என்னைப் பற்றி

எனது புகைப்படம்
mobile : 9884070556
நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பு, 
சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்ப பட்டம்
தேவாஸ் (மத்திய பிரதேசம்) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (டாடா) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (பிஎல்சி) நிறுவனத்தில் வேலை
சொந்த நிறுவனம் பிஎஸ்ஜி லெதர் லிங்க். 

Thursday, January 05, 2012

புது இடம்


நேரம் 4.49. ஜனவரி 5, 2012.

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு ஜனவரி மாதம் 5ம் தேதிதான் பிறந்திருக்கிறேன். பிறந்த கிழமை புதன் கிழமை என்று சொல்லக் கேட்ட நினைவு. 40 ஆண்டுகள் ஓட்டமாக ஓடி விட்டிருக்கின்றன. 41வது வயதில் அடி எடுத்து வைக்கிறேன்.

இது வரை சாதித்தது என்ன, பெற்றது என்ன, கற்றது என்ன? இனிமேல் எப்படி வாழ வேண்டும்? அப்படி பெரிய தத்துவ விசாரங்கள் எல்லாம் இல்லாமல், நேற்றைய நிகழ்வுகளை பதிவு செய்யலாம்.

காலையில் நாட்குறிப்பு எழுதிய பிறகு பல் தேய்த்து விட்டு எழுத முயற்சித்தேன்.

காலை உணவுக்கு உப்புமா செய்தேன். ரவையை முந்தைய நாளே வெயிலில் காய வைத்து வண்டுகளை இல்லாமல் செய்திருந்தேன். வண்டுகள் செத்துக் கிடந்தனவா, அல்லது ஓடி விட்டனவா என்று தெரியவில்லை. ஒரு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டே சட்டியில் ரவையை வறுக்கப் போட்டேன். வறுத்து தாளில் கொட்டி விட்டு எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்து வெங்காயத்தையும் சேர்த்து வதக்கினேன். வதங்கிய பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தேன். உப்பும் சேர்த்து விட்டேன். கொதித்த பிறகு ரவையைச் சேர்த்துக் கிண்டி இறக்கினேன்.

இணையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பற்றி சந்தோஷூடன் விவாதம். சுற்றிச் சுற்றி விவாதம் போவதாகத் தோன்றியது. அவருக்குச் சொல்ல வேண்டியவை:

1. சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லோரும் வழிப்பறிக் கொள்ளை செய்கிறார்கள் என்று கடைசிப் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறீர்கள். இதைத்தான், மேட்டுக்குடி மக்களின் திமிரான பேச்சு என்று குறிப்பிட்டேன். மெசையா என்பதற்காக சொல்லவில்லை. தனக்குப் புரியாத, தன்னை விட பொருளாதார ரீதியாக கீழ் நிலையில் இருப்பவர்களை அயோக்கியர்கள் என்று ஒட்டு மொத்தமாக முத்திரை குத்துவதைப் பற்றிச் சுட்டிக் காட்டினால், நான் மெசையாவாக உங்களுக்குத் தெரிந்தால் மிக்க மகிழ்ச்சி.

2. இரண்டாவதாக, வழிப்பறிக் கொள்ளை என்று சொல்வதை கடுமையா கண்டிக்கிறேன். அவர்கள் கேட்கும் கட்டணம் ('புடுங்குவது' இல்லை), உங்களுக்கு அதிமாக தோன்றுகிறது. மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாகத் தோன்றுகிறது. உங்கள் தேவையைப் பயன்படுத்தி சம்பாதிக்க முயல்வதாகத் தோன்றுகிறது. அதை வழிப்பறி என்று சொன்னால், நானும் ஒரு உதாரணம் சொல்கிறேன். (இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, ஒப்பீட்டுக்காக மட்டும் சொல்கிறேன்).
========
'காலையில எழுந்து டீக்கா டிரெஸ் போட்டுக்கிட்டு வாராம். 8 மணி நேரம் 10 மணி நேரம் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் தட்டுறான். இதே போல ஜாவா புரோகிராமிங் செய்யும் ஆளுக்கு திருநெல்வேலில மாதச் சம்பளம் 7000 ரூபாய்தான். இவன் மட்டும் ஏதோ பெரிசா புடுங்கி விட்டது போல மாசச் சம்பளம் 60,000 ரூபாய் வாங்குவதோடு மட்டுமில்லாமல் அடுத்த வருஷத்தில் 20% hikeம் கேட்கிறான். பகல் கொள்ளையாக அல்லவா இருக்கு.

திருநெல்வேலியில் எல்லாம் கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் பட்டினி கிடந்தா சாகிறார்கள். இவனுங்களுக்கு மட்டும் ஏன் இந்த திமிரு'

இப்படி ஐடி துறையில் வேலை கொடுக்கும் முதலாளிகள் நினைத்தால் என்ன சொல்வீர்கள்?

அவர்களுக்கு புரோகிராமர்களை வைத்து வேலை வாங்குவதால் லாபம் கிடைக்கிறது, அதனால் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் காரணம் சொல்கிறீர்கள். அவசரமாக காலையில் அலுவலகத்துக்குப் போவதன் மூலம் ஐடி ஊழியருக்கும் 3,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது, அதை வைத்து ஆட்டோ ஓட்டுனருக்கு 300 ரூபாய் கொடுக்க ஏன் கசக்கிறது.

அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டிய கடிதம் எழுதித் தரச் சொன்னார். கணினியில் தட்டச்சு செய்து முடித்தேன். கீழே போய் வீட்டு உரிமையாளரிடமும் காட்டிக் கருத்துக் கேட்டேன். எதிர் வீட்டைக் கழுவி சுத்தம் செய்ததற்கு இந்த அம்மா 300 ரூபாய் கேட்டதற்கு பதிலாக அவர் இப்படி ஒரு பிட்டைப் போட்டிருக்கலாம் அதை நான் கெடுத்து விட்டேன் என்று பின்னால் தோன்றியது. அதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது. அரசுத் துறையில் பணி புரியும் அனுபவத்தில் அவர் நல்ல மாற்றங்களைச் சொன்னார். அதையும் செய்து விட்டேன்.

11 மணி வாக்கில் அதையும், நகல் எடுத்து வைத்திருந்து புத்தகப் பக்கங்களையும் பொருள் வாங்க பையும் எடுத்துக் கொண்டு வெளியில் போனேன். நெட்ஜோன் இணைய மையத்தில் போய் அச்செடுத்துக் கொண்டேன்.  திரையில் பார்ப்பதற்கு சொதப்பலாகத் தெரிந்தாலும் அச்சில் நனகு கொட்டை கொட்டையாக வந்தது. இன்னொரு கடிதத்தையும் நகல் எடுத்துக் கொண்டேன். மொத்தம் 5 ரூபாய். அங்கேயே அச்சகம் எங்காவது இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டேன். ஓடைப் பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் போகும் ஸ்டேட் பேங்க் காம்ப்க்ளெக்ஸ் இருக்கும் ரோட்டில் என்று தகவல் சொன்னார்.

நடந்து வந்து அந்த ரோட்டில் பார்த்துக் கொண்டே வந்தால், ஸ்டூடண்ட் ஜெராக்ஸ் என்று இருந்தது, அதைத் தாண்டி ஒரு அச்சுக் கூடம். இது போன்று சென்டர் பின் போட்டுத் தர முடியுமா என்று கேட்டால் முடியாது என்று சொல்லி விட்டார்கள். சாலையைக் கடந்து எதிர்புறத்து பத்திரிகைக் கடையில் ஜூனியர் விகடன் வாங்கினேன். 1.50 காசு சில்லறை இல்லை. அதனால் டெக்கான் குரோனிக்கிள் வாங்க முடியவில்லை. டீ குடிக்கும் மனநிலையும் இல்லை. அப்படியே திரும்பி நடந்து கோபாலபுரம் முனையில் இருக்கும் கடையில் உருளைக் கிழங்கு வாங்கினேன். தயிர் இல்லை.

வீட்டுக்கு வந்து பார்த்தால் வந்தார். கடிதத்தில் கைநாட்டு வைத்து விட்டு வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டும். கைநாட்டு வைக்க இங்க் பேட், அதில் ஊற்ற இங்க் என்று தேடிப் பார்த்தேன். கிடைத்தன. அதைத் தொடர்ந்து சமையல். குக்கரில், உருளைக்கிழங்குகள், அரிசி வைத்து விட்டு, வெங்காயமும் தக்காளியும் வெட்டி வைத்தேன். இடையிடையே எழுத்து வேலை தொடர்ந்தது. இணையம் இணைவதும் வெட்டுவதுமாக தலைவலி கொடுத்தது. சீக்கிரமாக பிஎஸ்என்எல்லை பாராட்டி விட்டோமோ?

துணி தேய்க்க வேண்டிய விபரத்தைப் பார்த்தால் தேய்த்த சட்டைகள் இரண்டு, பேன்டு ஒன்று இருந்தன. அதனால் தேய்ப்பதற்கு காத்திருக்காமல் புறப்பட்டு விடலாம். தொலைபேசி கோட் அனுப்புவது பற்றிக் கேட்டான். அந்த விபரத்தைப் பார்த்துச் சொல்லி விட்டு, மாலையில் அவனிடம் பணம் வேண்டுமானால் கொடுத்து விடலாம் என்றும் போட்டு வைத்தேன்.

அழைத்தால் பிசி என்றே வந்தது. அவரே திரும்ப அழைத்தார். 9 மணி வாக்கில் வந்து சேருவதாகவும் கையில் சாவி இல்லை, அவர் அதற்குள் அறைக்கு வந்து விடுவாரா என்றும் கேட்டுக் கொண்டேன். கிண்டி ஐஐடி போவதாகவும், அதற்குள் திரும்பி வந்து விடுவேன் என்றும் சொன்னார். பையில் துணி, குடைகள்,  தண்ணீர் பாட்டில், மடிக்கணினி பையில் கோப்பு தாள்கள் என்று எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். வேலூரில் குளிர் வெகுவாக குறைந்து போயிருக்கிறது.

வழியில் அப்பா அம்மாவுக்குத் தொலைபேசி பேசினேன். கேஸ் வந்த கதை, குளிர் கதை, பேசிய கதை என்று  போனது. சாலைக்குப் போய் பகிர்வூர்தி நிறுத்தவே பேச்சையும் வெட்டி விட்டு ஏறினேன்.

புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாகவே பாலத்தில் போகும் போதே ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி விட்டேன், இறங்கும் விபரத்தை. 10 ரூபாய் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்கவே இல்லை. நாளிதழ் கடையில் 2 ரூபாய் கொடுத்து டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக்  கொண்டேன். 50 காசுக்கு ஹால்ஸ் கொடுத்தார்.

சென்னை பேருந்துகள் நிற்குமிடத்தில் குளிர்சாதன பேருந்து, அதற்கு அப்பால் 102B விரைவு வண்டி நகர ஆரம்பித்திருந்தது. நடத்துனரைப் பார்த்து விட்டு ஓடிப் போக ஆரம்பித்தேன். விசில் அடித்து நிறுத்தினார். இருக்கைகள் காலியாக இருந்தன. மூவர் இருக்கை ஒன்றில் உட்கார்ந்து கொண்டேன். அதன் உள்ளே பேருந்தில் சக்கரம் இருக்கும் பகுதி. யாரும் உட்காரவில்லை.

இடது புற இரண்டு பேர் இருக்கையில் ஒரு பெண், ஸ்டைலாக உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நேரம் பேப்பர் வாசிப்பு, அதற்கு பிறகு வெளியில் வெறிப்பு, அதற்குப் பிறகு தூக்கம் என்று போனது. இடது இருக்கை பெண் இரண்டாக மடிந்து முன் இருக்கையில் தலையை இடுக்கிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். சில பெண்களுக்குத்தான் இப்படி ரப்பர் போல வளையும் உடம்பு இருக்கிறது.

பூந்தமல்லி வரும் போது தூக்கம் முழுவதுமாக தெளிந்திருக்கவில்லை. எழுந்து பைகளை எடுத்துக் கொண்டு இறங்கினேன். பேருந்து நிலையத்திலிருந்து 49A ஒன்று போனது. பின்னாலேயே 25G வெட்டு சேவை வந்தது. வடபழனி வரை. ஐஸ்ஹவுஸ் போகிறவர்கள் இதில் ஏறி சண்டை போடுவது வழக்கமானது. நடத்துனர் சலித்துப் போய் விட்டார். பின்னாலேயே ஒரு முழு சேவை 25Gயும் வந்து கொண்டிருந்தது. இதில் ஏறி வடபழனியில் இறங்கி அதில் ஏறுபவர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கட்டணம் ஆகி விடும்.

இடது புற இருக்கையில் ஒரு ஏழெட்டு வயது பெண் உட்கார்ந்திருந்தாள். பட்டுப் பாவாடை, பட்டுச் சட்டை. இருக்கை நுனியில் உட்கார்ந்தாள். ஒரு சர்ச்சைக் கடக்கும் போது அருகில் இருந்த அம்மா சிலுவை இட்டுக் கொண்டதும் இந்தப் பெண்ணும் இட்டுக் கொண்டு சுற்றுமுற்றும்  பார்த்தாள். நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்ததும் வெட்கச் சிரிப்பு. அதன் பிறகு நன்கு தள்ளி சாய்ந்து உட்காருமாறு சைகை காட்டினேன். முதலில் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் ஓரிரு நிமிடங்களில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

கேசவர்த்தினியில் இறங்கி ஹாட்சிப்சுக்குப் போனேன். தின்பண்டங்கள், இனிப்புகள் வைத்திருக்கும் பெட்டிக்கு அருகில் இருந்த இருக்கையில் பைகளை வைத்து விட்டு பில் போடப் போனேன். 4 இட்லி, 1 பால். முன்னதாக பில் போட்டுக் கொண்டிருந்தவரும் பெண்ணும் நான் பை வைத்திருந்த இருக்கைக்கு அருகில் போய் நின்றார்கள். பொதிக்கு காத்திருக்கிறார்கள், அந்தப் பெண் மேசையின் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார். நான் இட்லி வாங்கிக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் வாசலுக்கு நேராக இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். எதிரில் இன்னொரு நடுத்தர வயதினர்.

மீசையில் நரைத்த முடிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. ஆனால் மனதளவில் இன்னமும் வயதாகவில்லை. நடுத்தர வயது பெண்களைப் பார்த்தால் அம்மா போல தோன்றுகிறது, ஆண்களைப் பார்த்தால் மரியாதை பயம் ஏற்படுகிறது.

சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தேன். பக்கத்துச் சந்துக்குள் போய் கணினியை இயக்கி இணையம் இணைத்துப் பார்த்தேன்.

நடந்து வரும் வழியில் ஒரு அச்சகத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. அவரிடமும் பின் போடக் கேட்டேன். வசதி இல்லையாம். அப்படியே நடந்து மளிகைக் கடையில் மெடிமிக்ஸ் வாங்கிக்  கொண்டு புதிய வீட்டுக்கு வந்தேன். முதல் முறை வீட்டைத் தவற விட்டு தெருவின் மறுமுனை திருவள்ளுவர் சாலை வரை போய் விட்டேன். திரும்பி வந்து சேர்ந்தேன். மேலே பார்த்தால் பூட்டியிருந்தது. கீழே வீட்டுக்கார  அம்மா தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவு தாழிடாமல் இருக்க தொலைக்காட்சி ஓடிக் கொண்டு இருக்க நல்ல உறக்கம். இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தும் சத்தம் இல்லை.

தொலைபேசினால் அப்போதுதான் புறப்படுகிறாராம். புறப்பட்டு வந்து விடுவதாகச் சொன்னார்.  1 மணி நேரமாவது ஆகும். மேலே போய் எதிர் அறைகளுக்கு வெளியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். கணினியை இயக்கி இணையம் முயற்சித்தேன். வேலை செய்யவில்லை. கட்டுரைகளை முடித்து வடிவம் கொடுத்தேன். முதல் வீட்டு அம்மா தூங்கப் போய் விட்டார்கள். இரண்டாவது வீடு பூட்டியிருந்தது. சிறிது நேரத்தில் அந்த அம்மாவும் வந்தார்கள். குழாயில் முகம் கழுவி விட்டு சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் ஏதோ கடவுள் பாடல் சொல்லிக் கொண்டிருந்தார். என்னை விசாரித்து விட்டுத் தூங்கப்போனார். கணினியில் மின்னூட்டம் தீரவும் வரவும் சரியாக இருந்தது.

அறைக்குள் போய் பொருட்களை எடுத்து ஒதுங்க வைத்து, தூத்து வாரினேன். அவருடன் ஒரு நண்பர் வந்திருந்தார். விட வந்திருக்கிறாராம். கோடம்பாக்கத்துக்கு தனியாக போக பயப்படுவாராம். இவரும் போகிறார். அன்றைக்கு கூட்டத்தில் கேள்விகள் நிறைய கேட்டவர்தான். பள்ளி வகுப்பு போல இருந்ததாக ஒரு நக்கல் விட்டார்.

தனது வேலை முயற்சிகளைப் பற்றிச் சொன்னார். போர்ட்டிரஸ்டில் கூப்பிட்டிருக்காங்க, அய்யப்பன் தாங்கலுக்குப் போகணும் என்றெல்லாம் சொன்னார். அதையும் கூட வந்தவர் நக்கல் அடித்தார்.

இணையம் நன்றாகவே இணைந்தது. புறப்பட்டுப் போன பிறகு உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தேன். கொசுக்கள் படையாக சுற்றிக் கொண்டிருந்தன. மின்விசிறியும் கிடையாது. போர்த்திக் கொண்டும் தூங்க முடியாது. தூக்கம் அம்போதான் ஆகும்.

11.30க்கு மேல் வெளியில் போய்ப் பார்த்தால் கடை திறந்திருந்தது. 75 ரூபாய்க்கு குட்நைட் அட்வான்ஸ்ட் வாங்கிக் கொண்டு வந்து மாட்டினே. அதுதான் கொசுக்களை விரட்டி அடித்து தூங்க விட்டது. இது போல கொசுவர்த்தி அல்லது மின்விசிறி யார் தருவார்கள்?

0 கருத்துரைகள்: