என்னைப் பற்றி

எனது புகைப்படம்
mobile : 9884070556
நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பு, 
சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்ப பட்டம்
தேவாஸ் (மத்திய பிரதேசம்) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (டாடா) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (பிஎல்சி) நிறுவனத்தில் வேலை
சொந்த நிறுவனம் பிஎஸ்ஜி லெதர் லிங்க். 

Tuesday, January 10, 2012

புத்தாண்டு!!!


ஜனவரி 10, 2012 காலை மணி 6.28

நேற்று முழுக்க முழுக்க சுயமாக திட்டமிட்டுக் கொண்டு வேலை செய்த நாள்.  காலையில் சோர்வு தீர தாமதமாக தூங்கி எழுந்து, நாட்குறிப்பு எழுதிமுடித்த பிறகு காலை உணவுக்குத் தயாரிப்பு. எழுந்த உடனேயே கலக்கி வைத்திருந்த ரவை+கோதுமை மாவு+சீரகம்+வெங்காயம்+உப்பு தோசை, மிளகாய்ப் பொடியுடன். ஆம்பூருக்குப் போக வேண்டும் என்று போன வாரம் சொல்லியிருந்தேன். துணி துவைக்க வேண்டியிருந்தது, துவைத்துப் போடப்பட்டிருந்து துணிகளை தேய்க்க வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் போக முடியும்.

கீழே போய் கொடுத்து வைத்திருந்த குடங்களில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தேன். தேங்காயை உடைப்பதற்கு பையில் போட்டு எடுத்துப் போய் மறந்து வைத்து விட்டு வந்திருந்தேன். பின்னால் மதியம் போய் எடுத்துக் கொண்டேன்.

இணையத்தில் இணைந்து கூகுள் ரீடரிலோ, +லோ ஹரன் பிரசன்னாவின் கட்டுரை கண்ணில் பட்டது. அரவிந்தன் நீலகண்டனின் புத்தக பரிந்துரை. விமர்சனம் போல இல்லாமல் fanboy புல்லரிப்பாக எழுதியிருந்தார். 'கம்யூனிசம் தோற்று விட்டது, உலகமெங்கும் கம்யூனிசம் இல்லாமல் போய் விட்டது, மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் கூட கம்யூனிஸ்டுகள் தோற்று விட்டார்கள்' என்று பிரச்சாரம் செய்யும் இந்துத்துவாக்களின் பிரதிநிதி அரவிந்தன் நீலகண்டனுக்கு இப்படி ஒரு சிரமம் ஏன் என்று தெரியவில்லை. 'பாரத தர்மத்தைக் கட்டி அமைக்க' ஆக்க பூர்வமான வேலைகளில் ஈடுபடுவதை விட்டு இல்லாத ஒரு அச்சுறுத்தலை எதிர்த்து ஏன் புலம்புகிறார்? +2 படிக்கும் மாணவர்களைக் கூட கம்யூனிசம் ஈர்த்து விடக் கூடாது என்று ஏன் முயற்சியோ!

மார்க்சிசத்தின் அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம், அதைத் தவிர்த்த மற்ற தத்துவங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் கருத்து முதல்வாதமாக போய் விடுகின்றன. அவற்றில் இயக்க மறுப்பு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். அறிவியல் அணுகுமுறையின் அத்தனை கூறுகளையும் கம்யூனிச இயக்கங்கள் பின்பற்றுகின்றன. தரவுகளைத் திரட்டி, ஆய்வு செய்து அதிலிருந்து முடிவு செய்வது, விமர்சனம்/சுயவிமர்சனம் (peer review, review) போன்றவை.

அறிவியல் அணுகுமுறையின் அடிப்படை புரிதல், உண்மைகள் எல்லாமே பொருட்களை ஆராய்வதன் மூலம்தான் தெரிய வர முடியும். மனதில் எவ்வளவு போட்டு சிந்தித்தாலும் புதிய உதித்தல்கள் சாத்தியம் கிடையாது, அப்படியே உதித்தல்கள் ஏற்பட்டதாக நினைத்தாலும், அதன் உண்மை நடைமுறையில் நிரூபிக்கப்பட வேண்டும்.

உலகைப் பற்றிய நமது புரிதல் ஒரு மேல் நோக்கிப் போகும் சுழல் வட்டமாக இயங்குகின்றன. ஒரு பொருளில் அல்லது கருத்தில் எதிர்மறையான இரண்டு தன்மைகளின் சமநிலை எப்போதும் இருக்கிறது.

இப்படி அறிவியல் சார்ந்தவர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளும் வழியில் மார்க்சியமும் அதன் அடிப்படையிலான கம்யூனிச நடைமுறைகளும் இருக்கின்றன. இதைக் குறை சொல்வதற்கு, 'விஷ்ணுவின் தொப்புளிலிருந்து பிரம்மா தோன்றினார், பிரம்மா உலகைப் படைத்தார்' என்று கற்பனையான கருத்து முதல் வாதங்களை முன் வைக்கும் இந்துத்துவா பணியாளருக்கு எப்படி தகுதி இருக்க முடியும்?

இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் செயல்முறைகளை விமர்சனம் செய்வதற்கு, முறையாகப் படிக்காமல் நாட்டுப் புறத்தில் மருத்துவம் செய்யும் சித்த மருத்துவருக்கு  என்ன தகுதி இருக்க முடியும்?

இதை ஒரு சிறப்பான, முக்கியமான பணியாக அவர் எழுத, அதை கிழக்கு பதிப்பகம் ஆர்வமாக பதிப்பித்து வெளியிட, இணையத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் விற்பனைக்கு விளம்பரங்கள் செய்ய, இதன் மூலம் பெரும் விவாதம் தமிழ்நாட்டில் உருவாகும் என்று நாக்கைச் சப்பிக் கொண்டு இருக்கிறார்கள். மார்க்சியம் படித்து கடைப்பிடித்து வரும் அறிஞர்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தரம் கூட இது போன்ற புத்தகங்களில் இருக்க முடியாது.

பத்ரியின் பதிவிலிருந்து வாசகங்களை எடுத்து கம்யூனிசம் என்பதை அறிவியல் என்று மாற்றி இடுகை செய்தது போல, ஹரன் பிரசன்னாவின் இடுகையையும் போட்டேன்.  உடனேயே கூகுள் பிளஸ்சில் வெளியாகி விட்டது. பாரதியும், அகிலனும் உடனேயே எதிர்வினை செய்தார்கள். 'அறிவியல் பேரழிவை ஏற்படுத்துகிறது என்றால், பேசாமல் சோதிடம், மூட நம்பிக்கைகள் என்று மக்கள் போகலாமா' என்று அகிலனின் கேள்வி  நச்சென்று அமைந்தது. அதைத் தொடர்ந்து விளக்கம் அளித்தேன். அங்கிருந்தும், தமிழ்மணத்திலிருந்தும் கணிசமான பேர் வந்து படித்திருக்கிறார்கள்.

முதலில் இந்த கிண்டல் பதிவைப் படித்து விட்டு ஒரிஜினலைப் படித்தால் அவர்கள் எழுதுவதன் அபத்தம் தெரியும். தேவைப்பட்டால், முடிந்தால் முழு நூலுக்கும் இது போன்று ஒரு spoof செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு முயற்சி தேவையா என்று யோசிக்க வேண்டும். கூடுதல் மதிப்பு அளிப்பதாக போய் விடக் கூடாது.

வெள்ளிமலருக்கு கட்டுரை எழுத வேண்டும். திங்கள் கிழமை அனுப்புவதாக ஏற்பாடு, எழுத ஆரம்பித்து முடிக்க முடியவில்லை.

துணிகளை துவைப்பதற்கு ஊற வைத்து விட்டிருந்தேன். 10 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது.  அதன் பிறகும் படிப்பது, எழுதுவது என்று நேரம் நகர்ந்தது. துணி துவைத்து காயப் போட்டு விட்டு, முடி வெட்டப் போகலாமா என்று யோசித்தேன். மதிய உணவுக்கு சோறு, உருளைக் கிழங்கு வேக வைத்திருந்தேன். முடி வெட்டப் போனால் ஆம்பூர் போக முடியாது என்று முடிவு செய்து குளித்து, சட்டை, பேன்ட் தேய்த்து விட்டு கடைக்குப் போய் தயிர் வாங்கி வந்தேன். தயிரை கலக்கி உப்பு போட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து அடுத்ததாக உருளைக்கிழங்கை பொடியாக்கி, வெங்காயத்துடன் வதக்கி, கடைசியில் தேங்காய் துருவிச் சேர்த்துக் கொண்டேன். வாங்கி வந்திருந்த முட்டைகளை உடைத்து வெங்காயம் சேர்த்து ஆம்லெட்.

அப்போது ராணிப்பேட்டையிலிருந்து பேசினார். 'இன்றைக்கு என்ன திட்டம், ராணிப்பேட்டை வர முடியுமா' என்று கூப்பிட்டார். 1.30 ஆகியிருந்தது. ஆம்பூர் போனால் மாலை தாமதமாகி விடும், அதை ரத்து செய்து விட்டு ராணிப்பேட்டை போக முடிவு செய்தேன். சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டு 4.30 போல வருவதாகச் சொன்னேன். சாப்பிடும் போது வந்தார். அவரிடம் தபால் அலுவலக ரசீதைக் கொடுத்தேன். பாத்திரங்களை எல்லாம் கழுவி, மீன் குழம்பு செய்வது பற்றி விளக்கினார். சாப்பிட்டு விட்டு மீதி இருந்த சோறு, தாளித்த மோர், உருளைக் கிழங்கை இரவுக்காக எடுத்து மூடி வைத்தார். அவரை சாப்பிடச் சொன்னால் சாப்பிட வில்லை.

'இந்த வீட்டில் முன்பு இருந்த பையன் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான்' என்று தகவல் சொன்னார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம், வீட்டுக்கு அழைத்துப் போனவர்கள் மீண்டும் படிக்க போகச் சொன்னதை மறுத்து இரண்டு நாட்கள் முன்பு தற்கொலை செய்து கொண்டதாக பக்கத்து வீட்டு பையன்கள் சொன்னார்களாம். இது போன்று தனியார் கல்லூரிகளில் எத்தனை தற்கொலைகள்!

3 மணிக்குப் புறப்பட்டேன். வேலூர் பேருந்து நிலையம் போய் வாலாஜா இறங்கி, முத்துக் கடை வந்து, சிப்காட் போவதற்கு பதிலாக,  10ம் எண் பேருந்து பிடித்து நேராக சிப்காட் போய் விடலாமா என்று திட்டம் போட்டு சாலையின் இந்தப் பக்கமாகவே நின்றேன். நாளிதழ் கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன். கடைசி பிரதி போலிருந்தது. விசேஷமாக செய்திகள் எதுவும் இல்லை.

3.15 வரை காத்திருந்து பார்த்து விட்டு, நகரப் பேருந்து ஏறி சித்தூர் பேருந்து நிலையத்துக்குப் போய் அங்கிருந்து வேறு தடங்களும் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று போனால் சாலை சந்திப்பில் பெரிய கூட்டம். நல்ல வெயில்.  3.30 வரை காத்திருந்து பார்த்து விட்டு மீண்டும் நகரப் பேருந்து ஏறி புதிய பேருந்து நிலையத்துக்கு சீட்டு எடுத்துக் கொண்டேன். புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கி நெடுஞ்சாலை பாலத்தின் அருகில் இருக்கும் போலீஸ் குடைக்கு அருகில் வந்து சேர்ந்தேன். நல்ல வெயிலில் காய்வு. நிற்க நிழல் கூட இல்லை. 102B இடைநில்லா பேருந்து, வாலாஜா போகாது. அரக்கோணம் போகும் தனியார் பேருந்து, ஆற்காட்டில் நிறுத்தி வைத்து கடுப்பேற்றுவார்கள், திருத்தணி போகும் அரசுப் பேருந்து நிறுத்தாமல் சாலையில் நடுவில் போனார்கள், கடைசியில் தலங்கை பேருந்து வந்தது. ஆற்காடு, ராணிப்பேட்டை, முத்துக் கடை, வாலாஜா போய் போகும்.

முத்துக் கடையில் இறங்கிக் கொள்ளலாம். மூன்று பேர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். ஊருக்கு வெளியில் வெகுதூரம் வந்த பிறகுதான் சீட்டு கொடுக்க வந்தார் நடத்துனர். 14 ரூபாய் முத்துக்கடைக்கு, வாலாஜாவுக்கும் அதுதானா? ஆற்காடு அருகில் நிறைய பள்ளிச் சிறுவர்கள் ஏறி மூன்று பேர் இந்த இருக்கைக்குள் நெருக்கிக் கொண்டார்கள். இன்னொரு பையன் நின்று கொண்டிருந்தான். பின் இருக்கையில் உட்கார்ந்தவர்களின் ஒருவன் 'அங்கிள், ஜன்னலைத் திறந்து விடுங்க என்று சொல்ல கண்ணாடி ஜன்னலை கஷ்டப்பட்டு ஏற்றி விட்டேன். இந்த இருக்கையில் இருந்தவர்களுக்கிடையே 'அங்கிள் என்றால் என்ன பொருள்' என்று விவாதம்.

முத்துக் கடையில் இறங்கியதும் தனியார் மினி பேருந்து நின்றது. உட்கார இருக்கைகளும் காலியாக இருந்தன. ஏறி எத்தனை மணிக்குப் புறப்படும் என்று கேட்டால் 4.45 என்றார்கள், 4.35 ஆகியிருந்தது. ஆட்டோ பிடிப்பதற்கு இதிலேயே காத்திருந்து போகலாம். 4.45க்கு எடுத்து விட்டார்கள். பாரதி நகர் அருகில் வரும் போது தொலைபேசி 5 நிமிடங்களில் வந்து விடுவேன் என்று சொன்னேன். வண்டி எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். முடியா விட்டால் நடந்தே வந்து விடுவதாகச் சொன்னேன்.

இறங்கி சாலையைக் கடந்து, ரவுண்டானா தாண்டி அந்த சாலையிலும் பாதி தூரம் போன பிறகு எதிரில் வந்தார். ஏறி அவர்கள் அலுவலகத்துக்குப் போனோம். முதலில் பதிவுகள், அரசியல் என்று பேச்சு, அதன் பிறகு ராணிப்பேட்டை அல்லது வேலூரில் பிடெக் பகுதி நேரப் படிப்பு ஆரம்பிப்பது குறித்து எனது கருத்து கேட்டார். குடிப்பதற்கு இத்தாலிய தேநீர் ஒன்று தயாரித்துக் கொடுத்தார். கெமிக்கல்ஸ் பற்றியும் பேச வேண்டும் என்றார். அவரது பங்குதாரரும் வந்த பிறகு பேச வேண்டும். 6 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டது. வெளியில் போகலாம் என்று புறப்பட்டு, காரிலேயே உட்கார்ந்து பேசலாம் என்று ஏசி போட்டு உட்கார்ந்தோம்.

அவர்கள் வணிகத்துக்கு வாடிக்கையாளர் பிடித்துக் கொடுக்க முடியுமா என்று புரபோசல் வைக்கிறார்கள். அமைதியாக அவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு, எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டேன். 'மென்பொருள் சேவை அளிக்கும் வேலை ஆரம்பித்த பிறகு தோல் துறையில் வணிக ரீதியாக எந்த வேலையும் செய்யப் போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பதாகவும் அதை மாற்ற முடியாது. மாற்றுவது அதை நம்பி சேவை வாங்கிய, வாங்கிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது போலாகும் என்று சொல்லி விட்டேன். வேண்டுமென்றால் நட்பு ரீதியாக அறிமுகம் செய்யலாம், எந்த பண பரிமாற்றமும் இருக்கக் கூடாது.'

போகும் வழியில் விட்டு விடுவதாகச் சொன்னார்.  திருவலம் வழியாக வேலூர் போகும் சாலைக்கு வந்தோம். அவரது காலணியை வேலூரில் ரிப்பேர் செய்யக் கொடுக்க வேண்டுமாம். பேசிக் கொண்டே வந்தோம். அவரது மகனுக்குத் தொலைபேசி படிப்பு பற்றி உத்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார். படிப்பு என்பது வியாபாரம் ஆகிப் போய் விட்டது என்று சலித்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து சிஎல்ஆர்ஐ பற்றிப் பேச்சு வந்தது, சிஎல்ஆர்ஐயினால் துறைக்கு எந்த பலனும் இல்லை என்று வாதிட ஆரம்பித்தார். அதை எதிர்த்து உறுதியாக, கடுமையாக கருத்து சொன்னேன்.

கடைக்குப் போய் விட்டு திரும்பி காட்பாடி சாலை வழியாக வரும் போது கோபாலபுரம் அருகில் இறங்கிக் கொண்டேன். போவதற்கு செலவழித்த 25 ரூபாய் மட்டும்தான் செலவு. வீட்டுக்கு வந்து சோறு சாப்பிட்டு விட்டு இணையத்தை மேய்ந்தேன். களைப்பாகவே இருக்கவே சிறிது நேரத்தில் தூங்கப் போய் விட்டேன். கட்டுரைகள் எழுத வேண்டும். இன்று ஆம்பூர் போக வேண்டும்.

இதை முடித்து விட்டு காலை உணவு தயாரித்துக் கொள்ள வேண்டும் (7.45). தொடர்ந்து சட்டைகளை தேய்க்க வேண்டும் (8.30). கட்டுரையை முடிக்க வேண்டும் (9.30). அடுத்து ஊற வைத்திருக்கும் நான்கு துணிகளை  அலசிப் போட்டு விட்டுக் குளித்துப் புறப்பட வேண்டும் (10.30). வங்கியில் காசோலையை போட வேண்டும். ஆம்பூருக்குப் போய்ச் சேரும் போது 12 மணி ஆகி விடும். ஆம்பூரில் வேலைகளை முடித்து விட்டு 4 மணி வாக்கில் புறப்பட்டுத் திரும்பி விடலாம்.

காசு கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு பதில் போட்டு விட்டேன். நேரில் வந்தால்தான் கொடுக்க முடியும். வந்ததும் கொஞ்சம் கேள்விகள் கேட்க வேண்டும்.

0 கருத்துரைகள்: