என்னைப் பற்றி

சீனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 31, 2011

புயல் நாள்


2011ம் ஆண்டின் கடைசி நாள். டிசம்பர் 31, 2011 காலை 5.30.

ஒரு வாரமாக நாட்குறிப்பு எழுதவில்லை. கடைசியாக எழுதியது போன வாரம் ஞாயிற்றுக் கிழமை என்று தேதி காண்பிக்கிறது. இடையில் புதன் கிழமையும் எழுதத்தான் செய்தேன். எழுதி விடும் நாட்கள் மிகவும் செயலாற்றம் மிக்கவையாக மாறி விடுகின்றன.

நேற்றுக் காலையில் எழுந்திருக்கும் போது 6 மணி தாண்டியிருந்தது. எழுந்த பிறகு திரைப்படம் பார்க்கும் வேலை. little red flowers என்ற சீன மொழித் திரைப்படம். வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. தானே புயல் கரையைக் கடப்பதன் மழை. சொன்னபடி சரியாக காலை 7 மணிக்கு கரையை கடந்திருக்கிறது.

திரைப்படம் சீனாவின் சிறு குழந்தைகளை வளர்க்கும் ஆரம்பப் பள்ளி பற்றியது. முழுக்க முழுக்க சிறு குழந்தைகளும் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆசிரியர்கள், ஆயாக்கள் மட்டும்தான் வருகிறார்கள். பார்வையிடுவதற்கு ஒரு உயர் அதிகாரி இடையில் வருகிறார். அருகில் இருக்கும் மருத்துவமனையில் நோயாளிகள் இரண்டு இடங்களில் உலவுகிறார்கள்.

இவற்றைத் தவிர முழுக்க முழுக்க அந்தக் குழந்தைகளின் உலகம்தான். அவர்களின் குழப்பங்கள், தினசரி நடவடிக்கைகள், முரண்டுகள், சச்சரவுகள், கனவுகள் என்று கவிதையாக எடுக்கப்பட்ட படம்.

படத்தைப் பார்க்கும் யாருக்கும் இது போன்ற அமைப்புகள் மீதான பெரும் விமர்சனம் ஏற்படும். குழந்தையை இவ்வளவு சிறு வயதில்  பிரித்து வளர்ப்பதன் கொடுமையை சொல்லாமல் சொல்லும் படம்.

திரைப்படத்தின் கடைசி 15 நிமிடங்கள் இருக்கும் போது நிறுத்தி வைத்து விட்டுப் புறப்பட்டேன். காலை உணவுக்கு நேரமாகி விட்டது. மழை நன்கு பெய்து கொண்டிருந்தது. குடையைப் பிடித்துக் கொண்டு வெகு தூரம் போக வேண்டாம் என்று வைன் கடையின் அருகில் இருக்கும் தேநீர் கடையில் நாளிதழ் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். அங்கு நாளிதழ்கள் வந்திருக்கவில்லை. தண்ணீர் இரண்டு புறமும் தேங்கி நடப்பதை சிரமமாக்கியிருந்த சாலையில் அரசமர சந்திப்பு வரை போய் வழக்கமாக நாளிதழ் வாங்கும் கடைக்குப் போய் விட்டேன்.

அரவிந்த் லேபாரட்டரீஸ் - ஐடெக்ஸ் செய்யும் தொழிற்சாலைக்கு பெண்கள் வரிசையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். குடை பிடித்துக் கொண்டு வருகிறவர்கள், தலையில் துணி மூடிக் கொண்டு வருகிறவர்கள், துப்பட்டாவையை மூடிக் கொண்டு வருகிறவர்கள், சைக்கிளில் வருகிறவர்கள், இரு சக்கர வண்டியில் வந்து இறங்குகிறவர்கள் என்று யாரும் விடுமுறை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. புயல் நாள் என்று விடுமுறையும் அறிவித்திருக்கவில்லை. தொப்ப நனைந்து கொண்டு சிலர் வந்து சேர்ந்தார்கள். எப்படி ஈரமான உடையுடன் உள்ளே வேலை செய்வார்கள் என்று தோன்றியது.

நாளிதழ் வாங்கும் கடையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பெண் இருந்தார். காலை நேர கலக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டு நாளிதழைக் கொடுத்தார். 50 காசு நாளைக்குத் தருகிறேன் என்று கடனும் சொல்லி விட்டார். மழை எல்லோரையும் மாற்றி விடுகிறது. மனதுக்குள்ளிருந்து ஒரு புதிய மனிதரை வெளியில் கொண்டு வந்து விடுகிறது. அதுவும் நேற்று பெய்தது போல பெரும் காற்று இல்லாமல், பெரு மழையாக இல்லாமல் தொடர்ந்து பெய்யும் சிறுமழை தண்ணீருடன் நமக்குள்ள உறவை வெளிக் கொண்டு வந்து விடுகிறது என்று தோன்றுகிறது.

போகும் போது புரிந்து கொண்டு வழிப்பாதைகளில் திரும்பி வந்தேன். வீட்டுக்குப் போகாமல் நேராக இட்லிக் கடைக்கு. அடாது மழை பெய்தாலும் விடாது இட்லி விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. வழக்கமான 5 இட்லி, வடை, பூரி.  ஒரு வயதானவர் உட்கார்ந்து தோசை கட்டிப் போக வந்திருந்தார். சாப்பிட்டு விட்டு காசு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தேன். திரைப்படத்தின் மீதியைப் பார்த்து முடித்தேன். கடைசியில் ஏதும் நாடகத்தனமாக காட்சியைச் சேர்த்து முழுப்படத்தின் ஓட்டத்தை மாற்றியிருக்கவில்லை.

கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தேன். 11 மணி வாக்கில் எழுந்து வெளியில் புறப்பட்டேன். வோடபோன் பணம் கட்ட வேண்டும், வங்கியில் சேவை வரி கட்டிய கவுண்டர் பாயிலை வாங்கிக் கொள்ள வேண்டும். நடந்து எதிர்ச் சாலைக்கு வரும் போது ஒரு ஆட்டோ வந்தது. முதலில் ஆற்காடு சாலையில் விடும்படிதான் கேட்டேன். ஆனால் நினைத்துப் பார்த்ததில், பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து, பேருந்து பிடித்து போரூர் அல்லது காரம்பாக்கத்தில் இறங்கி, சுமார் 1 கிமீ நடந்து கடைக்குப் போவதற்கு இதிலேயே போய் விடலாம். 70 ரூபாய் கேட்டார். நியாயமாகப் பட்டது.

வோடபோன் கடைக்கு அருகில் இறங்கினால் பூட்டப்பட்டிருந்தது. இரண்டு பெரிய ஷட்டர்கள் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டிருந்தது. வாசலில் நான்கைந்து பேர் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசியிலிருந்து வெளியில் அழைக்கவே முடியவில்லை. இன்னொருவர் வாடிக்கையாளர் சேவைக்கு தொலைபேசி விபரம் அறிந்தார். புயல் காரணமாக எல்லா கடைகளுக்கும் விடுமுறை அளித்திருக்கிறார்களாம். குறைந்த படசம் அழைக்கும் வசதியை திரும்ப கொடுங்கள் என்று கேட்க நான் வாடிக்கையாளர் சேவையை அழைக்கவே முடியவில்லை.

பத்திரிகைக் கடையில் ஆனந்த விகடன் வாங்கலாம் என்று நடந்து போனால் அந்தக் கடையையே காணவில்லை. வழியில் சிம் கார்டிலிருந்து போனுக்கு தொடர்புகளை நகல் எடுக்கும்படி இயக்கி விட்டிருந்தேன். சில நிமிடங்களில் நகல் ஆகி விட்டது. திரும்பவும் பேருந்து நிறுத்தம் அருகில் வந்து குடை பிடித்துக் கொண்டு நின்றேன். ஒரு குடும்பத்தினர் காத்திருந்தார்கள். ஒரு சிறு பெண் மட்டும் குடை பிடித்தபடி சாலை ஓரத்தில் நின்றிருந்தாள். இன்னொரு பையன் இன்னொரு குடையில். இந்தப் பெண் சிறிது நேரத்துக்குப் பிறகு ஒதுங்கி நின்றிருந்த அம்மாவிடம் திரும்பி போய் விட்டாள். பேருந்து எதுவும் வரவில்லை. டாடா மேஜிக் வந்து அதில் முன் இருக்கையில் ஏறிக் கொண்டேன்.

பின் இருக்கைகளில் உட்கார்ந்தவர்கள் ஒவ்வொருவராக இறங்கி விட எல்&டி தாண்டி வங்கிக்கு முன்பு வரும் போது நானும் முந்தைய நிறுத்தத்தில் ஏறிய இன்னொருவரும் இருந்தோம். இரண்டு பேரும் இறங்கிக் கொண்டோம். 2 பேருக்கு 10 ரூபாய் கொடுத்தவர்கள், 1 ஆளுக்கு 7 ரூபாய் கொடுத்தவர்கள் எல்லாம் இருக்க என்னிடம் 10 ரூபாய் வாங்கி விட்டார். மேக்சி என்ற வண்டியில் வேகமாகப் போன ஒருவரை நிறுத்தத்தில் எவ்வளவு டிக்கெட் போடுகிறாய் என்று கேட்டு 15 ரூபாய் என்று தெரிந்து கொண்டார் இவர். சொல்லவே இல்லை, நானும் 15 ரூபாய் ஆக்கியிருப்பேன். இப்போ 10 ரூபாய்தான் வாங்குகிறேன் என்று குறைப்பட்டுக் கொண்டார்.

வங்கிக்குள் போவதற்கு முன்பு குடையை வெளியில் வைக்கப் பார்த்தால் உள்ளேயே குடை வைக்கும் இடம் இருந்தது. வைத்து விட்டு கடைசியில் அலுவலக அறைக்குப் போய் கேட்டால், முன்பக்கம் முதல் கவுண்டரில் என்று திருப்பி அனுப்பினார். அந்த மேசையில் ஒரு உதவியாளர் ஏதோ ஆவணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டால் முதல் கவுண்டர் என்றார். அங்கே போகப் பார்த்தால், அதற்கு முந்தைய டிராயர்களைப் பார்க்கச் சொன்னார். 'எது என்று தெரியாதா' என்று ஒரு அதட்டல் வேறு. நீங்கதாங்க சொல்லணும், நான் தெரியாம எதையும் நோண்டக் கூடாது என்று உறைக்கச் சொல்லி விட்டு எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.

வலது புறமாகவே நடந்து பாலத்தைக் கடந்து சாலை நிறுத்தத்துக்கு வந்தேன். விளக்குகள் எரியவில்லை. மணப்பாக்கத்திலிருந்து வரும் சாலையின் முனையில் ஒரு போக்குவரத்துக் காவலர் மழை அங்கி அணிந்து நின்றிருந்தார். இருப்பினும் நன்கு நனைந்திருப்பார். கோழிக் குஞ்சு போலத் தெரிந்தார். முகத்தில் கடுமை குறைந்திருக்கவில்லை. பரிதாபமாக இருந்தது. இந்த மழையிலும் கடமை உணர்வு தவறாமல் இருக்கிறாரே என்று தோன்றியது.

சாலையைக் கடக்கக் காத்திருந்து ராமாபுரம் போகும் இறக்கத்தில் இறங்கினேன். பேருந்து அல்லது ஆட்டோ எதுவும் ஏற்றிப் போக இல்லை. நின்றிருந்த ஒரே ஆட்டோவும் U அடித்து வேறு எங்கோ போய் விட்டார். சிறிது தூரத்தில் இருந்த இணைய மையத்துக்குப் போனேன். வெளியில் குடையை வைத்து விட்டு உள்ளே போனேன்.

புயல் கரையைக் கடந்தது பற்றிய செய்திகள் என்டிடிவியில் முதல் செய்தியாக இருந்தது ஓரளவு திருப்தியாக இருந்தது. பார்ப்பதற்கு முன்பு இது மட்டும் முக்கிய செய்தியாக இல்லா விட்டால்  அர்த்தமே இல்லை என்று நினைத்திருந்தேன்.  பிஎஸ்என்எல் பதிவில் கிருபாகரனின் எண்ணைச் சேர்த்து பதிவில் என் எண்ணையும் சேர்த்து விட்டேன்.

1 மணி நேரத்துக்குப் பிறகு புறப்படாமல் 55 நிமிடங்களில் எழுந்து கொண்டேன். 20 ரூபாய் என்று நினைத்திருந்தேன். 25 ரூபாயாம். 100 ரூபாய் தாளை மாற்றிக் கொண்டேன். ராமாபுரம் போகும் சாலை புதிதாக அகலமாக போடப்பட்டிருந்ததால், மழைத் தண்ணீர் தேங்குவது இல்லாமல் நடக்க வசதியாக இருந்தது.

வெங்கடேஸ்வரா இனிப்புக் கடையில் முறுக்குப் பொதியும், குட்டே பிஸ்கட் பொதியும் வாங்கிக் கொண்டேன். அதை துணிப்பைக்குள் போட்டுக் கொண்டு அரச மரம் நோக்கி நடந்தேன். வழியில் எங்கும் ஆனந்த விகடன் வாங்கவில்லை. மீண்டும் வழக்கமான கடைக்கு வந்து விகடன் கேட்டால் அதே பெண் இருந்தார். நீங்க விகடன் வாங்குவீங்களா, தெரிஞ்சிருந்தா காலையிலேயே சொல்லியிருப்பேனே என்று சொல்லிக் கொண்டு கொடுத்தார். ரிப்போர்ட்டர் வாங்குவீங்களா என்று விசாரிப்பு. எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு என்று சொன்னேன். 22 ரூபாய். கொஞ்சம் தடியாக இருந்தது. அதிக பக்கங்கள் என்று பம்மாத்து வேலை செய்கிறார்கள். விகடனைப் போன்று வியாபார நியாயம் இல்லாத பத்திரிகையை எங்கும் பார்க்க முடியாது.

அதைக் கையிடுக்கில் வைத்துக் கொண்டு அடுத்த பகுதியை கடந்து வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்து விகடன் படித்தேன். மாலை சாப்பிட பக்கத்து பேக்கரியில் முறுக்கு மற்றும் தேங்காய் பன் வாங்கினேன். கிரீம் இல்லாத தேங்காய் பன் இல்லையாம்.

விகடன், தொடர்ந்து இந்திய வரலாற்றில் கீதை புத்தகம். வேதங்கள், உபநிஷதங்கள், ஆறு மரபுகள், பௌத்தப் புரட்சி, பார்ப்பன மறுமலர்ச்சி இவற்றுக்கு மத்தியில் கீதையின் பங்கு என்ற என்று முன்னுரையே நூலின் மூன்றில் ஒரு பகுதி ஆகி விட்டது. பார்ப்பனீய கருத்துக்களை பௌத்த மெய்ஞ்ஞானத்தில் பழகிய அறிவுஜீவியினரும் ஏற்றுக் கொள்ளும்படியான கருத்துக்களை, பரவலாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வடிவில், கவர்ச்சிகரமான பொதியில் கொடுத்து 15 நூற்றாண்டுகளாக கீதை ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று சொல்வதுதான் நூலின் நோக்கம்.

மாலையில் 7 மணிக்குப் பிறகு வெளியில் போய் கடையில் 6 இட்லி பொதி வாங்கினேன். தோசை மாவு, இட்லி பொடி, ஷாம்பூ, தீப்பெட்டி, சன்ரைஸ் காபி, இவ்வளவும் வாங்கிய ஒரு முதியவருக்கு பில் 30 ரூபாய்தான். அதையும் நோட்டில் எழுதி வைத்துக் கொண்டார். நானும் இட்லி பொடி பொதி வாங்கிக் கொண்டேன். ஒன்று 1 ரூபாய்தான், இரண்டு பொதிகள் 2 ரூபாய்க்கு. 6 இட்லிக்கு 18 ரூபாய், மொத்தம் 20 ரூபாய்.

மழை நாளில் வீட்டில் அடைந்திருக்கும் போதே இவ்வளவு செலவு. வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு, படுக்கப் போனேன். கீதை புத்தகம் புரட்டிக் கொண்டே தூங்கப் போனால் தூக்கம் வராமல் எழுந்து தியானம். அதன் பிறகு தூக்கம். நாள் முழுவதும் மின்வெட்டு ஏற்படவே இல்லை.

தூக்கத்திலும் நிறைய கனவுகள். தாலிக்குப் பொன் உருக்க 12,000 ரூபாய் என் பங்காக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாள். ஏடிஎம்மில் எடுத்து தருகிறேன் என்று போனால் அது ஏடிஎம் இல்லை, தொலைபேசி இணைப்பகம். 12,000 ரூபாய் என் பேர் சொல்லிக் கொடுத்தால்தான் அவர்களுக்கு மதிப்பாக இருக்கும், யாருக்கு?  இறங்கி வந்தது விமானத்தில் அல்லது பேருந்திலிருந்து. குடையை மறந்து விட்டு வந்திருக்கிறேன். இப்படி குழப்படியான கனவு.

மாலையில் வேறு எதுவும் செய்வதற்கு நேரம் இருக்கப்போவதில்லைதான். நாளைக்குக் காலையில்  தொலைபேசி தகவல் சொல்லி விட்டுப் பொருட்களை பொதிந்து வெளியில் வைத்து விட்டு போய் சாவியைக் கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். திரும்பி வந்து பொருட்களை எடுத்துக் கொண்டு பாட்டி வீட்டில் வைத்து வீட்டைப் பூட்டி வேலூருக்குப் புறப்பட வேண்டியதுதான்.

சனி, ஏப்ரல் 16, 2011

சிவப்பு அந்தப்புர கனவுகள்

ஏப்ரல் 16ம் தேதி, காலை 4.05

நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக எழுந்து வழக்கமான பணிகளைத் தொடர்ந்தேன்.

முந்தைய நாள் அரைத்த மாவில் மாலையில் சாப்பிடுவதற்கு ஒரு கிண்ணம் எடுத்தது போக பாத்திரத்தில் பாதிக்குக் கீழ்தான் இருந்தது. காலையில் திறந்து பார்த்தால் பொங்கி பாத்திரத்தில் மேல் விளிம்பிற்கு அருகில் வந்து விட்டிருந்தது. சின்ன பாத்திரத்தில் வைத்திருந்தால் கீழே வழிந்திருக்கும்.

நாள்குறிப்பு எழுதி விட்டு நடக்கப் போகும் போது கோபாலபுரம், வேலூர் சாலையில் வலது புறம் சாலையைக் கடந்து காந்தி நகர் கிழக்கு பிரதான சாலை, ஓடைப்பிள்ளையார் கோவில் அருகில் டெக்கான் குரோனிக்கிள்+ஆனந்த விகடன். இரண்டு 10 ரூபாய்கள் இருந்தன. மீதி எல்லாம் 100 ரூபாய் நோட்டுகள். கடைக்காரரிடம் சில்லறை கேட்டார் அவர் தயங்கினார். விகடனை வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும்.

டாடா மோட்டர்ஸ் அருகில் தெருமுனையில் பால் விற்குமிடம். பால் விலை 10 ரூபாய், 100 ரூபாய் நோட்டை நீட்டினால் சில்லறை இல்லை என்று சொல்லி விட்டார். ஆவின் பால் நீல நிற கவர் கேட்டால் யாருக்கும் விற்க தயக்கம்தான், அதன் விலை 10 ரூபாய். பச்சை நிற பால் உடனேயே கொடுத்து விடுவார்கள் - 12 ரூபாய் விலை.

மளிகைக்கடைக்கு அருகில் பார்த்தால் அப்போதுதான் கடையைத் திறந்து கொண்டிருந்தார்கள். காய்கறி கிடைக்குமா என்று கேட்டதும் வரச் சொன்னார். வழக்கமாக இருப்பவர் இல்லை. உருளைக்கிழங்கு 1 கிலோ, வெங்காயம் அரை கிலோ, அருகில் மாங்காய் இருந்தது - 2 மாங்காய்கள், தக்காளி இல்லை, தேங்காய் இல்லை, பால் பாக்கெட். எல்லாவற்றையும் பையில் போட்டுக் கொண்டு 100 ரூபாய்க்கு சில்லறை கொடுத்தார். பால் பாக்கெட்டை வாங்காமலேயே வந்து விட்டேன். இன்று பால் வாங்க வேண்டாம் என்று விதித்திருக்கிறது.

வீட்டு வேலைகளை முடித்து விட்டு, தோசை மாவைக் கலக்கிப் பார்த்தால், பொங்கியிருந்ததில் பெரும்பகுதி நுரைதான், போதுமான அளவு புளித்திருந்தது. குளித்து தியானம் செய்து விட்டு இணையத்தில் பார்த்தால் கண்ணன் வேலூர் பரப்புரை குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பரப்புரை நடத்தியது, எழுப்பிய முழக்கங்கள், சந்தித்த மக்கள், அனுபவங்கள் என்று நீளமாக எழுதியிருந்தார். கூடவே பல புகைப்படங்களும். வலைப்பதிவில் வெளியிட்டுக் கொள்வதாகச் சொல்லி, புகைப்படங்களை பிகாசா மூலமாக சேர்த்துக் கொண்டேன். நாட்குறிப்பையும் பதிவில் வெளியிட்டு விட்டு, மற்ற செய்திகளை பார்த்துக் கொண்டேன்.

டெக்கான் குரோனிக்கிளில் 3வது மீனவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது, வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் என்று செய்தி வந்திருந்தது. இணையத்தில் இது தொடர்பான சுட்டி எதுவும் கிடைக்கவில்லை. பாடகி சித்ராவின் குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்த செய்தி எல்லா தளங்களிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. டெக்கான் குரோனிக்கிளிலும் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்கள். குழந்தையை இழக்கும் பெற்றோரின் சோகம் அளவிட முடியாதது. அதுவும் சித்ரா போன்ற மென்மையான அமைதியான குணமுடைய அம்மாவை நினைத்து மனம் உருகத்தான் செய்கிறது.

வேலூர் பரப்புரை பற்றிய பதிவை தமிழ்மணம், கூகுள் பஸ், டுவிட்டர் மூன்றிலும் இணைத்து விட்டேன்.

மாவைக் கலக்கி இட்லிக்கு ஊற்றி வைத்தேன். 12 இட்லிகள் ஊற்றும் தட்டு. ஒரு அகப்பை மாவில் இரண்டு இட்லிகளாக சின்னச் சின்னதாக ஊற்றிக் கொண்டேன். அழுத்தக் கலனில் எடைக்கல் போடாமல் வைத்து விட்டால் இட்லி வெந்து விடும். அதை இறக்கி வைத்து ஆறிய பிறகு, மிளகாய்ப் பொடியுடன் 12ஐயும் உள்ளே தள்ளினேன்.

எண்ணைய் தீர்ந்து விட்டது. நெய் சாப்பிட வேண்டும் என்று வாங்கி வைத்து சும்மா இருக்கிறது. அது கெட்டுப் போகும் முன்பு தீர்த்து விட வேண்டும். தாளிக்கவும் தோசை சுடவும், மிளகாய்ப் பொடியில் சேர்க்கவும் நெய்யை மூன்று நாட்கள் பயன்படுத்தினேல் தீர்ந்து போகும் என்று முடிவு செய்து கொண்டேன்.

மதிய உணவுக்கு மாங்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல், இட்லி அரிசியில் சோறு. மாலையில் மீந்திருக்கும் தோசை மாவு பயன்படுத்தி தோசை. அடுத்த நாள் (இன்று) காலையில் சிறுபயறு வேக வைத்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இன்று போய் கடையில் அரிசியும் மற்ற பொருட்களும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

9 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டு விட்டது. மென்பொருள் பணிகளை ஆரம்பித்தேன். தோல் வியாபரம் செய்பவர்களுக்காக பயன்பாட்டை எப்படி அமைக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டேன். அடுத்தது தரவுத் தளத்தை உருவாக்குதல்.

முதலில் தரவுத் தள வடிவமைப்பை மட்டும் பழைய தளம் ஒன்றிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, தேவைப்படும் முதன்மை தரவுகளை ஒவ்வொரு அட்டவணையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக நிறுவனம் தொடர்பான தரவுகள்,
நான்காவதாக முதன்மை பயனர் தரவுகள்,
ஐந்தாவதாக மற்ற பயனர்கள் பற்றிய தரவுகள்,
ஆறாவதாக தானாக கூட்டிக் கொள்ளும் எண்களை அமைத்தால்,
ஏழாவதாக அட்டவணைகளுக்கிடையேயான உறவுகளை சேர்த்தல் என்ற பிரித்துக் கொண்டேன்.

இதற்காக பதிப்பு மேலாண்மையில் புதிய கிளையை உருவாக்கி வேலை செய்து கொண்டிருந்தேன். கடைசியாகச் சொன்ன அட்டவணை உறவுகள் மற்றும் பிற நிபந்தனைகளைச் சேர்ப்பதை முதல் கோப்பிலிருந்து பிரிப்பது நேற்று செய்து கொண்டேன்.

வாடிக்கையாளர் ஒரு நிறுவனமாக இருந்தாலும் இரண்டு பெயரில் செயல்படுகிறாராம். இந்த மென்பொருள் இரண்டு பெயருக்கும் (தனித்தனி நிறுவனங்களாக) தரப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார். இதற்கு முன்பு செய்த முறையை விட எளிமையாக செய்யலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனித்தனி தரவுத்தளம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே நிரல் தொகுப்பு. பயனர் உள்புகும் போது எந்தத் தரவுத்தளம் என்று தேர்ந்தெடுத்துக் கொண்டால் அந்த நிறுவனத்தின் பணிகளை செய்து கொள்ளலாம்.

இதனால் வேலையும் எளிதாக இருக்கும். பயன்படுத்துபவர்களுக்கும் தெளிவாக இருக்கும். இந்த வடிவமைப்பு யாருக்கும் தோன்றவில்லை.

எல்லா நிரல்களையும் இயக்கிப் பார்த்து புதிய பயனராக புகுந்து சரி பார்த்துக் கொண்டேன். மடிக்கணினியில் மின்னூட்டம் 50%க்குக் கீழே போய் விட்டிருந்தது. அடுத்து என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு விட்டு கணினியை மூடி விட்டேன். இனிமேல் 12 மணிக்குப் பார்க்கலாம்.

அரிசி முக்கால் கப் இருந்தது, பருப்பை ஏற்கனவே ஊற வைத்து விட்டிருந்தேன். இரண்டையும் புதிதாக வாங்கிய பெரிய பாத்திர அடுக்குகளில் வைத்து விட்டு உருளைக்கிழங்குகள் 3ஐ, பழைய சின்ன பாத்திரத்தில் மேலே வைத்து மூடி விட்டேன். வெங்காயம், மாங்காய் வெட்டி வைத்துக் கொண்டேன். புளியும் ஊறப் போட்டிருந்தேன். சமையல் முடிக்கும் போது மின்னிணைப்பு வந்தது. கொஞ்ச நேரம் பொறுத்து சாப்பிட்டு விட்டு, அடுத்த பணி dashboard சேர்ப்பது.

இதற்காக தனியாக css கோப்புகளும், js கோப்புகளும் சேர்க்கப்பட வேண்டும். மீஉரை சட்டகத்தை உருவாக்கும் செயலிகளில் இந்தக் கோப்புகளின் பெயர்களை நேரடியாக எழுதியிருந்தோம். அதை மாற்ற வேண்டும். கோப்புகளின் பெயர்களை சேர்க்க ஒரு தனி மாறியை உருவாக்கி அதில் எல்லா பக்கங்களுக்கும் தேவையான கோப்புகளை செயலிக்கு உள்ளேயே அமைத்துக் கொண்டேன். ஏதாவது ஒரு பக்கத்தில் புதிய கோப்புகளைச் சேர்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கத்தில் அந்தக் கோப்பின் பெயரை தொடர்புடைய மாறியில் சேமிக்கும் மதிப்புகளுடன் சேர்க்க வேண்டியதுதான்.

இதை முடித்து விட்டு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த நிரல் கோப்புகளை உரிய அடைவுகளுக்குள் கொண்டு சேர்த்தேன். பயனர் இடைமுகத்தை ஏற்கனவே இருக்கும் முதல் பக்கத்தில் நகல் செய்து ஒட்டிய பிறகு இயக்கிப் பார்த்தால் பக்கம் சரியாக வந்து விட்டாலும், இழுத்து இன்னொரு இடத்துக்கு மாற்றுவது வேலை செய்யவில்லை. அதற்கான ஜாவாஸ்கிரிப்டு நிரலை சரி பார்க்க வேண்டும்.

ஒரு நிரல் மாற்றம் செய்வது குறித்த கருத்து கேட்டிருந்தார். காலையில் படிக்கும் போது மின்சாரம் தடைப்படுவதற்கு முன்பு மதியம் பதில் போடுவதாகச் சொல்லியிருந்தேன். அதற்கான பதிலையும் அனுப்பி விட்டேன்.

ஆனந்த விகடனில் படிப்பதற்கு தகுந்தது பெரிதாக இல்லை. சிறுகதையின் சிறப்பு முதல் வாசிப்பில் தெரியவில்லை. ஜக்கி வாசுதேவ் விகடனுடனான உறவைப் பேசுகிறார், சுகா, முத்துக்குமார் தொடர் கட்டுரைகள், வாலியின் கட்டுரைகளை எப்படித்தான் சகித்துக் கொள்கிறார்களோ அவற்றைப் படிப்பதை நிறுத்தியே விட்டேன். காமெடி குண்டர், வலை பாயுதே, சிரிப்பு அவார்டுகள் போன்ற பக்கங்கள் நன்றாக இருக்கின்றன. அன்னா அசாரே குறித்து ஒரு தொடர் ஆரம்பித்திருக்கிறார்கள். யாழ் சுதாகர் பேட்டி வெளியிட்டிருந்தார்கள். அற்புதமான மனிதர், அற்புதமான குரல். அவரது குழந்தைக்கு இருக்கும் நோய் பற்றி சொல்லியிருந்தார்கள்.

திரைப்படத் துறையினர் இரண்டு அணியிலும் வேலை செய்ததால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்ன பாதிப்பு இருக்கும் என்று ஒரு கட்டுரை.

சிவப்பு மாளிகைக் கனவு முடித்து விடுவது என்று தீர்மானம். படித்துக் கொண்டிருக்கும் போது வாடிக்கையாளரிடமிருந்து குறுஞ்செய்தி, முதல் தவணை பணத்துக்கான காசோலை அனுப்பி வைத்து விட்டேன் என்று சொல்லியிருந்தார். கணினி வாங்குவதற்காக ஐபிஎம்இலிருந்து யாரும் தொடர்பு கொண்டதாக தெரியவில்லை.

உண்மைத் தமிழன் தொலைபேசி 25 வயதுக்குள் இருக்கும் தொழில் முனைவர்கள் பற்றிய விபரங்கள் வேண்டும். பேட்டிக்குக்கேட்கிறார்கள் என்று சொன்னார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். சன்நெட்வோர்க் சரவணன், கிருஷ்ணகிரி செல்வமுரளி இரண்டு பேரின் தொடர்புகளை அனுப்பி வைத்தேன்.

மாலை சாப்பிட்டு விட்டு சிவப்பு மாளிகைக் கனவின் இறுதி பாகத்தின் இறுதி அத்தியாயங்களை முடித்து விட்டேன். நல்ல ஒரு அரிய படைப்பு கடைசி அத்தியாயத்தை முடித்த பிறகு மீண்டும் முதலிலிருந்து படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அவ்வளவு செறிவுடனும், வாழ்க்கைச் சிக்கல்களை படம் பிடிப்பதாகவும் இருக்க வேண்டும்.

டால்ஸ்டாயின் போரும் அமைதியும், கல்கியின் அலை ஓசை, டிக்கென்சின் டேவிட் காப்பர்ஃபீல்ட், மார்கரெட் மிட்செலின் Gone with the Wind, இப்போது இந்த சிவப்பு மாளிகைக் கனவு. 1700களின் முதல் பாதியில் வாழ்ந்த எழுத்தாளர் எழுதியது.

சியா, வாங், ஷூயே, ஷிஹ் என்ற செல்வாக்கு மிகுந்த குடும்பங்களைப் பற்றிய கதை.
சியா குடும்பத்தின் முக்கிய கிளை உறுப்பினர்களை மையமாக வைத்து, அதிலும் பாவ்யூ என்ற நாயகனையும் தாய்யூ என்ற நாயகியையும் இரட்டை புள்ளிகளாக வைத்து, அவற்றைச் சுற்றிய நூற்றுக்கணக்கான புள்ளிகளை விவரிக்கிறார். கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அதனதன் இயல்பை உரையாடல்கள் மூலமும் செயல்பாடுகள் மூலமும் படம் பிடித்துக் காட்டுகிறார்.

பல தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒரே வீட்டில் (பெரிய மாளிகை) வசிக்கிறார்கள். குடும்பத்துக்கு மூத்தவர் அரசபதவியில் இருந்த கணவனை இழந்த மூதாட்டியார்.

அவரது கணவனின் பெரியப்பா குடும்பம் பக்கத்து அரண்மனையில். பெரியப்பாவின் மகன் இறந்து விட பேரன் துறவியாகி வெளியில் வசிக்கிறார். பேரனின் மகன் சியாசென், மனைவி மேடம் யூ, மகன், அவனது மனைவி.

மூதாட்டியாருக்கு இரண்டு மகன்கள் -
மூத்தவர் சியா ஷே, மனைவி மேடம் ஷிங், அவரது மகன் சியா லியன், அவனது மனைவி ஷிஹ் லியன் - இவர்களுக்கு ஒரு குழந்தை சியாசியே. அவருக்கு அங்கீகரிக்கப்பட்ட வைப்பாட்டி மூலம் ஒரு மகள் - ஷிஹ் சுவன்.

இளையவர் சியா செங், மனைவி மேடம் வாங். இரண்டு மகன்கள் - மூத்தமகன் சூ இறந்து விட அவனது மனைவி லி வான் விதவையாக மகன் சிறு குழந்தையை (சியா லான்) வளர்த்து வருகிறாள்.
இரண்டாவது மகன் பாவ் யூ. பிறக்கும் போதே வாயில் ஒரு மரகதக் கல்லோடு பிறக்கிறான் (யூ என்றால் மரகதம்).
ஒரு மகள் - யுவான் சுவன் அரண்மனையில் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்படுகிறாள். கதையின் போக்கில் பேரரசரின் மனைவியாக அங்கீகரிக்கப்படுகிறாள்.
சியா செங்-இரண்டாம் நிலை மனைவி மூலம் ஒரு மகள் - தான்சுவன்.

மூதாட்டியாரின் மகள் வாழ்க்கைப்பட்டு போன இடம் லீ குடும்பம். ஒரு மகள் தாய்யூ. அம்மாவை இழந்த அவள் பாட்டி வீட்டுக்கு வந்து சேருகிறாள்.
மேடம் வாங் ன் அண்ணன் மகள்தான் மேடம் ஷிஹ் லியன்.
மேடம் வாங் ன் சகோதரி குடும்பம் ஷூய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர், இரண்டு குழந்தைகள் மூத்தது மகன் ஷூய பான், இரண்டாவது மகள் பாவ் சாய்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் பணிவிடை செய்யும் தாதியர், தனித்தனி வீடுகள், வீட்டு வேலை செய்ய வேலைக்காரிகள், ஆண்களுக்கு வெளியில் போகும் போது கூடப் போகும் பையன்கள், குடும்பப் பணிகளை கையாளும் அலுவலர்கள், அவர்களது குடும்பங்கள் என்று நூற்றுக்கணக்கான பேர் மாளிகைகளில் வசிக்கிறார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் மட்டுமின்றி பணிவிடை புரியும் தாதியரில் பலருக்கும் அழுத்தமான பாத்திரங்களை படைத்திருக்கிறார். இந்த நூற்றுக்கணக்கான பெயர்களையும் வெறும் பெயர்களாக சொல்லிப் போகாமல் ஒரு திரைப்படமாக ஓட விடுகிறார். சம்பவங்களும் வேகமாக நகர்கின்றன. வாழ்க்கையில் நடக்கும் எதையும் சொல்லாமல் விடவில்லை.

பணிப்பெண்களை அடிமைகளாக வாங்கி விற்பதில் ஆரம்பித்து, ஓரினச் சேர்க்கையாளர்கள், மனைவியை ஏமாற்றி அடுத்தவன் மனைவியுடன் உறவு வைத்துக் கொள்ளும் கணவன், தாதிப்பெண்ணையே தன் கணவனுக்கு இரண்டாம் நிலை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் மனைவி, திறமையாக வீட்டு நிர்வாகத்தைக் கவனிக்கும் மனைவி, கணவனின் ஆட்டத்துக்கெல்லாம் மறுப்பு சொல்ல முடியாமல் இருக்கும் வாயில்லா மனைவி, 80 வயதைத் தொடும் மூதாட்டியின் குணங்கள், மனப் போக்குகள், பொறுப்புகளை மறந்து குடித்துக் கும்மாளம் போடும் மகன்கள், எஜமானர்களை ஏமாற்றித் திருடும் பணியாளர்கள்,

மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கக் கூடிய எல்லா வகையான மனிதர்களும் கதையில் வருகிறார்கள். கதை நடக்கும் சூழல் 18ம் நூற்றாண்டு சீன சமூகத்தில். கதையில் பேரரசரின் சபைக்குக் கூட ஓரிரு இடங்களில் அழைத்துப் போய் அவரது திருவாக்கை கேட்க வைக்கிறார்.

சிறு குழந்தையைக் கடத்தி வளர்த்து பெரிய பெண்ணானதும் தாதிப்பெண்ணாக விற்கும் கும்பல், திட்டம் போட்டு கொலை செய்யும் பெரிய மனிதர்கள், காவல் துறை, நீதிமன்றங்கள், சூழ்ச்சி செய்து தற்கொலைக்குத் தூண்டும் பெரிய இடத்துப் பெண்,

பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கவிதை எழுதும் கூட்டங்கள், நிலா திருவிழாவில் இரவில் நிலா பார்த்தல்.

செவ்வாய், மார்ச் 29, 2011

பணி முறைகள்


இன்றைக்கு ஆம்பூர் போக வேண்டும், அதற்கு முன்பு கொஞ்சம் வேலைகளையும் முடித்து விட வேண்டும். ஒரு மணி நேர வேலை இருக்கும். ஆம்பூருக்குச் சீக்கிரமாகப் போய், 12 மணிக்கெல்லாம் புறப்பட்டு விட வேண்டும்.

நேற்று இரவு தூங்கும் போது தாமதமாகி விட்டது. சீன மொழி பெயர்ப்பு கடைசியாகச் செய்தது 4 ஆண்டுகளுக்கு முன்பு. இடைப்பட்ட காலத்தில் இணையத்தில் கிடைக்கும் வசதிகள் பெருகியிருக்கின்றன. சீன மொழி கற்ற பிறகு ஒரு சீன மொழி புத்தகத்தை வாசிப்பது ஐரோப்பிய அல்லது இந்திய மொழிகளைப் படிப்பது போல 3 மடங்கு சிரமமானது.

ஆங்கிலம் கற்கும் போது 26 எழுத்துக்களையும் அவற்றின் உச்சரிப்பையும் தெரிந்து கொண்டால், புத்தகத்தில் பார்க்கும் எந்த சொல்லையும், அகராதியில் தேடி பொருள் தெரிந்து கொள்ளலாம். ஒரு வாக்கியத்தில் மூன்று நான்கு சொற்கள் புதிதாக இருந்தால், ஒவ்வொன்றுக்கும் அகர வரிசை அகராதியில் தேடி பொருள் பார்த்து புரிந்து கொள்வதற்குள் படிப்பதற்கான ஆர்வம் வடிந்து விடும். இது எல்லோருக்கும் பழக்கமான ஒன்று.

இதை விட 3 மடங்கு சிரமத்தைப் பெருக்கிக் கொண்டால் சீன மொழி புத்தகம் வாசிப்பதன் சிக்கல்கள் புரியும். சீன மொழியில் மேற்கத்திய, இந்திய மொழிகளைப் போல ஒலி வடிவ எழுத்துக்கள் கிடையாது. எழுத்துருவங்கள்தான் (சித்திர எழுத்துக்கள்) .

ஒவ்வொரு எழுத்துருவத்துக்கும் ஒரு பொருள் உண்டு. அதன் வடிவம் பொருளை மட்டும் அல்லது பொருளுடன் அதன் உச்சரிப்பையும் குறிப்பதாக இருக்கும். இதற்கு முன்பு பார்த்திராத ஒரு எழுத்துருவத்தின் உச்சரிப்பை ஓரளவு ஊகிக்க மட்டும்தான் முடியும். சரியான உச்சரிப்பு யாராலும் உறுதிபட சொல்ல முடியாது.

அன்றாட புழக்கத்தில் இப்படி 2000-3000 எழுத்துருவங்கள்  இருக்கின்றன. கொஞ்சம் பழைய இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் 40,000 எழுத்துருவங்கள் வரை சந்திக்கலாம்.

புதிய சொல்லின் பொருள் தெரிந்து கொள்ளும் முறை:

1. முதலில் எழுத்துருவத்தில் பகுதிகளை பிரித்து அடிப்படை பகுதியை அடையாளம் காண வேண்டும், அதில் எத்தனை கோடுகள் இருக்கின்றன என்று எண்ணி, அந்த கோடுகளின் எண்ணிக்கையில் வரிசைப் படுத்தப்பட்ட அடிப்படைஎழுத்துருவ அட்டவணையில் தேட வேண்டும்.

ஒவ்வொரு அடிப்படை எழுத்துருவமும் நான்கைந்து முதல் நூற்றுக்கணக்கான கூட்டு எழுத்துருக்களை உருவாக்கலாம்.

கூட்டு எழுத்துருவங்களை, அடிப்படை எழுத்துருவங்களின் வரிசையில் பிரித்து இரண்டாவது (பெரிய) அட்டவணை கொடுத்திருப்பார்கள்.  அடிப்படை எழுத்துருவ அட்டவணையில் (முதல் அட்டவணை), தேடும் அடிப்படை எழுத்துருவத்தால் உருவாக்கப்படும் கூட்டு எழுத்துருவங்கள், கூட்டு எழுத்துருவங்களின் அட்டவணையில் (இரண்டாவது அட்டவணை) எந்த இடத்தில் இருக்கின்றன என்று எண் கிடைக்கும்.

2. வரிசை எண்ணை வைத்து அதன் கீழ், அடிப்படை எழுத்துருவத்தைத் தவிர்த்து எத்தனை கோடுகள் இருக்கின்றனவோ அந்த எண்ணிக்கையின் கீழ் குறிப்பிட்ட கூட்டுஎழுத்துருவத்தைத் தேட வேண்டும் (சில நூறு கூட்டுஎழுத்துருவங்கள் வரை இருக்கலாம்). அப்படி தேடிப் பிடித்தால் குறிப்பிட்ட கூட்டு எழுத்துருவத்தின் பக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

3. இதற்குப் பிறகு ஆங்கில அகராதியில் இருப்பது போக ஆங்கில உச்சரிப்பின் (பின்யீன் முறை) அகர வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும் அகராதி பக்கங்களில் 2ல் கிடைத்த பக்க எண்ணுக்குப் போய் குறிப்பிட்ட கூட்டு எழுத்துருவின் பொருளை தெரிந்து கொள்ளலாம்.

படிக்கும் புத்தகம் ஒரு புறம், பொருள் தேட அகராதி இன்னொரு கையில் என்று படிப்பது மலையேறி எலி பிடிப்பது போலத்தான். இங்கு ஒரு ஆசிரியரின் உதவி மிக பலனுள்ளதாக இருக்கும்.

இணையத்தில் நாம் படிக்கும் புத்தகத்தின் மென்பதிப்பு சீன எழுத்துருவங்களில் கிடைத்து விட்டால், அந்த உரையை பின்யீன் உச்சரிப்பாக மாற்றிக் கொடுக்கும் கருவிகள் வந்திருக்கின்றன. கூடவே எழுத்துருவங்களின் பொருளையும் காட்டும் வசதியும் இருக்கின்றது.

உரையை ஒத்தி ஒட்டி annotate என்று பொத்தானை அழுத்தினால், சீன எழுத்துருவம் ஒவ்வொன்றுக்கும் மேல் பின்யீன் உச்சரிப்பு, எழுத்துருவத்தின் மேல் சுட்டியைக் கொண்டு போனால், அதன் அகராதி பொருள் என்று பல மணி நேரங்கள் பிடிக்கக் கூடிய வேலை சில நிமிடங்களில் தயாராகி விடுகிறது.

ஆQவின் கதையை மொழிபெயர்க்கும் முயற்சியில் இணையத்தைப் பயன்படுத்தாமல் உழன்று கொண்டிருந்து விட்டு நேற்று இணையத்தில் தேடியதில் இந்தக் கருவிகள் கிடைத்தன.

1. கதை முழுவதும் சீன எழுத்துருவத்தில் உரையாக கிடைத்ததை சேமித்து வைத்துக் கொண்டேன்.
2. முதல் அத்தியாயத்தை பெட்டியில் இட்டு பின்யீன் மேற்குறிப்புகளை உருவாக்கி சேமித்துக் கொண்டேன்.
3. முதல் அத்தியாயத்தின் பொருளுடன் கூடிய மேற்குறிப்புகளையும் சேமித்துக் கொண்டேன்.

இப்போது ஆங்கில அல்லது தமிழ் புத்தகம் படிப்பது போல முழு உரையையும் சரளமாக படித்துச் செல்ல முடிந்தது. பொருள் தெரியாத இடத்தில் சுட்டியை எழுத்துருவத்தின் மீது அசைத்தால் பொருளும் தெரிந்து விடுகிறது.

பல்வேறு கருவிகளை முயற்சித்து எதைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து மேற்குறிப்புகளை உருவாக்கி, உருவாக்கிய பக்கங்களைப் படித்துப் பார்ப்பதில் இரவு ஒன்பதரை மணி ஆகி விட்டிருந்தது. இதன் பிறகு தூங்குவதற்கு 10 அடித்து விட்டது.

நேற்றுக் காலையில் நான்கு மணிக்கு முன்னதாகவே எழுந்திருந்தேன். சாப்பிட்ட ஏதோ ஒன்று வயிற்றுக்கு சங்கடத்தைக் கொடுத்தது. எனது சந்தேகம், திங்கள் கிழமை மதியம் ஆர்யா உணவு விடுதியில் சாப்பிட்டதுதான். நாட்குறிப்பு எழுதுவது கொஞ்சம் திக்கித் திக்கித்தான் ஓடியது. 10 நிமிடங்கள் முன்னதாகவே நிறுத்தி விட்டு, நடைக்குக் கிளம்பினேன்.

காட்பாடி நோக்கி போகலாம் என்று நினைத்திருந்ததை மாற்றி அதே மதிநகர் சாலை திசையில் போய் காட்பாடி சாலை வந்ததும், சாலையைக் கடந்து காந்திநகர் கிழக்கு பிராதான சாலையில் நடக்கலானேன். அனுக்ரஹா தாண்டி பேருந்து போகும் சாலை வரை போய் இடது புறம் திரும்பினேன். அந்த சாலையில் கொஞ்ச தூரத்திலேயே மணி அடித்து விட, அடுத்து வந்த இடது சாலையில் திரும்பி விட்டேன். கல்யாண மண்டபம் நிறுத்தத்துக்கு முந்தைய திருப்பம்.

இங்கும் கடைசி வரை நடந்து பேருந்து ஓடும் சாலைக்கு வராமல் முந்தைய இடத்திலேயே திரும்பிக் கொண்டேன். இவ்வளவு குறைத்தும் கோபாலபுரம் முனை திரும்பும் போது மணி அடித்து விட்டிருந்தது.

திட்டமிட்டிருந்தபடி, துவைக்க வேண்டிய துணிகளை காலையிலேயே சோப்புத் தண்ணீரில் ஊற வைத்திருந்தேன். அரைப்பதற்கு அரிசி/உளுந்தும் அடுக்களையில். வீட்டை சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவி, சமையல் மேடை, அடுப்பைத் துடைத்து விட்டு துணி துவைக்க இறங்கினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு துவைப்பதால் நிறைய சேர்ந்து விடவில்லை. 10-15 நிமிடங்களில் முடிந்து விட்டது. முகம் மழித்து குளித்து விட்டு மாவு அரைப்பு, தொடர்ந்து தியானம். அதன் பிறகு துணிகளை மாடியில் கொண்டு போய் காயப்போட்டு விட்டு, கணினியை இயக்கினேன். இன்னும் 8 மணி ஆகியிருக்கவில்லை.

8 மணிக்கு சாப்பிடலாம் என்று இணையத்தில் போனால், சில நிமிடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. சாப்பிடப் போய் விட்ட பிறகு கொஞ்ச நேரத்தில் மீண்டும் வந்தது. defeatcongress என்ற டுவிட்டர் பரப்புரை இரவில் சூடு பிடித்து இந்திய அளவிலான டிரெண்டிங்கில் வந்து விட்டிருந்தது. அதைப் பற்றிய ஓரிரு செய்திகளைச் சேர்த்து விட்டு, மின்னஞ்சல்கள், செய்திகள், கூகுள் பஸ் என்று மேய்ந்து கொண்டிருந்தேன்.

கூகுள் பஸ்சில் நேரடியாகத் தெரிந்தவர்கள், அல்லது பஸ்சுக்கு வெளியில் மின்னஞ்சல் மூலம் இணையத் தொடர்பு வைத்திருந்தவர்கள் கூடவே, படிக்க விரும்பும்படி எழுதும் சிலர் தவிர மற்றவர்களை பின்தொடர்வதை நிறுத்த ஆரம்பித்தேன். அதனால் பஸ்சில் வரும் இடுகைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து மனதில் சேரும் தகவல்களின் அளவும் குறைய ஆரம்பித்தது.

நாகப்பட்டினத்தில் பதிவு செய்த காணொளிகளில் ஒன்றை யூடியூபில் சேர்த்தேன். பிற்பகலில் இன்னும் இரண்டைச் சேர்க்க முடிந்தது. சாப்பிட்டு முடித்து விட்டு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பித்தேன்.

முதலில் பணிவிபரங்களை விரிதாளில் தொகுத்து மின்னஞ்சல் அனுப்பினேன். முடித்து பயன்பாட்டு பதிப்பில் சேர்த்து விட்டவை, சரிபார்க்கும் தொகுப்பில் ஒப்புதலுக்காக காத்திருப்பவை, சரிபார்க்கும் தொகுப்பில் சோதனையில் இருப்பவை, இன்னும் பணி ஆரம்பிக்காதவை என்று குறிப்பிட்டு அனுப்பியதும் பெருமளவு தெளிவும் ஏற்பட்டது.

தொடர்ந்து பயன்பாட்டு பதிப்பில் கேட்டிருந்த அறிக்கைகளை வடிவமைக்க ஆரம்பித்தேன். வடிவமைக்கும் போது இன்னும் சில கணக்கீடுகளைச் சேர்க்க வேண்டியிருக்க, அவற்றைச் சேர்த்து அறிக்கைகளை வடிவமைத்து, அவற்றை பயனரின் முதல் பக்கத்தில் சேர்ப்பதில் காலை நேரம் முழுவதும் போனது. பதினொன்றரைக்கெல்லாம் அதை முடித்து மூடி வைத்து விட்டு, வங்கிக்குப் போகலாம் என்று தயாரானேன்.

ஞாயிற்றுக் கிழமை கடைக்குப் போகும் வழியில் இந்த வங்கிக் கிளையின் கதவு திறந்திருப்பதையும் வாடிக்கையாளர்கள் போய் வருவதையும் கவனித்திருந்தேன். சென்ற வாரம் வேலை நாள் ஒன்றில் கதவு மூடப்பட்டிருந்ததும் நினைவில் இருந்தது. 'ஒரு வேளை ஞாயிற்றுக் கிழமை பணி செய்து, திங்கள் கிழமை ஓய்வு எடுக்கும் முறை இருக்குமோ' என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் கோப்புப்பட்டியில் தேவையான முகவரிச் சான்று, அடையாள சான்று ஆவணங்களை எடுத்துக் கொண்டு, வங்கி கணக்கு அட்டையையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். நகலகத்தில் அவற்றுக்கான நகல்களை எடுத்துக் கொண்டு வங்கியை நோக்கி.

HDFC வங்கி, இந்தியன் வங்கி கிளைகள், ஐசிஐசிஐ வங்கி, ஆந்திர வங்கி பணம் எடுக்கும் மையங்கள் என்று பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று கிளைகளுடன் என்று எண்ணிக் கொண்டு நடந்தேன். போக வேண்டிய பாரதவங்கிக் கிளையின் கதவு மூடப்பட்டுத்தான் இருந்தது. நாளைக்குத்தான் பார்க்க வேண்டும்.

திரும்பி வரும் வழியில் ஆம்பூர் வாடிக்கையாளருக்கு தொலைபேசி இன்று அங்கு போகவிருப்பதன் திட்டத்தையும் செய்ய வேண்டிய பணிகளையும் குறித்துப் பேசினேன். எதுவும் சிக்கல்கள் இல்லாமல் பயன்படுத்துகிறார்கள். அவர்களது நிர்வாக இயக்குநரும் அறிக்கைகளைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறாராம். வங்கி வேலையை முற்பகலில் முடித்து விட்டு மதியம் 2 மணிக்கு போகலாம் என்று திட்டமிட்டு அவரிடம் தகவல் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து அவர் அழைத்து மதியம் பொது மேலாளர் வெளியூருக்குப் புறப்படுகிறாராம். காலையில் வந்தால் சந்திக்க வசதியாக இருக்கும் என்றார். அப்படியே செய்தவாகச் சொன்னதன் விளைவு, இன்றைக்கு 8 மணிக்கெல்லாம் புறப்பட்டு 9 மணிக்குள் அங்கு போய் வேலை ஆரம்பித்து 12 மணிக்குப் புறப்பட்டு விட வேண்டும்.

நேற்று வைத்த சாம்பார் நிறையவே மீதி இருந்தது. அது கெட்டுப் போய் விடாமல் இருக்க தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் அந்த பாத்திரத்தைக் காலையில் வைத்திருந்தேன். 11 மணிக்கெல்லாம் சூடு படுத்தி விட்டு, உயர் அழுத்தக் கலனில் சோறும் செய்து விட்டிருந்தேன். வங்கியிலிருந்து வந்ததும் மீதியிருந்த வெண்டைக்காய்கள், கூடவே உருளைக்கிழங்கும் வெட்டி பொரியல் செய்து கொண்டேன். இப்போது மின்இணைப்புக் கிடையாதுதான்.

சாப்பிட்டு விட்டு சிறிது நேர இளைப்பாறல். நாளிதழும் பத்திரிகைகளும் படிப்பதற்கு இல்லாததால், செழியனின் அரசியல் கட்டுரைத் தொகுப்பு அல்லது சிவப்பு மாளிகைகளின் கனவு அல்லது 1919 முதல் 1949 வரை சீன வரலாறு என்ற புத்தகங்கள் படிக்கும் பட்டியலில். அந்த மதிய வேளையில் செழியனின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முடியப் போகிறது. சேர்த்து வைத்து அவ்வப்போது பல முறை படிக்க வேண்டிய புத்தகம்.

2 மணிக்கு மின்னிணைப்பு வந்து விட்டது. 3 மணிக்கு மென்பொருள் வேலை என்று திட்டம். அது வரை இணையத்தில் slashdot, தமிழ் செய்திகள், டுவிட்டர் என்று கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். 3 மணிக்கு வேலை ஆரம்பித்து ஏற்கனவே செய்து வைத்திருந்த ஒரு அறிக்கையை சோதனை பதிப்பில் சரி பார்த்து பயன்பாட்டு பதிப்பில் சேர்த்து தேவையான வடிவத்தில் அறிக்கைகள் உருவாக்கி வைத்தேன்.

இன்னொரு பணியை சரி பார்க்க ஆரம்பித்தால், சிக்கல் வந்தது. ஏற்கனவே இருக்கும் ஒரு அறிக்கையில் கூடுதல் விபரங்கள் சேர்ப்பதாக செய்திருந்தது அது. ஆனால், புதிய தகவல்களை சேர்த்ததால், அந்த அறிக்கை தரவுத்தளத்திலிருந்து வெளி வருவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரம் வெவ்வேறு வழிகளை முயற்சித்து விட்டு அந்த அறிக்கையை கெடுக்க வேண்டாம் என்று தனியாக அறிக்கை உருவாக்க முடிவு செய்தேன்.

முன்பு குழுவாக பணி புரியும் போது,

  • வாடிக்கையாளரின் தேவையை அலசி அதை மென்பொருள் மொழியில் மாற்றிச் சொல்லும் analysis என்ற தேவை அலசல், 
  • அந்தத் தேவையை எப்படி மென்பொருளில் செயல்படுத்த வேண்டும் என்ற design - நுட்ப வடிவமைப்பு, 
  • அந்த வடிவமைப்பை நிரலில் செயல்படுத்துவது - coding என்ற நிரலாக்கம், 
  • தொடர்ந்து நுட்ப சோதனை - technical testing, 
  • பயன்பாட்டு சோதனை - functional testing,
  • பயனர் ஆவணம் - user documentation 

என்று பிரித்துக் கொண்டு செயல்பட்டோம்.

ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொருத்தர் செய்வார்கள்.

தேவை அலசல், மென்பொருளில் அதிகத் தேர்ச்சி இல்லாத ஆனால் வாடிக்கையாளரின் தேவையை சிறப்பாகப் புரிந்து கொண்ட ஒருவரின் பொறுப்பு, அவரே இறுதியில் பயன்பாட்டு சோதனையும் செய்ய முடியும். பயனர் ஆவணம் எழுதலை இவர் செய்யலாம்.

நுட்ப வடிவமைப்பு, தேவை அலசலைப் புரிந்து கொண்டு, மென்பொருள் கட்டமைப்பில் தேர்ந்த ஒருவர் எழுத வேண்டும், நுட்ப சோதனை அவர் செய்ய முடியும். நுட்ப ஆவணம் எழுதலையும் இவர் செய்ய வேண்டும்.

இந்த இரண்டையும் படித்துப் பார்த்து புரிந்து நிரல் எழுதுவது இன்னொருவரின் பணி

அதன் பிறகு நுட்பச் சோதனை, பயன்பாட்டுச் சோதனை, பயனர் ஆவணமாக்கம், முடித்து வாடிக்கையாளர் பயன்பாட்டு பதிப்புக்கு கொண்டு சேர்க்கும் கட்டம் வரும்.

கொண்டு சேர்க்கும் பொதியாக மாற்றி, பயன்பாட்டு பதிப்பில் இயக்குவது இன்னொருவரின் பணி. இதில் நுட்ப அறிவு தேவைப்படும்.

பயன்பாட்டு பதிப்பில் இயக்கிய பிறகு இடைமுகத்தில் தேவையான வடிவமைப்புகள் செய்து கொடுப்பது மீண்டும் வாடிக்கையாளர் தேவை உணர்ந்தவரின் பணி.

இப்படி 9 கட்டங்களில், சில சமயங்களில் வெவ்வேறு 9 பேர் வேலைகளைச் செய்வோம். ஒருங்கிணைப்பதற்கு ஒரு மென்பொருள் பயன்பாடும் உண்டு.

இதில் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால் (இப்போது தெரிகிறது), ஒரு கட்டத்தை ஒருவர் முடித்து அடுத்தக் கட்டத்துக்கு அடுத்தவரிடம் கொடுத்த பிறகு ஏதாவது மாறுதல்களுக்காக திருப்பிக் கொடுப்பதற்கும் அப்படிக் கொடுத்தால் அதை வாங்குவதற்கும் பெரிய அளவு மனத்தடையும் நடைமுறைத் தடையும் இருந்தன.

எடுத்துக்காட்டாக, நுட்ப வடிவமைப்பு முடித்து நிரலாக்கத்துக்கு அனுப்பிய பிறகு, நிரல் எழுதுபவர் வடிவமைப்பில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று திரும்பி வரும் போது வடிவமைப்பு செய்தவர் அடுத்த பணியை ஆரம்பித்திருக்கலாம். அவர் மீண்டும் இந்த பணிக்குள் வருவதற்கு காத்திருக்க வேண்டும்.

அதே போல சோதனையிலிருந்து நிரலாக்கம், பயனர் ஆவணமாக்கத்திலிருந்து நிரலாக்கம் என்று பின் கட்டங்களில் தோன்றும் மேம்பாடுகளை செயல்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.

எல்லா கட்டங்களையும் ஒருவரே செய்யும் போது, செய்ய முடியும் போது இந்தச் சிக்கல் இல்லாமல் போகிறது. நிரல் எழுதும் போது, தேவை அலசலில் மாற்றம் வேண்டும் என்று உணர்ந்தால் உடனேயே போய் செய்து, நுட்ப வடிவமைப்பையும் ஏற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால், எல்லா கட்டங்களையும் செய்ய
- வாடிக்கையாளர் தேவை புரிந்து கொள்ளும் வல்லமை
- மென்பொருள் கட்டமைப்பைப் பற்றிய ஆழமான அறிவு
- நிரலாக்கத் திறன்
- சோதனை செய்து வழு கண்டு பிடிக்கும் ஆற்றல்,
- ஆவணம் எழுதும் திறன்
என்றும் எல்லாம் ஒருவரிடம் இருக்க வேண்டும்.

அதனால்தான் மிகச்சிறந்த மென்பொருட்கள், அல்லது எந்த ஒரு மிகச்சிறந்த படைப்பும் ஒரு குழுவால் உருவாக்க முடியாது. அப்படி குழுவால் செய்யப்படும் பணியிலும் கூறுகளான சிறுபகுதிகன் தனிநபரால்தான் உருவாக்கப்பட்டிருக்கும். பெரு நிறுவனங்களின் மென்பொருள் உருவாக்கத்தில் இப்படி செயல் திறன் அடிப்படையில் (assembly line) போல பணிகளைப் பிரிக்காமல், பன்முகத் திறன் கொண்டவர்களை மட்டும் குழுவில் வைத்திருந்து, ஒவ்வொரு பயன்பாட்டையும் ஒருவரே செய்வது போல திட்டமிட்டுக் கொள்வதுதான் பலன் தரும்.

ஆறு மாதங்களாக எல்லா கட்டங்களையும் செய்யும் போது தெளிவாக புரிந்தது இது. இப்போது செய்யும் பணிகளையும் நேர அளவையும் பதிவு செய்ய மட்டும் மேலாண்மை கருவியைப் பயன்படுத்துகிறேன்.

இப்படி முடித்து விட்டதாக நினைத்திருந்த ஒரு பணி மீண்டும் வரைவுபலகைக்குப் போய் விட, அந்த வேலையை ஆரம்பித்து பாதி முடித்தேன். நிரல் எழுதுவது ஒரு கட்டத்தில் சலித்து விட நிறுத்தி விட்டு மூடினேன்.

நாகர்கோவில் போகும் திட்டத்தை ஃபேஸ்புக்கிலும், கூகுள் குழுமத்தில் பகிர்ந்து கொண்டேன் ஃபேஸ்புக்கில் கருத்துப் பரிமாற்றம் வேகமாக நடப்பது போலத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 200 பேர் defeatcongress பக்கத்தை விரும்பியிருந்தார்கள். சாந்தப்பன் ஒரு பிளாக்ஸ்பாட் தளத்தையும் உருவாக்கி விட்டிருந்தார். அதற்கான வடிவமைப்பும் புதுமையாக தனியாக வடிவமைத்தது போல இருந்தது.

திங்கள், மார்ச் 28, 2011

#defeatcongress


நேரம் 4.06, 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி.

நேற்றுக் காலையில் நாட்குறிப்பு எழுதும் போது விபரங்கள் எழுதிக் கொண்டே போக நேரம் போவது தெரியாமல், ஒரு மணி நேர கெடு முடியும் போது மதியம் 3 மணி வரைதான் எழுதியிருந்தேன். அத்தோடு நிறுத்தி விட்டு உலாவக் கிளம்பினேன்.

எதிர் திசையில் போக முடிவு. 9வது தெருவில் இறங்கும் படி வழியாக வெளியில் வந்து மதிநகர் சாலை வழியாக டாடா மோட்டார்ஸ் அருகில் காட்பாடி சாலைக்கு வந்து பேருந்து நிறுத்தத்தின் அருகில் காந்திநகர் சாலையில் திரும்பினேன். ரவுண்டானாவுக்குச் சற்று முன்பாகவே வலது புறம் திரும்பி டான்பாஸ்கோவின் பின்புறம் செல்லும் சாலையில் நடக்கலானேன். காந்திநகரில் சாலைகள் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக நேர் சாலைகளாக இருப்பதால் குழப்பங்கள் குறைவு.

டான் பாஸ்கோ தாண்டி, முத்தமிழ் மன்றம் என்ற பெயர் போட்டிருந்த இடத்தைத் தாண்டி வடக்கு சாலைக்கு வருவதற்கு சற்று முன்பு 15 நிமிட அவகாச மணி அடித்தது. அந்த இடத்தில் வலது புறம் திரும்பி காட்பாடி சாலை நோக்கி நடந்தேன். தார் போடப்படாத மண் சாலை. அதிகாலை நேரத்திலேயே வீட்டு வாசல் தூத்து கோலம் போடும் வீடுகள் நிறைய தெரிந்தன.

நீளமாகப் பார்க்கும் போது தெருவின் முடிவில் நேராக ஒரு ஒட்டகச் சிவிங்கி தெரிந்தது. சாலையில் ஏதோ மரம் அல்லது தட்டி அப்படித் தெரிகிறதோ என்று நினைத்துக் கொண்டே அருகில் நெருங்க, அனுக்ரஹா எதிரில் குழந்தைகள் விளையாட்டுப் பகுதி இருப்பது நினைவுக்கு வந்தது.  கண்ணுக்குத் தெரிவது உண்மையிலேயே ஒட்டகச் சிவிங்கி உருவம்தான். அனுக்ரஹாவின் பக்கவாட்டில் இருக்கும் தெரு அது.

கிழக்கு பிரதான சாலைக்கு வந்து காட்பாடி திசையில் திரும்பினேன். கோபால புரம் அருகில் மெயின் ரோட்டுக்கு ஏறி, சாலையைக் கடந்து கோபாலபுரம் தெருவுக்கு வந்தேன். இன்னும் 6 நிமிடங்கள் இருந்தன. ஓரிரு நிமிடங்கள் முன்னதாகவே போய் விடுவோமோ?

கீழ் அலுவலகத்தில் காவல் புரிபவர் நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தார். அளிக்கதவு திறக்கும் ஓசை கேட்டு விழித்துப் பார்த்து காலை வணக்கம் சொன்னார். படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்ததும் மணி அடித்தது.

அழுக்குத் துணிகள் சில சேர்ந்திருந்தன, தரை துடைக்க வேண்டும். தரை துடைத்தல் இன்று, துணி துவைத்தல் நாளை என்று முடிவானது. முதலில் பணிமேசை, அடுக்களை மேசைகளைத் துடைத்து விட்டு தூத்து வாரி, பாத்திரங்கள் கழுவி விட்டு தரை துடைத்தல். தரை துடைக்க வாங்கி வைத்திருந்த டோமக்ஸ் மீதி தூசி படிந்திருந்தது. பெரிய வாளியில் அலசுவதற்கும் சின்ன வாளியில் டோமக்ஸ் ஊற்றிய நீரும் வைத்து முன்னறையைத் துடைக்க ஆரம்பித்தேன்.

தொலைக்காட்சியை அகற்றி விட்டிருந்ததால் அந்த இடமும் அணுகும்படியாக இருந்தது. தொடர்ந்து தூங்கும் அறை, இடைத் தாழ்வாரம், சாப்பிடும் அறை, இறுதியில் சமையலறை. முன்னறையில் குப்பை வைத்து கறைபடிந்திருந்த இடம் ஒரு தடவை அழுந்தத் துடைத்ததும் சுத்தமாகி விட்டது. இது போல பல இடங்கள்.

குளியலறையில் சாளரத்து மாடத்தில் எஞ்சியிருந்த டோமக்ஸ் தண்ணீரை ஊற்றிக் கழுவினேன். துணியை அலசிக் காயப்போட்டு விட்டுக் குளியலுக்கு ஆயத்தம். கழிவறையில் படிப்பதற்கு 'சிவப்பு மாளிகை கனவு' சீன நாவல் அல்லது மே 1919 முதல் மே 1949 வரை சீன வரலாறு என்ற புத்தகம். இரண்டுமே *இப்போது* படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.

குளித்து காலை உணவுக்கு ஆயத்தங்கள் செய்து விட்டு தியானம். கடைக்குப் போய் காய்கறிகள் வாங்க வேண்டும். வெண்டைக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், தேங்காய், முருங்கைக்காய்,  மாங்காய் . எல்லா காய்கறிகளும் விலை மிகக் குறைவு. தக்காளி 5 ரூபாய் என்றவரிடம் கால் கிலோவா என்று கேட்டால் 1 கிலோ 5 ரூபாயாம். அதனால் அரைக்கிலோ, ஒரு கிலோ என்றுதான் எடை போடவே செய்கிறார்கள்.

முந்தாநாள் இரவு அலைபேசியை நிசப்தம் செய்து விட்டுத் தூங்கி விட்டிருக்க அப்பா அழைத்திருக்கிறார்கள்.

'பேசி கொஞ்ச நாள் ஆச்சே அதுதான் கூப்பிட்டேன்'. அம்மாவுக்கு உடல் சரியில்லையாம். மதுரைக்குப் போய் வந்த முசிவுகளால் உடல் நிலை மோசமாகியிருக்கிறது.

'யார் யாரையோ பார்த்து மருந்து வாங்கியிருக்கிறது. வலி பொறுக்க முடியவில்லை. நீ இங்க வர பிளான் இருக்கா? எப்ப வரப்போற'

'ஏப்ரலில் திட்டம் போடுகிறேன்'.

எதையும் நேரடியாகச் சொல்வது இல்லை. குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். வியாழக்கிழமை ஜெகதாபட்டிணம் போய் விட்டு அன்று அல்லது வெள்ளிக் கிழமை மாலை புறப்பட்டு நாகர்கோவிலுக்கு போய் விட வேண்டியதுதான். கணினியையும் எடுத்துக் கொண்டால் ஒரு வாரம் அங்கிருந்தே வேலை செய்வதாக திட்டமிட்டுக் கொள்ளலாம்.

தொடர்ந்து பதிப்பக நண்பருக்குத் தொலைபேசி. 'முதல் அத்தியாயத்தை முடித்து விட்டேன், ஆனால் எனக்குத் திருப்தியில்லை. உங்களுக்கு அனுப்ப எனக்கே வெட்கமாயிருக்கிறது. அதனால் மீண்டும் முதல் அத்தியாயத்தை செய்ய ஆரம்பித்திருக்கிறேன். தினமும் 2 மணி நேரம் இந்த வேலைக்காக ஒதுக்கியிருக்கிறேன். இது வார்த்தைகளை மொழிபெயர்ப்பதாக மட்டுமில்லை. சீன சமூகத்தின் பழக்கங்களை வெகுவாக கிண்டல் அடிக்கும் படைப்பு அது. ஒவ்வொரு சொல்லுக்கும், சொற்றொடருக்கும், வாக்கியத்துக்கும் பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது. அதை சரியாக புரிந்து கொண்டால்தான் மொழிபெயர்ப்புக்கு உயிர் வரும். இந்த 4-5 வாரங்களில் சீன கலாச்சாரத்தில் மூழ்கிக் கொண்டால்தான் மொழிபெயர்ப்புக்கு ஓரளவு நியாயம் செய்ய முடியும்'

உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டு பல வழிகாட்டல்களைச் சொன்னார். சிவப்பு மாளிகைகளின் கனவு படிப்பதைக் கேட்டவுடன் மே 4 இயக்கம் பற்றிய புத்தகத்தையும் படித்து புத்தகம் எழுதப்பட்ட கால கட்டத்தைப் புரிந்து கொள்ளச் சொன்னார். இணையத்தில் இந்த கதை பற்றி எழுதப்பட்டிருக்கும் விமர்சனக் கட்டுரகளைப் படித்தால் அவரது சொல் பயன்பாடுகளின் பின்னணி தெரிந்து கொள்ளலாம் என்று சொன்னார்.

'இது முக்கியமான படைப்பு. இதை உயிரோட்டத்துடன் தமிழில் கொண்டு வந்தால் மிகவும் நல்லது. சகட்டு மேனிக்கு மொழி பெயர்ப்பு செய்பவர்களை எனக்குத் தெரியும். படைப்பில் உயிரே இல்லாமல் ஆண்டுக்கு மூன்று/நான்கு என்று மொழிபெயர்ப்பார்கள். உங்களுக்கு வாசிக்கும் பழக்கமும், சீனாவில் வாழ்ந்த அனுபவமும், சீன மொழி அறிவும் இருப்பதால் இந்த படைப்பை சரியாக தமிழில் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன். தமிழுக்குச் செய்யும் ஒரு சேவையாக எடுத்துக் கொண்டு செய்யுங்கள்' என்றார்.

'நாளுக்கு 2 மணி நேரம் செய்தால், 5-6 வாரங்களில் ஒரு வடிவம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. 2 முறை மட்டுமில்லை, தேவைப்பட்டால் ஏழெட்டு முறை கூட திரும்ப எழுதி, லூஷூன்னின் மேதைமைக்கு குறைந்தபட்ச நியாயமாவது செய்ய வேண்டும்' என்று சொன்னேன்.

சாப்பிட்டு விட்டு, சாப்பிடும் போதே இணையம், 9 மணி வரை. மாலை 6 மணிக்கு காங்கிரசைத் தோற்கடிப்பது பற்றிய டுவிட்டர் பரப்புரை, அதற்கான குறிப்புகள் டுவிட்டரில். கூகுள் பஸ்சில் குறைந்த அளவு இடுகைகள் மட்டும் வரும்படி அமைத்துக் கொண்டேன். உள்ளத்தை எழுதுகிறேன் வலைப்பதிவில் 26, 27 தேதிகளில் எழுதிய நாட்குறிப்புகளை பதிந்து விட்டேன். 27ம் தேதி எழுதியது 1800 சொற்களைத் தாண்டியிருந்தது. நிமிடத்துக்கு 30 சொற்கள் வேகம்.

9 மணிக்கு மென்பொருள் பணி ஆரம்பித்து விட்டேன். ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் வேலை தேவையில்லை என்று ஒரு எண்ணம் இருந்தாலும், ஏற்றுக் கொண்ட பணி இருக்கும் போது ஞாயிற்றுக்கிழமையையும் தவற விட வேண்டாம். மற்ற நாட்களில் வெளியூர் பயணம் போனால் வேலை செய்வது தடைப் படும். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போது வேலை செய்து விட வேண்டியதுதான்.

11.30க்குள் திட்டமிட்டிருந்த பணிகளில் பெரும்பகுதி முடிந்தன. இன்னும் இரண்டு பெரிய வேலைகளின் விபரப் பணிகள் இருந்தன. அவற்றை மதியம் பார்த்துக் கொள்ளலாம். 11.30க்கு நிறுத்தி விட்டு, காலை பாத்திரங்களைக் கழுவி விட்டு மளிகை சாமான்கள் வாங்க அனுக்ரஹா. பட்டியல் போட்டதில் 10க்கும் மேற்பட்ட பொருட்கள். பில் போடும் இடத்தில் அருகில் இருந்த துக்ளக். இணையத்தில் பஸ்சில் கருத்துக்கள் படிப்பதால் துக்ளக்கில் வரும் ஆறிப்போன செய்திகளும் அலசல்களும் சுவராஸ்யம் இல்லாமல் போயிருக்கின்றன.

சாரு நிவேதிதாவின் கட்டுரை முதல் பத்தி படித்து விட்டு பக்கத்தைப் புரட்டி விட்டேன். கொஞ்ச நேரம் இளைப்பாறி விட்டு 1 மணிக்கு சமையல். சோறு, முருங்கைக்காய் சாம்பார், வெண்டைக்காய் கூட்டு - வெண்டைக்காய்க்கு தேங்காய் அரைத்து வைத்திருந்தேன். காலையில் அரைத்த துவையலும் இருந்தது.

2 மணிக்கு மின்னிணைப்பு வந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆதலால் தொழிற்சாலைகளின் தேவை குறைந்து மூன்று மணி நேர வெட்டு இல்லை போலிருக்கிறது. ரோசா வசந்த் பேசி அவரது கணக்கில் 1000 ரூபாய் நிதியில் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். விபரங்களை சேர்த்து, இடுகையை நேற்றைய தேதியில் வெளியிட்டேன். 31ம் தேதி பணத்தைக் கொண்டு கொடுக்கும் திட்டத்தையும் சொல்லி கலந்து கொள்ள விரும்புபவர்களை அழைத்திருந்தேன்.

டுவிட்டரில் இன்னும் இரண்டு தகவல்களைச் சொல்லி விட்டு, 3 மணிக்கு அடுத்த வேலை ஆரம்பம். சாப்பிட்ட உடனேயே வேலை செய்வதில் சுணக்கம் இருக்கத்தான் செய்கிறது. திட்டம் போட்டு வைத்திருக்கும் போது, போட்ட திட்டத்துக்காகவாவது நேர ஒழுக்கம் தவறுவதை தவிர்க்க முடிகிறது. அங்கும் இங்குமாக முடித்துக் கொண்டே வந்து பெருவாரியான ஒரு பணியை இறுதிக் கட்டத்துக்கு நகர்த்தி விட்டேன். அதற்குள் மணி 5.45. ஆறு மணிக்கு டுவிட்டரில் செயல்பட வேண்டும்.

ஏற்கனவே #defeatcongress செய்திகள் சில வந்து கொண்டிருந்தன. நானும் சேர்ந்து கொண்டேன். டுவிட்டரில் எழுதும் போது தகவல் செறிந்த தகவல்களாக இருப்பது நல்லது என்று முன்பு பேசியிருந்தோம். சில குறிப்புகளை அங்குமிங்குமாக சேகரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தேன். 6 மணிக்கெல்லாம் நிறைய பேர் சேரவில்லை. நான் 5.45 முதல் 6.45 வரை செயல்பட்டு விட்டு, மாலை உணவுக்குப் போய் விட்டேன். 7 மணிக்கு இணையத்தைத் துண்டித்து விட்டு ஆQவைக் கையில் எடுத்தேன்.

சீன மொழியின் கருத்தாக்கங்களை இன்னொரு மொழியில் சொல்வது கொஞ்சம் சிக்கல்தான். எடுத்துக்காட்டாக எழுத்து/சொல் என்று எடுத்துக் கொள்வோம். சீன மொழியில் எழுத்தும்/சொல்லும் ஒன்றுதான். ஒவ்வொரு சித்திர எழுத்தும் ஒரு சொல்தான். இரண்டு சித்திர எழுத்துக்கள் சேர்ந்து புதிய சொல்லாகவும் வரும். ஆQவின் கதையில் சித்திர எழுத்து என்ற பொருள்பட எழுதியதை எப்படிச் சொல்வது?

பெயர்களின் உச்சரிப்பு இன்னொரு சிக்கல். ஆங்கிலத்தில் எழுதும் முறை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தது மாறி இப்போது பின்யீன் புழங்கி வருகிறது. சீனச் சொல்லின் ஒலி வடிவத்தை முடிந்த அளவு கொண்டு வர வேண்டும். இவை அடிப்படை சிரமங்கள். இவற்றுக்கு மேலாக, பழமொழிகளைக் குறிப்பிடுவதன் பின்னிருக்கும் கிண்டல், பழைய பெயர்கள், நூல்கள், அறிஞர்களைப் பற்றி எழுதவதன் உள்குத்து, சமகால மேதைகளைப் பற்றிச் சொல்வதன் உள்நோக்கம் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு தமிழில் எழுதி, அதன் முழு தாக்கத்தையும் தமிழ் வாசகருக்குத் தெரிய வைப்பது முடியாத வேலைதான். சொல்லின் பொருளை அகராதியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். வாக்கியத்துக்கு இரண்டாக சொல்லிப் போகும் கிண்டல்களை எந்த அகராதி விளக்கும்?

சொன்னது போல இணையத்தில் கிடைக்கும் விமர்சனக் கட்டுரைகளைப் படிப்பது உதவியாக இருக்கலாம்.

9 மணி வரை இல்லாமல் எட்டரை மணிக்கே முடித்து விட்டு தூங்க ஆயத்தமானேன். கைகால்களை கழுவி விட்டு, தியானம் செய்து விட்டு நல்ல தூக்கம். காலையில் எழுந்திருப்பதில் எந்த சிரமும் இருக்கவில்லை.

முன்பெல்லாம் காலையில் எழுந்திருப்பது என்பது ஒரு பெரிய தடையாக இருந்திருக்கிறது. சின்ன வயதில் காலை ஓடி வருவதற்காக எழுந்திருக்க வேண்டும். முதல் நாள் புதிய முயற்சியின் உற்சாகத்தில் எழுந்து விடலாம். இரண்டாம் நாளும் அந்த உற்சாகம் மீந்திருக்கும். மூன்றாவது நாள் இரண்டு நாட்கள் ஓடி வந்ததன் சடைவு உடலை அசத்தியிருக்கும். இன்றைக்கு விட்டு விடலாம் என்று தூங்கி விட்டால் பழக்கம் விட்டுப் போய் விடும்.

அதைப் போல பல கட்டங்களில் அனுபவங்கள். அவை எல்லாம் சேர்ந்து இப்போது மிதப்படுத்தலை ஓரளவு தந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.  எதையும் அளவுக்கதிகமாக செய்யாமல் மிதமாக நடந்து கொண்டால் கட்டுக்கு மீறிய விளைவுகளை தவிர்க்கலாம்.

இன்றும் எழுதி முடித்து விட்டு உலாவப் போக வேண்டும். காட்பாடி திசையில் மெயின் ரோட்டிலேயே நடந்து விஐடி நோக்கிப் போகும் சாலையில் போய் வரலாம். 15 நிமிடப் புள்ளியில் திரும்பி வந்து விடலாம். துணி துவைக்க வேண்டும், காலை உணவுக்கு முதல் தயாரிப்பு செய்தாகி விட்டது. நேற்று வாங்கி மீதியிருக்கும் தேங்காய், பச்சை மிளகாய் இவற்றைப் பயன்படுத்தி தீர்க்கும் படியான தயாரிப்பு.

சாப்பிட்டு விட்டு 8 மணிக்கு இணையம். வேலை நிலவரத்தை விளக்கி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். 9-12 வரை வேலைகளை முடித்து விட வேண்டும். 12 மணிக்கு வங்கிக் கிளைக்குப் போக வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு 3-6ல் process comparison, process deviation அறிக்கைகளை சரிபார்த்து முடித்து விட வேண்டும்.

நாளைக்கு ஆம்பூர் போகும் போது இதையும் கொடுத்து விடலாம். நாளைக்கு முழுவதும் ஆம்பூரில் செலவழித்து விட்டு. புதன் கிழமை மீதியிருக்கும் ராணிப்பேட்டை பணிகளை முடித்து விடலாம். புதன் இரவு பேருந்தில் ஜெகதாபட்டிணப் புறப்பட்டால், வியாழக்கிழமை பகற்பொழுதை அங்கு கழித்து விட்டு, வியாழன் இரவு மதுரை போய் நாகர்கோவில் பேருந்து பிடிக்கலாம். மடிக்கணினியும் சீன மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வாரம் அங்கேயே இருந்து வேலைகளைத் தொடரலாம்.

மாவட்டத்துக்கு மாவட்டம் காங்கிரசு வேட்பாளர்கள் நிற்கத்தான் செய்கிறார்கள். ஜெகதாபட்டிணம் அருகில் அறந்தாங்கி, காட்பாடி அருகில் வேலூர் தொகுதி, ஆரணி தொகுதி, கிருஷ்ணகிரி தொகுதி, கன்யாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகள். எங்கு போனாலும் அந்த எண்ணத்தையும் மனதில் வைத்துக் கொள்ளலாம்.

இது போன்று தினசரி ஒழுக்கமும், நாளுக்கு 6  மணி அலுவலகப் பணி என்று திட்டமிட்டு செயல்பட்டால், வாடிக்கையாளர்களின் பின்னால் ஓடாமல் நமது உழைப்பின் விளைவுகளுக்கு பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

நாய் ஒன்று குட்டி போட்டிருக்கிறது போலத் தோன்றுகிறது. வெளியில் குட்டிகளின் ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. வேலூரில் பகலில் வெயில் அடித்தாலும் காலைப் பொழுதுகள் சில் என்று இருக்கின்றன. மாலையில் பூச்சி, கொசு உள்ளே வராமல் சன்னல்களை மூடி விட்டு, தூங்கி எழுந்ததும் காலையில் திறந்தவுடன் வீடெங்கும் குளிர்ச்சி பரவுகிறது.

வேலூரில் தட்பவெப்பநிலைக்கு இரவு தூங்கும் போது மின்விசிறி இல்லாமல் தூங்குவதுதான் சரியாக இருக்கிறது. அதிகமாக வேர்ப்பதில்லை, மின்விசிறி ஓடினால் உடலின் ஈரப்பதம் எல்லாம் ஆவியாகி உலர்ந்து போய் விடுவோம். சென்னையில் மின்விசிறி போடாமல் தூங்கினால் உடலெல்லாம் தொப்பலாக நனைந்து விடும்.

இப்படி அன்றாட செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து செய்யும் போது நிறைய தெளிவு கிடைக்கிறது. கற்றுக் கொண்ட இன்னொன்று உயர் அழுத்த சமையல் கலனில், நீராவி வெளிப்பட்டு விசில் சத்தம் கேட்க வேண்டிய அவசியமில்லை. எடைக்கல்லைப் போட்டு நீராவி அழுத்தம் ஏறி, சிறிதளவு சத்தம் கேட்கத் தொடங்கியதும் அடுப்பின் பிழம்பை மிகக் குறைந்த நிலையில் வைத்து விடுகிறேன். 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு இறக்கினால், சோறும் சரி பருப்பும் சரி, நன்கு வெந்து போயிருக்கிறது. நீராவி வெளியேறும்படி விசில் அடிக்கும் போது அழுத்தத்தில் உணவுப் பொருட்கள் வெளிப்பாத்திரத்துக்குச் சிந்தி விடவும் செய்கின்றன. அதையும் தவிர்க்க  முடிகிறது.

காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு கழுவ வேண்டும். மிதமான சூட்டில் சமைப்பது என்று அங்கங்கு படித்திருந்த குறிப்புகள் சரியான நேரங்களில் கை கொடுக்கின்றன.

ஞாயிறு, மார்ச் 27, 2011

வங்கி நடைமுறைகள்


நேரம் 4.12, மார்ச் 27, 2011.

நேற்றுக் காலையில் முடிவு செய்தது படி நான்கு மணிக்கு முன்னதாகவே எழுந்து விட்டேன். 3.40க்கு எழுந்து எழுத உட்காரும் போது 4.04. 1 மணி நேரம் எழுத்து ஓட்டமாக ஓடி விட்டது. மனதில் நிறைய சொல்ல வேண்டிய விஷயங்கள் சேர்ந்திருக்கின்றன. ஏதாவது ஒரு புள்ளியைத் தொட்டால் இழுத்துக் கொண்டே போய் பல இழைகளில் நீண்டு விடுகிறது.

5 மணிக்கே உலாவி வர புறப்பட்டேன். காந்திநகர் பிரதான சாலைகள் வழியாக பேருந்து சுற்றி வரும் தடத்தில் போக வேண்டும். அரை மணி நேரத்துக்குள் முடியுமா என்று கேள்வி இருந்தது. அலைபேசியின் நேரக் கண்காணிப்புக் கருவியில் 15 நிமிடங்கள்  அமைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.  கோபாலபுரம் வழியாக சாலைக்குப் போய் சாலையைக் கடந்து இணையாகச் செல்லும் காந்திநகர் கிழக்குச் சாலைக்குப் போய்ச் சேர்ந்தேன். வங்கி கிளையின் சரியான பெயரைப் பார்த்துக் கொண்டேன் - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - தனிநபர் வங்கிக் கிளை.

அந்த நேரத்தில் நடக்க வருபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடும்படியாகவே இருந்தது. குண்டானவர்கள்,  சரியாக நடக்க முடியாதவர்கள், தம்பதியினராக நடப்பவர்கள், தடகள உடை அணிந்து நடப்பவர்கள், மாணவர் ஒருவர் என்று பலதரப்பட்டவரை எதிரில் பார்க்க முடிந்தது. வேகமாகவே நடந்தேன். கிழக்குச் சாலையின் முனையில் திரும்பி 'கல்யாண மண்டபம்' நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கல்யாண மண்டபம் பேருந்து நிறுத்தத்துக்கு சிறிது முன்னர் மணி அடித்தது. மீண்டும் 15 நிமிடங்கள் காத்திருப்புக்கு இயக்கி விட்டு நடையைத் தொடர்ந்தேன்.

காட்பாடி-பாகாயம் தட பேருந்து எதிரில் வந்தது. 5 மணிக்கெல்லாம் ஆரம்பித்து விடுகிறார்கள்.  அது தனியார் பேருந்து. சிறிது நேரத்தில் பின்னால் இருந்து அரசுப் பேருந்து. 2-3 நிமிடங்களுக்கு ஒரு பேருந்தாக எந்த நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் தடம். ஏனோ. இரவுச் சேவை மட்டும் இல்லை. இரவு தாமதமாக வெளியூரில் இருந்து வந்தால், பகிர்வு ஊர்தியைத்தான் நம்பியிருக்க வேண்டும். அல்லது வாடகை ஊர்தி.

டான்பாஸ்கோ, மின்வாரியம், ரவுண்டானா. ரவுண்டானா அருகில் இன்னொரு பாரத ஸ்டேட் வங்கி கிளை. நலிவுற்ற கடன்களுக்கான சிறப்புக் கிளை. கிழக்குச்சாலையிலேயே சிறுதொழில் கிளையும் இருக்கிறது. இப்படித 15 நிமிட நடை தூரத்துக்குள் 3 ஸ்டேட் வங்கி கிளைகள். இதைத் தவிர மற்ற வங்கிக் கிளைகளும்.

ஓடைப்பிள்ளையார் நிறுத்தம் வரும் போது 3 நிமிடங்கள்தான் மீதி இருந்தது. பிள்ளையார் கோவில், பாம்பே ஆனந்த பவன் வழியாகப் போகாமல் கோபாலபுரம் வழியாகவே திரும்பி விட்டேன். கீழ் அலுவலகத்தில் காவல் பணியில் இருப்பவர் போகும் போது தூங்கிக் கொண்டு இருந்தவர் விழித்துப் பார்த்தார். வரும் போது தூக்கம் கலையக் கூடவில்லை.

வீட்டுக்கு வந்து ஒதுங்க வைத்தல். துணிகளை மடித்து வைத்து விட்டேன். சட்டை, உள்ளாடைகள் போதாது என்று ஒரு எண்ணம் இருந்து வந்தது. எண்ணிப் பார்த்தால் அப்படி குறைவு ஒன்றும் இல்லை. கழுத்துப்பட்டை, தோள்பட்டையில் கிழிசல் ஆகி விட்ட இரண்டு சட்டைகளை வீட்டில் போடுவதற்கு ஒதுக்கி வைத்து விட்ட பிறகு எண்ணினாலும் 6 சட்டைகள் இருக்கின்றன.

சமையலறை மேடையைத் துடைத்து, தூத்து, பாத்திரம் கழுவி விட்டு, முகம் மழித்துக் குளித்து விட்டேன். குளித்த பிறகு காலை உணவுக்கு தயார் செய்து விட்டு, தியானம். 20 நிமிட தியானத்தில் 7 நிமிடங்கள் மீதி இருக்கும் போதே எழுந்து கொண்டேன். வங்கிக்கு எழுத வேண்டிய - கணக்கு மாற்றும் கடிதம், பணம் செலுத்தும் கடிதம் எழுதி வைத்துக் கொண்டேன். வங்கி அட்டை, தொலைபேசி கட்டணத்துக்கான காசோலை, கடிதங்கள் கோப்பில் வைத்து பையில் போட்டுக் கொண்டேன். குடிப்பதற்கான தண்ணீர் பாட்டிலும் பைக்குள்.

படிப்பதற்கு A Dream of Red Mansions என்ற சீன 18ம் நூற்றாண்டு நாவலை எடுத்துக் கொண்டேன்.  இது போல் நிறைய புத்தகங்கள் வாங்கி, வாங்கிய சமயத்தில் படிக்க முடியாமல் வைத்திருந்தவை இருக்கின்றன. இந்த புத்தகம் சீனாவின் புகழ் பெற்ற நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாளின் சமூக அரசியல் நிலைமைகளை படம் பிடிக்கும் வண்ணம் எழுதப்பட்டது. பாகத்துக்கு 40 அத்தியாயங்களாக 3 பாகங்கள் கொண்ட தொகுதி இருந்தது. அதில் முதல் பாகத்தை எடுத்துக் கொண்டேன். கைக்கடக்கமான பதிப்பு. ஆQவை மொழி பெயர்க்க வேண்டுமானால் இன்னும் ஒரு மாதத்துக்கு ஆQவின் பேய் பிடித்து ஆட்டினால்தான் முடியும்.

துணிகளைத் தேய்க்க வேண்டும். ஒரு கால்சட்டை, மூன்று சட்டைகள் தேய்ப்பதற்கு 20 நிமிடங்கள் ஆகி விட்டன. அவற்றை ஏறக்கட்டி விட்டு குடிப்பதற்கான தண்ணீர் பிடித்து வர முடிவு செய்தேன். கால் சட்டை தவிர மற்ற உடைகளை மாட்டிக் கொண்டு குடங்களை எடுத்துக் கொண்டேன்.

இங்கு வீடு பார்க்கும் போது, 'வீட்டில் வரும் தண்ணீர் குடிக்கத் தகுந்ததுதானா' என்று வீட்டுக் காரரைக் கேட்டேன். 'நீங்களே குடித்துப் பாருங்களேன்' என்று சொன்னார். ஒரு வாய்க் குடித்து விட்டு தலையை ஆட்டினேன். வந்த பிறகு அவரது மனைவி, 'அந்தத் தண்ணி உப்புத் தண்ணி, குடிக்க முடியாது' என்று சொல்லி விட்டார். குளியலறையில் வாளிகளும், பிளாஸ்டிக் குவளைகளும் உப்பு படிந்துதான் போகின்றன. குடிக்க தகுதியற்ற தண்ணீர்தான்.

'25 ரூபாய் கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்' என்றார் வீட்டு உரிமையாளர். எனக்கு அந்தத் தண்ணீர் வாங்குவதில் விருப்பம் இல்லை. 'அவர்கள் என்ன செய்கிறார்கள்' என்று கேட்டால், 'குழாயில் வரும் தண்ணீரைப்' பிடித்து வைத்துக் கொள்கிறார்களாம். 'இரண்டு குடம் வாங்கித் தாருங்கள், தண்ணீர் வரும் போது பிடித்து வைத்து விடுகிறோம்' என்றார்கள். தண்ணீர் என்றைக்கு வரும் என்று உறுதி இல்லாமல் குழப்பமாக இருந்தது.

ஓரிரு வாரங்களுக்குள் அவர்களது வீட்டுக்குள்ளேயே குழாய் இணைப்பு எடுத்து விட்டார்கள். தெருவில் இருந்த இணைப்பு காணாமல் போயிருந்தது. அங்கு தினமும் தண்ணீர் வந்தது. 'எப்போ வேணுமோ இங்கே வந்து குடிக்கத் தண்ணீர் பிடிச்சுக்கோங்க' என்று சொல்லி விட்டார்கள்.

இரண்டு குடம் பிடித்து வந்தால் 4 நாட்களுக்கு வரும். குடிப்பதற்கு கெட்டிலில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு பாட்டில்களில் ஊற்றிக் கொள்வேன். சமைப்பதற்கு குடத்திலிருந்து நேராக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

தண்ணீர் பிடிப்பதற்கான இணைப்பு, தரையில் தோண்டப்பட்ட ஆழமான தொட்டிக்குள். குழாயிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர் வழிந்து பாதம் முழுகும் அளவு தண்ணீர் இருக்கும். வெளியில் கதவு மூடியிருந்தது. தொட்டிக்கு அருகில் இருக்கும் ஜன்னலில் வீட்டுக்கார அம்மா தெரிந்தார்கள். அவர்களிடம் தகவல் சொல்லி விட்டு தண்ணீர் பிடிக்க இறங்கினேன். காலில் ஏதோ கடிப்பது போல இருந்தது. இரண்டு குடத்தையும் நிரப்பி மேலே வைத்து விட்டு, 'தேங்கி நிற்கும் தண்ணீரை இறைத்து வெளியில் விட்டு விடுவதாகச்' சொன்னேன்.

பழைய குடம் ஒன்றும் சில பிளாஸ்டிக் டப்பாக்களும் கிடந்தன. டப்பா வைத்து இறைத்து குடத்தில் நிரப்ப ஆரம்பித்தேன். இதற்குள் வீட்டுக்காரரும் வந்து விட்டார். அவர் ஒரு வாளியைத் தந்து அது வைத்து தண்ணீர் இறைக்கச் சொன்னார். அதில் சீக்கிரமாக நிரப்ப முடிந்தது. கிட்டத்தட்ட 10 குடங்கள் தண்ணீர் எடுக்க முடிந்தது. இரண்டு குடங்களை மாற்றி மாற்றி நிரப்பி மேலே தர அவர் எடுத்து செடிகளுக்கு ஊற்றி வந்தார். கடைசியில் சிறிதளவு தண்ணீரை விட்டு விட்டு வந்தேன்.

முதுகும் மூச்சும் முறையிட்டன. இரண்டு குடங்களையும் தூக்கிக் கொண்டு சாலையைக் கடந்து வீட்டுக்குக் கீழே வைத்து விட்டு படிகளில் ஒவ்வொன்றாக எடுத்து மேலே கொண்டு போய்ச் சேர்த்தேன். இனிமேல் நான்கு நாட்களுக்கு தண்ணீர் கவலை இல்லை.

காலை உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது ராமநாதனுக்கு தொலைபேசி பணம் திரட்டிய விபரங்களையும் கொண்டு சேர்க்கும் முறையையும் கேட்க வேண்டும் என்று தோன்றியது. பேசினால், உடனேயே ஆளைத் தெரிந்து கொண்டார். முதலில் ராஜாமுகமதுக்குத் திரட்டிய பணத்தை அவரிடம் சேர்க்கும் வழி. நேரில் வந்து விட்டால் நல்லது என்று சொன்னார். வங்கி வரைவாக எடுத்துக் கொள்ளலாமா, என்ன பெயரில் எடுக்க வேண்டும் என்று சொல்லச் சொன்னேன்.

அவர் நாம் தமிழர் - சீமானின் இயக்கத்தில் ஆர்வமுடையவர். போன தடவை  போயிருந்தபோது அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இணையத்தில் சில நண்பர்கள் காங்கிரசைத் தோற்கடிக்கும் இயக்கத்தில் பங்கு பெற விரும்புவதாகவும் அதைப்பற்றிய விபரங்கள் வேண்டும் என்றும் கேட்டேன். எல்லா விபரங்களையும், தொடர்புகளையும் தருகிறேன் என்றார்.

மூன்றாவதாக, அவரது தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு நிதிஉதவி கேட்டு அறக்கட்டளைக்கு தகவல் அனுப்பியதாகவும், அதை அவர்கள் முடிவு செய்ய சில மாதங்கள் ஆகலாம் என்றும் தகவல் சொன்னேன்.

எட்டரை மணிக்கெல்லாம் வேலைகள் எல்லாம் முடிந்து கதவைத் தாழிட்டு புறப்பட்டு விட்டேன். கோபாலபுரம் சாலையில் நடந்து மெயின் ரோடுக்கு வந்தால், சாலையைக் கடக்க முடியாத அளவுக்கு வாகன வரிசை. இடது புறமாகவே நடந்து சாலை சந்திப்பு வரை போய் விட்டேன். அங்கு சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தால் நேராகப் போகும் பேருந்தே கிடைத்து விட்டது. புதிய பேருந்து நிலையம்.

கடையில் டெக்கான் குரோனிக்கிளும், ஜூனியர் விகடனும் வாங்கிக் கொண்டு சென்னை பேருந்து நிறுத்தத்துக்கு வந்தால் தருமபுரி பேருந்து ஒன்று நகர ஆரம்பித்திருந்தது. வேகமாக ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். பேருந்தில் இருக்கைகள் நிரம்பியிருக்கவில்லை. வாலாஜாவுக்கும் ஆட்கள் ஏறிக் கொண்டார்கள். நேரம் இருக்கிறது. இரண்டரை மணி நேரம் ஆனாலும் 11.15க்கு பூந்தமல்லி போய் விடலாம்.

முதலில் ஜூனியர் விகடன், படித்து முடிக்கும் போது வாலாஜா நெருங்கியிருந்தது. ஆற்காடு புறவழிச்சாலையிலும் ஆட்கள் ஏற்றிக் கொண்டார். வாலாஜாவில் பேருந்து இருக்கைகள் நிரம்பி விட்டன. மூன்று பேர் இருக்கும் இருக்கையில் ஜன்னலோர இருக்கையில் நான் இருக்க இரண்டு பெண்மணிகள் மற்ற இருக்கைகளை பிடித்துக் கொண்டார்கள்.

நாளிதழ் படித்து விட்டு, dream of red mansion கையில் எடுத்தேன். சீன கதை சொல்லும் முறையில் தேவர்களும் முனிவர்களும் மாயப் பொருட்களுடனான அறிமுகத்துடன் முதல் இரண்டு அத்தியாயங்கள். முன்னுரையில் நான்காம் அத்தியாயத்தில் நாவலின் கருப்பொருள் உருவாகிறது என்று குறிப்பிட்டிருந்தார்கள். வழக்கம் போல கம்யூனிச சித்தாந்தத்துக்கு இந்த நாவல் எப்படிப் பொருந்துகிது என்ற நியாயப்படுத்தலும் முன்னுரையில்.

18ம் நூற்றாண்டு சீனாவைக் கண்முன் கொண்டு வரத்தான் செய்கிறது.

காவேரிப்பாக்கத்தில் சாப்பிடுவதற்கு 10 நிமிடங்கள் நிறுத்தி விட்டார். அதன் பிறகு வேறு எங்கும் போகாமல் வேகமாக ஓட்டியதில் 11 மணிக்கெல்லாம் பூவிருந்தவல்லி வந்து சேர்ந்து விட்டது பேருந்து. இறங்கி நிலையத்துக்குள் போய் சைதாப்பேட்டை போகும் 54M தட பேருந்தில் ஏறிக் கொண்டேன். சைதாப்பேட்டை வரைதான் போவதால் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். உட்கார இருக்கை கிடைத்தது. 4 ரூபாய் சீட்டு.

'போரூருக்கு அடுத்த ஏதோ தியேட்டர் இருக்கே அந்த நிறுத்தம்' என்று சீட்டு வாங்கியிருந்தேன். அதற்கு அருகில்தான் வோட ஃபோன் கடை இருந்தது. அங்கிருந்து சிறிது தூரத்தில் வங்கிக் கிளை. வங்கிக் கிளைக்கு அருகில் பேருந்து வரும் போது வாகன நெரிசல் இருந்து நின்று விட்டால் வங்கிக்கு அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

நேராக அந்த கோபாலகிருஷ்ணா தியேட்டர் நிறுத்தம் வரை போய்விட்டது பேருந்து. இறங்கி காசோலையை வோடஃபோன் கடையில் சேர்த்து விட்டு வங்கி நோக்கி நடந்தேன். வாகன வரிசை குறைவதாகத் தெரியவில்லை. வங்கிக்கு எதிரில் சாலையைக் கடக்க நிறைய பேர் நின்றிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து உள்ளே வந்து விட்டேன்.

11.30. அரை மணி நேரம் முன்னதாகவே வந்தாச்சு. சரியாக 12 மணிக்கு டோக்கன் இயந்திரத்தை மூடவும் செய்து விட்டார்கள்.

டோக்கன் எடுத்து விட்டு, முதல் வேலையாக கிளை செயல்பாடுகள் மேலாளரிடம் கணக்கு வேறு கிளைக்கு மாற்றும் விண்ணப்பத்தைக் கொண்டு போனேன். எப்போதுமே சிடுசிடுவென்று வெறுப்பாக பேசுபவர் அவர்.

'போய் பாஸ்புக்கின் முதல் பக்கத்தை நகல் எடுத்து வாங்க, ஏடிஎம் கார்டைக் கொடுங்க 'என்று முகத்தைத் திருப்பாமல் சொல்லி அடுத்த வேலைக்குப் போய் விட்டார்.

'ஏடிஎம் கார்டு இல்லை' என்று சொல்லி விட்டு வெளியில் போய் நான்கு கடை தள்ளியிருந்த நகலகத்தில் நகல் எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன். தனது கையொப்பமிட்டு, 100 ரூபாய் கட்டி விட்டு வாருங்கள் என்று அனுப்பி விட்டார். அது ஒரு ஆவணம் தயாராகி விட்டது.

இரண்டாவதாக பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி வைத்துக் கொண்டேன்.

மூன்றாவது வேலை, நண்பரின் கணக்குக்கு பணம் செலுத்துவது. எனது கணக்கிலிருந்து அந்தக் கணக்குக்கு பணம் மாற்றும்படி எழுதி வைத்திருந்த கடிதத்தைக் காட்டினால் இப்படி எல்லாம் முடியாது என்று சொல்லி விட்டார்கள். இன்னொரு பணம் எடுக்கும் படிவத்தை எனது கணக்குக்கு நிரப்பி, அதற்கு இணையாக அடுத்தக் கணக்குக்கு பணம் செலுத்தும் படிவம் ஒன்றையும் நிரப்பி தயாராக்கிக் கொண்டேன். இடையில் எழுதுமேசையில் பாஸ்புக்கையும், முதலில் எழுதி வைத்திருந்த படிவத்தையும் விட்டு போயிருந்தேன். உடனேயே நினைவு வந்து போய் எடுத்துக் கொண்டேன்.

12 மணிக்கு கதவை சாத்திய பிறகும் யாரோ திறந்து விட்டார்கள்.  4ம் எண் சாளரத்தில் இருந்த பெண் உரக்க உதவியாளரை கூப்பிட்டு கதவை மூடி விடும்படி சொல்லிக் கொண்டே இருந்தார். யாரோ ஒரு பெரியவர் ஏதோ சந்தேகம் கேட்க, 'இதற்கு டோக்கன் எடுத்துக் கிட்டு வரணும். இப்போ நேரம் முடிந்தாச்சு, திங்கள் கிழமை வாங்க' என்று சிடுசிடுத்தார்.

இந்தக் கிளையில் எல்லா முகங்களும் பரிச்சயமானவைதான். இன்றைக்கு 5வது சாளரத்தில் வழக்கமாக உட்காரும் பெரியவர் இல்லை. 1, 2, 4, 5 நான்கிலும் பெண்கள். 12 மணிக்கு அப்புறம் வேக வேகமாக கூப்பிடுவது போன்ற உணர்வு. 'எனது முறை 1ம் சாளரத்துக்கு வந்தால் நல்லது, 12 மணிக்குப் பிறகு இது போல 3 சிக்கலான வேலைகளைக் கொண்டு வந்தால் ஏற்கனவே சிடுசிடுத்துக் கொண்டிருக்கும் 4ம் எண் என்ன சொல்வாரோ!'

சொல்லி வைத்தது போல 4ம் எண்ணிலேயே எனது முறை வந்தது. இருக்கையில் உட்கார்ந்ததுமே, 'எனக்கு மூன்று வேலைகள் இருக்கின்றன' என்று சொல்லி விட்டேன். எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தார். முதலில் பணம் செலுத்தும் விண்ணப்பம்.

வேலையில் மிகவும் திறமைசாலி. சில மாதங்களுக்கு முன்பு இது போல காத்திருக்கும் போது அந்தப் பெண் உட்கார்ந்திருந்த சாளரத்தின் எண் நிறைய பேரை அழைத்துக் கொண்டிருந்தது. எனது முறை வந்ததும். '1ம் எண் சாளரம்தான் இருப்பதில் சுறுசுறுப்பு எவ்வளவு வேகமாக நகர்கிறது' என்று பாராட்டிச் சொல்லியிருந்தேன். அது இப்போதுதான் நினைவுக்கு வந்தது.

வேக வேகமாக எனது பணம் எடுக்கும் படிவத்தை முடித்து விட்டு, அடுத்த கணக்கு பணம் செலுத்தும் படிவத்தையும் நகர்த்தினார்.

அடுத்தது பணம் எடுப்பது. அதுவும் சில நொடிகளில் முடிந்து விட்டது.

மூன்றாவது கணக்கை மாற்றுவது, அதற்கு கணிசமான நேரம் ஆனது. 1990களில் அக்காவின் வங்கிக் கணக்கை அண்ணா பல்கலையிலிருந்து தாம்பரத்துக்கு மாற்றும் விண்ணப்பம் கொடுத்த போது சில வாரங்கள் ஆனதாக நினைவு.

இங்கு நான் எதிரில் உட்கார்ந்திருக்கும் போதே, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த  கிளையை கணினியில் பார்த்து, முகவரியை உறுதி செய்தார். 100 ரூபாய்க்கான படிவம் அவரே நிரப்பி அதையும் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டார். கணினிக் குறிப்புகளை விண்ணப்பத்தில் எழுதி, கட்டணப் படிவத்தையும் சேர்த்து என் கையில் கொடுத்து விட்டார். மொத்தம் 5 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.

'அக்கவுண்டன்ட் கிட்ட போய் கொடுங்க, இன்றைக்கே உங்க கணக்கு மாறி விடும்' என்றார். 'தேங்க்யூ வெரிமச்' என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டேன்.

அக்கவுண்டன்ட் எனப்பட்டவர் முதலில் சொன்ன கிளை செயல்பாடு மேலாளர்தான். அவர் சில நிமிடங்கள் காத்திருக்க வைத்து விட்டு விண்ணப்பத்தை வாங்கி கணினியின் சரி பார்த்து விட்டுப் போகச் சொன்னார். 'திங்கள் கிழமை கிளைக்குப் போய்ப் பாருங்கள்'. என்ன வேகம்! கணினி மயமாக்கத்தின் மாயம்!

திங்கள் கிழமை போய் ஏடிஎம் அட்டை, காசோலை கேட்டு விண்ணப்பித்தால், வியாழக்கிழமை ஜெகதாபட்டிணத்தில் பணம் எடுக்கும் படி அட்டை வந்து விடலாம். இல்லா விட்டால் புதன் கிழமை வரைவு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வந்த வேலைகள் முடிந்து விட்டன. வாடிக்கையாளருக்குச் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருந்ததால் சென்னையில் போக வேண்டிய நண்பர்கள், உறவினர்கள் இடங்களுக்கு இன்று வேண்டாம் என்று உடனேயே பூவிருந்தவல்லி பேருந்து. வாகன நெருக்கடியில் வங்கிக்கு முன்பு நின்றிருந்த 54M, சைதாப்பேட்டையிலிருந்து வருவது. அதே 4 ரூபாய் கட்டணம். பூவிருந்தவல்லிக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம்.

குமணன் சாவடிக்கு அருகில் வரும் போது பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து வந்து சேரும் கிளைச்சாலையில் 502 குளிர்பேருந்து நிற்பதைப் பார்த்து விட்டேன். நிறுத்தத்தில் இறங்கி அதற்கு கை காட்டினால் நிறுத்தி ஏற்றிக் கொண்டார்கள். மூன்று மடங்கு கட்டணம். ஆனால் ஒரு மணி நேரம் முன்னதாக போய் விடலாம்.

145 ரூபாய் கட்டணத்துக்கு சில்லறை இல்லை என்று 150 ரூபாய் எடுத்துக் கொண்டார் நடத்துனர். மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்க விட்டிருந்தார்கள். கையில் dream of red mansion, அலைக்கருவி விளையாட்டு, பாட்டுகள் என்று நேரம் போனது.

இந்தப் பேருந்தில் இருக்கைகள் கால் இடிக்கும்படி நெருக்கமாக இருக்கும். நடுவில் நிற்கும் பகுதியில் மூன்று பக்கவாட்டு இருக்கைகள் இருக்கும். அவற்றில் காலை நீட்டி உட்கார வசதி உண்டு. அந்த இருக்கைகள் மூன்றுமே காலியாக இருக்க நடு இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.

இடது புற இருக்கையில் மேலே உட்கார்ந்திருப்பவர்களின் கால் தூசி விழும் தூரம், வலது புற இருக்கை இந்தப் பக்கம் உட்கார்ந்திருப்பவர்களின் பின்புறம். அதனால் நடு இருக்கை. ஒல்லியான ஒரு பெண் வந்து வேறு இடம் இல்லாமல் வலது இருக்கையைப் பிடித்தார்.

1 மணிக்கு குமணன் சாவடியில் ஏறிய பேருந்து இரண்டரை மணிக்கெல்லாம் வேலூர் வந்து விட்டது. மற்ற பேருந்துகளில் குறைந்தது 3.15 ஆகியிருக்கும். 3.45 வரை ஆகவும் சாத்தியம் உண்டு.

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனை அருகில் 5 இளைஞர்கள் ஏறினார்கள். அதில் ஒருவர் இடது புற இருக்கை. ஆற்காடு புறவழிச் சாலையில் ஏழெட்டு பேர் இறங்கினார்கள். வேலூர் பேருந்து நிலையத்துக்கு வெளியில் இறங்கி ஆர்ய பவனில் சாப்பிடப் போனேன். 40 ரூபாய் சாப்பாடு.

கீரைக் குழம்பு, சாம்பார், ரசம், மோர்க் குழம்பு, மோர், பொரியல் இரண்டு கூட்டு என்று இலை போட்டு சாப்பாடு. தட்டில் சோறு. நம்ப முடியாத அளவுக்கு சுவையாக இருந்தன. ஆர்ய பவனில் எல்லா உணவுகளுமே நன்கு செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். பசியில் அப்படி இருந்திருக்கலாம்.  மாலையில் 7 மணிக்கு வயிறு வலிக்கும் போது ஏதாவது சுவை கூட்டி சேர்த்திருப்பார்கள் என்று தோன்றியது.

3 மணிக்கு காட்பாடி போகும் பேருந்தில் ஏறி விட்டேன். 3 முதல் 6 வரை வேலை நேரம். 'அதற்கு வந்து சேர்ந்து விட்டோம்'

சீன மொழியும் மற்ற பணிகளும்

நேரம் காலை 4.04, 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி.

தேதியை எப்படி எழுதுவது என்று ஒரு வழக்கு உண்டு. ஆண்டு/மாதம்/தேதி என்று எழுதுவது தகுதர முறை. தேதி/மாதம்/ஆண்டு என்று எழுதுவது இங்கிலாந்து முதலான நாடுகளில் (இந்தியாவிலும்) பின்பற்றப்படும் ஒரு முறை. மாதம், தேதி, ஆண்டு என்று சில ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பயன்படுத்துகிறார்கள்.


  • முதல் தகுதர முறையில் குழப்பம் எதுவுமில்லை. 2011/03/26 என்றால் வரிசையாக இறங்கு முகத்தில் படித்துக் கொள்ளலாம்.
  • இரண்டாவது முறையில் 26/03/2011 என்று எழுதுவோம், பழகிப் போனவர்களுக்கு அது படிக்க வசதியாக இருக்கும். நமக்கெல்லாம் இந்த வடிவம் தெளிவாக புரிகிறது.
  • மூன்றாவது முறையில் 03/26/2011 என்று எழுதுவோம். இதுவும் அந்த முறையில் பழகினவர்களுக்கு சரி. இரண்டாவது முறையை பின்பற்றுபவர்களுக்கு கொஞ்சம் குழம்பும். 'இது என்ன 26ம் மாதம் 3ம் தேதி' என்று எழுதியிருக்கிறதே என்று! '26வது மாதம் இருக்க முடியாது அதனால், எழுது வடிவம் வேறு' என்று தெளிந்து விடலாம்.


சிக்கல் வருவது மாதத்தில் முதல் 12 நாட்களில். 2011ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதியைக் குறிப்பிட

  • முதல் முறை - 2011-4-8
  • இரண்டாம் முறை : 8-4-2011
  • மூன்றாம் முறை : 4-8-2011

இரண்டாம் முறையில் பழகியவர், 4-8-2011 என்பதை ஆகஸ்டு 4ம் தேதி என்று படிப்பார். மூன்றாம் முறையில் பழகியவருக்கு 8-4-2011 என்பது ஆகஸ்டு 4. இந்தக் குழப்பம் பல நாடுகளுக்கிடையே பரிமாறப்படும் ஆவணங்களில் கவனிக்க வேண்டிய ஒன்று. குழப்பம் இல்லாமலிருக்க ஏதாவது வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த முறையானாலும் மாதத்தை எண்ணால் குறிப்பிடாமல், எழுத்துக்களில் குறிப்பிடலாம். ஏப்ரல் 8, 2011 அல்லது 8 ஏப்ரல் 2011 இரண்டிலும் குழப்பம் இல்லை. ஆனால் சில இடங்களில் மாதத்தை எண்ணால் குறிப்பிடுவது தேவைப்படுகிறது. மென்பொருளில் அல்லது மற்ற கணக்குகளில் காலத்தை கணக்கிடும் போது மாதத்தை எண்ணால் குறிப்பிடுவது வசதியாக இருக்கிறது.

அந்த தருணங்களில் எந்த வடிவத்தைப் பயன்படுத்துகிறோம் என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுவது இன்னொரு வழி. இன்னாரிடமிருந்து வரும் கடிதத்தில், அல்லது தரவுகளில் தேதிகள் எப்போதுமே மாதம்/தேதி/ஆண்டு வடிவத்தில்தான் இருக்கும் என்று தெரிந்தால் படிப்பவரும் கவனமாக புரிந்து கொள்வார்.

உள்ளதில் உத்தமம் குழப்பமில்லாத ஆண்டு/மாதம்/தேதி பயன்படுத்துவதுதான். ஆண்டிலும் இரண்டு இலக்க எண்ணைப் பயன்படுத்தாமல் நான்கு இலக்க ஆண்டை பயன்படுத்த வேண்டும்.

ஒரு தேதியைச் சொல்லுவதற்கு இவ்வளவு கிளைக்கதை. அதற்கு பக்கத்திலேயே நேரம். 4.04.

சீன மொழியில் எண் 4 கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் 13ம் எண்ணைக் கண்டு பயப்படுவதைப் போல 4ம் எண் சீனர்களுக்கு ஒவ்வாது. எண் 4ஐ சீன மொழியில் சிஹ்  என்று உச்சரிக்கிறார்கள். இதே உச்சரிப்பில் இன்னொரு சொல் மரணம். அதனால் 4ம் எண் மரணத்தைக் குறிக்கிறது.

இந்திய மரபைப் பொறுத்த வரை மரணம் கூடக் கொண்டாடக் கூடியதுதான். கெட்ட பழக்கங்களின்,  அகம்பாவத்தின், தீமையில் மரணம் என்று அழிக்கும் கடவுளான சிவனின் வடிவத்தில் சாவைப் போற்றிக் கொள்ளலாம்.

சீனர்களுக்கு விருப்பமான எண் 8. எண் 8ன் உச்சரிப்பு பா. பொக்கிஷம் என்ற சொல்லின் உச்சரிப்பு பாவ். இரண்டும் ஒரே மாதிரி ஒலிப்பதால் 8 என்பது வளத்தைக் குறிக்கிறது என்று நம்பிக்கை. விற்பனை நிலையங்களில், விளம்பரங்களில் 8 என்ற எண் நிறைய பயன்படுத்தப்படுகின்றது.

தள்ளுபடியைக் குறிக்கும் சீன முறையும் கொஞ்சம் வித்தியாசமானது. 20% தள்ளுபடி என்றால் 8 பாகம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது பொருளின் விலையில் 10ல் 8 அளவில் விற்கப்படுகிறது. 7செ என்றால் 30% தள்ளுபடி. 3செ என்றால் 70% தள்ளுபடி.

இப்படி சீனர்களின் பழக்கங்கள் மனமெல்லாம் நிரம்பி நிற்பதற்குக் காரணம் நண்பர். போன வாரம் வீட்டுக்கு வந்த அவர் லூஷூன்னின் சிறுகதை ஒன்றை சீன மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்குமாறு சொல்லியிருந்தார்.  வெளிநாட்டு இலக்கியங்களின் ஒரு தொகுப்பு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், சீன மொழியிலிருந்து நான் ஏதாவது ஒன்றை மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்புவதாகவும் சொன்னார்.

லூஷூன் 20ம் நூற்றாண்டின் சீன படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். சீன சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டும் ஆழமான, கூர்மையான சிறுகதைகளை எழுதியுள்ளார். அவரது ஆQவின் உண்மை கதை என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது. அவரது இன்னொரு படைப்பு ஒரு பைத்தியக்காரனின் டயரி. சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் என்ற படைப்பு இந்த இரண்டின் ஒரு கலப்புப் பிறவி என்று சொல்லலாம். லூஷூன்னின் ஆQ போல சீன சமூகத்தின் குறுக்கு வெட்டாக இல்லாமல் எழுத்தாளர்களை மட்டும் படம் பிடிப்பதாக இருந்தது அது.

நான் சீனாவில் இருக்கும் போது மின்னஞ்சல் மூலம் அறிமுகமானார். மொழிக் கல்வியில் தனக்கு மிகவும் ஆர்வம் இருப்பதாகவும், சீன மொழி கற்பதற்கான புத்தகங்களை வாங்கி அனுப்ப முடியுமா என்றும் கேட்டிருந்தார். பதிலுக்கு அவர் எனக்குத் தேவையான தமிழ் புத்தகங்களை வாங்கி சீனாவுக்கு அனுப்புவார்.

சாங்காயில் நம்ம ஊர் மக்கள் தொடர்புக்கு இருந்த ஏங்கலும், கையில் இருந்த பண தாராளமும் நிறைய வேலைகளை சாத்தியமாக்கின. சீன மொழி கற்பதற்கான ஓரிரு புத்தகங்களை வாங்கி அவர் கொடுத்திருந்த முகவரிக்கு அனுப்பி விட்டேன். சுண்டைக்காய் கால்பணம் செமட்டுக் கூலி முக்கால் பணம் என்பது போல புத்தக விலையில் பல மடங்கு தபால் செலவு. புத்தகம் அனுப்பிய தகவலை தெரிவித்த பிறகு அவரிடமிருந்து தொடர்பு நின்று போயிருந்தது. புத்தகம் வந்து சேர்ந்ததா என்று கூட தகவல் வரவில்லை. பதில் உதவியாக எனக்கு தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை விட்டிருந்தேன்.

சீனாவிலிருந்து திரும்பி சென்னையில் குடித்தனம் ஏற்படுத்திய பிறகு ஒரு நாள் அவர் தொடர்பு கொண்டார். முதலில் ஏற்பட்ட தொடர்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக இயங்கி வந்த தமிழ் மடற்குழுக்கள் மூலமாக - தமிழ் டாட் நெட், தமிழ் உலகம் இரண்டையும் தினமும் படித்து வந்தேன். எப்படியோ நான் சென்னை திரும்பி விட்டேன் என்று தெரிந்து தொலைபேசியில் அழைத்து சந்திக்க வருவதாகச் சொன்னார்.

அப்போது அண்ணா நகர் 9வது பிரதான சாலையில் ஒரு அடுக்குக் கட்டிடத்தின் முதல் மாடியில் வீடு. வரவேற்பறை+மூன்று அறைகள்+சமையலறை,  ஒரு அறை அலுவலக அறை. மீதி இடம் வீட்டுக்கு.

'மொழி பள்ளிக் கூடம் ஒன்று ஆரம்பிக்கப் போவதாகவும் அதில் சீன மொழி கற்பிக்க நான் ஆசிரியராக இருக்க வேண்டும்' என்று சொன்னார். நான் அனுப்பியிருந்த புத்தகங்களுக்கான விலையையும் கையில் பணமாகக் கொடுத்தார். அன்றிலிருந்து ஆரம்பித்த உறவும் நட்பும் இன்றும் தொடர்கிறது.

அண்ணாநகர் மேற்கு விரிவில் இருந்த அவரது நிறுவனத்தில் சீனமொழி கற்றுக் கொடுத்தேன். ஏபிஎன் அம்ரோவின் வெளிவேலை பிரிவு அண்ணா சாலையில் ரஹேஜா வளாகத்தில் இருந்தது. அங்கு ஏழெட்டு பேருக்கு வகுப்பு நடத்தினேன்.

இந்த பழக்கத்தில் தோல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாணியம்பாடியில், சென்னையில் ஒரு நிறுவனத்துக்கும் வகுப்புகள் நடத்தினேன். டாடா நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் அலுவலகத்தில் ஒரு வகுப்பு நடந்தது.

இந்த சீன மொழி கற்பித்தல் லெதர்லிங்க் உருவாகி வருமானம் வராத நாட்களில் மிகவும் உதவியாக இருந்தது. ஏதாவது ஒரு வழியில் பணம் ஈட்ட வேண்டும் என்ற நெருக்கடிகளில் பல முறை கைகொடுத்தது. லெதர்லிங்க் தலை எடுத்து வேலைகள் அதிமானதும் சீன மொழி வேலைகளை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டேன்.

இதற்குள் அவர் அண்ணாநகரிலிருந்து கோடம்பாக்கத்துக்கு அலுவலகத்தை மாற்றிக் கொண்டார். அடிப்படையில் ஊடகவியலாளரான அவர் மொழிபெயர்ப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கியிருந்தார். கூடவே பதிப்பகம். அவர் ஆரம்பித்த நிறுவனம் தரமாக கனமான தமிழ் நூல்களை தமிழ் மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

எங்களுக்கிடையேயான நட்பு கொஞ்சம் அடக்கி வாசிப்பது. வழக்கம் போல எனது பழக்கங்களில் பெரிய அளவு பாசமோ நெருக்கமோ வெளிப்படுவதில்லை. அவரும் என்னைப் போன்ற இயல்பினர்தான். ஆழமான தமிழ்ப் பற்று, திராவிட இயக்க நெருக்கம், சுயமுனைவு, பெருநிறுவன எதிர்ப்பு என்று கொள்கை அடிப்படையில் வாழ்பவர்.

வழக்கமான எனது பலவீனங்களும் அவருக்கு உண்டு. பெரிய கனவுகள், கனவுகளை நிறைவேற்றும் அளவுக்கு நடைமுறை சாமர்த்தியம் இருக்காது. கண்ட கனவுகள் முழுமையாக நிறைவேறா விட்டாலும், பெருமளவு வெற்றியைத் தந்து விடக் கூடியவை.

என்னை நானாக ஏற்றுக் கொண்டு, மரியாதையோடு நடத்தும் மிகச்சிலரில் அவர் ஒருவர்.

இன்றிலிருந்து

1. நாட்குறிப்பு எழுத வேண்டும்.
2. அதிகாலை எழுந்திருக்க வேண்டும் - 4 மணிக்கு.
3. இரவில் கண்விழிக்கக் கூடாது. 9 மணிக்குத் தூங்கி விட வேண்டும்.
4. காலையிலும் இரவிலும் தியானம் செய்ய வேண்டும் - காலையில் குளித்த பிறகு 20 நிமிடங்கள், இரவில் தூங்குவதற்கு முன்பு 20 நிமிடங்கள்.
5. காலையில் நடக்கப் போக வேண்டும். 1 மணி நேரம் வீட்டு வேலைகள் பார்க்க வேண்டும்.
6. வாரத்துக்கு 4 நாட்கள் மேசை பணிகள் செய்யும் நாட்கள். முற்பகல் 3 மணி நேரம், பிற்பகல் 3 மணி நேரம் மென்பொருள் உருவாக்கம் மற்றும் நிறுவனப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
7. டீ, காஃபி, இனிப்புகள், எண்ணையில் பொரித்த பண்டங்களை சாப்பிடக் கூடாது.
8. முட்டை, பால், இறைச்சி  உணவுகளை சாப்பிடக் கூடாது
9. மாலை 7 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
10. தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.
11. மாலையில் 2 மணி நேரம் படைப்பு வேலைகளில் ஈடுபட வேண்டும்.
12. இணையத்தை பொழுதுபோக்குக்கான 2 மணி நேரத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

என்று நேரத்தை வகுத்துக் கொண்டு விட்டேன். இதை ஒரு தாளில் எழுதி அலமாரியின் பக்கவாட்டில் ஒட்டி விட்டேன்.

நேற்றிலிருந்தே இவற்றைப் பின்பற்ற முடிவு செய்து ஆரம்பித்து விட்டேன். மதியம் 3 மணியிலிருந்து 6 மணி வரை மென்பொருள் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். தொடர்ந்து இணையத்தில் செய்திகள் கொஞ்சம் படித்துக் கொண்டிருந்தேன். கூகுள் பஸ்ஐ மின்னஞ்சல் சாளரத்தில் காட்டாதவாறு அமைத்துக் கொண்டேன்.

மாலையில் செஸ் விளையாட்டில் ஓரிரு மணி நேரம் கழிந்தது. 8 மணி தாண்டி விட்டது என்பது உறைத்தவுடன் அவசர அவசரமாக விளையாட்டை முடித்துக் கொண்டு ஆQ மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். 9 மணிக்கு தியானத்தில் உட்கார்ந்து விட்டு, 9.20க்குத் தூங்கி விட்டேன்.

காலையில் 2.20க்கு முதல் விழிப்பு. அதன் பிறகு 3.40க்கு. கொஞ்ச நேரம் தூங்க முயற்சி செய்து விட்டு எழுந்து விட்டேன். 4 மணிக்கு எழுத்து.

இதை முடித்து விட்டு 5 மணிக்கு உலாவப் போக வேண்டும். இங்கிருந்து காந்தி நகர் சாலையில் சுற்றி அழகர்/அர்ச்சனா வழியாக திரும்பி வர வேண்டும். அடுத்த 1 மணி நேரம் துணி மடித்தல், வீடு தூத்தல், பாத்திரம் கழுவுதல், தரை துடைத்தல். அடுத்த 1 மணி நேரம் காலை உணவு - அரிசி மாவும், ரவையும் கலந்து தோசை சுட்டுக் கொள்ளலாம்.

குடி தண்ணீர் 2 குடம் பிடித்து வர வேண்டும்.

சென்னைக்குப் போக வேண்டும். வங்கியில்  நண்பரின் கணக்கில் பணம் சேர்க்க வேண்டும். எனது செலவுக்கு ரூபாய் எடுக்க வேண்டும். ராஜா முகமதுக்காக திரட்டிய பணம் சரி பார்க்க வேண்டும். வங்கிக் கணக்கை வேலூருக்கு மாற்றுவதற்கு விண்ணப்பம் கொடுக்க வேண்டும். உலாவப் போகும் போது வங்கிக் கிளையின் பெயரைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குளித்த பிறகு வெள்ளைத் தாளில் விண்ணப்பங்கள் எழுதிக் கொள்ள வேண்டும்.

எட்டு அல்லது எட்டரை மணிக்குப் புறப்பட்டுப் போனால் 12 மணிக்கு முன்பு வங்கிக்குப் போய் விடலாம். இன்று சனிக்கிழமை வேலை நேரம் 12 மணி வரைதான். அதனால் 8 மணிக்கெல்லாம் பேருந்து ஏறி விட வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம். வோடஃபோன் கட்டணத்தையும் செலுத்தி விட வேண்டும்.

வேலையை முடித்து விட்டு உடனேயே திரும்பி விட வேண்டியதுதான். அப்படியே பூந்தமல்லி வந்து வேலூர் பேருந்தில் ஏறினால் மாலை 4 மணிக்குள் வீடு திரும்பி விடலாம்.

மாலையில் திட்டமிட்டது போல, 1 மணி நேரம் இணையத்தில் மின்னஞ்சல்கள், செய்திகள் படித்து விட்டு 7 மணி முதல் 9 மணி வரை ஆQ பணிகளைச் செய்ய வேண்டும். 9 மணிக்குப் படுத்துத் தூங்கி விட வேண்டியதுதான்.

மென்பொருள் வேலைகளை நாளைக்கு 6 மணி நேர பணியில் முடித்து விடலாம். முடித்து மின்னஞ்சலும் அனுப்பி விடலாம். செவ்வாய் கிழமை ஆம்பூர் போக வேண்டும்.  பணம் கணக்கில் செலுத்தினால் வாணியம்பாடிக்கும் போய் வரலாம். இல்லையென்றால் அவர்கள் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டியதுதான்.

31ம் தேதி ஜெகதாபட்டிணத்துக்குப் போய் பணத்தை ராஜா முகமது குடும்பத்திடம் சேர்க்க வேண்டும். இன்றைக்கு திரு ராமநாதனுக்குத் தொலைபேசி திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். வலைப்பதிவில் அறிவிப்பையும் வெளியிட வேண்டும். புதன் இரவு புறப்பட்டால், வியாழக்கிழமை அங்கு செலவழித்து விட்டு வெள்ளிக் கிழமை திரும்பி வந்து விடலாம்.

தேர்தல் பணிகள் பற்றியும் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏசிடெக் ஆல்ஃபா உறுப்பினர்கள் விபரங்களைத் திரட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்கான மின்னஞ்சலை உருவாக்கி எல்லோருக்கும் அனுப்ப ஆரம்பிக்க வேண்டும்.