1980கள். மேற்கிந்திய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு விளையாட வருகிறது என்றாலே கதி கலங்குமாம். நமது அணி அவர்கள் ஊருக்குப் போனாலோ கேட்கவே வேண்டாம். பொதுவாக ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் என்றால் சுழல் பந்து வீச்சாளர்கள்தான் அதிகம் பந்து வீசுவார்கள். இவர்கள் அதை உடைத்து நான்கு அதிவேகப் பந்து வீச்சாளர்களை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
மட்டையாளர்களிலும் கல்லுளிமங்கர்கள் அதிகம். டெஸ்மண்ட் ஹெயின்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், விவியன் ரிச்சர்ட்ஸ், அணித்தலைவர் கிளைவ் லாயிட், விக்கெட் கீப்பர் ஜெஃப் துஜான் என்று பெயர்களைச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே வியர்த்து விடும். இதற்குப் பிறகு வேகப் பந்து வீச்சாளர்களின் அணிவகுப்பு.
என்னவென்றால், வழக்கமாக ஆரம்ப ஆட்டக்காரராக களம் இறங்கு காவஸ்கர் இரண்டாவது விக்கெட் விழுந்த பிறகு விளையாடுவதாகச் சொன்னாராம். அந்த சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி ஆரம்பமானது, வானொலியில் தமிழ் நேர்முக வருணனையுடன். ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் இரண்டு பேர் ஆட்டம் இழந்து கவாஸ்கர் உள்ளே நடந்து கொண்டிருக்கிறார். இரண்டு பேர் ஆட்டமிழந்த பிறகு வந்தாலும் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பத்திலிருந்தே துவங்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான்.
இந்தச் சூழலில் எப்படி விளையாட வேண்டும்? காவஸ்கர் மேற்கிந்திய தீவில் அவர்களுக்கு எதிரான போட்டிகளில் அதிகமான சதங்களை அடித்திருக்கிறாராம். அப்போது நிலவிய அணுகுமுறையை இப்படிச் சொல்வார்கள்.
Put your head down and take one ball at a time. 'எத்தனை விக்கெட் விழுந்திருக்கிறது, எவ்வளவு ஓட்டம் எடுத்திருக்கிறோம். போன போட்டியின் முடிவு என்ன, பந்து வீசுவது யார்' என்ற கேள்விகளை எல்லாம் விட்டு விட்டு தலையை தாழ்த்தி கவனத்தைக் குவித்துக் கொள்ள வேண்டுமாம். 'அடுத்த பந்து வரப் போகிறது, அது எப்படி வருகிறது, அதை எப்படி கையாள வேண்டும்' என்ற ஒரே எண்ணம்தான் இருக்க வேண்டும். அந்தப் பந்தை கவனமாக கையாண்டு விட்ட பிறகு அதே மயக்க நிலையில் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். கொஞ்சம் கவனம் தப்பினாலும் ஸ்டம்புகள் பறந்து விடும், அல்லது கை கால்கள் உடைந்து போக நேரிடும்.
இப்படி பந்து பந்தாக கடந்து, ஒற்றை ஒற்றையாக ஓடி, வாய்ப்பு கிடைக்கும் போது எல்லைக்கோட்டைத் தாண்டி அடித்து சதம் அடிக்க வேண்டும். பல மணி நேரங்கள், பல நூறு பந்துகள் பிடிக்கலாம்.
மேலே குறிப்பிட்ட ஆட்டத்தில் 234 ஓட்டங்கள் அடித்து வெற்றி தோல்வியின்றி முடிய வழிவகுத்தார் என்று கேள்வி.
இப்போது கூட ஆஸ்திரேலியா,, நியூசிலாந்து அல்லது தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் பந்துகளை சமாளிக்க இப்படிப்பட்ட உத்திதான் தேவை. என்ன நடக்கிறது என்று தலை கால் புரியாத சூழ்நிலை. ஒன்றைத் தாண்டி வெற்றிகரமாக வெளி வந்து விட்டோம் என்று நினைக்கும் போதே அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இல்லா விட்டாலும் பந்து வரத்தான் போகிறது.
மகாபாரதத்தில் அர்ச்சுனனின் கவனக் கூர்மையையும் அப்படிக் குறிப்பிடுவார்கள்.
வில்வித்தை போட்டி. மரத்தின் மீது வைக்கப்பட்ட பறவை பொம்மையை அடிக்க வேண்டும். மற்ற சகோதரர்கள் முயன்று தோற்ற பிறகு அர்ச்சுனனை அழைக்கிறார் துரோணர்.
'அர்ச்சுனா, வில்லையும் அம்பையும் எடுத்து குறி பார்'
'அப்படியே குருவே'
'என்ன தெரிகிறது, மரம் தெரிகிறதா'
'இல்லை'
'கிளை தெரிகிறதா'
'இல்லை'
'கிளையில் பொம்மை இருக்கும் இடம் தெரிகிறதா'
'இல்லை'
'அப்ப என்னதான் தெரிகிறது'
'குருவே நான் அடிக்க வேண்டிய பறவை பொம்மையின் கழுத்துக் கோடு மட்டும்தான் தெரிகிறது'
'அடி'
பொம்மை கீழே விழுந்தது.
சில நேரங்களில் மற்ற எல்லாவற்றையும் மறந்து என்ன நடக்கிறது என்பதை பற்றி குழப்பிக் கொள்ளாமல் ஒவ்வொரு நாளாக நகர வேண்டும். மென்பொருள் நிரலை பார்த்தால், அதில் இருக்கும் குழப்படிகளை பார்க்கும் போது இப்படி எத்தனை குழப்படிகள் இருக்கின்றனவோ என்று மலைத்துப் போகாமல் ஒரு வேலை ஒரு அடியில் என்று நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஏதோ நடக்கிறது என்று புரிகிறது. நடப்பதின் முழு பொருளும் புரிந்து கொள்ள முடியாத அறியாமை. உற்சாகமாக வேலை நடக்கிறது. சில பேர் சோர்ந்து போய் இருக்கிறார்கள்.
போன வாரம் சனிக் கிழமை விடுமுறை. ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வண்டி ஓட ஆரம்பித்து விட்டது. செவ்வாய்க் கிழமை ராணிப்பேட்டை. புதிய வாடிக்கையாளர் ஒருவரைச் சந்திக்க. நம்ப முடியாத அளவுக்கு, மடை திறந்தது போல பேச்சு வரா விட்டாலும் பல நிறுவனங்களில் உயர் பதவியில் இருந்து இங்கு வந்திருக்கும் அந்த மேலாளரை கவர்ந்து விட்ட அறிமுகம். ஆரம்பிக்கும் போது விளையாட்டாக, பல முறை முயன்று தோற்று விட்டதாக, ஏதோ சொன்னார்கள் பார்க்கிறேன் என்று விட்டேற்றியாக பேசிக் கொண்டிருந்தார்.
பத்து நிமிடங்கள் மட்டும் எடுத்துக் கொள்கிறோம் என்று அவர் சொன்ன கவலைகளை அவர்களது தேவைகளை விளக்க ஆரம்பித்தவுடன் சுருங்கிய புருவங்கள், கடைசி வரை நேராகவே இல்லை. முடிவாக என்ன சொல்வது என்று தெரியாமல் ஓரிரு நிமிடங்கள் உட்கார்ந்திருந்தார்.
உள்ளதில் பெரிய நிறுவனமான அவர்களுக்கே இந்த கதி என்றால், ஒரு பக்கம் நம்பிக்கை ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் நம் குழுவினர் செய்யும் சொதப்பல்களைப் பார்க்கும் போது சோர்வும், நமக்கு இந்த சிக்கல் என்றால் மற்றவர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்ற ஒரு தைரியமும் ஒரே குழப்பம்.
'ஏற்கனவே இரண்டு மூன்று வெளி நிறுவனங்களில் முயன்று பார்த்து விட்டோம். பெரிய பெரிய மென்பொருள் நிறுவனங்கள் வந்து தமது சேவையைப் பற்றிக் காட்டி விட்டுப் போனார்கள். ஆரம்பத்தில் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், பல லட்சங்கள் செலவான பிறகு கையை விரித்து விட்டுப் அவர்கள் போய் விடுவார்கள். அதனால்தான், நாங்களே இரண்டு மூன்று பேரை வேலைக்கு வைத்து முயற்சிக்கிறோம்' என்றார்.
அந்த முயற்சிக்கு பொறுப்பாளரும் அங்கு அமர்ந்திருந்தார். அவரிடம் வெளிப்படையான விலகல். அவர் மனதை எப்படியாவது தொட்டு விட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே முயற்சி. ஒரு சில கட்டங்களில் அவர் முக இறுக்கமும் விலகி புரிதல் தெரிந்தது. 'உங்களால் முடியாது, நாங்கள்தான் இதை செய்ய முடியும்' என்று சொல்லும் போது அவருக்கு இனிக்கவா செய்யும்.
ஒரு மென்பொருள் திட்டப்பணியை வெற்றிகரமாக முடிக்காமலிருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று ஜோயல் எழுதியுள்ளார். திறமையில்லாத குழுவினர், வாரத்துக்கான பணி திட்டமிடல், திட்டமிட்ட பிறகு சொல்லும் நாள்கள் தேவையை குறைக்கப் பார்ப்பது என்று அவருக்கே உரித்தான கிண்டலுடன் எழுதியிருக்கிறார். வேறு ஏதோ கணினி இதழில் வெளி வந்திருந்தது.
'எப்படி வேலை ஆரம்பிக்கலாம் என்ற விபரங்களை அந்த கணினித் துறை மேலாளருடனேயே பேசி விட்டு என்னிடம் சொல்லுங்கள்' என்று மின்னஞ்சலும் வந்து விட்டது. இன்றைக்கு மீண்டும் ராணிப்பேட்டை பயணம்.
நாலைந்து நாட்களாக அதிகாலை மூன்றே காலுக்கு அருகில் விழிப்பு வருகிறது. அதிலிருந்து இழுத்து இழுத்து நாலரை, ஐந்தரை, ஆறு மணி வரை தூங்குவதுதான் நடக்கிறது. இன்றைக்கு நாலே காலுக்கு எழுந்து விட்டேன். அந்த 3.11 என்ற நேரத்துக்கு என்ன மகத்துவமோ தெரியவில்லை. நாளைக்கோ , அடுத்த முறையோ அந்த நேரத்தைப் பார்த்தால் உடனேயே எழுந்து விட வேண்டியதுதான்.
நேற்று ஐந்து மணி. ஆறு மணி வரை, இரண்டு நாட்களாக நேரம் கிடைக்காமல் விட்டிருந்த வீட்டு வேலைகள். செய்ய வேண்டிய வேலைகளின் அழுத்தம் முந்தைய நாளில் ஓரளவு, மிக சிறிதளவு குறைந்திருந்தது. வாக்கு கொடுத்து விட்டு முடிக்காமல் வைத்திருக்கும் வேலைகள் பாதி உயிரை எடுத்து விடுகின்றன. அதற்குத்தான், முழு பட்டியலையும் குறித்து கவலைப் படாமல், கையில் இருக்கும் வேலையை ஒவ்வொன்றாக கவனம் செலுத்தி செய்து கொண்டே போக வேண்டியதுதான்.
மழைக்காலமும் ஆரம்பித்து விட்டது. பைக்கை நிறுத்தும் இடத்தில் விட்டுச் சென்ற தலைக்கவசத்தை காணோம். வழக்கமாக ராணிப்பேட்டை போகும் போது தலைக்கவசம் எடுத்துப் போவதில்லை. அன்றைக்கு விதியை முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று போட்டுப் போனால் போச்சு. நான்கைந்து முறை தொணதொணத்தும் கிடைக்காமல் போய் விட்டது. அதற்கு மாற்றாக ஒன்று வாங்குவது.
இன்னும் பல திசைகளிலிருந்தும் பல வேறு தேவைகள். அவ்வளவும் வரும் போது எல்லாவற்றையும் விட்டு விட்டு வெட்டியாக ஒன்றை செய்ய உட்கார்ந்து மனதை திருப்பிக் கொள்வோம். கவலைகளை எல்லாம் மறக்கத்தான் திரைப்படத்துக்குப் போகிறோம், குடிக்கிறோம் என்பார்களாம். கவலைகளிலிருந்து தப்பித்து விட்டாலும் அவை மறைந்து விடப் போவதில்லை. அந்தத் தப்பித்தலிலிருந்து திரும்பி வரும் போது நமக்காக அவை காத்திருக்கத்தான் செய்யும்.
மென்பொருள் உருவாக்கம் என்பது மனதுக்கான பளுதூக்கும் பணி என்கிறார் ஜோயல். எல்லோராலும் செய்து விட முடியாதது, அப்படி செய்ய முடிபவர்களும் அதற்கென சிறப்பு பயிற்சிகளை இடைவிடாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். ஏனோதானோவென்று செய்து விடக் கூடிய வேலை இல்லை.
அப்படி ஆர்வம் இருப்பவர்களாகத்தான் குழுவினர். ஒருவரை வேலைக்கு எடுக்க 300 விண்ணப்பங்களை தாண்டிப் போவதாக ஜோயல் சொல்கிறார். அந்த நிலையில் எடுக்கும் அவ்வளவு முயற்சி பிற்காலத்தில் பல மடங்கு வீணாக்கலை தவிர்க்க உதவும் என்பது அவரது வாதம்.
எங்கோ ஏதோ உதைப்பதாகத் தோன்றினாலும், பேசுபவர்கள் எல்லாம் தமது பொறுப்பு உணர்ந்து குறைகளை களைய முன்வந்து விடுகிறார்கள். புதிய திட்டத்துக்கான வேலை இரண்டு நாட்கள் முன்பு முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது தாண்டி இந்த வார இறுதியில் முடித்து விடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான வேலைகள் சுறுசுறுப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றன.
இன்னொரு நிறுவனத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடர்பு கொண்ட இடத்திலிருந்து தொலைபேசி அடுத்த வாரம் வேலை ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
நேற்று சாப்பாட்டு இடைவேளைக்குப் பிறகு வாடிக்கையாளர் நிறுவனத்துக்கு. இருக்கை அமைப்பை மாற்றியிருந்தார்கள். இதை ஏன் ஆரம்பத்திலிருந்தே செய்யவில்லை என்று தோன்றும் படியான நல்லதொரு மாற்றம். அவர்களது தலைமை அலுவலகத்துக்குப் போகும் போது அங்கு பார்த்த மேலாளர் ஒருவரை இங்கு தலைமை மேலாளராக அனுப்பியிருந்தார்கள். அங்கு தாழ்ந்த கூரையின் கீழ் பெரியவராகத் தென்பட்ட அவர், இங்கு உயர்ந்த கூரையின் கீழ், கூடுதல் பொறுப்புகளின் சுமையில் குறுகி விட்டது போல தென்பட்டார்.
வெளியே மழை வெளுத்து வாங்குகிறது. பருவமழை ஆரம்பித்து விட்டது. ஊர்களில் எல்லாம் நல்ல மழை என்று சொல்கிறார்கள். சென்னைக்கு பங்கு இப்போது வருகிறது. இந்த இரண்டு மாதங்களும் பின்வாங்கும் பருவமழையின் நீரெல்லாம் வந்து கொட்டப் போகிறது.
தேள்கள், பாம்புகள், நண்டுகள், மீன்களுக்குக் கொண்டாட்டம். வறண்டு போன நிலங்கள் தண்ணீரை உள்வாங்கி குளிர்ந்து போகும். மழை ஓயும் வரை எதுவும் முளைக்கா விட்டாலும், மழைக்காலம் முடிந்த பிறகு செழிக்க ஆரம்பித்து விடும். உலோகங்கள் துருப்பிடிக்க ஆரம்பிக்கும். மரங்கள் பச்சை ஆடை போர்த்துக் கொள்ள ஆரம்பிக்கும்.
வெப்ப இரத்த பிராணிகளுக்குத்தான் தவிப்பு. மழையில் தலை காட்டும் கிருமிகளின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.
நேற்று இரவு ஒன்பது மணிக்கு மேல் வலைப்பதிவுகளில் மேய்ந்தால் சுறுசுறுப்பான விவாதங்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஞானி கலைஞரை பற்றி எழுதிய விவகாரத்தில் செல்வநாயகியின் இடுகையை முழுமையாக ஒரு வார்த்தை விடாமல் படிக்க முடிந்தது. புனித பிம்பங்களை சாடுபவர்கள்தான் தமக்கே உரிய புனித பிம்பங்களையும் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு இடத்தில் பெண்ணியம் குறித்து பாரி அரசின் இடுகையில் நந்தா நீளமாக பின்னூட்டியிருந்தார். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அவநம்பிக்கையை விதைக்கும் இயக்கம்தான் நவீன பெண்ணீயம். ஆண்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்ற புகட்டலுடன் ஒரு பெண் திருமண வாழ்க்கையை அணுகினால் என்னவாகும்? 'வங்கிக் கணக்கை இரண்டு பேரும் சமமாக இயக்கலாம்' என்றால் 'வங்கிக்குப் போகும் வேலையையும் என் தலையில் கட்டப் பார்க்கிறாயா' என்று நினைக்கலாம்.