டிசம்பர் 20, 2011, காலை 5.20
நேற்றுக் காலையில் சீக்கிரம் எழுந்து நாட்குறிப்பு எழுதி விட்டு பொருட்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திட்டம். தூக்கம் நீண்டு விட்டது. 6 மணிக்குப் பிறகுதான் எழுந்திருந்தேன். வீடு மாற்ற வேண்டும். கொஞ்ச நேரம் கடைசியாக இணையத்தில் இணைந்து மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டேன். அப்படியே முன்னறையிலிருந்து புத்தகங்களை எடுத்து அட்டைப்பெட்டிகளுக்குள் வைக்க ஆரம்பித்தேன். தொலைக்காட்சியில் புதிய தலைமுறை ஓட விட்டிருந்தேன்.
கதவு தட்டும் சத்தம். வீட்டுக் காரர் வந்து சேர்ந்தார். அவரிடம் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் போய் சிமென்டு கடை அருகில் ஆட்களை கூட்டிக் கொண்டு வருவதாகவும் சொன்னேன். 'ஏன், நம்ம வாட்ச்மேன் செய்வாரே' என்று அவரை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.
'ஆமா, லட்சுமி கூடச் சொன்னாங்க, அவரால தூக்கிக் கொண்டு போக முடியுமா என்று சந்தேகத்தில்தான் சொல்லவில்லை' என்று சொன்னேன்.
அவரது பையனும் வருவான், முடித்து விடுவதாக அவர் ஏற்றுக் கொண்டார்.
வீட்டுக் காரர் மேட்ரிமோனி பார்ப்பதற்காக எனது கணினியில் உட்கார்ந்தார். தமிழ் மேட்ரிமோனி டாட் காம் உள்ளே போனால் அது பாரத் மேட்ரிமோனியின் ஒரு பகுதிதான் போலிருக்கிறது. அப்படியே தெலுங்கு மேட்ரிமோனிக்குப் போய் விட்டது. அவரது பையனுக்குப் பெண் பார்க்கிறார். பையனின் புரொபைலில் அவருடன் உட்கார்ந்து சில பெண்களின் விபரங்களைப் பார்த்தேன். 8 மணிக்கு மின்சாரம் தடைப்படும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்.
இரண்டு நாட்கள் முன்பு இது போல மேட்ரிமோனி தளத்தில் பெயரைப் போட்டு ஜல்லியடித்துக் கொண்டிருந்த ஒரு ஆன்மீகவாதியைப் பற்றிப் பேசினோம்.
முன்னறையில் இருந்த புத்தகங்கள், கட்டில், 3 புத்தக அலமாரிகள், 2 மேசைகள், சமையலறை பொருட்கள், புத்தகங்கள், கோப்புகள் என்று காட்டி 'எவ்வளவு கேட்பீர்கள்' என்று கேட்டேன்.
'600 ரூபாய்' என்றார்.
'என்னப்பா இவ்வளவு சொல்றே' என்று அதட்டினார்.
'நீங்க எவ்வளவு சொல்றீங்களோ அதைக் கொடுத்து விடுகிறேன் சார்' என்றேன்.
அவர் '400 ரூபாய்' என்றார்.
'500ஆவது கொடுங்க சார்' என்று கேட்டார்.
'அதெல்லாம் முடியாது.'
நான் கண்ணைக் காட்டி வேலையை ஆரம்பிக்கச் சொன்னேன். அப்படியே மேலும் அட்டைப்பெட்டிகளை எடுத்து உள் அறையில் இருந்த அலுவலகப் பொருட்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தேன். ஏழரை மணிக்கு ஆரம்பித்தது சுமார் 11.30 வரை போனது. ஒரு மணி நேர வேலைதான் இருக்கும் என்று நான் சொன்னது மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டு என்னை மிரட்ட ஆரம்பித்திருப்பார்கள் வெளியிலிருந்து அழைத்து வந்திருந்தால்.
ஒரு 8.15 போல தேநீர் போட்டுக் கொடுத்ததாக வாட்ச்மேன் கொண்டு வந்தார். வீட்டுக்கார அம்மா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதைக் குடிக்கும் போது வாட்ச்மேன் தனது கதையைச் சொன்னார்.
பெங்களூரில் சொந்த பிசினஸ் பண்ணிக் கொண்டிருந்தேன். எல்லாம் நஷ்டமாகவே இங்கே வந்தேன். இங்கு செக்யூரிட்டியாக இருப்பவர்தான் என்னை நைட் டியூட்டிக்கு வரச் சொன்னார். 6,000 ரூபாய் தராங்க, அதில என்ன செய்ய முடியும் சொல்லுங்க. பஸ்ஸூக்கே தினமும் 30 ரூபாய் ஆகி விடுகிறது, ஒரு டீ குடிச்சா 10 ரூபா. இப்படி தினமும் 50 ரூபா, ஒன்னரை ஆயிரம் அதுக்கே போய் விடுகிறது. மீதியை எடுத்துக் கிட்டுப் போய் சரியா குடும்பம் நடத்தத்தான் முடியுது.
எங்க அப்பா விட்டுட்டுப் போன இடத்தில் அண்ணனுங்க எல்லாம் வீடு கட்டிகிட்டாங்க, போன வருஷம்தான் நான் வீடு கட்டினேன். அது வரை ஒரு கொட்டாய் போட்டுத்தான் இருந்தோம். கலைஞர் வீடு கட்டும் திட்டம் வந்தது அல்லவா. 50,000 கொடுத்தாங்க. மொத்தம் 2 லட்சம் செலவாச்சு. மீதி ஒன்றரை லட்சம் நான்தான் புரட்டிப் போட்டேன். வேறு சொத்து எதுவும் கிடையாதுங்க. நான் வேலை செய்துதான் 4 பேர் குடும்பத்தைக் காப்பாற்றணும். பையன் +2 படிக்கிறான். பொண்ணு 9ம் வகுப்பு படிக்குது.
இந்த பையனை ராணுவத்துக்கு அனுப்பிடலாம் என்று தேர்வு எழுதுகிறான். எக்சாமில் பாஸ் ஆவதற்கு 1.25 லட்சம் செலவாகுமாம். ஒரு புரோக்கருக்குக் கொடுக்கணும். அதுக்கும் ஏற்பாடு செய்து கிட்டு இருக்கேன். ஒரு அண்ணன் தரேன்னு சொல்லியிருக்கிறார். கொஞ்ச வட்டி போட்டுக் கொடுக்கணும்.
அதனால் இந்த டியூட்டி முடிஞ்ச பிறகு கார்பென்டர் வேலைக்குப் போவேன். வீடு கட்டும் போது ஒரு வருஷமா அதுக்கும் போகல. இப்பத்தான் ஒரு மாசமா போக ஆரம்பிச்சிருக்கேன். இன்னைக்குப் போக முடியாது சார். அதான் வேலைக்குப் போன கிடைக்கக்கூடிய கூலியைக் கேட்டேன் என்றார்.
இன்னும் சில சாமான்களை எடுத்து வைத்து விட்டு ஒரு இடைவேளை விட்டுக் கொள்ளலாம். காலை உணவை சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு தொடரலாம் என்று பேசிக் கொண்டோம். மாறும் வீட்டில் முதலில் ஒரு வரவேற்பறை, அதிலிருந்தே இரண்டு அறைகளுக்கான கதவு, வலது புறமாக. வரவேற்பறையை கடந்து போனால் சமையலறை, அதிலிருந்து வெளியில் போனால் ஒரு நடைபாடை, தாண்டி குளியலறை+கழிவறை. பெரிதாக இருந்தது.
வாசலிலிருந்து பார்த்தால் தெருவின் பல வீடுகளும், மூன்று தெருக்களும் தெரியும் பறவைப்பார்வை. இரண்டாவது அறையிலிருந்துப் பார்த்தால், நடைபாதையில் திறக்கும் ஜன்னல் வழியாக பக்கவாட்டுத் தெருவையும் வீடுகளையும் பார்க்கலாம். நல்ல இடம்தான். முதல் அறையில் ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது, இரண்டாவது அறையில் ஜன்னலே போட்டிருக்கவில்லை. சமையலறையிலும் குளியலறையிலும் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கவில்லை. இவற்றைச் சொல்லி சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் குளிர் காலத்தில் விறைத்துப் போய் விடும்.
முன்னறையில் இருக்கும் அலமாரியில் படிக்கக் கூடிய புத்தகங்களை எல்லாம் அடுக்கி விட வேண்டும். இரண்டாவது அறையில் தொழில் நுட்ப புத்தகங்கள், பயன்படுத்தும் கோப்புகள், காகிதங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். முதலாவது அறையில் மற்ற புத்தகங்கள், கோப்புகள் வைக்க வேண்டும்.
அறையை நிலைப் பூட்டால் பூட்டி விட்டு வெளியில் வந்தேன். இந்த வீட்டைப் பூட்டவில்லை. மதிநகர் சாலை வழியாக நடந்து சாலைக்கு வந்து, எச்டிஎப்சி வங்கி பண எந்திரத்தில் பணம் எடுத்தேன். அதற்கு முன்பே பெட்ரோல் நிலையத்தில் 500 ரூபாயை 100களாக மாற்றிக் கொண்டேன்.
டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு அறுசுவை உணவகத்தை எட்டிப்பார்த்தால் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. கோபால புரம் வழியாக நடந்து மெஸ்சுக்கு வந்தேன். வெளியில் வாசலில் சிமென்ட் பூசியிருந்தார்கள். அதை மிதிக்காமல் பக்கவாட்டில் நடந்து உள்ளே வந்தேன். மெஸ்காரர் வெளியில் நின்றிருந்தார். 'நீங்க வந்திருக்கீங்க என்பதையே மறந்துட்டேன்' பாருங்க என்று உள்ளே வந்தார். 'வயதாகி விட்டது என்பதன் அறிகுறி' என்று சொல்லி விட்டேன். அவருக்கு மனதில் தைத்திருக்க வேண்டும். என்னதான் வயதானாலும் வயதானதை ஏற்றுக் கொள்ள முடியாததுதான் மனித இயல்பு. நம்மைப் போல எல்லோரும் இருக்க மாட்டார்களே.
சாப்பிட்டு விட்டு 100 ரூபாய் கொடுத்தால் சில்லறை இல்லை, ஐந்து 10 ரூபாய் தாள்களை கொடுத்தேன். இனிமேல் 100 ரூபாய்களும், 500ருபாய்களும் சில நாணயங்களும்தான் உண்டு. திரும்ப வீட்டுக்கு வந்தேன். வாட்ச்மேனும் அவரது மகனும் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தார்கள்.
கதவைத் திறந்து விட்டு தொடர்ந்து பொதிதலை ஆரம்பித்தேன். மடிக்கணினியையும் பொதிந்து, தொலைபேசி இணைப்பை அறுத்துக் கொண்டேன். தொலைபேசி கருவி, இணைப்புக் கருவி, பிரிக்கும் பெட்டி மூன்றையும் எடுத்துக் கொண்டேன். அவர்கள் தந்திருந்த படிவத்தையும் நிரப்பினேன்.
இந்த வீட்டுக்கு வந்து கணினியில் பிஎஸ்என்எல் 3G கருவியை இயக்கிப் பார்த்தால் வேகமாகவே செயல்பட்டது. அது ஒரு திருப்தி. சிக்கல் எதுவும் வரக் கூடாது என்றுதான் ஊகம். இரண்டாவது மாடியில் கீழே இருப்பதை விட சிறப்பாகத்தான் கிடைக்க வேண்டும். அப்படியே தொலைபேசி என்ன சிக்கல் என்று கேட்டேன். ஐபி வாங்கி நிரலை இயக்கி விட்டுக் கொண்டேன். அவரே இயக்குவதற்கான வழிமுறையை மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டார். அனுப்பவில்லை. தொடர்ந்து வேலை இருக்கிறதே. அப்போது மணி 9.
அதன் பிறகு 3 புத்தக அலமாரிகளையும் கொண்டு வந்தார்கள். அவற்றை முதல் அறைக்குள் போட்ட பிறகு, முன்னறையில் வைத்திருந்த புத்தக பெட்டிகளை எடுத்து இடம் மாற்றச் சொன்னேன். கணினிகளையும் மேலே வைத்து விட்டோம். இரண்டாவது அறையை ஒழித்து விட்டு மேசைகளை அங்கு போடச் சொன்னேன். கணினிகளை இரண்டாவது அறையில் மேல் பரணில் நிற்க வைத்தோம். முன்னறையில் தொலைக்காட்சி. கட்டிலை எங்கு போடுவது என்றுதான் குழப்பம். கட்டிலின் மீதே ஒரு ஸ்டூலைப் போட்டு தொலைக்காட்சியை வைத்து விடச் சொன்னேன். நன்றாகவே இருந்தது. கேபிளையும் வாங்கிக் கொள்ளலாம்.
பேட்டரிகள், இன்வெர்டர் வீட்டுக்கு வெளியில் வைத்து விட்டார்கள். 500 ரூபாய் கொடுத்ததும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். 'ஏதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்க சார், காசு எதுவும் கேட்க மாட்டேன். வந்து செய்து தருகிறேன்' என்றார்.
தொலைபேசி மதியம் 2 மணிக்கு மேல் வருவதாகச் சொல்லி விட்டிருந்தேன்.
அவர்கள் போன பிறகு கணினியில் சிறிது நேரம் செலவழித்தேன். குளிக்க வேண்டிய வாளி, கோப்பைகள், சோப்பு, துவர்த்து எடுத்துக் குளித்து உடை மாட்டிப் புறப்பட்டேன். அப்படியே தொலைபேசி கருவி வைத்திருந்த பையை ஒரு முறை மறந்து மறு முறை வந்து எடுத்துக் கொண்டேன். மீனாட்சி பவனில் சாப்பிட்டு விட்டு பிஎஸ்என்எல் போகலாம் என்று நினைத்து அப்படிச் செய்யாமல் கோபாலபுரம் வழியாக மெயின்ரோடுக்கு வந்து பிஎஸ்என்எல் போனேன். கட்டணம் கட்ட காசோலை எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைவுக்கு வந்தது. ரொக்கமாக கட்ட வேண்டியதுதான். 1000 ரூபாய் கட்டினேன்.
இணைப்பைத் துண்டிக்க விண்ணப்பம் கொடுத்தால் 'சாப்பாட்டு நேரத்தில் வந்திருக்கீங்களே' என்று சொல்கிறார். 'ஒரு இரண்டரை மணிக்கு வருகிறீர்களா' என்று ஒரு பிட்டைப் போடுகிறார். அங்கேயே ஒப்படைத்து விட்டு வெளியில் வந்தேன். வாங்கி வைத்தவர் வெங்கடேஷ் என்பவராம்.
வெளியில் வந்து இணை சாலையில் நடந்து அழகர் வந்தேன். வழியில் சௌந்தரராஜன் இருசக்கர வண்டியில் எதிரில் வந்தார். கையை அசைத்து விட்டு நடந்தேன். 30 ரூபாய்தான் சாப்பாடு. 100 ரூபாய் நோட்டுக்கு 70 ரூபாய் சில்லறை கொடுத்தார்.
பொரியல், 2 கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், காரக் குழம்பு. மீனாட்சி பவனை விட கறி எண்ணிக்கை ஒன்று அதிகம். ஆனால் இங்கு ஒரு மாதிரி ஹோட்டல் வாடை வருகிறது. அங்கு வீட்டு மணம் இருக்கிறது. எதிரில் ஒருவர் நெற்றி நிறைய திருநீறு அணிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாதி சோற்றை விட்டு விட்டு எழுந்தார். இலை எடுக்க வந்த அம்மா என்னை முறைத்தார்கள். நான் சுத்தமாக சாப்பிட்டு முடித்து விட்டுதான் எழுந்தேன். கடைசியில் மோர் வாங்கிக் கொள்ளவில்லை. ரசத்திலேயே அதற்கு வைத்திருந்த சோற்றையும் சேர்த்து சாப்பிட்டு விட்டேன்.
வெளியில் வந்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தால், அரசுப் பேருந்து. மாணவிகளை நிரப்பிக் கொண்டு வந்தது. நடத்துனர் நீந்தி வந்து சீட்டு கொடுத்தார். நான் 3 ரூபாய் கொடுத்தால் இன்னும் 1 ரூபாய் கேட்டார். சில்க்மில்லில் ஏறினால் 3 ரூபாய், மண்டபத்திலிருந்து 4 ரூபாய். சொல்லி 3 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டேன்.
புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி உள்ளே போகாமல் போக்குவரத்துக் காவலர் கூண்டுக்கு அருகில் வந்தேன். ஏதாவது குடிக்க வேண்டும். வாலாஜா போய் பார்த்துக் கொள்ளலாம். போலீஸ் கூண்டின் நிழலில் நின்று கொண்டேன்.
காஞ்சிபுரம் பேருந்து ஒன்று வந்தது. நடுவில் இருந்த இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தவர் ஜன்னல் ஓரம் இருக்க நான் இந்த முனையில் உட்கார்ந்து கொண்டேன். 18 ரூபாய் சீட்டு. காஞ்சிபுரத்துக்கு 41 ரூபாய். முன் இருக்கையில் கணவன், மனைவி, கைக் குழந்தை மாமியார். 3 சீட்டுக்கு 500 ரூபாய் தாளைக் கொடுத்தார்கள், முதலில் 3 ரூபாய் சில்லறை கேட்டார். தொடர்ந்து 20 ரூபாய் இருக்குமா என்று கேட்டார். 3 ரூபாய் தேடிக் கொடுத்து விட்டார்கள். 20 ரூபாய் என்ன ஆச்சு என்று கவனிக்கவில்லை.
பேருந்து கட்டணத்தை உயர்த்தினவர்கள், இது போன்று நிலைகளை ரவுண்ட் செய்து சில்லறை பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். சென்னையில் 11 ரூபாய், 13 ரூபாய் சீட்டுகள்தான் அதிகம்.
அருகில் இருந்தவர், தனது கைபேசியில் ஒவ்வொருவராக அழைத்து, 'விஷயம் தெரியுமா, மன்னார்குடி கும்பலை கட்சியிலிருந்து நீக்கிட்டாங்களாம். எனக்கு காலையில் பத்தரைக்கே தெரியும், அதிகாரபூர்வமாக வந்த பிறகு சொல்லலாம் என்று இருந்தேன். இப்போ பஸ்சில இருக்கேன் ஊருக்குப் போன பிறகு பேசுகிறேன்' என்று 10-12 பேருக்குச் சொல்லியிருப்பார். இவர் பெரிய அப்பாடக்கர் போல காட்டிக் கொள்வதன் கட்டாயம் தெரிந்தது.
கொஞ்ச நேரம் கண்ணயர்ந்து கொண்டேன். வாலாஜாவில் இறங்கி ஜூஸ் கடையில் ஆரஞ்சு ஜூஸ் கேட்டேன். கடைக்கார அம்மா இருந்தார்கள். தொலைக்காட்சியில் சன் மியூசிக் ஓடியது. நன்றாக இருந்தது, 35 ரூபாய். அதற்கு 50 ரூபாய் கொடுத்து மீதி பெற்றேன். அருகில் இருந்த மொபைல் கடையில் வேலை செய்வதாக அறிமுகமானவர் இருந்தார், கவனிக்கவில்லை, அல்லது கண்டு கொள்ளவில்லை. முடித்து விட்டு இறங்கினேன்.
அப்போதுதான் வந்து நின்ற ஆட்டோவில் ஏறி சொன்னதும் தயங்கி நின்றார். 'என்ன சாப்பிடப் போகும் நேரமா' என்று கேட்டால், 'இல்ல, இப்பதான் கொண்டு நிறுத்தினேன்' என்றார். மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.
இறங்கி 100 ரூபாய் தாளைக் கொடுத்தால் 10 ரூபாய்களாக 50 ரூபாய் திருப்பிக் கொடுத்து விட்டார். நுழைவாயிலில் சொல்லி விட்டு உள்ளே போனேன். முதலில் லாக் கோப்புகளை நகர்த்துவது. அதற்கான படிகளை காட்டி விட்டேன். அதன் பிறகு தோல் சரக்கு சரிசெய்வது குறித்த சந்தேங்களை கேட்டார்கள். தோல் வாங்கும் விபரங்களை மாற்றும் பக்கத்தில் பிழை. அது அப்கிரேட் செய்ததில் வந்த பிழை. அதை சரி செய்தேன். 3 வாங்கல்களில் உள்ளூர் என்பதை இறக்குமதி என்று மாற்றினேன். 0 என்று மாற்றியிருந்து ஒரு சரக்கை நீக்கினேன். சரக்கு சரி செய்யும் முறையை விளக்கினேன்.
லினக்சு கற்றுக் கொள்வதற்கான பாடங்களை கணினியில் சேமித்துக் கொள்ளச் சொன்னேன். அதன் பிறகு கை கட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்.
அறைக்குள் காணவில்லை. உள்ளே உற்பத்தித் தளத்தில் எட்டிப்பார்த்தால் அங்கும் காணவில்லை. எண் வாங்கி பேச முயற்சித்தேன். இரண்டு எண்களும் வேலை செய்யவில்லை. எண் கொடுத்தார். அவர் எடுக்கவேவில்லை. 15 நிமிடங்கள் காத்திருக்கலாம் என்று இருந்தால், மணி அடிக்கவும் அவர் வரவும் சரியாக இருந்தது. அவரிடம் சொல்லி விட்டு கொண்டு விடச் சொன்னேன். வழியில் நன்கு திட்டித் தீர்த்தேன்.
கற்பகம் ஓட்டலின் பெயரை ஆர்ய பவன் என்று மாற்றியிருந்தார்கள். அங்கு போய் ஒரு ரவா தோசை, ஒரு பால் சாப்பிட்டேன். 37 ரூபாய்கள், 3 ரூபாய் சேவைக் கட்டணம். முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நின்றால், நிறைய தனியார் பேருந்துகள் போயின. எல்லாம் ஆற்காடு போய் நிறுத்தி விடுவார்கள்.
அரசு பேருந்து வந்ததும் எல்லோரும் ஏறினார்கள். ராணிப்பேட்டை நிறுத்தத்தில் நாலைந்து கல்லூரி சீருடை அணிந்த பெண்கள், ஒரு பெண் படியில் நின்று கொண்டே வந்தார். பர்தா அணிந்த குண்டான பெண். என்னை கொஞ்சம் கவலையாக பார்த்தார்கள். 14 ரூபாய் சீட்டு.
ஆற்காடு வந்தும் உட்கார இடம் கிடைக்கவில்லை. வேலை பார்க்கும் ஒருவர் நின்றிருந்தார். அவர் ்பினிஷிங்கில் வேலை செய்கிறாராம். அவருடன் பேசி விபரம் தெரிந்து கொண்டேன். பழைய விபி மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறார்களாம். கடந்த 1 மாதமாக தீவிரமாக கண்காணிப்பில் இறங்கியிருக்கிறாராம். புகைப்பட கருவி பொருத்தி கண்காணிக்கப் போகிறாராம். வேறு யாரோ மென்பொருள் செய்ய வந்திருக்கிறார்களாம். மெட்டீரியல்ஸ் ஸ்டோரில் இருக்கிறார்களாம்.
'டேனரியைப் பொறுத்த வரை எங்கள் சாப்ட்வேர்தான் சிறந்தது' என்று சொன்னேன். அவர் விஷாரத்தில் இறங்க, அங்கு மருத்துவமனையிலிருந்து சிலர் ஏறினார்கள். ஒரு சிறுபெண்ணும்.
தலைமை அலுவலகம் வரும் போது உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து கொண்டேன். புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியில் நிற்கும் போது வள்ளிமலை போகும் பேருந்து வந்தது. நேராக காட்பாடி போகும் பேருந்து. ஏறி 4 ரூபாய் சீட்டு.
வீட்டுக்கு வந்து பழைய வீட்டுச் சாவி எடுத்துப் போய் வாரியல், துடைக்கும் கட்டை, மற்றும் கொடி கட்டும் கயிறு எடுத்து வந்தேன். இன்னும் மிதியடிகளும், மின்விசிறியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உட்கார்ந்து இணைய செய்திகள் படித்தேன். மருதையன் சிதம்பரம் போராட்டம்பற்றி மக்கள் தொலைக்காட்சியில் பேசியதைக் கேட்டேன். தொடர்ந்து மகஇக பாடல்கள். ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா என்ற தொகுப்பு மனதை பெரிதும் பாதித்தது. 9 மணிக்கு மூடி வைத்து விட்டு கை கால் கழுவி தியானம். தரையில் பாய், இரண்டு விரிப்புகள் விரித்து அதன் மேல் தலைக்கு சால்வை முக்காடு, மூடுவதற்கு ஒரு போர்வை என்று போட்டுக் கொண்டேன்.
தூங்கி 12 மணிக்கு விழிப்பு, சிறுநீர் கழிக்க 2 முறை போக வேண்டியிருந்தது. குளிருக்குத் தடுப்பே இல்லாமல் இருப்பதுதான் சிக்கல். காலையில் 5 மணிக்கு எழுந்து விட்டேன்.
இதை முடித்து விட்டு, கதவுகளைத் திறந்து விட்டு விடலாம். முதலில் துணிகளை அடுக்கி வைக்க வேண்டும். பல் தேய்க்கும் பிரஷ்சைக் கண்டுபிடிக்க வேண்டும். பல் தேய்த்து விட்டு கீழே போய் சாவியைக் கொடுத்து விட வேண்டும்.
1. மிதியடிகளை எடுத்தல்
2. பிஎஸ்என்எல்
3. எலக்ட்ரீஷியன் - மின்விசிறி மாற்றல்
4. மின்கலன் - விற்க ஏற்பாடு செய்தல்
இன்றும் நாளையும் வெளியில் எங்கும் போக ஒத்துக் கொள்ளக் கூடாது. நாளை மதியத்துக்கு மேல் சென்னை புறப்பட வேண்டும். வியாழக் கிழமை வகுப்பு, வெள்ளிக் கிழமை, சேவை வரி கட்டுதல். சனிக்கிழமை வகுப்பு முடித்த பிறகு வேறு வேலை எதுவும்இல்லை. திரும்பி வந்து விடலாம்.
இன்னும் 2 நிமிடங்கள் இருக்கின்றன. 1869 சொற்கள் ஆகி விட்டிருக்கின்றன. 32 சொற்களை விட அதிக வேகத்தில்தான் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக