என்னைப் பற்றி

எனது புகைப்படம்
mobile : 9884070556
நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பு, 
சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்ப பட்டம்
தேவாஸ் (மத்திய பிரதேசம்) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (டாடா) டாடா நிறுவனத்தில் வேலை
சாங்காய் (பிஎல்சி) நிறுவனத்தில் வேலை
சொந்த நிறுவனம் பிஎஸ்ஜி லெதர் லிங்க். 

Friday, December 23, 2011

முன்னேற்றப் பாதை


ஜனவரி 23, 2011 நேரம் காலை 4.20

நேற்றுக் காலையில் 5 மணிக்குப் பிறகுதான் எழுந்திருந்தேன். 4 மணிக்கே விழிப்பு வந்த போது எழுந்திருந்தால் நாட்குறிப்பு எழுதியிருந்திருக்கலாம். 5 மணிக்கு எழுந்த பிறகு காலைக் கடன்களை முடித்துப் புறப்படுவதற்கு நேரம் சரியாக இருந்தது. தியானம் செய்வதற்கு கூட உட்காரவில்லை. 6.20க்கெல்லாம் புறப்பட்டு விட்டேன்.

வெளியில் வந்து நடந்து ஆற்காடு சாலை வரும் போது 6.30 மணி. டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் வாங்கிக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். 37Gயில் ஏறி வடபழனி முருகன் கோவில் - பல இடங்களுக்கு கட்டணம் 11 ரூபாய் ஆகி விட்டிருக்கிறது, சொகுசுப் பேருந்தில். முன்பு 7 ரூபாய் இருந்தது, இப்போது 11 ரூபாய். கிட்டத்தட்ட 40% அதிகரிப்பு.

சாலை நிறுத்தத்தில் பேருந்து நின்றாலும் இறங்கி விடாமல் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். தேநீர் கடையில் ஏதாவது சாப்பிட்டு விட்டு குடிக்கலாம் என்று ஒரு எண்ணம். எதுவும் வசதியாக இல்லை. நூறடி சாலையில் பேருந்து நிறுத்தும் இடத்துக்கு வந்து காத்திருந்தேன். சில நிமிடங்களிலேயே 119 வெளியூர் பேருந்து - மாமல்லபுரம் போவது (கல்பாக்கம்?) வந்தது. பெருங்குடி, சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் என்று வழி எழுதிப் போட்டிருந்தார்கள். சந்தேகத்துக்கு இடமில்லாமல் யாரிடமும் கேட்காமல் ஏறி உட்கார்ந்தேன். 3 பேர் உட்காரும் இருக்கையில் உட்கார்ந்தேன். கொஞ்ச தூரம் போனதும் பின் இருக்கையில் போய் விட்டேன். சோழிங்கநல்லூர் என்று சீட்டு - 14 ரூபாய். சிறுசேரி சிப்காட்டுக்கு 17 ரூபாய் கட்டணம்.

கணினியை இயக்கி இணையத்தில் மின்னஞ்சல் பார்த்தேன். இந்து செய்திகள், டுவிட்டர் என்று திறந்து கொண்டேன். பேருந்து கடைசி இருக்கையில் பயங்கரமாக குலுங்கியது, மடிக்கணினியை முன்பக்கம் கம்பியில் போய் மோதி விடும் அபாயம்இருந்தது. தவிர்த்துக் கொள்ள கவனமாக பிடித்திருக்க வேண்டும். கம்பி இல்லாத இருக்கையாகத்தான் கடைசி இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். பேருந்து நிரம்பி விடவில்லை கடைசி வரை. வெகு வேகமாக ஓட்டிப் போய் 7.30க்கெல்லாம் சோழிங்கநல்லூர் வந்து விட்டார். இங்கும் சாலை நிறுத்தத்தில் இறங்காமல் தாண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன்.

வழக்கமாக சாப்பிடப் போகும் உணவு விடுதிக்குப் போகாமல், சாலையைக் கடக்காமல் கடற்கரை நோக்கிய சாலையில் இருக்கும் தேநீர் விடுதிக்கு வந்தேன். தேநீரும் வடையும் சாப்பிடலாம் என்று நினைத்தால், மேசையில் உட்கார்ந்து சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் போய் உட்கார்ந்தேன். பொங்கல், வடை சொன்னேன்.

வேலை செய்யும் பையன் - இந்தி பேசுபவன் என்று தெரிந்தது. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். கொஞ்சம் மூத்த பணியாளராக தமிழ் பேசுபவர், கல்லா பெட்டியில் மலையாளம் பேசுபவர். உழைக்கும் மக்களின் தேசிய இன ஒருமைப்பாடு இப்படித்தான் வெளிப்படுகிறது. சாப்பிட வந்த அய்யப்பன் மாலை போட்ட ஒருவர் , பையன் இந்தி பேசுபவன் என்று தெரிந்ததும் தீன் இட்லி, படா என்று அரைகுறை இந்தியில் ஆர்டர் கொடுக்கிறார்.

பொங்கலில் டால்டா அல்லது நெய் அபாயம் இல்லாமல் அரிசி+பருப்பு நன்கு வேக வைத்த கலவையாக இருந்தது. நிறையவே வைத்திருந்தார்கள். பொங்கலுக்குப் பிறகு பால் ஒன்று. இன்னொரு வடையும். பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார். பூரி இருக்கிறதா என்று கேட்டவரிடம், அதைக் கண்காட்டி தாமதமாகும் என்று புரிய வைத்தான் வேலை செய்யும் பையன். வெளுத்த தோல் பையன்கள் வேலை செய்வது என்பது முன்பெல்லாம் அரிதாகவே காணக் கிடைத்தது. இப்போது வடக்கு வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் அந்த கண் திறப்பையும் ஏற்படுத்துகிறார்கள்.

பொங்கல், 2 வடை, பால் என்று சரியாக நினைவு வைத்து 37 ரூபாய் என்று முதலாளியிடம் கணக்கு சொன்னான். 2 வடை விவகாரத்தை நான் மறந்து விட்டிருந்தேன். நானாக சொல்லியிருந்தால் பொங்கல்+வடை+பால் என்று சொல்லியிருந்திருப்பேன். பொங்கல் 20 ரூபாய், வடை 5 ரூபாய், பால் 7 ரூபாய் என்று நினைத்துக் கொண்டேன்.

மீண்டும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தால் ஒரு பகிர்வூர்தி கிளம்பிக் கொண்டிருந்தது. சிப்காட் என்று கூவி ஏற்றிக் கொண்டிருந்தார். அருகில் போய்க் கேட்டால் அடுத்த வண்டி என்று நகர்த்தி விட்டார். முன் இருக்கையில் ஒருவர்தான் உட்கார்ந்திருந்தார். பின் இருக்கைகளிலும் ஒரு காலி இடம் இருந்தது. அடுத்த ஆட்டோவிலும் ஏறிக் கொள்ளவில்லை.

M119 வந்தது, 21H குளிர்பதன பேருந்து வந்தது. அடுத்து வந்த சொகுசுப் பேருந்தில் ஏறினேன். முன் வாசலில் ஏறி 11 ரூபாய் கொடுத்து விட்டு சிப்காட் சீட்டு. இதுவும் இன்னொரு 11 ரூபாய் தூரம்தான். நிறைய பேர் முன்பக்கமாக ஏறியிருந்தார்கள், அவர்களில் பலர் சிப்காட்டுக்கு சீட்டு அனுப்பினார்கள். பள்ளி மாணவியர்கள் பலர் ஏறி வாசலை விட்டு நகரவில்லை. நாவலூர் தாண்டிய பிறகு கட்டணச் சாவடியில் கணிசமான நேரம் காத்திருக்க வேண்டி வந்தது.

சிப்காட்டில் இறங்கி புறப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறப் போனால் பின் இருக்கைக்கு அனுப்பினார். ஏற்கனவே ஒரு பெண்ணும் பையனும் இருந்தார்கள். அடுத்து வந்த பெண்ணுக்கு இடம் விட்டு நான் முன் இருக்கைக்குப் போய்  விட்டேன். அதே நேரம் இன்னொரு இளைஞரும் ஏற புறப்பட்டு விட்டார். டிசிஎஸ் அருகில் முதலில் இருந்த பெண் பயணப் பையோடு இறங்கினார், முன் இருக்கையில் இருந்தவரும் இறங்கினார். ஹெக்சாவேரில் பின் இருக்கையில் இருந்த பையன். நான் அங்கு போய் உட்கார்ந்து கொண்டு இடம் வந்ததும் இறங்கினேன்.

கிட்டத்தட்ட தினமும் முதலில் வரும் அலுவலக ஊழியர் நான் ஆகி விட்டேன். வாசல் காவலர்கள் தமது இளகிய நிலைப்பாட்டிலிருந்து விறைத்துக் கொண்டு சல்யூட் அடிக்கிறார்கள்.

இணையம் இணையவில்லை. 9 மணிக்குப் பிறகு இணைந்தது.  9.15க்கு வகுப்பறைக்கான வருகைப்பதிவு கோப்புகளை எடுத்துக் கொண்டு முதலாமாண்டு வகுப்புக்குப் போனேன்.

கணினியில் சீன உள்ளீட்டு முறையை அமைத்துக் கொண்டவர்களை அது வரை பழகிய எழுத்துக்களை உள்ளிடும்படி சொன்னேன். சுற்றி வந்து கொஞ்சம் தளர்வாக பேசிச் சிரித்துக் கொண்டிருந்தேன். பிறந்த நாள். எல்லோருக்கும் எக்ளேர்ஸ் மிட்டாய் கொடுத்தார். முதல் முறையாக வகுப்பறைக்குள் வந்து உட்கார்ந்தான். கடைசியில் அவனுக்கு  அதிக மதிப்பெண் கிடைத்திருந்தது.

வீட்டில் கொடுக்கப் போகும் பார்ட்டிக்கு வரும்படி வழி சொன்னது ராமாயணக் கதையாக நீண்டு கொண்டிருந்தது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சீன மொழியில் சொல்வது, புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வது என்று எழுதிப் போட்டேன். மாணவர்கள் கொஞ்சம் பயம் கலந்த மதிப்போடுதான் பேசிக் கொள்கிறார்கள் என்று நடத்தையில் தெரிந்தது. அலட்சியமாக நடக்கும் மாணவர்களை தனிமைப்படுத்தி பலமாக திட்டுவது சரியான அணுகுமுறையாகத்தான் இருக்கிறது. அதை தேநீர் இடைவேளையில் குறிப்பிட்டேன்.

முதலாமாண்டு வகுப்பிலிருந்து வெளியில் வந்த பிறகு அறைக்குப் போய் அடுத்தடுத்த பருவங்களில் எனது தேவை இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டேன். முதலாமாண்டு மாணவர்களுக்கு அடுத்த பருவத்திலும் மொழிப்பாடம் உண்டு என்றும் உறுதி செய்து சொல்வதாகவும் சொன்னார்.

தேநீர் குடித்தேன். அவரே 2 பிஸ்கட்டுகளும் வாங்கிக் கொடுத்தார். முடித்து விட்டு இரண்டாம் ஆண்டு வருகைப்பதிவுகளுடன் அவர்கள் வகுப்புக்குப் போனேன்.

இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு சனிக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. கேரக்டர்கள் எழுதுவதை பயிற்சி செய்கிறோம் என்று சொன்னார்கள். ஒவ்வொருவராக வந்து பலகையில் எழுத வேண்டும். போட்டிப் போட்டுக் கொண்டு எழுதினார்கள். எல்லோரும் சொல்வது போல ஆர்வமான நேர்மையாக படிக்கும் மாணவர்கள் நிரம்பிய வகுப்புதான். இங்கும் சீக்கிரம் முடித்து விட்டு அறைக்கு வந்தேன்.

1.15க்குப் பிறகு சாப்பிடப் போனேன். உணவுக்கு ரொட்டி வேண்டாம், சிறிது சோறு, மோர்க்குழம்பு, நிறைய பட்டாணி+உருளைக் கறி வாங்கிக் கொண்டேன்.

'மூன்று பருவங்களிலும் நீ தேவை' என்று சொன்னார். அப்படியே பேச்சு நீண்டு வீடு, குடும்பம், கூடப்பிறந்தவர்கள், மனைவி, குழந்தைகள் என்று விபரங்களை விசாரித்தார். தொழில் எப்படிப் போகிறது என்று கேட்டுக் கொண்டார்.

2 மணிக்குப் பிறகு புறப்பட்டேன். அறைக்கு வந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்டெர்னல் மதிப்பெண்கள் எழுதிக் கொடுத்தேன். அடுத்த வியாழக்கிழமை மதியம் தேர்வு மேற்பார்வைக்குப் போட்டிருந்தார்கள். 1.30 முதல் 3.30 வரை. காலையில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு இருக்கிறதே. எல்லாம் யோசித்துதான் செய்கிறார்கள். திங்கள் கிழமை வர முடியுமா என்று கேட்டார்கள். முடியாது என்று சொல்லி விட்டேன். இவர்களுக்காக தங்கி விட்டுப் போக  முடியாது.

வெளியில் வந்தால் வண்டிகளே கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் ஒரு ஆட்டோ வந்தது. 15 ரூபாய் என்று எச்சரித்து ஏற்றிக் கொண்டார். சோழிங்கநல்லூருலிருந்து வரும் பகிர்வூர்தி. சிப்காட் வண்டிகளில் 20 ரூபாய், வழக்கமான ஆட்டோவில் பலரை ஏற்றிக் கொள்வார்கள்.

இறங்கி ஜூஸ் கடையைத் தேடிப் பார்த்தால் திறந்திருக்கவில்லை. 21H குளிர்பதன பேருந்தை விட்டு விட்டு அடுத்த 19B யையும் விட்டேன். 19B குளிர்பதன பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். உட்கார நிறைய இருக்கைகள் இருந்தன.

அடுத்த பருவத்துக்கு என்னென்ன எழுத்துக்களை பயிற்றுவிக்கலாம் என்று ஒற்றை இழுப்பு, இரண்டு இழுப்பு, மூன்று இழுப்பு எழுத்துக்களை குறித்துக் கொண்டேன். இதிலேயே பெரும்பாலும் முடித்து விடலாம்.

சத்யபாமாவில் 10-15 மாணவர்கள் ஏறினார்கள். ஆண்களும் பெண்களும். ஒரே சத்தம், கூச்சல், கும்மாளம் என்று இருந்தது. பெருங்குடி வரும் போது எழுதி முடித்து மூடி வைத்தேன். அண்ணா பல்கலையில் இறங்கிக் கொண்டேன். கிண்டி போகும் M119ல் ஏறி 4 ரூபாய் சீட்டு. கிண்டியிலிருந்து அம்பத்தூர் போகும் பேருந்தில் 11 ரூபாய்க்கு அசோக் பில்லர் நிறுத்தம்.

இறங்கி சாலையைக் கடந்த கேகே நகர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து டாடா மேஜிக் வண்டியில் முன்பக்கம் ஏறினேன். நெசப்பாக்கம். விருகம்பாக்கம் வரை 10 ரூபாய்தான் வாங்குகிறார். பேருந்து கட்டணம் கூட அதை விட அதிகம். நெசப்பாக்கம் முனையில் இறங்க 7 ரூபாய். சரியாக சில்லறை இருந்தது.

பத்திரிகைக் கடையில் ஆனந்த விகடன் - 100 ரூபாய்க்கு சில்லறை. 1.50 காசு கொடுத்து இரண்டு பபுள் கம் வாங்கும் பள்ளி மாணவிகள். சாலையைக் கடந்து ஜூஸ் கடையில் பாதாம்+புரூட் மிக்ஸ் அடுத்து இன்னொரு பாதாம். மொத்தம் 16 ரூபாய்.

யாரை எப்படி ஊக்குவிப்பது, எப்படி விமர்சனம் செய்வது, திறமைகளுக்குச் சரியான வெளிச்சம் கொடுப்பது என்று அவரது நேர்மை வியக்கத்தக்கது.

0 கருத்துரைகள்: