என்னைப் பற்றி

செவ்வாய், பிப்ரவரி 19, 2019

நாகர்கோவில் ஒரு நாள்

காலையில் 3 மணிக்கு எழுந்து அதிகாலை வாசிப்பை செய்தேன். அதைத் தொடர்ந்து பல் தேய்த்து விட்டு நாட்குறிப்பு. அப்போது ரயில் மதுரை வந்து விட்டிருந்தது. எனவே, அங்கு இறங்கியவர்களின் இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். 1 மணி நேரத்தில் எழுத வேண்டியதை எழுதி முடித்து விட்டேன். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் நான் எழுதுவதை பார்த்துக் கொண்டே இருந்தார். சாத்தூரில் இறங்கும் போது பாராட்டி சொல்லி விட்டு இறங்கினார்.

அதன் பிறகு இணையம், திருநெல்வேலியில் காஃபி, அல்வா பாக்கெட் வாங்குவது, சிறிதளவு தூக்கம், செய்திகள் வாசிப்பது என்று போனது. நாகர்கோவில் வருவதற்கு 8 மணி ஆகி விட்டது. பழம் பொரி சாப்பிட வேண்டும் என்று நினைத்து உடற்பயிற்சி செய்யாமல் சாப்பிடக் கூடாது என்ற விதியில் நின்று கொண்டேன்.

பேருந்து பிடித்து செட்டிக் குளம், அங்கிருந்து பேருந்து பிடித்து கன்கார்டியா, அங்கிருந்து நடந்து வீடு வந்து சேர்ந்தேன். டாய்லெட் போய் விட்டு, துணிகளை துவைத்து போட்டு விட்டு, குளித்து சாப்பிட்டேன். உடற்பயிற்சிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி செய்திருக்கலாம். அதைத் தவற விட்டு விட்டேன். அதன் பிறகு எழுதிய நாட்குறிப்பை எடிட் செய்து அனுப்பி வைத்தேன். சமையலுக்கு ஏற்பாடு செய்ய கடைக்குப் போய் பொருள் வாங்குவதற்கு பட்டியலை வைத்து விட்டு படுத்து நன்கு தூங்கி விட்டேன்.

எழுந்த பிறகு டீ குடித்து விட்டு நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், வாழ்க்கையை எப்படி பார்க்கிறேன் என்று விளக்கினேன். கம்யூனிஸ்ட் கட்சிகள், அரசு, நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ், சாதி, அவதூறுகள், பதில்கள், மதமாற்றம் என்று விவாதம் போனது. நியாயமாக சொன்ன விஷயங்களை கேட்டுக் கொள்கிறார்கள், பரிசீலிக்கிறார்கள்.
நான் தூங்கி எழுந்ததுமே, சென்னைக்கு போகலாம் என்று சொன்னபடி டிக்கெட் புக் செய்யவும் ஏற்பாடு ஆகி விட்டது.

மூலதனம் வாசிப்பை மின்னஞ்சலில் அனுப்புவது, பதிவில் போடுவது, அதீஷ் தாபோல்கர் பதிவை தயாரித்து வெளியிடுவது என்று போனது. அதன் பிறகு டீ போட்டு குடித்து விட்டு வெளியில் கிளம்பினேன்.

கலெக்டர் ஆஃபீஸ் எதிரில் மா.லெ கட்சி ஆர்ப்பாட்டத்தின் அறிகுறியை காணவில்லை. பேருந்தில் குளத்து பேருந்து நிலையம், அங்கிருந்து ஒரு சீதப்பால் 4E பேருந்தில் ஏறி புத்தேரி. பள்ளிக் குழந்தைகள், பையன்களும் பெண்களும் ஜெ... ஜெ... வென்று போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. மிகவும் உற்சாகமாகவும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருந்தது. சுவர்களில் காணப்படும் பயங்கரவாத ஆதரவு போஸ்டர்களும், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க ஊடுருவலும் இதற்கு முன் தவிடுபொடியாகும் என்ற நம்பிக்கை உருவானது.

புத்தேரியில் வெள்ளாளர் - நாயர் சாதியினர் சார்பாக மோடிக்கு 10% இட ஒதுக்கீட்டுக்காக நன்றி தெரிவித்து பேனர் வைத்திருக்கிறார்கள். குமரி மலர் பத்திரிகையில் இதுதான் பேச்சு. 'தி.மு.க நமது சாதிக்காக இட ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை. மோடி செய்து கொடுத்தார். மோடிக்கு ஓட்டு போட வேண்டும்' என்று பிரச்சாரம். இப்படி குறிப்பிட்ட சில சாதியினரின் ஓட்டுக்களை வளைப்பதற்கு மோடிக்கு இது உதவியாகத்தான் இருக்கும். அதே நேரம் பிற சாதியினரின் ஓட்டுக்களை எதிர்நிலைக்குக் கொண்டு நிறுத்துவதற்கும் இது காரணமாக இருக்கும்.

சனி, பிப்ரவரி 02, 2019

ஈகோ

1. நாள் நன்றாகத்தான் போனது, படுத்து தூங்கவே இல்லை.

2. மதியம் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். நான் யோசித்து திட்டமிட்டு வைத்திருந்ததை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாத போது, நான் நினைத்தபடி விஷயங்கள் போகாத போது டென்ஷன் ஆகி விடுகிறேன். இதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த உணர்ச்சிவசப்படுதலின் தாக்கம் இப்போது வரை தொடர்கிறது. பயணத்தின் போது ஜான் ஸ்மித் விவாதம் படிக்கும் போதும், தி.வி.க கூட்டத்தில் இருந்த போதும், திரும்பி வரும் போதும், தூங்கும் போதும் உடல்நிலை பிரச்சனையாக இருந்தது. மூளை கவனத்தை எடுத்துக் கொண்ட பொருளில் குவிப்பதை செய்து விட்டாலும், உடலை பருண்மையாக அது பாதிக்கிறது. இதை கவனமாக பரிசீலித்து மாற்றிக் கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படவே கூடாது.

ஈகோ இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், எல்லா விஷயங்களிலும் தனிப்பட்ட நலனை துடைத்து விட்டதாக சொன்னாலும், நான் சொன்னதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதுவும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும், மாற்று கருத்து எதுவும் சொல்லக் கூடாது என்ற ஈகோ, அகங்காரம் இருக்கிறது. நாம்தான் நிறைய வேலை செய்கிறோம், எனவே நமக்குத்தான் தெரியும் என்ற ஈகோ.

அதைக் கைவிட வேண்டும். என்ன ஆனாலும், உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக புறநிலையாக விஷயங்களை அணுக வேண்டும். நமது ஈகோ, நாம் எடுத்த முடிவு, நாம் யோசித்த நடைமுறைகள் எல்லாவற்றையும் முன் வைக்க வேண்டும். அதற்கான வெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படாமல் இருந்திருந்தால், போலி ஈகோ பார்க்காமல் இருந்திருந்தால் நிறைய செய்திருக்கலாம். கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது என்ற நோக்கத்திலிருந்துதான் எதையும் செய்ய வேண்டும். நம்முடைய ஈகோவை முன்னிறுத்தி சொதப்புவது தேவையில்லாத ஒன்று. 

நமது விருப்பத்துக்கு மாறாக, முடிவுக்கு மாறாக, நாம் சரி என்று கருதுவதற்கு மாறாக ஒரு விஷயம் நடக்கும் போது என்ன செய்ய வேண்டும்? நிதானமாக என்ன விஷயங்கள் அதில் அடங்கியிருக்கின்றன என்று பரிசீலிக்க வேண்டும்.

பலர் எப்படி நிதானமாக விளக்கி பேசுகிறார்கள். எந்த பதட்டமும் இல்லாமல் சொல்ல வருவதை கேட்பவர் பிணிக்கும் வகையில் சொல்கிறார்கள். இதை பயில வேண்டும்.
அதே போல எழுதும் போதும் எழுத்தில், வார்த்தையில் கவனம் இல்லாமல் விட்டு விடக் கூடாது. மார்க்ஸ் குறிப்பு எடுக்கும் போது கூட அலட்சியமாக வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்று ஜான் ஸ்மித் சொல்வதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளி, பிப்ரவரி 01, 2019

சிந்தனை ஒழுங்கை கட்டியமைப்பது


முக்கியமாக கவனிக்க வேண்டியது, சிந்தனையின் ஒழுங்கை tight ஆக்கிக் கொண்டே செல்வதுதான். ஒரு விஷயத்தை பரிசீலிக்கும் போது அதில் அடங்கியிருக்கும் எல்லா கூறுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது, அதனோடு தொடர்புடைய பிற விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொள்வது என்பது மிகச் சிரமமான காரியம்.

நில வாடகை பற்றிய பரிசீலனையில் தொழிலாளர், விலை, உபரி மதிப்பு வீதம், லாபம், வாடகை, சந்தை விலை, தனிப்பட்ட மதிப்பு என்றெல்லாம் பேசிக் கொண்டே போகிறார். கடைசியில் கூடுதல் வாடகைக்கு பின் இருக்கும் மர்மம் மாறா மூலதனத்தை குறைந்த அளவு உற்பத்திப் பொருளை விற்பதால் வரும் பணத்தை வைத்தே மாற்றீடு செய்ய முடிவதிலிருந்து கிடைக்கிறது என்கிறார். இது ஏதோ போகிற போக்கில் நடக்கிற மனப்பாய்ச்சல் கிடையாது. பல மணி நேரம், அல்லது சில நிமிடங்கள் அசை போட்டு, இணைப்பை பிடித்து இழுத்து வந்து பதிவு செய்தது.

இந்த முறையில் எழுதும் போது மட்டுமில்லை, சிந்திப்பதையே கூட கோர்வையாகவும், இணைப்புகளோடும் இயக்கவியல் தர்க்கத்தோடு செய்ய வேண்டும். கோணல் மாணலாக யோசிப்பது, அராஜகமாக சிந்தனையை சிதற விடுவது என்ற மூளைச் சோம்பலை களைய வேண்டும்.

உணவு காலையில் முட்டை, பொங்கல், பின்னர் மதிய உணவுக்கு சோறு+கத்தரிக்காய் பொரியல், மாலையில் 3 சுழியம், இரவுக்கு கோதுமை தோசை, நடுவில் பேரீச்சம்பழம் பாக்கெட் 1, இரவில் திராட்சை பாக்கெட் ஒன்று என்று வக்கணையாக சாப்பிட்டு விட்டேன்தான்.

பகலில் படுத்து தூங்கவில்லை. மாலையில் வெளியில் போவதற்கான திட்டம் முக்கியமாக இருக்கிறது. காலையில் 9 முதல் 1 மணி வரைக்கும் ஒரு ஒழுங்கான வேலைத் திட்டம், மாலை 4 மணிக்கு மேல் வெளியில் போவது என்று வகுத்துக் கொண்டால், சரியாக இருக்கும். காலையில் 4 மணி முதல் 9 மணி வரையும், இரவில் 8 மணி முதல் 10 மணி வரையிலும் மற்ற வேலைகளுக்கு ஒதுக்க வேண்டும்.