நேரம் காலை 3.50, ஜனவரி 8, 2012.
நேற்றுக் காலையில் நாட்குறிப்பு எழுதி முடித்த பிறகு பல் தேய்த்து, முகம் மழித்து குளியலையும் முடித்து விட்டேன். கொஞ்சம் நிதானமாக தாமதமாகத்தான் புறப்பட வேண்டும் என்று நினைத்திருந்தாலும் 6.30க்கு உடை மாட்டி தயாராகி விட்டிருந்தேன். அரை மணி நேரம் கணினியை இயக்கி வேலை செய்து கொண்டிருந்தேன். 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். வழக்கமான டெக்கான் குரோனிக்கிள் (இன்றைக்கு 3 ரூபாய்தானே என்று வாங்கிக் கொண்டார்), 25G, வடபழனி கோயில் நிறுத்தச் சீட்டு, சாலை நிறுத்தத்தில் இறங்கி பேருந்து நிறுத்தம். ஏழு இருபது ஆகியிருந்தது.
570 குளிர்சாதன பேருந்து வந்தது, ஏறவில்லை, 570 சொகுசுப் பேருந்திலும் ஏறவில்லை. 119 அல்லது கல்லூரி பேருந்து. கல்லூரி பேருந்து பெயர் பலகை வைக்காமலேயே வந்தது. உள்ளே சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவர் ஜன்னல் வழியாகப் பார்த்து முன்பக்கம் வெளியில் எட்டி அழைத்தார். நன்றி சொல்லி ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
இரண்டாவது இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். நிறைய பேர் ஏறவில்லை. வண்டியும் காலை நேர போக்குவரத்துக்கு நியாயமாக போனது. இரவு நன்றாகத்தான் தூங்கியிருக்கிறேன் போலிருக்கிறது. பேருந்திலும் சரி, பின்னரும் பெரிய அளவு தூக்கம் வந்து விடவில்லை.
8.30க்குப் போய்ச் சேர்ந்து விட்டோம். தாம்பரம் பேருந்தும் அதே நேரத்தில் வந்து நின்றது. உள்ளே வந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு காலை உணவு. வழக்கமான அட்டவணைப்படி சனிக்கிழமைக்கான பொங்கல், வடை.
'இது போல ஒரு கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுப்போம், தேர்வு கண்காணிப்பாளராக வருவோம்' என்று நினைத்ததே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அறைக்கு வந்த போது இணையம் வேலை செய்தது.
தேர்வு மேற்பார்வைக்கான நேர அட்டவணையையும் கொண்டு வந்தார். காலையிலும் மாலையிலும் வேலை, கூடவே அடுத்த வாரம் வியாழக்கிழமை காலையிலும் மேற்பார்வை பணி உண்டு. காலையில் 10-12 மணி வரை, மாலையில் 1.30 முதல் 3.30 மணி வரை.
அலுவலகத்துக்குப் போய் கணக்குப் பிரிவில் கேட்டார் காசோலை எடுத்துக் கொடுத்தார். வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. என்ன என்று விபரம் கேட்டால் அவருக்கும் சரியாகத் தெரியவில்லை. புராஜக்ட் பணி வழிகாட்டலுக்காக இருக்கலாம். அப்படியே தேர்வு மேற்பார்வை அட்டவணையையும் வாங்கிக் கொண்டேன்.
திரும்பி அறைக்கு வந்தால் தொலைபேசி. தேர்வு மேற்பார்வை முன் தயாரிப்பு அறைக்கு அழைத்தார்கள். ஏன் 9 மணிக்கே கூப்பிடுகிறார்கள்? போய் வினாத்தாள்கள், விடைத்தாள்கள், நூல் கட்டு, மாணவர்கள் பட்டியல் வாங்கிக் கொண்டு தேர்வு அறைக்குப் போய் விட்டேன். கூட பணி புரிபவர் யார் என்று யோசித்தால், விடைத்தாள்களை மேசைகளில் வைத்து விட்டு வினாத்தாள்கள் வைக்க ஆரம்பிக்கும் போது வந்தார். B பிரிவு தாளை அவரிடம் வைக்கச் சொன்னேன். விடைத்தாளுக்குக் கீழே வினாத்தாள் வைக்க வேண்டும் என்றும் சொன்னேன்.
மாணவர்கள் ஒவ்வொருவராக உள்ளே வர ஆரம்பித்து எழுத ஆரம்பித்தார்கள். முதல் 20 நிமிடங்களுக்குள் A பிரிவை முடித்துக் கொடுத்து விட வேண்டும். மீதி நேரத்தில் B, C பிரிவுகளை எழுதிக் கொள்ள வேண்டும். A பிரிவில் 15 ஒரு மதிப்பெண் கேள்விகள். அதில் கேட்டு எழுதும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த ஏற்பாடு. 20 நிமிடங்களுக்குள் எல்லோரும் கொடுத்து விட்டார்கள். ஒரு பெண் தான் எடுத்து வைத்திருந்த புத்தகம் ஒன்றை மேசையின் மீது வைத்திருந்தார்.
மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது ஒரு மாதிரியான கொடுமை என்றால் மேற்பார்வை செய்பவர்களுக்கு இன்னொரு மாதிரியான கொடுமை. செய்ய வேண்டிய வேலை என்பது சில நிமிடங்களில் முடிந்து விடும். மீதி நேரத்தில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இது வரை எந்த முறைகேடும் நடக்கவில்லை. போன பருவத்தில் சிலர் பேச முயற்சித்ததை எச்சரித்து நிறுத்தி விட முடிந்தது. தாள் கொண்டு வந்து காப்பி அடிப்பது, விடைத்தாள்களை அடுத்தவரிடம் கொடுப்பது, வினாத்தாளில் எழுதி பரிமாறிக் கொள்வது என்று எதுவும் நடந்ததில்லை.
நேற்று காலையில் நடந்த தேர்வு customer relations management என்ற வாடிக்கையாளர் உறவை பேணும் பாடம். இரண்டு வகுப்புகளுக்கும் ஒரே தேர்வுதான். குறிப்பாக இணைய வழி வணிகத்தை அடிப்படையாக வைத்துக் கேள்விகள். விடைத்தாள் விபரங்களை சரி பார்த்து ஒவ்வொரு மாணவரிடமும் கையெழுத்து வாங்கி அவர்கள் விடைத்தாளில் கையொப்பம் போடும் வேலையை ஆரம்பித்தார். மூன்று வரிசைகளை அவர் முடித்து விட இரண்டு வரிசைகள் நான் செய்தேன். அரை மணி நேரத்துக்குள் உதவியாளர் வந்து A பிரிவு விடைத்தாள்களை வாங்கிக் கொண்டு போய் விட்டார். இடையிடையே வந்து சுற்றி விட்டுப் போனார்கள். 11 மணிக்கு ஒரு கப் தேநீர்.
நேரத்தைப் போக்க வரிசைகளுக்கிடையே நடந்து கொண்டே இருப்பது என்று செய்தேன். அதன் மூலம் எல்லோரையும் பார்வையிடவும் முடியும், போரும் அடிக்காது. இடையிடையே ஒரு முனையில் நின்று கொண்டு ஒவ்வொருவத்தராக பார்ப்பது, அவ்வப்போது ஒரு நாற்காயில் உட்கார்ந்து கொள்வது என்று கண்ணில் யாரும் தப்பி விடாத படி விழிப்பாகத்தான் நின்று கொண்டிருப்பேன். பணியில் இன்னும் தீவிரமாக ஈடுபடுவதையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
12 மணிக்குள் எல்லோரும் கொடுத்து விட ஓரிரு மாணவர்கள் மட்டும் கூடுதல் 5 நிமிடங்கள் எடுத்தார்கள். விடைத்தாள்களை ஒவ்வொன்றாக வாங்கி அடுக்கி வைத்துக் கொண்டார். அலுவலகத்துக்கு வந்து கொடுத்து விட்டு அறை. 12.30க்கு கேன்டீனுக்குப் போனால் சாப்பாடு தயாராகியிருக்கவில்லை. உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
காங்கோவில் வேலைக்குப் போயிருந்ததையும், 5000 டாலர் ஊதியம் கிடைத்ததையும், ராஜ வாழ்க்கை வசதிகளுடன் இருந்ததையும், ஓரிரு மாதங்களில் விட்டு விட்டு வர நேர்ந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தார். கடவுள் இப்படித்தான் சோதிக்கிறார் என்று டயலாக். அப்படியே சனிப்பெயர்ச்சி, இன்றைக்கு அவருக்கு காசோலை போடவில்லையாம். சனிப்பெயர்ச்சிதான் காரணமாக இருக்குமோ என்று சொன்னார்.
ஆப்பிரிக்கா பற்றி விபரம் கேட்டேன். 'ஐரோப்பியர்களும், இப்போது இந்திய வணிகர்களும் ஆப்பிரிக்காவை மோசமாக சுரண்டுகிறார்கள்' என்று பேச்சு வளர்ந்தது. 'அந்த சுரண்டலிலிருந்து உங்களை விலக்கவே கடவுள் அப்படிச் செய்திருக்கலாம்' என்று பாதி நகைச்சுவையாக குறிப்பிட்டேன்.
தொடர்ந்து சனிப்பெயர்ச்சி பற்றிய கிண்டல், ஜோசியம் மீதான தாக்குதல். இப்படி ஆரம்பித்தால், அப்படி போவார்கள். 'ஆமாங்க, சரிதான், ஆனா இதுக்கெல்லாம் ஒரு அறிவியல் அடிப்படை இருக்கிறது. அதை நேரடியாக சொன்னா ஏத்துக்கொள்ள மாட்டாங்க என்று சொல்லித்தான் இப்படி கடவுள் பெயரால் சொன்னாங்க' என்று முன்னோர்களை புகழ்வார்கள். 'அறிவுபூர்வமான அறிவுரைகளுக்கும் சோதிடம், சனிப்பெயர்ச்சி போன்ற புரட்டுகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது. இரண்டும் தனித்தனியான சிந்தனை முறைகள். பின்னது ஓங்கி பின்னது மங்கிப் போனது இந்தியாவில் நடந்தது' என்று சொன்னேன்.
சாப்பிட ஒரு விதமான கலவை சோறு, சாம்பார், கூட்டு, மோர். ரொட்டி வாங்கிக் கொள்ளவில்லை. சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்தால் எல்லோரையும் வரச் சொல்லி விட்டார்கள். 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வு முன்னேற்பாடு அறைக்கு வந்து விட வேண்டும் என்று சொன்னார். தேர்வுக் கூடத்திற்கு படிக்கும் பொருள் எதையும் கொண்டு போகாதீர்கள். இது இன்விஜிலேசன், விஜிலன்டாக இருக்க வேண்டும் என்றார்.
அறை பூட்டியிருந்தது, பாதுகாவலரை அழைத்துத் திறக்கச் சொன்னேன். இதற்கிடையில் இந்த தேர்வுக் கூடத்துக்கு வர வேண்டிய அப்போதுதான் உள்ளே போனார். உள்ளே போய் விடைத்தாள்களை வைத்தேன். இடையில் பதட்டத்துடன் வந்து சேர்ந்தார். 'அரை மணி நேரத்துக்கு முன்பாகவே வரச் சொல்லுகிறார்கள், என்ன நான்சென்ஸ். என்னை யாராவது இப்படித் திட்டினால் மனது டிஸ்டர்ப்ட் ஆகி விடும்' என்று படபடத்துக் கொண்டிருந்தார். மதியம் வேறு இருக்கை ஏற்பாடு, இரண்டு பாடங்கள் படிக்கும் மாணவர்கள் மாறி மாறி உட்காருவார்கள்.
நான் B2B Marketing வினாத்தாள்களை வைத்து விட்டு அவரை mergers and acquisition வைக்கச் சொன்னால், முதலில் நான் வைத்ததை தவறு என்று சொன்னார். அப்புறம் பார்த்தால் சரியாகத்தான் இருந்தது. இரண்டு மேசையில் வைக்காமல் போயிருந்தார். இன்னொரு இடத்தில் தேடி இரண்டு தாள்களை கண்டு பிடித்தேன். ஒரு வழியாக தயாராக்கி விட்டோம்.
காலையில் இருந்தது போலவே மதியமும் இருக்கை ஏற்பாடு என்று 2-3 மாணவர்கள் உள்ளே வந்து விட்டு திரும்பி போனார்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு தாமதமாக வந்தார். கையெழுத்தை தமிழில் என்று முழுமையாக எழுதுகிறார். காலையிலேயே கவனித்திருந்தேன். மன தைரியமும் தன்னம்பிக்கையும் நிரம்பிய பெண்ணாக இருக்க வேண்டும். அதே போன்ற நடைமுறைதான்.
M&A மாணவர்கள் வேகமாக எழுதினார்கள். கணக்குள் அதிகம். மார்கெட்டிங் மாணவர்கள் எழுத்துக் கூத்து அதிகம். அவர்கள்தான் கடைசி வரை உட்கார்ந்திருந்தார்கள். விடைத்தாள்களை சரி பார்த்து கையொப்பமிடும் போது பலர் வினாத்தாளில் தங்களது பதிவு எண்ணை எழுதியிருக்கவில்லை. எழுத வேண்டும் என்பது விதி.
ஒரு மாணவன் 'எழுதத் தேவையில்லை, தேர்வு முடிந்த பிறகு எழுதிக் கொள்வேன். நான் யாருக்கும் வினாத்தாளை கொடுத்து விடப் போவதில்லை' என்று எரிச்சல் பட்டான். ஒரு நிமிடம் நிதானித்து விடைத்தாளை அவன் பக்கமே திருப்பினேன். கையொப்பமிடப் போவதில்லை என்று. அவனும் எரிச்சலை முழுங்கிக் கொண்டு எண்ணை முழுமையாக எழுதி விட்டான். 'நீ தவறு செய்வாய் என்று யாரும் நினைக்கவில்லை. இது ஒரு நடைமுறை அவ்வளவுதான்' என்று ஆறுதலாக சொல்லி விட்டு நகர்ந்தேன்.
நிறைய கூடுதல் தாள்கள் வாங்கி எழுதிக் குவித்தார் ஒரு மாணவர். 1 மணி நேரம் முடிந்தவுடனேயே எழுதி முடித்து விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். 3.30க்கு முடிந்து விட்டது.
4.15க்கு பேருந்து புறப்படாது என்றார்கள். வாசலில் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். காலையில் ஒரு நாட்குறிப்பு கொடுத்திருந்தார்கள். அதையும் பையில் வைத்திருந்தேன். 4.15க்குக் கூட பேருந்து கிளம்பவில்லை. அண்ணா நகர் பேருந்து இன்னும் தாமதமாகும் என்றார்கள். கொஞ்ச நேரம் பார்த்து விட்டு நுங்கம்பாக்கம் பேருந்தில் ஏறிக்கொண்டேன்.
அது ஈசிஆர் வழியாகத் திரும்பி, திருவான்மியூர், அடையாறு வந்து அங்கிருந்து கிரீன்வேஸ் சாலை வழியாக பார்க் ஷெரட்டன் வழியாக அண்ணா சாலை வந்து ஜிஎன் செட்டி சாலை, வள்ளுவர் கோட்டம் வந்தது. 4.15க்குப் புறப்பட்டது இங்கு வரும் போது ஆறரை தாண்டி விட்டிருந்தது. இடையில் தமிழ்நாடு அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஜெயலலிதா ஆதரவாளர், கருணாநிதி ரசிகர் என்று தெரிந்தது.
வள்ளுவர் கோட்டம் முன்பு சாலை நிறுத்தத்தில் இறங்கி அங்கேயே நின்ற 25Gல் ஏறினேன். நல்ல கூட்டம் உட்கார இடம் கிடையாது. 13 ரூபாய் சீட்டு. லிபர்டி வந்ததும் இறங்கி முன் வாசலில் ஏறினேன். கூட்டம் அதிகமாகிக் கொண்டுதான் போனது. உட்காரும் வாய்ப்பே கிடைக்கவில்லை. நல்ல வேளையாக 100 அடி சாலை சந்திப்பு, வடபழனி என்று எங்கும் தேங்கி விடாமல் நகர்ந்து கொண்டே இருந்தது. ஆற்காடு சாலையில் சாலை நிறுத்தங்களில் நியாயமான காத்திருத்தல். பெரிய அளவு சேதம் இல்லாமல் வந்து சேர்ந்து விட்டேன்.
பாடல் புத்தகங்கள் வாங்க வேண்டும். புத்தகங்கள் எடுத்து வர மறந்திருந்தார். கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினோம். ஒரு காலணி வாங்க வேண்டும் என்று போனோம். ஒரு கடையில் பார்த்து விட்டு அதன் பிறகு டியூரபிள் குரோம் பேஷன் என்ற கடைக்குப் போனோம். நிறைய தோல் செருப்புகள், காலணிகள். வெகு நேரம் தேடி கடைசியில் ஒன்றை வாங்க முடிந்தது.
4 இட்லி, 1 தோசை சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தேன். இணையம் வேகமாக இணையவில்லை.
வெகு நேரம் பேச்சு நடந்தது.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக