொன்னால்,

'நமக்கு கஞ்சிதான் வழக்கமானச் சாப்பாடே, முந்தைய நாள் சோற்றைக் கரைத்து காலையில் ஒரு அடி அடித்து விட்டுக் வருவேன், இப்போ எல்லாம் கூழ் கூடக் காய்ச்சுவது இல்லை. எங்க அப்பா இருந்த வரை நிலத்தில் பயிரிட்டு வந்தோம். அவர் செத்த பிறகு மூணு வருஷமா கஷ்டம்தான். என்னுடைய வருமானம் மட்டும்தான். அண்ணன் தொழில் செய்கிறேன் என்று பல ஆயிரம் கடன் பட்டு நிற்கிறார். அவருக்கும் ஒரு வேலை இப்போதான் கிடைச்சிருக்கு'

சாப்பிடப் போகும் போது சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த லாரியை முந்திக் கொண்டு ஓடிக் கடந்து கொண்டேன். கூட வருபவருக்காகக் காத்திருக்கும் போது, சாலை ஓரமாக ஒரு கூடையில் வறட்டிகளை அடுக்கி், சுருக்கம் நிறைந்த முகத்திற்கு நிழல் விழும்படி தலையில் வைத்துக் கொண்டு இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு சாலையின் ஓரச் சரிவில் இறங்க ஆரம்பித்திருந்தார் ஒரு அம்மா. போட்டிருந்த பிளாஸ்டிக் செருப்பு வழுக்க, தலைச் சுமை தள்ளாட்ட, உடலும் ஒத்துழைக்க மறுக்க மேடு பள்ளமான அந்தச் செங்குத்துச் சரிவில் இறங்கிக் கொண்டிருந்ததைப் பரிவுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

'எங்கிருந்து எங்கு எடுத்துப் போகிறார்? என்ன விலை கிடைக்கும். பேரப் பிள்ளைகளோடு விளையாடி வீட்டில் இருக்க வேண்டிய வயதில், மதியான வெயிலில் ஏன் இந்த வேலை' என்று பதறிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இறங்கி முடித்து அவரும் என் கண்ணைப் பார்த்தார். 'ஏம்பா, வண்டி போன பொறகு கடக்க வேண்டியதுதானே, ஏன் அவசரம்?' என்று நான் சாலையைக் கடந்ததில் கரிசனம் எடுத்துக் கேட்டு விட்டு நடையைத் தொடர்ந்தார்.

'மெட்ராஸில இப்படி யாராவது கேப்பாங்களா சார்' இது கூட வந்தவர். ஒரு நிமிடம் நின்று சக மனிதனின் மீது அக்கறை காட்டும் செய்கைகளை நாளுக்குச் சில முறை செய்தால் எந்த ஊரும் சொர்க்கமாகி விடும்.

வழக்கமான பாய் விடுதியில் போய், ரொட்டிக் கொடுக்குமாறு கேட்க, 'பிரியாணி சாப்பிடுங்க சார்' என்று இரண்டு தட்டு பிரியாணி சொன்னார். 'மாமிச உணவு சாப்பிடுவதில்லை' என்றால் 'அப்புறம் ஏன் இங்கு வந்தீங்க' என்று வற்புறுத்தல். ஒரு வழியாக இறைச்சித் துண்டுகள் இல்லாமல் வெறும் சோறாகத் தரும் குஷ்காவுடன் நிறுத்திக் கொண்டேன். கூடவே வந்த அவித்த முட்டையைத் திருப்பி அனுப்பி விட்டேன். சாப்பிட்டு முடித்ததும் கொழுப்புச் சத்தையும் மசாலாவையும் உள்ளே தள்ள ஒரு வாழைப்பழம்.

மாலையில் ஏழு மணிக்கே கண்ணை அசத்தியது. பத்து மணி வரை வாயில் சாப்பிட்ட வாசனை. கோழி இறைச்சியின் கொழுப்பு சேர்ந்த உணவைச் செரிக்க பன்னிண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகியது. பழக்கம்தான் காரணம் என்று நினைக்கிறேன். பகலில் எல்லா இடங்களையும் ஒரு முறைத் தொட்டு விட்டு வந்தது. இன்றைக்கு அடுத்தச் சுற்று போய் விட்டு மாலையில் கிளம்பி விட வேண்டும்.

காசிக்குப் போகும் வழியில் இடைத் தங்கலாக சென்னையில் மூன்று நாட்களாக அம்மா/அப்பா. அவர்கள் வந்து சேர்ந்த காலையில் கிளம்பி வந்தச்சு. இன்றைக்காவது திரும்பிப் போய், நாளை அவர்களுடன் செலவிட வேண்டும்.

வியாழன், டிசம்பர் 21, 2006

தொடரும் பயணங்கள்

நேற்றுக் காலையில் சளி பிடித்த கதை எழுதி முடிக்கும் போது ஆறு மணி ஆகி விட்டிருந்தது. மோகமுள் பற்றியும், தமிழருக்கும் பொதுவாக இந்தியருக்கும் இருக்கும் தோல் நிறம் பற்றிய பதிவுகளையும் போட்டு விட்டேன். முந்தைய நாள் மீந்திருந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தது நன்றாகவே தெரிந்தது. குழம்பும் கெட்டுப் போகாமல் மார்கழிக் குளிரில். துணிகளைத் துவைத்துப் போட்டு விட்டுக் குளித்து விட்டு ஏற்பட்ட பசி வயிற்றுக்குச் சாப்பிடவா வேண்டாம் என்று உள் விவாதம்.

சளி பிடித்து மீண்டு வரும் நேரத்தில் இது போல் தண்ணீரில் ஊறிய சோற்றைச் சாப்பிடுவது விலைக்கு வாங்குவது என்று அறிவு எச்சரித்தாலும், அந்த சுவைக்கு ஏங்கும் நாக்கும், வீணாகப் போய் விடக் கூடாது என்ற உணர்வும் மீற சாப்பிட்டே விட்டேன். ஆயிரம் ரூபாய் கொடுத்து உயர்தர விடுதியில் சாப்பிட்டாலும், ஊறிய சோற்றில் சிறிது உப்பு போட்டு, தொட்டுக் கொள்ள மாங்காய் ஊறுகாயுடன் சாப்பிடும் சுகம் வராதுதான். நல்லவேளை, அந்தத் துணிச்சலுக்கு தண்டனையாக எதுவும் மோசமாகி விடவில்லை.

ஜனவரி முதல் மே வரை திட்டப் பணி செய்ய இடம் கேட்டு வந்திருந்த கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வும் நேர்முகமும் இன்று. அவர்கள் சீக்கிரமே வந்து சேர்ந்து விட்டிருந்தனர். எழுத்துத் தேர்வு ஆரம்பித்து விட, நம்முடைய குழுவின் சிறு பிரிவுடன் சின்ன விவாதம். அது நடந்து கொண்டிருக்கும் போதே தொலைபேசியில் பிடித்து அரை மணி நேரம் தன்னுடைய தேவைகளை சொல்லி விட்ட வாடிக்கையாளர். எல்லா வேலையும் முடித்தாகி விட்டது என்று சொல்லப்பட்ட வாடிக்கையாளர் நிறைவு இல்லாமல் பதில் சொன்ன ஒரு தொலைபேசி அழைப்பு.

'ஒன்றை நாம் ஏற்றுக் கொண்ட நிலையிலிருந்து சிறிதளவாவது மேம்படுத்தி விட்டுச் செல்ல வேண்டும். அது வேலை பார்க்கும் மேசை ஆனாலும் சரி, கணினியின் அடைவுகள் ஆனாலும் சரி, மென்பொருளின் நிரல் பக்கங்களானாலும் சரி, ஒவ்வொருவரும் புதிதாக குப்பையை தேவையில்லாதவற்றை விட்டுச் செல்லாமல், சிறிதளவாவது சிறப்பு சேர்த்து விட்டுச் சென்றால் தானாக தூய்மையும் தரமும் வந்து விடும்' என்று பாபுஜி நினைவு ஆசிரமத்துக் கோட்பாட்டை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டு அலுவலகத்தைச் சீராக வைத்துக் கொள்ள பொறுப்பேற்றுக் கொண்டிருந்தவருடன் ஒத்துழைக்கக் கேட்டுக் கொண்டேன்.

மதியம் நேர்முகங்கள் முடியும் போது மதிய உணவு நேரம். joelonsoftware.com குறிப்பிடுவது போல இறுதி ஆண்டு மாணவர்களுக்கான திட்டப் பணிகளை நிறுவனத்தில் செய்யும்படி வரவேற்று நல்ல சூழலை உருவாக்கிக் கொடுத்து, நமக்கும் அவர்களுக்கும் பயனுள்ள வேலை செய்ய வழி நடத்தினால், புதியவர்களை இந்தக் குழுவிலிருந்தே எடுக்க வாய்ப்பு இருக்கும் என்று முடிவு செய்திருந்தோம். மாணவர்களிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு ஆயத்தமாக இருக்கும் பணி அறிக்கையைக் கையில் கொடுத்து விடும் ஆபத்தான அசிங்கமான பழக்கத்துக்கு எதிர்.

மயிலாடுதுறை கல்லூரியிலிருந்து ஆறு மாணவர்கள். நல்ல திறமையான ஆர்வமானவர்கள். நமக்குப் பொருத்தமாக மூன்று பேரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. பணி செய்பவர்களுக்கு மாத உதவித் தொகையும் கொடுக்க முடிவு. மாலைக்குள் திட்டப்பணியை வரையறுத்து முடிவு செய்து விட்டோம்.

மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு பயணச் சீட்டுக்கள், அனுமதி முத்திரைக்கான முகவரைச் சந்திக்க அண்ணாசாலை நோக்கி. இது போன்ற பயணம் ஏற்பாடு செய்யும் அலுவலகங்களில் வழக்கமாக மாதந்தோறும் பயணம் செய்பவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இது போன்ற விடுமுறை காலங்களில் எல்லா விமானச் சேவைகளும் இருக்கை நிரம்பி இயங்கும் நேரத்தில் அவர்களைக் கவனித்துக் கொண்டால்தான், ஈயடிக்கும் நேரத்திலும் பயணிக்கும் அத்தகைய வாடிக்கையாளரின் வாடிக்கை தொடர்ந்து இருக்கும். இந்த நேரத்தில் புதிதாக அறிமுகமாகுபவர்களுக்கு கவனிப்பு குறைவுதான்.

எங்களுக்கு உதவி செய்யும் முகவரும் கொஞ்சம் தலைவலி கொடுப்பவர் போலிருக்கிறது. எப்படியோ, திறமையாக எல்லா விபரங்களையும் ஆவணங்களையும் சேகரித்துக் கொண்டார். ஹஜ்ஜை முன்னிட்டு சவுதி அரேபிய தூதரகம் இரண்டு வாரம் விடுமுறை விட இருப்பதால், புர்கினா ஃபஸோ மட்டும் முடித்து விட்டு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அதற்கும் பொருத்தமான வழி நான் சொல்லித்தான் இவருக்கும், பயண அலுவலருக்கும் புரிந்தது.

எமிரேட் சேவையில் துபாய் வழியாக, திரிபோலியில் இறங்கி அவுகாதோகு போய்ச் சேர வேண்டும். மூன்று கால்களையும் இணைக்கும் வகையில் விமான இணைப்புகளை இடைவெளியில்லாமல் ஏற்பாடு செய்வதில்தான் நேரம் இழுத்து விட்டார். அதற்கிடையே வந்த தொலைபேசி அழைப்புக்கள், பிற வேலைகளில் குதித்துக் கடுப்பேற்றினார். வரும் போது நேராக வர வழி செய்து விட்டாலும், போகும் போது துபாயில் இரண்டு நாட்கள் காத்திருக்கும் படியான முன்பதிவு. முடிந்த வரை அதைத் தவிர்க்கும் ஏற்பாட்டுக்கு மாற்றி விடுமாறு கேட்டுக் கொண்டு முடிவாக ஜனவரி இரண்டாவது வாரத்துக்கு பதிவு செய்து விட்டோம்.

அதை முடித்து வெளி வரும் போது சீன மொழிபெயர்ப்பு வேலை ஒன்றைக் கொடுத்திருந்தவர் தொலைபேச, அவரை அருகிலேயே சந்தித்து விடலாம் என்று ராயப்பேட்டை சாலை நிறுத்தம் அருகில் உணவு விடுதிக்கு வந்து விடுவதாகச் சொன்னார். அந்த வேலையை மறுதலித்து விட்டு வேறு விளம்பர விபரங்களைக் கேட்டுக் கொண்டு கிளம்பினேன். பாண்டி பஜார் வழியாக பனகல் பூங்கா சுற்றி கோடம்பாக்கம் வந்து கலைஞர் நகர் வழியாக திரும்புதல்.

அலுவலகத்தில் ஒரு புது வாடிக்கையாளர் கணினியில் மென்பொருள் நிறுவும் முறையையும், இணையத்தில் சேர்க்க வேண்டிய வழங்கிக்கான திட்டத்தையும் விவாதித்து விட்டு, பயன்பாட்டு இடைமுகத்தை பிற மொழிக்கு மொழி பெயர்க்கத் தேவையான ஏற்பாடுகளையும் முடிவு செய்து கொண்டோம்.

அப்புறம் ஒரு மணி நேர இடைவெளியாக மின்னஞ்சல்களுக்குப் பின்னூட்டங்களுக்கு மறுமொழிதல். எல்லாம் முடித்து விட்டு நிற வெறி பற்றிய பதிவின் பின்னூட்டங்கள் அனைத்துக்கும் ஒரு சேர எழுதிக் கொண்டிருந்த உரைக் கோப்பு சேமித்து வைக்காமல் போய்க் கொண்டிருந்தது பாதியில் வரைஇடைமுகம் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. அதை மட்டும் செயலிழக்கச் செய்து மீண்டும் உட்புகுந்தால் எழுதி வைத்திருந்தது போயே போச்சு.

இரண்டு நாட்கள் வெளியூர் போய் விடுவதால் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்ஒன்றை முடித்து விட்டுத் தூங்கப் போகும் போது பதினொன்று அடித்து விட்டது. காலையில் சீக்கிரமாக எழுந்து, ஆயத்தங்கள் செய்து, ஆறு மணிக்கு முன்னால் பேருந்தைப் பிடித்து போய்ச் சேர வேண்டும் என்று நோக்கம். அமைதியான தூக்கம், விழிப்பு வரும் போது மூன்றே முக்கால், எழுந்திருக்கும் போது நாலே கால். அதற்கிடையே ஒரு குட்டி வேலையும் வைத்துப் போயிருந்தார்கள்.

இதை எழுதும் போது நினைவு வந்தும் போது இன்னொரு வேலையையும் முடிக்க முடிந்தது.

புதன், டிசம்பர் 20, 2006

ஒரு சளி பிடிப்பின் கதை

சனிக்கிழமை கடலில் குளித்து விட்டு தலையைத் துவட்டாமல் போட்டிருந்த துணிகள் அனைத்தும் தண்ணீரில் ஊறியவை முற்றிலும் காயும் வரை வெயிலில் காயும் போது நன்றாகத்தான் இருந்தது. சின்ன வயதில் கோகுலம் படிக்கும் போது கேள்வி பதில் பகுதியில் ஒரு குழந்தை அனுப்பியிருந்த கேள்விக்குப் பொறுமையாகப் பதில் எழுதியிருந்தார்கள்:

"குளித்து விட்டுத் தலை துவட்டாவிட்டால் என்ன ஆகும்?"

"உடலின் மீதான ஈரம் காற்றில் தானாகவே காய்ந்து போகும். தலையைத் துவட்டாமல் விட்டு விட்டால் சளி பிடிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு."

குழந்தையின் கேள்விதானே என்று 'மரியாதையாக நன்கு துவட்டி விடு, இல்லையென்றால் சளி பிடித்து விடும்' என்று மிரட்டாமல் பொறுமையாகப் பதிலளித்த விதம் பிடித்திருந்தது.

அதே நாள் மாலையில், வேர்க்கும் வரை விளையாட்டுக்களிலும் ஓடி விட்டு வர எல்லாம் சேர்ந்து கொண்டு ஞாயிற்றுக் கிழமை காலையில் எழுந்திருக்கும் போதே தலை கனமாகிப் போயிருந்தது. அன்று முடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்த வேலைகள் எல்லாவற்றையும் கிடப்பில் போட்டு விட்டு மிகத் தேவையானவற்றை மட்டும் செய்து கொண்டேன்.

மதியம் சாப்பிட்ட பிறகு ஓய்வெடுக்கும் தூக்கம். வலைப்பதிவர் சந்திப்புக்குக் கிளம்பும் போது திரும்பி வரும் போது குளிருமோ என்று நினைத்து பைக்குள் கூடுதலாக ஒரு சட்டையை வைத்துக் கொண்டேன். காலிலும் உறை அணிந்து மூடிய காலணி அணிந்து கொண்டேன். திரும்பி வரும் போது வழியில் போட்டிருந்த டி சட்டைக்கு மேலாக இன்னொரு அடுக்கைச் சேர்த்துக் கொண்டேன்.

அதே கோலத்தில் அடுத்த நாள் போட்டுச் செல்ல வேண்டிய சட்டை ஒன்றை தேய்க்கக் கொடுக்கப் போனால் 'ஏன் சார், ரெண்டு சட்டை போட்டிருக்கீங்க, குளிருதுண்ணா காதில் பஞ்சு வச்சுக்கோங்க' என்று துணிக்கு பெட்டி போடுபவர் அறிவுரை கூறினார். 'இவர் ஆறு மணிக்கு மேல் சாப்பாட்டு கடையை எல்லாம் கட்டி விடுவார்' என்று ஜெய் சொல்லியிருந்தற்கேற்ப, கூட்டத்தில் கொடுத்த இனிப்புத் துண்டுக்குப் பிறகு எதுவும் சாப்பிடாமல் தூங்கி விட்டேன்.

திங்கள் அன்று புதுச்சேரிக்கு விற்பனைப் பயணம் ஒன்று. அதற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும், ஆறு மணிக்கு வடபழனியில் பேருந்து பிடித்து விட வேண்டும் என்று நான்கு மணிக்கே எழுந்து அவசர அவசரமாக தயாரிப்புகளை மடிக்கணினியில் முடித்து விட்டு, ஆறு மணிக்கு வடபழனி. காது மூடுவது பற்றிய அறிவுரையை நினைவு கூர்ந்து திரும்பும் போது பயன்படுத்த துண்டு ஒன்றும் பையில் திணித்துக் கொண்டேன்.

கூட வருபவரும் சரியாக வந்து சேர்ந்து விட்டிருந்தார். கிழக்குக் கடற்கரைச் சாலை வழியான விரைவு வண்டி ஒன்றில் ஏறி, வாசலுக்கு எதிரான இருக்கையில் உட்கார்ந்து கொண்டோம். காற்றை மறைத்து கூட வருபவர் ஓரத்து இருக்கையில் இருந்து கொண்டாலும் அதையும் தாண்டி அடித்த குளிர் காற்று வருத்திக் கொண்டே இருக்க கண்களை மூடிக் கொண்டு அரைத்தூக்கமாக புதுச்சேரி.

'சளி பிடித்தால் நிறைய ஊட்டு, காய்ச்சலடித்தால் காயப் போடு' என்று ஒரு ஆங்கிலப் பழமொழியைப் பிடித்துக் கொண்டு இது போல சளி பிடிக்கும் போதெல்லாம் மூக்கு முட்டச் சாப்பிடுவது வழக்கமாக வைத்திருந்தேன். இன்றைக்கு வயிற்றைக் காயப் போட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது. புதுச்சேரியில் இறங்கி காலை உணவுக்குப் போனதும், இரண்டு இட்லிகளோடு நிறுத்திக் கொண்டேன். மதியம், போன நிறுவனத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சோலையாகப் பராமரிக்கப் பட்டு வரும் அவர்களது உணவுக் கூடத்தில் சிறிதளவு சோறு.

மாலையில் பேருந்து நிலையத்துக்கு அவசரமாக வந்து காத்திருந்த பேருந்தில் ஏறி விடச் சாப்பிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. காலுறைக்குள், பேன்டுக்குள் தகிக்கும் கனலை உணர முடிந்தது. உட்கார இடம் கிடைத்தது, கடைசி நீளமான இருக்கையில்தான். ஓரத்தில் இருந்த நடத்துனர் காலதரை மூடவே இல்லை. கூடவே வாசல் வழியாகக் குளிர் காற்று.

'நமது நோவு நமக்கு' என்று பையில் இருந்த துண்டை எடுத்து நீள வாக்கில் மடித்துத் தலையைச் சுற்றிக் காதை மறைத்துக் கழுத்தில் முடிந்து கொண்டேன். உண்மையிலேயே, பொதிந்து கொண்ட வெதுவெதுப்பு இருந்தது. பேருந்து ஓடிய மூன்று மணி நேரம் நல்ல தூக்கம். வடபழனியில் இறங்கும் போது, தலையில் துண்டு போட்ட கோலத்தில் நகர் வலம் வேண்டாம் என்ற நினைப்பில் துண்டை அவிழ்த்து விட்டு பகிர்வூர்தியைப் பிடித்தேன். வழியில் விரல்களால் காதை மூடிக் கொள்ளத் தயங்கவில்லை.

சோர்வில் தள்ளாடிய உடலுக்கு செவி சாய்த்து வேறு வேலைகளை எல்லாம் தள்ளிப் போட்டு உடனடியாகத் தூங்கப் போய் விட்டேன். செவ்வாய்க் கிழமை காலையில் எழுந்திருக்கும் போது, தலையிலிருந்து சளி இறங்கி மூக்கும் தொண்டையும் திறந்து விட்டிருந்தன. உற்சாகமாக வேலைகளில் இறங்க முடிந்தது.

ஆரம்ப நாட்களில் முழு ஓய்வெடுக்காமல் வெளியூர்ப் பயணம் போய் விட்டு வந்தால் காய்ச்சல் ஏறி மூன்று நான்கு நாட்கள் படுக்கையில் செலவளிக்க வேண்டியதுதான் இது வரை அனுபவம். அப்படிப் படுக்கவேண்டி வந்தால் பகலில் படுக்க சொகுசும், மனம் போல நோவு ஆற்ற வசதிகளும் இல்லை என்ற புரிதலில் தானே சரியாகிப் போனது போலப் போயே போயிற்று.

நேற்றுக் காலையில் அவித்த உணவு ஏதாவது மசாலாக்கள் சேர்க்காமல் சாப்பிடலாம் என்று போய் இட்லி சாப்பிட்டு விட்டு, உலர்ந்த உணவுக்கு சப்பாத்தி கிடைக்காமல், மருந்தாக பூரி. அதன் விளைவு இரவு தூங்கும் போதே தெரிந்து விட்டது. பால் பொருட்களைச் சாப்பிடும் நாட்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடும் நாட்களில் உடல் எப்படி எதிர்வினை பெறுகிறது என்பது ஓரளவு அனுபவம் சார்ந்து புரிய ஆரம்பித்து விட்டது.

நேற்றைக்குச் சந்திப்புக்குப் போன வாடிக்கையாளர் அறையில் அறைக் குளிர்ச்சியூட்டும் கருவி கோளாறால் இரண்டு மூன்று பேருக்கு சளித் தொல்லை. அன்றுதான் சரி செய்து போயிருக்கிறார்கள் என்று உறுதி சொன்னார்கள். ஆனாலும் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டேதான் இருந்தது.

மாலையில் சாப்பிட்டு விட்டு, வலைப்பதிவுகளில் பல நாட்களுக்குப் பிறகு ஓரிரு மணி நேரம் செலவளிக்க முடிந்தது. போஸ்டன் பாலாவின் பட்டியலில் இருந்து, மதியின் பட்டியலிலிருந்து வருகைகள் ஏராளம். நானும் என்னைப் பாதித்த வலைப்பதிவுகளுக்கான ஒரு பட்டியலை 2006க்கு என்று எழுத வேண்டும்.

புதிதாக வந்து சேர்ந்திருந்த கணினிகளில் ஒவ்வொன்றாக இயங்குதள நிறுவல். ஒரே கணினியில் இயங்கு தளக் கோப்புகளை அமைத்து மற்றவற்றை கணினிவலை மூலமாகவே ஆரம்பம் செய்து நிறுவிக் கொள்ளும் வசதிகளைப் படித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தாலும், கடைசியில் ஒவ்வொன்றாகக் கழற்றி அடர்வட்டு இயக்கியைப் பொறுத்தி சூசே 10.1 நிறுவிக் கொண்டோம். வழங்கிகள் மட்டும் இன்னும் மீதி.

பெரிய நிறுவனங்களில் நூற்றுக் கணக்கான கணினிகளை பராமரிக்க வேண்டியிருக்கும் போது தனிக் கணினிகளில் தேவையில்லாத குறுவட்டு/அடர்வட்டு இயக்கி, நெகிழ்வட்டு இயக்கிகளைத் தவிர்த்து விட்டு வலைஇணைப்பு மூலமாகவே மென்பொருள் நிறுவல், சரிசெய்தல் போன்ற பணிகளை ஒரே இடத்திலிருந்து செய்யும் வசதிகள் லினக்சு சூழலில் உண்டு.

கூகிளின் தேடல் சேவைகளை இயக்கும் கணினி அமைப்பு, ஆயிரக் கணக்கான லினக்சு மேசைக் கணினிகளின் கூட்டு அமைப்புதான் என்று படித்திருக்கிறேன். ஏதாவது ஒன்று பழுதடைந்தாலும், தேன்கூடு போன்ற இந்த அமைப்பு தொடர்ந்து இயங்கும், தேவைப் படும்போது கூடுதாலகக் கணினிகளை இணைத்துக் கொள்வார்களாம். பழுது பட்ட கணினியைக் கூட்டத்திலிருந்து நீக்குவது கூட இல்லையாம். அதற்கு ஆகும், நேரம், சேவைத் தடைப்படல் கணினியின் விலையை விட மதிப்பு அதிகமாக இருப்பதால் அடுத்த முறை பராமரிப்பு சுழற்சி வரும் வரை தூரத்திலிருந்தே சரி செய்ய முடியா கணினிகளை அப்படியே விட்டு வைத்திருப்பார்களாம்.

ஞாயிறு, டிசம்பர் 17, 2006

இன்பச்செலவு

நேற்றைக்கு இன்பச்செலவு போகும் நாள். முந்தைய நாள் அசதியில் எழுந்திருக்கும் போதே ஐந்தரை மணி. ஏழரை மணிக்குக் குளித்து எட்டு மணிக்கு ஆயத்தமாகி விட்டேன். ஒன்பது மணிக்கு வண்டி ஏற்பாடு செய்திருந்தாலும் எட்டு மணிக்கே எல்லோரையும் வந்து விடுமாறு சொல்லியிருந்தார். 'எட்டு மணி் என்று சொன்னாதான் ஒன்பது மணிக்கு வருவாங்க' என்று அப்படிச் சொன்னாராம். அதை அப்படியே நம்பி எட்டு மணிக்கு வந்து சேர்ந்தது ஒரே ஒரு அப்பாவிதான்.

'நேரம் தவறி வந்தவர்கள் புத்திசாலிகள், எட்டு மணிக்கு வந்தவர் முட்டாள், அடுத்த முறை திட்டமிட்ட நேரத்துக்கு வராமல் தாமதமாக வருவதுதான் சரி' என்று ஆகப் போனது. எட்டரை மணிக்குப் பக்கத்தில் தாமதமாக வந்தவர்களிடம் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் வீதம் தண்டம் வசூலிக்க ஆரம்பித்தோம். ஒன்பது மணிக்குச் சரியாக வந்தவரையும் சேர்த்து முந்நூறு ரூபாய் சேர்ந்து விட்டது. இந்தப் பணத்துக்கு ஏதாவது ஒரு பொருளை வாங்கி, போட்டி ஒன்றில் வெற்றி பெறுபவருக்கு கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து கொண்டோம்.

வண்டி வருவதற்கென்னவோ ஒன்பதரை ஆகி விட்டது. குடிக்கத் தண்ணீருக்கான கேன், விளையாட்டுக்களுக்குத் தேவையான பொருட்கள், கடலில் குளிக்க மாற்று உடைகள் எல்லாம் ஏற்றிக் கொண்டோம். பதின்மூன்று பேர், சபரிமலைக்கு மாலை போட்ட வேன் ஓட்டுனர். 'இன்றைய பொழுதில் எதையும் முன் துடிப்போடு ஆரம்பிக்காமல், எந்த முடிவையும் எடுக்க முன்வராமல் இருப்பது' என்று காலையிலேயே மனதுக்குள் முடிவு செய்து கொண்டிருந்தேன்.

தொடர்புடைய சொற்களை சங்கிலித் தொடராக உருவாக்குவது என்று ஒருவர் ஆரம்பிக்க ஒரு அரைமணி நேரம் போனது. அப்புறம் பாட்டுப் பாடச் சொல்ல, ஒருவர் ஆரம்பித்து வைத்தார். இரண்டு குழுக்களாகப் பிரிந்து பாட்டுக்குப் பாட்டு ஆரம்பித்தது, மாமல்லபுரம் வரும் வரை ஓடியது. வழியில் கடற்கரை ஓரம் நிறுத்தலாம் என்ற கருத்து ஒதுக்கப்பட்டு நேராக மாமல்லபுரம் போய்ச் சேர்ந்து கடற்கரைக் கோயிலை அடுத்த மணற்பரப்புக்கு பரவினோம்.

இடத்தைப் பார்த்து விட்டு வந்து பொருட்களை எடுத்துப் போகலாம் என்று நினைத்ததில் மாற்றுத் துணிகள், துடைக்கும் துண்டு எல்லாமே வண்டியிலேயே இருந்து விட்டது. தண்ணீரைப் பார்த்ததும் ஒவ்வொன்றாக இறங்க ஆரம்பித்து விட்டார்கள். ஒதுங்கி இருந்தவர்களை கையையும் காலையும் பிடித்துத் தூக்கி எறிந்து இழுத்து விட்டார்கள். பணப் பைகளையும், செல்பேசிகளையும், கைக்கடிகாரங்களையும், தங்கச் சங்கிலிகளையும் கழற்றி வைத்துப் பார்த்துக் கொள்வதற்காக ஒரே ஒருவர் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டார். பாதி நேரத்துக்குப் பிறகு நான் அந்த வேலையை ஏற்றுக் கொள்ள அவரும் இறக்கப்பட்டார்.

நன்கு முழுகிக் குளித்து விட்டு, அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மணலில் வெயில் காய்வு. தலையும், சட்டையும், கால்சட்டையும், உடலும் வெயிலில் உலர்ந்தன. அடாவடி அதிகம் இல்லாத வளர்ந்த பன்னிரண்டு பேரின் கடலாட்டம் அந்த இடத்துக்கே ஒரு உற்சாகத்தைக் கொண்டு வந்திருந்தது. கரையில் இருந்து பார்க்கும் பலரின் முகத்தில் புன்னகைகள். வட இந்திய குடும்பம் ஒன்று, வெள்ளைக்கார அம்மா - குட்டிப் பெண், நாமக்கல்லிலிருந்து பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் என்று நேரம் போய்க் கொண்டே இருந்தது.

ஒரு மணி ஆகி விடும் நேரத்தில் களைத்து ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள். கிளி ஜோசியம் பார்க்க ஒரு பையனிடம் பத்து ரூபாய் கொடுத்து நல்லதாக நான்கு வார்த்தை கேட்டேன். கிளி எடுத்துக் கொடுத்தது வேளாங்கண்ணி மாதா படம், நான் எடுத்து கலைவாணி படம்.

குவிந்திருந்த பொருட்களை ஒவ்வொருவராக எடுத்துப் போனார்கள். ஏற்கனவே செல்பேசியைத் தொலைத்து இப்போது கழுத்தில் கயிறு கட்டி செல்பேசியைத் தொங்க விட்டு சட்டையின் உள்புற பையில் வைத்து பத்திரமாகப் பாதுகாக்கும் ஒருவரை வெறுப்பேற்றுவது வாடிக்கையாகிப் போயிருந்தது. நேற்றும் அவரது கருவியை யாரோ வாங்கிப் பையில் போட்டு, கருவியில் ஓசைகளை அமர்த்தி வைத்து தொலைந்து விட்டது என்று ஒரு மணி நேரம் ஓட்டினார்கள்.

ஓட்டல் மாமல்லாவில் சாப்பிடலாம் என்று முதலில் சொன்ன வண்டி ஓட்டுனர், கொஞ்சம் விலை குறைவாக வேண்டுமானால் ஒரு செட்டிநாடு ஓட்டல் இருக்கிறது என்று அங்கு இட்டுப் போனார். ஓட்டல் குரு என்ற அந்த சின்ன இடம், அசைவ உணவு விடுதி, செட்டிநாடு என்று போட்டிருக்கவில்லை. எளிய உணவு, சிறந்த சேவை. குறைந்த விலை. தூய்மையான தரமான வயிறு நிறைப்பு.

'ஆனாலும் இவ்வளவு குறைந்த விலையில் சாப்பிட்டு முடித்து விட்டோமே' என்ற ஆதங்கத்தில் மாலை உணவை சென்னை போய்ச் சேர்ந்து பார்த்துக் கொள்ளலாம் என்று பேசிக் கொண்டார்கள். மதியத்துக்கு மேல் குழு விளையாட்டுக்களுக்காக உட்கார இடம் தேடி, மாமல்லபுரம் விட்டு வெளியே வந்து, புலிக் குகை என்ற பகுதியில் இறக்கி விட்டார். அங்கு உட்கார எல்லாம் அனுமதி இல்லை என்று தெரிந்து, கோவளத்துக்கு அருகிலான சவுக்குத் தோப்புகளுக்கு அருகில் இறங்கி கடை விரித்தோம்.

மது அருந்தி போயிருந்தே ஒரு கும்பல், பிளாஸ்டிக் கோப்பைகளையும், உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் பின்னால் வருபவர்களுக்குப் பரிசாக விட்டுப் போயிருந்தார்கள். குப்பித் துண்டுகளை ஒதுக்கி விட்டு உட்கார்ந்தோம்.

குழாயில் பாச்சா உருண்டை உருட்டி இன்னொரு இடத்துக்குப் போய்ச் சேர்ப்பது, பலூனை ஊதி இன்னொரு இடத்தில் போய் உடைப்பது, வாய் அசையாமல் திரைப்படப் பெயரை குழுவினருக்கு உணர்த்த முயல்வது, ஓட்டை போட்ட கப்பில் தண்ணீர மொண்டு ஊற்றுவது, பந்து எறிந்து காலில் பட வைப்பது என்று இருட்டுவது வரை நேரம் ஓடியது. ஏழாம் வகுப்பு படிக்கும் தயாளன் அருகிலிருந்த வீட்டிலிருந்து பார்வையாளனாக, உதவியாளனாக. சத்ய சாயி அறக்கட்டளையிலிருந்து கட்டணத்தைக் கட்டி விடுகிறார்களாம். சீருடை, புத்தகங்கள் இலவசம்தான்.

மைதா மாவுக்குள் காசுகளைப் புதைத்து வாயால் எடுக்க வைத்தது மட்டும் கொஞ்சம் ரசனைக் குறைவாகப் பட்டது. அந்த மாவையும், பிஸ்கெட்டு பொதிகளையும் தயாளனுக்குக் கொடுத்து விட்டுப் புறப்பட்டோம். கைகால்கள் களைப்பில் கெஞ்சின.

ஏழு மணிக்கு திருவான்மியூரில் ஒரு வட இந்திய உணவு விடுதியில் சாப்பாடு. முந்தைய நாள் அனுபவத்தில் அடக்கி வாசிக்க முடிவு. காய்கறி சூப்பு, சப்பாத்தி, வெண்டைக்காய் பொரியலோடு நிறுத்திக் கொண்டேன். கேள்விப்பட்டிராத பெயர்களுடனான உணவுகளைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு முடித்தார்கள். அப்பா, அம்மா, இரு வளர்ந்த பெண் குழந்தைகளுடன் ஒரு ஐரோப்பியக் குடும்பம் போலத் தெரிந்தவர்கள் முதலில் பானம் அருந்தி விட்டுப் பிறகு உணவுக்கு திரும்பி வரும் வரை எங்கள் கச்சேரி தொடர்ந்து கொண்டிருந்தது.

திரும்ப வண்டி புறப்பட்டு ஒவ்வொருவராக அவரவர் இடத்துக்கு இறங்க ஆரம்பித்தார்கள். ஞாயிற்றுக் கிழமை ஓய்வுக்குப் பிறகு திங்கள் மீண்டும் வேலை ஆரம்பிக்கும். மீதி இருந்தவர்களில் ஒருவர், 'அடுத்தது இது போல் எப்போது' என்று ஒரு கேள்வியைப் போட்டார். ஜனவரி, பெப்ரவரி, மார்ச்சு காலாண்டில் நமது முடிவுகளைப் பொறுத்து ஏப்ரலில் பெரிதாகவோ சிறிதாகவோ ஏற்பாடு செய்யலாம் என்று பேசிக் கொண்டோம்.

சனி, டிசம்பர் 16, 2006

மல்லிகைப்பூ இட்லி

இரவு முழுவதும் விழித்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிறிது நேரம் தூங்க ஆரம்பிக்கும் போது நான் எழுந்து விட்டிருந்தேன். இன்னொரு மடிக்கணினியில் சூசே 10.1 நிறுவல் முடிந்து விட்டிருந்தது. கோப்புகளை மற்ற கணினியிலிருந்து நகல் செய்து, மற்ற வடிவமைப்புகளை முடித்து விட ஒரு மணி நேரம். அப்புறம் ஒரு மணி நேரம் எழுத்து.

மீண்டும் காலைப் பொழுது விடமாட்டேன் என்று பிடித்து இழுக்க, சாலையில் இறங்காமல், தெருக்களுக்குள் புகுந்து புறப்பட்டேன். அன்னை சத்தியா நகர் என்று அருகிலேயே ஒரு பகுதி. ராமாபுரத்தின் ஒரு பிரிவு போல் இருக்கிறது. போன ஆண்டு மழைத் தண்ணீர் தேங்கிய போது இங்கு வந்து பார்த்தது. அழுக்கான ஒரு குளம். அருகில் சின்ன குடியிருப்பு கிராமம். காலையில் ராத்தங்கும் பேருந்து ஒன்று குளத்தோரமாக நின்று கொண்டிருந்தது. ஒரு தேநீர்க் கடையில் பெண் ஒருவர் கொதிகலன் அருகில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக நடக்காத ஒன்று.

ஆயத்தமாகக் கிடைக்கும் இடியாப்பத்தை ஆவியில் வேக வைத்து ஒரு பாத்திரத்தில் தொங்க விட்டு மிதிவண்டியில் விற்பது இந்தப் பகுதிகளில் காலையில் ஓரிருவர். நேற்றைக்கு, 'இடியாப்பம்' என்ற நீட்டி முழக்காத அடித்தொண்டையிலான அழைப்பைக் கேட்டு வெளியே வரும் முன்னால் அடுத்த தெருவுக்குப் போய் விட்டிருந்தார். வழக்கம் போல டாடா உடுப்பிக்குப் போய்த்தான் சாப்பிட வேண்டியாகி விட்டது.

புதிய கணினிகளில் மூன்று வழங்கிகளை பராமரிக்க முன் வருமாறு கேட்டுக் கொண்டதில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு பேர் ஆர்வமாக கைத் தூக்கினார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி இதற்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டார்கள். மாலை வெளியே போய்த் திரும்பி வரும் போது படம் போட்டு பலகையில் தொங்க விட்டு விட்டார்கள்.

மதியம் பல்லாவரம் வாடிக்கையாளர். பழைய வீட்டுக்கு அருகில் விடுதியில் சாப்பிட்டு விட்டு, பல்லாவரத்தில் வேலையை முடித்து விட்டு தாம்பரம் அண்ணன் வீட்டுக்கும் ஒரு சிறு வேலையாக போய் வந்தேன். கிண்டி பூந்தமல்லி சாலையிலிருந்து ஜிஎஸ்டி சாலைக்கு வர பரங்கி மலையைத் தொட்ட படையினருக்கு உரிய ஒரு வழி இருக்கிறது. பொதுப் பாதை அல்ல என்று எங்கோ பார்த்த நினைவு இருந்தாலும், எல்லா வண்டிகளும் மக்களும் போல இதே வழியில் போவது பழக்கமாகி விட்டிருந்தது. நேற்று திரும்புவதைத் தடுக்க ஒரு சாலைத் தடுப்பான் அமைத்திருந்தார்கள். அதையும் சுற்றிக் கொண்டு போக வேண்டாம் என்று கத்திப்பாரா சந்திப்பு வரை போய் சுற்றிக் கொண்டு திரும்பினேன்.

கத்திப்பாராவில் புதிய மேம்பாலப் பணி சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் முடித்து விட்டால் இந்தப் பகுதியே மாறி விடும். அப்படியே விமான நிலையம் அருகிலும் ஒரு மேம்பாலம் கட்டும் வேலை. குரோம்பேட்டை எம்ஐடி வாசல் அருகிலான மேம்பாலம் ஓரிரு ஆண்டுகள் பாதியில் முடங்கிக் கிடந்தது மாறி இப்போது போக்குவரத்துக்கு வெகுவாக பயன்படுகிறது. சேத்துப்பட்டில் சுரங்கப் பாதையும் பல ஆண்டு தேக்கத்துக்குப் பிறகு திறந்து விடப்பட்டிருக்கிறது. இதெல்லாம் திமுக அரசின் செயல்பாட்டுக்கு சான்றுகள்.

கார்த்திகை, மார்கழி மாத சென்னை அழகு. வெயிலும் உறைக்காமல், மேகங்கள் கண்ணாமூச்சி ஆடும் வானம் நடுப்பகலிலும் இதமானது. விமான நிலையத்திலிருந்து மேலேறும் விமானத்தின் அடிவயிற்றுப் பகுதி சாம்பல் வண்ண வானத்தின் பின்னணியில் வண்டி ஓட்டும் போதே மெய் மறக்கச் செய்தது. தாம்பரத்திலிருந்து திரும்பும் போது வழியில் மாலையில் சந்திப்பதாகச் சொல்லியிருந்தவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. இரண்டு பேருக்கும் மையமாக திநகரில் முருகன் இட்லிக் கடையில் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம்.

அலுவலகம் வந்தால் புர்கினோ ஃபாசோ அழைப்பு, புதிய கணினிகள், திங்கள் கிழமைக்கான ஆயத்தங்கள் வந்து விட்டிருந்தன். திங்கள் அன்று புதுச்சேரிக்குப் போக வேண்டும். ஏழரை மணி சந்திப்புக்கு நாங்கள் போகும் போதே பத்து நிமிடம் தாமதம். வர வேண்டியவர் இடம் அடையாளக் குழப்பங்களிலும் தாமதமாக வந்து சேர்ந்தார். கடைக்கு அருகில் புத்தகங்கள் விற்கும் ஒரு தள்ளு வண்டி. கோல், கோல் 2, 7 பழக்கங்கள் எல்லாம் இருந்தது. ஃபவுண்டன் ஹெட் மட்டும் வாங்கிக் கொண்டேன்.

'இட்லிக்கு இவ்வளவு கூட்டமா?' என்பது முதல் முதல் இங்கு வரும் யாருக்கும் தோன்றும் கேள்வி. வார இறுதிகளில் எட்டு மணிக்கு மேல் கூட்டம் கூட்டமாகக் காத்திருந்து சாப்பிட்டு விட்டுப் போகும் மேல் தட்டு மக்களைப் பார்த்து எல்லோருக்குமே ஆச்சரியம்தான். ஒரு முறை சாப்பிட்டு விட்டால் அது மறைந்து விடும்.

வீடுகளில் என்றைக்காவது அமைந்து விடும், மிகத் திறமையான புத்திசாலித்தனமானவர்கள் மட்டும் செய்து விடக் கூடிய இட்லி இங்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கும். கொண்டு வருவதே உறை போட்டக் கைகளில் இட்லித் தட்டோடு சேர்த்து. மதுரை மல்லிகைப் பூ இட்லி என்று சொன்னாலும், வேறு எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு பதத்தில் இருக்கும். சாம்பார், சட்டினிகளும் உறுத்தாத சுவையில்.

இட்லி, தோசை வகைகள், வடை, பொங்கல், சர்க்கரைப் பொங்கல் என்று தடம் விலகாத உணவுப் பட்டியல். ஒரு இட்லி ஐந்தரை ரூபாய். இரண்டு ரூபாய்க்கும் இட்லி கிடைக்கும் நகரில் விலை அதிகம்தான். இதே சேவையை பரவலாக, இவ்வளவு பளபளப்பு இல்லாமல் சிறு குடியிருப்புப் பகுதிகளிலும் செய்தால் சற்றே குறைந்த விலைக்கே கொடுக்கலாம். பெயர் மலிந்து விடும் என்று செய்யாமல் இருக்கலாம்.

மூன்று பேர் நிறைவாகச் சாப்பிட்டது நூற்றுதொண்ணூறு ரூபாய். வயிறு சொல்வதைக் கேட்காமல் கடைசியில் கூடுதலாகச் சாப்பிட்ட இரண்டு இட்லிகள் மட்டும் தவிர்த்திருக்கலாம். வெளியில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினோம்.

அப்பாவியாக, அடாவடி செய்யாமல், நேர்மையாக தொழிலில் பார்ப்பது அரிதானது. அப்படிப்பட்ட ஒருவர் இவர். நானாக முன் வந்து அவரது ஆதாயம் பற்றிப் பேசும் வரை வாயே திறக்காமல் இருந்தார். அதனால் அவர் இழந்தவை ஏராளம் என்பது பேச்சில் தெரிந்தது. சட்டசபை உறுப்பினரைச் சுற்றி நிற்கும் கும்பலில் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவருக்கு வலது கையே நான்தான் என்ற அளந்து விடுவது போன்ற ஆட்கள் நிறைந்த உலகில் தனது தொடர்புகளை பெரிதுபடுத்தி பறை சாற்றி பணம் பார்க்காமல் இருக்கும் இவர் ஒரு ஆச்சரியம்.

திரும்பும் போது பத்து மணி. நேரம் தவறிய சாப்பாடு, அளவுக்கதிகமாகவே சாப்பிட்டது. படுத்து ஒரு மணி நேரத்தில் பக்கத்து அறையில் நடக்கும் உரத்த விவாதக் குரல்களில் தூக்கம் கலைந்தது. எழுந்து தண்ணீர் குடித்து விட்டுத் திரும்பப் படுத்ததும் தூக்கம் வராமலேயே புரண்டு கொண்டிருந்து விட்டு எப்போது தூங்கினேன் என்று தெரியாமலேயே தூங்கி எழும் போது காலை ஐந்தரை.

பார்வைக் கோணங்கள் மாறும் போது உலகமே மாறி விடுகிறது. அந்த மாற்றங்களுக்கு இடையூறாக இருப்பவற்றைத் தூக்கி எறிவதுதான் தடைக்கல். எவ்வளவோ படித்திருந்தும், எவ்வளவோ கதைகள் கேட்டிருந்தும், சொந்த வாழ்க்கை என்று வரும் போது விழிப்பு தானாக வந்து விடுவதில்லை. வெளியிலிருந்து பார்க்கும்.

வெள்ளி, டிசம்பர் 15, 2006

கணினிகள்

காலையில் ஐந்தே முக்காலுக்கு வெளியே வாசல் தெளிக்கும் சத்தம். தலையில் சிறுதுணியைக் கட்டிக் கொண்டு அதிகாலையிலேயே கடமையை ஆரம்பித்து விட்டிருந்தார்கள். அப்போதுதான் நாட்குறிப்புகளை முடித்து விட்டு கதவை திறந்து எட்டிப் பார்த்தேன். தொடர்ந்து இணையத்தில் மேய ஏதாவது எண்ணம் இருந்தால் வெளியே தெரிந்த அழகான காலைச் சூழல் அதை முறித்துப் போட்டது.

பையில்லாத டி-சட்டையும் சாரமும் போட்டுக் கொண்டு உலாவப் போகும் போது ஒரு சிக்கல், 'காசுகளை எங்கே வைத்துக் கொள்வது, செல்பேசியை எங்கே வைத்துக் கொள்வது?' பற்பசையும், பிரஷும் வாங்கத் தேவையான காசை மட்டும் மடியில் முடிந்து கொண்டேன். நேரம் பார்க்க கையில் செல்பேசி.

சில்லென்று புதிய காலை. ஆற்காடு சாலையில் இறங்கி விட்டால் டீசல் புகை விடும் பேருந்து, லாரிகளும் மண்ணெண்ணெய் புகை விடும் பகிர்வூரதிகளூம் அந்த நேரத்திலேயே காற்றைக் கொலை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். சாலையோரம் என்பதே கிடையாது. குப்பைகள் குவிந்திருக்கும், அல்லது மழை/அழுக்குத் தண்ணீர் தேங்கியிருக்கும். தார் போடப்பட்ட சாலைப் பரப்பிலேயே ஓரமாக நடந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அவ்வளவு அகலம் கிடையாது.

தேநீர்க் கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஒரு இரும்புச் சாமான் கடை கூடத் திறந்து விட்டிருந்தார்கள். பத்து நிமிடங்கள் போகும் திசையில், அப்புறம் திரும்பிய திசையில் மீதி நடை என்று கணக்கு அமைத்திருந்தேன். பத்து நிமிட மணி அடிக்கும் போது இரண்டு பேருந்து நிறுத்தத் தூரம் தாண்டி விட்டிருந்தது.

கிளைச்சாலையில் இருக்கும் கடைகளில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்து விட்டிருந்தது. 'காலையிலேயே எந்திரிச்சிருவீங்களோ?' என்று கேட்டதற்கு காது சரியாகக் கேட்காத அந்தப் பெரியவர், 'ஆமாமா, அவன் கோயம்பேடுக்கு காய் வாங்கப் போயிடுவான், நானும் நாலு மணிக்கெல்லாம் முழிச்சுருவேன். சீக்கிரமா கடையைத் தொறந்தாத்தானே யாருக்காவது பயன்படும்'. மேலே தொங்கும் பற்பசை பொதியை எட்டுவதற்கு முக்காலியை இழுத்து வந்தார். 'நானே எடுக்கிறேனே' என்று ஏணிக்கு மாற்றான உயரத்தைப் பயன்படுத்தி ஒரு பொதியைக் கிழித்துக் கொண்டேன்.

குள்ளமான, ஒல்லியான இவருக்கு உயரமானவர்களைப் பார்த்தால் என்ன தோன்றுமோ, போன தடவை கடைக்குப் போகும் போது, 'குனிஞ்சு வாங்க, தலை இடிச்சுரப் போகுது' என்று சொல்லி விட்டு, 'அம்மா, அப்பா செய்த புண்ணியம்தான், ஆண்டவன் இவ்வளவு உயரத்தைக் கொடுக்கிறான்' என்று பொக்கை வாய்ச் சிரிப்போடு கூறினார். நேற்றைக்கும் உயரத்தின் வெளிப்பாடு.

டிசம்பர் குளிரில் சுடுநீரில் குளிப்பதுதான் அறிவுடைமை. வெந்நீர் வைக்கச் சோம்பல் பட்டு, வெந்நீரில் குளித்த பிறகு தாக்கும் குளிருக்குப் பயந்தும், பச்சைத் தண்ணீரையே ஊற்றிக் கொள்வது. அதற்கு இது போல உலாவி விட்டு வருவது உதவும். குளித்து முடித்த பிறகு வெதுவெதுப்பாக இருக்கும். உடல் வெப்பத்தை சரி செய்து கொள்ள தோலுக்கு காலையிலேயே எச்சரிக்கை போல.

மிகக் குளிர்ந்த நீரில் குளித்தால் நரம்புகள் தளர்ந்து போகும் என்று படித்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது குளிர்காலத்தில் கொடைக்கானல் செலவு போனோம். அரை வாளி வெந்நீர் இத்தனை ரூபாய் என்று விலையைப் பார்த்து, குளிரெல்லாம் ஒரு பொருட்டா என்று பச்சைத் தண்ணீரிலேயே குளித்து விட்டேன். இரவு முழுவதும் ரயில், தொடர்ந்து கார் பயணத்துக்குப் பிறகு வெறும் வயற்றில் இந்த அதிர்ச்சியும் சேர்ந்து கொள்ள கிட்டத்தட்ட மயக்க நிலைக்குப் போய் விட்டேன்.

யாருடனும் எதுவும் பேசாமல், வெளியில் வந்து புல் தரையில் இளம் வெயிலில் படுத்துக் கொண்டேன். வெந்நீர் எல்லாம் போட்டு இருபது பேரும் குளித்து முடியும் வரை பாதி நினைவும், மீதி கனவுமாக உடல் சூடேறும் வரை படுத்திருந்தேன். அப்புறம் சாப்பிட்ட பிறகுதான் உயிர் வந்தது.

இந்தூர் குளிருக்கும் வெந்நீர் பழக்கம் ஆரம்பிக்கா விட்டாலும், உள்ளிருந்து உடலை சூடாக வைத்துக் கொள்ள சரியான உணவை அடைத்துக் கொள்வது பற்றிய அறிவு உண்டு. சாங்காய் அப்புறம் இங்கிலாந்து குளிருக்கு வெந்நீரையும், தண்ணீரையும் கலந்து இதமாகக் குளிக்கும் சொகுசு வந்து விட்டிருந்தது. வேறு வழியும் கிடையாது அந்தக் குளிருக்கு.

ஏழரை மணிக்குச் சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் வலைப்பதிவு அலங்கரிப்புகளில் கழிந்தது. தமிழ் மணத்தில் இணைப்பதில் மட்டும் ஆடம் ஃபீட் பிழை என்று கண நேர தகவல் மின்னி பின்னர் பொதுவான தகவல் வருகிறது. பீட்டா பிளாக்கருக்கு மாறியதால் வந்த சொதப்பல்களில் ஒன்று. தேன்கூடு தானே மேய்ந்து திரட்டிக் கொள்வதில் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை.

கூகிளின் கூரையின் கீழ் வந்திருக்கும் பிளாக்கர் பீட்டா அந்த நிறுவனத்தின் மீதான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியது. எங்கெல்லாம் கடுப்பாக இருந்ததோ அங்கெல்லாம் மாற்றங்கள் செய்திருக்கிறார்ள். எதிர்பாராத ஆச்சரியங்களாக வெகுவாகத் திட்டமிட்டு அனுபவித்து வடிவமைக்கப்பட்ட புதிய வசதிகள். மென்பொருள் அறிவு இல்லாமலேயே பொதுப் புத்தியைப் பயன்படுத்தி அழகான, செழுமையான வலைப்பதிவு வடிவமைப்புகளை உருவாக்க பல வசதிகள்.

பதிவு போட்டு, பின்னூட்டங்கள் போட்டு, பதில் போட்டு ஓடிக் கொண்டிருந்த நேரங்களிலிருந்து கொட்டையிலிருந்து தோல் இளகுவது போல விலக்கம் ஏற்பட்டு விட்டிருக்கிறது. பற்றில்லாமல், எழுதிப் படித்துப் போகும் நிதானம் கிடைத்து விட்டிருக்கிறது.

பணியை, உலகை வாழ்க்கையை அணுகும் பார்வை மாறும் போது எல்லா தளங்களிலும் புரட்சி ஏற்பட்டு விடுகிறது. அப்படியாக புது ஆற்றலுடன் எல்லோரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக புதிய கணினிகளுக்கான வாங்கலையும் முடிவு செய்து விட்டோம். நிரல் எழுதுவதிலிருந்து முழுவதுமாகக் கழன்று கொண்டு நிர்வாக வணிக வேலைகளிலேயே பொழுது போனது. சவுதி அரேபியா வாடிக்கையாளர் வரவேற்பு ஆவணம் கிடைக்கத் தாமதமாவதாக எழுதியிருந்தார். மற்றபடி எல்லாம் சீரான வேகத்தில் ஓட ஆரம்பித்திருந்தன.

புதிய இடத்திலிருந்து மதிய உணவு. 'ஒவ்வொருவருக்கும் கையில் காசைக் கொடுத்து விடலாம், எங்கு பிடிக்கிறதோ அங்கு சாப்பிட்டுக் கொள்ளட்டும்' என்ற கருத்தைத் திடமாக நிராகரித்து எல்லோருக்கும் பொதுவான மதிய உணவுக்கான ஏற்பாட்டையே தொடரலானோம். பெண்கள் விடுதி நடத்துபவர்கள் இங்கும் சாப்பாடு அனுப்புகிறார்கள்.

மூன்றரைக்கு வருவேன் என்று சொல்லியிருந்தவர் எதிர்பார்த்தது போல வரவேயில்லை. தொலைபேசினால், 'ஆமா, வர முடியவில்லை' என்று முடித்துக் கொண்டார்.

மற்ற வேலைகளை முடித்து விட்டு மடிக் கணினியை வாங்கி வர, ஒரு காசோலையை வாங்கி வர இருவராகக் கிளம்பினோம். வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஒரு பிண ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துத் தேக்கம். சுற்றிக் கொண்டு கலைஞர் கருணாநிதி நகர் வழியாக, அசோக் கம்பம் தொட்டு தி நகர் பேருந்து நிலையத்து அருகாக அண்ணா சாலையைப் பிடித்தோம். பெரியமேட்டுக்குப் போக வேண்டியவரை பிஆர் அன்ட் சன்ஸ் அருகில் இறக்கி விட்டு சேப்பாக்கம் நோக்கித் திரும்பிக் கொண்டேன்.

கீறியிருந்த மேல் மூடி, உடைந்திருந்த இணைப்புகள் சரி செய்து, புதிய அடர்வட்டு (டிவிடி) இயக்கி சேர்த்து விட்டிருந்தார்கள். கையோடு கொண்டு போயிருந்தா உபுண்டு குறுவட்டு மூலம் ஓட்டிப் பார்த்துப் பழைய கோப்புகளும் பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். எதிரிலேயே புதிய மின்கலனை மாற்றிக் கொடுத்து விட்டாரகள். வெளித் தோற்றத்தில் புது கணினி போல ஆகி விட்டது. உள்ளே இன்னும் பழைய கணக்கி, திரைதான். இதுவரை வன்தட்டு, விசைப்பலகை, அடர்தட்டு இயக்கி, மின்கலன், பழுது பார்த்தல் என்று புதிய கணினிக்கான விலையில் பெரும்பங்கு செலவளித்து திரையும், சிபியுவும், பெட்டியும், நினைவகமும் தவிர்த்த எல்லாமே மாறி விட்டன.

அண்ணா சாலை என்று நினைத்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலேயே திரும்பி விட்டேன். வண்டி ஓட்டும் போது தன்னிச்சையாக சாலை பிடிக்கும் உணர்வு குறைந்து விட்டிருக்கிறது. ஒரு பையன் வேகமாக குறுக்கே வந்து இடப்பக்க கண்ணாடி பொருத்தத்தை இளக்கி விட்டு விட்டதுதான் அந்தச் சாலையில் போனதற்குப் பரிசு. அண்ணாசாலைக்குத் திரும்பி தவறான தடத்தில் புகுந்து விட்டதால் வேறு வழியில்லாமல் எழும்பூர் நோக்கிப் போய், ராணி மெய்யம்மை அரங்கு வழியாக, நுங்கம்பாக்கம் வந்து, திநகர் ஒற்றைவழிப் பாதையைத் தவிர்க்க மாற்றுப் பாதையில் புகுந்து போக்குவரத்துத் தேக்கத்தில் அரை மணி நேரம் மாட்டிக் கொண்டேன்.

திட்டமிட்ட போக்குவரத்து ஒழுங்குபடுத்தலில் குளறுபடி இல்லாமல் இத்தனை வாகங்கள் குறுகிய சாலைகளில் போய் வருவது, நமது போக்குவரத்துக் காவல் துறையின திறமைக்கு சான்றுதான். வண்டிகளை நிறுத்தி கையூட்டு வாங்கும் பழக்கத்தை மட்டும் விட்டு விட்டால் தெய்வமாகி விடுவார்கள்.

அலுவலகத்தில் தேவையான கோப்புகளை மற்ற மடிக் கணினியில் நகல் எடுத்து விட்டு (தமிழ் படைப்புகள் எல்லாம் பிழைத்தன), இதிலும் சூசே 10.1 ஓட விட்டேன். தூங்கப் போகும் வரை நிறுவல் முடியாமல் இருக்க அன்று போல முடிக்கச் சொல்லி விட்டு நேரத்தில் தூங்கி விட்டேன். இரண்டரை மணிக்கு எழுந்து அன்று எழுதி வைத்த முறைப்படி தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகை நிறுவிக் கொண்டு, கோப்புகளை திரும்ப மாற்றி விட்டு வேலையை முடித்து விட்டேன்.

வியாழன், டிசம்பர் 14, 2006

புது வெள்ளம்

ஆற்றில் புது வெள்ளம் வரும் போது கரையிலும் சரி, நீரிலும் சரி, ஒரே கலங்கலாக இருக்கும். அது போன்ற நாட்கள் டிசம்பர் நாட்கள்.

காலையில் துணிகளைத் துவைத்துப் போட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி பேருந்து நிலையம் வரைக் கொண்டு விட்டு விடக் கேட்டுக் கொண்டேன். இங்கிருந்து சாலைக்குப் போக வண்டியில் அல்லது நடைதான் வழி. அப்படிப் போனதும் நல்லதாகப் போனது. சாலையில் வந்தவுடன் தூரத்தில் பேருந்தின் முகப்பு வெளிச்சம் புலப்பட அங்கேயே வண்டியை சாலையைக் கடந்து நிறுத்திக் கையைக் காட்டினதும் நிறுத்தி ஏற்றிக் கொண்டார்கள். மணி ஐந்தரை.

அந்த நேரத்திலும் பேருந்தில் ஓரிரண்டு இருக்கைகள் மட்டுமே காலியாக இருந்தன. முன் வரிசையில் நான்கைந்து இருக்கைகள் தள்ளி இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு ஒரே ஒரு முறையைத் தவிர கவனம் திரும்பிய போதெல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அப்படி என்னதான் பேசிக் கொண்டார்களோ!

தூக்கத்துக்கும் தியானத்துக்கும் என்ன வேறுபாடு? பேருந்தில் முதுகை நிமிர்த்திக் கொண்டு கால்களை செங்குத்தாக வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டால் தியானம். கால்களை வசதியாக பரப்பி, முதுகை இருக்கையில் சாய்த்து கண்களை மூடிக் கொண்டால் தூக்கம். தூக்கத்தில் எண்ணங்களுக்கு ஆற்றுப்படுத்தல் இல்லை. தியானத்தில் எண்ணங்களை பார்க்க முயற்சி.

இரண்டிலுமே சிறிது நேரத்துக்குப் பிறகு விழித்துப் பார்த்தால் ஒரே மாதிரிதான் இருக்கிறது. நேற்றைக்கு பேருந்தில் உட்கார்ந்திருந்து தூக்கம்தான் என்று தோன்றுகிறது. ஒலி இழுவையாக பாடல்களை வதை செய்யும் ஒலி பெருக்கியுடன் பழைய பாடல்களை போட்டுக் கொண்டிருந்தார் ஓட்டுனர்.

விடியும் வேளையில் வெளியே தங்கப் பந்தாக சூரியன். குளிர்கால காலைகளுக்கே உரிய அடக்கி வாசிக்கும் அதிகாலைக் காட்சி. பந்தைச் சுற்றி பிரகாசம் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் ஆகலாம். இப்போதைக்கு கண்ணுக்கு வசதியான காட்சி. பார்க்கும் போதே ஒரு மேகம் தலையைக் குறுக்கே நீட்டி முழுவதுமாகத் திரை போட்டது. சில நிமிடங்களில் அந்த மேகம் நகர்ந்து விட மீண்டும் சூரியக்காட்சி. இன்னொரு முறை இன்னொரு மேக மறைப்பு.

திருப்பெரும்புதூர் தாண்டி செம்பரம்பாக்கம் ஏரியைத் தொடும் போது கூட வீச்சு அதிகரித்திருக்கவில்லை. புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த ஏரிநீரில் அதிகாலை சூரியனின் கதிர்களின் பிரதிபலிப்பு நீண்ட கோடுகளாகப் பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் தலைவருக்கு வெளிச்சம் ஏறிக் கண்ணால் பார்த்து விட முடியாத கூசல் வந்து விடும் என்று நினைக்கும் போதே அடுத்த பார்வையில் அது ஆரம்பித்து விட்டிருந்தது.

வண்டியை வேகமாக ஓட்டத் தெரியாத முடியாத ஓட்டுனர். அடித்துப் பிடித்துக் கொண்டு முழு வேகத்தில் வருவதும், இது போல தயங்கி தயங்கி வருவதும். ஓட்ட நேரத்தில் மிஞ்சிப் போனால் பதினைந்து நிமிடங்கள் அதிகரிக்கலாம். இரண்டுக்கும் வேக வேறுபாடு மணிக்கு இருபது கிலோமீட்டர் என்றாலும், பெரிய கால தாமதம் ஏற்பட்டு விடப் போவதில்லை. ஆனால், வண்டி இழுப்பில்லாமல் சீரான வேகத்தில் போகும் போதுதான் ஒரு திருப்தி.

ஏழரை மணிக்கு போரூர். இந்து நாளிதழுடன் உடுப்பி கப்பாஜி விடுதி. அங்கு ஒரு பரிமாறுபவர் எப்போதும் உம்மென்ற முகத்துடன் இருப்பார். அவர் மேசையிலேயே மாட்டிக் கொண்டேன். ஒவ்வொரு அசைவும் ஏதோ வேண்டா விருந்தாளியை உபசரிப்பது போல இருப்பது அவரது இயல்பு. சாப்பிட்டு முடித்து பட்டியல் கொண்டு வரும்போது மட்டும் ஒரு தட்டில் கொண்டு வருவார். அவருக்கு ஊக்கத் தொகை வாங்கிக் கொள்ள. அந்தச் சின்ன போரூர் போன்ற கிராமத்துப் பாணி விடுதியில் அந்தப் பழக்கமே வேடிக்கையாகத் தோன்றும். அதுவும் இவர் செய்யும் போது இன்னும் செயற்கையாகத் தோன்றும்.

அவர் தட்டை (வெறும் தட்டு) வைத்து விட்டு பட்டியல் போட்டு விட்டுப் போன நேரம், பையைத் தூக்கிக் கொண்டு கல்லா அருகிலேயே போய் கையிலேயே வாங்கி நேரடியாகப் பணத்தைக் கொடுத்து விட்டேன். அவர் முகத்தை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. நான் வெளியில் வரும் போது அவரும் வெளியே வந்தார். படி இறங்கியதும் ஒரு வயதான அம்மா கையை நீட்டினார்கள், 'நான் ஒன்றும் கஞ்சன் இல்லை' என்று சொல்லும் விதமாக காசு எடுத்துக் கொடுத்தேன்.

அமெரிக்காவில் ஊக்கத் தொகை என்பது எழுதாதச் சட்டமாம். வேலைக்குச் சம்பளம் தீர்மானிக்கும் போதே ஊக்கத் தொகையையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்களாம். அந்தப் பழக்கம் தரும் நினைவில் எதிர்பார்ப்பவருக்கு ஊக்கத் தொகை கொடுக்காமல் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. குறைந்தது, ஏன் தரவில்லை என்று அவரிடம் சொல்லியிருக்கவாவது செய்ய வேண்டும்.

போரூர் சாலை நிறுத்தத்தைக் கடந்து, பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கும் போது கூப்பிட்ட பகிர்வு ஊர்திகளைப் புறக்கணித்தேன். நிறுத்த விளக்குகள் மாறி ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு பேருந்துகள் கடந்து போயின. நிறுத்தம் போய்ச் சேரும் முன்னால் போய் விடும். பின்னாலேயே இன்னொரு பேருந்து. இந்தத் தடத்தில் மூன்று பேருந்துகள் சேர்ந்து நிறுத்தத்துக்கு வருவது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். எனவே இன்னும் நான்காவதாக பேருந்து கடந்து சென்ற போதும் ஆச்சரியம் தோன்றி விடவில்லை.

இவை எல்லாம் போய் விட்டால் இன்னும் ஐந்து பத்து நிமிடங்களுக்குக் காத்திருக்க நேரிடுமே! என்று ஒரு குட்டிக் கவலை. நிறுத்தத்திலிருந்து நூறு இருநூறு மீட்டர் தொலைவில் இன்னும் ஒரு பேருந்து கடந்து போனது. அதற்கும் மேல் கடைசியாக ஆறாவது பேருந்தும் வந்து சேர கொஞ்சம் ஓட்டத்தைப் பிடித்து அதில் ஏறிக் கொண்டேன். இரண்டு நிமிடங்களுக்குள் ஆறு பேருந்துகள், அய்யப்பன் தாங்கல், பூவிருந்தவல்லி, குன்றத்தூர் என்று மூன்று பணிமனைகளில் ஆரம்பிக்கும் தடங்கள்.

ஆறாவதாக வந்த பேருந்தில் கூட்டமே இருக்காதுதான். பேருந்தின் உள்ளேயும், நடத்துனரும், சில பயணிகளும் நிலைமையைக் குறிப்பிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அலுவலகம் வந்து ஒரு மணி நேரம் இணையத்தில் நேரம் கிடைத்தது. அப்புறம் புது வெள்ளத்தின் புரட்டல்கள், இழுப்புகள். பதினொரு மணிக்கு வெளியே போகும் போது வழியில் ஒரு சிற்றுண்டி. வாடிக்கையாளருடனான விவாதத்தின் போது மதிய உணவுக்கு இடைவேளை விட்டு எழுந்து போன போது, சும்மா கூட வருகிறேன் என்று போய் அந்தக் கடையிலும் ஒரு முழுச் சாப்பாடு.

மாலையில் புதிதாக சேர்ந்திருந்த ஒரு வாடிக்கையாளர் தொலைபேசி, 'ஏன் குறித்த நாளில் வந்து காசோலையை வாங்கிப் போகவில்லை. விரைவாகக் காசை வாங்கிக் கொண்டு வேலையை முடியுங்கள்' என்று துரத்துகிறார். காசைக் கொடுக்க தானே தொலைபேசிய இரண்டாவது நிகழ்ச்சி. ஆரம்பத்தில் ஒரு வேலை முடித்து விட்டு வெறுத்துப் போய் அத்தோடு தொடராமல் விட்டு விட்ட நிறுவன உரிமையாளர் தானே முன் வந்து காசு அனுப்பி வைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்.

அந்தத் துள்ளலில் கூடுதலாக ஒரு உயிர் கிடைத்தது போன்ற உணர்வு. இந்த இரண்டு மாதங்களும் தம் பிடித்து ஓடி விட்டால், சரியான பாதை அமைந்து விட்ட நிலையில் தேர் அசைய ஆரம்பித்து தேரோட்டம் தொடங்கி விடலாம். இன்ஷா அல்லா.

புதன், டிசம்பர் 13, 2006

வாசித்தலும் எழுதலும்

காலையில் இரண்டு மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் தமிழ் கருவிகளை வடிவமைத்தல். அடுத்த ஒரு மணி நேரத்துக்கு நாள்குறிப்பு. பல் தேய்க்க பிரஷ் விட்டு வந்து விட்டதால், முகம் கழுவி வாய்க் கொப்பளித்து புறப்பட்டுக் கொண்டேன். ஐந்தே காலுக்கு வெளியே வரும் போது தெருவில் ஒரு பெரிய குடும்பம், பெண், ஆண்-பெண், ஆண்-பெண், ஆண்-குழந்தை, பெண் என்று என்ன உறவுகள் என்று ஊகிக்க முடியாதவர்கள் அந்த அதிகாலை நேரத்தில் எங்கோ கிளம்பிப் போகிறார்கள்? கட்டிட வேலை செய்பவர்கள் போலத் தென்படவில்லை. மலங்க மலங்க விழித்துக் கொண்டு குழந்தையின் கையில் ஒரு விளையாட்டுப் பொருளின் இனம் புரியாத பிளாஸ்டிக் பகுதி.

சாலைக்கு வந்து பகிர்வூர்தியைப் பிடித்து போரூர் வந்தால், பேரணாம்பட்டு பேருந்து, சித்தூர் பேருந்து என்று போய் அப்புறமாக வந்த புத்தம் புதிய 102 விரைவு வண்டி. ஓட்டுனர் வாலாசா வரும் வரை ஏழெட்டு முறை திடீரென வேகத் தடை செய்து சாலையின் பிற வண்டிகளை நடந்து செல்பவர்களை வைதுக் கொண்டார். புது வண்டி அவருக்கு பழகவில்லை என்று பட்டது. ஆனாலும் அடுத்தவரை நொந்து கொள்வதுதானே முறை.

போரூர் முன்னாள் கணபதி ஸ்வீட்ஸ், இப்போது நந்தினி ஸ்வீட்ஸாக மாறி விட்டிருக்கிறது. புதிய முகப்புக் கட்டும் போது சாலையில் வடிந்து கொண்டிருந்த சாக்கடை தண்ணீரை அழகாக மடை கட்டி மறுபக்கத்தில் வடிகாலுக்கு திருப்பி விட்டு விட்டார்கள். இப்போது அந்த இடத்தின் தோற்றமே மாறி விட்டிருக்கிறது. கடை உரிமையாளர்களுக்கும் தொழிலுக்கு அழகிய முகப்பு நல்லதுதானே.

அறைக்கு வந்து குளித்து பொடி நடையாக பிராதான சாலைக்கு வந்ததும் உந்து இழுவண்டி (ஆட்டோ ரிக் ஷா) ஒன்றில் ஒண்டிக் கொள்ள இடம் கிடைத்தது. அருகில் இரண்டு பெண்மணிகள் பள்ளி ஆசிரியைகளுக்கான உரையாடல்களில் ஆழ்ந்திருந்தார்கள். ஈடுபாட்டுடன் ஆசிரியர் வேலை பார்ப்பவர்கள், தனிப் பண்புகளை அடைந்து விடுகிறார்கள்.

பெரு உணவாக காலை உணவை முடிக்கும் போது, நாளிதழ் படித்துக் கொண்டே சாப்பிடுவதற்கு கண்டனம் தெரிவித்தார், விடுதி உரிமையாளர். அசடு வழியும் முகத்தோடு, பழகிவிட்டது என்று சமாளித்தேன்.

அப்புறம் மூன்று பேராக இரண்டு சக்கர வண்டியில் பயணம். இங்கு காவலர் கெடுபிடி இல்லாவிட்டாலும், இரண்டு பேர்தான் போகலாம் என்ற விதியை மீறலாமா என்ற உறுத்தல் எனக்கும் இருந்தது, இன்னொருவருக்கும் இருந்திருக்கும். பேசாமல் ஒருவர் வழக்கம் போல பேருந்தில் போய் இறங்கி, வண்டியே போகாத நீண்ட சந்தில் ஏறிக் கொண்டிருக்கலாம்.

ஆரம்பிக்கும் போது சுணக்கமாக ஆரம்பித்து, பின்னால் சூடு பிடித்தது. காலையில் போன தொழிற்சாலையிலும் சரி, மாலையில் போன தொழிற்சாலையிலும் வெளிநாட்டு வாடிக்கையாளர் வந்திருந்தனர். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சென்னை பயணத் திட்டங்களுக்கான பருவம். வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், நடுக்கும் குளிருக்கு மாற்றாக சென்னையின் தாலாட்டும் மார்கழி வேலைகளை முடிக்க உகந்தது. வெயில் ஏறி விட்டால் இங்கு வருவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் பருவகால மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் தேவைப்படும் போதெல்லாம் வந்து போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே இருக்கிறது.

முதல் வேலையை முடித்து விட்டு இரண்டு மணிக்குக் கிளம்பலாம், வழியிலேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணம். சரியாக கிளம்பும் போது அப்போதுதான் சாப்பாட்டை முடித்து விட்டு வந்த உரிமையாளர் கூப்பிட்டு பேச ஆரம்பித்தார். முடித்து விட்டுக் கிளம்பி ஆவென்று சாப்பிடப் போய்ச் சேர்ந்தேன். உடலில் சேமிப்பு இல்லாததால், நேரம் தவறி விட்டால் அலந்து போய் விடுகிறோம் என்று யாரோ சொல்லியிருந்தார்கள்.

அடுத்த இடத்தில் திட்டத்தைத் தாண்டி இரண்டு வாரம் போயும் இன்னும் இறுதி சந்திப்பு முடியவில்லை. நேற்றும் தள்ளிப் போடப் பட்டு, இன்று பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஏழு மணி தாண்டியிருக்கவே கூட இருந்தவர், 'நீங்க இனிமேல் சாப்பிட மாட்டீங்களே' என்று அலைபாய்தலைக் கட்டிப் போட்டார். நேராக அறையில் கொண்டு விட்டு விட்டுப் போனார்.

கைகால் கழுவி விட்டு மாஸ்கோவிலிருந்து திரும்பிப் போகும் பிரெஞ்சுப் படைகளின் தோல்வி ஓட்டத்தைப் படிக்க ஆரம்பித்தேன். மாற்று மடிக்கணினியில் வார் அண்ட் பீஸ் மற்றும் கிரைம் அண்ட் பனிஷ்மென்ட். புத்தக வடிவில் இரண்டு நாட்களுக்கு முந்தைய Surely You are Joking என்ற நூலை ஒரே மூச்சில் முடித்திருக்க இப்போது மோபி டிக் என்ற அமெரிக்க செந்நூல்.

கல்லூரியில் படிக்கும்போது படித்திருந்த ஃபெய்ன்மானின் புத்தகத்தைத் திரும்பப் படிக்கும் போது பல நுணுக்கங்கள் முதல் முறை படித்த நினைவே இல்லை. எந்த ஒரு படைப்பையும் ஒரே ஒரு முறை படித்து எடை போட்டு விட முடியாது. சிலவற்றை ஒரு முறை படித்ததே பாவம் என்று தோன்றுவதும் உண்டு, அதைத் திரும்பப் போய் படிப்பதற்கு ஒரு வாழ்நாள் போதாது.

அயன் ராண்டின் ஃபவுண்டன் ஹெட் படித்து விட்டு அதே எதிர்பார்ப்புடன், அட்லஸ் ஷ்ரக்ட் படிக்க ஆரம்பித்த போது பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. பல முறை முயன்றும் முழுவதும் படிக்க முடியவில்லை. சைலன்ஸ் ஆஃப் த லாம்ப் தொடர்ந்து ஹானிபல் படிக்கும் போது முதல் முறைக் கடுப்பாக இருந்தாலும், இரண்டாவது வாசிப்பில் படைப்பின் அருமை புலப்பட்டு விட்டது.

கல்கியின் பொன்னியின் செல்வன் படித்த பிறகு இதை விட வேறு என்ன எழுதியிருக்கப் போகிறார் என்று ஆரம்பித்தால் சிவகாமியின் சபதமும், அலை ஓசையும் ஒன்றை மற்றொன்று விஞ்சி விடும். முதலில் படிக்கும் போது சிவகாமியின் சபதம், அலை ஓசை இரண்டின் துன்பியல் கதைப்போக்கால் பிடிக்காமல் போயின. சின்ன வயதில் எல்லாமே நன்றாக முடியும் கதைகள்தான் பிடிக்கும. கதைப் போக்கைத் தெரிந்து கொண்டு சிவகாமியின், சீதாவின் வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகள் இல்லாமல் படிக்கும் போது மற்ற சிறப்புகள் தென்படும்.

படித்துக் கொண்டே சில நிமிடங்கள் கண்ணயர்வு. ஒன்பது மணிக்கு கடையைக் கட்டி வைத்து விட்டு, மனதையும் உடலையும் தூங்கப் போட்டால் விழிப்பு வரும் போது இரண்டு மணி. மூன்றேகால் வரை தூங்கிக் கொண்டேன். நேற்று பேருந்தில் நிமிர்ந்த நிலையிலேயே கண்களை மூடியிருக்கும் போது தூங்கினோமா இல்லையா என்று குழப்பம்தான். எப்படியோ, நாள் முழுதும் ஓரிரு நேரம் தவிர சோர்வோ பணியில் சுணக்கமோ இல்லைதான்.

புதிய தட்டச்சுப் பலகை பழகும் வரை வளமையான வேகத்தில் பாதிதான் கிடைக்கிறது. இந்த முறையில் விரல்களுக்கு வேலை குறைவு என்றாலும் எல்லோராலும் தகுதரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட அஞ்சல் தட்டச்சு முறை எங்கும் பரவலாகக் கிடைப்பதால் அதுதான் நிலைக்கும். ஆங்கிலத்தின் துவோராக் விசைப்பலகை போல தகுதி இருக்கிறது என்றாலும் பரவலான பயன்பாட்டுடன் போட்டி போட முடியாது. தமிழ்நெட் 99 என்று ஒரு அறிவியல் பூர்வமான தட்டச்சு முறையும் இருக்கிறது.

செவ்வாய், டிசம்பர் 12, 2006

மீண்டும் நாட்குறிப்புகளாக

நேற்றுக் காலையில் வாலாஜாவிலிருந்து சென்னைக்கு கிளம்ப வேண்டும். நிதானமாக ஐந்தரைக்கு எழுந்து, புறப்பட்டு பேருந்து நிலையத்துக்கு வரும் போது மணி ஏழு. எல்லா பேருந்துகளும் நிரம்பி உட்கார இருக்கை இல்லாமல் போய்க் கொண்டிருந்தன. சோம்பேறித் தனம் ஒழித்து அதிகாலையிலேயே கிளம்பியிருந்தால் தொல்லையில்லாமல் போய்ச் சேர்ந்திருக்கலாம்.

ஒரு அரை மணி நேரம் நின்று பார்த்துவிட்டு, எதிரிலிருந்த மூர்த்தி கஃபேயில் சாப்பிட்டு வந்தால் கூட்டம் குறைந்திருக்குமா என்று நினைத்தால் நேரம் போகப் போக கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

எட்டு மணி வாக்கில், ஏழெட்டு பேருந்துகளை விட்ட பிறகு 102 விரைவு வண்டியில் ஏறிக் கொண்டேன். நிற்கக் கூட இடத்துக்குப் போட்டி போட வேண்டியிருக்கும் நகரப்பேருந்து போலக் கூட்டம். வெள்ள கேட் வந்த பிறகு சிலர் இறங்க வசதியாக நின்று கொள்ள இடம் கிடைத்தது. பூந்தமல்லி வந்த பிறகுதான் இருக்கை கிடைத்தது.

எதிர்த் திசையில் பயணிக்கும் விபரங்கள் பழக கொஞ்ச நாளாகும். அதுவரை திண்டாட்டம்தான். போரூரில் சாலை நிறுத்தத்தில் இறங்கியதும் அருகிலேயே வளசரவாக்கம் போகும் நகரப்பேருந்து. அரை மணிநேரம் அலுவலக நேரம் தாண்டி தாமதம்.

ஒவ்வொருவரும் செய்து கொண்டிருந்த வேலைகளைக் கேட்டு விட்டு, பார்க்க வேண்டிய வாடிக்கையாளர் அலுவலகத்துக்குத் தொலைபேசினால், உடனேயே வந்தால் பார்க்கலாம் என்றார்கள்.

நெருங்கும் புயல் கொண்டு வந்திருந்த மழையினால் ஆற்காடு சாலையில் வண்டிகள் ஊர்ந்து கொண்டுதான் போக முடிந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்துப் போய்ச் சேர்ந்தால், சந்திக்க நிறைய பேர் சேர்ந்து விட்டிருந்தனர். மடிக் கணினியை சரி செய்யும் வேலையை முடித்து விடலாம் என்று மதியத்துக்கு மேல் வருவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

அப்படியே, ரயில் நிலையம் வழியாக அரசு மருத்துவமனை தாண்டி வரும்போது, சென்ற ஆண்டு புதுப்பித்திருந்த மருத்துவமனைக் கட்டிடம் அழகாகத் தெரிந்தது. முன்பெல்லாம், நிறம் மங்கி அழுது வடிந்து கொண்டு காட்சியளிக்கும் இந்தப் பகுதியில் வெளிப்பார்வையாவது மேம்பட்டிருக்கிறது. உள்ளே என்ன நிலை என்று உள்ளே போய்ப் பார்த்தால்தான் தெரியும்.

பல் மருத்துவமனை இருக்கும் முனையில் வலது புறம் திரும்பி, தீவுத் திடல் தொட்டுக் கொண்டு, துறைமுகம் வாசல் வழியாக ஆறு கடலில் கலக்கும் பாலத்தைக் கடந்தேன். இந்த இடத்தில் சாலையும் சரி, கடல் பரப்பும் சரி ஒரு பரந்த உணர்வைக் கொடுப்பவை. சேப்பாக்கம் மைதானம் அருகில் திரும்புவதைத் தவற விட்டு அடுத்த திருவல்லிக்கேணி நோக்கிய சாலையைப் பிடித்தேன். பெல்ஸ் சாலையில் கிரிக்கெட் மைதானத்துக்கு எதிரில் ஒரு தெருவில் குறுகிய சந்தில் எபிஎம் இன்ஃபோடெக்.

சென்னையில் மடிக்கணினி பழுது பார்த்தல், உதவிக் கருவிகள் விற்றல் வியாபாரத்தில் எனக்குத் தெரிந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிறுவனம். ஒரு சின்ன வீடு போன்ற இடத்தில். 'இப்போது நிறைய மடிக்கணினிகள் பெருகி விட்டனவே, கூட்டமாக இருக்கும்' என்று நினைத்தது சரியாக இருந்தது. ஆனால், இன்னும் ஏன் பெரிய அலுவலகம் மாறிப் போயிருக்கவில்லை என்றும் புரியவில்லை.

குறுகலான வரவேற்பறையில் நெரிசல். ஒவ்வொருவர் கையிலும் ஒரு மடிக்கணினி. பக்கத்து அறையில் கண்ணாடி வழியே உரிமையாளர் தெரிந்தார். முன்பெல்லாம், வரவேற்பறையில் இருக்கும் பெண் பதவி உயர்வு பெற்று உரிமையாளர் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்தார். வரவேற்பு மேசையில் ஒரு இளம்பெண் பதட்டம் இல்லாமல் எல்லோரையும் சமாளித்துக் கொண்டிருந்தாள். கூட்டத்தை அவதானித்தோ என்னவோ, இன்னும் இரண்டு பேர் வரவேற்பு வேலைக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் கையில் என் கணினி போனது.

மிக விபரமாக எல்லாக் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டார். செய்ய வேண்டிய வேலைக்கு மதிப்பிட்டு சொல்ல ஒரு நாள் ஆகும் என்று சொன்னவரிடம், மாலையிலேயே மதிப்பீடு வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். இடையில் கூட்டத்தில் சலசலப்பு. உரிமையாளரும் தன் அறையை விட்டு வரவேற்பறைக்கு வந்திருந்தார். அவரைப் பார்த்ததும், 'என்ன, நீங்க இங்கேயே இருக்கீங்க, இன்னும் இடம் மாத்தலையா' என்று கேட்டேன். பேசிக் கொண்டிருந்தவரை முடித்து விட்டு புதிய அலுவலகம் கட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல் சொன்னார்.

திருவல்லிக்கேணியில் புகழ் பெற்ற உணவு விடுதி பற்றி ஒரு ஆண்டுக்கு முந்தைய வலைப்பதிவர் சந்திப்புக் குறித்தக் கட்டுரையில் படித்திருந்தது நினைவில் இருந்தாலும், பெயர் மறந்து விட்டிருந்தது. ஒரு பழைய புத்தகக் கடையில் சில நிமிடங்கள் மேய்ந்து விட்டு, குத்து மதிப்பாக வண்டியைச் செலுத்தினால், ரத்னா கஃபே என்ற பெயர் தெரிந்தது. அங்கு சிறு உணவு என்று கிண்ணங்களில், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், இனிப்பு, மோர் என்று உடைத்தெறிந்து விட்டுக் கிளம்பினேன்.

இப்போது திரும்ப பெரியமேட்டுக்கு வந்த போது, கூட்டம் வடிந்து அவர் மதிய உணவை ஆரம்பித்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு கூப்பிட்டார். சந்திக்க வருபவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து பேச ஆரம்பித்து விடுவதால் ஏற்படும் தொல்லைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். பல வேலைகளை உதவியாளர்களிடம் விட மனம் வரவில்லை. தானே செய்தால்தான் நிறைவு. அடி நிலையிலிருந்து ஆரம்பித்து தொழில் செய்பவர்கள் பெரிதாக வளர்ந்த பிறகும் சில பணிகளை விட்டுக் கொடுக்க மனம் வருவதில்லை என்று தன்னுடைய குறையை ஏற்றுக் கொண்டார். இந்தப் பொருளிலும் நீண்ட நேரம் பேச உட்கார்ந்து விடுவது எப்படி என்று இரண்டு பேருக்குமே தோன்ற வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டேன். அடுத்த இரண்டு மாதங்களுக்கான திட்டங்களை மேற்கொள்ள ஒப்புதல் கொடுத்து விட்டிருந்தார்.

செய்ய வேண்டியது நிறைய இருப்பது போன்ற ஒரு உணர்வு. அலுவலகம் வந்த பிறகு நீஈண்ட ஒரு தொலைபேசி உரையாடல். மக்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலையில் இறங்கி விட்டிருந்தார்கள். மாலையில், சாப்பாடும் நடக்கவில்லை, ராணிப்பேட்டைக்குக் கிளம்புவதும் நடக்கவில்லை. இன்னொரு மடிக்கணினியில், சுசே 10.1 நிறுவ ஆரம்பித்து விட்டுத் தூங்கப் போய் விட்டு எழுந்தால், அதிகாலையில் முடித்து வைத்திருந்தார்கள். ஆழமான நான்கு மணி நேரத் தூக்கம், பல நாட்களுக்குப் பிறகு தொந்தரவும்.

எழுந்து, தமிழ் விசைப்பலகைகள், எழுத்துருக்கள் எல்லாம் நிறுவி விட்டு நாட்குறிப்பு ஆரம்பிக்கும் போது மணி மூன்று. அஞ்சல் உள்ளிடு முறைக்கு மேம்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகை என்ற முறை. இடையில் பயன்படுத்திக் கொண்டிருந்ததுதான். மறுபடியும் அஞ்சல் முறையில் பழகி விட்டு இதற்குத் தாவ விரல்களில் வேகம் பெரிதும் மட்டுப் பட்டு விட்டிருந்தது. இலவசக் கொத்தனார் கேட்டிருந்த லினக்சில் தமிழில் எழுத வழிக்கான கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் ஏற்கனவே இருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி ஒரு சிறு பதிவு வேண்டுமானால் போடலாம்.

ஒன்றரை ஆண்டுகளில் ஆறு வசிப்பிட மாறுதல்கள். கடைசி மாறுதலும் நடைமுறையை அசைத்துப் போட்டு விட திட்டமிட்டவை வாக்களித்தவை எல்லாம் நிறைவேறாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

ஞாயிறு, டிசம்பர் 10, 2006

வாழ்வும் சாவும்

புதன் கிழமை மதியம் வேலூரிலிருந்து வாணியம்பாடிக்கு திருப்பத்தூர் போகும் பேருந்தில். வாணியம்பாடிக்கு பத்தொன்பது ரூபாய் கட்டணம். கொஞ்ச தூரம் போன பிறகு பின் இருக்கையில் இருந்தவருக்கும் நடத்துனருக்கும் விவாதம் ஆரம்பித்தது.

'அம்பது ரூபா நோட்ட வாங்கிக் கிட்டு பத்து ரூபா சீட்டக் கொடுத்துட்டு, மூணு ரூவா சில்லறையை கொடுத்தா எப்படி? மீதியக் கொடு' என்று ஒவ்வொரு முறை நடத்துனர் அவர் அருகில் வரும் போது மெலிதான அழுகை கலந்த குரலில் முறையிட்டுக் கொண்டிருந்தார். கேட்கும் போது பயணியின் மீது கடுப்பு ஏற்பட்டது. ஏதோ விவாதத்தில் இறங்கியிருக்கிறார்கள். நடத்துனர் முறைத்துக் கொண்டு பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்.

'அப்படின்னா வண்டிய டிப்போவுக்கு விடு. திருப்பத்தூர் டிப்போவுல பார்த்துக்கலாம்' என்று சொல்கிறார்.

'சில்லறை த்தர முடியாது, என்ன செய்வே' இது நடத்துனர்.

தொணதொணப்பு தாங்க முடியாமல், கவனத்தைத் திருப்பினேன். வேலூர் மாவட்டத்தில் காணக் கிடைக்கும் காய்ந்து போன எலும்பு துருத்திய உடல் வாகு நடத்துனருக்கு. மிக இளைய வயது. வெயில் கருத்த மாநிறம். பயணியோ கொழுத்த வியாபாரி.

'உங்க சீட்டு இருபத்திமூன்று ரூபாயா, ஐம்பது ரூபாய் கொடுத்தீங்களா? மீதி எவ்வளவு கொடுத்தார்?' இது நான் பயணியிடம். 'அவசரப்படாதீங்க, கொடுக்காம எங்க போயிடுவார். அவர் பிரச்சனை அவருக்கு. நம்ம போல எத்தனை பேரைப் பார்க்கிறார் அவர். எதாவது டென்ஷனா இருப்பார்.'

'தர மாட்டேன்னு சொல்றார் சார்!'

நடத்துனரும் இன்னொரு பயணியிடம் சொதப்பிக் கொண்டிருந்தார். அவருக்கு ஏதோ குழப்பம்.

'23 ரூபா சீட்டு, பத்து ரூபா மூட்டைக்கு, மீதி மூணு ரூபாதான் கொடுத்தார், கேட்டா தர மாட்டேன் என்கிறார், யோவ், காசைக் கொடுத்துட்டுப் போய்யா!' திரும்பவும் ஆரம்பித்தார்.

'தர முடியாது, போ!'.

அடுத்த இருக்கையில் இருந்தவர் 'இது எல்லாரிடமும் நடக்கிறதுதாங்க. மூட்டைக்கு சீட்டு கொடுக்கணும். பேருக்கு பத்து ரூபா கொடுத்துட்டு மீதிக் காசை கண்டக்டர் எடுத்துக்கிடுவார், நீங்க மொத முறையா மூட்டை எடுத்துட்டு வரீங்களா, என்ன?'

எனக்குப் பிட்டுக் கொண்டது. 'என்ன, எதுக்கு கண்டக்டருக்குக் காசு. கொடுத்த சீட்டு போக மீதிக் காசைக் கொடுங்கய்யா!' அவரிடம் பதிலே இல்லை.

'ஏங்க, வெட்கமா இல்லை. இத விடப் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். அரசியல்வாதியையும் மந்திரியையும் குறை சொல்லி என்ன பலன்? நீங்க இப்படி நட்ந்து கொண்டா அவனும் உங்க கிட்ட இருந்து வாங்கத்தான் செய்வான். மீதியைக் கொடுய்யா'

முன் பக்கம் போனவர், திரும்பி வந்து 'அப்போ, இன்னும் பதிமூணரை ரூபாய்க்கு சீட்டப் புடி' என்று மீதிக் காசுக்கு சீட்டைக் கொடுத்து விட்டு நகர்ந்தார். பெரிய மூட்டைக்கு முழுச் சீட்டும் கொடுக்காமல், மீதிக் காசை பையில் போட நினைத்திருந்தார்.

'நீங்க சீட்ட வாங்கிக்கீங்க, அப்புறமா டிப்போல புகார் எழுதிக் கொடுங்க. நாங்க எல்லாம் வந்து கையெழுத்துப் போடுறோம்'

'எதுக்கு, நான்தான் சீட்டுக் கொடுத்துட்டேன்ல'

'எப்பய்யா கொடுத்தே. வெக்கமாயில்ல ஒனக்கு. தலை நிமிர்ந்து பேசுறயே! லஞ்சம் வாங்கறவனை எல்லாம் தெருவில் வைத்து கல்லால அடிப்பாங்க, அப்ப வரும் புத்தி ஒங்களுக்கு. சீட்ட கொடுத்துட்டாராம். வாயத் திறந்து பேசவே தகுதியில்லை உனக்கு'

இரண்டு வரிசை தாண்டி ஒரு காக்கிக் சட்டைக் காவலரும் உட்கார்ந்திருந்தார். 'காக்கிச் சட்டை போட்டவன் எல்லாம், அது கொள்ளை அடிக்க லைசன்சு என்று நினைக்கிறாங்க' என்று ஒரு வசனம் விடலாமா என்று நினைத்து, விட்டு விட்டேன்.

வெள்ளிக் கிழமை சாயங்காலம் போரூரில் பேருந்து ஏறப் போகும் போது எட்டு மணி. அழுக்கான துணிகளை எல்லாம் பையில் அடைத்து எடுத்துக் கொண்டேன். அங்கே போய் துவைப்பதாக ஏற்பாடு.

பழைய கணபதி ஸ்வீட்ஸ், இப்போதைய நந்தினி ஸ்வீட்ஸின் முன்பு வெளியே சாலைக்கு ஓடிக் கொண்டிருந்த கழிவு நீரை அழகாக ஓடை தோண்டி மறு பக்கம் திருப்பி மேலே பூசி விட்டிருந்தார்கள். அவர்களுக்கும் நல்லதுதான். கடைக்கு முன்னால் அசிங்கம் தவிர்க்கப்பட்டு விட்டது. உள்ளே போய் பாராட்டலாம் என்று போனதும், யாரிடமும் பேசாமல் அந்த நேரத்திலும், கொண்டைக் கடலை ஒரு தட்டு வாங்கிச் சாப்பிட்டு வாழ்த்தி விட்டுக் கிளம்பினேன்.

போரூரில் இரவு பத்து மணிக்கு மேல். வண்டி நிறுத்தத்தில் நட்பு காட்டினார் அங்கு இருக்கும் ஊழியர். நல்ல தூங்கி காலை ஆறு மணிக்குத்தான் எழுந்திருந்தேன் சனிக்கிழமை.

மெதுவாக பல் தேய்த்து, பொருட்களை அடுக்கி வைத்து, அலமாரி தட்டுகளில் பழைய செய்தித் தாள்களைப் போட்டு, துணி துவைத்துக் குளித்துப் புறப்பட்டேன். கையில் எடுத்து வந்திருந்தது 'Surely You are Joking Mr. Feynman' என்ற ரிச்சர்ட் ஃபெய்ன்மான் என்ற அமெரிக்க அறிவியலாளரின் புத்தகம். வெள்ளிக் கிழமை அமெரிக்க நூலகத்தில் இந்த நூல், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் மக்களாட்சிக்கு எதிரான கூறுகள் என்ற புத்தகம், சிறு தொழில் நடத்த முட்டாள்களுக்கு அறிவுரை என்ற dummy வரிசை புத்தகம், மோபி டிக் என்ற அமெரிக்க நாவல் எடுத்து வந்திருந்தேன்.

சம்பளப் பணம் வங்கியில் போயிருக்க புதுத் தெம்பு வந்து விட்டது போலிருந்தது. புதுக் கணினிகள், அலுவலக சீரமைப்பு என்று முடிக்கி விட்டிருந்தோம்.

நேற்று முழுவது ராணிப்பேட்டை, வேலூரில் செலவளிக்க முடிவு. இன்று ஞாயிற்றுக் கிழமையும் இங்கேயே தங்கி விட்டு திங்கள் அதிகாலையில் சென்னை பயணிக்கலாம். தேவைப்பட்டால் பகலிலேயே கிளம்பி இரவு அங்கே தங்கிக் கொள்ளலாம். திங்கள் சென்னையில், செவ்வாய் மறுபடியும் ராணிப்பேட்டையில்.

காலையில் சாப்பிட்டு விட்டு புறவழிப் பாதையில் ஒரு வேலையை முடித்து விட்டுத் திரும்பி வரும் போது வெளியூர் விரைவுப் பேருந்துகளே போகும், தொழிற்சாலைகள் மட்டும் இருக்கும் அந்த சாலையின் ஓரத்தில் வெயிலில் ஒரு பெண் உருவம் படுத்திருந்தது. பார்த்து மனதுக்குள் சலித்துக் கொண்டே கடந்து போய் விட்டேன். 'சாலையில் விழுந்து கிடப்பவரைக் கண்டும் யாரும் கண்டு கொள்ளாமல் போய் விட்டார்கள்.' என்ற சமூக ஓலங்கள் நினைவுக்கு வர, நாம் மட்டும் என்ன உத்தமம் என்று வண்டியை திருப்பினேன்.

'ஏம்மா, என்ன இங்கேயே படுத்திருக்கே.' மயங்கிக் கிடந்தால், இறங்கி எழுப்ப வேண்டி வருமோ.

அசைவு தெரிந்தது. 'எழுந்திரு, போய் நிழலில் படுத்துக்கோ, எப்படிப் போவே, வண்டியில ஏறிக்கோ முனையில கொண்டு விட்டு விடுகிறேன்'. பரட்டைத் தலை, முன் தூக்கிய சொத்தைப் பற்கள், கரிய உடல். புடவை பளபளப்பாகத் தெரிந்தது. 'பசிக்குதா, கடையில போய் ஏதாவது வாங்கித் தின்னு. இங்க்தான் எதுவுமே இல்லையே' ஒரு வழியாக எழுந்து பின் இருக்கையில் ஏறிக் கொண்டாள்.

எதிர்த் திசையில் போகச் சொல்லி, நடு வழியில் இறங்கிக் கொண்டாள். 'என்ன விஷயம், வீட்டில ஏதாவது சண்டையா?'. கொஞ்சம் அரைக் கிறுக்கு போலிருக்கிறது. யார்தான் இல்லை.

'நான் ஆரோக்கிய மேரி..' என்று ஆரம்பித்து போதக வாசகங்களைச் சொல்ல முயன்றாள். என் முகத்தைப் பார்த்துத் தொடரவில்லை. 'ஒரு ரெண்டு ரூபா காசு கொடேன். இட்லி வாங்கித் தின்பேன்'.

இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து விட்டு, இங்க கடை கூட இல்லையே என்று குழம்பி விட்டு, எப்படியாவது போ என்று கிளம்பி விட்டேன்.

மதிய உணவுக்குப் போய் விட்டுத் திரும்பும் போது சாலையிலிருந்து பிரியும் கிளைத் தெருவில் இரண்டுமூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பணியிடத்துக்குப் போகும் தெரு முனையில் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். நாமும் இந்த வண்டி இல்லா விட்டால் இது போலத்தானே நடப்போம், என்று அவரை வலிய அழைத்து ஏற்றிக் கொண்டேன். நான் போகும் இடத்தைத் தாண்டி இருக்கும் பணிமனைக்குப் போகிறார்.

'அங்க வேலை பார்க்கிறீங்களா? வீடு எங்கே?'. பேச்சில் தெளிவின்மையும், கிராமத்து நெடியும் தெரிந்தது. இந்த நேரத்தில் வேலைக்குப் போவது தொழிலாளியாகத்தான் இருக்க வேண்டும், காவல் சேவையில் இருக்கிறாரோ?

'செக்யூரிட்டியில் இருக்கிறேன்' என்று அவரே சொன்னார். நமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூட்டி அப்போது கிடைக்கும் தகவல்களுடன் சேர்த்தால் பெரும்பாலான நேரங்களில் சரியான முடிவுகளுக்கு வந்து விடலாம். அந்த கூட்டலுக்கும், பெருக்கலுக்கும் மனம் தயாராக இருக்க வேண்டும். தேவையில்லாத குழப்பங்களை நிரப்பிக் கொண்டால், அந்த வாடைதான் மிஞ்சும்.

மாலை ஆறு மணி வேலூர் அருகிலான வேலை முடித்துக் கிளம்பும் போது. வாலாஜாவில் சென்னை போகின்றவர்களை பேருந்து நிறுத்தத்தில் விட்டு விட்டுக் கிளம்பும் போது ஏழே கால் மணி. இணைய மையத்தில் புதிய பீட்டா பிளாக்கர் தொடர்பான வேலைகளை முடித்து விடலாமா அல்லது அறைக்குப் போய் புத்தகம் படிக்கலாமா என்றதில் பின்னது வென்றது.

வெள்ளிக் கிழமை கிளம்பும் அவசரத்தில் பீட்டா அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தேன். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உருவாக்கிய கணக்கு அதன் பிறகு இந்த ஆண்டு உருவாக்கிய கணக்கு என்று இரண்டு பிளாக்கர் கணக்குகள். பழைய கணக்கை வலைப்பதிவர் உதவிக் கூட்டுப் பதிப்பில் சேரும் போது பீட்டாவுக்கு மாற்றிக் கொண்டிருந்தேன். தமிழ் வலைப்பதிவுகள் இணைக்கப்பட்டிருந்த புதுக் கணக்கையும் அதிலேயே சேர்த்து விட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஒரு காலத்தில் இரண்டையும் தனித்தனியே வைத்திருக்க அவசியம் இருந்தாலும், இப்போது தேவையில்லை. புதிய பீட்டா நகர்வில், அதே கூகிள் கணக்குக்கு இணைத்து, இப்போது எல்லா வலைப்புக்களும் ஒரே மேசையில் கிடைத்து விட்டன.

வார்ப்புருவில் தமிழில் சேர்த்திருந்த மாறுதல்கள் எல்லாம் குப்பைகளாகி விட்டிருந்தன. அந்த மாறுதல்களைக் கொண்டு சேமிக்கப்பட்டிருந்த பதிவுகளில் குறிப்பிட்ட வாக்கியங்களும் சொதப்பியிருந்தன.

நேற்று கிடைத்த நேரத்தில், பழைய வார்ப்புருக்களைக் கைவிட்டு, புதியவற்றில் வார்த்துக் கொண்டது, கையால் செய்த மாறுதல்கள் எல்லாம் போய் சீரான வடிவமைப்புக் கிடைத்து விட்டது. தேவைப்படும் நிரல்களையும், தமிழாக்கங்களையும் சேர்க்க வேண்டியது மீதியிருக்கிறது.

அறைக்கு வந்து War and Peace தொடர்ந்தது. நெப்போலியனின் படைகள் மாஸ்கோவை ஆக்கிரமித்த பிறகு பீட்டர் பெசுகோவ் நகரை விட்டுப் போய் விடாமல், நாட்டுப்பற்று என்று நம்பிக் கொண்டு அங்கேயே இருக்கிறான். ஒரு கைகலப்பில் பிரெஞ்சு படைகளால் கைது செய்யப்பட்டு, படைமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டு செல்லப்படுகிறான். மனிதத்தை உரித்துப் போட்டு விட்டுச் செயல்படும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண் முன் நிறுத்தி விடுகிறார். இன்றைக்கு ஈராக்கில் அமெரிக்க படைகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதற்கு இது பொருந்தும்.

விசாரணைக்கு எட்டு பேரை கொலைக் களத்துக்குக் கூட்டிப்போகிறார்கள். பீட்டர் ஆறாவது. வேடிக்கைப் பார்க்க ரஷ்யர்களும் ஆக்கிரமிப்புப் படைகளின் வீரர்களுமான கூட்டம். சுடுவதற்கு சீருடை அணிந்த துப்பாக்கி வீரர்கள்.

இரண்டு இரண்டு பேராகச் சுடலாம் என்று முடிவு செய்யப்படுகிறது. முதலில் இருக்கும் ஐந்து பேரையும் மனிதப் பிறவிகளாகத் தனக்கே உரிய சொல்லாளுமையுடன் சித்தரித்து விட்டு, பீட்டரின் பார்வைக்குப் போகிறது கதை. முதல் இரண்டு பேரும் சுடப்படுகிறார்கள். முகத்தைத் திருப்பிக் கொண்ட பீட்டர், கம்பத்துக்கு அருகில் இருண்ட முகங்களுடன், பிரெஞ்சுப் படையினர் ஏதோ செய்வதைப் பார்க்கத் திரும்புகிறான். அப்புறம் அடுத்த இரண்டு பேர்.

கூட்டத்தில் எல்லோருமே பேயறைந்தது போல நிற்கிறார்கள். அந்தக் கொலையைச் செய்யும் படையினரும், அதிகாரிகளும் கூட அவமானத்துடன் செயல்படுகிறார்கள். அடுத்த இரண்டு பேரும் சுடப்படும் போதும், முகத்தைத் திருப்பிக் கொண்டு அதன் பிறகு நடப்பதைப் பார்க்கிறார் பீட்டர்.

அடுத்து, ஐந்தாவது ஆள் மட்டும் இட்டுச் செல்லப்படுகிறான். ஐந்து பேருக்குத்தான் மரண தண்டனை. மற்றவர்களுக்கு அதைப் பார்க்க மட்டும் தண்டனை என்று அப்போதுதான் புரிகிறது. ஐந்தாவது ஆள், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இளைஞன். அவனது ஒவ்வொரு அசைவையும், தலையைத் திருப்ப முடியாமல் பார்க்கிறான் பீட்டர். குண்டுகள் பறக்கின்றன. ஓடிப் போய் உடலின் அருகில் பார்க்கிறான்.

அவசர அவசரமாகக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து உடலை குழியில் தள்ளி மண்ணைப் போடுகிறார்கள். இன்னும் உடல் துடித்துக் கொண்டிருக்கும் போதே மண் மேல் விழ ஆரம்பித்து விடுகிறது.

அத்தோடு பீட்டரை இழுத்துப் போகிறார்கள். சுடுதலில் ஈடுபட்டிருந்த ஒரு படைவீரன், தள்ளாடி நடக்க முடியாமல் அங்கேயே சோர்ந்து விழுகிறான். அவனையும் அவன் தோழர்கள் இழுத்துப் போகிறார்கள்.

பீட்டர் அதிர்சியில் உறைந்து போய், மனித குலத்தின் மீதான நம்பிக்கையையே இழந்து விடுகிறான். அவனை போர்க் கைதிகளுக்கான முகாமுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு ஒரு குடியானவப் போர் வீரன் மூலம் வாழ்வின் பொருளை அறிந்து மெதுவாக நிலை பெறுகிறான்.

முன்பெல்லாம் படிக்கும் போது மேய்ந்து விட்டு, அவசர அவசரமாக பக்கங்களைத் தள்ளிக் கொண்டு போன பகுதிகளில் கூட ஒவ்வொரு வாக்கியத்தையும் அனுபவித்துப் படிக்க முடிகிறது.

வெள்ளி, டிசம்பர் 08, 2006

சேர்ந்தாரைக் கொல்லிகள் (061206)

இந்திரிய விஷயங்களை தியானிப்பதால் அவற்றின் மீது ஆசை உண்டாகிறது என்று ஆரம்பித்து கடைசியில் அழிவில் கொண்டு முடிக்கும் கீதை சூத்திரம் காந்தியின் எழுத்துக்களில் காணக் கிடைக்கும். எப்படி ஆரம்பித்து, என்றைக்கு ஆரம்பித்தது என்று தெரியவில்லை, பாம்பு/ஏணி ஆட்டத்தின் படிப் படியாக குட்டிகுட்டி பாம்புத் தலைகளை எல்லாம் தவிர்த்து மேலே ஏறி விட்டு, மேல் கட்டங்களில் நீளமான பாம்பின் வாயில் விழுந்து சர்ரென்று சறுக்கி கீழே போய் விட்டது போலப் படுகிறது.

அந்த விளையாட்டிலாவது, கீழே போய் விட்டோம் என்று உடனேயே தெரிந்து விடும். இங்கே விழிப்பு வராமலேயே, கீழே கீழே சறுக்கிக் கொண்டே இருக்கலாம். சாப்பாட்டின் மீது அதீத விருப்பம். குறிப்பிட்ட உணவு வகைகளை ஒதுக்கி விட்டாலும், ஆறு மாதங்களில் ஞானி ஆகி விட்டோம் என்று சகட்டு மேனிக்கு விதி விலக்குகள், மனம் போன போக்கில். ஆறு மணிக்குப் பிறகு சாப்பிட வேண்டாம் என்பதில் தளர்ச்சிகளே வழக்கமாகிப் போய் விடுகின்றன.

தூக்கத்தின் மீது பற்று. இரவில் எட்டு மணி நேரம் தூங்கி விட வேண்டும். பேருந்தில் தூங்கிக் கொள்ள வேண்டும். வேறு எப்போதாவடு சோர்வாக இருந்தாலும் தூங்கிக் கொள்ள வேண்டும் என்று தூக்கம்.

சாப்பாடும், தூக்கமும் சேர்ந்தாரைக் கொல்லிகளாக ஒட்டிக் கொண்டன. வெறுப்பும், கோபமும், எரிச்சலும் ஓங்கி, அன்பும் அமைதியும் மறைந்து விட்டன. பேசக் கூடாதவற்றையெல்லாம், நினைக்கக் கூடாதவற்றையெல்லாம் நினைக்கத் தூண்டுதல்கள். கோபம் என்னும் தன்னைச் சேர்ந்தவரை எரிக்கும் தீ எரிக்க ஆரம்பித்திருந்தது.

நம்மை நாமே வாட்டிக் கொள்ளக் கூடாது என்று சமாதானத்தில் எல்லாமே. எனக்கும் உரிமை இருக்கிறது, எனக்கும் தேவைகள் இருக்கின்றன என்று சைத்தானின் போதனைகள் தலை விரித்து ஆடுகின்றன. நேற்று இரவில் ஆழத்தையே தொட்டு விடப் பார்த்த எண்ண ஓட்டங்கள்.

எத்தனையோ பேரைத் தடுத்தாட் கொண்ட இறைவன்தான் உதவியிருக்க வேண்டும். பல நாட்களாகவே அகப்பட்டுக் கொண்டிருந்த கீழ் நோக்கிய சறுக்கலைத் தாங்க முடியாமல், விடை கிடைக்காமல் கிளம்பக் கூடாது என்று போரூரில் இருக்கும் பாலமுருகன் கோயில் வளாகத்தில் உட்கார்ந்து கொண்டேன். முதலில் இருபது நிமிடங்கள். அப்புறம் நாற்பது நிமிடங்கள். முழுவதும் முடியாமல் எழுந்து வந்து விட்டாலும் வழி என்னவோ தெரியத்தான் செய்கிறது.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தூங்கினால் போதும். சுவைக்குச் சாப்பிட்டு, உடலை வளர்த்து ஒளி பெறுவது என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. சாப்பாடு என்பது உயிர் வாழ்வதற்கானது. அதையே தியானித்து நாட்களைக் கடத்துவது பாவம். அதை நினைவில் இருத்த ஒரு நாள் உண்ணா விரதம். முஸ்லீம்களைப் போல தண்ணீர் கூடக் குடிக்காமல் ஒரு நாளைக் கழிக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு நாளாவது உணவை மறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நான்கு மணி நேரம் தூங்கினால் போதும். இரவு பத்து மணி முதல் அதிகாலை இரண்டு மணி வரைதான் தூக்கம். இரண்டு மணி முதல் காலை ஆறு மணி வரை எழுத வேண்டும். மற்ற நேரங்களில் தூக்கத்தை ஒதுக்க வேண்டும்.

மனதை வாட்டிய கேள்விகளுக்கு விடையாக, புதிதாகக் கிடைத்துள்ள எழுதும் கலையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதிகாலையில் கிடைக்கும் நேரத்தில் தினமும் கடந்த காலத்தை, உணர்ச்சிகளை கொட்டி எழுதி விட வேண்டும். மனதில் அடைத்து வைத்திருப்பது பொங்கி விழுவது தவிர்க்கவா முடியும். எல்லாவற்றையும் கொட்டி பாரத்தை இறக்கி விட வேண்டும்.

'ஏதாவது சந்தேகம் இருந்தால் எதுவும் செய்யாதே' என்பது ரஷ்ய குதுசோவின் தத்துவம். இதுதான் சரி என்று திட்டவட்டமாகப் படுபவற்றைத் தவிர்த்த பிறிதெல்லாமே நம் கையில் இல்லை. அப்படிப்பட்ட உறுதி இல்லாதவற்றைச் செய்வதைத் தவிர்த்து விட வேண்டும். ரஷ்யப் படைகளின் உயர்தளபதியாகப் பதவியேற்ற அந்த முதுபெரும் கிழவர், தனது மனதுக்குச் சரி என்று படுவதை மட்டும் செய்து போகிறார். பெரிய திட்டங்கள், புத்திசாலித்தனமான முடிவுகள் அவரது தலைமையில் கிடையாது.

அவரைப் பொறுத்தவரை தலைமை என்பது நடப்பவற்றுக்கு வழி விட்டு நிற்பதே. அவர் கையில் எதுவும் இல்லை. அவரது திட்டங்களினால் எதுவும் சாதித்து விட முடியாது. அவரால் கட்டுப்படுத்த முடியாத ஆயிரக் கணக்கான காரணிகளால் உருவாக்கப்படுபவை வரப் போகும் நிகழ்ச்சிகள். மனம் சொல்லும் அறிகுறிகளைப் படித்து வரப் போவதற்கு ஆயத்தமாக இருப்பதுதான் நமது கடமை.

அன்பு மறைந்து விடுகிறது. நேற்று முன்தினம் பொங்கிப் பாய்ந்த உணர்ச்சிகள் இன்னும் உள்ளே இருக்கின்றன என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. உடலும், மனமும், எண்ணங்களும் அவற்றை வளர்க்கும் பொருட்களும், செயல்களும் நமக்குச் சேவகர்களாக ஏற்படுத்தப்பட்டவை. நாம் அவற்றுக்கு அடிமையாகி விட்டால், உழற்சிதான் மிச்சம்.

எங்கிருந்து ஆரம்பித்தது என்று குறிப்புகளைப் படித்துப் பார்த்தால் தெரியும். நவம்பர் 25 வரை சரியாகத்தான் படுகிறது. கடந்த பத்து நாட்களில்தான் பின்னடைவுகள். நாளைத் திரும்பிப் பார்க்கும் இந்தப் பழக்கமும், காலை மாலையில் உள்ளே ஆழ்ந்து பார்க்கும் முயற்சிகளும், ஓரளவுக்கான விழிப்பை, தேவைப்படும்போது தட்டி எழுப்பி விடுதலைத் தந்து விட்டது நல்லது. இல்லையென்றால் எங்கு போய் முடிந்திருக்குமோ.

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்படல் வேண்டும் மண் பயனுற வேண்டும்.

தூயக் காற்று

"தூயக் காற்றும் நன்னீரும் சுண்டப் பசித்தப் பின்னுணவும் நோயை ஓட்டி விடுமப்பா, நூறு வயது தருமப்பா"

நூறு வயது வாழ வேண்டுமா? என்ற தலைப்பில் ஆரம்பப் பள்ளியில் படித்த செய்யுளில் ஒரு வரி அது. புதன் கிழமை அன்று நோன்பு மேற்கொண்டு, முந்தைய நாள் மாலை ஆறு மணிக்கு சாப்பிட்டிருந்ததற்கு பின்னர் தண்ணீர் கூடக் குடிக்காமல், அதிகாலையிலிருந்தே வேலைகளைத் தொடங்கி, வாலாஜா வந்து, ராணிப்பேட்டையில் இரண்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யப் போய், தொடர்ந்து வாணியம்பாடியில் இரண்டு நிறுவனங்களில் முடித்து திரும்பவும் வாலாஜா வந்து சேர்ந்தேன்.

நாக்கின் நுனி வரை கசப்பு நிரம்பி வழிந்தது. தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பதை விட சோர்வு குறைவாக இருந்தது. தூக்கத்திற்கு கேடு வேண்டாம் என்று அரை டஜன் வாழைப் பழங்கள் வாங்கி, அறைக்கு வந்ததும் ஒரு மடக்கு தண்ணீரும், சில பழங்களையும் சாப்பிட்டுத் தூங்கி விட்டேன். அதிகாலை எழுந்து பல் தேய்த்து மீதியிருந்த பழங்களைச் சாப்பிட்டு விட்டு எழுத உட்கார்ந்தால் கண்கள் சுழற்ற அப்படியே தூங்கி விட்டேன். எழுந்தால், வாய் முழுவதும் இன்னும் கசப்பு. தண்ணீர் சிறிது சிறிதாகக் குடித்து விட்டு காலைக் கடன்களை முடித்து குளித்ததும் விளக்குப் போட்டது போல உடலும் உள்ளமும் பளிச்சென்று ஆகி விட்டது.

திங்களிலிருந்து கலக்கிக் கொண்டிருந்த மனச் சோர்வு பறந்து புத்துணர்ச்சி உடலெங்கும், வயிற்றில் சுளீரென்று பசி. மூர்த்தீஸ் கஃபேயில் பொங்கல், நான்கு இட்லி - உறுதியாக வடைகளை மறுப்பு. வடை சாப்பிடுபவர்கள், பூரி சாப்பிடுபவர்கள்தாம் உணவு விடுதிகளுக்கு லாபம் அளிப்பவர்கள் என்று படுகிறது. வயிறு நிறைய சாப்பிட்டாலும் அவித்த, வேக வைத்த உணவு வகைகள் குறைந்த செலவைத்தான் வைக்கின்றன.

வேலூர் போவதற்கு சென்னையிலிருந்து வருபவர் வரும் வரைக் காத்திருக்க அருகிலிருந்த இணைய மையத்துக்குப் போனேன். அஞ்சலில், பண வரவு. வங்கியின் விபர அறிக்கையிலும் அதற்கான உறுதி விபரம். கணினிகளை மேம்படுத்திக் கொள்ளலாம். நிறைய நேரம் செலவிட முடியாமல், அலுவலக மின்னஞ்சல்களை மட்டும் பார்த்து விட்டுக் கிளம்பினேன். வண்டியில் பெட்ரோல் போட்டுக் கொண்டு இருபது கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம்.

குட்டிக் குட்டிக் காத்திருப்புகள். நீளமான உரையாடல்கள். நிறுவனத் தலைவரைக் கண்டால் ஒவ்வொருவரும் நடுங்குகிறார்கள். அவரது அறைக்குப் போனால் உட்காரக் கூட இருக்கை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். வெளியிலிருந்து போகும் நமக்கு உட்கார இடம் கிடைக்கும். அவர் மிகக் கூர்மையான ஆள், அவரிடம் பேசுவதற்கே கொஞ்சம் சரக்கு தேவை. இங்கே வேலை பார்க்கும் கணினி ஊழியர்களுக்கு அவ்வளவு போதாமல் அவருக்கு சலித்து விடுகிறது. நாங்கள் போனால், வேலையாகவும், பிற பொருட்களாகவும் ஓரிரு மணி நேரம் உட்கார்த்தி விடுவார்.

அந்த மதிப்பு நிறுவனம் முழுவதும். ஒவ்வொரு பிரிவிலும் போய் வேண்டிய விபரங்களை சேகரித்துக் கொண்டே, இடையில் ஒரு தேநீர், உணவு இடைவேளையில் உள்ளேயே உணவுக் கூடத்தில் சாப்பாடு என்று முடித்து விட்டு, சீக்கிரமாகவே கடைசி விவாதத்துக்குக் கூப்பிட்டு விட்டார். தெரிந்து கொண்ட விபரங்களை பட்டியலிட்டு விட்டு, வேலைக்குச் செலவு சில லட்சங்கள் ஆகும் என்று கோடு காட்டி விட்டேன். செயற்கையாக அதிர்ச்சி காட்டினார். சில ஆயிரங்களுக்குச் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்று ஆரம்பித்தார். நிச்சயமாக இருப்பார்கள், எங்களால் அது மாதிரி வேலை முடியாது.

மென்பொருள் உருவாக்கத்தில் மூன்று பண்புகளில் இரண்டை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்த விலை, நல்ல தரம், விரைவான வேலை இவற்றில் அனைத்தையும் பெற முயல்வது நடக்காது. விலை குறைவாக உயர் தரத்தில் வேண்டுமானால், நாள் இழுத்துக் கொண்டே போகும். விலையும் குறைவு, வேலை சீக்கிரம் முடிய வேண்டும் என்றால், தரம் அவ்வளவுதான். நல்ல தரத்தில் சரியான நேரத்தில் வேலை முடிய உயர்ந்த விலை கொடுத்துதான் தீர வேண்டும்.

விபரங்களை அனுப்புகிறோம், பார்த்து விட்டுச் சொல்லுங்கள் என்று முடித்துக் கொண்டோம். அப்புறமும் ஒரு மணி நேரம் வரை பேசிக் கொண்டிருந்து விட்டுப் பிரியா விடை கொடுத்தார்.

ராணிப்பேட்டையில் அரை அரை மணி நேரமாக அடுத்த இரு வாடிக்கையாளர்கள். ஆறு மணிக்கு சாப்பிட வலுக்கட்டாயமாக அழைத்துப் போனார். ஒரு பொதி சோளப் பொரியும், ஒரு பன்னும், நான் கேட்காமல் வந்த வடை கடலை கலவையில், வடையை எல்லாம் அவருக்கே தள்ளி விட்டு, மசாலா கலந்த வேக வைத்தக் கொண்டை கடலையும் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொண்டேன். அறைக்கு வந்து அன்றைக்கு செய்த வேலைக்கான ஆவணத்தை முடித்து விட்டு நண்பரை சென்னை போக பேருந்து நிறுத்தத்தில் விட்டு விட்டு நான் திரும்ப அறைக்கு வந்து விட்டேன்.

அதிகாலையில் சென்னைக்குக் கிளம்புவதாகத் திட்டம். எப்படியாயினும் பத்து மணிக்கு முன்னால் தூங்கி விட வேண்டும். எங்கு போனாலும் எட்டு மணிக்குள் வேலையை முடித்து விட்டால், சென்னை போயே தீர வேண்டும் என்று இல்லா விட்டால், தூக்கம் பாதிக்காது. இந்த இடத்தின் அமைதியும், மாசு பரவா காற்றும், குழாயில் கொட்டும் தண்ணீரும் அருமையானவை.

தூங்கி ஒரு மணி நேரத்தில், அமைதியாக்க மறந்து விட்டத் தொலைபேசி அலறியது. அரைகுறை மூளைச் செயல்பாட்டுடன் பேசி முடித்தேன். காலையில் மூன்று மணிக்கு விழிப்பு. நான்கு மணிக்கு பேருந்தைப் பிடிக்கப் போக வேண்டும். ஆறரை மணிக்கு இணையத்தில் ஒரு வேலை.

திங்கள், டிசம்பர் 04, 2006

அக்கா

காலையில் வீட்டுப் பொருட்களை புது இடத்தில் எடுத்துச் சென்ற போது உதவிக்கு வந்தவர்கள் ஒவ்வொன்றாக வெளியில் நின்றிருந்த வண்டியிலிருந்து எடுத்துக் கொண்டு வர, நான் வீட்டருகே நின்று கொண்டு வாங்கி வைத்துக் கொண்டிருந்தேன். இடத்தின் காவலாளியின் குடும்பம் அங்கேயே வசித்து வருகின்றது. இன்னொரு குடும்பமும் இருக்கிறது என்று நினைக்கிறேன். குஞ்சு குளுவான்களாக நான்கு ஆண் குழந்தைகள். ஒரு பதின்ம வயது தாவணி உடுத்த பெண் வீட்டில் பொறுப்பு ஏந்தி இருக்கிறாள்.

இந்தப் பையன்களில் உள்ளதில் சின்னது பொட்டுத் துணியில்லாமல், அங்கும் இங்கும் நடமாடுகிறான். முகத்தில் இருக்கும் கம்பீரம், கையைப் பின்னால் கட்டிக் கொண்டு ஏதேதோ நினைப்புகளுடன் நிற்காமல் உலாவிக் கொண்டே இருக்கிறான். இன்னும் இரண்டு பேர் அருகருகான வயது. மூத்தவன் சின்னவனை சீண்டி அழ வைக்கிறான். பொருட்கள் உள்ளே வர ஒரு பாத்திரத்தில் இருந்த பிஸ்கெட் பொதியை மூத்தவன் கையில் கொடுத்து தம்பியுடன் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறேன். அடுத்த சில நிமிடங்களில் அம்மணமாக நடை போடும் தலைவர் கையில் ஒரு பிஸ்கெட். அதை ரசித்து சுவைத்தபடியே தன்னுடைய நடையைத் தொடர்கிறார்.

இன்னொரு திசையிலிருந்து இன்னொரு பையன். மூத்த அண்ணனின் அதே வயது இருக்கும். வேறு வீடு என்று படுகிறது. இவர்கள் இரண்டு பேரும் விளையாடப் போய் விடுகிறார்கள். முகலிவாக்கத்தில் படிக்கிறோம் என்று சொன்னான் பையன். 'எப்படிடா, இங்கேருந்து போய் விட்டு வருவாய்', 'எங்க அப்பா, சைக்கிளில் கொண்டு விட்டு விட்டு வருவார்.'

பொருளைத் தூக்க வந்தவர்கள் இரண்டு பேருமே இங்கு கொத்தனார்களாக வேலை பார்ப்பவர்கள்தானாம். 'கொத்தானாருக்கு இருநூற்றம்பைது, பெரியாளுக்கு நூற்று அறுபது, சித்தாளுக்கு நூற்றிப் பத்து ரூபாய் சம்பளம், பன்னிரண்டு வருஷமா இந்த பில்டர்கிட்டதான் வேல பார்க்கிறோம்.'. வேலை செய்தால் சம்பளம். சனிக் கிழமை மாலையில் கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
இந்த கட்டிடக் காவலாளியின் மனைவியும் செங்கல் தூக்கி சித்தாள் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். பத்து இருபது வயதுகளை கூட்டிக் காட்டும் வறுமை, உழைப்பு. அந்தப் பெண் மகளா, உறவினர் பெண்ணா என்று தெரியவில்லை. இன்னும் பத்தோ பதினைந்தோ நாட்கள் அடைத்து வைத்திருக்கும் இடத்தில் கெட்டுப் போய் விடலாம் என்று இருந்த அரிசியையும் அவர்களுக்கே கொடுத்து விட்டேன்.

ஒரே நடையில் வந்து சேர்ந்து விட்டன எல்லாம். அறையினுள் வைக்கும் போது எல்லாவற்றையும் அடுக்கி முறையாக வைத்துக் கொண்டோம். காலையில் ஏழரை மணிக்கு ஆரம்பித்தது பத்தரைக்கு முழுவதும் முடிந்து விட்டது. ஆறு முறை வீடு மாற்றிய அனுபவத்தில், மாற்றம் என்றாலே ஒரு குடைச்சலான உணர்வு வயிற்றுக்குள். நேற்றைய மாற்றம் சிக்கல் இல்லாமல் முடிந்தது.

சொந்த பயன்பாட்டுப் பொருட்களை அலுவலக அறைக்குக் கொண்டு வைத்து விட்டு தாம்பரம் கிளம்பினோம். வண்டியை ஓட்டத் தெரியாமல் ஓட்டி, சில முறை வேகத் தடைகளில் அடிவாங்கி, காலையில் புகை போக்கிக் குழாய் உடைந்து விழுந்து விட்டிருந்தது. அதைக் கொண்டு போய் ஒட்டிக் கொண்டு வந்தாலும், சரிவரப் பொருந்தாமல் மாறுபட்ட ஓசை வந்தது, வண்டி ஓடும் போது.
உடனடியாக பராமரிப்புச் சேவைக்கு விட்டு விட வேண்டும் என்று கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

மதியம் நாஞ்சில் நாட்டு சாப்பாடு. புளுங்கல் அரிசிச் சோறும், தேங்காய் சேர்ந்த கறிகளும் நிறைத்தன. மதியத்துக்கு மேல் சிறிது நேரம் இணைய உலாவல். eகலப்பை நிறுவி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் நேரடியாக பின்னூட்டங்கள் இட முடிந்தது. கொஞ்சம் மெனக்கெட்டு, லினக்ஸிலும், இணைய உலாவியில், மற்ற பயன்பாட்டு மென்பொருட்களில் நேரடியாக தமிழில் தட்டச்சிட வகை செய்து கொள்ள வேண்டும்.

கைப்புள்ளையின் எழுத்து ஆரம்பத்திலிருந்தே எல்லோரையும் போல என்னையும் ஈர்த்த ஒன்று. பேருந்துகள் பற்றிய அவரது இரண்டு பதிவுகள், பொன்ஸின் நட்சத்திரப் பதிவுகள் என்று நேரம் போனது.

மாலையில் கிளம்பி கிழக்குத் தாம்பரத்துக்கு வந்து சேர்ந்தோம். திருக்கார்த்திகை திருநாள். இலைப்பணியாரம் என்று நாஞ்சில் நாட்டுப் பாணியில் செய்ய பூவரச இலை பறித்து வந்தார்கள். இடைக்கால தேநீர் பண்டங்களாக கடையில் பஜ்ஜியும், போண்டாவும், ஒரு கேக்கும் வாங்கி வரச் சொல்லி, போண்டா மட்டும் சாப்பிட்டுக் கொண்டேன். அதற்குள் இலைப்பணியாரமும் வந்து விட, போண்டாவை தவிர்த்திருக்கலாமே. அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு தொந்தரவு தரத்தான் செய்தது. உருளைக்கிழங்கு, கடலைமாவுப் பூச்சு, எண்ணெய்ச் சூட்டில் வெந்தது, மூன்றுமே பயங்கரமான சேர்க்கை.

அரையிருட்டுப் பொழுதில் கிளம்பி தாம்பரம் சானடோரியம் நோக்கிப் போகும் சாலையில் கடையில் பொருள் வாங்க நிறுத்திக் காத்திருந்த போது, இன்னொரு குழந்தைகள் காட்சி. புதுப் பாவாட உடுத்த பெரிய அக்கா, ஏழெட்டு வயதுக்கு மேல் இருக்காது. இடுப்பில் தூக்க முடியாமல், ஆனால் நச்சென்று வாகாக உட்கார்ந்திருக்கும் ஒரு அம்மணத் தம்பி. கையில் அதற்குப் பெரிய இன்னொரு அம்மணத் தம்பி. அருகில் தோழி.

கோயிலுக்கு அருகில் வாணவெடிகள் வெடிப்பதை வேடிக்கைப் பார்க்கிறார்கள். கவனமாகத் தெருவின் மறுபுறம் செல்கிறார்கள். ஏதோ பொட்டலம் வாங்கி தம்பிக்கு ஊட்டுகிறாள். அந்த நேரம் கோயிலில் ஒருவர் வாயில் போடும் பிரசாதம் கொடுக்க ஆரம்பிக்க தோழி ஓடிப் போய் வாங்கி வருகிறாள். இந்தப் பெண்ணுக்கு போக முடியவில்லை. கையில் பிடித்திருக்கும் தம்பிக்கும் சாப்பிட வேண்டும். 'நீயும் போய் வாங்கிக்கோயேன்டா' என்றால் 'அவன் போக மாட்டான்...' என்று பெரிய பெண்ணாக பரிந்து வருகிறாள் அந்தக் குட்டி அக்கா.

தோழிப் பெண்ணே பையனை உள்ளே கூட்டிப் போக, பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தவர், அவ்வளவு விரட்டாமல் பையனுக்கும் கொஞ்சம் கொடுத்து விடுகிறார். அப்புறம் எல்லோரும் பக்கவாட்டு வழியாகப் போய் விடுகிறார்கள்.

அக்கா/தம்பி உறவு வேறு எந்த உறவையும் விடத் தனித்தது. சில ஆண்டுகள் இடைவெளியில் தம்பி பிறந்ததும், தானும் தாயாகி விடுகிறாள் அந்தச் சிறு வயதிலேயே. தாய்/மகன் உறவில் இருக்கும் உணர்ச்சிகள் பற்றுதல்கள் இல்லாமல், பெண்மையின் கனிவின் முழுப் பரிமாணமும் வெளிப்படும் அக்காவின் தம்பியை நோக்கியக் கவனிப்பில். 'எப்படிக் கனக்கும், அவன் என் தம்பியல்லவா!' என்று ஒரு குட்டிப் பெண் சொன்னதாக ஒரு குட்டிக் கதையில் படித்தேன்.

அண்ணன் தங்கை உறவில் இத்தனை முழுமை இருக்காது. அக்காவின் தம்பிப் பாசத்தில் அம்மாக் குட்டிப் பாப்பாவிடம் காண்பித்த முழு மனத்திலான அன்பும், பற்றும் பிரதிபலிக்கும். அண்ணனுக்கு தங்கையின் பேரில் இந்த வாய்ப்பு இல்லை.

பெண்களுக்கு விடுதலை என்பது ஒவ்வொரு அம்மாவின் கையில் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தனக்குப் பிறக்கும் பெண் குழந்தையை ஆண் குழந்தைக்கு நிகராக, இம்மியளவும் குறைவில்லாமல், நேசித்தால் அந்த நேசிப்பு அந்தக் குழந்தைக்கும், தன் தாயைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் ஆண் குழந்தைகளுக்கும் தானாகப் பரவி விடும். ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆசிரியர் தாய்தானே! கொடுங்கோலனாக, பெண்ணை ஒடுக்குபவனாக வாழும் ஒவ்வொரு ஆணுக்கும் எங்கிருந்து அந்த ஆரம்ப விதைகள் கிடைத்தன? தந்தையின் நடத்தை பெரும் காரணம் என்றாலும் அந்தத் தந்தையும் ஒரு தாயின் மகன்தானே!

இதமான கார்த்திகை மாத மாலைக் காற்றில் இரண்டு சக்கர வண்டியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகளில் போவது நன்றாக இருக்கிறது. அலுவலகம் வந்து கைகால்கள் கழுவி விட்டு, போண்டாவுக்குச் சமாதானமாக மாலைச் சிற்றுண்டியை நேரம் தவறியும் சாப்பிட்டு விட்டு. எட்டரை மணி சந்திப்புக்குக் காத்திருந்தால் அது நடக்கவே இல்லை. ஒன்பதரை மணிக்கு கோயம்பேடு பேருந்து நிறுத்தம் நோக்கிப் புறப்பட்டு வடபழனி பேருந்து நிலையம் அருகில் அடையாறு ஆனந்த பவனுக்கு எதிரில் இன்னொரு காத்திருப்பு.

இங்கு அம்மணக் குழந்தைகள் யாரும் இல்லை. ஒரு தேநீர்க் கடை. பேருந்து நிலையத்திலிருந்து, அதை நோக்கி பலவிதமான ஆண்கள், பெண்கள். சற்றுத் தள்ளி ஹோட்டல் சுதா என்று ஒரு உணவு விடுதி, மேலே தங்குமிடம். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் பேச அதைத் தேர்ந்தெடுத்து, ஆளுக்கொரு காஃபியுடன் ஒரு மணி நேரத்துக்கு மேல் மடிப்புக் கணினி பிரித்து உட்கார்ந்திருந்தது, மேலாளர் ஒரு கட்டத்துக்கு மேல் கடுப்பாகித் துரத்தி விட்டது. உட்லேண்ட்ஸ் போல எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் என்று எல்லா இடங்களிலும் வேகாதுதான்.

கிணற்றுக்குள் தவளை, வெளியில் போய் வந்த தவளையிடம் தன்னளவில் ஒப்பீடுகளைக் காட்டி உருவகம் சொன்ன கதை போல, நமக்குத் தெரிந்த நிலையில் உருவகங்களை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதுவுமே உறுதியில்லை, குழப்பங்கள்தாம் இயற்கை, அதிலிருந்து ஒழுங்கு கொண்டு வர உழைத்தால்தான் நடக்கும் என்பது மட்டும்தான் உறுதி. மற்றது எல்லாம் தேவைக்கேற்றபடி மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

'பத்து ஆண்டுகளுக்கு முன்பு சரி என்று தோன்றியவை, இன்று முட்டாள்தனமாகப் படுகின்றன' என்பது எல்லோருக்குமே ஒரு சிலவற்றிலாவது பொருந்துகிறது. பெரிய பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் முப்பது வயதுக்குள் நடப்பவைதானாம். குறிப்பிட்ட வயது தாண்டி விட்டால், எண்ணங்கள் உறைந்து விடுகின்றன. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற உறைதல் வந்து விட, புதியக் கட்டுடைப்புகள் இல்லாமல் போய் விடுகின்றன.

'நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்த உயரமான மரத்தின் உச்சியில் ஏறி விட்டால் சொர்க்கத்தைப் பார்த்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தேன். இப்போது பெரியவனாகி நிறையப் படித்து, மரத்தின் உச்சியில் இலைதான் இருக்கிறது, சொர்க்கம் அங்கு தெரியாது என்று தெரிந்து கொண்டு விட்டேன். எனக்கு அறிவு கிடைத்து விட்டது. ஆனால், அன்று இருந்த நம்பிக்கை, மகிழ்ச்சி மறைந்து விட்டது'

அறியாமையே பேரின்பம் என்பது ஆங்கிலப் பழமொழி. அறிந்ததனின்றும் விடுதலை என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இன்னும் பொருள் பொதியச் சொல்லி விடுவார். அறியாமை என்றால் அறிவு இன்மை, அறிந்ததினின்றும் விடுதலை என்றால், திரட்டிய அறிவு நம்மைக் கட்டிப் போட்டு விடாமல் விட்டு விடுதலையாகி நிற்பது. அதுதான் அறியாமை தரும் பேரின்பத்தை அடையும் வழி.

கற்றதைச் செரித்துக் கொண்டால் அதில் கட்டுண்டு கிடக்க மாட்டோம்.