ஜனவரி 4, 2012.
இரண்டு நாட்களில் நிறைய நடந்தது. நேற்றுக் காலையில் நாட்குறிப்பு எழுதவில்லை.
மன அழுத்தங்கள், சோர்வுகள் என்பது நமது பாரம்பரியத்தின் விளைவுகள். "நமது மனதுக்குள்ளேயே எல்லாவற்றையும் படைத்து விடலாம், மாற்றி விடலாம்" என்று போதிக்கப்பட்டு கற்றுக் கொண்ட ஆன்மீக தத்துவம் நம்மை முடக்கிப் போட்டு விடுகிறது. அந்த பாடத்தைக் கற்றுக் கொண்டு நம்பாதவர்கள் செயல் திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
உண்மையில், நம் உடல் செயல்படாவிட்டால் ஒரு புல்லைக் கூட பிடுங்கிப் போட முடியாது என்பதுதான் நடைமுறை. அதை விட்டு விட்டு மனதுக்குள்ளேயே உலகை நடத்திப் பார்க்கும் போக்குதான் மனச் சோர்வுக்கும், அழுத்தத்துக்கும் காரணம்.
திங்கள் கிழமை காலையில் நாட்குறிப்பு முடித்த பிறகு நாளுக்கான திட்டம் வகுத்துக் கொண்டேன். ஆனால் அன்றைய நாள் மிக மோசமாகவே போனது.
கீழே வீட்டுக் காரரிடம் வாடகை கொடுக்கப் போனேன். பழைய வீட்டுக்கு, புது வீட்டுக்கு வீதம் கணக்கு போட்டு கொடுத்தால், இது என்ன இப்படிப் போட்டிருக்கீங்க என்று கேட்கிறார். கடைசியில் உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்றதை மறுத்துச் சொல்லாமல் வந்து விட்டேன். அங்கேயே பேசியிருக்க வேண்டும்.
11 மணி வாக்கில் மின்கட்டணம் கட்ட அட்டை எடுத்துக் கொண்டு போனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 'இன்றைக்கு பவர் கட் சார்.' பார்த்தால் மின் நிலையத்தில் ஏறி கம்பிகளை இழுத்துக் கொண்டிருந்தார்கள் ஊழியர்கள். வழியில் மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
நாளைக்குத்தான் வந்து கட்ட வேண்டும். நம்ம வீட்டிலும் மாலையில்தான் கரண்ட் வரும். 2 மணி நேரம் மின்கலத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
அங்கிருந்து நடந்து புதிதாகத் திறக்கப்பட்டிருந்த வோடபோன் மினிஸ்டோருக்கு வந்தேன். காட்பாடி மில்லேனியம் பிளாசா என்பது ஓடைப்பிள்ளையார் கோவிலுக்கும் சில்க்மில்லுக்கும் நடுவில் இருக்கும் பெரிய கட்டிடம்தான். காலையில் உலாவப் போகும் போது பார்த்திருந்தேன்.
உள்ளே ஒரு பெண் தொலைபேசிக் கொண்டிருக்க முன்னால் இரண்டு இருக்கைகளில் இன்னும் இரண்டு பெண்கள் ஒரு வாடிக்கையாளர் உட்கார்ந்திருந்தார்கள். நான் 'கட்டணத்தைக் கட்ட முடியுமா' என்று கேட்டால், 'சென்னை எண்கள் இன்னமும் இங்கு மாற்றப்பட்டிருக்கவில்லை'யாம். 198ல் பேசச் சொன்னார்கள்.
சனிக்கிழமை 198 வேலை செய்யவில்லை. அதற்கும் தவறான எண் என்றே தகவல் வந்தது. இப்போது அழைத்து 6ம் எண் தேர்வில் பேச வந்தார் ஒரு வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்.
'பணம் எங்கு கட்ட முடியும், சனிக்கிழமை சென்னைக்குப்போய் கட்டப் பார்த்தால் அன்று எல்லோருக்கும் விடுமுறை விட்டு விட்டார்கள், வேலூரில் கடை பார்த்துச் சொல்லுங்கள்'
'சாரி சார், வேலூரில் மினிஸ்டோர்தான் இருக்கு. பணம் கட்ட முடியாது. கிரெடிட் கார்டு இருந்தால் இணையத்தில் கட்டி விடலாம். டெபிட் கார்டுண்ணா ஆக்ஸிஸ் பேங்க் மட்டும்தான் வேலை செய்யும்'
'கிரெடிட் கார்டு கிடையாது, டெபிட் கார்டுதான் இருக்கு, எஸ்பிஐ கார்டு. நான் வேலூரில் இருக்கிறேன். வேலூருக்கு இணைப்பை மாற்றச் சொல்லி கடிதம் கொடுத்தும் இன்னும் நடக்கவில்லை. சென்னைக்கு வரும் போது கடை இல்லை. நான் சென்னைக்கு வரும்போதுதான் கட்டணம் கட்ட முடியும். இணையத்திலும் கட்ட முடியவில்லை. என்னதான் வழி'
'வேற வழியில்லை சார், பணம் கட்டினாத்தான் லாக்க எடுக்க முடியும்'
'அப்போ இன்னும் ஒரு வாரம் நான் இணைப்பு இல்லாமத்தான் இருக்கணுமா? சரிங்க, என் தப்புதான், அப்படியே இருக்கட்டும். ஆனா, உங்க சர்வீசை நான் ஏன் பயன்படுத்தணும். எல்லா ஊர்லயும் கடை வச்சிருக்கிற கம்பெனிக்கு மாறிக்கிறேன். இப்போ எண்ணை மாற்றமலே மாறவும் வசதி இருக்கு. பை'
என்று போனை வைத்து விட்டுப் பார்த்தால் அவுட்கோயிங் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. போட்ட போடில் திறந்து விட்டிருக்கிறான் அந்த பையன். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பில் கட்டாமல் இருந்து விட்டு இப்போது தகராறு செய்வது என்னைப் பொறுத்த வரை சரியில்லைதான். தொகை என்னவோ 500 ரூபாய்தான், ஆனால் அவங்க கணக்கில் கட் பண்ணுவது சரிதான்.
இந்த சிரமங்கள் இருப்பது அவர்கள் பக்க பலவீனம். அதைப் பயன்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் திட்டமிட்டு ஒரு நாள் சென்னையில் பணம் கட்டி விட்டிருந்தால் தொல்லை ஏற்பட்டிருக்காது.
எதிரில் சாலையைக் கடந்து காத்திருந்தேன். இரண்டு மூன்று பகிர்வூர்திகள் நிற்காமலே போனார்கள். கடைசியில் வந்தவரை கை காட்டி நிறுத்தினேன். உள்ளே வேறு இரண்டு பயணிகள் இருந்தார்கள். ஓடைப்பிள்ளையார் தாண்டி, பாலாஜி தியேட்டர் தாண்டும் வரை பேசாமல் இருந்து விட்டு கேஸ் அலுவலகம் வரும் போது இடது புறம் நிறுத்திக் கொள்ளச் சொன்னேன். அவர் இண்டிகேட்டர் போட்டு விட்டு இடது புறம் ஒதுக்க, இடது புறமாக முந்திப் போக வந்த ஒரு இரு சக்கர வண்டிக்காரர் அடிபட்டு கீழே விழுந்தார்.
முதல் தவறு என்னுடையது,ஆரம்பத்திலேயே இறங்கும் இடத்தைச் சொல்லியிருந்தால், திட்டமிட்டு இடது புறமாக வந்திருப்பார் ஆட்டோகாரர்.
இரண்டாவது தவறு ஆட்டோ காரருடையது. இடது புறம் ஒதுங்கும் போது பின்னால் வரும் வண்டிகளை கவனித்து ஒதுங்கியிருக்க வேண்டும்.
முக்கிய முதன்மை தவறு இரு சக்கர வண்டிக்காரருடையது. இடது புறமாக வேகமாக முந்த முயன்றது தவறு.
அதனால் அவர் மீதுதான் எல்லா பார்வையும் விழுந்தன. நல்ல வேளையாக கீழே விழுந்து பெரிய அடி எதுவும் படவில்லை. காலில் உராய்த்து, தோல் பிய்ந்து விட்டிருந்தது. வலியில் துள்ளினார். அவருக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. தொலைபேசி யாரிடமோ சொல்லி அப்பாவை வரச் சொல்லு என்றார். நல்ல குண்டான இளைஞர். 20 வயதுக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும். அவருக்கு முன்பு பகிர்வூர்தி ஓட்டுனர் மிகச் சிறிதாக நோஞ்சானாகத் தெரிந்தார். அவரது அப்பா வந்து அடாவடி செய்தால் ஆட்டோ டிரைவருக்கு சிரமம்தான்.
எனக்குக் குற்றவுணர்ச்சியாக இருந்தது. 10 ரூபாய் கொடுத்து விட்டு அவரை எழுப்பி விட்டு அடுத்த ஆட்டோவில் ஏற்றி அனுப்புவது வரை நின்றிருந்தேன். வெளிப்படையாக யாரும் என் மீது குறை சொல்லா விட்டாலும், அந்த ஆட்டோ டிரைவருக்கு உள் மனதில் என் மீது வருத்தம் இருந்திருக்கும். அது நியாயமான வருத்தமும் கூட. சட்டப்படி, விதிகளின் படி என் மீது தவறில்லை. ஆனால் தருமப்படி முதல் குற்றவாளி நான்தான்.
சமையல் வாயு முகர்வரின் அலுவலகத்துக்குள் போய் மேலாளரை சந்தித்தேன். போன வாரம் வந்த போது 'கறாராக 1 ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது, சிலிண்டர் தர முடியாது' என்று சொல்லி விட்டிருந்தார். 'சிலிண்டரையும் அட்டையையும் எடுத்துக் கொண்டு வந்து சரண்டர் செய்துடுங்க' என்று தீர்ப்பு. வீட்டுக் காரரிடம் சொல்லி அவர் இந்த ஏஜன்சியின் உரிமையாளரிடம் பேசி போய் வாங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்.
' போன வாரம் இந்த மாதிரி சொன்னீங்க, அப்புறம் நான் குடியிருக்கும் வீட்டுக் காரரிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். உங்க ஓனரை அவருக்குத் தெரியுமாம். அவர் அவங்ககிட்ட பேசினாராம். உங்களைப் பார்த்து திரும்பவும் ரிக்வெஸ்ட் செய்து கொள்ளச் சொன்னார். பார்த்துப் போட்டுக் கொடுத்தா நல்லா இருக்கும்' என்று அவர் முகமிழக்காமல் பேசினேன். இன்னும் ஒரு முறை விபரங்களைக் கேட்டார். வேறு இடத்தில் இணைப்பு இருக்கிறதா, இன்னும் ஒரு வருஷம் ஆகி விடுமே என்றெல்லாம் சொல்லி விட்டு, இன்னைக்கு ஸ்டாக் இல்ல நாளைக்கு வந்து வாங்கிக்கோங்க என்று அனுப்பினார்.
குறைவாக கேஸ் செலவழிப்பதும் ஒரு குற்றமாக இருக்கிறது. நான் மானிய விலை சிலிண்டர் வாங்கக் கூடாது என்று கமர்ஷியல் வாங்கி, அதையும் மிகக் குறைவாக பயன்படுத்தி 1 ஆண்டு நீட்டித்திருக்கிறேன். அதைப் பாராட்டி விருது எதுவும் கொடுக்காவிட்டாலும், இப்படி சிலிண்டரை திரும்பக் கொடு என்பது என்ன நியாயம்? இதைக் கொடுத்து விட்டு இன்டக்சன் ஸ்டவ் வாங்க வேண்டியதுதானே என்று சொல்கிறார்கள்.
இதைத் திருப்பிக் கொடுத்தால் 1400 ரூபாய் திரும்பித் தருவார்கள். ஏற்கனவே வாங்கி வைத்த ஸ்டவ் வீணாகப் போகும். இண்டக்சன் ஸ்டவ் வாங்கப் போனால் 4,000 ரூபாய் வரை ஆகும். அதற்காக சமையல் பாத்திரங்கள் தனியாக வாங்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் பாத்திரங்கள் வீண். மின் இணைப்பு இல்லாத போது பயன்படுத்த முடியாது, மின்கட்டணம் எகிறும். இதை எல்லாம் கணக்கு போட்டு, சிலிண்டர் வாங்க போராடுவது என்று முடிவு செய்திருந்தேன். வீட்டுக்காரர் உதவிக்கு வரவில்லை என்றால் போய் சண்டை போடுவது என்று எண்ணம். நல்ல வேளை இவர் உதவி செய்து விட்டார்.
மனதுக்குள் மறுகிக் கொண்டிருந்தால், உலகின் தர்ம நியாயங்கள் எல்லாம் உருவெடுத்து வந்து நமக்கு நல்லது செய்து விடும் என்று நினைப்பது அபத்தம். நடைமுறை செயல்பாடு மட்டும்தான் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.
வீட்டுக்கு வந்து பார்த்தால் மின்சாரம் வந்திருக்கவில்லை. வாணியம்பாடிக்கு அழைத்தேன். இன்றைக்கு தொழிற்சாலை இயங்குகிறதான். மின்வெட்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொண்டேன். இப்போதுதான் புறப்படுகிறேன் இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று சொல்லி விட்டேன். உடை மாற்றி சாலைக்கு வந்தேன். பகிர்வூர்தியில் ஏறி புது பஸ்ஸ்டாண்ட். பத்திரிகைக் கடைக்குப் போகாமல் நேராக அலங்கார் விடுதி. சாப்பிட சாம்பார் சாதம் ஒன்று, தயிர் சாதம் ஒன்று.
வெளியில் வரும் போது 102B விரைவு வண்டி உள்ளே நுழைந்திருந்தது. நடைபாதைகள் வழியாக நடந்து திருப்பத்தூர் வண்டி நிறுத்தத்துக்கு வந்தால் ஒரு தனியார் பேருந்துக்கு அருகில் இவர்கள் நிறுத்தினார்கள். நிறைய கூட்டம் ஏறிக்கொண்டிருந்தது. தனியார் வண்டியும் நிரம்பி ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று ஏறிக் கொண்டேன். பின் ஏறும் வழியில் இடது புறம் முதல் இருக்கை. ஒரு வயதானவர் உட்கார்ந்திருந்தார், நகர்ந்து இடம் கொடுத்தார்.
வலது புற இருக்கையில் ஜன்னலோரம் ஒருவர். தோல் தொழிற்சாலையில் வேலை செய்பவர் ஒன்று தோன்றியது. இரண்டு குழந்தைகளுடன் அம்மா. பையன் உள்ளே, அடுத்து பெண் குழந்தை, நடைபாதை ஓரமாக அம்மா. இரண்டு குழந்தைகளும் ஆம்பூர் வரை அட்டகாசம் செய்து கொண்டே வந்தார்கள். அம்மா இடையில் ஓடிய பழைய பாடலை ஒலி பெருக்கியுடன் பாடினார். அதன் பிறகு செல்பேசியில் பேச ஆரம்பித்து இறங்கும் வரை பேசிக் கொண்டிருந்தார்.
நடத்துனர் மாதனூர் நிற்காது என்று மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். 'வாதம் செய்யாமல் அமைதியாக இருந்தால் இறக்கி விடுவார்' என்று விளக்கினேன். மாதனூர் டிக்கெட் போட்டுக் கொடுத்து விட்டார். பள்ளிகொண்டாவில் ஏறியவர்களில் ஒரு குழந்தையும் அம்மாவும் அருகில் நின்றார்கள். பெண் குழந்தை, 3-4 வயது இருக்கும். '3 வயதுக்குக் குறைவு என்று சொல்லுங்க, உனக்கு மட்டும்தான் டிக்கெட் எடுத்திருக்கிறேன்' என்றார். ஆம்பூரில் ஏறிய பார்வையற்றோரிடம் சலுகை அட்டை செல்லாது என்று விளக்கியும், விடாப்பிடியாக ஏறி விட்டார்கள். டிக்கெட் எடுக்கும் போது தகராறு. கடைசியில், நடத்துனர் விட்டுக் கொடுத்து விட்டார். இப்படி மூன்று விட்டுக் கொடுத்தல்கள்.
கடைசியில் முன் பக்கம் யாரோ, இரண்டு தடவை சீட்டு எடுத்தது குறித்த வாக்குவாதத்தில் மாட்டிக் கொண்டார். சேர்ந்து போகும் இரண்டு பேரில் இருவரும் சீட்டு எடுத்திருக்கிறார்கள். நடத்துனருக்கும் அதில் ஏதோ பங்கு இருக்கும் போலிருக்கிறது. வாக்குவாதம் பெரிதாகி, ஓட்டுனரும் இறங்கி, மற்ற பயணிகள் தலையிட்டு சத்தம் போட்ட பிறகுதான் நின்றது.
அருகில் நின்றிருந்த குழந்தையை இருக்கையின் நடுவில் உட்காரச் சொன்னேன். உட்கார மறுத்து விட்டது. கையில் வைத்திருந்த குட்டி பர்சிலிருந்து காசு எடுத்து தான் டிக்கெட் எடுக்கப் போவதாகச் சொன்னது. அம்மாவும் பொறுமையா இங்கு வேண்டாம் ஊருக்குப் போகும் போது எடு என்று இன்னும் ஒரு 10 ரூபாய் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். முகம் முழுக்க குறும்பாக சிரித்த முகமாக துறுதுறுத்துக் கொண்டிருந்தது.அம்மாவை இடுப்பில் தூக்கச் சொன்னதற்கு தூக்கவில்லை. உட்காரவும் மனமில்லை. மாதனூரில் ஆட்கள் இறங்கிய பிறகு உட்கார்ந்து விட்டார்கள். பக்கத்து இருக்கையில் ஜன்னலோரம். உட்கார்ந்ததும் தூங்கி விட்டது. உடன் உட்கார்ந்த ஒரு வயதானவர் பேசிக் கொண்டே வந்தார்.
வாணியம்பாடி போகாது. புறவழிச்சாலை தாண்டி ஊருக்கு அந்தப் பக்கம் நிறுத்தினார்கள். இந்தப் பக்கம் நிறுத்தினால் ஆட்டோ செலவு இல்லாமல் போயிருந்திருக்கலாம். அங்குதான் நிறுத்துவார்கள் என்று தெரியும். கேட்கவில்லை. இறங்கி வந்த ஆட்டோவில் கேட்டால் 50 ரூபாய். ஏறி உட்கார்ந்தால் நெடுஞ்சாலையிலேயே ஓட்டி அடுத்த பாலத்துக்குக் கீழ் மறுபக்கம் வந்து கொண்டு சேர்த்து விட்டார். வாணியம்பாடி ரேஞ்சுக்கு கொஞ்சம் அதிகம்தான். சென்னை அளவில் மிகக் குறைவு.
உள்ளே போய் முதலில் பழைய கணினியின் பாஸ்வேர்ட் கேட்கிறது என்பதைப் பார்த்தேன். file system பிழை வந்ததால் ரிப்பேர் செய்யச் சொல்கிறது. கடவுச் சொல் கொடுத்து விட்டு fsck இயக்கினேன். கேட்ட கேள்விகளுக்கு ஆமோதித்து பதில் சொல்லி சில நிமிடங்களில் முடிந்து விட்டது. அடுத்தது, மின்னஞ்சல் அனுப்புவது ஏன் வேலை செய்யவில்லை என்று பார்த்தேன். கோப்பை சேமிக்கும் அடைவில் உரிமைகள் இல்லை. அதை சரி செய்து காட்டினேன்.
மூன்றாதவாக ஏதோ மாஸ்டர் நுழைவு, அதை கேட்டுத்தான் செய்ய வேண்டும், செய்து விடுவார். நவம்பர் மாத கெமிக்கல் டிரான்சாக்சன் அறிக்கை இயக்கினேன். தொடர்ந்து டிசம்பருக்கு இயக்கும் முன்பு எல்லா தரவுகளும் போட்டு முடித்து விட்டாரா என்று கேட்டால் இன்னும் 1 மணி நேரம் ஆகும் என்றார். அழைத்து விபரம் சொல்லி விட்டுப் புறப்பட்டேன்.
இடையில் மடிக்கணினிக்கு மின்னூட்டம், இணையத்தில் செய்ய வேண்டிய பணிகள் முடித்து விட்டேன். வெளியில் வந்து நெடுஞ்சாலையைக் கடந்து எதிர்பக்கம் போனால் பேருந்து நிலையத்துக்குப் போக எந்த வண்டியும் வரவில்லை. சோர்வாக இருந்தது.
கடைசியில் ஊருக்குள்ளே இருந்து வந்த பகிர்வூர்தி ஓட்டுனர் அழைத்து ஏற்றிக் கொண்டார். பின்னிருக்கையில் கல்லூரி மாணவியர். பேசிக் கொண்டே வந்தார்கள். பேருந்து நிலையத்துக்கு அருகில் இறக்கினார். 7 ரூபாய்.
வெளியில் வரும் போது இரண்டு பேருந்துகள். சமாளித்துக் கொண்டு பின்னால் போன சென்னை வண்டியில் ஏறி விட்டேன். கடைசி இருக்கையில் இடம்.
ஆம்பூரில் நிறைய பேர் இறங்கினார்கள். மாதனூரில் இன்னும் சிலர். மாதனூரில் ஏறிய ஒரு அம்மா இருக்கையின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். கடைசி இருக்கையில் ஒரு இடம் இருந்தது. ஆனால் அவர் வந்து ஆண்களுக்கு நடுவில் நெருக்கிக் கொண்டு உட்கார வசதியாக இருக்காது. யோசித்துக் கொண்டே இருந்தேன். எழுந்து இடம் கொடுக்கும் அளவு உறுதி இல்லை. நடத்துனர் சீட்டு கொடுத்துப் போய் விட்ட பிறகு, முன் இருக்கையில் உட்கார்ந்திருந்தவரை தட்டி, அவரை இங்கு வரச் சொல்லி அந்த அம்மாவுக்கு இடம் கொடுக்கச் சொன்னேன். மறு பேச்சில்லாமல் எழுந்து விட்டார். அவரும் நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த அம்மா கண்களால் நன்றி சொல்லி விட்டு உட்கார்ந்தார்கள். நடுத்தர வயது, நிற்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
வேக வேகமாக வேலுர் வந்து விட்டது. பேருந்து நிலையத்துக்குள் இறங்கி விட்டு மறுபக்கம் காட்பாடி சாலையில் வெளியில் வந்தேன். காத்திருந்த பகிர்வூர்தியில் ஏறி முன்பு படித்திருந்த பாடத்தின் படி கோபால புரம் என்று முதலிலேயே சொல்லி விட்டேன். கோபால புரத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்தேன்.
காலையில் எழுந்து 8.30க்கெல்லாம் போய் மின் கட்டணம் கட்டி விட்டேன். வழியில் 'நேற்று காசு வாங்காமல் போயிட்டீங்களே, இன்னைக்கு நினைவாக வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொன்னேன்.
கூட்டம் அதிகம் இல்லை. 40 ரூபாய்தான். அட்டையை வீட்டுக் காரரிடம் கொடுத்து விட்டு கேஸ் விபரமும் சொன்னேன். நன்றி சொல்லி விட்டு வெளியில் வந்தேன். உலாவலாகப் போய் சில்க் மில் அருகில் டெக்கான்குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு அழகர் விடுதி. சாப்பிட்டு விட்டு திரும்பும் வழியில் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டேன். கேஸ் சிலிண்டருக்குத் தேவை.
திரும்பி வந்து கொஞ்ச நேரம் படித்துக் கொண்டிருந்தேன். விவாதம் தொடர்ந்தது. அவர் சொன்னது தவறு என்று வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உணர்ந்திருப்பார். 10 மணிக்கு மின்சாரம் போய் விட்டது. 12 மணிக்கெல்லாம் வெளியில் வந்தேன், கேஸ் அட்டையுடன். ஏஜன்சிக்கு நடந்து போனேன். மேலாளர் சிறிது நேரம் காத்திருந்து எனது முறை வந்ததும் அட்டையைக் கொடுத்தால் பில் போடச் சொல்லி விட்டார். கவுண்டரில் உள்ளே அனுப்பினார்கள். மேசைக்குப் பின்பு அன்று பார்த்த பெண். அறைக்குள் உரிமையாளர் பெண்.
'என்ன செய்யணும், சரண்டரா' என்று கேட்டவரிடம். பில் போடச் சொல்லி விட்டார் என்றதும் போட்டுக் கொடுத்து விட்டார். 'பிளாக் ஆகி விடும், நாங்களே நினைச்சாலும் போட முடியாது' என்று சொன்னதெல்லாம் வெற்றுக் கதைதான். பணம் கட்டுவதற்கு மேலாளரிடம் போய் கொடுத்தேன். 40 ரூபாய் சில்லறை கொடுத்ததும் 100 ரூபாய் திரும்பிக் கொடுத்து விட்டார்.
பின்பக்கம் போய் சிலிண்டர் எடுக்கும் இடத்தில் கேட்டால் காலி சிலிண்டரைக் கொண்டு கொடுத்து விட்டுதான் புதியதை எடுக்க வேண்டுமாம். திரும்பும் வழியில் ஆட்டோ பிடிப்பதைப் பற்றி யோசித்தேன். கடைசியில் பாலாஜி தியேட்டர் முன்பு நின்றிருந்த வண்டிக்காரர் ஒருவரிடம் கேட்டேன். தள்ளு வண்டி. ஆட்டோவுக்குக் கொடுப்பதை அவருக்குக் கொடுக்கலாம். இன்னொரு வண்டிக்காரருக்கு கை காட்டினார். அந்த வண்டி உலோகம் போட்டது. தட்டையான படுகைதான். 70 ரூபாய் கேட்டார். 50 ரூபாய்தான் நினைத்திருந்ததாகச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்து 2ம் மாடியிலிருந்து இறக்க வேண்டும் என்றதும் 'இன்னும் 10 ரூபாய போட்டுக் கொடுங்க, ஆட்டோ காரங்கன்னா கீழேயே நின்னுப்பாங்க, நான் மேலே வந்து தூக்கி வரேன்' என்றார். 'அதெல்லாம் இல்லை கேஸ் சிலிண்டர் எடுத்து வரணும்னா தூக்கியும் வர வேண்டியதுதான்' என்றேன்.
திரும்பப் போகும் போது மதி நகர் சாலையில் எதிர் புறம் நடந்து சந்து வழியாக தியேட்டர் தாண்டி கொண்டு சேர்த்தார். சிலிண்டரை கயிறால் கட்டியிருந்தார். திரும்பி வரும் போது அவர் ஏறி மிதித்துப் போய் விட்டார்.
'நீங்க வீட்டாண்ட வந்துடுங்க, என்னை எதிர்பார்க்க வேண்டாம்' என்று சொல்லியிருந்தார். கோபாலபுரம் நோக்கி மெயின் ரோடிலேயே போய் விட்டார். நான் டாடா மோட்டர்ஸ் அருகில் திரும்பினேன்.
"அவர் அப்படியே வராமல் போய் விட்டால், 1500 ரூபாய் நஷ்டம், வழியில் ஏதாவது கடையில் சிலிண்டரை மாற்றிக் கொண்டு வந்தால் எப்படி சரி பார்ப்பது" என்ற எண்ணங்கள் எல்லாம் வந்தது வெட்கமாக இருந்தது. ஆனால் வரத்தான் செய்தன. நான் சிமெண்டு சாலையில் போய்ச் சேரவும் அவரும் வந்தார்.
வீட்டுக்கு முன்பு இறக்கி மேலே கொண்டு போகவும் உதவி செய்தார். 100 ரூபாய் தாளை நீட்டினால் சில்லறை இல்லை. 'அந்தப் பக்கம் வரும் போது வாங்கிக்கோங்க' என்று சொல்லி போய் விட்டார். 'கவலைப்படாதீங்க அங்கதான் இருப்பேன்' என்று உத்தரவாதமும் அளித்தார்.
சிலிண்டரை இணைத்து ஸ்டவ்வை கொளுத்திப் பார்த்தேன், புத்துணர்ச்சி வந்தது.
தஸ் கேபிடல் பாகங்களை தகவிறக்கி வைத்திருந்தேன். முதல் பாகத்தை முன்பே படிக்க முயற்சி செய்திருக்கிறேன். அச்சில் படிப்பதை விட இது எளிதாகத்தான் இருக்க வேண்டும். மதிய உணவுக்கு சப்பாத்தி போட்டேன். சப்பாத்தி மாவு, ரவை இரண்டையும் சரி பார்த்தேன். ரவையில் வண்டு வந்திருந்தது.அதை வெயிலில் பரப்பி வைத்தேன். சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய்தான். அது முடிந்ததும் ஓட்ஸ் கொதிக்க வைத்து விட்டேன், முந்திரி பருப்புகளையும் போட்டு.
சாப்பிடும் போது 'எவ்வளவு நாளாயிற்று' என்று பெருமூச்சு வந்தது. உணவு விடுதியில் சாப்பிடும் போது மனம் நிறைய சாப்பிட முடிவதில்லை. இரண்டு இனம்களாக சாப்பிடுவது என்று வயிற்றுக்கும் மனதுக்கும் உளைச்சலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களாக இந்த வேலை.
தஸ் கேபிடல் படிக்க ஆரம்பித்தேன். இடையிடையே ஆட்டோ டிரைவர் கட்டுரையில் ஒரு பின்னூட்டம், +ல் ஒரு பின்னூட்டம் என்று நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். சாராவிலிருந்து அழைத்து டிஸ்க் நிரம்பி விட்ட பிரச்சனையைச் சொன்னதும் ஏஎம்சி இல்லாமல் எப்படி உதவுவது என்று மறுத்து விட்டேன். அதன் பிறகு மாலையில் மேலாளரிடம் பேசினோம் என்று திரும்பி வந்த பிறகு தொலைபேசியிலேயே வழி சொல்லி சரி செய்து விட்டேன். ரூபாய் தயார் செய்து வைக்கும்படி சொன்னேன். என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.
மாலை பையும், நகல் எடுக்க வேண்டிய புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு போனேன். நகலகத்தில் புத்தகத்தின் பின்னை எடுத்து விட்டுக் கொடுத்தால், 32 பக்கங்கள், 8 தாள்கள் - 16 பக்கங்கள். அனைத்தையும் சேமித்துக் கொண்டது. 7 பிரதிகள் எடுக்க வேண்டும். கடைசியில் பட்டனைத் தட்டினால் ஒவ்வொரு தாளாக இரண்டு புறமும் நகலாகி வந்து விட்டது. மொத்தம் 60 ரூபாய்தான் வாங்கினார். அட்டைக்குத் தனி என்று நினைக்கிறேன். ஒரு பிரதிக்கு சராசரியாக 9 ரூபாய்தான் ஆனது. 50 காசு வீதம் கணக்கு போட்டால் 8 ரூபாய். அட்டைக்கு 1 ரூபாய் என்று கணக்காக இருக்கும்.
மளிகைக் கடையில் சாப்பாட்டு அரிசி, வெங்காயம், குடை மிளகாய், தேங்காய், தக்காளி வாங்கினேன். தயிர் இல்லை என்று சொல்லி விட்டார். கேட்கக் கூடாது. விளக்கு வைத்த பிறகு தயிர் கொடுத்தால் லட்சுமியும் சேர்ந்து போய் விடுவாளே!
வீட்டுக்கு வந்து அரிசியையும், சிறுபயறையும் போட்டு கஞ்சிக்கு வைத்தேன். வெங்காயம், சிம்லா மிர்ச்சி, தக்காளி வெட்டி வைத்தேன். கரண்ட் போனது. அரை மணிக்குப் பிறகு கூட வரவில்லை. 1 மணி நேரம் ஆனது என்று நினைக்கிறேன். அதற்குள் சமையலை முடித்து விட்டேன்.
கஞ்சியை முழுதும் குடித்து விட்டு காயில் கொஞ்சம் மீதியிருக்கிறது.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக