என்னைப் பற்றி

செவ்வாய், மார்ச் 20, 2007

weird

துர்கா இணைத்து விட்டதைத் தொடர்ந்து எனது ஐந்து கிறுக்குக் குணங்கள்:

  1. புத்தகப் பைத்தியம்
    'நான் செத்துக் கிடந்தாலும் இவனுக்கு அழ நேரம் இருக்காது. அப்பவும் ஒரு பொத்தகத்தை வச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பான்' எங்க அம்மா மனம் வெறுத்துச் சொல்லுமளவுக்கு புத்தகங்களில் மூழ்கியிருப்பேன். படிப்பதில் மூழ்கிப் போய் புத்தகக் கையோடு சிரித்துக் கொண்டிருப்பது கூட நடக்கும். குறிப்பாக சாவியின் வாஷிங்டனில் திருமணம் படிக்கும் போது சிரித்து சிரித்து அருகில் இருப்பவர்களை நோகடித்திருக்கிறேன்.

  2. சட்டம் பேசுவது
    சின்ன வயதில் விளையாடத் திறமை போதாது. எங்கள் பகுதியின் அதிகாரப் பூர்வ ஸ்கோரர் என்று குட்டைச் சுவரில் உட்கார்ந்து கொண்டு சட்டமும் பேசிக் கொண்டிருப்பேன்.

    இப்போதும் சாலையில் போகும் போது, 'என்னது இது இவ்வளவு வேகமா போறான்' 'என்னது இது சிவப்பு விளக்கை மதிக்காமல் போறான்' 'என்னது இது பொது இடத்திலேயே துப்புறான்' என்று அன்னியன் அம்பி பாணியில் மனதுக்குள் புலம்புவதும், வெளிப்படையாக பேசுவதும் நடந்து வருகிறது.

  3. பிடிவாதம்
    கொண்டதை விடா என்ற மூர்க்கம் உண்டு. ஏதாவது ஒன்றை ஆரம்பித்து விட்டால், ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொண்டால் என்ன சோதனை வந்தாலும், என்ன துயரங்கள் வந்தாலும் விடாமல் ஒட்டிக் கொண்டிருப்பது. எல்லாக் கதவுகளும் மூடப்பட்டு, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டு, அல்லது இதற்கு மேல் தொடரவே முடியாது என்று ஆனால்தான் மாற்றத்தை ஏற்றுக் கொள்வது.

  4. உடை உடுத்தல்
    'எனக்கு மரியாதையா, எனது உடைக்கு மரியாதையா' என்று சோம்பேறித்தனத்துக்கு சமாதானம் செய்து கொண்டு நைந்த தேய்க்காத சட்டை, பழைய செருப்பு என்று கல்லூரி நாட்களில் கடுப்படித்திருக்கிறேன். வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு வேறு வழியில்லாமல் தேய்த்த உடைகளும், சரியான காலணிகளும் அணிய வேண்டியிருந்தது.

    இப்போதும் விடுமுறை நாட்களில், வேலைக்குத் தொடர்பில்லாத நேரங்களில் எளிய உடைகளில் போவதைப் பிடித்துக் கொள்வேன்.

  5. ஆர்வக் கோளாறு.
    ஏதாவது ஒன்றில் இறங்கி விட்டால் புது மாடு குளிப்பாட்டும் வகையில் அளவுக்கு அதிகமாக நேரம் செலவிடுவது. அதுதான் உலகிலேயே சிறந்த நடவடிக்கை என்று நம்பிக் கொண்டிருப்பது. சில மாதங்களில் சாமி மலையேறி ஒரு நிதானத்துக்கு வரும்.
நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்

10 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

அழைப்புக்கு நன்றி. ஏற்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

சொன்னா தப்பா நினைக்கக் கூடாது, உங்களுடைய இந்த எழுத்து பதிவே ஒரு வியர்டு விசயம் தான் :) அதாவது, மத்தவங்க அதிகம் செய்யாதது. :-D

உங்க வியர்டை எல்லாம் படிக்க எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது... ஏன்னா, நானும் ஓரளவுக்கு இந்த வித்தியாசமான செய்கைகள் எல்லாமே செய்திருக்கேன்.. இன்னிக்கும் காமெடி புத்தகங்களை வைத்துகிட்டு பக்கத்தில் இருப்பவருக்கு என்னவென்று சொல்லாமல் நானே விழுந்து விழுந்து சிரித்து வெறுப்பேத்துவது மிகவும் பிடித்த விசயம் :)

சட்டம் பேசுவது, கொஞ்ச நாள் முன்னால் வரைக்கும் செய்துகொண்டிருந்தேன்.. :-D, பாலபாரதி சில சமயம் 'சின்ன சிவகுமார்' என்று கிண்டல் செய்யும் அளவுக்கு :))))

பிடிவாதம், ஆர்வக் கோளாறு கூட எனக்கும் இதே ரேஞ்சில் உண்டு :) உடை உடுத்துவதிலும் கிட்டத் தட்ட என் ரேஞ்சுக்கு இருக்கீங்க சிவகுமார் (இது எப்படி இருக்கு? :))) பள்ளி நாட்களில் என்னிடம் இருந்தது அதிக பட்சம் மூன்று ஜோடி சீருடைகள்.. கல்லூரி நாட்களின் போது இரண்டு வாரத்துக்குத் தேவையான பதினைந்து சல்வாருக்கு மேல் எதுக்கு? என்பது எண்ணம்.. சுத்தம் மட்டும் உண்டு, அன்றன்றைக்குத் துவைத்து அயர்ன் செய்து ஆனால், பழைய, அதிகம் பளிச் நிறமில்லாத உடைகளாக போட்டுக் கொண்டு அலைவேன். ஒரு முறை டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பொருள் வாங்கப் போய் என்னை அங்கே வேலை செய்யும் பெண் என்று நினைத்து யாரோ "வெல்லம் எங்கே இருக்கு" என்று கேட்டது கூட நடந்தது :)

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

:-)

இதைத்தான் Geek குழந்தைப் பருவம் என்று அமெரிக்கர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். slashdot விவாதங்களில் இது போன்ற குணங்களை உயர்வாக பாராட்டிக் கொள்ளும் பலரைப் பார்க்கலாம். அதனால்தான் எனக்கு slashdot பிடித்திருக்கிறது :-)

அன்புடன்,

மா சிவகுமார்

யோசிப்பவர் சொன்னது…

கிறுக்கு குணங்கள் என்று படித்ததுமே, எனக்கும் புத்தகம் படிப்பது, உடை விஷயம், பிடிவாதம், ஆர்வக்கோளாறு இவைதான் ஞாபகம் வந்தது. இதையெல்லம் நீங்களே எழுதி விட்டீர்கள். இப்பொழுது நான் என்ன எழுதுவது என்று இன்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்!!!;)

எனக்கு வீட்டிலிருந்தால் சாப்பிடும்பொழுது கண்டிப்பாக ஏதாவது புத்தகம் கையிலிருந்தாக வேண்டும். எற்கெனவே பல தடவைகள் படித்ததாயிருந்தால்கூட பரவாயில்லை. அப்பொழுதுதான் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்!!! இப்பொழுது ஹோட்டல் சாப்பாட்டில் இது முடிய மாட்டேன்கிறது. அதனாலேயே உடல் இளைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்!!!;)

உடை விஷயத்தில், எப்பொழுதுமே மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ எந்தவித கட்டூப்படும் இருக்க கூடாது என்று நினைப்பேன். ஆனாலும் சில வேளைகளில் பணிய வேண்டியதாயிருக்கிறது.

இப்பொழுது புதிதாக ஐந்து கிறுக்குத்தனங்களை பற்றி யோசிக்க வேண்டுமா? முயற்சி செய்கிறேன்!!

தமிழ்நதி சொன்னது…

வாசிக்கும் புத்தகத்தோடு ஒன்றிப்போய் பக்கத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற புறக்கவனமே இல்லாத ஆள்தான் நானும். நட்சத்திர வாரத்தின் பின்னான ஓய்வு,வீட்டுத் தலையிடி இவற்றால் நிறையப் பதிவுகளை வாசிக்க முடியவில்லை. இந்த weird ஆரம்பமாகி நிறைய நாட்களாகிவிட்டது போலிருக்கிறதே!

கோபிநாத் சொன்னது…

உங்களின் வியரடு பதிவை இப்பதான் பார்க்குறேன் ;-))

உடை உடுத்தல் எனக்கும் உங்களுக்கும் ஒத்து போகின்ற ஒன்று ;-)

மா சிவகுமார் சொன்னது…

வாங்க தமிழ்நதி,

புத்தகம் வாசிக்கும் பழக்கம் weird எழுதிய எல்லோருக்குமே இருக்கிறது போலிருக்கிறது :-). அதனால்தான் இவ்வளவு பதிவுகளைப் படிக்கவும், எழுதவும் முடிகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கோபிநாத்,

ஒவ்வொரு வகுப்பிலும் நம்மை மாதிரி பிறவிகள் இருக்கத்தான் செய்யும் :-)


அன்புடன்,

மா சிவகுமார்

ஆவி அம்மணி சொன்னது…

//ஆவிகளுக்கு விடை கொடுத்து விட்டு தினசரி வாழ்க்கைக்கே கதை எழதிப் பாருங்களேன். நன்றாக வரும்.
//

மாசி அவர்களை நாங்கள் வன்மையாகக் கண்ணடிக்கிறோம்!

மா சிவகுமார் சொன்னது…

//மாசி அவர்களை நாங்கள் வன்மையாகக் கண்ணடிக்கிறோம்!//

:-)