என்னைப் பற்றி

எனது புகைப்படம்
mobile : 9884070556
நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பு, 
சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்ப பட்டம்
தேவாஸ் (மத்திய பிரதேசம்) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (டாடா) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (பிஎல்சி) நிறுவனத்தில் வேலை
சொந்த நிறுவனம் பிஎஸ்ஜி லெதர் லிங்க். 

Sunday, December 25, 2011

万岁


நேரம் காலை 5.50, டிசம்பர் 25, 2011.

இன்று கிருஸ்துமஸ் நாள், இயேசு பிறந்த நாள். வெளியில் எங்கோ வானொலியில் கேளுங்கள் தரப்படும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நேற்று எம்ஜிஆர் நினைவு நாள். டிசம்பரும், ஜனவரியும் சுறுசுறுப்பான மாதங்கள்தான். சென்னையின் கருநாடக இசை விழா, புத்தகக் கண்காட்சி, கிருஸ்துமஸ், புத்தாண்டு நாள், பொங்கல், தீவுத் திடலில் வர்த்தகப் பொருட்காட்சி என்று தொடர்ந்த நிகழ்ச்சிகள். தமிழ்நாட்டின் வசந்த காலம் மார்கழி-தை மாதம் என்று சொல்லலாம்.

நேற்று காலையில் 5.30க்கு எழுந்திருந்தேன். முந்தைய நாளே வர மாட்டேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதற்கு பதில் அனுப்பினேன். காலையில் ஆறரை மணிக்கு வேலைக்குப் புறப்பட்டுப் போய் விடுவேன். மாலையில் சந்திக்கலாம் என்று.

பல் தேய்த்து, புத்தகங்களை அடுக்கி வைத்தேன். படிப்பதற்கு அதிகாலையின் அமைதியில் புத்தகத்தை பையில் எடுத்துக் கொண்டேன். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குப் பரிசாகக் கொடுக்க வாங்கிய நாட்குறிப்பும் பேனாவும் எடுத்துக் கொண்டேன்.

ஆறரை மணிக்குப் புறப்பட்டு விட்டேன். இந்து நாளிதழ் வாங்கிக் கொண்டேன். சொகுசு அல்லாத பேருந்து, அதனால் 8 ரூபாய் சீட்டில் வடபழனி கோவில் நிறுத்தக் கட்டணம். நூறடி சாலையைக் கடக்க வேண்டிய சாலை நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டேன். ஆற்காடு சாலையைக் கடந்து நூறடி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வந்தேன்.

569C வந்தது. அதற்கு பின்னாலேயே 119B கல்பாக்கம் வந்தது. அதில் பழைய மகாபலிபுரம் சாலையா என்று கேட்டுக் கொண்டு ஏறினேன். மூன்று பேர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.

மின்னஞ்சல் பார்க்க கணினியை விரிக்கவில்லை. இந்து நாளிதழ் கொஞ்ச நேரம், அதன் பிறகு அதிகாலையின் அமைதியில் படைப்பு. பரீஸ் பொலவோய் எழுதிய உண்மை மனிதனின் கதையைப் போல மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடப் போகிறது என்று காலையில் நினைத்திருக்கவிலை. நாள் முடிவதற்குள் இரண்டு முறை படித்து முடித்து விட்டிருந்தேன். கதையில் 5 பெண்களும் கொல்லப்பட்டு விடுகிறார்கள். பொதுவாக இது போல துயர சம்பவங்கள் நிறைந்த கதைகளைத் திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றுவதில்லை. இது விலக்காக இருக்கிறது டால்ஸ்டாயின் அன்னா கரனீனா இன்னொரு விதிவிலக்கு.

சிறுசேரி முன்பு இறங்கினேன். சரியாக ராஜஸ்தான் டாபா முன்பு நிறுத்தியிருந்தார்கள். சாலையைக் கடந்து நாச்சியார் மெஸ் என்று பலகை வைத்திருந்த தெருவுக்குள் போனேன். சின்ன ஓரைக் கூரைக் கடை. இட்லி+வடை. 4 இட்லி, 2 வடை. ஒவ்வொன்றும் 4 ரூபாய். மொத்தம் 24 ரூபாய். புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருந்தேன்.

வெளியில் வந்து சாலையின் வலது புறமாகவே நடந்து தொழிற்பேட்டைக்குள் வலது புறமாகவே நடக்க ஆரம்பித்தேன். தயாராக புறப்பட்டு எந்த ஆட்டோவும் நின்றிருக்கவில்லை. நேரமும் 8தான் ஆகியிருந்தது.

முதல் கரத்தில் நடக்கும் போது சாரை சாரையாக மஞ்சள் சீருடை அணிந்து தலையில் பாதுகாப்பு கவசம் அணிந்த கட்டிடத் தொழிலாளர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் தலைக்கவசத்தைக் கையிடுக்கில் வைத்திருந்தார்.

தான் உழைத்த வயலின் விளைபொருள் தனக்கு சொந்தமில்லை. தான் கட்டிய கட்டிடத்தில் தனக்கு உரிமையில்லை, தான் செய்யும் பொருள் தனக்குப் பயன்படுத்த முடியாது என்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல். மெட்ரோபோலிஸ் படத்தில் காண்பிப்பது போன்று பட்டாளமாக மனிதர்கள் நுகத்தடியில் மாட்டப்பட்டு அவர்களின் உழைப்பில் வெளிப்பாடுதான் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும். அதைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாது உலகத்தில். சக மனிதனை சுரண்டுவது மிகக் கீழ்த்தரமான மனித மனநிலை.

வாசலில் காவலர்கள் சல்யூட் அடித்தார்கள். நானும் திரும்பி வணக்கம் வைத்தேன். அவர்களை  மனிதர்களாக பார்ப்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்று தோன்றியது.

ஆசிரியர் அறைக்குள்  போய் கணினியை இயக்கினேன். இணையம் வேலை செய்யவில்லை. மின்னஞ்சல் பார்த்து விட்டு 9.30க்கு புறப்பட்டேன். வருகைப் பதிவு கோப்புகளை எடுத்துக் கொண்டு வகுப்புக்குப்போனேன். உடனேயே கேள்வித்தாளை வினியோகித்தேன்.

தொடர்ந்து பலகையில் சீன எழுத்துக்களை எழுதிப் பார்க்கும் படி போட்டி. 万岁 எழுத்துக்களை எழுதி ஒவ்வொருவரையும் ஒரு கட்டத்துக்குள் முயற்சிக்கச் சொன்னேன். கடைசியில் பெயர்களைப் பார்க்காமல் நான் எனது மனதுக்குத் தோன்றிய மதிப்பெண்களை கொடுத்தேன்.

முதல் மதிப்பெண் கிடைத்தது. மூன்று பேருக்கு இரண்டாம் மதிப்பெண். பரிசைக் கொடுத்து விட்டு ஒவ்வொருவராக அழைத்து மதிப்பெண்களை விளக்கினேன். 30க்குக் குறைவாக இருப்பவர்களுக்கு பிசினஸ் சைனீஸ் முதல் அத்தியாயத்தை இரண்டு முறை எழுதிக் காட்டும்படியும் அதற்கு மதிப்பெண் கொடுப்பதாகவும் சொன்னேன்.

முடித்து விட்டுக் கீழே வந்தால் முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒட்டு மொத்தமாக கட் அடித்து விட்டார்களாம். வகுப்பு இல்லை. இரண்டாம் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு போய்  அனுப்ப வேண்டிய கடிதத்தை எழுதி முடித்தேன்.

சாப்பிடுவதற்கு ரொட்டி வேண்டாம், 2 கிண்ணம் பாயாசம், சின்னக் கிண்ணங்கள்தான், தயிர் சோறு, காய் வாங்கிக் கொண்டேன்.

2 மணிக்குப் பிறகு புறப்பட்டேன். வெளியில் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. வெயில் அடிக்கவில்லை, படிக்க புத்தகமும் இருந்தது. ஒரு மேஜிக் வண்டி வந்து 10 ரூபாயில் வெளியில் வந்து விட்டேன். 19B குளிர்பதன பேருந்தில் ஏறி சைதாப்பேட்டை. வழியில் இருக்கைகள் நிரம்பி நிற்கும் அளவுக்கு கூட்டம் ஏறி விட்டது. புத்தகம் படித்துக் கொண்டே இருந்தேன். சைதாப்பேட்டையில் இறங்கி, பனகல் மாளிகை முன்பு இறங்கி, சென்ட்ரல் போகும் பேருந்துகள் நிற்கும் இடம் வரை நடந்து பேருந்து பிடித்தேன்.

கணிசமான நேரம் காத்திருந்த பிறகு B18 வந்தது. இருக்க இடம் இல்லை. ஆனால் புதிய பேருந்து, நிற்க கூட்டமில்லாமல் இருந்தது. ஏறிக் கொண்டேன். சென்ட்ரல் போக 13 ரூபாய் சீட்டு. டிவிஎஸ் வந்ததும் உட்கார இடம் கிடைத்தது. சென்ட்ரல் பாலத்தில் நிற்கும் போது இறங்கி நடந்தேன்.

பெரியமேடு போக வேண்டிய இடத்துக்கு அருகில் சாலையைக் கடந்தேன். அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தேநீர் கடைக்கு வந்தேன். ஒரு பால், சொல்லி விட்டு உட்கார்ந்தால் பிரெட் ஆம்லெட் கண்ணில் பட்டது. போடுபவர் ஒரு வட இந்திய இளைஞர். நன்றாக இருந்தது. பாலும் அதுவும் சேர்த்து 20 ரூபாய்.

உட்கார்ந்து கணினியைஇயக்கி இணையத்தில் நுழைய முயற்சித்தேன் சிரம்பபட்டுத்தான் நுழைந்தது. ஸ்வைத்திருக்கும் பிஎஸ்என்எல் இணைப்பு நன்றாக இருக்கிறதாம். அவர் ஐபேட் பயன்படுத்துகிறார். ஒரு தேநீர் கொடுத்தார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு வந்து அழைத்தார். ஒரு காபி கிடைத்தது. செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலைப் படித்தார். சரவணன் எழுதி அனுப்பியது. எதுவும் பெரிய தவறாகக் கிடையாது. ஒவ்வொன்றுக்காக விளக்கம் கொடுத்தேன். பணம் அனுப்புவதற்கான கோரிக்கையையும் வைத்து விட்டேன். நாளை பணிப் பட்டியலையும் பணப் பட்டியலையும் இணைத்து மின்னஞ்சல் அனுப்பி விட வேண்டும்.

அதன் பிறகு டாடா குறித்துக் கேட்டார்.  பெயர்களைச் சொல்லியே பேசிக் கொண்டிருந்தேன். பெரு நிறுவனம் என்பது இருதயம் இல்லாததது. அதில் பணி புரிபவர்கள் அதிகாரம் செலுத்துபவர்கள், முடிவு எடுப்பவர்கள் மனிதத் தன்மை உதிர்க்கப்பட்டவர்கள் என்று வேகமாவே பேசினேன்.

முடித்து விட்டு எழுந்து வெளியில் வந்தால் ஒரு ஆட்டோ டிரைவர் கூப்பிட. பொது மருத்துவமனை  எதிரில் விட 40 ரூபாய் கேட்டார். 30 ரூபாய் என்று சொல்லி உட்கார்ந்தால் சாலையின் இந்தப் பக்கமே விட்டு விட்டார். இறங்கி சாலையைக் கடந்து நடந்து வந்து சேர்ந்தேன். கேகேநகர், அய்யப்பன்தாங்கல் பேருந்துகள் நிற்கும் இடம். கோயம்பேடு போகும் பேருந்தை நிறுத்த முயன்றவர்களிடம் விபரம் சொல்லி அந்தப் பக்கம் அனுப்பினேன்.

காலியாக இருந்த இருக்கையில் உட்கார தயங்கிய கைக்குழந்தையுடன் நின்றிருந்த பெண் நான் உட்கார்ந்ததும் மறுமுனையில் உட்கார்ந்து கொண்டார். 11Gயில் ஏற்றி விடும்படி கேட்டார் ஒரு பெண். ஏற்றி விடப்பட வேண்டியவர் கண் பார்வை சரியில்லாதவர். இவர் வேறு எங்கோ போக வேண்டும். சிறிது விவாதத்துக்குப் பிறகு நானே ஏற்றி விட்டுப் போகிறேன் என்று முடிவு செய்து விட்டார்.

நானும் அதே பேருந்தில் ஏறிக் கொண்டேன். நெசப்பாக்கத்தில் இறங்கிக் கொள்ளலாம். கூட்டம் அதிகமில்லை. உயரமான இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். அதிகாலையின் அமைதியில் படித்துக் கொண்டிருந்தேன்.

இறங்கி எதிரில் இருந்தா பனாமா கிச்சன் என்ற உணவு விடுதிக்குள் போனேன். மங்கோலிய முகத்தோற்றத்துடன் நான்கு பெண்கள், சிறு பெண்களும் உண்டு. ஒரு ஆண் அவர்களின் கங்காணியாக இருக்க வேண்டும்.

சாப்பிட்டு முடித்து வெளியில் வந்து நடந்து வீடு வந்து சேர்ந்தேன். பகவத்கீதை புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மீண்டும் அதிகாலையின் அமைதியில். படிக்கப் படிக்கத் திகட்டாத படைப்பு. இதுதான் உண்மையான கலைப்படைப்பு. காடு போன்ற அரை போர்னோ கதைகள் இல்லை.

இதை முடித்து விட்டு உலாவப் போக வேண்டும். திரும்பி வந்து துணிகளை எடுத்து வைத்து விட்டு வீட்டை ஒதுக்கிக் குளிக்க வேண்டும். காலை உணவு. மதிய வாக்கில் வேலூர் புறப்பட்டு விடலாம்.

0 கருத்துரைகள்: