நேரம் 8.50, ஜனவரி 9, 2012.
நேற்று இரவு வேலூர் திரும்பி வந்து சேரும் போது 12 மணி ஆகி விட்டிருந்தது. மதியம் வீட்டில் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போய் ஐந்தரை மணி வாக்கில்தான் கிளம்பினோம். அதன் பிறகு அறைக்கு வந்து பைகளை எடுத்துக் கொண்டு, ஆட்டோ பிடித்து, சாப்பிட்டு விட்டு வடபழனியிலிருந்து கோயம்பேடு வண்டி ஏறி, கோயம்பேடில் பேருந்தில் ஏறி உட்கார்ந்து அது வெளியில் வர சுமார் 1 மணி நேரம் எடுத்துப் புறப்பட்டு வந்து சேர்ந்ததற்கு அவ்வளவு நேரம் ஆகி விட்டிருந்தது.
நேற்று காலையில் நாட்குறிப்பு எழுதி முடித்ததும், பாடலின் வரிகளை திருத்தி, அச்சிடப்பட்டிருப்பது போலவே மாற்றினேன். தொடர்ந்து கட்டுரையில் பத்திரிகை செய்திகளின் தேதி, மற்றும் பத்திரிகை பெயரை சேர்த்தேன். இரண்டையும் இணைத்து அனுப்பி விட்டேன். அதன் பிறகு குளிக்கக் கிளம்பினேன். முதல் அறை அம்மா, கீழே போகும் போது மோட்டர் போட்டு விடச் சொன்னார்கள். தண்ணீர் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் நீங்க மோட்டர் போட்டு விட்டால், அப்புறமா நான் அணைத்து விடுகிறேன் என்றார்.
வழக்கம் போல கழிவறைக்குப் போய் இரண்டாவது சுற்றை முடித்து விட்டு வாளியுடன் குளிக்கக் கீழே போனேன். மேலேயும் சரி, கீழேயும் சரி எந்த நேரமும் நான் பார்க்கும் போதெல்லாம் கழிவறையும் குளியலறையும் காலியாகவே இருக்கின்றன. ஒரு வேளை நான் மற்றவர்கள் பயன்படுத்தாத நேரமாகப் போகிறேனோ என்னவோ. காலையில் ஏழரை மணி, எட்டு மணி வாக்கில் போக முயன்றால் பள்ளிக்குப் போக தயாராகும் குழந்தைகளும் வேலைக்குப் போகத் தயாராகுபவர்களும் வரிசையில் நின்றிருந்திருக்கலாம்.
குளிக்கப் போகும் முன்பு எழுப்பி விட்டு விட்டுப் போனேன். குளித்து விட்டுத் திரும்புவதற்கு முன்பு எழுந்து விட்டிருந்தார். நேரத்துக்குப் புறப்பட வேண்டும் என்ற அவசரம் தெரியவில்லை. நிதானமாக புறப்பட்டுக் கொண்டிருந்தார். வாளியுடன் குளிக்கப் போனவருக்காக சரியாக 6 மணி வரை காத்திருந்தேன். அதன் பிறகு பையை எடுத்துக் கொண்டு குளியலறை கதவுக்கருகில் சொல்லி விட்டுப் புறப்பட்டேன். நான்தான் தாமதமாகி விட்டிருந்தேன்.
நடந்து போகும் போது பின்தங்கி நின்று நின்று நடந்து கொண்டிருந்தார். 'வேகமாகவும் நடக்கிறீங்க, என் செருப்பும் அறுந்திருக்கிறது' என்றார். கால் பெருவிரலை நுழைத்துக் கொள்ளும் வளையம் பிய்ந்து போயிருக்கிறது. இரண்டு விரல்களால் அதைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும்.
பேருந்து நிறுத்தம் வந்தவுடனேயே பேருந்து கிடைத்து விட்டது, உட்கார இடம் இல்லைதான். அடுத்த நிறுத்தத்தில் இருவர் இருக்கை காலியாக பையைப் போட்டு இடம் பிடித்து இருவரும் உட்கார்ந்து கொண்டோம். டீலக்ஸ் பேருந்துதான், 22 ரூபாய் சீட்டு. சாலை நிறுத்தத்திலேயே இறங்கி பேருந்து நிறுத்தத்துக்கு வரும் போது பேருந்து ஒன்று நின்றிருந்தது. ஓடிப் போய் ஏறி விட்டோம். உட்கார இடம் கிடைத்தது. நான் முன்பக்கம் நகர்ந்து நின்று கொண்டேன். அருகில் இருந்த பெண் செல்பேசியில் பாடலை ஒலிக்க விட்டிருந்தார். சில செல்பேசிகளில் இசைத் தரம் மோசமாக இருக்கும்.
'கையை உள்ளே வை தம்பி' என்று ஓட்டுனர் சொன்னார். யார் கையும் வெளியில் நீட்டியிருப்பதாகத் தெரியவில்லை.
மீண்டும் ஒரு முறை 'கையை உள்ளே வை தம்பி'. யாரும் எதிர்வினை இல்லை.
'கையை உள்ளே வைடா' என்று ஒருவரை அதட்டினார். மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்தவர் 'டான்னு ஏன் சொல்றே' என்று பொங்கினார். 'முதலில் சமாதானமாகத்தானே சொன்னார், கோபப்படாதீங்க' என்று பின்னாலிலிருந்தே சொன்னேன்.
கொஞ்ச தூரத்தில் முன் பக்கம் இருக்கை ஒன்று காலியாக, போய் உட்கார்ந்து கொண்டேன். கை வெளியில் வைத்த அதே மனிதர்தான் ஜன்னலோர இருக்கையில்
'இவனுக்கு மரியாதையே தெரியவில்லை சார், நானும் மிலிட்டரி காரன்தான், இப்போ போன் பண்ணினா இவரை அடிக்க 10 பேர் வந்துடுவானுங்க' என்று சொன்னார். அவரை சமாதானப்படுத்தினேன். 'நீங்க டியூட்டியில் இருக்கும் போது உங்களுக்கு மரியாதை, அவர் வண்டி ஓட்டும் போது நாம மரியாதை காட்டணும். அவர் சொல்வதைக் கேட்கணும்' என்று சொன்னேன். வலது புறம் ஏதாவது கை வெளியில் தெரிந்தால் ஓட்டுவதற்கு மன இடைஞ்சலாகத்தான் இருக்கும். அதுவும் மெட்ரோ வேலை நடப்பதால் குறுகலான வழி, எதிலாவது உரசி விட்டால் பிரச்சனையாகும்.
கொஞ்ச தூரம் போன பிறகு, கையை காட்டினார், கையில் ஏதோ விபத்து நடந்து நரம்பு அறுந்து போனதாகச் சொன்னார். பெரிய தழும்பு உள்ளங்ளையில் தெரிந்தது. அதற்கு ஆதரவாகத்தான் ஜன்னலில் கையை வைத்திருந்திருக்கிறார். தனது குறையை வெளியில் சொல்லவும் மனமில்லை.
நிறுத்தத்தில் விசில் அடித்தும் நிற்காமல் தாண்டிப் போனார் ஓட்டுனர். இறங்க வந்து நின்றவர் திட்ட ஆரம்பித்தார். கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்தன. டிரைவர் கொஞ்சம் அமைதிக் குறைவாகத்தான் நடந்து கொண்டிருந்தார். பெரிய சண்டை ஆகாமல் நகர்ந்தது.
தொலைபேசியிருந்தேன். அவர் மாடிக்கு வந்து விடச் சொன்னார். பேருந்து ஏற்றி விட அருகில் வந்தவர்கள் மீண்டும் போய் மாடிக்குப் போனோம். சில நிமிடங்களுக்குப் பிறகு வந்தார். பேச ஆரம்பித்தோம். வழக்கமான அரசியல், காந்தி, அன்னா ஹசாரே என்று போய் பத்ரியில் வந்து நின்றார். பத்ரியை கிண்டல் செய்து எழுதியதில் அவருக்கு உடன்பாடு இல்லை. விவாதித்து முடித்தோம்.
சாப்பிட்டு விட்டுக் கீழே வந்தோம். அவர் புறப்பட்டுப் போய் விட நாங்கள் இரண்டு பேரும் ஏசி பேருந்தில்.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக