என்னைப் பற்றி

எனது புகைப்படம்
mobile : 9884070556
நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பு, 
சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்ப பட்டம்
தேவாஸ் (மத்திய பிரதேசம்) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (டாடா) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (பிஎல்சி) நிறுவனத்தில் வேலை
சொந்த நிறுவனம் பிஎஸ்ஜி லெதர் லிங்க். 

Friday, January 06, 2012

தேள்கள்


நேரம் 5.12. ஜனவரி 6, 2012.

நேற்றுக் காலையில் எழுந்து ஒழுங்காக நாட்குறிப்பு எழுதினேன். எழுதி முடித்து விட்டு முன் அறையை ஒதுங்க வைத்தேன். புத்தகங்களை நிற்க வைத்து அடுக்குதல், துணிகளையும், துணிப்பைகளையும் உள் அறைக்கு மாற்றுதல், செய்து முடித்தேன். இன்று இன்னும் 10 நிமிடம் வேலை செய்தால் எல்லாம் ஓரளவு வடிவுக்கு வந்து விடும்.

கழிவறை பயன்படுத்த வரிசையில் நின்று விடக் கூடாது என்பது அதிகாலையிலேயே எழுந்ததற்கு இன்னொரு காரணம். ஆனால், அவ்வளவு பேர் இல்லை. மொத்தமே நான்கு பேருக்கு ஒரு கழிவறை, எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டும் இருப்பது தெரிந்தது.

முகம் மழிப்பதற்கு தண்ணீர் பிடிக்கப் போனால், தண்ணீர் இல்லை, கீழே மோட்டர் போட வேண்டும் என்று முதல் வீட்டு அம்மா சொன்னார்கள். படியில் கீழே போய் கீழே இருக்கும் கழிவறைக்குள் சுவிட்சு இருந்ததைப் போட்டேன். உடனேயே தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. முகம் மழிப்பதற்கு சோப்பு நுரை பரப்பும் பிரஷ் எடுத்து வந்திருக்கவில்லை. கையாலேயே தேய்த்துக் கொண்டேன். அதன் பிறகு குளிக்கப் போக வேண்டும்.

குளியலறை, கீழே மாடிப்படிக்குக் கீழே, இருட்டாக இருந்தது. இன்னும் விடிந்திருக்கவில்லை. முதலில் அதைத் தாண்டிப் போய் இரண்டு வீட்டுக் கதவுகள் பக்கம் போய் விட்டேன். ஒரு கால் கிரவுண்டு நிலத்தில் எத்தனை குடியிருப்புகள்! வாசல் கழுவி கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் லைட் இல்லையா என்று கேட்டதும், கழிவறை விளக்கைப் போட்டுக் கொள்ளச் சொன்னார். அது இரண்டு அறைக்கும் பொதுவான விளக்கு. குளியலறையின் கூரை உயரம் குறைவு, கொஞ்சம் குனிந்து நின்று கொள்ள வேண்டும். மற்றபடி வசதியாக இருந்தது. அழுக்கு, தூசி, சிலந்தி வலை என்று எதுவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது.

குளித்து விட்டு மேலே வந்தேன். இன்னும் ஆறரை ஆகியிருக்கவில்லை. வீட்டுக்கார அம்மா கீழே உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் முன்பணம் கொடுத்திருக்கவில்லை. உடை மாட்டிக் கொண்டு கீழே வந்து பார்த்தால் உள்ளே போயிருந்தார். மீண்டும் போய் பையை எடுத்துக் கொண்டு வரும் போது உட்கார்ந்திருந்தார். வணக்கம் சொல்லி விட்டு பணத்தை எண்ணிக் கொடுத்தேன். சாவியைத் திரும்ப வாங்கிக் கொண்டேன். முதலில் கொடுத்திருந்த 100 ரூபாயைத் திரும்பத் தர வேண்டுமே என்று ஆரம்பித்தார். அப்புறமாக தரும்படி சொன்னேன்.

ஆற்காடு சாலைக்கு வருவதும் தூரம் குறைவாக தோன்றுகிறது. ஒரே சாலையில் நேராக நடந்தால் போதும். நடப்பவர்களில் பலரை முந்திப் போக முடிகிறது. நீளமான கால்களின் ஆதாயம் அது. பத்திரிகைக் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கும் போது பார்த்தால் ஆனந்த விகடனும் வந்திருந்தது. திட்டினாலும், ஒவ்வொரு வாரமும் வாங்கி விடவும் தவறுவதில்லை. பேருந்து நிறுத்ததுக்கு வந்து ஜெமினி வரை போகும் 25Gல் ஏறினேன். முதலில் உட்கார இடம் கிடைக்கவில்லை. வடபழனி பேருந்து நிலையத்தில்தான் பெண்கள் இருக்கைகள் காலி ஆன பிறகு முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். சாலை நிறுத்தத்தில் இறங்கி ஆற்காடு சாலை கடந்து, 100 அடி சாலை கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன்.

காத்திருப்பதற்கு வசதியான இடம். ஆனால் பேருந்துகள்  நிற்பதற்குத்தான் வசதி குறைவு. காத்திருப்பதற்கு வரிசையான உள்ளடங்கிய கடைகளின் முன்பகுதிகள். ஒரு கடை கட்டிடத்தின் முன்பு நான்கைந்து கல்லூரில் மாணவிகளும் மாணவர்களும் நின்றிருந்தார்கள். அடுத்த கடைக் கட்டிடத்திலிருந்து நீட்டிக் கொண்டிருந்த திண்ணையில் நான்கைந்து இன்னொரு கல்லூரி மாணவர்கள். இந்த மாணவர்கள் நிறைய குரங்கு சேட்டை செய்து கொண்டிருந்தார்கள். மாணவிகளுக்காக என்று எல்லோருக்கும் தெரிந்தது. விஐடி பேருந்து வந்து மாணவிகள் ஏறும் போது யார் யார் அழகாக இருக்கிறார்கள் என்று அவர்கள் தீர்ப்பு எழுதிக் கொண்டிருந்தது கேட்டது. 119 பேருந்து வர அதில் போய் ஏறிக் கொண்டேன்.

சோழிங்க நல்லூர் என்று சீட்டு எடுத்துக் கொண்டேன். இன்னும் 7 மணி கூட ஆகியிருக்கவில்லை. இறங்கி சாப்பிட்டு விட்டுப் போகலாம். மூன்று பேர் உட்காரும் இருக்கை. இடையில் ஒருவர் உட்கார்ந்து அவர் டைடல் பார்க்கில் இறங்க இன்னொருவர் உட்கார்ந்தார். அவர் நடு இருக்கையில் உட்காருவது போல நெருக்கி உட்கார்ந்தார். அந்தப் பக்கம் உட்கார யாரும் இல்லை, கொஞ்சம் தள்ளி வசதியாக உட்காருங்களேன் என்று சொன்னது ரசிக்கவில்லை. கணிசமான நேரம் கழித்துதான் புரிந்து தள்ளி உட்கார்ந்தார்.

சோழிங்க நல்லூரில் இறங்கி தாம்பரம் நோக்கிப் போகும் சாலையில் இருக்கும் உணவு விடுதியில் பொங்கல் வடை, வெளியில் வந்து தேநீர். காலையில் 7 மணிக்கே கடை ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது. நிறைய பேர் சாப்பிடவும் வந்து விடுகிறார்கள். சாப்பிட்டு விட்டு மீண்டும் சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம். சிப்காட்டுக்குப் புறப்பட்டு நின்றிருந்த பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். பின்னிருக்கையில் இருக்கையின் கால் பகுதியில் போட்ட பலகையில். இருக்கைகளில் பெண்கள். முன்னால் ஓட்டுனர் அருகில் இன்னொருவர் உட்கார புறப்பட்டார். தூரம் கணிசமாகவே இருக்கும். தொழிற்பேட்டைக்கு உள்ளேயே போய் எல்லோரையும் இறக்கி விட்டார்.

கட்டுரைகளை ஒரு முறை சரி பார்த்து விட்டு கான்டீனுக்குப் போய் 2 குட்டி ஊத்தப்பங்களும், தேநீரும் சாப்பிட்டு விட்டு வந்தேன். முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு இல்லை, அதனால் கல்லூரியே வெறிச்சோடி கிடந்தது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மட்டும்தான். திரும்பி வந்து இணையத்தில் பார்த்தால் பேஸ்புக்கில் நிறைய பேர் சுவரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். பேஸ்புக்கில் அதிகபட்ச செயல்பாடு நேற்றுதான் இருக்க வேண்டும்.

9.30க்கு போய் முதல் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு விடைத்தாளை திருத்தக் கேட்டேன். எடுத்துக் கொடுத்து விட்டார். 11.15க்குதான் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு. மொத்த விடைத்தாளையும் என்னையே சரி பார்க்கச் சொல்லி விட்டார். ஒரு கேள்வியில் தன்னைப் பற்றி எழுத வேண்டியிருந்ததால் எல்லா பேப்பர்களிலும் பெயர் தெரிந்து விட்டது. முதலில் 1 மதிப்பெண் பேப்பர். அதில் இரண்டு மூன்று பேர் முழு மதிப்பெண்கள் வாங்கியிருந்தார்கள். மொத்தத்தில் 4 பேருக்கு முழு மதிப்பெண்ணுக்கு ஓரிரண்டு குறைவு. மூன்று பெண்கள், ஒரு பையன். இரண்டு மூன்று பேருக்கு 90%க்கு அருகில். இரண்டு பேருக்கு 60 %க்கும் குறைவு. மற்றவர்கள் இடையில்.

முழு விடைத்தாளையும் திருத்தி, மதிப்பெண்களை கூட்டிப் போட்டு, சம்மரி அறிக்கையும் தயாரித்துக் கொடுத்து விட்டேன். ஒருங்கிணைப்பாளருக்கு மகிழ்ச்சி. அவரது வேலையிலும் பெரும்பகுதியை நானே செய்து விட்டேன். அவர் தனி ஆளாக எல்லா தேர்வு பணிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். வகுப்புகளை ஒருங்கிணைப்பவர், அடுத்த பருவத்தில் mis நடத்த முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். செய்யலாம் என்று சொல்லி விட்டேன். முதலாண்டு மாணவர்களுக்கு சீன மொழி பாடம் ஒரு வகுப்பு ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும். கூடவே ஒவ்வொரு மேலாண்மை பாடமும்.

11.15க்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புக்கு வந்தேன். அடிப்படை சீனம் என்ற சுற்றுலா பயணிகளுக்கான புத்தகத்திலிருந்து வாக்கியங்களையும், சொற்களையும் சொல்லி பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தேன். உற்சாகமாக பங்கேற்றார்கள். வருகைப் பதிவு போதாமல் 5 பேரை முதலாண்டு மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தேர்வு குறித்துக் கேட்டால் எங்களில் எத்தனை பேரை எழுத அனுமதிப்பார்களோ என்று ஒரு பெண் சோர்வாக சொன்னார். இவர்களில் அவ்வளவு மோசமான வருகைப் பதிவு யாருக்கும் இல்லை. அதைச் சொல்லி தைரியப்படுத்தினேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, என்னுடைய பிறந்த நாள் எப்போது என்று கேட்டார் ஒரு பெண். அதைத் தொடர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

படிப்பில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தவர்களை இரண்டு முறை எழுதிக் காண்பிக்கச் சொல்லியிருந்தேன். அவர்களில் ஒருவரை அந்தப் பாடத்தை வாசிக்கச் சொல்லி மற்றவர்கள் கேட்கச் சொன்னால், அவர் மிகக் கேவலமாக வாசித்தார். உள்ளே இருந்த தேள் விழித்துக் கொண்டது. 'எருமை மாடு மழையில் நனைந்தாலும் மேலே தண்ணீர் ஒட்டாதது போல, இரண்டு முறை எழுதிப் பார்த்தும் எதுவுமே ஒட்டவில்லையே' என்று சொன்னேன். மிகவும் மோசமான விமர்சனம். எல்லோருக்குமே எதிர்மறை உணர்வுகளை உருவாக்கக் கூடியது. அவரைத் தனியாக அழைத்து சொல்லியிருக்கலாம். பொதுவில் இப்படிப் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

15 நிமிடங்கள் முன்னதாகவே வகுப்பை முடித்துக் கொண்டேன். அவரது கணினியையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். மடிக்கணினி ஒன்று கொண்டு வந்திருந்தார். அதில் விண்டோஸ் எக்ஸ்பி அரைகுறை நிறுவலில் நின்று டிவிடி கேட்டுக் கொண்டிருந்தது. உபுண்டு நிறுவித் தருவதாகச் சொன்னேன். சாப்பிடப் போனோம். ரொட்டி வேண்டாம். சோறு கொஞ்சம் போதும், ரசம், காலி பிளவர் கூட்டு, மோர் ஒரு டம்ளரில் வாங்கிக் கொண்டேன். அறைக்கு வந்த பிறகு பென்டிரைவில் உபுண்டுவை எழுதிக் கொண்டு அவரது மடிக்கணினியில் நிறுவப் போட்டால் 10 நிமிடத்தில் முடிந்து விட்டது.

அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன். சனிக்கிழமை வகுப்புகள் இல்லை, தேர்வு மேற்பார்வை வேலை இருக்கும், வழக்கமான நேரத்துக்கு வந்து விடுங்கள் என்று சொன்னார்கள். காலை, மாலை இரண்டு வேளையும் இருக்குமாம். வெளியில் வரும் போது 3 மாணவர்களும் வெளியில் வந்தார்கள். ஒரு தனியார் ஆட்டோ வர அதில் ஏறிக் கொண்டோம். வாசலில் கொண்டு விட 20 ரூபாய் கட்டணம். ஒரு மாணவர்தான் போக வேண்டும். மற்ற இரண்டு பேரும் அருகிலேயே வேறு எங்கோ போகிறார்கள்.

சிறுசேரியிலிருந்து சோழிங்கநல்லூர் வரை போவதற்கு வேன் ஒன்றில் ஏறிக் கொண்டேன். 15 ரூபாய் என்று சொன்னவர்கள் 10 ரூபாய் என்று குறைத்துக் கொண்டார்கள். வழியில் நின்று நின்று போனார்கள். வங்கியில் பணம் எடுத்து செல்பேசி பில் கட்ட வேண்டும். வடபழனி அல்லது போரூரில் வோடபோன் கடைகள் இருக்கின்றன. சோழிங்கநல்லூரில் ஆந்திர வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் 19B பிடித்தேன். உட்கார இடம் கிடைத்தது. சத்யபாமாவில் மூன்று பெண்கள் உரக்கப் பேசிக் கொண்டே ஏறினார்கள். ஒரு பெண் தன் கைபேசியில் பாடல் ஒலிக்க விட்டுக் கொண்டார். முன் இருக்கையில் உட்கார்ந்திருந்தவர் திரும்பி பேசிக் கொண்டே இருந்தார். நடத்துனர் நடந்து நடந்து டிக்கெட் கொடுத்தார்.

அண்ணா பல்கலை அருகில் இறங்க வேண்டும். 21G அங்கு நிற்குமா என்று கேட்டவரிடம் தூக்கக் கலக்கத்தில் எதிர் புறம் போக வேண்டும் என்றார் நடத்துனர். அவரைத் திருத்தி விட்டு இறங்கினோம். மர நிழலில் நிற்கும் போது வெளியூர் பேருந்து ஒன்று வந்து நின்றது. ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். 15 ரூபாய் கட்டணம். அருகில் பெரிய பையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த இளைஞர் பையை மடியில் வைத்துக் கொண்டு இடம் கொடுத்தார். உட்கார்ந்து கொண்டேன். அவர் ஆழ்ந்த உறக்கத்த்துக்குப் போய் விட்டார்.

வடபழனியில் பேருந்து நிறுத்தம் தாண்டி நிறுத்தினார். அதே திசையில் நடந்து காவல் நிலையத்துக்கு பின் பக்க சந்தில் திரும்பினேன். நிறைய சிறுவர்கள் சத்தம். அங்கு ஒரு ஆரம்ப பள்ளி, எம்ஜிஆர் ஆரம்பப் பள்ளி என்று இருந்தது. பகிர்வூர்திகள் போகும் தெரு வழியாக வந்தேன். ஒரு அச்சகம் இருந்தது, புத்தகப் பிரதிகளை கைவசம் வைத்திருந்தால் பின் போடச் சொல்லிக் கேட்டிருக்கலாம் என்று தோன்றியது. சூர்யா மருத்துவமனை அருகில் போக வேண்டும். கொஞ்சம் தூரம்தான். இடது புறமாக நடந்தே போனேன். வழியில் தி வீக் பத்திரிகை வாங்கிக் கொண்டேன். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சோழிங்கநல்லூரிலிருந்தே இடம் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு கடை வளாகத்துக்குள் போய் தேடினால் எதுவும் கிடைக்கவில்லை. வடபழனி பேருந்து நிலையத்துக்குள் ஒரு பெண் வெளியில் காசு வாங்க உட்கார்ந்திருக்க ஒரு மறைப்புடன் கழிவறை வைத்திருந்தார்கள். 2 ரூபாய்.

வலது புறமாக நடந்து சூரியா மருத்துவமனை சாலை நிறுத்தம் தாண்டி வோடபோன் கடை. நுழைவாசலிலேயே ஒரு கியோஸ்க் இருந்தது. அதில் பணம் செலுத்தும் வசதியும் இருந்தது. முதலில் தொலைபேசி எண், அதைத் தொடர்ந்து பில் செலுத்த வேண்டும் என்ற தேர்வு. செலுத்த வேண்டிய தொகையைக் காட்டியது, அதன் பிறகு பணமாகவா, காசோலையாகவா என்று கேள்வி. ஒவ்வொரு பண மதிப்புக்கும் படம் போட்டு எண்ணிக்கை 0 என்று வந்தது. நோட்டை செலுத்த செலுத்த எண்ணிக்கை கூடியது. முடித்ததும் ஒரு ரசீது வந்தது. வேலை முடிந்தது. இவ்வளவு உயர் தொழில் நுட்பம்!

அடுத்த 10 நிமிடங்களுக்குள் பண வரவு வைக்கப்பட்டாத குறுஞ்செய்தி, அழைக்கும் வசதி திரும்பக் கொடுத்திருந்தார்கள். ஆவிச்சி பள்ளிக்கு அருகில் இருக்கும் சாலை சந்திப்பில் சாலிகிராம சாலை முனையில் இருக்கும் கடைக்குப் போக வேண்டும் என்று ஒரு ஆவல். அது ஒரு பேக்கரி என்று நேற்றுதான் தெரிந்தது. எப்போதுமே கூட்டமாக பரபரப்பாக இருப்பதை சாலையிலிருந்து பார்த்திருக்கிறேன். உள்ளே போனேன். ப ்ப்ஸ் அல்லது சமோசா சாப்பிடத் தோன்றவில்லை. பருப்புப் பொடி ஒரு பேக்கட், முறுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டேன். விலை அதிகம்தான்.

ஆற்காடு சாலையைக் கடந்து ஆவிச்சி பேருந்து நிறுத்ததுக்கு முன்னதாகவே பகிர்வூர்தியில் ஏறிக் கொண்டேன். பின் இருக்கையில் பெண்கள், முன் இருக்கையில் ஓட்டுனருடன் ஒரு ஆண், நான் ஓட்டுனரின் வலது புறம் உட்கார்ந்து கொண்டேன். இடையில் இன்னொருவரையும் ஏற்றி பின் இருக்கையின் பக்கவாட்டில் போட்டிருந்த பலகையில் உட்காரச் சொல்லி விட்டார். தெருமுனையில் இறங்கி நடந்து வந்து சேர்ந்தேன்.

இணையம் மிக வசதியாக இணைந்தது. வேகம் குறைவாக இருந்தாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் கூகுள்+, மற்ற தளங்களை மேய முடிந்தது. 6 மணி வரை அதைச் செய்து கொண்டிருந்தேன். காலையில் கொடுத்து விட்டுப் போயிருந்த பாட்டிலில் குடிதண்ணீர் பிடித்து வைத்திருந்தார்கள். அதனால் குடிப்பதற்கு தண்ணீரும் பிரச்சனை இல்லை.

அப்படியே ஹாட்சிப்ஸ் அருகில் போய் தேநீர் குடித்தோம். பத்திரிகைகள், பதிப்புத் துறை, புத்தகக் கண்காட்சி என்று பேசி விட்டுத் திரும்பினோம். வீட்டுக்கு அருகில் இருக்கும் உணவு விடுதியில் 4 இட்லி, ஒரு தோசை சாப்பிட்டேன். நன்றாகவே இருந்தது. மொத்தம் 31 ரூபாய். திரும்பி அறைக்கு வந்து தொலைபேசி எப்போது வருவார் என்று கேட்டு விட்டுத் தூங்கி விட்டேன். கொசுக்களை விரட்ட வத்தி பொருத்திக் கொண்டேன்.

நல்ல தூக்கம்தான், ஆனால் கண்கள் சிவந்து உறுத்துகின்றன. குறிப்பாக இடது கண்.

0 கருத்துரைகள்: