நேரம் நான்கு மணி 21 நிமிடங்கள். நேற்றைக்குக் காலையில் ஐந்து மணி வாக்கில் எழுந்து எழுத ஆரம்பித்தேன். முந்தைய நாள் நன்கு சாப்பிட்டு விட்டு வந்த மந்த உறக்கத்துக்குப் பிறகான விழிப்பு. சுறுசுறுப்பாக எழுதுவதில் உட்கார்ந்து விட்டேன். வேகவேகமாக முந்தைய நாள் நிகழ்ச்சிகளை எழுதிக் கொண்டே போனால் நிறைய எழுதி விட்டேன். ஒரு மணி நேரத்தில் இது வரை அதிகம் எழுதிய நாள் என்று சொல்லலாம். ஒரு நிமிடத்துக்கு 30 சொற்களை விட கூடுதல் வேகத்தில் எழுதியிருந்தேன்.
எழுதி முடித்த பிறகு தரை தூத்து, துடைக்க வேண்டும். குப்பை வெளியில் போட்டு விட்டு, ஒரு வாளி குடிதண்ணீர் எடுத்து வந்தேன். குடிதண்ணீர் ஒரு பாத்திரம் நிறையக் கொதிக்க வைத்துக் கொண்டேன். தரை நேற்றைக்குத்தானே துடைத்தோம். மீண்டும் துடைக்க வேண்டுமா என்று எட்டிப்பார்த்த சாக்கை புறக்கணித்து ஒதுங்க வைத்தேன். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆயின. சிதறிக் கிடந்த விளையாட்டுப் பொருட்கள், நாளிதழ்கள், புத்தகங்கள் இவற்றை அடுக்கி வைத்து, குப்பைகளை பொறுக்கி இன்னொரு பையில் நிரப்பி வெளியில் போட்டேன்.
தரை துடைப்பதற்கு 15 நிமிடங்கள் கூட ஆவதில்லை. தினமும் கூடச் செய்யலாம். தரை துடைப்பதோடு, கதவுகள், குளியலறை சுவர்கள், பொருட்கள் வைக்கும் அலமாரிகள் இவற்றையும் சீர்படுத்த வேண்டும். இன்றைக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தால் அதையும் செய்யலாம். இதை எழுதி முடிக்கும் போது ஐந்தரை மணி ஆகியிருக்கும். தூத்து, பாத்திரக் கழுவி, ஊற வைத்திருக்கும் துணிகளை அலசிப் போட்டு விட்டுக் குளித்து தியானம் செய்து தயாராகும் போது 7 மணி ஆகி விடும். 8 மணிக்கு அலுவலகத்துக்குப் போக வேண்டும். கூடுதல் வேலை எதற்கும் நேரம் இருக்காதுதான்.
நேற்றைக்கும் பாத்திரங்கள் நிறையக் குவிந்திருந்தன. தண்ணீர் குடித்த டம்ளர்கள், சின்னக் கரண்டிகள் தலா ஏழெட்டுக்குக் குறையாமல் கிடந்தன. தோசைக்கல், காய் வெட்டும் பலகை, சப்பாத்தி போடும் பலகை, உலர் அரவை பாத்திரம் என்று ஒவ்வொன்றாகக் கழுவி கழுவும் இடத்தையும் தேய்த்து விட்டேன். அதன் பிறகு குளியல். மூன்று நாள் தாடிக்கு முகம் மழிப்பு இரண்டு முறை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் வாளிகளில் தண்ணீர் நிரம்ப விட்டிருந்து நிறைவாகக் குளித்துக் கொண்டேன். குளித்து முடிக்கும் போது ஏழு இருபத்தைந்து மணி. 'சரியாக திட்டமிட்ட நேரத்தில் எழுந்திருந்தால் இப்போது ஆறே முக்கால்தான் ஆகியிருக்கும். தியானம் முடித்து விட்டு ஏதாவது உணவு தயாரித்து சாப்பிட்டு விட்டுப் போகச் சரியாக இருக்கும்' என்று நினைத்துக் கொண்டேன்.
தியானத்தில் உட்கார்ந்து 3-4 நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து கொண்டேன். 'எதற்கு இங்கு உட்கார்ந்து சமைத்துக் கொண்டிருக்கிறோம். பேசாமல் வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம்' என்று ஒரு எண்ணம் எட்டிப் பார்த்தது. 'அப்படி என்னதான் சாப்பிடக் கிடைக்கும்' என்று அதை ஒதுக்கி விட்டு உப்புமா செய்ய ஆரம்பித்தேன். நான்கைந்து நாட்களுக்கு முன்பு வெட்டி விட்டு மீதி வைத்திருந்த அரை வெங்காயம் இருந்தது. முந்தைய நாள் வாங்கிய தேங்காய் இருந்தது. பாட்டிலில் நிறைய ரவை இருந்தது. முதலில் வெங்காயத்தை வெட்டி வைத்து விட்டு, சட்டியை சூடாக்கி, ஒரு கரண்டி போல எண்ணைய் ஊற்றி, ஒரே ஒரு சின்ன உழக்கு தலை தப்ப ரவையைப் போட்டேன். வழக்கமாக போதாமல் போய் விடுமோ என்று கொஞ்சம் அதிகமாகவே செய்வது வழக்கம்.
ரவையை ஓரிரு நிமிடங்கள் வறுத்து சூடாக்கி விட்டு தட்டில் கொட்டிக் கொண்டேன். அதே சட்டியில், அதே அடுப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு அவை வறுபட்டதும், வெட்டி வைத்திருந்த வெங்காயம். இதற்கிடையில் காதி நிலையத்திலிருந்து வாங்கி வைத்திருந்த துளசி பொடி அரை கரண்டியை ஒரு டம்ளர் வெது வெது நீரில் போட்டுக்குடித்துக் கொண்டேன். சாப்பிடும் முன்பு குடிக்க வேண்டும் என்று போட்டிருந்தார்கள். வெங்காயமும் வறுபட்டதும், ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க விட்டேன்.
தண்ணீர் கொதித்ததும், வறுத்து வைத்திருந்த ரவையை போட்டுக் கிளற ஆரம்பித்தேன். தண்ணீரும் அளவோடு வைத்திருந்ததால், அதிகம் கொழகொழவென்று ஆகி விடாமல், அழகாக மென்மையாக சுருண்டு வந்தது. ஓரிரு நிமிடங்களில் நல்ல மணமாக, பார்க்கவும் சுவையாக, ஆனால் அளவில் ஒரு ஆளுக்கு மட்டும் போதுமானதாக உப்புமா தயாராகி விட்டது. கொஞ்ச நேரம் நாளிதழ் படித்துக் கொண்டிருந்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன். சரியாக 15 நிமிடங்கள்தான் ஆகியிருந்தது. சாப்பிடும் போது இன்னொரு டம்ளரில் மீதியிருந்த காபி தூளைப் போட்டு சர்க்கரையும் சேர்த்து எடுத்துக் கொண்டேன். மீதி இருந்த காரச் சேவுகள் சிலவும் துணைக்கு.
சாப்பிட்டு முடித்து, உடை மாற்றி விட்டு, துவைத்து வைத்திருந்த சட்டைகளை தேய்ப்பதற்கு ஒரு பையில் அடைத்து எடுத்துக்கொண்டேன். பெரிய பையை கடையில் கொடுத்திருந்தேன். இந்தப் பையில் கிட்டத்தட்ட 10 துணிகளை திணித்துதான் வைக்க முடிந்தது. துணிப்பையையும், கணினிப் பையையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஸ்கூட்டியின் வெளிப்பகுதிகளை தூசி துடைத்து விட்டுப் புறப்பட்டேன். திருவள்ளுவர் சாலையில் திரும்பும் போது 18E பேருந்து எதிரில் வந்து மணப்பாக்கம் நோக்கிப் போனது. அரசமர சந்திப்பைத் தாண்டும் போது ஆற்காடு சாலையிலிருந்து M49R தடமும் வந்தது. இந்தப் பேருந்துகள் வந்தால் எல்லாம் சேர்ந்து ஒரே நேரத்தில் வருவது. இல்லை என்றால் அரை மணி நேரம் காத்திருந்தாலும் எதுவும் கிடைப்பதில்லை.
திங்கள் கிழமை வாகன நெரிசல்கள் பெரிதாக இல்லைதான். துணி தேய்க்கும் கடையில் ஏற்கனவே கொடுத்திருந்த 3 சட்டைகளை தேய்த்து முடித்திருந்தார். இந்தப் பையையும் கொடுத்து விட்டுச் சீக்கிரம் செய்து தரும்படிக் கேட்டுக் கொண்டேன். அலுவலகம் போய்ச் சேர்ந்து பார்த்தால் ஏற்கனவே வந்து காத்திருந்தார். அரை மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டாராம். கதவைத் திறந்து விட்டு, கணினியை இணைத்து மின் வழங்கியையும் ஓட விட்டேன். சேவை வரி கட்டுவது, மின்கட்டணம் கட்டுவது இரண்டும் இன்றைக்குச் செய்து விட வேண்டும். அலுவலக வாடகை, சாப்பாட்டுக்கான தொகை, தொலைபேசி கட்டணங்கள் என்றும் கட்ட வேண்டும்.
மின்னஞ்சலில் மூன்று நாட்களுக்கான கூகிள் அலர்ட்ஸ் இருந்தன. தோல் குறித்த செய்திகளைத் தாங்கி வரும் அந்த மின்னஞ்சலில் இருந்த சுட்டிகளைப் போய்ப் பார்த்து தோல் தொழில் துறைக்கு தொடர்பான செய்திகளை விவாதக் களத்தில் தொகுத்துப் போட்டேன். கிட்டத்தட்ட கடந்த 10 நாட்களாக நாள்தோறும் நான்கைந்து உள்ளீடுகள் செய்து வருகிறேன். ஓரிரு மாதங்களில் முழுமையாக புத்துயிர் கிடைத்து விடும். வாரத் திட்டமிடலுக்கான விரிதாளை தயார் செய்து கொண்டு விட்டு, இன்றைய பணிகளையும் குறித்துக் கொண்டே வந்தேன்.
10 மணிக்குப் பேசுவதாக ஏற்பாடு செய்து கொண்டேன். ஒவ்வொருவரும் எப்போது நிறுவனத்தில் சேர்ந்தார்கள், ஆரம்ப சம்பளம் எவ்வளவு, இது வரை மொத்தம் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்கள், சம்பளப் பாக்கி எவ்வளவு, கூடுதல் தொகை எவ்வளவு தர வேண்டும், இப்போதைய சம்பளம், ஆறு மாதங்களில் என்ன நிலைக்கு முன்னேறியிருக்க வேண்டும், அடுத்த ஏப்ரலில் என்ன நிலையை அடைந்திருக்க வேண்டும் ஒன்று விபரப் பட்டியல் ஒன்றை தயாரித்தேன்.நாளின் பல நேர இடைவெளிகளில் கிட்டத்தட்ட எல்லோரது விபரங்களையும் நிரப்பிக் கொண்டேன்.
அந்த விபரங்களைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் தயாரித்துக் கொடுத்து விட வேண்டும். என்ன மாதிரி பொறுப்புகளை ஒவ்வொருத்தரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும். வெள்ளிக் கிழமை செய்து முடித்திருந்த பணிகளை சோதனை செய்து நிரல் தொகுப்பில் சேர்க்கும் பணிகளையும் தொடர்ந்தேன். பேச உட்கார்ந்தால் மிகவும் சோர்ந்து போயிருந்தார். நான் சொல்வதை எல்லாம் கேட்டு விட்டு, 'எனக்கும் 1 மாதம் இடைவெளி கொடுத்து விடுங்கள்' என்கிறார். 'அப்படி விட்டு விடுவதால் நிலைமை மேம்பட்டு விடாது. நம்முடைய கடமையை நாம்தான் செய்ய வேண்டும். நமக்கு இருக்கும் பொறுப்புகள் ஒரு டஜன் இருக்கலாம். ஒரு பட்டியல் போட்டு வைத்து ஒவ்வொன்றாக முடிப்பதுதான் அறிவுடமை. எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு மலைத்துக் கொண்டே இருந்தால் ஒரு முடிவே கிடைக்காது'
நிறுவனத்துக்கு 11.30க்குப் போக வேண்டும் என்று வந்தார். கூட வருகிறாரா என்று கேள்வி. தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவரை கூப்பிட்டுக் கேட்டதில் அவரும் புறப்பட்டு விட்டார். இவரது விற்பனை அணுகு முறை நன்றாக இருக்கிறது. உற்சாகமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.
இஷ்யூ டிராக்கரில் வாடிக்கையாளர் பயன்படுத்துவதற்கான கணக்கு விபரங்களைக் குறித்து மின்னஞ்சல் அனுப்பி விட்டேன். 12 மணிக்கு வாராந்திர குழுவினர் சந்திப்பு. 8 பேர் வாரத் திட்டம் தயாரித்து அனுப்பியிருந்தார்கள். மூன்று பேரும் விடுமுறையில். நான் முழு உற்சாகத்தில் இருந்தேன். என்னுடைய திட்டங்களைப் படித்துக் காட்டினேன். ஒவ்வொருவரும் படிக்கும் போது அதில் சந்தேகங்களைக் கேட்டு சொல்ல வேண்டிய கருத்துக்களையும் முனைப்பாகச் சொல்லிக் கொண்டே வந்தேன். நான் நினைத்து போலவே என்னிலிருந்துதான் எல்லாம் உருவாகி ஓட வேண்டும். விவாதங்களும் சீக்கிரமாக முடிந்து விட்டன. கடிதத்தில் மாற்றங்கள் செய்து கொடுத்து விட்டேன்.
அதன் பிறகு சாப்பாடு. சோறு, சாம்பார், கொஞ்சம் அடர் நிறத்தில் காலிஃபிளவர் கூட்டு ஒன்று, பீட்ரூட் சீவிய பொரியல் ஒன்று. சாப்பிடும் போது ரீடிஃப் டாட் காம் தளத்தில் சோவின் பேட்டி. 'பாஜக 170 இடங்களுக்கு மேல் பிடித்து விட்டால் அவர்கள் மதச்சார்பில்லாத கட்சி ஆகி விடுவார்கள்' என்று தலைப்பு. அந்த நிலைமையில் மற்ற கட்சிகள் அவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து விடுவார்களாம். இன்னொரு அரசியலமைப்புச் சட்ட வல்லுனரின் பேட்டி. ஒன்றே காலுக்கு இது எல்லாம் முடிந்து விட்டது.
பயன்பாட்டில் சொல்லியிருந்த பிழைகளைப் பார்ப்பதற்கு ஒரு மாதிரி தளத்தை தயாரித்துத் தரும் படிக் கேட்டிருந்தேன். போட்டுப் பார்த்தால், பெரிய அளவில் பிழைகள் எதுவும் இல்லை. தானே சரி செய்து கொடுத்து விடுவதாக சொல்லியிருந்தார்.அறிக்கை ஒன்றுக்கான வடிவமைப்பு, விற்பனை பணிகளை ஒருங்கிணைக்கும் படி நமது இஷ்யூ டிராக்கரை மாற்றி அமைப்பதற்கான வடிவமைப்பு இவற்றைப் போட்டேன். தொடர்ந்து இஷ்யூ டிராக்கரை அழகுபடுத்தும் பணி.
இதற்குள் வந்து விட்டார்கள். விவாதம் நன்கு போனதாம். மிகவும் நிறைவாக இருந்தார். மேல் விபரங்களையும் விலையையும் குறிப்பிட்டு ஆவணம் சமர்ப்பிக்கும்படி கேட்டிருக்கிறார்களாம். ஒரு வாரச் செலவையும் சிஎல்ஈ உறுப்பினர் கையேடு வாங்கிய செலவையும் ஒரு காசோலையாகக் கொடுத்து விட்டோம்.
உட்கார்ந்து அனுப்ப வேண்டிய proforma invoice விபரங்களை முடிவு செய்து அதை அச்செடுத்து அனுப்பச் சொன்னேன். உடனேயே அச்செடுத்துக் கொடுத்து விட்டார். அதை மின்வருடியில் மென்வடிவாக்கி மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலைதான். ஆனாலும் நிறுவன கடிதப் படிவத்தில் அச்செடுக்க வேண்டும் என்று அப்படியே செய்து கொண்டோம்.
பக்க வடிவமைப்பு, பின்னணி நிறங்கள், எழுத்துரு நிறங்கள், அளவுகள், வகைகள், தேவையில்லாத நிரல்களை நீக்குதல் என்று அடுத்த 2 மணி நேரம் நிறுவன உள்பணி பயன்பாட்டு மேம்பாட்டில் இறங்கி விட்டேன். இடையில் போய் ஆற்காடு சாலையில் முனையில் இருக்கும் மருந்துக் கடையில் குளுகோன்-டி ஆரஞ்சு சுவை ஊட்டியதை வாங்கி வந்தேன். அதை ஒரு பெரிய குடிதண்ணீர் கெட்டிலில் கரைத்து எல்லோருக்கும் ஆளுக்கொரு கப். நான் இரண்டு கப் குடித்துக் கொண்டேன். வெயில் வேளையில் பிற்பகலில் இப்படி ஒரு ஊக்க பானம் குடித்தால் நன்றாகத்தான் இருக்கிறது.
ஐந்தரை மணி வாக்கில் மீண்டும் சார் வந்தார். அடுத்த திங்கள் கிழமை வரச் சொல்லியிருக்கிறாராம். அதை சொல்வதற்கு உற்சாகமாக வந்திருந்தார். அவருக்கும் கொஞ்சம் உற்சாகம் அதிகமாகவே வந்திருக்கிறது. சளைக்காமல் தொலைபேசியில் பேசுகிறார். போய் வாடிக்கையாளர்களை சந்திக்கிறார். விற்பனை, சந்தைப்படுத்தலுக்குத் தேவையான குணங்கள் நிறைய இருக்கின்றன. கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.
இன்றைக்கு நேற்றை விட வேகம் கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் 30 சொற்கள் வீதம் ஏறக்குறைய போய்க் கொண்டிருக்கிறது. அழைத்துக் கொண்டு ஒரு காபி சாப்பிடப் போகலாம் என்று கிளம்பினேன். அவரது இரு சக்கர வண்டியிலேயே போகலாம் என்று எடுத்து விட்டார். டாடா உடுப்பி விடுதியில் போய் முதலில் ஒரு தட்டு போண்டா. மூன்றில் ஒன்றை நான் பகிர்ந்து கொண்டேன். அதைத் தொடர்ந்து ஒரு தோசையும் சொல்லிக் கொண்டேன். காஃபி சொன்னால் 15 நிமிடங்கள் ஆகும் என்றார்கள். அப்போதுதான் பால் கவரிலிருந்து வெட்டி சூடாக்குகிறார்களாம். கடைக்குள் வெக்கை அதிகமாக இருந்தது. காத்திருந்து காஃபி குடித்து விட்டுதான் வெளியில் வந்தோம்.
அலுவலகத்துக்கு வந்து எனது பணியைத் தொடர்ந்தேன். செவ்வாய்க்கிழமை ராணிப்பேட்டை போவதாக இருந்த திட்டத்தை மாற்றியமைத்து வியாழக்கிழமை என்று தகவல் சொல்லி விட்டேன். இன்றைக்குக் காலையில் 8 மணி சந்திப்பில் திட்டமிடலை தொடர்ந்து செய்யலாம். மாலையில் தொடர்ந்து கோப்புகளை மாற்றி நிரல் தொகுப்பில் சேர்த்து விட்டேன். எட்டு மணிக்கு எல்லோரும் புறப்பட ஆரம்பித்தார்கள். நான் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகளை வலைப்பதிவில் சேர்க்க ஆரம்பித்தேன். 11ம் தேதி, 10ம் தேதி, 9ம் தேதி இரண்டு - ஒன்று மிகவும் நீளமானது, 8ம் தேதி, 7ம் தேதி என்று ஒவ்வொன்றாக அந்தந்த தேதியில் சேர்த்தேன். எதை விடுவது, எதை நீக்குவது என்பது கொஞ்சம் திண்டாட்டமான தேர்வுகள்தான். 9ம் தேதி எழுதியதில் ஒரு பகுதி எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமிலும் ஒரு பகுதி புரட்டிப் போட்ட படைப்புகள் பதிவுக்கும் போனது.
புரட்டிப் போட்ட படைப்புகளில் யாரோ doomsday conspiracy பற்றி எழுதியிருந்தார்கள். மிகவும் சுருக்கமாக இருந்தது. நானும் அதை ஓரிரு வாரங்கள் முன்பு படித்திருந்தேன். எழுதிப் பார்க்கலாம். தமிழ்சசி, 'ஈழப் போர் போதும் என்று இடுகை. போர் என்றால் இவ்வளவு அழிவு, மக்களுக்கு துன்பங்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. 2002ம் ஆண்டில் சமாதான உடன்படிக்கையை அடைந்திருந்தால் புலிகள் இவ்வளவு அழிவுகளை தவிர்த்திருக்கலாம். இப்போது ஈழம் வருவதை தள்ளி வைத்து விட்டு மக்கள் அமைதியாக வாழ வழி வகுத்தால் போதும்' என்று எழுதியிருந்ததை ஒட்டி நிறைய பின்னூட்டங்கள்.
லக்கிலுக் தொகுதிக் கணிப்பு செய்திருந்தார். அவரது திமுக மனம் திமுகவுக்கு 12 தொகுதிகள், அதிமுகவுக்கு 12 தொகுதிகள் கொடுக்கிறது. மதிமுக, பாமக இரண்டுக்கும் தலா ஒரு இடம் கொடுத்திருக்கிறார். கடுப்படித்த கட்சிகள். கன்னியாகுமரியில் இழுபறி என்று சொல்லி தேமுதிக ஆஸ்டினுக்கு வாய்ப்பு சொல்லியிருந்தார். அந்த இடுகையிலும் நிறைய பின்னூட்டங்கள். அவரவர் கட்சி சார்பில், அவரவர் விருப்பங்களைச் சொல்லிப் போயிருந்தார்கள். என்னுடைய விருப்பம் என்பது நடைமுறைக்கு எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடமைக் கட்சிகள், மதிமுக, தேமுதிக, பாமக, அதிமுக, திமுக என்ற வரிசையில் வெற்றி வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும். காங்கிரசு ஒரு தொகுதியில் கூட வெற்றியடையாமல் படுதோல்வி அடைய வேண்டும். அரசியல் பிழைத்தால் என்ன நடக்கும் என்று தெரிந்திருக்க வேண்டும்.
விளக்கங்களையும் சொல்லி விட்டு அவர்கள் புறப்பட்டு விட நான் வெளியில் வரும் போது 10 மணி தாண்டியிருந்தது. பசி எடுக்கவில்லை. வயிறு அடைத்திருந்தது. நினைவாக சட்டைகளையும் எடுத்துக் கொண்டு வண்டியில் வேகமாகப் பயணித்து, தூங்கப் போய் விட்டிருந்த குடியிருப்புக்குள் நுழைந்தேன். கை கால் கழுவி விட்டு 20 நிமிடங்கள் தியானம். தூக்கம். தூக்கம் நன்றாகவே போயிருக்க வேண்டும். மூன்றே முக்காலுக்கு விழிப்பு வரும் போது எழுந்திருக்க சுணக்கம் எதுவும் இல்லை.
52 நிமிடங்களுக்கு எழுதியிருக்கிறேன். இன்னும் 5 நிமிடங்கள்தான் இருப்பதாக கடிகாரம் காட்டுகிறது. விடியும் சத்தங்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. இரவு முழுவதும் அறை குளிரூட்டும் கருவிகள் இயங்கும் சத்தம் பின்னணியில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. வீட்டுக்குள் குளிர் பெட்டி இயங்கினால் அதன் இயந்திரமும் விட்டு விட்டு ஓடிக் கொண்டே இருக்கும். இவ்வளவு சத்தங்களுக்கிடையே எப்படித்தான் நிம்மதியாகத் தூங்க முடியும். நன்கு திட்டமிட்டு கட்டிய வீடுகளில் இந்த சத்தங்களை எல்லாம் வெளியில் வைத்து படுக்கையறை அமைத்திருக்கலாம். படுக்கையறைக்குள், குளிர் எந்திரத்தின் சத்தம் கூட வராதபடி split ac வைத்திருக்கலாம். தூங்கும் போது முழு அமைதி ஏற்பாடு செய்திருக்கலாம்.
வானம் இப்போதுதான் வெளுக்க ஆரம்பித்திருக்கிறது. சுவர்க்கோழிகள் போட்டி போட்டுக் கொண்டு சத்தம் போடுகின்றன. குருவம்ஸ் குடியிருப்புப் பக்கத்திலிருந்து காலையிலேயே யாரோ வானொலி இயக்கி விடுகிறார்கள். பக்திப் பாடல்கள் மெல்லிதாக வந்து சேருகின்றன. 5 நிமிடங்கள் தாமதமாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நேரம் முடியப் போகிறது. 55 நிமிடங்களுக்குத்தான் எழுதியிருக்கிறேன். இன்னும் ஒரு நிமிடத்துக்கு முடித்து விடலாம். இன்றைக்குச் சாப்பிடுவதற்கு கோதுமை மாவையும், தேங்காயையும் வைத்து ஏதாவது செய்து கொள்ளலாம். பொரி கடலையும் இருக்கிறது.