இன்று எழுதுவதில் மூன்றாவது நாள். நேற்று எழுதியதை இணையத்தில் பதிவிடவில்லை. நேற்று இரவிலிருந்து தண்ணீர் வரவில்லை என்பதால் பதற்றமும் சோர்வும் இருந்தது. இரவில் தூக்கம் கூட சரியாக இருக்கவில்லை. 4 மணிக்கு எழுந்திருக்கவில்லை. 5 மணிக்குக் கூட எழுந்திருக்காமல் தூங்க முயன்று கொண்டிருந்தேன்.
அதன்பிறகு எழுந்து, பலாப்பழச் சுளைகளையும் லெமன் டீயையும் சாப்பிட்டு விட்டு நடைப் பயிற்சி போய்விட்டு வந்து விட்டேன். சரியாக, 6 மணிக்கு இயற்கையின் இயக்கவியல் வாசிப்பு. எதிர் மரத்தின் கீழ் குடியிருக்கும் அண்ணாச்சி கொடுத்த ஒரு வாளி தண்ணீரை வைத்து காலைக் கடன்களை முடித்து விட்டேன். குழாயில் எப்போது தண்ணீர் வரும் தெரியவில்லை. நடைப் பயிற்சி போவதற்கு முன்னர் மோட்டர் போட்டு தண்ணீர் வருகிறதா என்றும் சோதித்துப் பார்த்து விட்டேன், வரவில்லை.
வாசிப்பிற்கு அனைவரும் உடனேயே வந்து விட்டார்கள். மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் என்ற கட்டுரை. உழைப்பு பேச்சுக்கும் சமூக உறவுகளின் வளர்ச்சிக்கும் இட்டுச் சென்றதைப் படித்திருந்தோம். இன்று வாசித்ததில் மூளையின் வளர்ச்சியைப் பற்றிப் படித்தோம். மனித மூளையின் பொதுமைபடுத்தும் திறனும் முடிவெடுக்கும் திறனும் வளர்ந்தது உழைப்பு, பேச்சு இரண்டின் தாக்கத்தினால், இவை இரண்டும் வளர்ந்ததன் தாக்கம் உழைப்பு, பேச்சு இரண்டின் மீதும் இருந்தது என்றும் பார்த்தோம். அதை நான் வலியுறுத்தினேன். அதுதான் முதல் பத்தி. அதற்குள் யாரும் வர மாட்டேன் என்கிறார்கள். மனித மூளையின் பாத்திரத்தை சூக்குமப்படுத்தும் ஆய்வுமுறை என்று மார்க்ஸ் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கு மிகப்பெரியத் தடை இருக்கிறது.
அறிவின் பணி என்று முத்துமோகன் சொல்வதும் இதுதான். மார்க்ஸ் அறிவியக்கத்தின் பொருள், ஆனால் அதனை செயலுடன் இணைக்கிறார். ஃபயர்பாக் பற்றிய ஆய்வுரைகளைக் குறித்து முத்துமோகன் விரிவாக எழுதியிருக்கிறார். மனிதச் செயல்பாடு புறநிலையை மாற்றியமைப்பது குறித்தவைதான் அந்த ஆய்வுரைகள் என்கிறார். அதற்குள் மனிதர்கள் வர மாட்டேன் என்கிறார்கள்.
என்னுடைய வாழ்க்கையின் கட்டங்களை வகுத்துக் கொண்டேன். அதை எழுதியும் விட்டேன். குடும்ப, சாதி வட்டத்தை உடைத்தல் - டாடா, திருமண வட்டத்தை உடைத்தல் - வலைப் பதிவர்கள், தோல் துறை என்று விரிவடைதல் - அதனை உடைத்து மா.அ.கவில் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் - அதிலிருந்து உடைத்து மூலதனம் வாசிப்புக் குழுக்கள், இளம் கம்யூனிஸ்ட் கழகம், என்.சி.பி.எச்சில் மார்க்சிய, அம்பேத்கரிய நூல்கள் என்று பரந்து விரிதல் என்ற கட்டத்தில் நிற்கிறேன். மூலதனம் வாசிப்புக் குழுக்கள் என்ற கட்டிலிருந்து உடைத்துக் கொண்டு விட்டேன். உடைக்க வேண்டும். இப்போதே தனியாக உணர்கிறேன். தனியாகத்தான் இருப்பேன் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.
வாசிப்பில், மனித வளர்ச்சியில் இறைச்சி உணவின் பாத்திரம் பற்றிய நீண்ட வாசிக்க விளக்கினார். அதில் வந்து அடித்து நகர்த்தத் தொடங்கினார். இந்தக் கட்டுரைகளில் எங்கெல்ஸ் பொதுவான கருத்துகளைப் பதிவு செய்கிறார். அவற்றுக்கான ஆதாரத்தையும் குறிப்புகளையோ தரவில்லை. அவர் பதிவு செய்த கருத்துகள் பிற்கால ஆதாரங்களின் ஒளியில் தவறு என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நமக்கோ எங்கெல்ஸ் எழுதினால் சரியாகத்தான் இருக்க வேண்டும்.
7 மணிக்குக் கீழே போய் குழாயைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வேகமாக விசையுடன் வருகிறது. குடத்தை வைத்தால், சரித்துதான் வைக்க வேண்டும். மஞ்சள் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்து வந்தேன். பபிள் டாப் பாட்டில்களையும் எடுத்துக் கொண்டு போனேன். அவற்றையும் நிரப்பினேன். குடத்தில் கொண்டு வந்து, குளியலறை வாளி, துவைக்கும் இடத்து வாளி, அழுக்குத் துணி போடும் டப் இவற்றை நிரப்பிக் கொண்டேன். குடிநீர் வைத்திருந்த குடத்திலிருந்து குடிநீரை இடமாற்றி விட்டு அதிலும் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தேன். மொத்தம் 8 குடம். எட்டு முறை ஏறி இறங்கினேன்.
மிகவும் களைப்பாகத்தான் இருந்தது. பாத்திரங்கள் கழுவப்படவில்லை. ஓட்ஸ்+சத்துமாவு+உப்பு+முந்திரி காய்ச்சி வைத்திருந்ததை குடித்து முடித்தேன். அவரிடம் மோட்டர் சிக்கலையும் தண்ணீர் எடுத்து வந்ததையும் சொன்னேன். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய புதிய சிந்தனைத் தெறிப்பையும் பகிர்ந்து கொண்டேன். அவருக்கு ஏதோ அதிசய விலங்கைப் பார்ப்பது போல இருந்திருக்கும். எனது தன்னம்பிக்கை மட்டும் குறைவதே இல்லை. உள்ளுக்குள் நொறுங்கிக் கிடந்தாலும், கிடைத்தவரை தன்னம்பிக்கையோடுதான் பேசுவேன்.
முற்றிலும் நொறுங்கியது மூன்று முறை. பிரிந்து குழந்தைகளிடமிருந்து விலகி இருந்த 2006 கால கட்டம். பி.எஸ்.ஜி உடைந்து தனியாக இருந்த சென்னை - காட்பாடி கட்டங்கள் - 2010-11 ஆண்டுகள். இதன் பிறகு மா.க.விலிருந்து உடைந்து தனியாக இருந்த 2019-2020 காலங்கள். இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று உடைந்தன. புதிதாக விரிந்த தளத்தில் தொடர முடிந்தது.
2024 வரை கோட்பாட்டு உறுதி நொறுங்கிப்போயிருந்தது. இந்திய சமூகம் பற்றிய கருத்தில் உறுதியற்ற நிலை. அம்பேத்கரைப் படித்ததும் இளம் கம்யூனிஸ்ட் கழக உரையாடல் அமர்வுகள் நடத்தியதும் மொழிபெயர்ப்பு/தொகுப்புப் பணிகளும் கோட்பாட்டு உறுதி என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டன. இப்போது தன்னம்பிக்கை கொடிகட்டிப் பறக்கிறது.
அதுவும் குறிப்பாக, என்னுடைய இடத்தைக் காட்டி விட்ட பிறகு அது தொடர்பான குற்றவுணர்வும் பலவீனமும் கூட இல்லாமல் போய் விட்டது. கடந்த காலத்தில் அப்படி நடந்தது. இன்றைக்கு நான் அதற்குப் பொறுப்பில்லை, அல்லது பொறுப்பு இருந்த அளவில் பேசி என்னுடைய உணர்ச்சிகளைக் காட்டி விட்டேன். அதைப் பெற்றுக் கொள்ளவோ எதிர்வினை ஆற்றவோ தயாராக இல்லை. என்றால், அதை அப்படியே விட்டுவிடுவதுதான்சரி.
எனவே, தனியாள் அடுத்த விரிந்த தளத்துக்குள் சிறகடித்துப் பறக்க வேண்டும். உலக அளவில் இளைஞர்கள் போராட்டம் என்ற எனது கருத்தை இன்றைக்குத் திருமாவளவன் உரையாடலில் பேசுகிறார். அதை சண்முகமோ வீரபாண்டியனோ பேசியிருக்க வேண்டும். அவர்கள் கியூபாவிலும் ஈரானிலும் நிற்கிறார்கள். ஒன்று, திருமாவளவன் வீடியோவைப் பார்த்திருக்க வேண்டும் அல்லது அந்தக் கருத்து பரவி அவரைச் சென்று சேர்ந்திருக்க வேண்டும் அல்லது வேறு யாரோ தற்சார்பாக முன்வைத்திருத்ததை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவரே இந்த நோக்குநிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
கூழைக் குடித்து விட்டுப் படுத்து விட்டேன். 8 மணிக்குப் படுத்து 8.30 வரை தூங்கினேன். 8.30க்குச் சமைக்கத் தொடங்கினேன். பிரெட் டோஸ்ட், முட்டை தக்காளி ஆம்லெட், காலிஃபிளவர்+உருளை கூட்டு என்று செய்தேன். காலிஃபிளவர் கூட்டு இரண்டாவது முறை வேக வைக்க வேண்டியிருந்தது. 9.40க்குத்தான் வீட்டிலிருந்தே கிளம்பினேன். 9.50க்கு அலுவலகம் போய்ச் சேர்ந்து விட்டேன். ஜனசக்தியை கொடுத்தார், மதியவாக்கில் தீக்கதிர் இதழை கொண்டு கொடுத்தார்.
இருக்கைக்கு வந்த போது ஜனசக்தியைப் புரட்டி முடித்தேன். மின்னஞ்சல்கள் இணைய வழிக் கடை ஆர்டர்களை பார்த்துக் கொண்டேன். அதன்பிறகு தொகுதி 99, 100 இரண்டையும் தொடர்ந்தேன். 99 இல் அம்பேத்கருக்கு பாராட்டுச் சான்றிதழ் அளித்ததும் அதைத் தொடர்ந்த அவரது உரையும் இருந்தன. அதில்தான் அம்பேத்கர் பெண்களைப் பற்றி மிக மோசமாகப் பேசியிருந்தார். அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முந்தைய கூட்டம்.
தொகுதி 100 இல் பௌத்தம் பற்றி, இந்து மதத்தின் மீதான விமர்சனம், சமயம் தழுவல் அறிவிப்பு, அதற்கான பரப்புரை என்று போனது. காட்மாண்டு, கொழும்பு பௌத்த மாநாடுகளில் கலந்து கொள்கிறார். பௌத்த பரப்புரையில்தான் வாழ்வைக் கழிக்கிறேன் என்றார். தொகுதி 57 திருத்தங்களை அனுப்பச் சொன்னார். அவருக்கு அனுப்பி விட்டு அனைத்துத் திருத்தக் கோப்புகளையும் டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டேன். ஃபோனில் அழிந்து போனால் வம்பு.
10 தொகுதிகளையும் முடித்த பிறகு நான் தொடங்க வேண்டும். ஒரு வாரம் ஒதுக்கலாம். கட்டுரைகளையும் முடித்து விட்டார் என்றால் அனுப்பி இறுதி செய்து அச்சு வடிவத்தைத் தரச் சொல்ல வேண்டும். ரோமன் பக்க உள்ளடக்கத்தைத் திருத்த வேண்டும்.
கண் சுற்றியது, மூத்த ஓட்டுநர் ஓய்வுபெறுகிறாராம். சம்பளம் போதவில்லை, கூட்டிக் கொடுத்தால் தொடர்வேன் என்கிறார். சாக்லேட் கொடுத்தார் அதைச் சாப்பிட்டதும் கண்ணைக் கட்டியது. காஃபி குடிக்கப் போன இடத்தில் என்னுடைய தன்வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி விட்டேன். காலையில் எண்ணிப் பார்த்த சட்டகத்தில் சொல்லி விட்டேன். அதன் பிறகு தொகுதி 100 தொகுப்பு தொடர்ந்தது. தூக்கக் கலக்கமாகத்தான் இருந்தது. இந்த விடால்பிரைட், வைட்டமின் சாப்பிட்ட இரவுகளில் நல்ல தூக்கம் வருகிறது. மாற்று இரவில் வருவதில்லை. அதையும் மருத்துவரிடன் அடுத்த முறை சொல்ல வேண்டும். அடுத்த முறை என்பது ஜூலை மாதம் 24 ஆம் நாள் வரும். அதை அடுத்து அக்டோபர் மாதம். அத்தோடு இந்த மருத்துவத்தை நிறுத்திக் கொள்ளலாம்.
12.15க்கே ஆம்லெட் ஒரு பகுதியை உள்ளே தள்ளினேன். 12.45க்குப் போய் அருகில் தூக்கத்தைப் போட்டேன். சாப்பிடும் போது ஈரான் ஒப்பந்தம் பற்றிய விவரங்களைப் படித்தேன். 1.30க்கு தொகுப்புப் பணியைத் தொடங்கி விட்டேன். 2.30 வாக்கில் மீட்டிங் இன்வைட் போட்டு விட்டு தொடர்ந்தேன். 3.15க்கு தேநீர், அப்போதும் பேச்சு கொடுத்தேன். அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்று தோன்றுகிறது. கேட்கவில்லை. 4.45, 4.50 வரை தொகுப்புப் பணியைத் தொடர்ந்தேன்.
காலையில் காஃபி நேரத்தின் போது மாற்றுக் களம் பகத்சிங் வந்திருப்பதாக குமார் அழைத்துச்சென்றார். அவரிடம் அறிஞர் பார்வையில் சிங்காரவேலர் புத்தகத்தை மீண்டும் படித்ததாகச் சொன்னேன். அவர்கள் புத்தகக் கடை திறக்கப் போகிறார்களாம். திரு.வி.க நகரில்தானாம். மூலதனம் வாசிப்பு, செங்கல்பட்டு சிவகுமார் என்று பல செய்திகளைப் பேசினோம். மூலதனம் வாசிப்பில் நாம் ஒரு அரைக் கோளத்தில்தான் முழுமை பெறுவோம், முழுக் கோளமும் நிறைவடைய அம்பேத்கரை வாசிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் சி.பி.எம் பொறுப்பில் இருக்கிறாராம். புதுச்சேரியில் ஆய்வு நிறுவனத்தில் வேலை செய்கிறாராம். துறைசார் வல்லுநர்கள் கட்சிக்குத் தேவை என்று சொன்னேன்.
தருமபுரி ராஜனுக்கு அழைத்து புத்தகம் அச்சிடுவது பற்றிக் கேட்டேன். அவர் அழைத்தால் பேசுகிறார். இன்றைக்குத் திரும்பி அவர் அழைத்தபோதும் சுருக்கமாகப் பேசி விட்டு வைத்து விட்டார். வெளியில் எங்கோ இருக்கிறார் போலிருக்கிறது.
காலையில் வேலை நிலைமையை விசாரித்துச் சென்றார். வேண்டுமென்றால் அழைத்து கேட்கட்டும். என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசுவதற்குக் கூட அவருக்கு மனமில்லை, சம்பளம் கொடுக்கிறார்கள் வேலை செய்கிறோம் அதற்கு மேல் எதிர்பார்க்கக் கூடாது, எதிர்பார்க்கப் போவதில்லை என்று முடிவுசெய்த பிறகு ஏன் ஊசலாட்டம்.
முதலமைச்சர், அமைச்சர் அணிந்துரைகளை மாற்ற வேண்டுமா என்று பேசுவார்களாம். தாளம் போடும் அதிகாரிகள் உலகம் இப்படித்தான் இருக்கும்.
கூட்டம் முடித்து வந்து வேலையைத் தொடங்கினால் காலையில் பாரதிராஜா திரைப்படங்கள் பற்றிப் பேசியிருந்தோம். சிவாஜி பற்றி சொல்லியிருந்தார். சங்கரின் ஜென்டில்மேன், சங்கர் தயாரித்த காதல் திரைப்படங்களைப் பற்றி விமர்சித்தார். அம்பேத்கரின் தேர்தல் மனுவைப் பற்றிச் சொன்னேன்.
இமயவரம்பன் புத்தகம் பற்றிக் குறிப்பிட்டேன். தொலைபேசியில் ஈரான்-அமெரிக்கா கருத்துக் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். வெளியே வந்து மீண்டும் வேலையைத் தொடங்கினேன். 6 மணிக்குப் புறப்பட்டு விட்டேன்.
நாற்சந்திக்கு அந்தப் பக்கம் தோண்டத் தொடங்கி விட்டார்கள். வெள்ளாளர் தெரு ஒருவழிப் பாதை ஆகி விட்டது. வாகன ஓட்டத்தை சமாளிக்கப் பொருத்தமான வழியைக் கண்டு கொண்டு விட்டிருக்கிறார்கள். பெஸ்ட் கடையில் 4 எலுமிச்சம் பழங்கள் 25 ரூபாய், விலை பற்றிச் சொன்னதும் அவரது முகம் மாறி விட்டது. பழங்கள் பெரிதாகத்தான் இருந்தன.
நெல்லை ஸ்டோர்ஸ்-இல் பிரெட், எண்ணெய், மெடிமிக்ஸ், 300 ரூபாய்க்கு மேல் போய் விட்டது. காய்கறிக் கடையில் கால் கிலோ கத்தரிக்காய் 25 ரூபாய். சுமை ஏறியிருந்தது. சுமந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். துணி தேய்க்கும் அம்மா காலையில் குட்டை கவுன் போட்டுக் கொண்டு வீட்டுக் போய்க் கொண்டிருந்தார். அழகாக இருந்தார். மாலையில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
வீட்டுக்கு வந்து வேலைகளைத் தொடங்கினேன். துணிகளை ஊற வைத்தேன். பாத்திரங்களை ஒதுக்கிப் போட்டேன். திருமாவளவன் - மு வீரபாண்டியன் - சண்முகம் - ஐயுஎம்எல் தலைவர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் நிகழ்ச்சியை ஓட விட்டுக் கொண்டேன். வீட்டுத் தூத்து வாரினேன். பாத்திரங்களை தேய்த்து முடித்தேன். தோசை மாவு வாங்கப் போனால் அரை கிலோ பொதி இல்லை. 1 கிலோதான் இருந்தது என்று அனுப்பி வைத்து விட்டார்கள். கோதுமை மாவைக் கரைத்துக் கொண்டேன். காலையில் செய்த ஆலுகோபி கறியை வைத்து மூன்று தோசைகள் சாப்பிட்டேன்.
உரையாடல் நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. கேள்விக் கணைகளும் விரிவான விடைகளும் திருமாவளவனை நோக்கியும் அவரிடமிருந்தும்தான். அவரது செயலுத்திகளும் அரசியல் கொள்கைகளும் நிலைபாடுகளும் மிக மிக நுண்ணியனவாக இருக்கின்றன. எங்கும் அவர் திகைத்து நின்றுவிடவில்லை. ஒவ்வொன்றையும் பற்றி தெளிவாக வெளிப்படையாக விளக்கினார். அதை விடுத்து வேறு ஆயுதம் அவரிடம் இருக்கவில்லை.
அவரே சொன்னது போல வி.சி.க, திருமாவளவன் இவர்களை டிஸ்கிரெடிட் செய்வது ஒரு சாதிய உளவியல். மிகவும் முற்போக்கான அறிவுஜீவிகள் கூட இதிலிருந்து தப்ப முடிவதில்லை. பிரியனை நேரடியாகக் குற்றம் சாட்டினார், திருமா. மு.வீ அம்பேத்கரையும் அரசமைப்புச் சட்டத்தையும் தாங்கிப் பேசினார். அவரால் உறுதியாகப் பேச முடியாமல் தடுப்பது அவரது கட்சியின் பொருளாதார வாதம்தான். சுருக்கமாகச் சொன்னால் சந்தானம்தான். திருமாவின் முன்பு இவர்கள் இருவரும் பள்ளிக் கூட மாணவர்களாகத் தோற்றமளிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அதைக் கேட்டு முடித்த பிறகுதான் இந்த எழுத்து. இதை முடித்த பிறகு மார்க்சின் குருண்ட்ரிசவுடன் தூக்கம். காலையில் எழுந்ததும் முதல் வாசிப்பும் அதுதான். நடைப் பயிற்சி, காய் செய்தல், தோசை சுட்டுத் தின்றல், மதியத்துக்கு குஸ்கா கூட வாங்கிக் கொள்ளலாம். 6 மணிக்கு சூத்திரர்கள் யார் வாசிப்பு. மோட்டர் சரியானதா என்று கேட்டால் அது வீட்டுச் சொந்தக்காரரின் வேலை என்று சொல்ல வேண்டும். 7 மணிக்குத் தண்ணீர் எடுக்க வேண்டும். இரண்டு பபிள் பாட்டில்களும் நிரம்பியிருக்கின்றன. பச்சைக் குடத்தை காலி செய்து விட வேண்டும். குடி தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். மஞ்சள் குடம், பாத்ரூம் வாளி, துணி துவைக்குமிட வாளி, வெள்ளை டப் இவற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும். 5 அல்லது 6 கடம் வரும். பார்க்கலாம்.
கத்தரிக்காய் உருளைக் கிழங்கு பொரியல், சப்பாத்தி போட நேரமிருந்தால் அது. இல்லையென்றால் பிரெட் சாண்ட்விச். அலுவலகத்தில் தொகுதி 100 ஐ முடிக்க முயல வேண்டும். நாளை முடியவில்லை என்றால் வியாழக் கிழமை. வெள்ளி முதல் தொகுதி 90இல் வேலை செய்யத் தொடங்க வேண்டும். அதில் புகைப்படங்களைச் சேர்க்க வேண்டாம். ஒன்றிரண்டைச் சேர்க்கலாம். அவ்வளவுதான்.